மூலவர் -பரம புருஷன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பரிமள வல்லி நாச்சியார்
விமானம் -கோவர்த்தன விமானம்
தீர்த்தம் -இந்த்ர -கோவர்த்தன தீர்த்தம் -மானஸ சரோவரம் ஏரி
மங்களா சாசனம் -திரு மங்கையாழ்வார்
பத்ரீகாஸ்ரமத்திற்குச் செல்லும் வழியில் இருக்கும் திவ்ய தேசம்
-அமர்ந்த திருக் கோலத்தில் நரசிம்ஹப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
திருமங்கை ஆழ்வார் திரு வாக்கில் முதலில் வந்த திவ்ய தேசம் இதுவே -இன்று ஜோஷிமட் என்று வழக்கத்தில் உள்ளது –
ஆழ்வார் திரு வாக்கில் பரம புருஷன் புஜங்க சயனம் -ஆழ்வார் அருளிச் செய்தது இன்று
திபெத் நாட்டில் இருக்கும் மானசரோவர் க்ஷேத்ரமாக இருக்கலாம் –
பல காலும் பெரியோர்கள் ஜோஷிமட் தான் திருப் பிரிதி என்கிறார்கள் –
கோவிந்தா கீதா கங்கா காயத்ரி –நான்கும் புனிதம் -பள்ளி கொள் பரமா -திருமங்கை ஆழ்வார் –
மூலவர் ஸ்ரீ பரம புருஷன், ஸ்ரீ வாசு தேவன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கோவர்த்தன தீர்த்தம்
விமானம் ஸ்ரீ கோவர்த்தன விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தராகண்ட்
அடிப்படை இடம் ஸ்ரீ பத்திரிநாத்
நாமாவளி ஸ்ரீ பரிமள வல்லீ ஸமேத ஸ்ரீ பரம புருஷாய நமஹ
———————
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2-
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளம் கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நில்லிமயத்து
கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவி யொடிழி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4-
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5-
பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7-
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8-
ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10-
வண்கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று, மாணியாய்
மண்கையால் இரந்தான் மராமரமேழும் எய்த வலத்தினான்
எண்கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான்
திண் கைம் மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே!–1-8-5-
பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையத் தெள்ளியார் வணங்கப்படுந் தேவனை
மாயனை மதிட் கோவலிடை கழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே.–7-10-4-
திருமங்கையாழ்வாரால் தொடக்க மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். இமயமலைக்கு வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற
அழகுள்ள இடத்தில் எங்கோ அமைந்துள்ளது. அல்லது அமைந்திருந்தது என்றும் சொல்லலாம். ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று அறுதியிட்டுச்
சொல்ல முடியாததால் இதனைச் சேவிக்க இயலாது.
மூலவர்- பரமபுருஷன், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்- பரிமளவல்லி நாச்சியார்
விமானம்- கோவர்த்தன விமானம்
தீர்த்தம்- இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்
ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிரிதி என்னும் கருத்து ஒன்றும் நிலவுகிறது. இந்த
இடத்தில் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர்.
இவ்விரண்டும் அல்ல. அது எங்கோ இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.
இதில் தற்போது திருப்பிரிதி என்றழைக்கப்படும் ஜோஷிமட் திருப்பிரிதியாகாது. திருப்பிரிதி இமயத்திற்குள் உள்ளது என்று அறுதியிட்டுக்
கூறுகிறார். ஸ்ரீவைஷ்ணவ சுதர்சன ஆசிரியர் ஸ்ரீமான் திரு. கிருஷ்ணசுவாமி ஐயங்கார். இவர் கூறும் கருத்துக்களே ஏற்றுக்கொள்வதற்கு உடன்பாடாய்
இருப்பதாலும் அதுவே உண்மையாகுமாதலாலும் அவர் தமது கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்களை இங்கே சுருங்கச் சொல்கிறோம்.
திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி
வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார்.
இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்திருந்தால் ஆழ்வார்
முதலில் ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் முதலில்
திருப்பிரிதியை தமது திருமொழியில் 1-2ல் மங்களாசாசனம் செய்து விட்டு அதன் பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்கிறார். (எனவே ஜோஷி மடமே
திருப்பிரிதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்)
திருமங்கையாழ்வாரும், மற்றும் பிற ஆழ்வார்களும் தாம் மங்களாசாசனம் செய்யும் திவ்ய தேசத்தின் மருங்கமைந்த இயற்கை
காட்சிகளை தம் பாடல்களில் மறவாது குறிப்பிடுவர். உதாரணமாக திருவரங்கத்தைப் பாடும் பாக்கள் பலவற்றில் ஆழ்வார் காவிரியைக்
குறித்துள்ளார்.
கங்கை கரையில் உள்ள வதரியச்சிரமத்தை பாடும் போது முதல் ஒன்பது பாசுரங்களிலும் ஈற்றடியில் கங்கையின் கரைமேல் வதரியாச் சிரமத்துள்ளானே
என்று முத்திரை பொறிக்கிறார். இதே போல் கண்டமென்னும் கடிநகர்ப் பதிகப் பாசுரம் ஒவ்வொன்றிலும் அந்த நகர் கங்கை கரையில் உள்ளதென்பதை
உணர்த்தியுள்ளார்.
கங்கைக் கரையின் மேலுள்ள ஜோஷி மடமே திருப்பிரிதியாகில் திருப்பிரிதிப் பதிகப் பாசுரம் ஒன்றிலாவது கங்கையைப் பற்றிச் சொல்லி
இருக்கவேண்டும். கங்கை பெருகி ஓடும் நதி. திருப்பிரிதி பாசுரத்தில் தடஞ்சுனைகளையும், அருவிகளையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்கிறார். இவைகள் கங்கைகரையில் இல்லை. ரிஷிகேசத்திலிருந்து வதரி வரை செல்லும் பாதையை ஒட்டியே கங்கை பாய்கின்றது. திருப்பிரிதிக்கு
கங்கையின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் சொல்லாமல் இருப்பதிலிருந்தே திருப்பிரிதியானது கங்கையின் உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் தாண்டி வதரிக்கு மிகவும் வடக்கே இருந்திருக்க வேண்டும் என்று காட்டும் முக்கியமான அகச் சான்றாகும்.
திருமங்கையாழ்வார் திருப்பிரிதிக்கு இட்டருளிய பாசுரங்களில் எல்லாம் இமயத்துள் என்று இந்த திவ்ய தேசத்தைக் குறிக்கிறார். இமயத்துள்
என்னும் பதத்தாலே இமயத்தின் நடுவில் இருப்பதே திருப்பிரிதி என உணர்த்துவதன் மூலம் இமயத்தின் தென்பகுதியில் உள்ள வதரி முதலிய திவ்ய தேசங்களைக் காட்டிலும் திருப்பிரிதியை வேறுபடுத்திக் காட்டுகிறார். இவ்வாறே பிரிதியில் உள்ளவனென்றும் இமயத்துள் இருப்பவனென்றும் ஆழ்வார் திருவுள்ளம் பற்றியதாலே ஏற்றினை இமயத்துள் எம்மீசனை என்ற பதத்திற்கு பெரியவாச்சான் பிள்ளை பொருள் கூறுமிடத்து ஹிமவானில் திருப்பிரிதியில் வந்து ஸந்நிஹிதனானவன் என்று அருளினார். (பெரியவாச்சான் பிள்ளை கங்கையையோ வதரியையோ குறிப்பிடவில்லை. இமயத்தை ஹிமவான் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது)
திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் திருப்பிரிதியின் இயற்கை காட்சிகளை விளித்துப் போகும்போது அங்கு வாழும்
காட்டு மிருகங்களை தமது பாக்களில் கூறிப்போகிறார்.பெரிய யானைகளை இம்சித்துக் கொண்டு சிங்கங்கள் சஞ்சரிக்கும்
பிரதேசம் என்கிறார்-போர் செய்தலையே தொழிலாக கொண்ட வேங்கைப் புலிகள் திரியுமிடமென்கிறார்.-யானைகளை விழுங்கக்கூடிய மலைப் பாம்புகள் ஊர்ந்து செல்லக்கூடிய இடமென்கிறார்.
திருப்பிரிதியை இவ்வண்ணம் பாடியிருக்கும் திருமங்கையாழ்வார், வதரியைப் பற்றிப் பாடும்பொழுது ஒரு பாசுரத்திலாவது துஷ்ட மிருகங்கள்
இருப்பதைப்பற்றிப் பாடவில்லை பாரோர் புகழும் வதரியென்று திருமங்கையாழ்வார் காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஜனங்கள்
வருடந்தோறும் வதரி சென்று வந்திருக்கிறார்களாகையாலே துஷ்ட மிருகங்கள் சஞ்சரித்திருக்க முடியாது. ஆகவே சிங்கம், புலி, மலையரவு ஆகிய துஷ்ட
ஜந்துக்கள் வாழுமிடமாய் பாடப்படும் திருப்பிரிதி வதரிக்கு 20 மைல் தெற்கே உள்ள ஜோஷி மடமாக இருக்கவே முடியாது.
ஜோஷி மடம் பிரிதியாய் இருக்க முடியா தென்பதற்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசமொன்றில் அமைந்தது திருப்பிரிதி என்பதற்கும் இது
முக்கியமான அகச்சான்றாகும்.-இந்த அகச்சான்றுகள் போக, சில புறச்சான்றுகளையும் இனி காண்போம்.
பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்களிலும் உகந்தருளிய நிலங்களுக்கெல்லாம் எல்லையாயிருப்பது திருப்பிரிதி என்று அருளியிருப்பது மற்ற திவ்யதேசங்கள் அனைத்திலும் வடக்கே இருப்பது என்று ஐயந்திரிபறக் காட்டுகிறது.
பெருமாள்-பரமபுருஷன், கிழக்கே திருமுகம், புஜங்க சயனம், பார்வதிக்குப் பிரதயட்சம்.
தாயார்– பரிமளவல்லி நாச்சியார்
விமானம்– கோவர்த்தன விமானம்
தீர்த்தம்– இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்.
விபூதூர் வித்வான் கி.வேங்கிடசாமி ரெட்டியாரிடமிருந்து கிடைத்த 108 திருப்பதியந்தாதியென்னும் கட்டளைக் கலித்துறையிலமைந்த
நூலில்,“நாரங்களுக் கிறைவன் பார்வதிக்கு நயந்தருள்வோன்
வாசஞ்செய் மானச வாவி அனந்தன் வர்த்தனத்தில்
பாரமர் பரிமளவல்லிக் கின்பாகத் தென்பால் துயிலும்
ஆரம் செறி இமயப்பால் திருப்பிரித்திக் கரசே–என்று அமைந்துள்ள இப்பாட்டிலும் இவ்விவரங்களே காணப்படுகின்றன.
108 திருப்பதியந்தாதி பாடலில் மான ஸரஸ் என்னும் தீர்த்தம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பண்டைப் புராணங்களும் இதிகாசங்களும்
மானஸரோ வரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில்
வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250 அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000
அடி உயரத்தில் கடல் போல் விளங்குகிறது. பிரம்மன் தனது மனத்தாலே (ஸங்கல்பத்தாலே) முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த
ஏரியைச் சிருஷ்டித்தால் மானஸரஸ் என பெயர் உண்டானதாகக் கூறுவர்.
உலகிலேயே மிகப் பெரியதும் அழகியதுமாகையால் ஸரோவரம் என்னும் புகழைப் பெற்றுள்ளது.
மிக முக்கியமான இயற்கை காட்சியொன்று ஒரு திவ்ய தேசத்தில் இருக்குமானால் திருமங்கை அதை தமது பாடலில் குறிக்காமல் விடார். அவ்வாறெனின் இந்த ஏரியைக் குறித்திருக்கிறாராவெனின் முதல் பாசுரத்திலேயே தடஞ்சுனை பிரிதி என்று பிரிதிக்குத் தடஞ்சுனை என்றே பேரிட்டு மானஸரோ வரத்தையே உணர்த்துகிறார் என்பது நமது பதில். ஸரோவரம் என்பதை தடஞ்சுனை என்று தமிழாக்கியுள்ளார். தடஞ்சுனை பிரிதி பெரிய ஏரிகளை உடைய பிரிதி என்றும் பொதுவாய் பொருள் கொள்ளலாம்.
மேலும் இங்குள்ள பெருமாளின் பெயர், பிராட்டியின் பெயர், சயன திருக்கோலம், போன்றவற்றையும், திருமங்கை தமது பாசுரங்களில் குறிக்கிறார்.
பணங்கொள் ஆயிரம் உடைய நல் அரவனைப் பள்ளி கொள் பரமா என்று
இறங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்த நல்லிமயத்துள்–என்று பெருமாளின் திருநாமத்தோடு அவரின் சயனத்
திருக்கோலத்தையும் குறிக்கிறார். இப்பாசுரத்திற்கு முன் உள்ள பாசுரத்தில் கரைசெய் மாகடல் கிடந்தவன் என்று திருப்பாற்கடல் நாதனை அனுபவித்து
விட்டு அங்கே கிட்டமுடியாதாரும் அனுபவிக்கலாம்படி இங்கே தன் திருக்கோலத்தைக் காட்டுகிறான் என்னும் ஸங்கதி தோன்ற அப்படித்
திருப்பாற்கடலில் சாய்ந்தருளினவன் இங்கே வந்து எழுந்தருளியிருக்கும் படியை அனுஸந்திக்கிறார் என்று பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுரத்திற்கு
அவதாரிகை இட்டிருப்பதிலிருந்து திருப்பிரிதியின் பனங்கொள்ளாயிரமுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமனாகவே எம்பெருமான் சேவை ஸாதிக்கிறார் என்று விளங்குகிறது. எனவே புஜங்க சயனமில்லாத ஜோஷி மடக்கோவில் திருப்பிரிதியாய் இருக்க இடமில்லை என்பது தெளிவு. பார்வதியோடு சிவன் வாழும் கயிலை மலைக்கு அருகில் உள்ள திருப்பிரிதியில் எம்பெருமானைப் பார்வதிக்குப் பிரதயட்சமாக ப்ரபாவ நூலில் பேசியிருப்பதிலும் பொருத்தமுள்ளது.
இவ்வண்ணமாக நூற்றெட்டுத் திருப்பதி ப்ரபாவ நூல்களில் திருப்பிரிதிபற்றிக் கூறியுள்ள விபரங்கள் ஆழ்வார் பாசுரங்களோடும்
பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தோடும் ஒத்திருக்கையாலே பாரதத்தின் வட எல்லையில் இமயத்தினுள்ளே மானஸரோவர தீர்த்தத்தில் உள்ளதொரு அடர்ந்த காடே திருப்பிரிதியென்று பெயர் பெற்றிருந்ததென்றும், அதில் எம்பெருமான் பரமபுருஷன் என்னும் திருநாமத்தோடு பரிமளவல்லி
நாச்சியாரோடு ஆதிசேட சயனத்திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.
திருப்பிரிதி என்னும் திருநாமம் எவ்வாறு வந்துள்ளதெனில், பதரி கண்டம் முதலான வடநாட்டுத் திருப்பதித் திருநாமங்களைப் போல இதை
வடமொழி பெயராகக் கொண்டு பிரீதி எனவழைத்து காலப்போக்கில் பிரிதியாக மருவியுள்ளதாகக் கருதலாம். எம்பெருமான் பிரீதியுடன் (உகப்புடன்)
எழுந்தருளியிருக்கும் இடம் என்றபடி,
அல்லது இத்திருநாமம் தமிழர்கள் இட்ட திருப்பெயரே எனக் கொண்டால் பாரத தேசத்தை, தேசாந்திரத்திலிருந்து பிரிக்குமிடமாகையாலே
பிரிதி என்று பெயரிட்டதாகக் கொள்ளலாம். உகந்தருளின நிலங்களுக்கு எல்லை என்று பெரியவாச்சான் பிள்ளை பிரிதியைக் குறிப்பிட்டிருப்பது இப்படி
பொருள் கொள்ள இடமளிக்கிறது. மானஸரோவரம் பாரதத்தின் வட எல்லையென்று இதிஹாச புராணங்களில் காட்டப்பட்டிருப்பதும் இப்படி
பொருள் கொள்வதற்குப் பொருந்தியிருக்கிறது.
இந்த மானஸரோவரக் கரையில் திருப்பிரிதி எங்கோ இருக்க வேண்டும் என்பதுதான் தெளிவு.
வழங்கும் உயிர் அனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்கும் கவந்தன் விறல் தோட் கிழங்கை
பொருப்பு இருதிக்கும் கிடந்தால் போல் துணித்து வீழ்த்தான்
திருப்பிருதிக்கு என் நெஞ்சே செல் -103-
(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
வழங்கும் உயிர் அனைத்தும் – சஞ்சரிக்கின்ற எல்லாப்பிராணிகளையும்,
வாரி – (தனது இரண்டு கைகளாலும் ஒருசேரத்) திரட்டியெடுத்து,
வாய் பெய்து – (தனது) வாய்க்குள் தள்ளி,
விழுங்கும் – விழுங்குந்தன்மையுள்ள,
கவந்தன் – கபந்தனென்னும் அசுரனது,
விறல் தோள் கிழங்கை – வலிமையுள்ள தோள்களின் மூலபாகத்தை,
பொருப்பு இரு திக்கும் கிடந்தால் போல் – மலை இரண்டுபக்கத்திலும்வீழ்ந்து கிடந்ததுபோலக் (கிடக்கும்படி),
(இராமாவதாரத்தில்) துணிந்து வீழ்த்தான் – வெட்டித்தள்ளிய திருமாலினது,
திருப்பிருதிக்கு – திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்திற்கு,
செல் – நீ சென்று சேர்வாயாக; (எ – று.)
திருமாலினது திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்தைப் போய்ச்சேர்ந்தாயாயின், உனது சகலவிரோதிகளும் போய்
நற்கதிபெறுவது திண்ணமென்பது, கருத்து. இராமபிரான் கவந்தனது வலத்தோளையும்,
லஷ்மணன் அவனது இடத்தோளையும் வெட்டித் தள்ளியதாகக் ஸ்ரீராமாயணத்திற் கூறியிருக்க,
இங்கு இவ்வாசிரியர் கவந்தனது இருதோள்களையும் இராமபிரானே வெட்டித்தள்ளியதாக கூறியது –
“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” என்றபடி லஷ்மணனை இராமபிரானது வலக்கையாகக் கூறியிருப்பதுகொண்டு
அவ்விலக்குமணனது செயலையும் இராமபிரானது செயலாகவே கொண்டதனாலாகுமென்க.
இது, ஒருவகை உபசாரவழக்கின்பாற்படுமென்னலாம். கவந்தனதுதோள்கள் யோசனைதூரம் நீண்டிருந்தன வாதலால்
அவை வெட்டப்பட்டுக் கீழ்வீழ்ந்துகிடந்ததற்கு – இருபொருப்புக்கள் கீழ்வீழ்ந்திருத்தலை உவமை கூறினார். தோட்கிழங்கு – புஜமூலம்.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply