பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-
———————————————————————————————————————————-
அவதாரத்துக்கு பிற்பாடனாய்
அந்தர்யாமித்வம் கண்களுக்கு புலப்படாதவாறு ஆயின பின்பு
உன்னை நான் எவ்விடத்தே காண்பது -என்கிறார் —
பிறந்த மாயா –
கர்மங்கட்கு கட்டுப் படாதவனாய் வைத்து –
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியை தனக்கு
வேறுபட்ட சாதியை உடையதாக்கி அவதரித்த
ஆச்சர்யத்தை யுடையவனே –
பாரதம் பொருத மாயா –
பிறந்தால் போலே இருப்பது ஒன்றாய் ஆயிற்று இவ் ஆச்சரியமும் -என்றது
சத்தியத்தை மேற் கொண்ட இறைவன் அசத்தியத்தை மேற்கொண்டவனான -ஆச்சர்யம் -என்றபடி –
அதாவது
ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுக்கையும் –
பகலை இரவு ஆக்குதலும் –
முதலாயின –
நீ யின்னே-
நீ இப்படி சுலபனாய் இருக்கச் செய்தே –
சிறந்த கால் தீ நீர் வான் மண் –
காரணமான மண் முதலான முதலான பூதங்கட்கும்
பிறவும் –
அவற்றின் கார்யமான தேவர் முதலான பொருள்களுக்கும் –
ஆய பெருமானே –
ஆத்துமாவான சர்வேஸ்வரனான
காற்றுக்கு சிறப்பாவது -காரணமாம் தன்மை ஒத்து இருக்க
தரிக்கும் தன்மையால் வந்த ஏற்றம் –
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி
நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –
ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ
அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –
கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏகவர்ணதா
ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதேச வசதி விஜ்ஞ்ஞானம்
சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தெ நபூ தேன
சர்வ பூதாதிவாசம் யத் பூதேஷு ச வசத்யபி
சர்வா நுஹ்ரஹ கத்வேனதத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்
எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ
எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது
அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –
காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் அல்லது
காண அரியை -என்றவாறு –
உன்னை எங்கே காண்கேனே –
பரம பதத்தில் காட்சிக்கு சரீர சம்பந்தம் அற வேண்டும்
அவதாரத்துக்கு பிற்பாடன் ஆனேன்
அர்ச்சாவதாரம் நான் நினைத்த படி கிடையாது
அந்தர்யாமித்வம் கண்களுக்கு விஷயம் அன்று
இனி இவ் இழவோடே நான் முடிந்து போம் இத்தனையே அன்றோ –
அவதாரத்துக்கு பிற்பாடனாய்
அந்தர்யாமி -கண்ணுக்கு அவிஷயம்
எங்கனே காண்பான் என்கிறார்
பிறந்த மாயா -இதர சஜாதீயனமாக
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -மாமிச சஷுசால் பார்க்க முடியாதே
பரம கிருபையால் -இதர சஜாதீயமாக ஆக்கி
தங்கம் எல்லாம் வெள்ளியில் மறைத்து வைத்த கதை –
தூக்கி பார்க்க
உள்ளே தங்கள் வெள்ளி மேல்பூச்சு –
குறைவாக காட்ட -ஏமாற்ற
சௌலப்யத்தால் அவன் பண்ணி வைத்தான்
பாரதம் பொறுத்த மாயா -பிறந்த ஆச்சர்யம் போலே
அசத்திய பிரதிஞ்ஞன் ஆனானே
த்ரௌபதி -சத்யம் வாக்கு பொய்யாகாது சொல்லி
அந்தர் ஆத்மாவான சர்வேஸ்வரன் -தேவாதி பதார்ந்தன்கள்
சிறந்த கால் -தரிப்பு கொடுப்பதால்
கறந்த பாலுள் நெய்யே போலே -காண அரிது போலே
இவற்றுக்குள் எங்கும் கண்டு கொள்ளும் படி மறைந்து –
காண ஒண்ணாத படி இருக்கும் ஆச்சர்ய பூதன்
கவாம் -அநேக வர்னான் -பசுக்கள் பல வர்ணம்
பால் வெண்மை தானே –
சர்வ பூதாதி வாஸ மயதி-
பாலை காய்ச்சி தோச்சி வெண்ணெய் எடுத்து உருக்கி நெய் கிடைப்பது போலே
காலத்தாலும் கடைந்தும்
கறந்த பாலில் தோற்றாதே
அவன் இடம் ந்யச்த பரனாக இருந்தால் தான் காணலாம்
பரமபதம் வாசம் செய்பவனை சரீரம் விட்டே காண முடியம்
அவதாரம் காலத்தாலும் தூரம்
அர்ச்சை நினைத்த படி அணைக்க மாட்டான்
அந்தர்யாமி கண்ணுக்கு அவிஷயம்
இழவுடன் தலைக் கட்டுகிறார்-
———————————————————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.