Archive for June, 2014

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -41 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்ட பந்தம் உண்டே யாகிலும்
அவன் விரோதி நிரசன சீலனாகிலும்
குற்றவாளரான நமக்கு அவன் பாடு செல்ல ஒண்ணுமோ -என்ன

அவன் குற்றம் பொறுக்கைக்காகவே வந்து நின்றான் –
நமக்கு ஒரு க்ருத்யமும் இல்லை –
இனி  நீ ஆபி முக்யத்தைப் பண்ணி அவனை அனுபவித்து இருக்கப் பார்
என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————————–

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  –41-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
என்றும்–எப்போதும்
புறன் உரையே ஆயினும்–(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தை யாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே–சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு–அநுஸந்தித்துக் கொண்டிரு;
(அப்படியிருந்தால்)
இன்று முதலாக–இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும்–மலை போல் (பெருப் பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்–(அவற்றை யெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்

—————————————-

வியாக்யானம் –

குன்றனைய குற்றம் செய்யினும் –
மேரு மந்தர மாத்ரே அபி -என்கிறபடியே
ஒரு மலை யத்தனை பாபம் பண்ணுவது –

பெருமைக்கும்
போக்க ஒண்ணாமைக்கும் மலையை ஒப்பாகச் சொல்லுகிறது

அநுபவ விநாச்யமாய் யல்லது தீராமை
அவன் பொறுத்தோம் என்னப் போம் இத்தனை –

குணம் கொள்ளும் –
அவன் ஸூஹ்ருதமடியாக ஏதேனும் ஒரு நன்மை கலசி
வந்தது உண்டாகில்
அத்தை அந்த மலை யோடு ஒக்க நினைத்து இருக்கும் -என்னுதல்

அன்றிக்கே
குற்றங்கள் எல்லாத்தையும் மறந்து
இருந்த குணம் ஒன்றையும் ஸ்வீகரிக்கும் -என்னுதல்

அதாவது
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்
அவனுள்ள வன்றே இவ்வாத்மாவும் உள்ளது ஓன்று –

இத்தனை நாளும் இத்தைப் பெறாது ஒழிவான் -என் -என்னில்
இன்று  முதலாக வென்னெஞ்சே –
சர்வேஸ்வரனுக்கு இப்படி இருப்பதொரு ஸ்வபாவம்  உண்டு என்னும்
இவ் வாராய்ச்சி யுனக்குப் பிறந்த இன்று தொடங்கி-
என்னை யுன் வழி யாக்குகை தவிர்ந்து நீ என் வழியே நிற்கப் பெறுவதே –

சஹ்ருதயமாக அவனுடைய குணங்களைப் பேசப் போமோ என்னில் –
என்றும் புறனுரையே யாயினும் –
அஹ்ருதயமான சொல்லாலே யாகிலும்
பிரயோஜனம் இன்றிக்கே அனர்த்தமாக ஸ்துதித்தாகிலுமாம் –
வ்ருதைவபவ தோயாதா பூயஸீ ஜன்ம சந்ததி
தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சித்ய சரணம் வ்ரஜ –

பொன்னாழிக் கையான் –
கண்டாயே
இவ் விஷயம் இருந்தபடியால் மறக்கலாய் இருந்ததோ
நீ ஏதேனும் ஒரு படி இழிந்தாலும் சஹ்ருதயமாகப் பண்ணுவித்துக் கொள்ள வற்றாய் காண்
அவ் விஷயம் இருப்பது –

திறனுரையே சிந்தித் திரு  –
அவனிடை யாட்டம் ஆனவற்றையே அநு சந்தித்து நிர்ப்பயமாய்க் கொண்டு இரு

அங்கன் அன்றிக்கே
புறனுரையே யாயினும் என்று நான் சொன்ன வித்தை
புறம்பே சென்று இருந்தாயே யாகிலும்
உனக்கு அழகிதாகச் செய்யப் பார் -என்கிறார் ஆகவுமாம்

அவனுடைய திறமான புறனுரை யுண்டு
அவன் மாஸூச என்று சொன்ன சொல்லு
அத்தை அநு சந்தித்து
ஸ்தி தோஸ்மி -என்கிறபடியே
ஸூகமே இருக்கப் பாராய் -என்கிறார்

திறனுரை
மித்ர பாவேன
மாதவன் என்றதே கொண்டு –தீது அவம் கெடுக்கும் அமுதம் -திருவாய்மொழி -2-7-3-

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -40 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

இங்குற்றை நித்ய வாசம் தனக்கு
அவன் பிரயோஜனமாக நினைத்து இருப்பது
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி
யுகக்குமத்தை கிடீர் –
என்கிறார் –

——————————

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று -40—

பதவுரை

பெரு வில்–பெரிய வில்லையும்
பகழி–அம்புகளை முடையரான
குறவர்–குறவர்களினுடைய
கை–கையிற்பிடித்திருந்த
செம் தீ–சிவந்த நெருப்புக்கு
வெருவி–பயப்பட்டு
புனம் துறந்த–கொல்லையை விட்டு நீங்கின
வேழம்–யானையானது,
இரு விசிம்பில்–பரந்த ஆகாசத்தில் நின்றும்
மீன் வீழ–நக்ஷத்திரம் விழ
கண்டு–அதனைப் பார்த்து (நாம் அப்பால் போக முடியாதபடி
குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)
அஞ்சும்–பயப்படுமிடமான
வேங்கடம்–திருவேங்கடமானது
மேல்–முன்பொருகால்
அசுரர் கோன் வீழ கண்டு–இரணியாசுரனை முடித்து
உகந்தான்–ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய
குன்று–திருமலையாம்

———————————–

வியாக்யானம் –

பெருவில்
அவஷ்டப்ய மஹத் தநு-யுத்த -100-12 -என்கிறபடியே

பகழிக் –
கூரம்பன் கூர்மையை விஸ்வசித்து இருப்பார் வார்த்தை
இலை துணை மற்று என் நெஞ்சே –கூரம்பன் அல்லால் -நான் முகன் திரு -8
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் போல் கூர்மையில் நம்பிக்கை வைத்து
அச்சம் இல்லாமல் இருப்பவர்கள் ஆய்த்து

குறவர் கைச் செந்தீ –
ராம லஷ்மணர்களைப் போலே
சக்கரவர்த்தி திருமகன் வில் பிடித்தாப் போலே யாய்த்து
அங்குத்தை திரு வேடுவரும் வில் பிடிக்கும் படி

பெரிய வில்லையும் வாய் அம்புகளையும் கூட
ஒரு கையிலே எடுத்துப் பிடித்து
மற்றைக் கையிலே இருளுக்கு வெளிச் செறுப்பாக சூல் நெருப்பைக் கொண்டு
புனம் காவல் கொள்ளப் போவார்கள் ஆய்த்து –

வெருவிப் புனந்துறந்த  வேழம் –
புனங்களிலே பட்டி மேய்வதாக வந்த அங்குற்றை யானைகள் ஆனவை
இவ் விளக்கு ஒளியையும்
இவர்கள் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியையும் கண்டு அஞ்சி
இனி இங்கு ஒரு நாளும் நாம் வரக் கடவோம் அல்லோம் என்று
புனத்தை சந்யசித்துப் போமாய்த்து –

இரு விசும்பில் மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே –
இது போன இடம் தனிலேயும்
பரப்பை உடைத்தான ஆகாசத்தின் நின்றும் நஷத்ரங்கள் விழுகிறவத்தைக் கண்டு
பூமியில் நெருப்பை விழ விட்டார்கள் என்று
அவ் வருகு போக்கில்லாமையாலே நின்ற  இடத்தே நின்று குலையா நிற்கும்

இன்னம்  இப் புனம் தன்னிலே வந்தால் வேண்டும்படி யாய்த்து இருப்பது
இது வாகில்  அன்யார்த்தம் என்றாகிலும் கொள்ளலாம்
நம்மையே குறித்து வந்து விழுகிறது என்று தோற்றி இருக்குமாய்த்து –

மேல் -பண்டு

அசுரர் கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று –
இப் பிரசங்கத்தாலே
நர சிம்ஹத்தைக் கண்டு ஹிரண்யன்  அஞ்சின படியை நினைக்கிறார்

அசுரர் கோன் உண்டு -ஹிரண்யன்
அவன் விழுந்து முடிந்து போகக் கண்டு சிறுக்கன் உடைய
விரோதியைப் போக்கப் பெற்றோம் என்று உகந்தவனதான திரு மலை
இன்னம் ஆஸ்ரிதர்க்கு விரோதம் வருமாகில் தீர்க்க வேணும் என்று அவன் வந்து நிற்கிற திருமலை –
இரு விசும்பில் மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -39 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

அவனது அல்லாத தேசம் உண்டோ –
அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணாத வியாபாரம் உண்டோ
ஆன பின்பு இங்குத்தைக்கு இத்தனை விசேஷம் என்னென்ன

அல்லாத இடங்கள் போல் அன்றிக்கே
இவ் விடம் அவன் விரும்பி நித்ய வாஸம் பண்ணுகிற  தேசம்  –
என்கிறார் –

————————-

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது-39–

பதவுரை

பேர் ஓதம் வண்ணர்–பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்
முன்–முற்காலத்தில்
இடந்தது–(மஹா வராஹமாகிக்) கோட்டார் குத்தி யெடுத்தது
பூமி–பூமியாம்;
எடுத்தது–குடையாக வெடுத்துப் பிடித்தது
குன்றம்–கோவர்த்தன மலையாம்
அஞ்ச கடந்தது–அஞ்சி முடிந்து போம்படி செய்தது
கஞ்சனை–கம்ஸனையாம்;
கிடந்ததுவும்–திருக் கண் வளர்ந்தருளினது
ஓதம் நீர் மாகடல்–பெரு வெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம்
பெரிது நின்றதும்–பெருமை யெல்லாம் தோற்ற நின்றது
வேங்கடம்–திருமலையிலாம்.

——————————

வியாக்யானம் –

இடந்தது பூமி எடுத்தது குன்றம் –
பிரளய ஆபத்து பிரஸ்துதமான பின்பு
பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்

இந்த்ரனாலே இடர்ப்பட்ட வன்று
மலையை எடுத்துப் பரிஹரித்தது –

கடநதது கஞ்சனை முன்னஞ்ச –
கம்சன் மிகைச் செயல் செய்த அன்று
அவன் தோற்றரவிலே அஞ்சும் படிக்கு ஈடாக அவனை முடித்து விட்டது –

கிடந்ததுவும் நீரோத மா கடலே –
இது எல்லாத்துக்கும் அடியாகத்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று

இங்கன் அன்று
பேரோத வண்ணர் பெரிது வேங்கடமே நின்றதுவும் -என்கிறார்

கிளர்ந்து வருகிற ஓதம் போலே இருந்துள்ள வடிவை யுடையவர்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே விரும்பிக் கொண்டு
நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இவ்விடம் -என்கிறார்

அவதாரங்கள் -சம்பவாமி யுகே யுகே -கீதை -4-8-என்று
கார்ய காலங்களிலே ஆபத்துக்கு அநு குணமாக வந்து உதவிப் போம் இறே
ஏற்கவே பரிஹரிப்பதாக நிற்கிற விடம் இறே இவ்விடம் –

நாம் எம்பெருமானை உகந்தோம் என்று வைத்து சோற்றை உகப்புதோம்
சோற்றை உகந்தோம் என்றாலும் நாலைந்து பட்டினி விடுவுதோம்
ஸ்திரீகளை உகந்தோம் என்று சதுரங்கம் பொருத்தல் உறங்குதல் செய்வுதோம்
நமக்கு ஒன்றிலும் ஸ்நேஹம் இல்லை –

இடந்தது இத்யாதி –
பிரளய ஆபத்தில் வந்த நலிவு தீர்த்த  படி –
இந்த்ரனால் வந்த நலிவு தீர்த்த படி –
கம்சனால் வந்த நலிவு தீர்த்த படி –
அவதாரத்துக்கு ஏகாந்த மான விடம் –

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளின் போதை அழகும்
கோவர்த்த உத்தரணம் பண்ணின போதை அழகும்
கம்சனை அழித்த வெற்றியால் வந்த   அழகும்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின அழகும்
எல்லாம்
திரு வேங்கடமுடையான் பக்கலிலே காணலாம் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -38 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

அவன் தேசத்தை உகந்த படியைக் கண்டு
இவரும் அங்கு உள்ள பதார்த்தங்களை உகக்கப் புக்கார் –

ஒரு தேசம் ப்ராப்யம் என்று பிரதிபத்தி பிறந்த பின்னை
அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் இருக்கக் கடவது இறே –
பரம பதத்தில் உள்ளார் அடைய உத்தேச்யர் ஆமா போலே-

———————————————–

ஊரும் வரியரவ மொண்  குறவர் மால் யானை
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் –38-

பதவுரை

ஊரும்–திரிகின்ற
வரி அரவம்–(உடம்பில்) கோடுகளை யுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர்–அழகிய குறவர்கள்
மால் யானை பேர–(பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த–(அவ் யானைகளின் மேல்) வீசி யெறிந்த
பெரு மணியை–பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று–மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம்–புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர்–மேற்பட்டவர்களான நித்ய ஸூரிகள்
எம் என்னும் மாலது–‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும் படியாக வுள்ள எம்பெருமானது
இடம்–திவ்ய தேசமாம்.

————————————-

வியாக்யானம் –

ஊரும் –
அங்குத்தை சர்ப்பங்கள் ஆனவை
ஸ்வரை சஞ்சாரம் பண்ணுமாய்த்து-
ஒரு கார்யப் பாடு அன்றியிலே ஊர்ந்து திரிகையே உத்தேச்யமாய் இருக்கை  –

ப்ராதரி கச்சதி -அயோத்யா -40-5–
குழந்தாய் பெருமாள் நடை அழகில் கண்  வைக்காதே -என்று போல் அன்றி
அவற்றின் உடைய சஞ்சாரம் இவர்க்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –

வரி யரவம் –
வரிப்பட்ட உடம்பை உடைத்தாகையாலே தர்ச நீயமாய் இருக்கும் ஆய்த்து –
திருவேங்கட முடையான் திரு மேனியிலே ஓர் அவயவத்தோ பாதி உத்தேச்யம் ஆதல்
படுக்கையாய்க் கிடக்கும் அரவத்தோ பாதியாய் இருத்தல் –

ஒண்  குறவர் –
ஒள்ளிய குறவர்

அதாகிறது
திருமலையில் நின்றும் பூமியிலே இழியுமது
அவர் தங்களுக்குக் குடிப் பழியாய் இருக்கை
ஒருவன் பாட்டன் இழிந்தான்   என்று அவனுடைய பாட்டன் உடைய பாட்டன் இழிந்தான் என்று
பழியாய்ச் சொன்னான் ஆய்த்து
சம்சார ஸ்பர்சம் உண்டாய்ப் பின்னை அது கழிந்தவர்களைப் போலே யன்றிக்கே
நித்ய ஸூரிகளைப் போலே இருப்பார் சிலர் ஆய்த்து –

மால் யானை  பேர வெறிந்த   பெரு மணியை –
ஒரு மேரு போலே யாய்த்து
அங்குத்தை யானைகள் வந்து தோற்றும் படி
மத்த கஜங்கள் ஆனவை புனங்களிலே வந்து பட்டி மேயுமாய்த்து –

பேர எறிந்த –
அவை ஒளிக்குச் சலித்து மலை பேர்ந்தாப் போலே பேரும்படிக்கு ஈடாக எறிவர்கள் ஆய்த்து

பெரு மணியை –
ஒரு மலையின் மேலே ஒரு மணியை விட்டு எறிந்தாப் போலே யாய்த்து
மஹார்க்கமான மணிகளை விட்டு எறிகிறபடி-

இத்தை –
காருடைய மின்னென்று புற்றடையும் –
இம் மணிகள் சென்று தாக்கின வாறே
யானையின் கறுப்பும் அவற்றின் புகருமாகத் தம்மிலே விரவித் தோற்றுமே
அத்தை மேகத்தோடு கூடின மின்னாகக் கருதி
அதுக்கு அனந்தரமான இடிக்கு பயப்பட்டுத்
தனக்கு ரஷை யுள்ள பூமியிலே புக்கு ஒதுங்கா நின்றது
கார் உடைத்தான மின் என்னும் படி மேகத்தின் உடம்பிலே இறே மின் தோன்றுவது

திருமலையோடு
அங்கு ஊருகிற சர்ப்பத்தோடு
சஞ்சரிக்கிற யானையோடு
அத்தை எறிகிற குறவரோடு
அதுக்கு சாதனமான மணியோடு
இதுக்கு அஞ்சி அது போய்ப் புகுகிற் புற்றோடு
வாசி அற இவர்க்கு எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து-

மேலசுரர் எம்மென்னு மால திடம் –
மேலான சுரர் உண்டி -ஆக்கரான தேவர்கள் அன்றிக்கே நித்ய ஸூரிகள்
அவர்கள் அஹ மஹ மிகயா எங்களது எங்களது என்று கொண்டு
விரும்பி வர்த்திக்கும் தேசம் ஆய்த்து –

வரி  யரவங்கள் அடைய  மின்னென்று புற்றடையும் வேங்கடமே –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -37 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

ஒரு நாள் தன்னை இரப்பாளனாக்கிக் கொடு வந்து போன வளவேயோ –
என்றும் தன்னை இரப்பாளனாக்கி
நித்ய சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திரு மலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

நாம் அவதாரத்துக்குப் பிற்பட்டோம்
தீர்த்தம் பிரசாதித்துப் போய்த்து இறே என்ன வேண்டாதபடி
திருமலையிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார்  –

———————————————-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் -37—

பதவுரை

வகை அறு–அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட் புகுந்து
இன்ன வகை இன்ன வகை என்று அறுதி யிடுவதற் குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள்–ஸூக்ஷ்மார்த்த ஸ்ரவண முடையவர்களான
வேதியர்கள்–வைதிகர்கள்
நாளும்–நித்தியமும்
புகை விளக்கும்–தூப தீபங்களையும்
பூ புனலும்–புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி–தரித்துக் கொண்டு
திசை திசையின்–பல திக்குக்களில் நின்றும்
சென்று–வந்து சேர்ந்து
இறைஞ்சும்–வணங்குமிடமான
வேங்கடம்–திருவேங்கடமலையானது,
வெண்சங்கம் ஊதிய வாய் மால்–வெளுத்த சங்கைத் திருப் பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கப் பெற்ற
ஊர்–திவ்ய தேசமாம்.

———————————————

வியாக்யானம் –

வகை யறு நுண் கேள்வி வாய்வார்கள் –
பஹூ சாகா ஹி அனந்தாஸ் ச-கீதை -2-41-என்று கொண்டு
பிரயோஜனங்களை அனந்தங்களாகச் சொல்லா நிற்கச் செய்தே
பின்னையும் ஆயுஸ் புத்திரன் ஷேத்ரம் என்றாப் போலே இருக்கிற
அவாந்தர பலங்களையும்
அநேகமாகச் சொல்லா நின்றது இறே

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்–கீதை -2-41

குரு நந்தந-குருகுலத் தோன்றலே!
இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமை யுடையது,
அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின்
புத்தய:-புத்திகள்,
பஹுஸாகா-பல கிளைப்பட்டது,
அநந்தா: ச-முடிவற்றது,

குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
பல மாணாக்கர்கள் ஒரு கணக்கைப் போடும்போது தப்பான விடைகள் கணக்கற்றவை வரக்கூடும்.
ஆனால் சரியான விடை ஒன்றே ஒன்று தான் உள்ளது.
அங்ஙனம் காமிய கருமங்கள் செய்கின்றவர்களுக்குக் கணக்கற்ற புத்திகள் உருவெடுக்கின்றன.
எத்தனையோ விதங்களாக எண்ணியும் செயல் புரிந்தும் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஆனால் செயல்களெல்லாம் ஈசுவரனுக்குரியவைகள் என்றறிந்து அவனுக்கே தொண்டு புரிகின்றவனுக்கு புத்தி ஒன்றேயாம்.

முழுகுவாரைக் கண்டவாறே முழுகி
ஜபிப்பாரைக் கண்டவாறே ஜபியாதே
வ்யவசாயாத்மிகா புத்தி ரேகா -என்கிறபடியே
ஒன்றிலே நோக்காய் இருக்கை
முமுஷுக்களுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கும் இறே –

வகை யறு
பலதலைப் பட்டு இருக்கை தவிர்ந்து உள்ள
நுண்ணிய கேள்வி யுண்டு
ஸூஷ்மார்த்த விஷயமான ஸ்ரவணம்
அது நேர் பட்டு உள்ளவர்கள் –

வாய்வார்கள் –
வாய்த்தவர்கள்
நுண்ணிய கேள்வி வாய்வார்களான வேதியர்கள்  –

நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி –
இனி ஸ்ரவண விஷயமாக ஒரு கர்த்தவ்யம் இல்லை இறே
அனந்தரம்
வ்ருத்தியிலே அந்வயிக்கும் இத்தனை இறே

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று அத்யவசித்த பின்பு
தொட்டதும் தீண்டினதும் கைங்கர்யமாம் இத்தனை இறே

அது தான் போக ரூபமாய் இருக்கையாலே
எப்போதும் சமாராதன உப கரணங்களைத் தரித்துக் கொண்டு –

திசை திசையின் வேதியர்கள் –
பெரிய திரு நாளுக்கு சர்வதோத்திகமாக வந்து புகுருமா போலே
திக்குகள் தோறும் வந்து
வேதத்திலே ஒரு சந்தை கற்றவர்கள் அடைய அங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து

வேதியர்கள் –
வேத தாத்பர்யமான ப்ரணவார்த்தம் கை புகுந்தவர்கள் –

சென்று இறைஞ்சும்
கல்விக்கு பிரயோஜனம் ஆகிறது அந்த தேசத்தே
போய்க் கிட்டுகை போலே காணும் –

வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –
பாரத சமரத்திலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்து ஊதின
வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற தேசம்

அர்ஜுனன் தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் எட்டுப் படாது ஒழிந்தவாறே
நின்ற நிலையிலே முழுக் காயாக அவியும்படிக்கு ஈடாக
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தூதின
கிருஷ்ணன் வர்த்திக்கிற ஊர்  –
ஆஸ்ரித பஷபாதி -என்றபடி –

வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –திசை திசையின் வேதியர்கள் –
சென்று இறைஞ்சும் வேங்கடமே-
ஆஸ்ரித சம்ரஷணம் பண்ணுகைக்கு ஏகாந்த மான தேசம் என்றாய்த்து
திரு மலையை உகக்கிறது –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -36 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ என்று
இரக்க வேண்டாத படி
அவன் தானே வந்து அர்த்தியாய் நின்ற படியை
அநு சந்தித்து
நீ இப்படி உன்னை அழிய மாறிக் கொண்டு வந்து கார்யம் செய்து
சம்சாரிகளை உனக்காக்கிக் கொள்ளலாம் என்று
பார்த்து -அத்தாலே -என்கிறார் –

———————————-

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

பதவுரை

முன்னம்–முற் காலத்தில்
தரணி தனது ஆக தானே–பூமி யெல்லாம் தன்னுடைய தென்று அஹங்காரங் கொண்டிருந்த
இரணியனை–ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த–புண்படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர்–கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால்–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையினால்
நீ–நீ
மண் இரந்து கொண்ட வகை–(மாவலி யிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே–(ஸம்ஸாரிகளின்) முரட்டுத் தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலா மென்றல்லவோ?.

——————————

வியாக்யானம் –

முரணை வலி தொலைதற்காம் என்றே-
எட்டுக்கு நோக்குப் போலே
ந நமேயம் -என்று இருக்கிறவர்கள் உடைய மிறுங்குதலைப் போக்கி
நமக்கு ஆக்கலாம் -என்றே
யானே என் தனதே -என்று இருந்து
ஏத்தவும் தவிர்ந்து
எல்லாம் செய்தாலும்
நம் சந்நிதியிலே நெகிழ்ந்து நமக்கு ஆகார்களோ என்றோ பார்த்தது –

முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் –
ஈஸ்வரனதான விபூதியை
பண்டே
தன்னதாக தானே சமைந்து இருந்துள்ள ஹிரண்யனை
இதுக்கு வேறே மேல் எழுத்து இடுவார் வேண்டாத படி
தானே தன்னதாக அபிமானித்து இருந்தது –

புண்ணிரந்த வள்ளுகிரால் –
புண் நெருங்கி
கூரிய உகிராலே
ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவன் -என்னுதல்
அன்றிக்கே
அவனுடைய புண் பட்ட நெஞ்சை பிளந்து -என்றுமாம்

பூமி யடங்கத் தன்னுடையதாக அபிமானித்து   இருந்த
மகா பலி யஞ்ஞ வாடத்திலே சென்று
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை –
ரஷணத்துக்கு பரிகரமான திருவாழியை உடைய கையாலே
பூமியை இரந்து
அளந்து கொண்ட பிரகாரம்
முரணை வலி தொலைதற்  காமென்றே –

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
அர்த்தித்வம் தோற்ற நின்ற சௌலப்யத்தைக் கண்ட நாட்டார்
நெஞ்சு நெகிழும் என்றே

முரண் –
அரண் அழியும் என்று நீ மண் இரந்து கொண்ட வகை
தன்னது என்று தர உகக்குமாகில் –
நாம் இன்று பெற்றோமானால் ஆகாதோ என்று –
அநபாயினியான பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் தரக் கொள்ளுமா போலே –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -35 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

யசோதைப் பிராட்டி உடைய பக்தியை அனுசந்திக்க அல்லாதார் உடைய பக்தி
ப்ராதி கூல்யம் என்னும் படி இருந்தது  –
அப்படி இருந்ததே ஆகிலும் இனி இது தனக்கு
அவனையே கால் கட்டி பொறுப்பித்துக் கொள்ளுகை ஒழிய
இல்லை என்று பார்த்து அவனை ஷமை கொள்ளுகிறார் –

—————————–

ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் -35–

ஆறிய அன்பு இல்–நிரம்பின பக்தி யில்லாதவர்களாய்
அடியார்–சேஷத்வ ஜ்ஞாந மாத்திரத்தை யுடையரா யிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால்–தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய–சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ–குற்றமாக
நீ கொள்ளல்–நீ கொள்ளாதே;
(அது ஏனெனில்)
ஈர் ஐந்து முடியான்–பத்துத் தலைகளை யுடையனான ராவணன்.
படைத்த–புத்தி பூர்வகமாகப் பண்ணின
முரண்–தப்புக் காரியமானது
நெடியோய்–பெருமை பொருந்திய உன்னுடைய
அடி–திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே–தெளிந்து வந்து (கால க்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?

————————-

வியாக்யானம் –

ஆறிய வன்பில் அடியார் –
எறிமறிந்த பக்தி இல்லாத சேஷ பூதரானர்கள்

ஆறிய அன்பாகிறது –
தன்னைப் பேணாதே அத் தலைக்கு பரிகை –

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அவனுக்குப் பரிகையாலே
தனக்கு என்று பரிகையும் பிராதி கூல்யம் இறே-

தம் ஆர்வத்தால் கூறிய –
தம் தாமுடைய ஸ்நேஹத்தாலே சொன்னவற்றைக் குற்றமாகக் கொண்டு அருளாதே ஒழிய வேணும் –
அதாகிறது –
சொல்லி அல்லது நிற்க மாட்டாத படியான பிரேம பாரவஸ்யத்தாலே சொன்னவை இறே –
தமக்கு இவ்வளவான தசை விளைந்த இத்தையும்
அவளுடைய பக்திக்கு போராது என்று இருக்கிறார் ஆயத்து –

குற்றமாகக் கொள்ளல் நீ –
குறையாகக் கொள்ளாதே ஒழிய வேணும்
இவன் தன் ஆற்றாமைகளாலே சிலவற்றைச் சொன்னான் ஆகில்
இவன் அறிந்து சொன்னானோ என்று நினைத்து இருக்க வேணும்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் -திருச்சந்த விருத்தம் -111-

நீ கொள்ளேல் -என்கைக்கு
எனக்குக் குற்றம் இல்லை என்கிறேன் அல்லேன் –
தேவர் அத்தைக் குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும்
இவன் பொறுக்க அடைய நன்றாம் -என்கிறார்

குற்றத்தைச் செய்து வைத்துக் குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்றால்
எங்கனே செய்யும் படி என்ன-

தேறி-இத்யாதி
ராவணன் பண்ணின மிகைச் செயலானது கால க்ரமத்தாலே  போந்து
தெளிந்து சிஸூபாலனாய்க் கொண்டு
சர்வாதிகனான உன் திருவடிகளைப் பெறுகைக்கு
உபாயமாய்த்து இல்லையோ –

தேறி –
பிரசன்னனாய் –
செய்த குற்றத்தை குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -என்னுதல்

அன்றிக்கே
சிஸூபாலன் கையும் திரு வாழியும் இருந்த படி என் -என்று நினைத்துக் கிடந்த
அந்திம ப்ரத்யயம் ஆகவுமாம்-

நெடியோய் –
ஆநு கூல்ய லேசம் உடையார் திறத்து நீ இருக்கும் இருப்பு
எல்லை காணப் போமோ -என்றபடி –

அடி யடைதற் கன்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் —
ஈரைந்து முடியான் படைத்த முரண் -நெடியோய் –அடி யடைதற் கன்றே-
அவன் தேவரைப் பெற்றது தன் ஆநு கூல்யத்தால் அன்றே –
அவன் பேற்றுக்கு அடியான கிருபையை
என் பக்கலிலே பண்ணத் தட்டு என்-

அவனுடைய பிராதி கூல்யத்திலும் வலிதோ என் பக்கல் குற்றம்
ப்ராதி கூல்யம் ஆநு கூல்யமாகப் பலித்தால்
ஆநு கூல்ய ஆபாசம் ஆநு கூல்யமாகத் தட்டுண்டோ –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -34 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

இவ் விஷயத்தில் தலையான பக்தி உடையளாய்க் கொண்டு
பெற்றாள் யசோதைப் பிராட்டி ஒருத்தியும் இறே என்கிறார்
புந்தியால் சிந்தியாது பெற்றாள் அவள் போலே காணும் –
என்
இதுவும் ஒரு எத்திறம் போலே இருக்கிறது

அன்றிக்கே
இத்தை ஒருவர் மெய் என்னும்படி எங்கனே – என்னவுமாம் –

———————————-

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே -34–

பதவுரை

முன்–முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு–ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில்–ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய–துணை யற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில் வண்ணா–காள மேகத் திரு வுருவனான பெருமானே!
நின் உருகி–உன் விஷயத்தில் உருக்கம் கொண்டவள் போல மேலுக்குக் காட்டி
முலை தந்தாள்–முலை கொடுத்தவளான
பேய் தாய்–பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள்–அவ்விடத்தில் றின்றும் பேர மாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண்–பெரிய அந்த யுத்த பூமியில்
ஆய் தாய்–இடைத் தாயாகிய யசோதை யானவள்
முலை தந்த ஆறு–முலை கொடுத்த விதத்தை
ஒருவர்–ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸ பராஸராதி ரிஷிகள்
மெய் என்பர்–மெய்யென்று சொல்லா நிற்பர்கள்;
என்–இது என்ன ஆச்சரியம்?

————————————-

வியாக்யானம் –

என்னொருவர் மெய்யென்பர் –
ப்ரதானர் ஆனவர்கள் இத்தை சத்யம் என்று சொல்லா நின்றார்கள்
அறிந்த ரிஷிகளிலே சிலவர் இத்தை
அர்த்த வாத சங்கை இல்லை
மெய் என்னா நின்றார்கள் –

ஏழு உலகு உண்டு ஆலிலையில் முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்   –
சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே
பரிவரான யசோதாதிகளும் இல்லாத சமயத்திலே
ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளினவனே

நீ செய்யும் செயலுக்கு அடைவு உண்டாகில் இறே
உன்னை ஆஸ்ரயித்தார் உடைய  செயலுக்கு அடைவு உள்ளது –

நின் உருகி –
அற்றை இழவு தீர உனக்கு ஸ்நேஹித்து –

பேய்த் தாய் முலை தந்தாள் பேரிந்திலளால்-
பூதனை யானவள் உனக்கு முலை தந்து
அவ்வருகில் போகப் பெற்றிலள்
அப் பிணம் கிடக்கச் செய்தே –

பேரமர்க் கண் –
பெரிய பூசலிலே
பேர் ஆரவாரம் இறே
ஜகத்தில் பிரளயம் தீர்த்தவனுக்குப் பிரளயம் விளைக்க வந்து முடிந்தாள்-

அவ் வளவிலே ஆய்த் தாய் உண்டு -யசோதைப் பிரட்டி
ஆய்த் தாய் முலை தந்தவாறே –
அவள் முலை தந்த பிரகாரம் என்
இத்தை அடி அறிவார் மெய் என்னா நின்றார்கள்

ஔபாதிகம் இன்றிக்கே
ஸ்வா பாவிகமாக ஸ்நேஹித்தவளை நினைக்கிறார்

சர்வேஸ்வரனாய் அகடிதங்களைக் கடிப்பிக்க வல்லவனுக்கு
அஞ்சுகிற   யசோதைப் பிராட்டி ஸ்நேஹமும்
ஒரு ஸ்நேஹமே -என்கிறார் –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -33 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனை உள்ளீடாகக் கொள்ளாதே
நாட்டார் ஓதுவது
உரு எண்ணுவதாய்க் கொண்டு  செய்யா நிற்கிற
சந்த்யாதி கர்மங்களாலே ஒரு பிரயோஜனம் இல்லை கிடீர்
என்கிறார் –

——————————

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் -33–

பதவுரை

பூ மேல்–திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு–பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து–இருப்பிடத்தை ஏற்படுத்தி யருளியும்
பகர–(யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக
மறை–வேதத்தை
பயந்த–உபகரித்தும் வைத்த
பண்பன்–குணசாலியான எம் பெருமானுடைய
பெயரினை–திரு நாமங்களை
பிந்தியால்–மனத்தினால்
சிந்தியாது–எண்ணாமல்
ஓதி உரு எண்ணும்–ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என்–உண்டாகப் போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)

————————————

வியாக்யானம் –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் –
நான்முகற்குப் பூ மேல் -நகர மருள் புரிந்து-
ஸ்ருஷ்ட்யாதி கார்யங்கள் எல்லாவற்றையும் பண்ணுகைக்கு ஈடான இருப்பிடமாகத்
திரு நாபீ கமலத்தை இவனுக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொடுத்தான் –

ஒரு கார்யத்தை விரியச் செய்யும் அவனுக்கு
ஓர் இடத்திலே நல் தரிக்க இருந்து கொள்ள வேணும் இறே
ஜன்ம தேசத்தையே கொடுத்து விட்டான்
அந்தரங்கர்க்கு கிட்ட மாளிகை சமைக்குமா போலே –

பகர மறை பயந்த –
இருப்பிடம் கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை இறே
ஜ்ஞான பிரதானம் பண்ணாத அன்று

இவ்வருகு உள்ளார்க்கு எல்லாம் இவன் அறிவிக்கும் படிக்கு ஈடாக
வேதத்தை இவனுக்குத் தெரிவித்த நீர்மையை உடையவன்

செல்வப் பிள்ளைகளை மாளிகைக்கே வைத்து ஒதுவிப்பாரைப் போலே
யோ வை வேதாம்ச்ச ப்ரஹி ணோதி தஸ்மை -என்னுமா போலே –

பண்பன் பெயரினையே புந்தியால் சிந்தியாது –
சத்தையையும்
வெளிச் சிறப்பையும் பண்ணிக் கொடுக்கக் கடவனவனுடைய
திரு நாமத்தையே புத்தியாலே அனுசந்தியாதே-

பண்பன் பெயரினை
அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை

புந்தியால் சிந்தியாது –
ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே –

ஒதி யுரு வெண்ணும் அந்தியா லாம் பயன் அங்கு என் –
இடக்கை பத்துருக் கொண்டு
வாயாலே சொல்லுகிற இத்தால்
அவ்விடத்தில் பிரயோஜனமாய்த் தலைக் கட்டுவது ஏதோ

நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க
வாயாலே சொல்லுவது
கையாலே எண்ணுவதாகிற
இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு
எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை

சந்த்யையாலே
எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது  –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -32 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

சாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதன அனுஷ்டானத்தில்
அந்வயம் இல்லையே யாகிலும்
அவன் சேஷீ நாம் சேஷம் -என்கிற இந்த ஜ்ஞானம் உடையவர்களுக்கு
அந்த சாஸ்த்ரங்களில் சொல்லுகிற தேசத்தை சென்று ப்ராபிக்கலாம் கிடீர் -என்னுதல்

அன்றிக்கே
அந்த சாதன அனுஷ்டானம் பண்ணாதார்க்கு
அவனைச் சென்று கிட்டப் போமோ  -என்றாதல் –

————————–

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -32–

பதவுரை

இமையாத கண்ணால்–[ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்] உட் கண்ணாலே
இருள் அகல–[அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும் படியாக
நோக்கி–(தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு
அமையா–த்ருப்தி பெற்று அடங்கி யிராத
பொறி புலன்கள் ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்ச விஷயங்களையும்
நமையாமல்–அடக்காமலே
ஆகத்து அணைப்பார்–(மாதர்களின்) தேஹத்தை அணைத்துக் கொண்டு கண்ட படி திரிபவர்கள்
ஆயிரம் வாய் நாகத்து அணையான்–ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
நகர்–நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை
அணைவரே–கிட்டப் பெறுவர்களோ?.

————————–

வியாக்யானம் –

இமையாத கண்ணால்-
இப்போது இத்தால் மனஸ்சைச் சொல்லுகிறது
மற்ற கண்கள் பாஹ்யமான தமஸ்சை இறே போக்க வல்லது
ஆந்தரமான அஜ்ஞாநாதிகளைப் போக்கும் போது மனசே வேண்டும் இறே

மனசா து விஸூத்தேன-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -275-2-என்னும்படியே –
கட் கண்ணால் காணாத வவ்வுருவை நெஞ்சு என்னும் உட் கண்ணால்  காணும்  உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28
என்னக் கடவது இறே –

இருள் அகல நோக்கி –
அவித்யாதிகள் போம்படி அனுசந்தித்து
அஜ்ஞ்ஞான அந்தகாரங்கள் போய்
அவனையும் தன்னையும் உள்ள படி அறிகை-

அமையாப் பொறி புலன்கள் ஐந்தும்-
அமையக் கடவது அன்றிக்கே
ஒருக்காலும் பர்யாப்தம் ஆகக் கடவது அன்றிக்கே
இருந்துள்ள பொறி ஐந்தையும்

புலன் ஐந்தையும் அமையாப் பொறி என்று
திரிய விடுவிக்க ஒண்ணாத -என்றுமாம் –

நமையாமல் –
நியமியாமல்
அதாகிறதும் ஸ்ரோத்ராதிகள் விஷயங்களைச் சென்று க்ரஹித்தல்
அன்றிக்கே
அந்த விஷயங்கள் தான் இவற்றுக்கு இலக்காதல் செய்யாத படி பண்ணாதே –

ஆகத் தணைப்பார் அணைவரே –
கீழ்ச் சொன்ன படியே இந்த்ரிய ஜெயம் பண்ணிற்று இலர்களே யாகிலும்
சேஷத்வ ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு
அவனை ஹ்ருதயத்தில் வைத்து அனுசந்திக்குமவர்கள்

அன்றிக்கே
அப்படி இந்த்ரிய ஜெயத்தை பண்ணாதே
ஈஸ்வரன் ஒருவன் உளன் என்று மாத்ரம் உடையார்க்கு என்றதாகவுமாம்-

அத் தேசத்தைச் சென்று ப்ராபிக்கலாமோ  –
அவன் மேல் விழா நின்றால் இறாயாதார்-என்றுமாம் –

ஆயிர வாய் நாகத் தணையான் நகர் –
முக்த ப்ராப்ய வஸ்து இருக்கிறபடி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியேயாய் இருக்கிறது –
அங்கு உள்ளார் எல்லார் அடிமைக்கும் உப லஷணம்

நகர்
நலமந்தம் இல்லாதோர் நாடு -என்கிறபடியே
நாடு என்னாதே நகர் என்கிறார்
ஒரு தேச விசேஷம் பிராப்யம் என்னும் இடம் எல்லார்க்கும் ஒத்து இருக்கிறபடி –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –