ஆய -என்கிற இத்தால் –
சென்றால் குடையாம் -என்கிறபடியே எல்லா அடிமைகளும்
செய்ய வேண்டும் என்று அபேஷிக்கிறது–சூரணை -105
ஆக நாராயண — பதத்தாலே -கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஈஸ்வரன் படியை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி இதில் விபக்தி அம்சத்தாலே கைங்கர்யத்தை பிரார்திக்கிற படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
ஆய -என்கிற இந்த சதுர்தியாலே -சென்றால் குடையாம் –முதல் திரு அந்தாதி –53-என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே
திருவனந்தாழ்வானை போலே சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய வேணும் என்று அபேஷிக்கிறது -என்கை-
(ஆவிஸ்யு என்கிற அத்யா ஹ்ருதமான கிரியா பத்தத்தைக் கடாக்ஷித்து -எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும் என்று அபேஷிக்கிறது-என்று அருளிச் செய்கிறார்)
(சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம் திருமாற் கரவு ——53-)
————————————————————–
நமஸ்ஸாலே தன்னோடு உறவு இல்லை என்று வைத்து கைங்கர்யத்தை பிரார்த்திக்க கூடுமோ என்னில்-சூரணை -106
நமஸ்ஸாலே தனக்கு என்று ஒன்றை விரும்புகைக்கு ப்ராப்தி இல்லாத அத்யந்த பாரதந்த்ர்யம் சொல்லி இருக்க –
இக் கைங்கர்யத்தை தான் விரும்பி அபேஷிக்கை சம்பவியாது என்று
இருக்குமவர்கள் பண்ணும் ப்ரசனத்தை அனுவதிக்கிறார் –
————————————————–
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்கிறபடியே கைங்கர்ய பிரார்த்தனை
வந்தேறி அன்று -ஸ்வரூப பிரயுக்தம் –சூரணை -107
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே –பெருமாள் திருமொழி –4-9-என்று
அத்யந்த பாரதந்த்ர்யத்தோடே கைங்கர்ய பிரார்த்தனையும் சொல்லுகிற படியே கைங்கர்ய பிரார்த்தனை –
ஸ்வ போக்த்வத்வ ரூப அஹங்கார பிரயுக்தமாய் கொண்டு வந்தேறியானது அன்று –
சேஷிக்கு அதிசயத்தை விளைத்து அல்லது தான் தரியாத
படியான தன் ஸ்வரூபத்தை பற்றி வந்தது -என்கை-
(சேஷிக்கு அதிசயத்தை விளைத்து-கிஞ்சித் காரம் செய்து-)
(சேஷத்வ லக்ஷணம்-பர கத அதிசய ஆதான இச்சையா உபாதே யாத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷக பர சேஷி)
(செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-)
—————————————————-
ஆகையால் வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் (3-3-1-)-என்கிற பிரார்த்தனையைக் காட்டுகிறது –சூரணை -108
உக்தத்தை ஹேதுவாய் கொண்டு சதுர்த்தியின் கைங்கர்ய பிரார்த்தனா பிரகாசத்வத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
கைங்கர்ய பிரார்த்தனை வந்தேறி அன்றிகே ஸ்வரூப பிரயுக்த–என்கிற பிரார்த்தனையை
இச் சதுர்த்தி பிரகாசிப்பிகிறது -என்கை-
(ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)
—————————————————
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்-என்கிற படி
காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை –
கண்டால் -சதா பஸ்யந்தி -ஆகையால் உறக்கம் இல்லை –சூரணை-109
இனி இந்த கைங்கர்ய ப்ரார்தனை இடை விடாமல் நடக்கைக்கு உறுப்பான ப்ராப்ய ருசியை உடையார்
படியை அருளிச் செய்கிறார் –
அதாவது –
இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல் –திரு விருத்தம் –97-என்று
நித்ய ஸூரிகளுடைய திரளானது அநந்தரம் பண்ணுகிற சர்வேஸ்வரனை கண்கள் நிறையும் படி
கண்டு ஒழிய கழியாதபடியான காதலிலே நிலை நின்ற காதலிலே நிலை நின்றவர்களுக்கும்
கண்கள் உறங்குதல் உண்டோ -என்னுமா போலே
விஷயத்தை காண்பதற்கு முன் -ஞான சங்கோச ரூபமான உறக்கம் இல்லை –
கண்ட காலத்தில் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே
சதானுபவம் பண்ணுகையாலே உறக்கம் இல்லை -என்கை-
(எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-)
————————————————
பழுதே பல காலும் போயின -என்று இழந்த நாளுக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லை –சூரணை -110
இன்னும் ஒரு ஹேதுவினாலே இவனுக்கு உறக்கம் இல்லாமையை அருளிச் செய்கிறார் –
அதாவது
செங்கண் அடலோத வண்ணர் அடி அரவணை மேல் கண்டு தொழுதேன்
பல காலும் பழுதே போயின என்று அஞ்சி அழுதேன் –முதல் திரு அந்தாதி -16-என்று
விஷயத்தைக் கண்டு அனுபவித்தவாறே –
இப்படி அனுபவிக்கைக்கு உடலான அநேக காலம் எல்லாம் வியர்த்தமே போய் விட்டதே என்று –
இழந்த நாளை நினைத்து க்லேசித்து கூப்பிடுகிறவனுக்கு மேல் உள்ள நாளில் உறக்கம் வர வழி இல்லை -என்கை-
(செங்கண் -பரத்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்த கண்களை யுடையவராய்
அடலோத வண்ணர் அடி–ஆஸ்ரித விரோதி நிரஸனத்துக்கு உடலான பராபி பவந சாமர்த்தியத்தை யுடையவராய்
சமுத்திரம் போலே காம்பீர்யத்தையும் திருமேனி வர்ணத்தையும் யுடைய வரான எம்பெருமானுடைய திருவடிகளை)
(பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி—-16–)
———————————————————–
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -என்னா நின்றார்கள் இறே-சூரணை -111
இன்னம் இவ் விஷயத்தில் அறிவு பிறந்தார்க்கு மறக்கப் போகாது என்னுமத்தை இசைவிக்கிறார் –
அதாவது
என்னைப் பெறுகைக்காக திருப்பதிகளிலே நிற்பது -இருப்பது -கிடப்பதாக நிற்க-
அக் காலத்தில் நான் ஞான லாபமான ஜென்மத்தை உடையனாக பெற்றிலேன் –
அந்த ஜன்மம் உண்டான பின்பு -அவனை ஒரு காலும் மறந்திலேன் -என்று சொல்லா நின்றார்கள் இறே –
ஆக
ப்ராப்ய வை லஷண்ய ஞானம் பிறந்தார் படி இது ஆகையாலே –
இந்த கைங்கர்ய ப்ரார்தனை இடைவிடாமல் நடக்கும் என்று கருத்து –
(நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-)
(ஆக -கீழ்ச சொன்ன ஹேதுக்கள் எல்லாவற்றாலும் -அதாவது
சதுர்த்தியினாலே கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லுகையும் –
கைங்கர்யம் தான் இல்லாத போது சேஷத்வம் இல்லையாம் படியே சேஷத்வ உபஷ் டம்பகமாய் இருக்கையும்
இந்த சேஷத்வம் தான் ஆத்மாவுக்கு அசாதாரண நிரூபகமாய் இருக்கையும்
ஆத்மா தான் நித்யனாய் இருக்கையும்
ப்ராப்ய வை லக்ஷண்யம் அடியாக ப்ராப்ய ருசி யுடையராய் இருக்கையும்
ஆக பிராமண ப்ரமேய ப்ரமாதாக்களை அருளிச் செய்தார் ஆய்த்து)
—————————————————–
இவ் அடிமை தான் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்கிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் அனுவர்த்திக்கும் –சூரணை -112
இனி இந்த கைங்கர்யத்துக்கு தேச காலாதி நியமம் இல்லாமையை அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ் ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமான இந்த கைங்கர்யம் தான் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –திரு வாய் மொழி –3-3-1-என்று
ஒழிவில்லாத காலம் எல்லாம் சர்வ தேசத்திலும் உடனாய்
சர்வ அவஸ்தையிலும் பிரியாது நின்று -என்கிற படியே
சர்வ தேசத்திலும்
சர்வ காலத்திலும்
சர்வ அவஸ்தையிலும்
நடந்து செல்லும் என்கை –
(ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)
——————————————————–
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –சூரணை -113
பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –
திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம் என்னும் இடம் தோற்ற –
இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –
அதாவது –
பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள ஸூத்ரம் போல் அன்றிக்கே –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –
எட்டு திரு அஷரமாய்-
மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –
(திரு மந்த்ரத்தை மங்கள ஸூத்ரமாக நிரூபித்து
அதிலே த்வயமாகிற அச்சுத தாலியையும் முளைத் தாலியையும்
வயிர மணி ஸ்தானத்தில் 32- எழுத்துத்தான சரம ஸ்லோகத்தையும் சேர்த்து
ஆத்மாக்களுக்கு அநந்யார்ஹத்வ ப்ரகாசகமாகக் கட்டினான்)
——————————————————–
இத்தால் ஈஸ்வரன் ஆத்மாக்களுக்கு பதியாய் நின்று ரஷிக்கும் என்கிறது –சூரணை -114
இப்படி நிரூபித்து சொன்ன இத்தால் எவ்வர்த்தம் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
இத்தை மங்கள ஸூத்ரமாக சொன்ன இத்தால்-
ஈஸ்வரன் இத்தோடு அந்வயமுடைய ஆத்மாக்களுக்கு
பதியாய் நின்று ரஷிக்கும் என்று சொல்கிறது -என்கை-
——————————————————–
ஆக திரு மந்தரத்தால் –
எம்பிரானுக்கே உரியேனான நான்
எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேணும்
சர்வ சேஷியான நாராயணனுக்கே
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் –
என்றது ஆயிற்று –சூரணை -115
இனி இம் மந்தரத்தால் பிரதிபாதித்த அர்த்தத்தை ஸங்க்ரஹித்துச் சொல்லி
இத்தை நிகமித்து அருளுகிறார் –
ஆக என்று
கீழ் பரக்க அருளிச் செய்த எல்லாவற்றையும் தொகுத்து அருளிச் செய்கிறார் என்னும் இடம் தோற்ற
எம்பிரானுக்கே உரியேனான நான் -இதில்
எம்பெருமானுக்கு -என்று சதுர்த்யந்தமான பிரதம அஷரத்தில் அர்த்தத்தையும் –
அவதாரணத்தாலே-மத்யம அஷரத்தில் அர்த்தத்தையும்
உரியேனான நான் -த்ருதீய அஷரத்தில் அர்த்தத்தையும் -சொல்லுகையாலே –
பிரதம பதத்தை ஸங்க்ரஹித்த படி
எனக்கு உரியேன் அன்றிக்கே ஒழிய வேணும் -இதில்
எனக்கு உரியன் -என்று ஷஷ்டைந்தரமான மகார அர்த்தத்தையும் –
அன்றிக்கே ஒழிய -என்கையாலே நகார அர்த்தத்தையும்
வேணும் -என்கையாலே -இவ் அர்த்தம் சேதனனுக்கு பிரார்தநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கையாலே
மத்யம பதார்த்தைதை ஸங்க்ரஹித்த படி –
சர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும் செய்ய பெறுவேனாக வேணும் -இதில்
சர்வ சேஷியான நாராயணனுக்கே -என்று கைங்கர்ய பிரதி பந்த சம்பந்தியையும் –
கைங்கர்ய பிரார்த்தனா பிரகாசிகையான சதுர்தியையும் –
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் -என்று
கைங்கர்ய பிரார்த்தானா பிரகாரத்தையும் –
த்ருதீய பதார்த்தை ஸங்க்ரஹித்தபடி
என்றதாயிற்று -என்றது
என்று சொல்லிற்று ஆயிற்று -என்கை –
விஸ்தரேண அருளிச் செய்தததை மீளவும் இப்படி ஸங்க்ரஹித்து அருளிச் செய்தது
திரு மந்திர அர்த்தத்தை எல்லோரும் அனுசந்திதிக்கைக்காக –
ஆகையால் எல்லார்க்கும் இவ் அர்த்தம் எப்போதும் அனுசந்தேயம்
(எப்போதும் -அத்யயன அநத்யயன கால நியமம் இன்றியிலே நித்யங்களைப் போலே எக்காலத்திலும் என்றபடி -)
(இப்படி அருளிச் செய்தலால் நவவித சம்பந்தமும் ஸூசிதமாயிற்று
அகாரத்தாலே பிதா புத்ர சம்பந்தமும்
அவ ரஷணே -தாது அர்த்த பலத்தாலே ரஷய ரக்ஷக சம்பந்தமும்
சதுர்த்தியாலே சேஷ சேஷி பாவ சம்பந்தமும்
உகாரத்தாலே பதி பார்யா சம்பந்தமும்
மகாரத்தாலே -ஞாதர் ஜ்ஜேய சம்பந்தமும்
நமஸ்ஸாலே -ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தமும்
நாராயண பாதத்தால் சரீர சரீரீ சம்பந்தமும்
அயன பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தமும்
ஆய பதத்தாலே போக்ய போக சம்பந்தமும் –சொல்லித் தலைக் கட்டுகிறது)
———————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply