திருமால் இரும் சோலை அழகர் அழகிலே -மாலிரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -என்று
ஒரு கால் சொன்னாப் போலே ஒன்பதின் கால் சொல்லி
நெஞ்சு பறியுண்டு -தாமான தன்மை இழந்து -தாய் பாசுரமாக —
என் பெண்பிள்ளை ஸூந்தரத் தோளுடையான் திருத் தோள்களை அணைந்தால் அல்லது தரிக்க மாட்டாள் –
அவனை அணைந்து ஆனந்திக்கும் பாக்கியம் பெறுவாளோ-அன்றி இங்கனே நோவு பட்டே இருப்பாளோ -என்று
ஒன்பது பாட்டாலே சங்கை பண்ணி
நிகமத்தில் -அவனைக் காணப் பெறுவாள் என்று அறுதிட்டு தரிக்கிற படியை
வெளியிடுவதாகச் செல்லுகிறது இத் திருமொழி-
—————————–
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-
ரஷணமே தொழிலாக கொண்ட எம்பெருமான் -நித்ய ஸூரிகள் நாதனாய் இருக்கும் இருப்பை விட்டு
இங்கே ஸ்ரீ கிருஷ்ணாவதார சௌலப்ய காஷ்டையை வெளியிட்டுக் கொண்டு அருளி நிற்கிறான் –
அவனுடன் கூடப் பாரிக்கின்றாள் என்மகள் -நிறைவேறுமோ -அன்று ஆசைப்பட்டு இருக்கும் அத்தனையோ –
ஆழ்வார் அழகர் உடன் கூடும் கிட்டுமோ கிட்டாதோ என்று கவலைப் படுவதே இத் திரு மொழியின் தாத்பர்யம்
இந்த்ரனைக் கூட்டி மூவருள் முதல்வன்
பூ அலருந்தி -பாட பேதம்-
—————————
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே -9-9-2-
புனை வளர் -புன்னை மரங்கள் வளரப் பெற்ற
திரு வரங்கம் பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருள்பவனும்
மூவுலகுக்கும் ஆதிகாரண பூதனனுமான சர்வேஸ்வரன் இங்கே வந்து நிற்கும் நிலையிலே காணப் பெறுவாளோ
பொன்னி -பொன்களைக் கொழிக்கையாலே காவேரிக்கு பெயர்
முனைவன் -முன்னையவன் -புராதனன் –
சினை -கருப்பம் -அரும்பு -மரக் கொம்பு
—————————-
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-
பிரளயத்தில் ரஷித்து ஆலிலை கண் வளைந்து அருளிய தேவாதி தேவன்
சம்சார பிரளயத்தை இருந்து நம்மை ரஷிக்க இங்கே நின்று அருளும் நிலையிலே
அனுபவிக்க ஆவல் கொண்டு இயற்க்கை அழகுடன் செயற்கையாக ஆபரணங்கள் அணிந்துள்ள
என் மகள் அணுகப் பெறுவாளோ
கரு மாணிக்கம் மா மலையை -இல் பொருள் உவமை -அபூத உவமை
அண்டர் -இடையர் தேவர்
ஆயிழை -ஆய்தல் -ஆராய்தல் –
———————
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –9-9-4-
தூணிலே தோன்றி ஆஸ்ரித விரோதியைத் தொலைக்கப் பெற்றோம் என்று உகந்து -அந்த உகப்பு தோன்ற புண்டரீகாஷனாக –
அத்தைக் கொண்டே சர்வ ஸ்மாத் பரன் என்று நிச்சயிக்கும் படியும் பரஞ்சோதி ஸ்வரூபி யானவனும்
ஓங்கிய திரு மால் இரும் சோலை மலையிலே நமக்கு எளியனாய் நிற்பவனை என்று கிட்டப் பெறுவாளோ-
——————————————–
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-
ஆசூர பிரக்ருதிகளின் நடுவே ஸ்ரீ வாமன வேஷத்தைப் பூண்டு எழுந்து அருளி ஓங்கி உலகு அளந்து அருளினவன்
தேன் மிக்க பூம் பொழில் களாலே சூழப் பட்ட திரு மால் இரும் சோலையில் எழுந்து அருளி நிற்கும் எம்பெருமானை –
தேவாதி தேவனை -என்று கிட்டி வணங்கப் பெறுவாளோ-
எழுவாய் வருவித்துக் கொள்ள வேண்டும் இப்பாசுரத்தில்-
—————————————————
நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –9-9-6-
பரபக்தி இல்லாதவர்க்கும் -நாஸ்திக வாதம் சொல்லக் கூட நெஞ்சால் நினையாதவர்க்கும் -கிட்டக் கூடாதவன் –
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன்
திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -நம்மாழ்வார் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே
தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
அவனது ஸ்வா தந்த்ர்யம் வெளிப்பட்டதாயிற்று
மடிமாங்காய் இட்டு கைக் கொள்வான்
இத் திருக் குணத்தை ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து வெளியிட்டு அருளி –
அத்தை ஏட்டுப் புறத்தில் கேட்டுப் போக வேண்டாதபடி இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருள்பவனை
பரகால நாயகி காணப் பெறுவாளோ-
——————————————
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ–9-9-7-
ஸ்ரீ கிருஷ்ணனாய் விரோதி நிரசனம் பண்ணி அருளினவன் நமது பிரதி பந்தங்களைப் போக்கி அருள
நித்ய சந்நிதி பண்ணி அருளும் பரம உதாரரான பெருமாளை இவள்
வணங்கித் தொழும் படியான பாக்கியம் பெறுவாளோ-
————————————
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8-
ஸ்ரீ பார்த்த சாரதியாய் உடம்புகுக் கவசம் இடாதே வெறும் கையோடு நின்று அவனை நோக்கினவனும்
விண்ணாட்டிலே நித்ய சூரிகளுக்கு பரம போக்யனானவனும்
அந்த அழகை இங்கு உள்ளாறும் அனுபவிக்க இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளி
பெருமானை என் மகள் கை தொழப் பெறுவாளோ-
————————-
வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-
ஆஸ்ரித ரஷணத்துக்கு விளம்பம் இல்லாத படி திவ்ய ஆயுதங்கள் தரித்து –
அவை இன்றிக்கே ரஷிக்க வல்ல தோள் வலிமை படைத்த சுந்தர தோளுடையான் –
ரஷித்து அருளாவிடினும் விட ஒண்ணாத யஞ்ஞோபாவீதம் அணிந்த அழகன் –
ரஷ்ய வர்க்கம் தேடி வந்து திரு வேங்கடமலையிலே நின்று அருளுபவன்
அது தான் பரத்வம் என்று தோன்றும்படி எளிதாக மிக நீசனார்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு
இங்கே எழுந்து அருளி இருக்கும்
நீர்மையில் ஏற்றத்தை யுடைய ஸ்ரீ மன் நாராயணனை என் மகள் நண்ணப் பெருவளோ –
சிலம்பியலாறு -நூபுர கங்கை
சிலம்பு –கால் அணி -குன்றுக்கும் பெயர் -த்ருஷதபி பரசக்த காநா ஸூ -ஸூந்தர பாஹுஸ்த்வம் –
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவின
ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டு குன்றும் உருகி ஆராயிற்று -சமத்காரமாகவும் பொருள் உரைப்பர்
-சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய திருமலையிலே வந்து நிற்கிற-
————————–
தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே -9-9-10-
ஸ்வ பிரயத்தனத்தால் காண அரியன்
சர்வ ஸூ லபன் -பெரிய திருவடி மேல் ஏறி கருடாரூடனாக தானே காட்டக் காணும் அத்தனை -காட்டவே கண்ட ஆழ்வார் –
காணப் பெறுவாள் என்று நிச்சயித்து பேசின இத் திரு மொழியை பயில்வார்கள் பாவம் தொலையப் பெறுவார்கள்
இவள் ஆற்றாமை இருந்த படியால் அவனோடு அணைந்து அல்லது தரிக்க மாட்டாள் போலே போலே இருந்தது –
அணைத்து விட வல்லளே
அன்றிக்கே இங்கனே நோவு படும் இத்தனையோ -என்று பின்னையும் தானே அவனைக் கிட்டியே விடும் என்று
அறுதி இட்டு தரிக்கிறாளாய் இருக்கிறது –
அணியாயிழை காணும் என்று -நிச்சய பரம் -காணும் கொலோ என்று நிகமத்தில் இல்லையே –
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –
பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடே யாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு –
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை –
——————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .