Archive for June, 2014

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -21 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

ஐஸ்வர்யத்தைக் கொண்டு பிற்காலியாதே நெஞ்சே
அவன் ஆஸ்ரித சம்ஸ்லேஷைக ஸ்வபாவன் கிடீர் -என்கிறார் –
அங்கன் அன்றிக்கே
பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து
அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத் தன்னை
அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார்  –

—————————————–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-

பதவுரை

சென்று நின்று–(மஹாபலியின் யாக பூமியிற்) போய் நின்று
அம் கை–(தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று–பூமி தானம் வாங்கி
மூ அடியால்–மூன்றடிகளாலே
திசை அளந்த–எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்ட
செம்கண்மாற்கு–செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும்–எப்போதும்
ஆழி–சக்கரமானது
படை–ஆயுதமாயிருக்கும்;
புள்–கருடன்
ஊர்தி–வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
அறி–நான் சொல்வதை ஆராய்ந்து கொள்;
பாம்பு அணையான் பாதம் அடை–சேஷ சயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

——————————————

வியாக்யானம் –

சென்று நின்று –
மகா பலி யஞ்ஞ வாடத்து அளவும் செல்ல நடந்து
பின்னை அவன் முன்னே அர்த்தித்வம் தோற்ற நின்ற நிலையும்
எல்லாம் இவர்க்கு ஆகர்ஷகமாய் இருக்கிறபடி –

நின்று-
மலையாளர் வளைப்பு போலே
பெற்று அன்றிப் பேரேன் என்று –

நிலமங்கை நீரேற்று –
பூமியை அழகிய கையால் நீரேற்று –
உபய விபூதிக்கும் படி இடும் கை –
கொடுத்து வளர்ந்த கையாலே பெற்றான் ஆய்த்து –
பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் நீர் வார்த்ததைப் போலே

மூவடியால் திசை யளந்த-
மூன்று திருவடிகளாலே திக்குகளை அடைய அளந்து கொண்ட படி
திக்குகள் தோறும் சென்று அளந்தது -என்னுமாம் –

செங்கண் மாற்கு –
அந்த கார்யம் வாய்ந்த வாறே சிவந்த கண்களை உடைய சர்வேஸ்வரனுக்கு –
அத்தாலே அலாப்ய லாபம் பெற்றானாய் இருக்கை-

தம்தாமது பெற்றாலும் இனியராக வேணுமோ
கீழே திரு வுலகு அளந்து அருளின இடம் பிரஸ்துதமாய்
அத்தை அது பின்னாட்டின படி சொல்லுகிறது –

என்றும் படையாழி –
எல்லாத்தையும் உடையவன் கிடீர் இரந்தான்-
எப்பொழுதும் கை கழலா நேமியான்  -பெரிய திருவந்தாதி -87-

படையாழி  -புள்ளூர்தி பாம்பணையான்-
எப்பொழுதும் பரிகரம் ஆயத்து திருவாழி –
பெரிய திருவடி வாஹனம்
திரு வநந்த ஆழ்வான் படுக்கை –

கையிலே திருவாழி யைப் பேராதே பிடிக்க வல்லனுமாய்
திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும்
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்
சர்வேஸ்வரன் -ஆகிறான்

பாதம் அடையாழி நெஞ்சே அறி –
இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி
மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே
உன்னைக் கொடு

ஆழி  நெஞ்சே –
கம்பீர ஸ்வ பாவமாய் அளவுடைய நெஞ்சே –
என்னை ஓதுவிக்க வல்லை நீ யன்றோ

அறி –
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே
அழகிதாக புத்தி பண்ணு-

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -20 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 27, 2014

அவதாரிகை –

கடல் அவனைப் பெற்று களித்த படி சொல்லிற்று கீழ்
அவன் படுக்கையை விட்டுப் போந்த இடத்திலும்
சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார்

படுக்கையாய்க் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ
துர் மாநிகளான தேவர்களுக்குத் தன்னைக் கொடா நிற்க  -என்னவுமாம்  –

இது ஒன்றையும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரமாக்கி சீயர் ஒருருவிலே அருளிச் செய்தார் –
பெற்றார் உண்டு
தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வசுதேவரும் தேவகியாரும்
அவர்கள் உடைய காலில் இட்ட விலங்கு கழலும்படியாகப் பேர்த்து –

ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் வந்து அவதரித்தான் -என்னவுமாம்

சிறைக் கூடத்தின் நின்றும் பேர்ந்து போனார்கள் என்னவுமாம்

அன்றிக்கே
தன்னைத் தான் பேர்த்து கழல -என்றுமாம்
அவதரிப்பதாக உத்யோகித்த சமயத்திலே இவர்கள் உடைய
சகல துரிதங்களும் நிரஸ்தம் ஆயிற்று

அன்றிக்கே
பெற்றார் தளை கழலப் பேர்ந்து -என்று பெற்றார் ஆனவர்களும் உண்டு
ஆரேனுமாக ஸ்பர்சித்தவர்கள் தளை கழலும் படிக்கு ஈடாக வைத்துப் பெற்றது
அப்போது பேர்ந்து என்கிறத்தை
அதுக்கு மேலே இங்கேயும் செய்தான்  என்னக் கடவது –

———————————————-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக
பேர்ந்து–(திருப்பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

——————————————

வியாக்யானம் –

பெற்றார் –
நிதி எடுக்கப் பெற்றார் -என்னுமா போலே –

தளை கழலப் -பேர்ந்து
என் பிள்ளை என்று அபிமாநித்தார் தளை கழன்றால்
அடியோம் என்றார் தளை கழலச் சொல்ல வேணுமோ

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
அவனோட்டை சம்பந்தம் பிரதி பந்தகங்களைப்  போக்கும் என்றபடி
யாதொன்றை இவர்கள் சிறையாக நினைத்து இருந்தார்கள்
அத்தைப் போக்க கடவனாய் இருக்கும் ஆய்த்து

பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பு வீடு முதலாம் -திருவாய் மொழி-2-8-2-
அவனோட்டை சம்பந்தம் மோஷ ஹேதுவாய் இருக்கும் –

ஒர் குறளுருவாய்ச்-
தான் கிட்டி வந்து தளை கழல பண்ணும்படி சொல்லிற்று கீழ் –

இனித் தன்னுடைய யத்னத்தாலே  தளை கழல பண்ணும்படி சொல்லுகிறது

தன்னை அழிய மாறிக் கொண்ட வடிவு தான் தர்ச நீயமாய் இருந்தபடி
நாட்டில் வாமனர்கள் வளர்ந்து அருளின இடத்தோடு ஓக்கை

இந்தரனுக்கு ஆகாத சத்ரு -தனக்கும் ஆகாதே
த்விஷ தன்னம் ந போக்தவ்யம்
யஸ்த்வாம் த்வேஷ்டி சமாம் த்வேஷ்டி
மம ப்ராணா ஹி பாண்டவா
ஏதேனுமாக ஆஸ்ரிதர்க்கு செற்றார் ஆனவர்கள் தனக்கு செற்றாராம் இத்தனை

சாமான்ய மதி தைவம் -என்று இருக்கிற தனக்கு தனி செற்றார் இல்லை இறே

ஆஸ்ரித விரோதிகளுமாய்
அதுக்கு மேலே ஆசூர பிரக்ருதிகளுமானவர்கள் தனக்கு செற்றாராம் இத்தனை –
சமோஹம் சர்வ பூதேஷு என்று இருக்குமவன் இறே

இத்தால் ஆஸ்ரித விஷயமாக
ஒரு தர தம விபாகம் பண்ணுமவன் ஒருவன் அல்லன் என்கிறது-
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய்மொழி -1-6-2-என்றும்
கொள்கை  கொளாமை இலாதான்  எள்கல் இராகம் இலாதான் -திருவாய்மொழி-1-6-5-என்னக் கடவது இறே –

ஆஸ்ரயித்தவர்களில் இன்னார் ஆவார்கள் இன்னார் ஆகார் என்று ஒரு நியதி யாதல்
இனி அவர்கள் தங்களில் இன்னாரைக் கொண்டு இன்ன கார்யம் கொள்ளக் கடவோம்
இன்ன கார்யம் தவிரக் கடவோம் என்று ஒரு நியதி ஆதல்
சிலர் பக்கல் த்வேஷம் பண்ணக் கடவோம் என்று இருக்குமவை ஒன்றும் இல்லை -என்கிறது
வசிஷ்டனோடு வேடுவச்சியோடு வாசியற நினைத்து இருப்பான் ஒருவன் -என்கிறது-

செற்றார் இத்யாதி –
சத்ருக்களான மகா பலி போல்வார் -எங்களது என்று அபிமானித்து
இருக்கிற பூமியை அளந்து கொண்டான் ஆய்த்து –

படி கடந்த –
காடும் ஓடையும் அளந்து
பெறாதது பெற்றால் போலே இருப்பதே –

செங்கண் மால் –
தன்னது பெறச் செய்தேயும் தன்னது அல்லாதது ஓன்று பெற்றால் போலே
திருக் கண்களிலே செவ்வி பிறந்தபடி
பூமியை அடங்க தன் கால் கீழே அகப்படுத்துகையாலே மேன்மை தோற்ற நின்ற நிலை

நல் தாமரை -இத்யாதி –
அவனான நன்றான
தாமரை போலே இருந்துள்ள சிவந்த திருவடிகளை
அவதார நீர்மை வந்தேறாத படி பரண் இட்டுக் கொண்டு இருக்கிற தேவர்கள் ஆனவர்கள்

இவன் பூமியிலே அவதரிக்கச் செய்தேயும்
தாங்கள் அங்கே கை தொழப் பெற்று தொடை வாய்த்து இருந்துள்ள
செவ்விப் பூக்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணா நிற்பார்களாம்
புஷ்பாத் யுபகரணங்களை கொண்டு அவனை ஆஸ்ரயித்து இருக்கப் பெற்றார்களாம்
பாவியேன் நாமே அத்தை இழந்தோம் –

நின்று நிறை மலர் கொண்டு ஏத்து வரால் –
கிண்ணகத்தை தரித்து நின்று –
திரள நின்று -என்றுமாம்

ஏத்து வரால் என்ற போதைக்குக் 
கீழ்ச் சொன்னதுவே பொருள் –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -19 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

அவன் ஒரு நாள் வந்து கிட்டுன விடத்திலும் நான் அவனைப் பெற்றிலேன்
அவன் தானே வந்து சாய என்றும் அனுபவிக்கப் பெற்ற  நீ
என்ன பாக்யத்தைப் பண்ணினாயோ -என்கிறார் –
பூமியைப் போலே ஒருகால் அன்றியிலே
நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவதே கடல் என்று கொண்டாடுகிறார் –

———

மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–திரு வாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்
கண் படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப் பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

———————-

மாலும்-
மாலுதல் -மயங்குதல்
அதாகிறது
அவனை அணையப் பெற்ற ஹர்ஷத்தாலே
மதுபான மத்தரைப் போலே செருக்கி
முக்தர் பட்டது எல்லாம் படா நின்றது ஆயிற்று –

கருங்கடலே –
இல்லையாகில் உடம்பு வெளுத்து இராதோ
கடல் எல்லாத்திலும் கண் வளர்ந்து அருளும் என்று சொல்லக் கடவது
அத்தாலே வந்த கருமை யாதல்
அன்றிக்கே
ஒரு கடலிலே உள்ள ஸ்வ பாவம் எல்லாத்திலும் இட்டுச் சொல்லக் கடவது -அத்தாலே வந்ததாதல்

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவன் உடைய நிழலீட்டல் யாதல்
கடலும் எம்பெருமானும் ஸ்ரீ பரத ஆழ்வானும் பெருமாளும் போலே நிறம்  –

என் நோற்றாய் –
நீ என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய்
ஆசையை விட்டு நோன்பிலே கை வைக்கப் பார்க்கிறார்-

வையகமுண்டாலி னிலைத் துயின்ற-
ஜகத்தை அடங்கலும் தன் திரு வயிற்றிலே எடுத்து வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரன் –

வாழியான்-
ரஷணத்துக்கு ஏகாந்தமான பரிகரத்தோடே சாய்ந்து அருளின படி
ஆசிலே கை வைத்து  ஏகார்ணவத்திலும்
திருப் பாற் கடலிலும்
கண் வளர்ந்து அருளின படி யாதல் –

கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் –
யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ -என்று சொல்லுகிற கண்கள் -என்னுதல்

மால்
ஈஸ்வரன் -என்னுதல்
வ்யாமுக்தன் -என்னுதல் –

அவனுடைய கண் படையுள் –
அவன் கண் வளர்ந்து அருளுகிற  இடத்தில்

என்றும் –
எல்லாக் காலத்திலும் பிராட்டிமார் ஊடின போதும் உனக்குப் பிரிவில்லை –

திருமேனி நீ தீண்டப் பெற்று –
எனக்கு ஒரு நாள் பெற வரிதான விது
உனக்கு நித்ய சித்தமாய் செல்லா நின்றது

ப்ரஹ்ம ப்ராப்தி பலமாய்
கைங்கர்யம் ஆநு ஷங்கிகம் ஆமா போலே 
திரு மேனி தீண்டுகை பிராப்யம்
கைங்கர்யம் அவகாதத்தில் ஸ்வேதம் போலே
உபாயத்திலும் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் விவசாயம் ஆநு ஷங்கிகம் –

திருமேனி நீ தீண்டப் பெற்று – மாலும் கருங்கடலே –
நீ அவனைப் பெற்று மாலாய் நின்றாய்
நான் அவனைப் பெறாதே மாலாய் நின்றேன் –

கருங்கடலே
அவன் தானே தன்னைக் கிட்டினார்க்கு சாரூப்யம் கொடுக்குமா போலே காணும் –

என் நோற்றாய்
இது ஒரு தபஸ்ஸால் வந்தது என்று  தோற்றி இரா நின்றது
ஆகிலும் இஃது
ஒரு விசேஷத்தாலே வந்தது என்று தோற்றி இரா நின்றது –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -18 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

திருப் பாற் கடல் ஏறப் போக வேண்டுதல் –
திரு வுலகு அளந்து அருளின இடத்து ஏறப் போதல்
செய்து நான் இழந்தேனோ –
அதுக்கும் இவ்வருகே போந்து
கிருஷ்ணனாய் வந்து வவதரிக்கச் செய்தே கிடீர் நான் இழந்தது
என்கிறார் –

வரையாதே தீண்டிப் பரிமாறுகையும்
அழகும்
ஐஸ்வர்யமும்
பஷபாதமும்
உள்ளிட்டவை திரு உலகு அளந்து அருளின் இடத்துக்கும்
கிருஷ்ணாவதாரத்துக்கும் ஒத்து இருக்கும் –

——————————————————————————-

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் ———18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக் கொள்ள வல்ல
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானே யாவன்.

————————————————————————————-

வியாக்யானம் –

நான்ற முலைத் தலை நஞ்சுண்டு –
யசோதைப் பிராட்டி வடிவு கொண்டு வருகிறாள் ஆகையாலே
பாலாலே நிறைந்த முலைக் கண்ணும் தானுமாய் வந்து
தோற்றினாள்  ஆய்த்து –

இவன் முலைகளைச் சென்று  பற்றி அமுது செய்தவாறே
பழைய வடிவாய்
நான்ற முலையோடு விழுந்தாள்-

ஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கும் ஸ்வ ஸ்வரூபா பத்தி தப்பாது
எல்லார்க்கும் வந்தேறி போம் –

உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் –
உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெய் உண்கிற இடத்தில் எட்டி உண்டபடி
சிசூபாலாதிகளும் ஏசும்படி களவு பிரசித்தமாம் படி உண்டான்

இத்தால்
அனுகூலர் உடைய கர ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது
தனக்கு செல்லாத படியாய் இருக்கிறபடி

நஞ்சு உண்டு –
வெண்ணெய்  உண்டு –
என்று ஒக்கச் சொல்லுகையாலே
அனுகூலர் உடைய த்ரவ்யத்தோடு
பிரதிகூலர் உடைய பிராணனோடு வாசியற
இவனுக்குத் தாரகமாய் இருக்கிறபடி –

வென்றி சூழ் களிற்றை-
வெற்றியை உடைத்தாய்
எதிரிகளுக்கு தான் சாய்ந்து காட்டுகை அன்றிக்கே
அவர்களையும் தன் பக்கலிலே சூழ்த்துக் கொள்ள வற்றான குவலயா பீடத்தை –

அங்கன் அன்றிக்கே
மிக்க வெற்றியை யுடைத்தான களிறு -என்றதாகவுமாம்

ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் –
அதுக்கு தேசிகர் ஆனவர்களைப் போலே
நெருங்க நின்று பொருது
கருவிப்பை   போலே உளுக்காக்கக் பண்ணின படி

அன்றிக்கே
இடைவு கண்டான் என்றாக்கி
இளைப்பித்து அதின் விழுக்காடு கண்டவன் என்றுமாம் –

புள்ளின் வாய் கீண்டானும் –
பகாசூர நிரசனம் பண்ணினவனும்

மருதிடை போய் மண்ணளந்த மால் -கிடீர் என்கிறார்
யமளார்ஜூனங்களின் நடுவே போய் அவற்றைப் பொடி படுத்தினவன்
பூமி அடங்கலும் தன் கால் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார்

திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிற படி

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தோடு
ஸ்ரீ வாமனாவதாரத்ததோடு வாசியற
இவருக்கு ஒரு போகியாகத்
தோற்றுகிறபடி –

—————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -17 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

திருப் பாற் கடலிலே போய்க் கிட்ட வேண்டும்படி தூரமாய்
நான் இழந்தேனோ
அவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிடீர்
நான் இழந்தது – என்கிறார் –

சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அநுபவிக்கப் போமோ –
பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் –

அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடம்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)

————————————

வியாக்யானம் –

அடியும் படி கடப்பத்-
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -திருவாய் மொழி -4-3-6-என்கிறபடியே
என் தலையிலே நோக்கான திருவடிகள் கிடீர்
பூமியை அளந்து கொண்டது –

அன்றிக்கே
அமரர் சென்னிப் பூவான திருவடிகள் கிடீர் காடும் ஓடையும் அளக்கின்றன –

படி கடப்ப –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டன –

தோள் திசை மேல் செல்ல –
திருத் தோள்கள் ஆனவை திக்குகளின் மேல் செல்ல
பிராட்டியைத் தழுவக் கடவ தோள் கிடீர் திக்குகளை தழுவுகின்றன

முடியும் விசும்பும் அளந்தது –
திரு வபிஷேகமும் அண்ட பித்தியின் அளவும் நிமிர்ந்தது
அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று
நின்றார் நின்றபடியே வென்றி கொள்ளுமா போலே

என்பர் –
இன்று நான் கேட்டார் வாய்க் கேட்பதே -என்கிறார்
திருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க
நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –

வடியுகிரா லீர்ந்தான் இரணியன தாகம் –
கூரிய உகிராலே ஹிரண்யன் உடைய முருட்டு உடலைக் கிழித்துப் பொகட்டான் ஆயிற்று

இருஞ்சிறைப் புள் ளூர்ந்தான் உலகளந்த நான்று –
பெரிய திருவடி முதுகிலே இருக்கும்படியான
சௌகுமார்யத்தை யுடையவன் –

பூமியை அளந்து கொள்ளுகிற வன்று ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி
ஓர் இடத்திலே முகம் காட்டும் அளவன்றியே
ஜகத்துக்கு எல்லாம் ஒரு காலத்திலே உதவின அன்று –

இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான் உலகளந்த நான்று
அடியும் படி கடப்ப
தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் –
என்று அந்வயம் –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -16 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

நான் இவ் விஷயத்தை நெடுங்காலம்
உபாயாந்தரங்களிலும் தேவதாந்த்ரங்களிலும்
பிரவணனாய் இழந்தேன் கிடீர்
என்று சோகிக்கிறார்-

————–

பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி—-16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடை தட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவை யுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க் கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ் விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

——————————-

வியாக்யானம் –

பழுதே –
பழுதானது சிறிதும் பழுது அல்லாதது சிறிதுமாய்
போகப் பெற்றது இல்லை கிடீர் –
என்கிறார் –

அது உண்டாவது பகவத் விஷயம் ஒரு போதும்
மற்றொரு போது இதர விஷயங்களுமாய்ச் செல்லில் இறே –

பல பகலும் –
இழந்த காலம் அநாதி இறே

போயினவென்று –
போன நீருக்கு அணை கோலவோ-

அஞ்சி அழுதேன் –
போன காலம் அநாதி
வரும் காலம் அநந்தம்
அடிக் கழஞ்சு பெறுகிற  இத்தோடு ஒத்த காலம் கிடீர்
வ்யர்த்தமே போயிற்று என்று அழுகிறார் –

இழவுக்கு அழுதீரேல் அச்சம் என் என்னில்
மேல் வரக் கடவதொரு ஹேதுவைக் குறித்து இறே அச்சம் உள்ளது

அதாவது
சர்வேஸ்வரனோட்டை சம்பந்தம் நித்யமாய்ச் செல்லா நிற்கச் செய்தே
முன்பு இது நெடும் காலம் இழந்தது நானாகை அன்றோ –
இன்னமும் நான் இருந்திலேனோ மேல் உள்ள காலத்துக்கும் -என்று அஞ்சுகிறார்

அங்கன் அன்றிக்கே
அஞ்சி அழுதேன் –
என்றாக்கி மேல்; வரக்கடவ காலமும் இப்படியே யாகில் செய்வது என் -என்று
அதுக்கு ஒரு கால் அழுகிறார் ஆய்த்து-
யஸ்ய ராமம் ந பச்யேத்து-அயோத் -17-14-என்று
ஒரு ஷணம் காணப் பெறாதார் படும் பாடு அன்றோ இது-

அரவணை மேல் கண்டு தொழுதேன் –
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
திரு வநந்த வாழ்வான்  மேலே கண்ட காட்சிக்கு
அனந்தரமான வ்ருத்தியிலேயும் அன்வயித்தேன்

அரவணை மேல்
பர்யங்க வித்தையில் படியே
கண்டு
ஜ்ஞான சாஷாத் காரம்
கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை –
பெருமாளும் பிராட்டியும் கடலுக்கு அக்கரையிலும் இக்கரையிலுமாய் இருந்தாப் போலே –

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணரடி-
கடலில் ஓதமானது திருவடிகளிலே வந்து ஸ்பர்சிக்கும் படிக்கு ஈடாகக்
கண் வளர்ந்து அருளுவானுமாய்
ஐஸ்வர்ய ப்ரகாசகமான திருக் கண்களை யுடையனுமாய்
ஒரு கடல் ஒரு கடலை அபிபவித்துக் கிடந்தாப் போலே
சௌந்தர்ய தரங்கங்கள் மிகைத்து
இருந்துள்ள வடிவை யுடையனுமான அவனுடைய திருவடிகளை –

கால் அலைப்ப –
சிறு திவலை தொடை குத்த

செங்கண் –
வாத்சல்யம் தோற்றுகை-

அடல் ஓத வண்ணர் அடி அரவணை மேல் கண்டு தொழுதேன்
பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி அழுதேன் -என்று அந்வயம் –

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -15 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
நாட்டிலே சிலரைச் சிலர் ஆஸ்ரயிக்கையும்
அவர்கள் அவர்களுக்குப் பல பிரதானம் பண்ணுகையுமாய் அன்றோ
இருக்கிறது -என்ன

அவர்கள் அங்கனே செய்தார்களே யாகிலும்
அவை யடங்க வ்யர்த்தம் -என்கிறார் –

——————————————-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —-15-

பதவுரை

(உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப் பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம்மூவர் உள்ளும்–அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–கடல் சூழ்ந்த இப்பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

——————————

வியாக்யானம் –

முதலாவார் மூவரே –
இவர் இவர் எம்பெருமான் என்று இருந்ததே குடியாக
ஆஸ்ரயணீயராகை தவிர்ந்து முன்னம்
மூவரோடு சேரப் பெற்றோம் இறே
இனி இருவரைக் கழிக்க அமையும் இறே -என்று கருத்து –

அம் மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –
இவர்கள் மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானன் ஆகிறானும் அன்று

அன்றிக்கே
மூவரும் கூட பிரதானர் ஆகிராரும் அன்று
இனித் தான் மூவரும் கூட ஓன்று ஆகிராரும் அன்று –
அந்த மூவரிலும் வைத்து கொண்டு பிரதானனவன்
சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருந்துள்ள வடிவை உடையவன்
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு ஜீவ வ்யதாநேன அந்தர்யாமியாயும்
தன் பக்கலிலே ஸ்வேன ரூபேணவும் நின்று ரஷிக்கிறான்-

முரி நீர் வண்ணன் –
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ  -திரு நெடும் தண்டகம் -2-என்கிற
அவற்றைக் கழித்து
மா கடல் உருவம் -என்கிற அத்தையே பிடிக்கிறார் –

முதலாய நல்லான் அருள் அல்லால் -நாம நீர் வையகத்துப் –
இதுக்கு அடங்க காரண பூதனுமாய்
இவற்றை உடையானும் ஆகையாலே
இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள
அவனுடைய அருள் அல்லது
பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள –

பல்லார் அருளும் பழுது –
பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்
இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு
வாசி யடைய வ்யர்த்தம்

அன்றிக்கே
நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –

பழுது தான் பலியாமையே அல்ல
பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும்
அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்

திருவடி நாமம் மறந்தும் புறம்  தொழா மாந்தர்  -நான்முகன் திரு -68-

மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ

தேவ தாந்தரங்களுக்கும்
உபாயாந்தரங்களுக்கும்
தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை
அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -14 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

அவன் முற்பாடனுமாய்
ருசி ஜனகனுமாய் இருக்கச் செய்தே
சம்சாரிகள் புறம்பே சிலரை ஆஸ்ரயணீயராகக் கொண்டு
போரா நின்றார்களே என்னில்

அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும்
அந்த ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர்
சர்வேஸ்வரனே –என்கிறார் –

——————————-

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி
அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர் மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி)
உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

—————-

வியாக்யானம் –

அவரவர் –
ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய்
பின்ன ருசிகள் ஆகையாலே –

அவர் அவர் -என்று
அநாதரித்துச் சொல்லுகிறார் –

தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –
கர்மம் அடியாக வந்த ருசியும்
அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –

சாஸ்திரத்தின் பின் செல்லார்களே
ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –

இவர் இவர் எம்பெருமான் என்று –
அவரை இவரை வந்தாரைப் பிடித்து
இவர்கள் நமக்கு ஸ்வாமிகள் -என்று –
சகரர்கள் கண்டாரை -நீ என் குதிரை பிடித்தாய் நீ என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே

நல்ல வஸ்துக்கள் எல்லாம் கிடக்க
வேம்பும் உள்ளியும் உகப்பாரைப் போலே
தாங்கள் உகந்த குணங்களை உடைய தேவதைகளை உகப்பர்கள் –

சத்வ நிஷ்டாஹி புருஷா
ஹரி ரேகஸ் சதாத்யேய-ஹரி வம்சம் -138-8-என்று ருத்ரன் தானே சொன்னான் –

சுவர் மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர்-
ஒரோ பித்திகளிலே லிகுத்து ஒரோ விடங்களிலே பிரதிஷ்டிப்பித்தும்  தொழா நிற்பர்கள்   –

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அனுக்ரஹார்த்தமாக ஒரோ வடிவுகளை கொடு வந்தால்
அங்கே செய்யக் கடவ செயல்களை இங்கே செய்யா நிற்பர்கள்
இவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் –

உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –
ஜகத்தை அடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
சர்வேஸ்வரன் உடைய திரு மேனியே பிரதானம் –

சமஸ்ரயிப்பார் தலையிலும்
சமாஸ்ரயணீயர் தலையிலும்
ஒக்கத் துகைத்தவன் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -13 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -என்னும் படியாய் இருந்தது உம்மது
அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது அவதானம் வேணும்
எங்கனே கூடுமோ என்னில்

ப்ரக்ருத்யா ஆஸ்ரயித்து  இருக்கிறவர்கள் நித்ய ஸூரிகள்
அல்லாதாரும் யதா சக்தி ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாகத்
தானே பிரதம பாவியாம் – என்கிறது –

————————————

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் —13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை
அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளே யாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்த வேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன
நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

வியாக்யானம் –

இயல்வாக-
அவனுக்கு சத்ருசமாகப் பரிமாற வல்லார்
நித்யர்கள் அன்றோ என்கிறார் –

இயல்வாக –
சத்ருசமாக -என்னுதல்
ஸ்வ பாவம் ஆக்கி இதுவே யாத்ரையாக -என்னுதல்

கர்மம் அடியாக ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி
சில நாள் வேறே சில விஷயங்களிலே பிரவணனாய்ப்
பின்பு ஒரு ஸூஹ்ருதம் அடியாக பகவத் விஷயத்திலே கை வைத்தவர்கள் அன்றிக்கே
இவ் விஷயத்தில் பரிமாற்றம் சத்தா பிரயுக்தம் -என்றபடி –

யீன் துழாயான் –
ஐஸ்வர்ய ஸூசகமாய் இருக்கை-

ஆக –
முதலியாய்த் தோள் மாலை இட்டு  இருக்கிறவனுக்கு –

அடிக்கே செல்ல –
திருவடிகளிலே கிட்ட

பாவஜ்ஞ்ஞே -என்னும்படி
அவன் திரு உள்ளத்திலே படும் படி –

முயல்வார் இயல் அமரர் முன்னம் –
முந்துற முன்னம் அவன் திரு வடிகளுக்கு ஈடாகப் பரிமாறுவார்
இயற்றியை உடைய நித்ய ஸூரிகள்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-25-பண்ணுகை-

விஷய ப்ரவணராய்  அவனை அறியாதவர்களும்
இயல்வாக –
ஆகில் அவர்களே ஆஸ்ரயித்துப் போம் இத்தனையோ வென்னில்
நமக்கு எல்லாம் ஆஸ்ரயித்தோம் ஆகலாம் படி அவன் தானே பண்ணித் தரும் -என்கிறார் –

இயல்வாக -நீதியால் ஓதி-
சத்ருசமாக –
அழகிதாக –
சாஸ்த்ரோக்தமான படியே திரு நாமங்களைச் சொல்லி
வ்ரத நியமாதி கர்மங்களோடே அத்ய யனத்தைப் பண்ணி –

நியமங்களால் பரவ –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற ஸ்ரவணாதி களாலே
பரவசராய்ப் போரும்படிக்கு ஈடாக

ஆதியாய் நின்றார் அவர் –
முற்பாடனுமாய்-
ருசி ஜனகனுமாய் –
உபகரணங்களையும் கொடுத்து பிரவ்ருத்தனுமாய் –
போக்தாவுமாய் –
பல பிரதனுமாய்  –
பிராப்யனுமாய்
நின்ற பின்பு நமக்கு எல்லாம் ஒரு குறை இல்லை -என்கிறார்

அஹம் ஹி சர்வாய ஜ்ஞா நாம் போக்தா ச பிரபு ரேவா ச -கீதை -9-24-

அஹம் ஹி ஸர்வாய ஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே–கீதை -9-24-

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும்,
போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர்,
அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்;
என்னை மனிதர் உள்ளபடி அறியார்;ஆதலால் நழுவி வீழ்வார்.

அஹம் சர்வச்ய ப்ரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்ததே -கீதை -10-8-

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:–கீதை -10-8-

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:-நான் அனைத்திற்கும் தொடக்கம்,
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே-என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது,
இதி மத்வா-என்று புரிந்து கொண்டு,
பாவஸமந்விதா: புதா:- நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள்,
மாம் பஜந்தே-என்னை தொழுவார்.

நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும்.
இங்ஙன முணர்ந்த புலவர்
என்னை அன்புடன் தொழுவார்.

ஸூரிகளோடு இவர்களோடு வாசி இல்லை
குடல் துடக்கு –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -12 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 26, 2014

அவதாரிகை –

கீழே
சர்வ சமாஸ்ரயணீயன் அவனே என்றார் –
இங்கு
ஆஸ்ரயணீயத்துக்கு அநுரூபமான சாதனம்
இன்னது என்று பக்தியை விதிக்கிறார் –

—————————-

பக்தி யோகத்தை அனுஷ்டிக்கும் அவர்களுக்கு
ஹேய தயா ஜ்ஞயமானவற்றைச் சொல்லுகிறது –

பிரகிருதி ஹேய தயா ஜ்ஞேயம்
ஆத்மா உபாதேய தயா ஜ்ஞேயன்
ஈஸ்வரன் உபாதேய தமனாய்க் கொண்டு ஜ்ஞேயன்-

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நி ஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற் குணங்களும்
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)

வியாக்யானம் –

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –
இத்தால்
ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சொல்லுகிறது
இது தான் கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் உப லஷணம்-

செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் –
இத்தால்
மகா பூதங்கள் ஐந்தையும் இவற்றை ஆஸ்ரயித்து இருக்கும்
சப்தாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது –

அவியாத ஞானமும்
தைல தாராவத்
அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபையான பக்தியை நினைக்கிறது
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -என்னக் கடவது இறே-

வேள்வியும் –
பக்தி விவ்ருத்யர்த்தமாகவும்
பாப ஷயத்துக்காகவும்
அனுஷ்டிக்கிற கர்மம் ஆகிறது
பல சங்க நிவ்ருத்தி பூர்வகமாகப் பண்ணும் யாகாதி கர்மங்கள்

அக்னி ஹோத்ராதி து தத்கார்யைவ தத் தர்சநாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -4-1-16-
அக்னி ஹோத்த்ரம் முதலிய கர்மங்கள் பக்தியும்
உத்பத்தி ஆகிற கார்யத்தின் பொருட்டே செய்யப்பட வேண்டும் –
அப்படியே வேதத்தில் காணப் படுவதால்

ஆ ப்ரயாணாத் தத் ராபி ஹி த்ருஷ்டும் -ப்ரஹ்ம ஸூத்ரம் -4-1-12-
வித்தையானது சாகும் வரையில் அனுஷ்டிக்கப் பட வேண்டியதே
அந்த எல்லாக் காலங்களிலும் உபாசன விதி காணப் படுகிறதன்றோ –

தமேதம் வேதா அநு வாச நேத ப்ராஹ்மணா  விவிதி ஷந்தி யாஞ்ஞென
தாநேன அநாசகேன -ப்ருஹதாரண்யம் -6-4-22-
ப்ரஹ்ம ஞானிகள் இந்த பரமாத்மாவை
வேத அத்யனைனாலும்
யஞ்ஞத்தினாலும்
தானத்தினாலும்
பலத்தில் ஆசை அற்ற தவத்தினாலும்
அறிய விரும்புகிறார்கள் -என்று சொல்லுகிறபடியே –

நல்லறமும் –
விவேகாதி ஆன்ரு சம்சயம் தாநாதிகள்-
இவை எல்லாம் நினைக்கிறது –

என்பரே-
வேத சாஸ்த்ரங்களில் பிரசித்தி –

ஏனமாய் நின்றார்க்கு இயல்வு-
சர்வ ஸூலபனாய் -ஆபத் சகனான சர்வேஸ்வரனுக்கு
இவற்றை சாதனமாகாச் சொல்லா நிற்பர்கள்-

இது சாதனம் ஆன போதும் எம்பெருமானே வேணும் என்று தோற்றுகைக்காக
ஏனமாய் நின்றார் -என்கிறார் –

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே–கீதை -12-6-

து மத்பரா:-ஆனால் என்னையே கதியாகக் கொண்ட,
யே ஸர்வாணி கர்மாணி-எந்த பக்தர்கள் எல்லா கர்மங்களையும்,
மயி ஸந்ந்யஸ்ய-என்னிடம் சமர்ப்பணம் செய்து,
மாம் ஏவ – என்னையே,
அநந்யேந யோகேந-பிறழாத யோகத்தால்,
த்யாயந்த உபாஸதே-இடையறாது நினைத்து வழிபடுவார்களோ,

எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு,
பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்
பவாமி நசிராத்பார்த மய்யாவேஸிதசேதஸாம்–கீதை -12-7-

பார்த-பார்த்தா! மயி ஆவேஸித சேதஸாம்-என்பால் அறிவைப் புகுத்திய,
தேஷாம் நசிராத்-அவர்களை சீக்கிரமாகவே,
அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்-நான் மரண வடிவான சம்சாரக் கடலிலிருந்து,
ஸமுத்தர்தா பவாமி-கரையேற்றுபவனாக ஆகிறேன்.

என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் சம்சாரக் கடலிலிருந்தும் விரைவில் தூக்கிவிடுவேன்

அனந்யே நைவ யோகே நமாம் த்யாயந்த உபாசதே —கீதை -12-6-
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகரான் —கீதை -12-7–என்கிறபடியே    –

அங்கன் அன்றிக்கே
தமக்கு தேக யாத்ரைக்கு உடலான பக்தியைச் சொல்லுகிறார் ஆகவுமாம் –
சம்சாரிகளுக்கு உபாயமாய் இருக்கிற பக்தியை ஷேபித்து
பிரபத்தியை அருளிச் செய்கிறார் -என்றுமாம் –
அறிவானாம் -என்னுமா போலே

செவி -இத்யாதி –
சர்வேஸ்வரனை ஒழிய இதர விஷயங்களிலே போகக் கடவதான ஜ்ஞானத்துக்குப்
பிரசரண த்வாரமான இந்த்ரியங்களையும்
இவை தனக்கும் அடியான மகா பூதங்களையும்
அவை அஞ்சாலும் – ஆரப்த சரீரத்தையும் நினைத்து
இத்தையும்
விஷயாதிகளைப் பற்றி விடக் கடவது அன்றிக்கே இருக்கிற ஜ்ஞானத்தையும்
யாகாதிகளையும்
தானத்தையும்
இவை எல்லா வற்றையும் சொல்லி
இவையோ தானே வந்து சந்நிஹிதனாமவனைப் பெறுகைக்கு சாதனம் -என்று ஷேபிக்கிறார் –

ஞானப் பிரானை யல்லால் இல்லை –திரு விருத்தம் -99-என்கிறார்

பிரளய ஆபத்தில் சாதன அனுஷ்டானம் பண்ணி வந்து கிட்டினார் ஆர் –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –