முதல் மந்த்ரமான திருமந்த்ரத்தினுடைய அர்த்தத்தை அருளிச் செய்த பிறகு, அதில் இரண்டாம் பதத்தாலும் மூன்றாம் பதத்தாலும் சொன்ன உபாய உபேயங்களை விரிவாகச் சொல்லா நின்றுள்ள த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்கிறார்-முன்பு அருளிச் செய்த ஸ்ரீய:பதிப்படி யாத்ருச்சிகப்படி பரந்தபடி. என்ற மூன்று ப்ரபந்தங்களிலும் திருமந்த்ர அர்த்தத்துக்குப் பிறகு சரம ஸ்லோக அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு த்வயார்த்தம் அருளிச் செய்தவர், இப்போது த்வயத்தின் அர்த்தத்தை முன்னம் அருளிச் செய்வானென்? என்னில், இரண்டு விதங்களும் அருளிச் செய்யலா யிருக்கையாலே. பெரியவாச்சான்பிள்ளை, வாதிகேஸரி அழகிய மணவாளச்சீயர் முதலானாரும் இந்த விதமாக வன்றே அருளிச் செய்தது. இந்த இரண்டு விதங்களுக்கும் கருத்து என்ன? என்னில்: சரம ஸ்லோகார்த்தம் முன்னாகவும், த்வயார்த்தம் பின்னாகவும் சொன்னது, சரம ஸ்லோகத்தில் “சரணம் வ்ரஜ -உபாயமாகப் பற்று” என்று விதிக்க, த்வயத்தில் “சரணம் ப்ரபத்யே’ என்று அநுஷ்டானத்தை மேற் கொண்டு ‘உபாயமாகப் பற்றுகிறேன்’ என்று சொல்லிப் பற்றுகையாலே, விதிக்கவும் அதை மேற் கொண்டு பற்றுகையுமா யிருக்கையாலே, இப்படி விதி முன்னாகவும் -அதநுஷ்டாநம்- மேற்கொண்டொழுகுவது பின்பாகவும் முறையாகையாலும் சரம ஸ்லோகம் முன்பும் த்வயம் பின்பும் சொன்னதாம்.திருமந்த்ரம் பயனைச் சொல்லுமதாய், சரம ஸ்லோகம் அந்தப் பயனைத் தரும் சாதனத்தைச் சொல்லு மதாயிருக்கையாலே முன் மூன்று ப்ரபந்தங்களில் சரம ஸ்லோகம் முன்னும் த்வயம் பின்னுமாகச் சொன்னார்-இந்த முமுஷுப்படியில், திருமந்த்ரார்த்தம் த்வயார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் இப்படிச் சொல்லியிருப்பதாவது: திருமந்திரத்தில் நடுப் பதத்துக்கும் மூன்றாம் பதத்துக்கும் இரண்டு வாக்கியங்களை யுடைய த்வயம் விவரணமாய், அந்த த்வயத்துக்கு சரம ஸ்லோகத்தில், முற்பாதி பிற்பாதி இரண்டு வாக்கியங்களை யுடைய சரம ஸ்லோகம் விவரணமாய் இருக்கும் ஆகாரத்தாலே அப்படி சொல்லப்பட்டது. இப்படி இரு முறைகளும் சொல்லலாயிருக்கை யாகையாலே, முன் மூன்று ப்ரபந்தங்களும் சரம ஸ்லோகம் முன்னாக த்வயம் பின்னாகச் சொன்னவர், மற்ற முறையும் சொல்ல வேண்டிய தாகையாலே இந்த ப்ரபந்தத்தில் த்வயம் முன்னாகச்
சொல்லுகிறார் என்றபடி.
அதில் முதலிலே வைஷ்ணவனாய் யிருப்பானொருவனுக்குத் தன் அதிகாரார்த்தமாக அவச்யம் மேற் கொண்டொழுக வேண்டியவற்றைச் சுருங்கவும், தெளிவாகவும் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -116-புறம்புண்டான பற்றுக்களை யடைய வாசனையோடே விடுகையும், எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையும், பேறு தப்பாதென்று துணிந்திருக்கையும், பேற்றுக்கு த்வரிக்கையும், இருக்கும் நாள் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய் குணாநுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகையும், இப்படி இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏற்ற மறிந்து உகந்திருக்கையும், திருமந்திரத்திலும் த்வயத்திலும் நியதனாகையும், ஆசார்ய ப்ரேமம் கனத்திருக்கையும், ஆசார்யன் பக்கலிலும் எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய்ப் போருகையும், ஜ்ஞாநமும், விரக்தியும், சாந்தியும் உடையவனா யிருக்கும் பரம ஸாத்விகனோடே ஸஹவாஸம் பண்ணுகையும் வைஷ்வண அதிகாரிக்கு அவஸ்யாபேஷிதம்.
புறம்புண்டான பற்றுக்களை யடைய வாசனையோடே விடுகையாவது, “பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந், ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி சக்ருஹாணி ச , ஸர்வ தர்மாம்ச்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்சச ஸாக்ஷராந்,
லோக விக்ராந்த சரணெள சரணம் தேவ்ரஜம் விபோ”
பிதரம் – பிதாவையும்,
மாதரம் – மாதாவையும்,
தாராந்-மனைவியையும்,
புத்ராந்-பிள்ளைகளையும்,
பந்தூந்– பந்துக்களையும்,
ஸகீந்-ஸ்நேஹிதர்களையும்,
குரூந்-ஆசார்யா்களையும்,
ரத்நாநி- ரத்தினங்களையும்,
தந தாந்யாநி- -தந தாந்யங்களையும், க்ஷேத்ராணிச-வயல்களையும்,
க்ருஹாணிச-வீடுகளையும்,
ஸர்வ தர்மாம்ச்ச (உபாயாந்தரங்களான) அனைத்து தர்மங்களையும்,
ஸாக்ஷ்ராந் – கைவல்யத்தோடு கூடிய, ஸர்வ காமாம்ச்ச – (மற்ற) அனைத்துப் பயன்களையும்,
ஸந்த்யஜ்ய-நன்றாக விட்டு,
விபோ-ஸ்வாமி!
தே-தேவரீருடைய,
லோக விக்ராந்த சரணெள-உலகளந்த திருவடிகளையே,
சரணம்– உபாயமாக,
அவ்ரஜம்-பற்றினேன்.
இவை முதலானவற்றின் படியே எப்பெருமானைத் தவிர்ந்த விஷயங்களில் பற்றுக்களெல்லாவற்றையும், மீண்டும் வாராதபடி. வாசனையோடு விடுகை.
எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையாவது, வேறொன்று தஞ்சமென்கிற நினைவு கலசாதபடி, காரணமில்லாது இயல்பாகவே ரக்ஷகனான ஸர்வேஸ்வரனையே தஞ்சமாகப் பற்றுகை.
இந்த இரண்டு வாக்யத்தாலும் சரம ஸ்லோகத்தில் முற்பாதியில் அர்த்தத்தத்தைச் சொல்லுகிறது. எவ்வாறெனில்? புறம்புண்டான பற்றுக்களை யடைய என்று ஸர்வ தர்மாந்’
என்கிற பதத்தில் அர்த்தத்தையும், வாசனையோடே விடுகையும் என்று ‘பரித்யஜ்ய’ என்கிற பதத்திலர்த்தத்தையும், எம்பெருமானை என்று ‘மாம்’ என்கிற பதத்தில் அர்த்தத்தையும் -‘ஏ’ என்ற ஏவகாரத்தாலே ஏக’ பதார்த்தத்ததையும், தஞ்சம் என்கையாலே ‘சரண பதத்தில் அர்த்தத்தையும், பற்றுகையும் என்று வ்ரஜ பதத்திலர்த்தத்தையும் அடைவே சொல்லுகையாலே.
பேறு தப்பாது என்று துணிந்திருக்கையாவது, -உபாயத்தின் எளிமையையும் பெற வேண்டிய பலத்தில் நம்பிக்கை கொள்வதில் உண்டான அருமையையும், தன் திறத்துண்டான குறைபாடுகளையும், இதன் மூலமாக வரும் மூன்று ஐயங்களும் இல்லாமல், பலம் தப்பாமல் கிடைக்கு மென்று நம்பிக்கை யோடிருக்கை–
பேற்றுக்கு த்வரிக்கையாவது: இப்படி நம்பிக்கையோடிருந்து பலம் கிடைத்த போது கிடைக்கட்டுமென்று ஆறி இராமல் “மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகமெண்ணும்” என்று “தாவி வையங் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்
ளுங் காலம் இன்னங் குறுகாதோ?’என்கிறபடியே முறைப்படி.வரட்டும் என்று பொறுத்திருக்காமல் பதறுகை.
இருக்கும் நாள் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய் குணா நுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்காகையாவது: -பரமபதத்திலே போய் பகவதநுபவ கைங்கர்யங்களைப் பண்ணுகையாகிற பேற்றில் வேட்கை நடவா நிற்கச் செய்தேயும், இந்தச் சரீரத்தோடே இருக்கும் நாள் ‘தானுகந்த ஊர்” என்கிற படியே எம்பெருமான் உகந்து கோயில் கொண்டுள்ள திவ்விய தேசங்களிலே “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை’ என்று மண்டுகையாகிற வேட்கை யுடையவனாய், அவ்வோ திவ்விய தேசங்களிலே
நிற்கிறவனுடைய கல்யாண குணாநுபவமும், அதன் மூலமாக முக் கரணங்களாலும் அவன் விஷயத்தில் செய்யுங் கைங்கர்யமுமே காலக் கழிவுக்கு விஷயமாம்படி, இருக்கை.
இப்படி. இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏற்றமறிந்து உகந்திருக்கையாவது: கீழ்ச் சொன்ன இந்த நிலைமைகளெல்லாம் உடையராயிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் நெருப்புச் சட்டியில் தாமரை பூத்தாற் போலே இந்த இருள் தருமா ஞாலத்திலும் இப்படியும் சிலருண்டாவதே! என்று அவர்கள் வைபவமறிந்து அவர்களளவில் பேரன்புடையனா யிருக்கை.-கீழ்ச்சொன்னவை எல்லாம் உண்டானாலும் இது உண்டாவதரிதா யிருப்ப தொன்றன்றோ.
திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் ‘ நியதனாகையாவது:- வேறு மந்த்ரங்களின் திறத்தில் மறந்தும் போகாதே விட வேண்டிய வற்றையும், பற்ற வேண்டிய வற்றையும் தெளிய அறிவிக்குந் திருமந்த்ரத்திலும், அதன் அர்த்தத்துக்கு விவரணமான த்வயத்திலும் நிலைத்த. நிஷ்டை யுடையனாகை.
ஆசார்ய ப்ரேமம் கனத்திருக்கையாவது:– கீழ்ச்சொன்ன நிலைமைகளெல்லாம் உபதேசத்தாலே தனக்குண்டாக்கின ஆசார்ய விஷயத்தில், “யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரெள”,
யஸ்யதேவே – யாதொருவனுக்குத் தெய்வத்தினிடத்தில்,
பரா பக்தி:- மேலான பக்தி (இருக்கிறதோ), ததா – அப்படியே,
யதா தேவே – அந்தத் தெய்வத்திற்குச் சமமான,
குரெள-ஆசார்யனிடத்திலும்,
பரா பக்தி: மேலான பக்தி இருக்கின்றதோ, தஸ்ய மஹாத்மந:- அந்த மஹாத்மாவுக்கு,
கதிதா:– சொல்லப்பட்ட,
ஏதே அர்த்தா:- இந்த அர்த்தங்கள்,
ப்ரகாசந்தே – ப்ரகாஸியா நிற்கும். என்கிறபடியே ப்ரேமம் மிகுந்திருக்கை.
ஆசார்யன் பக்கலிலும், எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய்ப் போருகை யாவது:– நித்ய ஸம்ஸாரியான தன்னை நித்யஸூரிகள் நிலைமைக்குத் தகுந்தவனாம் படி. ‘இரும்பைப் பொன்னாக்குவாரைப் போலே’ திருத்தின ஆசார்யன் பக்கலிலும் தன் திறத்து த்வேஷமின்மை முதலானவைகளை உண்டாக்கிக் கொண்டு வந்து ஆசார்யன் திறத்துச் சேர்த்த எம்பெருமான் பக்கலிலும் நன்றி பாராட்டும்வனாகை.
ஜ்ஞாநமும் விரக்தியும் சாந்தியும் உடையனாயிருக்கும் பரம ஸாத்விகனோடே ஸஹவாசம் பண்ணுகையாவது – தான் கலங்கினாலும் கலங்காமல் நோக்குகைக்கு உறுப்பாகவும், கீழ்ச் சொன்ன நிலைமைகள் தனக்கு மேம்படுகைக்கு உறுப்பாகவும், (தத்வ யாதாத்ம்ய ஜ்ஞாநமும்) உண்மையான வற்றை உள்ளபடி. அறிகிற அறிவும், தகாதவற்றில் வைராக்யமும் இவை இரண்டும் நமக்குண்டென்று இறுமாப்பற்றிருக்கையாகிற சாந்தியும் உடையனாயிருக்கும் பரம ஸத்வ நிஷ்டனாயிருப்பான் ஒரு பாகவதனோடே
ரசித்துப் போருகை வைஷ்ணவாதிகாரிக்கு அவஸ்யாபேஷிதம் என்றது, இவை இத்தனையும் வைஷ்ணவன் என்றிருப்பான் ஒரு அதிகாரிக்கு அவசியம் உண்டாக வேணுமென்கை –
இப்படி இருக்கும் இவனுக்கு அநுஸந்திக்க வேண்டியதை வகுத்து அருளிச் செய்கிறார்-
ஸூர்ணை -117-இந்த அதிகாரிக்கு ரஹஸ்ய த்ரயமும் அவஸ்யம் அநு ஸந்தேயம்.
கீழ்ச் சொன்ன நிலைமைகளை யுடையனாயிருக்கும் இவ் வதிகாரிக்கு, அந்த அறிவு வர்க்கங்களை வளர்ப்பதான் இந்த மூன்று மந்த்ரங்களுமே அர்த்தத்தோடு அறிகைக் குரித்தான நினைவிற்கு விஷயமாகக் கொள்ள வேண்டும்-
இனி, த்வயத்திற் சொல்லுகிற சிறப்புடைமையை அறிவிக்கைக்காக, சாஸ்திரம் திருமந்த்ரம் சரம ஸ்லோகம் இவைகளில் அருளிச் செய்கிற விதங்களைச் சொல்லிக் கொண்டு போய் த்வயார்த்தச் சிறப்பை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -118- எல்லா ப்ரமாணங்களிலும் தேஹத்தாலே பேறென்கிறது;திருமந்த்ரத்தில் ஆத்மாவாலே பேறென்கிறது; சரம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே
பேறென்கிறது; த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே பேறென்கிறது .
சேதனனுடைய சரீரத்தோடு யுள்ள நிலையிலே நோக்கான ஸகல சாஸ்த்ரங்களிலும் சாதனத்தைக் கொண்டு ஒழுகுவதற்கு ஏற்றதான தேகத்தாலே ப்ரயோஜன லாபமென்கிறது. தேகத்தைத் தள்ளி ஆத்ம ஸ்வரூபத்தில் நோக்கான திருமந்த்ரத்தில், இவன் காப்பில் நின்றும் கை வாங்கினாலொழிய எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் நடவாதாகையாலே, பகவத் ரக்ஷகத்வ விரோதியான தன் முயற்சியை விட்டிருக்கும் ஆத்மாவாலே
புருஷார்த்த லாபமான பயனென்கிறது. எம்பெருமானுடைய ஸ்வதந்தரத்திலே நோக்கமான சரம ஸ்லோகத்தில், (சேதனனுடைய) இவனுடைய பற்றுக் கோடும் மிகையாம்படி
தானே கைக் கொண்டு தன்னை அடையத் தடையான அனைத்துப் பாபங்களையும் தள்ளி, தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளும் எம்பெருமானாலே பயனாகிற லாபமென்கிறது. எம்பெருமான் பிராட்டியுடன் கூடியிருக்கிற நிலையில் நோக்கான த்வயத்தில், எம்பெருமானை சார்ந்திருப்பவளான பெரிய பிராட்டியாராலே புருஷார்த்த லாபம்
என்கிறது என்கை. புருஷார்த்தம் – புருஷனாலே ஆர்த்திக்கப்பட்ட பேறு பயன்.
விரோதியைப் போக்கித் தன்னிடத்தில் சேர்த்துக் கொள்ளும் உபாயம் எம்பெருமானாயிருக்க பிராட்டியாலே பேறாகையாவதென்? என்கிற ஐய வினாவை அருளிச் செய்கிறார். பேறு – பயன்.
ஸூர்ணை -119 – பெரிய பிராட்டியாராலே பேறாகையாவது- இவள் புருஷகாரமானாலல்லது ஈஸ்வரன் கார்யஞ் செய்யானென்கை .
இஷ்டத்தைக் கொடுக்கையும், இஷ்ட மல்லாததைத் தள்ளுகையும் இரண்டும் “செய்வான் எம்பெருமானா யிருக்கப் பெரிய பிராட்டியாலே இவனுக்குப் பேறாகையாவது:- இவனுடைய அபராதத்தைப் பாராதே ரஷிக்கும்படி இவள் சிபாரிசு செய்தாலொழிய, ஈஸ்வரன்
கார்யம் செய்யானென்றபடி என்கை.
கீழ்ப் பொதுவிலே வைஷ்ணவாதிகாரிக்கு வேண்டியவற்றைச் சொல்லிற்று;-சிறப்பித்து த்வயத்துக்கு அதிகாரி யாமவனுக்கு வேண்டியவற்றை அருளிச்
செய்கிறார்.
ஸூர்ணை -120-த்வயத்துக்கு அதிகாரி அகிஞ்சந்யமும் அநந்ய கதித்வமும் உடையவன் .
ஸித்தமாயிருக்கிற எம்பெருமானை உபாயமாக வரிப்பதைச் சொல்லுவதாகிய த்வயத்துக்கு அதிகாரி, “அகிஞ்சந: அகதி:‘ (தன் காப்பில் கைம் முதலில்லாதவன். பிறன் வாசலும் புகாதவன்) “த்வமேவோபாய பூதோ மே பவ” (எனக்கு நீயே உபாயமாக வேணும்). “அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய” (தஞ்சமாகப் பற்றுவதற்கு உரியவனே, என் காப்பில் எனக்குரிமையும் பிறன் வாசல் புக உரிமையும் இல்லாதவன்.) “புகலொன்றில்லா அடியேன்” என்றுஞ் சொல்லுகிறபடியே (அகிஞ்சந்யமும்) கை முதல் இல்லாமையும், (அநந்ய கதித்வமும்) வேறு கதி யற்றவனும் ஆகிற இரண்டும் உடையவனென்கை.
இவை இரண்டின் நிலை தான் என்? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -121 – இவை இரண்டும் ப்ரபந்ந பரித்ராணத்திலே சொன்னோம் .
எம்பெருமானைத் தவிர வேறு உபாயங்களை மேற் கொண்டொழுகுவதை அறத் தள்ளுகையாகிற அகிஞ்சந்யத்தின் நிலையையும், வேறொருவரை ரக்ஷகமாகக் கொள்ளாமை யாகிற அநந்ய கதித்வத்தின் நிலையையும் ப்ரபந்ந பரித்ராணம் என்ற நூலிலே தெரியச் சொன்னோம். அதிலே கண்டு கொள்வதென்கை.
இனி, த்வயத்துக்கு வாக்யார்த்தம் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -122- இதில் முற் கூற்றால், பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது; பிற் கூற்றால் அச் சேர்த்தியிலே அடிமையை இரக்கிறது-
இந்த த்வயத்தில் முதல் வாக்கியத்தாலே ”ஸ்ரீமத்’ என்று பெரிய பிராட்டியாரை
முன்னிட்டு, “நாராயண சரணெள” என்று ஈஸ்வரன் திருவடிகளை “சரணம் ப்ரபத்யே என்று உபாயமாகப் பற்றுகிறது. உத்தர வாக்கியத்தாலே “ ஸ்ரீமதே” என்று பெரிய
பிராட்டியாரும் அவனுமான சேர்த்தியிலே, நாராயணாய -என்கிற நான்காம் வேற்றுமை யுருபாலே தொண்டினை ப்ரார்த்திக்கிறது என்கை. நமஸ்ஸு-கைங்கர்யத்தை நான் செய்கிறேன் என்ற கர்த்ருவத்தையும், இது எனக்கு இன் பமாயிருக்கிறது” என்கிற போக்த்ருத்வமும்; அதாவது, நான்’ என்னது’ என்கிற அஹங்கார மமகாரங்களை தொண்டாற்றுவதில் வரும் விரோதியைக் கழிப்பதைச் சொல்லுகையாலே, அடிமையை இரக்கிறது என்ற இதிலே உட்படும்.
இனி, பதத்துக்குப் பதம் அர்த்தம் அருளிச் செய்வதாகத் திருவுள்ளம் பற்றி “ஸ்ரீமத்” பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்ய ஆரம்பிக்கிறார்.
ஸூர்ணை -123 – ஸ்ரீ என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம் –
“ஸ்ரீ” என்ற சொல் செல்வம் முதலானவைகளுக்குப் பெயராக உலகில் வழங்கக் காண்கையாலே, அதை வேறுபடுத்துகைக்காக “ஸ்ரீ” என்கிற இது பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம் என்கிறார். ஆகையாலன்றோ “லக்ஷ்மி: பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர் ஹரி ப்ரியா” என்று மற்றத் திரு நாமங்களோடே கூட்டிச் சொல்லப்பட்டது. இது தான் எல்லாத் திருநாமங்கள் போலன்றிக்கே “ஸ்ரீரிதி ப்ரதமம் நாம லக்ஷ்ம்யா:” ஸ்ரீ என்ற இது லக்ஷ்மீ தேவிக்கு முதல் திருநாமம்-என்கிறபடியே இவளுக்கு இது முதன்மையான
பெயராயிருக்கும். “அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதாநம்” (அகாரமானது பகவானான நாராயணனுடைய முதல் திருநாமம்) என்று அகாரம் எம்பெருமானுக்கு முதன்மையான திருநாமமானாற் போலே, இவளுக்கும் இது முதன்மையான திருநாமமா யிருக்கும் படி. அது, அவனுடைய ரக்ஷகத்துக்கு அவஸ்யமான ஸ்வபாவங்களைச் சொல்லும்; இது இவளுடைய புருஷகாரத்துக்கு அவஸ்யமான ஸ்வபாவங்களைச் சொல்லக் கடவதா யிருக்கும். புருஷகாரம்- சேர்ப்பித்தல். அல்லது சிபார்சு செய்தல் என்பதைக் குறிக்கும்.
இனி, இந்த சப்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக முதலில் இதன் மேல் வந்த சொல் பொருள் தொடர்புகளின் இரண்டு வகைகளை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -124 – ஸ்ரீயதே ஸ்ரயதே .
அதாவது – “ஸ்ரிஞ்ஸேவாயாம்” என்கிற வினைப் பகுதியில் ‘ஸ்ரீயத இதி – ஸ்ரீ :, ஸ்ரயத இதி – ஸ்ரீ:’ என்ற தேர்ந்ததான செயப்படு பொருளைக் காட்டுவதாயும், எழுவாய் பொருளைக் காட்டுவதாயும் உள்ளதைச் சொன்னபடி.
இந்தச் சொல் பொருள் தொடர்புகளின் வகை இரண்டுக்கும் அர்த்தம் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -125- இதுக்கு அர்த்தம் -எல்லார்க்கும் இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய், இவள் தனக்கும் அவனைப் பற்றி ஸ்வரூப லாபமாயிருக்கும் என்று .
கர்மணி, கர்த்தரி என்ற இந்த இரண்டு வ்யுத்பத்திகளுக்கும் அர்த்தம் ‘ஸ்ரீயதே” என்று எல்லோராலும் ஸேவிக்கப் பெறுகிறாள் என்பதாலே எல்லா (சேதநர்களுக்கும்) மக்களுக்கும் இவளைப் பற்றித் தங்களுடைய சேஷத்வமான ஸ்வரூப லாபமாய், “ஸ்ரயதே” என்று ஈஸ்வரனை ஸேவியா நின்றாள் என்கையாலே, இவள் தனக்கும் ஈஸ்வரனைப் பற்றித் தன்னுடைய சேஷத்வ ரூப லாபமாயிருக்கும் என்கை. இவள் தனக்கு சேதந விஷயத்தில் சேஷித்வமும் ஈஸ்வர விஷயத்தில் சேஷத்வமும் என்றும் உண்டா யன்றோ இருப்பது. ஆகையால், இந்த ஸேவிக்கப் பெறுகை, ஸேவிக்கை என்கிற இரண்டும் இவளுக்கு நித்யமாய்ச் செல்லா நிற்கும்.
எம்பெருமானுக்கு உபாயத்வமும் (உபேயத்வமும்) பயனுமாகிற இருநிலைகளும் உண்டானாற் போலே இவளுக்குப் புருஷகாரத்வமும் (ப்ராப்யத்வமுமாகிற) பயனுமாகிற இரு நிலைகளும் உண்டாகையாலே, இதில் எந்த நிலையை நினைத்து இப்போது சொல்லுகிறது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -126- இப்போது இவளைச் சொல்லுகிறது புருஷகாரமாக .
‘புருஷகாரமாக’ என்கையாலே உபாய வஸ்து விசேஷணமாகச் சேர்ந்திருக்கை யாகிற நிலையை யிட்டு இவளுக்கும் உபாயத்வம் சொல்லும் கொள்கை யுடையாருடைய பக்ஷம் கணடிக்கப்பட்டது என்கை.
எம் பெருமானுடைய நாராயணத்வம் காரணமாக இயல்பான ஸம்பந்த ஜ்ஞாநம் முதலியவை உடையவனாய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிற இந்தச் சேதநனுக்கு இவளைச் சிபாரிசாகிற புருஷகாரமாக முன்னிட வேண்டுகிறது தான் எதற்கு? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -127- நீரிலே நெருப்புக் கிளருமா போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக .
குளிர்ந்த நீரிலே, சென்று அணுக வொண்ணாத படியான நெருப்புக் கிளருமா போலே, “ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம்” (எல்லா ப்ராணிகளிடத்தும் நட்பையே உடையவன்). “ஸமோஹம் ஸர்வ பூதேஷு தான் எல்லா ப்ராணிகளிடத்தும் வித்யாச மில்லாமல் ஸமமாகவே இருக்கிறவன் தான்) என்கிறபடியே எல்லா ப்ராணிகளிடத்தும் நேய மனப்பான்மை யுடையனாயும், ஸமமாகவே எல்லாராலும் தஞ்சமடையத் தக்கவனாயுமுன்ள ஸ்வபாவ விசேஷங்களாலே, தெளிந்து குளிர்ந்திருக்கிற எம்பெருமான் திரு வுள்ளத்திலே “பரிபூர்ணாகஸி ஜநே ஹிதஸ் ரோதோ வ்ருத்த்யா பவதிச கதாசித் கலுஷதீ:”
பரிபூர்ண அகஸி – நிரம்பின குற்றத்தைச் செய்த,
ஐநே – சேதநர்களிடத்தில்,
ஹிதஸ்ரோதோ வ்ருத்த்யா– (பிற்காலத்தில்) நன்மையை விளைக்கிற நீர்ப் பெருக்கின் செயல் போன்ற செயலாலே (அநுகூலனே யானாலும், பின் விளையும் நன்மையைக் கருதி),
கதாசித் – ஒரு கால் (பெருங்குற்றத்தைச் சேதநர்களிடத்தில் காண்பதனால்)
கலுஷதீ: – கலங்கினவனாக,
பவதிச – ஆகவும் ஆகிறான்
என்கிறபடியே சேதநனுடைய அளவிறந்த குற்றங்களின் காரணமாக ஷிபாமி (பிறவிக் கடலில் தள்ளுவேன்) ந க்ஷமாமி (பொறுக்க மாட்டேன்) என்னும்படியான சீற்றம் பிறந்தால் அந்தக் குற்றங்களைப் பொறுப்பது.”கிமேதந் நிர்தோஷ:க இஹஜசதி”
ஏதத் – இந்தக் கோபம்,
கிம் – இங்ஙனம் மனம் கலங்குவது- என்ன?
இஹ ஜகதி – இந்த உலகத்தில்,
நிர்தோஷ: குற்றமற்றவன்
க: ஆர்?,
இதி – என்றவாறு சொல்லி,
என்கிற படியே, தன் உபதேசம் முதலானவைகளாலே அந்தக் கோபத்தை யாற்றித் தயையைப் பிறப்பிக்கும் இவளுக்காக என்கை. ஆகையாலே, பகவான் திறத்து ஸம்பந்த ஜ்ஞாநம் பிறந்தவனுக்கும் இவன் அபராத பயத்தாலே புருஷகாரத்தை முன்னிடுகை தேவை என்று கருத்து.
சேதநன் கார்யத்தைத் தான் மேற்கொண்டும் எம்பெருமானை வசீகரித்தும் இரண்டு பக்ஷத்தையும் பொருத்துகைக்கு இவள் தான் இடையூறில்லாத புருஷகாரமோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -128- இவள் தாயாய், இவர்கள் க்லேசம் பொறுக்க மாட்டாதே அவனுக்குப் பத்நியாய், இனிய விஷயமா யிருக்கையாலே, கண்ணழிவற்ற புருஷகாரம் .
“த்வம் மாதா ஸர்வ லோகாநாம்”(உலகத்து எல்லா ப்ராணிகளுக்கும் நீயே தாய்) என்றும்
“அகில ஜகந் மாதரம்” (அனைத்து ஜகத்து ப்ராணிகளுக்கும் தாயானவளை) என்றும் சொல்லுகிறபடியே இந்தச் சேதநர்களுக்கு இவள் தாயாய், ” தந்தம் மக்களழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் என்கிறபடியே தாயான தொடர்பின் காரணமாக இவர்களுடைய வருத்தங் கண்டால் பொறுக்க மாட்டாதே, “விஷ்ணு பத்நி” என்று அவனுக்குப் பத்தினியாய், ” பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு” என்கிறபடியே, அவன் இவள் தன்னுடைய பிறரெவர்க்கு மில்லாத பேரழகு முதலானவற்றைக் கண்டு பிச்சேறித் தன் சொல் வழி நடக்கும்படி இஷ்டமான பொருளா யிருக்கையாலே (கண்ணழி வற்ற) தடையற்ற புருஷகாரம் ஆவாள் என்றபடி.
எல்லாம் செய்தாலும் தடையில்லாத சுதந்திரனான எம்பெருமான் சேதநனுடைய அபராதங்களைத் தான் பத்தும் பத்தாக நிறுத்து அறுத்துத் தீர்த்துவன் என்றவன் நிற்குமளவில், இவளாலே பொறுப்பிக்கப் போமோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -129- திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல் வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே .
பிராட்டியைப் பத்து மாதம் மருட்டுவதும் பழிப்பதுமாகிய கொடுஞ் செயல்களைச் செய்த ராக்ஷஸிகளின் அபராதங்களைக் கணக்கிட்டுச் சித்ர வதம் செய்ய முயன்ற சொல்லை மீறுந் தன்மையனான திருவடியையும் உட்பட, “க:குப்யேத்” (அரசன் வயத்தவராய் அவனால் ஜீவிக்கு மவர்களாய் அவன் அதீனத்தி லிருப்பவர்களாய், அவன் ஏவினதைச் செய்ததைக் கொடுந்தொழிலென்று எவன் கோபிப்பான்) என்றும் “ந கச்சிந் நாபராத்யதி” (தப்புச் செய்யாதவன் எவன்) என்றும், இவை முதலான உபதேசங்களாலே பொறுப்பிக்குமவள், “மலராள் தனத்துள்ளான்” என்றும், “மா மலர் மங்கை மண நோக்க முண்டான்” என்றும் “அல்லிமலர் மகள் போக மயக்குக்களாகியும் நிற்கும்” என்றும், தன் இனிமையிலே ஆழ்ந்து “நின்னன் பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரானேக” என்கிறபடியே ‘மாயா விலங்கின் பின்னே போ’ என்னிலும் மேல் விளைவு அறியாதே அதன் பின்னே போம் படி, தன் சொல் வழி வருமவனைப் பொறுப்பிக்க வல்லள் என்னுமிடம் சொல்ல வேண்டாதாயிற்று என்கை. “செய் தகவினுக் கில்லை கைம்மாறு” என்னும்படி. இருவர்க்கும் கலங்கி உபகரித்து தன் சொல் வழியே போக வேண்டும் படியான திருவடியோடே (மறுதலிக்குமவள்) எதிரிடுமவள், “தான் முயங்கும்” (அணைக்கப்பெற்ற) என்னும் படியான இனிமைக்குத் தோற்று எத்தைச்
செய்வோம்’. என்று கலங்கி, “நின்னன்பின் வழி நின்று”,அதனின் பின்னே படர்ந்தான்’ என்னும்படி மேல் விளைவ தறியாதே, புன்முறுவலுக்குத் தோற்று சொல் வழி போமவனைப் பொறுப்பிக்கும் என்னுமிடம் சொல்ல வேண்டா என்று இது தன்னை இவர் திருத் தம்பியாரும் அருளிச் செய்தார் என்ற படி.
ஆக, ஸ்ரீமத் பதத்தில் பகுதியைக் குறித்து அருளிச் செய்தார் கீழ்; விகுதிப் பொருளைக் குறித்து அருளிச் செய்கிறார் மேல்.
ஸூர்ணை – 130 -மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்ய மென்கிறது –
“ஸ்ரீமத்” என்ற பதத்தில் ஸ்ரீ என்ற பகுதிப் பொருளைச் சென்னார். இப்போது ‘மத்’ என்ற விகுதிப் பொருளைச் சொல்லுகிறார். அதாவது, இம் மதுப்புத் தான் நித்தியமாகவே கூடி இருத்தல் என்ற பொருளைத் தரும் மதுப்பாகையாலே,-இத்தால் புருஷகாரம் செய்பவளான பிராட்டியும், இவள் புருஷகாரத்தை ஏற்றுச் சேதநனுக்கு உபாயமாகும் ஈஸ்வரனும் ஆகிய இருவருடைய சேர்த்தியும் எப்போதும் உண்டு என்னுமிடம் சொல்லுகிறதென்கை. நித்யம் -நிலையாக.
இந்த நித்ய யோகத்தின் சிறப்பைச் சொல்லுகிறார்.
ஸூர்ணை -131 -இவளோடே கூடியே வஸ்துவினுடைய உணமை.
“ஸ்ரீய: பதிர் நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாநஸ் ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப!”
நிகில: – ஸமஸ்தமான,
ஹேய ப்ரத்யநீக – தாழ்ச்சிக்கெல்லாம் எதிர்த் தலையான,
கல்யாண – மங்கள குணங்கட்கு,
ஏக தான – முக்கியமான ஆதாரமும்,
ஸ்வ இதர -தன்னில் வேறுபட்ட,
ஸமஸ்த வஸ்து -எல்லாப் பொருள்களை விட,
விலக்ஷண – வேறுபட்டுத் தோன்றுபவனாய்,
ஜ்ஞாந – ஞாநமென்ன,
அநந்த – அநந்தமென்ன (இவைகளை)
ஏக ஸ்வரூப – முக்கியமான ஸ்வரூபமாக உடையவனுமான,
ஸ்ரீ யபதி – திருமால்
என்று ஸ்வரூப நிரூபகமான ஜ்ஞாநாந்தாதிகளுக்கு முன்னே ஸ்ரீய:பதித்வத்தைச் சொல்லும்படி அவன் ஸ்வரூபத்துக்கு முக்கிய நிரூபகையா யிருக்கையாலே, இவளோடே கூடியே வஸ்துவினுடைய நிலை பேறு இருப்பது என்கை.
ஆக, பிராட்டியின் ஸ்வரூபத்தோடே சேர்ந்திருக்கும் படியான எம்பெருமானுடைய நித்ய யோகத்தை அருளிச் செய்தாராயிற்று.
இனி, இவளுடைய குணமடியாக எப்போதுங் கூடி யிருக்குமதை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -132 -ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையுங் கண்டு அகல மாட்டாள்-
அபராதங்களை ஒன்றும் விடாது கணக்கிட்டு, அறுத்து அறுத்துத் தீர்க்கும்
எம்பெருமானுடைய ஸ்வாதந்தர்யத்தையும், “யத் ப்ரஹ்ம கல்பநியுதா நுபவேப்ய நாச்யம்” (யத் – எந்தப் பாபமானது,
ப்ரஹ்மகல்பதியுத அநுபவேபி – பிரமனுக்கு ஏற்பட்டிருக்கும் படியான ஆயுளின் லக்ஷம் மடங்கு காலம் அநுபவித்தாலும், அதாச்யம்– நீங்காதோ, தத்கில்பிஷம் – அப்படிப்பட்ட பாபத்தை இஹ ப்ராணி – இவ்வுலகில் ப்ராணியானது, ஷணார்த்தே ஸ்ரூஜதி – அரை க்ஷணத்தில் செய்கிறது.-என்றபடி கால தத்துவமுள்ளதனையும் அதுபவித்தாலும் சிறிது கழிந்தது என்றுஅளவிட்டுக் காட்ட முடியாதபடி செய்து வைத்திருக்கும் இச் சேததனுடைய தகாத செயல்களையுங் கண்டு ஏதாய் விடுமோ? என்னும் பயத்தாலே எம்பெருமானை விட்டு பிராட்டி ஒரு கணமும் விட்டகல மாட்டாள் என்கை.
இத்தால் சேதநனுக்கு பலிக்குமதை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -133- சேதநனுக்கு இவை யிரண்டையும் நினைத்து அஞ்சவேண்டா .
இப்படி இவள் இருந்து நோக்குகையாலே ஈஸ்வரனுடைய ஸ்வாதத்தர்யமும், தன் அபராதமுமாகிற இவை இரண்டையும் நினைத்து “நமக்கு என்ன (தீங்கு) விளையுமோ?” என்று அஞ்ச வேண்டா என்கை.
இனி, இம் மதுப்பின் (தாத்பர்யம்) சுருக்கமான ஸாராம்ஸம் இது என்று அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -134 – இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது, காலம் பார்க்க வேண்டா என்கிறது-
இப்படிப் புருஷகார உபாயமாகிய வஸ்துக்களான இருவருமான சேர்த்தியை எப்போதுங் கூடி இருப்பதைக் காட்டும் இம் மதுப்பால் உபாயமான எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்க்கு, ஆஸ்ரயிக்கையில் ருசியே வேண்டுவது. இருவரும் சேர்ந்திருக்கும் தசையிலே ஆஸ்ரயிக்க வேணுமே’ என்று ஆஸ்ரயணத்துக்குக் காலம் பார்க்க வேண்டா யென்கிற தென்கை-
இனி, இவள் புருஷகாரம் அவஸ்யம் தேவை என்பதை அறிவிக்கைக்காக,இவள் கூடி இருப்பதாலும் பிரிந்திருப்பதாலும் உண்டான நன்மை, தீமைகளை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -135 – இவள் ஸந்நிதியாலே காகம் தலை பெற்றது; அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்.
“தேவ்யா காருண்ய ரூபயா”(ஸ்ரீதேவியானவள் கருணையே வடி வெடுத்தவள்) என்கிறபடியே கருணை தான் ஒரு வடிவு கொண்டாற் போலே இருப்பவளாய், ஸ்வதந்திரனான ஈஸ்வரனுக்கு ஸ்வாதந்தர்யத்தை அமுக்கிக் கருணையைக் கிளப்புமவளான இவள் கூடி. இருந்ததாலே பேரபராதத்தைச் செய்து அதனாலே ப்ரஹ்மாஸ்திரத்துக்கு இலக்காய் தலை யறுப்புண்கைக்கு உரித்தான காகம், ‘க்ருபயா பர்யபாலயத்” (தன்னுடைய கருணையாலே நன்றாக ரக்ஷித்தான்) என்கிறபடியே, கருணைக்கு இலக்காய் தலை பெற்றுப் போயிற்று. அப்படியான இவள் கூடி இல்லாமையாலே போக்கற்றுச் செயல் மாண்ட நிலை ஒத்திருக்கச் செய்தேயும், காகத்தினுடைய பேரபராதம் இல்லாதிருக்க, ஸ்ரீராம பாணத்துக்கு இலக்காய் ராவணன்
முடிந்து போனான் என்கை. ஆகையால், பெருமானை அடையும் பொழுது பிராட்டி ஸந்நிதி அவஸ்யம் வேணும் என்று கருத்து. ஆக, ஸ்ரீமத் பதத்தினுடைய அர்த்தத்தை அருளிச் செய்து முடித்தார்.
பிறகு, நாராயண பத அர்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -136- புருஷகார பலத்தாலே ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்தால் தலை யெடுக்குங் குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம் .
உபதேசத்தாலும், தன் பேரழகாலும் தடையற வசீகரித்து காரியங்கொள்ள வல்ல புருஷகார பலத்தாலே அவனை அடைய முயலும் சேதநன், ஆரம்பம் அறிய முடியாத காலமாகப் பண்ணின குற்றங்களைப் பார்த்துச் சீறி, கைக் கொள்ள மாட்டேன்’, என்றிருக்கும் ஈஸ்வர
ஸ்வாதந்த்ர்யம் தலை மடிந்தால், அதன் கீழ் தலை எடுக்க முடியாத அழுத்தம் தீர்ந்துத் தலை யெடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம் என்கை.
அந்தக் குணங்கள் தான் எவை? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -137 – அவையாவன – வாத்ஸல்யமும், ஸ்வாமித்வமும், ஸெளசீல்யமும், ஸெளலப்யமும் ஜ்ஞாநமும், சக்தியும்
அவையாவன – என்று தொடங்கி இவற்றில், வாத்ஸல்யம் ஆவது: அன்றீன்ற கன்றின் திறத்துப் பசு காட்டும் பரிவு. அதாவது, அதன் மீதுள்ள வழும்பைச் சுவைத்துப் புஜிக்கையும், பால் கொடுத்து வளர்க்கையும், அதன் அருகே சென்றவர்களை முட்டுதல் உதைத்தல்
முதலியவைகளால் ரஷிக்கையும்; அப்படியே ஈஸ்வரனும் குற்றங்களைக் குணமாகக் கொண்டு “பாலே போல் சீரெ“ன்ற குணங்களாலே தரிக்கச் செய்து “கதஞ்சன – ந த்யஜேயம்’
ஒருபடியாலும் கைவிடுபவனல்லேன்). “அபயம் ஸர்வ பூதேப்ய:” (எல்லா ப்ராணிகளிடத்தும் பயமற்றிக்கச் செய்வேன்.) என்கிறபடியே அநுகூலர் நிமித்தமாகவும் ப்ரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும். ஸ்வாமித்வமாவது:- இவன் பராமுகனான நிலையிலும் விடாதே நின்று நன்மையே குறிக் கொள்ளற்குக் காரணமான ஒரு பந்த விசேஷம்; அதாவது
உடையவனா யிருக்குமிருப்பு; துவேஷம் இல்லாமை தொடங்கி கைங்கர்யம் வரை உண்டான ஸ்வபாவ விசேஷங்களை யெல்லாம் உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம். -ஸெளசீல்யமாவது:– உபய விபூதி நாயகத்வத்தாலும் பெரிய பிராட்டியாருடைய சேர்த்தியாலும், தடையற்ற ஸ்வாதீநனா யிருக்கிற மேன்மையையும், தங்கள் சிறுமையை-யும் பார்த்து “அவனெவ்விடத்தான் யானார்” என்று பின் வாங்காதபடி எல்லாரோடும் ஓக்க மேல் விழுந்து வேறு பாடின்றி கலக்கையும், அது தன் பயனாகக் கருதுகையும், எதிர்த் தலையில் விருப்பமின்றிக்கே இருக்கக் கலந்து பரிமாறுகையும் முதலானவைகள். -ஸெளலப்யமாவது:– கண் காண முடியாதபடி இருக்கிற தான் கண்ணாலே கண்டு பற்றலாம்படி இருக்கை. -ஜ்ஞாநமாவது:- எம்பெருமான் இந்த அடியானுக்குக் கழிக்க வேண்டிய விரோதி வர்க்கத்தையும் கொடுக்க வேண்டிய விருப்பத்திற் குரியதையும் நேரே அறிந்து கொள்ளற்குரிய தன்னையும் அனைத்துப் பொருள்களையும் ஓரே நேரத்தில்
காண வல்ல பேறறிவு-சக்தியாவது – மிகத் தாழ்ந்தவர்களான ஸம்ஸாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்க வல்ல பொருந்தாத வற்றையும் பொருந்துவிக்கும் ஸாமர்த்யம்-இவற்றில் வாத்ஸல்யாதிகள் நாலும் எம்பெருமானை அடையச் செளகரியத்தை செய்யக் கூடிய மணங்கள். ஜ்ஞாந சக்திகள் அடைந்தாருடைய காரியங்கள் செய்கைக்குரிய குணங்கள். “நிகரில் புகழாய்” என்று தொடங்கி வாத்ஸல்யாதிகள் நாலையுமல்லவா அடையத் தக்கதாக ஆழ்வார் அருளிச் செய்தது. ஜ்ஞாந சக்திகள் இரண்டைச் சொன்னது, ப்ராப்தி பூர்த்திகளுக்கும் உப லக்ஷணம்; கார்யம்செய்வதற்கு இவையும் தேவைப் படுவதால் சொல்லப்பட்டது என்கை, ‘
இந்தக் குணங்களுக்கு இவ்விடத்தில் உபயோகம் எவை? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -138 – குற்றங் கண்டு வெறுவாமைக்கு வாத்ஸல்யம்; கார்யஞ் செய்யுமென்று துணிகைக்கு ஸ்வாமித்வம்; ஸ்வாமித்வங் கண்டு அகலாமைக்கு ஸெளசீல்யம்; கண்டு பற்றுகைக்கு ஸெளலப்யம்; விரோ தியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு
ஜ்ஞாந சக்திகள் .
அடைய முயலும் இச்சேதநன், தன் குற்றத்தைக் கண்டு அஞ்சாமைக்குரியது, குற்றத்தைக் குணமாகக் கொள்ளும் வாத்ஸல்யம் என்ற குணம். நம் கார்யம் செய்யுமோ, செய்யானோ? ‘ என்று ஐயப் படாதே கார்யம் செய்யுமென்று நம்புகைக்கு உறுப்பு ஸ்வாமித்வம் என்ற
குணம். இத்தால், இழத்தல் பெறுதல் தன்னதாம் படியான ஸ்வாமித்வ குணத்தின் செயல் எனப்படும், இருள் தருமா ஞாலம் என்கிற பூலோம் தொடக்கமான உலகத்திற்கும் தெளி விசும்பு திரு நாடு என்ற பரம பதம் என்கிற இரண்டு விதமான உலகங்களுக்கெல்லாம் நாயகத் தன்மையைக் காட்டிக் கொடுக்கிற ஸ்வாமித்வத்தைக் கண்டு, தன் தாழ்வை நினைத்து அகலாமைக்கு உறுப்பு; தாழ்ந்தாரோடும் வேற்றுமையறக் கலக்கும் தன்மையது ஸெளசீல்யம் என்ற குணம். கண் காண முடியாதவனென்று பின் வாங்காதபடி கண்ணாலே கண்டு பற்றுகைக்குரியது, தன் வடிவைக் கண்ணுக்கிலக்காக்கும் ஸெளலப்யம் என்ற குணம். “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்.’ என்கிறபடியே தன்னை யடையத் தடை செய்யும் விரோதிகளைப் போக்கிப் பயனான தன்னை உபகரிக்கைக்கு உறுப்பு, பயனான தன்னை அடையும் இச் சேதநன் இவன் கீழ் நின்ற நிலையும் மேல்அடைய வேண்டிய தேசத்தையும் அறிகைக்கும் அறிந்தபடியே செய்து முடிக்கைக்கும் அவஸ்யமானது ஜ்ஞாந சக்திகளென்ற குணங்களென்பது.
அவனை அடைய உதவும் நான்கு குணங்களில் ஸெளலப்யம் முக்கியமாகையாலே அந்த ஸெளலப்யத்தில் எல்லையை அருளிச் செய்கிறார். ஸெளலப்யம்- சுலபத்தன்மை.
ஸூர்ணை -139- இங்குச் சொன்ன ஸெளலப்யத்துக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம் –
இந்த நாராயண பதத்தில் அவனை அடைய முக்கிய உபயோகியான ஸெளலப்யத்துக்கு
முடிவானது “தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே” என்கிறபடியே அடியார் உகந்த தொன்றைத் திருமேனியாகக் கொண்டு கோயில்களிலும் இல்லங்களிலும் எழுந்தருளி இருக்கும் அர்ச்சாவதாரம் என்கை.
அவற்றைத் தொடர்ந்து சொல்லுகிறார்.
ஸூர்ணை -140 – இது தான் பர வ்யூஹ விபவங்கள் போலன்றிக்கே கண்ணாலே காணலாம்படி. இருக்கும் .
இந்த அர்ச்சாவதாரம் தான் வேறு தேசமான பரத்வத்துக்கு இடமான பரம பதமும்,
வ்யூஹத்துக்கிடமான பாற்கடலும் இந்தத் தேகத்தால் காண முடியாததாயும் கால வேறு பாட்டாலே இப்போது நாம் காண முடியாதபடி போன ராமன் கண்ணன் முதலான விபவாவதாரங்கள் போலல்லாமல், நமக்கு ஸமீபமாய் நாம் காணலாம்படி திவ்ய தேசங்களிலும் இல்லங்களிலும் என்றும் இருக்கும் அர்ச்சாவதாரம் என்கை.
இந்தக் குணங்களெல்லாம் அர்ச்சாவதாரத்தில் காணலாமோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -141- இவை யெல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கலிலே காணலாம் .
அவனை அடையத் தடை செய்யுமவற்றை நீக்குமதும், அவன் நம் கார்யம் செய்ய உபயோகப் படுமதாயும் உள்ள இந்த குணங்களெல்லாம் இவற்றைக் காண விருப்பமுடைய நமக்கு நம்முடைய பெருமாள் பக்கலிலே காணலாமென்கை.
பெருமாள் பக்கலில் இக் குணங்களுக்கு ப்ரகாசங்களாய் விளக்கங்களா யுள்ளவற்றைச் சொல்லி, இவற்றோடு நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சமென்கிறார்.
ஸூர்ணை -142- திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்து அஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும், ஆஸந பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்.
கார்யஞ்செய்ய உபயோகியான ஜ்ஞான சக்திகளுக்கு விளக்கமாம்படி திருக்கைகளிலே தரித்துக் கொண்டிருக்கிற சங்க சக்ரம் முதலான திவ்யாயுதங்களும், வாத்ஸல்யம் தோன்றும்படி வைத்து அஞ்சலென்ற கையும், ஸ்வாமித்வம் விளங்கும்படியான கவித்த முடியும் ஸெளசீல்யத்தை விளக்குமதான முகமும் முறுவலும் அனைவரும் கண்டு பற்றலாம்படியான ஸெளலப்யங் காட்டுமதான (ஆஸந பத்மத்திலே) தாமரை மலராசனத்திலே அழுத்தின திருவடிகளுமாய்க் கொண்டு எழுந்தருளி நிற்கிற நிலையே வேறு புகலற்ற நமக்கு ரக்ஷகமென்கை. உபாய உபேய நிஷ்டர்கள் விரும்பும் ரக்ஷகத்வமும், சுவையுடைய பயனும் ஆகிற இரண்டு தன்மையும் கீழ்ச் சொன்னபடியே எம்பெருமானுடைய திருமேனியிலே தோற்றும் என்கிறார். ஆயுதங்களை யேந்துகை, சக்திமானுடைய கார்யமாகையாலும், அடியார்கள் விரோதிகளை அறிந்து ஏந்திய ஆயுதங்களைக் கொண்டு களைவது ஜ்ஞாநவானுடைய கார்யமாகையாலும், : எம்பெருமான் தனது திருக்கையிலேந்திய திவ்யாயுதங்கள் அவனது ஜ்ஞாந சக்திகளுக்கு விளக்கம். எம்பெருமானது அஞ்சலென்று காட்டுகிற அபய முத்திரை. சேதநர் தங்களது குற்றங்களை நினைந்து அசுலாமலிருக்கைக்குக் காரணமாகையால் வாத்ஸலயம் அடையாளமாகும். பெரியோனாயிருப்பவன் மிகவும் தாழ்ந்தாரோடு பேதமின்றிச் சேர்ந்திருக்கை புன்முறுவலும் மலர்ந்த முகமும் உண்டாவது இஷ்டங்களைக் காணும் போதே யாத்லால், சேதநனை அவ் வெம்பெருமான் காணும் போது அந்தப் பரமனிடத்துத் தோன்றுகின்ற முக மலர்ச்சியும், குதூகலமும் அவ் வெம் பெருமானுடைய ஸெளசீல்யத்தைக் காட்டும். -வேறு புகலற்றவர்கள் – அவ் வெம் பெருமானைத் தவிர வேறெரு புகலிட மில்லாதவர்கள்.
எம்பெருமானை (ஆறும்)உபாயமாகவும் (பேறுமாக) பயனுமாகக் கொண்டு ள்ளவர்கள் வேண்டும் நிலைமை களிரண்டும் கீழ்ச் சொன்னபடியே நிற்கிற திருமேனியிலே தோற்றும் என்கிறார்.
ஸூர்ணை -143 – ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திருமேனியிலே தோற்றும் .
காத்தலுக்கு உபயோகமான திவ்யாயுதங்களோடும், காப்பதற்குக் கவித்த முடியோடும் கூடியிருக்கையாலே ரக்ஷ்கத்வம் தோன்றுகையாலும்,
‘அணியாராழியும் சங்கமும் ஏந்தும்”, “முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ” என்கிற படியே அவை தானே அழகை உண்டாக்குவதற்குக் கருவியாய், வைத்தஞ்சலென்றகையும் முகமும் முறுவலும் தாமரை மலரில் அழுத்தின திருவடிகளும் ஒவ்வொன்றே அழகுக்குச் சிகரமாயிருக்கையாலே இனிமையா யிருக்கக்கூடிய போக்யத்வம் தோற்றுகையாலும் இரண்டும் திருமேனியிலே தோற்றுமென்பது.
ஆக, நாராயண பதப் பொருளை அருளிச் செய்தாராயிற்று–
இனி, ‘சரணெள’ என்கிற பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார். .
ஸூர்ணை -144 – சரணெள – திருவடிகளை ‘சரணெள’ என்றால், திருவடிகளை என்று
பொருள். இந்த ‘சரணெள’ என்கிற (த்வி வசனம்) இருமைச் சொல்லால் சொல்லுகின்ற அர்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -145 -இத்தால் சேர்த்தி யழகையும், உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது .
அதாவது, ‘சரணெள’ என்று இரண்டு திருவடிகளையும் சொல்லுகிற இத்தால், “இணைத் தாமரை யடி.” என்கிறபடியே, இரண்டு தாமரைப் பூவை வரிசையாகச் சேர வைத்தாற் போலே சேர்த்தி யழகையும், இருமைச் சொல்லானது இரண்டுக்கு மேல் வேறொன்று புகுவதைப் பொறுக்காமையாலே இன்னொன்றைத் துணையாகக் கூட்டு வேண்டாத அவனுடைய பரிபூர்ண உபாயத் தன்மையைச் சொல்லுகிறது என்பது. ்
உபாயமான தனித்தன்மைக்கு இதன் குண மிகுதியை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -146 – பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது; திண் கழலாயிருக்கும்-
“ஸ்ரீமத்” பதத்திலே புருஷகாரபூதையாகச் சொன்ன பிராட்டியும், இவள் தானே
“சிதகுரைக்கிலும்” என்கிறபடியே குறை கூறிலும் “என்னடியார் அது செய்யார்” என்னும்படி, நாராயண பதத்தில் சொன்ன குணங்களோடு கூடிய அவனும் கை விடிலும், திருவடிகள் தன் பேரழகைக் காட்டிக் கட்டுப்படுத்திக் கொள்ளுகையாலே கை விடாது; “வண் புகழ் நாரணன் திண் கழல்” என்கிறபடியே பற்றினாரை நழுவ விடாதபடி-திண்மையை– உறுதியை உடைத்தா யிருக்குமென்கை.
இந்தக் குண மிகுதியைப் பற்றவுமல்லாமல், அடியவனான தன் இயல்பாம் தன்மைக்குப் பொருந்த திருவடிகளிலே இழிகை என்பதற்கு உதாரண முகத்தால் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -147 – சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை; ப்ரஜை முலையிலே வாய் வைக்குமா போலே .
ஆண்டானைத் தஞ்சமென்றடைய நினைக்கும் அடியான் தன் இயல்புக்குப் பொருந்த இழியும் துறை திருவடிகளாகும். எது போலே யென்னில்? முலை யுண் குழவி தாயினுடைய உறுப்பெல்லாமிருக்கத் தனக்கு வகுத்ததாயுள்ள ஸ்தநத்திலே வாய் வைக்குமா போலே என்கை.
திருவடிகளைச் சொன்ன இது திரு- மேனிக்கும் உபலக்ஷணம் என்கிறார் மேல்.
ஸூர்ணை -148 – இத்தால், பிராட்டிக்கு இருப்பிடமாய், குண ப்ரகாசகமுமாய், சிசுபாலனையும் அகப்படத் திருத்திச் சேர்த்துக் கொள்ளும் திருமேனியை நினைக்கிறது .
‘சரணெள’ என்கிற இது, திருமேனியின் ஒரு பகுதியான திருவடிகளைச் சொன்ன இத்தால், “திருவிருந்த மார்பன்” என்னும்படி “ஸ்ரீமத்” பதத்தில் சிபாரிசு செய்பவளான பிராட்டிக்கு இருப்பிடமாய் “நாராயண” பதத்திற் சொன்ன குணங்களுக்கு விளக்கமாய்
“பலபல நாழஞ்சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்கிறபடியே பல நிந்தைகளைச் சொல்லிப் பகை வைத்தவனாய்ப் பழிச் சொற்களைச் சொல்லித் திரிந்த சிசுபாலனையும்
உட்பட “அலவலைமை தவிர்த்த அழகன்” என்கிறபடியே வாய் வந்தபடியே பிதற்றின பகைமை தவிரும்படி தன்னழகாலே திருத்தி “திருவடி தாட்பாலடைந்த” என்கிறபடியே சேர்த்துக் கொள்ளும் இயல்புடைத்தான திருவடி என்று சொல்லுகிற படி பரமபதத்திலுள்ள பஞ்ச உபநிஷத் மயமாய் குறைபாடொன்றும் சாராததான திருமேனியை நினைக்கிறது
என்கை.-
பிறகு ‘சரணம் ‘ பதப் பொருளை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -149 -சரணம் – இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயமாக,
“உபாயே க்ருஹ ரஷித்ரோச் சப்தச் சரணமித்யயம், வர்த்ததே ஸாம் ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைக வாசக:” சரணம் இதி – சரணமென்கிற,
அயம் சப்த: – இந்த சப்தமானது,
உபாயே -உபாயத்திலும்,
க்ருஹ ரஷித்ரோச் – க்ருஹத்திலும் ரக்ஷ்கனிடத்திலும்,
வர்த்ததே– இருக்கிறது.
(இப்படி அர்த்தமானாலும்) ஸாம்ப்ரதம் இப்போது (இவ்விடத்தில்),
ஏஷ: – இந்த சரண சப்தமானது,
உபாயார்த்த ஏக வாசக: – உபாயத்திற்கே பேராகக் கடவது.
என்கிற படியே, சரண சப்தம் ரக்ஷகனுக்கும், வீட்டிற்கும், உபாயத்துக்கும் பேரே யாகிலும், இவ்விடத்தில் உபாயத்துக்கே பெயராகும். இந்த உபாயத்தின் செய்கையாவது,
இஷ்டத்தைக் கொடுப்பதும், இஷ்டமில்லாததைக் போக்கக் கூடியதும் ஆகையாலே இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயமாக என்று இப் பதத்துக்கு அர்த்தம் அருளுகிறார்.
இஷ்டம், அநிஷ்டம் என்பவைகள் தாம் இன்னவை என்பதனைப் “பரந்தபடி’ என்ற நூலிலே விரிவாக அருளிச் செய்தார்.
ஸ்ரீய: பதிப்படியிலும் “அநிஷ்டமாகிறது – அறிவின்மையும் இவற்றின் காரியமான இச்சையும், பகைமையும் இவற்றின் கார்யமான நல்வினை, தீவினைகளும் இவற்றின் கார்யமான தேவன், மனுஷ்யன், விலங்கு, தாவரங்களான நான்கு விதமான உடல்களும். ஆதி ஆத்மிகம் (தன்னாலேயே நேரும் துன்பங்கள்), ஆதிபெளதிகம் இதர ப்ராணிகளால் வருந் துன்பங்கள்.) ஆதி தைவீகம் (தெய்வத்தால் வரக்கூடியது.) முதலான துக்கப் பரம்பரைகள் என்று கூறி யிருக்கிறார்.
இஷ்டமாகிறது – எம்பெருமானது மேலான கருணையாலே மோக்ஷத்தைப் பெறும் ஆத்மாக்கள், இந்த ஸ்தூல உடம்பிலிருந்து ஸூஷ்ம உடலோடு புறப்பட்டு ஸூர்ய கிரணத்தைப் பற்றிக் கொண்டு முதலில் அர்ச்சிஸென்கிற அக்னியையும், பின்பு அஹஸ்ஸையும், சுக்ல பக்ஷ அபிமானியையும்,உத்தராயணாபிமாநியையும், ஸம்வத்ஸர அபிமாநியையும், வாயுவையும், முறையே கிட்டி, இவர்கள் வழி நடத்தப் பின்பு ஸூர்ய மண்டலத்தைப் பேதித்துக் கொண்டு போய்ச் சந்திரனைக் கிட்டி, அவன் கெளரவித்து அவன் வழி நடத்த, . பின்பு வருணனையும், இந்திரனையும் பிரம்மாவையும் முறையே கிட்டி அவர்கள் உலகங்களையும் கடந்து, இவ் வண்டத்தையும், இதைச் சுற்றியுள்ள ஏழு ஆவரணங்களையும், (மூல ப்ரக்ருதி) மூலப் பகுதியையும் கடந்து விரஜை யாற்றை அடைந்து அதில் மூழ்கித் தாம் கொண்டிருந்த அரு உடல் முதலியன கழியப் பெற்று, அந் நதியின் அக்கரையிலுள்ள அமாநவர் தொடுகையாலே பஞ்ச உபநிஷந் மயமான திவ்ய தேஹம் பெற்று, மீளுதலில்லாத பரம பதத்தைப் பெற்று, பரமாத்ம தர்சநமும் குணாநுபவ கைங்கர்யங்களை பெறுகையுமாம்.”
கீழ்க் குறிப்பிட்டபொருளை உபாயமாகச் சொன்னதின் தாத்பர்ய ஸாரத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -150-இத்தால் ப்ராப்யந்தானே ப்ராபகம் என்கிறது .
கீழ் 148 ஆம் ஸூத்ரத்தில், பிராட்டிக்கு இருப்பிடமான எம்பெருமானையே உபாயமாகச் சொல்லுகிற இத்தால், பயனாம் பொருள் தானே பயனைச் சாதிக்கும் சாதனமாகச் சொல்லுகிற தென்கை.
கீழே பயனைச் சொன்னதுண்டோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -151–கீழ்ச் சொன்ன மூன்றும் ப்ராப்யமிறே.
“ஸ்ரீமந் நாராயண சரணெள” என்று ஒரு தொடராகச் சொன்ன இதில், பெரிய
பிராட்டியாரோடு கூடி இருக்கை, திவ்ய மங்கள குணங்கள், திருமேனியோடு இருக்கையாகிய மூன்றும். * ஸ்ரீயா ஸார்த்தம் ஆஸ்தே” நித்ய முக்தர்களோடும் பிராட்டியோடும் கூட எம்பெருமான் பரம பதத்தில் வாழ்கிறான் ) என்றும், ‘ஸர்வாந்
காமாந் அஸ்நுதே‘ (இந்த உபாஸகன் எல்லாவற்றையும் உணர்ந்த பர ப்ரஹ்மத்தோடு அணைத்துக் கல்யாண குணங்களையும் அநுபவிக்கிறான்). என்றும், “ஸதா பச்யந்தி
ஸூரய:” (பரமபதத்தில் அந்த எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நித்ய ஸூரிகள் நிரந்தர மாகக் கண்டு இன்புறுகிறார்கள்) என்றும், இப்படி, பெரிய பிராட்டியோடும், கல்யாண குணங்களோடும், திவ்ய மங்கள விக்ரஹத்தோடும் கூடி இருப்பவனைக் கண்டு இச்சேதநன் இன்புறும் பயனெனச் சொன்னதாம். சேதநன் – ஜீவாத்மா.
ஆனால், பயனகிய இத்தை, உபாயமாகிய சாதனமாக்குகிறது தான் என்? “என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -152- இவன் செயலறுதியாலே உபாயமாக்கு கிறானித்தனை .
தன்னைத் தானே ரக்ஷித்துக் கொள்ள முடியாத அகிஞ்சனானவனும் எம்பெருமானைத் தவிர வேறொருவரையும் காப்பாகக் கொள்ளாதவனுமாகிய இவன், தன் செயலறுதியாலே சுவை மிக்க பாலை மருந்தாக்குவரைப் போலே, – பயனான பெருமானையே சாதனமாக்குகிறானித்தனை என்கிறார்.
இது தன்னாலே இந்த உபாயத்துக்கு ஒரு சிறப்பைச் சொல்லுகிறது என்கிறார்
ஸூர்ணை -153- “சரணெள சரணம் என்கையாலே உபாயாந்தர வ்யாவருத்தமான உபாயம் என்கிறது
“சரணெள சரணம்” என்று பயனான வஸ்து தன்னையே சாதனமாகச் சொல்லுகையாலே, (உபாயாந்தரங்களான) வேறு உபாயங்களான கர்ம ஜ்ஞாந பக்திகள் முதலானவைகள் சாதனமாகவும், அவைகளால் சாதிக்கப்படும் பகவத் கைங்கர்யமாகிய பயனும்
வெவ்வேறாயிருக்கும் உபாயாந்தரங்களில் காட்டில், வேறுபட்ட உபாயம் இது என்னுமிடம் சொல்லுகிறது என்கை.
பிறகு, வினைச் சொல்லுக்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -154 – ப்ரபத்யே- பற்றுகிறேன் .
இப்பதம் பதகதெள’ என்ற வினைப் பகுதியடியாக வந்ததாகையாலே கதி சப்தம் பற்றுதல் என்ற பொருளைத் தருவதாகையாலும் தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூன்றிடங்களில் உத்தமன் என்ற தன்மைக்கு இடமாகையர்லே ; ‘பற்றுகிறேன்’ என்று இதற்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்.
இந்தப் ‘பற்றுதல்’ தான் மாநஸமாயும்) மனதாலும், (வாசிகமாயும்) வாக்காலும், (காயிகமாயும்) உடலாலும் ஆகிய முக் கரணங்களாலும் பற்றுதலைக் காட்டக்
கடவதாகையாலே, எந்தக் கரணத்தால் உண்டான பற்றுதலைச் சொல்லுகிறது? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -155- வாசிகமாகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு (இழவில்லை) அழிவில்லை ‘ஜ்ஞாநாந் மோக்ஷம்’ ஆகையாலே, மாநஸமாகக் கடவது
“பவ சரணம்” (நீயே) உபாயமாக ஆவாய்.) என்கிறபடியே ப்ரார்த்திக்கையாகிற வெறும் வாசிகமாகவும், “அஞ்ஜலி: பரமா முத்ரா ஷிப்ரம் தேவ ப்ரஸாதிநீ”
பரமா முத்ரா-சிறந்த அடையாளமான,
அஞ்ஜலி: – இருகைகளும் கூப்பி வணங்குகை,
ஷிப்ரம் – சீக்கிரமாக,
தேவப்ரஸாதிநீ – தேவனுடைய கருணையை உண்டாக்கும். என்கிறபடியே பகவானுடைய கருணையை உண்டாக்குகின்ற அஞ்ஜலியைச் செய்தல். குகப் பெருமாள் காகம் முதலானவைகளைப் போலே ரஷிக்கக் கூடிய எம்பெருமான் இருக்குமிடத்தில் போதலாகிற வெறும் உடாலாகிய உறுப்பாலே பற்றினாலும் பலம் கிடைப்பது தவறுவது கிடையாது. “ஜ்ஞாநாந் மோக்ஷ; ஜ்ஞாநத்தாலேயே மோக்ஷம்-என்கையாலே, மாநஸமான கரணத்தாலே
பற்றுதலாகக் கடவது என்கை, அதாவது, மனஸாலே பற்றுவதென்பது மனத்தின் கார்யமான உறுதியான நினைவு, -இதை புத்தி விசேஷம்’ என்பர். இந்தப் புத்தி விசேஷத்தைப் பரந்த படியிலே விரிவாகச் சொன்னார். ஸ்ரீய: பதிப்படியிலும், இந்தப் புத்தி விசேஷமாகிறது: பிறர்க்குரியதல்லாத அவனுக்கே உரிமையான சேஷத்வ ஜ்ஞாந கார்யமாய்
மற்ற உபாயங்களில் மேம்பட்டு வேறுபட்டதாய்,(காக்குமவன் செயலைத் தடுக்குமதான தன் முயற்சியைத் தள்ளி,) பகவான் காப்பதை அநுமதிப்பதாய், ஒரே முறை
(சரணாகதி) செய்ய வேண்டியதாய், பலனில் நழுவுதல் கால தாமதம் செய்தலில்லாததாய், பிறப்பு செயல் அறிவுகளால் குறைவாளரும் செய்தற்குரியதாய், இன்னார் தான் செய்யக்கூடும் இன்ன காலத்தில் தான் செய்யலாம் இன்ன விதம் தான் செய்வது இவை முதலான நியமங்களில்லாததாய், மரண காலத்தில் பகவானை நினைவு
கொள்ள வேண்டுமென்பதில்லாததாய், வருத்தமின்றிச் செய்யக் கூடியதாய், (ப்ரார்த்தநா ரூபமாய்) ப்ரார்த்திப்பதை செயலாக உடையதாய், திட நம்பிக்கை யோடிருப்பது முதலான ஜ்ஞாந விசேஷம்” என்று ப்ரபத்தியினுடைய லக்ஷணத்தை அருளிச் செய்தார். ஆகையால், இவ்விடத்தில் அதையும் நினைவில் கொள்வது.
இப்படி, மாநஸ மாத்திரமே போதுமோ?”சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும்” என்று ஆழ்வார் அருளியபடியே முக் கரணங்களாலும் பற்ற வேண்டாவோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -155–உபாயம் அவனாகையாலும், இவை நேரே உபாயம் அல்லாமையாலும், இம் மூன்றும் வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை .
பலன் தருபவன் பகவானே யாகையாலும் முக் கரணங்களாலும் பற்றுதல்களான இவை மேலெழுந்த வாரியாக உபாயம் போல் தோற்றிக் கழியுண்டு போம தொழிய, இது ஸாஷாத்தான உபாய மல்லாமையாலும், பயனடைதற்கு நம்பிக்கையோடு கூடிய மனக் கரணத்தால் பற்றுகையே போதும். இவை மூன்றும் வேண்டுமென்ற நிர்பந்த மில்லை யென்கை. -அன்றிக்கே இப்படி ஓவ்வொன்றே போதுமென்று சொல்லுவானென்? முக் கரணங்களாலும் பற்றுதலைச் சொன்னாலோ என்ன? உபாயம் அவனாகையாலும் என்று
தொடங்கி அருளிச் செய்கிறாராகவுமாம். அப்போதும் ஓரொன்றே போதும். இம் மூன்றும் வேணும் என்ற நிர்பந்தமில்லை என்கை. -நிர்பந்தம் இல்லை என்கையாலே இந்தப் பற்றுகையானது முக் கரணங்களாலும் உண்டானாலும் குறையில்லை என்பது தோற்றுகிறது.”பற்றுகிறேன்’ என்ற “இந்த ப்ரபத்தி, முக்கரணங்களாலும் உண்டாகவுமாம் -ஒரு கரணத்தாலே உண்டாகவுமாம் பலன் கிடைப்பதில் குறையில்லை. இவன் தகுதிக்கு முக் கரணங்களுமே வேணும்; பலன் கிடைப்பதற்கு ஒரு கரணமே போதும். உபாயமாகும் அவன் தகுதிக்கு ஸ்ரீய: பதித்வமும், வாத்ஸல்யம் ‘ முதலான குணங்களும், திவ்ய மங்களமான திருமேனியும் வேண்டற் பாடாயிருக்குமா போலே, இவன் தகுதியாம் பூர்த்திக்கு முக் கரணங்களுமே வேண்டற்பாடா யிருக்கும்” ‘ என்றிவர் தாமே பரந்தபடியிலே அருளிச் செய்தது.
“ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த:க்ருதோயம் தாரயேந்நரம்”
ஸக்ருத் – ஒரு தடவை,
க்ருத: – அநுஷ்டிக்கப்பட்ட,
அயம் – இந்த,
சாஸ்த்ரார்த்த – சாஸ்த்ரார்த்தமான,
ஏவஹி – இந்த பரபத்தியே,
நரம்-மநுஷ்யனை,
தாரயேத் – ஸம்ஸாரத்தினின்றும் தாண்டு விப்பிக்கும்.
‘ஸக்ருதேவ ப்ரபந்நாய” (ஸக்ருதேவ-ஒரு தரமே, ப்ரபந்நாய– ப்ரபத்தி பண்ணினவனும்) இவை முதலானவைகளில் சொல்லுகிறபடியே ப்ரபத்தி ஒரு தரமே அநுஷ்டிக்க வேண்டியதா யிருக்க. “முக் காலத்திலும் ஒத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத்தானே” என்று நிகழ் காலத்துச் சொல் முக் காலத்திய நிகழ்ச்சியைச் சொல்லுவதாகையாலே, -பற்றுகிறேன்’ என்ற நிகழ் காலமாகச் சொல்வதால்
எப்போதும் சொல்ல வேண்டிய தாகுமாதலால் “நிகழ் காலமாகச் சொல்வது எதற்கு? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -157 -வர்த்தமாந நிர்த்தேசம் -ஸத்வம் தலை எடுத்து அஞ்சின போது அநுஸந்திக்கைக்காக .
“லோக விக்ராந்த சரணெள சரணம் தே5 வ்ரஜம் விபோ”
விபோ – ஸ்வாமீ |,
தே – தேவரீருடைய,
லோக விக்ராந்த சரணெள – உலகத்தை யளந்த திருவடிகளையே,
சரணம்‘ – உபாயமாக,
அவ்ரஜம் – பற்றினேன். என்றும், ‘நின்னடியினை அடைந்தேன்” என்றும், “அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இறந்த காலமாகச் சொல்லாமல், “ப்ரபத்யே” பற்றுகிறேன் என்று நிகழ் காலமாகச் சொல்லுகிறதாவது, சரீரத்தோடே இருக்கிற இவன், ராஜஸ தாமஸங்களாலே கலங்கி இதர உபாயங்களான அபாயங்களில் ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு பிறகு ஸத்வம் தலை யெடுத்து அநுதாபம் பிறந்து பயப் பட்ட காலத்திலே, “ப்ராயச் சித்திரியம் ஸாத்ர யத் புநச் சரணம்-–வ்ரஜேத் ” புந மறுபடியும், சரணம் வ்ரஜேத் (இதியத்) (பகவானையே) உபாயமாகப் புத்தி பண்ணுகிறானென்பது யாதொன்றுண்டு,
ஸாஇயம் – இந்த இதுவே,
ப்ராயச்சித்தி:– (தவறினதுக்கு) ப்ராயச் சித்தமாகும்–என்கிறபடியே ப்ரபத்தி
தவிர அதற்குப் பரிஹார மில்லாமையாலும், அது தான் ஒரு தரமே செய்ய வேண்டிய நியமமாகையாலும், மீண்டும் செய்தல் கூடாமையாலும் முன் செய்த ப்ரபத்தியையே நினைவிற் கொள்ளுகைக்காக (கொழுந்து படக் கிடக்கிறது) இந்தப் ப்ரபத்தியே மேன் மேலும் உண்டாயிருக்கும் என்றபடி.
இன்னமும் நிகழ் காலமாக பற்றுவதற்குச் சில ப்ரயோஜநங்களை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -158- உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும், கால க்ஷேயத்துக்கும், இணிமையாலே விட வொண்ணாமையாலும் நடக்கும் .
முன் பின் பழக்கத்தாலே எப்போதாகிலும் பகவானைத் தவிர்ந்த வேறு உபாயங்களான கர்ம ஜ்ஞாந பக்திகளிலே மநம் செல்லாமைக்கும், இதைச் சொல்லுகை யின்றி பொழுது போக்க அரிதாகையாலே காலங் கழிப்பதற்காகவும் இதனுடைய சுவை மிகுதியாலே இதை விட மாட்டாமையாலும், இடைவிடாமல் நடக்கக் கடவதா யிருக்குமென்கை.
இவ்வாறன்றி, பலங் கிடைக்கப் பல காலும் சொல்ல வேணு மென்றாலோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -159-பேற்றுக்குப் பலகாலும் வேணுமென்று நினைக்கில் உபாயம் நழுவும் –
முன் ஸூத்திரத்தில் சொன்ன ப்ரயோஜனங்களுக் கன்றிக்கே பலங் கிடைப்பதற்குப் பலகாலும் சொல்ல வேணுமென்று நினைக்கில், வேற்றுத் துணை பொறுக்காத பகவானாகிய ஸித்தோபாயம் சணற்கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே தன்னைக் கொண்டு நழுவுமென்கை.
ஆக, த்வயத்தின் முதல் வாக்கியத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தாராயிற்று.
இனி, உத்தர வாக்கியத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக ஆரம்பிக்கிறார்.
ஸூர்ணை -160-உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது –
ப்ராப்யமாவது, (ஸ்ரீய: பதியாய்) திருமகள் கேள்வனாய் ஸர்வ ஸ்வாமி யாயிருக்கிற ஸர்வேஸ்வரன் திருவடிகளில் செய்யும் தொண்டு.
உபாயத்தைப் பற்றிய பிறகு அடையத்தக்க பயனைச் சொல்லுகிற இதற்கு அபிப்ராயத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -161 -ப்ராப்யாந்தரத்துக்கு அன்றென்கை –
முதல் வாக்யத்தில் சொன்ன உபாயத்துக்கு-1- நூதனமான செல்வத்தை வேண்டுபவனும்,
2-இழந்த செல்வத்தைப் பெற வேண்டுபவனும், -3-கைவல்யத்தைப் பெற வேண்டுபவனும், -4-அவ் வெம்பெருமான் திருவடிகளை அடைய வேண்டுபவனும் ஆகிய நான்கு விதமான பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்கும் இந்த உபாயம் பொதுவாகையாலே, உத்தர வாக்யத்தில் சொல்லுகிற பலந்தான் இன்னது என்று நிரூபிக்க வேண்டுகையாலே வேறு
பயன்களுக்கன்று, அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே இதற்குப் பலனாகும் என்பதாம்.
மற்ற பயன்களை விட்டு பகவத் கைங்கர்யமாகிற இதொன்றையுமே வேண்டுவானென்? என்ன, விடை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -162 – உபாயாந்தரங்களை விட்டுச் சரமோபாயத்தைப் பற்றினாற் போலே, உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது.
உபாயத்தைப் பற்றும் போது அவனைத் தவிர்த்து வேறொன்றையும் உபாயமாகப் பற்றத் தகாத தன்னியல்பான ஸ்வரூபத்துக்குப் பொருந்த, கர்ம ஜ்ஞாந பக்திகளாகிய வேற்று உபாயங்களை விட்டு முடிந்த உபாயமான ஸித்தோபாயமான அவனைப் பற்றினாற்-
போலே, பயனைப் ப்ரார்த்திக்கிற சமயத்திலும் அவன் தவிர்த்த வேறுப் பயன் நுகராத தன்னியல்பான ஸ்வரூபத்துக்குப் பொருந்த வேறு பயன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டுச் சரமமான முடிந்த சிறந்த பயனைப் பிரார்த்திக்கிறது என்கை.
நினைவறியும் ஈஸ்வரன் ஸ்ரீமந் நாராயணன் பக்கல் ப்ரார்த்தனை அதிகம் என்றிருப்பார் செய்யும் வினாவை தாமே ப்ரதிவாதம் பண்ணுகிறார்.
ஸூர்ணை -163 – இவன் அர்த்திக்க வேணுமோ? ஸர்வஜ்ஞன் இவன் நினைவறியானோ ? என்னில் .
இவன் ப்ராத்திக்க வேணுமோ? அனைத்தும் அறியுமவன் இவன் நினைவறியானோ ? என்னில், அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -164 – இவன் பாசுரங் கேட்டவாறே திருவுள்ளம் உகக்கும் –
அதாவது, நோய் வாய்ப்பட்டமையாலே சோற்றில் ஆசை யற்றுக் கிடந்த சிறு குழந்தை, நோய் தீர்ந்து பசி யுண்டாகி “சோறு’ என்று கேட்டவாறே பெற்ற தாய் உகக்குமா போலே, அநாதி காலமாக இவன் பகவானைத் தவிர்த்த வேறு பயன்களில் மனம் ஊன்றியவனாகை யாகிற நோய் கொண்டு இந்தப் பயனில் நசையற்றுக் கிடந்தவன், நோய் தீர்ந்து இதிலே சுவை பிறந்து தன் பக்கல் வந்து இத்தை விரும்பிக் கேட்டவாறே தலைவனாகிற எம்பெருமான் திரு வுள்ளம் உகக்கும். அதற்காக ப்ரார்த்திக்கிறான் என்கை.
இனி, இந்த வாக்யத்துக்குப் பதந்தோறும் பொருள் சொல்வதாகத் திருவுள்ளம் பற்றி முதல் பதத்தை ஆரம்பிக்கிறார்.
ஸூர்ணை -165- ஸ்ரீமதே – பெரிய பிராட்டியாரோடே கூடி யிருந்துள்ளவனுக்கு -ஸ்ரீமதே‘ என்று இதற்கு அர்த்தம் அருளிச் செய்கிறார். பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவனுக்கு’ என்று இங்கும் முதல் வாக்யத்திற் போலே ஸ்ரீசப்தத்துக்குச் சொன்ன (கர்மணி வ்யுத்பத்தி, கர்த்தரி வ்யுத்பத்தி) செயப்படு பொருள், எழுவாய் என்ற இரண்டு வ்யுத்பத்திகளும், அதில் அர்த்தமும் மதுபர்த்தமான (நித்யயோகமும்) என்றுங்கூடி இருக்கையும் நினைக்க வேண்டும் என்கிறார்.
முதல் வாக்கியத்திலும் இரண்டாம் வாக்கியத்திலும் நித்ய யோகம்- எப்போதும் கூடி இருக்கை ஓத்திருக்கச் செய்தே அந்தந்த நிலைகளுக்குப் பொருந்த இவளிருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -166 – அவன் உபாயமாமிடத்தில் தான் புருஷகாரமாயிருக்கும்; அவன் ப்ராப்யனாமிடத்தில் தான் ப்ராப்யையுமாய் கைங்கர்ய வர்த்தகையுமா யிருக்கும் .
எம்பெருமான் சேதநர்க்கு விரோதமானவற்றைத் தவிர்க்கையும் இஷ்டமானவற்றைக் கொடுக்கையுமாகிற உபாயமாமிடத்தில், வேறொரு துணைக் கூட்டாகிற சேர்த்தியை பொறுக்காமையாலே, பிராட்டியாகிய தான் உபாயத்வத்தில் தொடர்பு கொள்ளாமல்,
குற்றங்களோடு கூடிய சேதநரைப் பார்த்து அவன் சீறுமளவில் அத்தைப் பொறுத்து கைக் கொள்ளும்படியாகச் செய்யும் புருஷகாரமாயிருக்கும்-அவன் சேதநர்கள் செய்யும் தொண்டினை ஏற்கும் பயனாமிடத்தில், அவனைப் போல தொண்டினை ஏற்பவளாய்க் கொண்டு பயனுமாய், இவர்கள் செய்யும் தொண்டினை அவன் திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப் படுத்தி அவனை உகப்பிக்கையாலே கைங்கர்யத்தை வளர்ப்பவளாயிருக்கும் என்றபடி-இது தன்னைப் பரந்தபடியிலே த்வயத்தில் முதல் வாக்யத்தில், “ஸ்ரீமத் சப்தம் சேதநருடைய அபராதத்தையும், ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையுங் கண்டு, இவர்கள் அவனுடைய கோபத்துக்கு உரியராய் நசித்துப் போகாதே அவனைக் கிட்டி, உஜ்ஜீவித்துப் போக வேணும். என்று குற்றங்களோடு கூடிய சேதநரை ஈஸ்வரனேடே சேர்க்கைக்காக என்றும் ஒக்க விடாதே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது;(உத்தர) பின் வாக்கியமாகிய ஸ்ரீமச்சப்தம் கைங்கர்யத்தை ஏற்பதைப் பற்றவும், இவர்கள் செய்யும் கைங்கர்யத்தை ஈஸ்வரன் திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப் படுத்துகைக்காகவும் அநுபவத்தில் இடையூறு வாராமைக்காகவும் (அநுபவ விச்சேதத்தில்) பகவதநுபவம் குறைவதினால் தான் இல்லை என்னலாம்படி. தரியாமையாலே இடைவிடாமற் சேர்ந்து அவனை நொடியும் பிரியாதே எல்லாக் காலங்களிலும் கூடி யிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.”என்று விரிவாக அருளிச் செய்தார்.
திருமந்த்ரத்தில் உத்தர பதத்துக்கு இந்த உத்தர வாக்யம் விவரணமா யிருக்கிற படியை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -167- இதிலே திருமந்த்ரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்திக்கிறது .
கைங்கர்யத்தை ஏற்பது (ஒரு மிதுநம்) ஓர் இருவர் என்பதைச் சப்தத்தாலேயே சொல்லுகிற இந்த வாக்யத்திலே, திருமந்த்ரத்திலே நாராயணாய என்று கைங்கர்யத்தை ஏற்பது ஒரு திவ்ய தம்பதிகள் என்னுமிடம் அர்த்த பலத்தாலே சொல்லுகையாலே, சுருங்கச் சொன்ன பயனை விரியச் சொல்லுகிற தென்கை. அங்கு ‘நாராயணனுக்கே அடிமை செய்யப் பெறுவேனாக வேணும்’ என்கிற இவ்வளவொழிய “அடிமை கொள்ளுமவன் ஸ்ரீமானாக வேணும்’ என்றும் ‘அடிமை செய்பவன் மமகாரம் அற்றவனாக வேணும்’ என்றும் சொல்லாமையாலும் அவை இரண்டும் இங்குச் சொல்லுகையா லன்றோ அந்தப் பதத்துக்கு இந்த வாக்யம் விவரணமாயிற்று என்பதாகும்.
இந்தத் திவ்ய தம்பதிகளுக்கே அடிமை செய்ய வேணும் என்கிற நிர்பந்தம் தான் என்? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -168-இளைய பெருமாளைப் போலே இருவருமான சோர்த்தியிலே அடிமை செய்கை முறை –
“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் . கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்சதே” பவாம்ஸ்து– தேவரீர்,
வைதேஹ்யா -பிராட்டியோடுகூட,
கிரிஸா நுஷ-–பர்வதத்தின் தாழ்வரைகளிலே,
ரம்ஸ்யதே – விளையாடப் போகிறீர்,
அஹம் – நான்,
ஜாக்ரத:- விழித்துக் கொண்டும்,
ஸ்வபதச்ச – நித்திரை செய்து கொண்டு மிருக்கிற,
தே-தேவரீருக்கு,
ஸர்வம் கரிஷ்யாமி– அனைத்துத் தொண்டுகளும் செய்வேன். என்கிறபடியே எல்லா தேசங்களிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பெரிய பிராட்டியாரும் ஸ்ரீமானுமான மிதுநத்துக்கு அடிமை செய்கையே சேஷ பூதனுக்கு ப்ரயோஜனமென்பது. இப்படி, பெருமாளும் பிராட்டியுமானச் சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப் போலே இருவருமானச் சேர்த்தியிலே அடிமை செய்கை இவ்வாத்மாவுக்கு இயல்பு. திவ்ய தம்பதிகளான இருவருக்கும் அடிமை செய்வது (மிதுந சேஷத்வம்) இயல்பானால், மிதுந கைங்கர்ய மன்றோ (ஸ்வரூபாநுரூபமான) இயல்புக்குச் சேர்ந்த ப்ரயோஜனமென்கை. -ஸ்வரூபம் – ஆத்மாவின் இயல்பு.
இன்னமும் அச் சேர்த்தியிலே அடிமை செய்யுமளவில் உள்ள வித்யாசமான தன்மையை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -169-அடிமை தான் ஸித்திப்பதும் ரஸிப்பதும் அச் சேர்த்தியிலே ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன் அநாதரிக்காமல் கைங்கர்யங் கொண்டருளும்படி செய்பவள் இவளாகையாலே “ஸீதாமுவாச” (ஸீதையிடம் விண்ணப்பித்தான்) என்கிறபடியே பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு, “ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தமிதம் வசநம் அப்ரவீத்”
(ஸீதாபிராட்டியின் முன்னிலையாகத் தம்முடைய இயல்புக்கு ஏற்ற ‘ தொண்டை வேண்டிப் பெற்ற) இளைய பெருமாளைப் போலே, இவன் (சேதநன்) ப்ரார்த்திக்கிற தொண்டு தான் ஸித்திப்பதும் (தனக்கு உண்டாவதும்) மாதா பிதாக்கள் இருவருமான சேர்த்தியிலே தொண்டு செய்யும் புத்திரனைப் போலே, செய்கிற தொண்டு தான் ரஸிப்பதும் பிராட்டியும் அவனுமானச் சேர்த்தியிலே என்பது.
இனி, இரண்டாம் பதமான நாராயணாய”, என்ற பதத்தை விவரிக்கிறார், ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு’ என்று அதற்குப் பொருள் சொல்லுகிறார்.
ஸூர்ணை -170 – நாராயணாய – ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு-
நாராயணத்வம் என்பது அதாவது – நாராயணன் என்பவன் இரண்டு விதமான உலகத்திற்கும் நாதன் ஆகையாலே, ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு தான் தவிர்ந்த எல்லாப் பொருள்களுக்கும் எஜமானனா யுள்ளவனுக்கு என்கிறார். தொண்டை. ஏற்றுக் கொள்ளுபவன் எஜமானனாகையாலே.
கைங்கர்யந்தான் – பகவானுக்குச் செய்யும் தொண்டு தான் பகவானை அநுபவிப்பதால் பிறந்த உகப்பின் கார்யமாகையாலும், அந்த உகப்பு தான் அநுபவிக்கிற பகவத் விஷயத்தி லாகையாலும் நாம் அநுபவிக்கிற விஷயத்தை இன்னது என்று சொல்ல வேண்டுகையாலே அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -171 – இதிலே திருமேனியையும் குணங்களையும் சொல்லும் –
தொண்டன் செய்யும் தொண்டினை ஏற்கும் பொருளைச் சொல்லுகிற இப் பதத்திலே,
கைங்கர்யத்துக்கு முன்னோடியா யிருக்கிற அநுபவத்துக்கு இலக்கான பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும் கல்யாண குணங்களையும் சொல்லும் என்கை. “ஸதா பஸ்யந்தி ஸூரய: (நித்ய ஸூரிகள் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தை நிரந்தரமாக ஸேவிக்கிறார்கள்.) என்றும்,
“ஸோஸ்நுதே ஸர்வான் காமான்” (உபாசகன் எம்பெருமானுடைய அனைத்துக் கல்யாண குணங்களையும் அநுபவித்துக் கொண்டிருக்கிறான்) என்றும், “ரஸம்ஹ்யேவாயம் லப்த்வா-
ஆநந்தி பவதி” (அந்தப் புருஷன் அனைத்துச் சுவைகளாலும் நிரம்பிய பெருமானை அடைந்து அநந்திக்கிறான்.) என்றாற்போல் அவனுடைய ஸ்வரூபம் எப்படி அநுபவத்துக்கு இலக்கோ? அதே போன்றே அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமும் கல்யாண குணங்களும் அநுபவத்துக்குரியதாய், தொண்டினை மேன்மேலென வளர்ப்பிப்பதாய், இனிமை மிகுந்து மன்றோ இருப்பது.-குணங்களென்று பொதுவாகச் சொல்லுகையாலே ஜ்ஞாந சக்தியாதி குணங்களோடு, வாத்ஸல்யாதி குணங்களோடு, செளர்யாதி குணங்களோடு வாசியற எல்லாக் குணங்களும் அநுபவிக்கப் பெறுவதா யிருக்கையாலே, முதல் வாக்யத்தில் நாராயண பதத்தில் உபாயமாக வரிப்பதற்கு உபயோகமாகச் சொல்லப் பெற்ற குணங்களும் இப் பதத்தில் பயனாக நினைக்கத் தக்கவை, ஆதாரமான
ஸ்வரூபத்துக்கு உபாயம், உபேயம் என்ற இரண்டு நிலைகளுண்டா யிருக்கிறாற் போன்றே அதேயமான குணங்களுக்கும் உபாயம், உபேயம் என்ற இவ்விரண்டு நிலைகளும் உண்டாயன்றோ இருப்பது.-இவை எல்லாம் பரந்தபடியிலே அருளிச் செய்தார் என்கிறார் மாணவாள மாமுநிகள்.
இனி, இப்பதத்துக்கு நோக்கு இன்னதிலே என்கிறார்.
ஸூர்ணை -172- சேஷித்வத்திலே நோக்கு –
அனுபவித்தற்கு ஏற்றலாதலென்பது பகவானுடைய எல்லா குணங்களையும் நாராயண பதம் சொல்லி யிருந்தாலும் சதுர்த்தி யம்ஸத்தில் ஆய” என்கிற நான்காம் வேற்றுமையில் சொல்லுகிற கைங்கர்ய விசேஷத்துக்கு (சிறப்புக்கு) மிகவும் உரியதாயிருப்பது சேஷித்வ (எஜமானத்வ) மாகையாலே, இப் பதத் துக்கு அதிலே நோக்கு என்கை என்கிறார்
இந்த சேஷித்வம் சொல்லுகைக்கு ப்ரயோஜநம் அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -173- ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யமிறே ரஸிப்பது
“ஸர்வம் பரவசம் துக்கம்” (பிறன் வசத்து இருப்பது அனைத்தும் துன்பமே) என்றும்,
“ஸேவா ஸ்வவ்ருத்தி” (அடிமை நாய்த் தொழில்) என்றும் சொல்லுகிற படியே சாஸ்திரங்கள் தகாதென்ற விஷயத்தில் தொண்டாற்றுகைப் போலன்றிக்கே “சாயாவா ஸத்வ மநுகச்சேத்”( பரன் திறத்தில் நிழல் போல் தொடரக் கடவன்.)என்றும், “ஸாகிமர்த்தம் ‘நஸேவ்யதே” (பரனுக்குத் தொண்டாற்றுகை சிறந்த தாயிருக்க ஏன்? செய்யப்படவில்லை) என்றும், சொல்லுகிற படியே சாஸ்திரங்கள் விதித்த -தகுந்த விஷயத்தில் தொண்டாற்றுகை யன்றோ இவனுக்குச் சுவைப்பது என்கை.
இனி இப் பதத்தில் வேற்றுமை உருபுக்குப் பொருள் சொல்லுகிறார்.
ஸூர்ணை -174 – இந்தச் சதுர்த்தி கைங்கர்யத்தை ப்ரகாசிப்பிக்கிறது.
சேஷத்வ ஜ்ஞாந கார்யமான உபாயத்தைக் கைக் கொண்டதின் பிறகு வந்ததாகையாலே, இந்த நான்காம் வேற்றுமை “அதற்காக’ என்ற முறைப் பொருளுணர்த்துகை யன்றிக்கே, இந்த சதுர்த்தி, கை பற்றிய உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கிற தென்கை.-கைங்கர்யத்தை ப்ரகாசிப்பிக்கையாவது – கைங்கர்ய ப்ரார்த்தனையைச் சொல்லுகை. கைங்கர்யமாவது:- பகவாந் முகமலர்த்திக் குறுப்பான தொண்டாற்றுகை. இந்தக் கைங்கர்யந்தான் “ஏதத் ஸாம காயந் நாஸ்தே” (முக்தன் இந்த ஸாமத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்.) என்றும், “நம இத்யேவ வாதிந:” நம: என்ற இத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.) “யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி’ (எந்தெந்த வழியில் ப்ரபு செல்கிறானோ அந்தந்த வழியில் இவனும் செல்கிறான்.) என்றும் இவை முதலானவைகளில் சொல்லுகிறபடியே தொண்டு வாசிக காயிக ரூபமாயிருக்கும் என்றபடி.
இந்தக் கைங்கர்யம் ப்ரார்த்திக்கப்-பெறுமதாகில் எப்போதாவது ஒரு ஸமயத்திலாகாதோ வென்னில்? அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -175 – கைங்கர்யந்தான் நித்யம் .
அதாவது, (சேஷத்வமே) அடிமையே ஆத்மாவுக்கு இன்றியமையாத லக்ஷண் மாகையாலும், “அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வாநுபபத்தி’: (அடிமையை மேற்- கொண்டொழுகாத போது ஆத்மாவுக்கு சேஷத்வம் என்ற லக்ஷணம் பொருந்தாது.) என்கிறபடியே தொண்டு செய்யாத-
போது அடிமைத் தன்மைப் பொருந்தாமையால் ஆத்மாவுக்குக் கைங்கர்யம் நித்யமென்கை.-ஆகையாலன்றோ “நித்ய கிங்கர: ப்ரஹர்ஷ யிஷ்யாமி”( நித்திய கிங்கரனாகவே இருந்து உன்னை களிப்புறச் செய்வது என்றோ.) என்றும், “நித்ய கிங்கரோ பவாநி” (எப்போதும் கைங்கர்யம் பண்ணுபவனாகவே ஆகக் கடவன்) என்றும் நம் ஆசார்யர்கள் அருளிச்
செய்தது.
நித்தியமாயிருக்குமாகில் ப்ரார்த்திக்க வேணுமோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -176 – நித்யமாக ப்ரார்த்தித்தே பெறவேணும் .
கைங்கர்யத்தை ஏற்குமவன் பரம் பரனாகையாலும், தொண்டு செய்யும் சேதநன் அத்யந்த பரதந்த்ர னாகையாலும், ப்ரார்த்தநா விசேஷம் இல்லாத போது கைங்கர்யம் ஸித்தியாமையாலும், நித்யமாக ப்ரார்த்தித்தே பெற வேணும் என்கிறது
நித்தியமும் ப்ரார்த்தனைக்கு உரித்தாகைக்கு நிதாநம் அருளிச்செய்கிறார்.
ஸூர்ணை -177- சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷபூதனுக்கு ஸ்வரூப லாபமும், ப்ராப்யமுமம் ,
“நாகிஞ்சித் குர்வதச் சேஷத்வம்” என்கிறபடியே தொண்டாற்றி சேஷிக்கு ஸந்தோஷத்தை விளைவிக்காத வஸ்துவுக்கு சேஷத்வம் இல்லாமையாலே, சேஷியான ஈஸ்வரனுக்குத் தன்னுடைய அடிமைச் செயலாலே ப்ரீதியை விளைவிக்கை ஆடியவனுக்குத் தன் ஸ்வரூப லாபமாய், அவனுடைய முக மலர்த்திக் குறுப்பாயிருக்கையாலே பயனுமாயிருக்குமென்கை. ஆகையாலே, நித்யமும் ப்ராத்தனைக் குரித்தாயிருக்குமது பகவத் கைங்கர்யம் எனப்படுவது இவ் விடத்தில் கருத்தாயிருக்கும். சேஷி-எஜமானனான எம்பெருமான். சேஷ பூதன் – அடிமையாகிற நாம். (ஆத்மாக்கள்).
பிறகு கடைசி பதத்தை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை – 178- நம: கைங்கர்யத்தில்-களையறுக்கிறது.
நம: என்கிற இதற்கு அர்த்தம் அருளிச் செய்கிறார். * கைங்கர்யத்தில் களை யறுக்கிறது’ என்று அதாவது, நமச் சப்தம் பொதுவாக அஹங்கார மமகாரங்களைக் கழிக்கையாலே, திருமந்த்ரத்தில் மத்யம பதமான நமச் சப்தம் போலே ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் மூன்றையுங் கழிக்க வற்றா யிருந்ததே யாகிலும், இங்கு அங்ஙனன்றிக்கே, இந்த நமப் பதம் கைங்கர்ய ப்ரார்த்தனைக்குப் பிறகு சொல்வதாகையாலே, இந்தக் கைங்கர்யத்தில் விரோதியைக் கழிக்கிறது என்கை.
கைங்கர்யத்துக்குக் களை எது” என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -179- களையாவது-தனக்கென்னப் பண்ணுவது
தனக்கென்னப் பண்ணுகையாவது, “போக்-தாஹம் மம போகோயம்” (நான் புஜிக்கிறவன், இது எனக்கு புஜிக்கப்படுவது.) என்கிறபடியே இத்தைத் தன்னுடைய ஸந்தோஷத்துக்கு உறுப்பாக நினைத்துப் பண்ணுகை: கைங்கர்யம் பகவாந் முக மலர்த்திக்கு சந்தோஷத்திற்கு ஏதுவாகையாலே இது நமக்கு விரும்பத் தக்கது என்கிற நினைவு ஒழிய, இது என்னுடைய போகத்துக்குரியது’ என்றும், இது என்னுடையது” என்ற புத்தியும் நடக்குமாகில் பயனற்றதா யன்றோ இருப்பது இந்த கைங்கர்யம். இப்படி,
எனக்கென்றும் என்னுடைய தென்றும் வருகிற நினைவை அடியோடு களைகிறது, இந்த நமப்பதம் என்கை .
இன்னமும் இந்தக் கைங்கர்யத்தைப் பெறுகைக்கு விரோதிகளானவையும் இதிலே கழியுண்ணுமென்கிறார்.
ஸூர்ணை -180-இதிலே அவித்யாதிகளும் கழியுண்ணும்
அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந்த நமஸ்ஸிலே, “அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி; அவித்யா தருஸம் பூதிபீஜமேதத் தீவிதா ஸ்திதம்”
அநாத்மநி – ஆத்மாவல்லாத தேகத்தில்,
ஆத்மபுத்தி:– ஆத்மா என்கிற புத்தியானது, யாமதி – தொன்றுண்டோ,
அவித்யாதரு – அஜ்ஞாநமாகிய மரம்,
ஸம்பூதி – உண்டாவதற்கு,
பீஜம் – காரணமானது,
ஏதத்த்- விதாஸ்திதம் – இப்படி (அஹங்கார மமகாரமென்கிற)இரண்டாக இருக்கிறது. என்கிறபடியே ஆத்மாவல்லாத உடலை ஆத்மாவாக புத்தி பண்ணுவதையே வடிவாக உடைத்தாய்க் கர்ம உற்பத்தி காரணமா யிருந்துள்ள அறிவின்மையும்,அதன் கார்யமான கர்மங்களும், அதன் கார்யமாய் வரும் உடல் தொடர்பும் எல்லாம் கழி யுண்ணும் என்கிறது. -ஆகையாலே தான் த்வய விவரணமான கத்யத்திலே எம்பெருமானார் நமச் சப்தார்த்தத்தைச் சொல்லி யருளுகிற அளவில் “மநோ வாக்காயை:” என்ற சூர்ணையாலே முக் கரணங்களாலும் செய்யக் கூடாததைச் செய்கை, செய்யக் கூடியதைச் செய்யாமை முதலான அனைத்துக் கர்மங்களும் கழிகையும், “அநாதி கால ப்ரவருத்த” முதலான குர்ணையாலே அறிவின்மை அழிகையும், “மதீயாநாதி” என்றசூர்ணையாலே, உடல் தொடர்பு கழிவும் ப்ராத்தித்தருளினார்.
ஆனாலும், இதற்கு முதன்மையான பொருள் கைங்கர்யத்தில் தன்னலங்கழிகையே. அத்தைச் சொல்லி அருளுகிறார் மேல். அதில் முதலில் பகவத் கைங்கர்யம் பண்ணும் போது தான் எப்படியாக வேணும்? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -181- “உனக்கே நாமாட் செய்வோம் ‘ என்னும் படியே ஆக வேணும் .
கைங்கர்யம் செய்யுமளவில் “உனக்கே நாமாட்செய்வோம்” என்று “உனக்கும் எங்களுக்கு மாயிருக்கும் இருப்புத் தவிர்ந்து, உனக்கே உகப்பாக நாங்கள் அடிமை செய்ய வேணும்’ ‘என்கிறபடியே ஆண்டானுக்கே உகப்பாக அடிமைத் தொழில் செய்ய வேணுமென்கை.
“தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே“என்றன்றோ ஆழ்வாரும் அருளிச் செய்தது.
இனி, இந்தக் கைங்கர்யத்துக்குத் தடைகளை அருள்கிறார்.
ஸூர்ணை -182-ஸெளந்தர்யமும் அந்தராயம்; கீழ்ச் சொன்ன கைங்கர்யமும் அப்படியே .
அவன் திருமேனி அழகும் மனத்தைக் கொள்ளை கொள்வதாய்க் கொண்டு கை சோரப் பண்ணுகையாலே, கைங்கர்யத்துக்குத் தடை; இந்த நமஸ்ஸுக்குக் கீழே ‘ஆய’ பதமான சதுர்த்தியிற் சொன்ன கைங்கர்யமும், கணவன் மனைவி என்ற இருவரும் ஒருவர்க் கொருவர் செய்து கொள்ளும் பரிமாற்றம் போலே சுயநலத்துக் குறுப்பாகையாலே, எம்பெருமான் முகமலர்த்தியே நமக்கு பயன்’ என்ற உண்மையான நிலைக்கு மாறாக
சுயநலம் கலந்த அநுபவம் வருவதால் அந்த கைங்கர்யத்துக்கு பெருமானுடைய திருமேனி அழகு தடையாகும் என்கை.
இப்படியாகையால், இந்த விரோதி கழிகைக்குச் செய்யும் ப்ரார்த்தனையும் இடைவிடாமல் நடக்கும் படியை அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -183- கைங்கர்ய ப்ரார்த்தனை போலே, இப்பதத்தில் ப்ரார்த்தனையும் என்றுமுண்டு .
அதாவது, நாராயண பதத்திலிருக்கும் ஆய” என்ற நான்காம் வேற்றுமையில் சொல்லுகிற கைங்கர்ய ப்ராத்தனை எப்போதோ ஒருக்காலுண்டாவது என்பதில்லாமல் நித்தியமாய்ச் செல்லுமா போலே, இந்த நமப் பதத்திற் சொல்லுகிற கைங்கர்ய விரோதி கழிகைக்குச் செய்யும் ப்ரார்த்தனையும், இங்கிருக்கும் காலத்தோடு பரமபதத்தில் புகுகிற காலத்தோடு வாசியற எல்லாக் காலத்திலும் இந்த ப்ரார்த்தனை நடக்கக் கடவதாயிருக்குமென்கை.
அஹங்கார மமகாரத்துக்கு விளை நிலமான இந்த உடல் தொடர்பற்று பரம பதம் சென்ற பின்பும், அங்கேயும் தன் அநுபவத்திற்காக பகவதநுபவம் பண்ணுகை என்ற சுயநல புத்தி உண்டாமோ? என்ன, அருளிச் செய்கிறார்.
ஸூர்ணை -184- “மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்னா நின்றதிறே.
உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு சுய அதுபவமாகிற புத்தி விளையாமல், எங்கள் (பரதந்திர ஸ்வரூபத்தை) உனக்காகவே நாங்கள் இருக்கும் நிலையை அழியாத படி தணிவிக்கும் மருந்தானவனே’ என்று நித்ய ஸுிரிகள் பேசும் பாசுரமாகச்சொல்லா நின்றதல்லவா! ஆகையால், பகவானுடைய திருமேனி அழகாலும் அவனுக்குச் செய்யும் கைங்கர்யத்தாலும் விளையும் சிறந்த ஆனந்தம், அதைத் தன்னாநந்தத்திற்காக என்று நினைக்கிற சுய நலமாகிற புத்தி அங்கும் உண்டாவதாலே, இப் பதத்தில் ப்ரார்த்தனை என்றும் உண்டென்பது நிச்சயமாயிற்று. ஆகையன்றோ முக்தர்க்குலக்ஷணம் சொல்லுகிற விடத்திலே “நமஇத்யேவ வாதித: (நம: நாங்கள் உனக்குரியவர்கள்,எங்களுக்குரியவரன்று ஆகையால், நாங்கள் செய்யும் தொண்டு உனக்குரியதே எங்களுக்கல்ல) என்று பரம பதத்திலுள்ளவர்கள் கூறினார்களன்றோ என்றது.
ஆக,
(புருஷகாரத்தையும்) சேர்த்து வைத்தலையும்,
அந்தப் புருஷகாரம் செய்யும் பிராட்டியும்
பெருமானும் என்றும் பிரியாது சேர்ந்திருக்கையும்,
பெருமான், சேதநன் அபராதங்கண்டு சீற்றம் கொள்ளும்போது பிராட்டியால் கிளப்பி விடப்பட்ட வாத்ஸல்யம் முதலான குணங்களையும்,
அந்தக் குணங்களுக்கு விளக்கமான திருமேனியையும், குணங்களோடும், திருமேனியோடும் கூடி இருக்கிற எம்பெருமானுடைய உபாயத்தையும், அவ்வுபாயத்தை வரிப்பதையும்,
அதன் பலமான கைங்கர்யத்தை ஏற்பது
ஒரு திவ்ய தம்பதிகள் என்னுமிடமும்,
அவ் வஸ்துவினுடைய ஸர்வ சேஷித்வத்தையும்,
அவ் விஷயத்தில் செய்யும் கைங்கர்யத்தையும்
கைங்கர்ய விரோதி கழிகையையும்
சொல்லிற்றாயிற்று என்று த்வய ப்ரகரணத்தை முற்றுவிக்கிறார்
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply