பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-5-தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்-

திருக் குறுங்குடி திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம்
இதிலும் நாயகி  அவஸ்தை தொடருகிறது
திருப் புல்லாணியில் இருந்து நெஞ்சை மீட்டு திருக்குறுங்குடியில் செலுத்தினாள் –
நெஞ்சு சென்றதே அன்றி உடல் அங்குச் செல்ல வில்லை -ஆற்றாமை மிகுதியால்
பாதக  பதார்த்தங்களும் கண் உறங்காதே துடிக்கும் படி யாயிற்று
தோழி மார்களை தன்னை அங்கே கொண்டு போய் சேர்த்து விட வேண்டிக் கொள்கிறாள் –

———————————————

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –9-5-1-

உய்த்திடுமின் -முன்னிலை ஏவல் பன்மை வினை முற்றுக்கு ஏற்ப –
அன்னைமீர் -தோழி மீர் -வருவித்துக் கொள்க
நாலு  வாசலையும் பற்றிக் குறும்பு செய்வாரைப் போலே நான்கு பதார்த்தங்களும் சேர்ந்து –
பால சந்தரன் -கடல் -தென்றல் -அன்றில் பறவைகள் –
காலமும் பனிக்காலம்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறைக் கோலி தழுவு நள்ளிருள்
அணைத்த நாயகன் யுடைய கைக்குள்ளே அடங்கும் இக் காலத்திலே அவனைப் பிரிந்து
பதாக வஸ்துக்களின் கையிலே அகப்பட்டு கண் உறங்காதே துடிக்கின்றேன்
தம்மைப் பிரிந்த சீதைப் பிராட்டி போலே எண்ணி இருந்தாரோ
தவளம் -பால் போலே வெளுத்து இருக்கை
என் நலம் ஐந்தும் கொண்டு போனே-பஞ்ச இந்த்ரியங்களையும் பகவத் விஷயத்தில் ஈடு படுத்தி
அன்றிக்கே
திரு நெடும் தாண்டகம் -25- என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு -இவை ஐந்தும் என்று அமுதனார் நிர்வஹிப்பராம்
கொள்ளை கொள்பவன் மயக்கி அன்றோ கொள்ளை கொள்வான் இவனும் வடிவு அழகைக் காட்டி மயக்கினான் –
குவளை மலர் நிற வண்ணர்
நாயகன் உள்ள இடத்தில் இவை பாதகம் ஆகாதே-குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —என்கிறாள்-
வைஷ்ணவ வாமன ஷேத்ரம் -நம்மாழ்வார் திருவவதாரத்துக்கு காரணமாய் இருந்த நம்பி
வைஷ்ணவ நம்பி -ஸ்ரீ பாஷ்ய காரர் பக்கல் திரு மண் காப்பு சாத்திக் கொண்டு வேதார்த்தம் கேட்ட சிஷ்யனாய் –
நாமும் நம் இராமானுசனை யுடையோம் -என்கையாலே –

————————————————-

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண   ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-

ஊதை -குளிர்  காற்று
உழறி உண்ண -துகைத்து முடிக்க
சோதை -கூந்தலிலே
குளிர் காற்று மல்லிகை மானம் முகந்து வந்து வீசி நலிகின்றது
இன்னே -வாய் விட்டு சொல்ல முடியாமல் நலிவதால் இன்னே என்னும் அத்தனை
நம்முடைய பிராவண்யத்தை குற்றமாகக் கொள்ளாமல் நாற்றமாக கொள்பவன் அங்கே 
நித்ய வாஸம் செய்கின்றான் -அங்கு கொண்டு போய் விடுமின்
உறங்கும் பேதையர் -பகவத் விஷயத்தில் காதல் கொண்டார் உறங்க வகை இல்லையே
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்  உண்டோ கண்கள் துஞ்சுதலே -காணும் முன்பும் உறக்கம் இல்லை
சதா பஸ்யந்தி -கண்ட பின்பும் உறக்கம் இல்லை
வாடையையும் நிலாவையும் தேடி வெளியிலே படுப்பார்கள் இந்த அறிவு கேடர்கள்
அவர்கள் பழி சொல்லிலும் சொல்லட்டும் -பெய் வளையர் இவர்கள் -விரஹ வேதனை அறியாத அறிவு கேடர்கள்
நம்மை பழிக்கும் இந்த பேதையர்கள் போல்  இல்லாமல்  நம் குற்றங்களையே குணமாக உப பாதித்து
புருஷகாரம் செய்து அருளி சேர்ப்பிக்கும்
பெரிய பிராட்டியார் உள்ள இடத்தே கொண்டு போய் சேருமின் —
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்-

——————————————-

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

காலை மாலை இரண்டும் வாசி அற்று நலிகின்றன -இவளோ உறங்கவே இல்லையே
காலைக்கு செய்த நன்றி என் கொல் எவன் கொல் யான் மாலைக்கு செய்த பகை -திருக்குறள்
காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்  -காதல் நோய்
பல பல ஊழி கள்  ஆயிடும் அன்றியோ நாழிகையை பல் பல கூறிட்ட கூறாயிடும்–
அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்   -திரு விருத்தம்
நம்மை மாய்ப்பதற்கு பல பல மாயங்கள் செய்து உள்ளான் –
இராப் பொழுது -வாடை-அன்றில் -தென்றல் -கடலோசை -குழலோசை -திங்கள் இளம்  பிள்ளை போல்வன
இவை எல்லாம் அனுகூலமாம் படியான இடத்தே என்னை கொண்டு சேர்மின்-

———————

கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து  காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி  வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்–9-5-4-

சேக்களும் நாகுகளும் கூட்டமாய் கலந்து வரும் பொழுது
சேக்கள் நாகுகளோடே அணைந்து மேல் விழ -நாகுகள் இறாய்க்க –
அது கண்டு நாயகி நாயகன் உடன் சம்ஸ்லேஷித்த காலம் நினைந்து வருந்த -கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து –
அணார்-அணர்-இரண்டும் ஒக்கும் -கழுத்திலே
இடவணரை யிடத்  தோளோடு  -பெரியாழ்வார் -3-6-2-
இருந்தார் நடுவே சென்றணார் சொறிய -பெரியாழ்வார் -3-5-8-
பேசி -பேச பாட பேதங்கள்-பேர் அருளாளன் பெருமை பேசி ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்று கீழோடு அன்வயிக்க்கவுமாம்
பேர் அருளாளன் பெருமை பேசிக் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்  -என்று மேலோடு அன்வயிக்க்கவுமாம் –

——————————————-

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-5-

கொண்டல் மணி நிற வண்ணனைக் கண்டவாறே என் வாட்டம் எல்லாம் தீரும்
மாட்டின் மணி ஓசை -தென்றல் காற்று -மாலைப் பொழுது -இளம் பிறை -தனித் தனியே
என்னை முடிக்க வல்ல இவை சேர்ந்து நலிகின்றன
கொண்டதோர் மாலைப் பொழுது -இவளை முடித்தே தீருவேன் என்ற வ்ரதம் கொண்ட-

———————————————–

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

இவர்கள்  பழிக்கிலும் பழிக்கட்டும் -நம்முடன் சேர்த்தி இல்லாத ஏந்திழையார் -இவர்கள்
அவனுடைய மா மணி வண்ண நிறம் மறக்கப் பண்ணுமோ
இவர்கள் ஏச்சு எருவிட்டதாகும்
இள முல்லை புல்கு – கொடிகள் தரைக் கிடக்க வேண்டாத படி கொம்பிலே படரும் -அப்படியே எனக்கும் தரிப்பு கிடைக்கும் அங்கு
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம்-

———————————-

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-

திருக் கண்கள் அழகும் பரப்பையும் என் சொல்வேன் -வாத்சல்யம் எல்லாம் கண்ணிலே தோற்றும் –
கண்களுக்குத் தப்பினாலும் குளிர்ச்சிக்கு தப்ப ஒண்ணாதே
தேவர் -மேன்மை பேச்சுக்கு நிலம் அன்று
ஒருவர் -அவர் ஒருவரே என்று வாய் வெருவும்படி அத்விதீயமானவர் –
எளிமையைக் கட்டி இங்கே வந்து கலந்து  சொன்ன வார்த்தை அனுவாதமும் செய்ய முடிய வில்லையே
ஆது கொலோ என்று -அது -ஆது என்று நீட்டி -என்று சொல்லும் அத்தனை
தாய் என்றும் பாராமல் -அவன் அது சொல்லி பிரிந்து போனது முதலாக மன்மதன் காட்டும்
பராக்ரமங்களை நெஞ்சால் நினைக்கவும் முடிய வில்லை
ஐங்கணை வில்லி மதனன் பஞ்ச பாணமாவன முல்லை யசோகு முழு நீலம் சூதப் பூ அல்லி முளரியோடு ஐந்து என மொழிப -நிகண்டு –
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்   –
அவன் கையிலே அம்பு தானே தாரகமான தேசத்திலே
கொடு போய் பொகடப் பாருங்கோள் –
அவனோடு கூடின வாறே பூக்கொய்கையும் ஜல க்ரீடை பண்ணுவததுமாய் -தாரகமாம் இறே-
விஹரதி ஹரௌ லஷ்ம்யா லீலாதபத்ர பரிஷ்க்ரியா விநிமய விதா ஸூ நா ஸூ நிக்ரியா சபலோத்பலம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
பனை -பண்ணை -நீர் நிலை -என்றவாறு

—————————————–

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும்  ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-8-

கேவலம்  அன்று கடலோசை -பெருமாளை அண்டை கொண்ட சுக்ரீவன் பலம் போலே இவையும் –
கேண்மின்கள் -உங்களுக்கும் பாதகமாய் இருக்குமே
அதற்கு மேலே இடையன் ஊதும் குழல் ஓசையும்
ஏ வலம் -எய்வதில் வல்லமை
இவன் ஒருவன் -பெண்களை நலியும்  ஆள் எண்ணத் தொடங்கினால் அத்விதீயன் இவன்
இப்படியே புகுந்து எய்திடா முன் –
இதுக்கு இட்டுச் சொல்லலாவது ஒரு பாசுரம் இல்லை –
புண்ணறைகளைக்   காட்டும் இத்தனை  –
ஒரு மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ -திரு ஆலி பதிகத்திலும் -காமனுடைய ஹிம்சை
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து -முரட்டு ஆண்களையும் வசப்படுத்தக் கூடிய கூத்து
அவன் திரு உள்ளக் கருத்தை அறிந்து -வேண்டும் என்று இருந்தான் ஆகில் கூட்டிச் செல்மின் –
இல்லை யாகில் இங்கேயே என்னை முடித்து விடுமின்-

———————–

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற்   படம் தந்து போனான் போயின ஊர் அறியேன்     என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே   என்னை யுய்த்திடுமின் —————————-9-5-9-

பொன்படம் -பீதாம்பரம் -பசலை நிறம் தந்து போனான் -கொடுத்து விட்டு தான் அகன்று போனான்
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்-திரு விடந்தை பதிகம் –
இன்று தாறும் -இன்று வரைக்கும்
இங்கேயே அவனை பிரிந்து விழுந்து கிடந்தால் முலைகள் படுத்துகிற பாடு பார்த்தீர்களே
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்து என் அழலைத் தீர்வேனே  -நாச்சியார்
உண்மையாக பெண்ணாகப் பிறந்தவள்  என்பதால் முலை படைத்து படுகிற வருத்தம் எல்லாம் தோற்ற அப்படி அருளிச் செய்கிறாள்
இவர் பாவனா பிரகர்ஷத்தால் பெண்மையை ஏறிட்டுக் கொண்டவர் ஆகையால்
அவ்வளவு ரோஷம் கொண்டு சொல்ல மாட்டாமல் இங்கனம் அருளிச் செய்கிறார் –

——————————-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி   நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

திருக் குறுங்குடி சேருவதே பயன்
இலங்கை பாழாளாகப் படை பொருதவன் -பெரிய பிராட்டியாரை இடைவிடாமல் அனுபவிக்கச் செய்தேயும்
என் பக்கல் விருப்பம் செய்து என்னுடன் சேர்ந்து கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இலக்காக்கி அருளி
ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல் இங்கே நித்ய வாசம் செய்து அருளும் திருக் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காமரு சீர் கலியன் -என்னை -என்று சொல்வதால் -பரகால நாயகி – வேறே வ்யக்தி போலே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading