மூலவர் -பத்ரீ நாராயணன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அம்ருத வல்லி
விமானம் -தப்பித்த காஞ்சனா விமானம்
தீர்த்தம் -தப்பித்த குண்டம்
ஸ்தல வ்ருக்ஷம் -பத்ரீ மரம் -இலந்தை மரம்
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
பத்தரிக்கா -இலந்தை -இந்த மறைத்து அடியில் நான்கு திருக் கரங்களோடு பத்மாசனத்தில்
யோகத்தில் பத்ரீ நாராயணப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
நர நாராயண பர்வதத்தில் திருமால் தானே சிஷ்யனான நரனாகவும் -ஆச்சர்யனான நாராயணனாகவும்
-அஷ்டாக்ஷர திரு மந்த்ரத்தை உபதேசித்த இடம் –
கயா ஸ்ரார்த்தம் இங்கு ப்ரஹ்ம கபாலத்தில் பிண்ட பிரதானம் செய்வது மரபு -இது ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் –
பத்ரி -நர நாராயணன் -23210 அடி உயரம்
நீல கண்ட பர்வம் -ஐ ராவதம் குத்த -நர நாராயண மலையாக பிரிய –
நர நாராயணன் அர்ஜுனன் கிருஷ்ணன் -3 நாள் இருந்து சேவை /
தப்த குண்டம் -நாரத சிலா -ஆதி சங்கரர் தேடி எடுத்து பிரதிஷ்டை பத்ரி நாராயணனை என்பர்
நம்பூதிரிகள் நாரதர் உத்தவர் குபேரன் -கருடன் -நர நாராயணர் 7 பெரும் சேவை
-கருடன் தனி சந்நிதி வெளியில் –
ப்ரஹ்ம கபாலம் -தனி இடம் -கோயில் பிரசாதம் -௧௬ பிண்டம் 2 பிதாவுக்கு 14 மாதாவுக்கு -மந்த்ரம் சொல்லி க்ஷமை பிரார்த்தித்து-
தற்போது உள்ள பெயர் ஸ்ரீ பத்ரிநாத்
மூலவர் ஸ்ரீ பத்ரி நாராயணன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ பத்ரி நாராயணன்
தாயார் ஸ்ரீ அரவிந்த வல்லி
தீர்த்தம் ஸ்ரீ தப்த குண்டம்
விமானம் ஸ்ரீ தப்த காஞ்சன விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தராகண்ட்
அடிப்படை இடம் ஸ்ரீ ஹரித்துவார்
நாமாவளி ஸ்ரீ அரவிந்த வல்லீ ஸமேத ஸ்ரீ பத்ரீ நாராயணாய நமஹ
——————-
ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இட முடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தமனிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரைமரஞ்சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. 4-7-2-
———-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -21-பாசுரங்கள் மங்களாசாசனம் –
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்
மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-
உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-
பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-1-3-4-
பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-
பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே—1-3-7-
ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8-
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே —1-3-9-
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10-
னம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-1-
கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே——1-4-2-
இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—1-4-3-
துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-4-
பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-5-
தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-6-
வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—-1-4-7-
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே——1-4-8-
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-9-
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே–1-4-10-
சீராரும் மாலிருஞ்சோலை திரு மோகூர் பாரோர் புகழும் வதரி வட மதுரை –சிறிய திருமடல் – 74-
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிக்குன்றுகட்கு மத்தியில் பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள்
நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.
எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடமாகவும், மோட்சத்தைத் தரத்தக்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இத்தலம்
பற்றி தனி நூலொன்றே யாக்கும் அளவிற்கு வடநாட்டுப் புராணங்களும், வடநாட்டு நூல்களும் குறிப்புக்களை வாரிவாரியிறைக்கின்றன.
இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். ஓம் நமோ நாராயணாய
என்ற மந்திரத்தை நாராயணன் என்ற திருநாமத்துடனே வந்து உலகத்திற்கு உகந்தருளின இடம் இந்த தலமாகும். திருமந்திரம் பகவான் மூலமாகவே
வெளியான இடம்.
எம்பெருமானைச் சரண்புகுந்து மோட்சம்புகும் பக்தர்கட்கு மிக எளிய வழியான திருமந்திர உபதேசத்தை போதித்துத் தன்னை காட்டிக் கொடுத்த
தலம்.
மகாலெட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்திரகாச்ரமம்
ஆயிற்றென்பர். உபதேசம் செய்வதற்கு ஆஸ்ரமம் அவசியமன்றோ.-எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக
தேர்ந்தெடுத்ததால் பத்திரகாஸ்ரமம் ஆயிற்றென்பர். இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. இதற்கு எதிர்புறம் அமைந்துள்ள நீலகண்ட
பர்வதம் காண்பதற்குப் பேரெழில் பொலிந்ததாகும்.
மூலவர்- பத்ரி நாராயணன், சங்கு சக்கரத்துடன் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்– அரவிந்த வல்லி
தீர்த்தம்- தப்த குண்டம்
ஸ்தல விருட்சம்- பத்ரி, இலந்தை மரம்
விமானம்- தப்த காஞ்ச விமானம்
காட்சி கண்டவர்கள்- மானிடரூப சிஷ்யனான நர நாராயணன்.
108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் பகவான் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய ஸ்தலமாகும். மற்றெல்லா ஸ்தலங்களிலும் அவனருள்
காட்டி அவனது பலத்தைக் காட்டி நின்றாலும் இங்கு மட்டும்தான் ஆச்சார்ய திருக்கோலத்தில் திகழ்கின்றான். பக்தர்களுக்காகவும் இவ்வுலகிற்காகவும்,
பிராட்டிக்காகவும், பிற ஸ்தலங்களில் தன்னை வெளிக்காட்டிய எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசம் செய்ய தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்திய
ஸ்தலம் இது ஒன்றுதான். எனவேதான் இங்கு தனது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு ஒரு தபஸ்வியின் வடிவில் இலந்தை மரத்தடியில்
பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார்.
பத்ரிநாத்தானது, அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில்
அமைந்துள்ளது. இந்த பத்ரி நாதனைக் குறித்து நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் ஜபம் செய்து மஹா விஷ்ணுவின் அருள்பெற்றார் என்னும் ஓர் வரலாறும் உண்டு.
பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான்
கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.
பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தில்
நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார். கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன்
ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க
வீற்றிருக்கின்றனர்.
இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக (ஸாளக்கிராமச் சிலையாக) எழுந்தருளியுள்ளார்.
இங்கு பெருமாளுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும் (திருமஞ்சனம்) திருவாராதனம், சாத்துமரை மக்களுக்கு எதிரிலேயே
நடைபெறுகின்றன. திரைபோடுவது இல்லை. இங்கு நடைபெறும் பூஜாமுறைகளை பக்தர்கள் நேருக்கு நேர் நின்று காணலாம்.
இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். இந்த பூஜைக்குரிய மந்திரங்களை வடநாட்டு பிராம்மணரே
ஓதுவர். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் கலைவர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள தேசத்து நம்பூதிரிகளே தலைமை
அர்ச்சகராக இருந்து செயல்படுவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். மிகவும் நல்லொழுக்கம் வாய்க்கப் பெற்றவர்களும், சாஸ்திரங்களிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களே இந்த நிகழ்ச்சிக்கு குழுவினராக நியமிக்கப்படுவர். இந்த பூஜை நடைபெறும் சமயம் பெருமாளின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை
நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.
இங்கு கோவிலின் வடபுறம் கங்கை கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில்
பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுகிறது. இவ்விடத்தில் சிரார்த்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோட்சம்
கிடைப்பதாக ஐதீஹம்.
இங்கு இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன.
இங்கு அமைந்துள்ள வசுதரா என்ற பனிமலையில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் பனித்திவலைகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை
என்றும், இவைகள் மேனியில் படுதலால் புனிதம் உண்டாகிறதென்றும் நம்பிக்கை. இங்கு யாத்திரை செல்வோர் இந்த திவலைகளில் குளித்து வருவர்.
எல்லையற்ற பெருமைகொண்ட இத்தலத்திற்கு விசாலபுரி என்ற பெயரும் உண்டு. பாண்டவர்களின் அவதாரஸ்தலம் இதுதான் என்று ஒரு
கருத்தும் உண்டு.
இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்துவிடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து
இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று மீண்டும்
திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் இரவில் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும்போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள்
மறுநாள் காலையில் பார்த்தால் எந்த அளவுக்கு லேசாக வாடியிருக்குமோ அந்த அளவிற்குத்தான் மலர்களின் வாட்டம் இருக்குமாம். அதனால் தான்
மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர் என்னும் ஐதீஹம் உண்டானது.
மே மற்றும் ஜூன் மாதங்களே இந்த யாத்திரைக்கு மிகவும் உகந்ததாகும்.
தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டெழுத்தும்
கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு
போவது அரிது ஆனாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே
மாவதரியாச்சிரமத்து –101-
(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! –
தாட்கு – (தனது) திருவடிகட்கு,
அடிமை என்று – அடிமைப்பட்டவ ரென்று,
தமை – தங்களது ஸ்வரூபத்தை,
உணரார்க்கு – அறியாத இவ்வுலகத்தவர்க்கு,
எட்டு எழுத்தும் – (ஆத்மாவினது ஸ்வரூபத்தை உள்ளபடிஉணர்த்துவதான) திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தை,
கேட்க – காதிற்படும்படி,
வெளியிட்டு அருளும் – கருணையோடு வெளியிட்ட,
கேசவனை – திருமாலை, –
போவது அரிது ஆனாலும் – யாத்திரைசெய்வது வருத்தமுடையதாயிருந்தாலும்,
மா வதரியாச்சிரமத்து – சிறந்தபதரிகாச்சிரம மென்னுந் திவ்வியதலத்தில்,
வேட்கையொடு – பக்தியுடனே,
போய் -, தொழுவோம் – வணங்குவோம்; (எ – று.)
முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்குதற்பொருட்டு
நரனென்னும் ஸிஷ்யனும், நாராயணனென்னுங் குருவுமாகப் பதரிகாச்சிரமத்தில் திருமால் தோன்றி,
சிஷ்யனுக்குக் குரு திருமந்திரத்தை உபதேசித்தருளி, தன்னை உணராத உலகோர்க்குத் தான் அறிந்த தொடர்பையே
பற்றாசுஆகக்கொண்டு ஈடேறுதற்கு ஏற்ற வழியைக் காட்டியருளியதனால், அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற
தலம்போய்த் தொழுதற்கு அரியதாயிருந்தாலும், அப்பிரான்செய்த உபகாரஸ்மிருதியால் அங்கு அருமைப்பட்டாயினுஞ் சென்று
அப்பிரானைத் தொழுது உய்வுபெற வேண்டுமென்று தமதுநெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றன ரென்க.
“நரநாரணனா யுலகத்தறநூல், சிங்காமைவிரித்தவன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும்,
“ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரகைங்கர்யத்தையுமிழந்து இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து
கரைமரஞ் சேரும்படி தானே ஸிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்.
ஸிஷ்யனாய் நின்றது, ஸிஷ்யனிருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக” என்ற
முழுக்ஷுப்படியும் இங்குக் காணத்தக்கன.
திருமாலால் வெளியிடப்பட்ட திருமந்திரம் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி காட்டவல்ல தென்பார்
‘தமையுணரார்க்கு எட்டெழுத்துங் கேட்க வெளியிட்டருளுங் கேசவன்’ என்றார். எட்டெழுத்து – திருவஷ்டாக்ஷரம்.
பதரிகாஸ்ரமம் என்ற வடசொல் திரிந்துவந்தது; (பதரி – இலந்தை மரம்.) இலந்தைமரங்களடர்ந்த ஆஸ்ரமமென்பது, பொருள்;
இது – இமயமலையிலுள்ளது; அதுபற்றியே, “போவதரிதானாலும்” என்றார்.
பத்ரிநாத் பகவானின் மூர்த்தி சுயம்பு. தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, அபிஷேகத்தின் சமயம், பூஜை, அபிஷேகம் செய்யும் நம்பூதிரி சாலக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார். பத்ரிநாத் பகவான் (மூலமூர்த்தி – சாளக் கிராம சிலை) பத்மாசனத்தில் அமர்ந்து, தரிசனம் அளிக்கிறார்.
பகவானின் ஜடா மண்டல் (ஜடை விழுது) மேலும் கம்புக்ரீவா (மூன்று கீறுள்ள கழுத்து) நன்றாகக் காணப்படுகிறது. பகவானின் நான்கு கரங்கள் தெரியும். சங்கு சக்ர கதாதாரியாக சதுர்புஜ பகவான் பத்ரிநாராயணன் மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன் (விஷ்ணு) நாராயண சொரூபமாக சேவை சாதிக்கிறார். பகவானின் கருவறையில், உற்சவமூர்த்தி, நாரதர், தனாதிபதி குபேரர், மேலும் கருட பகவானின் விக்ரகங்களையும், சுதர்சன சக்கரம், சரணபாதுகை முதலியவைகளையும் தரிசிக்கிறோம்.
பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது.
(குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும்). தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள மகாலக்ஷ்மி சந்நிதியில், மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள்.
குளிர்காலத்தில், சுமார் 6மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை, பாண்டுகேச்வர் – ஜோதிர்மட் (ஜோஷீமட்) கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனை நடை பெறுகிறது. மறுபடியும் அக்ஷய திருதியைக்கு மறுநாள், கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன.
பத்ரிவிசால் கோயிலில் இந்த 6மாத காலம் தேவர்கள் ஆராதனம் செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
தரிசன நேரம் : காலை 5.00மணி முதல் 6.00வரை அபிஷேகம் – தரிசனம் – பக்த யாத்ரிகர்கள் அபிஷேக தரிசனம் செய்யலாம்.
காலை 9.00மணி – பாலபோக் (காலசந்தி)
மதியம் 12.00 – ராஜபோக் (உச்சிகாலம்)
இதற்குப் பிறகு மதியம் 3.00மணிவரை
சந்நிதிக் கதவு மூடப்பட்டிருக்கும்.
மாலை 3.00மணிக்கு சந்நிதி திறக்கப்படும்.
இரவு 9.00மணிவரை தரிசனம் செய்யலாம்.
உரிய கட்டணம் செலுத்தி அர்ச்சனை, கற்பூர ஆரத்தி முதலியன செய்யலாம். மாலை தரிசனத்தின் சமயம் கற்பூர ஆரத்தி, (தீப ஆராதனை) ரஜத (வெள்ளி) ஆரத்தி தரிசனம் செய்யலாம். இரவு 9.00மணிக்கு சயன ஆரத்தி சேவிக்கலாம்.
ஆரத்தி (தீப ஆராதனை) சமயத்தில் பகவானின் தரிசனம் செய்வது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது. கோயிலின் பின்புறம் இலட்சுமி நரசிம்ம மந்திரில் (தனிக் கோயில்), ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத் ராமானுஜர் மேலும் இலட்சுமி நரசிம்மன் சந்நிதிகள் உள்ளன.
————–——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply