Archive for June, 2014

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -31 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்ட விஷயத்தில் அநவரத பக்தியைப் பண்ணுமது ஒழிய
வ்யதிரிக்த விஷயங்களை ஷண  காலமும் ஸ்மரிக்கல்  ஆகாது  கிடீர்–என்கிறார்
அவனுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை அனுசந்தித்தால்
வேறே யொன்றை நினைக்கப் போமோ -என்கிறார் –

———————

புரியொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரி யுருவும் ஆளுருவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –31-

பதவுரை

ஒரு கை புரி பற்றி–ஒரு திருக் கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி
(மற்றொரு திருக் கையிலே)
ஓர் பொன் ஆழி ஏந்தி–ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி
ஆள் உருவம் அரி உருவம்–நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான்—அக்நியின் வடிவம் போலே [கண்ணெடுத்துக் காண முடியாத] வடிவத்தை யுடையனான இரணியனுடைய
மார்பு–மார்பை
இடந்த–நகத்தால் குத்திப் பிளந்து போட்ட
மால்–திருமாலினுடைய
அடியை அல்லால்–திருவடிகளைத் தவிர
மற்று–வேறொரு விஷயத்தை
இமை–க்ஷண காலமேனும்
எண்ணத்தான் ஆமோ–நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]

————————-

வியாக்யானம் –

புரியொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி –
வலம்பு ரியை குறைத்துப் புரி என்று கிடக்கிறது
ஒரு திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் தரித்து
மற்றைத் திருக் கையிலே ஸ்ப்ருஹணீயமான திரு வாழி ஆழ்வானைத் தரித்து –

புரி யொரு கை என்கையாலே –
ஹிரண்யன் மேலே விழுகிறவனை விலக்கினால் போலே –

பொன்னாழி ஏந்தி என்கையாலே
ஹிரண்யன் திரு ஆழியில் படாமையால்
அழகுக்குக் கட்டின பத்திரம் ஆய் விட்டது –

அரியுருவும் ஆளுருவுமாகி –
அவ் வாழ்வார்களைக் கொண்டு கார்யம் கொள்ள ஒண்ணாத   படி யானவாறே
அதுக்கே ஈடான வடிவைக் கொண்டான்

இவன் கொண்ட வற்றில் அகப்படாதது ஒன்றைக் கொண்டு இவனை அழியச் செய்ய வேணும்
அதுக்கீடாக நரத்வ சிம்ஹங்களை சேர்த்துக் கொண்டு தோற்றினான் –

எரியுருவ  வண்ணத்தான் மார்பிடந்த –
எரியினுடைய ரூபம் போலே இருந்துள்ள வடிவை யுடைய
ஹிரண்யன் யுடைய மார்பைப் பிளந்து பொகட்டவனுடைய-
க்ரௌர்யத்தால் வந்த அநபிபவ நீயதை   தோற்றுகிறது-

அன்றிக்கே
பொன்னன் -என்னக் கடவது இறே-

மாலடியை யல்லால் –
சிறுக்கன் உடைய விரோதியைப் போக்கி
அவன் பக்கல் வ்யாமுக்தனாய் இருந்துள்ள வனுடைய
திருவடிகளை -என்னுதல்

உக்ரம் வீரம் மகா விஷ்ணும் -என்கிறபடியே சொல்லுதல் –

மற்று எண்ணத்தான் ஆமோ இமை –
இப்படிப் பட்டவனுடைய திருவடிகளை ஒழிய ஷண காலம் வேறு ஒன்றை என்னலாமோ  -என்னுதல்
தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவின குணம் புறம்பு ஒன்றை எண்ண ஒட்டுமோ

அன்றிக்கே
நெஞ்சை சம்பாதித்துக் கொண்டு வருகிற பிரகரணம் ஆகையாலே
கண்டாயே இருந்தபடி இத்தைப் பார் -என்றதாகவுமாம் –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -30 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

சம்சாரத்தில் சமாஸ்ரயணீயர் பலர் உண்டு என்று பிரமிக்க வேண்டா
சம்பந்த ஜ்ஞானம் உண்டாக நெஞ்சு தானே அவனை யாராய்ந்து பற்றும்
கண் அழிவற்ற பக்தியை யுடையாருக்கு அவன் தானே வந்து கிட்டும் அளவும்
க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் –

——————-

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து-30-

பதவுரை

உள்ளத்தை–மனத்தை
தெளிது ஆக–[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவை யுடைய தாம்படி
செம் நிறீஇ–செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தை மூட்டி]
ஞானம்–பகவத் விஷய பக்தியாலே
தெளிது ஆக–‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு–நன்றாக
உணர்வார்–அறிபவர்களுடைய
சிந்தை–மனமானது.
எளிது ஆக–வருத்தமில்லாமல்
தாய் நாடு கன்றே போல்–[பெரிய பசுக் கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக் கொண்டு கிட்டுகிற கன்றைப் போல,
தண் துழாயான் அடிக்கே–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த எம்பெருமானது திருவடிகளையே
புரிந்து–விரும்பி
போய் நாடிக் கொள்ளும்–தானே சென்று தேடிச் சேரும்.

———————————

வியாக்யானம் –

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ –
தெளிவை உடைத்தாம் படிக்கு ஈடாக
ஹ்ருதயத்தைச் செவ்வே நிறுத்துவது
விஷயாந்தரங்களால்  பிறக்கும் காலுஷ்யங்களைப் போக்கி
பிராப்த விஷயத்திலே ஹ்ருதயத்தைச் செவ்வே நிறுத்துவது –

செந்நிறீஇ –
இந்த்ரியங்களை தான் வெல்லப் பாராதே
எம்பெருமான் பக்கலிலே மூட்டி
இந்த்ரியங்களை ஜெயிக்கப் பார்க்கை –

அதாகிறது
விவேக
விமோக
அமாநித்வாதிகள்
ஆகிற இவற்றை உடைத்தாம் படி நெஞ்சை நியமிப்பது –

ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை-
இப்படி ஹிருதயம் செவ்வியதானால் பிறக்கும் பக்தியை யாய்த்து
இப்போது இங்கு ஜ்ஞானம் -என்கிறது

அந்த பக்தியினாலே
தெளிதாக -கூரிதாக -நன்கு உணருமவர்கள் உண்டு
ஸ்ரவண மனநாதிகளில் சொல்லுகிறபடியே
சாஷாத் காரத்தளவும் அனுசந்திக்குமவர்கள் சிந்தை உண்டு
அது அநந்தரம்-
ஒரு வருத்தமும் இன்றிக்கே
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்கிறபடியே அவனை பிரத்யஷிக்கப் பெரும் –

தெளிதாக —
அவன் ஸ்வாமி நாம் சேஷ பூதர் -என்று உணர –

எளிதாக-
விஷயங்களில் பழக்கம் போலே
தானே மூளும்படியாய் இருக்கை-

என் போலே என்னில் –
தாய் நாடு கன்றே போல் –
ஒரு திரள் பசு நின்றால்
அதிலே ஒரு கன்றை விட்டால்
கன்றானது திரளில் மற்றைப் பசுக்களைப் பாராதே
தன் தாய் முலையைச் சென்று பற்றுமா போலே
ஆபாச ஆஸ்ரயணீயரை விட்டு அவனையே பற்றும்

தண்  துழாயான்-
தாயாய் இருக்கிறபடி

அடிக்கே-
அல்லாத ஸ்தலங்களைக் கடந்து
தண் துழாயான் அடிக்கே எளிதாகப் போய் நாடிக் கொள்ளும்
பரம ப்ராப்யனான சர்வேஸ்வரன் உடைய திருவடிகளைச் சென்று கிட்டும்

போய் நாடிக் கொள்ளும் புரிந்து-
புரிந்து -விரும்பி என்னுதல்
நடுவில் மிறுக்குகளைப் பாராதே -என்னுதல்
தாய் நாடு கன்றே போலே -என்கிறது திருஷ்டாந்தம் –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -29 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தான்
என்று பிற்காலியாதே
நெஞ்சே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய்
இத்தை அழகிதாக புத்தி பண்ணு
என்கிறார்  –

——————————-

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -29-

பதவுரை

இறையும்–ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான்–பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயு வென்ன
அலை யெறிகிற ஜல மென்ன சிவந்த நிறமுள்ள அக்நி யென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய
லீலா விபூதியை யுடையவனாயு மிருக்கிற எம்பெருமான்,
பிறை மருப்பின்–பிறை போன்ற தந்தத்தை யுடையதும்
பைங்கண்–பசுமை தங்கிய கண்களை யுடையதுமான
மால் யானை–பெரிய கஜேந்திரனை
படு துயரம்–(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த–ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான பெருமான் காண்;
தெளி–[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்து கொள்.

———————————-

வியாக்யானம் –

இறையும் –
கரை கட்டாக் காவேரியைப் போலே இருக்கிற
ஸ்வரூபத்தை யுடையானாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கிறவனும் –

நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் –
இத்தால்
பஞ்ச பூதங்களாலும் ஆரப்தமான அண்டத் தளவும் நினைக்கிறது –
அது தன்னாலே லீலா விபூதியைச் சொல்லிற்றாய்-
அவ் விரண்டாலும் ஜகதா காரனாய்
உபய விபூதி உக்தனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
இதுக்கு மேற்படதில்லை இறே ஐஸ்வர் யத்துக்கு  –

பிறை மருப்பின் பைங்கண் மால் யானை –
பிறை போலே இருந்துள்ள கொம்புகளை யுடைத்தாய்
ஜாத்யுசிதமான கண்ணில் பசுமையையும் யுடைத்தாய்
மதமுதிதமான யானையானது விழுக்காடு அறியாமையாலே
பொய்கையிலே போய்ப் புக்கு
முதலையின் கையிலே யகப்பட்ட அத்தை அதின்
வாயினின்றும் மீட்டுப் பின்னைத்
தன் திருவடிகளிலே பூவை இடுவித்துக் கொண்டு நோக்கின –

படு துயரம் –
ஆனைக்குப் போரும்படியான துயர் –

காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி –
வாத்சல்ய அம்ருதத்தை வர்ஷியா நின்ற கண்

மால் –
அரை குலையத் தலை குலைய வந்து தோற்றின படி
ஆஸ்ரித ஸூலபனுமாய்
அவர்கள் ஆபத்தைப் போக்குவான் ஒருவனுமாய் கிடாய் இருப்பது
இத்தை புத்தி பண்ணு –

தெளி –
அவன் தம்மை மாஸூச  -என்னத்
தாம் தம் திரு உள்ளத்தை மாஸூச-என்கிறார்

வாசலைத் திறந்து வைப்பாரைப் போலே பெறுகைக்கு அங்குப் போக வேண்டா
இசைவே வேண்டுவது

அவனே வராவிடில்
சமாதிக தரித்ரானவனைப் பெற உபாயம் உண்டா
வாசனையாலே
அம்மே என்பாரைப் போலே அழைத்தது  இத்தனை  –

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -28 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

அந்நிலை தன்னிலே ஐஸ்வர்யம் தோற்றும்படி  இரா நின்றது என்னுதல்-
அன்றிக்கே –
பெரிய அழகு அடங்கலும் தோற்றும்படியாய் இரா நின்றது என்னுதல் –
அன்றிக்கே
நீர்மையைச் சொல்லிற்று ஆதல் –

——————————–

கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை –28-

பதவுரை

கார் வண்ணத்து ஐய–மேகம் போன்ற வடிவையுடைய பெருமானே
வலம் புரியும்–வலம்புரிச் சங்கமும்
நேமியும்–சக்கரமும்
கைய–என் கையிலுள்ளன;
மலர் மகள்–பெரிய பிராட்டியார்
நின் ஆகத்தாள்–உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான்–சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான்–உனது உந்திக் கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான்–பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை–உனது திருமேனியின் ஏக தேசம்

————————————-

வியாக்யானம் –

கைய  வலம் புரியும் நேமியும் –
கையிலே உண்டானது ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருவாழி யாழ்வானும் யாய்த்து –
இதுக்கு மேற்பட்ட தில்லை இறே ஐஸ்வர்யத்துக்கு –

கார் வண்ணத்தைய –
மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையான நிருபாதிக பந்து வானவனே
இவை யடைய என்னது என்னலாம் படி இருக்கை –

மலர் மகள் நின்னாகத் தாள் –
பெரிய பிராட்டி யானவள் உன் திரு மார்விலள்-
அலர் மேல் மங்கை உறை மார்வன்
ஸ்ரீ யபதி என்கைக்கு அவ்வருகு இல்லை இறே ஐஸ்வர் யத்துக்கு எல்லை

செய்ய மறையான் நின்னுந்தியான் –
அந்ய பரரோடே வாசி இல்லை என்கிறது –
இவ்வருகில் உள்ளார் அடங்கலும் உன்னை நேரே காட்ட வற்றான
வேத பிரதானம் பண்ண வல்ல சக்தியை யுடையனான ப்ரஹ்மா
உன்னுடைய திரு நாபியைப் பற்றி லப்த ஸ்வரூபனாகா நின்றான் –

மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை –
ஈஸ்வர சப்த வாஸ்யனாக பிரசித்தனாய்
மதிள் மூன்று எரித்தானாய் இருக்கிற
ருத்ரனானவன்  உன் திரு மேனியிலே
ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபன் ஆகா நின்றான் –
இரண்டூரைச் சுட்டுப் பேர் படைத்தவன் –
கோட் சொல்லிப் பிரசித்தராமா போலே –

அன்றிக்கே
மா மதிள் மூன்று எய்த இறையானவன்
உன் திரு மேனியைப் பற்றி
ஈஸ்வரனாய் திரியா நின்றான் -என்றதாகவுமாம் –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -27 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

ஆக திருமலையிலே வந்து நிற்கிற படியை அனுசந்தித்தார்
அந்த நிலை தன்னையே கொண்டு இவனுடைய கைகள் ஆனவை
உகவாதார் மண் உண்ணும்படி வளர்ந்தவை என்று கொண்டு
நிச்சயிக்கலாம் படி நின்றது என்கிறார் –

————————————————

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை –27-

பதவுரை

மலையால்–கோவர்த்தன கிரியைக் கொண்டு
குடை கவித்து–குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசி யென்னும் அஸுரனுடைய வாயைப் பிளந்தும்,
சிலையால்–வில்லைக் கொண்டு
மராமரம் ஏழ் செற்று–ஸப்த ஸால விருக்ஷங்களை அழித்தும்,
(இச் செயல்களோடு நிற்காமல்)
கொலை யானை–கொலை செய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு–சண்டை செய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும்–பிடுங்கினவையும்.
பூ குருந்தம்–பூ வோடு கூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும்–வேரோடே பறித்துத் தள்ளினவையும்
(எவை யென்றால்)
கார்–(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தை யொத்த
கோடு–சங்கை
பற்றியான்–ஏந்தி யிருக்கின்ற பெருமானுடைய
கை–திருக் கைகளே யாகும்.

—————————————-

வியாக்யானம் –

மலையால் குடை கவித்து –
வர்ஷத்துக்குக் குடை என்று ஒன்றை இட்டுப் பரிஹரிக்கக் கடவதாய் இருக்கும் இறே
அதில் அவன் இவ்வர்ஷத்தை எத்தை இட்டுப் பரிஹரித்தது என்னில்
ஒரு மலையைக் குடையாகக் கொண்டு கிடீர் – என்கிறார்

இந்த்ரன் ஆசூர பிரக்ருதி அல்லாமையாலே
பசி க்ராஹத்தாலே செய்தான் ஆகில்
மலையை இட்டு நம்மை நோக்கிக் கொள்வோம் -என்று நலிவைப் பரிஹரித்து விட்டான் –

மாவாய் பிளந்து –
பண்ணின ப்ராதி கூல்யத்தின் கனத்தாலே கேசியைக் கொன்ற படி
நாரதாதிகள் கூப்பிடும்படி வந்த கேசியை நெட்டிக் கோரையைக்
கீண்டாப் போலே வாயைக் கிழித்துப் பொகட்டு –

சிலையால் மராமரம் ஏழ் செற்று –
அவ்வதாரத்துக்கு அடுத்த ஆயுதத்தாலே
மராமரம் ஏழையும் எய்து –
அதுவும் இவர்க்கு ஒரு போகியாய்த் தோற்றுகிற படி

கீழும் மேலும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமாய் இருக்க
நடுவே ராமாவதாரத்தை அனுபவிக்கிறார் இறே
அதுக்கும் ஒரு ஆஸ்ரிதனுக்கு விச்வசிப்பித்துக் கார்யம் செய்த படி இறே –

கொலையானைப் போர்க்கோடு ஒசித்தனவும் –
அங்கு ஷத்ரியன் ஆகையாலே சிலையாலே கார்யம் கொண்டான்
இங்கு இடையன் ஆகையாலே முன் கை உரத்தாலே கார்யம் கொள்ளுகிறான்

கண்ணுக்கு இலக்கானாரை விழ விட்டுக் கொண்டு சஞ்சரியா நிற்பதான
குவலயா பீடத்தின் உடைய யுத்தத்துக்கு பரிகரமான
கொம்பை முறித்துக் குட்டிச் சுவர் போலே தள்ளிற்றும் –

பூங்குருந்தம் சாய்த்தனவும் –
அடியே பிடித்து
தலை யளவும் செல்லப் பூத்து
பிள்ளைக்கு ஆகர்ஷகமாய் நின்ற குருந்திலே பூப் பறித்து
லீலா ரசம் அனுபவிக்க அத்தைத் தள்ளி விட்டதும்

கார்க்கோடு பற்றியான் கை
இவை எல்லாம் கார்க்கோடு பற்றியான் கை கிடீர் செய்தது என்கிறார்

காரின் தன்மையை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைப் பற்றினவன் உடைய கை கிடீர்
கோஷத்துக்கும் ஸ்ரமஹரதைக்கும் மேகத்தோடு ஒக்கச் சொல்லுகிறது

அன்றிக்கே
திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருந்த போது
மேகத்தைப் பற்றி இருந்த சங்கம் போலே இருந்தது -என்றுமாம்

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் பிடிக்கவும் பொறாத மிருதுவான கையைக் கொண்டு கிடீர்
இத் தொழில்கள் எல்லாம் செய்தது

கீழ் பஹூ வசனமாகச் சொல்லிக் கொடு போந்ததே யாகிலும்
இங்கே கேவல ஏக வசனமாகத் தலைக் கட்டப்
பாங்கும்
பிராப்தியும் உண்டு-

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -26 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

அவ்வோ அவதாரங்களில் உதாவாதார் உடைய இழவும் தீர்க்கைக்காக
திருமலையிலே புகுந்து நின்றான் கிடீர் என்கிறார் –

————————————-

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

பதவுரை

எழுவார்–(தாங்கள் விரும்பின ஐஸ்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐஸ்வர்யார்த்திகளும்
விடை கொள்வார்–(தாங்கள் விரும்பின கைவல்ய மோக்ஷம் கைப்பட்ட பின் எம்பெருமானைத் திரும்பிப் பாராமல்)
விடை பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்–இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை
ஒரு நாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய
இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை–(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீ வினையாகிய நெருப்பை
நந்துவிக்கும்–அணைக்கின்ற
வேங்கடமே–திருவேங்கட மலையே
வானோர்–நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை–ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும்–தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை–மலையாகும்.

——————————————–

வியாக்யானம் –

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை  கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை  நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய  ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன ததா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும்  கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார்  –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி  உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -25 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

அவன் ஓவாதே அழுகிற படியைக் கண்டு
இவரும் அவ்விருப்பிலே ஈடுபடுகிறார்
ஓவாதே ஏத்தவும் தொடங்கினார்

அவனுக்கு நினைவும் பேச்சும்
வெண்ணெயிலே ஆனாப் போலே
ஆழ்வார்க்கும் நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே யான படி –

—————–

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  —-25-

பதவுரை

வரை மேல்–ஒரு மலையின் மேலே
மரகதமே போல–மரகதப் பச்சை படிந்தாற்போல
திரை மேல்–திருப்பாற்கடலிலே
கிடந்தானை–சயனித்திருப்பவனும்
கீண்டானை–இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய்–வராஹ மூர்த்தியாகி
பூமி இடந்தானை–பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.
என் உள்ளம்–எனது மனமானது
உரை மேற் கொண்டு–உரைப்பதில் ஊற்றங்கொண்டு
ஓவாது எப்போதும்–இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி–அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும்–உஜ்ஜீவிக்கும்.

———————

வியாக்யானம் –

உரை மேல் கொண்டு –
மேலான உரையைக் கொண்டு
அதாவது வாக்குக்கு விஷயமானத்தைக் கொண்டு –

அன்றிக்கே
உரைக்கையிலே மேல் கொண்டு
அதாவது
சொல்லுகையிலே கிளர்ந்து –

என்னுள்ளம் ஓவாது எப்போதும் –
என்னுடைய ஹிருதயமானது உச்சி வீடு விடக் கடவது அன்றிக்கே –
ஸ்வரூபம் ஒரு காலாக அழியுமோ –

வரை மேல் மரகதமே போலே திரை மேல் –
ஒரு மலையிலே ஒரு மரகத கிரியானது பரப்பு மாறப் படிந்தால் போலே யாய்த்து
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளின போது இருக்கும் படி –

கிடந்தானைக் கீண்டானைக் –
ஆர்த்தரைக் கண்டவாறே
படுக்கை அடிக் கொதித்த படி –

கீண்டானை –
ஹிரண்யனைக் கிழித்துப் பொகட்ட படியைச் சொல்லுதல்
அன்றிக்கே –

கேழலாய்ப் -கீண்டானை –பூமி இடந்தானை –
என்று இவ்விரண்டையும் இங்கே யாக்கிச் சொல்லவுமாம்
அதாகிறது
மகா வராஹமாய் புக்கு அண்ட பித்தியில் ஒட்டின இத்தைக் கீண்டு
பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின படியைச் சொன்ன படி –

யேத்தி எழும்  –
இவ் வபதாநத்தை ஸ்தோத்ரம் பண்ணி
உஜ்ஜீவியா நிற்கும் –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -23 / பாசுரம் -24 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை
நாம் அஞ்சுகையாவது என்
நான் சிலருக்குக் கட்டுண்கை யாவது என்
அது பின் நாட்டார் அறிகை யாவது என்
என்று அத்தை மறைக்கப் புக்கான்

ஒரு தழும்பு ஆகில் அன்றோ உன்னால் மறைக்கலாவது
உன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காகக் காரியம் செய்து அத்தால் வந்த தழும்பு அன்றோ என்கிறார் –

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

பதவுரை

வீங்கு ஓதம் வண்ணர்–பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவை யுடைய எம்பெருமானது
அம் கை–அழகிய திருக் கைகளில்
சார்ங்கம்–சார்ங்க வில்லினுடைய
நாண்–நாணி
தோய்ந்த–உராய்ந்த்தனாலுண்டான
தழும்பு–காய்ப்பானது
இருந்த ஆம்-இருக்கின்றது காண்;
தாள்–திருவடிகளிலே
சகடம் சாடி–சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)
தழும்பு இருந்த–காய்ப்பு இருக்கின்றது;
பூங் கோதையாள்–அழகிய மயிர் முடியை யுடைய பிராட்டி
வெருவ–(என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே
பொன் பெயரோன்–இரணியாசுரனுடைய
மார்பு இடந்த தழும்பு–மார்பைக் கிழித்தெறிந்ததனா லுண்டான காய்ப்பு
விரல்–விரல்களிலே
இருந்த–இருக்கின்றது.

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
அழகிய திருக்கையானது ஜ்யாகிண கர்க்கஸ மாய்க் கிடக்கும்
ஸ்ரீ சார்ங்கத்தைப் பிடிக்கையால் வந்த தழும்பைச் சுமந்த

தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பிராட்டிமாரும் ஸ்பர்சிக்க பயப்படும் படியான திருவடிகளானவை சகடாஸூர நிரஸனம் பண்ணி
அத்தால் வந்த தழும்பைச் சுமந்த

அவன் மூரி நிமிர்த்தான்
இவருக்குக் குவாலாய் இருக்கிற படி

இனி வீங்கோத வண்ணர் விரல் செய்தது என் என்றால்

பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்
கிளர்த்தியை யுடைத்தான ஓதம் போலே இருந்துள்ள வடிவை யுடையரானவருடைய திரு விரல்களானவை
பிராட்டிக்காக இறே சிறுக்கனுக்கு விரோதியான ஹிரண்யனைப் பிளந்து பொகடக் கடவது
அப்படிப் பட்டவளும் கூட விளைவது அறியாதே
இது என்னாகப் புகுகிறதோ என்று அஞ்சும் படியாக ஹிரண்யன் மார்வைப் பிளந்து பொகட்ட தழும்பு இருந்த

பூங்கோதையாள்
ஆஸ்ரித கார்யம் என்றால் உகக்குமவள்
வீர வாசி அறியுமவள்
ருஷி வேஷத்தோடே திரிய வேணும் என்னுமவள்

வீங்கு ஓத வண்ணர்
அடல் அரியாய்ப் பெருகினானை -பெரிய திருமொழி -2-5-8-
மஹா விஷ்ணும் —

விரல் தழும்பு
கால் தழும்பு
கைத் தழும்பு
எல்லா அவதாரங்களிலும்
எல்லா வியாபாரங்களிலும்
தழும்பு உண்டு –

———-

அவதாரிகை –

நமக்கு அவாப்த சமஸ்த காமனாய் யாய்த்து பிரசித்தி
இங்கனே இருக்கிற நாம்
ஒன்றை வேண்டி
அது பெறாமையாலே களவு காணப் புக்கு
கட்டுண்டோமாக வேணுமோ -என்ன
கட்டுண்டு இருக்கிறபடி அறியாயோ -என்கிறார் –

———————————————-

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை —24–

பதவுரை

ஓங்கு ஓதம் வண்ணா–ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே!
(நீ வெண்ணெய் திருடி உண்ணும் போது)
விரலோடு வாய் தோய்ந்த–உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
ஆய்ச்சி–யசோதை யானவள்
கண்டு–பார்த்து
(உன்னைத் தண்டிக்க வேண்டி)
உரலோடு உற பிணித்த நான்று–உரலோடு சேர்த்துக் கட்டி வைத்த போது
குரல் ஓவாது–நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி–ஏங்கிக் கொண்டு
நினைந்து–(அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக் கொண்டு
அயலார் காண–அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே–இருந்தாயல்லவோ?
உரை–உண்மையாகச் சொல்லு.

————————————–

வியாக்யானம் –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு –
அபிமதமானத்திலே சிறிது மிடற்றுக்குக் கீழே இழிந்து கிட்டப் பெற்றதோ -என்கிறார் –

வெண்ணெயைச் சென்று கையாலே ஸ்பர்சித்து
திரு வதரத்திலே வைத்த வளவிலே அகப்பாட்டான் ஆயிற்று

ஓர் இடத்திலே தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -சிறிய திருமடல் -என்னா நின்றார்கள்
இங்கே விரலோடு வாய் தோய்ந்த -என்னா நின்றார்கள்
இவை இரண்டும் எங்கனே சேருகிற படி -என்று
ஜீயர் பட்டரைக் கேட்க

பெண் பிள்ளைகள் அளவிலே கை வைக்கும் தனையும் இவனுக்கு இதுவே யாத்ரை
அது ஒரு நாள் ஆகிறது
இது ஒரு நாள் ஆகிறது -என்று அருளிச் செய்தார்
களவு காணுமவன் ஒரு நாள் அளவிலே கை விடான் இறே

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் -திருவாய்மொழி -1-8-5-

களவு காணும் முகூர்த்தத்திலே பிறக்கையாலே –

ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று –
இத்தைக் கண்ட யசோதை பிராட்டியானவள்
இவனுடைய திருமேனியிலே
குறிக்கும் படிக்கு ஈடாக அழுந்தக் கட்டினாள்-ஆய்த்து –

உரல் என்றும்
இவன் என்றும்
பிரித்துக் காணப் போகாதபடி கட்டின வன்று –

குரலோவா தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே –
இவள் கட்டினது தான் அவிழ்க்க மாட்டாதே
நின்று அழுதான் ஆயிற்று

அழப் புக்க வாறே –
இக் கோல் உண்டு பார் -என்ன
வாய் திறக்க பயப்பட்டு ஏங்கி நின்றான் –

நம்முடைய பந்தம் விடுகைக்காக -இறுக பந்தித்தவனே அவிழ்க்க வேண்டினாப் போலே
அவனுக்கும் கட்டின அவளே அவிழ்க்க வேணும்
ஸ்வ யத்னத்தாலே அவிழ்க்க ஒண்ணாதே
இவ் விஷயத்தில் பொய் செய்யில் நம்புவார் இல்லையே

மற்றொரு விஷயத்தில் பொய்யன் அன்றாகைக்காக
ஆஸ்ரிதர்க்குச் செய்கையாலே –
அவாப்த சமஸ்த காமனானவன் குறைவாளன் ஆவதே –
சர்வ சக்தி மிடுக்கு இன்றிக்கே ஒழிவதே
சர்வஞ்ஞன் நெஞ்சில் புரை யறுவதே
வேறு போது போக்க  ஒண்ணாது ஒழிவதே
அவ்வளவிலும் பாவியேன் வெண்ணெய் களவு காணப் பெற்றிலோம்
அவற்றைச் சேமிக்கிறார்கள் என்று கொண்டு அத்தையே நினைத்துக் கொண்டு இருக்கும் ஆய்த்து –

அயலார் காண இருந்திலையே –
அஞ்சு லஷம் குடிப் பெண்களில் காணாதார் உண்டோ

இவனாலே நெருக்குண்டு புண்பட்ட பெண்கள் எல்லாம்
இவனும் இப்படி ஒரு மிறுக்குப் பட்டு இருக்கக் காண வல்லோமே -என்று
இழவு  பட்டு இருப்பர்கள் ஆய்த்து

அத்யுத் கடை புண்ய பாபை இஹைவ பலம் அஸ்நுதே -என்று
தங்கள் இழவு எல்லாம் தீரக் காணப் பெற்றார்கள்

இவன் அழா நிற்க
அவர்கள் சிரித்துக் கொண்டு வந்து
அத்தனையும் வேணும் -என்பர்கள்-

இருந்திலையே –
ஸ்ரீ ராம் சரத்தை ராவணன் மறக்கில் அன்றோ
இது உனக்கு மறக்கலாவது –

ஒங்கோத வண்ணா வுரை –
கட்டுண்டு இருக்கிற போது ஓதம் கிளர்ந்த கடல் போலே வாய்த்து
வடிவழகு இருக்கிறபடி
ஒரு கடலைத் தேக்கி வைத்தாப் போலே இருக்கை –

உரை –
ந மே மோகம் வசோ பவேத் -என்னும் நீயே சொல்லிக் காண்
வடிவோடு கூடின வார்த்தையும் கேட்க வேணும் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -23 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

நாம் அஞ்சுகையாவது என்
நான் சிலர்க்குக் கட்டுண்கையாவது   என்
அது பின் நாட்டார் அறிகையாவது என் -என்று
அத்தை மறைக்கப் புக்கான் –
ஒரு தழும்பாகில்  அன்றோ உன்னால் மறைக்கல்  ஆவது
உன்னுடைய உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காக கார்யம் செய்து அத்தால் வந்த தழும்பு அன்றோ
என்கிறார் –

————————————————————————————————————————————————————

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவாம்  அங்கை
தழும்பிருந்த   தாள் சகடம் சாடி -தழும்பிருந்த
பூங்கோதை யாள் வெருவப் பொன் பெயரோன் மார்விடந்த
வீங்கோத வண்ணர் விரல்  ——————————————————23

————————————————————————————————————————————————————–

வியாக்யானம் –

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவாம்  அங்கை –
அழகிய திருக் கையானது
சாகின கர்க்கசமாய்க் கிடக்கும்
ஸ்ரீ சார்ங்கத்தைப் பிடிக்கையால் வந்த தழும்பைச் சுமந்த –

தழும்பிருந்த   தாள் சகடம் சாடி –
தாள் சகடம் சாடி-தழும்பிருந்த  –
பிராட்டிமாரும் ஸ்பர்சிக்க பயப் படும்படியான
திருவடிகளானவை
சகடாசூர நிரசனம் பனி
அத்தால் வந்த தழும்பைச் சுமந்த –
அவன் மூரி நிமிர்ந்தான்
இவருக்கு குவாலாய் இருக்கிறபடி

இனி வீங்கோத வண்ணர் விரல் செய்தது என் என்றால் –
தழும்பிருந்த  –பூங்கோதை யாள் வெருவப் பொன்பெயரோன் மார்விடந்த
கிளர்த்தியை உடைத்தான ஓதம் போலே இருந்துள்ள
வடிவை யுடையரானவர் உடைய திரு விரல்கள் ஆனவை
பிராட்டிக்காக இ றே சிறுக்கனுக்கு   விரோதியான
ஹிரண்யனைப் பிளந்து பொகடக் கடவது –
அப்படிப் பட்டவளும் கூட விளைவது அறியாதே இது என்னாகப் புகுகிறதோ   என்று அஞ்சும் படியாக
ஹிரண்யன் மார்வைப் பிளந்து பொகட்ட தழும்பு இருந்த –

பூம் கோதையாள்-
ஆஸ்ரித கார்யம் என்றால் உகக்கும் அவள்
வீர வாசி அறியுமவள்
ருஷி வேஷத்தோடு திரிய வேணும் என்னுமவள்-

வீங்கு ஓத வண்ணர் –
அடலரியாப் பெருகினானை -பெரிய திரு மொழி -2-5-8-
உகரம் வீரம் –மகா விஷ்ணும் –

விரல் தழும்பு
கால் தழும்பு
கைத் தழும்பு
எல்லா அவதாரங்களிலும்
எல்லா வியாபாரங்களிலும்
தழும்பு உண்டு –

———————————————————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -22 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை —

நம்மை ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனாகச் சொன்னீர்
அது நாம் அறிகிறிலோம்
நீர் அறிந்த படி என் -என்ன
நீ என் வாயைப் புதைத்தாலும் -நாட்டார் வாயைப் புதைக்கலாமோ -என்கிறார் –

——————————

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு —22-

பதவுரை

பொறி கொள் சிறை–பல நிறங்களையுங்கொண்ட சிறகுகளை யுடைய
உவணம்–கருடாழ்வானை
ஊர்ந்தாய்–ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி–மூங்கிலை யொத்த மெல்லிய தோள்களை யுடைய யசோதையினாலே
கடை–கடையப்பட்டு
வெறி கமழும்–பரிமளம் வீசப் பெற்ற
வெண்ணெய்–வெண்ணெயை
உண்டாயை–(களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பே கொண்டு–(கையில் கிடைத்ததொரு) தாம்பைக் கொண்டு
ஆர்த்த–கட்டியதனாலுண்டான
தழும்ப–காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன்–நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும்–உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.

———————————

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் –
இது ஜகத் பிரசித்தம் அன்றோ
நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா
சிஸூ பாலனும் கூட அறியானோ –

பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை –
நாநா வர்ணமான சிறகை யுடையனான பெரிய திருவடியை நடத்தும்
ஸ்வ பாவனான யுன்னை –
நிரபேஷரை நியமிக்கப் பிறந்தவன் நீ யன்றோ –

வெறி கமழும் –
பிள்ளை சோம்பாமைக்காக எப்போதும் கந்த த்ரவ்யங்களாலே அலங்கரித்து   இருக்கும் ஆய்த்து  –
ஸ்வ பாவிகம் -என்னவுமாம் –

காம்பேய் மென் தோளி –

மூங்கில் போலே இருப்பதுமாய் அவ்வளவும் அன்றிக்கே
ம்ருது ஸ்வ பாவமான தோளை யுடைய
யசோதை பிராட்டி யானவள்

பசுமையும்
நீட்ச்சியும்
செவ்வியும்
மூங்கிலுக்கும் தோளுக்கும் ஒத்து இருக்கை –
சொல்லுகிறது –

கடை வெண்ணெய் யுண்டாயைத்-
தன்னுடைய சௌகுமார்யம் பாராதே
ஆய்ச்சி கடைந்து திரட்டின வெண்ணெயை
அமுது செய்த உன்னை –
இருவருக்கும் தாரகம் -இறே-

தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு   –
பெரிய திருவடி முதுகிலே இருக்கும்படியான சௌகுமார்யத்தை உடைய உன்னை –
தாம்பே கொண்டு ஆர்த்தாள் ஆயிற்று  –

அதாகிறது
இவன் எட்டுப் பட்ட  போதாக -கையிலே அகப்படுவது ஒரு அறு தாம்பாலே –
நல்லதொரு தாம்பு தேடும் காட்டில் இவன் தப்புமே –
அதுக்காக அதனைக் கொண்டு பந்தித்தாள் ஆயிற்று –

கயிற்றை நீட்ட ஒண்ணாது
உரலைச் சிறுக்க ஒண்ணாது
இவன் உடம்பிலே இடம் காணும் இத்தனை இறே –

கண்ணியார் குறும் கயிற்றால் -என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் -என்றும்
ஆழ்வார்கள் அடைய அவனைக் கட்டின கயிற்றிலே ஈடுபட்டுக் கிடப்பது –

தாம் நா சைவ  உதரே பத்வா பிரத்யபத் நாத் உலூகலே கிருஷ்ண மக்லிஷ்ட கர்மாண
மாஹசெத மாமார்ஷிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -5-6-14-
என்னும் படி இறே இருப்பது

தறியார்ந்த கரும் களிறே போலே நின்று -பெரிய திருமொழி -2-10-6-
ஒரு மத்த கஜமானத்தை கம்பத்தோடு கொடு வந்து சேர்த்தாப் போலே யாய்த்து
கட்டின கட்டிலே தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –
அது தன் மிடுக்கு அறியாதே
கட்டுண்டு நிற்குமா போலே யாய்த்து
இவனும் தன் பலம் அறியாதே கண்ண நீர் விழ விட்டுக் கொண்டு நின்றபடி –

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –