தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷசாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய் மொழி-
இத்திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தாராகத்திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி
நிர்வகித்துக்கொண்டு போந்து -எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்துகொண்டு போந்து,
ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச்செய்துகொண்டு போந்தார்,
பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச்செய்தார்.
இவருடைய பத்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது? ,
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று இவர் தாம் பெற்றது பத்தி ரூபா பன்ன ஞானமாய் இருந்தது;
தாம் பெற்றது ஒன்றும் இங்குக் கூறுவது ஒன்றுமாக ஒண்ணாதே! அவ்வாறு கூறுவராயின், விப்ரலம்பக கோடியிலே ஆவரே.
ஆதலால், தாம் பெற்ற அதனையே பிறர்க்கு உபதேசிக்கின்றார் எனல் அமையும்.
ஆயின், பத்தி என்பது உபய கர்மிதஸ் வாந்தஸ்ய (‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’)
என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும்-சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு- தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு
உண்டாவது அன்றோ? பர பக்தி –
அந்த ஞான கர்மங்களினுடைய-ஸ்தாநேந – இடத்தில் பகவத் பிரசாதமாய் நிற்க,
அது அடியாகப் பின்னர் விளைந்தது அன்றே!இவருடைய பக்தி தான் –
‘இதுதான் வேதாந்த விஹிதையான பத்திதானே ஆனாலோ?’ என்னில்,
சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றாராகிற ஏற்றம் போம்;
அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும்;
ஆன பின்பு தான் பெற்றத்தையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்
கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்துவத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இறே போந்து –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்திருந்து பிறர்க்கு உபதேசிக்கிறபடி எங்ஙனே?
தாம் அனுபவித்த பொருளை எல்லை கண்டோ,
அன்றி, தாம் அப்பொருளில் விரக்தராகியோ?’ என்னில், விஷயமோ என்றால்,
‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –
‘கொள்ள மாளா இன்பவெள்ளம்’ அன்றே?
இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும்,
‘மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .
ஆயினும், ஒருகால் ஒரு பொருளில் அபிநிவேசம் பிறந்தால் அப்பொருளிலேயே வேறு காலங்களில் -காலாந்தரத்தில் –
விரக்தி பிறக்கக் காண்கின்றோம்;
அப்படியே, சில காலம் அனுபவித்துப் பின் விரக்தி பிறந்ததோ?’ என்னில், அங்ஙனமும் சொல்ல ஒண்ணாது;
‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’
என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்-
இனி, ஆசாரிய பதம் -நிர்வஹிக்கைக்காக மேற்கொள்ளுகைக்காக அன்று; க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று;
ப்ரப்ரூயாத் -என்று ஒரு விதி பரதந்த்ரராய் அன்று (‘ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன்
அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.)
‘ஆயின், இது பின்னர் எத்தாலே ஆவது?’ என்னில்,
ஸ்வ அனுபவ பிரகர்ஷம்-இன்பப் பெருக்கு- இருக்கிறபடி –
தாம் அனுபவித்த விஷயம் தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது;
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு
ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று பலகாலும் அருளிச்செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.
‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில்,
இவர்கள்-சேதனராய் – அறிவு உள்ளவர்களாய்- இருக்கிறார்கள்; சப்தாதி விஷயங்களில் வாசியறிந்து,
தீயவை கழித்து, நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
ஆதலால், அவற்றினுடைய ஹேயதையையும் சர்வேஸ்வரனுடைய உபாதேயதையையும் இவர்களுக்கு அறிவித்தால்,
அவற்றை விட்டு இறைவனைப் பற்ற அடுக்கும் என்று பார்த்து, சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –
—————————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
இரண்டு வித சங்கதி –
மோக்ஷ சாஸ்திரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-பூர்வ த்விகம் -சமன்வயம்-1-1 -1–முதல் –7-வரை அளவும் — என்றும்
அவிரோதம் -1-1-8-தொடங்கி இரண்டு பாட்டிலும் –என்றும் –
உத்தர த்விகம் -சாதன அத்யாயம் -பல அத்யாயம் –
சதுஸ்லோகீ -ஸ்வ சேஷா சேஷார்த்தோ நிரவதிக நிர்பாத மஹிமா பலா நாம் தாதா யா பலமிதி ச சாரீரகமித-
ஸ்ரியம் தத் சத்ரீசீம் ததுபசத யாத்ரா சசமனீம் அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுன முனி
ஸ்வ சேஷா சேஷார்த்தோ -என்று சர்வ சேஷித்வம் சொன்னது –
ஸர்வேஷாம் வேதாந்தா நாம் ப்ராஹ்மணி சம்யக் அன்வயம் சொல்லுகிற பிரதம அத்யாய பலிதம் சொல்லிற்று
நிரவதிக நிர்பாத மஹிமா -என்றது அவிரோத அத்யாய பலிதம் –
பலா நாம் தாதா -மூன்றாம் அத்யாயம் உபாயம்
யா பலமிதி ச -நான்காம் அத்யாயம் அர்த்தம்
சாரீரகமித-ஸ்ரியம் தத் சத்ரீசீம் -சாரீரகத்தை பிரமாணமாக யுடையவன்
ததுபசத யாத்ரா சசமனீம்–அபராத பீதரானவர்கள் பயத்தைப் போக்குமவளை
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுன முனி -ஸ்ரீ சதுஸ்லோகீயில் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்
பழுதற்ற மதியை உடைய ஸ்ரீ யமுன முனி என்றவாறு
இத்தால் பூர்வ த்விகம் தத்வ பரம் -உத்தர த்விகம் -உபாய பரம் -உபாசந பரம் என்றுமாம் —
பலம் உபாய சாத்தியம் ஆகையால் நான்காம் அத்யாயர்த்தமும் உபாய பரம் ஆகுமே –
உபாசனம் -ஆஸ்ரயணம் என்னவுமாம்
பிரபத்தி -வேத குஹ்ய ரஹஸ்ய உபாயம் ஆகையால் அத்தை வெளியிட ஒண்ணாது என்று
பிரபத்ய பர பர்யாயமான ஸாத்ய பத்தியாலே மறைத்துப் போந்தார் என்றபடி –
திண் கழல் சேர்-19 -என்றது பிரபத்தி பரம் என்றதுக்கு ஸூசகம் –
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே-4-என்றும்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -6-என்றும் –
எண் பெருக்கு அந்நலத்து-10-என்றும் பக்தி விஷய பர ஸூசகம் –
ஸ்ரீ பாஷ்யத்தில் விவேகாதி சாதன சப்தக சம தமாத் யங்கித்தவம் உபாசனத்துக்கே என்று
ஆகார ஸூத்தவ் சத்வ ஸூ த்தி–ஆத்மன்யே ஆத்மாநாம் பஸ்யேத்-இத்யாதி வாக்யங்களை இட்டு நிர்ணயிக்கையாலே
பிரபத்திக்கு தத் அங்கத்துவம் திரு உள்ளம் அல்ல இறே-
ஆகையால் வீடு செய்து வீடு செய்ம்மின் -1-என்கிற வாக்கியத்தில் ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே அங்க அங்கி பாவம் தோற்றுகையாலும் –
ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் -அடிக்கீழ் அமர்ந்து என்கையாலே ப்ரபந்ந ஜன கூடஸ்தராக அத்யவசிதரான இவர்
பிரபன்னரோ பக்தரோ -என்று சம்சயிக்கும் படி விஷயாந்தர வைத்ருஷ்ண்யா பரிஷ்க்ருதையான பக்தியை
மயர்வற மதி நலம் அருளினன் என்கையாலே அவன் கிருபையால் உடையராய் இருக்கையாலே
இவருடைய பிரபத்தி வைராக்ய சஹசரிதை யாகையாலும் இவருடைய யுக்தி அனுஷ்டானங்களாலே இவர் பக்தி
சம தமாத் அங்கியாய் இருக்கும் என்று சங்கிக்க வரும் என்று திரு உள்ளம் பற்றி ப்ராப்ய பக்தி பரமாக நிர்வகித்து அருளினார் -என்றபடி —
பித்த உபஹதனுக்கு நாக்கில் திக்தத்தைப் போக்கிப் பணம் பண்ணுவிக்கில் இறே ஷீரம் ரசிப்பது –
ஆகையால் வீடு செய்து வீடு செய்ம்மின் என்கிறது என்றும் –
இவருடைய வைராக்யம் விஷய தோஷ தரிசனத்தால் வந்த இத்தனை என்று கருத்து என்று திரு உள்ளம் –
இவருடைய பக்தி பிரபத்திகள் விகல்பிக்கலாம் படி இருப்பது எங்கனே என்னில் –
இவருடைய பிரபத்தி ஆர்த்த பிரபத்தி ஆகையால் ப்ராவண்யம் மிக்கு இருக்குமே –
இவருடைய பிரபத்தி பக்தி பாரவசயத்தாலே வந்தது ஆகையால் கார்ய காரணங்களை அபேதேந வியவஹரிக்கலாம் என்று கருத்து –
இவருடைய பக்தி பிரபத்திகள் இரண்டும் கட்டளைப் பட்டன வாகையாலே இவருக்கு பக்தி
மோக்ஷ சாதனமோ பிரபத்தி மோக்ஷ சாதனமோ என்று விகல்பிக்கலாய் -துல்யம் என்னலாய் -இருக்கும் –
யத்வா ப்ராப்ய பிராப்பகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கையாலே இரண்டும் இவருக்கு
பல சாதனத்வே துல்யம் என்னலாய் இருக்கும் –
எல்லாமாகக் குறைவற்ற பக்தி பிரபத்திகள் இரண்டும் இவ்வாழ்வாருக்கு உண்டே
நிரபாயமாய் அவிலம்பிதமாகத் தாம் கண்டா உபாயத்தை விட்டு பின்னை சாதன பக்தியை உபதேசிக்கில் விப்ரலம்பம் வரும் –
கர்ம ஞானங்கள் இரண்டாலும் பரிகர்மிதமாய்-அலங்கரிக்கப் பட்டு இருக்கிற ஸ்வான்தஸ்ய அந்தக்கரணத்தை யுடையவனுக்கு –
ஒன்றிலே -ஒரு விஷயத்திலே நியதமாய் இருப்பதாய்-
ஆத்யந்திக நித்தியமாய் இருக்கிற பக்தி யோகம் ஒன்றினாலும் லப்யன் – என்றபடி –
அப ஸூத்ராதிகரணம் ஆவது -ஞான ஸ்ருதி ராஜா -பள்ள பல்லாஷர் இரண்டு ஹம்சா ரூபிகளாய் –
ரைக்வனாகப் போகிறானோ-ப்ரஹ்ம ஞானம் -சூத்ரன் என்றது சோகமுடையவன்-சோஸனாச் சூத்ர –
பல்லாஷாருடைய அநாதாரத்தாலும்-ப்ரஹ்ம வித்யா ராஹித்யத்தாலும் உண்டான சோகம்
சாதன பக்தி என்றால் பாதக த்வயம் வருகையால் ஸாத்ய பக்தியே என்று கருத்து –
இப்பத்து பாட்டிலும் ஸங்க்ரஹேன பிரபத்தி சரீரமும் தத் யுபயுக்தார்த்தங்களையும் சொல்லி
ப்ரபத்தியிலே தாத்பர்யத்தை பர்யவசிக்கிறது என்று ஸ்ரீ பரமாச்சாரியார் நிர்வாகம் –
ப்ராப்ய ருசிக்கு உபையுக்தமான அர்த்தங்களை சொல்லி ப்ராப்ய ருசியில் பர்யவாசிக்கிறது என்று ஸ்ரீ பாஷ்யகாரர் நிர்வாகம் –
இந்த அர்த்தத்தில் வீடு செய்ம்மினாவது புத்தியை அவன் பக்கலிலே வையுங்கோள் என்றபடி
ஆதவா பாஷ்யம் தலைக்கட்டின பின்பு -சாதன உபாசனை பாரமாக நிர்வகித்தார் -என்று பொருள் –
தத்வ ஹிதங்கள் இ றே சாஸ்திரங்களில் ப்ரதிபாதிக்கிறது –
ஹிதமாவது அலவ்கிக புருஷார்த்த சாதனம் என்பதால் புருஷார்த்தம் ஹித்துக்குள்ளே சொருகி இறே இருப்பது
பூர்வ த்விகம் -தத்வம் நிரூபணம் -உத்தர த்விகம் -ஹித நிரூபணம் –
அந்த சாயையிலே முதல் திருவாய் மொழி தத்வ நிரூபணம் -இரண்டாம் திருவாய் மொழி ஹித நிரூபணம்
வீடுமின் முற்றவும் -1-சம தமாத் யுபேத ஸ்யாத் -ஸூ த்ரார்த்தம்
மின்னின் நிலை 2– வைராக்ய பாத அர்த்தம்
புல்கு-4 -என்று பகவத் அனுசந்தானத்துக்கு ப்ரீதி ரூபத்வம்
அற்றது பற்று எனில் –உற்றது வீடு உயிர் -ஞான யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டினால் அங்கே தாழாமல் இருக்க உபதேசம்
யோஜனா த்வயம் -பக்தி பிரபத்தி உபதேசங்கள் –இவருக்கு சம்சாரத்தில் அடிக்கொதிப்பு உன்மஸ்தம் ஆகையால்
பிரபத்தி உபதேசம் பண்ணும் போதும் வைராக்யத்தை பஹுவாக உபதேசிக்கிறார்
ஸ்ரீ பாஷ்யம் தலைக்கட்டின பின்பு என்றதுக்குக் கால விசேஷ பிரதர்சனமே பலமாகவுமாம்
ஆச்சார்ய பதம் நிர்வகிக்கைக்காக பர உபதேசம் பண்ணுகிறார் அன்றே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்பவர் அன்றோ
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக என்று சம்பத்து தனக்கு அநர்த்தகரமாக நினைப்பவர்
ஓத வல்ல பிராக்கள் –தமக்கு சேஷிகளாக நினைப்பவர்
ஆகவே க்யாதி லாப பூஜைகள் இல்லையே
ப்ரோவாச தாம் தத்துவதோ ப்ரஹ்ம வித்யாம் -முண்டோபநிஷத் -என்ற சாஸ்த்ரா மரியாதையில் உபதேசிக்கிறார் என்ன ஒண்ணாது –
தம்முடைய தயா அதிசயத்தாலே -ஸூஹ் ருதம் சர்வ பூதா நாம் என்று அவன் இருந்தால் யச்சீல ஸ்வாமீ தச்சீலோ தாச –
எல்லையில் அந்நலம் -4-சர்வேஸ்வரனுடைய நன்மையையும்
மின்னின் நிலை -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டம்
அந்தராய பரிஹாரம் -அது செற்ற -7-
அடங்குக உள்ளே -7-சம்பந்தத்தை உணர அமையும்
வண் புகழ் நாரணன் -10-மந்த்ரம் இன்னது என்றும்
இறை சேர்மினே -3-இத்யாதி பதங்களைக் கடாக்ஷித்து பஜனீயதையையும்
வீடுமின் முற்றவும் -1-இதர விஷய வைராக்ய பூர்வகம்
புல்கு பற்று அற்றே -4-/ பற்றிலையாய் -6-இத்யாதியைப் பற்ற பக்தியைப் பண்ணி என்று அருளிச்செய்கிறார்
————————-
இதர விஷயங்களை விட்டு உங்களுக்கு வகுத்த விஷயத்தைப் பற்றப் பாருங்கள்,’ என்கிறார்.
————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
வீடுமின் உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்னும் அளவும் கடாக்ஷித்து அவதாரிகை –
வகுத்த விஷயத்தை என்றது உடையான் என்றத்தைப் பற்ற —
——————–
வீடு மின் முற்றவும், வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை, வீடு செய் மி(ன்)னே–1-2-1-
வீடுமின்
‘வீடுமின்’ என்றதனை ஒரு சொல்லாகக் கோடலுமாம்;
அன்றி, நீட்டல் விகாரமாகக் கோடலுமாம். ‘முதலிலே ‘வீடுமின்’ என்கிறது என்னை?’
சிறுகுழந்தை கையிலே சர்ப்பத்தைப் பிடித்துக்கொண்டு கிடந்தால், பொகட்டுக் கொடு நிற்கச் சொல்லி,
பின்னர், சர்ப்பம் என்பாரைப் போலேயும்,
ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்காநிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால், ‘புறப்பட்டுக் கொள் கிடாய் ,’
என்று சொல்லி, பின்னர், நெருப்பு’ என்பாரைப் போலேயும் முந்துற ‘விடுங்கோள்’ என்கிறார்.,
பிறப்பு இறப்புகட்கு நடுவேயன்றே இவைதாம் நோவுபடுகின்றன?
த்யக்த்வா புத்ராம்ச் ச தாராம்ச் ச (‘புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ )என்றும்,
பரித்யக்தா மயா லங்கா (‘என்னால் விடப்பட்டது இலங்கை’ )என்றும்
விடுகை முன்னாக அன்றோ முன்பு பற்றினவர்களும் பற்றினார்கள்? ‘
ஆயின்,‘வீடுமின்’ என்ற பன்மைக்குக் கருத்து யாது?’ எனின்,
பொறிவாயில் ஐந்தையும் அவித்த ஒருவன் வந்து முன்னே நின்று கேட்க, அவனுக்கு உபதேசிக்கிறார் அல்லர்;
சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து
பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.
எத்தை விடுவது என்னில்
முற்றவும் –
சண்டாளர் இருப்பிடத்தை அந்தணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும்
சிலவற்றைக் கழிப்பதும் செய்யார்; அது போன்று,-அகங்கார மமகாரங்களால் – யான் எனது என்னுஞ் செருக்கால்
கெடுக்கப்பட்டு இருப்பனவற்றில்- சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே!
ஆகையால், ‘முழுவதும் விடுங்கோள்,’ என்கிறார்.
வீடு செய்து-
‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில்,
அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும்
சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று,
மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே
விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி.
உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
1-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ )
என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
2-அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
3-அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்
வீடுடையான்
4-பரமபத நிலையான பக்கலிலே என்னுதல்
உம் உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’ என்றும்,
‘அது தானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’
உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார்.
உடையானிடை
பொதுவில் உடையான் என்கிறார் என்கிறார்;–
சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.
வீடு செய்மின் –
அவன் உடையவனாய் உங்கள் ஆத்துமாவை நோக்கிக் கொண்டிருக்கிறான்;
ஆதலின், நீங்களும் ‘நான்’ ‘எனது’ என்று அகலப் பாராமல், உங்களை அவன் பக்கல் சமர்ப்பிக்கப் பாருங்கள்;
யம-ப்ராதேசிகமான (குறித்த ஒரு சிலரை மட்டும்) நியமிக்கின்ற யமனை அன்று சொல்லுகிறது
பிரபவதி சம்ய மநே மமாபி விஷ்ணு -என்று அவன் தன்னையும் நியமிப்பவனாயிற்று இவன்
வை வஸ்வத -விவஸ்வானுடைய குலத்திலே பிறந்தவன் என்னுதல் -ஆதித்ய அந்தர வஸ்திதன் என்னுதல்
ராஜா -அவனைப் போலே தஹ பச-என்கை அன்றிக்கே எல்லாருக்கும் இனியனாய் இருக்குமவன் யாயிற்று இவன்
யா -அந்தர் ப்ராஹ்மணாதிகளில் பிரசித்தி
தவைஷ ஹ்ருதி ஹ்ருதி – அவன் எங்குற்றான் என்ன -கண்டிலையோ –
உன்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று இருக்கிறான் –
ஆனால் செய்ய வேண்டுவது என் என்னில் –
தேந சேத விவாதஸ்தே -உடையவனாய் இருக்கிறவன் உடன் உனக்கு அவிவாதம் உண்டாகில் -இத்தால் பேறு என் என்பாயோ –
மா கங்காம் மா குரூன் கம-ஒரு தீர்த்தம் தேடித் போதல் -புண்ய க்ஷேத்ரம் தேடித் போதல் செய்ய வேண்டா
அதாவது, அவன் உடையவனான பின்பு அவ் விறைவனோடு விவாதம் இல்லாமையே உங்களுக்கு வேண்டுவது என்பதாம்.
அவ் விவாதம் இல்லாமையையே ஈண்டு வீடு செய்மின்’ என்கிறார்.
‘இதனால் பேறு என்?’ என்னில், வேறு பிராயச்சித்தம் செய்ய வேண்டுவது இன்றாம்.
‘அதற்குக் காரணம் என்ன?’ எனின், யான் எனது என்னுஞ் செருக்குக் கிடக்கப் பிராயச்சித்தம் செய்தல் என்பது,
மிகத் தாழ்ந்த பொருளை உள்ளே வைத்து மெழுக்கு ஊட்டினதைப் போன்றது ஓன்றாம்.
மேலும், உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
உடையவன் சர்வேஸ்வரன்; இவன் ‘என்னது’ என்று கொண்ட பொருள், பொருள்களுள் மிகச் சிறந்ததான உயிர்ப்பொருள்.
மற்றும், பொகடுகிற பொருள்தான் ஆகையாலே பிராயச்சித்தம் செய்வதற்கு வேறு அதிகாரியும் இல்லையே?
ஆகையால், நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடு செய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.
———————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
வீடுமின் -ஒரு சொல்லாய் -என்றது என்று ஒரு சப்தம் உண்டாய் என்றபடி –
விடுமின் என்றத்தை நீட்டி –நச்சராவணைக் கிடந்த திருச்சந்த -85–
தூங்கு தண் பலவின் கனி–பெரிய திருமொழி -9-10-8–இதை ச உதாஹரணம்
தியாகத்தை முற்படச் சொல்லுகிறது த்யாஜ்ய வஸ்துக்களின் க்ரவ்ய அதிசயத்தைப் பற்ற–
ராவணனுடைய ப்ராதிகூல்யம் நிலை நின்றமை கண்ட பின்பு அகம் அளவும் சென்று புத்ர தாராதிகளைக்
கூட்டிக் கொண்டு செல்லவும் கூடப் பெறாத படியில் லங்கை அடிக் கொதித்த படி
உபதேசம் அஷட்கர்ணமாய் இருக்க பஹு வசனத்தால் சொல்லிற்று -சிலர் தாந்தராய் அர்த்திக்கச் சொல்லாமையாலும் –
அனர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் எல்லாரையும் குறித்துச் சொல்கிறார் என்னுமத்தை
சங்கா பரிகார முகேன அருளிச் செய்கிறார் –
அஹம் மமேதி சண்டாள -அஹங்காரஸ்து சண்டாள -அஹங்கார தூஷிதம் சரீரம் –
பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த சாத்யாந்தர சாத்தனாந்த த்யாகத்தைச் சொன்னபடி –
விடுகை தானே பலம் என்கைக்காக வீடு செய்து என்று அனுவதிக்கிறது என்றபடி-
பரம பாதத்திலும் இதுவே அன்றோ பலமாய் இருப்பது என்னுமத்தை லவ்கிக த்ருஷ்டாந்தத்தால் –
ராஜ புத்ரன் இத்யாதியால் தர்சிப்பிக்கிறார்
அழகு சிறை -அழுகியே போம்படியான சிறை -நாச ஏக பர்யவசாயி காராக்ருஹ நிகலபந்த-இதி யாவத்-
உம்முயிர் வீடுடையானிடை -இதுக்கு சதுர்விதமாக அருளிச் செய்கிறார் –
நஞ்சீயர் இதி சேஷ பிருதிவீ கார்யம் ஹி சரீரம் என்னும் அபிப்ராயத்தால் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -உடையவன் என்றது சரீரமாக உடையவன் என்றபடி-
துரீய யோஜனையில் -உம் உயிரை வீடாக உடையவன் -உம்முயிர் வீடு செய்மின் என்று அன்வயம்
த்வா விமவ் புருஷவ் மூடவ்-துரியோதன தசானனவ் -கோக்ரஹம் வன பங்கனஞ்ச த்ருஷ்ட்வா
யுத்தம் புன புன –என்று சாகாங்க்ஷமாகச் சொல்ல
ருசி பிறந்த பின்பு அடி தொடங்கி பாரதம் எல்லாம் வைசம்பாயனர் ஜனமேஜனுக்கு அருளிச் செய்தது போலே
பொதுவாக கீழ் எல்லாம் சொல்லி வண் புகழ் நாரணன் என்பாராக -என்று அருளிச் செய்கிறார் –
உங்கள் சத்தையை நோக்கிக் கொண்டு-என்றது உம்முயிர் வீடாக உடையவன் -என்றதைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார்
அவன் உடையவனாக பின்பு அவனோடு அவ்விவாதமே வேண்டுவது –
அதஸ் சர்வம் தச் சேஷம் இதி பலிதம் -புனராத்ம சமர்ப்பணம் நாம கிம் -கஸ்ய பதார்த்தம் கஸ் சமர்ப்பயதி –
கிஞ்ச -ஏதாவன் மாத்ரேண-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்திர் பவிஷ்யதி கிம் –
மணிவர இவ-அன்றோ-என்றபடி -சர்வேஸ்வரன் இடம் இருந்து அபஹரித்த த்ரவ்யம்-
அவன் பக்கலிலே பொகடுகையாவது அவனது என்று இசைகையே
வீடு செய்ம்மினே-சமர்ப்பியுங்கோள் -இசைமினே-பாட பேதம் -இருபத்து நாலாயிரப்படி
இத்திருவாய் மொழி பிரமேயம் -பகவத் ஆஸ்ரயணம் -சகல இதர பரித்யாக பூர்வகமாக
பகவத் விஷயமான ஆத்ம சமர்ப்பணம் பிரமேயம்
முற்றவும் வீடுமின் -வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே -என்று அன்வயம் –
யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித-தேந சேத விவாதஸ்தே மா கங்காம்
மா குரூன் கம -ஸ்ரீ மாநவ தர்ம சாஸ்திரம்
விவாதம் உடையவன் கங்கா தீரங்களிலே போனாலும் நிஷ் பிரயோஜனம் –
அஹமமர வரார்ச்சிதேந தாத்ரா சம இதை லோக ஹிதாதே நியுக்த -ஹரி குருவாசகோ அஸ்மி ந ஸ்வ தந்த்ர பிரபவதி
சம்யமநே மாமாபி விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3–அம்சம் -எம கிங்கர சம்வாதம்-என்பதுவும் இவ்விடத்தில் அனுசந்தேயம்
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –