மோஷ இஷ்யாமி -முக்தனாம் படி பண்ணக் கடவன் –சூரணை -254-
அநந்தரம் –
சதுரத்த பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மோஷ இஷ்யாமி-என்று -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்
அதாவது –
இவற்றில் நின்றும் விடப் பட்டவனாம் படி பண்ணக் கடவன் -என்கை-
—————————————
ணி-ச்சாலே -நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டு
போம் காண் -என்கிறான் –சூரணை -255-
அதாவது – இஷ்யாமி -என்கிற ணிச்சாலே ஸ்வயம் கர்த்தா வாகை அன்றிக்கே –
தான் பிரயோஜக கர்த்தாவாய் விடுவிக்கக் கடவேன் -என்கையாலே
நானும் இதுக்கு ஒரு யத்னம் பண்ண வேண்டா –
நீயும் இதுக்கு பிரார்த்திக்க வேண்டா –
நீ என்னை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே -உன்னைக் கண்டு தாமே
பயப்பட்டு -கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -பெரிய திரு அந்தாதி -54-
என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப் போம் காண்
என்று அருளிச் செய்கிறான் -என்கை-
(வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-)
———————————————————-
என்னுடைய நிக்ரஹ பலமாய் வந்தவை
நான் இரங்கினால் கிடக்குமோ -என்கை –சூரணை -256-
இப்படி அருளிச் செய்ததின் கருத்தை வெளி இடுகிறார் –
அதாவது –
பாபங்கள் ஆகிறன-குப்பையிலே ஆமணக்கு போலே மிடற்றை பிடிப்பது
ஒன்றன்று இறே -சேதனன் பண்ணின கர்மங்கள் ஷண த்வம்சிகள் ஆகையாலே –
அப்போதே நசித்துப் போம் -அஞ்ஞன் ஆகையாலே கர்த்தாவான இவனும் மறந்து போக –
ஸ்வதஸ் சர்வஞனாய் ஓன்று ஒழியாமல் உணர்ந்து இருந்து ப்ராப்த காலங்களிலே
தப்பாமல் நிறுத்து அனுபவிக்கிற என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையாலே -அந்த நிக்ரஹ
பலமாய் வந்தவை -நிக்ரஹத்துக்கு பிரதி கோடியான அனுக்ரஹத்தை நான் பண்ணினால்
அவ் விஷயத்தின் பின்னே கிடக்குமோ -என்கை- இதுக்கு கருத்து என்கிற படி –
—————————————————————-
அநாதி காலம் பாபங்களைக் கண்டு நீ பட்ட பாட்டை
அவை தாம் படும் படி பண்ணுகிறேன் –சூரணை -257-
தன்னடையே விட்டு போம் என்கிற இடத்தில் அபிப்ராயத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
அநாதியான காலம் எல்லாம் துக்க அவஹமான பாபங்கள் வந்து மேலிடப் புக்கால் –
அவற்றைக் கண்டு நீ நடுங்கின நடுக்கம் எல்லாம் -மத் ஆஸ்ரயண ராஜ குல மகாத்மயம் உடைய –
உன்னைக் கண்டு அவை தான் குடல் கரிந்து நடுங்கும் படி பண்ணக் கடவேன் -என்கை –
அவை தானே விட்டு போம்படி பண்ணுகையாவது-இவை நமக்கு முன்பு உண்டாய் –
கழிந்தது என்று தோற்றாத படி போக்கை-அதாகிறது -இவை ஸ்ம்ருதி விஷயம் ஆனாலும் –
தன்னுடைய ஸ்வபாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்னம் கண்டால் போலே இவை
நமக்கு வந்தேறி யாய் கழிந்தது என்று இருக்கையும் -ஸ்ம்ருதியாலே துக்கம் அநு வர்த்தியாய் இருக்கையும் –
என்று தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்தது இவ் இடத்திலே அனுசந்தேயம் –
————————————————————
இனி உன் கையிலும் உன்னை காட்டித் தாரேன் -என் உடம்பில் அழுக்கை
நானே போக்கிக் கொள்ளேனோ –சூரணை -258-
மோஷ இஷ்யாமி -என்கிற உத்தமனில் அபிப்ரேதமான
ஓர் அர்த்த விசேஷத்தை இனி அருளிச் செய்கிறார் –
அதாவது —
இத்தனை காலமும் — நம் கார்யத்துக்கு நாம் கடவோம் -என்று நீ திரிகையாலே
தன் கார்யம் தானே செய்து கொள்கிறான் -என்று இருந்த இத்தனை போக்கி –
எனக்கு நீ சரீரிதையா சேஷம் -என்று அறிந்து என் பக்கலிலே நியஸ்த பரனான பின்பு –
உன்னுடைய பாப விமோசன அர்த்தமான யத்னம் நீ பண்ணிக் கொள் என்று –
உன் கையிலும் உன்னைக் காட்டி தாரேன் –
எனக்கு சரீர பூதனான உன்னுடைய அவித்யா ரூப மாலின்யத்தை
சரீரியான நானே போக்கிக் கொள்ளேனோ என்கை –
யத்ன பலித்வங்கள் இரண்டும் தன்னது என்று தோற்றுகைகாக-
ஆகையால் உன்னுடைய விரோதி நிவ்ருத்தியும் -அபிமத பிராப்தியும் -இரண்டும்
பலமாய் இருக்க -ஒன்றைச் சொல்லுவான் என் என்னில் மற்றையது தன்னடையே வருகையாலே
சொல்லிற்று இல்லை -மாமேவைஷ்யசி -என்று கீழில் உபாயத்துக்கு சொன்ன பலம் ஒழிய
இவ் உபாயதுக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்று இல்லை என்னவுமாம் –
ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில் -அது அதிகம் ஆகையாலே சொல்லிற்று –
விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் சித்தமாய் இருக்கையாலே -தனித்துச் சொல்ல வேண்டா இறே –
என்று ஸங்க்ரஹேண ஸ்ரீ யப்பதி படி ரஹஸ்யத்திலும்-விஸ்தரேண -பரந்த படி தனி சரமங்களிலும் அருளிச் செய்த
சங்கா பரிகாரங்கள் இவ் இடத்தில் அனுசந்தேயம் –
————————————————
மாஸூச -நீ உன் கார்யத்தில் அதிகரியாமையாலும் –
நான் உன் கார்யத்தில் அதிகரித்துப் போருகையலும் –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண்-என்று
அவனுடைய சோக நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கிறான் –சூரணை-259-
அநந்தரம் –
சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மா ஸூச -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ உன் கார்யத்தில் அதிகரித்து நின்றாய் ஆகில் -நம் கார்யத்துக்கு என் செய்வோம் -என்று
கரைந்து சோகிக்க ப்ராப்தம் –
நான் உன் கார்யத்தில் அதிகரியாது இருந்தேன் ஆகில் -நம் கார்யத்தில் இவன் உதாசீனனாய்
இரா நின்றான் -நாம் எங்கனே உஜ்ஜீவிக்க போகிறோம் -என்று சோகிக்க ப்ராப்தம் –
இங்கன் இன்றிகே யத்ன பலித்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாத படியான
ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து -நீ உன் உடைய ரஷண கார்யத்தில் அதிகரியாது ஒழிகை யாலும் –
உன்னுடைய ரஷணத்தில் யத்ன பலித்வங்கள் இரண்டும் என்னதாம் படி ஸ்வாமியான நான்
உன் பக்கலில் தடை அறுக்கையாலே-உன்னுடைய ரஷண கார்யத்தில் அதிகரித்து கொண்டு போருகையாலும் –
உனக்கு சோகிகைக்கு நிமித்தம் இல்லை காண் என்று -முன்பு சோக விசிஷ்டனாய் நின்ற அவனுடைய
சோகத்தின் உடைய நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான் -என்கை
இத்தால் -அஹம் -த்வா-என்கிற பதங்களால் சொல்லப் பட்ட -ரஷக ரஷ்ய பூதரான –
இவருடைய ஸ்வபாவத்தையும் அனுவதித்துக் கொண்டு சோகாபநோதனம் பண்ணின படியை –
அருளிச் செய்தார் ஆயிற்று –
————————————————————-
நிவர்தக ஸ்வரூபத்தைச் சொல்லி -நிவர்த்யங்கள் உன்னை வந்து மேலிடாது என்று சொல்லி –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண் -என்கிறான் –சூரணை -260-
இனிமேல் நிவர்தகனாக தன்னுடையவும் -நிவர்தங்களான பாபங்களின் உடையவும்
ஸ்வபாவங்களைச் சொல்லி சோகாபநோதனம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –
அதாவது –
அஹம் என்று -சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனாய்க் கொண்டு -விரோதி நிவர்தகனாய் இருக்கிற –
தன் ஸ்வரூபத்தை சொல்லி –
த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று ணி ச்சால் நிவர்த்யங்களான பாபங்கள் உன்
தன்னைக் கண்டு தானே அஞ்சி ஓடி போம் ஒழிய -என்னையே உபாயமாக ஸூவீகரித்து இருக்கிற உன்னை
வந்து மேலிடாது என்னும் இடம் சொல்லி –
அநந்தரம் -மாஸூச -என்கையாலே –
இப்படி யான பின்பு உனக்கு சோகிக்க நிமித்தம் இல்லை -என்கிறார்-என்கை –
———————————————————
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்கிறான்
இத் தலையில் விரோதியைப் போக்குகைக்கு தான் ஒருப்பட்டு நிற்கிற படியை அறிவித்து –
இவனுடைய சோகத்தை போக்குகிறமையை-அபியுக்த யுக்தியை நிதர்சனம் ஆக்கிக் கொண்டு
அருளிச் செய்கிறார் –சூரணை -261
அதாவது –
திரு மழிசை பிரான்-எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே-திரு சந்த விருத்தம் -115- என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வேஸ்வரன் இத்தலையில் விரோதியை போக்கி அடிமை கொள்வதாக ஏன்று கொண்டு
வந்து புகுந்து இருக்கிற படியைச் சொல்லி -இனி எதுக்காக நீ துக்க சாகரத்தில் அழுந்துகிறாய்-என்றால் போலே
ஈஸ்வரனும் இப்போது இத் தலையில் சகல பாபங்களையும் போக்குவதாக தானே ஏறிட்டு கொண்டமையை
அறிவித்து -இனி எதுக்காக சோகிக்கிறாய்-என்று இவனை குறித்து அருளிச் செய்கிறான் -என்கை–
(அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-)
—————————————————————–
பாபங்களை நான் பொறுத்து -புண்யம் என்று நினைப்பிடா நிற்க –
நீ சோகிக்க கடவையோ –சூரணை -262-
இனி இவனுடைய சோகம் மறுவலிடாமல் போக்குகைக்கு உறுப்பானதொரு பகவத் அபிப்ராய
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ செய்த பாபங்கள் நான் முந்துற என்னுடைய ஷமா விஷயமாக்கி –
அவ்வளவும் அன்றிக்கே -பின்னை உன் பக்கல் எனக்கு உண்டான -வாத்சல்யத்தாலே –
செய்த குற்றம் நற்றமாகவே கொள் -திரு சந்த விருத்தம் -111
செய்தாரேல் நன்றே செய்தார் –பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-
என்கிறபடியே அவை தன்னை பாபமாக நினையாதே
புண்யம் என்று நினைப்பிடா நிற்க இனி நீ சோகிக்க கடவையோ -என்கை-
ஆக
இவ் உத்தர அர்த்தத்தில் அஞ்சு பதத்தாலும் –
நிவர்த்தக ஸ்வரூபத்தையும் –
நிவர்த்திய ஆஸ்ரயத்தையும்-
நிவர்தங்களான பாபங்களையும் –
அவற்றினுடைய நிவ்ருத்தி பிரகாரத்தையும் –
தத் கார்யமான சோக நிவ்ருத்தியையும்-
சொல்லிற்று ஆயிற்று –
(வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-)
(தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply