அரிமேய விண்ணகரத்திலே புருஷகார பூதைகளான உபய நாச்சியார் சமேதராய் நித்ய வாஸம் செய்து
அருளுகிறபடியை அனுசந்தித்து
அங்கே சென்று வணங்கும்படி தம் திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார்-
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-
ஸ்ரீ தேவியும் பூமா தேவியும் இறையும் அகலாது அருகே இருக்க தீ வினைகள்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்னும்படி
பறந்து ஒடும்படியை -தீ வினைகள் போயகல அடியவர்க்கு என்றும் அருள் நடந்து –
ஏழு உலகத்தில் உள்ளாறும் வந்து ஆஸ்ரயிக்கும்படி நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம்
அரு விடங்கள் -உருவம் அற்ற வஸ்து -அரு -ஆகாசத்தை சொன்னபடி
அரிமேய விண்ணகரம் -ஹரிர் ஹரதி பாபானி -பாபங்களைப் போக்குவதாலே ஹரி எனப் பேர் பெற்றவன்
நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம் –
———————————————————–
வென்றி மிகு நரகனுரமது அழிய விசுறும்
விறல் ஆழித் தடக்கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில்
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை யவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-2-
பரம போக்யனான எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசம் -இங்கு
சகல சாஸ்திரங்களையும் அதிகரித்து ப்ரஹ்மா போலே சிருஷ்டிகளைப் பண்ண வல்லவர் -வைதிகர்கள் வாழும் இடம்
குரு மணி -சிறந்த மணி போன்றவன்
அமுதம் அளிக்கும் குரு மணி என் ஆராமுதம் குலவி உறைகோயில் அரிமேய விண்ணகரம் வணங்கு -என்றபடி-
——————————————————————
உம்பரும் இவ் ஏழு உலகும் ஏழு கடலும் எல்லாம்
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்டப்
பலங்கனிகள் தேன் காட்ட படவரவேரல்குல்
அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-3-
அண்டர்கள் -இடையர்கள்
ஆபத் சகன் -பிரளய ஆபத்தில் லோகத்தை ரஷித்து
குவலயா பீடம்-கம்சனாதிகளை நிரசித்து தன்னையே ரஷித்தும் அருளிய அவனே நித்ய வாஸம் செய்யும் இடம்
அழகிய மாதர்கள் மகிழ்ந்து வாழும் தேசம்
கும்பீ-யானைக்கு வட மொழியில் இதுவும் உண்டு -மருப்பு ஒசித்து -கொலை செய்தமையைக் காட்டும் உபசார வார்த்தை
குஞ்சி -ஆண் மயிர்
————————————————————-
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று
உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு
அருள் செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடேறு மலர்ச் செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணம் நாறும் வான் பொழிலினூடே
ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-4-
இரணியனை நிரசித்து ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு பேர் அருள் செய்து அருளிய பெருமான் நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம்
கரும்பு ஆலைகளும் புகை கமழும் திவ்ய தேசம்-சேடு-அழகு -இளமை -திரட்சி -நன்மை -பெருமை
———————————————————————
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக்
களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே
அண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3-10-5-
அழகு வாய்ந்த ஸ்ரீ வாமன மூர்த்தியாகி -என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் கொடு என்று யாசித்து
பெற்ற ஹர்ஷத்தால் விம்ம வளர்ந்து எல்லா உலகங்களையும் ஆக்கிரமித்து கொண்டு அருளிய எம்பெருமானே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
வாத்திய கோஷங்கள் -வண்டுகள் ரீங்காரம் -வேத த்வனிகள் -ஸ்திரீகள் நூபுர ஓசைகள் -சேர்ந்து கடல் ஒலி போலே -இருக்கும் தேசம் –
————————————————————————
வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார்
சேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-6-
சக்ரவர்த்தி திருமகனாயும் -அத்விதீய ரஷகனாயும்-நித்ய ஸூ ரிகள் நிர்வாஹகனாயும் உகந்து அருளி எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம்
வாயிலிலே செந்நெல் பயிர்களை அறுக்கும் போது பிடிக்கும் பிடியில் தாமரைகளும் மீன்களும் பிடி பட்டு அறுக்கப் பட
அவற்றின் நின்றும் உதிர்ந்த முத்துக்களை வலைச்சியர்கள் வாரித் திரட்டும் -தேசம் –
கடல் அருகில் இருப்பதால் கடலோதம் வரும் முத்துக்களும் வரும் –
அவை மீன்கள் வயிற்றினில் புகுமே -அவை அறுவடையில் வெளிப்பட்டன
———————————————————————-
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத் தான் பயந்த கரு மேனி யுடை யம்மான்
கருதும் இடம் பொருது புனல் துறைதுறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆ மனத்து மறையவர்கள் பயிலு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-7-
தேனுகாசுரன் காலைப் பற்றி சுழற்றி பனை மரத்தில் எறிந்து நிரசித்த கண்ணனே இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான்
அவனே காமனைப் பயந்த கருமேனி யுடை அம்மான் –
வைதிக பெருமக்கள் நித்ய வாஸம் செய்யும் தேசம்
—————————————–
கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-8-
தொங்கு ஈண்டி -கும்பலாக கூடி இருக்குமிடம்
தொழுதியோடு மிக பயிலும் சோலை -பறவைகளின் ஒலியோடு மிகவும் கூடி உள்ள சோலைகளிலே
அப்போது அலர்ந்த நறு மலர்களிலே வண்டுகள் தேனைக் குடித்து இசை பாடும்
—————————————————-
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-9-
பூதனையின் விஷப்பாலை யுண்டு -மாற்றாக தயிர் வெண்ணெய் வாரி யுண்டு -கம்சனுடைய உயிரை முடித்தவன் –
உலகம் யுண்ட பெரு வாயன் உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம் –
ஹரி உன் திருவடிகளே சரணம் என்று வணங்கும் அந்தணர்கள் நிறைந்த திவ்ய தேசம்
————————————————-
சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்
கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-
நப்பின்னை பிராட்டியை சம்ச்லேஷித்த பெருமானே உகந்து அருளி நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்
இங்கு உள்ள வைதிகர்கள் வேத அத்யயனத்தில் பிரமனை ஒத்தும் அழகில் சுப்ரமணியனை வென்றும் இருப்பார்கள்
இந்த திரு மொழியை ஓதி யுணருமவர்கள் இங்கேயே பெரும் புகழ் உடன் வாழ்ந்து பின்பு நித்ய ஆனந்தம் பெறுவார்கள்-
ஐந்தினோடு மூன்றும் ஒன்றினோடும் ஒன்றும் இவை
ஐந்து -கிருஷ்ணாவதார சேஷ்டிதங்களை அருளிச் செய்யும் பாசுரங்கள் -2-3-7-8-9- இவை
மூன்றும் -நரசிம்க வாமன ராம அவதாரங்களை அருளிச் செய்யும் பாசுரங்கள் மூன்றும் -4-5-6- முறையே இவை
அர்ச்சாவதார முதல் பாட்டும்
பயன் சொல்லி அருளும் ஈற்றுப் பாட்டும் -என்றபடி-
—————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply