ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு-நைமிசாரண்யம் –

மூலவர் -தேவராஜன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புண்டரீக வல்லி
விமானம் -ஸ்ரீ ஹரி விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கோமுகி நதி
ஸ்தல வ்ருக்ஷம் -தபோவனம்
மங்களாசாசனம் -திரு மங்கையாழ்வார்

கோமதி நதி -மற்றும் சக்ர தீர்த்தத்தின் கரையில் -பெருமாள் காடு ரூபத்தில் காட்சி கொடுக்கிறார்
-நேமி -சக்கரத்தின் விட்டம் -அது சுற்றி வந்து இக்காட்டில் நின்று ரிஷிகளின் தவத்திற்குச் சிறந்த இடம்
எனத் தேர்ந்து எடுத்த படியால் நைமிசாரண்யம் ஆயிற்று –
ஸ்ரீ மத் பாகவதம் உபதேசிக்கப்பட்ட இடம் -ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் –
ப்ரஹ்ம வனம் -ப்ரஹ்ம வ்ருக்ஷம் ஆஸீத் -இயற்கையே பெருமாள் -அனைத்துக்குள்ளும் வியாபித்து -சனாதன -மதம் –
தீர்க்க சத்ர யாகம் லோக க்ஷேமம் -நிமிச புல்லுக்கு காடு -தர்ப்பைகள் என்றுமாம் –
வியாசர் சுகர் நைமிசார்யர் -உபதேசித்த இடம் – சதை ரூபை -தபஸ் -ஸ்வயம்பூ மனு கல்யாணம்
ஹனுமான் பெரிய ரூபம் / வியாசர் சந்நிதி ஓலைச் சுவடி வேதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் –

மூலவர் ஸ்ரீ தேவ ராஜன் ( ஸ்ரீ ஹரி )
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ ஹரி லக்ஷ்மி, ஸ்ரீ புண்டரீக வல்லி
தீர்த்தம் ஸ்ரீ சக்ர தீர்த்தம், ஸ்ரீ கோமுகி ஆறு
விமானம் ஸ்ரீ ஹரி விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தரபிரதேசம்
அடிப்படை இடம் லக்னோ
நாமாவளி ஸ்ரீ ஹரி லக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ தேவராஜாய நமஹ

————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-2-

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-5-

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர்.
அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு
வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தான்.

இந்த பாரத தேசத்தில் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது
என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.
நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் ஆனதால் நேமிச ஆரண்யமாகி
நைமிசாரண்யம் ஆயிற்று.
இதே கதை சில நூல்களில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
தீர்க்க ரோமர் என்ற மகரிஷியின் தலைமையில் பிரம்மனிடம் சென்ற முனிவர்கள் சத்திர வேள்வியைத் துவக்கத் தகுதியான இடத்தைக்காட்டுமாறு
வேண்ட, பிரம்மன் அவர்களை ஒரு விமானத்தில் ஏற்றி இவ்வுலகை (பூவுலகை)  வலம் வருமாறும், அவ்வாறு வரும்போது விமானத்தின் நேமி, (சக்கரம்)
தானாக எவ்விடத்தில் கழன்று விழுகிறதோ அதுவே வேள்வியைத்துவக்க சிறந்த இடமென்று கூறியனுப்ப விமானத்தின் சக்கரம் இவ்விடத்தில்
விழுந்ததாகவும் அதனால் இவ்விடம் நேமிச ஆரண்யம் ஆயிற்றென்றும் கூறுவர்.

எவ்வாறாயினும் நேமிசம் விழுந்த ஆரண்யம் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இந்த இடம்தான் என்பதில் ஐயமில்லை.

வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர். அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து
தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம்
எம்பெருமான் அருள்புரிந்து அவர்களை சாயுஜ்ய பதவிக்குரியனாக்கினார் என்பது வரலாறு.

இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய ஸ்வரூபியாக
(காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.

மூலவர்-  தேவராஜன் (ஸ்ரீஹரி) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்–  ஸ்ரீஹரிலெட்சுமி

தீர்த்தம்- சக்கர தீர்த்தம் – கோமுகி நதி
விமானம்-   ஸ்ரீஹரி விமானம்
ஸ்தல விருட்சம்-    தபோவனம்
காட்சி கண்டவர்கள்-   இந்திரன், சுதர்மன், சூதபுரானிகர், ரோமசர் முதலான முனிவர்கள்

இங்குள்ள சக்ர தீர்த்தம் சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ர
நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு. வினோதமான முறையில் இங்கு விநாயகருக்கும் சன்னதி
உண்டு. இதுவும் வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதது.

இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும்,
சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்றவற்றை உருவாக்கினார்கள். இதனால் வேறெந்த ஸ்தலத்திற்கும்
இல்லாத பெருமை (வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்தது) இத்தலத்திற்குண்டாகிறது.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட
அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

ஒரு அறிவும் இல்லாத என் போல்வார்க்கு உய்யலாம்
பேர் அறிவு உண்டேனும் பிறர்க்கு அரிது பார் அறிய
நைமிசாரண்யத்து நாதர் அடியாரோடும்
இம்மிசார்வு உண்டாயினால் –99-

(இ – ள்.) பார் அறிய – உலகத்தார் அறியும்படி,
நைம்மிசாரண்ணியத்து நாதர் அடியாரோடும் – திருநைமிசாரணியத்தி லெழுந்தருளிய ஸர்வஸ்வாமியினது பக்தர்களோடும்,
இம்மி சார்வு உண்டாயினால் – கொஞ்சமாவது சம்பந்தம் ஏற்படுமேயாயின், –
ஓர் அறிவும் இல்லாத – சிறிதேனும் அறிவில்லாத,
என் போல்வார்க்கு – என்னைப்போன்றவர்கட்கும்,
உய்யல் ஆம் – ஈடேறுதல் கூடும்;
பிறர்க்கு – (அவ்வாறு பாகவதசம்பந்தம்பெறாத) மற்றையோர்க்கு,
பேர் அறிவு உண்டு ஏனும் – விசேஷஞானம் உளதாயினும்,
அரிது – (ஈடேறுதல்) முடியாத காரியமாகும்; (எ – று.)

வீடுபேற்றுக்கு அறிவு பிரதானகாரண மன்று; பாகவத சம்பந்தமே முக்கியமானகாரண மென்பதாம்.
“ஜ்ஞாந அநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே அமைகிறாப்போலே” என்கிற ஸ்ரீவசநபூஷணமும்,
“பகவலலாபஹேதுவான தத்வஜ்ஞாநமும், ததநுரூப (அந்தஞானத்திற்குஏற்ற) அநுஷ்டாநமு மின்றிக்கே யொழிந்தாலும்
பகவல்லாபத்துக்கு “பஸுர்மநுஷ்ய: பக்ஷீவா – யேசவைஷ்ணவஸம்ஸ்ரயா:) தேநைவதேப்ரயாஸ்யந்தி –
தத்விஷ்ணோ:பரமம்பதம் (பசுவாயிருந்தாலும் மநுஷ்யனாயிருந்தாலும் பக்ஷியாயிருந்தாலும் யாராயிருந்தாலும்
ஸ்ரீவைஷ்ணவர்களை யாஸ்ரயித்தவர் – அந்தஸம்பந்தத்தினாலேயே அந்தவிஷ்ணுவினுடைய பரமபதத்தைச் சார்வர்)” என்றும்,
“யம்யம்ஸ்ப்ரூஸதிபாணிப்யாம் – யம்யம்பஸ்யதி சஷுஷா ஸ்தாவராண்யபிமுச்யந்தே –
கிம்புநர்பாந்தவா ஜநா: (விஷ்ணுபக்தன துஸ்பர்ஸம் நேரிட்டாலும் பார்வைக்கு இலக்கானாலும் ஸ்தாவரங்களும் மோக்ஷம் பெறும்;
அப்படியிருக்க, பந்துக்களைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?)” என்றும் சொல்லுகிறபடியே
பாகவதஸம்பந்தமே நிரபேக்ஷஸாதநமாகிறாப்போலே” என்ற அதன்வியாக்கியானமும் இங்குக் காணத்தக்கன.
(பாகவதர்கட்கு இடைவழியில் இளைப்புத்தீருமாறு நிழல்கொடுத்து உதவின புளியமரமொன்று
ஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவருளால் முத்திபெற்ற வரலாறு இங்குக் கருதத்தக்கது.)

ஒருகாலத்தில் முனிவர்கள் ‘தவஞ்செய்தற்குச் சிறந்த இடம் நிலவுலகத்தில் யாது?’ என்று தங்களுக்கு விளக்கிக்
காட்டுதற்பொருட்டுப் பிரமனை வேண்டியபோது, அம்முனிவர்க்கு, அப்பிரமதேவன் தான் ஒரு தருப்பை யாழியைச்செய்து
மண்ணுலகத்திலுருட்டி அதுசென்று நின்ற இடத்தையே சிறந்ததென்று காட்டினனாதலால்,
அதற்கு இடமான இத்தலம் நைமிச மெனப் பெயர்பெற்றது. நைமிசம் – நேமிவிழுந்த இடம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading