திரு-வடமதுரை -மதுரா
மூலவர் –கோவர்த்த நேசன் -பால கிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸத்ய பாமா
விமானம் -கோவர்த்தன விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கோவர்த்தன தீர்த்தம் -யமுனா நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -குலசேகர ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்
முக்தி தரும் க்ஷேத்ரம் -மதுரா நாம நாகரீ புண்யா பாப ஹரே ஸூ பா -நினைத்தாலே அனைத்து பாபங்களும் விலகி விடும்
கண்ணனின் திரு அவதார ஸ்தலம் -நான்கு யுகங்களிலும் பகவத் சம்பந்தம் உண்டே
க்ருத யுகம் -வாம ஆஸ்ரமம் / த்ரேதா யுக -சத்ருக்நனால் ஆளப்பட்ட பூமி
த்வாபர யுகத்தில் கண்ணனின் அவதார ஸ்தலம் -யமுனைக் கரையில் உள்ளது
-பிருந்தாவனம் 10 கி மீ தொலைவிலும் -கோவர்த்தன கிரி 12 கி மீ தொலைவிலும் உள்ளன –
ஜென்ம கர்ம மே திவ்யம் -மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மது பிள்ளை லவணாசுரனை -செம்புகன் தன்னை -லவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி –
விராஜா கானகம் பாடி உலவி உலவி -யமுனை -பாபம் சேராது -ராசா க்ரீடை -நாக தீர்த்தம் –கண்ணனை கூட்டிப் போன இடம்
அக்ரூர காட் / கேசாவ்ஜி மந்திர் / போத்ரா குண்டம் / விஸ்ராம் காட் -நிறைய -வனங்கள் –
தற்போது உள்ள பெயர் ஸ்ரீ மதுரா
மூலவர் ஸ்ரீ கோவர்த நேசன், ஸ்ரீ பால கிருஷ்ணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ இந்திர தீர்த்தம்,ஸ்ரீ யமுனை ஆறு
விமானம் ஸ்ரீ கோவர்த்தன விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஸ்ரீ உத்தரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ தில்லி
நாமாவளி ஸ்ரீ ருக்மிணீ ஸத்திய பாமா ஸமேத ஸ்ரீ கோவர்த்த நேசாய நமஹ
———————
ஸ்ரீ பெரியாழ்வார் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -4- பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் -50- பாசுரங்கள் மங்களாசாசனம் –
—————
ஸ்ரீ பெரியாழ்வார் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 –
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மழை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம்சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5 2-
அம் மை தடம் கண் மட வாய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்த மலை
தம்மை சரண் என்ற தம் பாவையரை புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று
கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 3-
கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல்
அடி வாய் உற கை இட்டு எழ பறித்திட்டு அமரர் பிரான் கொண்டு நின்ற மலை
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப் பட நீர் முகந்து எறி எங்கும்
குட வாய்ப்பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 4- –
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக்களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-5 –
செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள்காம்பாகக் கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6-
படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தடவரை தான்
அடங்க சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை
குடம் கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-7 – –
சல மா முகில் பல் கணப் போர் களத்து சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச்சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-8 –
வன் பேய் முலை உண்டதோர் வாயுடையன் வன் தூண் என நின்றதோர் வன் பரத்தை
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களைக்
கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9- –
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவேறு திரு உகிர் நொந்தும் இல மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடியேறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போலே எங்கும்
குடி யேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-10 –
அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடிமுல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 5-11 –
வானிளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது
வானிளம்படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்பச்
தேனளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே – 3 6-3-
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி
தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே – 4 2-4 –
வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –
நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-
—————-
ஸ்ரீ ஆண்டாள் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை – 5-
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-
அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே–4-6-
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5-
தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —7-3-
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த னனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-
காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-
தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-
பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-
நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-
—————
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரங்கள் மங்களாசாசனம்
வளவெழும் தவள மாட மதுரை மாநகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும் எம் பிறார் கினியவாறே. –திருமாலை – 45-
——————–
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -4- பாசுரங்கள் மங்களாசாசனம் –
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே. –6-7-5-
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியனொலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. –6-8-10-
நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திருமாலிருஞ் சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணுங்கொலோ? –9-9-6-
சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர் பாரோர் புகழும் வதரி வடமதுரை –சிறிய திருமடல் – 74
——————
ஸ்ரீ நம்மாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்-
வாய்க்குங் கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ் செந்நெலும் வயல் சூழ் திரு வாறன் விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுல கீசன் வட மதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவே யாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே—8-5-9-
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுள்ளால் அல்லால் இல்லை கண்டீர் அரணே—9-1-3-
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-4-
சதிர மென்று தம்மைத் தாமே சம்மதித் தின் மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்காள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாது மில்லை மிக்கதே–9-1-8-
யாதும் இல்லை மிக்க தனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10—
திருவடமதுரை (மதுரா)-(பிருந்தாவனமும், கோவர்த்தனமும் அடங்கியது.)
கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆநிரை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் களித்திருந்த பிருந்தாவனம்,
ஆநிரைகளையும் கோபால கோபியரையும் காக்க குன்றைக் குடையாக எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும்
சேர்த்தே மங்களாசாசனமாகக் கொள்வர். இந்த மூன்று இடங்களும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள் பிருந்தாவனத்திற்கு
கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீமத் பாகவதத்தில் முழுக்க முழுக்க மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்துப் பயின்று வந்துள்ளன. ஸ்ரீகிருஷ்ணன்
பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் 7வது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற
குழந்தைகளை எல்லாம் கொன்றது, கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல்
சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது, அங்கு
லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து, அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம்
செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ணவரலாற்று நிகழ்ச்சிகள்
இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.
மூலவர்– கோவர்த்தன நேசன், பாலகிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- சத்திய பாமா நாச்சியார்
தீர்த்தம்- இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி
விமானம்– கோவர்த்தன விமானம்
காட்சி கண்டவர்கள்– மதுரா நகர்வாசிகள், கோபாலர்கள், கோபியர்கள், இந்திராதி தேவர்கள், வசுதேவர், தேவகி, யசோதை, கம்சன்,
ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரங்களில் மது என்னும் ஒரு நகரம் தலைசிறந்து விளங்கியது. அந்நகரை அரசாண்டு வந்த
லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்தது மட்டுமன்றி யாகங்களை அழித்து ரிஷிகட்குத் துன்பம்
விளைவித்துக் கொடும்பாதகம் புரிந்து வந்தான். இந்நிகழ்ச்சி இவ்வூரில் இராமாவதார காலத்தில் நிகழ்ந்ததாகும். ரிஷிகள் இராமபிரானிடம் சென்று
லவணாசுரனை சம்ஹாரம் செய்து விசுவாமித்திரருக்கு உதவியது போல தமக்கும் உதவி தம்மை ரட்சிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தனர். ராமன்
தன் தம்பி சத்ருக்கனை அனுப்பி லவணாசுரனை அழித்தான்.
அரக்கனையழித்த பிறகு பிறைவட்ட வடிவில் யமுனை நதிக்கரையில் இந்த மது நகரத்தை விரிவாக்கி புதுமைப்படுத்தி மதுரா என்று பெயரிட்டு
சத்ருக்கனன் நெடுங்காலம் ஆண்டு வந்தார். இவரது வம்சத்தாருக்குப் பிறகு இந்நகரம் வசுதேவரின் பரம்பரையினருக்கு வந்துற்றதாக ஐதீஹம். இந்த
மதுராநகர்தான் இன்று கிருஷ்ண ஜென்ம பூமியாக தனது தொல்லியல் புகழை மெல்லிய வேணுகானத்தில் இழைத்துக் கொண்டுள்ளது.
ஆயர்பாடியில் இந்திர பூஜை நடப்பது வழக்கம். இந்திரனுக்கு ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழை வேண்டி ஆடல் பாடல்
புரிவர். ஸ்ரீகிருஷ்ணன், ஆயர்பாடியில் வளர்ந்து வரும் சமயம் ஒரு நாள் இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கவே இவைகளெல்லாம்
என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக இந்திரனுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து கொண்டுள்ளோம் என்று சொன்னவுடன் அட
அப்படியா இந்த உணவு வகைகள் எனக்கு பிரியமானவைகள் தான் இவைகளை எனக்கே படையுங்கள் என்று கூறி கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை இடச்சொல்லி தானே கோவர்த்தன மலையாக இருந்து முழுதும் உண்டு தீர்த்தான் உலகுண்டவாயன்.
இதனால் சீற்றம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி ஆநிரைகளையும், ஆயர்களையும் அப்பாலும் இப்பாலும் அலைக்கழிக்க
எல்லோரும் ஒன்றாகக் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கோவர்த்தன மலையருகே ஓடி வந்தனர். இவர்கள் வருவதைக் கண்டவுடன் கண்ணன் அந்த
மலையை பெயர்த்தெடுத்து தலைக்குமேல் குடைபோல் பிடித்துக் கொள்ள அதற்குள் வந்து ஆயர்களும், ஆநிரைகளும் அடைக்கலமாயினர். பயங்கர மழை கொட்டியும் எவ்வளவோ இந்திர ஜாலங்கள் செய்தும் பயனின்றி போகவே இறுதியில் இந்திரன் வந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கோரினான்.
இந்திரன் ஆணையிட்டவுடன் மேகங்கள் வாயைத் திறந்து கொண்டு சென்று கடல்நீரை அப்படியே கபளீகரம் செய்து பானையிலிருந்து கொட்டிக்
கவிழ்த்ததைப் போல கொட்டியதாம்.இவ்வாறு கொட்டு கொட்டு என்று கொட்டிய மழையைக் கண்ணன் தடுத்தானாம்.
தனது ஐந்து விரல்களையும் தாமரை மொட்டுப் போல் கவித்து வைத்து மலையைத் தூக்கி அந்தக் கைவிரல்கள் தாங்குவதற்கு தமது நெடுந்தோள்களை
காம்பு போல் வளைந்து கொடுத்து ஆனாயசமாக தூக்கினானாம்
மதுரா செல்பவர்கள் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தன கிரி இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கோகுலம் இவைகளை வரிசைப்
படுத்தி ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் நாள் தங்கி கண்ணன் லீலைகளை மானசீகமாக உணர்ந்து திவ்யமான பக்தி உணர்வில் திளைத்து ஸ்ரீகிருஷ்ண
நினைவுடன் திரும்பி வரலாம். கோகுலாஷ்டமி சமயத்தில் இங்கே சென்றால் ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண
நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.
பிருந்தாவனத்தில் தென்னக முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. ரங்கமந்திர் என்றழைக்கப்படும் இந்த
விசாலமான கோவிலில் நுழைந்தவுடன் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிடும். காரணம், இங்கு எம்பெருமானின் கைங்கர்யத்தில்
ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு வைணவர்களேயாவர். இங்கு ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள்,
திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர்கட்கும் சன்னதிகள் உண்டு.
இவர்களை வரிசைக் கிரமமாக சேவித்து வரும்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் பெருமாளை தரிசிப்பது போன்ற எண்ணம் வந்து விடும்.
தமிழகத்திலிருந்தும் மற்றும் தென் மாநிலங் களிலிருந்தும் வரக்கூடிய பக்தர்களுக்கும், அடியார்கட்கும் இக்கோவில் கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள
தமிழக வைணவர்கள் பேருதவி புரிந்துவருகின்றனர்
செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ மாந்தர்காள் தொல்லை
வடமதுரையான் கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து –104-
(இ – ள்.) மாந்தர்காள் – மனிதர்களே! – (அனைவர்க்கும்),
“கழலே – எனது திருவடிகள்தாம்,
வாய்த்த தஞ்சம் – பொருந்திய ரக்ஷகமாகும்,’ என்று -,
திடம்அது உரைசெய்தான் – உறுதியாக உபதேசித்தவனும்,
தொல்லை வடமதுரையான் திறத்து – பழமையான (முதற்கடவுளான) வடமதுரையிற் பிறந்தவனுமாகிய பெருமானிடத்தில், –
செல்வம் – (நுமது) செல்வங்களையும்,
உயிர் – பிராணனையும்,
உடம்பு – உடம்பையும்,
சேர – ஒருசேர,
உரித்து ஆக்கி – உரியனவாகச் சமர்ப்பித்து,
வல் வினையின் நீங்குமின் – வலிய இருவினைத் தொல்லைகளினின்று நீங்குங்கள்; (எ – று.)
கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி முதலிய உபாயங்களையெல்லாம் ஒழித்துத் தனது திருவடிகளையே தஞ்சமாகப்
பற்றும்படி உபதேசித்த ஸ்ரீகிருஷ்ண பகவான்திறத்தில் உமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒருசேர அர்ப்பணம்பண்ணி,
அப்பிரானருளால் இருவினைத் தொல்லைகளினின்றும் நீங்கி உய்வுபெறுவீர்களென்று உலகத்தார்க்கு உபதேசித்தவாறு,
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – மாமேகம்ஸரணம்வ்ரஜ” என்று அப்பிரான் சரமஸ்லோகத்தில் தன்னையே ரக்ஷகமாக
அடையுமாறு கூறியிருக்கவும், ஸேஷபூதன் இழியுந் துறை ஸேஷியின் திருவடிகளே யாதலால்,
‘கழலே வாய்த்ததஞ்சமென்று திடமது உரைசெய்தான்’ என்றார்.
திடம் = த்ருடம்; அது – பகுதிப்பொருள்விகுதி. செல்வமுயிருடம்பு உரித்தாக்கி – பன்மையொருமை வழுவமைதி.
இது – ஸ்ரீகிருஷ்ணபகவானது திருவவதாரஸ்தலம்; முத்திதரும் நகரமேழனுள் இதுவும்ஒன்று.
கண்ணுக்கு மதுரமாயிருத்தலாலும், மதுவென்ற அசுரனை யழித்த இடமாதலாலும், இதற்கு மதுரையெனப் பெயர்வந்ததென்பர்.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்