அவதாரிகை –
பிரதம ரகஸ்யமான திரு மந்த்ரத்தினுடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம்-அதில்
மத்யம பதத்தாலும் த்ருதீய பதத்தாலும் பிரதி பாதிக்கப் பட்ட -உபாய உபேயங்களை விசதமாக
பிரதி பாதியா நின்றுள்ள த்வ்யத்தினுடைய அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
முன்பு அருளிச் செய்த மூன்று பிரபந்தங்களிலும் -யாத்ருச்சிக்கப்படி-பரந்தபடி-ஸ்ரீ யபதிப்படி –
திரு மந்திர அநந்தரம் சரம ஸ்லோகத்தை அருளிச் செய்து பின்பு த்வயத்தை அருளிச் செய்தவர் –
இப்போது முந்துற த்வயத்தை அருளிச் செய்வான் என்-என்னில் -இரண்டு பிரகாரமும் அருளிச் செய்யலாய்
இருக்கையாலே –
ஆச்சான் பிள்ளை -வாதி கேசரி ஜியர் முதலானோரும் இந்த பிரகாரம் இறே அருளிச் செய்தது –
இவ் விரண்டு பிரகாரமும் தனக்கும் கருத்து என் -என்னில் சரம ஸ்லோகம் முன்னாக த்வயத்தை சொல்லுகிறது –
விதி அனுஷ்டான ரூபங்களாய் இருக்கையாலே -விதி முன்னாக அனுஷ்டானத்தைச் சொல்லுகை ப்ராப்தமாக
இருக்கையாலும் –
திருமந்தரம் ப்ராப்ய பரமாய்
சரம ஸ்லோகம் பிராபக பரமாய்
த்வயம் உபயத்தினுடையவும் அனுஷ்டான பிரதிபாதமாய் இருக்கையாலும்
த்வயம் முன்னாக சரம ஸ்லோகத்தைச் சொல்லுகிறது –
திரு மந்த்ரத்தில் மத்யம த்ருதீய பதங்களுக்கு வாக்ய த்வயம் விவரணமாய் –
அது தனக்கு சரம ஸ்லோகத்தில் அர்த்த த்வயம் விவரணமாய் இருக்கும் ஆகாரத்தாலே –
ஆன பின்பு இரண்டு பிரகாரமும் -அனுசந்திக்கத் தட்டில்லை –
அதில் ஒரு பிரகாரத்தை மூன்று பிரபந்தங்களிலும் அருளிச் செய்தவர் ஆகையாலே –
மற்றை பிரகாரத்தையும் அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
திருமந்த்ரார்த்தம் அருளிச் செய்த அநந்தரம் த்வ்யார்த்தத்தை அருளிச் செய்கிறார் –
————————————————————-
புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும் –
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும் –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் –
பேற்றுக்கு த்வரிக்கையும் –
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களிலே ப்ரவணனாய்-குண அனுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்காயும் –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –
திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதனாகையும் –
ஆசார்ய ப்ரேமம் கனத்து இருக்கையும் –
ஆச்சார்யன் பக்கலிலும் -எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய் போருகையும் –
ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையவனாய் இருக்கும் பரம சாத்விகனோடே
சஹ வாசஹம் பண்ணுகையும்-
வைஷ்ணவ அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதம்-சூரணை-116-
அதில் பிரதமத்தில் வைஷ்ணவனாய் இருப்பான் ஒருவனுக்கு ஸ்வ அதிகார அர்த்தமாக
அவஸ்ய அபேஷிதமாய் உள்ளவற்றை ஸூக்ரகமாக அருளிச் செய்கிறார் –
புறம்புண்டான பற்றுக்களை வாசனையோடு விடுகையாவது –
பிதரம் மாதரம் தாரான்-இத்யாதி படியே-பாஹ்ய விஷய சங்கங்களை அடைய
மறுவலிடாதபடி ச வாசனமாக விடுகை
(இது ஸரணாகதி ப்ரகரணம் ஆகையால் ஸரணாகதி கத்யம் போல் இங்கும் -பிதரம் மாதரம் தாரான்-என்கிற வசனத்தை உதாஹரித்து அருளுகிறார்)
(பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத்நாதி தான தான்யானி ஷேத்ராணி ஸ் க்ருஹாணி ச
சர்வ தர்மாம்ச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் –
லோக விக்ராந்த சரனௌ தேவ்ரஜம் விபோ–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -6)
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகை யாவது –
வேறு ஓன்று தஞ்சம் என்கிற நினைவு கலசாத படி –
நிருபாதிக ரஷகனான சர்வேஸ்வரனையே தஞ்சம் என்று ஸ்வீகரிக்கை-
இவ் இரண்டு வாக்யத்தாலும் சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அர்த்தத்தை சொல்லுகிறதாகவுமாம்-
எங்கனே என்னில் –
புறம்புண்டான பற்றுக்களை அடைய -என்று -சர்வ தர்மான்-என்கிற பதத்தில் அர்த்தத்தையும் –
வாசனையோடு விடுகையும் -என்று -பரித்யஜ்ய -என்கிற பதத்தில் அர்த்தத்தையும் –
எம்பெருமானை -என்று -மாம் -பதத்தில் அர்த்தத்தையும் –
ஏ-என்கிற ஏவகாரததாலே-ஏக -பதத்தில் அர்த்தத்தையும் –
தஞ்சம் -என்கையாலே -சரண் -பதத்தில் அர்த்தத்தையும் –
பற்றுகையும் -என்று -வ்ரஜ -பதத்தில் அர்த்தத்தையும் –
அடைவே சொல்லுகையாலே –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை யாவது -உபாய பல்குத்வமும் –
உத்தேச்ய துர்லப்த்வமும் -ஸ்வ கிருத தோஷ பூயத்ஸ்வமும் அடியாக வரும்
சங்க த்ரயமும் இன்றிக்கே பலம் தப்பாமல் சித்திக்கும் என்று விஸ்வசித்து இருக்கை –
பேற்றுக்கு த்வரிக்கை யாவது -இப்படி விஸ்வசித்து -பேறு சித்திக்கும் போது காண்கிறோம் -என்று
இருக்கை அன்றிக்கே -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்–திருவாய்மொழி -என்றும் –
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –திரு வாய் மொழி -என்கிறபடியே –
க்ரம ப்ராப்தி பற்றாமல் பதருகை-
ஆக இவை இரண்டாலும் -உபாய உபேய அதிகார அபேஷிதங்களான–மகா விசுவாசத்தையும் ப்ராப்ய த்வ்ரையும் சொல்லுகிறது –
(ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-8-7–)
(ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-)
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்கை யாவது -பரம பதத்திலே போய் பகவத் அனுபவ
கைங்கர்யங்களைப் பண்ணுகை யாகிற பேற்றில் த்வரை நடவா இருக்கச் செய்தேயும் –
இச் சரீரத்தோடே இருக்கும் நாள் -தானுகந்த ஊர் –திரு நெடும்தாண்டகம் -என்கிறபடியே சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற
திவ்ய தேசங்களிலே -கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லி –திருக் குறும் தாண்டகம் -என்று மண்டுகை யாகிற
ப்ராவண்யத்தை உடையனாய் -அவ்வோ திவ்யதேசங்களிலே நிற்கிறவனுடைய கல்யாண குண அனுபவமும் –
அதடியாக கரண த்ரயத்தாலும் அவன் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமும் கால ஷேப விஷயமாம் படி இருக்கை –
(அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-)
(பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-)
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கை யாவது –
கீழ்ச் சொன்ன இவ் ஆகாரங்கள் எல்லாம் உடையராய் இருக்கும் வைஷ்ணவர்களை கண்டால் –
இந்தளத்திலே தாமரை பூத்தால் போலே -இந்த விபூதியிலே இங்கனேயும் சிலர் உண்டாவதே என்று
அவர்கள் வைபவத்தை அறிந்து -அவர்கள் அளவில் ப்ரீதி உக்தனாய் இருக்கை –
கீழ் சொன்னவை எல்லாம் உண்டானாலும் உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று இறே இது –
(இவ் ஆகாரங்கள் எல்லாம் உடையராய் இருக்கும் வைஷ்ணவர்களை கண்டால்-என்றது
ஸர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக ம்பெருமானை உபாயமாகப் பற்றுகையும்
விச்வாஸ பாஹுல்யமும்
ப்ராப்ய த்வரையும்
திவ்ய தேசங்களில் ப்ராவண்யமும்
அங்குள்ள எம்பெருமானுடைய குண அனுபவ கைங்கர்யங்களே போது போக்காய் இருக்கையும் போன்றவை
இந்த விபூதியிலே இங்கனேயும் சிலர் உண்டாவதே-என்கையாலே இவ்வதிகாரிகளுடைய த்வர்பல்யமும் பிரார்த்தநீயத்வமும் தோற்றும்)
திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதன் ஆகையாவது -மந்த்ராந்தரங்களின் உடைய அருகும் மறந்தும் போகாதே
த்யாஜ்ய உபாதேயங்களைத் தெளிய அறிவிக்கும் திருமந்த்ரத்திலும் –
அதன் அர்த்தத்துக்கு விவரணமான த்வயத்திலும் நிஷ்டனாய் இருக்கை-
ஆச்சார்ய ப்ரேமம் கனத்து இருக்கை -யாவது
கீழ்ச் சொன்ன ஆகாரத்தை எல்லாம் உபதேசத்தாலே தனக்கு உண்டாக்கின ஆச்சார்ய
விஷயத்தில்-யஸ்ய தேவே பரா பக்திர் யேதா தேவே ததா குரௌ-என்கிறபடியே
ப்ரேமம் அதிசயித்து இருக்கை –
(யஸ்ய தேவே பரா பக்திர் யேதா தேவே ததா குரௌ–யாவன் ஒருவனுக்கு தேவர் பக்கலிலே பரமான பக்தி இருக்கிறதோ
அந்த தேவர் பக்கலிலே போலே குருவின் பக்கலிலும் அதே பரமமான பக்தி இருக்கிறதோ
அந்த மஹாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அர்த்தங்கள் பிரகாஸியா நிற்கும்)
ஆச்சார்யன் பக்கலிலும் -எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய் போருகை யாவது –
நித்ய சம்சாரியான தன்னை நித்ய ஸூரிகள் பேற்றுக்கு அர்ஹனாம் படி -இரும்பைப் பொன்னாக்குவாரைப் போலே –
திருத்தின ஆச்சார்யன் பக்கலிலும் -அத்வேஷாதிகளை விளைத்து கொண்டு வந்து ஆச்சார்ய விஷயத்தோடே சேர்த்த
எம்பெருமான் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி உடையனாய் போருகை –
ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் பரம சாத்விகனோடே சகவாசம் பண்ணுகை-யாவது
தான் கலங்கினாலும் கலங்காமல் நோக்குகைக்கு உறுப்பாகவும் –
கீழ்ச் சொன்ன ஆகாரங்கள் தனக்கு வர்திக்கைக்கு உறுப்பாகவும் –
தத்வ யாதாத்ம்ய ஞானமும் -அப்ராப்த விஷய விரக்தியும் -இவை தான் இரண்டும்
நமக்கு உண்டு என்று இறுமாப்பு அற்று இருக்கை யாகிற சாந்தியும் –
உடையனாய் இருக்கும் பரம சத்வ நிஷ்டனாய் இருப்பான் ஒரு பாகவதனோடே கூடே வசித்துப் போருகை –
வைஷ்ணவ அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதம் என்றது -இவை இத்தனையும்
வைஷ்ணவன் என்று இருப்பான் ஒரு அதிகாரிக்கு அவசியம் உண்டாக வேணும் -என்கை-
——————————————————————-
இந்த அதிகாரிக்கு ரகஸ்ய த்ரயமும் அனுசந்தேயம் –சூரணை-117-
இப்படி இருக்கும் இவனுக்கு அனுசந்தான விஷயம்-வகுத்து அருளிச் செய்கிறார் மேல்-
அதாவது –
கீழ் சொன்ன ஆகாரங்களை உடையனாய் இருக்கும் இவ் அதிகாரிக்கு அந்த ஞான அனுஷ்டானங்களுக்கு
வர்த்தகமான ரஹஸ்ய த்ரயமும் அனுசந்தான விஷயமாக வேணும் -என்கை-
————————————————————
எல்லா பிரமாணங்களிலும் தேஹத்தாலே பேறு என்கிறது –
திரு மந்த்ரத்திலே ஆத்மாவால் பேறு என்கிறது-
சரம ஸ்லோகத்திலே ஈஸ்வரனாலே பேறு என்கிறது –
த்வ்யத்தில் பெரிய பிராட்டியாரால் பேறு என்கிறது –சூரணை-118-
இனி த்வ்யத்தில் சொல்லுகிற அர்த்தத்தின் வீறுடைமையை அறிவிக்கைக்காக –
சாஸ்திரம் -திரு மந்த்ரம் -சரம ஸ்லோகம் இவற்றில் சொல்லுகிற பிரகாரங்களை அருளிச் செய்து கொண்டு சென்று –
பின்னை அது தன்னை அருளிச் செய்கிறார் –
அதாவது –
சேதனுடைய விசிஷ்ட வேஷத்திலே நோக்கான சகல சாஸ்திரங்களிலும் –
சாதன அனுஷ்டான போக்யமான தேஹத்தாலே இவனுக்கு புருஷார்த்த லாபம் என்கிறது –
நிஷ்க்ருஷ்ட வேஷத்திலே நோக்கான திரு மந்த்ரத்திலே இவன் ஸ்வ ரஷணத்தில் நின்றும்
கை வாங்கினால் ஒழிய ஈஸ்வரனுடைய ரஷகத்வம் ஜீவியாமையாலே -தத் பிரவ்ருத்தி விரோதியான
ஸ்வ பிரவ்ருதியை விட்டு இருக்கும் ஆத்மாவாலே புருஷார்த்த லாபம் என்கிறது –
(ஈஸ்வரனுடைய ரஷகத்வம்—ஸஹாயாந்தர ஸம் சர்க்க அசஹனாய் உபாய பூதனுடைய ரக்ஷகத்வம்
தத் பிரவ்ருத்தி-ஈஸ்வர ப்ரவ்ருத்தி)
ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தில் நோக்கான சரம ஸ்லோகத்தில் இவனுடைய ஸ்வீகாரமும் மிகையாம்படி
தானே கைக் கொண்டு ப்ராப்தி பிரதிபந்தக சகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு -தன் திரு அடிகளிலே
சேர்த்துக் கொள்ளும் ஈஸ்வரனாலே புருஷார்த்த லாபம் என்கிறது –
(ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமாவது -ஸகல சாஸ்திரங்களிலும் சாதன தயா விஹிதங்களான ஸர்வ தர்மங்களையும்
ஸ வாசனமாகத் த்யஜித்துத் தன்னைப் பற்றச் சொல்லுகை
ஸ்வீகாரமும் மிகையாம்படி–இவன் பண்ணும் ஸ்வீ காரமும் அநுபாயமாம்படி –அதிகமாம்படி -என்னவுமாம்
கைக் கொண்டு-அங்கீ கரித்து)
ஈஸ்வரனுடைய லஷ்மீ விசிஷ்ட வேஷத்திலே நோக்கான த்வயத்திலே -விசேஷண பூதையான
பெரிய பிராட்டியாராலே புருஷார்த்த லாபம் என்கிறது -என்கை-
—————————————————————–
பெரிய பிராட்டியாராலே பேறு ஆகையாவது -இவள் புருஷகாரம் ஆனால் அல்லது
ஈஸ்வரன் கார்யம் செய்யான் என்கை –சூரணை -119
உபாயம் ஈஸ்வரனாய் இருக்க -இவளாலே பேறு ஆகை யாது என்-என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்கள் இரண்டும் பண்ணுவான் ஈஸ்வரனாய் இருக்க –
பெரிய பிராட்டியாராலே இவனுக்கு பேறு ஆகை ஆகிறது -இவனுடைய அபராதத்தைப் பாராதே
ரஷிக்கும் படி இவள் புருஷகாரம் ஆனால் ஒழிய ஈஸ்வரன் இவன் கார்யம் செய்யான் -என்றபடி –
———————————————
த்வயத்துக்கு அதிகாரி ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உடையவன்-சூரணை -120-
கீழ் சாமான்யத்திலே வைஷ்ணவ அதிகாரிக்கு அபேஷிதங்கள் இறே சொல்லிற்று –
விசேஷித்து த்வயத்துக்கு அதிகாரியாமவனுக்கு அபேஷிதத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது சித்தோ உபாய வர்ண பிரதிபாதிகமான த்வயத்துக்கு அதிகாரி –
அகிஞ்சனோ அகதி -த்வமேவோ பாயபூதோமே பவ
அகிஞ்சனோ அநந்ய கதி சரண்யா -என்றும்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் -என்றும் சொல்லுகிறபடி
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் ஆகிய இரண்டும் உடையவன் என்கை –
(அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய அகிஞ்சனோ அகதி த்வமே உபாயபூதோ மே பவதி பிரார்த்தனா மதி சரணாகதி ரித்யுக்தா சா தேவேஸ்மின் பிரயுஜ்யதாம்)
(நான் அபராதங்களுக்கு எல்லாம் ஆலயமாகா நின்றேன்
அகிஞ்சனனாய் அகதிகனாகா நின்றேன்
நீ எனக்கு உபாயமாக வேணும் என்கிற பிரார்த்தனா ரூபா புத்தி ஸரணாகதி ஆகிறது
அது இந்தத் தேவன் பக்கலிலே பிரயோகிக்கப் படுவது)
(அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன் உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.-6-10-10)
———————————————————
இவை இரண்டும் பிரபந்த பரித்ராணத்திலே சொன்னோம்-சூரணை -121-
இவை இரண்டின் வேஷமும் தான் எங்கனே என்ன-அருளிச் செய்கிறார் –
அதாவது
உபாயாந்தர ராஹித்யமாகிற ஆகிஞ்சன்யத்தின் வேஷமும் –
ரஷகாந்திர ராஹித்யமாகிற அநந்ய கதித்த்வத்தின் வேஷமும் –
பிரபந்த பரித்ராணம் ஆகிற பிரபந்தத்திலே ஸூஸ்பஷ்டமாகச் சொன்னோம் –
அதிலே கண்டு கொள்க-என்கை-
(முமுஷூவாய் -மோஷார்த்தமாக-சர்வேஸ்வரனைப் -பற்றி இருக்குமவனுக்கு அநந்ய கதித்வமும் -ஆகிஞ்சன்யமும் வேணும் –
அநந்ய கதித்வம் ஆவது –களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்கிறபடியே
சர்வேஸ்வரனை ஒழிய வேறு ஒரு ரஷகர் இல்லை என்று இருக்கை-
(களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் எனதாவி சரிந்து போம்போது
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே.–திருவாய் -5-8-8)
ப்ராதாக்கள் புத்ரர்கள் மாதா பிதாக்கள் ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரஷகராகக் குறை என் என்னில்
ப்ராதாக்கள் ரஷகர் அல்லர் -வாலி பக்கலிலும் -ராவணன் பக்கலிலும் காணலாம் –
புத்ரர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் ருத்ரன் பக்கலிலும் கம்சன் பக்கலிலும் காணலாம் —
மாதா பிதாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் கைகேயி பக்கலிலும் ஹிரண்யன் பக்கலிலும் காணலாம் –
மாதா பிதாக்கள் யௌவன விரோதி என்று உபேஷித்தல்-ஷாம காலம் வந்தவாறே ஆள் பார்த்து தூற்றிலே பொகடுதல்-
விலை கூறி விற்றல் -ஆபத்து வந்தவாறே நெகிழ நினைத்தல்
அர்த்த ஷேத்ராதி களுக்காக எதிரிட்டுக் கொல்லுதல்-முடியும் அவஸ்தையிலே
சோர்வினால் பொருள் வைத்தது யுண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
ஈஸ்வரனை ஸ்மரித்துக் கரை மரம் சேர ஒட்டாதபடி அலைத்தல் முடித்தல் செய்யா நிற்பர்கள்-
ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்ராதிகள் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் –
(சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-)
இவர்கள் ரஷகர் அல்லரோ யாகிலும் நாட்டாருக்குக் கண் காட்டியாய்ப் போருகிற சந்திர ஆதித்யர்கள் ரஷகராகக் குறை என் -என்னில்
அவர்களும் ஈஸ்வர ஆஜ்ஞைக்கு அஞ்சி தாங்கள் நினைத்த படி சஞ்சரிக்கப் பெறாதே
நாழிகை கூறிட்டு -பெரியாழ்வார் -4-1-8-உதிப்பது அஸ்தமிப்பதாய்க் கொண்டு போருகையாலும்
ஹிரண்ய ராவணாதிகள் கையிலே அகப்பட்டு அவர்களுக்கு இழி தொழில் செய்து திரிவார் சிலராகையாலும் ரஷகராக மாட்டார்கள்
(நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1- 😎
த்ரை லோக்யத்துக்கும் பாலகனான இந்த்ரனும் எப்போதோ நம்பதம் நழுவப் புகுகிறது என்று அஞ்சி சபோபஹதனாய்
இந்த்ரஜித்தின் கையிலே அகப்பட்டுக் கட்டுண்டு
மகாபலி போல்வார் கையிலே ஐஸ்வர் யத்தைப் பறி கொடுத்து
கண்ணும் கண்ணீருமாய் கழுத்தும் கப்படமுமாய்க் -எளிவரவைக் காட்டும் வஸ்த்ரம் -கொண்டு திரிவான் ஒருவன் ஆகையாலே அவனும் ரஷகனாக மாட்டான் –
ப்ரஹ்மாவும் -மது கைடபர்கள் கையிலே அகப்பட்டு வேதங்களைப் பறி கொடுத்து -கண் இழந்தேன் -தனம் இழந்தேன் -என்று நிலம் துழாவு கையாலும்
ருத்ரன் கையிலே தலை அறுப்பு உண்கையாலும் ரஷகன் ஆகமாட்டான் –
ருத்ரனும் -சகல பிராணிகளையும் சம்ஹரிக்கையே தொழிலாக யுடையனாய்
விடாயர் முகத்திலே நெருப்பைச் சொரிந்தால் போலே இருக்கத் தழல் நிற வண்ணனாய்-பெரிய திரு -6-1-3- தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அறுத்துத் தா பொரித்துத் தா –என்று கொடும் தொழிலைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்
(குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-)
தன்னை ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் -என்று பிரதிஜ்ஞை பண்ணி
தன்னைத் தொழுத கைகளை கள்ளிக் காடு சீய்த்தால் போல் சீய்க்கக் கண்டு
உயிர் யுண்டாகில் உப்பு மாறி யுண்ணலாம் என்று நெற்றியிலே கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினன் ஆகையாலும்
லோக குருவாய் தனக்குப் பிதாவான ப்ரஹ்மாவின் தலையைத் திருகிப் பாதகியாய் கூறு செய்த ஊரிலே குறும்பு செய்து கைத்தளையுமாய் கொண்டு
திரிவாரைப் போலே கையும் கபாலமுமாய் திறந்து கிடந்த வாசல்கள் தோறும் புக்கு தன்னை வெளியிட்டுக் கொண்டு திருவான் ஒருவன் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
இனி அர்த்தம் ஆமோ என்று நிரூபித்தால் -கள்ளர் கொள்ளுதல் -காமம் கொள்ளுதல் -கோமுற்றார் கொள்ளுதல் –
ஜ்ஞாதி கொள்ளுதல் -வியாதி கொள்ளுதல் -பிறரோடு எதிரிட்டு விஷ பஷணம் பண்ணி தன்னைத் தானே முடித்துக் கொள்ளும்படி
பண்ணுதல் செய்கையாலே அர்த்தமும் ரஷகம் ஆக மாட்டாது –
ஈஸ்வரன் -மாதாபிதாக்கள் கைவிட்ட அவஸ்தையிலும் -பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் -பெரிய திருமொழி -8-9-7-என்றபடி
தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு தாய் முகம் காட்டியும்
இன் சொல்லுச் சொல்லியும் ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ நின்ற வன்று தான் ஏறிட்டுக் கொண்டு
கழுத்திலே ஓலை கட்டித் தூது போயும் புருவம் நெரித்த உடத்திலே தேரை நடத்தியும் மார்விலே அம்பேற்றும்
சாவாமல் நோக்கியும் செத்தாரை மீட்டும் நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தரிப்பாலே அகவையிலே நின்று
சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே இவனே எல்லார்க்கும் ரஷகன் –
(பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே -8-9-7-)
இனி -ஆகிஞ்சன்யம் ஆவது -கர்ம ஜ்ஞான பக்திகளிலும்
அவற்றுக்கு ஹேதுவான ஆத்ம குணங்களிலும் -அந்வயம் இன்றிக்கே
அவற்றுக்கு விபரீதங்களான வற்றாலே தான் பரிபூர்ணனாய் இருக்கிற இருப்பையும்
தன்னுடைய ஸ்வரூபம் சர்வ பிரகாரத்தாலும் ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
நம் கார்யத்துக்கு நாம் கடவோம் அல்லோம் -என்று இருக்கை-
இவை இரண்டையும் யுடையனாய் ஈஸ்வரனையே உபாயமாகப் பற்றுகையாலே நிர்ப்பரனாய் இருக்குமவனுக்கு
சரீர அவசான காலத்திலேயே ப்ராப்தி அணித்த வாறே -ந யாமி -என்று அருளிச் செய்த படியே –
ஈஸ்வரன் தானே சரக்காளாய் வந்து -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தேறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடே ஒரு கோவையாக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொடுத்து அருளும் —)
————————————————————
அதில் முற் கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திரு அடிகளை
உபாயமாகப் பற்றுகிறது –
பிற் கூற்றால் அச் சேர்த்தியிலே அடிமையை இரக்கிறது-சூரணை -122-
இனி த்வயத்துக்கு வாக்ய அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
இந்த த்வ்யத்தில் பூர்வ கண்டத்தாலே -ஸ்ரீ மத் -என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு
நாராயண சரனௌ -என்று ஈஸ்வரன் திரு அடிகளை –
சரணம் ப்ரபத்யே -என்று உபாயமாகப் பற்றுகிறது –
உத்தர கண்டத்தாலே -ஸ்ரீ மதே -என்று பெரிய பிராட்டியாரையும் அவனுமான சேர்த்தியிலே
நாராயணாய-என்கிற சதுர்த்தியாலே கைங்கர்யத்தை அர்த்திக்கிறது -என்கை-
நமஸ்ஸூ கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பிரதிபாதகம் ஆகையாலே -அடிமையை இரக்கிறது -என்று இதிலே அந்தர்பூதம் –
——————————————————
ஸ்ரீ -என்று பெரிய பிராட்டியாருக்கு திரு நாமம்–சூரணை -123
இனி பிரதி பதம் அர்த்தம் அருளி செய்வதாக திரு உள்ளம் பற்றி ஸ்ரீ மத் பதார்த்தம்
அருளி செய்ய உபக்ரமிக்கிறார் –
ஸ்ரீ சப்தம் சம்பதாதிகளுக்கும் வாசகமாக லோகத்திலே நடந்து போரக் காண்கையாலே-அத்தை
வ்யாவர்த்திக்கைக்காக -ஸ்ரீ என்கிற இது பெரிய பிராட்டியாருக்கு திரு நாமம் -என்கிறார் –
ஆகை இறே -லஷ்மீ பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர் ஹரிபிரியா -என்ற திரு நாமங்களோடே சஹபடிதமாய் ஆயிற்று –
இது தான் எல்லா திரு நாமங்கள் போல் அன்றிக்கே -ஸ்ரீ ரிதி ப்ரதமம்
நாம லஷ்ம்யா -என்கிறபடியே இவளுக்கு பிரதம அபிதானமாய் இருக்கும் –
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதானம் -என்று அகாரம் ஈஸ்வரனுக்கு
பிரதம அபிதானம் ஆனால் போலே ஆயிற்று -இவளுக்கும் இது பிரதான அபிதானமாய் இருக்கும் படி –
இது அவனுடைய ரஷகத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வாபாவங்களைச் சொல்லக் கடவதாய் இருக்கும் –
இது இவளுடைய புருஷ காரத்வத்துக்கு ஏகாந்தமான ஸ்வாபாவங்களைச் சொல்லக் கடவதாய் இருக்கும் –
—————————————————
ஸ்ரீ யதே ஸ்ரயதே –சூரணை -124
இனி இந்த ஸ்ரீ சப்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக ப்ரதமம் இதன் மேல் வந்த வ்யுத்புத்தி
த்வயத்தை அருளிச் செய்கிறார்-
அதாவது
ஸ்ரீ – சேவாயாம்-என்கிற தாதுவிலே -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ–ஸ்ரயத இதி ஸ்ரீ -என்று
சித்தமான கர்மிணி வ்யுத்புத்தியையும் -கர்த்தரி வ்யுத்புத்தியையும் சொன்னபடி –
——————————————–
இதுக்கு அர்த்தம்-எல்லாருக்கும் இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் –
இவள் தனக்கும் அவனைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்கும் -என்று –சூரணை-125-
இவ் வ்யுத்புத்தி த்வயத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
இவ் உபய வ்யுதபுத்திக்கும் அர்த்தம் –
ஸ்ரீ யதே -என்று எல்லாரும் சேவிக்க படா நின்றாள் என்கையாலே –
சகல சேதனருக்கும் இவளைப் பற்றி தங்களுடைய சேஷத்வ ரூப ஸ்வரூப லாபமாய் –
ஸ்ரேயதே -என்று ஈஸ்வரனை சேவியா நின்றாள் என்கையாலே –
இவள் தனக்கும் ஈஸ்வரனைப் பற்றி தன்னுடைய ஸ்வரூப லாபமாய் இருக்கும் என்று -என்கை –
சேதன விஷயத்தில் சேஷித்வமும் ஈஸ்வர விஷயத்தில் சேஷத்வமும் என்றும் உண்டாய் இறே இருப்பது –
ஆகையால் இந்த சேவ்யத்வ சேவகங்கள் இரண்டும் இவளுக்கு நித்தியமாய் செல்லா நிற்கும்-
(ஸ்ரீ” சப்தார்த்தம்–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -பூர்வ கண்ட விவரணம் –
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —
ஆக –
திருமந்த்ரார்த்தத்தை விசதீ கரிக்கிற த்வயத்திலே
பூர்வார்த்தம் -பத த்ரயாத் மகமாய் தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்த மாஹூ -என்றும்
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-என்றும்
சோஹம் த்வாம் சரணம பாரமப்ரமேயம் சம்ப்ராப்த -என்றும்
சரணம் தேவ்ரஜம் விபோ –சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி –சரணம் வ்ரஜ –
மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதிகளிலே
முமுஷூவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப் படுகிற பிரபத்தியையும் –
பிரபதவ்ய விஷய விசேஷத்தையும் –
அத்தை அச்சமற ஆஸ்ரயிக்கலாம் படி பண்ணித் தரும் புருஷகார விசேஷத்தையும் -சொல்லுகிறது –
ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பத த்ராயாத் மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் -புருஷகாரத்தைச் சொல்லுகிறது –
உபாயம் உபேயயார்த்த மாய் இருக்கச் செய்தேயும் –
வ்யுத்பத்தி வேளை இன்றியிலே -அனுஷ்டான வேளையாய்-
உபாய அனுஷ்டான அனந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோபாத்த மானவோபாதி இவ் யுபாய ஸ்வீகாரத்துக்கு முன்னே வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையாலே பிரதமத்திலே பிருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாவ விசேஷங்களோடு கூடி இருக்கிற
வஸ்து விசேஷத்தை நிர்தேசிக்கிறது – ஸ்ரீ சப்தம்
அந்த ஸ்வ பாவங்கள் ஆவன –
புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும் போது வேறு ஒரு புருஷகாரம் தேட வேண்டாத படி
இவனோடு ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும்-
இவன் நினைக்கிற விஷயத்தோடு சேர்க்கும் போது இவன் தன்னோ பாதி தனக்கு வேறு ஒரு புருஷகாரம் வேண்டாதபடி
அவ்விஷயத்தோடே ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும் –
ஆக இரண்டும் இறே புருஷகார வஸ்துவுக்கு அபேஷிதம்-
அவை இரண்டு ஸ்வ பாவ விசேஷத்தையும் –
ஸ்ரிங் -சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -ஸ்ரயதே-என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலுமாக பிரகாசிப்பிக்கிறது –
வ்யுத்பத்தித் த்வயத்தாலும் –
சேவிக்கப் படா நின்றாள் –
சேவியா நின்றாள் -என்று
சேவா விஷயமாய் இருக்கும் –சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது –
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –
அஸ்யே ஸாநா ஜகத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் வ்யதிரிக்த சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரியாய் இருக்கையாலே
த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் சேவிக்கப் படா நிற்கும் –
ஆகையாலே சேவா விஷய பூதையாய் இருக்கக் கடவள் –
விஷ்ணு பத்நீ –
விஷ்ணோஸ் ஸ்ரீ ரீ –
ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பத்நீத்வேந ஈஸ்வரனுக்கு சேஷ பூதையாய் இருக்கையாலே அவனை சேவியா நிற்கும் —
ஆகையாலே சேவைக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –
ஆன போது இறே -கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது –
மாதாவாகில் பிரஜைகளுக்கு ஸ்வாமிநீயுமாய்
பர்த்தாவுக்கு சேஷ பூதையுமாய் இறே இருப்பது –
த்வம் மாதா சர்வலோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா -என்னக் கடவது இறே –
ஆக –
மாத்ருத்வத்தாலே சேதன ரோடு நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்-
பத்நீத்வேந ஈஸ்வரனோடே நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்
புருஷகார பூதை பிராட்டி என்னும் இடத்தை வ்யுத்பத்தித் த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று –
புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்கு சொன்ன உபய சம்பந்ததத்துக்கும் யுண்டான
பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோ தீதி ஸ்ரீ –
ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்கிற நிருத்தம்-
ஸ்ருணோதி -என்று கேட்கும் என்கையாலே –
சேதன ரோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
ஸ்ராவயதி-என்று கேட்பியா நிற்கும் என்கையாலே
ஈஸ்வரனோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
இவன் -ஈஸ்வரத்வம் இல்லை -என்று எழுத்திடும் என்றும் –
இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி
கண் காணாமல் நோக்கிப் போருவது-
கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய்க் கிடக்க –
அபேஷா நிரபேஷமாகவே தயமான மனவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது –
பின்பு –
இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி யுண்டாகைக்காக அநு பிரவேசிப்பது –
பின்பு
அஸூர ராஷசாதிகள் காலிலே துகை யுண்ணும் போது –
நாட்டில் பிறந்து -படாதன பட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று எதிரிகளை இடறிக் கொடுப்பது –
நம்மைப் பெருகைக்கு ஈடாய் இருப்பதொரு அறிவுண்டாமோ -என்னும் நோயாசையாலே –
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து
இவை படுகிற நோவைக் கண்டு –
இவர்களிலும் ப்ருசம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது –
சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால் அவற்றைக் கொண்டு
அத பதியாமைக்காக அவற்றை ஓடித்திட்டு வைப்பது
பின்பு -ஸ ஏகாகி ந ரமேத -என்று
நித்ய விபூதி யுக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
யுடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும்
ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷனாவது
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்று –
நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் கடவேன் -எனபது –
தோஷோ யத்யபி தச்யஸ்யாத் ந கதஞ்சன -சமோஹம் சர்வ பூதேஷு என்னும் ஸ்வ பாவ விசேஷமும் –
ஏவ மாதிகள் அடைய ஆஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சம வேதமாய் இரா நிற்கச் செய்தேயும்
அப்படிப் பட்டிருக்கிற அவனுடைய வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை –
க்ரோத மாஹாரயத் தீவரம் -என்கிறபடியே –
க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும் படி பண்ணுவது –
ப்ரியம் வத-என்கிறபடியே
ம்ருத சஞ்சீவிநியான வாக்ம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹன்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –
சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதி களிலே தள்ளிக் குட்டிக் கொலையாக
நிறுத்து அறுத்துத் தீர்த்துகையிலே அதி க்ருதமாம்படியும்
அநாதி காலம் பண்ணிப் போருகிற பகவத அபசார -பாகவத அபசார -அசஹ்ய அபசார நாநாவித
அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்துத் தீர்த்துப் போருகிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –
அவன் உதிரக் கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் ஆஸ்ரயிக்கப் புகுகிறேன்
அதுக்குக் கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பயாதி சயத்தாலே தேங்கி
சம்சாரத்தில் வெம்மையும் பகவத் விஷயத்தில் வை லஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டு போலே
ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே துஷ்கரத்வாதிகளாலே சாதனாந்தரங்களில் காலிடக் கூசி
புறம்பே போக்கடி அற்றுத் தெகிடாடுகிற இச் சேதனன்
ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி -நம்மைச் சேர விடுகைக்கு
நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை யுடையளாய்-
ந கச்சின் ந அபராத்யதி -என்னும்
இவளை ஒழியப் புகு வாசல் இல்லை -என்று காக வ்ருத்தாந்தாதி முகத்தாலே அறுதி இட்டு
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று
புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்ர ஸூலபையான இவளை வந்து கிட்டி
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ரா பராதாஸ் த்வயா ரஷந்த்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா-என்கிறபடியே
புறம்புள்ள பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வ அபதாரத்தாலே அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜநநியான தேவரீர் திருவடிகள் ஒழியப் புகல் இல்லை –
இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வ தந்த்ர்யா பாத்ரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய
இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி -அனன்ய கதி -இனி அடியேனுக்கு ஹிதம் இன்னது என்று அறிந்து
ரஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் -என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும் –
அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிரந்குச ஸ்வா தந்தர்யத்தாலே –
அபிதா பாவ கோபமாம் -என்கிறபடியே –
அநபிபவ நீயனான ஈஸ்வரனைத் தன்னுடைய போக்யதாதி சயத்தாலே பதமாக்கி –
நாயந்தே
இச் சேதனனை அங்கீ கரித்து அருளீர் -என்னும் –
ஆவாதென்-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா-என்று
நம்முடைய ஆஜ்ஞா ரூபமான சாஸ்திர மரியாதையை அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி
தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ –
இவனை அங்கீ கரிக்கை யாவது என்-என்னும் ஈஸ்வரன் –
அவனுடைய பூர்வ அபராதங்களை உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரஷித்து அருளீர் -என்னும் பிராட்டி –
பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மர்யாதையைக் குட நீர் வழியவோ-என்னும் ஈஸ்வரன் –
சாஸ்திர மர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வா பாவிகமான ஷமா தத்வத்தைக் குட நீர் வழியவோ -என்னும் பிராட்டி –
ஷமையை நோக்கில் சாஸ்திர மர்யாதை குலையும் -சாஸ்திர மர்யாதையை நோக்கினால் ஷமா தத்வம் குலையும் –
இரண்டும் குலையாது ஒழிய வேண்டும் -செய்யப் படுவது என் -என்னும் ஈஸ்வரன் –
கிங்கர்த்தவ்ய தாகுலனாய் இருந்தால் அத்தனையே –
அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் –
அப்படியே செய்தருளீர் -என்னும் பிராட்டி –
இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி யுண்டாமாகில் நமக்குப் பொல்லாததோ –
சொல்லிக் காண்-என்னும் ஈஸ்வரன் –
ஆனால் சாஸ்திர மர்யாதை விமுகர் விஷயம் ஆக்குவது –
உம்முடைய ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி –
அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று
இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன் –
ஆக –
இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்து அருளுகையும் –)
(”ஸ்ரீ” சப்தார்த்தம்.” ஸ்ரீ ” என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம்.
இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறு விதமாக அர்த்தம் கூறப்படுகின்றது.
(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க,
(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று)
(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,
(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து,
(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து,
(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான
அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற
(அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி.
அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் தான் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து அகற்றும் வினை விலக்கி
யிருதலை யன்புதனால் எமை இன்னடி சேர்த்து அருளும்
திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே –2–
அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் -சேதனம் அசேதனங்கள் ஆகிய அனைத்தும் தன்னை அடைந்து நிற்க
தான் அடைந்து -பிராட்டியாகிய தான் சர்வேஸ்வரனையும் சகல வஸ்துக்களையும் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து-சேதனர்கள் பயத்தால் கூறும் வார்த்தைகளை கேட்டும் அவற்றை எம்பெருமானை கேட்ப்பித்தும்
அகற்றும் வினை விலக்கி யிருதலை யன்புதனால் -சேதனர் எம்பெருமானார் இரண்டு பக்கங்களிலும் உள்ள அன்பினால்
எமை இன்னடி சேர்த்து அருளும் திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே
ஸ்ரீ -ஆறுவித வ்யுத்பத்திகள் உண்டே –
ஸ்ரேயதே அடையப்படுகிறாள் -ஸ்ரீயதே -அடைகின்றாள் –
அவனையும் அடைகிறாள் -சேதனர்களுக்குள் உள்ளும் புறமும் அடைகிறாள்
கேட்கிறாள்-கேட்ப்பிக்கிறாள்
கர்மங்களை நீக்குகின்றாள்-பரிபக்குவ நிலை கைங்கர்யம் செய்ய அருளுகிறாள்
இந்த மிதுனம் நம் மனத்தை விட்டு அகலாது நித்ய வாஸம் செய்து அருளுகின்றார்கள் என்றவாறு –
——————————————————
இப்போது இவளைச் சொல்லுகிறது புருஷகாரமாக –சூரணை -126-
ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் உபேயத்வமும் ஆகிற ஆகார த்வயமும் உண்டானாப் போலே –
இவளுக்கும் புருஷகாரத்வமும் -ப்ராப்யத்வமும் ஆகிற ஆகார த்வயமும் உண்டு ஆகையாலே –
இதில் எவ் ஆகாரத்தை நினைத்து இவளை இப்போது சொல்லுகிறது -என்ன -அருளிச் செய்கிறார் –
புருஷகாரமாக -என்கையாலே உபாய வஸ்து விசேஷணமாய் இருக்கிற ஆகாரத்தை இட்டு
இவளுக்கும் உபாயத்வத்தில் அந்வயம் சொல்லும் பஷம் நிரஸ்தம்-
————————————————–
நீரிலே நெருப்பு கிளருமா போலே -குளிர்ந்த திரு உள்ளத்திலே -அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்குகாக –சூரணை -127-
ஈஸ்வரனுடைய நாராயணத்வ பிரயுக்தமான ஸ்வாபாவிக சம்பந்தாதி ஞானத்தை உடையனாய் கொண்டு –
அவனை ஆஸ்ரயிக்கிற இச் சேதனனுக்கு இவளை புருஷகாரமாக முன்னிட வேண்டுகிறது தான் என்-என்ன அருளிச் செய்கிறார் -அதாவது –
(ஸ்வாபாவிக சம்பந்தாதி ஞானத்தை–ஆதி ஸப்தத்தால்
ஸர்வ பூத ஸூஹ்ருத் வத்தையும் -ஸர்வ சமாஸ்ரயத்வத்தையும் சொல்லுகிறது)
சீதளமான ஜலத்திலே சென்று அணுக ஒண்ணாதபடி யான நெருப்பு கிளருமா போலே
ஸூஹ்ருதம் சர்வபூதானாம் சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே சர்வ பூத ஸூஹ்ருதத்வம் –
சமாஸ்ராயணீயத்வ சமத்வமாகிற ஸ்வபாவ விசேஷணங்களாலே பிரசன்னமாய் குளிர்ந்து இருக்கிற
திரு உள்ளத்திலே -பரி பூர்ண கஸி ஜனே ஹிதஸ்ரோதோ வ்ருத்த்யா பவதி ச கதாசித் கலுஷதீ -என்கிறபடியே –
சேதனன் தீரக் கழியப் பண்ணின அபராதமடியாக ஷிபாமி ந ஷமாமி -என்னும்படியான சீற்றம் பிறந்தால் – அவ் வபராதத்தை
பொறுப்பது கிமேதன் நிர்த்தோஷ க இஹா ஜகதி -(குண ரத்ன கோஸம் )இத்யாதி படியே -தன்னுடைய உபதேசாதிகளாலே அச் சீற்றத்தை ஆற்றி
தயையை ஜநிப்பிக்கும் இவளுக்காக -என்கை –
ஆகையாலே சம்பந்த ஞானம் பிறந்தவனுக்கும் -அபராத பயத்தால் -புருஷகார புரஸ்கரணம் அபேஷிதம் என்று கருத்து –
(கீதையில் யஞ்ஞ தபஸ்ஸுக்களுக்குப் போக்தாவாய்
ஸர்வ லோக மஹேஸ்வரனாய்
ஸர்வ பூதங்களுக்கும் ஸூ ஹ்ருத்தான
என்னை அடைந்து சாந்தி அடையா நிற்கும்
நான் எல்லோருக்கும் சமனாய் இருப்பேன்
எனக்கு ஜாத்யாதிகளால் நிஷ்க்ருஷ்டன் என்று வெறுக்கப்படுபவனும் இல்லை
உத்க்ருஷ்டன் என்று எனக்குப் பிரியனும் இல்லை
யாவர் சிலர் என்னை விசேஷித்து பக்தியால் பஜிக்கிறார்கள் அவர்கள் என் பக்கலிலேயாய் இருப்பார்கள்
நானும் அவர்கள் பக்கலிலேயாய் இருப்பன்)
(தாயே பிதாவைப் போலவே உன்னுடைய பிரியதமனானவன் பரிபூர்ணமான அபராதத்தை யுடைய ஜனத்தி பக்கலிலே
ஹிதத்தை நடத்த வேண்டுகையாலே ஒருக்கால் திரு உள்ளம் சீறா நிற்கும்)
(துஷ் க்ருதிகள் மூடராய் -நர அதமராய் -மாயையால் அபஹ்ருத ஞான ஸ்வ பாவத்தை யுடையராய் ஆஸூரமான
ஸ்வ பாவத்தை ஆஸ்ரயித்துக் கொண்டு என்னை அடையாது இருப்பார்கள்
ஆஸூர யோனிகளிலே எப்போதும் தள்ளா நிற்பன் என்ன அப்படி அன்று ஷமா குணங்களுக்கு விஷயமாக்கி அருள வேணும் என்னும்)
(ஸவ பஸேந யாகிலும் என்னுடைய பக்தனை யாவர் சில மனுஷ்யர் நிந்தையைப் பண்ணுகிறார்களோ அவர்கள்
நூறு கோடி பத்மம் இட்டு ஆராதித்தாலும் ஒரு காலும் அவர்களைப் பாரேன் -அவர்களை ஒரு காலும் ஷமியேன் -ஸ்ரீ வராஹ புராணம்
அவன் எவ்வாறு தீரக்கழிந்த அபசாரம் செய்தவனாக இருந்தாலும் -மணல் சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் –என்பதாய் உசித உபாயங்களால் தோஷங்களை விஸ்மரிப்பித்து எங்களுக்கு மாதாவாகா நின்றாய் -குணரத்ன கோசம் )
—————————————-
இவள் தாயாய் இவன் க்லேசம் பொறுக்க மாட்டாதே -அவனுக்கு பத்நியாய்-இனிய விஷயமாய் இருக்கையாலே
கண் அழிவற்ற புருஷகாரம்-சூரணை -128-
இத் தலையில் கார்யம் ஏறிட்டுக் கொண்டு அத்தலையை வசீகரித்தும் இரண்டு தலையும் பொருத்துகைக்கு
இவள் தான் கண் அழிவற்ற புருஷகாரமா என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது
த்வம் மாதா சர்வ லோகானாம் -என்றும் –
அகில ஜகன் மாதரம் -என்றும்
சொல்லுகிறபடியே இச் சேதனருக்கு இவள் மாதாவாய் –
தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார் -பெரிய ஆழ்வார் திரு மொழி -2-2-3-
என்கிறபடியே -அந்த சம்பந்தமடியாக இவர்களுடைய க்லேசம் கண்டால் சஹிக்க மாட்டாதே –என்கிறபடியே
அவன் தன்னை வைலஷண்யத்தை கண்டு பிச்சேறி தன் சொல் வழி நடக்கும் படி அபிமத விஷயமாய்
இருக்கையாலே -கண் அழி வற்ற புருஷகாரம்-என்கை-
(ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் –ஸர்வ லோகத்துக்கு நீ மாதா -தேவ தேவனான ஹரி பிதா –
உன்னாலேயும் அந்த விஷ்ணுவாலேயும் சராசராத்மகமான இந்த ஜகத்தானது போஷிக்கப்பட்டு இருக்கும்)
(தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன்
நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3-)
——————————————-
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வருமவனை
பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா இறே-சூரணை-129-
எல்லாம் செய்தாலும் – நிரங்குச ஸ்வாதந்த்ரனான சர்வேஸ்வரன் சேதனருடைய
அபராதங்களை நிறுத்து அறுத்து தீத்துவன் -என்று நிற்கும் அளவில்-இவளாலே
பொறுப்பிக்கப் போமோ -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
தன்னை பத்து மாசம் தர்ஜன பர்ஜனம் பண்ணின அந்த ராஷசிகளுடைய அபராதங்களைக் கணக்கிட்டு –
சித்ரவதம் பண்ண உத்யோகித்து -நின்ற சொல் மிறுங்கனான திருவடியையும் உட்பட –
க குப்யேத -என்றும் –
ந கச்சின்ன அபராத்யதி -என்றும்
இத்யாதி உபதேசத்தாலே பொறுப்பிக்கும் அவள் –
மலராள் தனத்துள்ளான் –மூன்றாம் திரு அந்தாதி -3–என்றும்
மா மலர் மங்கை மண நோக்கமுண்டான் –பெரிய திரு மொழி -8-10-1–என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் –திரு வாய் மொழி -3-10-8-என்றும் சொல்லுகிறபடி
(தர்ஜன பர்ஜனம் பண்ணின–தர்ஜனமாவது ஆயுதங்களால் அடிக்கப் போகை
பர்ஜனமாவது -க்ரூர வாக்யங்களாலே மிரட்டுக்கை
சொல் மிறுங்கனான திருவடியை=சொல் வழியே போக வேண்டும்படியான மூர்க்கனான -சொல் கேளாதவனான என்றபடி
மர்க்கடமாகையாலே பிடித்தத்தை விடாது இறே
மண நோக்கம் -கல்யாண குணத்தை உண்டாக்கும் நோக்கம் என்றபடி
மண நோக்கமுண்டான்-என்று சொல்லுகையாலே -தத் அதீன சத்தாகத்வ ஏக தாரகத்வங்கள் தோற்றுகின்றன)
(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-)
(வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே –8-10-1-)
(அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும் அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும்அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யான் ஓர் துக்கம்இலனே.–3-10-8)
தன் யோக்யதையிலே குமிழ் நீருண்டு
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக- பெரிய ஆழ்வார் திரு மொழி -3-10-7-என்கிறபடி –
மாயா மிருகத்தின் பின்னே போ -என்னிலும் விளைவது அறியாதே அதன் பின்னே போம்படி
தன் சொல் வழி வருமவனை பொறுப்பிக்க வல்லவள் என்னுமிடம் -கிம்புநர் நியாய சித்தம் இறே -என்கை-
(மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-)
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு -என்னும் படி இரண்டு தலைக்கும் தடுமாறாக உபகரித்து
தன் சொல் வழி போக வேண்டும் படியான திருவடியோடே மறுதலிக்கும் அவள் –
தான் முயங்கும் -என்னும்படியான போக்யதைக்குத் தோற்று -எத்தைச் செய்வேம் -என்று தலை தடுமாறி –
நின் அன்பின் வழி நின்று -அதனின் பின்னே படர்ந்தான் என்னும்படி விளைவது அறியாதே
முறுவலுக்கு தோற்று -சொல் வழி போம் அவனைப் பொறுப்பிக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா இறே –
என்று இது தன்னை இவர் திரு தமையனாரும் அருளிச் செய்தார் இறே-
(வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-)
(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-)
(ராஜாவான ராவணனைப் பற்றி இருக்கையாலே பரதந்த்ரராய் அவனுடைய ஆஜ்ஜையாலே ப்ராவ்ருத்தராய் இருப்பாராய்
அவனுக்கு விதேயரான அடியார்களாய் இருப்பவர்களை ஸ்வாமி கார்யம் செய்தார்கள் என்று உகக்கைக்கு உறுப்பாய் இருக்கக்
கோபிப்பான் ஒருவன் உண்டோ -வானர உத்தமனாகையாலே உனது குரங்கு ஆட்டத்தின் மிகுதியே இறே இது –
பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3ம|கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நாபராத்4யதி ||-யுத்த காண்டம்-ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44
நீ வதிக்கைக்கு யோக்யர் என்று கொண்டு இவர்கள் உனது நினைவால் பாபிகள் ஆகவும் எனது நினைவாலே ஸூபை களாகவுமாம்
அறிவுடையன் ஆனால் இவர்களுக்குக் கிருபை பண்ணுகை தான் ப்ராப்தம்
ஆர் தான் அபராதம் பண்ணாதார்
அவ்வருகு இவ்வருகு தோற்றித் திரிகிற யுனக்கு தாம ஸூஷ்மம் தெரியாதே
அயோத்யா ஜன பதத்தைத் துடிக்கப் பண்ணிப் போந்த பெருமாளை சாதித்து அன்றோ இங்கு வருவது
பெருமாள் திரு உள்ளத்திலே நோவுபட வார்த்தை சொன்ன என்னை நலிந்து அன்றோ இவர்களை நலிவது
ஓம் காண் பெருமாள் உம்மை விஜயம் சொல்லச் சொல்லி விட்டாரோ நலியச் சொல்லிச் சொல்லி விட்டாரோ)
———————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –