Archive for the ‘முதல் திருவந்தாதி’ Category

முதல் திருவந்தாதி-பாசுரம் -90 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தைக் கொண்டு
அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு
அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று
அவன் விரோதியைப் போக்கித்
தன்னைக் கொடுத்த படி
சொல்லுகிறார் –

நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய
ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும்
வாத்சல்யத்தையும்
அனுசந்திக்கிறார் –

——————————————

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

———————————————-

வியாக்யானம் –

வரத்தால் வலி நினைந்து –
சர்வேஸ்வரன் கொடுக்கப் பெற்ற தேவதைகள் பக்கலிலே
வரத்தைப் பெற்று
அத்தால் வந்த பலத்தை அனுசந்தித்து
இருந்தான் ஆய்த்து-
மெல்லியத்தை உறவிதாகக் கொண்டு  பிரமித்து இருந்தான் ஆய்த்து –

வர பலத்தை அனுசந்தித்து ஈச்வரனிலும் தன்னைப் பெரியானாக அபிமானித்து இருந்தான்
அத்தனை அல்லது
வரம் கொடுத்தவர்கள் உடைய சக்தி
பகவத் அதீனம் என்று அறிந்திலன் –

மாதவ –
சர்வராலும் சமாஸ்ரயணீயன் ஸ்ரீ யபதி போலே
இவனும்
இவனுக்கு வரம் கொடுத்தவர்களும்
வணங்கும் விஷயம் -கிடீர் –

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே –
தேவர் திருவடிகளை ஆதரித்துக் கொண்டு ஆஸ்ரயித்திலன்-என்றே

அதாகிறது –
உன் பக்கலிலே ஒரு சாத்ரவம் பண்ணினான் என்னுமது கொண்டு அன்று இறே
சிறுக்கன் பக்கலிலே ப்ராதிகூல்யம்  பண்ணித் தப்ப நின்றான் -என்னும் அத்தாலே இறே -என்னுதல்

அன்றிக்கே
அவன் தேவர்க்குப் பண்ணுவதொரு அபகாரம் உண்டோ –
தன் பேறு தான் இழந்தான் என்னுமது கொண்டு இறே -என்னுதல்

தப்பச் செய்தோம் என்னாமை -என்னுதல்

உன் வஸ்து அழியாமைக்கு -என்றுமாம் –

உரத்தினால் –
வரத்தினால் வந்த வலியை-
நினைத்து இருந்தவன் கூட
பிற்காலிக்கும் படியான
பலத்தை உடையானாய்க் கொண்டு –

ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை –
ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய இரணியனை –
கீழே வர பலம் சொல்லிற்று
இங்கே புஜ பலம் சொல்லுகிறது  –

உரத்தினால் ஈர் அரியாய் –
மிடுக்காலே ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்

அன்றிக்கே
பெரிய சத்ரு -என்னுதல்

அன்றிக்கே
உரத்தினால் ஈர் அரியாய்  நீ இடந்தது ஊன் -என்று மேலே கூட்டவுமாம் –

ஒரரியாய் –
நாட்டில் நடையாடாத அத்விதீயமான நரசிம்ஹம் -என்னுதல்

அன்றிக்கே
இச் செயலை அனுசந்திக்க ஆஸ்ரிதர்க்கு எப்போதும் கிட்டும்படியான நரசிம்ஹமுமாய்
அதாகிறது
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு இவ்வருகு உள்ளார் அடங்க இச் செயலை அனுசந்தித்து
அச்சம் கெட்டு இருக்கும்படியாய் இருக்கை-

ஓர் அரியாய்
காமத்வ ஜாயதே -என்று
தன்னுடைய இச்சையாலே பிறந்த நரசிம்ஹம் -என்றுமாம்  –

நீ யிடந்த தூன் –
வணங்காமையாலே அவனுக்கு ஹிதமாக இடந்தான்
ஆத்மாவுக்கு ஸ்வபாவம் வணக்கமே இறே

தொழும் இவள் -திருவாய்மொழி -6-5-1-
ப்ரஹ்வாஞ்ஜலி புடஸ்த்தித்த
நம இத்யேவ வாதின  –
கைகேயி தோற்றினாப் போலே இறே உடம்பு –

நீ அவனுடைய மார்பைப் பிளந்தது
நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே அன்று இறே -என்றபடி –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -89 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

கீழ்ப் பிறந்த லாபமானது திரியட்டும்
பின்னாட்டும்படி சொல்லுகிறார் –

நாட்டார்க்கு நினைக்கையில் உள்ள அருமை போரும்
இவர்க்கு இவ்விஷயத்தை மறைக்கைக்கு –

——————————-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேச்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

——————————-

வியாக்யானம் –

எனக்காவார் ஆரோருவரே –
எனக்கு ஒப்பாக வல்லார் ஒருவர் உண்டோ
என் தான்
ஈஸ்வரன் உமக்கு ஒப்பாக மாட்டானோ -என்னில்

எம்பெருமான் தனக்காவான் தானே மற்றல்லால் –
சர்வேஸ்வரன் தான் தனக்கு ஒப்பாம் இத்தனை போக்கி
எனக்கு ஒப்பாக வல்லனோ –

அதாகிறது
சேஷ பூதனாய் இப் பேறு பெற்றான் ஒருவன் அல்லனே
என்னைப் போலே ஒருவன் பிரசாதத்தால் வந்த ஏற்றம் உண்டோ அவனுக்கு

நீர் இங்கனே குறைவற்றாரைப் போலே சொல்லுகிறது என்
சாஷாத் கரிக்கப் பெறாத குறை உமக்கு இல்லையோ -என்னில்
அக்குறை போலியைக் கண்டு தீரப் பெற்றேன் என்கிறார்

அவனோடு சத்ருச பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன்
ஓர் அடி அன்றோ குறைய நின்றது –

புனக்காயாம் பூ மேனி –
புனத்திலே நின்ற
செவ்வியை உடைத்தான
காயாம் பூவினுடைய நிறம் –

காணப் பொதியவிழும் பூவைப் பூ –
காணக் காண
அலருகிற பூவைப் பூவினுடைய நிறம்

இவை –
மா மேனி காட்டும் வரம் –
அந்த ப்ரார்த்திதமான வடிவைக் காட்டா நின்றன  -என்னுதல்

அன்றிக்கே –
வரிஷ்டமாகக் காட்டா நின்றன -என்றுமாம்
அதாகிறது –
அழகிதாக காட்டா நின்றது -என்கை –

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும்
காண்டோறும் பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் –
அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று -பெரிய திருவந்தாதி -73-என்னக் கடவது இறே –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -87/ 88 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

சர்வேஸ்வரன் இப்படி வந்து சந்நிஹிதன் ஆன பின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடைத்து ஓடிப் போக வமையும் -என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -என்னுமா போலே –

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேஸ்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம்
(அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பது தானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனி மேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யம கிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்க முடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்

இனியார் புகுவார் எழு நரக வாசல் –
எழு நரக வாசல் –இனியார் புகுவார் –
எழு வகைப் பட்டிருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார் –
இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் யுண்டோ —
ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே –

அன்றிக்கே
எழுகிற நரக வாசல் யுண்டு -எல்லோரும் போய்ப் புகுகிற நரக வாசல் என்னுதல்-
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று என்கை-

முனியாது-
யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை -என்கிறது –
எங்கள் பதத்துக்கு அழிவு சொல்லுவதே என்று பொடியாதே –
முனிந்தார்கள் ஆகில்
யம படர் கன்றும் விளாவும் பட்டது படும் அத்தனை –

மூரித்தாள் கோமின் –
பெரும் தாளைப் பூட்டுங்கோள்-
அதுக்கடி இன்னம் ஒருகால் திறக்கும் என்னும்படி இருக்கில் இறே
எளிதாகக் கோர்க்க வேண்டுவது –

கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு –
கனிகள் உதிரும்படிக்கு ஈடாகக் கன்றை எறிந்த தோளை உடையவனானவனுடைய
ஆபரணத்தால் வந்த த்வனியை
யுடைத்தான திருவடிகளைக் காண்பதற்கு –
அதாகிறது –
இலக்கைக் குறித்து எறிகிற போது மாறியிட்ட திருவடிகளில்
வீரக் கழல் த்வநிக்கிற படி –

நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —
நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –
திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின-
திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –

நாவலம் சூழ் நாடு –
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

—————————-

அவதாரிகை –

கீழே -நன்கறிந்த நாவலம் சூழ் நாடு -என்றாரே
அதாகிறது –
திருக் கோவலூருக்கு உட்பட்ட பூமிக்கு உள்ளே கிடந்தமையைக் கொண்டு இறே

அத்தை நாடும் அறிந்து பற்றப் பெற்றது இல்லை
அவன் படிக்கு இஸ் சம்சாரிகள் படியைப் பார்த்தால்
யமனுக்கும் அவகாசம் உண்டாய் இருந்தது

தேன மைத்ரீ பவது தே -சுந்தர -21-20-
அனந்தரம்
தம்மைப் பார்த்து
நாடு செய்தபடி செய்ய
நாம் முந்துற முன்னம்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் -திருவாய்மொழி -1-2-8-என்கிறபடியே
என்னுடைய கரணங்கள் மூன்றையும் கொண்டு இங்கே
ப்ரவணனாகப் பெற்றேனே -என்கிறார்

வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே
என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப்  பெற்றேனே
என்கிறார் –

——————————————

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவது தொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

————————————

வியாக்யானம் –

நாடிலும் நின்னடியே நாடுவன் –
நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும்
உன் திருவடிகளையே தேடுவன் –

நாடோறும் பாடிலும்  நின் புகழே பாடுவன் –
நித்யமாக ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும்
தேவருடைய புகழே ஸ்தோத்ரம் பண்ணா நிற்பன் –

இவை தானே பிரயோஜனமாக -என்கிறது –
ஏவ காரத்தாலே –

சூடிலும்  பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு –
நான் என் தலையாலே தரிக்குமவையும்
தர்ச நீயமான திருவாழியை ஏந்தின சர்வேஸ்வரனான
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான
திருவடிகளையே தரிக்கக் கடவேனான -எனக்கு –

என்னாகில் என்னே எனக்கு –
இங்கே தாகில் என்
பரம பதத்திலே போனாலும் மநோ வாக் காயங்கள் அங்கே
ப்ரவணமாகை இறே செய்வது

அது இங்கே பெற்றேனாகில்
எனக்கு எங்கே இருக்க நல்லது -என்றதாகவுமாம் –

அன்றிக்கே
நாட்டார்க்காக இருந்து வ்யசனப் பட்டால் பிரயோஜனம் உண்டோ
அறிந்தார்கள் ஆகில் இந்த லாபத்தைப் பெறுகிறார்கள்
அறிந்திலர்கள் ஆகில் இந்தப் பேற்றை இழக்கிறார்கள்

பேறு அவனாலே ஆனவோபாதி
இழவும் தம்மாலே யாவும் கடவது இறே

நான் முன்னம் திருக் கோவலூர் இங்கே யாகையால் உள்ள பிரயோஜனம்
கொள்ளப் பெற்றேன் ஆகிறேன்

நாட்டை நம்மால் திருத்தலாய் இருந்ததோ
நமக்கு இந்நன்மை உண்டாகப் பெற்றோமே என்னும்
லாபத்தோடு தலைக் கட்டுகிறார் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -86 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

இவருக்கு இப்படி நம்மால் அபேஷிதம் ஏது என்று பார்த்து
அபேஷிதமான அவாவைத் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு
இவர் இருந்த இடத்திலே
பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் –

இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன
தரியான் இறே அவன்   –

——————————————-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திரு வாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கி யிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

——————————————

வியாக்யானம் –

நீயும் திருமகளும் நின்றாயால் –
என்னடியார் அது செய்யார் என்னும் நீயும்
நினைவறிந்து கார்யம் செய்வாரை
ந கச்சின் ந அபராத்யாதி -என்னும் அவளும் கூட நின்றாயால் –

ஆஸ்ரித ரஷணத்தில் முறபாடனான நீயும்
ராகவஞ்ச மகா வ்ரதம் -அயோத்யா -31-2-என்று வ்ரதம் கொண்டு இறே புறப்பட்டது
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -அயோத்யா -27-6- என்று உனக்கு முற்பட்ட பிராட்டியும்

நின்றாயால் –
நிற்கக் கண்ட அத்தனை
நிர்ஹேதுகம் -என்றபடி

அன்றிக்கே
இவர்களைப் பெற்று நிலை நின்ற படி -ஆகவுமாம் –

குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
ஒரு மலையை எடுத்து
உடம்பிலே வந்து படுகிற மழையை பரிஹரித்த நீர்மையை உடையவனே  –

அவை நோவு படாத படி ஏற்கவே மலையை எடுத்து பரிஹரித்து நோக்கினால் போலே இறே
தன் ஆபத்து இவர்களோடு கூடித் தீர்ந்தத படி -என்றுமாம்
குஹேன சஹி தோ ராம -பால -1-28- என்னக் கடவது இறே  –

வாசல் கடை கழியா யுள் புகாக் –
உள்ளுப் புக மாட்டுகிறிலன்
புறம்பு போக மாட்டுகிறிலன்
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் உடைய கண் வட்டம்  விட்டுப் போக மாட்டாதாப் போலே
இரண்டிடமும் காட்டுத் தீ போலே யாய்த்து தோற்றா நின்றது ஆய்த்து அவனுக்கு
பஸ்ம தத் குருதாம் ஸிகீ-அயோத்யா -97-8-என்றான் இறே

கீழே இருவரையும் கூறி-
நின்றாய் -ஆள -என்று  சொல்லுகிறது
சாயையைத் தனித்து பேச வேண்டாமை  –

காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி —
ஸ்ப்ருஹணீயமாய்
அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி
இப்போது இப்படி நின்றான் -என்னுதல்
இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்

இனி -என்கையாலே
அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –
இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-

திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது –
தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே –
சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –

ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப்
பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -85 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்ட அபரிச்சின்ன விஷயமான வைபவத்தை எல்லாம்
கண்டு அனுபவித்தாயாய்
ஏறிமறிந்து இருக்கிற நீ
இன்னும் பேராது கண்டு அனுபவியாய் -என்ன

என் செய
நாம் எல்லாம் செய்தோமாய் அன்றோ இருக்கிறது என்ன

இந்த்ரிய ஜெயம் பண்ணி
ஆஸ்ரயணத்திலே  இழிந்த வித்தனை யல்லது
நீ அவன் படிகளிலே என் கண்டாய்
என்கிறார் –

—————————————-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேயவொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு-

————————————

வியாக்யானம் –

படி கண்டு அறிதியே –
அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே

அன்றிக்கே
அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்

படி -என்று
திரு மேனிக்கு பேர்
இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –

பாம்பணையினான் புட்கொடி கண்டு அறிதியே-
பாம்பணையினான் கண்டு அறிதியே-
புட்கொடி கண்டு அறிதியே-

பாம்பணையினான் கண்டு அறிதியே-
அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும்
படி கண்டு அறிதியே

புட்கொடி கண்டு அறிதியே-
த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

கூறாய் –
எல்லாம் கண்டாயாய் இருக்கிற நீ
இன்னது கண்டேன் என்று சொல்லிக் காணாய் –

வடிவில்  பொறி யைந்து முள்ளடக்கிப்  –
ஸ்ரோத்ராதிகள்  ஐந்தையும் புறம் போகாத படி
உடம்புக்கு உள்ளே நியமித்து -என்னுதல்

அன்றிக்கே
வடிவில்லாத பொறி ஐந்தும் உள்ளடக்கி -என்னுதல்

இத்தால்
ஒரு வழிப்பட்டு இருக்கை அன்றிக்கே
பல அபி சந்திகளை -பெரிய திருமொழி -1-6-3-என்னுமா போலே –

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –பெரிய திருமொழி 1-6-3-

போதொடு நீரேந்தி நெறி நின்ற நெஞ்சமே நீ –
இப்படி இந்த்ரியங்களை நியமித்து
புஷ்பாத் யுபகரணங்களை தரித்துக் கொண்டு
வழிப்பட நின்று
உபாசித்தானாய் இருக்கிற நீ
அவ் உபாசன பலமாக இவற்றில் நீ எவ் வம்சம் கண்டாய்

சாஷாத் கரிப்பதுக்கு முன்னே ஜ்ஞான லாபத்தைக் கொண்டு ஆறி இருக்கக் கடவதோ

ப்ராப்தி சமயத்திலும் கூட அபர்யாப்தி வேண்டி இருக்க
ஜ்ஞான லாபத் தளவிலே திருப்தி பிறந்து இருக்கவோ

இனி அவ்வளவு அமையும் என்னும் படி இருக்குமாகில்
அது பிராப்யமாக மாட்டாதே

பிறந்த ஞான லாபத் தளவிலே பர்யவசித்து   ஆறி இருக்குமது
அஞ்ஞான கார்யமேயாம் அத்தனை இறே

மயர்வற மதி நலம் அருளினன் என்ற
அனந்தரத்திலே இறே மடல் எடுத்தது –

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -84 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

உன்னுடைய ரஷகத்வத்தைச் சிலராலே
பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –

ரஷ்யத்தின் அளவேயோ
ரஷகனான உன்னுடைய பாரிப்பு
என்கிறார் –

————————————

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

——————————-
வியாக்யானம் –

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
எத்திறம் என்கிறார் –
உபாகாரகனான உன்னுடைய பெருமையை நீ அறிதி -அறியாய் -என்று
சந்தேஹிக்கும் அத்தனை போக்கிப் பிறர்
அறிவார்கள் என்று சந்தேஹிக்கைக்குத் தான் விரகு உண்டோ

ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்னக் கடவது இறே-

உரா யுலகளந்த நான்று –
உராய் -என்கிறத்தை
உலாய்-என்றாக்கித்
திருவடிகள் எங்கும் சஞ்சரித்துக் கொண்டு -என்னுதல்

அன்றிக்கே
தன்னுடைய தைவத்வம் தோற்றும்படி
பூமியில் கால் தட்டாத படி கடக்க நிற்கை அன்றிக்கே
எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு என்றுமாம்

பட்டர் -அநாயாசேன அளந்த வன்று  -என்று அருளிச் செய்வர் –

எந்தை அடிக்களவு போந்த படி -வராகத் தெயிற்று அளவு போதாவா றென்கொலோ-
இப்படித் திரு உலகு அளந்து அருளின் அன்று
என் ஸ்வாமி யான உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது
இன்று
வராகத்து
எயிற்று அளவு போதாதவாறு என் கொலோ

இப்போது திரு எயிற்றுக்கு ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ

ஒரு நாள் போந்த பூமியானது
ஒரு நாள்  போராது ஒழிவான் என்
இது என்ன பாரிப்பு தான் -என்கிறார்

நான் ஒருவனுமே உன் குணங்களிலே குமிழ் நீருண்ணா நின்றேன்
என்கிறார் –

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -83 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

அவன் ஆஸ்ரித பரதந்த்ரன்
அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன
மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ-
அது கொண்டு கார்யம் கொள்ளாதே
மலையை எடுப்பது
ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து
வெருமனேயோ
என்கிறார் –

————————————–

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் -83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக் கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மது கைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும்
அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத் தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்றவா  றேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

—————————————-

வியாக்யானம் –

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து –
ஒன்றால் சலிப்பிக்க ஒண்ணாத மலையைக் குடையாகக் கொண்டு
அதுக்கு தாரகமான காம்பு தன் தோளாகக் கொண்டு
பசுக்களை ரஷித்து –

ஆயர் நிரை விடை யேழ் செற்றவாறேன்னே –
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகமாய்த்
திரண்டு வந்த ருஷபங்கள் ஏழையும் முடித்தது யென்னீ –

இது உன் சர்வ சக்தித்வம் காட்டச் செய்தாயோ
உன்னால் அல்லது செல்லாதார்க்கு அவர்கள் விரோதிகளைப் போக்கி
உன்னைக் கொடுத்த படி இறே என்கிறார் –

கையில் திரு வாழியைக் கொண்டு இந்த்ரனை நேராதே
உன் தோள் நோவ ரஷிப்பதே –

உரவுடைய நீராழி யுள்  கிடந்து –
சர்ப்பத்தை உடைய நீர் -என்னுதல்
உரகம் என்கிறத்தைக் குறைத்து உரம் -என்று கிடக்கிறது
இத்தால்
துஷ்ட சத்வங்கள் எல்லாத்துக்கும் உப லஷணம்

அன்றிக்கே
மிடுக்கை உடைத்தான நீர் -என்றுமாம்
திருப் பாற்  கடலிலே கிடந்து-

நேரா நிசாசரர் மேல் -பேராழி கொண்ட பிரான்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளச் செய்தே
சத்ருக்களாய் கிட்டின நிசாசரர் உண்டு மதுகைடபர்கள்
அவர்களைத் திரு வாழியை இட்டுப் பொடி படுத்தி விட்டான் ஆய்த்து
நீ உறங்கா நிற்கச் செய்தே விரோதி வர்க்கத்தை
பொடி படுத்த வற்றான பரிகரத்தை யுடைய உபாகாரனே –

உன் தோள் நோவ மலை எடுத்ததும்
ருஷபங்கள் முன்னே உன்னை அழிவுக்கு இட்டதும்
இவை எல்லாம் என் செய்தாய் –

இத்தால்
ஆஸ்ரிதர்க்கு விரோதம் வந்த போது
சங்கல்பத்தால் அன்றியே
தன்னுடம்பு நோவக் கார்யம் செய்யும்
என்றபடி –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -82 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது
அவனைக் கண்டு சொல்ல வேணுமே
அவனை ஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே
என்றவர்க்குக் குறை தீரும்படி
சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு
திருமலையிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

—————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களை யுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசி யன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

—————————

வியாக்யானம் –

படையாரும் வாள் கண்ணார்-
வேல் போலேயாய்
ஒளியை உடைத்தான கண்களை உடைய பெண்கள் ஆனவர்கள் –
படை என்று வாளையும் சொல்லக் கடவது –
தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்குமவர்கள் -என்கை –

பாரசி நாள் –
த்வாதசி நாளிலே –

பைம் பூம் தொடையலோ டேந்திய தூபம் –
பருவத்தால் வந்த இளமை கொண்டு புறம்பு
அந்ய பரத்தை பண்ணலாய் இருக்கச் செய்தே
அது தவிர்ந்து –
பகவத் பஜனமே யாம்படி பண்ணிக் கொள்ள வற்றாய்த்து
அத் தேச ஸ்வ பாவம் தான் –

இவர்களிலே தாம் தாம் கைகளிலே தரித்துக் கொண்டு நிற்க
அழகியதாய்த் தொடுத்த மாலைகளும் தூபங்களும் –

இடையிடையில் மீன் மாய மாசூணும் வேங்கடமே –
நடு நடுவே ஒரோ நஷத்ரங்களை யுடைத்தான ஆகாசத்தை இவை சென்று
மாசூணப் பண்ணா நின்றது
மரியா நின்றது

இவர்கள் புகைத்த தூபமானது ஆகாசத்தை மறைக்கும்
இவர்கள் கைகளில் செறிந்த மாலைகளானவை நஷத்ரங்களை மறைக்கும் –

மேலோரு நாள் மானமாய வெய்தான் வரை –
அப்படி பஜிக்கிற ஸ்திரீகளுக்கும் பிராட்டி திறத்தில் போலவே
பரதந்த்ரனாய்க் கார்யம் செய்யுமாய்த்து

அவள் சொல்லப் பண்டு ஒரு நாள் மாயா மிருகத்தின் பின்னே போய் அத்தை வதித்தான் இறே
அப்படிப் பட்ட ஆஸ்ரித பரதந்த்ரன் வர்த்திக்கிற தேசம் வேங்கடமே –

இப் பாட்டால்
1-சர்வ சமாஸ்ரயணீயத்வமும்
2-சௌலப்யமும்
3-ஆஸ்ரித பாரதந்த்ர்யமும்
4-போக்யதையும்
5-விரோதி நிரசனமும்
குறை வற்று வர்த்திக்கிற தேசம்
என்கிறது –

—————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -81 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

சம்சாரிகள் தம்தாமுக்குத் தாம்தாம்
பண்ணிக் கொள்ளும் ஹிதம் சம்சாரத்தைக் கடத்துகை
என்றொரு பேர் உண்டோ –
அவன் திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் –

ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன்
திரு நாமம் போக்கி இல்லை -என்கிறார் –

———————————————

ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக் கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையா யிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.

———————————————

வியாக்யானம் –

ஆளமர் வென்றி யடு களத்துள் –
ஆளாலே அமர் பட்டு இருப்பதாய்
ஆளோடு ஆள் மிடைந்து இருப்பதாய்
வென்றியை உடைத்தான –

ஆடு களத்து –
முடிக்கிற களத்து –

அஞ்ஞான்று –
அசுரர் தேவர்களை முறித்து வாயிலிட்டுச் செல்லுகிற
அற்றை நாளிலே –

வாளமர் வேண்டி  –
ஒளியை யுடைத்தாய் இருப்பது ஒரு யுத்தம் வேணும் என்று பார்த்து

அதாகிறது
தேவர்களும் அசூரர்களும் ஆகப் பொரா நிற்க
அசூரர்களுக்கு பலம் மிகுத்து
தேவர்களுக்கு பலம் குறைந்து பட்டுக் கிடக்கப் புக்க வாறே
அனுகூலரான நம்முடையார்க்கு மதிப்பு உடைத்தாய் இருப்பதொரு பூசல் வேணும் என்று பார்த்தான் –

வரை நட்டு நீளவரைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே –
அதற்க்குக் கைம் முதல் வேணுமே
ஆழ்ந்த நீரிலே ஆளக் கடவ மந்த்ரத்தை
பிடுங்கிக் கொண்டு வந்து நட்டு
மிருதுவான வாசுகியைச் சுற்றி
மகத் தத்வமான கடலைக் கலக்கினான் யாய்த்து –
அது விறே

தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை –
கடலைப் பரிச்சேதித்துக்கடைய வல்லவனுடைய
திரு நாமமே அன்றோ

பழையதாய் வருகிற சம்சாரத்தில் நின்றும்
எடுத்துக் கொண்டு போய் அவ்வருகே வைக்க வல்லது –

பற்றிக் கடத்தும் படை –
அள்ளி எடுத்துக் கொண்டு போய்
பரம பதத்திலே வைக்கும் பரிகரம்-

எம்பெருமான் பிரயோஜனாந்தர பரர்க்கு உஜ்ஜீவிக்கைக்கு அம்ருதம் கொடுத்தால் போலே
திரு நாமம் தானே ஸ்வயம் பிரபை என்பவள்
கரையிலே முதலிகளை வைத்தால் போலே பரம பதத்திலே வைத்து
தாஸ்யாம்ருத தத்தைக்  கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கும்
த்வா மேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண -ஜிதந்தே -4-என்னக் கடவது இறே –

சம்சார சாகரத்தைக் கடத்தும் படை-நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே =என்று அந்வயம் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -80 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

மகா பலி பக்கல் நின்றும் விபூதியை மீட்டுக் கொண்டு நோக்கின் அவ்வளவே அன்றிக்கே
ஒருவன் சரணம் புகுந்தால் அவனுக்கு அசாதாரண பரிகரத்தோடே விரோதம் உண்டே யாகிலும்
ந ஷமாமி -என்கிறத்தைப்  பாராதே
அவனோடு பொருந்த விட்டு அவனை இட்டு வைத்தே நோக்குவிப்பான் ஒருவன் –
என்கிறது –

அதாகிறது
பாதாளத்திலே ஸூமுகன் என்றொரு சர்ப்பமாய்
அவனைப் பெரிய திருவடி ஆமிஷமாகக் கணிசித்து இருக்க
அத்தைக் கேட்டு அஞ்சி
சர்வேஸ்வரன் இந்திர லோகத்திலே உபேந்திர மூர்த்தியாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்க
அங்கே சென்று அவன் எழுந்து அருளி இருந்த சிம்ஹாசனத்திலே சுற்றிக் கொண்டு கிடந்தான் ஆய்த்து –

சரணம் புகுவார்க்கு லஷணம்
பவத் விஷய வாசின -ஆரண்ய -1-20-என்னும் இவ்வளவே இறே
பெரிய திருவடி அங்கே சென்று காணாமே பெரிய வேகத்தோடு இங்கே இவன் இருந்த படியைக் கண்டு
அந்தரங்கராய் வஹிக்குமவர்கள் பொதுவாகச் சில சொல்லுமா போலே சொல்ல
சர்வேஸ்வரனும் அத்தைக் கேட்டுப் பின்னையும் அவனை விட்டே சமாதனத்தைப் பண்ணி
அவன் கையிலே காட்டிக் கொடுக்க
அவனும் அத்தை ஆபரணமாக உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கிக் கொடுத்த படி சொல்லுகிறது –

———————————————-

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் –80-

——————————————

வியாக்யானம் –

அடுத்த கடும் பகைஞற்கு –
அண்ணிய பகை யாய்த்து –
ஜன்மத வந்த சாத்ரவம் ஆய்த்து

அதாகிறது
இவருடைய தாய்மார்க்கும் சா பத்ன்யத்தால் வந்ததொரு விரோதம் உண்டாய்த்து

கடும் பகை –
பேர் சொல்ல-
முடியும் படி கொடியதாய் இருக்கை-

ஆற்றேன் என்றோடி –
அவனுக்கு ஆற்ற மாட்டேன் -என்று ஓடி
சடக்கென வந்தான் ஆயத்து –

படுத்த பெரும் பாழி சூழ்ந்த –
அங்குத்தைக்கு ஈடாம்படி படுத்த சிம்ஹாசனத்தைச் சுற்றின
பாயலும் பள்ளியும் பாழியும் பாசியும் படுக்கையும் சேர்க்கைக்கு பேர் –

விடத் தரவை –
ஒரு சம தமாத் யுபேதனைத் தான் நோக்கப் பெற்றதோ –
சத்ரு வச்யமான கோடியில் உள்ளது ஒன்றாகிலும்
தர்ம ருசி உண்டாய் இருப்பாரையும் கிடைக்கும் இறே
அப்படிப் பட்டான் ஒருவனும் அன்று -என்கை-

சர்ப்ப ஜாதி ரியம் க்ரூரா-என்னக் கடவது இறே
சரண்யனுக்கு  கிருபா விஷயம் அன்று  -என்கிறது –

வல்லாளன் கை கொடுத்த –
சரணாகத பரித்ராணத்தில் இவனத்தனை சமர்த்தன் இல்லை யாய்த்து
பின்னை அவன் கையிலே கொடுத்து அவனை இடுவித்தே நோக்குவித்தான் ஆய்த்து
கடித்த வாயாலே தீர்க்கை

வத்யதாம்-யுத்த -17-29- -என்றவரை
அஸ்மாபிஸ் துல்யோ பவது -18-38–என்னப் பண்ணினால் போலே –
ந ஷமாமி -என்றத்தையும்
ந த்யஜேயம் -என்றத்தையும் ஒக்க ஜீவிப்பித்த படி –

மா மேனி-
அவனை நோக்கின பின்பு வடிவில் பிறந்த
பௌஷ்கல்யம்
ததா ராம க்ருதக்ருத்ய -பால -1-83-

மாயவனுக்கு –
இவனுக்கு ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரம்
அவனால் எல்லை கண்டு மீளப் போகாதாய்த்து –

அல்லாது மாவரோ ஆள் –
ஒருக்கால் ஆளாய் அடிமை புக்கே பின்னையும்
ஸ்வ ரஷணத்துக்குத் தான் இருந்து முந்திக் கொள்ள வேண்டும்படியாய் இருப்பாரையும்
பற்றுவார்களோ

சரணம் என்றொரு உக்தி மாத்ரம் சொன்னால்
பின்னை மேலுள்ளதனை தன் தலையிலே
ஏறிட்டுக் கொண்டு நோக்குமவனை யன்றோ பற்ற அடுப்பது –
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –