ஸ்ரீ மன் நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –
அவிதித விஷயாந்தரஸ் சடாரே ரூப நிஷதாமுபகா நமாத்ர போக
அபிச குணவசாத் ததேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து
நம் ஆழ்வார் உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன்
மதுரகவி ஆழ்வாரும் தேவு மற்று அறியாமல்
பாவின் இன்னிசையே பாடித் திரிந்து
மா முனிகளும் மதுரகவி நிலை பெற்றோம் என்று களிக்கும் படி
சடாரே
நடுநிலைத் தீபமாகக் கொண்டு கீழும் மேலும் அன்வயிக்கக் கடவது
பஞ்சமி விபக்தி -நம் ஆழ்வாரை தவிர வேறு இல்லாமை
சஷ்டி விபக்தி நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளை விட வேறு அறியாதவராய்
விஷயாந்தராஸ் –
சப்தாதி விஷயங்களை அல்ல பகவத் விஷயத்தையே
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம்
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி
உபநிஷதாம் பஹு வசனம்
ஆழ்வார் உடைய நான்கு பிரபந்தங்களையும் சொல்லிற்று
அபிச –
ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம்
குணவசாத் குண க்ருத தாஸ்யம்
———————————————————–
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்
வேறு ஒன்றும் நான் அறியேன் –வாழ்வாம் -என்னும் அளவும்
மதுரகவி ஆழ்வார் அனுசந்தானத்தின் அனுவாதம்
அன்றிக்கே
வேறு ஒன்றும் நான் அறியேன் -நாத முனிகள் சொல்லாக உரைக்கக் கூடுமாயினும்
முந்திய தனியன் -அவிதித விஷயாந்தராஸ் -என்னுமதுக்கு
மொழி பெயர்ப்பாக அருளிச் செய்த இதுக்கு
முந்தின பொருளே பொருந்தும் –
வேதம் தமிழ் செய்த
ஆற்றில் பொதிந்த மணலின் தொகை அரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள்கள் எல்லாம் விழுமாக்கமலம்
சேற்றில் பொதியவிழ்க்கும் குருகூரர் செஞ்சொல் பதிக
நூற்றில் பொதிந்த பொருளொரு கூறு நுவல்கிலவே -கம்பர் சடகோபர் அந்தாதி
வடமொழி மறைகளை ஹம்ச ரூபியாக தானே வெளியிட்டு அருளினாலும்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் -பெரிய திருமடல்
போலேயும்
உபநிஷத் ஒருவர் பெயர் இட்டு வழங்குவது போலேயும்
எம்பெருமான் திரு அருளால் உணர்ந்த ஆழ்வார்கள்
திவ்ய பிரபந்தத்தை உணர்ந்த மாத்ரத்தைக் கொண்டு
அவர்கள் அருளிச் செய்ததாக கூறுதல் உபசார வழக்காகும்
மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
திரு நா வீறுடைய பிரான்
திருக் குருகூர் நம்பி
குருகைப் பிரான்
வழுதி நாடன்
வண் குருகூர் ஏறு
வண்மை குருகூருக்கும் குருகூர் ஏற்றில் அன்வயிக்கலாம்
அடியாருக்கு அமுத வெள்ளமாக உபகரித்து அருளிய உதார சிகாமணி
முதல் அடியில் நான் அறியேன் ஒருமையிலும்
இறுதியில் எங்கள் பன்மையிலும்
தம்முடன் சம்பந்தம்பெற்ற பிரபன்னர் அனைவரையும்
திரு விருத்தம்
இனி யாம் உறாமை பன்மை
அடியேன் செய்யும் வின்ன்பப்பம் ஒருமை போலே
அவரே சரண் -என்றும் பாடமாம்-
—————————————————————
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை
சிறு முனிவன் வாய் மொழியின் சேய்–வள்ளுவர்
ஐம் பொருளும் நாற்பொருளும் முப்பொருளில் பெய்தமைத்த
செம்பொருளை எம்மறைக்கும் சேட்பொருளை தண் குருகூர்ச்
சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகின்
தாய் மொழியது என்பேன் தகைந்து –ஔவையார்
சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று அவ்
வாய் மொழியை யாரும் மறை என்பர் வாய் மொழி போல்
யாய் மொழிகள் சால வுள வெனினும் அம் மொழியின்
சாய் மொழி என்பேன் தகைந்து -இடைக்காடர்
வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரம பதம் அளித்தாய் அந்த நாயோடு இந்த
பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ் கடலே
சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ -தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு
ஈய் ஆடுவதோ கருடற்கு எதிரே இரவிக்கு எதிர் மின்மினி யாடுவதோ
நாய் ஆடுவதோ உறும் இப்புலி முன் நரி கேசரி முன் நடை யாடுவதோ
பேய் ஆடுவதோ அழகூர்வசி முன் பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந்து
ஓவாது உரை ஆயிரம் மா மறையின் ஒரு சொல் பொருமோ உலகில் கவியே-
——————————————————————–
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போலே
சீர்த்த மதுரகவி செய்கலையை –ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து –மா முனிகள்
இது தான் பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை தொடக்கமானவற்றின் அர்த்தத்தை பிரதிபாதிக்கையாலே
இதன் அர்த்த கௌரவத்தை விசாரித்து
நன்றாய் இருப்பதொரு ஹாரத்தை சமைத்து அது ஒளி பெறும்படி
ஸ்லாக்கியமாய் இருப்பதொரு நாயகக் கல்லை அதன் நடுவே பதித்தால் போலே
அருளிச் செயல்கள் தான் நிறம் பெறும் படி அவற்றின் நடுவே
இத்தைச் சேர்த்தார்கள்
சேர்த்த சேர்க்கையின் சாதுர்யத்தாலே இறே முத்து மாலை தொடக்கமான ஆபரணாதிகள் நிறம் பெறுவது
அது போலே யாய்த்து இது –பிள்ளை லோகம் ஜீயர்
மண்டல அந்தாதி இதுவும்
கம்பர் சடகோபர் அந்தாதி இது வழிகாட்டியாக கொண்டே அமைத்ததை தாமே
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளலை மாறனை முன்
சென்றே மதுர கவி பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்னடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகமதாக இசைத்தனனே -என்று வெளியிட்டு உரைக்கிறார்
——————————————————————
தேறிய மா ஞானமுடன் திருக் கோளூரில் சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
ஆறிய நல் அன்புடனே குருகூர் நம்பிக்கு அநவரதம் அந்தரங்க அடிமை செய்து
மாறனை யல்லால் என்றும் மறந்தும் தேவு மற்று அறியேன் என்னும் மதுர கவியே நீ முன்
கூறிய கண்ணி நுண் சிறுத் தாம்பு அதனில் பாட்டுக் குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே –தேசிகன் -பிரபந்த சாரம்
இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில் இகழாத பல்லுருவில் இராகமாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில் தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மையாக்கில்
அன்பர்க்கே யவதரிக்கும் மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தானே கொண்டு
துன்புற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—தேசிகன் -அதிகார சங்க்ரஹம்-
இன்பத்தில்–அண்ணிக்கும் அமுதூரும் -இன்பம் எய்தினேன்
இறைஞ்சுதலில்-மேவினேன் அவன் பொன்னடி
இசையும் பேற்றில் -திரிதந்தாகிலும்
இகழாத பல்லுருவில்-அன்னையாய் அத்தனாய்
இராகமாற்றில் -முன்னெலாம் நம்பினேன் -இன்று சதிர்த்தேன்
தன் பற்றில் -இன்று தொட்டும் தன் புகழ் ஏத்த அருளினான்
வினை விலக்கில்-பண்டை வல்வினை பாற்றி யருளினான்
தகவோக்கத்தில் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
தத்துவத்தை யுணர்த்துதலில்-வேதத்தின் உட்பொருளை நிற்கப் பாடி
தன்மையாக்கில் -செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
இந்த பத்து விஷயங்களும் தோன்றக் காட்டும்
அன்பர்க்கே யவதரிக்கும் மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தானே கொண்டு
துன்புற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–
முமுஷுகளுக்கு உபாதேயமான மார்க்கம் மதுரகவி நிஷ்டையே
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -என்றபடி-
————————————————————————-
ஆழ்வாருடைய ஒப்பற்ற போக்யதையையும், அந்த போக்யதையின் ரஸமறிந்தவர், தாமொருவரே என்பதையும்
இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.
பதவுரை
கண்ணி–(உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய்
நுண்-(உடம்பிலே அழுந்தும்படி) நுட்பமாய்
சிறு–(எட்டம்போராதபடி) சிறிதாயிருக்கிற
தாம்பினால்–கயிற்றினால்
கட்டுண்ண பண்ணிய–யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட
பெருமாயன்–விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய்
என் அப்பனில்–எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு,
நண்ணி-(ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து
தென் குருகூர் நம்பி என்றக்கால்-தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு
நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால்.
அண்ணிக்கும்–பரமபோக்யமாயிருக்கும்;
என் நாவுக்கே–என் ஒருவனுடைய நாவுக்கே
அமுது ஊறும்–அம்ருதம் ஊறா நிற்கும்.
நம்மாழ்வர், மற்றுள்ள அவதாரங்களிற் காட்டில் க்ருஷ்ணாவதாரத்திலே,
அது தன்னிலும் நவநீத செளர்யம் பண்ணி ஆய்ச்சியர் தாம்பினால் உரலினிடை ஆப்புண்டிருந்த அபதாநத்தில்
‘எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!” என்று ஆறு மாதம் மோஹித்திருந்தவராதலால்.
அந்த அபதாநத்தை முன்னிட்டுக் கண்ணபிரானைக் கூறுகின்றார்.
தேவுமற்றறியாதே ஆழ்வாரைப்பற்றின இவர் முதலடியிலே பகவத் விஷயத்தில் இறங்குவானேன்?
அதிலும் என் அப்பன் என்று பரமோத்தேச்யதை தோற்றச் சொல்லுவானேன்? என்னில்;
ஆழ்வார் ஆழங்காற்பட்ட துறை என்பது பற்றியும்,
ஆழ்வார் உகத்த விஷயத்தைப் பேசினால் அவர்க்கு முக மலர்த்தி உண்டாகுமென்பது பற்றியும் பேசுகிறார்.
மேலும் சரம பர்வ நிஷ்டர்க்கு பகவத் விஷயம் ஸர்வாத்மநா அநுத்தேஸயமுமன்று;
தாமாக ஸாக்ஷாத் பகவத் விஷயத்தைப் பற்றக்கூடாதேயொழிய,
தமது ஆசிரியர் உகந்த விஷயமென்று அவ்வழியாலே பற்றுகை விருத்தமன்று.
மேலும் இப்பாட்டில் எம்பெருமானைவிட்டு ஆழ்வாரைப்பற்றி மகிழ்ந்தவாறு கூறுகின்றதேயன்றி,
பகவத் விஷயத்தைப் பற்றுவதாகக் கூறப்படவுமில்லை.
முதலடியிலே எம்பெருமானைப் பேசியதனாலும்,
அதிலும் எம்பெருமானுக்கு இட்ட விசேஷணங்களின் வைலக்ஷண்யத்தாலும்
ஆபாதத: தோற்றக்கூடிய ஸங்கையை அநுவதித்துப் பரிஹரித்ததித்தனை.
என் அப்பனில் –
என் அப்பனை விட்டு என்றபடி.
வடநூலார் ‘ல்யப்லோபே பஞ்சமீ’ என்பர்;
“வ்ருக்ஷாத்பர்ணம் பததி” என்றவிடத்து ‘வ்ருக்ஷாத்’ என்ற பஞ்சமியானது
‘வ்ருக்ஷம் விஹாய என்ற ஸ்தாநத்திலேயாமென்று உதாஹரணமுங் காட்டுவர்;
அதுபோல் இங்குக் கொள்க.
கண்ணி
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப் பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி
வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டுதுண்டாக அறுத்து வைத்திடுவான்;
அவற்றை அவள் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறு வடிவமாக்கி அது கொண்டு கண்ண பிரானைக் கட்டுவள்;
ஆனது பற்றித் தாம்புக்குக் கண்ணி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
நுண் சிறு என்ற அடைமொழிகள்
தாம்பின் சுற்றளவிலும் நீட்டளவிலுமுள்ள சிறுமையைக் கூறும்;
மெல்லிதாய்க் குறுகிய என்றபடி.
கட்டுண்ணப் பண்ணிய-
இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும்போது, தன் உடம்புக்கு எட்டம் போராதபடி மிகச் சிறிதான அத் தாம்பினால்
கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்புவித்துக் கொள்ள வல்லவனாயினும்,
தனது ஸௌஸீல்யம் ஸௌலப்யம் ஆஸ்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை
வெளியிடுவதற்கென்றே பரத்வ நிலையைத் தவிர்ந்து
மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளால்
தான் அக் குணங்களை விளங்கச் செய்து கொள்ளவேணுமென்று கொண்டு,
ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்ட அற்புதம்
கட்டுண்ணப் பண்ணிய என்ற சொல் நயத்தாற் போதரும்
“கட்டுண்ட” என்னாது கட்டுண்ணப்பண்ணிய என்றது –
தன்னைக் கட்டுவதற்குத் தானே இசைந்து போந்தமையை நன்கு காட்டவற்றென்க.
இங்கு நஞ்ஜீயரருளிச் செயல்-
ஆஸ்ரிதர் கையாலே கட்டுண்ணாவிடில் சீலத்துக்குப் போராது.
அநாஸ்ரிதரைக் கட்டாவிடில் ப்ரபாவத்துக்குப் போராது.
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கையும் பும்ஸ்த்வம்;
தன் மஹிஷியின் கையில் பூமாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்தவம்.”
பெரு மாயன்
பரம்புருடன் கர்மவஹஸ நம்போலியரைப் போற் பிறந்தவாறும்,
பசியுண்டாகி நவநீதம் முதலியவற்றை விரும்பியவாறும்;
அவற்றை இடுவாரில்லாமல் களவுவழியிலே பெறுகையும்,
அவற்றைச் சடக்கென விழுங்கி விட்டு மறைத்துக் கொள்ள மாட்டாமல் வாயது கையதாக அகப்பட்டுக்கொள்கையும்
இடக்கை வலக்கை யறியாதவர்கள் கையாலே கட்டுண்கையும்,
ஸம்ஸார பந்தங்களையெல்லாம் தவிர்க்க வல்லவனான தான் இந்த பந்தகத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டாதவனாகி
ஏங்கியேங்கி அழுகையுமாகிற இவையெல்லாம் என்ன ஆச்சரியம்! என்பார் பெரு மாயன் என்கிறார்.
இவனுடைய மேன்மைக்கு எல்லை காண முடியுமாயினும்
நீர்மைக்கு எல்லைகாண முடியாதென்ப.
(என் அப்பனில்.)
நஞ்சீயருரை:-
“கீழ் ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமாகையாலே க்ருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று;
மேல் உத்தேஸ்யமான (ஆழ்வார்) விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பனென்பானென்? என்னில்;
தம்மை ஆழ்வார் அங்கீகரிக்கைக்காக எம்பெருமானோடு தமக்கொரு ஸம்பந்தம் சொல்லிக் கொள்ளுகிறார்.
ஒரூருக்குப் போம்போது வழியிடையிலே ‘நீரும் நிழலும் நன்றாயிருந்தது’ என்று ஒதுங்கினால் உத்தேஸ்யமாக வேணுமோ?”.
என்றக்கால்
பகவத் விஷயத்தை விட்டு ஆழ்வாரைப் பற்ற வேண்டியதுமில்லை;
ஆழ்வார்! என்று ஒரு கால் வாயினாற்சொன்னாலும் போதும் என்பார் என்றக்கால் என்கிறார்.
அண்ணிக்கும் – தித்திக்கும் என்றபடி.
ஆழ்வார்க்கு நிரந்தர பகவத் விஷயாநுபவத்தாலே பிறந்த ஆநந்தாதிசயமடங்கலும்
இவர்க்கு ஆழ்வாரை ஒரு கால் சொன்ன மாத்திரத்திலே உண்டானபடி.
“அண்ணிக்கும் அமுதூறும்”
{ என்று இவர் சொன்னவுடனே,
கருவிலே திருவிலாதார் சிலர் ‘எங்களுக்கு ஆழ்வார் ரஸிக்கவில்லையே’ என்ன;
என் நாவுக்கே என்கிறார்;
முதலடியான பகவத்விஷயமுங்கூட ரஸியாதிருக்கிற உங்களுக்கு,
சரமாவதியான ஆழ்வாரளவும் ரஸிக்கும்படியான எனக்கு ரஸிக்குமாபோலே ரஸிக்குமோ? என்கை.
அன்றியே
என் நாவுக்கே என்றது-
அநாதிகாலமாக விஷயாந்தரங்கள் ரஸித்துக்கிடந்த என்னுடைய நாவுக்கே இன்று
ஆழ்வாரென்றால் ரஸித்திருக்கும்படி என்ன பாக்கியம்! என ஈடுபடுகிற படியுமாம்.
கண்ணி
ஆஸ்ரிதர் கையால் கட்டுண்ணா விடில் சீலத்துக்குப் போராது
அநாஸ்ரிதரைக் கட்டா விடில் பிரபாவத்துக்குப் போராது
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கவும் பும்ஸ்த்வம்
தன் மகிஷி யின் கையில் பூ மாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம் –நஞ்சீயர்
பெரு மாயன்
பிறந்தவாறும்
நவநீதம் விரும்பியவாறும்
களவு வழியில் பெறுகையும்
வாயது கையதுவாக அகப்பட்டு கொள்கையும்
இடக்கை வலக்கை அறியாதவர்கள் கையால் கட்டுண்கையும்
ஏங்கி ஏங்கி அழுகையும்
நீர்மைக்கு எல்லை காண முடியாதே
என் அப்பனில்
கீழ் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேலே உத்தேச்யமான -ஆழ்வார் -விஷயத்தை சொல்லாதே
அவனை என் அப்பன் என்பான் என் என்னில்
தம்மை ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக எம்பெருமான் உடன் தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லிக் கொள்கிறார்
ஓர் ஊருக்கு போம்போது வலியிடையில் நீரும் நிழலும் நன்றாய் இருந்தது
என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆகவேணுமோ –நஞ்சீயர்
என்றக்கால்
ஒரு தடவை சொன்னாலே ஆழ்வாருக்கு நிரந்தர பகவத் விஷய அனுபவத்தாலே
பிறந்த ஆனந்த அதிசயம் அடங்கலும் உண்டான படி
—————
தம்முடைய மநோ வாக் காயங்களென்ற மூன்று கரணங்களும் ஆழ்வார் விஷயத்திலேயே ஏகாக்ரமாக
ஈடுபட்டபடியை அருளிச் செய்கிறார் இதில்.
நான் என்னுடைய நாக்கைக்கொண்டு அப்ராப்தமான பகவத் விஷயத்திலே செலுத்தாமல்
ப்ராப்த சேஷியான ஆழ்வாரைத் துதிப்பதிலே செலுத்திப் பரமாநந்த மடைந்தேன்;
என் தலை படைத்த ப்ரயோஜநம் பெறும்படி தலையை ஆழ்வார் திருவடிகளிலே மடுத்தேன்; இது ஸத்யம்.
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே.
பதவுரை
நாவினால்–நாக்கினால்
நவிற்றி–(ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி
இன்பம் எய்தினேன்–ஆநத்தத்தைப் பெற்றேன்;
அவன்–அவ்வாழ்வாருடைய
பொன் அடி-அழகிய திருவடிகளை
மேவினேன்-ஆச்ரயிக்கப்பெற்றேன்;
மெய்ம்மையே-இது ஸத்தியமே;
மற்று தேவு அறியேன்–(ஆழ்வாரையொழிய) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன்;
குருகூர் நம்பி–திருநகரிக்கு நிர்வாஹகரான அவ்வாழ்வாருடைய
பாலின்-அருளிச்செயல்களின்
இன் இசை-இனிய இசையையே
பாடி-பாடிக்கொண்டு
திரிவன்–திரியககடவேன்.
தேவுமற்றறியேன்
என்பதனால் நெஞ்சின் காரியஞ் சொல்லுகிறார்; நம்மாழ்வாரையொழிய தெய்வமாக நினைக்கமாட்டாது என் மனம்;
நம்மாழ்வாரையே பர தேவதையாகக் கொண்டேன் என்கிறார்.
முதலடியிலே சொன்ன நாவின் காரியத்தை மீண்டும் விசேஷித்துக் கூறுகிறார். குருகூர் நம்பி இத்தியாதியால்.
எப்போதும் நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களையே இனிய இசையுடன் பாடிக்கொண்டு திரிவேனேயன்றி,
அவ்வருளிச் செயலைத் தவிர்த்து ஸந்த்யாவந்தந மந்த்ரத்தையும் இந்த நாக்கினால் உச்சரிக்க மாட்டேன் என்கிறாராகக்கொள்க.
இங்கே ஒரு சங்கை பிறக்கக்கூடும்;
அதாவது-“தேவுமற்றறியேன்;” என்று இவர் எம்பெருமானை
ஒதுக்கித் தள்ளுகிறபடியானால் அவ்வெம்பெருமானே தெய்வமென்று கொண்டாடுகிற
அருளிச்செயல் மாத்திரம் இவர்க்கு உபாதேயமாகலாமோ?
பகவத்விஷயத்தை உதறிவிட்டு ஆழ்வாரையே பற்றின விவர் அந்த ஆழ்வாருடைய பெருமையைப் பேசவல்ல
பிரபந்தத்தையே யன்றோ பாடிக்கொண்டு திரியவேணும் – என்று.
இச்சங்கைக்கு முதற்பாட்டின் உரைத்தொடக்கத்திலேயே ஸமாதாநங் கூறப்பட்டுள்ளமை காண்க.
சரமபர்வ நிஷ்டர்க்கு பகவத் விஷயம் ஸர்வாத்மநா ஹேயமன்று;
தம் ஆசிரியர் உகந்த விஷயமென்று அவ்வழியாலே பற்றுகை
ஸ்வரூபாநுரூபமென்றும் ஸ்வேச்சையாலே பற்றுகை விருத்தமென்றும் இவ்வளவேயுள்ளது.
இங்கு, “குருகூர்நம்பி பாவைப் பாடித் திரிவன்” என்னாமல், ‘பாவின் இன்னிசை பாடித் திரிவன்’ என்றதற்கு
ரஸோக்தியாக நஞ்சீயரருளிச் செய்யும் படி:-
ஐஸ்வர்யத்தை அல்பாஸ்திரமென்று கழித்து
ஸ்திரமான ஆத்ம ப்ராப்தியை அபுருஷார்த்தமென்று கழித்து,
ஸ்திரமுமாய்ப் பரம போக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் ப்ரதமாவதியென்று கழித்து,
இதில் சரமாவதியான ஆழ்வாரையும் உத்தேச்யரன்றென்று கழித்து,
அவரோடு ஸம்பந்தித்த விஷயத்தையும் ரஸாச்ரயமன்றென்று கழித்து,
அத்தோடு ஸம்பந்தித்த இசையே தமக்கு உத்தேச்யமென்கிறார்.
‘தெய்வத் தண்ணந் துழாய்த்தாராயினுந் தழையாயினும் தண்கொம்பதாயினும் கீழ்வேராயினும் நின்ற
மண்ணாயினுங்கொண்டு வீசுமினே’ இத்தியாதியிற்படியே
பகவத் ஸம்பந்தம் கழியக் கழிய நிறம் பெறுகிறபடி.”
பாடித் திரிவனே என்ற சொல் நயத்தால்,
ஆழ்வாரருளிச்செயலைப் பாடவே தான் எனக்கு உடம்பில் வலிவு உண்டாகி ஸஞ்சரிக்க வல்ல சக்தி உண்டாகிறது
என்னுங்கருத்துத் தோன்றும்.
“ரஸாயநஸேவை பண்ணித்திரிவாரைப்போலே;
இது காணும் இவர்க்கு தாரகமாய் இவரை ஸஞ்சரிக்கப் பண்ணுகிறது”
“நாவாயிலுண்டே நமோ நாரணாவென்று ஒவா துரைக்கு முரையுண்டே” என்றும்,
“என்நாவிலின்கனி யானொருவர்க்குங் கொடுக்ககிலேன்” என்றும் மற்றையாழ்வார்கள்
பகவத் விஷய ஸ்துதியையே தமது நாவுக்குப் பயனாக நினைத்திருப்பர்;
“அடியையடைந் துள்ளந்தேறி, ஈறிலின் பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்” என்று
பகவத் விஷயாவகாஹநத்தையே -தமக்குப் பேரின்பமாக நினைத்திருப்பர்;
“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்று
பகவத் பாத ஸேவையையே தமது தலைக்குப் பேறாக நினைத்திருப்பர்;
“கண்ணனல்லால் தெய்வமில்லை” என்று அவனையே தெய்வமாக நினைத்திருப்பர்;
இந்த ப்ரதிபத்திகளெல்லாம் மதுரகவிகளுக்கு ஆழ்வார் திறத்திலே யாமென்பதை இப்பாட்டில் உய்த்துணர்க.
நம்பிள்ளை யீடு:-
“குருகூர்நம்பிபா’ என்றது -கண்ணி நுண் சிறுத்தாம் பென்னுதல்;
திருவாய்மொழி என்னுதல்.
திருவாய்மொழி தன்னில் பலகாலும் ‘குருகூர்ச் சடகோபன்’ என்றாரிறே;
அவ்வழியாலே யாய்த்துத் திருவாய்மொழி தன்னையும் இவர் ஆதரிப்பது.”
மெய்மையே=
‘ஆழ்வார் நீச ஜாதியிற் பிறந்தவராதலால் அர்ச்சையில் அவர் ஆதரிக்கத் தக்கவரே யன்றி விபவத்தில் ஆதரிக்கத்தக்கவரல்லர்;
மாதா புத்திரனுக்கு நமஸ்கரணீயையாயினும் பஹிஷ்டையாயிருக்குங் காலத்திலே அவள் எப்படி நமஸ்கரிக்கத்தகாதவளோ
அப்படி தான் நீசஜாதீயரான ஆழ்வார்கள் விபவத்திலே அநாதரணீயர்’ என்று பிதற்றும் த்ரமிடோபநிஷக் குத்ருஷ்டிகளின்
மிடற்றைப் பிடித்தாற்போலே அருளிச் செய்கிறபடி பாரீர்.
மதுரகவிகள் ப்ராஹ்மணோத்தமராயிருந்து வைத்து, ஆழ்வாருடைய விபவ தசையிலே அவர்க்கு நான்
ஸகலவித பரிசர்யையும் செய்தேன் காண் என்று ஸத்யம்பண்ணிச் சொல்லுகின்றார் காண்மின்.
‘நவிற்றின்பம்” என்று பெரும்பாலும் ஓதப்பட்டாலும்
“நவிற்றியின்பம்” என்ற பிராசீந பாடத்தை ஆதரிப்பதே அழகு;
கலிவிருத்தத்தால் அமைந்த இப்பிரபந்தம்-
நேரசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுகள் ஒற்றொழித்துப் பதினோரெழுத்துக் கொண்ட
அடியையுடையனவாகவும்,
நிரையசை முதலாகத் தொடங்கப்பட்ட பாட்டுக்கள் ஒற்றொழித்துப் பன்னிரண்டெழுத்துக்கள் கொண்ட
அடிமையுடையனவாகவும் அமைந்திருக்கும் முறைமைக்கிணங்க நவிற்றி என்றிருக்கவேணுமென்க.
நவிற்று என்றால் பத்தெழுத்தாய்விடுமன்றோ ‘நவிற்று’ என்ற பாடத்தில், நவில் பகுதி;
‘நவிற்றி’ என்ற பாடத்தில், நவிற்று பகுதி: பொருள் ஒன்றே.
நாவினால் நவிற்று–பாவின் இன்னிசை பாடித் திரிவேன் -வாக் இந்த்ரியம்
மேவினேன் அவன் பொன்னடி– காயிக
தேவு மற்று அறியேன் –மானஸ
பாவின் இன்னிசை பாடித் திரிவனே –
ஐஸ்வர் யத்தை அல்பம் அஸ்தரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்ம பிராப்தியை அபுருஷார்த்தம் என்று கழித்து
ஸ்திரமாயும் பரம போக்யமுமான பகவத் பிராப்தியை பிராப்யத்தில் பிரதமாவதி என்று கழித்து
இதில் சரமாவதி யான ஆழ்வாரையும் உத்தேச்யர் அன்று என்று கழித்து
அவரோடு சம்பந்தித்த விஷயத்தையும் ரசாஸ்ர்யம் அன்று என்று கழித்து
அத்தோடு சம்பந்தித்த இசையே தமக்கு உத்தேச்யம் -என்கிறார்
தெய்வம் தண் அம் துழாய் தாராயினும்
தழையாயினும்
தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும்
நின்ற மண்ணாயினும்
கொண்டு வீசுமினே
இத்யாதிப் படியே பகவத் சம்பந்தம் கழிய கழிய நிறம் பெறுகிற படி
பாடித் திரிவனே
பாடுவதாலேயே சஞ்சரிக்க வல்ல சக்தி பெற்றேன்
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே
இது காணும் இவருக்கு தாரகமாய் இவரை சஞ்சரிக்கப் பண்ணுகிறது
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -என்றும்
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும்
நாக்குக்கு பயன் என்பர் மற்றையர்
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -என்றும்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
கண்ணன் அல்லால் தெய்வம் அல்ல –
இந்த பிரபத்திகள் எல்லாம் மதுர கவிகளுக்கு ஆழ்வார் திறத்தில்
குருகூர் நம்பி பா -என்றது
கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்னுதல்
திருவாய் மொழி -என்னுதல்
திருவாய் மொழி தன்னிலும் பலகாலும் குருகூர் சடகோபன் என்றார் இறே
அவ்வழியாலே யாய்த்து திருவாய் மொழியையும் இவர் ஆதரிப்பது
மெய்மையே
ஆழ்வார் நீச ஜாதி -அர்ச்சையில் தான் ஆதரணீயர் விபவத்தில் இல்லை -என்று
பிதற்றும் திராவிட உபநிஷத் குத்ருஷ்டிகள் மிடற்றை பிடிக்குமாறு அருளுகிறார்
சத்யம் பண்ணிச் சொல்கிறார்
———————————————————————————-
“தேவுமற்றறியேன” என்றார் கீழ்ப்பாட்டில்; இதில் தேவுமற்று அறிவேன் என்கிறார்.
ஆழ்வார் பற்றின விஷயமென்று அவ்வழியாலே பற்றலாகும் என்கிற ஸாஸ்த்ரார்த்தத்தை விளக்குகிறபடி.
“விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றாளிறே ஆண்டாளும்.
ஆணையின்மேலே ஏற நினைப்பார். தாமாக ஏறப் புக்கால் உதைபடுவர்;
விரகறிந்த பாகன் மூலமாக ஏறினால் அது முறைமையாகும்; அப்படியே யாய்த்து பகவத் விஷயப் பற்றும்.
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திரு வுருக் காண்பன்நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்காள்
உரியனாய் அடி யேன் பெற்ற நன்மையே.
பதவுரை
திரிதந்தாகிலும்–(பகவத் விஷயத்தோடு ஒட்டற்றுத்) திரிந்தேனாகிலும்.
தேவ பிரானுடை–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
கரிய–(நீலமேகம்போற்) கறுத்ததாய்
கோலம்–அழகியதான
திரு உரு–பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை
நான் காண்பன்–நான் ஸேவிப்பேன்;
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு–பெருமையையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு
உரிய ஆள் ஆய்–அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து
அடியேன் பெற்ற நன்மை–அடியேன் பெற்றபேறு இது காணீர்.
“திரிதந்தாதிலும்” என்றதைத் “திரிதந்தேனாகிலும்” என்பதன் மரூஉ மொழியாகக் கொண்டு உரைக்கப்பட்டது.
அன்றி, வினையெச்சமாகவே கொண்டு உரைத்தலுமொன்று.
திரிதருதலாவது திரும்பி வருதலாய், எம்பெருமானை விட்டு ஆழ்வாரளவும் போன நான் திரும்பி
எம்பெருமானளவிலே வந்தாகிலும் என்றாம் திருவாய் மொழிப் பாவை விட்டு இசைகளை விட்டு ஆழ்வாரையும் விட்டு
‘அவருகந்த விஷயம்’ என்று ப்ரதம பர்வத்திலே திரும்பி வந்தாகிலும் என்றபடி.
“திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக் காண்பன் நான்” என்றவாறே,
சிலர் மதுரகவிகளை நோக்கி “என்சொன்னீர்! என் சொன்னீர்? விட்டொழிந்த படுகுழியில் மீண்டும் விழுந்தீரே” என்று கூற,
பின்னடிகளால் அவர்கட்கு உத்தரம் அருளிச் செய்கிறார்.
தேவபிரானுருவை நான் காண்பதானது என்னுடைய முயற்சி மூலமாக நேர்ந்ததாகில் எனக்கு இது தீமையேயாகும்;
ஆழ்வார் திருவடிகளிலே நான் அடியனாயிருந்து வைத்து அவர் வழியாலே பெற்றதாகையால் இது நன்மையேயாம் என்றவாறு.
“தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருவைத் திரிதந்து நான் காண்பனாகிலும் (அது)
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு அடியேன் ஆளுரியனாய்ப் பெற்ற நன்மையாகுமே யன்றித் தீமையாகாது” என்றுமாம்.
——————————————————————————–
முதற்பாட்டில் எம்பெருமானை விட்டு ஆழ்வாரையே பற்றினதாகக் கூறின நீர்
‘ஆழ்வாருகந்த விஷயம்’ என்பது பற்றி பகவத் விஷயத்தை விரும்புவானேன்?
ஆழ்வார் உகந்தால் நீரும் உகக்க வேணுமோ? என்று சிலர் கேட்க;
ஸகல வைதிகர்களாலும் ‘இது அபதார்த்தம்’ என்று கைவிடப் பட்ட அடியேனை யாவரொரு ஆழ்வார்
விசேஷமாகக் கடாக்ஷித்தருளி ஸகலவித பந்துக்களும் செய்யக் கூடிய காரியத்தைத் தாமொருவராகவே
அடியேன் திறத்துச் செய்தருளிப் பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யருளினாரோ அவ்வாழ்வாரன்றோ எனக்குத் தலைவர்;
அவர் உகந்த விஷயத்தை நான் உகவாதொழிந்தேனாகில் ஆழ்வார் என்னை அங்கீரித்தருள்வதற்கு முன்பு நான் நின்ற நிலைக்கும்
இப்போதைய நிலைமைக்கும் என்ன வாசி உள்ளதாம்? என்ற கருத்துத் தோன்ற அருளிச் செய்கிறார்.
நன்மை யால் மிக்க நான்மறை யாளர்கள்
புன்மை யாகக் கருதுவ ராதலின்
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மையான் சடகோபனென் நம்பியே.
பதவுரை
நன்மையால் மிக்க–நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய்
நால்மறை ஆளர்கள்-நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள்
(என்னை)-அடியேனை
புன்மை ஆக கருதுவர் ஆதலில்-ஹேயகுணங்களே ஒரு வடிவு கொண்டதென்றெண்ணி
உபேக்ஷித்திருப்பரென்பதுவே ஹேதுவாக
அன்னை ஆய்-மாதாவாயும்
அத்தன் ஆய்–பிதாவாயும்
என்னை ஆண்டிடும் தன்மையான்–அடியேனைக் கைக்கொண்டருளு மியல்வினரான
சடகோபன்-நம்மாழ்வார்
என் நம்பி–எனக்குத் தலைவர்.
(நன்மையால் மிக்க)
என்னை இகழ்ந்து கைவிட்டவர்கள் ஸாமாந்ய புருஷர்களல்ல;
நன்மையால் மிக்க நான் மறையாளர்களாய்த்துக் கைவிட்டது;
அதாவது-
ஒருவனிடத்தில் சில குணங்களும் சில தோஷங்களுங்கிடந்தால் தோஷாம்ஸங்களைத் தள்ளி விட்டுக்
குண பாகங்களையே நோக்கிக் கைக் கொள்ளுதல்,
ஸ்வல்ப குணமுமில்லாமல் தோஷங்களே கூடு பூரித்துக் கிடந்தாலும் அக் குற்றங்களையே நற்றமாகக் கொண்டு
கைக் கொள்ளுதலாகிற நன்மையிற் சிறந்தவர்களாய்,
இவ்வளவு ஆத்ம குண பூர்த்தி உண்டாவதற்கு ஈடாக நான்கு வேதங்களிலும் வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்களான
பெரியோர்களுக்கும் தமது நன்மையைக் கொண்டு என்னைக் கைக் கொள்ள முடியாதபடி மஹா பாபியாய்க் கிடந்தேனென்னு
மிவ்வளவையே காரணமாகக் கொண்டு ஆழ்வார் கடாக்ஷித்தருளினார் என்கை.
“நன்மையால் மிக்க நான்மறையாளர்”
என்பதற்குப் பொருந்தியவர் கூரத்தாழ்வான் ஒருவரே என்று நம் முதலிகள் அனைவரும் ஒரு மிடறாக அருளிச் செய்வர்களாம்.
கூரத்தாழ்வான் இகழ்ந்து கைவிடும்படியான ஜந்து உலகத்திலேயே கிடையாது;
அப்படிப்பட்ட கூரத்தாழ்வானும் இம் மதுரகவிகளைக் கண்டால் விலக்கித் தள்ளும்படியாக அத்தனை
ஹேய வஸ்துவாய்த் தாமிருந்ததாக நைச்யாநுஸந்தாநம் பண்ணிக் கொள்ளுகிறபடி.
(புன்மையாகக்கருதுவர்)
புன்மை என்பது பண்புப்பெயர் (தர்மம்); புல்லியன் என்பது பண்பி (தர்மி);
புல்லியன் (-க்ஷூத்ரன்) என்று என்னைக் கருதுவர் என்ன வேண்டியிருக்கப் ‘புன்மையாகக் கருதுவர்’ என்றது-
புன்மை என்று வேறொரு ஆதேய வஸ்நுவும் புல்லியன் என்று வேறொரு ஆதார வஸ்துவும் கிடையாது;
புன்மையே மதுரகவியாக ஒரு உருவை யெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றதென்று கருதுவர் என்ற பொருள் தோன்றுவதற்காம்.
இவ்விடத்தில் விவக்ஷிதமான புன்மை மேற்பாட்டில் விசதம்.
கருதுவர்= காலவழுவமைதி;
“விரைவினு மிகவினுந் தெளிவினுமியல்பினும், பிறழவும்பெறூஉமுக் காலமுமேற்புழி” என்பது நன்னூல்.
ஆதலில் —
அனைவருங் கைவிட்டதுதானே ஹேதுவாக என்றபடி.
‘இனி இம் மதுரகவிக்கு நாமல்லது ரக்ஷகரில்லை’ என்று தம்முடைய க்ருபா மாத்ர ப்ரஸந்நாசாயத்வத்தை
வெளியிட்டுக் கொண்டு என்னை ஆண்டாரென்கிறார்.
நான் வேறு போக்கடி யற்று ‘ஆழ்வார் திருவடிகளே சரணம்’ என்று அடைக்கலம் புகுந்த பின்பு
ஆழ்வார் என்னை ஆண்டருளினாராகில் அதற்கு நான் அவ்வளவாக உருக மாட்டேன்;
என்னுடைய இசைவு இல்லாதிருக்கவும் தாமே என்னுடைய புகலறுதியைப் பார்த்துக் கைக்கொண்டருளின
க்ருபாதிஸயம் என்னை உருக்கா நின்ற தென்கிறார்.
நெருப்புக்கு உஷ்ணம் போலவும் நீர்க்குச் சீதளம் போலவும் ஆழ்வார்க்கு இக் குணம் இயற்கையானது
என்னுங் கருத்துத் தோன்ற ‘ஆண்டிடுந் தன்மையான் என்ற சொல்லழகு நோக்குமின்.
——————————————————————————–
ஸத்துக்கள் உம்மைக் கைவிடும்படி உம்பக்கல் என்ன புன்மையிருந்ததென்ன;
அநாதி காலமாகப் பர த்ரவ்யாபஹாரமும் பர தாரபரிக்ரஹமும் பண்ணிப் போந்தேன் என்று
முன்னிரண்டடிகளாற் கூறிய பின்னர், ‘
இப்போது எப்படியிருக்கிறீர்?’ என்று கேட்க,
இப்போது ஆழ்வாருடைய அருளுக்கு இலக்காகப் பெற்றுச் சதிரனாய் விட்டேன் என்கிறார் பின்னிரண்டிகளால்.
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மட வாரையும் முன்னெல்லாம்
செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்
கன்பனாய் அடி யேன் சதிர்த் தேனின்றே.
பதவுரை
அடியேன்-(இன்று ‘அடியேன்’ என்று சொல்லும்படி திருந்தின) நான்
முன் எலாம்-(ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம்
பிறர்-அயலாருடைய
நல் பொருள் தன்னையும்–நல்ல பொருள்களை
நம்பினேன்-ஆசைப் பட்டுக் கிடந்தேன்;
(பிறர்) மடவாரையும்-பிறருடைய ஸ்த்ரீகளையும்
நம்பினேன்-விரும்பிப் போந்தேன்;
இன்று-இப்போதோ வென்றால்
செம் பொன் மாடம்-செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களை யுடைய
திரு குருகூர் நம்பிக்கு-திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு
அன்பன் ஆய்-பக்தனாகப் பெற்று
சதிர்த்தேன்-சதிரையுடையேனானேன் (சமத்தனாய் விட்டேன்.)
முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவு செய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும்
நன் பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக் கடவது.
ஈஸ்வரனுக்கு சேஷ பூதமான விலக்ஷண ஆத்ம வஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற
ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை.
யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.
உத்தம: புருஷஸ்த்வந்ய?” என்கிற ப்ரமாணச் சாயையாலே எம்பெருமானைப் பிறர் என்கிறது.
இப்படி ஆத்மாபஹாரம் பண்ணினேனாகையால் அதற்குப் பலமான விஷய ப்ராவண்யப் படு குழியிலே
விழுந்தேனென்கிறார் இரண்டாமடியில்;
பகவத் பாகவத விஷயத்திலே வைக்க வேண்டிய மஹா விஸ்வாஸத்தை
மின்னிடை மடவார் திறத்திலே வைத்தேனென்கிறார்.
நம்பிள்ளை ஈடு:-
“ரத்நாபஹாரம் பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவு காண அஞ்சுமோ?
ஈஸ்வரன் ‘என்னுடையது’ என்று அபிமாநித்திருந்த (ஆத்ம) வஸ்துவை அபஹரித்தவன்,
ஸாமாந்யர் ‘என்னது” என்று அபிமாநித்திருக்கும் வஸ்துவை அபஹரிக்கச் சொல்ல வேணுமோ?”
நம்புதல்-விரும்புதல்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”
இப்படியிருந்த நீர் ஆழ்வாரைக்கிட்டினபடி எங்ஙனே? என்று கேட்க;
மடவார்களை ஆராதிப்பதற்காகப் பொருள் தேடிக் கொள்ளை யடிப்பதற்கு இடம் பார்த்துத் திரியா நிற்கையில்
அச் செம்பொன் மாடத்தைக் களவு காணப் போனேன்;
அங்கே வைத்த மா நிதியைக் கண்டு அகப்பட்டேனென்கிறார்;
இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரேயாம்.
சதிர்த்தேன்-
க்ருதக்ருத்யனானேன் என்றபடி.
சதுர என்ற வடசொல் சதிர் எனத்திரிந்து அது அடியாகப் பிறந்த வினைமுற்று இது.
———————————————————————————
“சதிர்த்தேனின்றே” என்று பரமாநந்தமாக அருளிச்செய்த மதுரகவிகளை நோக்கி
‘நீர் சதிர்த்தபடி என்?’ என்று கேட்க,
இன்று முதலாக இனி மேலுள்ள காலமெல்லாம் ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே நான் பாடித் திரியும்படி
அவ்வாழ்வாரால் க்ருபை பண்ணப் பெற்றேன்;
இவ்வளவேயுமின்றி, ஒருகால் நான் ஆழ்வாரை இகழ்ந்தாலும் அவர் என்னை இகழ மாட்டாரென்னும்படி
அவ்வளவு பரம கிருபைக்குப் பாத்திரமாயினேனே! இதற்கு மேற்பட்ட சதிர் உலகத்திலுண்டோ? என்கிறார்.
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன் புகழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்று
மென்னை யிகழ்விலன் காண்மினே.
பதவுரை
இன்று தொட்டும்–இன்று முதலாக
எழுமையும்–மேலுள்ள காலமெல்லாம்
நின்று–(நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று
தன் புகழ்–தம்முடைய (ஆழ்வாருடைய) திருப் புகழ்களை
ஏத்த–துதிக்கும்படி
எம் பிரான் அருளினான்–எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார்;
குன்றம் மாடம்–மலை போன்ற மாடங்களை யுடைய
திருகுருகூர் நம்பி–திருநகரிக்குத் தலைவரான அவ் வாழ்வார்
என்றும்–(இனி) எக்காலத்திலும்
என்னை–என் விஷயத்தில்
இகழ்வு இவன்–அநாதரமுடையவராக இருக்க மாட்டார்;
காண்மின்–(இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள்.
பகவத் விஷயத்தை ஆஸ்ரயிப்பது ஒருகாலமும்,
பலன் கை கூடுவது வேறொரு காலமுமாயிருக்கும்;
அது போலன்றியே ஆழ்வாரை அஸ்ரயித்த இன்று முதலாகவே
எனக்குப் பலன் கை கூடிற்றுக் காண்மின் என்பார்
இன்று தொட்டும் என்கிறார்.
எழுமையும்-
ஏழு ஜந்மங்களிலும் என்றது உபலக்ஷணமாய் மேலுள்ள காலமெல்லாம் என்றபடி.
இகழ்விலன்-
இனி நான் வேறொருவரைத் தேடி ஓடும்படி என்னை
இனி எக்காலத்திலும் ஆழ்வார் கைவிடமாட்டார் என்கை.
காண்மினே-
இது ப்ரத்யக்ஷமாகக் காணக் கூடியதாயிருக்க
ஆழ்வார் பெருமையை நான் சொல்லக் கேட்கை மிகை யன்றோ?
—————————————————————————————
கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய
புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்:
ஆழ்வார் திருவாய்மொழி பாட வல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்த வல்லவர் இத்யாதியாகவுள்ள
அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்;
பாவங்கள் கூடு பூரித்துக் கிடந்த அடியேனைப் பரம பரிசுத்தனாக்கி ஆட் கொண்ட பெருமை யாதொன்றுண்டு.
இதற்கு மேல் வேறொரு பெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை;
அந்தப் பெருமையையே நாடெங்கு மறியப் பறை யடிக்கின்றேன் என்கிறார்.
கண்டு கொண்டென்னைக் காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டிசையு மறிய இயம்புகேன்
ஒண்டமிழ்ச் சட கோப னருளையே.
பதவுரை
பிரான்-பரமோபகாரகராய்
காரி மாறன்–பொற் காரியார் திருக் குமாரரான நம்மாழ்வார்
என்னை–(தமது பெருமையை அறியாத) என்னை
கண்டு–கடாக்ஷித்து
கொண்டு–கைக் கொண்டு
பண்டை வல் வினை–அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாவங்களை
பாற்றி அருளினான்–உரு மாய்ந்து போம் படி பறக்கடித் தருளினார்; (ஆதலால்)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே–அழகிய தமிழ்க் கவிகளுக்கு ஆகரமான அவ் வாழ்வாருடைய க்ருபையையே
எண் திசையும்–எட்டுத் திக்கில் உள்ளவர்களும்
அறிய–அறியும்படி
இயம்புகேன்–சொல்லக் கடவேன்.
கண்டு கொண்டு என்றவிடத்தில் கொண்டு என்பது துணை வினையன்று;
கண்டு என்றும் கொண்டு என்றும் இரண்டும் தனித்தனி வினையெச்சங்கள்.
என்னைக் கடாக்ஷித்து, என்னுடைய துர்க் கதியே பற்றாசாக என்னை அங்கீகரித்தருளி என்றபடி.
“இருந்தான் கண்டு கொண்டு எனதேழை நெஞ்சாளும்” என்று ஆழ்வார் பகவத் விஷயத்திலே
அநுஸக்தித்தவாற்றை இவர் ஆழ்வார் விஷயத்திலே அநுஸந்திக்கிறார்.
காரி மாறன் –
ஆழ்வாருடைய திருத் தகப்பனார்க்குப் பொற்காரியார் என்று திருநாமம்.
ஆழ்வார் உலக நடைக்கு மாறாயிருந்ததால் மாறன் எனத் திருநாமம் பெற்றார்.
மாறன் பிரான், மாறப்பிரான்; “சில விகாரமா முயர்திணை” (நன்னூல்).
பண்டை வல் வினையாவது-
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத ஸேஷத்வமென்று அறியப் பெறாமை.
பாகவத விஷயத்தை விலக்கிப் பகவானளவிலே பண்ணும் பக்தியைப் பாபமென்றிறே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்வது.
பரதேந ததாநக:” என்றவிடத்து அநக: என்பதற்கு வியாக்கியானம் ஸேவிக்க.
பாற்றி –
பாறச்செய்து; பாறுதல் உருமாய்ந்தொழிதல்:
பாறு என்ற வினைப்பகுதி யடியாப் பிறந்து பிற வினையில் வந்த வினையெச்சம்.
அறிய வியம்புகேன் –
“அறியச் சொன்ன வாயிரம்” என்று-ஆழ்வார் உலக மறியத் திருவாய்மொழி சொன்னாப் போலே
நான் உலகமறிய அவரது அருளைச் சொல்லுகிறேன் என்கிறார்.
“தமிழ்ச் சடகோபன்” என்றது
தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி.
——————————————————————-
அருள் கொண் டாடு மடியவ ரின்புற
அருளி னானவ் வருமறை யின்பொருள்
அருள் கொண் டாயிரமின் தமிழ் பாடினான்
அருள் கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.
பதவுரை
அருள் கொண்டாடும்–பகவத் கிருபையைக் கொண்டாடுகின்ற
அடியவர்-பக்தர்கள்
இன்புற-ஆநந்திக்கும்படி
அ அரு மறையின் பொருள்-அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை
அருளினான்-அருளிச் செய்தவராயும்
அருள் கொண்டு–பரம க்ருபையாலே
இன் தமிழ்–இனிய தமிழ்ப் பாஷையிலே அமைந்த
ஆயிரம்–திருவாய்மொழியாயிரத்தை
பாடினான்–பாடினவருமான ஆழ்வாருடைய
அருள் கண்டீர்–க்ருபை ஒன்று மாத்திர மன்றோ
இ உலகினில்–இந்த லோகத்திலே
மிக்கது–அதிசயித்திருக்கிறது.
எம்பெருமானது அருளைக் காட்டிலும் ஆழ்வாரருளே சீரியதென்கிறார்.
“கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமுஞ் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்தான்” என்றபடி
ஸகல வேத வேதாங்க நூல்களையும் ப்ரஸாதித்தருளின எம்பெருமானுடைய க்ருபைக்கு மேற்பட்ட
உலகில் வேறொரு க்ருபையுண்டோ? என்று
அந்த பகவத் க்ருபையிலேயே ஈடுபட்டிருந்த பாகவதர்கள், ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்த பின்னர்
‘ஹா! ஹா!! இவ்வளவு இனிமையான திவ்ய ப்ரபந்தம் போன்ற ஒரு நூலையும் இதுவரை ஈச்வரன் நமக்கு உபகரிக்கவில்லை;
இன்றளவும் ஈச்வரனுக்கு மேற்பட்ட க்ருபாளு யாருமில்லையென்று நாம் மயங்கிக் கிடந்தோம்,
*பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரத்தை அருளிச் செய்த ஆழ்வாருடைய திருவருளுக்கு நிகரான
அருளும் இனி உலகிலுண்டோ? என்று வியந்து மகிழ்ந்தனராம்;
அதனை யருளிச்செய்கிறார்- இங்கு முதலடியில்.
திருவாய்மொழியில்,
“எண்ணாதனகளெண்ணும் நன் முனிவரின்பந் தலைச் சிறப்பப், பண்ணார் பாடலின் கவிகள்
யானாய்த் தன்னைத்தான்பாடி” என்ற விடத்து அருளிச்செய்யும் அர்த்த விசேஷத்தை இங்கு அநுஸந்திக்க;
அதாவது –
திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு முனிவர்களனைவரும் என்ன நினைத்திருந்தார்களென்றால்;
எம்பெருமானுக்கு அபரிச்சிந்நமான ஸ்வரூப ரூப குண விபூதிகள் இருக்கின்றன;
இவற்றையெல்லாம் உள்ளபடி வர்ணிப்பதாகத் தொடங்கின வேதங்கள் வர்ணிக்க முடியாமல்
“யதொவாவொ நிவதஹெ-யதோ வாசோ நிவர்த்தந்தே” என்னும்படி பின் வாங்கி விட்டன;
அக் குறை தீர அந்த பகவத் விபூதிகளை அதி விசதமாக வர்ணிக்க வல்ல ஒரு ப்ரபந்தம் அவதரிக்க வேணும்;
அத்தகைய பிரபந்தத்தை எம்பெருமான் எந்த மஹாநு பாவரைக் கொண்டு அவதரிப்பிக்கப் போகிறானோ’ என்று சிந்தித்திருந்தார்கள்;
திருவாய்மொழி அவதரித்தவுடனே அவர்கள் மீண்டும் நினைத்ததென்னவென்றால்
‘ஐயோ! எம்பெருமானுக்கு இன்னுஞ் சில குணங்களும், இன்னுஞ் சில விபூதிகளும்,
இன்னுஞ் சில அவதாரங்களும் இல்லாமற்போயிற்றே! என்று வருந்தினராம்.
(அருளினான் அவ்வருமறையின் பொருள்.)
வேதார்த்தங்களை ஆழ்வார் அருளிச் செய்தாரென்றால்,
‘வேதத்தை மொழி பெயர்த்தாரா? அல்லது தூக்குத் தொகையாக வேத தாத்பரியங்களை எடுத்துரைத்தாரா?’
என்று விகற்பித்துக் கொண்டு
வேதத்தில் ஒரு பஞ்சாதியினுடைய அர்த்தமும் திருவாய்மொழியின் ஒருபாட்டிலும் ஆநுபூர்வியாகக் காணப்படாமையால்
மொழிபெயர்த்தாரென்ன முடியாது;
இனி, தாற்பரியம் உரைத்தாரென்னில்; அதுவும் பொருந்தாது;
எங்ஙனேயெனில்;
வேதம் கர்மகாண்டம் என்றும் ப்ரஹமகாண்டம் என்றும் இரண்டு பாகமாக வகுக்கப்பட்டுள்ளது;
அவற்றுள் கர்ம காண்டத்தின் தாற்பரியம் ஒரு பாட்டிலும் காண முடியாது;
ப்ரஹ்ம காண்டத்தின் தாற்பரியமும் உபநிஷத்துகளிற் சொல்லுகிற பத்ததி வேறு;
திருவாய்மொழியிற் சொல்லுகிற வழி வேறு; அதற்கும் இதற்கும் யாதொரு ஸம்பந்தமும் இல்லை;
ஆதலால் வேதந் தமிழ் செய்தனரென்கை எவ்வித்திலுங் கூடாது’ என்று சில பாமரர் மறுத்துக் கூறுவர்;
இதைப்பற்றி நாம் “த்ராவிட வேத ரஹஸ்ய ஸர்வஸ்வம்” என்னும் க்ரந்தத்திலே பாக்கச் சொல்லியிருக்கிறோம்.
இங்கே சுருங்கச் சொல்லுகிறோம்.
வேதந் தமிழ் செய்தார் என்பதற்கு வேதத்தின் தாற்பரியங்களை ஐயந்திரிபற அழகாக விளக்கிக் காட்டினார் என்பது கருத்தாம்.
வேதத்தின் உண்மைய் பொருளறியாதார் பலர் –
தத்ரைவ கேபி சபலாச் சலபீபவந்தி” என்றபடி வேத வாக்கியங்களுக்கு அபார்த்தங்கள் பண்ணி,
ப்ரபஞ்சமே முழுப் பொய்’ என்பதும் ‘ஈச்வரனே கிடையாது’ என்பதும்,
‘ஈச்வரன் மாயாதி ரோஹித ஸ்வ ஸ்வரூபனாய்த் தானே ஸம்ஸரிக்கிறான்’ என்பதும்,
‘மூல ப்ரக்ருத்யாதிகளே ஜகத் காரணம்’ என்பதும்,
‘தேவ தாந்தரங்களே பர தைவம்’ என்பதும்,
‘ஸ்ரீமந் நாராயணனுக்கு குணமில்லை, விக்ரஹமில்லை, விபூதியில்லை’ என்பதுமாய்
இப்படி வேதங்களை ரஸாபாஸப்படுத்தி அலைத்து விட்டபடியால் அந்த வேதங்களின் உண்மைப் பொருளைக்
கையிலங்கு நெல்லிக் கனியாகக் காட்ட வல்ல திருவாய்மொழியும் அதற்கு அங்கோபாங்கங்களான
மற்றுமுள்ள திவ்ய ப்ரபந்தங்களும் வேத ரஹஸ்யமாகவும் வேதோபப்ரும்ஹணமாகவும் சொல்லப்படுகின்றன.
ஸ்ரீதேசிகனும்
“பொய்கை முனி….மங்கையர் கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்,
செய்ய தமிழ்மாலைகள் நாந்தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்ற பாட்டால்
இக்கருத்தை விளக்கியருளினார்.
“பாஷ்யகாரர் இதுகொண்டு ஸுத்ர வாக்யங்களொருங்கவிடுவர்” என்பது ஆசார்ய ஹ்ருதயம்.
அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்த ஜக கண்ட்ய க்ரந்தமும் நோக்கத்தக்கது. நிற்க.
அருளினான் என்பதும், பாடினான் என்பதும்-வினையாலனையும் பெயர்கள் ஆறாம் வேற்றுமைத் தொகையும்.
இவ்வுலகினில் என்பதை ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதிலும் ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு,
ஆழ்வாருடைய அருள் இந்த லோகத்திற் காட்டிலும் பெரிது என்றுரைப்பதும் ஒக்கும்.
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் செய்த படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலை கடலிடையில் துயில்வோன்
அலைகடல் குறு முனி கையில் அடக்கம்
குறு முனியோ எனில் கலசப் பிறவியோன்
கலசமோ புவிதனில் கண்டதோர் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ சிவபிரான் பாகத்து ஒடுக்கம்
சிவனோ திருமால் திருவடி ஒடுக்கம்
திருமால் தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டருள் பெரியோர் தூய சடகோபர்
சடகோபர் அருள் சகத்தினும் பெரிதே -என்றார் பாகவத கவிவரர்
அன்றி, இவ்வுலகிலே என்று ஏழாம் வேற்றுமையாகவே கொண்டு,
“அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்ற சொல்லமைப்பு நயத்திற்கேற்ப
‘பாசுரம் மிக்கது பரமபதத்திலே, அருள் மிக்கது இவ்வுலகத்திலே’ என்றுரைப்பதும் சிறக்கும்.
அதாவது-
“கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்றபடி-திருவாய்மொழியை
நித்யஸுரிகள் விசேஷமாக ஆதரிப்பதனால் திருவாய்மொழியின் பெருமை பரமபதத்தில் ஓங்குகின்றது;
அத்திருவாய்மொழியை அருளிச்செய்வதற் குறுப்பான ஆழ்வாருடைய அருள் மாத்திரமே இவ்வுலகில் நிலாவுகின்றது என்றபடி.
——————————————————————————-
கருங்கல்லைத் துளைத்துக் குழியாக்கி அதிலே நீரைத் தேக்குவாரைப் போலே அதிமந்தமான என் நெஞ்சிலே
வேதாந்த விழுப்பொருள்கள் நன்கு பதியும்படி திருவாய்மொழியை அருளிச்செய்த ஆழ்வார் திறத்திலே
ஆட்செய்ய வேணுமென்று நான் ஆசைப்பட்டது அந்த க்ஷணத்திலேயே பல பர்யவஸாயியாயிற்று! என்று
தாம் பெற்ற பேற்றின் பெருமையைப் புகழ்கிறார்.
மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்குஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே.
பதவுரை
மிக்க வேதியர் வேதத்தின்–சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளானது
நிற்க-நிலை நிற்கும்படி
பாடி–(திருவாய்மொழியைப் பாடி)
என் நெஞ்சுள்–என்னுடைய ஹ்ருதயத்திலே
நிறுத்தினான்–(அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸூப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் (ஆழ்வார்);
தக்க சீர்–தகுதியான குணங்களை யுடையராய்
சடகோபன்–சடகோபனென்ற திரு நாமத்தை யுடையரான
என் நம்பிக்கு–(அந்த) ஆழ்வார் விஷயத்திலே
ஆள்புக்க–அடிமை செய்வதற்கு உறுப்பான
காதல்–ஆசையானது
அன்றே–அந்த க்ஷணத்திலேயே
அடிமைப் பயன்–(ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து.
ஆழ்வார் பகவத் விஷயத்திலே ஆழங்காற்பட்டு
“இனியாமுறாமை”
நெடுநாள் கழித்தே “உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்” என்றும்
“அவாவற்று வீடுபெற்ற” என்றும் சொல்லும்படி மநோரதஸித்தியில் விளம்பமாயிற்று.
இம்மதுரகவிகளுக்கோ அப்படியில்லை.
இவர் ஆழ்வார் திருவடிகளில் சேஷபூதராகப் பெற்ற க்ஷணமும்,
இவ்வாழ்வார்க்கே நித்ய கைங்கரியம் பண்ண வேணுமென்று மநோரதித்த க்ஷணமும்
அந்த மநோ ரதம் ஈடேறப் பெற்று நித்ய கைங்கரியம் வாய்த்த க்ஷணமும் ஆகிய இம்மூன்று க்ஷணமும்
ஒரேக்ஷணமாய்த்து இவர்க்கு:
இடையிற் சிறிது விளம்பமும் இல்லை என்னுமிதனால்,
பகவத் ப்ராவண்யத்திற் காட்டில் பாகவத ப்ராவண்கத்திற்குள்ள
ஏற்றம் சொல்லிற்றாயிற்று.
“கோளரியை வேறாக வேத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்” என்றார் திருமழிசைப்பிரானும்.
மிக்க என்ற அடைமொழி வேதத்துக்குமாகலாம், வேதியர்க்குமாகலாம்.
வேதத்துக்கு ஆகும்போது
“சுடர்மிகு சுருதியுள்” என்ற ப்ரமாணங்களில் தலை நின்ற வேதம் என்றபடி.
வேதியர்க்கு ஆகும் போது,
அல்பச்ருதரன்றிக்கே பஹூச்ருதராய் வேதத்தை வஞ்சிக்க கில்லாத பரமை காந்திகள் என்றபடி.
வேதியர் வேதம் என்றது-
வைதிகர்களால் ஒதப்பட்டு அதுவே காரணமாக சாகா பேதங்களையும்
காடகம் காண்வம் தைத்திரீயம் இத்யாதி நாம பேதங்களையும் அடைந்த வேதமென்றபடி.
வேதியர்களுடைய வேதம் என்று ஆறாம் வேற்றுமைத் தொகை:
“ஓதுவாரோத்தெல்லாம்” என்ற திருவாய்மொழிப் பாசுரத்திற் போல
‘நுட்பொருள்’ என்று பிரித்து, வேதத்தின் ஸூக்ஷ்மமான பொருள் என்றுமுரைப்ப..
“வேதத்தினுட் பொருள் நிற்கப் பாடி” என்பதற்குப் பரம ரஸமாக ஒரர்த்தமுண்டு.
அதாவது “வேதப்பொருளே! என் வேங்கடவா!!” என்றபடி வேதத்தினுட்பொருள்-ஸாக்ஷாத் ஸர்வேச்வரன்;
அவன் நிற்கப்பாடி என்றது சில குதர்க்கிகள் மறை குலையச் சாதுசனங்களடங்க நடுங்கத் தருக்கச் செருக்காலே
எம்பெருமானுடைய பரத்வத்தை இல்லை செய்தவளவிலே,
எம்பெருமான் அது கண்டு “நாஹம் நாஹம் நசாஹம்” என்றாற்போலே ‘நான் பரதத்வமல்லேன்’ என்று பிற்காலித்து ஓடப்புக,
ஆழ்வார் *ஒன்றுந் தேவாகிற மாவட்டியை யிட்டு அவ்வெம்பெருமானாகிற மத்த கஜத்தை ஓடவொட்டாதே
நிலை நிறுத்திப் பரத்வ ஸ்தாபநம் பண்ணினமையைக் கூறியவாறு.
இக்கருத்து ஆழ்வாருடைய “பராங்குசன்” என்ற திருநாமத்திலும் தோற்றும்;
பர-பரமபுருஷனுக்கு, அங்குசன்-மாவட்டி போன்றவன்.
“வலக்கையாழி யிடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்ற திருவாய்மொழியிலும்
இக்கருத்து உறையுமாறு காண்க.
ஆட்புக்க காதல்–
புக்க என்னும் பெயரெச்சம் காரியப்பொருளதாய்,
ஆள் புகுவதற்குக் காரணமான காதல் என்றதாம்:
‘நோய்தீர்ந்த மருந்து’ ‘நின்னைக் காணும் அவா’ என்ற விடங்களிற்போல.
அடிமைப் பயன் என்றது –
அடிமையைப் பயனாக வுடையதென்று பொருள் படுதலால் அன்மொழித்தொகை.
அன்றே என்றது – “அன்றெனக்கிளவி ஆமெனத்தகுமே” என்றபடி
ஆம் என்னும் பொருளதாக உரைத்தலுமொன்று.
ஆழ்வார் திறத்தில் சேஷத்வம் முற்படக் காதலை (கைங்கர்ய ருசியை) விளைத்து உடனே
கைங்கர்ய ரூப புருஷார்த்த ஸித்தியில் மூட்டிவிடும். என்பது நான்காமடிக்குத் தேர்ந்த பொருள்.
————————————————————————–
ஆசார்யர்கள், அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யரென்றும் க்ருபாமாத்ர ப்ரஸந் நாசார்யரென்றும் இருவகைப்படுவர்.
சிஷ்யன் பலகாலும் அநுவர்த்தித்தால் பின்பு அருள்புரிந்து அந்த ஸிஷ்யனை
அநுக்ரஹிப்பவர்கள் அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யர் எனப்படுவர்;
திருக்கோட்டியூர் நம்பி போல்வார். எம்பெருமானார், கோயிலுக்கும் திருக்கோட்டியூர்க்கும் பதினெட்டு தடவை நடந்து
வருந்தின பின்புதானே திருக்கோட்டியூர் நம்பி ப்ரஸந்நாராயருளினார்.
அங்ஙனன்றியே,
ஒருவன் அநுவர்த்தியாவிடினும் அதற்குமேல் விமுகனுமா யிருந்தாலும் முலைக்கடுப்பாலே
தரையிலே பீச்சுவாரைப்போலே அவனே அநுக்ரஹூப்பதைத் தம் பேறாக நினைத்துத் தாங்களே அவனைப் பலகாலும்
அநுவர்த்தித்துத் திருத்திப் பணிகொள்ளுமாசிரியர் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ரெனப்படுவர்;
எம்பெருமானார், நம்பிள்ளை போல்வார்.
அப்படிப்பட்ட ஆசார்யத்வ பூர்த்தியை மதுரகவிகள் நம்மாழ்வார் திறத்திலே ஸ்வாநுபவத்தாற் கண்டறிந்தவராதலால்
அக்குணத்திலே ஈடுபட்டுப் பேசுகிறார்.
“தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்களுக்குமே இவையுள்ளது”
(ஆச்சர்யஹ்ருதயம்-3-வது ப்ரகரணம்;.) என்ற ஸ்ரீஸூக்தியின் பொருள் இங்கு அநுஸந்திக்கத் தக்கது.
(தாய்-ஸீதை; மகன் -ப்ரஹ்லாதன் தம்பி-விபீஷணன்; இவர்-நம்மாழ்வார்; இவரடிபணிந்தவர் -எம்பெருமானார்.)
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே
பதவுரை
பயன் அன்று ஆகிலும்-(பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும்
பாங்கு அலர் ஆகிலும்–(அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும்
செயல்–தமது அநுஷ்டாகத்தாலே
நன்றாக திருத்தி–நன்றாக சிக்ஷித்து
பணி கொள்வான்–(அவர்களை) ஆட்கொள்வதற்காக
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர்–குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற
சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற)
நம்பி!-ஆழ்வாரே!
உன் தன்–தேவரீருடைய
மொய் கழற்கு–சிறந்த திருவடிகளில்
அன்பையே–அன்பு உண்டாவதைக் குறித்தே
முயல்கின்றேன்–முயற்சி செய்கின்றேன்.
உலகத்திலே ஸமாக்யமாக ஒருவன் ஒருவனுக்கு ஓருதவி செய்வது ஒரு கைம்மாறு பெறக் கருதியேயாம்;
ஆழ்வார் தம்முடைய அநுக்ரஹத்துக்கு ஒருவனை இலக்காக்குவது அங்ஙன் ஒரு பயனைக் கருதியன்று;
கருதினாலும் அவனால் ஒரு பயனும் பெறுவிக்கவும் முடியாது.
அப்படிப்பட்ட நிஷ்பல ஜந்துவையாய்த்து ஆழ்வார் அநுக்ரஹிப்பது என்கிற அர்த்தம்
பயனன்றாகிலும் என்பதில் அடங்கியுள்ளது.
பாங்கலராகிலும் என்றது- அநதிகாரிகளாகிலும் என்ற படி.
பழுதே பலபகலும் போக்கித்திரியும் ஸம்ஸாரிகளைத் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார்
இந்த வணங்காமுடி ஸம்ஸாரிகளோடு மாரடித்துக் கொள்ள இறாய்த்து
“ஆரானுமாதானுஞ் செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே?” (பெரிய திருவந்தாதி) என்று
வெறுத்துக் கை வாங்கினாலும் பின்னையும் அவர்களை விடமாட்டாதே
“சொன்னால் விரோத” மித்யாதிகளாலே பல்லாயிரமுறை உபதேசித்துத் திருத்தப் பார்த்தது
இவருடைய க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை நன்கு விளக்கவற்றன்றோ.
பணி கொள்வான் என்பதை
வான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சமாகக்கொண்டு,
‘திருத்திப் பணி கொள்வதற்காக’ என்று உரைத்தோம்.
இவ்வினை யெச்சம் எவ்வினையைக் கொண்டு முடிகின்றதென்னில்;
குருகூர் நம்பி என்றதற்குக் ‘குருகூரிலே எழுந்தருளியிருக்கிற நம்பி’ என்று பொருளாதலால்
‘எழுந்தருளியிருக்கிற’ என்று வருவிக்கப்பட்ட பெயரெச்சத்தின் பகுதியான எழுந்தருளும் வினையைக் கொண்டு முடியுமென்க.
அன்றி,
நம்பி என்னும் பெயர், நம்பு என்னும் வினையடியாப் பிறந்ததாதலால் அவ்வினையைக் கொண்டு
முடியுமென்பதும் சாலப்பொருத்தமுடைத்தாம்.
“நம்பும் மேவும் நசையாகும்மே.”
திருத்திப் பணி கொள்வதற்காகத் திருக்குருகூரை மேவியிருப்பவரென்கை.
இனி, ‘பணிகொள்வான்’ என்பதை
வினையாலணையும் பெயராகக் கொண்டு,
பணி கொள்பவனான குருகூர்நம்பி என்று இயைத்தால் குற்றமென்? என்று கேட்பீர்; கேண்மின்:
இங்கு நம்பி! என்பது அண்மை விளி; முதல் வேற்றுமை யன்று: ஆகவே முன்னிலை யாதலால்
அதற்கேற்பப் ‘பணி கொள்வாய்’ என்று இருந்தால் நன்கு பொருந்தும்;
கொள்வான் என்று படர்க்கையாயிருத்தலால் சிறிது வருத்தப்பட்டுப் பொருத்த வேணுமே.
“குயில்நின்று ஆர் பொழில் சூழ்” என்றும் ஓதுவர்.
“அன்பே முயல்கின்றேன்” =
நீர்செய்த மஹோபகாரத்துக்கு நான் அது ரூபமாகச் செய்வதொரு ப்ரத்யுபகார மில்லையாயினும்
தேவரீருடைய திருவடிகளில் பரிபூர்ணமான அன்பையாவது அமைக்கலாம்; அதுவுமில்லை;
‘ஆழ்வார் திருவடிகளில் அன்பு வைக்க வேணும் அன்பு வைக்க வேணும்’ என்கிற
யோசனையும் முயற்சியுமாயே யிருக்கிறதேயன்றி முற்றின அன்பு அமைந்திலது என்றபடி.
————————————————————————-
நம்மாழ்வார் விஷயத்திலே பரமபக்தி பரீவாஹமாக வெளிவந்த இக் கண்ணி நுண் சிறுத்தாம்பை
மஹா விச்வாஸத்துடன் ஒத வல்லவர்கள் பரம பதத்திலே போய் ஆழ்வார் திருவடி நிழலிலே வாழப் பெறுவர்
என்று பல ச்ருதியோடே பிரபந்தத்தை நிகமநஞ் செய்தருளினர்.
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே.
பதவுரை
அன்பன் தன்னை–ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை
அடைந்தவர்கட்கு எல்லாம்–ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும்
அன்பன்–பக்தியை யுடையரான
தென் குருகூர் நகர் நம்பிக்கு–நம்மாழ்வர் விஷயத்திலே
அன்பன் ஆய்-பக்தனாயிருந்து கொண்டு
மதுரகவி சொன்ன சொல்-மதுரகவி அருளிச் செய்த இத் திவ்வியப் பிரபந்தத்தை
நம்புவார்-(தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு
பதி–வாஸஸ்தாநமாவது
வைகுந்தம் காண்மின்-பரம பதமாம்.
“அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லா மன்பன்” என்னு மிவ் வடை மொழி
ஆழ்வார்க்குமாகலாம், மதுரகவிகளுக்கும் ஆகலாம்.
ஆழ்வார்க்கு ஆகும் போது –
“பயிலுந் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்” என்றபடி சாதி ஒழுக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சியின்றியே
பகவத் பக்தி மாத்திரத்தையே பற்றாசாகக் கொண்டு ஸகல பாகவதரிடத்தும் அன்பு மிக்க ஆழ்வார் என்றதாகிறது.
மதுரகவிகளுக்கு அந்வயித்தால்-
பாகவதர் எல்லாரளவிலும் வைத்திருந்த அன்பை ஆழ்வாரொருவரளவிலே மடுத்த மதுரகவி என்று கருத்தாகக் கடவது.
(வைகுந்தவங் காண்மினே.)
ஆழ்வாரே உத்தேச்யமாகில் ஆழ்வார் திருநகரியன்றே பதியாக வேணும்;
பரம பதத்தைப் பதியாகச் சொல்லுவானேன்? என்னில்; (நம்பிள்ளையீடு)
“திருநகரியில் ஆழ்வாராணையும் பொலிந்து நின்ற பிரானாணையும் இருபுரியா யாய்த்துச் செல்லுவது;
அங்ஙனன்றியே ஆழ்வாராணையே செல்லும் தேசம் பரமபதமேயிறே:
‘அடியார் நிலாகின்ற வைகுந்தம்’ என்றும்,
‘வானவர் நாடு’ என்றுஞ் சொல்லக்கடவதிறே –
இத்தால் ஆழ்வார் ஏகபோக ‘ஸாம்ராஜ்யமாக ஆளுகிற பரம பதமே
ஆழ்வாரடியார்கட்கு வஸ்தவ்ய தேசமாக விதிக்கத்தகு மென்றதாயிற்று.
இங்ஙனன்றியே,
வைகுந்தமென்று தனியே ஒரு தேச விசேஷத்தைச் சொன்னபடியன்று;
ஆழ்வாரெழுந்தருளி யிருக்குமிட மெதுவோ அதுதான் வைகுந்தம் என்பராம் நம்பி திருவழுதிவளநாடு தாஸர்.
“ஒராயிரத்துளிப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகுந் தம்மூரல்லாம்” (திருவாய்மொழி.) என்றதிறே.
கூரத்தாழ்வான் திருக்குமாரர் பட்டர் திருவவதரித்த பின்பு விண்ணுலகென்றும் மண்ணுலகென்றும் ஒருவாசியின்றி
இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒரு போகியாய்த்து என்று நம்பிள்ளை கோஷ்டியில்
பலகாலும் ப்ரஸக்தமாமென்பது இங்கு அறியத்தக்கது.
(மதுரகவி)
ஆசுகவி, சித்ரகவி, விஸ்தாரகவி, மதுரகவி என்று கவிகள் நால்வகைப்படுவர்;
அவர்களுள் இவர் இனிமையாகப் பாடுபவரென்பது பற்றி மதுரகவி யென்று திருநாமம் பெற்றார்.
இவருடைய பிரபந்தம் ஆழ்வார்கள் அருளிச்செயலோடு சேர்ந்து திவ்ய ப்ரபந்தமென்ற சிறப்புப் பெயரைப் பெற்றாற் போல
இம்மதுரகவிகளும் ஆழ்வார் கோஷ்டியிற் சேர்ந்து மதுரகவியாழ்வார் என்று ஆழ்வார் பட்டம் பெற்றமை
உபதேசரத்தினமாலையில் தோன்றும்.
“ஆழ்வார் திருமகளாராண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள்” என்றும்,
“ பாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார் எதிராசர் தோன்றிய வூரிங்கு” என்றுமுள்ள பாசுரங்களே நோக்குக.
ஆழ்வார்களிற் சிலரைக் குலசேகரப் பெருமாள், பாண் பெருமாள் என்பது போல மதுரகவிப் பெருமாள் என்றாருமுளர்;
“மனறே புகழுந் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்சென்றே மதுரகவிப் பெருமாள்” (சடகோபரந்தாதி) என்றார் கம்பநாடர்.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்