ஸ்ரீ முமுஷுப்படி -தெளிவுரை-ஸ்ரீ சரம ஸ்லோக ப்ரகரணம்‌-

மத்திய ரஹஸ்யமான்‌ த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்த பிறகு அதில்‌, த்வயத்தின்‌ முதல்‌ வாக்கியத்தில்‌ சொல்லுகிற உபாயத்தை ஸர்வேஸ்வரன்‌ தானே விதிக்கையாலே, இந்த உபாயம்‌ கண்ணனெம்பெருமானுக்கு மிகவும்‌
இஷ்டமென்னுமத்தையும்‌, உபாயத்தை கைக்கொள்ளுவதற்கு முன்னோடியாம்‌ செயலான மற்றைச்‌ சாதன த்யாகத்தையும்‌, உபாயமாக வரித்த செயலே உபாயமென்ற புத்தியையும்‌ விட்டு உபாயமாக வரிக்கப் பெற்ற எம்பெருமானே உபாயமென்பதையும்‌, இவ்வர்த்தங்களை நேரே காட்டும்‌ சப்தத்தால்‌ முதல்‌ வாக்யம்‌ ‘சொல்லுகையாலும்‌.
த்வயத்தின்‌ உத்தர வாக்கியத்தில்‌ (பிற்பாதி வாக்கியத்ததாலே) சொல்லுகிற கைங்கர்யத்துக்கு முன்‌ நிகழக்‌ கூடியதான அடைதற்குத்‌ தடையான அனைத்துப்பாபங்களின்‌ விடுதலையையும்‌ “அஹம் த்வா’ என்ற பின் வாக்கியத்தாலே நேரே சப்தமாகச்‌ சொல்லுகையாலும்‌, த்வயத்துக்கு
விவரணமாய்‌ ஐந்தாம்‌ வேதமான ஸ்ரீமஹாபாரத ஸாரமான கீதோபநிஷத்தின்‌ தாத்பர்யமாய்‌, முடிவான ரஹஸ்ய மாயிருந்துள்ள சரம ஸ்லோகத்தினுடைய அர்த்தத்தை
ஐயந்திரிபுகளின்றி அருளிச்‌ செய்கிறார்‌.-
இதில்‌, அர்த்தங்‌ கேட்கைக்காக வன்றோ எம்பெருமானார்‌ 18 தடவை திருக்கோட்டியூர்‌ நம்பி பக்கல்‌ எழுந்தருளியது-நம்பி தாமும்‌ இதில்‌, அர்த்தத்தினுடைய பெருமையையும்‌ இதை மேற்கொண்டோழுகுமவர்கள்‌ இல்லாமையையும்‌ பார்த்துத் தான்‌ இவருடைய நம்பிக்கையையும்‌
விருப்பத்தையும்‌ பரீக்ஷிப்பதற்காகப்‌ பல்கால்‌ நடந்து துவளச்‌ செய்து ப்ரதிஜ்ஞை கொண்டு ஒரு மாஸம்‌ உபவாஸம்‌ இருக்கச்‌ செய்து அருமைப்படுத்தி அருளிச்‌ செய்தது. ஸுத்த ஸத்வ நிஷ்டனாய்‌, பரமாத்ம விஷயத்தில்‌ அபார ப்ரேமை யுடையனாய்‌, இதற்குப் புறம்பான மற்றவற்றில்‌ மிக்க வெறுப்புடையவனாய்‌, ப்ரமாணங்களை மீறாது அதற்கு உடன்பட்ட வனாய்‌, பகவத்‌ வைபவம்‌ கேள்வி யுற்றால்‌ பொருந்து மென்று விசாலமான ஹ்ருதயமும்‌ மிக்க நம்பிக்கை யுடையனாய்‌, சாஸ்த்ர நம்பிக்கை யுடையவர்களில்‌ தலைவனாய்‌ ஒருவன்‌ உண்டானால்‌ அவன்‌ இந்த ஸ்லோகார்த்தம்‌ கேட்டு அதன்‌ படி அநுஷ்டிக்கத்தக்க அதிகாரியாவான்‌. ஆகையாலே, அப்படிப்பட்ட அதிகாரி கிடைமையாலும்‌ அர்த்தத்தின்‌ சீர்மையாலும்‌ இத்தை வெளியிடாதே மறைத்துக்‌ கொண்டு வந்தார்கள்‌ எம்பெருமானாருக்கு முன்புள்ளார்‌. ஸம்ஸாரிகள்‌ துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி, கருணை கரை புரண்டிருக்கையாலே, அர்த்தத்தின்‌ கெளரவம்‌ பாராதே பிறப்பு மரணம்‌ போன்ற துன்பத்தில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ மக்களுடைய இழவை நினைத்து எம்பெருமானார்‌ தகுதியுடைய அதிகாரிகளுக்கு உபதேச மூலமாக வெளியிட்டருளினார்‌ என்கிறார்‌. அப்படி உபதேசித்து விடுவதல்லாமல்‌, இந்த அர்த்தமாகிற பொருளை எல்லாருமறிந்து உய்வு பெற வேணுமென்ற மேலான கருணையாலே,, இதன்‌ அர்த்தத்தை பல நூல்களிலும்‌ சுருக்கமாகவும்‌, விரிவாகவும்‌ (இவர்‌) பிள்ளைலோகாசாரியர்‌ அருளிச்‌ செய்தது. மற்றுள்ள ப்ரபந்தங்கள்‌ எல்லாவற்றிலும்‌ போலன்றிக்கே பெண்களும்‌ பாலர்களும்‌ கற்றுணரலாம்படி தெளிய அருளிச்‌ செய்தது இந்த ப்ரபந்தமாகும்‌ என்கிறார்‌ மணவாள மாமுநிகள்‌.
அநுஷ்டாநம்‌ – ஒழுக்கம்‌.

இதில்‌, முதலிலே இந்த ஸ்லோகார்த்தத்தினுடைய பெருமையை எல்லாருடைய மனத்திலும்‌ படுத்துகைக்காக இது தனக்குச் சரம ஸ்லோகமென்று திருநாமமாகைக்குக்‌
காரணத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -185. கீழே சில உபாய விசேஷங்களை உபதேசிக்க அவை துச்சகங்களென்றும்‌,ஸ்வரூப விரோதிகளென்றும்‌ நினைத்து சோகாவிஷ்டனான அர்ஜுநனைக் குறித்து, அவனுடைய சோக நிவருத்த்யர்‌த்தமாக ‘இனி இதுக்கு அவ்வருகில்லை’ என்னும்‌படியான சரமோபாயத்தை அருளிச்‌ செய்கையாலே சரம ஸ்லோக மென்று இதுக்குப்‌ பேராயிருக்கிறது

இந்த ஸ்லோகத்துக்குக்‌ கீழே சில உபாய விசேஷங்களை அநேகாத்யாயங்களிலே கர்ம ஜ்‌ஞாநாதிகளைத்‌ தன்னை அடைதற்குரிய மோக்ஷ ஸாதநமாக விரிவாக உபதேசிக்கக்‌ கேட்டு, உடலை வருத்தி ஓடுக்கிச்‌ செய்கை முதலானவையும்‌, இந்திரிய ஐயம்‌ அரிதாகையாலும்‌, குறிக்கொண்டு நீண்டகாலம்‌ ஒழுக்கம்‌ மேற் கொண்டு ஸாதிக்க வேண்டி யிருக்கையாலும்‌, அவைகளை கடைப் பிடித்து ஒழுக இயலாதென்றும்‌, பகவானுக்குச்‌ சரீரமா யிருக்கிற ஆத்மாவின்‌ பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்குத்‌ தன்‌ முயற்சியாலே முயல்வது இவை விரோதிகளென்‌றும்‌ புத்தி பண்ணி, இவற்றாலே எம்பெருமானைப்‌ பெறுவது என்பது ஒன்றில்லை; இனி இழந்தே போனோம்‌’ என்கிற சோகத்தாலே கவரப் பெற்றவனான அர்ஜுநனைக் குறித்து, அவனுடைய அந்த சோகம்‌ போகைக்காக எளிதில்‌ ஒழுகக் கூடியதும்‌ ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்திய தாகையாலும்‌ இனி இதற்கு மேலில்லை என்னும்‌ படியான முடிந்த உபாயத்தை அருளிச் செய்கையாலே சரம ஸ்லோகமென்‌று இதற்குத்‌ திருநாமமா யிருக்கிறது

இனி, இந்த ஸ்லோகத்துக்கு வாக்யார்‌த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -186 – இதில்‌ பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌; உத்தரார்த்தத்‌தாலே உபாய க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌.
இரண்டு அர்த்தங்களின்‌ (முற்பாதி பிற்பாதி) வடிவமான இந்த ஸ்லோகத்தில்‌, முற் பாதியாலே இந்த உயாயத்துக்கு அதிகாரி யானவன்‌ செய்யுமத்தை அருளிச்‌ செய்கிறான்‌; பிற் பாதியாலே உபாயமான தான்‌ இவனுக்குச்‌ செய்யுமதை அருளிச்‌ செய்கிறான்‌ என்கை.

அதிகாரி செய்யுமது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -187-அதிகாரிக்கு க்ருத்யமாவது – உபாய பரிக்ரஹம்‌
அதிகாரியானவனுக்கு இங்குச்‌ செய்யத் தக்கது, இந்த உபாயத்தைப்‌ பற்றுகை என்கை.

ஆனால்‌, அவ்வளவு சொல்லாதே வேறு பட்ட உபாயங்களை விடச்‌ சொல்வானென்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -186- அத்தை ஸாங்கமாக விதிக்கிறான்‌-
அந்த உபாயத்தைப்‌ பற்றுகிறதை மற்ற உபாயங்களை விடுகையாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான்‌: என்கை.
“ப்ரக்ஷாள்ய பாதா வாசாமேத்‌ ஸ்நாத்வா விதிவதர்ச்சயேத்‌ ஸ்தித்வார்க்யம்‌ பாநவே தத்யாத்‌ த்யாத்வா தேவம்‌ ஐபேந்மநும்‌”
பாதெள
– கை கால்களை,
ப்ரஷாள்ய – கழுவிக்கொண்டபின்புதான்‌,
ஆசாமேத்‌ – “ ஆசமனம்‌ பண்ணக் கடவன்‌, .ஸ்நாத்வா – ஸ்நாநம்‌ பண்ணியே,
விதிவத்‌ – விதிப்படி,
அர்ச்சயேத்‌– அர்ச்சிக்கக்‌ கடவன்‌,
ஸ்தித்வா – நின்று கொண்டே,
அர்க்யம்‌ – அர்க்யத்தை,
பாநவே – சூரியன்‌ பொருட்டு,
தத்யாத்‌ – கொடுக்கக்கடவன்‌,
தேவம்‌ – தேவனை,
த்யாத்வா – த்யாநித்துக்‌ கொண்டேதான்‌, மநும்‌ ஜயேத்‌ – மந்த்ரத்தை ஜபிக்கக்கடவன்‌ என்று கைகால்‌ கழுவுதலை முதலில்‌ செய்து விட்டுத்தான்‌ பிறகு ஆசமனம்‌ முதலானவற்றை செய்ய வேண்டும்‌. இல்லையென்றால்‌, அநுஷ்டாநத்திற்குக்‌ குறைவேற்படும்‌. அது போலே, ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றும்‌ பொழுது உபாயாந்திரங்களை (மற்ற உபாயங்களை) முதலில்‌ விட்டே பற்றவேணும்‌. இதை த்யஜ்ய என்ற பதத்தில்‌ இறுதியிலிருக்கும்‌ ல்யப்‌ என்ற விகுதி, ‘விடுதல்‌’ என்ற பொருளைக் காட்டும்‌ த்யாகத்தை வொழிய பற்றுதல்‌ என்ற ஸ்வீகாரம்‌ பொருந்தாது என்பதைக்‌ காட்டிக்கொடுக்கிறது.
ஆகையால்‌ “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய ஸ்திதச்சேத்‌” (எல்லா தர்‌மங்களையும்‌ விட்டிருந்தானாகில்‌) என்று தாம்‌ மேற் கொண்டொழுகுவதாகிய தன்‌ முயற்சியால்‌ செய்யக்‌கூடிய கர்ம ஜ்ஞாத பக்திகள்‌, செய்வதற்கு அருமையாயிருத்தலால்‌ ப்ரபத்தி பற்ற எளிதாயிருத்தலால்‌, அதை விட்டு இதை பற்றலாம்‌ என்று அநுவதித்து ஸித்தோபாய ஸ்வீகாரத்தை விதிக்கிறதென்கிற பிறருடைய வாதம்‌ பொருத்தமற்றது என்கிறார்‌.

எளிதில்‌ செய்யக் கூடியதும்‌ தன்‌ தகுதிக்கு ஏற்றதும்‌ விரும்பி மேற் கொண்டு ஒழுகுவதற்கும்‌ உரியதான இந்த ப்ரபத்தியைச்‌ செய்யென்று நியமிக்க வேணுமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌ ராக ப்ராப்தம்‌ எனறு தொடங்கி-ராக ப்ராப்தம்‌ – விருப்பத்துக்குரியது.
ஸூர்ணை -189-ராக ப்ராப்தமான உபாயந்தானே வைதமானால்‌ கடுகப் பரிக்ரஹிக்கைக்கு உடலாயிருக்குமிறே .
இனிமையாலே விரும்புதலுக்குரியதான பாலைப்‌ பித்த ரோகத்துக்கு மருந்தாகக்‌ கொடுக்கச்‌ சொல்லி நியமித்தால்‌ உடனே கைக் கொள்ளுகைக்கு உரித்தாமாப் போலே, மற்ற உபாயங்களைக்‌ காட்டிலும்‌ இந்தப் ப்ரபத்தியாகிற சரணாகதிக் குண்டான தனிச் சிறப்பாலே சேதனனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாகக்‌ கை கொள்ளத் தக்கதாயுள்ள இந்த உபாயத்தை ‘மேற் கொள்ள வேண்டும் என்ற ஆணையுமிட்டால்‌ விரைந்து ஏற்கைக்கு உரித்தாயிருக்குமன்றோ என்கை.

இனி, இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக முற்பாதியின்‌ பதங்களின்‌ எண்ணிக்கையைக்‌ குறிப்பிடுகிறார்‌.
ஸூர்ணை -190 -இதில பூர்வார்த்தம்‌ ஆறு பதம்‌.
அதில்‌ முதல் பதத்தை தொடங்குகிறார்‌.
ஸூர்ணை -191- ஸர்வ தர்மாந்‌ – எல்லா தர்மங்‌களையும்‌ –
“ஸர்வதர்மாந்‌ என்று அர்த்தம்‌ அருளிச் செய்கிறார்‌ எல்லாத்‌ தர்மங்களையும்‌ என்று.

அது தான்‌ தர்மமும்‌, பன்மையும்‌, ஸர்வ சப்தமுமாய்‌ மூன்று விதமாயிருக்கையாலே இம் மூன்‌றுக்கும்‌ அர்த்தம்‌ அருளிச் செய்வதாக, முதலில்‌ தர்ம லக்ஷணத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -192- தர்மமாவது – பல ஸாதநமா யிருக்குமது
தர்மம்‌’ என்ற சொல்‌ பயனை ஸாதித்துத்‌ தரும்‌ ஸாதநமாயிருக்குமது.
தர்ம சப்தம்‌ இம்மைப்‌ பலங்களையும்‌ ஸ்வர்க்கம்‌ முதலிய மறுமைப் பலன்களுக்கும்‌ ஸாதநமாகையால்‌ இவைகளை வேறுபடுத்துகிறார்‌.
ஸூர்ணை -193 -இங்குச்‌ சொல்லுகிற தர்ம சப்தம்‌ த்ருஷ்ட பல ஸாதநங்களைச்‌ சொல்லுகை யன்றிக்கே, மோக்ஷ பல ஸாதநங்களைச்‌ சொல்லுகிறது .
அதாவது, கீதையில்‌ கண்ணன்‌ இதற்கு முன்‌ உபதேசித்த கர்ம ஜ்ஞாந பக்திகளை, உபதேசிக்கிற போதே இம்மைப்‌ பல ஸாதநங்கள்‌ இவற்றுக்கு வேறுபட்டவையாகையாலும்‌, மோக்ஷோபாயங்களை உபதேசித்து வருகிற பகுதியாகையாலும்‌, இவ் விடத்தில்‌ சொல்லுகிற தர்ம சப்தம்‌ புத்ர,பசு, அந்நம்‌ முதலிய இவ்வுலக பலன்களையும்‌ ஸ்வர்க்கம்‌ முதலிய பர லோக பலன்களையும்‌ உள்ளவற்றுக்கு ஸாதநங்‌களைச்‌ சொல்லுகை யன்றிக்கே, பகவத்‌ விஷயத்தை அடைந்‌தின்புறுவதாகிய மோக்ஷ பல ஸாதநமா யுள்ளவற்றைச்‌ சொல்‌லுகிற தென்கை.

மேல்‌ பன்மையின்‌ பொருளை அருளிச்‌ செய்கிறார்
ஸூர்ணை -194 -அவைதான்‌ – ஸ்ருதி ஸ்ம்ருதி விஹிதங்களாய்ப்‌ பலவா யிருக்கையாலே பஹு வசந ப்ரயோகம்‌ பண்ணுகிறது .
அந்த மோக்ஷ பல ஸாதநங்கள்‌ தாம்‌, வேதங்களாலும்‌ அதன்‌ வழி நூல்களான தர்ம சாஸ்திர இதிஹாஸப்‌ புராணங்களாலும்‌ சொல்லப் பெற்றவையாய்‌ அநேகங்களா யிருக்கையாலே *தர்மாந்‌’ என்று பன்மை விகுதி உபயோகிக்கப் பெற்றுள்ளது என்கை.

அப்படி இருந்துள்ளவை தாம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -195-அவையாவன – கர்ம ஜ்ஞாந பக்தி யோகங்களும்‌, அவதார ரஹஸ்ய ஞாநம்‌, புருஷோத்தம வித்யை, தேச வாஸம்‌, திருநாம ஸங்கீர்த்தநம்‌,
திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை தொடக்கமான உபாய புத்தயா செய்யுமவையும்‌
கீழ்ப் பலவாகச்‌ சொல்லப் பட்டவையாவன, “கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஐநகாதய: தஸ்மாத ஸக்தஸ் ஸததம்‌ கார்யம்‌ கர்ம ஸமாசர
அசக்தோஹ்யா சரந் கர்ம பரமாப்நோதி புருஷ:”
தஸ்மாத்‌
– ஸாதநமில்லாமலே ஆத்மாவைக்‌ காண வல்ல முக்தனுக்கோ மஹா யஜ்ஞம்‌ முதலிய வர்ணாஸ்ரமங்கடட்கு ஏற்ற தர்மத்தைச்‌ செய்ய வேண்டியதில்லை யாதலால்‌,
அசக்த:– (தர்மத்திலே) பற்றுதலில்லாமலே, கார்யம்‌ – கர்மம்‌ செய்யத் தக்கது,
(இத்யேவ) என்று நினைத்தே,
ஸததம்‌- ஆத்மாவை அடையும்‌ வரைக்கும்‌-எப்போதும்‌,
கர்ம-கர்மத்தையே,
ஸமாசர – அநுஷ்டிப்பாய்‌,
அசக்த-பற்று இல்லாமல்‌,
கர்ம ஆசரந்‌ – கர்மத்தை அநுஷ்டிக்கிற, புருஷ: புருஷன்‌,
பரம்‌ ஆப்நோதி ஹி – ஆத்மாவை அடைகின்றா னன்றோ?
ஐநகாதய:– ஜனகர்‌ முதலியோர்‌, கர்மணைவ – கர்ம யோகத்தினாலேயே, ஸம்ஸித்திம்‌ – ஆத்மாவை நேரே காணுதல்‌,
அஸ்திதா: ஹி – அடைந்தார்களன்றோ! என்று அங்கமாக இராமல்‌ தானே ஸாதநமென்று சொல்லப்பட்டுள்ள கர்ம யோகமும்‌, “ஸ்ரேயாந்‌ த்ரவ்ய மயாத்‌ யஜ்ஞாத்‌ ஜ்ஞாந யஜ்ஞு:பரந்தப, ஸர்வம்‌ கர்மாகிலம்‌ பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே”
பரந்தப-சத்ருக்களைத்‌ தவிக்கச்‌ செய்பவனே!
த்ரவ்யம்‌ ஜ்ஞாநம்‌ –என்ற இரண்டு அம்சங்களை யுடைய கர்மத்தில்‌,
த்ரவ்ய மயாத்‌ யஜ்ஞாத்‌ – த்ரவ்ய அம்ச மாயிருக்கிற யஜ்ஞ்த்தைக்‌ காட்டிலும்‌, ஜ்ஞாந யஞ்ஞ :- ஜஞாநாம்‌சமாயிருக்கிற யஜ்ஞம்‌,
ஸ்ரேயாந்‌ – சிறப்புடையது,
பார்த்த – குந்தி புத்திரனே,
ஸர்வ கர்ம – ஸகல கருமமும்‌,
அகிலம்‌ (அந்தக்‌ கர்மத்துக்குப் புறம்பா யிருக்கிற) எல்லாமும்‌, (அந்தக் கர்மத்துக்கு உபயோகமான ‘ஸகலவஸ்‌துக்களும்‌),
ஜ்ஞாநே – ஜ்ஞாந யோகத்திலே
பரி ஸமாப்யதே – முடிக்கப்படுகிறது.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருசம்‌ பவித்ரமிஹ
வித்யதே, ஜஞாநாக்நிஸ்‌ ஸர்வ கர்மாணி பஸ்மஸாத்‌ குருதே ததா”
ஜ்ஞாநஅக்நி
: -ஜ்ஞாநமாகிற அக்நியானது,
ஸர்வகர்‌மாணி -எல்லாக்‌ கர்மங்களையும்‌, பஸ்மஸாத்குருதே – பஸ்மமாகச்‌ செய்கிறது,
ஜ்ஞாநேந ஸத்ருசம்‌ – ஜ்ஞாந யோகத்தைப் போன்று,
பவித்ரம்‌ – சுத்தியானது,
இஹ – இந்த லோகத்தில்‌,
ந வித்யதே ஹி – வேறொன்று இல்லை யன்றோ!
என்று சொல்லப்பட்ட கர்மத்தால்‌ ஸாதிக்கக் கூடிய ஜ்ஞாந யோகமும்‌ “பக்த்யாத்வநந்யயாசக்ய:” பக்த்யா
அநந்யயா – வேறு இடத்திலில்லாது சிறந்த பக்தியினாலே,
ஸக்ய: அடையக்‌ கூடியவன்‌ (நான்‌) . இவை முதலானவைகளால்‌ சொல்லப்பட்ட கர்ம ஜ்ஞாநங்களை அங்கமாகக்‌ கொண்ட பக்தி யோகமும்‌ “ஐந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌
யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம்‌ புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுந’ அர்ஜாந -அர்ஜ்ஜுநனே!,
மே
– என்னுடைய,
ஐந்ம கர்மச- பிறப்பும்‌ செயலும்‌ திவ்யமானவை,
ய: எவன்‌, ஏவம்‌ – இப்படி, தத்வது: வேத்தி – உள்ளபடி அறிகிறானோ, ஸு: அவன்‌, தேஹேம்த்யகத்வா – -தேகத்தை விட்டு, புநர்ஜன்மநைதி – மீண்டும்‌ பிறப்பை
அடைய மாட்டான்‌,
மாம்‌ஏதி – என்னையே அடைகிறான்‌-என்று விரோதி கழிவது முன்னாகத்‌ தன்னை அடைதற்குச்‌ சாதநமாகக்‌ கண்ணன்‌ சொன்ன அவதார ரஹஸ்ய ஜ்ஞாநம்‌.
“ஏதத்‌ புத்த்வா புத்திமாந்‌ ஸ்யாத்‌ க்ருதக்ருத்யச்ச பாரக்‌
பாரத
– பாரத குலத்தில்‌ பிறந்த அர்ஜுந, ஏதத்‌ – இந்த புருஷோத்தம வித்யயை, புத்வா – தெரிந்து கொண்டவன்‌,
புத்திமாந்‌-நல்ல ஜ்ஞாநத்தை யுடையவனாகவும்‌,
க்ருதக்ருத்யச்‌ச -செய்ய வேண்டிய கர்மங்களைச்‌ செய்தவனாகவும்‌,
ஸ்யாத்‌ – ஆவான்‌-என்று விரும்பிய பலன்‌ தருவதாக!
(க்ருதக்ருத்ய) செய்யவேண்டியதை செய்தவனாக்கும்‌ என்‌கிற புருஷோத்தம வித்யை,
“தேசோயம்‌ ஸர்வ காம து…
அயம்தேச:
-இந்த புண்ணிய ஸ்தலம்‌, ஸர்வகாமதுக்‌-எல்‌லா விருப்பங்களையும்‌ கொடுக்கும்‌ என்கிற புண்ணிய தேசவாஸம்
ஸர்வபாபவிசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்‌” அனைத்துப்‌ பாப விமோசநம்‌ முதலாக ப்ரஹ்மத்‌தை அடைவதைப்‌ பலமாகச்‌ சொல்லி யிருக்கிற திருநாமஸங்கீர்த்தநமும்‌. “க்ருதே வாத தைலேந தீபம்‌ போ ஜ்வாலயேந்நர:, விஷ்ணவே விதிவத்‌ பக்த்யா தஸ்யபுல்‌!।. !
பலம்‌ ச்ருணு, விஹாய ஸகலம்‌ பாபம்‌ ஸஹஸ்நாத்‌:.ஸந்நிப: ஜ்யோதிஷ்மதா விமாநேந விஷ்ணுலே…..மஹீயதே”
ய:நர:-
எந்த மனிதன்‌,
விஷ்ணவே பகவாந்பொருட்டு,
பக்த்யா – பக்தியோடு,
விதிவல்‌ சாஸ்திரத்தில்‌ சொன்ன படி, க்ருதேந- நெய்யினாலாது ,
அதாவா – அல்லது, தைலேந -எண்ணையினாலாவது,
தீப தீபத்தை,
ஜ்வாலயேத்‌– எரியும்படி செய்கிறோனோ, தஸ்ய– அவனுடைய,
புண்யபலம்‌ – புண்ணியத்தின்‌ பலத்தை, ஸ்ருணு– கேள்‌,
ஸ:-அவன்‌,
ஸகலம்‌ பாபம்‌: எல்லாப்பாபங்களையும்‌,
விஹாய – விட்டு,
ஸஹஸ்ராதித்ய ஸந்நிப -ஆயிரம்‌ ஸூர்யனுக்கு ஓப்பானவனாகி, ஜ்யோதிஷ்மதா – காந்தியோடு கூடிய, விமாநேந – விமாநத்தாலே (போய்‌) விஷ்ணு லோகே – விஷ்ணு லோகத்தில்‌, மஹீயதே – கெளரவிக்கப்படுகிறான்‌.
என்ற பாப விடுதலை முன்னாக பகவானை அடைவதற்குச்‌ சாதகமாகச்‌ சொல்லபடுகிற திருவிளக்கெரிக்கை திருமாலை எடுக்கை முதலாக ஸாதந புத்தியோடு செய்யப்படும்‌
உபாயங்கள்‌
என்கை.

இனி, ஸர்வ சப்தார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -196 – ஸர்வ சப்தத்தாலே அவ்வவ ஸாதந விசேஷங்களை அநுஷ்டிக்குமிடத்தில்‌ அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச்‌ சொல்லுகிறது ,
தர்ம விசேஷேணமான ஸர்வ சப்தத்தாலே பன்மையாகச்‌ சொல்லப் பெற்ற அந்த அந்த
ஸாதந விசேஷங்களைக்‌ கைக் கொண்டு ஒழுகும்‌ இடத்தில்‌
“ஸந்த்யா ஹீநோ?சுசிர்‌ நித்யம்‌ அநர்ஹஸ் ஸர்வ கர்மஸ-“,
ஸந்த்யாஹிந:
-ஸந்த்யாவந்தநம்‌ செய்யாதவன்‌,
நித்‌யம்‌ – எப்பொழுதும்‌,
ஸர்வ கர்மஸு – எல்லாக் கர்மங்களும்‌ செய்ய,
அநர்ஹ: – தகுதியற்ற வனாகிறான்‌.-என்கிறபடியே தகுதி யற்றவனாகாமல்‌ தன்னை மேற்கொண்டொழுகுவதாலே அவற்றுக்குத் தகுதியை உண்டாக்கிக்‌ கொடுக்கும்‌ ஸந்த்யாவந்தந பஞ்ச மஹா யஜ்ஞங்கள்‌ முதலிய நித்ய கர்‌மங்களைச்‌ சொல்லுகிறது என்கை.

சொன்னதை முடிக்கிறார்‌.
ஸூர்ணை -197- ஆக, ஸ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய்‌ நித்ய நைமித்திகாதி ரூபங்களான கர்ம யோகாத் யுபாயங்களை என்றபடி.
ஆக, கீழ்ச்‌ சொன்ன எல்லாவற்றாலும்‌ “சோதநாலக்ஷணார்த்தோ தர்ம.” (விதியினால்‌ -‘விதிக்கப்படும்‌ பொருள்‌ தர்மம்‌ என்கிறது.) என்கிறபடியே விதியை விதிக்கிற ப்ரமாணத்தை உடைத்தான அர்த்தம்‌ தர்மம்‌ என்கையாலே, வேதம்‌ தர்ம சாஸ்திரங்களாகிற
ப்ரமாணங்களாலே விதிக்கப் பட்டுள்ளவையாய்‌, நித்யம்‌ நைமித்திகம்‌ முதலானவற்றை வடிவாக உடைத்தான கர்ம யோகம்‌ தொடக்கமான உபாயங்களை என்றபடி. என்கை.
நித்யம்‌-தினந்தோறும்‌ செய்யக்கூடிய திருவாராதநம்‌. நைமித்திகம்‌- பக்ஷங்களிலும்‌ மாஸங்களிலும்‌ செய்யக்கூடிய தர்மங்கள்‌-

ஸ்வரூபத்துக்கு தகுதி யல்லாததாய்‌ அதர்மமாகச்‌ சொல்ல வேண்டியவற்றைத்‌ தர்மம்‌ என்கிறதுக்கு காரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -198 – இவற்றை, தர்மம்‌ என்கிறது – ப்ரமித்த அர்ஜுநன்‌ கருத்தாலே பகவதத்யந்த பாரதந்த்ர்ய மாகிற ஆத்மாவின்‌ இயல்பிற்கு விரோதியா யிருக்கையாலே அதர்மம்‌ என்று சொல்ல வேண்டிய இவைகளை தர்மம்‌ என்று சொல்லுகிறது, தன்னுடைய தர்மமான யுத்தத்தை அதர்மம்‌ என்றும்‌, இவற்றை (ஸாதந தர்மங்களை) தர்மமென்றும்‌ (ப்ரமித்து மயங்கிய அர்ஜுநனுடைய நினைவாலே என்கை.

ஆக, முதல் பத அர்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று. பிறகு, இரண்டாம்‌ பதத்தைத்‌ தொடங்குகிறார்‌.
ஸூர்ணை -199- பரித்யஜ்ய .
இதுவும்‌, த்யாகமும்‌ ல்யப்பும் த்யஜ்ய என்றதின்‌ விகுதியும்‌ உப ஸர்க்கமுமாய்‌,
மூன்று விதமா யிருக்கையாலே, அதில்‌ த்யாகத்தை முதலில்‌ அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -200- த்யாகமாவது -உக்தோபாயங்‌களை அநுஸந்தித்து, ‘சுக்திகையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலேயும்‌, விபரீத திசாகமநம்‌ பண்‌ணுவாரைப் போலேயும்‌, அநுபாயங்களிலே உபாய புத்தி“பண்ணினோம்‌’ என்கிற புத்தி விசேஷத்தோடே த்யஜிக்கை .
இவ்விடத்திற்‌ சொல்லுகிற த்யாகமாவது – வெறும்‌ விடுகை மாத்திரமன்‌று சொல்லுகிறது. -கீழ்ச்‌ சொல்லப்பட்ட உபாயங்களை நினைத்து வெள்ளி யல்லாத கிளிஞ்சலை வெள்ளி யென்று நினைப்‌பாரைப்‌ போலேயும்‌, தன்‌ கார்யத்துக்கு உரியதான திசையிலே போக நினைத்து அதற்கு எதிரான திக்கிலே அதுவாக நினைத்துப்‌ போவாரைப் போலேயும்‌, பகவானை அடைதற்குரிய உபாயத்தை விரும்பக் கூடிய நாம்‌ உபாயமல்லாதவற்றிலே உபாய புத்தி பண்ணினோம்‌’ என்கிற அனுதாபத்தோடே விடவேண்டும்‌ என்றபடி.

இனி, (உபஸர்க்கத்தின்‌) உரிச்‌சொல்லின்‌ அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -201 – பரி என்கிற உப ஸர்க்கத்தாலே – பாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும்‌ லஜ்ஜையோடுங் கூட மறுவலிடாதபடி. விட வேணுமென்கிறது .
(பரி ஸாகல்யே என்று பரி என்ற உரிச் சொல்லுக்கு (ஸகலம்‌) எல்லாம்‌” என்ற பொருள்‌ கொள்ளலாமாயினும்‌, அது ஸர்வ சப்தத்தாலே சொல்லியதால்‌ ஸகலம்‌ என்ற அர்த்தம்‌ இங்குத்‌ தேவை யில்லாமையால்‌, மிகுதி என்ற பொருள்‌ தரும்‌ “பரி’ என்ற உரிச்‌ சொல்லாலே “ப்ரஹ்ம ஹத்யா ஸுராபாநம்‌ ஸ்தேயம்‌ குர்வங்க நாகம :” –
அதாவது, (ப்ரஹ்ம ஹத்தி,) பிராம்ணனைக்‌ கொல்லுதல்‌, மது வருந்துதல்‌, பொன் திருடுதல்‌, குரு பத்நியைத்‌ தழுவுதல்‌- என்கிறபடியே இவைகள்‌ மஹா பாதகங்களாகையால்‌ -இவைகளை விடும் போது, மீண்டும்‌ இதில்‌ , தொடர்பு வராதபடி “நாம்‌ இதைச்‌ செய்வதே’ என்ற லஜ்ஜா பயங்களோடே விடுமா போலே, ” அத பாதக பீதஸ்த்வம்‌” (இனி உபாயாந்தரங்களில்‌ மிக்க – பாதகம்‌* என்கிற அச்சமுடைய நீ இதை அறவிட்டு நாராயணனையே உபாயமாகப்‌ பற்று.) என்று தர்ம தேவதை பாதகமாகச்‌
சொன்ன உபாயாந்தரங்களை விடும் போது புத்தி பூர்வகமாக அவற்றில்‌ மூளுகைக்கு உறுப்பான ருசியும்‌, வாசனையும்‌ ஆகிறவற்றோடே கூட பகவானே உபாயம்‌ என்ற ஒன்றையே ஸாதநமாகக்‌ கொள்ளுதற்கு உரிய தன்‌ ஸ்வரூபத்துக்கு (தன்‌ இயல்புக்கு) மிகவும்‌ ‘தகாததைச்‌ செய்வதே என்கிற லஜ்ஜையோடு கூடியவனாய்‌, மீண்டும்‌ அதில்‌ தொடர்பு உண்டாகதபடி விட வேண்டுமென்று சொல்லுகிற தென்றபடி.

இதில்‌ ‘ல்யப்‌’ (த்யஜ்ய) என்ற பத அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -202- லயப்பாலே “ஸ்நாத்வா புஞ்ஜீத” என்னுமா போலே, உபாயாந்தரங்களை விட்டே பற்ற வேணும்‌ என்கிறது.
த்யஜ்ய’ என்கிற லயப்பாலே -‘த்யஜ்ய’ என்பதிலுள்ள யகர விகுதியை வடமொழி
இலக்கணப்படி. “ல்யப்‌’ என்று சொல்லுவர்‌. “புக்த்வா சாந்த்ராயணம்‌ சரேத்‌” (வஸ்திரத்திலும்‌, கல்லிலும்‌, தாமிர பத்திரத்திலும்‌, ஆலிலையிலும்‌, அரச இலையிலும்‌) புசித்திருந்தால்‌, சாந்த்ராயண விரதத்தை (அதற்கு ப்ராயசித்தமாக), அநுஷ்டிக்க வேண்டும்‌ என்னுமா போலன்றிக்கே, ‘ஸ்நாத்வா புஞ்ஜீத’ (ஸ்நாநம்‌ செய்து விட்டே புஜிக்க வேண்டும்‌) என்கிற விதி புஜிக்கமளவில்‌ நியமத்தைச்‌ சொல்லுமா போலே, ஸித்தோபாயத்தைப்‌ பற்றுமளவில்‌
விட வேண்டியதான உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞாந பக்த்யாதிகளை விட்டே பற்ற வேணும்‌ என்கிற நியமத்தைச்‌ சொல்லுகிறதென்கை.

இப்படி விட்டே பற்ற வேணுமென்கிற இதன்‌ கருத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -203- “சசால சாபஞ்ச முமோச வீர” என்கிறபடியே இவை அநுபாயங்களான மாத்ரமன்றிக்கே கால் கட்டு என்கிறது .
“யோ வஜ்ரபாதாசநிஸந்நிபாதாந்‌ த சுக்ஷுபே நாபி சசால ராஜா, ஸ ராம பாணாபிஹதோ ப்ருசார்த்த : சசால சாபஞ்ச முமோச வீர:”
ய : ராஜா
– எந்த ராஜாவான ராவணன்‌,
வஜ்ரபாத – வஜ்ராயுதத்தாலும்‌ அடி பட்டாலும்‌,
அசநிஸந்நிபாதாத்‌ – இடியே மேல்‌ விழுந்தாலும்‌,
நகுக்ஷுபே – மன க்லேசமடைய வில்லையோ,
நஅபிசசால – சரீர நடுக்கத்தையும்‌ அடைய வில்லையோ,
ஸு: – அவனே,
ராம பாண அபிஹத : ஸந்‌ – ஸ்ரீராம பாணத்தினால்‌ அடி பட்டவனாய்க்‌ கொண்டு,-ப்ருச ஆர்த்த: – மிகவும்‌ கலங்கி,
சசால – நடு நடுங்கினான்‌,
வீர:– சூரனாயிருந்தாலும்‌
(தன் கையில்‌ ஆயுதமிருந்தால்‌ ஸ்ரீராமன்‌ போக வொட்டானென்று நினைத்து உயிரினிடத்துள்ள ஆசையினாலே,)
சாபம்‌ – வில்லை,
முமோச – விடவும்‌ செய்தான்‌ என்கிற இந்த
ஸ்லோகத்தில்‌ ராவணன்‌ ஸ்ரீராம பாணங்களாலே மிகவும்‌ கலங்கி நிலை குலைந்து போகப்‌ பார்த்த அளவிலும்‌ கையில்‌ வில்லிருக்குமளவும்‌ பெருமாள்‌ போக வொட்டாமையாலே
பின்பு போட்ட வில்‌ கையிலிருந்த போது, எதிரியை வெல்லுதற்கு உரித்தாகாத மாத்ர மன்றிக்கே “இன்று போய்‌ நாளை வா” என்று பின்பு செய்த அநுமதி, பெருமாள்‌
அப்போது செய்யக்‌ காணாமையாலே போகவும்‌ ஒண்ணாதபடி. கால்‌ கட்டானமையைச்‌ சொல்லுகிறபடியே உபாயாந்தரங்களான இவற்றிலே அல்பம்‌ தொடர்பிருக்கிலும்‌ இவை பலத்துக்கு ஸாதநமாகாத மாத்திரமன்றிக்கே பலத்துக்குத்‌ தடையாய்த்‌ தலைக் கட்டுமென்றபடி.

இன்னமும்‌ இவற்றில்‌ அந்வயம்‌ (தொடர்பு) இருப்பதற்குக்‌ காரணமா மென்னுமத்தை உதாரண முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை -204 – சக்ரவர்த்தியைப்‌ போலே இழக்‌கைக்கு உறுப்பு.
முன்பே வரங்கொடுத்து வைத்து இப் போததை மறுக்க வொண்ணாதென்று ஆபாஸமான ஸத்ய தர்மத்தைப்‌ பற்றி நின்று “ராமோ விக்ரஹவாந் தர்ம: ” (தர்மமே திருமேனியாக வடிவெடுத்த ராமன்‌) என்கிற பெருமாளோடே கூடி வாழு இருந்த மேலாம்‌ பயனை இழந்த தசரத சக்ரவர்த்தியைப்‌ போலே தாழ்ந்ததான சேதநனுடைய முயற்சியாலே உண்டாவதான உபாயாந்தரங்களில்‌ அந்வயித்து நிற்கிறதாகிறது, “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌” – க்ருஷ்ணனையே ஸநாதமான தர்மம்‌ என்று சொல்லுகிறார்கள்‌- என்கிற பகவத் விஷயத்தோடே கூடி வாழுகை யாகிற பெரும் பயனை இழக்கைக்கு உறுப்பாய்‌ விடுமென்கை .

இனி, இங்குச்‌ சொன்ன ஸர்வ தர்மங்‌களையும்‌ விடுகையாகிற இதன்‌ கருத்தறியாதார்‌ சொல்லும்‌ குறைபாட்டைத்‌ தள்ளுகைக்காக அந்தப்‌ பக்ஷத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -205- ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்று சொல்லுகையாலே, சிலர்‌ “அதர்மங்கள்‌ புகுரும்‌’ என்கிறார்கள்‌
விடத் தக்க தர்மந்தான்‌, “இதம்‌ குரு இதம்‌ மாகாரீஷீ:” என்று செய்யச்‌ சொல்லுவதும்‌ விடச்‌ சொல்லுவது மாயிருக்கையாலே ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு’ என்று சொல்லுகையாலே தக்கதை செய்யச்‌ சொல்வதோடு, தகாததையும்‌ ஒரு சேரத் தள்ளுமளவில்‌, மூடின கதவைத்‌
திறந்தால்‌ நாய்‌ முதலானவை புகுமா போலே அதர்மங்களான தகாத செயல்களும்‌ புகும்‌’ என்று, சிலர்‌ சொன்னார்கள்‌ என்கை.

அந்தப்‌ பக்ஷத்தைத்‌ தள்ளுகிறார்‌.
ஸூர்ணை -206- அது கூடாது ; ‘அதர்மங்‌களைச்‌ செய்‌’ என்று சொல்லாமையாலே .
ஸர்வ தர்மங்களையும்‌ விடச்‌ சொன்ன இத்தால்‌ அதர்மங்கள்‌ புகும்‌ என்கிற இதுஉண்டாகாது ; ஏனெனில்‌? இங்கு, தர்மங்களை விடச்‌ சொன்ன மாத்திரம்‌ தவிர அதர்மங்களைச்‌ செய்யென்று சொல்லாமையாலே என்கை.

‘அதர்மத்தை தவிர்தலையும்‌ தர்ம சப்தம்‌ காட்டுமாகையாலே, அதை விடச்‌ சொன்னால்‌ அதர்மத்தைச்‌ செய்யென்பது குறிப்புப்‌ பொருளாகாதோ? என்கிற எதிர்வாதியின்‌ கருத்தை அநுவதிக்கிறார்‌. ஸூர்ணை -207.- ‘தன்னடையே சொல்லிற்றாகாதோ?’ என்னில்‌ ,
இதற்கு விடை அளிக்கிறார்‌.
ஸூர்ணை -208 – ஆகாது, தர்ம சப்தம்‌ அதர்மநி வ்ருத்தியைக்‌ காட்டாமையாலே
.
தர்மங்களை விடச்‌ சொன்ன இத்தால்‌ ‘அதர்மங்களைச்‌ செய்‌’ யென்னுமிடம்‌ தன்னடையே சொல்லிற்றாகாது; தர்ம சப்தம்‌ அதர்மத்தை செய்யாதே என்ற அங்கங்களோடு கூடிய முதன்மையா யிருந்துள்ள செய்ய வேண்டிய தர்மத்தைக்‌ காட்டுமதொழிய, பொதுவில்‌ அதர்மத்தை தவிர்தலை மாத்திரத்தைக்‌ காட்டாமையாலே என்கை.

தர்மம்‌ என்ற சொல்‌ அதர்மத்தை விடுகை என்பதில்‌ முக்கியப்‌ பொருள்‌ இல்லையே யாகிலும்‌ ஸர்வ சப்தமான இது தன்னையுங்‌ காட்டாதோ’ என்ன, அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -209 – காட்டினாலும்‌, அத்தை ஒழிந்தவற்றைச்‌ சொல்லிற்றாமித்தனை.
அப்படிக்‌ காட்டிற்றாகிலும்‌ அது இவ் விடத்தில்‌ சொன்னவன்‌ கருத்து அது அல்லாமையாலே, அதைத்‌ தவிர்த்த விதிரபமான தர்மங்களானவற்றைச்‌ சொல்லிற்றாமித்தனை என்கை.

இப்படி ஒதுக்குகிறது எது கொண்டு? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -210- தன்னையும்‌, ஈஸ்வரனையும்‌, பலத்‌தையும்‌ பார்த்தால்‌ அவை புகுர வழி யில்லை.
அதர்மத்தைச்‌ செய்தல்‌ சேஷியான எம்பெருமானுக்கு மிகவும்‌ வெறுப்புக்குரிய தாகையாலே, அவன்‌ விருப்பத்துக்குரியனாமது ஒழிய,அவன்‌ இஷ்டத்துக்கு சேராத படியான ஸ்வரூபத்தை யுடைய சேஷ பூதனாகிற தன்னைப்‌ பார்த்தாலும்‌, அவனை
ரக்ஷகனாகக்‌ கொள்ளும் போது வேறு துணை கூட்டுப்‌ பொறாதவனாகையாலே இத் தலையில்‌ தன் முயற்சியை விட்டிருக்கும்‌ நிலையை ஒழிய, செயல் படுவதை ஒன்றையும்‌ பொறாத உபாய பூதனான ஈஸ்வரனைப் பார்த்தாலும்‌, இவனுடைய முயற்சிக்குப் பலம்‌ அவன்‌ முக மலர்த்தியாகையாலே இத்தகைய பலனைப் பார்த்தாலும்‌, இம் மூன்றுக்கும்‌
முரண்பட்டவைகளான அவை புகுவதற்கு வழியில்லை என்கை.
ஆகையால்‌, தர்ம சப்தம்‌ அதர்மத்தை விடுகையைக்‌ காட்டிற்றாகிலும்‌, அத்தை தவிர்ந்த வேறு ஸாதநங்களை சொல்லிற்றாகக்‌ கொள்ள வேணும்‌ என்று கருத்து. ஆக, இரண்டாம்‌ பத அர்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

பிறகு, மூன்றாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -211- மாம்‌ – ஸர்வ ரஷகனாய்‌, உனக்குக் கையாளாய்‌, உன்னிசைவு பார்த்து, உன்‌ தோஷத்தை போக்யமாகக்‌ கொண்டு, உனக்குப்‌ புகலாய்‌, நீர் சுடுமா போலே சேர்ப்பாரே பிரிக்கும்‌ போதும்‌ விட மாட்டாதே ரஷிக்கிற என்னை,
‘மாம்‌’ என்ற பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. ஸர்வ ரக்ஷகனா யென்று தொடங்கி அதாவது, நம்மைக்‌ காக்குமோ? காவானோ? என்று ஸந்தேஹிக்க வேண்டாதபடி, அனைவருடைய காப்பிலும்‌ காப்பது என்ற விரதத்தை யுடையவனாய்‌, தன்‌ பெருமையையும்‌ நம்‌ சிறுமையையும்‌ பார்த்து நம்மோடு கூட்டற்றிருக்குமோ? என்று என்ன வேண்டாதபடி “ஸேநயோ ருபயோர்‌ மத்யே ரதம்‌ ஸ்தாபய” (இரு சைந்யங்களின்‌ நடுவில்‌ ரதத்தை நிறுத்து)
என்று ஏவிக்‌ கொள்ளலாம்படி உனக்குக்‌ கையாளாய்‌, உன்னைக்‌ காப்பதில்‌ உண்டான அசையாலே“ரஷ்யாபேக்ஷாம்‌ ப்ரதீஷதே’ ரக்ஷிக்க வேண்டும்‌ என்ற ப்ரார்த்தனையை இறைவன்‌ எதிர்பார்க்கிறான்‌) என்கிறபடியே காக்கப்படுகிற உன்‌ இசைவு பார்த்து, நம்‌ குற்றங்கண்டு கை விடுமோ? என்று அஞ்ச வேண்டாதபடி. தகாத இடத்தில்‌ ஸ்நேஹ காருண்யங்கள்‌ காட்டியும்‌, தர்மம்‌ இன்னது, அதர்மம்‌ இன்னது என்ற விஷயத்தில்‌ கலங்குகிற உன்‌ குற்றத்தைக்‌ குணமாகக்‌ கொண்டு, தஞ்சமற்றவர்களுக்குத்‌ தான்‌ தஞ்சமாகையாலே நீயும்‌ பிறரும்‌ உனக்குத்‌ தஞ்சமில்லாத நிலையில்‌ ஒதுங்கலாம்படியான புகலாய்‌, குளிர்ச்சியே இயல்பான நீர்‌, சூடேற்றிக்‌ கொள்ளுமா போலே அபராதங்‌களைப் பொறுப்பித்துச்‌ சேர்ப்பிக்கும்‌ புருஷகார பூதரே “தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌” என்கிறபடியே -குற்றங்காட்டி அகற்றும்‌ போதும்‌ விட மாட்டாதவனாய்‌ “என்னடியாரது செய்யார்‌” என்று எதிரிட்டு ஒருநிலை நின்று ரஷிக்கும்‌ என்னை என்றபடி…

‘என்னை’ என்று விபாவதாரக்‌ கண்ணனாகிய தன்னைக்‌ காட்டுகையாலே வேறுபடுத்த வேண்டியவற்றைக்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -212-இத்தால்‌, பர வ்யூஹங்களையும்‌ தேவதாந்தர்யாமித்வத்தையும்‌ தவிர்க்கிறது.
என்னை” என்று அவதரித்துக்‌ கண்‌ காண நிற்கிற தன்னைத்‌ தஞ்சமென்று பற்றத்‌
தக்கவனாகச்‌ சொன்ன இத்தாலே, வேறு தேசத்திலிருப்‌பதாலே காணவும்‌ கிட்டவும்‌ இயலாதபடி இருக்கிற பர வாஸுதேவனையும்‌ பாற்கடல் வாஸுதேவனையும்‌, சிறந்ததான திருமேனி யன்றிக்கே உபாஸகரான வேற்றுபாய நிஷ்டர்க்கு இலக்காயிருக்கிற அக்நி இந்திரன்‌ முதலான தேவதாந்தர்யா மித்வத்தையும்‌ நீக்குகிறது – என்கை.

தர்மங்களை எல்லாம்‌ விட்டுத்‌ தன்னைப்‌ பற்றச்‌ சொல்லுகையாலே ஏற்பட்டதொரு
அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -213- தா்ம ஸம்ஸ்தாபநம்‌ பண்ணப்‌ பிறந்தவன்‌ தானே ‘ ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று என்கையாலே ஸாக்ஷாத்‌ தர்மம்‌ தானே யென்கிறது.
‘தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்‌பவாமி யுகே யுகே
” என்கிறபடியே தன்னை அடைதற்குரித்‌தான தர்மத்தை நிலை நிறுத்‌துவதற்குப்‌ பிறந்தவன் தானே
“ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” என்று மோஷத்துக்கு ஸாதநமாக சாஸ்திரங்களில்‌ சொல்லப் பெற்ற ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று என்று சொல்லுகையாலே, அவைதான்‌ நேரே பயனைத் தரும்‌ தருமங்களல்ல, நிலைநாட்டுதற்‌குரிய ஸாக்ஷாத்‌ தர்மம்‌ “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌”(ஸநாதந தர்மம்‌ கிருஷ்ணனே) என்கிறபடியே பழைய தர்மமான தானே என்னுமிடம்‌ சொல்லுகிறது.

இத்தால்‌ என்‌? சொல்கிறது என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -214 – இத்தால்‌, விட்ட ஸாதநங்களில்‌ ஏற்றம்‌ சொல்லுகிறது.
இப்படிச்‌ சொன்ன இத்தால்‌, கீழ் விட்ட ஸாதநங்களிற் காட்டில்‌ இந்த ஸாதநத்துக்குண்‌டான ஏற்றம்‌ சொல்லுகிறது என்கை.
அதுதான்‌ எது ? என்ன, அருளிச்‌செய்கிறார்‌.
ஸூர்ணை -215- அதாவது – ஸித்தமாய்‌, பரமசேதநமாய்‌, ஸர்வ சக்தியாய்‌, நிரபாயமாய்‌, ப்ராப்தமாய்‌, ஸஹாயாந்தர நிரபேக்ஷமாயிருக்கை.
கீழ்விட்ட ஸாதநங்களிற்‌ காட்டில்‌ இதற்கு ஏற்றமாவது – சேதநனுடைய செயலாலே
(ஸ்வரூப ஸித்தியாம்படி,) தானுளதாம்படி. இருக்கை யன்றிக்கே பழமையான தர்ம மாகையாலே ஸித்தமாய்‌, “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்‌”(எவனொருவன்‌ எல்லாப்‌ பொருளையும்‌ அவற்‌றின்‌ ஸ்வபாவங்களையும்‌ அறிகிறானோ) என்று சொல்லுகிறபடி ஸர்வஜ்ஞ விஷயமாகையாலே பரபீசதநமாய்‌,”பரா அஸ்ய சக்திர்‌ விவிதைவஸ்ரூயதே” (அந்த பரமாத்மாவுக்கு பலபடிப்பட்டதும்‌ மேலானதுமான சக்தியும்‌ உளதென்று கேட்கப்பபடுகிறது) என்கிறபடியே ஸர்வ “சக்தியாய்‌, சேதநனால்‌ செய்யப்படுமதாய்‌ நடுவே அபாயங்கள்‌ புகுவதற்கு . அவகாச முண்டாம்படி யிருக்கை யன்றிக்கே, பழையதாக நிலை நின்ற பொருளாயிருக்கையாலே அபாயமற்றதாய்‌ பரதந்திரனான இந்த சேதநனுடைய இயல்பான ஸ்வரூபத்துக்குத்‌ தகுதி யற்றதாய்‌ இராதே தகுதி யுடைத்தானதாய்‌, கீழ்ச்‌ சொன்ன பரம சேதநத்வம்‌ முதலானவைகளாலே வேறு துணையை விரும்பாமை யாகிற
கூட்டு வேண்டாதபடி. இருக்கை யென்றபடி

இந்த வேறு துணை வேண்டாமையைக்‌ காரணத்தோடு நிலைநிறுத்துகிறார்‌.
ஸூர்ணை -216- மற்றை உபாயங்கள்‌ ஸாத்யங்களாகையாலே, ஸ்வரூப ஸித்தியில்‌ சேதநனை அபேஷித்திருக்கும்‌; அசேதநங்களுமாய, அசக்தங்களுமா யிருக்கையாலே கார்ய ஸித்தியில்‌ ஈஸ்வரனை அபேக்ஷித்திருக்கும்‌ . இந்த உபாயம்‌ அவற்றுக்கு எதிர்‌த்தட்டா யிருக்கையாலே, இதர நிரபேக்ஷமாயிருக்கும்‌ .
இதைத் தவிர்த்த உபாயங்கள்‌ சேதநனுடைய செயல் மூலம்‌ உருவாக்கப்படுமவை யாகையாலே தானுளதாம்‌ படியான ஸ்வரூப ஸித்தியில்‌ முயன்று செய்பவனான சேதநனை விரும்பி இருக்கும்‌; இவனுக்குச்‌ செய்ய வேண்டுமவை அறிகைக்கும்‌ அவை தன்னைச்‌ செய்து தலைக்கட்டுகைக்கும்‌ தகுதி யில்லாத (அசேதநங்களுமாய்‌)
அறிவில்லாதவைகளாய்‌ (அசக்தங்களுமாய்‌) ஆற்றலில்லாதவையாய்‌ இருக்கையாலே, சேதநனுடைய இஷ்டம்‌ தருகைக்கும்‌, அநிஷ்டம்‌ தவிருகைக்குமான கார்யத்தினுடைய ஸித்தியில்‌ “பலமத உபபத்தே:” (பலத்தை யளிப்பவன்‌ ஈஸ்வரனே) என்ற ப்ரஹ்ம ஸூத்திரப்படி பலத்தை அளிப்பதற்கு உபயோகியான ஸர்வ சக்தி முதலான தகுதிகளை யுடையனான ஈஸ்வரனை எதிர்பார்த்திருக்கும்‌; இந்த உபாயம்‌ ஏற்கனவே பூர்ணமாயிருப்பதாய்‌, அனைத்து சக்திகளாலும்‌ நிறைவுற்றதாய்‌, உபாயாந்தரங்களுக்கு எதிர்த் தட்டாயிருக்கையாலே வேறொன்றைத்‌ துணை கோலாதிருக்கும்‌ என்கை.

இனி, இப்பதத்திலே தஞ்சமென்று பற்றுகைக்கு அநுகூலிப்பதான குணச்‌ சிறப்புக்களெல்லாம்‌ ப்ரகாசிக்கிறபடியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -217 – இதிலே, வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸெளசீல்ய ஸெளலப்யங்களாகிற குண விசேஷங்கள்‌ நேராக பரகாசிக்கிறது .
இதிலே என்றது, “மாம்‌” என்ற பதத்திலே என்றபடி, அதாவது – அதர்மம்‌ என்ற நினைவாலே தர்மத்தினின்றும்‌ விலகியவனான அர்ஜுுநனுக்குக்‌ குற்றம்‌ பாராதே தேவையான அர்த்தங்களனைத்தும்‌ அருளிச்‌ செய்கையாலே, வாத்ஸல்யம்‌ என்ற குணம்‌ ப்ரகாசிக்கிறது; தன்னுடைய பரத்வத்தைப்‌ பலகாலும்‌ அருளிச்‌ செய்த அளவன்றிக்கே அர்ஜுநன்‌ ப்ரத்யக்ஷிக்கும்படி விஸ்வரூபத்‌தால்‌ தன்னை நேரே காணும்படிச்‌ செய்கையாலே, ஸ்வாமித்‌வம்‌ ப்ரகாசிக்கிறது; “ஹே க்ருஷ்ண ஹே யாதவ” என்று அழைத்ததாக அர்ஜுநன்‌ தானே சொல்லும்படி, இவனோடே கலந்து பரிமாறுகையாலே, ஸெளசீல்யம்‌ ப்ரகாசிக்கிறது; ஸுத்த ஸத்வமான அப்ராக்ருதமான திருமேனியைக்‌ கண்ணுக்கிலக்காம்படி செய்கையாலே, ஸெளலப்யம்‌ ப்ரகாசிக்கிறது என்கை.
குண விசேஷங்கள்‌” என்றது, தஞ்சம்‌ என்று பற்றுகைக்குத் தேவையான குணங்களென்று தோற்றுகைக்காக.-நேராக ப்ரகாசிக்கிறது என்றது – தெளிவாகப் ப்ரகாசிக்கிறது – என்றபடி.

இவை அனைத்திலும்‌ வைத்துக்‌கொண்டு மிகவும்‌ விரும்புகைக்குரித்தானது ஸெளலப்யமாகையாலே, அவதார மூலமான ஸெளலப்யத் தளவன்றிக்கே
தன்னைத்‌ தாழ விட்டுக்‌ கொண்டு ஸாரதியாய் நிற்கிற நிலையிலே தோற்றுகிற ஸெளலப்யத்தின்‌ மிகுதியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -218- கையும்‌ உழவுகோலும்‌, பிடித்த சிறுவாய்க் கயிறும்‌, ஸேநா தூளிதுரஸரிதமான திருக்‌குழலும்‌, தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய்‌ நிற்‌கிற ஸாரத்ய வேஷத்தை மாம்‌ என்று காட்டுகிறான்‌.
குதிரைகளைத்‌ தூண்டுகைக்குத்‌ திருக் கையிலே தரித்த உழவுகோலும்‌, குதிரைகளை இடப் பக்கம்‌ வலப் பக்கம்‌ திருப்புகைக்காகவும்‌ நிறுத்த வேண்டுமிடத்திலே தாங்கி நிறுத்துகைக்காவும்‌ பிடித்த சிறுவாய்க்‌ கயிறும்‌, திரு முடியில்‌ எதுவும்‌ மறைக்காமல்‌ – அணியாமல்‌ நிற்கையாலே ஸேநாதூளியாலே புழுதி அளைந்த திருக்குழலும்‌ “தேர்‌ கடவிய பெருமான்‌ கனைகழல்‌” என்கிறபடியே சாத்தின சிறுசதங்கையும்‌ தானுமாகத்‌ தேருக்குக் கீழே தொங்க விட்ட திருவடிகளுமாய்‌ நிற்கிற ஸாரத்ய வேஷத்தை ‘மாம்‌’ (என்னை) என்று காட்டுகிறான்‌ என்கிறார்‌.

பிறகு, நான்காம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -219- ஏகம்‌.
ஏகம்‌ – என்னையே என்று இப்பதத்தின்‌அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -220- இந்த ஏக சப்தம்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்ததைக்‌ காட்டுகிறது-
இந்த உபாய விசேஷத்தைச்‌ சொல்லும்‌ இடங்களிலே பல விடங்களிலும்‌ தேற்றேவகாரமாக உபயோகிக்கப் படுகையாலே, உகாரம்‌ போலே இந்த’ஏக’ சப்தமும்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே தேற்றேவகாரமாகிற அர்த்தத்தைக்‌ காட்டுகிறது. என்கை. அவதாரணம்‌ – தேற்றேவகாரம்‌,

இந்த உபாயத்தை நிர்ணயம்‌ பண்‌ணின பிறகு அவதாரண ப்ரயோகம்‌ – ஏவகார ப்ரயோகம்‌ பண்ணிய வசனங்கள்‌ பலவற்றையும்‌ இதுக்கு உதாரணமாக அருளிச்‌ செய்கிறார்‌, என்கை.
ஸூர்ணை -221 – “மாமேவயே ப்ரபத்யந்தே” “தமேவசாத்யம்‌” “த்வமேவோபாய பூதோ மே பவ” “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” என்றுஞ்‌ சொல்லுகிறபடியே.
அதாவது, “மாமேவ யே ப்ரபத்யந்தே”(என்னையே யாவர்‌ சிலர்‌ ப்ரபத்தி செய்கிறார்களோ.) என்றும்‌ “தமேவ சாத்யம்‌ புருஷம்‌ ப்ரபத்யே” முழு முதல்வனான அந்தப்‌ புருஷனையே ப்ரபத்தி செய்கிறேன்‌) என்றும்‌, “த்வமேவோபாய பூதோ மே பவ” (நீயே எனக்கு
உபாயமாக வேணும்‌) என்றும்‌, “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” (எனக்கு உபாயந் தருமிடத்தில்‌ உன்‌ திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்‌)என்றும்‌ சொல்லுகிற இவ் விடங்களில்‌ “மாமேவ” “தமேவ” “த்வமேவ””நின்‌ பாதமே” என்று பற்றும்‌ பொருளை நிர்ணயித்த பிறகு தேற்றேவகாரமாகச் சொல்லப்பட்டதல்லவா என்கிறார்‌

இப்படி ஏவகாரத்தை யுடைய இந்த’ஏக’ சப்தத்தால்‌ தவிர்க்கப்பட வேண்டியது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -222- இத்தால்‌, வ்ரஜ என்கிற ஸ்வீகாரத்தில்‌ உபாய பாவத்தைத்‌ தவிர்க்கிறது. உபாயாந்தரங்கள்‌ தவிர்க்கப்‌படுமளவில்‌ ஏற்கனவே ‘ஸர்வ தர்மான்‌ பரித்யஜ்ய’ என்ற இடத்திலே உபாயாந்தரங்கள்‌ தவிர்க்கத்‌ தக்கவை யென்று ஏற்பட்டு விட்டபடியால்‌ அதை மறுபடியும்‌ கூறுதல்‌, “கூறியவை கூறல்‌’ என்ற குற்றம்‌ வருகையாலும்‌, இதர
தெய்வங்களினுடைய ஸம்பந்தத்தைத தவிர்க்கப்படுமளவில்‌, அது மாம்‌” என்ற பதத்தில்‌ எம்‌பெருமானுடைய தனித் தன்மையை “என்னை என்று காட்டி விட்டபடியால்‌, இந்த ‘ஏகம்‌’ என்ற தேற்றேவகாரத்தால்‌ வ்ரஜ என்று மேல்‌ சொல்‌லுகிற ஸ்வகாரத்தில்‌ தான்‌ பற்றக் கூடிய பற்றையே உபாயம்‌’ என்று சொல்லுவதைக்‌ கழிக்கிறது என்றபடி.

பற்றின பிறகே உபாயம்‌ கார்யம்‌ செய்கையாலே பலத்துக்கு இது அவஸ்யம்‌ வேண்டி யிருக்க, இதில்‌ உபாயம்‌ என்ற நினைவைக்‌ கழிக்கிறபடி தான்‌ எங்ஙனே”? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -223–ஸ்வீகாரந்தானும்‌ அவனாலே வந்‌தது.
உபாயமாகப்‌ பற்றின பிறகு இவனுக்கு வேண்டாததைத்‌ தவிர்க்கையும்‌ வேண்டியதைக்‌ கொடுக்கையும்‌ செய்கையாகிற இது எம்பெருமானாலே ஆனாற் போலே, இதற்கு முன்‌ நிகழ்வதான பற்றுமதுதானும்‌ எம்பெருமானாலே உண்டானது என்கை. இத்தால்‌,
பற்றக்கூடிய உபாயமான பகவானாலே கார்யஞ்‌ செய்யப்படுவது தவிர நேரே “வ்ரஜ என்ற ஸ்வீகாரத்திற்கு உபாயத்வம்‌ இல்லை என்கை.

பற்றுகை அவனாலே வந்தது என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -224- ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம்‌
(கரண களேபர விதுரனாய்‌) கை கால்‌ முதலிய உறுப்புகளோடு சேர்ந்த உடம்பு
இல்லாதவனாய்‌, இங்கு நுகரும்‌ இன்பமோ, மோக்ஷ இன்பமோ இல்லாதவனாய்‌, அறிவற்ற ஐடப்பொருளுக்கும்‌ தனக்கும்‌ வேற்றுமை யின்றிக்‌ கிடக்கிற நிலையிலே, எம்பெருமான்‌ இவனுக்கு உடல்‌ இந்த்ரியங்களோடு கூடியவனாய்‌ அறிவு ப்ரகாசம்‌ அடைவதற்கு உரியனாம்படி படைத்து எதிர்‌ சூழல்‌ புக்கு’ என்கிறபடியே இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைச்‌ செய்து, அவதரித்த இடங்களிலே தன்னைஅடைகைக்கு ருசியையும்‌ விஸ்வாஸமும்‌ விளைவிக்குமதான தன்‌ குணங்கள்‌ செயல்களைக்‌ காட்டி, இவ்வழியாலே அந்த எம்பெருமான்‌ செய்த செயலாலே பலித்தது இது என்கை,

இவ் வர்த்தத்‌ துக்கு மேற்கோள்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -225-“அதுவும்‌ அவனது இன்னருளே”.
“உணர்வில்‌ உம்பரொருவனை அவன தருளாலுறற்‌ பொருட்டுஎன்னுணர்வினுள்ளே யிருத்தினேன்‌
” என்று ஞானம்‌ மிக்கிருக்கக் கடவரான நித்ய ஸுரிகளுடைய நிலை பேறு முதலானவைகளுக்குக்‌ கடவனான ஓப்பிலான அவனருளாலே அவனை அடைகைக்காக, என்னுடைய விருப்பத்தோடு கூடிய ஜ்ஞாநத்துக்குள்ளே இருத்தினேன்‌ என்று தாம்‌ அவனைத்‌ தஞ்சமென்று பற்றினதைச்‌ சொன்ன பிறகு, “அதுவும்‌ அவனது இன்னருளே” என்று அந்தப்‌ பற்றுகை தானும்‌ அவனுடைய காரணமில்லாமல்‌ உண்டான கருணையாலே உண்டானதென்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே, அந்தப்‌ பற்றுதல்‌ தானும்‌ எம்பெருமானுடைய முயற்சியின்‌ பலமென்றே கொள்ளவேணும்‌ என்கை.

இப்படியாகையால்‌, இந்த ஸ்வீகாரத்தில்‌ (பற்றுகையில்‌) உபாயத்வ புத்தியை நீக்கி நினைக்கக்‌ கடவன்‌ என்கிறார்‌.
ஸூர்ணை -226- இத்தை ஒழியவும்‌ தானே கார்யஞ் செய்யும்‌ என்று நினைக்கக் கடவன்‌
இந்தப்‌ பற்றுதலுக்கும்‌ தானே க்ருஷி(முயற்சி) பண்ணுவான்‌ ஒருவனாகையாலே, இதுக்காகவன்று அவன்‌ நமக்குக்‌ கார்யஞ்‌ செய்கிறது; இத்தை ஒழியவும்‌ இவ்வாத்மோஜ்ஜீவநம்‌ செய்பவன்‌ தானே நம்முடைய இஷ்டம்‌ கொடுக்கை, அநிஷ்டம்‌ (இஷ்டமில்லாததை) தவிர்‌க்கை யாகிய கார்யம்‌ செய்யும்‌ என்று நினைக்கக் கடவன்‌
என்கை.

இப்படி நினைக்க வேண்டுகிறது என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -227- அல்லாத போது உபாய நைரபேக்ஷ்யம்‌ ஜீவியாது.
இத்தை ஒழியவும்‌ கார்யஞ்செய்‌யும்‌’ என்று நினையாதே, “இதுவும்‌ வேணும்‌ அவன்‌ கார்யஞ்‌செய்கைக்கு என்று நினைக்குமளவில்‌ உபாய பூதனான பகவானுடைய வேற்றுத்‌ துணை வேண்டாமையாகிய தன்மை நிலை பெறாது என்கை.

ஆனால்‌, இந்தப்‌ பற்று தான்‌ ஏதாவதென்ன? அருளிச் செய்கிறார்‌-
ஸூர்ணை 228 . இதுஸர்வ முக்தி ப்ரஸங்க பரிஹாரார்த்தம்‌, புத்தியமாதாநார்த்தம்‌, சைதந்ய கார்யம்‌, ராக ப்ராப்தம்‌, ஸ்வரூயநிஷ்டம்‌, அப்ரதிஷேதத் யோதகம்‌.
இந்தப்‌ பற்றுதல்‌, இந்த சேதநனிடத்தில்‌ ஒன்றுமின்றிக்கே இருக்க, எம்பெருமான்‌ தானே இவனை உஜ்ஜீவிப்பிக்குமளவில்‌, “பின்னை எல்லாரும்‌ முக்தராக வேண்டாவோ”? என்கிற ஸர்வ முக்தி ப்ரஸங்கத்தைத்‌ தவிர்க்கைக்கு உறுப்பு;இதுதான்‌, ‘நெடுங்காலம்‌ நம்மை ரக்ஷியாதவன்‌, இன்று நம்மை ரக்ஷிக்கு மென்று இருக்கிறது நாம்‌ என் கொண்டு? என்று இவன்‌ தளும்பாமல்‌ புத்தி ஸமாதாநம்‌ பிறந்திருக்கைக்கு உறுப்பு; இவன் தான்‌ அசேதநமன்றிக்கே சேதநமாகையாலே அவனே உபாயம்‌’ என்கிற திட நம்பிக்கைக்‌ கொள்ளுதல்‌ இவன்‌ அறிவுடைமையின்‌ கார்யம்‌; சாஸ்திரம்‌ முதலானவற்றின்‌ விதி யின்றிக்கே எம்பெருமானையே சரணமாகப்‌ பற்றுவதிலுள்ள ருசியை அறிந்தவனான இவனுடைய இச்சையால்‌ வந்த இது, ஸ்வரூபத்திற்கு மாறுபட்ட தன்றிக்கே அவன்‌ காப்பிலேயே ஓதுங்குகையாகிய ஸ்வரூபத்திலே நிற்குமது; கீழ்‌ அநாதி காலமாக அவன்‌ தன்னைக்‌ காக்குமதை தன் முயற்சியால்‌ விலக்கிக்‌ கொண்டு வந்த இவன்‌, : அதைத்‌ தவிர்த்தமையைக்‌ காட்டும்‌ என்கை.

இனி, ‘மாம்‌’ என்கிற பதத்துக்கு முன்பும்‌, இங்கும்‌ ஈஸ்வரனுடைய செயல்களை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -229- கீழ்‌ தானும்‌ பிறருமான நிலையைக்‌ குலைத்தான்‌; இங்குத் தானும்‌ இவனுமான நிலையைக்‌ குலைக்கிறான்‌
அதாவது – ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்ற இடத்தில்‌ ஸகல உபாயங்களையும்‌ விடச்‌ சொல்லுகையாலே, பலம்‌ தருவானான தானும்‌ கர்ம ஜ்ஞாந பக்தியாகிற உபாயாந்தரங்களுமாய்க்‌ கூடி நிற்கிற நிலையைக்‌ குலைத்தான்‌. ‘ஏகம்‌’ என்கிற இடத்தில்‌ ஸ்வீகாரத்தில்‌ உபாய பாவத்தைக்‌ கழிக்கையாலே, உபாயமாகிற தானும்‌, தான்‌ பற்றிய பற்றில்‌ உபாய புத்தி பண்ணிய இவனுமான நிலையைக் குலைக்கிறான்‌ என்பது. அஃதாவது : “நாம்‌ எம்பெருமானை உபாயமாகப்‌ பற்றின தாலன்றோ அவன்‌ நம்மை ரக்ஷிக்கப்‌ .போகின்றான்‌’ என்று தான்‌ ஈஸ்வரனை உபாயமாகப்‌ பற்றிய பற்றில்‌ உபாயத்வ புத்தியைக்‌ கொள்ளுகிற இந்த சேதநன்‌ நிலையைக்‌ குலைக்கிறான்‌ என்கை. –உபாயாந்தரங்களைப் பிறர்‌ என்றது, “உன்னாலல்‌லால்‌ யாவராலும்‌?” என்றன்றோ ஆழ்வார்‌ அருளியது.-ஸ்ரீகீதையில்‌ சரம ஸ்லோகத்துக்கு முன்பு அருளிச்‌ செய்துள்ள கர்ம யோகம்‌ முதலிய உபாயங்களை எல்லாம்‌ விளக்கி அங்கு ரக்ஷகனாகச்‌ சொன்ன தன்னையே இங்கு
உபாயமாகச்‌ சொன்னதால்‌, கர்ம யோகம்‌ முதலானவை உபாயமாம்‌ போது தான்‌ ரக்ஷகனாக வேண்டுமென்ற நிர்பந்தம்‌ உள்ளது. இங்கு, தானே உபாயமாம்‌ போது வேறொரு உபாயம்‌ வேண்டியதில்லை என்பது பெறப்படுதல்‌ காண்க.

இனி, உபாய புத்தியாக இவன்‌ செய்யும்‌ (ஸ்வீகாரத்தை) பற்றுதலினுடைய குறைபாட்டை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை – 230- அவனை இவன்‌ பற்றும்‌ பற்று அஹங்கார கர்ப்பம்‌, அவத்யகரம்‌ –
காரணமில்லாத இயல்பான பந்தத்தாலே ரக்ஷகனான அவனை, அவனால்‌ காக்கப்படுகிற இவன்‌, தன்‌ காப்புக்கு உறுப்பாகப்‌ பற்றுகிற பற்று, தான்‌ கர்த்தா என்ற அஹங்காரத்தோடு கூடியதாய்‌, பிதாவினிடத்திலே நான்‌ என்னை ரஷித்துக் கொள்கிறேன்‌’ என்று
கையெழுத்திடும்படி புத்திரன்‌ கையெழுத்து வாங்குமா போலே பழிப்புக் கிடமாயிருக்குமென்கை.

ஆனால்‌, ரக்ஷகமாவது தான்‌ எது? என்ன”, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -231-அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்‌
இவ் வாத்மாவினுடைய ரக்ஷணத்துக்குக்‌ கடவனான எம்பெருமான்‌, ‘ இவனை நாம்‌ ரக்ஷிக்கக்‌ கடவோம்‌’ என்று அபிமாநித்துக்‌ கொள்ளுகை யாகிற ஸ்வீகாரமே – பற்றே இவனுக்கு ரக்ஷகமாகும்‌ – என்கை.

‘சேதநன்‌ முயற்சியில்‌ ஒன்றையும்‌ இவ் வுபாயம்‌ ஸஹியாது’ என்னுமத்தைத்‌ தெளிவிக்கைக்காக, உபாயாந்தரங்களுக்கும்‌ இவ் வுபாயத்துக்கும்‌ உண்டான வேற்றுமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -232- மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் , இதுக்கு ப்ரவ்ருத்தி தோஷம்‌
ஏற்கனவே ஸித்தமாயிருக்குமதான இவ் வுபாயத்தை ஒழிந்த மற்ற உபாயங்களுக்கு, சேதநன்‌ தன்‌ செயல் மூலம்‌ உண்டாக்க வேண்டுமாகையாலே இவனுடைய தன் முயற்சி தவிர்கை குறை யுடைத்தாகும்‌; இந்த ப்ரபத்தி உபாயத்துக்குத்‌ துணைக்‌ கூட்டு பொறுக்காமையாலே இச் சேதநனுடைய முயற்சி குறைபாடுடைத்தாயிருக்குமென்கை

சேதனனுடைய முயற்சி ஒன்றும்‌ வேண்டா’ என்னுமிடத்துக்கு மேற்கோள் காட்டுகிறார்‌.
ஸூர்ணை -233- “சிற்ற வேண்டா” ,
ஸித்தோபாயத்தைப்‌ பற்றுகையைச்‌ சொல்லுகிற “மற்றொன்றில்லை” -9-1-7-என்கிற பாட்டிலே, ‘சிற்ற வேண்டா” என்று சிற்றுதல்‌ – சிதறுதலாய்‌ ‘பரக்க ஒரு செயலும்‌ செய்ய வேண்டா’ என்கையாலே, இவ் வுபாயத்தில்‌ இழியுமவனுக்கு ஒரு செயலும்‌ செய்ய வேண்டா என்று சொல்லிற்றன்றோ என்கை.

சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா -வேறு ஒரு செய்கை வேண்டா என்கை –சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்-அந்தோ-இவ் விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –

இது தான்‌ இந்த ஸ்லோகத்திலேயே சொல்லிற்றென்கிறார்‌.
ஸூர்ணை -234 – நிவ்ருத்தி கீழே சொல்லிற்று –
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’ என்று ப்ரவ்ருத்தி தர்மமான அனைத்துச்‌ செயலையும்‌ தவிர்கையே இவனுக்கு வேண்டுவது என்பது கீழே சொல்லிற்று என்கை.

ஆனால்‌, நன்றி பாராட்டுகை தான்‌ வேணுமோ? அது உபாயத்தில்‌ முதலிடாதோ?’ என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -235- உபகார ஸ்ம்ருதியும்‌ சைதந்யத்‌தாலே வந்தது; உபாயத்தில்‌ அந்தார்பவியாது.
“என்னைத்‌ தீ மனங்கெடுத்தாய்‌ -“மருவித்தொழும்‌ மனமே தந்தாய்‌”
என்று இவை முதலானவைகளாலே இவன்‌ செய்யும்‌ நன்றி அறிதலும்‌ இவனுடைய ஜ்ஞாந மூலமாய்‌ வந்ததித்தனை; இது உண்டாகையா லன்றோ ஈஸ்வரன்‌ கார்யம்‌ செய்தது என்று உபாயத்தில்‌ உட்புகாது – என்கை.

இனி, ஐந்தாம்‌ பத அர்த்தத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -236 – சரணம்‌ – உபாயமாக.
சரணம்‌’
– என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ உபாயமாக என்று.
சரண சப்தத்திற்கு வேறு அர்த்தங்களையும்‌ காட்டக்‌ கூடியதாயிருக்க, இவ்விடத்தில்‌ உபாயத்தையே காட்டுகின்றமையைக்‌ காரணத்தோடு கூட அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -237 – இந்த சரண சப்தம்‌ – ரஷிதாவையும்‌ க்ருஹத்தையும்‌ உபாயத்தையும்‌ காட்டக்‌ கடவதே யாகிலும்‌, இவ் விடத்தில்‌ உபாயத்தையே காட்டுகிறது; கீழோடே சேர வேண்டுகையாலே .
“உபாயே க்ருஹ ரஷித்ரோச்‌ சப்தச்‌ சரண மித்யயம்‌, வர்த்ததே ஸாம்ப்ரதம்‌ சைஷ உபாயார்த்தைகவாசக :
சரணம்‌ இதி –
சரணமென்கிற,
அயம்‌ சப்த :- இந்த சப்தமானது,
உபாயே – உபாயத்திலும்‌,
க்ருஹ ரஷித்ரோ:- க்ருஹத்திலும்‌ ரக்ஷகனிடத்திலும்‌,
வர்த்ததே – உபயோகிக்கத் தக்கது,(இப்படியானாலும்‌)
ஸாம்ப்ரதம்‌ – இப்போது(இவ்விடத்தில்‌) ஏஷ: – இந்த சரண சப்தமானது,
உபாயார்த்த ஏக வாசக : – உபாயத்திற்கே பேராகக்‌ கடவது. என்கிறபடியே இந்த சரண சப்தமான இது ரஷிப்பவனையும்‌, இல்லத்தையும்‌ உபாயத்தையும்‌ காட்டக்‌ கடவதே யாகிலும்‌, இந்த இடத்தில்‌ உபாயத்தையே காட்டுகிறது. ஸர்வ தர்மங்களையும்‌ விட்டுத்‌ தன்னையே பற்றச்‌ சொல்லுகிற பகுதியாகையால்‌, கீழோடே சேர வேண்டுகையாலே, இந்த ‘சரண’ சப்தத்திற்கு உபாயம்‌” என்ற பொருளைத் தான்‌ கொள்ள வேண்டும்‌ என்கிறார்‌. கர்ம யோகம்‌ முதலான எல்லாம் கேட்டு அவை சுலபமாகச்‌ செய்யக் கூடியவை அல்ல வென்றும்‌, ஸ்வரூப விரோதம்‌ என்று நினைத்து, நாம் கரை ஏறும்‌ உபாயம்‌ எதுவோ என்று கவலை கொண்டுள்ள அர்‌ஜூநனைக்‌ குறித்து இந்தச்‌ சரம ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்கையால்‌ அதற்கேற்ப, க்ருஹம்‌ ரக்ஷகன்‌ என்றவற்றை விட்டு, உபாயம்‌ என்ற பொருளைக்‌ கொண்டால் தான்‌ கர்மம்‌ முதலானவைகளை உபாயமாகக்‌ கொள்ளுதலை விட்டுவிட வேணு மென்றிருக்கிற அர்ஜூநனுக்கு ஸமாதானஞ்‌ சொல்லுகிற தென்று கீழோடே பொருந்த வருமென்றபடி. ஆனால்‌, கீழ்ச்‌ சொன்ன உபாயாந்தரங்களை விடுகை தானே உபாயமாகப்‌ பற்றுகிற கண்ணன் எம்‌பெருமானின்‌ உபாயத்வத்தைத்‌ தோற்றுவிப்பதாயிருக்க, சரண சப்த ப்ரயோகம்‌ இங்கு வேணுமோ? என்னில்‌, ஆம்‌ வேணும்‌; இங்கே ஒரு ஆக்ஷேபம்‌ எழுகிறது. அதாவது, சரண சப்தத்துக்கு ப்ரகரண பலத்தாலே உபாயம்‌ என்ற பொருளைக்‌ கொண்டு வர வேண்டுமானால்‌, சரண சப்தமில்லாமலே ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ – வ்ரஜ என்ற இம் மாத்திரமே சொன்னாலும்‌, ப்ரகரண பலத்தாலே ‘வ்ரஜ’ என்பதற்கு – (உபாயமாகப்‌) புத்தி பண்ணு என்று அர்த்தம்‌ கொண்டு விடலாமே? இந்த சரண சப்தம்‌ ஏதுக்கு? என்று அவ்வாக்ஷேபம்‌.-அதற்குச்‌ சமாதாநம்‌:- எம்பெருமானை உயேயமாகப்‌ பயனாகப்‌ பற்றும் போதும்‌, நதியை கடந்தவனுக்கு ஓடத்தின்‌ தேவை யில்லாதது போல்‌ ஸாதநாந்தரங்கள்‌ ஒன்றும்‌ வேண்டியதில்லை யாகையால்‌,’ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம்‌ ஏகம்‌ வ்ரஜ என்பதற்கு – எல்லா சாதநங்களையும்‌ விட்டு உபேயமாக எம்பெருமான்‌ ஒருவனையே பற்று என்று பொருள்‌ கொள்ளவும்‌ இடமுண்டாகையால்‌, “சரணம்‌ வ்ரஜூ என்னாமல்‌ ‘வ்ரஜ’ என்று மாத்திரம்‌ விதிக்கும்‌ ஸ்வீகாரம்‌ அப்படி உபேயமாக :பற்றுதலைத்‌ தவிர்க்காது; ஆகவே, ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு உபேயமாக ஸ்வீகரித்தலைத்‌ தவிர்ப்பதற்காக “சரண”சப்தம்‌ அவஸ்யம்‌ வேண்டுமென்றபடி.-மறுபடியும்‌ இன்னுமொரு ஆக்ஷேபம்‌ வருகிறது அதாவது, “யத் யத்‌ ஸாங்கம்‌ தத்தத்‌ ஸாதநம்‌” (எது எது அங்கத்தோடு கூடியதோ, அது அது உபாயம்‌) என்ற நியாயத்துக்கு ஏற்ப ‘வ்ரஜூ என்ற விதிக்கு அங்கமாக ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்று உபாயாந்தரத்தை விடுதலைச்‌ சொல்லி யிருத்தலால்‌, இங்கு “வ்ரஜ என்பதனால்‌ விதிக்கப்படும்‌ ஸ்வீகாரம்‌, உபாயமாக ஸ்வீகரித்தலையே காட்டக்‌ கூடிய தாகையாலே, இந்த சரண சப்தம்‌ வேண்டிய தில்லையே என்று அவ்வாக்ஷேபம்‌ இதற்குச்‌ சமாதாநம்‌ :-அர்த்த பலத்தால்‌ கிடைக்கக் கூடிய பொருளைக் காட்டிலும்‌ சப்தத்தாலே சொல்லக் கூடிய பொருளே சிறப்புடையதாகையாலே, “ஆக்ஷேபத:ப்ராப்தாத்‌ ஆபிதாநிகஸ்யைவ க்ராஹ்யத்வாத்‌” (அர்த்த பலத்தால்‌ வரும்‌ பொருளைக் காட்டிலும்‌ சப்த பலத்தால்‌ வருவதே ஏற்றுக்‌ கொள்ளத்‌ தக்கதாகையால்‌) என்று ஸ்ரீபாஷ்யகாரரும்‌ ஸ்ரீ பாஷ்யத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.ஆக, உபாயத்தைச்‌ சொல்லக் கூடிய இந்த சரண சப்தத்தாலே, உபேயமாகவும்‌ உபாயமாகவும்‌ பற்றக்‌ கூடிய இரண்டு தன்மையும்‌ எம்பெருமானுக்கு உண்டாகையால்‌ அதில்‌, உபேயமாக பற்றும்‌ தன்மையை இங்கு வேறு படுத்திக் காட்டினாராயிற்று.

இனி, ஆறாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை – 238 -வ்ரஜ-புத்தி பண்ணு
வ்ரஜ என்று இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ ‘புத்தி பண்ணு’ என்று.
அது தன்னை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -239- கத்யர்த்தமாவது-புத்த்யர்த்தமாய்‌, அத்யவஸி யென்றபடி
“வ்ரஜ கதெள’
என்கிற தாது (வினைப்பகுதி) செல்லுதல்‌ என்று பொருளாகும்‌. “கத்யர்த்தா புத்த்யர்த்தா :” (கதி சப்தம்‌ புத்தியைக் காட்டும்‌.) அதாவது – கதியைச்‌ சொல்லும்‌ சப்தங்கள்‌ மானஸ கதியான புத்தியையும்‌ சொல்லுகின்றன என்கிறபடி. மனத்தில்‌ ஏற்படக்கூடிய திட நம்பிக்கையைச்‌ சொல்லுகிறது இந்த வ்ரஜ என்ற பதம்‌ என்கிறார்‌-“இந்தப்‌ புத்தியாகிறது விடத் தக்கதான த்யாகத்தின்‌ முடிந்த நிலையிலிருப்பதாய்‌, உபாயத்வத்தில்‌ சேராததாய்‌,
உபாயாந்தரங்களை விடுவதை முன்னிட்டுக்‌ கொண்டிருப்பதாய்‌, பகவான்‌ செய்யும்‌ ரக்ஷகத்வத்தை அநுமதிப்பதாய்‌, அறிவின்‌ செயலாய்‌, ப்ரார்த்திப்பதை உட் கொண்டதாய்‌, பகவந் முக மலர்த்திக் குரியதாய்‌, ஜ்ஞாநத்தின்‌ கார்யமான ஸ்வரூபமாம்‌ தன்னியல்புக்கும்‌ பொருந்தியதாய்‌, தப்பாமல்‌ தாமதமின்றிப் பயனைத் தரக் கூடியதாயிருப்தொரு திட நம்பிக்கையோடு கூடிய ஞான கார்யம்‌
” என்று இந்த புத்தி விசேஷத்தை பரந்த படியில்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச்‌ செய்ததை இவ்விடத்தில்‌ அதை நினைவில்‌ கொள்ளக்‌ கூடியது என்கிறார்‌ மாமுநிகள்‌.

பொதுவில்‌ சஞ்சரித்தலைச்‌ சொல்லக்‌கூடிய கதி சப்தம்‌, மனம்‌ வாக்கு உடல்‌ என்ற முக் கரணங்களாலும்‌ இறைவனை அடைதலைக் காட்டா நிற்க, மனஸாலே அடைகிற திட நம்பிக்கை மாத்திரம்‌ சொல்லி ஒன்றில்‌ ஒதுக்குகிறதென்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -240- வாசிக காயிகங்களும்‌ இதுக்கு அபேஷிதிதங்களா யிருக்கச்‌ செய்தேயும்‌, ஜ்ஞாநாந்மோஷ மாகையாலே மாநஸமான அநுஷ்டானத்தை
அதாவது – “சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையினாலும்‌” என்கிறபடியே முக் கரணங்களாலும்‌ உண்டான பற்றுதல்‌ அதிகார பூர்த்திக்கு வேண்டியதாகையாலே “வரிக்கிறேன்‌’ என்று சொல்லக் கூடிய வாக்கும்‌, அஞ்ஜலி முதலான காயிகமும்‌, உபாயமாகப்‌ பற்றுகைக்கு உரியதா யிருக்கச்‌ செய்தேயும்‌, “ஜ்ஞாநாந் மோக்ஷ:” என்று ஜ்ஞாநத்தாலே மோக்ஷமாகையாலே அவை இரண்டும்‌ நீங்கலாக மாநஸ அநுஷ்டான மாத்திரத்தைச்‌ சொல்லுகிறது என்கிறார்‌. ஆக, ஆறாம் பத்ததுக்கு பதவுரை அருளிச்‌ செய்தாயிற்று.

இனி, முற்பாதியால்‌ சொன்ன அர்த்த்தத்தை அநுவதித்து (திரும்பச்‌ சொல்லி) முடிக்கிறார்‌.
ஸூர்ணை -241-ஆக த்யாஜ்யத்தைச்‌ சொல்லி, த்யாக ப்ரகாரத்தைச்‌ சொல்லி, பற்றப்படும்‌ உபாயத்தைச்‌ சொல்லி, உபாய நைரபேக்ஷ்யஞ் சொல்லி, உபாயத்வஞ் சொல்லி, உபாய ஸ்வீகாரம்‌ சொல்லுகிறது.
அதாவது – ஆக, முற் பாதி ஸ்லோகத்தால்‌’ஸர்வ தர்மாந்‌ என்று விட வேண்டியதைச்‌ சொல்லி, ‘பரித்யஜ்ய’ என்று த்யாக ப்ரகாரத்தைச்‌ சொல்லி, ‘மாம்‌’ என்று பற்றப்படும்‌ உபாயத்தைச்‌ சொல்லி, ‘ஏகம்‌’ என்று இந்த ஸித்தோபாயம்‌ இன்னொரு உபாயத்தை விரும்பாதது என்பதைச்‌ சொல்லி, ‘சரணம்‌” என்று உபாயத்தைச்‌ சொல்லி, ‘வ்ரஜ’ என்று உபாய ஸ்வீகாரஞ்‌ சொல்லுகிறது என்கை.

பிறகு, பிற்பாதிக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக ஆரம்பித்து, அதில்‌ முதல்‌ பதத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -242 -அஹம்‌ –
அஹம்‌ – நான்‌ – என்று.
இந்த பிற்பாதியில்‌ ஈஸ்வரன்‌ செய்தருளுகிற அம்சத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -243 -ஸ்வ க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌:
அதிகாரிச்‌ செயலை முற்பாதியிற்‌ சொன்‌னான்‌. உபாயமாகிய தன்‌ செயலை இதிலே அருளிச் செய்‌கிறான்‌.
இனி ‘அஹம்‌’ என்ற இப் பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -244-ஸர்வஜ்ஞனாய்‌, ஸர்வ சக்தியாய்‌, ப்ராப்தனான நான்‌ .
அதாவது, “யஸ்‌ ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்‌“(யாவனொரு பரமாத்மா எல்லாவற்றையும்‌ அறிகிறானோ ?) என்கிறபடியே ஸர்வத்தையும்‌ அறியுமவனாய்‌ “பராஸ்ய சக்திர்‌ விவிதைவ ஸ்ரூயதே‘ என்கிறபடியே எல்லா ஸாமர்த்யத்தையும்‌ உடையவனாய்‌, எஜமானனாகையாலே உரிமை யாளனாயிருக்கிற நான்‌ – என்கை.

மற்ற குணங்களெல்லாம்‌ கிடக்க இந்தக் குண விசேஷங்களை இந்த ‘அஹம்‌’ என்கிற சப்தம்‌ காட்டுகிற இதற்கு ப்ரயோஜநம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -245- இவன்‌ கீழ்‌ நின்ற நிலையும்‌, மேல்‌ போக்கடியும்‌ அறிகைக்கும்‌, அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும்‌ ஏகாந்தமான குண விசேஷங்களையும்‌, தன் பேறாகச்‌ செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான பந்த விசேஷத்தையும்‌ காட்டுகிறது.
அதாவது, எம்பெருமான்‌ இந்த சேதநனுக்கு வேண்டாதனதைத் தள்ளி வேண்டியதைக்‌ கொடுக்குமளவில்‌, -முன் நின்ற நிலையும்‌, மேல்‌ போகத் தகும்‌ நிலையை அறிந்தும் அறிந்தபடியே அவற்றைச்‌ செய்து தலைக் கட்டுகைக்கும்‌ தகுந்தவை யாயிருந்‌ துள்ள (ஸர்வஜ்ஞத்வ) எல்லாவற்றையும்‌ ஒரே காலத்தில்‌ அறிவது ஸர்வ சக்தித்வங்களாகிற குண விசேஷங்களையும்‌, இவன்‌ கார்யம்‌ செய்யுமிடத்தில்‌ இவனுக்காக அன்றிக்கே தன் பேறாகச்‌ செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சேஷித்வ ரூப (எஜமானான) பந்த விசேஷத்‌தையும்‌ ப்ரகாசிப்பிக்கிறது – என்கை. மாம்‌” என்கிற இடத்தில்‌ அடைதற்கே அவஸ்யமான குண விசேஷங்கள்‌ ப்ரகாசித்தாற்போலே, ‘அஹம்‌’ என்கிற இடத்திலும்‌ கார்ய கரத்வத்‌துக்கு அவஸ்யமான குண விசேஷங்கள்‌ ப்ரகாசிக்குமன்றோ? வாத்ஸல்யாதிகள்‌ இல்லாத போது தஞ்சமாக அடைகைக்‌ கூடாதாப் போலே, ஜ்ஞாந சக்த்யாதிகள்‌ இல்லாத போது
கார்ய கரத்வம்‌ பொருந்தாமையாலே, இவ் விடத்தில்‌ ஜ்ஞாந சக்திகளும்‌ ப்ராப்தியாம்‌ உறவையும்‌ சொன்ன இது பூர்த்திக்கும்‌ உபலக்ஷணம்‌
. உபலகஷணம்‌ -மற்றுமுண்டான லக்ஷணத்தையும்‌ கூட்டிச்‌ சொல்வது.

இந்தப் பதத்தில்‌ ‘மாம்‌’ என்ற இடத்தில்‌, ஸாரதியாய்‌ நின்ற பாரதந்த்ரியத்துக்கு எதிர்த்தட்டான தன்‌ ஸ்வாந்ந்த்ர்யத்தை ப்ரகாசிப்பித்தமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -246- தனக்காகக்‌ கொண்ட ஸாரத்ய வேஷத்தை அவனை யிட்டுப்‌ பாராதே தன்னை யிட்டுப்‌ பார்த்து, அஞ்சின அச்சந் தீரத்‌ தானான தன்மையை அஹம்‌” என்று காட்டுகிறான்‌.
அதாவது, மாம்‌’ என்று ஸாரத்ய வேஷத்தோடே நிற்கிற தன்னைப்‌ பற்றச்‌ சொன்ன போது, அர்‌ஜுநன்‌, தன்‌னைக்‌ காப்பதற்காக ஏறிட்டுக்‌ கொண்ட தேரோட்டியான வேஷத்தை அனைத்துக்கும்‌ மேலானவன்‌ இப்படித்‌ தாழ நின்றது தன்‌ இச்சையான குணத்தலான்றோ’ என்று அவனை யிட்டுப்‌ பார்க்காமல்‌, ‘நமக்கு இழி தொழில்‌ செய்து ஸாரதியாய்‌ நிற்கிறவனன்றோ?” என்று தன்னை யிட்டுப்‌ பார்த்து, “ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று’ என்னா நின்றான்‌; இது’ என்னாகுமோ? என்று அஞ்சின அச்சந்தீர, தனக்கு வஸப்பட்ட பத்தர்‌, முக்தர்‌, நித்யர்களான மூன்று விதமான சேதநர்கள்‌, ஸுத்த ஸத்வமாகிய பரம பதம்‌, மிஸ்ர ஸத்வமான ப்ருக்ருதி மண்டலமான லீலா விபூதியும்‌ இவைகளின்‌ நிர்வாஹங்களுக்குத்‌ துணையான காலமும்‌ ஆகிய தன்னதீநமான சேதநா சேதநங்களின்‌ ஸ்வரூபமும்‌, இவைகளின்‌ நிலைபேறும்‌ காப்பும்‌ செயல்களும்‌, தடை யற்ற சுதந்திரனா யிருக்கிற தன்னுடைய உண்மையான வேஷத்தை ‘அஹம்‌’ (நான்‌) என்று வெளிப்படுத்‌துகிறான்‌ – என்கை.

இத்தன்மை யானவன்‌ பரதந்த்ரனானதும்‌, தன்‌ இயல்பாலானதன்று என்னுமிடத்தை அருளிச்‌செய்கிறார்‌. பரதந்த்ரம்‌ – பிறர்க்கு வஸப்படுதல்‌.
ஸூர்ணை -247-கீழில்‌ பாரதந்தர்யமும்‌ இந்த ஸ்வாதந்தர்யத்தினுடைய எல்லை நிலமிறே.-
அதாவது- கீழ்‌, ஸாரதியாய்‌ நின்ற பாரதந்த்ர்யமும்‌, தான்‌ நினைத்தது செய்யுமளவில்‌ தன்னைத்‌ தடை செய்பவ ரில்லாதபடியான இந்த ஸ்வாதந்த்ர்‌யத்தினுடைய முடிவெல்லை யன்றோ-என்கை.

பிறகு ‘த்வா என்ற இரண்டாவது பதத்தை வெளியிடுகிறார்‌.
ஸூர்ணை -248 – த்வா – அஜ்ஞனாய, அசக்தனாய்‌, அப்ராப்தனாய்‌, என்னையே உபாயமாகப்‌ பறிறியிருக்‌கிற உன்னை.
‘த்வா’ என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. அதாவது – அஜ்ஞனாய்‌ என்று தொடங்கி-உன்கார்யங்கள்‌ அறிவதற்குத்‌ தக்க ஜ்ஞாநமில்லாதவனாய்‌, அறிந்தாலும்‌ செய்து தலைக் கட்டிக்‌ கொள்ளுகைக்கு சக்தி இல்லாதவனாய்‌, அது தான்‌ உண்டானாலும்‌ உன்னுடைய
ரக்ஷணத்தில்‌ உனக்கு உரிமை இல்லாதவனாய்‌, இப்படி இருக்கையாலே எல்லாத்‌ தர்மங்களையும்‌ விட்டு என்னையே (வேறொரு உபாயம்‌ வேண்டாதபடியான) உபாயமாகப்‌ பற்றி யிருக்கிற உன்னை – என்கை.

பிறகு, மூன்றாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.’ஸர்வ பாபேப்ய –” என்று.
ஸூர்ணை -249 – ஸர்வ பாபேப்ய :- மத் ப்ராப்தி ப்ரதி பந்தகங்கள்‌ என்று யாவை யாவை சில பாபங்களைக்‌ குறித்து அஞ்கிறாய்‌, அவ்வோ பாபங்கள்‌ எல்லாவற்றில்‌ நின்றும்‌ .
ஸர்வபாபேப்ய : ” என்று இதுவும்‌ –பாபமும்‌ என்று ஒருமையும்‌, பாபங்களும்‌ என்று பன்மையும்‌, ஸர்வ சப்தமுமாய்‌ மூன்று விதமாயிருக்கையாலே, இம் மூன்றையும்‌ உட் கொண்டு இப்பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. “மத் ப்ராப்தி ப்ரதிபந்தகங்கள்‌’ என்று தொடங்கி,-அதாவது – பாபமாகிறது இஷ்ட விரோதியாயும்‌ இஷ்டமில்லாதான துன்பத்திற்குக்‌ காரணமாயிருக்கு மதாகையாலும்‌, மோக்ஷப் பகுதி யாகையாலே இவ்விடத்தில்‌ இஷ்டவிரோதி களாகின்றன-பகவானை அடையத் தடை செய்யுமவை யாகையாலும்‌, அதில்‌ ஜ்ஞாந விரோதியும்‌ ருசி விரோதியும்‌ உபாய விரோதியும்‌ ஆகிற இவை திருமந்த்ரத்தில்‌ நம சப்தத்தாலே முன்பே கழிக்கப் பட்டதாகையாலும்‌, இனி யுள்ளது என்னை அடைவதற்கு தடையா யிருக்கும்‌ விரோதி யாகையாலே, நீ என்னை அடைய தடையா யிருக்கும்‌ விரோதிகள்‌ என்று யாவை யாவை சில பாபங்களைக்‌ குறித்து
பயப்படுகிறாயோ? அந்த அந்தப்‌ பாபங்களெல்லா வற்றிலிருந்தும்‌-விடுவிக்கிறேன்‌ என்கிறான்‌-
என்றபடி.

பன்மை மிகுதியால்‌ காட்டுமதை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -250- “பொய் நின்ற ஞானமும்‌ பொல்‌லா வொழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்கிறபடியே, அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களைச்‌ சொல்லுகிறது
அதாவது, “பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்குமழுக்குடம்பும்‌” என்று உண்டாதல்‌, அழிதல்‌ முதலியவற்றின்‌ தொடர்பாலே அறிவு இல்லாமையாலே இல்லை யென்று சொல்லும்படியான அறிவற்ற ஜடப்‌ பொருளான அசேதனத்தை ஆத்மாவாக நினைக்கும்‌
நினைவும்‌, அந் நினைவாலே தேகமே ஆத்மா என்கிற இந்த புத்தியால்‌ உலகியலைச்‌ சார்ந்த தீய செயல்கள்‌ செய்கையும்‌, இந்தக்‌ கர்மங்‌ காரணமாக வரக் கூடியதான தீண்டா வழும்பும்‌
செந்நீரும்‌ செறி தசையுமான மல ரூபமான தேக ஸம்பந்தமும்‌
‘ என்று சொல்லுகிறபடியே அறிவின்மையும்‌, கர்மமும்‌, வாஸனையும்‌, ருசியும்‌, ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற இவற்றைச்‌ சொல்லுகிறது – என்கை. இவைகளில்‌ அறிவின்மையாவது :- தேகமே ஆத்மாவாக நினைக்கும்‌ நினைவும்‌, ஐய உணர்வும்‌ திரிபு உணர்வும்‌ ஆகிய மூவகைப்பட்ட அறிவின்மை. -கர்மமாவது :- நல் வினை, தீ வினைகள்‌. பகவானை அடைய நல் வினையும்‌ பாபத்தைப்‌ போலே விடத் தக்கது. வாஸனையாவது -அஜ்ஞாந வாஸனை, கர்ம வாஸனை, தேக ஸம்பந்த வாஸனை என மூன்றாகும்‌. ருசியாவது– விஷய பேதத்தாலே பலவாயிருக்கும்‌; ப்ரக்ருதி ஸம்பந்தமாவது– பரு உருவும்‌ அருவ உருவுமாகிய இரு வகையான ஐடப் பொருளைப்‌ பற்றிய அசித் ஸம்பந்தமாகும்‌. என்றபடி.

இனி, ஸர்வ சப்தத்தின்‌ கருத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -251- தருணச்‌ சேத கண்டூயநாதிகளைப்‌ போலே ப்ரக்ருதி வாஸனையாலே அநுவர்த்திக்குமவை- யென்ன, லோகாபவாத பீதியாலும்‌, கருணையாலும்‌, கலக்கத்தாலும்‌ செய்யுமவையென்ன, எல்லாவற்றையும்‌ நினைக்கிறது .
அதாவது – துரும்பு நறுக்குகை, தினவு எடுத்த இடத்தில்‌ சொறிகை முதலானவை போல நினைவின்றிக்கே உடலின்‌ வாஸனையாலே தொடரும்‌ ப்ரபத்தி செய்த பிறகும்‌ செய்யும்‌ வினைகளென்ன; நாம்‌ இவற்றைச்‌ செய்யாத போது “உலகம்‌ நம்மைப்‌ பழித்துச்‌ சொல்லுமே” என்கிற பயத்தாலும்‌, நாம்‌ செய்யாத போது மற்றவர்களும்‌ செய்யாது விடுவார்களாகில்‌ இது அவர்களுக்கு நாசமாமே; ஐயோ! என்கிற இரக்கத்தாலும்‌ செய்யும்‌ தினசரி செய்யுமவையென்ன, ஏதேனும்‌ ஒரு நிமித்தத்தால்‌ செய்யும்‌ கர்மங்களென்ன, ராஜஸ தாமஸங்களாலே கலங்கி முன்‌ விட்ட உபாயங்களில்‌ தொடர்பு கொள்ளுதல்‌ மீண்டும்‌ ப்ரபத்தி செய்தலென்ன, இவை எல்லாவற்றையும்‌ நினைக்கிறது என்கிறார்‌.

உபாயமென்கிற புத்தியோடு செய்யாதவையும்‌ பொருள்‌ தொடர்பால்‌ உபாயம்‌ என்ற நிலையில்‌ சேரும்‌ என்னும்‌ கேள்வியை முன் வைத்‌து அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -252- ‘உந்மத்த ப்ரவ்ருத்திக்கு க்ராம ப்ராப்தி போலே’ த்யஜித்த உபாயங்களிலே இவை அந்விதங்களாமோ ? என்று நினைக்க வேண்டா.
அதாவது ” உந்மாதச்‌ சித்த விப்ரம:” (பைத்தியம்‌ பிடித்தவனும்‌ மனம்‌ கலங்கியவனும்‌ ஆகிற இரண்டும்‌ ஒரே பொருளைக்‌ கொடுக்கும்‌) என்கிறபடியே பைத்தியக்காரன்‌ ‘இன்ன ஊருக்குப்‌ போகிறோம்‌’ என்கிற நினைவு இன்றிக்கே ஒரு வழியே போகா நின்றால்‌, அவ்வழி ஒரு ஊரோடே ஸம்பந்த முண்டா யிருக்கையாலே அவ் வூரிலே சென்று சேருமா போலே, உபாயம்‌ என்கிற நினைவு இன்றிக்கே உலகத்தவர்‌ பழிக்கஞ்சி செய்தல்‌ முதலானவைகளாலே செய்யப்படுகிற இவை-விட்ட உபாயங்களில்‌ தொடர்பு கொள்ளுமோ என்று நினைக்க வேண்டா ; தொடர்பு கொண்டே விடும்‌ என்றபடி. (ஆந்ரு சம்ஸ்ய ப்ரதாநராய்‌) பிறரிடத்தில்‌ இரக்கம்‌ கொண்டவராய்‌ அதாவது – ” இவ்வளவு ஞானவானே கர்மங்களைச்‌ செய்யாது விட்டால்‌ உலகத்தவர்‌ அவரே விட்டார்‌; நமக்கென்‌? என்று பகவதாஜ்ஞா ரூபமான கர்மங்களை விட்டால்‌ அதனால்‌ அவர்கட்கு பகவத்‌ ஆஜ்ஞையை மீறின பாபம்‌ வரும்‌. பிறரிடத்தில்‌ கருணையால்‌ அநுஷ்டித்தாலும்‌, உயர எறிந்த கல்‌ ஆகாயத்தில்‌ நில்லாதாப் போலே, அவையும்‌ ஒரு பலத்தைக்‌ கொடுத்தே விடும்‌. ஆகையாலே, அவையும்‌ பாப சப்தத்தாலே சொல்லக்‌ கடவது” என்று தனி சரமத்தில்‌ இவர் தாமே அருளிச்‌ செய்தது என்கிறார்‌ மாமுநிகள்‌.

அதுதானே யாகிறது, திரும்பவும்‌ மறுபடியும்‌ பண்ணும்‌ ப்ரபத்திக்கு குறை எது?” என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -253-கலங்கி உபாய புத்த்யா பண்ணும்‌ ப்ரபத்தியும்‌ பாதகத்தோடு ஓக்கும்‌.
அதாவது – ஒரு தடவை செய்யும தொழிய மறுபடி செய்யுமதை ஸஹியாத ப்ரபத்தி ஸ்வபாவத்தை அறியாதே கலங்கி விரோதியைக்‌ கழிப்பதற்காகவோ கஷ்டத்தை அடைவதற்காகவோ உபாய புத்தியோடு மீண்டும்‌ பண்ணும்‌ ப்ரபத்தியும்‌ – “அத பாதக பீதஸ் த்வம்‌” அத – இனி, த்வம்‌ – நீ, பாதக பீத: -உபாயாநுஷ்டாநமாகிய பாவத்தைச்‌ செய்ய அஞ்சினாயானால்‌. என்று உபாயாந்தரம்‌ போலே பாதக ஸமமென்கை.

பிறகு, நாலாம்‌ பதத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -254- மோக்ஷயிஷ்யாமி -முக்தனாம்படி பண்ணக் கடவேன்‌.
இதிலிருந்தும்‌ (இந்த பாபங்களிலிருந்து) விடுபட்டுப் போம்படி பண்ணக் கடவேன்‌ -என்கை.

இனி, ‘யிஷ்‌’ என்கிற ‘ணிஜ’ ர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -255 – ணிச்சாலே – நானும் வேண்டா, நீயும்‌ வேண்டா -அவை தன்னடையே விட்டுப்‌போம் காணென்கிறான்‌.
அதாவது – ‘யிஷ்யாமி’ என்கிற ணிச்சாலே இயற்றுதல்‌ கர்த்தா வன்றிக்கே ஏவுதல்‌ கர்த்தாவாய்‌ விடுவிக்கக்‌ கடவேன்‌ என்கையாலே, இதற்கு நானும்‌ ஒரு முயற்சி செய்ய வேண்டா; நீயும்‌ இதற்காக ப்ரார்த்திக்க வேண்டா; நீ என்னைத்‌ தஞ்சமாக அடைந்த ராஜ குல (மாஹாத்ம்யத்தாலே) பெருமையாலே அந்த பாபங்கள்‌ உன்னைக் கண்டு பயப்பட்டு “கானோ ஒருங்கிற்றுக்‌ கண்டிலமால்‌” என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப்‌ போங்காண்‌ என்று அருளிச்‌ செய்கிறானென்கை.

இப்படிச்‌ சொன்னதன்‌ கருத்தை வெளி யிட்டு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -256 – என்னுடைய நிக்ரஹ பலமாய்‌ வந்தவை நானிரங்கினால்‌ கிடக்குமோ? என்கை.
அதாவது, பாபங்களாகின்றன குப்பையில்‌ ஆமணக்குப்‌ போலே எழுந்து பாம்பு போலே கழுத்தைப்‌ பிடிப்பதொன்றன்றே; சேதநன்‌ பண்ணின கர்மங்கள்‌ நொடிப்‌ போதில்‌ நசிப்பதொன்றாகையாலே, அப்போதே போம்‌; அஜ்ஞனாகையாலே (செய்த செயலை மறந்தவனாகையாலே) கர்த்தாவான இவனும்‌ மறந்து போக, இயல்பாகவே பேரறிவாளனாய்‌ ஒன்றொழியாமல்‌ உணர்ந்திருந்து அந்தந்த காலங்களிலே தப்பாமல்‌ நிறுத்து அநுபவிப்பிக்கிற என்னுடைய நிக்ரஹ பலமாகையாலே, அந்த என்னுடைய நிக்ரஹ பலமாய்‌ வந்தவை, நிக்ரஹத்துக்கு எதிர்த் தலையான அநுக்ரஹத்தை நான்‌ பண்ணினால்‌ பாபங்கள்‌ அவ் விஷயத்தில்‌ பின்னைக்‌ கிடக்குமோ? என்று இதற்குக்‌
கருத்தென்றபடி.

‘தன்னடையே விட்டுப் போம்‌’ என்ற இடத்தில்‌ அபிப்ராயத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -257- அநாதி காலம்‌ பாபங்களைக்‌ கண்டு நீ பட்ட பாட்டை அவை தாம்‌ படும்படி. பண்ணுகிறேன்‌.
அதாவது – அநாதியான காலமெல்லாம்‌ துன்பம்‌ தருவதான பாபங்கள்‌ வந்துமேலிடப் புகுந்தால்‌, அவற்றைக்‌ கண்டு நீ நடுங்கின நடுக்கமெல்லாம்‌ என்னைத்‌ தஞ்சமடைந்த ராஜ குல மாஹாத்ம்யத்தாலே உன்னைக் கண்டு அவை தான்‌ குடல்‌ வெந்து நடுங்கும்படி பண்ணக்‌ கடவனென்கை. “அவை தாமே விட்டுப் போம்படி பண்ணுகையாவது -இவை தமக்கு முன்பு உண்டாய்க்‌ கழிந்தவை என்று தோற்றாதபடிபோக்குகை ; அதாகிறது – இவை நினைவுக்கு வந்தாலும்‌ ப்ரபந்நனான தான்‌ பகவானுக்கே அற்றுத்‌ தீர்ந்த தன்மையைப்‌ பார்த்து கனவு கண்டாற் போலே இவை நமக்கு இடையில்‌ வந்தவையாய்‌ கழிந்தவை என்றிருக்கையும்‌, நினைவாலே துக்கம்‌ அணுகாதிருக்கையும்‌” என்று தனி சரமத்தில்‌ இவர்‌ தாமே அருளிச்‌ செய்தார்‌ என்பது இங்கே நினைவில்‌ கொள்ளத் தக்கவை.

“மோக்ஷயிஷ்யாமி” என்கிற தன்மை இடத்துப்‌ பொருளில்‌ அபிப்ராயமான ஓரர்த்த விசேஷத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -258 – இனி உன் கையிலும்‌ உன்னைக்‌ காட்டித்‌ தாரேன்‌, என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்‌ கொள்ளேனோ?
அதாவது, இத்தனை காலமும்‌ நம்‌ கார்யத்துக்கு நாமே உரிமை யுடையவன்‌ என்று நீ திரிகையாலே தன்‌ கார்யம்‌ தானே செய்‌து கொள்கிறான்‌ என்றிருந்த இத்தனை யல்லது எனக்கு நீ உடம்பைப்‌ போலே அடிமை’ என்றறிந்து என்‌ பக்கலிலே உன்னை ஸமர்ப்பணம்‌ செய்த பின்பு உன்னுடைய பாப விமோசனத்தின்‌ பொருட்டு முயற்சி நீ செய்து கொள்ளென்று உன்‌ கையிலும்‌ உன்னை காட்டித் தாரேன்‌; என்னுடம்பான உன்னுடைய அறிவின்மையான அழுக்கைச்‌ சரீரியாய்‌ உயிரான நானே போக்கிக்‌ கொள்ளேனோ? என்கை. ‘ என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்‌ கொள்ளேனோ’ என்றது, முயற்சி பயனிரண்டும்‌ தன்னதென்று தோற்றுகைக்காக. ஆகையால்‌, உன்னுடைய விரோதியில்‌ கிடப்பது ஒன்றில்லை என்றபடி. “விரோதியைக்‌ கழிப்பதும்‌ இஷ்டம்‌ பெறுகையும்‌ இரண்டும்‌ பலமாயிருக்க ஒன்றைச்‌ சொல்லுவானென்னென்னில்‌ ?” ஒன்றைச்‌ சொன்னால்‌ மற்றையது தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்லை. “மாமே வைஷ்யஸி” – (என்னையே அடைகிறாய்‌) என்று, முன்னே சொல்லப்பட்ட உபாயத்துக்குச்‌ சொன்ன பலந் தவிர வேறு பலம்‌ இல்லாமையாலே சொல்லிற்றில்லை என்னவுமாம்‌; ஆனால்‌, விரோதியை ஒழிப்பது மட்டில்‌ சொல்லுவான்‌ ஏன்‌? என்னில்‌, – அது அதிகமாகையாலே சொல்லிற்று. விரோதி கழிகை உண்டானால்‌ பலம்‌ இயல்பாக ஸித்தமாயிருக்கையாலே, தனித்துச்‌ சொல்ல வேண்டாவன்றோ” என்று சுருக்கமாக ஸ்ரீய:பதிப்படி ரஹஸ்யத்திலும்‌, விரிவாகப் பரந்தபடி தனி சரமங்களிலும்‌, அருளிச்‌ செய்த கேள்வியும்‌ விடையும்‌ இவ் விடத்தில்‌ சொல்லிக்‌ கொள்ள வேணும்‌.

பிறகு, கடைசி பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -259- மாஸூச: – “நீ உன்‌ கார்யத்திலே அதிகரியாமையாலும்‌, நான்‌ உன்‌ கார்யத்திலே அதிகரித்‌துக்‌ கொண்டு போருகையா லும்‌, உனக்கு சோக நிமித்தம்‌ இல்லை காண்‌: என்று அவனுடைய சோக நிவருத்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்கிறான்‌.
மாஸூச :’ என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. அதாவது, “ நீ உன்‌ கார்யத்திலே அதிகரித்து நின்றாயாகில்‌, “நம்‌ கார்யத்துக்கு என்‌ செய்வோம்‌” என்று கரைந்து சோகிக்கத்‌ தகுதி; நான்‌ உன்‌ காரியத்திலே அதிகரியாதிருந்தேனாகில்‌, ‘தம்‌ கார்யத்தில்‌ இவன்‌ உதாஸீநனா யிராநின்றான்‌,; நாம்‌ எங்ஙனே உஜ்ஜிவிக்கப்‌ போகிறோம்‌?” என்று சோகிக்கத்‌ தகுதி உண்டு; -இங்ஙனன்றிக்கே “முயற்சியும்‌ பயனும்‌ ஆகிய இரண்டும்‌ உனக்கு இல்லாத படியான பாரதந்தர்ய ஸ்வரூபத்தைஉணர்ந்து, நீ உன்னுடைய காப்பிலே முயற்சி பண்ணாதொழிகையாலும்‌, உன்னுடைய ரக்ஷணத்தில்‌ முயற்சியும்‌ பயனுமாகிற இரண்டும்‌ என்னதாம்படி, ஸ்வாமியான நான்‌ உன்‌ கார்யத்தில்‌ தடையறுக்கையாலே உன்னுடைய ரக்ஷண கார்யத்திலே அதிகரித்துக்‌ கொண்டு போருகையாலும்‌, உனக்குச்‌ சோகிக்கக்‌ காரணம்‌ இல்லை காண்‌’ என்று, முன்பு சோக முடையவனாய்‌ நின்ற அவனுடைய சோக நிவருத்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்கிறான்‌ – என்கை.இத்தால்‌, அஹம்‌ த்வா என்கிற பதங்களாலே சொல்லப்பட்ட ர்க்ஷக ரக்ஷ்யரான (காப்பவன்‌, காக்கப்படுபவன்‌) இருவருடைய ஸ்வபாவத்தையும்‌ அநுவதித்துக் கொண்டு சோகத்தைத்‌ தவிர்த்தபடியை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனிமேல்‌, பாபத்தைப்‌ போக்குபவனான தன்னுடையவும்‌ போக்கப்படுபவையான பாபங்களினுடையவும்‌ தன்மைகளைச்‌ சொல்லிச்‌ சோகம்‌ தவிர்த்தபடியை
அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -260- நிவர்த்தக ஸ்வரூபத்தைச்‌ சொல்‌லி, நிவர்த்யங்கள்‌ உன்னை வந்து மேலிடாதென்று சொல்லி, உனக்கு சோக நிமித்தம்‌ இல்லை காண்‌ என்கிறான்‌.
அதாவது- அஹம்‌ என்று ஸர்வஜ்ஞத்வம்‌ முதலான குணங்களோடு கூடினவனாய்க்‌. கொண்டு விரோதியைப் போக்குபவனா யிருக்கிற தன்‌ ஸ்வரூபத்தைச்‌ சொல்லி, “த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி” என்று ‘ணி”ச்சால்‌ நிவர்த்திக்கப்படுமதான பாபங்கள்‌ உன்‌னைக் கண்டு தானே அஞ்சி ஓடிப் போமதொழிய, என்னையே உபாயமாகப்‌ பற்றி இருக்கிற உன்னை வந்து மேவிடாது என்னுமிடம்‌ சொல்லி, பிறகு ‘மாஸூச:‘ என்கையாலே
‘இப்படியான பின்பு உனக்குச்‌ சோகிக்கக்‌ காரண மில்லை” என்கிறானென்கை.

இத் தலையில்‌ விரோதியைப்‌ போக்குகைக்குத்‌ தான்‌ மூண்டு நிற்கிற படியை அறிவித்து, இவனுடைய சோகத்தைப்‌ போக்குகின்றமையைப்‌ பெரியோரின்‌ பாசுரத்தை மேற்கோள் காட்டிக்‌ கொண்டு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -261 “எத்தினா லிடர்க்கடற் கிடத்‌தி யேழை நெஞ்சமே” என்கிறான்‌.
அதாவது – திருமழிசைப்‌ பிரான்‌ தம்முடைய திருவுள்ளத்தைக்‌ குறித்‌து ,ஸர்வேஸ்வரன்‌ இத் தலையில்‌ (நம்மிடத்தில்‌)விரோதியைப்‌ போக்கி அடிமை கொள்வதாக என்று ஏன்று கொண்டு வந்து புகுந்திருக்கிற படியைச்‌ சொல்லி, ‘இனி ஏதுக்காக நீ துன்பக் கடலில்‌ அழுந்துகிறாய்‌” என்றாற்போலே, ஈஸ்வரனும்‌ இப்போது இத் தலையில்‌ அனைத்துப்‌ பாபங்களையும்‌ போக்குவதாகத்‌ தானே, ஏறிட்டுக்‌ கொண்டமையை அறிவித்து, “இனி ஏதுக்காக சோகிக்கிறாய்‌ ?’ என்று இவனைக்‌ (அர்ஜுனனைக்‌) குறித்து அருளிச்‌ செய்கிறான்‌ என்கை.

இனி, இவனுடைய சோகம்‌ மறுவலிடாமல்‌ போக்குவதற் குறுப்பான பகவதபிப்ராய விசேஷத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -262 – பாபங்களை நான்‌ பொறுத்துப்‌ புண்யமென்‌று. நினைப்பிடா நிற்க நீ சோகிக்கக்‌ கடவையோ ?
அதாவது – நீ செய்த பாபங்களை நான்‌முந்துற என்னுடைய பொறுமைக் குரித்தாக்கி – அவ்வளவுமன்றிக்கே பின்பு: உன் பக்கல்‌ எனக்கு உண்டான வாத்ஸல்யத்தாலே “செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்‌” என்று இவன்‌ ப்ரார்த்தனை. அடியார்‌ திறத்‌து அவன்‌
சொல்வது, ” செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்கிறபடியே அவை தன்னைப்‌ பாபமாக நினையாதே புண்ணியமென்று நினைப்பிடா நிற்க , இனி நீ சோகிக்கக்‌ கடவையோ? என்கை.
ஆக, இவ்வுத்தரார்த்தத்தில்‌ ஐந்து பதத்தாலும்‌, நிவர்த்தகனான ஈஸ்வர ஸ்வரூபத்தை அஹம்‌” என்ற பதத்தால்‌ சொல்லப்பட்டது. நிவர்த்யாஸ்ரயத்தையும்‌ பகவானால்‌ போக்குதற்குரிய பாபங்களுக்குச்‌ சார்பான சரணாகதனை த்வா’ என்ற பதத்தால்‌ சொல்லப்பட்டுள்ளது. ஸர்வ பாபேப்யோ பதத்தால்‌, போக்குதற்குரிய பாபங்களையும்‌,
மோக்ஷயிஷ்யாமி’ பதத்தால்‌ அவைகளைப்‌ போக்குகிற விதத்தையும்‌, மாஸூச:’ பதத்தால்‌ அதன்‌ காரணமான சோக நிவ்ருத்தியையும்‌ சொல்லிற்றாயிற்று.

இனி, இந்த ஸ்லோகத்திற்‌ சொன்ன விஷயங்களின்‌ சார்பான பொருள்களை மாமுநிகள்‌ அருளிச்‌ செய்கிறார்‌. இனி என்று தொடங்கி,
இனி, இந்த ஸ்லோகார்த்தத்தில்‌ சுவை ஒருவனுக்கு உண்டாகையில்‌ உள்ள அருமையையும்‌, இந்த ஸ்லோகந்தனக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தையும்‌, இதில்‌ நம்பிக்கை உண்டாவதில்‌ அருமையையும்‌ இதில்‌ ஆசை உண்டாவதின்‌ அருமையையும்‌, ஈஸ்வரன்‌ இத்தை முதற்கண்‌ உபதேசியாமைக்குக்‌ காரணத்தையும்‌, வேத புருஷன்‌ ப்ரபத்திக்கு வேறான உபாயங்களை விதிப்பதற்குச்‌ காரணத்தையும்‌ உபாயாந்தரங்‌-களை (ப்ரபத்திக்கு வேறானவைகளை) உபாயமாக மேற் கொண்டொழுகாது விட்டு விடுமளவில்‌ குற்றமில்லை என்னுமத்தையும்‌, அவை தான்‌ வேற்று முகத்தால்‌தொடர்புடையதாகையாலே இயல்பாக விடப்படுவதன்‌று என்னுமிட்‌த்தையும்‌, பயன் கிடைத்தற்கு ஸாதநம்‌ இன்னது என்னுமிடத்தையும்‌ பலன் கிட்டுகைக்கு இவன்‌ பக்கல்‌ வேண்டுமவற்றையும்‌, ஈஸ்வரனுக்கு இவனுடைய நல் வினைகள்‌ தேவையற்றது என்னுமத்தையும்‌, இவ் வர்த்தத்தில்‌ நம்பிக்கை உண்டாகி உஜ்ஜிவித்தல்‌ இல்லை யாகில்‌ நசித்தலித்தனை என்னுமத்தையும்‌, இதில்‌ திட நம்பிக்கை இல்லாதவன்‌ இதில்‌ தொடர்பு கொண்டால்‌ விநாசத்துக்குரித்தென்னுமத்தையும்‌, இதற்குத்‌ தகுதியுடைய அதிகாரிகள்‌ இன்னா ரென்னுமத்தையும்‌ முறையே அருளிச்‌ செய்து தலைக்‌ காட்டுகிறார்‌ என்கிறார்‌ மாமுநிகள்‌.
அவற்றில்‌ முதலில்‌, இதில்‌ ஒருவனுக்கு சுவை பிறப்பதிலுள்ள அருமையைக்‌ காட்டுவதற்காசு ஒரு உதாரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -263- உய்யக்‌ கொண்டார்‌ விஷயமாக உடையவர்‌ அருளிச்‌ செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.
அதாவது – தத்வ நிர்ணயம்‌ பண்ணின உய்யக்‌கொண்டார்‌ என்பவர்‌ பக்தி நிஷ்டராயிருந்தார்‌. அவரை ப்ரபத்தி நிஷ்டராம்படிச்‌ செய்ய வேணுமென்று உடையவர்‌ இந்த ஸ்லோகார்த்தத்தை அருளிச்‌ செய்த அளவில்‌, ‘அர்த்தம்‌ அழகியதாயிருந்தது; ஆகிலும்‌ இத்தை மேற்கொண்டொழுகுவதில்‌ எனக்குச்‌ சுவை யில்லை’ என்ன, ‘வித்வானாகையால்‌ அர்த்தத்துக்கு இசைந்தாய்‌; பகவத்‌ கடாக்ஷ விசேஷமில்லாமையாலே உனக்கு ருசி பிறக்கவில்லை என்று அவர்‌ விஷயமாக உடையவர்‌ அருளிச்‌ செய்த வார்த்தையை நினைப்பது என்கை.

இந்த ஸ்லோகந்‌ தனக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -264. இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு .
அதாவது – சாஸ்திரங்களெல்லாம்‌ ஒரு தலையும்‌, தான்‌ ஒரு தலையுமாயிருக்கிற இந்த ஸ்லோகத்துக்கு சாஸ்திரங்களில்‌ சொன்ன தர்மங்களை வாஸனையோடு
விடுவித்து, இந்தச்‌ சேதநனுக்குத்‌ தானே வேறொன்றையும்‌ எதிர்பாராமல்‌ தன்னை அடைதற்குத்‌ தடையான அனைத்துப்‌ பாபங்களையும்‌ தள்ளிப் போட்டுத்‌ தன்னை அடைவித்துக்‌ கொள்ளும்‌ ஸ்வாதீநமான அனைத்து (ப்ரவர்த்தகங்களையும்‌)
செயல்களையும்‌ உடைய ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பரியம்‌ என்கை.

இதில்‌ விருப்பம்‌ உண்டாவதில்‌ அருமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -265. “இதுதான்‌ அநுவாத கோடியிலே” என்று வங்கிப்புரத்‌து நம்பி வார்த்தை –
அதாவது – இந்த ஸ்லோகார்த்தந்தான்‌ அநுவாத கோடியிலே என்று ஆப்த தமர்‌ – ப்ரமாணங்களில்‌ மெய்ம்மை கண்டவர்‌ வங்கிப்புரத்து நம்பி அருளிச்‌ செய்தது என்கை. அநுவாத கோடி – ஒருவர்‌ சொல்லி யிருக்கும்‌ வார்த்‌தையை இன்னொருவர்‌ அதையே மேற் கொண்டு சொல்லுதல்‌.

அது. எத்தாலே என்ன? அருளிச்‌ செய்கிறார்‌ ; ‘அர்ஜுனன்‌’ என்று தொடங்கி.
ஸூர்ணை -266-அர்ஜூநன்‌, க்ருஷ்ணனுடைய ஆனைத் தொழில்களாலும்‌, ருஷிகள்‌ வாக்யங்களாலும்‌, க்ருஷ்ணன் தன்‌ காரியத்திலே அதிகரித்துக்‌ கொண்டு
போருகையாலும்‌, இவனே நமக்குத்‌ தஞ்சமென்று துணிந்த பின்பு தன்னைப்‌ பற்றச்‌ சொல்லுகையாலே :-

அதாவது, இதுக்கு அதிகாரியான அர்ஜுநன்‌ இளமைப் பிராயந்தொடங்கி கிருஷ்ணனுடைய பொருந்தாதெல்லாம்‌ பொருந்தும்படி செய்யக்கூடிய செயல்களெல்லாம்‌ காட்டுமதான மனிதர்கள்‌ செய்யக்கூடிய செயல்களை மீறின செயல்களாலும்‌ “ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந;, நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌”
ஸ்ரீமான்‌ – பெரிய பிராட்டியோடு கூடின, க்ஷீரார்ணவ நிகேதந:– திருப்பாற்கடலை இருப்பிடமாகக்‌ கொண்ட,
ஏஷ: நாராயண:- இந்த க்ருஷ்ணன்‌, நாகபர்யங்கம்‌ ்‌ பாம்பணையான கட்டிலை, உத்ஸ்ருஜய – நன்றாகவிட்டு
மதுராம்புரீம்‌ – மதுரா பட்டணத்துக்கு, ஆகதோ ஹி – எழுந்தருளினாரன்றோ.
“புண்யா த்வாரவதீ யத்ர தத்ராஸ்தே மது ஸதெந : ஸாக்ஷாத்தேவ : புராணோ8ஸெள
ஸஹிதர்மஸ் ஸநாதந :
புண்யா
– பயனும்‌ ஸாதநமுமான,
த்வாரவதீ- துவராகையானது,
யத்ர – எவ்விடத்திலிருக்கிறதோ,
தத்ர – அவ்விடத்தில்‌,
மதுஸுூதந : – மது என்ற அஸூரனைக்‌ கொன்ற நாராயணன்‌,
அஸ்தே – இருக்கிறான்‌,
௮ணெள – இவர்‌,
ஸாக்ஷாத்‌ – ஸாக்ஷாத்‌ தேவனானவனும்‌, புராண :- அநாதியானவருமாகி,
ஸஹி – ப்ரஸித்தியான,
ஸநாதந தர்ம :– ஸநாதநமாயிருக்குமவர்‌ பழமையானவர்‌ என்றபடி.
“யத்ர நாராயணோ தேவ: பரமாத்மா ஸநாதந :, தத்ர க்ருத்ஸ்நம்‌ ஜகத்‌ பார்த்த தீர்த்தாந்யாயதநாநிச “
ஹே பார்த்த –
ஓ அர்ஜுநா,
யத்ர – எவ்விடத்தில்‌,
ஸநாதநஃ அநாதியாயும்‌,
பரமாத்மா – பரம்பொருளுமாயிருக்கிற,
நாராயணோ தேவ:-ஸ்ரீக்ருஷ்ண னிருக்கிறானோ,
தத்ர – அவ்விடத்தில்‌,
க்ருத்ஸ்நம்‌ ஜகத்‌ – அனைத்து உலகங்களும்‌,
தீர்த்தாநி – தீர்த்தங்களும்‌,
ஆயதநாநிச – அனைத்து தேவாலயங்களும்‌ இருக்கின்றன)
பவித்ராணாம்‌ ஹி கோவிந்த : பவித்ரம்‌ பரமுச்யதே, புண்யாநாமபி புண்யோ5$ ஸெள மங்களாநாஞ்சமங்களம்‌”
அஸெள கோவிந்த
-இந்த கோவிந்தன்‌, பவித்ராணாம்‌ ஹி -பவித்ரங்களுக்கெல்லாம்‌,
பரம்‌ பவித்ரம்‌ – மேலான புனிதப்‌ பொருளாக,
உச்யதே – சொல்லப்படுகிறார்‌.
புண்யாநாமபி புண்ய -புண்யங்களுக்கெல்லாம்‌ புண்யமும்‌,
மங்களாநாஞ்ச மங்களம்‌ –மங்களங்கட்கெல்லாம்‌ மங்களமும்‌ அவனே.
“யே ச வேத விதோ விப்ரா: யே சாத்யாத்‌ மவிதோ ஐநா :,
தே வதந்தி மஹாத்‌ மாநம்‌ க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌”
வேத வித:
வேதத்தை உணர்ந்தவர்களான, விப்ரா: பராஹ்மணர்கள்‌,
யேச – யாவருளரோ,
அத்யாத்மவித்‌ ஜநா :- வேதாந்த வித்யையை உணர்ந்த ஜநங்கள்‌,
யேச – யாவருளரோ,
தே – அவர்களெல்லாம்‌,
மஹாத்மாநம்‌ – பரமாத்மாவான, க்ருஷ்ணம்‌ – கிருஷ்ணனை,
ஸநாதநம்‌ தர்மம்‌ -(ஸநாதநமான)பழையதான தர்மஸ்வரூபியாக,
வதந்தி – சொல்லுகிறார்கள்‌.
“க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத் திரபி சாப்யய :, க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம்‌ இதம்‌ விச்வம்‌ சராசரம்‌”
லோகாநாம்‌
– உலகங்கட்கெல்லாம்‌, உத்பத்திஅபிச -படைக்கின்றவனும்‌ காக்கின்றவனும்‌,
அப்யய: அழிக்கின்றவனும்‌,
க்ருஷ்ண : ஏவஹி – க்ருஷ்ணனே,
இதம்‌ விச்வம்‌ – இந்த எல்லாமான,
சராசரம்‌ – சேதநாசேதநங்களும்‌, க்ருஷ்ணஸ்‌ யக்ருதே – கிருஷ்ணனை உத்தேசித்தே,
பூதம்‌ – உண்டாயிற்று.
என்று இவை முதலானவைகளாலே உயர்ந்ததும்‌ தாழ்ந்ததுமான தத்துவங்களின்‌ உண்மை யுணர்ந்தவர்களான, ருஷிகள்‌ வாக்யங்களாலும்‌, இளமை தொடங்கி நகர இருப்போடு, வநத்திலிருப்போடு எவ்வித வித்யாசமுமில்லாத கிருஷ்ணன்‌, தன்‌ கார்யத்துக்குக்‌ கடவனாய்‌ நோக்கிக்‌ கொண்டு போகையாலும்‌, இவன்‌ சொல்லுகிற உபாயங்களெல்லாம்‌ நமக்குத்‌ தஞ்சமல்ல; இவனே நமக்குத்‌ தஞ்சம்‌ என்று துணிந்த பின்பு “அப்படியானால்‌ என்னைப் பற்று’ என்று சொல்லுகையாலே

இது தன்னை முதலிலே உபதேசிக்கமைக்குக்‌ காரணம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ புறம்பு என்று தொடங்கி-
ஸூர்ணை – 267 – புறம்பு பிறந்தது எல்லாம்‌, இவன்‌ நெஞ்சை சோதிக்கைக்காக.
அதாவது – “யச்ச்ரேய : ஸ்யாந்‌ நிச்சிதம்‌ ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம்‌ சாதிமாம்‌ த்வாம்‌ ப்ரபந்நம்‌”
யத்‌ –
எதுவானது,
மே – எனக்கு,
ஸ்ரேய :– சிறந்த ஸாதநமாக,
நிச்சிதம்‌ – நிச்சயமாக,
ஸ்யாத்‌ – ஆகுமோ, தத்‌ – அதை,
ப்ரூஹி – சொல்லுக, தே – உனக்கு,
அஹம்‌ – நான்‌, சிஷ்ய: – மாணாக்கன்‌, த்வாம்‌ – உன்னை, ப்ரபந்தம்‌ – சரணமாக அடைந்த,
மாம்‌ – என்னை, சாதி -நல்லுணர்வையுடையவனாகச்‌ செய்வாய்‌. என்று இவனுக்கு உபாய உபதேசம்‌ செய்யத்‌ தொடங்குகிற அளவிலே, முதலிலே இத்தை உபதேசியாதே வேற்றுபாயங்களைப்‌ பரக்க நின்று உபதேசித்ததெல்லாம்‌ ‘இவன்‌ இவைகளிலேயே நிலை பெற்று- விடுவானோ அவைகளினுடைய குறைபாடுகளைப்‌ பார்த்து இப்போது சொன்ன இந்த உபாய உபதேசத்‌துக்கு அதிகாரியாமோ? என்று, இவன்‌ நெஞ்சை சோதிக்கைக்காக – என்கை.

ஆனால்‌, இவன்‌ வேண்டுமானால்‌ இவன்‌ நெஞ்சை சோதிப்பதற்காக வேற்றுபாயங்களை உபதேசித்தவனாகலாம்‌; வேத புருஷன்‌ அவற்றை விதிப்பான்‌ என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -268-வேத புருஷன்‌ உபாயாந்தரங்களை விதித்தது, கொண்டிப் பசுவுக்குத்‌ தடி கட்டி விடுவாரைப்‌ போலே, அஹங்கார மமகாரங்களால்‌ வந்த களிப்பு அற்று ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்காக.
அதாவது – ஆப்த தமன்‌ (மெய்ம்மை கண்டு அதையே சொல்லுபவன்‌) ஆன வேதபுருஷன்‌ “விஜ்ஞாய ப்ரஜீஞாம்‌ குர்வீத” (அறிவுடையனாய்க்‌ கேட்டல்‌, சிந்தித்தல்‌ முதலியவைகளால்‌ அந்தப்‌ பரமாத்மாவை அறிந்து நிரந்தர த்யானம்‌ பண்ணக் கடவன்‌) என்‌றும்‌, “ஓமித்யாத்மாநம்‌ த்யாயத’, ஆத்மாநம்‌ – பரமாத்வை, ஓம்‌ இதி- ஓம்‌ என்று த்யாயத – த்யாநம்‌ பண்ணுங்கள்‌. என்றும்‌, “ஆத்மாநமேவ லோகமுபாஸீத” ஆத்மாநம்‌ – ஸாதநமாகிய பரமாத்வையே, –லோகம்‌ – ஸாத்யமான பயனாக, உபாஸீத –உபாஸிக்கக்‌ கடவன்‌. என்றும்‌, “ஆத்மாவாஅரே த்ரஷ்டவ்ய ச ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய :”. அரே – ஏ சிஷ்யனே,-ஆத்மாவா-ஆத்மாவே, த்ரஷ்டவ்ய:-பார்க்கத் தக்கது, ஸ்ரோதவ்ய:– கேட்கத் தக்கது மந்தவ்ய :- மநநம்‌ செய்யத் தக்கது, நிதித்யாஸிதவ்ய: தர்சந ஸமாநாகார முண்டாம்படி தியானிக்கத் தக்கது, என்றும்‌ இவை முதலானவைகளாலே வேற்று உபாயங்களை மோக்ஷ ஸாதநமாக விதித்தது – பட்டி மேய்ந்து திரிகிற பசுவுக்கு தம் வழிப் படுத்துகைக்காகக்‌ கழுத்திலே தடியைக் கட்டி விடுவாரைப்‌ போலே, அஹங்கார மமகார வஸ்யனாய்க்‌ களித்துத்‌ திரிகிற இவனுக்கு, “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி:” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு – ஆயிரம்‌ ஐந்மங்களில்‌, தபோ ஜ்ஞாந ஸமாதிபி – கர்ம ஜ்ஞாந பக்திகளினால்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி, என்கிறபடியே சரீரத்தை வருத்துமதான கர்மாநுஷ்‌டாநம்‌ இந்த்ரிய ஐயம்‌ முதலான அரிய செயல்களால்‌ தாக்குண்டு அந்தக்‌ களிப்பும்‌ போய்‌ பகவத்‌ பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபஜ்ஞாதம்‌ பிறக்கைக்காக – என்கை.

“ஆனால்‌, இப்படி ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்குக்‌ காரணமான இவற்றை விட்டால்‌ குற்றம்‌ வாராதோ?’ என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -269 – ஸந்யாஸி முன்புள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்‌ இவற்றை விட்டால்‌ குற்றம்‌ வாராது.
அதாவது கடைசியான ஆஸ்ரமத்திலே தொடர்பு கொண்டவன்‌ முன்புள்ள ஆஸ்ரம தர்மங்களை விடுமா போலே, ஸித்தோபாயத்துக்கு வேறான உபாயங்களினுடைய ஸ்வரூப விரோதித்வ முதலானவைகளாலே ஸித்தோபாயத்தில்‌ இழியும்‌ இவ்வளவான ஜ்ஞாந பரி பக்குவமுடையவன்‌ இந்த வேற்று உபாயங்களை விட்டால்‌ தோஷமில்லை – என்றபடி.

‘இவைதான்‌ வேறு ப்ரகாரங்களாலே தொடர்புண்டாகையாலே, இவற்றில்‌ இவன்‌ தனக்குக் கர்ம ஜ்ஞான பக்‌தியாகிற செயலை நேரே விட்டானென்பதில்லை
என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -270 – இவன் தான்‌ இவை தன்னை நேராக விட்டிலன்‌-
வேறு ஸாதநங்களை விடுவது முன்னாக (பகவானான) ஸித்த ஸாதநத்தைக்‌ கைக் கொண்ட இந்த அதிகாரி தான்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற இவைகளைத் தன்‌ செயல்‌ மூலம்‌ இயல்பாக விட்டானென்‌பதில்லை.

அது எங்ஙனே? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -271 – கர்மம்‌ – கைங்கர்யத்திலே புகும்‌-ஜ்ஞாநம்‌ – ஸ்வரூப ப்ரகாசத்திலே புகும்‌; பக்தி – ப்ராப்ய ருசியிலே புகும்‌;ப்ரபத்தி – ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்திலே புகும்‌.
அதாவது தத்தம்‌ ஜாதிக்கும்‌ ஆஸ்ரமத்துக்கும்‌ பொருந்தியதாக இவன்‌ மேற் கொண்டொழுகும்‌ விதிக்கப்‌பெற்ற (கர்மம்‌) நற் செயல்‌ ஸாதநம்‌ என்ற புத்தி இன்றிக்கே பிறர்‌ விஷயத்தில்‌ கருணையாலே இவைகளை அனைவரும்‌ ஒழுக வேண்டுமென்று பிறருக்காகத்‌ தாம்‌ ஒழுகிக் காட்டுகையாலே, பகவானுச்கு மிகவும்‌ உகப்பாகையாலே, அவன்‌ ப்ரீதியை மூன்னிட்டுச்‌ செய்யும்‌ கைங்கர்யத்திலே உட் புகும்‌. “நுண்ணறிவு என்கிறபடியே தன் ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பெறும்‌ முகமாக பர ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்‌கரிக்கைக்கு உறுப்பான ஸுஷ்ம ஜ்ஞாநம்‌, ஸாதநம்‌ என்ற புத்தி கழிந்ததும்‌ ஸ்வரூபத்தினுடைய ப்ரகாசத்திலே உட் புகும்‌. “பக்த்யா த்வநந்யயா சக்ய.” (வேறிடத்திலில்லாது என்னிடமே கொண்டுள்ள சிறந்த பக்தியினாலே என்கிறபடியே பகவானை அடைவதற்கு ஸாதநமான பக்தியில்‌ அந்த ஸாதந புத்தி கழிந்தவாறே போஜநத்துக்குப்‌ பசி போலே பலமான கைங்கர்யத்துக்கு முன்‌ வரக் கடவதான ருசியிலே உட் புகும்‌.-பகவானை உபாயமாகக்‌ கொள்ளுகைக்கு அடையாளமான ப்ரபத்தி, ‘ஏக’ பதத்தில்‌ சொல்லுகிறபடியே ஸாதநம்‌ என்ற நினைவு கழிந்தவாறே அத்யந்த பரதந்த்ரமான வேறு தஞ்சமற்றதா யிருந்துள்ள ஸ்வரூபத்தினுடைய யதார்த்த ஜ்ஞாநத்திலே (உண்மை யறிவிலே) உட் புகும்‌ என்கை.

“பக்தி ப்ரபத்திகளிரண்டையும்‌ கழித்தால்‌ இவனுக்குப்‌ பலத்துக்கு ஸாதநமாவது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -272- ஒரு பலத்துக்கு அரிய வழியையும்‌, எளிய வழியையும்‌ உபதேசிக்கையாலே, இவை இரண்டும்‌ ஒழிய பகவத்‌ ப்ரஸாதமே உபாயமாகக்‌ கடவது –
அதாவது, பகவானை யடைதலாகிற ஒரு பலத்துக்கு “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷ தபோ ஜ்ஞாந ஸமாதிபி : நராணாம்‌ ஷீண பாபாநாம்‌ க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”. (ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷ – முன்புண்டான ஆயிரம்‌ பிறவிகளில்‌ செய்த கர்ம ஜ்ஞாந பக்தியினால்‌ சேதநர்களுடைய பாபங்கள்‌ நசிக்கப்‌ பெற்று கிருஷ்ணனிட த்தில்‌ பக்தி உண்டாகப்பெறுவர்கள்‌. ) என்கிறபடியே அநேக ஐந்மங்களிலே செய்கிற கர்ம ஜ்ஞாநம்‌ முதலான அங்கங்களாலே ஸாதிக்கப்படுவதாலே அரியதாயிருந்துள்ள பக்தி மார்க்கத்தையும்‌, ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்று கர்மம்‌ முதலான அனைத்திலும்‌ செயல்படுதலை தவிர்க்கக் கூடியதை முன்னிட்டுக்‌ கொண்டிருக்கிற ஒரே தடவை
செய்யக் கூடியதாகையாலே எளிதா யிருந்துள்ள ப்ரபத்தி மார்க்கத்தையும்‌ உபதேசிக்கையாலே, உபாயங்களில்‌ அருமை எளிமை என்பதில்‌ நோக்கின்றி அவற்றை ஒரு காரணமாகக்‌ கொண்டு பலந் தருபவனான இறைவனுடைய கருணையே முக்கியமாகையாலே பக்தி ப்ரபத்திகளாகிற இவை இரண்டும்‌ ஒழிய பகவானுடைய கருணையே உபாயமாகக்‌ கடவது: ‘ஆனாலும்‌, பலன்‌ பெறுகைக்கு இவன்‌ வேண்டாவோ?” (சேதனன்‌) பக்கலிலும்‌ ஏதேனும்‌ உண்டாக என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -273. பேற்றுக்கு வேண்டுவது – விலக்காமையும்‌ இரப்பும்‌ –
அதாவது, பலன்‌ பெறுகைக்குச்‌ சேதநன்‌ பக்கல்‌ உண்டாக வேண்டுவது – தன்‌ முயற்சியாலே அவன்‌ பண்ணும்‌ ரக்ஷணத்தை விலக்காதொழிகையும்‌, அது பயனாக அமைவதற்கு உறுப்பான ஜீவனுடைய ப்ரார்த்தனையும்‌ என்கை.

‘இங்ஙனன்றிக்கே, இவன்‌ பக்கலிலும்‌ சில நற் செயல்கள்‌ உண்டானால்‌ ஆகாதோ?’ அது உபாயமாக யிருக்கிற பகவானுக்கு வெறுப்புக்கிடம்‌ என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -274- சக்ரவர்த்தித்‌ திருமகன்‌, பாபத்‌தோடே வரிலும்‌ அமையுமென்றான்‌; இவன்‌, புண்யத்‌தைப்‌ பொகட்டு வர வேணுமென்றான்‌.
அதாவது, “ராமோ விக்ஹவாந்‌ தர்ம“(ராமன்‌ தர்மமே வடிவானவன்‌) என்கிற சக்ரவர்த்தி திருமகன்‌ ” யதி வா ராவணஸ்‌ ஸ்வயம்‌” (ராவணனேயானாலும்‌) என்று ‘பாபிஷ்டனான ராவணனே யானாலும்‌ அழைத்து வாரும்‌’ என்கையாலே பாபம்‌ பலத்துக்குக்‌ காரணமென்று நினைக்கைக்கு உரிய தல்லாமையாலே, “பாபத்தோடே வரிலும்‌ கைக்‌ கொள்ளுகிறேன்‌” என்றான்‌; “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌” (கிருஷ்ணனே அநாதியான பழமையான தர்மம்‌) என்கிற இவன்‌ “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய ” என்கையாலே பலத்துக்குக்‌ காரணமென்று
நினைத்தற் குரித்தான புண்யத்தை போட்டு விட்டு வரவேணுமென்றான்‌ என்கை.-ஆகையால்‌, வேறு ஒரு உபாயத்தின்‌ துணைக் கூட்டுதலை பொறுக்காதவனான உபாய பூதனுக்கு இவன்‌ பக்கல்‌ தன்‌ முயற்சி மூலமாக வரும்‌ நற் செயல்கள்‌ எம்பெருமானுக்கு இஷ்டமில்லாதது என்று கருத்து.

இவ் வர்த்தத்தைக் கேட்டு அதன் படியே அநுஷ்டிக்க இழிந்தவனுக்கு -ஆஸ்திகனாய்‌ உஜ்ஜீவித்தல்‌ அல்லது நாஸ்திகனாய்‌ நசித்தல்‌ ஒழிய, நடுவில்‌ நிலை யில்லை என்பதைப்‌ பூர்வாசார்ய வசநத்தால்‌ அறிவிக்கிறார்‌.
ஸூர்ணை -275- “ஆஸ்திகனாய்‌ இவ் வர்த்தத்தில்‌ ருசி விஸ்வாஸங் களுடையனாய்‌ உஜ்ஜிவித்தல்‌, நாஸ்திகனாய்‌ நசித்தல்‌ ஒழிய நடுவில்‌ நிலை யில்லை” என்று பட்டர்க்கு எம்பார்‌ அருளிச்‌ செய்த வார்த்தை.
அதாவது – ‘இவ் வர்த்தத்தை மேற் கொண்டவன்‌ பகவத்‌ ப்ரபாவத்தால்‌ “இது ஸத்யம்‌’ என்ற சாஸ்த்ர நம்பிக்கை யுடையவனாய்‌ இவ் வர்த்தத்தில்‌ சுவையும்‌ “இது தப்பாது’ என்கிற விஸ்வாஸ முடையவானாய்‌ உஜ்ஜீவித்தல்‌; சாஸ்த்ரங்களெல்லாம்‌ ஒரு தலையும்‌ இது ஒரு தலையுமாய்‌ இப்படி இருப்ப தொன்றுண்டோ? என்று நாஸ்திகனாய்‌ இத்தை அநாதரித்து நசித்தல்‌ தவிர, நடுவில்‌ நிலை யில்லை’ என்று ஸகல சாஸ்த்ர பாரங்கதரான பட்டருக்கு உண்மை உணர்ந்ததையே சொல்லும்‌ உண்மை யறிந்தவரான எம்பார்‌ அருளிச்‌ செய்த வார்த்தை – என்கை.

மஹா விஸ்வாஸமான நம்பிக்கை யற்றவனுக்கு இதில்‌ தொடர்பு பிறப்பு இறப்பாகிற (விநாசத்துக்குரித்தாம்‌) அழிவுக்கு உரியதாம்‌’ என்னுமத்தை உதாரணத்தோடு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -276- வ்யவஸாயம்‌ இல்லாதவனுக்கு இதில்‌ அந்வயம்‌, ஆமத்தில்‌ போஜநம்‌ போலே ,
அதாவது – இதில்‌ சொல்‌லுகிற விட வேண்‌டியவை, பற்ற வேண்டியவை களுக்கீடான நம்பிக்கை இல்லாதவனுக்கு இதில்‌ உண்டான தொடர்பு, அஜீரண நிலையில்‌ செய்த போஜநம்‌ மரணத்துக்குச்‌ காரணமாமா போலே அழிவாகிற மறு பிறவிக்குக்‌ காரணமாய்‌ முடியுமென்கை.

இதற்கு அதிகாரிகள்‌ இன்னாரென்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -277- “விட்டு சித்தர்‌ கேட்டிருப்பார்‌” என்கிறபடியே அதிகாரிகள்‌ நியதர்‌.
“செம்மை யுடைய திருவரங்கர்‌ தாம்‌பணித்த மெய்ம்மைப்‌ பெரு வார்த்தை விட்டு சித்தர்‌ கேட்டிருப்பர்‌’ என்று ‘முக் கரணங்களாலும்‌ செவ்வியராய்‌, அவற்றை செயல் மூலம்‌ காட்ட வேணுமென்று கோயிலிலே அரவணையிற் கண்‌ வளர்ந்தருளினவர் தாம்‌, அர்ஜுநனைக்‌ கருவியாகக்‌ கொண்டு திருத் தேர்த் தட்டிலே நின்று அருளிச் செய்த யதார்த்தமுமாய்‌ (உண்மையான அர்த்தத்தை யுடையதாய்‌) சீரியதுமாய்‌ சுலபமுமான “மாமேகம்‌ சரணம்‌
வ்ரஜ என்கிற வார்த்தையைப்‌ பெரியாழ்வார்‌ கேட்டு, “அதன் படியே ஒழுகுவார்‌’
என்கிறபடியே இவ் வர்த்ததுக்கு அதிகாரிகள்‌ இது கேட்டால்‌ இதன் படியே நியதமாக ஓழுகுவார்கள்‌ என்கை.

இவ்வர்த்தத்தின்‌ படியே ஓழுகுமவர்களான ஆழ்வார்களுடைய அருளிச்‌ செயலில்‌ இதுக்கு அர்த்தமாக அநுஸந்திக்கப்‌ படுமவற்றை அருளிச்‌ செய்து இது தன்னை நிறைவு பெறுத்துகிறார்‌.
ஸூர்ணை -278 – “வார்த்தை யறிபவா்‌” என்கிற பாட்டும்‌, “அத்தனாகி” என்கிற பாட்டும்‌ இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்‌
அதாவது – “வார்த்தை யறிபவர்‌ – பேர்த்த பிறப்போடு நோயொடு மூப்பொடு இறப்பவை பேர்த்துப்‌ பெருந்துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன்‌ தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணித்‌ தெளிவுற்று மாயவற்‌காளன்றி ஆவரோ?” என்று, “மா மேகம்‌ சரணம்‌ வ்ரஜ – ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்ற நல் வார்த்‌தையை அறியுமவர்கள்‌, பரணிக் கூடு வரிந்தாற்போலே இவ் வாத்மாவைச்‌ சூழ்ந்து பொதிந்து கொண்டு கிடக்கிற
ஐந்மங்களோடும்‌, அவை புகுந்த விடத்தே புகக் கடவதான வ்யாதியோடும்‌ அப்படி யிருந்தாலும்‌ பரவாயில்லை, நாம்‌ சில நாள்‌ வாழலாம்‌ என்று இருக்க முடியாதபடி திடீரென்று இடி விழுந்தாற்போலே வரக் கூடிய நரையும்‌ மூப்போடு கூடிய கிழட்டு சரீரத்தில்‌ உண்டாகக்கூடிய துன்பமும்‌, அங்ஙனே யாகிலும்‌ இருக்க வொண்ணாதபடி (அதையும்‌ பொறுத்துக்‌ கொண்டு இருந்தாலும்‌,) அடுத்தபடி வரக் கூடிய மரண அவஸ்தையும்‌, இப்படிப்பட்ட இவனுக்கு விருப்பமற்ற அழிவைத் தரக் கூடிய அவற்றை யுத்தியாகத்‌ தொழில்‌ செய்ய வல்லவர்‌ நெடுஞ்சுவர்‌ தள்ளுமா போலே தள்ளி, அவை போன பிறகு வரக் கடவதான கைவல்யமாகிற பெருந் துன்‌பத்தை நிர் மூலமாகப்‌ போக்கி, பாத தூளி போலே தன்‌ திருவடிகளில்‌ கீழே சேரும்படி. பண்ணி மீண்டு வருகை இல்லாதபடி அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணி மஹா விஸ்வாஸமுடையராய்க்‌ கொண்டு தாங்கள்‌ தஞ்சமென்று
பற்றுதற்குரியவனாய்‌ விரோதிகளைப்‌ போக்க வல்ல வியப்புக்குரிய எம்பெருமானைத்‌ தவிர வேறொருவர்க்கு ஆளாவரோ? – என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்த “வார்த்தை யறிபவர்‌” என்கிற இந்தப்‌ பாட்டும்‌”முத்தனார்‌ முகுந்தனார்‌ ஓத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை
யாட்‌ கொள்வான்‌ – அத்தனாகி அன்னையாகி ஆளும்‌
எம்பிரானுமாய்ப்‌ புகுந்து – நம்‌ முள்‌ மேவினார்‌; ஏழை
நெஞ்சமே! எத்தினாலிடர்க்‌ கடல்‌ கிடத்தி”
என்று ‘புன்மையாதும்‌ தீண்டாதவராகையாலே ஸம்ஸார வாசனையும்‌ தொடாதவராய்‌, முக்தியை அருளக் கூடியவரும்‌அனைத்துடம்புகளில்‌ உறைவதான ஆத்மாக்களும்‌, ஜ்ஞாநத்தால்‌ ஒருபடிப்பட ஓத்து தேவர்‌, மனிதர்‌, விலங்கு தாவரம்‌ ஆகிய ரூப பேதத்தாலே ஒவ்வாமலிருக்கும்‌ – பலவகைப்பட்டபிறவிகளைப்‌ போக்கி, நித்ய .ஸம்ஸாரிகளாய்க் கிடந்த)நிரந்தரமாக பல பிறவிகளில்‌ கிடந்த நம்மை நித்ய ஸுரிகளைக்‌ கொள்ளும்‌ அடிமையைக்‌ கொள்ளுகைக்காகநன்மையே விளைவிக்கும்‌ பிதாவாயும்‌ பிரியமே விளைவிக்கும்‌ மாதாவாயும்‌ இருந்து அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமியாயும்‌ இப்படி எல்லாவித உறவுமாய்‌, நம்முடைய தாழ்வையும்‌ தம்முடைய பெருமையையும்‌ பாராதே நம்முடைய பாரமனைத்தும்‌ தாமே ஏறிட்டுக்‌ கொண்டு செய்வாராகத்‌ தாழ்வுக்குரிய நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப்‌ பொருந்தினார்‌; அறிவிலியான நெஞ்சே! நம்முடைய நன்மையை அறிகைக்கு நாம்‌ முற்றின அறிவாளியோ? அவன்‌ அறிவில்லாதவனோ ? நமக்கு நாமே நன்மையைச்‌ செய்து கொள்ள ஆற்றலுடையவரோ, அவன்‌ ஆற்றலில்லாதவனோ, நாம் நம்‌ கார்யஞ்‌ செய்து கொள்ள உரியவரோ, அவன்‌ உரிமை யற்றவனோ, தன்‌ மேன்மை பாராதே தாழ நின்று நமக்கு உதவி புரிபவனா யிருக்க எதற்காக நீ துன்பக் கடலில்‌ கிடக்கிறது? என்று திருமழிசைப் பிரான்‌ அருளிச்‌ செய்த
அத்தனாகி” என்கிற பாட்டும்‌ இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக நினைக்கக் கடவது என்கிறார்‌.
(அரிமா நோக்கம்‌) ஆக, இந்த சரம ஸ்லோகத்தால்‌ 1-பற்றுகைக்கு அங்கமாகக்‌ கடவதான கர்ம ஜ்ஞான பக்திகளாகிற தர்ம விசேஷங்களையும்‌, 2-அந்தத்‌ தர்மங்களை விடுவதினுடைய விதத்தையும்‌, 3-அந்தத்‌ தர்மங்களை விடுவதற்கு முன்பாகப்‌ பற்றும்‌ பகவத்‌ விஷயத்தினுடைய எளிமை முதலான குணங்களோடு கூடிய குணத்தின்‌ சிறப்பையும்‌, 4-அந்த குணங்களோடு கூடின பொருளான எம்பெருமானுடைய வேறு துணையைப்‌ பொறாத தனக்குத் துணையாக வேரொன்றை விரும்பாத தன்மையையும்‌, 5-பிறிதொன்றையும்‌ விரும்பாத எம்பெருமானுடைய தஞ்சமாகுந்‌ தன்மையையும்‌, 6-அவனையே உபாயமாகப்‌ பற்றுகையையும்‌, 7-இப்படிப் பற்றின உபாயத்தினுடைய (ஜஞான சக்தியாதி) அறிவாற்றல்‌ முதலான குணங்களின்‌ கூட்டத்தையும்‌, 8-அந்தக்‌ குணங்களோடு கூடியவனான எம்பெருமானிடத்தில்‌ தன்னை ஸமர்ப்பித்த அதிகாரியையும்‌,. 9-இந்த அதிகாரிக்கு விரோதியான பாபக்‌ கூட்டத்தையும்‌, 10-அந்தப்‌ பாபத்தை போக்கக் கூடிய விதத்தையும்‌, 11-அந்தப்‌ பாவத்தைப்‌ போக்கும்‌ எம்பெருமானை பற்றின அதிகாரியினுடைய பாரமற்ற தன்மையையும்‌ இது வரை இந்தச்‌ சரம ஸ்லோகத்தால்‌ சொல்லப்பட்டதாகும்‌.

மணவாள மாமுநிகள்‌ அருளிச்செய்த முமுக்ஷ ப்படி வ்யாக்யானத்தின்‌ தெளிவுரை முற்றுப்‌ பெற்றது.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading