ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரம் சேர்மினீரே -என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகச் சொல்லி நின்றார் –
நம்மளவும் வாராமல் நின்றிடுவாரோ என்ற அதிசங்கை கொண்ட திருவாலி எம்பெருமான்
தானாக இவரை விஷயீ கரித்து இவர் திரு உள்ளத்திலே வந்து குடி புகுந்தான் –
அதனை உணர்ந்த ஆழ்வார் -பிரானே நான் அபேஷியாது இருக்க நீயே வந்து விஷயீ கரித்தாய்-
உன்னை ஒழிய வேறு ஒன்றில் நெஞ்சு போகாத படி ருசியையும் விளைவித்தாய் –
ஒரு நொடிப் பொழுதாகிலும் விட்டுப் பிரிந்தால் உயிர் வாழ முடியாதபடியும் ஆக்கி வைத்தாய் –
இனி நானும் உன்னைப் போகல ஒட்டேன்
என் நெஞ்சிலே நித்ய வாசம் பண்ணி அருளி என்னை ஒழிவில் காலம் எல்லாம் அடிமை கொண்டு அருள வேண்டும் -என்கிறார்-
—————————————————
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளிரணியாரசோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-
மெய்யடியார் ஹிருதய கமலத்தில் புகுந்து வாழ்வதே அவனுக்கு பரம உத்தேச்யம் –
பிரார்த்தனை இன்றியே வந்து புகுந்து கண்டு மகிழ்ந்து -உள் அடங்காமல் –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று வாய் விட்டு அருளுகிறார்
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -திருவாய் -5-8-9-
துரியோதனன் தன்னை மறந்து எழுந்து நின்றால் போலே –
நன்றி பாராட்டின தமக்கு தித்தித்து இருக்கும் படி -சிந்தனைக்கு இனியாய்
ஆழ்வார் திருவாராதன பெருமாள் இன்றும் கலியன் சந்நிதியில் சேவை சாதித்து அருளுகிறார் –
தாரகமாயும் இருந்தபடி ஆர் உயிர் -என்கிறார் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -6-7-1-
எம்பெருமான் நினைவாலே பக்தர்கள் அவன் உயிர்
பக்தர்கள் நினைவாலே எம்பெருமான் அவர்கள் உயிர் -அறிவிலேனுக்கு அருளாய் அறிவர் ஆர் உயிர் ஆனாய் -திருவாய் -6-9-8-
அசோக மரங்கள் அடர்ந்து செந்நிற தளிர்களின் ஒளி வீசி அக்னி ஜ்வாலை பரவினால் போலே விளங்கும் திருவாலி
சிந்தனைக்கு இனியாய் –விளியாகக் கொண்டு -வாழ்க -வினை முற்று வருவித்து முடிக்கவுமாம் –
—————————————————————
நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–3-5-2-
பக்தருடைய ஹ்ருதயத்தில் வந்து புகுவதற்க்காகவே எங்கும் கோயில் கொண்டு அருளுகிறான்
இது சித்தித்தவாறே அங்கு எல்லாம் ஆதாரம் மட்டமாகி விடுமே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வாநாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் -அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி போலே
அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் -என்கிறார்
நீல நிறத்தொரு மலையின் மேல் மா மணி விளங்குவது போலே அரவணை மேல் கிடந்தாய் என்கிற இதனால்
நீல மலையின் ஸ்தானத்தில் எம்பெருமானையும்
மா மணியின் ஸ்தானத்திலே ஸ்ரீ கௌஸ்துப மணியையும் உபமேயமாகக் கொள்ள வேணும்
அரவணை வேலைத் தலையில் -என்றதற்கு உபமேய அந்வயம் இல்லை
பாற் கடலும் பாம்பு அணையும் அவன் நிழலீட்டாலே நீல நிறம் பெற்றனவாகக் கொண்டு
அவற்றை நீலத் தட வரைக்கு உபமேயம் ஆகவும்
எம்பெருமானை மா மணிக்கு உபமேயமாகவும் கொள்ளலாம்
இந்த யோஜனையில்-அபி பணிபதி பாவாத் சுப்ர மந்தச் சயாளோ மரகத ஸூ குமாரை -ரங்க பர்த்துர் மயூகை –
சகல ஜலீதிபா நச்யாமஜீ முத ஜைத்ரம் புலகயதி விமானம் பாவனம் லோசனே ந-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -ஸ்லோகம் அனுசந்தேயம்
மா மணி நிகழ – நிகழ்தல் -விளங்குதல்
கரும்பாலை புகையைக் கண்ட மயில்கள் மேகத் திரளாக மயங்கி கூத்தாடுகின்றனவாம் –
———————————————
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்
செந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு
அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே–3-5-3-
ஸ்திரப் பிரதிஷ்டை யாம்படி என் மனத்திலே புகுந்தாய் –
பரத ஆழ்வான் போலே பல்லைக் கடித்து கொண்டு நாள்களை எண்ண வேண்டாத படி
இந்த ஜன்மம் முழுவதும் நித்ய சம்ச்லேஷம் ஆகைக்காக -நிலை நிற்கும் என்று நிச்சயித்து இருந்தேன்
கூழை தலை மயிர்க்கு பேராய் இலக்கணையால் தலையை சொல்லிற்று =செந்நெல் தலை என்றபடி –
முள் எயிறு ஏய்ந்தில கூழை முடி கொடா-பெரிய திரு மொழி -8-2-9-
கூழ் உணவு -பயிரை குறித்து காரிய ஆகு பெயர்-
———————————————–
மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-
பழைய நிலைமையையும் இப்பொழுது நிலைமையையும் அனுசந்தித்து நன்றி பாராட்டி அருளுகிறார்
உன் திருவடிகளையே சிக்கென பிடித்துக் கொண்டு வாழுமாறு அருளினாயே
பணை -குளம்
——————————————–
நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-
அந்தரங்க கைங்கர்யம் இடை விடாமல் செய்து கொண்டு இருக்க அருள வேண்டும் –
சுக்ரீவனுக்கு நம்பிக்கை கொடுக்க அரும் பெரும் செயல்களை செய்து அருளினாய் -மரம் எய்த மா முனிவா –
அவை ஒன்றும் வேண்டா பிரியாமல் இருந்தாலே போதும்-
—————————————–
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-
கருமுகை -கற்பகம்- நாழல் -மந்தாரம் -சௌகந்தி- செங்கழுநீர் -தாமரை -தாழை -மா மலர் எட்டு
புன்னை முதலியவற்றுக்கும் உப லஷணம்
திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
அஹிம்சா பிரதமம் புஷ்பம் -புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ -சர்வ பூத தயா புஷ்பம் -ஷமா புஷ்பம் விசேஷத –
ஜ்ஞானம் புஷ்பம் -தப புஷ்பம் -த்யானம் புஷ்பம் -ததைவ ச சத்யம் அஷ்ட விதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதி கரம் பவேத்
காமரு சேவடி -காமம் தரு சேவடி -தானாக வந்த செல்வத்தை தள்ளுவார் யுண்டோ -இனி போகலொட்டேன் –
—————————————
உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–3-5-7-
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம் –
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் –
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் –
சமயம் பார்த்து புகுந்த உன்னை இனி போகலொட்டேன்
அப்புலவ –
விசேஜஞ்ஞன் அல்லையோ அவசரம் அறியாயோ புகுருகைக்கு
புண்ணியனே
உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூ க்ருதமானவனே-
வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று
இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –
———————————————————–
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே–3-5-8-
நிர்ஹேதுக கிருபையாலே என் நெஞ்சிலே வந்து புகுந்தாய் -இனி இவ்விடம் விட்டு நீ நினைத்தாலும் போக முடியுமோ –
இனிப் போனால் அறையோ-பேர் அருள் மாறினால் அன்றோ இவ்விருப்பு மாறப் போகிறது
அறையோ என நின்ற திருக் கருங்கடல் -திரு விருத்தம்
மதுவைப் பருக இழிந்த வண்டுகள் செண்பக மல்லிகை மலர்களில் தழுவி இருக்க
அவை கொதித்தவாறே சந்தனச் சேற்றில் கை வைத்து கிடக்குமா போலே –
இளம் தெங்கிலே போய் அதன் தாதுக்களை அளைகின்றன –
—————————————————–
ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–3-5-9-
புகுந்தாயைப் போகலொட்டேன் -என்றார் –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்றும் –
இனி உன் திருக் குறிப்பே -என்றும்
அவன் திரு உள்ளத்தை அனுசரித்து நிற்க வேண்டிய ஸ்வரூப உண்மையை உணர்ந்த ஆழ்வார்
பல் பன்னிரண்டையும் காட்டிப் பிரார்த்திக்கிறார்
நத்யஜேயம் கதஞ்சன -மாஸூசா -என்ற கடல்கரை -தேர் தட்டு வார்த்தையாவது
அடியேனை நோக்கி அருளிச் செய்ய வேணும் என்கிறார்
இனி நான் உன்னை விட்டு ஒரு நாளும் பிரியேன் -என்று சோதி வாய் திறந்து அருள வேணும் என்கிறார்
ஒரு பொருள் உரையாய் -ஒரு மாற்றம் உரையாய் -என்னைப் பெறுகைக்கு இத் திருவடிகளே சாதனம் என்ற ஒரு பொருளையும்
மாஸூச துக்கப் படாதே என்ற ஒரு சொல்லையும் சொல்ல வேணும் -என்கை
நீதியாகிய வேதம் -சத்யம் வத-மெய்யே சொல்லு தர்மத்தை நடத்து -நீதியை உணர்த்துகின்ற வேதம் —
—————————————————-
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10-
திரு நாட்டிலே சென்று நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவார்கள்
ஓத வல்லவர்கள் இருக்கும் இடமே வைகுந்தம் ஆகும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -திருவாய் மொழி போலே-
—————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply