ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை –76–94–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

உகாரத்தை விவரிக்கிறது நமஸ்
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம் –
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி -நார பதம் என்றும் சொல்லுவார்கள் –சூரணை -76-

விவரிக்கிற படி தான் எங்கனே என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது –
அந்ய சேஷத்வத்தை கழிக்கிற  இடத்தில் -அந்யரில் அந்ய தமனாக சொல்லப்பட்ட தன்னை
வெளியாக சொல்லிக் கழிக்கையாலே உகாரத்தை விவரிக்கிறது நமஸ் –

ரஷகனான ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும் –
ரஷ்ய பூத சேதன அசேதனங்களையும்
ரஷண உபயோகியான -குணாதிகளையும்-
ரஷண பிரகாரத்தையும் –
விசதமாகச் சொல்லுகையாலே
அகாரத்தை விவரிக்கிறது -நாராயண பதம்

(ந கிஞ்சித் குர்வத சேஷத்வம் )அகிஞ்சித்கரச்ய சேஷத்வ அனுபபத்தி -என்கிறபடியே
கிஞ்சித் காரம் இல்லாத போது சேஷத்வ சித்தி இல்லாமையாலே தத் சித்திக்கு உறுப்பான
கிஞ்சித் காரத்தை பிரதிபாதிக்கிற சதுர்த்தி –
சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்ம வஸ்துவைச் சொல்லுகிற மகாரத்தை விவரிக்கிறது –

மகார வாச்யனான ஆத்மாவின் உடைய நித்யத்வம் -ஏக ரூபவத்வம் -பஹூத்வம்
தொடக்கமானவற்றை பிரதிபாதிக்கையாலே மகாரத்தை விவரிக்கிறது நார பதம் என்றும் சொல்லுவார்கள் -என்கை-

(அந்யரில் அந்ய தமனாக-அந்நியரில் ஒருவனாக
வெளியாக-வேறாக
கழிக்கையாலே-அந்நியரில் ஒருவனாகச் சொல்லப்பட்ட ஸ்வ சேஷத்வத்தைக் கழிக்கையாலே
ரஷகனான ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும் –-ஸர்வ அந்தர்யாமித்வ ஸர்வ வியாபியான ஸ்வரூபத்தையும்
குணாதிகளையும்—ஆதி ஸப்தத்தாலே -விக்ரஹத்தைச் சொல்கிறது
ரஷண பிரகாரத்தையும் –மாத்ருத்வாதி பிரகாரத்தையும்
தத் சித்திக்கு உறுப்பான–சேஷத்வ ஸித்திக்கு உறுப்பான)

————————————————-

அடைவே விவரியாது ஒழிகிறது விரோதி போய் அனுபவிக்க வேண்டுகையாலே –சூரணை -77-

அஷர க்ரமத்தில் விவரியாதே வ்யுத் க்ரம்மமாக விவரிப்பான் என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
அஷர க்ரமத்தில் விவரியாது ஒழிகிறது
அகார விவரணமான நாராயண பதத்தில் -பகவத் அனுபவத்துக்கு விரோதியான
அஹங்கார மமகாராதிகள் நமஸ்ஸாலே கழி உண்டு போய்
பின்னை அனுபவிக்க வேண்டுகை ஆகையாலே -என்கை-

(நாராயண பதத்தில் -பகவத் அனுபவத்துக்கு-என்றது நாராயண பதத்தில் சொல்லுகிற பகவத் அனுபவத்துக்கு
அஹங்கார மமகாராதிகள்-ஆதி ஸப்தத்தாலே ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயத்தைச் சொல்லுகிறது
அனுபவிக்க வேண்டுகை ஆகையாலே-ஸமஸ்த கல்யாண குணாத்மகனான நாராயணனை அனுபவிக்க வேண்டுகையாலே என்றபடி)

——————————————–

நமஸ் -ந என்றும் ம என்றும் இரண்டு பதம் –சூரணை-78-

இனி மத்யம பதமான நமஸ்ஸுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக அதில் அவாந்தர பத பேதத்தை
அருளிச் செய்கிறார் –

(ஸூ மத்யமா -இடையாளொடும் இளையவனோடும்
ஓன்று பணித்தது உண்டு
மதுரகவி நிஷ்டை-சித்திரை நடு நக்ஷத்ரம் )

————————————

ம -என்கிற இத்தால் தனக்கு உரியன் -என்கிறது
ந -என்று அத்தை தவிர்கிறது–சூரணை -79

இவ் இரண்டு பதங்களுக்கு அர்த்தம் எது என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
ம -என்று ஷஷ்ட்யந்தமான இம்மகாரத்தாலே –
மகார வாச்யனான ஆத்மாவுக்கு கீழ் சொன்ன தாதர்த்ய பிரதி கோடியான ஸ்வார்த்தத்வம் தோற்றுகையாலே-
தனக்கு உரியவன் -என்னும் அத்தைச் சொல்லுகிறது –
ந -என்று நிஷேத வாசியான நஞ்ஞாலே அத்தைக் கழிக்கிறது என்கை –

(அவனுக்கே நான் பிரதிகோடி-எனக்கே நான் என்றும் எனக்கே அவன் என்றும் உண்டே -த்வம் மே -அஹம் மே -பட்டர்
தாதார்த்தம்-பரரார்த்யம் -பரனுக்காகவே இருப்பது -பாரார்த்தியம் த்வம் -ஆண்டாள் – )

(தாதர்த்ய பிரதி கோடியான ஸ்வார்த்தத்வம்-சேஷத்வ விரோதியான ஸ்வ ஸ்வாதந்தர்யம்)

——————————————

நம-என்கிற இத்தால் -தனக்கு உரியன் அன்று -என்கிறது –சூரணை -80

உபய பதத்தாலும் சொன்ன அர்த்தத்தை சேரப் பிடித்து அருளிச் செய்கிறார் –

அதாவது –
பத  க்ரமத்தில் அர்த்தம் சொல்லாதே -வ்யுக்த் கர்மமாக சொல்லுகிறது –
நிஷேத்யத்தை சொல்லி நிஷேதிக்க வேண்டுகையாலே –
க்ரமத்தில் சொல்லும் போது-வீடுமுன் முற்றவும் -என்னுமா போலே –
நிஷேத பூர்வகமாக நிஷேத்யத்தை சொல்லுகிறது என்று யோஜிக்க வேணும் –
அது தானும் பரந்த படியில் இவர் தாமே அருளிச் செய்கிறார் –

————————————————-

பிறருக்கு உரியனான அன்று தன் வைலஷண்யத்தை காட்டி மீட்கலாம் –
தனக்கு என்றும் அன்று யோக்யதையும் கூட அழியும் –சூரணை -81-

தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்று அந்ய சேஷத்வத்தை நிஷேதித்த உகாரத்தை விவரிக்கிறது ஆகில் –
பிறருக்கு உரித்தது அன்று என்றையும் விவரியாமல் -தனக்கு உரியன் அன்று -என்று இத்தையே விவரிப்பான் என்?-
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது –
அந்ய சேஷ பூதனான அன்று சேஷத்வத்துக்கு இசைகை ஆகையாலே –
அந்யரில் காட்டில் தனக்கு உண்டான
சர்வ காரணத்வ சர்வ ரஷகத்வ சர்வ சேஷித்வாதியான-வை லஷண்யத்தை காட்டி –
அந் நிலையில் நின்றும் மீட்கலாம் –
தனக்கு உரியவன் என்று நிற்கும் அன்று -த்வம்மே -என்றால் -அஹம்மே – என்னும் அது ஒழிய
சேஷத்வத்துக்கு இசையாமையாலே -மீட்க்கைக்கு யோக்யதையும் கூட இல்லையாய் விடும் என்கை-

(சேஷித்வாதியான–ஆதி ஸப்தத்தாலே -ஸ்ரீ யபதித்தவமும் ஸமஸ்த கல்யாண குணாத்மகமும் சொல்லப்படுகிறது
அந் நிலையில் நின்றும்-அந்நிய சேஷபூதனாய் இருக்கும் இருப்பில் நின்றும்)

—————————————-

இத்தால் விரோதியை கழிக்கிறது–சூரணை -82

இந் நமஸ்ஸால் செய்கிற அம்சம் தான் எது -என்ன அருளிச் செய்கிறார் –

(இந் நமஸ்ஸால்-ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவர்த்தகமான இந்த நமஸ்ஸால்)

———————————–

விரோதி தான் மூன்று–சூரணை -83

இது தான் ஒன்றோ பலவோ -என்ன அருளிச் செய்கிறார்-

———————————

அதாவது
ஸ்வரூப விரோதியும்
உபாய விரோதியும்
ப்ராப்ய விரோதியும் –சூரணை -84-

அம் மூன்று தான் எது -என்ன அருளி செய்கிறார் –
இத்தால் பிரதம பதத்தில் சொன்ன ஸ்வரூபத்துக்கு விரோதியும் –
இப் பதத்தில் ஆர்த்தமாக சித்திக்கிற உபாயத்துக்கு விரோதியும் –
உத்தர பதத்தில் சொல்லுகிற ப்ராப்யத்துக்கு விரோதியும் என்கை –
இந் நமஸ் தான் காகாஷி நியாயத்தாலே பூர்வோத்தர பதங்களில் சொல்லுகிற
ஸ்வரூப ப்ராப்யங்கள் உடைய விரோதிகளைக் கழிக்கக் கடவதாய் இறே இருப்பது –

(பிரதம பதத்தில் சொன்ன ஸ்வரூபத்துக்கு–திரு மந்திரத்தில் பிரதம பதமான ப்ரணவத்தில் -லுப்த சதுர்த்தியில் சொன்ன பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூபத்துக்கு
இப் பதத்தில் ஆர்த்தமாக சித்திக்கிற உபாயத்துக்கு-இந்த நமஸ் பகவானாகிற ஸித்த உபாயத்துக்கு வாக்யார்த்தமான ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி யாகிற அர்த்த பலத்தால் ஸித்திக்கிற)

—————————————————

ஸ்வரூப விரோதி கழிகையாவது-யானே நீ என்னுடைமையும் நீயே என்று இருக்கை-
உபாய விரோதி கழிகையாவது -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்று இருக்கை-
ப்ராப்ய விரோதி கழிகையாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை –சூரணை -85-

இவ் விரோதி த்ரயமும் கழிகையாவது தான் எது ? என்ன அது தன்னை அடைவே அருளிச் செய்கிறார் –
ஸ்வரூப விரோதி இத்யாதி -அதாவது ஸ்வரூபத்துக்கு –
யானே நீ என்னுடைமையும் நீயே-திரு வாய் மொழி -2-9-9–என்று
ஆத்ம ஆத்மீயங்கள் இரண்டும் அத்தலைக்கு ப்ரகாராதயா சேஷம் என்று இருக்கை-

(யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-)

உபாய விரோதி -இத்யாதி -அதாவது உபாயத்துக்கு விரோதி ஸ்வ ரஷணே ஸ்வான்வயம் ஆகையாலே –
அது கழிகையாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்-திரு வாய் மொழி -5-8-8-என்று –
துக்கத்தைப் போக்குவாய் -போக்காது ஒழியாய்-வேறு ஒரு ரஷக வஸ்துவை உடையேன் அல்லேன் என்று இருக்கை –

(களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-)

ப்ராப்த விரோதி -இத்யாதி -அதாவது ப்ராப்யத்துக்கு விரோதி ஸ்வ பிரயோஜன புத்தி ஆகையாலே –
அது கழிகையாவது –
மற்றை நம் காமங்கள் மாற்று –(திருப்பாவை -29)-என்று
உன் உகப்புக்கு புறம்பான எங்களுடைய ஆசையைப் போக்கு என்று இருக்கை -என்கை-

(சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்)

———————————————

ம -என்கை ஸ்வரூப நாசம் –
நம-என்கை ஸ்வரூப உஜ் ஜீவனம் –சூரணை -86-

இப்படி ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் -மூன்றுக்கும் விரோதி ஆகிறது
இவனுடைய அஹங்கார மமகாரங்கள் ஆகையாலே –
அதனுடைய க்ரௌர்யத்தையும் தந் நிவ்ருத்தியில் உண்டான நன்மையையும் அருளிச் செய்கிறார் –
அதாவது –

சேதனஸ்ய யதா மம்யம் ஸ்வ ஸ்மின் ஸ்வீயே ச வஸ்து நி மம
இத்ய ஷரத்வந்த்வம் ததா மம்யச்ய வாசகம் -என்கிறபடியே
ம -என்கிற இதில் அஹங்கார மமகாரங்கள் இரண்டும் உண்டாகையாலே –
அதிலே அந்விதன் ஆகை-இவ் ஆத்மாவின் உடைய ஸ்வரூபத்துக்கு நாசம் –

நம -என்று அதில் அந்வயம் அற்று இருக்கை -ஸ்வரூபத்துக்கு உஜ்ஜீவனம் -என்கை –

த்வ்யஷரஸ்து பவேன் ம்ருதயுஸ் த்ர்யஷரம் பிராமண
பதம் மமேதி த்வ்யஷரோ ம்ருத்யுர் ந மமேதி ச சாஸ்வதம் -என்னக் கடவது இறே-
(மம இரண்டு அக்ஷரம் மிருத்யு ந ம ம மூன்று அக்ஷரம் அம்ருதம் )

————————————

இது தான் ஸ்வரூபத்தையும் -உபாயத்தையும் -பலத்தையும் -காட்டும் –சூரணை -87-

இப்படி ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளைக் கழிக்கிற அளவு அன்றிக்கே
இந் நமஸ் தான் ஸ்வரூபாதி த்ரயத்தையும் பிரகாசிப்பிக்கும் என்கிறார் –

(நம தொழுகை -தொழுது எழு என் மனனே –
தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -முதலிலும் நடுவிலும் இறுதியிலும் தொழுகை உண்டே
மூன்றும் ஸ்வரூபம் உபாயம் பலம் மூன்றையும் காட்டும்
தொழும் சொல் -திருவாய் மொழி பாடுவித்த ப்ராப்யம் –
கீழே இரண்டு பாசுரங்கள் தொழும் என்றும் ஓன்று நம என்றும் இருப்பதைக் காட்டி அருளுகிறார்
இது நம பிரகரணம் ஆகையால் )

(உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-ஸ்வரூபம் காட்டும் )

(துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-உபாயம்  காட்டும்)

(உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-பலம் காட்டும்–தொழும் சொல் -திருவாய் மொழி பாடுவித்த ப்ராப்யம் –)

———————————————–

தொலை வில்லி மங்கலம் தொழும்-என்கையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –
வேம்கடத்து உறைவார்க்கு நம -என்கையாலே -உபாயம் சொல்லிற்று –
அந்தி தொழும் சொல் -என்கையாலே பலம் சொல்லிற்று-சூரணை -88-

இது தன்னை உபபாதிக்கிறார் -மேல் மூன்று வாக்யத்தாலே –
தொலை வில்லி மங்கலம் -இத்யாதி –
அதாவது
தொலை வில்லி மங்கலம் தொழும் –திருவாய்மொழி -6-5-1-என்று அவன் உகந்து அருளின
நிலத்தளவும் செல்ல சேஷமாயிருக்கும் படியைச் சொல்லுகிற அளவில் –
தொழும் -என்று நமஸ்காரத்தைச் சொல்லுகையாலே ஸ்வரூபம் சொல்லிற்று என்கை-

(துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-ஸ்வரூபம் சொல்லிற்று )

வேம்கடத்து இத்யாதி –
அதாவது –
வேம்கடத்து உறைவார்க்கு நம -திருவாய்மொழி -3-3-6–என்று
திரு வேம்கடமுடையானுக்கு சேஷம் நான்-எனக்கு உரியன் அல்லன்-
என்று ஸ்வ ரஷணத்திலே ப்ராப்தி அல்லாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தைச் சொல்லுகையாலே-
அவனே உபாயம் என்னும் இடம் சித்திக்கையாலே -உபாயம் சொல்லிற்று –

(வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—உபாயம் சொல்லிற்று –)

அந்தி தொழும் சொல் -இத்யாதி –
அதாவது –
அந்தி தொழும் சொல் -திருவாய்மொழி -10-8-7–என்று தாஸ்ய ரசம் அதிசயித்தால்-அதனுடைய
சரம தசையிலே சொல்லக் கடவ-தொழும் சொல் -என்று நம சப்தத்தத்தை சொல்லுகையாலே பலம் சொல்லிற்று -என்கை-

(உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-பலம் சொல்லிற்று)

———————————————-

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிறபடியே இதிலே பாகவத சேஷத்வமும்-அனுசந்தேயம்-சூரணை-89-

இப்பதத்திலே ததீய சேஷத்வமும் ஆர்த்தமாக அனுசந்தேயம் ஆகையாலே -அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நானுற்றதும்  உன் அடியார்க்கு அடிமை -பெரிய திரு மொழி -8-10-3-
என்று திரு மந்த்ரம் கற்றதால் நானுற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்னும் -இவ் அர்த்தத்திலே
என்கிறபடியே –
அஹங்கார மமகாரங்கள் நிவ்ருத்தமாய் -பகவத் சேஷத்வம் உள்ளபடி பிரகாசிக்கிற இந் நமஸிலே-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் அனுசந்திக்க வேணும் -என்கை-

(மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-)

———————————————————-

இது அகாரத்திலே என்றும் சொல்லுவார்கள்-
உகாரத்தில் என்றும் சொல்லுவார்கள் –சூரணை -90-

இப்படி ஆர்த்தமாக அனுசந்திக்கப் படும் -பாகவத சேஷத்வம் தான்-
இந்த நமஸில் அன்றிக்கே -ஸ்தலாந்தரங்களிலே சொல்லுவாரும்
உண்டு ஆகையாலே -அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சதுர்த்தியாலே -ஆத்மாவினுடைய பகவத் சேஷத்வத்தைச் சொல்லுகையாலே –
பகவத் சேஷத்வ காஷ்டையான -இந்த பாகவத சேஷத்வ அனுசந்தானம் -அகாரத்திலே-என்றும் –
சிலர் சொல்லுவார்கள் –

அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ததீய சேஷத்வ பர்யந்தமாக நிற்க்கையாலே-
அனந்யார்ஹத்வ பிரதிபாதகமான -உகாரத்திலும் -என்றும் சிலர் சொல்லுவார்கள் -என்கை-

ஆர்த்தம் ஆகையாலே -அவ்வவ ஸ்தலங்களிலும் சொல்லலாய் இருந்ததே  ஆகிலும் –
கந்தல் கழிந்த இடத்திலே சொல்லுகையே உசிதம் என்று கருத்து –

———————————————————

ஈஸ்வரன் தனக்கேயாக இருக்கும் –
அசித்து பிறர்க்கேயாக இருக்கும் –
ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாக இருக்கும் -என்று முற்பட்ட நினைவு –
அங்கன் இன்றிக்கே –
அசித்தைப் போலே -தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் -என்கிறது நமசால்-சூரணை -91-

இந்த நமஸ்ஸுக்கு பூர்வத்தில் பிறந்த பிரதிபத்தியைப் -பற்ற இதில் பிறந்த பிரதிபத்திக்கு உண்டான
வாசியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத-என்கிறபடியே –
ஸ்வாதந்த்ர்யமே ஸ்வரூபமான ஈஸ்வரன் ஸ்வார்த்த பரனாயே இருக்கும் –

சைதன்ய ரஹிதம் ஆகையாலே -தனக்கே என்கைக்கு யோக்யதை இன்றிக்கே
பாரதந்த்ர்ய ஸ்வரூபமாய் இருக்கும் அசித்து -பரார்த்தமாயே இருக்கும் –

சதுர்த்தியில் சொன்ன சேஷத்வத்தையும்-
மகாரத்தில் சொன்ன ஞாத்ருத்வத்தையும் –
உடையனான ஆத்மா ஞாத்ருத்வ பலத்தாலே -ஸ்வார்த்ததைக்கும்-
சேஷத்வத்தாலே பரார்த்தைக்கும் பொதுவாய் இருக்கும் என்று –
நமஸுக்கு பூர்வ பதத்தில் பிறந்த பிரதிபத்தி –

அப்படி இன்றிக்கே
பரார்தைக வேஷமான அசித்தைப் போலே –
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -திருவாய்மொழி -2-9-4-
என்கிறபடியே –
அத் தலைக்கே ரசமாம்படி விநியோகம் கொள்ள வேணும் -என்று
அபேஷிக்கிறது இந் நமஸ்சாலே என்கை –

(எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-)

( பரார்த்தமாயே இருக்கும் –பர ப்ரயோஜன அர்த்தமாயே இருக்கும்
உடையனான–ஸ்வரூபமாக யுடையனான
பூர்வ பதத்தில் பிறந்த பிரதிபத்தி-பூர்வ பதமான ப்ரணவத்தில் பிறந்த
ஈஸ்வரன் தனக்கேயாக இருக்கும் –ஸ்வார்த பரனாகவே இருக்கும்
அசித்து பிறர்க்கேயாக இருக்கும் – சைதன்ய ரஹிதமாகையாலே தனக்கு என்பதற்கு யோக்யதை இன்றிக்கே
பிறர்க்கேயாய் இருக்கும் -பரதந்த்ர ஸ்வரூபமாய் இருக்கும்
ஆத்மா –சதுர்த்தியில் சொன்ன சேஷத்வத்தையும் மகாரத்தில் சொன்ன ஞாத்ருத்வத்தையும் ஸ்வரூபமாக யுடையனான ஆத்மா
தனக்கும் –ஞாத்ருத்வ பலத்தாலே ஸ்வார்த்ததைக்கும்
பிறர்க்கும் –சேஷத்வ பலத்தாலே பிரார்த்தைக்கும்
பொதுவாக இருக்கும்
அத் தலைக்கே ரசமாம்படி –ரஸ வஹமாம் படி
விநியோகம் கொள்ள வேணும்–யதேஷ்ட விநியோக அர்ஹமாகத் திரு உள்ளம் பற்றி அருள வேணும்)

—————————————————–

அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –சூரணை -92

(நம் சேஷத்வத்தை நோக்க வேணும் என்று அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்றவாறு-
ஆஸ்ரயண தசை வேறே போக தசை வேறே – )

தனக்கேயாக -என்றதை உபபாதிக்கிறார் –

அதாவது –
இத்தால் அத் தலைக்கு ரசமாம் படி விநியோகப் படுகை யாவது -தன்னோடு கலந்து பரிமாறும் தசையிலே
போக்தாவான ஈஸ்வரன்-
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்மொழி -9-6-7-என்கிறபடி-
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தந் வியாமோஹத்தாலே தாழ நின்று பரிமாறி –
இத் தலையில் சேஷத்வத்தை அழிக்கும் பொழுது –
நம் சேஷத்வத்தை நாம் நோக்க வேணும் -என்று
நைச்சயம் பாவித்து -இறாய்த்து-அவன் போகத்தை அழியாது ஒழிகை -என்கை –

(காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-)

(இனி என்றது -அவன் இவனை சேஷியாக வைத்து விநியோகம் கொள்ளவுமாம் -சேஷனாக வைத்து விநியோகம் கொள்ளவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை -அவன் முக மலர்த்திக்குத் த்வாரமாவதுவே இவனுக்கு உத்தேச்யம் என்னும்படி
அத்யந்த பாரதந்தர்யம் இந்த நமஸ்ஸாலே ஸித்தித்த அநந்தரம்
எம்பெருமான் இவனை சேஷியாக வைக்க இசைந்து இருக்கை இவனுடைய ஸ்வரூபமான பாரதந்தர்யத்துக்கு எல்லை நிலம்
அவன் தன்னை இவனுக்கு சேஷம் ஆக்குகை அவனுடைய நிராங்குச ஸ்வா தந்தர்யத்துக்கு எல்லை நிலம்)

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –
அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே -திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் –
கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து –மாயனால் -என்கிறார் –

கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது-
என் உயிரைக் குறை இல்லாதபடி உண்ணச் செய்தேயும்-அவன் குறைவாளனாய்-விருப்பம் உள்ளவனாய்
போகையாலே-இத்தலையில் இன்னம் சிறிது குறைந்தது உள்ளது-என்று இருக்கிறார் –
அன்றிக்கே
இப்போது இருந்து துக்கப் பட்டு காண்கையாலே-சிறிது தொங்கிற்று உண்டு -என்று இருக்கிறார் -என்னுதல்
ஒரு முற்றறிவினன்-சர்வஞ்ஞன் –இல்லாதது ஒன்றிலே இத்தனை காதல் செய்யக் கூடாது-என்று இருக்கிறார் –

————————————–

அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் –சூரணை -93-
(லுப்த வியக்த சதுர்த்திகளால் )

இப்படி அழிக்கைக்கு ஹேது என்ன -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஈஸ்வரன் மேல் விழுந்து விநியோகம் கொள்ளுகிற தசையிலே இவன்
நைச்சயம் பாவித்து -இறாய்த்து -அவன் போகத்தை அழிக்கைக்கு ஹேது –
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்கையாலே கீழே பிரணவத்தில் சொல்லிற்று –
சதுர்த்தியிலே கிங்கர ஸ்வபாவனாகச் சொல்லுகையாலே -மேலில் பதத்திலும் சொல்லும் என்கை –

———————————————————-

இந் நினைவு பிறந்த போதே க்ருத்க்ருத்யன் –
இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்-
இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்களும் உண்டு –
இது இன்றிக்கே இருக்கப் பண்ணும் யஞ்ஞாதிகளும் ப்ராயச்சித்தாதிகளும் நிஷ் பிரயோஜனங்கள்-
இது தன்னாலே எல்லா பாபங்களும் போம் –
எல்லா பலன்களும் உண்டாம் –சூர-ணை -94-

இனி இப் பாரதந்த்ர்ய பிரதிபத்தி யினுடைய வைபவத்தைப் பலபடியாக அருளிச்
செய்யா நின்று கொண்டு இப் பதத்தை நிகமித்து அருளுகிறார் மேல் –

இந் நினைவு பிறந்த போதே க்ருத்க்ருத்யன் –என்றது
தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்னும் இவ் அத்யந்த பாரதந்த்ர்ய
பிரதிபத்தி பிறந்த போதே தன்னுடைய ஹிதத்துக்கு உடலாக செய்ய வேண்டுவது
எல்லாம் செய்து தலைக் கட்டினவன் என்கை-

இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும் க்ருதம்-என்றது
இப் பாரதந்த்ர்ய பிரதிபத்தி இல்லாத போது –
கிம் தேன ந க்ருதம் பாபம் கிம் தேன ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா- -என்கிறபடியே
சகல துஷ் க்ருதங்களும் இவனால் செய்யப் பட்டதாய் விடும் என்கை –

இந் நினைவிலே எல்லா ஸூஹ்ருதங்களும் உண்டு -என்றது
இது உண்டாகவே எல்லா ஸூஹ்ருதம் பண்ணினால் பிறக்கும்
ப்ரீதி ஈஸ்வரனுக்கு விளைக்கையாலே -இந்த பாரதந்த்ர்ய பிரதிபத்தியிலே
சகல ஸூஹ்ருதமும் உண்டு என்கை-

இது இன்றிக்கே இருக்க பண்ணும் யஞ்ஞாதிகளும் ப்ராயச்சித்தாதிகளும் நிஷ் பிரயோஜனங்கள்-என்றது
இந்த பாரதந்த்ர்ய பிரதிபத்தி இன்றிக்கே இருக்கச் செய்தே -ஈஸ்வர ப்ரீதியர்த்தமாக இவன் பண்ணும்
யாகாதி கர்மங்களும் -தந் பாப விமோசன அர்த்தமாக பண்ணும் க்ருச்சர சந்த்ராயனாதிகள் ஆகிற
ப்ராயசித்தாதிகளும் -ஈஸ்வர ப்ரீதிக்கும்-ஸ்வ பாப விமோசனத்துக்கும் உடல் ஆகாமையாலே
நிஷ் பிரயோஜனங்கள் -என்கை

இது தன்னாலே எல்லா பாபங்களும் போம் –
எல்லா பலன்களும் உண்டாம் -என்றது –
இந்த பாரதந்த்ர்ய பிரதிபத்தியாலே ஈஸ்வரன் இவன் அளவிலே
அனுக்ரஹ அதிசயத்தைப் பண்ணுகையாலே அவனுடைய
நிக்ரஹத்மகமான சகல பாபங்களும் போம் –

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -என்கிறபடியே
இவனுக்கு எத்தைச் செய்வோம் என்று மேன்மேலும் உபகரிக்கையாலே –
சம்சார நிவ்ருத்தி தொடக்கமாக கைங்கர்ய ப்ராப்தி பர்யந்தமாக சகல
பலன்களும் உண்டாம் என்கை

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-)

ஆக மத்யம பத அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

————————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading