முதல் திருவந்தாதி-பாசுரம் -30 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சம்சாரத்தில் சமாஸ்ரயணீயர் பலர் உண்டு என்று பிரமிக்க வேண்டா
சம்பந்த ஜ்ஞானம் உண்டாக நெஞ்சு தானே அவனை யாராய்ந்து பற்றும்
கண் அழிவற்ற பக்தியை யுடையாருக்கு அவன் தானே வந்து கிட்டும் அளவும்
க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் –

——————-

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து-30-

பதவுரை

உள்ளத்தை–மனத்தை
தெளிது ஆக–[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவை யுடைய தாம்படி
செம் நிறீஇ–செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தை மூட்டி]
ஞானம்–பகவத் விஷய பக்தியாலே
தெளிது ஆக–‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு–நன்றாக
உணர்வார்–அறிபவர்களுடைய
சிந்தை–மனமானது.
எளிது ஆக–வருத்தமில்லாமல்
தாய் நாடு கன்றே போல்–[பெரிய பசுக் கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக் கொண்டு கிட்டுகிற கன்றைப் போல,
தண் துழாயான் அடிக்கே–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த எம்பெருமானது திருவடிகளையே
புரிந்து–விரும்பி
போய் நாடிக் கொள்ளும்–தானே சென்று தேடிச் சேரும்.

———————————

வியாக்யானம் –

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ –
தெளிவை உடைத்தாம் படிக்கு ஈடாக
ஹ்ருதயத்தைச் செவ்வே நிறுத்துவது
விஷயாந்தரங்களால்  பிறக்கும் காலுஷ்யங்களைப் போக்கி
பிராப்த விஷயத்திலே ஹ்ருதயத்தைச் செவ்வே நிறுத்துவது –

செந்நிறீஇ –
இந்த்ரியங்களை தான் வெல்லப் பாராதே
எம்பெருமான் பக்கலிலே மூட்டி
இந்த்ரியங்களை ஜெயிக்கப் பார்க்கை –

அதாகிறது
விவேக
விமோக
அமாநித்வாதிகள்
ஆகிற இவற்றை உடைத்தாம் படி நெஞ்சை நியமிப்பது –

ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை-
இப்படி ஹிருதயம் செவ்வியதானால் பிறக்கும் பக்தியை யாய்த்து
இப்போது இங்கு ஜ்ஞானம் -என்கிறது

அந்த பக்தியினாலே
தெளிதாக -கூரிதாக -நன்கு உணருமவர்கள் உண்டு
ஸ்ரவண மனநாதிகளில் சொல்லுகிறபடியே
சாஷாத் காரத்தளவும் அனுசந்திக்குமவர்கள் சிந்தை உண்டு
அது அநந்தரம்-
ஒரு வருத்தமும் இன்றிக்கே
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்கிறபடியே அவனை பிரத்யஷிக்கப் பெரும் –

தெளிதாக —
அவன் ஸ்வாமி நாம் சேஷ பூதர் -என்று உணர –

எளிதாக-
விஷயங்களில் பழக்கம் போலே
தானே மூளும்படியாய் இருக்கை-

என் போலே என்னில் –
தாய் நாடு கன்றே போல் –
ஒரு திரள் பசு நின்றால்
அதிலே ஒரு கன்றை விட்டால்
கன்றானது திரளில் மற்றைப் பசுக்களைப் பாராதே
தன் தாய் முலையைச் சென்று பற்றுமா போலே
ஆபாச ஆஸ்ரயணீயரை விட்டு அவனையே பற்றும்

தண்  துழாயான்-
தாயாய் இருக்கிறபடி

அடிக்கே-
அல்லாத ஸ்தலங்களைக் கடந்து
தண் துழாயான் அடிக்கே எளிதாகப் போய் நாடிக் கொள்ளும்
பரம ப்ராப்யனான சர்வேஸ்வரன் உடைய திருவடிகளைச் சென்று கிட்டும்

போய் நாடிக் கொள்ளும் புரிந்து-
புரிந்து -விரும்பி என்னுதல்
நடுவில் மிறுக்குகளைப் பாராதே -என்னுதல்
தாய் நாடு கன்றே போலே -என்கிறது திருஷ்டாந்தம் –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading