அவதாரிகை –
அந்நிலை தன்னிலே ஐஸ்வர்யம் தோற்றும்படி இரா நின்றது என்னுதல்-
அன்றிக்கே –
பெரிய அழகு அடங்கலும் தோற்றும்படியாய் இரா நின்றது என்னுதல் –
அன்றிக்கே
நீர்மையைச் சொல்லிற்று ஆதல் –
——————————–
கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை –28-
பதவுரை
கார் வண்ணத்து ஐய–மேகம் போன்ற வடிவையுடைய பெருமானே
வலம் புரியும்–வலம்புரிச் சங்கமும்
நேமியும்–சக்கரமும்
கைய–என் கையிலுள்ளன;
மலர் மகள்–பெரிய பிராட்டியார்
நின் ஆகத்தாள்–உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான்–சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான்–உனது உந்திக் கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான்–பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை–உனது திருமேனியின் ஏக தேசம்
————————————-
வியாக்யானம் –
கைய வலம் புரியும் நேமியும் –
கையிலே உண்டானது ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருவாழி யாழ்வானும் யாய்த்து –
இதுக்கு மேற்பட்ட தில்லை இறே ஐஸ்வர்யத்துக்கு –
கார் வண்ணத்தைய –
மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையான நிருபாதிக பந்து வானவனே
இவை யடைய என்னது என்னலாம் படி இருக்கை –
மலர் மகள் நின்னாகத் தாள் –
பெரிய பிராட்டி யானவள் உன் திரு மார்விலள்-
அலர் மேல் மங்கை உறை மார்வன்
ஸ்ரீ யபதி என்கைக்கு அவ்வருகு இல்லை இறே ஐஸ்வர் யத்துக்கு எல்லை
செய்ய மறையான் நின்னுந்தியான் –
அந்ய பரரோடே வாசி இல்லை என்கிறது –
இவ்வருகில் உள்ளார் அடங்கலும் உன்னை நேரே காட்ட வற்றான
வேத பிரதானம் பண்ண வல்ல சக்தியை யுடையனான ப்ரஹ்மா
உன்னுடைய திரு நாபியைப் பற்றி லப்த ஸ்வரூபனாகா நின்றான் –
மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை –
ஈஸ்வர சப்த வாஸ்யனாக பிரசித்தனாய்
மதிள் மூன்று எரித்தானாய் இருக்கிற
ருத்ரனானவன் உன் திரு மேனியிலே
ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபன் ஆகா நின்றான் –
இரண்டூரைச் சுட்டுப் பேர் படைத்தவன் –
கோட் சொல்லிப் பிரசித்தராமா போலே –
அன்றிக்கே
மா மதிள் மூன்று எய்த இறையானவன்
உன் திரு மேனியைப் பற்றி
ஈஸ்வரனாய் திரியா நின்றான் -என்றதாகவுமாம் –
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply