திருத் தேவனார் தொகை -மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –
எம்பெருமானை சேவிப்பதற்கு தேவதைகள் நெருங்கி நின்ற திவ்ய தேசம்-
போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-
பெரிய மண்ணி ஆற்றின் தென்கரையிலே உள்ள திவ்ய தேசம் -மாதவப் பெருமாள் சந்நிதி -பிரசித்தம்
பொழில் சோலை -பெருமை -செறிந்த சோலை
தேதென -இசைக் குறிப்பு-
————————————————————————–
யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-
யாவையும் எவரும் தானே -ஐக்ய பாவம் சொல்ல வில்லை -சரீர சரீரி பாவம் –
எழில் வேதப் பொருள்களுமாய் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை பிரதிபாதிக்கும் வேதம் என்பதால் பன்மை
பாண்டிய ராஜன் படை திரட்டி வர அந்தணர்கள் தாமே புறபபட்டு ஓடி எதிர்த்து வெற்றி கொண்ட இதிஹாச பிரசித்தி யுண்டே
ஒண் திறல் தென்னன் ஓட வடவரசோட்டம் கண்ட திண் திறலாளர் நாங்கூர் திருமணிக் கூடத்தானே -என்பர் ஐந்தாம் திருமொழியிலும்
உடைய பிள்ளை -ஞான சம்பந்தரின் மறு பெயர் -உடைய பிள்ளை என்கிறவன் -அங்குத்தை ஆலயத்தைக் கவிபாட என்று வர
அவனை எதிரே சென்று அடித்தோட்டி பின்னை பாடப் பெறாதே போந்தான் -என்று ஒரு பிரசித்தி உண்டு இறே –
——————————————————————
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்
தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-3-
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தனக்கு பிரகாரமாய்
புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே
தலைவன் ஆனவன் வந்து நித்ய வாசம் பண்ணி அருளும் திவ்ய தேசம்
செல்வம் ஒரு நாளும் குறையாமல் பெருகி வரப் பெற்ற வைதிக பிராமணர்கள் வாழும்
திரு நாங்கூரில் பரம போக்யமான திருத் தேவனார் தொகை-
———————————————————————
இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-4-
அனைத்து தேவதைகளும் திரண்டு அருள் புரிய வேண்டிக் கொள்ள
அவர்களுடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைக்காக
அருள் புரியும் எம்பெருமான் நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம் –
அபேஷிதங்களை நிறைவேற்றி தருவதற்கு மாத்ரம் அல்லாமல்
சோலை வாய்ப்பு கண்டும் விட மாட்டாமல் எழுந்து அருளி இருக்கும் இடம் –
——————————————————–
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே -4-1-5-
பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து உய்யக் கொண்ட உபகாரஹன்
நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்
உருவம் அற்ற ஆகாசத்தையும் வயிற்றிலே வைத்து அருளியதை சொன்னது இவற்றை வைத்தாலும்
நெருக்கு உண்ணாமல் இடைவெளி பெரிதும் யுண்டாயிற்று என்பதை தெளிவிப்பதற்காக-
—————————————————–
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே—4-1-6-
மிகச் சிறிய குழவியாய் சிறிய ஆலந்தளிரிலே பள்ளி கொண்டு அருளிய பிரான் எழுந்து அருளி உள்ள திவ்ய தேசம்
யதோ வாசோ நிவர்த்தந்தே -புறப்பாட்டின் பொழுதும் வேதம் பின்னே செல்லுமே
தொடராத -பின் தொடர்ந்தும் பிடிக்க முடியாத -என்றபடி-
—————————————————–
ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்
ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே–4-1-7-
ஏடு ஏறு -புத்தகத்தில் எழுதி வைக்கத் தக்க
ஸ்ரீ ராமாயணம் போல இங்குள்ளார் வைதிக செல்வமும் எழுதி வைக்கத் தக்கதாம்
குற்றம் அற்ற பெரும் செல்வர் என்றுமாம்
நாட்டில் நடையாடாத அத்விதீய நரசிம்ஹம் என்றபடி-
————————————————-
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-
விஸ்வகர்மா நிருமித்த சிவ வில்லை ஜனக குலத்தில் தேவராதன் என்னும் அரசன் இடம் சிவபெருமான் கொடுத்தான்
வம்ச பரம்பரையாக ஜனக மகா ராஜன் அளவும் வந்தது-
——————————————-
கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக்
கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்
வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-9-
கூத்தன் -திவ்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
வீரச் செயல்களை சிரமம் இன்றி விநோதமாக கூத்தாடுவது போலே செய்து அருளின ஸ்ரீ கிருஷ்ணனே
இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான்
வம்பு புதுமை –வம்பவிழும் புதுமையாக அலர்ந்த -அப்போது அலர்ந்த –
——————————————
காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து -நன்மைக்கு எல்லை இல்லாமல் இருக்கும் திரு நாட்டிலே
திருவடி திரு வநந்த ஆழ்வான் போன்ற நித்ய சூரிகளோடே ஒரு கோவையாக இருக்கப் பெறுவார்-
—————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply