ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு-சாளக்கிராமம்

மூலவர் -ஸ்ரீ மூர்த்தி — வீற்று இருந்த திருக் கோலம் / வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸ்ரீ தேவி நாச்சியார்
விமானம் -ககன விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கண்டகி நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

முக்தி நாத் -நேபாள தேசம் -கண்டகி நதி பெருமாள் இடம் த்வம் புரிந்து அவர் தன் கர்ப்பத்தில் இருக்க பிரார்த்தித்தாள்-
-பகவான் நான் சாளக்ராம ரூபத்தில் உன் மடி யிலே இருப்பேன் என்று வரம் அளித்தார்
அன்னபூர்ணா -மற்றும் தவ்லகிரி மலைத் தொடர்க ளுக்கு நடுவில் உள்ள திருத்தலம் -இதுவும் ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
போஹ்ரா ஜவம்சம் வழியாக -உலகில் ஆழமான பள்ளத்தாக்கு கண்டகி நதி ஓடும் -சாளக்கிராமம் அடை நெஞ்சே –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ முக்தி நாத்
மூலவர் ஸ்ரீ முக்தி நாராயணன், ஸ்ரீ மூர்த்தி
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ சக்ர தீர்த்தம்,ஸ்ரீ கண்டகி ஆறு
விமானம் ஸ்ரீ கனக விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் நேபாளம்
அடிப்படை இடம் ஸ்ரீ காத்மண்டு
நாமாவளி ஸ்ரீ தேவீ நாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தயே நமஹ

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனைய அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய். –2-9-5-

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோ த்தமனிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரஞ்சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடிநகரே. –4-7-9-

—————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-2-

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே——1-5-3-

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-7-

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே–1-5-10-

இத்தலம், நேபாளம் காட்மண்டு பகுதியில் அமைந்துள்ள கண்டகி நதி பிராந்தியத்தில் உள்ளது.
அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும். நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து 170 மைல் தூரத்தில் கண்டகி நதிக்
கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண சேத்திரம் உள்ளது. இந்த முக்தி நாராயண சேத்திரமே சாளக்கிராமம் என்று
சொல்வாருமுண்டு.

பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல்
ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம்
என்றழைக்கப்படுகிறது.

இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல
அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூர்த்தியும் சாளக்கிராம
வடிவத்தினர்தான்.

மூலவர்–  ஸ்ரீமூர்த்தி வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-  ஸ்ரீதேவி
தீர்த்தம்-    சக்ர தீர்த்தம், கண்டகி நதி
விமானம்-   கனக விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மா, சிவன், கண்டகி.

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு
போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை
அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை
வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு
அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.

இப்பேர்ப்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும். இவைகளில் ஸ்ரீமந் நாராயணனின் ஜீவரூபம் கலந்திருப்பதாக ஐதீஹம்.
இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம்.

சாளக்கிராமங்கள் உருண்டையான வடிவத்திலும் தட்டையான வடிவத்திலும் முக்கோணத்தில் பாதிக் கூறான அரை முக்கோண வடிவிலும்
சங்கு, நத்தைக் கூடு வடிவிலும் சுருள் சுருளான ரேகைகளுடன் கூடினதாகவும், துவாரங்களுடன் கூடினதாகவும், இன்னும் வடிவு சொல்லவியலாத சில
வடிவங்களிலும் தோன்றுகின்றன. இங்குள்ளவர்கள் இதனைச் சாளக்கிராவா என்று அழைக்கின்றனர்.

சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள்
கருதப்படுகின்றன.

1. வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ சேத்திரம்
2. கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு சேத்திரம்
3. பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண சேத்திரம்
4. பசும்பொன் (அ) மஞ்சள் சற்று மஞ்சள் கலந்து சிகப்பு நிற
சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம சேத்திரம்
5. மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன சேத்திரம்
6. கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்

இந்த வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும்   மாறுபடுகின்றனவாம்.

நீலநிறம்   – செல்வத்தையும், சுகத்தையும்
பச்சை     – பலம், தைரியம்
வெண்மை  – ஞானம், பக்தி, மோட்சம்
கருப்பு     – புகழ், பெருமை
புகை நிறம் – துக்கம், தரித்திரம்

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூஜிக்கப்பட்ட சாளக் கிராமங் களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. இதைப்பால் அல்லது அரிசி மீது
வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து
போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை. சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள்
இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும்.

சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று. பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால்
பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித
நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள். இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின்
தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில்
வாங்குதல் சிறப்பு.

சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கடலில் ஒரு சாளக்கிராமம் கிடைக்க அதனை ஸ்ரீராமர் பாதம்
அமைந்திருக்கும் கந்தமான பர்வதம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் (இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல்) வைக்கப்பட்டுள்ளது.
தேங்காயளவு பருமனான இந்தச் சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமுகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது.

நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான்
சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான்அமைந்துள்ளது.
இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய ஸாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி
நதிக் கரையில் அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர் கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது.

ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார்.
வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து
கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராம
ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.

சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

ஏறத்தாழ 7 கோடியிலிருந்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இடை ஊழிக்காலத்தில் (MESOZOIC) வாழ்ந்து பின்னர் அற்றுப்போய்விட்ட ஒரு
வித மெல்லுடலிகள்தான் அம்மோனைட்டுகள் அல்லது அம்மோனாய்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ 8000 வகை அம்மோனைட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அம்மோனைட்டுகளின் ஓடுகள்
அளவிலும், வடிவிலும் வேறுபட்டவை. 1.3 செ.மீ முதல் 2 செ.மீ அளவு விட்டமுடையவை. ஒருதளச் சுருளமைப்பு உடையவை. அம்மோனைட்டுகளின்
ஓடுகள் தவிர மென்பகுதிகள் கற்படிவங்களாக மாற்றமடையாததால் அவற்றின் தன்மையை அறிய இயலவில்லை.

இந்தியா நேபாளம் உள்பட பல நாடுகளிலும் அம்மோனைட்டுகளின் கற்படிவங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அரியலூர்ப்
பகுதியில் கிரெட்டேசியஸ் காலத்து (கிரெட்டேசியஸ் காலம் என்பது சுமார் 7 கோடி ஆண்டுகட்கு முற்பட்டதாகும்) அம்மோனைட் கற்படிவங்கள்
சுண்ணாம்பு கற்பாறைகளிடையே நிறையக் கிடைக்கின்றன. இவை வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கருங்கல்லாலான அம்மோனைட் கற்படிவங்கள் பார்க்க மிக அழகாக இருக்கும். இவையே நம் நாட்டில் சாளக்கிராமம் என்று புகழ்பெற்றுள்ளன.

பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாளக்கிராமமோ என்ற முதுமொழி ஒரு பழைய தமிழ் நூலில் (சேது புராணம்) மேற்கோளாக
எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலிருந்து நத்தை போன்ற, ஆனால் வேறொரு உயிரின் படிவமே சாளக்கிராமம் என்று நம் முன்னோர்கள்
அறிந்திருக்கின்றனர்.இயற்கையில் மிகத் தொன்மையான அற்புதமான இந்தச் சிருஷ்டியில் நம் முன்னோர்கள் இறைத் தத்துவத்தைக் கண்டது நமது மரபாகும்.

உண்டாம் முறைமை உணர்ந்து அடிமைப் பேர் பூண்டேன்
பண்டம் குடி குலத்தால் பல் மதத்தால் கொண்டாட்டால்
ஆளாம் கிராமத்தால் அல்லல் பேர் பூணாமல்
சாளக்கிராமத்தார் தாட்கு –100-

(இ – ள்.) பண்டு ஆம் – தொன்று தொட்டுவருகிற,
குடி (ஆல்) – குடியினாலும்,
குலத்தால் – குலத்தினாலும்,
பல் மதத்தால் – பலவகையாகவுள்ள மதத்தினாலும்,
கொண்டாட்டால் – (தாம்தாம்செய்யுந் தொழில்முதலியவற்றாலுண்டாகின்ற) ஏற்றத்தினாலும்,
ஆள் அ கிராமத்தால் – உரிமைகொண்டு வசிக்கிற தம்தமதுகிராமத்தினாலும்,
அல்லல் பேர் பூணாமல் – துன்பத்திற்கு இடமாகிய பெயரை வைத்துக்கொள்ளாமல், –
சாளக்கிராமத்தார் தாட்கு – சாளக்கிராமமென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியுள்ள திருமாலினது திருவடிகளோடு,
உண்டாம் – பொருந்திய,
முறைமை – சம்பந்தத்தை,
உணர்ந்து – ஆராய்ந்து தெரிந்துகொண்டு,
அடிமை பேர் – (அப்பெருமானுக்கு) அடியவனென்கின்ற பேரை (தாஸ்யநாமத்தை),
பூண்டேன் – வைத்துக்கொண்டேன்; (எ – று.)

குடி முதலியவற்றால் வருகின்ற பேர்கள் அகங்காரத்திற்கே இடனாகி அழிதற்கே யுரியனவாதலோடு தாமும்
நிலையாதன வாதலால் அவற்றை நல்லாசிரியரது உபதேசம் முதலியவற்றால் அறநீத்து,
ஆத்மாவுக்கு நிலைநின்ற பேராகிய ஸ்ரீவைஷ்ணவதாஸனென்கின்ற அடிமைப்பேரைப் பூண்டு கொண்டே னென்று
தாம் நல்லுணர்ச்சிபெற்றிருத்தலை இப்பாசுரத்தால் தெரிவிக்கின்றன ரென்க.
“அஹங்காரமாகிற ஆர்ப்பை (மாலிந்யத்தை)த் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியா னென்றிற.
க்ராம குலாதிகளால் வரும் பேர் அநர்த்தஹேது” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்கியங்கள் இங்குக் கருதத்தக்கன.
குடி குலம் முதலியவற்றால் வரும் பெயர்கள் உடலைப்பற்றி வருவன வாதலால், அவற்றிற்கும் ஆத்துமாவுக்கும்
யாதொரு தொடர்பு மில்லாது நின்று உடலொழியும்போது அவை தாமும் ஒழியும்;
ஆகலான், அவற்றால் ஆத்மாவுக்கு எவ்வகைப்பயனும் விளையாது; அடிமைப்பேரோ என்றும் உளதாகையால்
அதனையுணர்ந்து பூண்டோர்க்கு எம்பெருமானதுபேரருள் சித்திக்கு மென்க.
இங்ஙனம் குலம்குடி முதலியவற்றால் வரும் பேர்கள் கேவலம் அகங்காரத்திற்கே காரணமாய்
ஸ்வரூப ஹாநியையு முண்டாக்கு மென்பார் ‘அல்லற்பேர்’ என்றார்.
குடியென்பது – பிறந்த வமிசம்; குடியால்வரும் பேராவன – கந்தாடையார் ப்ரதிவாதிபயங்கரத்தார் சக்கரவர்த்தியார் என்றாற் போல்வன.
குலம் – வர்ணம்; குலத்தால்வரும் பேராவன – பிராமணன் க்ஷத்திரியன் என்றாற் போல்வன.
மதத்தால் வரும் பேராவன – சைவன் வைஷ்ணவன் என்றாற் போல்வன.
கொண்டாட்டால்வரும் பேராவன – சதாவதானி மஹோபாத்யாயன் சமயகோளரி மகாபண்டிதன் என்றாற் போல்வன.
ஈகிராமத்தால் வரும் பேராவன – திருமலையார் நாவற்பாக்கத்தார் என்றாற் போல்வன.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading