திருக்கண்ணங்குடி திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –
நாம் உகந்த நிலங்கள் எங்கும் புக்கு கவி பாடும் -என்று தான் திருக் கண்ணங்குடியில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க கண்டு
வெள்ள நீர் வெள்ளத் தணைந்த வரவணை மேல் -என்கிறபடியே நம்முடைய ரஷணத்திலே உத்யுக்தராய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவன் தானே
இங்கே திருக் கண்ணங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அங்கே கவி பாடி அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் –
——————————————–
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-1-
வ்யூஹ மூர்த்தியான ஷீராப்தி நாதனே இங்கே நித்ய சந்நிதி பண்ணி அர்ச்சா ரூபியாய் சேவை சாதித்து அருளுகிறான் –
மேவி -வினை எச்சம் அன்றி -மேவியவன் என்னும் பொருளதான பெயர்ச் சொல் –
அருங்கலை -வேத உப ப்ரும்ஹணமாக உள்ள ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக யுடைய மகான்கள் வாழும் திவ்ய தேசம்
துளக்கம் -கலக்கம்
எம்பெருமான் யுடைய நிர்ஹேதுக கிருபையே நமக்கு உஜ்ஜீவன உபாயம் என்னும் அத்யாவசாயத்தில் குலைதல் யற்றவர்கள் -என்றபடி –
———————————————-
கவளமாக தத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-2-
காரம் -முதலையினாலே
வேத தாத்பர்யமான கைங்கர்யங்களுக்கு பிரதி பந்தகங்களை போக்கி அருளுபவனும் அவனே
கவளம் -யானை உணவுக்கு பெயர் -மாகதத்த -சாதிக்கு உரிய விசேஷணம்-கதம் -கோபம்
நீர்ப் பூ வளமும் நகர் வளமும் பின்னடிகள் காட்டும்-
——————————–
வாதை வந்து அடர வானமும்நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-3-
மத்ஸ்ய ரூபியான பெருமான் ஒற்றைக் கொம்பிலே வஹித்த ரஷித்து அருளியதால் -மீது கொண்டு உகளும் மீனுருவாகி –
விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்-கடல் நீரை முழுவதும் ஒரு செலுவினுள் அடக்கி கடலை வெறும் தரையாக்கி
அதிலே சில காலம் விளையாடுவதும் -மறுபடியும் செலுவில் நின்று கடல் நீரை வெளிப்படுத்தி
கடலிலே சில காலம் விளையாடுவதுமாய் நிகழ்ந்த லீலை –
முடங்கு தெண்டிரைய பௌவம் முற்றுமோர் செலுவுட்சென்று
மடங்கிய துணரகில்லார் மயர்ந்தனர் நேடியன்னோர்
ஒடுங்கினர் ஏத்தி நின்றார் உயர் ஒப்பிலாத மேலோன்
தடங்கொள் சேலுருவின் மாண்பு யாவரே சாற்று நீரார் -ஸ்ரீ பாகவதம் –
புன்னை மல்லிகை முல்லை முதலியவற்றின் மலர்களிலே படிந்து நறு மணத்தை முகந்து கொண்டு
வருகிற குளிர்ந்த தென்றல் காற்று எங்கும் வீசப் பெறுமிடமாம் இது –
————————————————–
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி யொளிவளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே -9-1-4-
தறு கண் -வட்டணித்த கண்களையும் யுடையதுமான
மகா வராஹமாய் பூமிப் பிராட்டி துயர் தீர்த்தவனும்
பார்த்த சாரதியாய் த்ரௌபதி துயர் தீர்த்தவனும் இவனே
பசலை -தொடு உழி தொடு உழி -விடு உழி விடு உழி -பரத்தலான் -வியாபிக்கிற படியால் -பசலை நிற வேறுபாடு
பாசி தூரத்துக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியார்
தேசுடைய தேவர் -என்கிறபடியே
பூமியை கோட்டால் குத்தி மீட்டுக் கொணர்ந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணி –
என்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -நல் நிறத்தை கொடுத்து அருளினவன்
பஞ்சவர் -தொகைக் குறிப்பு அர்ஜுனனே இங்கே விவஷிதம்
ஓன்று அலா உருவத்து -உலப்பில் பல் காலத்து -சாஸ்வதமான நல் மாடத்துக்கு -திரு மாளிகைகளுக்கு இட்ட அடை மொழிகள்-
—————————————————–
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப்பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே -9-1-5-
ஓங்கி உலகு அளந்த உத்தமனே இங்கு சந்நிஹிதனான்
ஓர் அரசன் ராஜ சிஹ்னம் ஆகிய வெண் சாமரம் வீசக் கொற்றக் குடை நிழலிலே சிங்கா சனத்தின் மேலே வீற்று இருப்பது போலே இங்கே
அன்னப்பறவைகள் செந்நெற் கதிர்கள் ஆகிற சாமரை வீச இலைக் குடையின் கீழ்ச் செந்தாமரை மலர்களில் ஏறி வீற்று இருக்குமாம்-
———————————————————-
மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-6-
ஸ்ரீ பரசுராமனாக திருவவதரித்து விரோதி நிரசனம் பண்ணி அருளினவனும் இவனே-
————————————————————-
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை யார் கோனைப்
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-7-
பானு நேர் சரத்தால் -சூர்யனோடே ஒத்த தீஷணமான அம்புகளாலே
பனங்கனி போலே உவமை -முடி யுதிர்த்த எளிமையைக் காட்டும்
மயில்கள் நாட்டியம் ஆட
மேகங்கள் வாத்யம் முழங்க
வண்டுகள் களித்து இன்னிசை பாடவுமாய் இருக்கை-
———————————————————-
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட வதற்குப்
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரை கொணர்ந்துந்தி வயல்தொரும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-8-
துரியோதனன் -அரவு நீள் கொடியோன்
சர்வஞனுக்கு பொய்யாசனம் அஞ்சாமல் இட்ட சாஹாச செயல் -அஞ்சி இடாதே இட –
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்-திருப்பாடகம்
பாடு -பெருமை -அகம் -பெருமை தோன்ற வீற்று இருந்து அருளும் திவ்ய தேசம்
சஹ்ய பர்வதத்தில் இருந்து -ரத்னங்கள் -மரகத திரள்கள் -வயிரம் -மூங்கில் உதிர்த்த முத்துக்கள் ஆகிய
இவற்றைத் திரைகள் ஆனவை தம்மில் அடங்காமையாலே கொண்டு வந்து தள்ளி வயல்களிலே குவிக்கும்
வெதிர் -மூங்கில் –
—————————————————–
பன்னியபாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே-9-1-9-
பன்னிய பாரம் -விஞ்சின பாரமானது
பூமி -சர்வம் சஹா வடமொழியில் பெயர் உண்டே -துர்யோனாதிகளால் வந்த பாரம் பூக்கி அருளினவன்
மைத்துனற்கு தேர் உய்த்த -மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து -பெரியாழ்வார்
பெண் கொடுத்துக் கொள்ளுவதற்கு உரிய முறைமை யுடையார் மைத்துனன் எனபது தமிழ் மரபு-
—————————————–
கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடி யுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10-
ஸ்ரீ சீதா பிராட்டி யுடைய விச்லேஷம் பொறாமல் இராவணாதிகளை நிரசித்து அருளியவனே
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை கிழங்கு எடுத்து அருள இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
அவன் விஷயமான இத் திருமொழியை கற்று ஓத வல்லார்கள் நித்ய ஸ்ரீ மான்களாகப் பெறுவார்கள்
காரிகை -அழகு -அஃது உடையவளுக்கு ஆகு பெயர் -ஸ்ரீ சீதா பிராட்டி என்றவாறு
கடல் பெரும் படையொடும் சென்று -கடலில் காட்டிலும் பெரிய சேனை -பெரும் படையோடு கடலிலே சென்று -என்றுமாம்
நல்குரவு -தரித்ரனாய் இருத்தல் -எம்பெருமானை இழந்து இருத்தலே தாரித்ர்யம் –
பகவத் கைங்கர்ய லஷ்மி இடையறாமல் இருக்கும் –
லௌகிகருடைய ஆசைக்கு ஏற்ப பொருள் உரைக்கவுமாம் –
————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply