திரு நாகை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மங்களா சாசன திருப்பதிகம் –
அவனது வடிவு அழகு வாசோ மகோசரம்-
வராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவராக வவதாரம் செய்வான் –
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர் –
தருனௌ ரூப சம்பனௌ-என்னப் பண்ணும் வயிர உருக்கான அழகன் அன்றோ
அவதாரத் திரு மேனிகளிலே திரு நாகை எம்பெருமானுடைய வடிவு அழகு பேச்சுக்கு நிலம் அன்றே –
அவ் வழகிலே நெஞ்சைப் பறி கொடுத்த ஆழ்வார் ஆண்மை இழந்து பெண்மை எய்தி
பரகால நாயகியாக தோழிமார்கள் உடன் சொல்லும் பதிகம்
ஒன்பது பாசுரங்களிலும் திவ்ய தேச திரு நாம இலச்சினை இல்லை -நிகமனப் பாசுரத்திலே -திரு நாகை அழகியாரை –
அச்சோ ஒருவர் அழகிய வா -என்றே பாசுரம் தோறும் உள்ளது –
ஆழ்வார் தம்மை மறந்தது போலே திவ்ய தேச திரு நாமத்தையும் மறந்தார்
இவர் மறந்தார் அல்லர் -எதிர் தலையின் வடிவு அழகு மறக்கப் பண்ணிற்று-
ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் –
முகத்தை நேரே பார்த்து முன்னிலை யாக்கி வார்த்தை சொல்ல முடியாத படி சோதி வெள்ளம் அலை எறிந்து தள்ளுகின்றது –
அதனால் அப் பெருமானுடைய
ஒப்புயர் வற்ற வடிவு அழகையும்
திவ்ய பூஷண
திவ்ய ஆயுத பொருத்தங்களையும்
ஸ்ருங்கார விலாசங்களையும்
மற்றும் கண்ட அதிசயங்களையும்
தோழி யோடே சொல்லி வியக்கின்றாள் —
ஒரு பிராட்டி பாசுரத்தாலே தாம் மநோ ரதித்த கைங்கர்யம் பெறாதே இருந்து நோவு படுகிற படியைச் சொல்லுகிறாளாய் இருக்கிறது
————————————–
பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-1-
வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிறாள் –
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் திருக் குணங்கள் எல்லாம் கிடக்க முந்துற முன்னம் திவ்ய மங்கள விக்ரஹத்திலே
தன் நெஞ்சு பறி யுண்டமை தோற்ற -பொன்னிவர் மேனி -என்கிறாள்
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -திருவாய்-3-1-2-
நீலமேகத் திரு உருவை பொன்னிறமாகச் சொல்லுவான் என் என்னில் –
ஹிரண்ய வர்ணாம் -பிராட்டியுடைய நித்ய சம்ச்லேஷத்தால் கரிய கோலத் திரு மேனியும் பொன் நிறமாயிற்று –
பொன் போலே விரும்பத் தக்க திருமேனி என்பர்
நாகை அழகியார் சமுதாய சோபை பற்றி பொன்னிவர் மேனி என்கிறாள்
மரகதப் பச்சையின் சோதி போன்ற சோதி யுடைய திரு மார்பில் அணிந்த ஹாரம் மின்னல் போன்று இரா நின்றது என்கை
எம்பெருமானுடைய காள மேகத் திரு உருவத்துக்கு மரகத பச்சை உவமை பொருத்தமே –
காணப் புக்கவர்கள் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து சம்சார தாபங்களை எல்லாம் போக்குவிக்குமே
இவர் மேனி பொன் –
மரகதத்தின் பொங்கிளம் சோதி அகலத்து ஆரம்மின்
என்று இரண்டு வாக்யமாக கொள்ளாமல்
பிள்ளை அமுதனார் மூன்று வாக்யமாக
இவர் பொன்
மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி
அகலத்து ஆரம் மின் –
என்றாம்
இங்கு இவர் பொன் -என்றது எண்ணும் பொன்னுருவாய் -திரு நெடும் தாண்டகம் 1–என்னுமா போலே
ஸ்வரூப பரமாய் சொன்னவாராம்-
இவர் வாயில் நால்வேதம் ஓதும் வேதியர் -அன்னே இவரை யறிவன் மறை நான்கும்
முன்னே யுரைத்த முனிவர் -பெரிய திருமொழி -11-3-3-
பரம வைதிகர் -விஷயாந்தரங்களில் நசை அற்றவர் -நல்வேதம் -சாம வேதம் என்றுமாம் –
வானவராவர் தோழீ-
ராஷர்ஷி தேவ ப்ரதிமௌ–என்றும் வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் -என்னுமா போலே
வடிவு அழகைப் பார்த்தவாறே ராஜக்களோடே ஒக்கச் சொல்லலாய் இரா நின்றார் –
சாமாசரத்தை பார்த்தவாறே பிராமணரோடு ஒக்கச் சொல்லலாய் இரா நின்றார் –
மேன்மையைப் பார்த்தவாறே தேவர்களோடு ஒக்கச் சொல்லலாய் இரா நின்றார் –
விஷயம் குறைவற்று இருந்தது –
நீ அப்போது நிற்கப் பெறாதது காண் குறை –
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்-
மர்மங்களிலே கடாஷியா நின்றார் -பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –
நம்மை பாங்காக அனுபவிப்பதற்கு உறுப்பான பக்தி இவ் வாழ்வாருக்கு முதிர்ந்ததோ
போகத்துக்கு கொங்கை -இன்றியமையாதது போலே -பகவத் அனுபவத்துக்கு பர பக்தி பர ஞான பரம பக்திகள்
நான் பதறி மேல் விழுந்தேன் -இதனைத் தாய் நோக்கினாள் ஆகில் என்னாகுமோ என்று அஞ்சி ஒழிந்தேன் –
உபாய அத்யாவசியம் ஆகிய பிரஜஞா அவஸ்தை தாய் –
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் -என்றது உபாயத்யவாசத்திலே ஊற்றத்தாலே பதறுதல் தவிர்ந்தேன் -என்றவாறு-
அச்சோ ஒருவர் அழகிய வா -கீழ் சொன்ன சௌந்தர்யம் -வைதிகத்வம் -பரத்வம் மூன்றதனுள்
சௌந்தர்யமே தம் நெஞ்சை கொள்ளை கொண்டது-
—————————————
தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழி யுஞ்சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா –9-2-2-
திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளும் யுவா இவர்
திரு ஆழி திருச் சங்குகளை திருக்கையிலே ஏந்தி திவ்ய ஆபரணங்கள் பூண்டு உவந்து தழுவ
நான்கு திருத் தோள்கள் யுடையவராய் இருக்கின்றார்
சேடர்-இளம் பருவம் உள்ளவர் -யுவா -திருக்குடந்தை எம்பெருமானோ திரு நாகை எம்பெருமானோ தெரிக்க மாட்டேன் –
அசாதாராண லஷணங்களால் ஸ்ரீ மன் நாராயணன் போலேயும் பாவிகளான நமக்கு சேவை
சாதிப்பதால் இல்லை போலேயும் -என்றவாறு
பாடக மெல்லடியார் -பாடகம் -பாடக என்று திரிந்து -ஹாடகம் -ஆடகம் -பொன் என்றவாறு –
ஸ்ரீ தேவி பூ தேவி மார்கள் சூழ -வணங்க-கண்டேன்-
—————————————
வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-3-
புண்டரீகாஷர் இவர்
திரு மெய்யத்து எம்பெருமானோ உலகு அளந்த பிரானோ
கீழே ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் என்றால் போலே அழகு விஞ்சின திருத் தோள்கள்-
—————————————————–
வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிது மிளையர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா—9-2-4-
திருக்கைகளிலே பூ ஏந்துவாரைப் போலே திரு ஆழி திரு சங்கு ஏந்தி -பரத்வம் பொலிய இருந்தும்
எட்டாதவராய் இல்லாமல் நாம் இருக்கு
யுவா குமாரா -திரு அதரமோ சிவந்த பவளம் போலே -திரு உருவமோ பவளத் திரள் போலே
உபமானம் இல்லாதபடி விலஷணமான அழகர்
இந்த விபூதியில் வந்து தோன்றினது கொண்டு நம் இல்லம் புகுந்து நின்றார்
மானச அனுபவம் ஆகவுமாம் -நம்பர் -நம்பத் தக்கவர்-
———————————————-
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழி யொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-5-
திரு உறையூரிலும் தென் மதுரையிலும் கோயில் கொண்டவரோ இவர்
மலை போன்ற திருத் தோள்கள்
கரும் கடலை ஒத்த திருமேனி
திருக் கைகளில் திரு ஆழியும் திருச் சங்கும் ஏந்திக் கொண்டு
எங்கும் காணாத வடிவு அழகு
கோவலர் -கோபால கிருஷ்ணன்
கோ அரசர்களில்—வலர் வல்லவர் என்றுமாம் -ராஜாதி ராஜர்
திரு முக மண்டலத்தில் தண்ணளி பார்த்தால் முன்பே கண்டவர் போலே தோற்றும்
எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதம் -அபூர்வமாயே தோன்றும் பகவத் விஷயம்
கண் எச்சில் வாராமைக்கு வாழியரோ -என்கிறாள் இடையில்-
————————————————
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-
குவலயா பீடம் அழித்த ஸ்ரீ கிருஷ்ணன் தானோ
அஞ்சன மலையோ
ந நமேயம் என்று இருக்கும் ராவணன் போல்வாரையும் வணங்கப் பண்ணும் திரு அபிஷேகம் பூண்டவர்
வெஞ்சின வேழம் மருப்பு ஒசித்த வேந்தர் கொல் என்ற உடனே -ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்
வடமதுரைப் பெண்கள் நெஞ்சு இழந்து சொன்ன சொலவுகள் –
ஆவரிவர் செய்தறிவார் அஞ்சன மா மலை போலே மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து
அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் -பெரிய திருமொழி -3-3-7-
அப் பெண்களால் அனுபவித்த திரு மேனி அழகை இங்கே பரகால நாயகி அனுபவிக்கிறாள்
ஏந்திழையார் -பெண்களுக்கு நிரூபக நாமம் —
இழை -ஆபரணம்-
————————————–
பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலே யும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-7-
பிணி -வியாதி -அதற்கு மூலமான பாபங்கள் -அவை நீங்கின மகான்கள் ஹ்ருதய கமலத்தை விகசிக்க வல்ல பேர் அருளாளன்
தாமரை மொட்டை விகசிக்க வல்ல பரம கிருபாளான ஆதித்யன்
இவருடைய ஸ்ருங்கார சேஷ்டைகளைப் பார்த்தால் நெடு நாள் பழகினவர் செய்யுமவை போலே இருக்க –
ஆயினும் முன்பு கண்டாதாக தெரிய வில்லை –
உற்று நோக்குகிற திருக் கண்களும் அணைக்க முற்படுகிற திருக் கைகளும் திரளச் செறியப் பூத்த தாமரை என்னலாய் இருந்தன
லோக விலஷணமான அழகு-
——————————
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-8-
ஓங்கிய திருமால் இரும் சோலை மலை அழகரோ இவர் -என்னுடைய அவயவங்களை விரும்பி நீங்காமல் உள்ளாரே
திரு நீர்மலை அரங்கனோ இவர்
பொன்மலை மேல் காள மேகம் படிந்து வருமா போலே பெரிய திருவடி மேல் வீற்று இருந்து எழுந்து அருளி வரும் கோலம் காண்மின்
பெரிய திருவடி -பொன்மலை -எம்பெருமான் -மா முகில்
காய்ச்சின பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போலே –திருவாய் மொழி
ஆழ்வார் இங்கே கருட உத்சவம் சேவிக்கப் பெற்றார் -அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் என்றது
அருளாழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் -நம் ஆழ்வார் பிரார்த்தித்தது இவருக்கு பலித்ததே –
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை -என்றது -மதி தவழ குடுமி மாலிரும் சோலை -திருவாய்மொழி போலே –
என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் என்றது எல்லா அவயவங்களுக்கும் உப லஷணம்-இவையும் அவையும் உவையும் -திருவாய்மொழி போலே-
—————————————————
எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர் ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-9-
பிரளயத்தில் அனைத்தையும் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளிய ஆலிலைத் துயின்று அருளிய மாயனோ இவர்
அகடிகடநா சமர்த்தர் போலே தோன்றுகிறதே
திரு வடிவைப் பார்த்தால் மேகம் போலேயும் மலை போலையும் சொல்லலாய் இரா நின்றார்
திரு அவயவங்கள் பரிமளம் கமழா நிற்கும் தாமரை போலே இருந்தன
மேன்மையைப் பார்த்தால் நித்ய சூரிகள் மட்டுமே வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்
மேன்மைக்குத் தக்க மேன்மை யுள்ளவர்களே இவரைக் கிட்டலாய் இருக்க அழகு விட ஒண்ணாமல் மேல் விழப் பண்ணுகிறதே-
——————————————————
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே –9-2-10-
இன்னிசை பொலிய அருளிச் செய்த இத் திருமொழியை கற்று ஓத வல்லார் சார்வ பௌமர்களாய் ஆண்டு
மீட்சி இல்லா வைகுண்ட மா நகர் புக்கு நித்ய கைங்கர்யம் பெறுவார்கள்-
——————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply