78. திருக்குறுங்குடி
இத்தலத்தைப் பற்றி வராக புராணம் மிக விரித்துப் பேசுகிறது. கைசிக புராணம் இத்தலத்திற்கு ஏற்பட்ட பெரும்பேறு வராஹ அவதாரங் கொண்ட
பெருமாள் தன் பிராட்டியோடு இங்குள்ள சிறுகுடிலில் சில காலம் தங்கினமையால் குறுங்குடியாயிற்றென்பர். பயங்கரமான வராகரூபத்தை மிகவும்
குறுகச் செய்தமையாலும். குறுங்குடியாயிற்று என்பர்.
மூலவர் நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, , வைஷ்ணவ நம்பி என்ற பல பெயர்கள் உண்டு. கிழக்கு நோக்கி நின்ற கோலம்
தாயார் குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் திருப்பாற்கடல்
விமானம் பஞ்சகேதக விமானம்
காட்சி கண்டவர்கள் சிவபெருமான், கஜேந்திரன்.
நம்மாழ்வாரின் தந்தையாகிய காரியாரும் தாயாராகிய உடைய நங்கையாரும் தமக்கு நெடுங்காலம் புத்திரப்பேறில்லாது போக இந்த
திருக்குறுங்குடி நம்பியை வந்து வேண்டிக்கொள்ள, நாமே வந்து உங்கட்குப் பிள்ளையாகப் போகிறோம் என்று இப்பெருமான் கூறி அவ்விதமே
நம்மாழ்வாராக அவதரித்தார். வேதம் தமிழ் செய்த மாறனாகப் பிறந்தது இந்நம்பியே. அதனால் இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு விக்ரகம் இல்லை.
திருமங்கையாழ்வார் இத்தலத்தில்தான், பரமபதம் பெற்றார்.அரங்கனுக்கு (ஸ்ரீரங்கம்) பல பணிவிடைகள் செய்த திருமங்கை ஆழ்வார்
தனக்கு மோட்சம் வேண்டுமென அரங்கனிடம் வேண்டினார். அவ்வாறாயின் நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ என்று அரங்கன் கூற அவ்விதமே தெற்கு
வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்து இங்கும் எம்பெருமானுக்கு பல நற்பணிகள் புரிந்து இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட
அவரும் இவருக்கு வீடு தந்து ஏற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுரம் போலவே (ஜீயர் ஸ்வாமிகளால் ராஜகோபுரமாக கட்டப்பட்ட நிலைக்கு முன்பு இருந்தது) திருக்குறுங்குடியின் கிழக்கு கோபுரமும் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது
இந்த திவ்ய தேசம்தான். இங்கு கழனிகளின் நடுவே அமைந்துள்ள திருவரசு எனப்படும் திருமங்கையாழ்வார் முக்தி பெற்ற இடம் இன்றும் நித்ய
பூஜைகளை ஏற்றுக்கொள்கிறது. இறைவனிடம் வீடு பேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம்
திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியுள்ளார். இதற்கடுத்து திருவாலி திருநகரியில் மட்டுமே இதே போன்று அமைந்துள்ளது.
இங்கிருந்துதான் திருமங்கையாழ்வாரின் மங்கள விக்ரகத்தை திருவாலி திருநகரிக்கு கொண்டு சென்றனர்.
இராமானுஜர் வைணவத்தைப் பரப்பி எல்லோரையும் எம்பெருமானிடம் ஈடுபாடு செய்துவரலானார். இராமாவதாரம்,
கிருஷ்ணவதாரத்தில் தம்மால் செய்ய முடியாத இக்காரியத்தை நீர் இவ்வளவு சுலபமாய் செய்த விந்தை எப்படி என்று திருக்குறுங்குடி எம்பெருமான் கேட்க
அதற்கு இராமானுஜர் கேட்கும் விதத்தில் கேட்டால் பதில்தருவோம் என்றுசொல்ல இத்தலத்தின் நம்பியும் சீடனாக அமர்ந்து இவரை குருவாக ஏற்று
விளக்கம் கேட்க இராமானுஜர் நம்பியின் செவியில் நாராயண மந்திரத்தை யோதி இம்மந்திரத்தால்தான் என்றார்.
திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் எம்பெருமான் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். ஆனால் இங்கு இறைவனுக்கு எம்பெருமானாரே
(எம்பெருமானார்] திருமந்திர உபதேசம் செய்து ஆசிரிய ஸ்தானம் பெற்றது இத்தலத்தில்தான்.
திருவனந்தபுரத்தில் இராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவத்தை போதிக்கச் செல்கையில் அதை விரும்பாத நம்பூதிரிகள் எங்கே இவரால் தம் தொழிலுக்கு
இடையூறு வருமோ என்றஞ்சி அனந்தபுர பத்மநாபனை வேண்டிக்கொள்ள அவரும் தம் எதிரே இருந்த கருடாழ்ழ்ழ்வாரை நோக்கி இவரைக்கொண்டு
திருக்குறுங்குடியிலே விட்டுவாருமென்றார். கருடாழ்வார் அவ்வாறே செய்தார்.
எனவே தான் இத்தலத்தில் கருடாழ்வார் இல்லை (திருவனந்தபுரத்தில்)
தூங்கச் சென்ற இராமானுஜர் விடிந்தெழுந்து பார்த்தபோது தாம் திருக்குறுங்குடியிலே இருப்பதை யுணர்ந்து இதுவும் அவன் மாயையே என்று
கருதிக் கொண்டு, திருமண் தரிப்பதன் பொருட்டு எப்போதும் தன் சீடனைஅழைப்பது போல் வடுகநம்பி என்றழைக்க, திருக்குறுங்குடி எம் பெருமானே
வடுகநம்பி வேடங்கொண்டு இவர் பின்னே வந்து தமது திருக்கரத்தால் இராமானுஜருக்கு திருமண் காப்பிட்டு விட்டு திருமன் பெட்டி
போன்றவற்றை எடுத்துக்கொண்டு இராமானுஜரின் பின்னேவர, எம்பெருமானை சேவித்தற் பொருட்டு திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் உள்ளே நுழைய
துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டார். வடுகநம்பி
வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என்றெண்ணி இப்பெருமானுக்கு வடுகநம்பி என்ற பெயரிட்டு அழைத்தார் இராமானுஜர்.
இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்து வருந்திய வடுகநம்பியின் கனவில் தோன்றிய எம்பிரான் இராமானுஜர்
திருக்குறுங்குடியில் உள்ளாரென்றுரைக்க சிலநாள் கழித்து வடுகநம்பி திருக்குறுங்குடி வந்தடைந்தார்.
வராகமூர்த்தியின் மடியிலிருந்த பூமிப்பிராட்டி அவரால் உரைக்கப்பட்ட கைசிக மகத்துவத்தைக் கேட்டுத் தாமும் பூலோகம் சென்று
இறைவனின் பெருமையைப் பரப்ப வேண்டுமென்று நினத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதாரம் செய்தார். எனவே ஆண்டாள் அவதாரத்திற்கு
வித்திட்ட விளை நிலம் இதுதான்.
இந்தக் கைசிக புராணத்தை ஸ்ரீ பராசரபட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் தெளிவாக வாசிக்க கேட்ட அரங்கன் பட்டரே உமக்கு மேலைவீடு தந்தோம்
என்று கூறி பட்டரை ஏற்றுக்கொண்டார். இன்றும் இக் கைசிக புராணம்,குறுங்குடி, அரங்கம், ஆழ்வார் திருகரி, திருவாலி திருநகரி, போன்ற திவ்ய
தேசங்களில் வாசிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி எல்லா ஸ்தலங்களிலும் கொண்டாடுதல் போல் கைசிக ஏகாதசியும் எல்லாச் சேத்திரங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இம்மகத்துவம் பிற திவ்யதேசங்களுக்குண்டான திருவிழாக்களுக்கு இல்லை.
இத்தலத்தில் சிவபெருமானுக்கும் சன்னதி உள்ளது. திருமங்கையாழ்வார் “அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்று சிவன்
இவரோடு இருக்கும் இருப்பை உணர்த்துகிறார். இப்பொழுதும் திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் பக்கம் நின்றார்க்கு குறையேதும் உண்டோ என்று கேட்கும்
வழக்கம் நடைமுறையில் உள்ளது.
குறுங்குடிக்கு வைகுந்தம் கூப்பிடுதூரமே என்று சொல்வது போல் வைகுண்டம் இங்கிருந்து மிக அருகில் என்பது பெரியோர் வாக்கு.
இன்றும் நம்பாடுவான் வேடம் பிரம்ம ராட்சசன் வேடம் கிழப்பிராம்மணன் வேடம் போட்டு கைசிக புராணத்தை நாடகமாக நடத்திடும்
பழக்கம் இங்குண்டு.
பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை
வருராம தேவமகராசன் தருபீடத்
துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும்
விற்பனமாய் நீங்காத மேன்மையான்” என்று அழகிய நம்பியுலாவில் வரும் பாடலால் உதயமார்த்தாண்டர்
என்னும் சேர அரசரால் செய்யப்பட்ட பந்தலின் கீழ், ராமவர்மன் என்ற அரசனால் (இராமதேவன்) செய்யப்பட்ட பீடத்தின் மேல் திருக்குறுங்குடி
நம்பி எழுந்தருளியிருந்தார். இதில் குறிக்கப்படும் மன்னர்கள் யாவரும் சேர நாட்டினரே.
இத்தலத்தில் உள்ள மணியின் மேற்புரத்தில் செய்துங்க நாட்டுச் சிறைவாய் மன்னாதித்தன் தென் வஞ்சியான் என்ற பாடல் செய்துங்க நாடு
என்று குறிக்கப்படும், திருவிதாங்கோட்டு அரசர்கள் இத்திருத்தலத்திற்கு பல நற்பணிகள் செய்ததை அறிய முடிகிறது.
ஸ்ரீரங்கத்து அரங்கன் திருப்பானாழ்வாரை ஆட்கொண்ட விடத்து ஸ்ரீலோக சாரங்கன் என்னும் முனிவர் மூலமே ஆட்கொண்டார். ஆனால்
நம்பாடுவானை இப்பெருமான் நேரிலேயே சென்று ஆட்கொண்டார்.
இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள். அவர்கள் தமது வீட்டின் பின்னால்
உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம் இந் நம்பியே ஒரு வைணவன்
வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம்.
வளர் அரையர் திருமனையில் வந்து அவரை நிழல்தனில் வன்காணம் கேட்ட பெருமான்’ என்ற பாடலால் உணரலாம்.
இராமானுஜர் திவ்ய தேச யாத்திரை மேற்கொண்டு செல்லுமிடத்து மைசூரில் உள்ள திருநாராயணபுரம் செல்ல அங்கு கைங்கர்யத்திற்கு
ஸ்ரீவைஷ்ணவர் வேண்டுமென்று இராமானுஜரிடம் விண்ணப்பம் செய்ய, இராமானுஜர் திருக்குறுங்குடி ஜீயருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அரையர்
வம்சத்தில் வந்த ஒருவரையும் அங்கு அனுப்பி வைத்தார். இன்றும் அங்கு அவர்கள் திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் ஸ்தானிகம் (கைங்கர்யம்)
செய்து வருகின்றனர்.
இதனை தட்சிண பத்ரி (தென்பத்ரிசாச்சிரமம்) என்று வடவாணர் கூறுவர்.
இப்பெருமாளை சேவிக்க ஒரு சமயம் இராஜாக்கள், கூட்டம் கூட்டமாய் வந்தபோது வானமாமலை மூர்த்திகளான ஸ்ரீதெய்வநாயகன்
ஸ்ரீவரமங்கைத் தாயார் முதலானோர்கள் பூமியில் அமிழ்ந்து இருப்பதாகவும், அவ்விடம் சென்றால் எந்த இடத்தைச் சுற்றிக் கருடன் பறக்கிறானோ அந்த
இடத்தில் தோண்டினால் அவர்கள் வெளிப்படுவார்கள் என்று (அசரீரீயாய்) சொல்ல அவ்விதமாய் செய்துதான் வானமாமலை திவ்யதேசத்தை ஸ்தாபித்தனர் என்பர்.
எனவே வானமாமலை திவ்ய தேசம் உருவாவதற்கும் இத்திருப்பதியே காரணமாயிற்றென்றால் அது மிகையல்ல.
இச்சன்னதி திருக்குறுக்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது. இராமானுஜரால்தான் இந்த ஜீயர் மடம் உருவாக்கப்பட்டது.
இங்கிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையருகே திருப்பாற்கடல் நம்பி சன்னதியும் உள்ளது. இதே போன்று
இங்கிருந்து 6 1/2 மைல் தூரத்தில் மலைமேல் உள்ள ஒரு குன்றில் மலைமேல் நம்பி சந்நிதியும் உள்ளது. ஒரு ராட்சசன் ஒரு பிராம்மணனைக் கொல்லவர,
கொல்வது பாவமென்று பிராமணர் சொல்ல, அதுதான் எனது தொழில் என்று ராட்சசன் சொல்ல இருவருக்கும் விவாதம் முற்ற வேடன் வடிவங்கொண்டு
வந்த பெருமான் அவ்விருவருக்கும் உபதேசம் செய்து திருப்பாற்கடலில் ஸ்நானம் செய்ய இருவரும் மோட்சம் பெற்றனர் என்பது திருப்பாற்கடல்
ஸ்தல வரலாறு.
திருக்குறுங்குடி மேன்மையை நன்கு அறிந்து கற்றாலே அவன்தான் முழு வைணவன் அப்போதுதான் வைணவ சித்தியுண்டாகும். வைணவ பூரண
ஞானமே திருக்குறுங்குடி எம்பெருமானின் திவ்ய விஷயங்களை அறிந்து அவன்பாற் அன்பு பூண்டலால் ஏற்படுகிறது என்று நம்மாழ்வாரே
அறுதியிட்டுள்ளார்.-இவை பத்தும் திருக்குறுங் குடியதன்மேல் அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே”
எட்டெழுத்தைக் கருதிற் குறித்திட்டு நித்தம் பரவும்
சிட்டர்கட்கு திருப்பொற்பதத்தை சிறக்கத் தருமவ்
வட்டநெட்டைப் பணிமெத்தை யதிற்கிட வாரிசப்போ
குட்டினத்துக் குலம் தத்தி முத்தீனும் குறுங்குடியே.–புகழேந்திப் புலவர்
——————–
79. திருவரமங்கை என்னும் வானமாமலை
சீரீவரமங்கை என்னும் திவ்ய ஸ்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. நரசிம்ம புராணத்தில் 16 அத்தியாயங்களில் இத்தலத்தின்
பெருமை பற்றியும், வைணவர்களின் ஏற்றம் பற்றியும், கங்கை காவிரியின் மகத்துவம் பற்றியும் பெரிதும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. புராணத்தில்
சிவன் நாரதரிடம் இத்தலம் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொன்னதாகச் சொல்லப் பட்டுள்ளது.
உரோமச முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோம ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து
பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக
இருக்கும் பேறு பெற்றதால் நாகனை சேரி எனவும் மரங்கள் நிறைந்த வனமும், மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள
திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி நான்குநேரி எனவும் அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும்
நடுமையப் பகுதியில் அமைந்ததால் நான் +கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.
வடமொழியினர் தோத்தாத்தரி என வழங்குவர் வைணவ பெரியவர்கள் தோத்தாத்திரி என்றேயழைப்பர்.
தாமிரபரணியின் தெற்கே ஒரு யோஜனையும் தென் கடலுக்கு வடக்கே இரண்டு யேஜனையும், கிழக்கு கடலுக்கு மேற்கே மூன்று யோஜனை
தூரத்திலும் இந்த தோத்தோத்திரி உள்ளது என புராணம் இதற்கு எல்கை காட்டுகிறது.
1. நாய் மோட்சம் பெறுதல்–சிந்து நாட்டரசன் வேட்டைக்கு சென்றபோது அவனை எட்டுக்கால் யானை ஒன்று விரட்ட தனது படைக்கூட்டத்தை விட்டுப் பிரிந்து
நெடுந்தொலைவு அலைந்து பசியால் மிக வாடினான். அந்நிலையில் தூரத்தே தெரிந்த குடிலொன்றுக்கு செல்ல அங்கு யாருமில்லாமல் அறுசுவை
உணவுமட்டும் இருப்பதை கண்டான். பசிபொறுக்காத மன்னன் அதை எடுத்து உண்டுவிட்டான்.
சற்று நேரம் கழித்து அக்குடிசைக்குரிய குசானன் என்னும் முனிவன் அங்குவந்து தான் விஷ்ணுவின் பூஜைக்கு வைத்திருந்த உணவை உண்ட
இம்மன்னனைக் கடுஞ்சினத்துடன் நோக்கி நீ உண்ட உணவு உனக்கு நஞ்சாகுக. நீ பருகிய நீர் கள்ளாகுக. காய்கறிகள் பசுமாமிசம் ஆகுக. நீ
நாயாக மாறி அலைந்து திரிக என சபித்தான்.
முனிவனின் பக்தி மேன்மையினையும் தனது தவறினையும் உணர்ந்த மன்னன் சாப விமோசனம் வேண்டி நின்றான். அதற்கு அந்த முனிவன்,
இவ்வுலகில் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும் என்றார்.
ஒரு நாள் விலங்குகளை வைத்து வேட்டையாடுவோன் ஒருவன் அந்நாயைப் பிடித்து பல வேடிக்கைகளைக் காட்டி பல நாடுகளுக்குச் சென்று
வரும் நிலையில் ஒரு நாள் மரங்களடர்ந்த இச்சோலைக்கு வந்து (வானமாமலை) ஓய்வெடுத்து அங்கிருந்த (சேற்றுத் தாமரை என்ற
தெப்பக்குளத்தில்) நீராடினான். உடன்வந்தோறும் நீராடினர். இதைக்கண்ட நாயும் அவ்விதமே செய்ய நாயுருவம் மறைந்து அரசனாக நின்றான்.
இதைக்கண்டு அனைவரும் அதிசயத்து நிற்க, தனது பூர்வக் கதையை தெளிவுற விளக்கி தன்னை அழைத்துவந்தவனை தனது தந்தைக்கொப்பான்
என்று கூறி, இச்ஷேத்ரத்து எம்பெருமானை வழிபட்டு பல நாள் தங்கியிருந்து அவ்வேடுவனோடு தனது நாட்டை அடைந்தான்.
2. பூமிப்பிராட்டி தனது அழுக்கைப் போக்குதல்
திருமால் பிரம்மனைப் படைத்தான். பிரம்மனுக்கு சிருஷ்டித் தொழில் அமைந்ததால் கர்வம் ஏற்பட்டது. அதை அடக்க திருமால் தனது
செவியிலிருந்து அழுக்கை எடுத்து உருட்டிப்போட அது மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்களாய் உருவெடுத்து, திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து
செல்லும் தாமரைத் தண்டினை ஆட்டி பிரம்மனை அச்சுறுத்தினர். தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பிரம்மன் தன்னைக் காக்குமாறு
திருமாலிடமே தஞ்சம் புகுந்தார். அவ்விரண்டு அசுரர்களும் திருமாலையும் எதிர்க்கத் துணியவே இருவரையும் பிடித்து தமது தொடையில் அடித்து
முறித்து பூமியில் வீசினார். அவர்களின் மேனியிலிருந்து ரத்தமும் நிணமும் கலந்து பூமியெங்கும் துர்நாற்றம் வீசவே நிலைகுலைந்த பூமித்தாய்,
திருமாலைத் தஞ்சமடைந்து துதித்து நின்றார். திருமால் தமது சக்ரத்தை ஏவி அமிர்த மழைபெய்வித்து அசுத்தத்தைப் போக்கினார்.
தனது அழுக்குநிலை போக வேண்டுமென இத்தலத்தில்தான் பூமித்தாய் திருமாலை துதித்து நின்றார்.
3. ஊர்வசியும் திலோத்துமையும் மோட்சம் பெறல்
தேவலோகத்தில் அழகிலும் ஆடல் பாடல்களிலும் சிறந்த ஊர்வசி, திலோத்தமை இருவரும் பிரம்மனிடம் சென்று தமக்கு எப்போதும்
அழிவில்லாததும், பிறப்பற்றதுமான ஒரே மாதிரி நிலை வேண்டுமெனக் கேட்க மகாவிஷ்ணு ஒருவரால் மட்டுமே பிறப்பற்ற மோட்சநிலை தரமுடியுமென்றும்
அதற்கு பூலோகத்தில் உள்ள தோத்தாத்திரியில் சென்று விஷ்ணுவை குறித்து தவம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.
உடனே இரண்டு அழகிகளும் இத்தலத்திற்கு வந்து இங்கிருந்த வைகனச முனிவரிடம் (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்று
பயிற்சி பெற்று பல்லாண்டுகள் தவமிருந்து இறுதியில் திருமால் காட்சி கொடுத்து (சாயுஜ்யம்) தமது பக்கத்திலேயே இருக்கும் பேரளித்தார்.
எனவேதான் இத்தலத்தில் தேவமாதர்களான ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீச, ஸ்ரீதேவியும் இருமருங்கும் அமர்ந்திருக்க
மாமேருபோல் எம்பெருமான் எழுந்தருளி யுள்ளார்.
4. ஆதிசேடனும், கருடனும் தவமியற்றல்-கிரேதா யுகத்தில் காசியப் பிரஜாபதி என்பவருக்கு கத்ரு, வினதை என்ற
இரண்டு மனைவியர் இருந்தனர். இவ்விருவரும் நெடுங்காலம் புத்திரப் பேறு இல்லாதிருக்க தவவலிமையில் மிகச்சிறந்த முனிவராய் விளங்கிய தமது
தந்தையிடம் சென்று வரம் கேட்டு நின்றனர். அதற்கவர் கத்ரு நீ பல புதல்வரைப் பெறுவாய், வினதை நீ இரு மக்களை பெறுவாய் உங்களிருவரின்
குழந்தைகள் இரண்டு பேர் விஷ்ணுவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெறுவர் என்று சொல்ல கத்ரு எண்ணற்ற நாகங்களைப் பெற்றெடுக்க அவர்கட்குத்
தலைவனான ஆதிசேடன் எம்பெருமான் துயில்கின்ற அனந்தனாகவானான். வினதை இரு புதல்வரை ஈன்றாள், ஒருவன் அருணன், மற்றொருவன் கருடன்
இதில் அருணன் சூரியனுக்கு தேரோட்டியாகப் போனான் கருடன் ஹரிக்கு வாகனமானான்.
ஒரு சமயம் கருடன் பாதாள லோகத்திற்கு தனது சகோதரர்களாகிய நாகங்களைக் கண்டுவரலாமென்று சென்றான். அப்போது நாகங்கள் கருடனை
இகழ்ந்து பேச கருடன் நாகங்களை நையப் புடைத்தான் அப்போது அங்கு வந்த ஆதிசேடன் நானும் நீயும் ஒரே இடத்தில் சேவகம் செய்கிறோம், என்று
சமாதானம் செய்ய கருடன் சமாதானமுற்று பாற்கடலுக்குச் சென்றான்.
அங்கிருந்த முனிவர்களிடம் அனந்தன் (ஆதிசேடன்) சர்வகாலமும் மகாவிஷ்ணுவிற்கு பணிவிடை செய்து அவனருகிலேயே உள்ளான். எனக்கும்
அதுபோல பாக்கியம் வேண்டுமெனவும் அதற்கு நான் என்ன செய்யவேண்டுமெனவும் வேண்டி நின்றான்.
அதற்கவர்கள் தோத்தாத்திரி சென்று எம்பெருமானைக் குறித்து தவமிருக்கச் சொல்ல அவ்விதமே கருடன் கடுந்தவமியற்றினான். இதையறிந்த
திருமால் உடனே தோத்தாத்திரிக்கு எழுந்தருளி கருடா நீ முன்பே எனக்கு வாகனமாகும் பேறு பெற்றாய் இதற்குமேல் உனக்கு என்ன வேண்டும் என்று
கேட்க அனந்தனைப் போல பிரியாநிலை வேண்டுமென்றான்.
கருடனைப் போற்றிய திருமால் அவ்வாறாயின் நீயும் வைகுந்தம் வந்து எனது வாசலின் முன்னே எந்தநேரமும் புறப்படத் தயாராகும் கோலத்தில்
நிற்பாயாக என்றருளினார்.
இவ்விதம் ஆதிசேடனை விட்டால். கருடன் என்ற நிலைக்கு கருடனுக்கு வரமளிக்கப்பட்டது இத்தலத்தில்தான்.
வீபிதகன் மகன் தவமியற்றியது.–காவிரியின் வடகரையிலுள்ள திருமூலம் என்ற சிவபதியில் வாழ்ந்து
வந்த வீபிதகன் பெரும் செல்வன். அவனது புதல்வன் தர்மவத்சலன் கெட்ட சிநேகிதத்தால் தன் தந்தை தேடிய செல்வம் எல்லாம் தொலைத்து
வியாபாரிகளுடன் சேர்ந்து வாணிகம் செய்யும்போது அவர்களின் பொருட்களையும் திருட அதைக்கண்டுபிடித்த வணிகர்கள் இவனை
நையப்புடைக்க காட்டிற்கு ஓடிய இவன் சிங்கத்தால் கொல்லப்பட்டு பதினாயிரம் ஆண்டுகள் பிசாசாக அலைந்து இறுதியில் சண்டாளனாக ஒரு
ஜென்மம் எடுத்து அப்போதும் தீச்செயல்களே செய்ய குஷ்டம் வந்துவிட்டது.
இதற்கு விமோசனம் யாது என தமது ஊரிலிருந்த திருமாலடியாரை வினவ அவர் சேற்றுத் தாமரையில் நீராடினால் குட்டம் மறையும் என்று சொல்ல
கடும் பக்தியுடன் அவ்விதமே செய்ய நோய் நீங்கி திருமாலடியான் ஆகி இறுதியில் வைகுந்தம் அடைந்தான்.
மூலவர்–தோத்தாத்திரிநாதன் (வானமாமலை)
உற்சவர்– தெய்வநாயகன்
தாயார்– ஸ்ரீதேவி, பூமிதேவி
தீர்த்தம்– சேற்றுத்தாமரை தீர்த்தம்
விமானம்– நந்தவர்த்தன விமானம்
காட்சி கண்டவர்கள்– பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன். கருடன் ஊர்வசி, திலோத்தமை.
ஸ்வயம் விய்க்த ஸ்தலம் என்ற அமைப்புப்படி இது தானாகத் தோன்றிய ஸ்தலம். எம்பெருமானும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த வண்ணமே
சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
திருப்பாற்கடலே இங்கு சேற்றுத் தாமரைத் தெப்பமாக அமைந்துள்ளதாக ஐதீகம். எனவே பரமும், வியூகமும் இங்கு ஒருங்கே
அமைந்தது போலாகும்.
இங்கு பெருமானுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர்.
இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் சகல வியாதிகளும் தீரும்.
ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். வானமாமலை ஜீயர் சுவாமிகள் இங்கேதான் எழுந்தருளியுள்ளார். மணவாள
மாமுனிகளால் நியமனம் செய்யப்பட்ட அஷ்ட திக்கஜங்களுள் இந்த ஜீயர் முதன்மையானவர். மணவாள மாமுனிகள் “வாரீர் பொன்னடிக்கால் ஜீயரே”
என்று இவரை அழைக்க மணவாள மாமுனிகளின் பாதுகைகளாக விளங்குபவர் ஸ்ரீவானமாமலை ஜீயர் (விஷ்ணுவின் பாதுகைகள் நம்மாழ்வார், நம்மாழ்வாரின் பாதுகைகள் ராமானுஜர்-ராமானுஜர் பாதுகைகள் மணவாள மாமுனிகள், மணவாள மாமுனிகளின் பாதுகைகள் வானமாமலை ஜீயர்]
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை ஜீயர் சுவாமிகள்
அணிந்து காட்சி கொடுப்பதுடன் ஸ்ரீபாத தீர்த்தமும் அருளுவார்.
நவதிருப்பதிகளில் ஆழ்வார் திருநகரி தவிற வேறெங்கும் நம்மாழ்வாருக்கு மங்கள விக்ரகம் இல்லை. இத்தலத்தில் உள்ள சடாரியில்
நம்மாழ்வாரின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வாரே வந்து ஆசிர்வதிப்பதற்குச் சமானமானதாகும்.
சுசிலை என்ற பெண் காவிரியில் நீராட வந்தபோது பிரியம்வதன் என்ற பிராமணனின் அழகில் மோஹித்து தனது தோழிகளுடன் வந்து தன்னை
இப்போதே மணந்துகொள்ளுமாறு கேட்க, அவன் தான் பிரம்மச்சாரி என்று கூறி திருமணத்திற்கு மறுக்க இவர்கள் விடாப்பிடியாக தொந்திரவு செய்ய
மிகவும் சினம் கொண்ட பிராமணன் இவர்களைப் பேயாகப் போகுமாறு சபிக்க, அப்பெண்களும் பதிலுக்கு இவனைப் பேயாகப் போகுமாறு சபித்தனர்.
இவ்விதம் பல காலம் பேயாக அலைந்து கொண்டிருக்க பிரியம்வதனைக் காண அவனது தந்தை நடந்ததை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்து யாது
செய்வதென முனிவர்களிடம் வினவ இதற்குத் தோத்தாத்தரி நாதனைக் குறித்து கடுந்தவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்க அவரும் அவ்விதமே செய்யலானார்.
இறுதியில் திருமால் பிரத்தியக்ஷ்மாகி அவர்களின் பேயுருவை ஒழித்து சுசிலைக்கும், பிரியம்வதனனுக்கும் திருமணம் செய்யச் சொல்லி அவ்விருவரும்
இல்வாழ்வில் புகுந்து நெடுங்காலம் இப்பெருமானுக்கு தொண்டாற்றி திருமாலடியெய்தினர்.
எனவே கடுந்தவத்தினால் கோரிய கோரிக்கையை நிறை வேற்றப்படுதல் இத்தலத்தின் சிறப்பு ஆகும்.
முக்தியளிக்கும் எட்டுத்தலங்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.
இக்கோயில் நிர்வாகம் வானமாமலை மடத்து ஜீயர் சுவாமிகளின் ஆதினத்தில் உள்ளது. அவர்களே பரம்பரை அறங்காவலராக இருந்து
இத்திருக்கோவிலில் ஒன்றும் குறைவு வராமல் பூஜை, திருவிழாக்கள் நடத்திவருகிறார்கள். இக்கோயில் திருப்பணிகளும் அவர்களே செய்து
திருக்கோயிலைப் பொலிவுடன் விளங்கும்படி செய்து வருகிறார்கள்.
இத்திருக்கோயிலின் முக்கியமான திருவிழா பங்குனி பிரம்மோத்ஸவம், சித்திரை பிரம்மோத்திஸவமும் ஆகும்.
————-
80. ஸ்ரீவைகுண்டம்
பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற
அரக்கன் பிரம்மதேவன் வைத்திருந்த (ச்ருஷ்டி ரகஸ்யக் கிரந்தம்) படைப்புத்தொழில் ரகசியம் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒளிந்து
கொண்டான்.
தம்நிலையுணர்ந்து வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து மீட்கும்பொருட்டு விஷ்ணுவைக் குறித்து தவமியற்ற எண்ணி தன் கரத்திலிருந்து
ஒரு பிரம்பை ஒரு பிரம்மச்சாரியாகச் செய்து, தாம் தவமியற்றுவதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவு செய்து வருமாறு பூவுலகிற்கு அனுப்பினார்.
தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஜயந்தீரபுரத்திற்கு வந்து, அங்கிருந்த அழகியின் மயக்கத்திலீடுபட்டு தான் வந்த வேலையை மறந்து போயினான்.
இதன்பின் பிரம்மா தன் மறுகையிலிருந்த தண்டத்தை ஒரு பெண்ணாக்கி, யான் தவம் புரிய ஏற்ற இடம் பார்த்து வா என்று சொல்ல அவள்
தாமிரபரணியாற்றங்கரையில் சோலைகள் நிறைந்த ஓரிடத்தை தெரிவு செய்து பிரம்மனிடம் கூற, பிரம்மன்
அங்கு வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் இருக்கலானார். பிரம்மனின் தவத்தை மெச்சிய திருமால் வைகுண்டத்திலிருந்து படைப்பின் ரகசியத்தை
மீளவும் பிரம்மனிடமே சேர்ப்பித்தார்.
வைகுண்டத்திலிருந்து எழுந்த கோலத்தில் இவ்விடம் காட்சி தந்தமையாலும், இதே திருக்கோலத்தில் பக்தர்களுக்கு இவ்விடத்தே நின்று
அருள வேண்டுமென்று பிரம்மன் வேண்டியதால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீவைகுண்டம் என்ற பெயருண்டாயிற்று.
பின்பு இதே ஸ்ரீவைகுண்டத்தில் காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன், இப்பெருமானை வழிபட்டே திருடச் செல்வதும், அவ்வாறு திருடிய
பொருட்களில் பாதியை இப்பெருமானுக்கே சமர்ப்பணம் செய்து, இடையறாது பக்தி செலுத்திவந்தான். ஒரு நாள் தன் கூட்டத்தினருடன் அரசனின்
அரண்மனையில் திருடிக்கொண்டிருக்கும்போது இவன் கூட்டத்தைச் சார்ந்த சிலரை காவலாளிகள் பிடித்து விசாரணை செய்ய, அவர்கள் தாங்கள்
காலதூஷகனின் கையாட்களே என்றும் எங்களோடு வந்தால் காலதூஷகனைக் காண்பிக்கிறோம் என்று சொல்ல அவ்விதமே காவலாளிகளும் தேடிவந்தனர்.
இதனையறிந்த காலதூஷகன் ஸ்ரீவைகுண்டனைச் சரணடைந்து தன்னைக் காக்குமாறு வேண்ட அப்பெருமானே காலதூஷகன் வேடத்தில் எதிரில் வர,
காவலாளிகள் பிடித்துக்கொண்டுபோய் மன்னன் முன்னிலையில் நிறுத்தினர்.
காலதூஷகனை மன்னன் கூர்ந்து நோக்கியபோது தன் சுயரூபத்தை அவனுக்கு மட்டும் காட்டியருள அடிபணிந்து நின்ற மன்னன் என்னிடம்
கொள்ளையடித்துச் செல்ல வேண்டிய காரணம் என்னவென்று கேட்க,
“திரவியத்திற்கு சத்ருக்கள் நால்வர்”. அவர்கள் தர்மம், அக்னி, சோரன், ராஜா என்பவர்கள். இதில் முதலாவதாகிய தருமத்தை நீ கொஞ்சமேனும்
கடைப்பிடிக்கவில்லை. இதை உனக்குப் புகட்டி தர்மத்தில் உன்னை நிலைநாட்டச் செய்யவே இந்நாடகமாடினோம் என்றார்.
மிகவும் ஆனந்தித்து பேரின்பக் காட்சியைக் கண்ட அம்மன்னன் எனக்கருள்புரிந்த இத்திருக்கோலத்திலேயே கள்ளப் பிரானாக (சோரநாதனாக)
எந்நாளும் காட்சியளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வைகுண்டத்துஎம்பெருமான் அவ்விதமே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.
சோரநாதனிடம் ஈடற்ற பக்தி கொண்ட அம்மன்னன், கால தூஷகனையும் நண்பனாகக் கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற தான
தருமங்களைச் செய்து மண்டபமும், மதிலும் எழுப்பினான். இம்மன்னன் யாரென்றும், பெயரின்னதென்றும் அறியுமாறில்லை.
அதுமுதல் இப்பெருமானுக்கு கள்ளப்பிரான் என்ற திருநாமமே பிரதானமாக இருந்து வருகிறது.
மூலவர்–ஸ்ரீவைகுந்த நாதன், கள்ளப்பிரான்.
தாயார்- வைகுந்தவல்லி, பூதேவி.
தீர்த்தம்– பிருகு தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், கலச தீர்த்தம்.
விமானம்– சந்தர விமானம்
காட்சி கண்டவர்கள்– பிரம்மா, இந்திரன், காலதூஷகன்.
பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம்
செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. பிரம்மனாலேயே இங்கு வைகுண்டநாதனுக்கு சித்திரை உற்சவம் நடத்தப்பட்டது.
மற்றெல்லா ஸ்தலங்களிலும் ஆதிசேடனில் தான் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ள
பெருமானுக்கு ஆதிசேடன் குடைபிடிக்கும் வண்ணத்தில் அமைந்துள்ள காட்சி வேறெங்கும் காண்டற்கரியதாகும்.
108 வைணவ திவ்ய தேசங்களில் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் ஸ்ரீவைகுண்டம் என்னும் திருப்பெயரை மண்ணுலகில் தாங்கி
நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.
சோரநாதன் என்று பெயர்கொண்ட இப்பெருமானின் மீது வடமொழியில் இயற்றப்பட்டுள்ள “ஸ்ரீசோரநாத சுப்ரபாதம்” மிகவும்
பிரசித்திபெற்றதாகும்.
காலதூஷகனுக்கு அருள் பாலித்து ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருந்த பெருமானும், அச்சிறு சன்னதியும் வெகு காலத்திற்குப்பின்
பூமியில் புதையுண்டு போனது. ஒரு சமயம் பாண்டிய மன்னர்கள் நெல்லையில் தமது அரசாட்சியை செலுத்துங்கால் மணப்படை, கொற்கை போன்றன,
பாண்டியர்களின் முக்கிய பிரதேசமாக விளங்கின. அவ்வமயம் பாண்டியனின் பசுக்களை மேய்ப்பவன் சந்நிதி மூடிய இவ்விடத்திற்குப் பசுக்களை ஓட்டி
வந்ததும் ஒரு பசுமட்டும் தனித்துச் சென்று வைகுண்ட பெருமாள் பூமியில் மறைந்துள்ள இடத்தில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
இதைக்கண்ட பசுமேய்ப்பவன் இதனை மன்னனுக்குத் தெரிவிக்க மன்னன் தன் பரிவாரங்களுடன் சூழ இவ்விடம் வந்து தோண்டிப் பார்க்கையில், அங்கே
வைகுண்டப் பெருமான் சன்னதியிருப்பதைக்கண்டு மிகவும் ஆனந்தித்து தற்போதுள்ள கோவிலை அமைத்தான் என்பர்.
இங்குள்ள கள்ளப்பிரானின் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து ஆசைமிக்குப்
போனதால் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளி விட்டார். ஆத்மார்த்தமான பக்தியில் கிள்ளிய வடுவை எம்பெருமான் கன்னத்தில் ஏற்றுக் கொண்டார்.
இன்றும் இப்பெருமானின் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடுவைக் காணலாம்.
இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது.
இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி.
இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற்கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டது, எண்ணியெண்ணி
வியக்கத் தக்கதாகும். சூரிய வழிபாடு 108 திருத்தலங்களில் இங்கு மட்டுமே உள்ளது.
—————–
81. திருவரகுணமங்கை
வரகுண மங்கையென்றுசொன்னால் யாருக்கும் தெரியாது. நத்தம் என்று சொன்னால் எல்லோரும்
அடையாளம் காட்டிடுவர். தற்போது நத்தம் என்னும் பெயரே பிரதானமாக உள்ளது.
இத்தலத்தைப் பற்றியும் பிரம்மாண்ட புராணத்தில்தான் சொல்லப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணிய
கோசம் என்ற அக்கிரஹாரத்தில் வாழ்ந்து வந்த “வேதவித்” என்னும் பிராமணன் ஒருவன் மாதா. பிதா. குரு ஆகிய மூவருக்கும் செய்ய வேண்டிய
கடன்களைச் செய்து முடித்து திருமாலைக் குறித்து தவமியற்றுவதில் மிகச் சிறந்த மந்திரங்களில் ஒன்றாகிய “ஆஸணதை” என்னும் மந்திரத்தை ஜெபித்து
தவமியற்ற எண்ணிக்கொண்டிருந்தான். அப்போது திருமாலே ஒரு கிழப் பிராமணன் வேடம் பூண்டு அவனிடம் வந்து “சக்யம், மகேந்திரம் என்னும்
இருமலைகட்கு இடைப்பட்டு விளங்கும் வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவமியற்றுமாறும், அதுவே “ஆஸணதை” என்னும் மந்திரா
ஜபத்திற்குச் சிறந்த இடமென்று கூற வேதவித் என்னும் பிராமணன் உடனே இவ்விடம் வந்து ஆகார நித்திரையின்றி கடுந்தவஞ்செய்து இறுதியில்
திருமாலின் சேவையைப் பெற்று பரமபதம் பெற்றான். ஆஸணத் மந்திரத்தை ஜெபித்து இறைவன் காட்சி தந்ததால் விசயாசனர் என்னும் திருநாமம்
இப்பெருமானுக்கு உண்டாயிற்று.
இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ரோமச முனிவர் என்பார் இங்கு தவஞ்செய்கையில் அவரது சீடன் சத்தியவான்
என்பவன் இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது, அத்தீர்த்தக் கரையின் மறுபக்கத்தில் ஒரு மீனவன் மீன்களைப் பிடித்து
கரையில் உலர்த்திவிட்டு மீண்டும் வலை வீசும்போது அவனுக்குப் பின்னால் இருந்து பாம்பு தீண்ட அவ்விடத்திலேயே இறந்து போனான். அவன் இறந்த
சில நிமிடங்களிலேயே வானுலகிலிருந்து வந்த தேவவிமானத்தில் ஏறி அந்த வேடன் சுவர்க்கம் சென்றான்.
இதைக்கண்ட சத்தியவான் உடனே தன் குருவை அணுகி நடந்த விருத்தாந்தத்தைக் கூறி, உயிர்களைக் கொல்லும் புலைஞனாகிய வேடனுக்கு
சுவர்க்கம் எவ்வாறு கிட்டியதென்று கேட்க, தம்ஞான திருஷ்டியால் ரோமசர் பின்வருமாறு கூறலானார்.
முன் ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டின் விசுவசகன் என்னும் அரசனின் மைந்தன் தர்மத்தில் மிகவும் பற்றுள்ளவனாகவும், அனேக புண்ணிய
காரியங்களைச் செய்து வருபவனாகவும் இருந்தான். இருப்பினும் துஷ்டசிநேகிதர்களின் நட்பால் அவ்வப்போது துன்மார்க்கத்திலும் ஈடுபட்டு வந்தான்.
தனது பாவத் தன்மையால் முன் ஜென்மத்தில் நரகம் பெற்ற இவன், இந்த ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியத்தால் இத்திருத்தலத்தில் உயிர்நீக்கும்
பேறு பெற்றான்.
இத்திருப்பதியில் உயிர் நீத்ததால் மோட்சம் செல்லும் மகிமை பெற்றான் என்று இத்தலத்தின் மேன்மையை ரோமசர் கூறினார்.
மூலவர்– விஜயாசனப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுகமண்டலம்.
தாயார்– வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார்.
தீர்த்தம்– அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம்
விமானம்– விஜயகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்– அக்னி, வேதவித், ரோமசர்.
ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமானுக்கு குடைப்பிடித்த ஆதிசேடன் இங்கு அமர்ந்த பெருமானுக்கு குடைப்பிடித்துள்ளான்.
பிரம்மாவின் புத்திரனான கனக முனிவர் இத்தலத்தின் வரலாற்று மேன்மையை தட்சிண கங்கை என்று சொல்லப்படும் காவிரியின் தென்கரையில்
தர்மபுரம் என்ற நகரத்தைப் பரிபாலித்து வந்த மன்னனுக்கு கூறியதாகவும் புராணக் குறிப்புள்ளது.
————
82. திருப்புளிங்குடி
இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தாலும், தாமிரபரணி ஸ்தல புராணத்தாலும் அறிய முடிகிறது.
ஒருசமயம் மஹாவிஷ்ணு இலக்குமி தேவியுடன் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் அழகழகாக
வரிசைக்கிரமமாக மணல்மேடு அமைந்துள்ள பகுதியில் சற்றே உல்லாசத்துடன் தனித்திருக்க, இப்பூவுலகில் வந்ததும் தன்னை விட்டுவிட்டு இலக்குமி
தேவியுடன் இவர் மகிழ்வெய்தியுள்ளாரே என்று எண்ணி பொறாமை கொண்ட பூமிப்பிராட்டி மிகவும் சினங்கொண்டு பாதாள லோகம் புக்கு மறைய உலகம்
வறண்டு இருளடைய தேவர்கள் எல்லாம் இந்நிலை மாறவேண்டுமென ஸ்ரீமந் நாராயணனைத் துதிக்க அவரும் பாதாள லோகம் சென்று பூமிப்பிராட்டியைச்
சமாதானப்படுத்தி இருவரும் தமக்குச் சமமே என உபதேசம் செய்து இருவருக்கும் நட்பு உண்டாக்கி, அவ்விரண்டு தேவிமார்களும் சூழ
இவ்விடத்தில் காட்சி தந்தார். பூமியைக் (பூமிப் பிராட்டியைக்) காத்ததாலும் பூமிபாலர் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்று. காசினி
வேந்தர் என்ற சொல்லே நம்மாழ்வாரின் பிற பாக்களில் காய்சின வேந்தர் என்று பயின்று வருகிறது.
இத்தலத்தில் நடைபெற்ற இன்னொரு புனித வரலாற்றையும் புராணம் பேசுகிறது.
யக்ஞசர்மா என்னும் அந்தணன் தனது பத்தினியுடன் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கையில், வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது
ரிஷிகள் புடைசூழ வந்தவிடத்து அவர்களை மதியாதிருந்ததோடு, தட்சிணையுங்கொடுக்காது அவர்களை தீச் சொற்களால் நிந்தனையும்
செய்வித்தான். அக்கணமே அம் முனிவர்கள் அனைவரும் யக்ஞசர்மாவை ஓர் அரக்கனாகும்படி சபிக்க, தன் நிலை மாறிய அவ்வந்தணன், அம்
முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து சாப விமோசனமும் வேண்டி நின்றான்.
அதற்கு முனிவர்கள் இத்திருத்தலத்தில் பின்னொரு காலத்தில் இந்திரன் யாகம் செய்வான். அப்போது அந்த யாகத்தை அழிக்க நீ எத்தனிக்கும்
போது திருமாலின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர்.
இஃதிவ்வாறிருக்க, இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் இனிதே குலாவிக் கொண்டிருக்கும்போது
அத்தடாகத்துக்கு அருகில் மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திரன் தனது வஜ்ராயுதத்
தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதைத் தீர்ப்பதற்கு கண்ட விடமெங்கும்
பைத்தியன்போல் இந்திரன் அலைந்தான்.
இதைக்கண்டு மிகவும் மனம் நொந்த தேவர்கள் தமது குலகுருவான வியாழபகவானைச் சரணடைந்து ஆலோசனை கேட்க, அவர், இந்திரனைத்
திருப்புளிங்குடிக்கு அழைத்து வந்து பயப்பக்தியுடன் பூமிபாலரை வணங்கி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடச் செய்ததும் பிரம்மஹத்தி தோஷம்
இந்திரனைவிட்டு நீங்கியது. இந்த தீர்த்தத்துக்கும் இந்திர தீர்த்தம் என்ற பெயர் நிலைத்தது.
தனது சாபவிமோசனத்தால் மிகவும் மகிழ்ந்த இந்திரன். திருமாலுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் இங்கு மிகப் பெரிய யாகம் துவங்கினான்.
அப்போது அரக்கனுருவில் உள்ள யக்ஞசர்மா திருமாலைக் குறித்து உள்ளுருகி வேண்டி கடுந்தவம் புரிந்து கண்ணீர் சிந்தி நின்றான்.
அப்போது யாக குண்டலியில் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன் தனது கதையினால் அவ்வரக்கனை அடித்து வீழ்த்த அவன் சாப விமோசனம்
பெற்றான்.
மூலவர்-காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்- மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லியென்ற சிறிய உற்சவப் பிராட்டியுமுண்டு.
தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்
விமானம்- வேதசார விமானம்
காட்சி கண்டவர்கள்– இந்திரன், நிர்ருதி, வருணன், யக்ஞ சர்மா.
பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய
காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது.
(பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்)
நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம்
சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு
ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.
இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய
(நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக்கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும்
கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்” என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள்.
ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி)
அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும்
கோரினார்)
————-
83. திருத்துலைவில்லி மங்கலம்
பிரம்மாண்ட புராணமே இதைப்பற்றியும் புகழ்கிறது. பாத்ம புராணத்தில் சிறு குறிப்புத் தென்படுகிறது. வடநூற்கள் “கேதார நிலையம்” என்று
இத்திருப்பதியைக் குறிக்கின்றது.
முன்னொரு காலத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் உதித்த சுப்ரபர் என்னும் முனிவர் திருமாலைக் குறித்துப் பெரும் யாகஞ் செய்ய பல
இடங்களிலும் முயன்றும், ஒரு இடத்திலும் தனது மனம் ஒருநிலைப்படாது. யாகமும் தொடர இயலாது, அலைந்து தேடுங்காலை புஷ்பங்களாலும் அழகிய சோலைகளாலும், இனிய கீதம் பாடும் பறவைகளாலும் சூழப்பட்ட இவ்விடத்தை தெரிவு செய்து, தம் யாகத்தை தொடங்க எத்தனித்தார்.
இவ்விடத்தில் யாகசாலை அமைக்க பூமியை உழுது சமப்படுத்த முனைந்து கொண்டிருக்கும்போது உழுதவிடத்தில் ஒளிபொருந்திய ஒரு
தராசையும் வில்லையுங்கண்டு. ஆச்சர்யத்துடன் அதைக் கையில் எடுத்ததும், இவை இரண்டும் இளம் வயதான ஒரு ஆணாகவும், பெண்ணாகவும் மாறி
சுப்ரபரை வணங்கி நின்றனர்.
வியப்புற்ற சப்ரபர் இத்தகு சாபம் விளைந்த காரணத்தை வினவ அவர்கள் கீழ்வருமாறு கூறினர்.
வில்லாயிருந்த அந்த ஆண்மகன் சுப்ரபரை நோக்கி சுவாமி, முன் பிறப்பில் வித்யாதரன் என்னும் தேவனாயிருந்த நான், அதோ அருகிலிருக்கும்
என் மனையாளுடன் வெகுவான காமத்திலீடுபட்டு இச் சோலை வந்து மோகித்திருந்தேன். அப்போது ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த
குபேரனை நான் கண்டும் காணததுபோல் இருந்தேன். இதையறிந்த குபேரன் மிக்க சினங்கொண்டு எங்களிருவரையும் வில்லாகவும், தராசாகவும் மாறுமாறுசபித்தான்.
குபேரனின் பாதத்தில் வீழ்ந்து சாபவிமோசனம் வேண்டினேன். என்னை மதியாதிருந்த உமக்கு இச்சாபம் செல்லும். சாப விமோசனத்தை நான்
கொடேன். பின்னொரு காலத்தில் சுப்ரபர் என்னும் முனிவர் யாகம் செய்ய இவ்விடத்தை தோண்டும் போது அவர் கரங்கள் பட்டதும் சாபம் விலகும்.
அதுவரை இப்பூமியில் அமிழ்ந்து கிடக்கவும் என்று கூறி செல்லலுற்றான்.
இதுவரை இங்கு அமிழ்ந்து கிடந்த நாங்கள் இன்று உங்கள் திருக்கரம் பட்டதும் மீண்டும் பழைய நிலை எய்தினோம் என்று கூறி தொழுது நின்றனர்.
முனிவர் அவர்களை வாழ்த்திவிட்டு, தம்யாகத்தை தொடங்கலானார்.
சுப்ரபர் யாகத்தை வெகு விமரிசையாக நடாத்தி திரண்டு வந்த யாகத்தின் பலனை “அவிர்ப்பாகமாக” தேவர்களுக்கும் கொடுத்தார். அவிர்ப்பாகம் தமக்கு
கிடைக்க காரணமாயிருந்த எம்பெருமானை தேவர்களும் சுப்ரபருடன் கூடித் தொழ திருமால் அப்போதே தோன்றி காட்சியளித்தார்.
அதுமுதல் இங்கு எழுந்தருளிய பிரானுக்குத் தேவப்பிரான் என்னும் திருநாமம் நிலைக்கலாயிற்று.
மூலவர்- தேவப்பிரான் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்- உபயநாச்சியார்கள் (கருந்தடக்கண்ணி நாச்சியார்)
தீர்த்தம்- தாமிரபரணி, வருணதீர்த்தம்
விமானம்- குமுத விமானம்
காட்சி கண்டவர்கள்– இந்திரன், வாயு, வருணன் (அவிர்ப்பாகம் பெற்ற தேவர்கள்) சுப்ரபர்
இரட்டைத் திருப்பதிகள் என்றழைக்கப்படும் துலைவில்லி மங்கலத்தின் முதலாவது திருப்பதியான இந்த தேவப்பிரான் சன்னதி
தாமிரபரணி நதிக்கரையினிடையே அமைந்துள்ளது.
அரவிந்த லோசனப் பெருமாள் எழுந்தருளியுள்ள இரண்டாவது திருப்பதி இதிலிருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் தாமிரபரணியிலிருந்து
பிரியும் வாய்க்கால் கரையில் உள்ளது.
இவ்விரண்டுகோவில்களும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக கருதப்பட்டாலும் இரட்டை திருப்பதி என்று பெயர் பெற்றமையால் இரண்டு
பெருமாள்களின் பெயரையும் ஆழ்வார், தம் பாசுரங்களில் தனித்தனியே குறிப்பதாலும், நவதிருப்பதிகளில் இரண்டு திருப்பதியாகக் கொள்ளப்படுகிறது.
1. திருவைகுண்டம்
2. திருவரகுணமங்கை
3. திருப்புளிங்குடி
4. திருத்துலை வில்லிமங்கலம்
5. திருக்குளந்தை
6. திருக்கோளூர்
7. திருப்பேரை
8. திருக்குருகூர்
துலைவில்லி மங்கலமென்னும் இரட்டைத் திருப்பதியில் இரண்டாவதான ஸ்ரீ அரவிந்த லோசன சன்னதி
பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி உரைக்கிறது.
தேவப்பிரான் சன்னதியில் துலையும், வில்லும் சுவர்க்கம் பெற்றபின் இவ்விடத்தே பெரும் யாகஞ் செய்து முடித்த சுப்ரபர், தினந்தோறும் அருகில்
உள்ள பொய்கையிற் சென்று தூய்மையும், மணமும், பேரழகும் வாய்ந்த தாமரை மலர்களைக் கொய்து தேவப்பிரானுக்கு வழிபாடு செய்து வரலாயினர்.
தினந்தோறும் இத்தகைய அழகு மலர்களைக் கொணர்ந்து சுப்ரபர் பூஜை செய்வதைக்கண்ட பெருமான், இம்முனிவர் மலர் பறிக்கும் அழகையும்,
எங்கிருந்து இதனைக் கொணர்கிறார் என்றும் அறிய சுப்ரபரின் பின்னாலேயே வரலாயினர்.
பொய்கையில் தியானத்தோடு பூப்பறிக்கும் சுப்ரபரைக் கண்டு வியந்து பெருமாள் அங்கேயே (தாமிர பரணியின் வடகரையிலே) நின்றார்.
இத்திருக்கோலத்தைக் கண்ட சுப்ரபர் மிகவும் வியந்து இவ்வண்ணம் பின் தொடரக் காரணம் கேட்க, பெருமானும் பக்தியோடு நீர் செய்யும் தாமரைப்
புஷ்ப பூஜைக்கு உகந்தே இங்கே நின்றோம்.
தாமரை மலர்களை விரும்பி நான் இங்கு நின்றதால் அரவிந்த லோசனன் என்ற திரு நாமமே எனக்கு நிலைத்திடும். நீவிர் எப்போதும்
போன்று தேவப்பிரானோடு, எனக்கு சேர்த்து தாமரை மலர்களாலேயே அபிஷேகம் செய்யுங்கள். எவனொருவன் தாமரை மலர்களால் இங்கு என்னை
பூஜிக்கின்றானோ அவனது சகல பாவங்களையும் நான் போக்குகிறேன், என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இஃதிவ்வாறிருக்க, முனிவர்கள் நடத்தக்கூடிய யாகத்தின் அவிர்ப்பாகம் யாகத்தின் முடிவில் திரண்டுவரும் பலன்) தேவர்களுக்கு மட்டுமே கிடைத்து
வந்தது.-அப்போது அசுவினி தேவர்கள் என்னும் இருவர் பிரம்மனிடம் சென்று யாகவேதியில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தில் தமக்கும் பங்கு வேண்டுமென்று
கேட்டனர்.
பூமியில் வைத்தியர்கள் தர்மம் பிறழாமல் வைத்தியம் செய்து வருங்காலத்தில் அத்தர்மத்தின் பலன் அசுவினி தேவர்களிரு வருக்கும்
கிடைத்து வந்ததாம். பூவுலகில் வைத்தியர்கள் தர்மத்தினின்றும் பிறழ்ந்ததால் வைத்ய தர்மப்பலன் கிடைக்காததால் அவர்கள் சென்று பிரம்மனிடம்
முறையிட்டனர். (தேவலோகத்தில் அஸ்வினி தேவர்களிருவரும் வைத்தியத்திற்கு தலையாயவர்கள் என்பது புராணக்கருத்து)
பிரம்மன் அவ்விருவரையும் நோக்கி, தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்க வேண்டுமெனில் பூவுலகில் தாமிர பரணியின் வடகரையில் உள்ள
அரவிந்த லோசனப் பெருமாளை தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடுந்தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூற அவ்விருவரும் அவ்விதமே ஆயிரம்
வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டனர்.
இவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் தாமரைப் பு ஷ்பங்களைக் கையில் ஏந்திய திருக்கோலத்தோடு காட்சி தந்து
அவ்விருவருக்கும் அவிர்ப்பாகம் பெறுவதற்கான சக்தியினையும் வரத்தினையும் அளித்தார்.
அசுவினி தேவர்கள் நீராடினமையால் அங்குள்ள பொய்கை நீர் அஸ்வினி தீர்த்தமாயிற்று.
மூலவர்- ஸ்ரீஅரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்- கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம்- குமுத விமானம்
தீர்த்தம்- அஸ்வினி தீர்த்தம்
காட்சி கண்டவர்கள்- அஸ்வினி, தேவர்கள், சுப்ரபர்
பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் சம்பந்தமாக கூறப்படும் இன்னொரு முக்கியமான கதையும் (வரலாறும்) உண்டு. கங்கை நதிக்கரையில்
உள்ள அகளங்கமென்னும் அக்ரஹாரத்தில் பரத்வாஜ கோத்திரத்தில் வந்த சத்யசீலர் என்பாருக்கு, வண்ணிசாரன், விபீதகன், சுவர்ணகேது என்னும்
மூன்று புத்திரர்கள் இருந்தனர்.
இவர்களில் விபீதகன் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு எவ்வித சிகிச்சையும் பலனளிக்காது துன்புற்று வந்தான். அவ்வமயம் அங்குவந்த
நாரதரைத் தொழுது விபீதகனுக்கு எவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று வினவினார். நாரதர் முப்பிறப்பில் இவன் தனது குருவின் பசுவைத்
திருடினான். குருவின் சாபத்தால் கைவிரல், கால் விரலில் உள்ள நகங்கள் எல்லாம் குறைந்து விகாரத்தை (குஷ்டத்தை) அடைந்துள்ளான்.
தாமிரபரணியின் வடகரையில் உள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள பெருமானை வழிபட்டால் குஷ்டம் நீங்கும் என்றார். பின்பு எல்லோரும்
அங்குவந்து பெருமாளைத் தரிசித்தனர். விபீதகன் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.
வெகு காலம் அங்கேயே தங்கியிருந்து, இரண்டு ஸ்தலத்தின் பெருமாள்களுக்கும் எண்ணற்ற பணி விடைகள் செய்து இறுதியில் மோட்சம்
பெற்றான்.
———
84. திருக்குளந்தை
திருக்குளந்தை யென்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் எளிதில் விளங்கும்.
ஸ்ரீ பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றியும் கூறுகிறது.
இவ்விடம் ஒரு காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்டது. அவ்விடத்து ஒரு ஸ்தலமும் இருந்தது. அவ்வனத்தில் வாழ்ந்து வந்த
வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுத வல்லியுடன் தனக்குப் புத்திரப்பேறு வேண்டுமென்று இந்த தடாகத்தில் உள்ள பொய்கையில் நீராடி
நாள் தோறும் பகவானை வேண்டிவந்தான்.
பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு “கமலாவதி” என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்த்து வரலாயினர். தக்க பருவம் அடைந்த அவள் தான் மானிடரை மணந்து சாதாரண வாழ்க்கை வாழ மாட்டேன். மணந்தால் பகவானையே மணப்பேன் என்று கூறி கானகம் சென்று கடுந்தவமியற்றத் தொடங்கினாள்.
யார்சொல்லியும் கேளாது தவத்திலேயே லயித்துப்போன கமலாவதிக்கு முன் எம்பெருமான் தோன்றி, நின் கடுந்தவத்தை மெச்சினோம், வேண்டிய
வரங்கேள் என்றார். கமலாவதி தனது எண்ணத்தைத் தெரிவித்து மீண்டும் அதையே கேட்பாள் போன்று தவத்தினில் மூழ்க ஆரம்பித்தாள். இவள்
தவத்தை பெரிதும் மெச்சிய பகவான் தம் கௌஸ்துப மணியோடு அவளை ஆலிங்கனம் செய்து தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். பாலிகை (கன்னிகை)
தவம் செய்த வனமாகையால் பாலிகாவனமாயிற்று.
தனது புதல்விக்கு கிடைத்த பெரும் பாக்கியத்தை நினைத்து பெருமிதம் அடைந்த வேதசாரன் அங்கெழுந்தருளிய பெருமான் மீது பெரிதும் பக்தி
கொண்டு தினந்தவறாது ஆராதனையில் ஈடுபட்டிருந்தார்.
இவ்விதமிருக்கையில் ஒரு நாள் குமுதவல்லி நீராடச் சென்றவிடத்து அஸ்மாசரன் என்னும் அரக்கன் அவளைக் கவர்ந்து சென்று இமயமலைக்
குகையில் சிறைவைத்தான். விஷயமறிந்த வேதசாரன் பூச நட்சத்திரம் கலந்த தைம் மாத பௌர்ணமியில் பெருமாளைக் குறித்து திருமஞ்சனம் செய்வித்து
தனது மனக் குறையை தெரிவித்து அருள் புரிய வேண்டி நின்றான்.
உடனே பெருமாள் கருட வாகனத்தின் மேலேறி இமயஞ் சென்று குமுதவல்லியை மீட்டு வந்தார். இதனை உணர்ந்த அஸ்மாசரன் பாலி காவனம்
வந்து பகவானுடன் கடும் யுத்தம் செய்தான். பகவான் அவனது இரு கால்களையும் பிடித்து தரையில் அடித்து அவன் மீது நின்று நர்த்தனம்
புரிந்தார்.
சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு ஸோரநாதன் (ஸோர நாட்டியன்) என்ற திருநாமம் ஏற்பட்டது. தூய தமிழில்
மாயக் கூத்தன் என்றாயிற்று.
மூலவர்- சோர நாதன். ஸ்ரீனிவாஸன் என்று திருநாமமும் உண்டு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
உற்சவர்– மாயக்கூத்தன்
தாயார்- குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி) அலமேலு மங்கைத் தாயார் என்ற இரண்டு உபய நாச்சியார்கள்
தீர்த்தம்-பெருங்குளம்
விமானம்- ஆனந்த நிலய விமானம்
காட்சி கண்டவர்கள்– பிரகஸ்பதி, வேதசாரன்
இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமான் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு “உற்சவராகவே” எழுந்தருளியுள்ளார்.
இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று
மணங்கொண்டாள். அதேபோல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார்.இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார்.
————
85. திருக்கோளுர்
பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது.
ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப் பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா புரியிலிருந்து
அரசாண்டகுபேரன் சிறந்த சிவ பக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது சிவன் தனது பத்தினியான
உமையவளோடு அன்போடு பேசிக்கொண்டிருக்க உமைய வளின் அழகில் மயங்கி ஒற்றைக் கண்ணால் பார்த்தான் குபேரன்.
இதைப் பார்த்துவிட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும்
விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை விட்டகலக் கடவதென்றார்.
உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள் தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக் காத்து
அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித் திருமாலைத் துதிக்க, அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும் காட்சி கொடுத்து எம்பெருமான் அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப்பள்ளி கொண்டான்.
நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன் மீது சயனங் கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம்
இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள் எல்லாம் இங்கு தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித் தீர்த்தம்” என்றே பெயர் உண்டானது.
முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம் தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம் இந்த
நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம் அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத தேவர்கள், தர்மம்
தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பெரும் யுத்தம்
நடந்து, இறுதியில் எம்பெருமானின் அருள்பெற்ற தர்மம் வென்றது.
இஃதிவ்வாறிருக்க, தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்புக் கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக்
கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான்.
குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப் போலவேஉனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின் விகாரமும்
மறையாது. ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும் பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த நவநிதிகள் தாமிரபரணி நதி
தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில் திருமாலைத் தஞ்சம்அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அங்கு
சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள்.
திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்த மாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி மாதம் சுக்லபட்ச
துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன் தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு இப்போதே தரமுடியாது.
கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று கொஞ்சம் செல்வத்தைத் தரஅதைப் பெற்ற குபேரன் “இத்தகு நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே
யென்று” எண்ணித் தன் இருப்பிடம் சேர்ந்தான்.
மூலவர்–நிஷேபவித்தன், வைத்தமா நிதிப் பெருமான் புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்– குமுதவல்லி, கோளுர் வள்ளி
தீர்த்தம்- குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் தாமிரபரணியாறு.
விமானம்- ஸ்ரீ கர விமானம்
காட்சி கண்டவர்கள்— குபேரன், நவநிதிகள் மதுரகவியாழ்வார்.
பிரம்மாண்ட புராணத்திலேயே இதற்கொரு கதை பேசப்படுகிறது.
வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த
தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ
முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கி, முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான
ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது, பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன்
உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு யென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும்
கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய்.
பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத் தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள,
திருக்கோளுர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று கூறினார்.
தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து
கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான்
குபேரனும், தர்ம குப்தனும் இழந்த செல்வத்தைப் பெற்றதால் இழந்த பொருளை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த திருத்தலமாக இது கருதப்படுகிறது.
இத்தலத்துப் பெருமாள் (வைத்த மாநிதிப் பெருமாள்) தலைக்கு மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள் செல்வத்தைப்
பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி நிதி எங்கிருக்கிறது என்று
பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திரு
ஆதனூரில் மட்டுமே.
இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுநேசர்” என்ற முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்த மாநிதிப்
பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார்.
ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு
“அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர்.
4. திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை
வணங்கி நீ யெங்கு நின்று புறப்பட்டாய் என்று கேட்க, திருக்கோளுரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள் சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர்
“ஒருவா கூறை யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள மான்புகுமூர் திருக்கோளுரே என்று” எல்லோரும் புகும் ஊர் உனக்குப்
புறப்படும் ஊராயிற்றா என்றார்.
அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய், கனி, கிழங்குகளைப் புசித்துவந்த மதுரகவியாழ்வார் ஜோதி தெரிந்து மீண்டும்
இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற் கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல
யானேதும் அருஞ்செயல் செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார்.
———–
86. தென்திருப்பேரை
பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு
கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த
நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும் அழகும் தனக்கு வரவேண்டுமென்று வேண்டினாள்.
துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர் வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி, எம்பெருமானின்
மடியைவிட்டு எழுந்திராமல் இருக்கவே, கடுஞ்சினங்கொண்ட துர்வாசர் பூமாதேவியை நோக்கி “நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய்” என்று சபிக்க
அதுகேட்ட பூமாதேவி தனது குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய நிலையில், தனது குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது “கரிய
நிறம் பெறும் காலம்” எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென் கரையில் உள்ள கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால்
உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.
இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம் சொல்ல இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.
துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி மாதம்
பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது, அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக்
கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர குண்டலங்களைத் திருமாலுக்கே உகந்தளித்தாள். அதனால் எம்பெருமானுக்கும் “மகர
நெடுங்குழைக் காதர்” என்ற திருநாமம் உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும் மத்ஸய தீர்த்தம் என்றே பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய
அழகுத்திருமேனியாக விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே மகர நெடுங்குழைக் காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச்
சம்மதித்தார்.
ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.
108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால் இத்தலத்தை தென்
திருப்பேரை என்று அழைத்தனர்.
மூலவர்- மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்
விமானம்- பத்ர விமானம்
தீர்த்தம்– சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்
ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு திசை சென்று
வருணனுடன் போரிட்டு வருணனைத் தோற்கடித்தனர், தனது பாசத்தை (வருணனின் ஒருவகையான ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்றறியாது
திகைத்து தனது குருவான வியாழபகவானைச் சரணடைய, வருணனை நோக்கிய வியாழ பகவான் நீ ஒரு காலத்தில் மதியீனத்தால் என்னை அவமதித்ததால் உனக்கு இக்கதி ஏற்பட்டது.
இதிலிருந்து மீள்வதற்கு ஒரே உபாயம், எம்பெருமான் ஸ்ரீபேரை என்ற பூமிப்பிராட்டியுடன் மகரபூஷணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள
திருப்பேரை சென்று அப்பெருமானைக் குறித்துத் தவம் செய்வதொன்றே யாகு மென்றார்.
அவ்வாறே வருணன் கடுந்தவம் மேற்கொள்ள எம்பெருமான் தோன்றி, தமது திருக்கரத்தால் தீர்த்தத்தை எடுத்துக் கீழேவிட அது பாசம் ஆயிற்று.
வருணன் தனது பாசத்தையும், இழந்த நகரத்தையும் பெற்றான்.
இன்றும் ஆண்டுதோறும் வருணன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பங்குனி மாதம் பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு ஆராதனம் செய்து
வருவதாக ஐதீகம்.
இந்தக் கதை பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.
ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு பன்னிரன்டாண்டுகள் மழையின்றிப் போக அந்நாட்டரசன் இதற்கான
காரணத்தை தனது புரோகிதரிடம் வினவ, இப்பஞ்சத்திற்கு காரணம் தேவதா கோபமேயன்றி, நீ காரணமல்ல என்று கூறிய அரண்மனைப் புரோகிதர்,
மழைக்கு அதிபதியான வருண பகவானின் சாபம் நீங்கப் பெற்ற தென்திருப்பேரை எம்பெருமானைச் சென்று வழிபடுவதைத் தவிர வேறு
வழியில்லை என்று கூற மன்னனும் அவ்விதமே வந்து வழிபட்டு சிறப்பான பூஜைகள் செய்ய திரண்டுவந்த முகில்களால் நீர்மாரி பெய்து விதர்ப்ப நாட்டில்
பஞ்சம் ஒழிந்தது. இதனால் இப்பெருமானுக்கு நீர் முகில் வண்ணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
இக்கதையும் பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.
வருணன் மழைக்கதிபதி. நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்குரிய கிரகம். வருண சாபந் தீர்ந்ததால் இப்பெருமானை உகந்து சுக்கிரனும் இங்கு
வந்து தவம் செய்து திருமாலின் அருள் பெற்றான் எனவும் கூறுவர்.
————-
87. திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி
பிரம்மாண்ட புராணம் குருபரம்பரை, குருகாமான்மியம், திருப்பணிமாலை, வாகன கவி மாலை, கல்வெட்டுக்கள், மற்றும் செவிவழிச் செய்திகள் என்று
ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன.
இத்தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே மிகவும் பிரசித்திபெற்றதாகவே இருந்தது. குருகூர் என்று பெயர் வந்தமைக்குப் பல
காரணங்கள் கூறப்படுகின்றன.
ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம் செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்டிய போது, திருமால்
பிரம்மனை நோக்கி உன்னைப் படைப்பதற்கு முன்பே தாமிரபரணியாற்றங்கரையில் இனியதோர் இடத்தையும் படைத்து ஆதிப்பிரான்
என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். ஆதிபுரி என்று அதற்குப் பெயர். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும் வாவிகளும் சூழ்ந்த அந்த
இடத்தில் சென்று தவம் செய் என்றார். இதனை ஒன்றும் தேவும்.. என்ற ஆழ்வார் பாசுரத்தால் அறியலாம்.
திருமாலை ஆதிநாதனாகக் கொண்டு கடுந்தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக வந்து உபதேசித்ததால் மிக மகிழ்ந்த பிரம்மன்
“குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன் நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்றே பெயர் விளங்க வேண்டுமென பிரம்மன் வேண்டிக்கொண்டான் அதுமுதல் குருகூர் ஆயிற்று.
நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வள நாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச்
தலைநகராகக்கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. குருகாகிய சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும்
குருகூர் ஆயிற்றென்பர்.
நம்மாழ்வாரின் அவதார மகிமையால்தான் ஆழ்வார் திரு நகரியாயிற்று.
சுரக்குந்திருவும் வறுமையுந் தீரும் தொடக்குவிட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் கானும் கயல் குதிப்ப
திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து
பரக்கும் பழன வயற்குருகூர் வளம் பாடுமினே--கம்பரும் தமது சடகோபரந்தாதி
இந்த தலத்திற்கு தாந்த ஷேத்ரம், வராஹ ஷேத்ரம், சேஷஷேத்ரம், தீர்த்த ஷேத்ரம் என்று பல பெயர்களுண்டு.
தாந்த ஷேத்ரம் (புராண வரலாறு)
சாளக்கிராமத்தில் வேதம் பயின்ற அந்தணச் சிறுவர்களில் “மந்தன்” என்பவன் சரிவர வேதம் பயிலாதது மட்டுமன்றி வேதத்தை இகழ்ந்துரைக்கவும்
பழிச்சொல் பேசவும் செய்யலானான். இதனால் வெகுண்ட அவனது ஆசிரியர் நீ இழிஞனாய் மறுபிறப்பில் இழி குலத்தில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். ஆனால் மந்தன் சற்றும் மனந்தளராது அங்கிருந்த விஷ்ணு கோவில்களில் புல்லை செதுக்கி சுத்தப்படுத்திவந்தான்.
இவனது கைங்கர்யத்தால் மனமகிழ்ந்த மகாவிஷ்ணு இவனை ஆட்கொள்ள நினைத்தார். தனது அந்திமகாலத்தில் பூதவுடல் நீத்த மந்தன்
மறுபிறவியில் தாந்தன் என்றபெயரில் கீழ்க்குலத்தில் பிறந்து நல்ல ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கி நல்லோர் வழிகாட்ட விந்திய மலைக்கு வந்தான். அங்கு விண்ணில் பேரொளி தோன்ற அதைத் தொடர்ந்து தண்பொருணல் ஆற்றங் கரையில் உள்ள சங்கணித்துறைக்கு வந்து குருகூர் அடைந்து ஆதிநாதனை வழிபட்டுவந்தான்.
அங்கிருந்த அந்தணரும் திருமாலின் அருள்பெற வழிபாடியற்றியவர்களும் இவன் கீழ்க்குலத்தான் என்று கருதி வெறுத்து ஒதுக்க
தாந்தன் அங்கிருந்து வடகிழக்கே சென்று கூப்பிடு தூரத்தில் பொருணலின் வடகரையில் ஆதிநாத வேதியை அமைத்து வழிபட்டான்.
திடீரென்று தாந்தனை வெறுத்தொதுக்கிய அந்தணர்கட்கு கண்தெரியாது போகவே இதற்கு யாது காரணமென அவர்கள் பெருமாளை இறைஞ்சி நிற்க
பரமபக்தனான தாந்தனை வெறுத்தற்கு இதுவே தண்டனை யென்றும் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசரீரியாய் ஒளியுடன்
ஒரு சப்தம் கேட்கவே அனைவரும் அப்படியே சென்று தாந்தன் இருப்பிடம் அடைந்ததும் கண்ணொளி பெற்றனர்.
தாந்தனுக்குத் தம் தேவியோடு காட்சியளித்து ஆட்கொண்டார் பகவான். இன்றும் இங்குள்ள அர்த்த மண்டபத்தில் முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவன் ஆதிநாதனை வழிபட்ட ஸ்தலம் அப்பன் கோவில் என்று வழங்கி வருகிறது. இதைச் செம்பொன் மாடத் திருக்குருகூர்
என்றும் வழங்குவர். இவன் மகத்துவத்தால் இத்தலம் தாந்த ஷேத்ரமென்று புராணங்களில் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.
சங்கன் வீடுபெற்றது.-கொலைத் தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் வேடன் ஒருவன் விந்திய
மலையில் தாந்தன் தங்கியிருந்த ஆலமரத்தடியில் கொஞ்சநேரம் வாசம் தங்கியதால் மறுபிறப்பில் சங்கன் என்னும் முனிவனாகப் பிறந்து கடுந்தவம்
செய்து கொண்டிருந்தான். அப்போது அங்குவந்த நாரதர் இந்தக் கடுந்தவத்தின் காரணத்தை வினவ, “நான் எட்டுத் திக்கும் காவல் புரியும்
காவலர்களில் ஒருவனாக ஆவதன் பொருட்டே இந்த தவத்தை மேற்கொண்டுள்ளேன்” என்று கூற. நாரதர் அவனை நோக்கி, அதைவிட
மேலான பதமளிக்கும் நாராயணனைக் குறித்து தவமிருந்து பிறவா நிலைபெறுவாய் என்று தெரிவித்தார். அதற்கு நான் என்ன செய்ய
வேண்டுமென சங்கன் வினவ நீ இப்போது தாங்கியிருக்கும் இதே பெயரைக்கொண்ட சங்காக உவர்க்கடலில் பிறந்து தண்பொருநல் நதிகடலில்
கலக்கும் இடத்திலிருந்து ஒரு காத தூரத்தில் உள்ள குருகூரில் ஏறி ஆதிநாத வேதியை 1000 ஆண்டுகள் சூழவந்து அவன் அருள் வாய்க்கப் பெறுவாயாக
என்று வாழ்த்தியருளினார்.
அப்படியே சங்கனும் தன் நோன்பின் வலிமையால் சங்காகி தாமிரபரணி நதிவழிவந்து வடகரையில் உள்ள திருப்பதியைக் குருகூர் என்று எண்ணி
வழிபட மீண்டும் அங்குவந்த நாரதமுனிவர் இது தாந்தன் வழிபட்ட இடமென்றும் சற்று தெற்கே தள்ளியிருப்பது தான் ஆதிநாதர் கோவில் என்றும் எடுத்துரைத்து தினந்தோறும் பகலில் வந்து ஆதிநாதரை பூஜித்து இரவில் கடலிற் சென்று சங்காக வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான். ஒருநாள் இந்த சங்கவரசன் தனது இனங்களுடன் வந்து கொண்டிருக்கும் போது ஒரு திமிங்கலம் எதிர்ப்பட்டுச் சங்கங்கள் வராது தடுக்கவே, சங்கன் ஆதிநாதரை
மனமுருகி வேண்ட ஒரு மானிடன் கடலில் தோன்றி அந்தத் திமிங்கலத்தை விழுங்கிச் சென்றான்.
இதன்பின் எவ்வித தடையுமின்றி சங்கன் வந்து சென்று 1000 ஆண்டுகள் கழியவே எம்பெருமான் கருட வாகனத்தில் தமது தேவியருடன்
காட்சி கொடுத்து சங்கனின் தவத்தை மெச்சி சங்கனுக்கும் உடனிருந்த சங்கங்களுக்கும் மோட்சம் நல்கினார்.
சங்கினங்களுடன் சங்கன் ஏறிவந்த துறைக்கு “திருச்சங்கணித்துறை” என்று இன்றும் பெயர் வழங்குகிறது.
சேஷ ஷேத்திரம்-இராமவதாரம் முடிவதற்கு மூன்று நாள் இருக்கும்போது பெருமானைப் பார்க்க எமதர்மராஜன் வந்தான். அப்போது இராமர் இலக்குவனை நோக்கி தம்பி, யாரையும் இனிமேல் உள்ளே அனுமதியாதே என்றார். சில நாழிகை கழித்து கடைசியாக ஒரு முறை இராமனைக் கண்குளிரக் கண்டுவிடுவோமென துர்வாச முனிவர் வந்தார். இவரைத் தடுத்தால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகநேரிடும் என்றெண்ணி இலக்குமணன் தடுக்கவில்லை. துர்வாசரை உபசரித்து அனுப்பிவைத்த ராமன் என் ஆணையை மீறி மரமாக நின்றமையால் நீ மரமாக இருக்கக் கடவாய் என்றார். இலக்குமணன் இராமனின் இரண்டு கால்களையும் பற்றிக்கொண்டு நான் நின்னைவிட்டு பிரிந்திருப்பது இயல்போ அண்ணா, இது உமக்கே தெரியாதோ என்று மண்டியிட்டு நின்றான்.
இலக்குமனை எடுத்து ஆரத் தழுவிய இராமன் நான் இந்த இராமாவதாரத்தில் சீதையை காட்டில் வாழச் செய்த பாவத்தை போக்க 16
ஆண்டுகள் அசையா பிம்பமாய் பிறக்க வேண்டியுள்ளது. அப்போதும் நான் உன் மடி மீது அமர்ந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான் உன்னை மரமாக நிற்கச்
சொன்னேன். அந்த மரப்பொந்தில் நான் வந்து அமர்வேன் என்றார்.
இங்கிருந்து நீ புறப்பட்டு தாமிரபரணியின் தென்கரையில் உள்ள வராக ஷேத்திரத்தை அடைந்து ஒரு புளியமரமாக மாறப் போகிறாய். இன்னும்
கொஞ்சகாலத்தில் காசிப முனிவர் காரி என்ற பெயரில் அங்கு குறுநில மன்னராகப் பிறப்பார். அவரது மனைவியான ஆத்மவிதி என்பாளும் உடைய நங்கை என்ற பெயரில் பிறந்து இருவரும் புத்திரப்பேறு வேண்டி குருகூர்வந்து விரதம் இருக்கப் போகிறார்கள். அவர்களின் புத்திரனாக நான் அவதரிக்க போவதன் காரணம், துவாபரயுகத்தில் கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவரும், தேவகியும் தமக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னை நோக்கிமோட்சம் வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் சித்திக்கும் என்று நான் ஏற்கனவே வரம் கொடுத்துள்ளேன்.
அவர்களே தற்போது புத்திரப்பேறுவேண்டி நிற்பர். அவர்கட்குப் புத்திரனாக அவதரித்ததும் நான் மிக உகந்த ஆதிநாதன் திருத்தலத்தில் என்னை
வந்துவிட்டவுடன் நான் தவழ்ந்துவந்து நினது மடிமேல் ஏறி 16 ஆண்டுகள் யோக நிஷ்டையில் அமர்ந்து அதன்பின் வேதம் தமிழ்செய்து நாத்திகமழித்து
ஆத்திகம் வளர வழிகாட்டுவோம் என்று சொல்லி தனது விரலில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொடுத்து இது எந்த இடத்தில் உனது கையை
விட்டு நழுவுகிறதோ அந்த இடத்தில் புளியமரமாக நில் என்று ஆசீர்வதித்து அனுப்பினார். ஆதிசேடனான இலக்குமணனே இங்கு புளியமரமாக
எழுந்தருளியிருப்பதால் இதற்கு சேஷ ஷேத்திரம் என்றும் பெயர்.
வராஹ ஷேத்திரம்-வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ நாராயணன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சிகொடுத்த திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.
தீர்த்த ஷேத்திரம்-சங்கன் முக்தி பெற்றதாலும், பெரும் ஞானிகளும் தபசிகளும் இந்த பொருநல்லாற்றில் அவதரித்ததாலும் முக்தியளிக்கும் ஸ்தலங்கள் இவ்வாற்றின் கரை மருங்கு அமைந்திருப்பதாலும் இதற்கு தீர்த்த ஷேத்திரம் என்று பெயர்.
இவ்விதம் ஆதியில் தோன்றியதால் “ஆதிஷேத்திரம்” என்றும், வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும் ஆயிரம் தலை
கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும், சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய
ஊராகையால் “தீர்த்த சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம் நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த
குருகூரை “பஞ்சமஹா ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார்.
மூலவர்–ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி என்று இரண்டு நாச்சியார்கள். இருவருக்கும் தனித்தனியே கோவில்கள்.
தீர்த்தம்- தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,
விமானம்- கோவிந்த விமானம்.
காட்சி கண்டவர்கள்– பிரம்மா, நம்மாழ்வார், சங்கன், தாந்தன், ரிஷிகள், மதுரகவியாழ்வார்.
ஆதிநாதர் கோவில் ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்தது. பின்னர் கோவிலையும் ஊரையும் பெரிய தாக்கும்
பொருட்டு வடக்கே கரையை தள்ளி வைத்து அலகல்லும் படித்துறையும் கட்டினர். ஸ்ரீ ஆதிநாதர் கோவிலும் புளியமரமும் அவற்றை ஒட்டி இருந்தன.
அப்புளி இன்றும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற பழமொழிக் கொப்ப பல பொந்துகளுடன் முதிர்ந்துள்ளது: இன்றும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிடிக்காத
காரியங்கள் இந்த தலத்தில் நடந்தால் இப்புளிய மரத்திலிருந்து நிணநீர் வடிவது கண்கூடு.
நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது போல் திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வாருடன் உறங்காப்புளி தொடர்பு
கொண்டு விட்டது.
ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து வந்து இந்தப் புளியமரத்தின்
பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழி மலர்ந்தருளினார். வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக
நம்மாழ்வார் வடித்துக்கொடுத்த இடம்தான், இது,
ஸ்ரீராமன் மட்டும் ஆதிசேடன் மடியில் அமர்ந்தால் போதுமா, அர்ச்சாவதார மூர்த்திகளான தாங்களும் அமர வேண்டாமோ என்று நினைத்து
பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக,
எம்மைப்பாடுக என்று நான் முந்தி நீ முந்தி என்று நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக ஐதீகம்.
ஸ்ரீ நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது இந்தப் புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய ஸ்தலங்கட்கு பாசுரம்
அருளினார்.
இத்தலத்திற்கு அருகாமையிலமைந்த திருக்கோளுரில் பிறந்த மதுரகவியாழ்வார் வடநாட்டிற்கு யாத்திரை சென்றபோது திடீரென்று
அவருக்குத் தென்திசையில் ஒரு ஜோதி தோன்றி அவரைக் கவர்ந்திழுக்க இது விந்திய மலையில் தோன்றக் கூடுமென நினைத்த அவர் அங்குவந்து
கண்டால் மேலும் தெற்கே தள்ளித் தெரிய இறுதியில் இவ்விடம் வந்து நம்மாழ்வாரின் அவதார மேன்மையைத் தெரிந்து வேறொன்றும் நானறியேன்”
என்று நம்மாழ்வாருக்கு அடிபணிந்து உய்தலே தொழிலெனக் கொண்டு அவரால் மொழியப் பட்ட திருவாய் மொழியினை ஏட்டில் எழுத லுற்றார்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை தொகுக்க வந்த நாதமுனிகள் மதுரகவியின் வம்சத்தாரிடம் கண்ணி நுன் சிறுத்தாம்மைப் பெற்று அதை
பன்னீராயிரம் முறை ஜெபித்து ஸ்ரீநம்மாழ்வாரே பிரத்யட்சமாகி ஒரு திரையிட்டு அதனுள் அமர்ந்து கொண்டு நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனியே
அவற்றை எழுதி தமிழன்னைக்கு பக்தி அணிகலனாகச் சூட்டினார்.
இவ்வூரில் வடகரையில் உள்ள காந்திஸ்வரத்தில் கருவூர்ச் சித்தர் என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு நாய் இருந்தது. அது
தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து ஸ்ரீ வைணவர்கள் உணவருந்தி விட்டு எறிந்த எச்சில் இலையில் உள்ள மீத உணவை உண்டுவந்தது.
ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு நதியைக் கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு அதனின்றும் மீள முடியாமல்
உயிர் துறக்க நேர்ந்தது. அது உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம் வெடித்து மாபெரும் ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது.
இத்தகைய பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார்
வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே”–என்று பாடினார்
ஒரு சமயம் இத்தலத்தில் யானை ஒன்றும் வேடன் ஒருவனும் பொருத இருவரும் மாண்டனர். இருவருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்
போதே எமதூதர்களும், விஷ்ணு தூதர்களும் வந்து சேர்ந்தனர். இருவரும் இறந்ததும், இத்தலத்தில் இறந்த ஒரே காரணத்திற்காக அவர்களை விஷ்ணு
தூதர்கள் அழைத்துச் சென்றனர். இத்தலத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை விளக்கும் சிற்பங்கள் தீட்டப்பட்டுள்ளன. குருகா
மாலை என்னும் நாலும் இந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது.-செஞ்சர நாணிட்ட சிலைவேடனும் பொருகைக் குஞ்சரமும் வான்சேர் குருகை”
அந்தமில்லா மறையாயிரத் தாழ்ந்த வரும்பொருளைச் செந்தமிழாகத்
திருத்திய வேணி தேவர்கள் தத்தம்
விழாவு அழகு மென்னா தமிழார் கவியின் பந்தம்
விழாவொழுகும் குருகூர் வந்த பண்ணவனே”-சடகோபர் அந்தாதி
இந்திரன் தனது மனைவியுடன் மதுவில் மாந்தி இன்பம் நுகரும் போது அவனைக் காணவந்த காசிப முனிவரைக் கண்டும் காணாதது
போலிருக்க இதனால் சினமுற்ற காசிபர் “உனது இளமையில் திமிராலும், செல்வச் செருக்காலும் எம்மை மதியாதிருந்தமையால் நீ இளமை இழந்து
மூப்பாவதுடன் ஐஸ்வரியமும் இழக்கக் கடவாய் என்று சபித்தார். இதனால் துடித்த இந்திரன் சாப விமோசனம் வேண்டி மன்றாடினான். இவனை நோக்கிய
காசிபர், தாமிரபரணி யாற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆதிப்பிரானைக்குறித்து தவமிருந்து சாபம் போக்கிக் கொள் என்று சொல்ல இந்திரனும்
இவ்விடம் வந்து தவமிருந்து திருமால் அருளுக்கு உரியவனாகி சாப விமோசனம் பெற்றான். நம்மாழ்வார் தம் பாசுரத்தில் “சிரங்களால் அமரர்
வணங்கும் திருக்குருகூரதனுள்” என்று குறிப்பிடுகிறார்.
இவ்விடத்தில் இருக்கும் புளியமரத்தில் பகவான் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால் லட்சுமி தேவி பெருமானை நாடிவந்த காலத்தில்
லட்சுமி தேவியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டதாக ஐதீகம்.
இராமானுஜர் இவ்வூருக்கு எழுந்தருளினார். இராமானுஜர் இந்த ஊருக்கு வெகுதொலைவில் வரும்போதே தாமிரபரணி நதிக்கரையில் இத்தலம் காட்சியளிக்க மிகவும் உணர்ச்சி வசப்பட்டு,
இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்— என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இராமானுஜர் ஆழ்வார் திருநகரியைnபரமபதத்து எல்லை என்கிறார். இதுபரமபதத்து எல்லையாகின்றது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டமாகிறது.
ஆழ்வார் தங்கித்தவம் செய்த புளியமரம் 7 கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த பகுதிக்கு ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் என்பதே
பெயர். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வரை இப்பெயரே பிரசித்தமாயிருந்தது.
இங்கு தெற்கு மாடத் தெருவில் கீழ்புரம் திருவேங்கிட முடையான் சன்னதியும், மேல்புரம் திருவரங்க நாதன் கோவிலும், வடக்கு மாடத்
தெருவின் மத்தியில் பிள்ளைலோகாச்சாரியர், அழகிய தேசிகர், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.
எம்பெருமானார் – ஜீயர் இங்கு எழுந்தருளியுள்ளார். அவருக்குத் தனி மடம் உண்டு.
இங்குள்ள நம்மாழ்வார் விக்ரஹம் எந்தவிதமான உலோகத்தாலும் செய்யப்பட்டதன்று. தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி அதில் ஆழ்வார் தமது
சக்தியை பிரயோகித்துள்ளார். எனவே பார்ப்பதற்கே பேரதிசயமாக தோன்றும் காட்சி
இதுவாகும்.
இங்குள்ள திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் மிகவும் வேலைத்திறம் கொண்டவை.
இந்தக் கோவிலில் மிகவும் அருமையான வேலைப் பாடமைந்த கல்நாதஸ்வரம் ஒன்றுள்ளது. இது கருங்கல்லில் குடைந்த அதிசய
இசைக்கருவியானாலும் மரத்தால் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது.
இது நீளம் 1 அடி மேல்ப்பாகம் 1/4 அங்குலம். அடிப்பாகம் 1 அங்குலம் குறுக்களவுடையது. இதனடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது.
இது இந்தக் கோவிலில் பரத நாட்டியம் நடைபெறும் பொழுது வாசிப்பதற்கு பயன்பட்டதாகத் தெரிகிறது. இது சுமார் 350 வருடத்திற்கு முன்னால்
கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயரும் உண்டு.
இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு பெரிய திருமேனியுடைய இந்த மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.
ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்று இங்கும் அரையர் சேவை உண்டு. திருமஞ்சனத்தின்போது பிரபந்தங்களையும், புருஷஸு க்தத்தையும் தாளம்
போட்டுக்கொண்டே படிக்கும் முறை இங்கு இன்றும் வழக்கில் உண்டு.
1991இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும் சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”- என்று வள்ளுவர் நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து கூறியதாகச்
சொல்லப்படுகிறது.
———–
88. ஸ்ரீவில்லிபுத்தூர்
வராஹ ஷேத்திரம்-வராஹ புராணத்தின் ரகஸ்ய காண்டத்தில் 9 அத்தியாயங்களில் இத்தல வரலாறு பின்வருமாறு பேசப்பட்டுள்ளது.
எம்பெருமான் வராஹ ரூபியாய் பிராட்டியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு நம்பாடுவான் போன்ற பக்தர்களின் கதையை இவ்விடத்தில்
பிராட்டிக்கு கூறியதாக ஐதீகம். எனவே இதனை “வராஹ ஷேத்ரம்” என்றே குறிப்பிடுகின்றன.
முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே நாடெங்கும் பரவியிருந்தது. அப்போது தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்த தலங்கள்
திருமலை, திருக்கடன் மல்லை, திருவிட வெந்தை, தஞ்சை மாமணிக் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுஷ்ணம் போன்றன.
ஒரு காலத்தில் “சுதபா” என்னும் முனிவர் திருமாலிருஞ் சோலையில் தெளிவிசும்பு பெற தவமிருக்கும் கால் துர்வாச முனிவர் தமது சீடர்களுடன்
அவரைக் காண வந்து வெகுநேரம் அவரது குடிலில் காத்திருந்தார். ஆனால் நீராடுவதில் விருப்பம் கொண்டு ஜலக்கிரீடையில் ஈடுபட்டவராக
தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இருந்தார். துர்வாசரின் சினம் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெகுநேரம் கழித்து வந்த சுதபா முனிவரை
வெகுண்டு நோக்கிய துர்வாசர், நீர் யாம் வந்திருப்பதை அறிந்தும் எம்மை மதியாது தண்ணீருக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால் “எப்போதும்
நீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கும் மண்டுகமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.
தமது நிலையுணர்ந்த சுதாப முனிவர் தம்மை மன்னித் தருளும்படி மன்றாடி வேண்டினார். அதற்கு அவர் வராஹ ஷேத்திரத்திற்கு அருகில்
தருமாத்தரி என்றொரு மலையுள்ளது. அதற்கருகில் பிரவாஹித்துக் கொண்டிருக்கும் புண்ணியநதி யொன்றுள்ளது. எண்ணற்ற ரிஷிகள் அங்கு
தவஞ்செய்து அந்நதியில் நீராடிய மாத்திரத்தில் சாபந் தீர்ந்து தெளிவிசும்பும் பெற்றுள்ளனர். அவ்வருவியில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும்
என்று துர்வாசர் கூறவே, அவ்வருவியில், யான் தெளிவிசும்பு பெற விரும்பி தவம் மேற்கொண்ட திருமாலிருஞ் சோலையானையே அங்கு காணவேண்டும்
என்று வேண்ட அதுவும் பலிக்குமென்றார். துர்வாசரின் சாபம் பலிப்பதற்கான ஒரு முகூர்த்த நேரம் ஆவதற்குள் தம் தபோ பலத்தால் ஆகாய மார்க்கத்தில்
பறந்து அந்நதியில் (நூபுர கங்கையில்) நீராடினவுடன் சாபவிமோசனம் பெற்று திருமாலிருஞ்சோலை சுந்தர ராஜனையே தியானம் பண்ண அவரும்
பிரத்யட்சமானார். இவ்வாறு திருமாலிருஞ்சோலை எழிலழகன் இங்கு வந்து குடிகொண்டார். இஃது வராஹ ஷேத்திரம் எனப் பெயர் விளங்கப்பட்ட
காலம், காலவரைக்கு உட்படாத முன்னொரு யுகத்தில் நடந்ததாகும்.
வடேசுபுரம்– மண்டுகர் தவஞ்செய்த இவ்வனத்தில் சிலயாண்டுகள் கழித்து எண்ணற்ற ரிஷிகளும் இத்தலத்தின் பேற்றையெண்ணி இங்குவந்து தவஞ் செய்யலாயினர். இது போழ்து இப்பகுதி சம்பகாரண்யம் என்ற பெயரோடு விளங்கியது.-அவ்வமயம் காலநேமி என்னும் அரக்கன் இங்கு தவஞ்செய்த முனிவர்கட்குத் தீரா இடும்பை விளைவித்து இந்திர லோகத்தையும் துன்புறுத்தினான்.
எல்லோரும் சென்று இவ்வரக்கனைக் கொல்ல வேண்டுமென்று மஹா விஷ்ணுவை வேண்ட காலம் வரும்போது அவனையழிப்போம் என்று மஹாவிஷ்ணு கூற இறுதியில் அவ்வரக்கனின் தொல்லைகள் அதிகமாக விஷ்ணு அங்கே தோன்றி சக்ராயுதத்தை ஏவினான்.
அவனைத் துண்டு துண்டாக்கிய சக்ராயுதம் அப்பாபத்தைப் போக்கித் தன்னைச் சுத்தப்படுத்த நினைத்த மாத்திரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி
ஆகிய நதிகளை நினைக்க உடனே அவர்களும் வந்து புனிதப்படுத்தினர்.
சக்ராயுதத்தை புனிதப்படுத்திய மூன்று நதிகளும் எம்பெருமானை இவ்விடத்திலேயே இருந்து காட்சியருளவேண்டுமென்று கேட்க, அவர் தமக்கு
மிகவும் ரம்யமான ஸ்தலம் இதுதானென்றும் இப்புரிக்கு வடேசுபுர மென்றும், இங்கிருக்கும் எனக்கு வடமஹாதாமா வென்றும் (வடபெருங்கோயிலுடையான்) என்றும் பெயர் விளங்கும். யான் இங்கு நித்யவாஸம் பண்ணுவேன். நீங்கள்
மூவரும் உம்மில் ஒரு சக்தியை பிரித்து இங்கு தடாகங்களாக மாற்றிவிட்டுச் செல்லுங்கள், கலியுகத்தில் இச்சேஷத்ரம் மிகப்புகழையடையும் என்றும் கூறி
திருநாடு புக்கார்.
வில்லிபுத்தூர்–இஃதிவ்வாறிருக்க கங்கை கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்களில் சரப முனிவர் என்பவர் தமது பிராப்தகர்மத்தினால் வேடனாய் வந்து பிறந்து அப்போதும் தமது பூர்வ ஞான பலத்தால் தவமியற்றும் முனிவர்களை மறைந்து நின்று தாக்க, இதுகண்ட முனிவர்கள் இவனை
விரட்டிக் கொல்ல நினைக்க அவன் தனது குருவை அடைந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்ல அவர் தமது ஞான திருஷ்டியால் இவர் மஹா
ஞானியென்றுணர்ந்து இவருக்குத் தீங்கு இழைக்கக் கூடாதெனப் பணித்து, அவரைச் சமாதானப்படுத்தி உம்மைக் கொல்ல வந்த இவ்விருவரும் வராஹ
ஷேத்ரத்தில் மன்னர்களாய்ப் பிறப்பர். அவ்வாறு பிறந்து வில்லன், கண்டன் என்றும் பெயர்பெற்று வேட்டைக்கு வரும் தருவாயில் ஒரு புலியைத் துரத்திக்
கொண்டு வரும் போது இருவரும் தனித்தனியே புலியை விரட்ட காட்டிற்குள் பிரிய நேரிட்டு, புலியைத் துரத்தி சென்ற கண்டன் அதனோடு பொருது மடிய,
மடியும் தருவாயில் நாராயண மந்திரத்தைச் சொல்லி மோட்சம் பெற்றான்:
அவனைத் தேடி வந்த வில்லி பல இடங்களிலும் அலைந்து கண்டனைக் காண முடியாமல் அயர்ந்து தூங்க அவன் கனவில் வந்த பெருமாள் கண்டன்
இருக்குமிடத்தை தெரிவித்து அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை செய்துவிட்டு இக்காட்டையழித்து ஒரு திருநகரியை உண்டாக்க, அதுவும் நின் பெயரால் வில்லிபுத்தூர் என அழைக்கப்படும் என்று சொல்ல அவனும் அவ்விதமே செய்து இந்த வில்லிபுத்தூரை உருவாக்கினான்.
எம்பெருமான் (வராஹ ரூபியாய் தான் இருந்த போது பிராட்டி வேண்டியபடி) திருமகள் ஆண்டாளாக அவதரிக்கும் காலம்
நெருங்குவதையெண்ணி தனது புள்ளரையனாகிய கருடனைப் பார்த்து வில்லிபுத்தூரில் வாசம் செய்யும் மூங்கில் குடி என்னும் வம்சத்திலிருக்கும்
முகுந்தர் என்பவருக்கு 4வது புத்திரனாக விஷ்ணுசித்தர் என்ற பெயரில் அவதரிக்க கடவாய் என்ன அவ்விதமே அவதரித்து, விஷ்ணு சித்தன் என்ற
பெயர் பூண்டு, திருமால் மீது மிக்க பக்தி கொண்டு நித்ய கைங்கர்யங்களைச் செய்து இறைவனுக்குப் பாமாலையும் பூமாலையும் சூட்டி வருங்காலையில்
மதுரையை ஆண்ட வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் மறுமைப் பேற்றில் பேரவா கொண்டவனாக பல மதங்களையும் பற்றி ஆராய்ந்து வருங்காலையில் எது உண்மையிலேயே மோட்சம் கொடுக்க வல்லதென வினவ பற்பலரும் பற்பல விதமாய்ச் சொல்ல இறுதியிலே சகல மதத்தாரையுமழைத்து மோட்சம் தரத்தக்க மதம் (மார்க்கம்) எதுவென்று நிர்ணயஞ் செய்ய ஒரு போட்டியொன்று வைத்தான். மந்திரத்தால் செய்யப்பட்ட பொற்கிழியொன்றைக் கட்டுவித்து சகல மதத்தாரையும் அழைத்து தத்தம் மதமே சிறந்ததென வாதிடச் சொல்லி, யாருடைய மதம் சிறந்தது (மோட்சம் தரத்தக்க வல்லது) என்று நிருபிக்கும் தருவாயில் பொற்கிழி தானே அறுபட்டு விழ வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய எண்ணற்ற மதத்தினரும் வந்து வாதம் பல புரிந்து வருங்காலை, விஷ்ணுசித்தன் கனவிலே தோன்றிய எம்பெருமான் அவரைச் சென்று வாதிடுமாறு சொல்ல அவ்விதமே அவரும் செய்து
பரதத்துவம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கவல்லது ஸ்ரீவைஷ்ணவமே என்று நிருபிக்க பொற்கிழி அறுபட்டு வீழ்ந்தது, பாண்டியன் மிகவும் மகிழ்ந்து
இவரைப் பலவாறு, கொண்டாடி துதித்து பட்டர்பிரான் என்னும் பட்டத்தையுமளித்தான்.
இதன்பின் பாண்டிய மன்னன் இவரை பட்டத்து யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்த தருணத்தில் எம்பெருமான் பிராட்டியோடு கருட
வாகனத்தில் இவருக்கு காட்சி தந்தருளினார் அதனைக் கண்ட விஷ்ணு சித்தர் இப்பூவுலகில் எம்பெருமானுக்குத் தீங்கு யாதும் நேர்ந்திடலாகாதே, கண்ணேறு பட்டுவிடலாகாதே என்று நினைந்து பல்லாண்டு, பாடினார்.
இதன்பின் மீண்டும் வில்லிபுத்தூரையடைந்து விட்டு சித்தர் தொடர்ந்து எம்பெருமானின் கைங்கர்யத்திலீடுபட்டு நந்தவனம் அமைத்து மலர் பறித்து
எம்பெருமானுக்கு பாமாலையோடு பூமாலையும் படைத்துக்கொண்டிருந்தார்.
இஃதிவ்வாறிருக்க எம்பெருமானிடம் பிராட்டி, பூலோகம் சென்று இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய எண்ணியிருப்பதையுணர்த்த எம்பெருமானும்
சம்மதிக்க விஷ்ணு சித்தர் நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் அங்கிருந்த திருத்தூழாய்ச் செடியடியில் ஆடிப் பூரத்தில்
அன்றலர்ந்த மலராய் அவதரித்திருக்க சற்றே இவ்விந்தையைக் கண்ட அவர் வந்திருப்பது திருமகளேயென உணர்ந்து தம்பத்தினியான விரஜையிடம்
கொடுத்து கோதை என்றே பெயர்சூட்டி வளர்க்க, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஆண்டாள் வளர்ந்து பருவம் எய்தினாள்.
விட்டுசித்தன் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வார் தினந்தோறும் இறைவனுக்குச் சூட்டிவைக்கும் பூமாலையை ஆண்டாள் தானே எடுத்து தனது
குழலிற்சூடி அதன்பின் பெருமாளுக்குச் சூட்டலானாள். இவ்வாறு தினந்தோறும் நடந்து வருவதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் கோதையை மிகவும் கடிந்துகொண்டு எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யத்தில் இப்படியொரு பழுது நேர்ந்ததே என்றெண்ணி மிகவும் வருத்தமுற்று அயர்ந்து தூங்குகையில் கனவில் வந்த எம்பெருமான் ஆண்டாள் சூடிக்களைந்த கண்ணியே தமக்கு மிகவும் உகப்பு என்று சொல்ல இதைக்கேட்ட விட்டு சித்தர் மிகவும் வியந்து போனார்.
பின் ஆண்டாளுக்குத் திருமணம் முடிக்க பேச்சு எடுக்குங்காலை தான் “மானிடர்க்கு வாக்குப்படேன் அரங்கனுக்கே ஆட்படுவேன்” என்று கூறி
தனது தோழிகளை அழைத்துக் கொண்டு (கிருஷ்ணவதாரத்தில் மோஹித்து) கிருஷ்ணாவதாரத்தில் கோபிகாஸ்திரிகள் கோபாலனை எவ்விதஞ்சென்று
துதித்தினரோ அதே போன்று ஸ்ரீவில்லி புத்தூரை கோகுலமாகவும். அங்கே எழுந்தருளியிருந்த வடபெருங்கோயிலுடையானை கண்ணனாகவும், தனது
தோழிகளை கோபிகாஸ்திரீகளாகவும் கற்பனை செய்துகொண்டு தினமும் கோயிற் சென்று பாடல் புனைந்து பாமாலை சூட்ட, இவளின் எண்ணம்
ஈடேறுமோ என்று பெரியாழ்வார் வியந்திருந்த ஒரு காலையில் அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், “நின் திருமகளோடு அரங்கம் வாரீர்
யாமாட் கொள்வோம்” என்று சொல்ல அவ்விதமே வல்லப தேவ பாண்டியனிடம் பல்லக்குப் பரிவாரங் களைப் பெற்று அரங்கம் எழுந்தருளுகையில் தென்திருக் காவேரியின் மத்தியில் வந்து கொண்டிருக்கும் போது பல்லக்கிலிருந்து கோதை மறைய
ஈதென்ன விந்தையென்று கோயிலுக்குள் புகுந்து காணுகையில் அரங்கனுக்கு அருகில் கோதை எழுந்தருளியிருக்க இக்காட்சியைக் கண்டு மிகவும்
சிலாகித்துப் போய் வில்லிபுத்தூரார் அரங்கனடி பணிந்து இத்திருமணக் கோலத்தை வில்லிபுத்தூரிலும் காட்டியருள வேண்டுமென கேட்க, அவ்விதமே
வில்லிபுத்தூர் வந்து வடபெருங்கோயிலை அலங்கரிக்க எம்பெருமான் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.
மூலவர்- வடபத்ரசாயி (ரங்கமன்னார்) கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்- (கோதாதேவி) ஆண்டாள்
தீர்த்தம்- திருமுக்குளம்
விமானம்- ஸம்சன விமானம்
காட்சிகண்டவர்கள்— மண்டுக மஹரிஷி, பெரியாழ்வார்.
பாண்டிநாட்டு 18 ஸ்தலங்களில் இரண்டு ஆழ்வார்கள் தந்தையும், மகளுமாய் அவதரித்தது, இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.
கும்பகோணத்தின் தலவரலாற்றோடு திருமலையும் ஸ்ரீரங்கமும் எவ்விதம் சம்பந்தப்பட்டதோ அதே போன்று திருமாலிருஞ்சோலையும்,
திருவரங்கமும் இத் தலத்தோடு சம்மந்தப்படுகிறது.
எம்பெருமானின் பல்வேறு அம்சங்கள் 12 ஆழ்வார்களாய் அவதார மெடுத்த காலையில், பிராட்டியே ஆழ்வாராக அவதரித்த பேறுபெற்ற ஸ்தலம்.
தமிழ்நாடு அரசு முத்திரையில் இடம் பெற்றிருப்பது இக்கோவிலின் ராஜகோபுரமாகும்.
இதற்கருகில் உள்ள திருவண்ணாமலை தென்திருப்பதி என்று பெயர் பெற்று திருமலைக்குச் செய்யவேண்டிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்,
இங்கேயே செய்துவிடும் பழக்கமுள்ளது. திருமலை வேங்கடவனைப் போன்றேஸ்ரீனிவாச மூர்த்தியாக எம்பெருமான் இங்கே எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 4கி.மீ. தொலைவில் உள்ளது.
பெருமாளுடன் கருடாழ்வார் எழுந்தருளியிருப்பது இங்கு ஒரு சிறப்பம்சமாகும்.
ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோல் அரையர் சேவையும் இங்குண்டு. சுதாப முனிவர் வராஹ ஷேத்ரத்திற்கு வந்து அழகர் மலையானை நினைத்து
தியானஞ் செய்ய அங்கே எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை நின்றான் சுதபா முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கேயே இருந்து பக்தர்களின் பாவம் போக்க நித்ய வாசம் செய்து வருகிறார். இத்தலம் காட்டழகர் கோவில் என்றும், காட்டழகர் சுந்தரராஜப் பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் எப்போதும் தண்ணீர்வந்து கொண்டே இருக்கும். கடுமையான பஞ்ச காலத்திலும் இங்கு தண்ணீர் வரும். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும். சுமார் 50 அடி அகலத்தில் கற்களால் தொட்டி கட்டி வைத்துள்ளனர். இங்கு பெருமாள் பூதேவி ஸ்ரீ தேவி சமேதராயிக் காட்சி தருகிறார்.
இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பு பகுதியில் உள்ளது. இங்கு செல்ல வேண்டுமெனில் செண்பகத்தோப்பு
பகவதி நகர் வரை வாகனங்கள் செல்லும், அதன்பின் சுமார் 6கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் காட்டுயானைகள்
அதிகம் வசித்தாலும் யாரையும் துன்புறுத்துவதில்லை.
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்கு மிக விசேஷமான திருவிழா நடைபெறும். 6 கால பூஜையும் விசேஷ அலங்காரங்களும் நிறைந்து
இத்தலம் ஒளிமயமாய்த் திகழும். இவ்விழாவை ராஜபாளையும் பூசப்பாடி தாயாதியார் ராஜாக்களான பங்கார் ராஜாக்கள் வகையறாவினர்.
இத்திருவிழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இச்சமயம் இங்கு பெருங்கூட்டம் வரும். காரைக்குடி செட்டியார்கள் அதிகம் வருவர்.
பிறமாதங்களில் நடைபெறும் முக்கிய விழாக்கள் விசேடங்களின் போதும் இங்கும் கூட்டம் அதிகமாக வரும்.
எம்பெருமானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைச் சூடிப்பார்த்து திருப்தியடைந்து கொடுத்தனுப்பி கொண்டிருந்தாள் ஆண்டாள்.
இதன் நினைவாக இன்றும் தினந்தோறும் முதல்நாள் இரவு ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட மலர் மாலை வடபத்திர சாயியாக பள்ளிகொண்டிருக்கும்
பெருமாளுக்கு சிரசின் மேல் மறுநாள் காலை முதல்மாலையாக அணிவிக்கப்படுகின்றது.
பெரியாழ்வார் தமது திருமாளிகையில் வைத்து வழிபட்ட லெட்சுமி நாராயணர் இங்கு தனிக்கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்துகொண்டு இதை இவ்வாறே எம்பெருமானுக்கே அணிவித்தால் அழகாய் இருக்குமா என்று
ஆண்டாள் தனது ஒப்பனையை சரிபார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஆண்டாள் சன்னதிக்கு அருகாமையில் இன்றும் உள்ளது.
இந்தக் கிணற்றில்தான் ஆண்டாள் தனது அழகு பார்ப்பாளாம்.
பெரியாழ்வாரின் வம்சத்தார் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். கோவிலுக்கு வெகு அருகாமையிலேயே வாசம் செய்கின்றனர்.
பெரியாழ்வாருக்கு வாரிசு இல்லை. அவரது சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்”
என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உற்சவகாலங்களில் ஆண்டாளுக்கும் ரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு.
மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஆண்டாள் ரங்க மன்னார் துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது பெரியாழ்வாரின்
வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி
பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம்
காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை”
மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு
உபசரிக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார தினமான ஆடி மாதம் பூரநட்சத்திரத்தன்று நடைபெறும் திருவாடிப்பூரத் திருவிழாவும், ரத
உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது இங்கு நடைபெறும் 5 கருட சேவை வேறெங்கும் இல்லாததாகும் 5 கருட சேவையில் பங்கு பெரும்
எம்பெருமான்கள்.
1. திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருங்கமைந்த வெங்கிடாசலபதி பெருமாள்)
2. திருத்தங்காலப்பன், திருத்தங்கல் பெருமாள்.
3. வடபத்ரசாயி
4. ரெங்கமன்னார்
5. காட்டழகர் சுந்தரராஜன்
திருக்கல்யாணத்தின்போது பெண்வீட்டாரான பெரியாழ்வாரின் தற்போதுள்ள வாரிசினர் சந்நதிக்கு வந்துண்ண பெருமாள் “பரதேசம்” செல்ல
விருப்பதைத் தடுத்து மகளை மணங்கொள்ள பிரார்த்திக்க, அவ்விதமே எம்பெருமான் ஏற்றுக்கொண்டதை “திருவுள்ளம் பற்றித் திருவுள்ளம்
ஆக்கினார்” என்று அறிவிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறக்கூடிய தெய்வீகம் கமழும் இனிய நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆகிய மூவரும் சேர்ந்தது ஆண்டாளாகக் காட்சியளிப்பது இங்குதான், மற்ற தலங்களில் பெருமாள்
தம்பதி சமேதராய்க் காட்சி அளித்தால் (கல்யாண திருக்கோலத்தில்) ஸ்ரீதேவியும், பூதேவியும் அருகிலிருப்பார்கள். இந்த தலத்தில்தான் ஆண்டாள்
ஒருவரோடு காட்சிதருகிறார். பெருமாளுக்கு வலப்புறத்தே ஆண்டாளும், இடப்புறத்தே கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். இந்த அமைப்பும்
வேறெங்கும் இல்லாததாகும்.
இங்கு திருமஞ்சனம் ஆகும் போது ஆண்டாளின் சன்னதிக்கு முன்பு ஒரு காராம்பசு கொண்டு வரப்படுகிறது. தேவி காராம்பசுவைப் பார்த்துக்
கண்திறப்பதாக ஐதீகம். தட்டொளி என்னும் கண்ணாடியும் எதிரே பொருத்தப் பட்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் பிராட்டி முன்னிரவில் சூடிய மாலையைக்
கழற்றிக் கொடுக்க அதை, பெருமாள் அணிந்து கொண்டு கண்விழித்துப் பெருமாள் திருப்பள்ளி யெழுச்சியாகிறார்.
இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் மிகவும் பிரசித்திவாய்ந்தது.காலநேமி என்னும் கொடிய அரக்கனை எம்பெருமான் தன் சக்ராயுதத்தால்
அழித்தார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வந்து எம்பெருமானிடம் நின்றவுடன் சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய
மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய, சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால்தான் இதற்கு
திருமுக்குளம் என்ற பெயர் உண்டாயிற்று என்பர்.
——————
89. திருத்தங்கல்
பிரம்மாண்ட புராணத்தின் சேத்திர காண்டத்தில் 8வது அத்தியாயத்தில் இத்தலம் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவனான
புதபகவானின் மைந்தன் புரூரவ சக்ரவர்த்தியால் இப்பாரத தேசம் ஒரு காலத்தில் நான்குவகையான நீதி நெறிகளுடன் ஆளப்பட்டது. அவன்
பேரறிஞனாகவும் (கல்விக்கு அதிபதியான புதனின் மைந்தனல்லவா) மிக்க வல்லமை பொருந்தியவனாகவும் இருந்தான். தன் அந்திமக் காலத்தின்
ஆரம்பத்தருவாயில் தனது நாட்டினைக் குழந்தைகளிடம் ஒப்புவித்துவிட்டு காட்டில் தவமிருக்கச் சென்று அங்கிருந்த முனிவர்களிடம்
இப்பூவுலகில் மோட்சம் நல்கிடும் திருத்தலம் யாண்டு உளதென வினவ திருத்தங்கல் பெருமையை அம்மன்னனிடம் கூறுமுகத்தான் அமைந்துள்ளது
புராண விளக்கம்.
புரூரவச் சக்ரவர்த்தி இங்கு வருவதற்கு முன் இத்தலம் எங்ஙன மேற்பட்டதென்பது பற்றி கீழ்க்கண்டவாறு பிரம்மாண்ட புராணம்
விளக்குகிறது.
திருப்பாற்கடலில் ஓர் நாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களுக்குள் தம்மில் யார் பெரியவர் என்னும் பூசல்
உண்டாக ஸ்ரீதேவியின் தோழிகள், நீயே உலக ஈஸ்வரி எல்லா மக்களுக்கு காரணி, இந்திரனும் ஸ்ரீயாலேயே பலம் பெறுகிறான், வேதங்களும் இவளையே
பரக்க பேசுகின்றன. பெருமாளுக்கும் இவளிடந்தான் பிரியம் அதிகம். எனவேதான் பெருமாள் ஸ்ரீயஃபதியாகவும், ஸ்ரீநிகேதனனாகவும், ஸ்ரீநிவாச
னாகவும் உள்ளான் என்றனர்.
இதற்கு பூமாதேவியின் தோழிகள், பூதேவியே மிகவும் உயர்ந்தவள்.எந்நிலையிலும் சாந்தம் உள்ளவள். பெருமாள் மாவலிச்சக்கரவர்த்தியிடம்
வாமன அவதாரங்கொண்டு இப்பூமாதேவியையே வேண்டினான். வராஹ அவதாரத்திலும் பெருமாள் இவளைக் காக்கவே பிரியம் கொண்டார் என்றனர்.
நீளாதேவியின் தோழிகள் நீளாவே உயர்ந்தவள். இவள் ரஸ ரூபம். எனவே இவளை முன்னிட்டே பெருமாளை “ரஸோவைஸ” என வேதங்கள்
புகழ்கின்றன. இவள் ஜல மயமானதாலே பெருமாளும் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டார். வேதங்களில் இவள் உறைகிறாள். நீருக்கு நாரம் என்று பெயர்.
இவளை வைத்தே பெருமாளுக்கு நாராயணன் என்னும் பெயருண்டாயிற்று என்றனர்.
இவ்விதமாக விவாதம் வளர்ந்துகொண்டேயிருந்தது. ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு தானே சிறந்தவள் என்று நிருபிப்பதன்
பொருட்டு தங்கால மலையென்னும் திருத்தங்காலில் வந்து தவமியற்ற ஸ்ரீதேவியின் கடுந்தவத்தை மெச்சியும், பிரிவாற்றாமையைத் தீர்க்கும்
முகத்தானும் பெருமாள் காட்சியளித்து, நீயே சிறந்தவள் என்று போற்றி ஏற்றுக்கொண்டார்.
திருமகள் தங்கி தவமியற்றியதால் திருத்தங்கல் என்ற பெயர் உண்டாயிற்றென்பர். இவ்விடத்திற்குத் தங்கால மலையென்னும் பெயருமுண்டு.
முன்னொருகாலத்தில் சுவேதத்தீவு என்னும் வெள்ளையந் தீவில் ஒரு புனித ஆலமரத்திற்கும், ஆதிசேடனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற
விவாதம் வளர, இவ்விவாதந் தீர்க்க பிரம்மனிடம் செல்ல, ஆதிசேடனே சிறந்தவன் அவன் மீதுதான் பெருமாள் எப்போதும் பள்ளிகொண்டுள்ளார்.
ஆலிலையின் மீது எப்போதோ ஒரேயொரு சமயத்தில்தான் பள்ளி கொள்கிறாரென்று சொல்ல மிகவும் சினந்த ஆலமரம் விஷ்ணுவை நோக்கி
தவமிருக்க, விஷ்ணு தோன்றி நின் ஆசையாதென வினவ, என் மீதும் எப்போதும் பள்ளிகொள்ள வேண்டுமென்று சொல்ல, அங்ஙனமாயின் தென்
தமிழ்நாட்டில் ஸ்ரீ தவமிருக்கும் திருத்தங்கலில் நீ மலைவடிவில் சென்று அமர்வாயாக, ஸ்ரீயை ஏற்க வரும் காலத்தில் யாம் உன் மேல் (உன்
விருப்பப்படியே) நின்றுங் கிடந்தும் இருந்தும் அருள்பாலிக்கிறோம் என்று அருளினார். மலை வடிவங்கொண்டு இங்கு தங்கிய ஆலமரத்திற்கு
தங்கும்+ஆல+மலை-தங்காலமலை எனும் பெயருண்டாயிற்றென்பர்.
இதனைப் பிரளய காலத்தில் திருமால் தங்கிய ஆலிலையின் அம்சமாகவே ஆன்றோர் கருதுவர்.
இம்மலையின் மீது ஸ்ரீயை ஏற்றுக்கொள்ள திருமால் விரைந்த போது மற்ற இரண்டு பிராட்டிமார்களும் அவர் கருத்தையொப்பி இவ்விடத்தே
எழுந்தருளி சேவை தந்தனர்.
மூலவர்- நின்ற நாராயணன். கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்– திருத்தண்காலப்பன். நின்ற திருக்கோலம்
தாயார்– செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) என்ற திருப்பெயர்களும் உண்டு.
தீர்த்தம்– பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன என வேறு 4 தீர்த்தங்களுமுண்டு.
விமானம்– தேவசந்ர விமானம்
காட்சி கண்டவர்கள்– சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி.
அர்ஜு னா நதி ஒரு காலத்தில் இந்நகரில் ஓடிய தாய் ஐதீகம். அந்நதிக் கரையிலமைந்திருந்த ஸ்தலம் அழிந்துவிடவே இப்போதுள்ளவாறு
அமைக்கப்பட்டதென ஒரு கருத்து நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள மூலவர், உற்சவர், திருமேனிகள்யாவும் வர்ணம் பூசப்பட்ட
சுதையால் ஆனவை. எனவே இங்கு பெருமாளுக்குத் திருமஞ்சனம் கிடையாது.
அர்ஜூனா நதியை ஆய்வு செய்தபோது கிடைக்கப்பெற்ற செப்பேடுகள் இவ்வூரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. இவை சுமார் 6000
ஆண்டுகட்கும் முந்தியவை. பண்டை காலத்து பாண்டி நாட்டரசர்கள் இத்திருத்தலத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சல்ய
பாண்டியனுக்கு இறைவன் இங்கு காட்சிகொடுத்த வரலாற்றால் உணரலாம். பல பாண்டிய மன்னர்களால் கைங்கர்யம் செய்யப்பட்ட தலமாகும் இது.
பாண்டி நாட்டு மன்னர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு இவ்வூரைப் பற்றியும், இத்தலத்தைப் பற்றியும் கிடைக்கும்
தகவல்கள் ஒரு விடி விளக்காகவும், வழிகாட்டியாகவும் அமையும்.
திருத்தங்காலப்பன் என்றும் அருண கமலா மகா தேவி என்றும் அழகான தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் இப்பெருமானும் பிராட்டியும்.
சிலப்பதிகாரத்தில் வரும் “வார்த்திகன் கதை” இவ்வூரில் நிகழ்ந்ததாகும். எனவே சிலம்பும் இதைப் பற்றிப் பேசுகின்றது.
மைசூரின் நரசிம்மர் ஆலயத்தில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்புகள் உள்ளது.
பண்டைக் காலத்து பாண்டி நாட்டு வரலாற்றை ஆராயுங்கால் இது “கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்’ என்றே சொல்லப்படுகிறது.
ஆழ்வார்கள் திருத்தங்காலப்பன் என்றே அழைத்தனர். இங்குள்ள கல்வெட்டுகள் “பிரம்ம சுவாமி” யெனப்போற்றுகின்றன.
ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன் அநிருத்தன் உஷயை மணந்தது இந்த தலத்தில்தான்.
சந்திரகேது என்ற மன்னன் ஏகாதசி விரதம் மேற்கொண்டு துவாதசியில் விரதம் விடக் கூடிய நேரத்திற்கு (துவாதசி பாரணைக்கு முன்)
முன்பே எண்ணெய் தேய்த்துக் குளித்ததால் புலியாகப் பிறந்து பூவுலகெங்கிலும் அலைய இந்த ஷேத்திரம் வந்ததும் பூர்வ ஜென்ம நினைவு ஏற்பட்டு
இப்பகவானை பூஜித்துமோட்சம் பெற்ற ஸ்தலம்.
ஸ்ரீதேவி இத்தலத்தில் தவம் செய்து பகவானே உகந்து “எல்லா மஹிஷிகளையும் விட எனக்கு நீயே மிகவும் பிரியமானவள்” எனவே
இந்நகரத்திற்கு ஸ்ரீபுரம் என்றே பெயருண்டாகட்டும் என்று பகவானே கூறியதாக விஷ்ணு புராணங் கூறும்.
இங்குள்ள கருடாழ்வார் சர்ப்பத்துடனும் அம்ருதகலசத்துடனும் காணப்படுகிறார். தனக்கு எதிரியான சர்ப்பத்தை தன்னுடன் வைத்திருப்பதும்,
கருடாழ்வான் கலசம் ஏந்திய திருக்கோலத்திலிருப்பதும் வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத காட்சியாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையுங்கொண்டது.
——————
90. திருக்கூடல் என்னும் மதுரை
ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை,
சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் “திரிவேணி சங்கமம்” ஆயிற்று.
தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர். மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல்
எனவும் இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர். தொண்டை நாட்டில்பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும்
சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர். நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும்
சேருமிடம் முக்கூடல் ஆயிற்று. முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே.
இஃதே போன்று “கிருதமாலா” என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று
சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.-இக்கூடல் மாநகரில் கோவிந்தனின் சாநித்தியம் ஏற்பட்டதால் “திருக்கூடல்” ஆயிற்று.
இத்தலத்தைப் பற்றி, பிரம்மாண்ட புராணம் கூடற் புராணம் போன்றவற்றால் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. நான்கு யுகங்களிலும்
இத்தலம் இருந்ததாக புராண வரலாறு உரைக்கிறது.
கிரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி, விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றார் போல
ஒரு கோவிலைப் படைக்கச் சொன்னதும் இந்தக் கிருதமாலா நதியிடையே அஷ்டாங்க விமானத்துடன் இக்கோவிலைப் படைக்க எம்பெருமானும்
பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளினர். இதே யுகத்தில்தான் சிவன் உமையவளைக் கூட இத்தலத்தே தவமிருந்து
இப்பெருமானின் அருள்பெற்று உமையவளை மணம் புரிந்தார்.
திரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் ஒருவன் எல்லாத் தலங்கட்கும் சென்று வழிபட்டு வரும் சமயத்தில் இத்தலத்தின் மீது பறக்கும் போதும்
அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போகவே இவ்விடத்தே இறங்கி இப்பெருமானின் திருவழகில் ஈடுபட்டு நெடுநாள் தங்கி
பரமபதம் அடைந்தான்.
துவாபரயுகத்தில் விஷ்ணு பக்தியில் மிகச்சிறந்து விளங்கிய அம்பரிஷன் மன்னனும் இப்பெருமானை வழிப்பட்டு முக்தியடைந்தான்.
கலியுகத்தின் ஆரம்பத்தில் புருரவன் என்னும் பேரரசன் இந்தக் கூடலழகருக்குப் பணிவிடை பல செய்து வைகுந்தம் அடைந்தான். அவனது
மகன் இந்திரத்யுமனன் தந்தையைப் பின்பற்றியே தொண்டூழியம் செய்து உய்ந்து போனான். இவனது புத்திரனே மலயத்துவசப் பாண்டியன் என்பவன்.
இவனே வடநாட்டு வேந்தர்களை வென்று இமயமலைமீது மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையும் பதித்துத் திரும்பினான். இவனைத்தான்
பெரியாழ்வார்,-பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர்-என்கிறார்.
இதே கலியுகத்தில் நீண்ட வருடங்கட்குப் பிறகு “வல்லபதேவன்” என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த போது “முக்தியளிக்கும் தெய்வம்
எது’. என்று சந்தேகம் கொண்டு தன் தேசத்திலிருந்த பல மதத்தார்களையும் முக்தியளிக்கும் தெய்வத்தை நிருபணம் செய்யுமாறு கோரி அதற்குப் பரிசாக
பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்து யாருடைய மதம் முக்தியளிக்கும் என்று நிருபணம் செய்யப்படுகிறதோ அப்போது இந்தப் பொற்கிழி தானாகவே
அறுந்துவிழும் என்றும், இதனை யாவருக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்தான்.
இதைக் கேள்வியுற்ற ஒவ்வொரு மதாபிமானியும் தத்தம் மதமே சிறந்ததென்று வாதிட்டு வரலாயினர். அப்போது பாண்டியனின் அரசவைப் புரோகிதராக
இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் திருவில்லிபுத்தூரிலே இருக்கும் பெரியாழ்வாரை விழிமின். அவர் வந்து திருமாலே பரம்பொருள்,
வைணவமே முக்தியளிக்கும் மதம் என்று பரதத்துவ நிர்ணயம் செய்வாரென்று கூற அவ்வாறே பெரியாழ்வாரை அழைக்க அவரும் இக்கூடல் நகருக்கு
எழுந்தருளினார்.
சபையினுள் புகுந்த பெரியாழ்வார் வேதம், இதிகாசம், ஸ்மிருதிகள், மற்றும் புராணங்களிலிருந்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் காட்டி
திருமாலே பரம்பொருள் எனவும், வைணவமே முக்தியளிக்க வல்ல மதம் எனவும் நிருபணம் செய்து காட்ட பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது.
இதைக்கண்டு பேராச்சர்யமுற்ற பாண்டியன் பெரியாழ்வாரையும் பணிந்து போற்றி பலவாறாகப் புகழ்ந்து, யானை மீதேற்றித் தானும் பின் தொடர்ந்து
ஊர்வலமாய் அழைத்து வரலானான். இக்காட்சியைக் காண கூடலழகரே பிராட்டியோடு கருட வாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார்.
இக்காட்சியைக் கண்ட ஆழ்வார், பெருமாளே கலியுகத்தில் நீ இவ்விதம் காட்சி தருவதோ, நின் அழகுக்கு கண்ணேறு பட்டுவிடாதோ என்று நினைத்து
எம்பெருமானைப் பல்லாண்டு வாழ்க என்று பல்லாண்டு பாடினார்.
இந்த திவ்யதேசத்தில் விளைந்த இப்பல்லாண்டுதான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்குத் திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக
அமைந்துவிட்டது.
மூலவர்- கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்– மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி என்ற பெயர்களும் உண்டு.
தீர்த்தம்- கிருதமாலா, ஹேம புஷ்கரிணி
விமானம்–அட்டாங்க விமானம் (எண்கோண விமானம்)
காட்சி கண்டவர்கள்– பெரியாழ்வார், வல்லபர், பிருகு.
திருமால் “திரிவிக்ரம” அவதாரம் எடுக்கும் போது வளர்ந்த அவரது ஒரு பாதம் சத்திய லோகம் வரை செல்ல, பிரம்மன் அக்கமல பாதங்களை
தனது கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அலம்ப அதனின்றும் தெரித்த நீர்த்துளிகள் இவ்வையத்தில் வீழ்ந்து புனிதமாக்கியது. அதுவே இவ்வையத்தில்
(வைகை) ஆனது. இவ்வையை இருகூறு ஆகப் பிரிந்து மதுரை நகருக்கு மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு கிருதமால்
எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில் இப்பெருமாள் எழுந்தருளினார். இங்கு விழுந்ததைப் போலவே திருமாலிருஞ்சோலையில்
விழுந்த ஒரு நீர்த்துளிதான் சிலம்பாறு ஆயிற்று. வையை இருபெரும் பிரிவாய் பிரிந்து ஓடியமைக்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் ஏராளம்.
முன்னொரு யுகத்தில் சத்திய விரதன் என்னும் பாண்டியன் கூடல் அழகர்பால் மிக்க அன்புகொண்டு திருவாராதன தீர்த்தம் மட்டும் பருகி கடும்
விரதம் மேற்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் அந்தி வேளையில் ஜல தர்ப்பணம் செய்கையில் அவன் அஞ்சலி செய்யும் நீரில் மீனுருவமாக
(மச்சாவதாரமாய்) வந்த திருமால் அவனுக்கு அருமறைப் பொருளை உபதேசித்தார், என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. எனவேதான் பாண்டிய
மன்னர்கள் திருமாலிடம் பெரும் பக்தி பூண்டது மட்டுமன்றி தமது கொடிகளிலும் மீன் உருவத்தையே தங்கள் சின்னமாய் பொறிக்கலாயினர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான். ஆவணித்
திருவோண நன்னாளில் சிறப்பான பல வழிபாடுகள் செய்தான். அதனை “மாயோன் மேய ஓண நன்னாள்” என்று தமது மதுரைக் காஞ்சியில் மாங்குடி
மருதனார் கூறுகிறார்.
துவரைக் கோமான் என்ற பெயரில் கூடழலகரே சங்கப்புலவராக வீற்றிருந்தார் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கூடல் அழகர் என்ற
இச்சொல்லைத்தான் “வ்யூக சுந்தரராஜன்” என்று வடநூலார் மொழியாக்கஞ் செய்து கொண்டனர்.
சங்க காலத்தில் இப்பெருமானுக்கு “இருந்த வளமுடையார்’ என்ற திருநாமம் இருந்தது. கூடழலகர் இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்தல
மென்பதால் சிலப்பதிகார அரும்பதவுரைகாரரும் இருந்த வளமுடையார் என்றே இப்பெருமானுக்கு பெயர் சூட்டியுள்ளார்.
“வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”–பரிபாடலில்,
இருந்தையூர் அமர்ந்த செல்வா என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலமிருந்த பகுதி இருந்தையூர் என சங்க காலத்தில்
அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் தமிழ்ப் புலவர் இருந்தமையை நக்கீரனின் இறையனார் களவியல்
உரை பேசிப் போகிறது.
கி.பி. 1307இல் திருவாய் மொழிப் பிள்ளை என்ற ஆசிரியர் மதுரைக்கு அருகே உள்ள குந்தி நகரத்தில் (கொந்தகை) அவதரித்தார். இவர்
பாண்டி நாட்டின் முதலமைச்சராய் இருந்தவர். முஸ்லீம்களின் படையெடுப்பின் போது இத்தலத்திற்கு எவ்வித ஊரும் நேராவண்ணம் பாதுகாத்துவந்தவர்.
இவரது சீடரே மணவாள மாமுனிகளாவர்.
இராமானுஜரால் இத்தலம் பெரிதும் உவப்பாக பேசப்பட்டுள்ளது. பல்லாண்டு பாடப்பட்ட ஸ்தலமாதலால் இதனை பரமபதத்திற்கு ஈடாக அவர்
கருதினார்.
பாண்டிநாட்டுத் தலங்களில் பெருமாள் மாடி வீட்டில் குடிகொண்டுள்ளார் என்று கூறுவதற்கொப்ப இத்தலம் 3 அடுக்குகளாலானது.
முதல் அடுக்கில் (தளத்தில்) வீற்றிருந்த திருக்கோலத்தில் வீயூக சுந்தரராசன் என்ற பெயரில் அமர்ந்துள்ளார். 2வது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற
பெயரில் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளுகிறார். நவக்கிரகங்களும் இந்தக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இதன் மற்றோர்
சிறப்பம்சமாகும்.
ஒரு சமயம் பூமியெங்கும் பெருமழை பொழிய மழை நிற்பதற்கான அறிகுறிகள் யாதும் தென்படாத நிலையில் பக்தர்கள் மழை நிற்க
வேண்டுமென்று இப்பெருமானைப் பிரார்த்திக்க, பக்தர்கள் வேண்டுகோளை ஏற்ற பகவான் நான்கு மேகங்களை ஏவ, அவை மாடங்கள் போல் ஒன்று கூடி
மழையைத் தடுத்தமையால் இந்நகருக்கு “நான் மாடக்கூடல்” என்று பெயருண்டாயிற்று என்பர்.
வைகானஸ ஆகமம் என்ற ஆராதனைக் கிரம முறைக்கு உட்பட்டது இத்தலம்
சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்டு
(அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது. அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை. இவ்விமானத்தை 45 நாட்கள் தொடர்ந்து
தினமும் பதினொருமுறை சுற்றினால் எண்ணியகாரியம் கைகூடும் என்பது இங்கு அனுபவ உண்மையாகும்.
வில்லாண்ட வடவரையான் மணம் புணரஅட்டாங்க விமான மென்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார் பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருரவசு மலயகேதனன் முதலலோர் தொழப் புத்தூரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோளனடி பணிதல் செய்வாம்.–கூடலழகரை வேண்டிப் பேறு பெறலாம் என்பதை இந்தப் பாடலால் தெரியலாம்
வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும் உண்டு. விண்ணின்று வையம் நோக்கி வந்ததால் வையை என்றும் பெயர்
பெற்றதென்பர். இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை நகருக்கு மாலையிட்டது போல் வந்ததால் “கிருதமாலை” என்று இதனைப் புராணம் கூறும்
வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் – தார்
ஆகலால் கிருதமலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”
இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று சிலம்பு செப்புகிறது. சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி என்னும் இடைப்
பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார் என்பதை.
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்–இளங்கோவடிகள் பகர்கிறார்.
பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்தசபை இருந்த இடத்தை மெய்காட்டும் பொட்டல் என்பர். அதுவே இன்று மேங்காட்டுப்பொட்டலாயிற்று.
இதனால் இன்றும் மாழ்கழி மாதத்தில் பகற்பத்து முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்யப்பட்டது. இக்கோவிலில் உள்ள
கல்வெட்டுக்கள் 557,558,559, நாயக்க மன்னர்களின் திருப்பணியைப் பற்றித் தெரிவிக்கிறது.
கிருதாதி ஷீ நராராஜன் கலாவிச் சந்தி மஹராஜ் திராவிடே ஷீ சபூவிச தாம்ரபர்ணீ நதியத்ர “க்ருதமாலா பயஸ்வநீ”–ஸ்ரீ பாகவதம் 11வது அத்தியாயத்தில்
தாமிரபரணியாற்றங்கரையிலும் கிருதமாலா நதி தீரத்திலும் பெரும் பேருடன் விளங்கி-வைணவத்தை ஸ்தாபிக்கும் மஹான்கள் அவதரிக்கப்போகிறார்கள் என்று சொன்னாற்போல் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரும், கிருதமாலாவில் பெரியாழ்வாரும் பிரேவேசித்தார்கள்.
ஒரு வகையில் ஸ்ரீ ரங்கத்தைப் போல இத்திருத்தலம் இரண்டு நதிகளுக்கு இடைப்பட்டதாகும். அரங்கம் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும்
இடைப்பட்டது. கூடல் வையைக்கும் கிருதமாலாவிற்கும் இடைப்பட்டது.
ஆகமங்களில் கூறியுள்ள முறை வழுவாத அர்ச்சாரூபியே இங்கு எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ஆர்ஷிதம் என்ற வகைக்குட்பட்டதாகும்.
இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்
எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால் தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இங்கு இருக்கும் ஆண்டாள் திருச்சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். தம் தகப்பனாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாதலால்
தனது தனிப்பெருமானை மகள் நிலைநாட்டிக் கொள்வதில் தடை என்ன இருக்க முடியும்.
இந்த மதுரையில் ஒரு காலத்தில் வைணவம் தழைத்தோங்கி இருந்தது. இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள் இருந்ததைச்
சிலப்பதிகாரம் செப்புகிறது.-உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”
மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய திருமாலின் கோவிலும், மேழிவலவன் – பலராமனின் கோவிலுமிருந்த
வெள்ளை நகரம் – அதாவது வெண்மை நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல் போன்று) எந்நேரமும் சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும்
சிறப்பிக்கப்படுகிறது.
—————-
91. திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை
இத்தலத்தைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம் ஆக்னேய புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக புராணத்தில் ரிஷபாத்திரி
மகாத்மியும் என்னும் தலைப்பில் இத்தலம் பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது.
ரிஷபம் என்றால் காளை. இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும் பசுவினைப் போலவும் இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால்
இதற்கு ரிஷபாத்திரி என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.
மலய பர்வதம் எனப்படும் பொதியமலைக்கு வடக்கே 10 யோஜனை தூரத்திலும், காவிரி நதிக்குத் தெற்கே 6 யோஜனைத் தூரத்திலும், வராக
பர்வதம் எனப்படும் பழனிக்கு கிழக்கே 6 யோஜனை தூரத்திலும், அமைந்துள்ளதாக எல்லைகள் குறிப்பிட்ட இப்பகுதியை கூடலூர் நாடு என்றும்,
மாலிருங் குன்றம் என்றும், திருமால் சோலை யென்றும் வனகிரி யென்றும் தமிழ்மொழி பல பெயர்களைச் சூட்டுகின்றது. அதேபோல் இங்குள்ள உற்சவப்
பெருமாளுக்கும் அழகர் என்னும் வெகு அழகான சொல் வாய்த்துவிட்டது.
மகாவிஷ்ணுவிற்கும், அவரது இராம கிருஷ்ண அவதாரங்களுக்கும் அழகர் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை
தமிழிலும் பின்பற்றப் பட்டுள்ளது. மதுரையிலிருக்கும் எம்பெருமானுக்கு கூடலழகர் என்பதும் ஒரு திருநாமம். இவருக்கும் அழகர் கள்ளழகர் என்று திருநாமங்கள், குழலழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்பது ஆண்டாளின் மங்களாசாசனம். அச்சோ ஓரழகியவா என்பது திருமங்கை மன்னனின் மங்களாசாசனம். இக்கள்ளழகர் என்னும் சொல்லே வடமொழியில் சுந்தரராஜர் என்றாயிற்று. இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல் என்னும் சங்ககால நூல் பின்வருமாறு கூறுகிறது.
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்
நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை
ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம்
அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும்
மாயோ னெத்தலின் னிலைத்தே
சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே
இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே
பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது -பரி பாடல்
“தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்குவீராயின்”— என்று சிலப்பதிகாரமும் திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது.
எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன் இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும், உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம், கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில் எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது வரலாறு.
எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது ஒரு பாதத்தால் உலகளந்துவிட்டு மறு பாதத்தால் விண்ணளக்க அது பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்ல பிரம்மன் தனது கமண்டல நீரால் பாத கமலங்கட்கு அபிஷேகம் செய்ய அந்த கமண்டல நீர்
பெருமாளின் காலிலுள்ள பொன்சிலம்பில் பட்டுத் தெறித்து இவ்விடத்தே சிலம்பாறாகப் பெருகி இது எங்கே உற்பத்தியாகிறது என்று
சொல்லமுடியாதவாறு வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டு தேனைவிட இனிமையாக இனிக்கும் தன்மை பெற்று எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு
இலக்காகி நிற்கிறது.
இந்தச் சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும். இந்த தீர்த்தம் தவிர்த்து வேறு தீர்த்தங்களில் இங்குள்ள உற்சவருக்கு திருமஞ்சனம் செய்தால்
பெருமாள் கறுத்துவிடுவதால் இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த தீர்த்தமே எப்போதும் திருமஞ்சனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
எம்பெருமானின் திருமேனிக்கு தீர்த்தமாகி வயல்வெளிகளில் நெளியும் இந்த நூபுர கங்கையின் மகத்துவம் எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.
இதில் நீராடி விஷ்ணு சாமீப்யம் பெற்றவர் பலருண்டு. இந்த நதி இகபர சுகத்தைத் தருவதால் இந்த நதிக்கு “இஷ்டசித்தி” என்ற ஒரு பெயரும்
உண்டு. பகவானுடைய பாதார விந்தங்களிலிருந்து தோன்றி ஸம்ஸார பந்தத்தினால் உண்டான அழுக்கைப் போக்கடிக்கும் இந்நதிக்குப் “புண்யச்ருதி’.
என்றும், சகல ஜனங்களின் ஜனன மரண துக்கத்தைப் போக்கடிப்பதால் “பவஹாரி” என்றும் பல பெயர் உண்டு.
மூலவர்– ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு.
உற்சவர்- சுந்தரராஜன், கள்ளழகர் என்னும் திருநாமம். இங்கு உற்சவர் மிகவும். பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால் செய்யப்பட்டவர்.
இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சியால் செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர். சோலைமலைக்கரசர் என்றே திவ்ய
பிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதிஷர்” என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு உற்சவரும் பஞ்சாயுதங்களுடன் திகழ்கிறார்.
தீர்த்தம்- நூபுரகங்கை என்னும் சிலம்பாறு
ஸ்தலவிருட்சம்- வ்ருஷபகிரி. சந்தன விருட்சம்
விமானம்- ஸோம ஸந்த விமானம்
காட்சி கண்டவர்கள்– மலயத்வஜ பாண்டியன், எமன், தர்மதேவதை.
கிழக்கு மேற்காக 10 மைல் தூரமும், 1000 அடி உயரமும் உள்ள இம்மலை எண்ணற்ற பூம்பொழில்களையும், பல சுனைகளையும், அரிய
மூலிகைகளையும் நிறைந்த குளிர்ச்சியினையும் கொண்டு திகழ்கிறது. இந்த மலையில் ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேடன் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.
ஆயிரம் தலைகள் இருப்பதால் ஆயிரம் தடாகங்களும் ஆயிரம் பொழில்களும் அவன் வாழ்வதற்கு வேண்டுமல்லவா?
இம்மலையைத் திருமாலின் இருப்பிடமென்றும், இம்மலை நோக்கித் தொழுவதை திருமாலைத் தொழுவதற்குச் சமம் எனக் கருதி மக்கள் இம்மலை
நோக்கித் தொழுதனர் என்று பரிபாடல் என்னும் தமிழிலக்கியம் கூறுகிறது.
இங்கு பாயும் சிலம்பாறு என்னும் நூபுர கங்கையினை மிகவும் புண்ணியமான நதியென்று புராணங்கள் வர்ணிக்கிறது. சிலப்பதிகாரமும் இந்தச்
சிலம்பாற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறது. சிலம்பு செப்புகிறது.
திருமாலைத் தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான். இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம். அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன. புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள். பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும். இட்டசித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கைகூடும்.
துவாதசி தினத்தில் இந்த நூபுர கங்கையில் நீராடுபவர்கள் சகலவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக
ஐப்பசி மாதத்தின் வளர் பிறையில் வரக்கூடிய துவாதசியன்று நீராடக் கூடியவர்கள் விஷ்ணு ஸாயுஜ்யம் எனச் சொல்லப்படும் மோட்சத்தை
அடைந்து விஷ்ணுவுக்குச் சமீபத்தில் இருக்கும் நிலையினைப் பெறுகின்றார்கள்.
அலங்கும் மருவியார்த்து திமிழ் பிழியச் சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற் சோலையொடு தொடர்மலி மாலிருங் குன்றம்”-என்று சிலம்பாற்றைப் பற்றி பரிபாடல் கூறுகிறது.
சிலம்பாறுடை மாலிருஞ்சோலை என்கிறார் திருமங்கை யாழ்வார்,
கந்த புராணத்தில் “முக்திதரு பேரழகு திருமலை” என்று போற்றப்படுகிறது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் அழகிய மணவாளதாசர் இந்த
அழகரைப்பற்றி அழகர் அந்தாதி பாடியுள்ளார். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கவிகாலருந்திரர் என்னும் புலவர் ஒருதனிப் பிள்ளைத் தமிழ்
பாடியுள்ளார். வேம்பத்தூரைச் சேர்ந்த கவிகுஞ்சரம் அய்யர் என்பவர் அழகர் கலம்பகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
பல பட்டடை சொக்க நாதப் புலவர் “அழகர் கிள்ளை விடு தூது என்னும் இலக்கிய மணி மாலையை அழகருக்குச் சமர்ப்பித்துள்ளார். “கவிக் குஞ்ச
பாரதி” சோலைமலைக் குறவஞ்சி என்னும் நூலில் மலையழகையும், அங்குள்ள கோவில்களையும், இயற்கை காட்சிகளையும் வர்ணிக்கிறார். மற்றும் திவ்ய சூரி சரிதம், ஸ்ரீகம்ச சந்தேகம், போன்ற நூல்களும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன.
கோவில் ஒழுகு என்னும் நூலும் இத்தலம் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றது.
சந்திர வம்சத்தில் உதித்த புருரவசு என்னும் மன்னன் தென்தேசத்தில் மணலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு
புத்திரர்கள். மூத்தவனான இந்திரத்யுமனன் இத்தலத்தில் மகா விஷ்ணுவைக் குறித்து தவமிருந்து பராக்கிரமசாலியான ஒரு புத்திரனை பெற்றெடுத்தான்.
அவனுக்கு மலயத்வஜன் என்று பெயரிட்டான். இந்த மலயத்வஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வரும் போது தனது புஷ்ப விமானத்தில் இம்மலை
மீது பறந்துவர விமானம் பறக்க முடியாது தரையிறங்கியது. அங்கிருந்த முனிவர்கள் மூலம் இப்பெருமானின் கோபுரத்தை தாண்டி எந்த விமானமும்
பறக்க முடியாதென்ற உண்மையைக் கேள்விப்பட்டு, இப்பெருமான் பக்கலில் ஈடற்ற பக்தி கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற கைங்கரியங்களை செய்து மிகச் சிறந்த வைணவ மன்னனாகத் திகழ்ந்தான்.
திருவரங்கமும், திருமாலிருஞ் சோலையும், அநேக விஷயங்களில் ஒன்று படுகின்றன. இரண்டு கோவில்களும் கோட்டைகளும், உயர்ந்த
மதிற்சுவர்களும் வாய்க்கப் பெற்றவை. நெல் மணிகளைச் சேர்த்து வைக்கும் குதிர்கள் இரண்டு தலங்களிலுமுண்டு, இரண்டு கோவில்களிலும் உள்ள
பிரதான வாயில்கள் “ஆர்யன் வாசல்” என்றும் ஆர்ய படர் வாசல் என்றும் அழைக்கப்படுகின்றன. இரண்டு ஸ்தலங்களிலும்
பிரசாதங்கள் தயாரிப்பதும், விளக்கிடுவதும். தனி நெய்யிலேயே நடைபெறுகின்றன. திருவிழாக்களின் நடைமுறையும் இரண்டு கோவில்களில்
ஒத்துக் காணப்படுகின்றன. திருவரங்கத்தின் மதில்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார் திருமாலிருஞ் சோலை மதில்களை பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவரங்கன் இராமாணுஜருக்கு அருள் பாலித்தான். மாலிருஞ் சோலையான் கூரத்தாழ்வானுக்கு அருள் பாலித்தான். இருவரும் அழகில் விஞ்சியவர்கள். திருவரங்கன் சயன திருக்கோலத்தில் தனது பேரழகைக் காட்டினான். இவன் நின்ற திருக்கோலத்திலும், அமர்ந்த திருக்கோலத்திலும் காட்டினான். பெரியாழ்வாருடன் ஆண்டாளும் இப்பெருமானைக் குறித்துப் பாசுரம் பாடி இறுதியில் இவ்வழகரையே ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். அதாவது ஸ்ரீரெங்கநாதன் அழகராகவே வந்து ஆண்டாளை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். இதிலும் இவ்விரண்டு ஸ்தலங்களும் ஒன்று படுகின்றன. அமர்ந்த திருக் கோலத்தில் ஆண்டாள் இருப்பது இங்கு மட்டும்தான்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பாக “இடைக்காடர்” என்பவரால் இந்த அழகர் மலையில் மருத்துவ மன்றம் ஏற்படுத்தப்பட்டு சித்த
வைத்திய சாஸ்திரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள், உயர்ந்த மூலிகைகள், பற்றி சித்த வைத்திய நூல்கள் அரிய குறிப்புக்களைத் தருகிறது.
இங்குள்ள அர்த்த மண்டபத்தில் கல்லால் செய்யப்பட்ட மிக நுணுக்கம் வாய்ந்த இரண்டு ஜன்னல்கள் காண்போரை வியப்புறச் செய்யும்
தன்மை கொண்டதாகும். இங்குள்ள குலசேகராழ்வார், ஆண்டாள் ஆகிய இருவரின் செப்புத் திருமேனிகளும் நமது சிந்தை கவர்வதாகும். திரு
மந்திரத்தின் மூன்று பதம் போல் திகழும் மூன்றடுக்குகள் கொண்ட விமானம், அதில் அமைந்துள்ள சிற்பங்களும், மற்றும் பிரதான கோபுரத்தின் மேல்
அமைந்துள்ள இராமாயண, மகாபாரத கதை சிற்பங்களும் மிக்க கலையழகு வாய்ந்தவை. இத்தலத்தின் சோமஸந்த விமானத்தின் நிழல் அந்த
விமானத்திற்குள்ளேயே விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.
பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர். பாண்டியர்கட்கு இராமாயண காலத்தில் கபாடபுரம் தலைநகர்,
மகாபாரதம் காலத்தில் மணலூர் தலைநகர். சங்கம் மருவிய காலம் முதல் சமீப காலம் வரை மதுரை தலைநகரமாகவும் விளங்கியது. இப்பாண்டியர்களும்
பாரம்பர்யம் பாரம்பர்யமாய் பல்லவ மன்னர்களைப் போன்று விஷ்ணுவுக்குத் தொண்டு செய்தவர்கள் ஆவர். திருமாலின் அவதாரங்களுள் முதன்மையும்
முக்கியத்துவமும் பெற்றதான மச்சாவதாரத்தின் ஞாபகமாகவே பாண்டியர்கள் மீன் கொடியை தமது சின்னமாகத் தமது கொடியிலும் பொறித்தனர். பாண்டிய மன்னன் வல்லப தேவன் காலத்தில்தான் மதுரையில் பல்லாண்டு விளைந்தது.
பாண்டிய குல மன்னர்களுள் வாணர், அல்லது வானாதிராயர் என்ற பெயருடையோர் சுமார் 500 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி பீடத்தை
அலங்கரித்தனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர்கள் “திருமாலிருஞ் சோலை நின்றான்” மகாபலி, வானாதிராயன், உறங்கா வில்லிதாசன்
ஆகியோராவர். இவர்களின் பெயர்களே இவர்கள் வைணவ ஈடுபாட்டில் எத்துணையளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதைப் புலப்படுத்தும், இவர்களில்
சில வானதிராயர்கள் திருமாலிருஞ்சோலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.
ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை மாதப் பௌர்ணமி அன்று வர கூடிய சித்திரைத் திருவிழாவாகும்.
மதுரை மீனாட்சி கோவிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும், இவ்விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. திருமலை நாயக்கர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்னர் இவ்விருவிழாக்களும் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்றுவந்தன.
அப்போது அழகரின் சைத்ரோத்ஸவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோவில் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது. இதனால் தான் மாசி
மாதம் நடக்கும் திருவிழாவில் மீனாட்சிரதம் செல்லும் சாலைகள் (வீதிகள்) மாசி வீதிகள் என்றே அழைக்கப்பட்டன. திருமலை நாயக்க மன்னரின்
ஆட்சிக்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர் வழியாக மதுரை வந்து வைகையில் இறங்கி வண்டியூரில் தங்கி மீண்டும்
அழகர் மலையடைவது வழக்கம். திருமலை மன்னர் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்று சேர்த்தால் அது சிறப்பாக இருக்கும் என்று கருதியே
இரண்டையும் ஒன்று சேர்த்தார்.
இதற்கு கூறப்படும் கதை தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணம் (திருமணம்) காண எம்பெருமான் மதுரைக்கு எழுந்துவரும்
சமயம் எதிரில் பல மண்டபங்களில் தங்கி இளைப்பாறிவர (12 மைல் தொலைவல்லவா) இவர் வருவதையறிந்த மதுரை மக்கள் எதிர்கொண்டு
வரவேற்க (சேவிக்க) செல்லும் வழக்கமே எதிர் சேவையாயிற்று.
இந்நிகழ்ச்சிக்குப் புராதன ஆதாரமில்லை. சைவ வைணவ பேதம் நீங்கி ஒற்றுமை உண்டாகவே இப்படியொரு விழாவை உண்டாக்கினாரோ என்று
கருத வேண்டியுள்ளது.
அழகர் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கிச் செல்லும் போதுவைகையில் இறங்கும் முன் ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து வரும் சூடிக் கொடுத்த
ஆண்டாளின் மாலையைச் சூட்டிக் கொள்கிறார். இது ஆண்டு தோறும் தவறாது நடக்கும் நிகழ்ச்சி. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டுதோறும்
மாலையும் இங்கு வந்து சேர்கிறது.
வைகையிறங்கியதும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் இவரை எதிர்கொண்டழைப்பார். இந்த திருவிழாவிற்கு தமிழகமெங்குமிருந்து
லட்சோபலட்சம் பேர் குமுழுவதும், வேறெங்கும் இல்லாத நிகழ்ச்சியாகும்.
இந்நிகழ்ச்சியின் போது ராமராயர் மண்டபத்திற்கு அழகர் வந்துற்றதும் நடைபெறும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் பக்தர்கள் திரிஎடுத்துக்கொண்டு
வண்ண உடைகளில் தம்மை அலங்காரம் செய்துகொண்டு ஆடுவதும், கோவிந்தா, கோவிந்தாவென
விண்ணதிர கூவுவதும், செவிக்கும் கண்களுக்கும் பக்தி பூர்வமான ஞானத்திற்கும் ஒரு அரிய விருந்தாகும்.
அழகர் ஆற்றில் இறங்கும் போது என்னவிதமான பட்டாடை உடுத்தி கொண்டு வந்துள்ளார் என்று அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.
அழகர் அணிந்துவரும் பட்டாடைக்கும், அடுத்த ஆண்டு விளையப்போகும் விளைச்சலுக்கும் தொடர்புண்டு என்பதும் இங்கு உள்ள மக்களின் அசைக்க
முடியாத நம்பிக்கையாகும்.
9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா மதுரைத் திருவிழா எனவும், சித்திரைத் திருவிழாவெனவும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இதுதான்
மதுரையில் நடக்கும் பெரிய திருவிழாவாகும்.
இந்த அழகர் மலையில் உள்ள அழகிய மணவாளன் கிணற்றில்தான் முகம்மதியர் படையெடுப்பின் போது ரெங்கநாதனை இருமுறை கொணர்ந்து
பத்திரப்படுத்தி வைத்தனர் என்று கோயில் வரலாறு கூறுகிறது.
இங்கு இராமானுஜர் மடம் இருந்தது. ஒரு ஜீயர் சுவாமிகள் இம்மடத்திற்கு தலைமைப்பொறுப்பேற்று நடத்திவரும் வண்ணம் செயல்பட்டு
வந்தது. இராமானுஜருக்குப் பின்னர் பிரசித்தி பெற்ற மணவாள மாமுனிகள் இப்பீடத்தை அலங்கரித்தார். இதேபோன்று குலசேகரன் மடம்.
திருநாடுடையான் மடம், வானாதிராயன் மடம் என்ற மடங்கள் இருந்தமை பற்றியும் சாசனங்களால் அறிய முடிகிறது.
இம்மலையில் வேறுபல தெய்வங்களும் இருப்பதாக காலப்போக்கில் கூறப்படும் பழக்கம் உண்டாயினும் பௌத்தமும், ஜைனமும் அழகரே
முக்கியமான தெய்வமென்று ஒப்புக்கொண்டதாக திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் பாசுரிக்கிறார்.
இங்குள்ள 18ஆம்படி கருப்பண சுவாமி மிகவும் பிரசித்தி. மலையாளத்தரசன் ஒருவன் இவ்வழகரை அங்கு கொண்டு செல்ல
வேண்டுமென்று திருடிச் செல்ல முயன்றான் அது முடியாமல் போகவே 18 பேர்களை (மந்திர தந்திரங்களில் தேர்ச்சிபெற்ற பணிக்கர்கள்) இங்கு அனுப்பி எப்படியாவது அழகரை கொண்டு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டான்.
இவர்கள் வந்து அழகரை திருடிச் செல்ல எத்தனிக்கையில் இதையறிந்த இங்கிருந்த ஒரு சாஸ்திரி தமக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு
வந்து பதினெட்டுப்பேரையும் பிடித்துப் படிக்கொருவராக புதைத்து வைத்தனர்.
மலையாள மாந்த்ரீகர் அழகர் சன்னிதானத்தில் இருந்து மலையாளம் கொண்டு செல்ல மறைந்து இருந்து மந்த்ர பிரயோகம் செய்து கொண்டு
பலி பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சுத்த அன்னத்தை உண்டு வர
கண்ணுக்கு இனியான் என்னும் வைஷ்ணவர் ஒரு பலி பீட அன்னம் உடனே மறைந்து வருவதைக் கண்டு மிளகு சேர்த்தி படைக்க இவர் உண்டு கண்ண நீரை வழிய-அத்தைத்துடைக்க -கண்ணில் பூசின அஞ்சனம் கரைந்து இவர் இருப்பதைக் காட்டிக்கொடுக்க அவரைத் திருத்திப் பணி கொண்டருளினார்
இந்த அந்தணர் திரு மாலை ஆண்டான் முன்னோர் -20 பரம்பரைக்கு மேல் –
அழகரே திருமாலை ஆண்டானுக்கு சரம கைங்கர்யம் செய்ததால் இன்றும் அந்த நாளில் தொட்டித் திருமஞ்சனம் கண்டு அருளுகிறார்
இந்த பதினெட்டுப்பேரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக வந்த காவல் தெய்வம் ஒன்று இப்பெருமானின் பேரழகில் மயங்கி
இவரைக் கொண்டுபோக முடியாவிட்டாலும் பரவாயில்லை, இவருக்கு காவலாவது இருப்போம் என்றெண்ணி, அங்கிருந்த அர்ச்சகரையும், பிறரையும்
நோக்கி தான் இந்தப் பெருமாளின் வாசலையும், இந்தப் பதினெட்டுப் படிகளையும் காப்பதாக உறுதி கூறி அதற்கு அர்த்தஜாம பூஜாப் பிரசாதத்தைத்
தமக்கு அளிக்க வேண்டுமென்று கேட்க அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அந்தக் காவல் தெய்வமே பதினெட்டாம்படி
கருப்பணசுவாமியாவான். இவ்விதம் கருப்பணசுவாமி கள்ளழகருக்கு காவற்கடன் பூண்டான்.
இன்றும் பொய், சூது, குற்றம், களவு போன்றனபற்றி நடக்கும் பஞ்சாயத்துக்கள் இவன் முன்னிலையில் பேசப்படுகிறது. நிதர்சனமின்றி
தண்டிப்பவன் கருப்பணசுவாமி என்பது மக்கள் நம்பிக்கை.
இந்தப் பதினெட்டுப் படிகளைப் பற்றி ஆண்டாள் கூட வியந்ததாய்க் கூறுவர்.
இங்கு மேற்குப் பிரகாரத்தில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவர் கடுகடுப்பான முகத்துடன் மிகவும் கோபக் கனலுடன் உள்ளார்.
இவருடைய சிரசிலிருந்து கோபக்கினி மேலே கிளம்பிச் செல்வதாக ஐதீகம்.
இவரின் தலைக்கு மேலாக ஒரு சிறு தூவரம் உள்ளது. இந்தக் கோபக்கினியைத் தணிப்பதற்கு தினமும் எண்ணெய், பால், தயிர் இவற்றாலும் நூபுரகங்கையாலும் திருமஞ்சனம் உண்டு. இதற்காக 100 ஆண்டுகட்கு முன்பு பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை இன்றும் தவறாமல் நடந்துவருகிறது.இங்குள்ள சாளக்கிராம தரிசனமும், அதன் அபிஷேக தீர்த்தமும் பக்தர்கட்குத் தீர்த்தமாக்கப்படுவதுண்டு.
வைணவ மறுமலர்ச்சிக்கு தந்தையாக விளங்கிய கிருஷ்ண தேவராயர்தென்னாட்டு ஸ்தலங்களில் 90 ஸ்தலங்களில் கோபுரங்களை கட்டினார். இதில்
பெரும்பான்மையான கோபுரங்கள் கட்டி முடிக்காமலேயே நின்று விட்டன.
இவைகள் யாவும் ராயகோபுரம் என்றும், மொட்டைக் கோபுரம் என்றும் அழைக்கப்பட்டன. திருமாலிருஞ் சோலையில் ராயர் கோபுரம் உண்டு.
திருவரங்கத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருந்த ராயகோபுரத்தைத்தான் ஸ்ரீ அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் கட்டி முடித்தார்.
கிருஷ்ணதேவராயர்தான் முதன்முதலில் இத்தலத்திற்கு சமயநல்லூர். சாந்த மங்கலம் ஆகிய கிராமங்களைத் தானமாக வழங்கினார்.
கி.1757இல் ஹைதர் அலி இங்குள்ள கல்யாண மண்டபத்தை கொள்ளையிட்டு சுற்றியிருந்த மதில்களை சின்னாபின்னப் படுத்தினான்.
யூசுப்கான் என்னும் முகம்மதிய வீரன் ஹைதர் அலியை தோற்கடித்து திண்டுக்கல்லுக்கு விரட்டியபோது 1758இல் அவன் கள்ளழகர் கோவில்
சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து. பரிகாரமும் செய்து கொண்டான். 1801இல் இக்கோவில் ஆங்கில கலெக்டர்களின் பராமரிப்பின் கீழ் வந்தது.
கலெக்டர் புஹார்ஸ் என்பவர் இக்கோவிலின் சொத்துக்களைத் தொகுத்து நிர்வாகத்தை வரைமுறைப்படுத்தி பரிபாலித்தார்.
சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார்.ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசரும் அவரது
சீடர்களும் அங்கு வர இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம்நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. என்னை மதியாது
தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால் நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது (மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். தனது நிலையுணர்ந்த
சுதபன் முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்ததுர்வாசர் நீநாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள
தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று தவம் புரிக, எம்பெருமான் காட்சிகொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும்
என்றார். அதற்கு சுதப முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன். இப்பெருமானையே நான்
அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார்
துர்வாசர். இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள் வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு
எழுந்தருளினார். இந்த அழகர் தான் இன்றைய காட்டழகர் திருக்கோவிலாகும்
(இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாற்றில் விரிவாகக் காணலாம்)
காணப்பா வழுகணிச் சித்தருண்டு கமண்டல நீர் தொட்டியிலே வந்து பாயும்
தோனப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு துலங்கிடவே கன்னியொன்று அவர் பாலுண்டு
பூணப்பா வதனடியிற் றெப்பமுண்டு புகழான திரவியங்கள் அநேக முண்டு
மாணப்பா வழகர்மலை யென்று பேருமாச்சர்யம் நீலகிரிக் கதிகம் பாரே
பாரே னென்றேனம் மலையினுயரஞ் சென்றால் பதிவான கருப்பானுட கோவி லொன்று
நிரென்றேன் கோவிலுக்குத் தெற்கே சென்றால் நெடிய தொருபாறையொன்று சுனையொன்றுண்டு
பேரென்றேன் வனம் வொன்று பெருத்துக் காணு பெரிதாக குகையொன்று கதவுந் தோன்றும்
சேரென்றே குகையுள்ளே சென்றே யானால்ச் செயமான வையப்பா இத்திருப்பத்தானே”
என்று போகமுனிவர் தான் இயற்றிய ஜெனன சாகரம் என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார். இதில் சிலம்பு குறிக்கும் சிலம்பாற்றுடன் திரவியங்கள் கிடைப்பதையும், 18ம் படிக் கருப்பண்ணணையும் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொருபாடலில், “தானென்ற சப்தரிஷி ஷப்த கன்னி தற்பரமாம் திருமாலும் மதனினுதுண்டாம். -என்றும் குறிப்பிடுகின்றார்.
(போகரின் மருத்துவ, வானசாஸ்திர ஆன்மீக நூல்கள் யாவும் பெரும் ஆய்வு செய்ய வேண்டிய களஞ்சியங்களாகும்)
————
92. திருமோகூர்
பிர்ம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் பேசப்படுகிறது. மாத்ஸய புராணத்தில் 11 முதல் 14 வரையுள்ள 4 அத்தியாயங்களில்
பேசப்படுகிறது.
இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்று மேற்படி புராணங்கள் குறிக்கின்றன. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி, பாண்டிய தேசத்தில்
விருஷபகிரிக்கு (திருமாலிருஞ் சோலைக்கு) தென்திசையில் சுமார் ஒரு யோசனை தூரத்தில் அஸ்திகிரி எனவழைக்கப்படும் யானை மலை உள்ளது,
அதற்குச் சற்றே தென் கிழக்கில் ப்ரஹம்ம தீர்த்தம் (ஒரு காலத்தில் பிரம்மன் தவம் செய்து பயன்படுத்திய தடாகம்) என்ற தடாகமுள்ளது. இதனையும்
இதனைச் சூழ்ந்துள்ள இடத்தையும் உத்துங்கவனம் என்பர். அந்த பிரம்ம தீர்த்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியே மோஹன சேத்திரம்.
ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மஹா விஷ்ணுவைத் துதித்து சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டும் எனக் கேட்க, அவ்விதமே
அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்த திருமால், தேவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க ஆயத்தமானார்.
மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை பெரிய கயிறாகவுங் கொண்டு ஆயிரம் கைகளால் பாற்கடலைக்
கடைந்தனர். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன்முதலில் காளகூட விஷம் உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர் தோன்றினர்.
இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின. இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம் உண்டாயிற்று.
இதில் உச்சை சிரவசு என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும்இந்திரனை அடைந்தன. காமதேனுவை வசிட்டரும், அகல்யயைக் கௌதம
முனிவரும், விஷத்தையும் சந்திரனையும், பரமசிவனும் பெற்றார்கள், லட்சுமியும், கௌஸ்துப மணியும் மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன.
அமிர்தத்தை எடுக்க தேவர்கள் விரைந்ததும், அசுரர்களும் ஓடி வந்து தமக்கும் பங்கு கேட்டனர். அமிர்தம் வேண்டிநெடுங்காலம் மஹாவிஷ்ணுவைக்
குறித்து துதி செய்தது நாங்கள்தான். எங்கள் வேண்டுதலுக்கு இசைந்து தான்பெருமாள் பாற்கடல் கடைந்தார், எனவே உங்களுக்கு அமிர்தம்
கிடையாதென்றனர் தேவர்கள்.
உடனே தேவாசுர யுத்தம் தொடங்கி விட்டது, யுத்தத்தில் அசுரர்களின்கை ஓங்கிக் கொண்டே வந்ததும், தம்மைக் காப்பாற்றுமாறு தேவர்கள்
திருமாலைத் தொழ, தேவரட்சகனான திருமால் ஒரு அழகான மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தேவர்களையும்,
அசுரர்களையும் நோக்கி நீங்கள் இரண்டு வரிசைகளாக அமர்ந்து கொள்ளுங்கள் நான் அமிர்தத்தை உங்களுக்குப் பகிர்ந்து தருகிறேன் என்று
சொல்ல, தேவர்கள் ஒரு வரிசையிலும், அசுரர்கள் ஒரு வரிசையிலும் அமர்ந்தனர்.
அசுரர்கள் மோகினியின் அலங்காரத்திலேயே மனதைப் பறி கொடுத்தவர்களாயிருந்து கொண்டு சலன சித்தத்துடன் வீற்றிருக்க, மோகினி
அவதாரங்கொண்ட பெருமாள் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார்.
இதனைக் கண்ட ராகு, கேதுக்களிருவரும் தேவர்களின் வடிவங்கொண்டு தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டனர். இவர்களிருவரும்
சந்திரனாலும், சூரியனாலும் திருமாலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டனர்.
சினங்கொண்ட திருமால் தமது சக்ராயுதத்தால் அவ்விருவரின் சிரங்களைக் கொய்தார். இதனால், சூரீய, சந்திரர் மீது பகைமை பூண்ட ராகு கேதுக்கள்
பருவ காலங்களில், சூரிய சந்திரனைப் பிடித்து அவர்களது பலத்தை குறைக்கிறார்கள்.
பெருமாள் மோகினி அவதாரங்கொண்டு, திருப்பாற் கடலில் கடையப்பட்ட அமிர்தத்தை இவ்விடத்திலிருந்து தேவர்கட்கு வழங்கினமையால்
“மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில் மோஹினியூராகி, மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.
திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஒரு துளியானது இந்த சேத்திரத்தில் விழுந்ததாகவும், அவ்விடத்தில் தேவர்களால் ஒரு குளம்
வெட்டப்பட்டதென்றும், அந்த தீர்த்தத்திற்கு க்ஷீராப்தி தீர்த்தம் (திருப்பாற்கடல்) என்ற பெயருண்டாயிற்றென்றும் மாத்ஸய புராணம் கூறும்.
புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனை குறித்து இத்தலத்தில் தவமியற்றினார். பாற்கடல் கடையுங்கால் பெருமாள்
கொண்ட கோலத்தை இச் சேத்திரத்தில் காணவேண்டும் என்று கடுந்தவம் இயற்றினார். இவரின் தவத்தை மெச்சிய எம்பெருமான், புலஸ்தியர்
விரும்பியவாறே அவருக்கு காட்சிக் கொடுத்தது மட்டுமின்றி, புத்திரப்பேறு இல்லாதிருந்த புலஸ்தியருக்கு “விச்ருவர்” என்ற பெயர் கொண்ட புத்திரனை
விரைவில் பெறுவதற்கான வரத்தையும் அளித்தார்.
எனவேதான் இங்கு பாற்கடல் வண்ணனுக்கு திருப்பாற்கடல் நாதனாக காட்சி தரும்) தனிச் சந்நிதியுள்ளது.
மூலவர்-காளமேகப் பெருமாள் (நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணைமழைபொழிவதால் காளமேகப் பெருமாள் என்ற திருநாமம்
வரலாயிற்று) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயயுதங்களுடன் கூடின திருக்கோலம்) குடமாடு கூத்தன் என்றும் தயரதன் பெற்ற மரகதமணித்தடம் என்றும்
சுடர்கொள் ஜோதியென்றும் உற்சவ மூர்த்திக்கு பல திருநாமங்கள் உண்டு.
தாயார்– மோஹனவல்லி, திருமோகூர் வல்லி, மோகவல்லி என்ற திருநாமங்கள்.
விமானம்- கேதச விமானம்
தீர்த்தம்-சீராப்தி புஷ்கரணி (திருப்பாற்கடல் தீர்த்தம்) ப்ரஹம்ம தீர்த்தம் (பிரம்மனால் உண்டாக்கப்பட்டது) இதற்கு தெற்கே பாபநாச தீர்த்தமும்,
வடக்கே ஸ்வர்க்கத்வாரா தீர்த்தமும், மேற்கே நரகாசுர தீர்த்தமும், கிழக்கே பரமன் தீர்த்தமும் உண்டு.
காட்சி கண்டவர்கள்- பிரம்மா, இந்திரன், புலஸ்தியர், தேவர்கள்
பிரம்மன் இவ்விடத்தில் திருமாலைக் குறித்து தவம் செய்தார். இதனை பிரம்மாண்ட புராணம், மாத்ஸய புராணம் இரண்டும் ஸ்தல வரலாறு பற்றிக்
கூறும் விவரங்களுடன் கலந்து தெரிவிக்கின்றது.
நாராயணன் தமது உந்திக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்த அதே நேரத்தில் அவரது காதுகள் வழியாக, மது, கைடபன் என்ற இரண்டு
அரக்கர்கள் தோன்றினர். இவ்விருவரும் பிரம்மனருகே இருந்த வேதப் புத்தகங்களைத் திருடிக் கொண்டுபோய் பாதாள லோகத்தில் மறைத்து
வைத்துவிட்டனர்.
மஹா விஷ்ணு மத்ஸயவதாரம் (மச்ச-மீன்) எடுத்து பாதாளம் சென்று அவ்வேதப்புத்தகங்களை மீண்டும் எடுத்து (ஹயக்ரீவ அவதாரம்) பிரம்மனிடம்
சேர்ப்பித்தார்.
இதனையறிந்த அரக்கர்கள் இருவரும், எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து செல்லக் கூடிய தாமரைத் தண்டினைப் பிடித்து ஆட்டி
பிரம்மனுக்கு இடையூறு விளைவிக்கவே மிகவும் சினம்கொண்ட எம்பெருமான் அவ்விருவரையும் பிடித்து தனது தொடையிலடித்து முறித்துக் கடலில் தூக்கி
எறிந்தார். அவர்களின் வாயிலிருந்து மிகுதியான ரத்தத்தை தங்கள் உடம்பில் கக்கிக் கொண்டு சமுத்திரத்தில் வீழ்ந்ததால் சமுத்திர ஜலமும் கெட்டியானது.
அதற்கு முன் அவனியென்றழைக்கப்பட்டு வந்த இப்பூமி அவ்வரக்கர்களின் கொழுப்பினால் வியாபிக்கப்பட்டு மேடாகி “மேதிநீ’
என்றாயிற்று. இதனால்தான் பூமிக்கு மேதிநீ என்ற பெயரும் வந்த தென்றும் பெரியோர் சொல்வர். (பிர்ம்மாண்ட புராணம், மோஹன ஷேத்ர மஹாத்திமியம்
ஸ்லோகம் 26)
தனக்கு மீண்டும் வேத நூல்களை அளித்து அரக்கர்களை அழித்தமைக்கு நன்றி கூறும் முகத்தான் பிரம்மன் இவ்விடத்திற்கு வந்து ஒரு தடாகம் (பிரம்ம
தீர்த்தம்) உண்டாக்கி பெருமானுக்கு திருவாராதனக் கைங்கர்யத்தை தினந்தோறும் செய்து வர இறுதியில் எம்பெருமான் பிரத்தியட்சமானார்.
தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்கு இத்தலம் காரணமாக இருந்தமையால் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சிற்பிகளுடன் விஸ்வகர்மாவும்
சேர்ந்து இந்தக் கோவிலின் விமானத்தை (கேதச விமானத்தை) அமைத்தனர்.
மோகினி அவதாரத்துடன் இங்கு நின்று கொண்டிருந்தமஹாவிஷ்ணுவை, மோகினி என்றே நினைத்த சிவன், அவ்வழகில் மயங்கி,
உன்னழகால் கவரப்பட்ட நான் உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள எத்தனிக்கிறேன் என்று சொல்ல, மோகினியாய் நின்ற விஷ்ணு,
அப்படியேயாகட்டும் என்று சொல்லி தன்னையொத்த இன்னொரு மோகினியை அங்கே ச்ருஷ்டி செய்துவிட்டு மறைய, இது விஷ்ணுவின் மாயை என்று
தெளிந்த சிவபிரான் “விஷ்ணுவின் மாயையால் யார்தான் மயங்கார்” என்று தன்னை நொந்துகொண்டு ப்ரமத்தை அடைந்தார். அம்மாயையும் அப்போதே
மறைந்தது. (மாத்ஸ்ய புராணம் பதினோராம் அத்தியாயம் ஸ்லோகம் 54 1/2 – 611/2)
இங்குள்ள ஆதிசேடனுக்குத் தங்க கவசங்கள் சாத்தப்பட்டுள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும்.
சீராப்தி புஷ்கரணிக்கு கிழக்கில் ஒரு விருட்சம் (ஸ்தலமரம்) இருக்கிறது. அவ்விருட்சம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும்,
திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபராயுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் அரசமரமாகவும் திகழ்கிறதென்று பிரம்மாண்ட புராணம்
கூறுகிறது.
வேல் கொடித் துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர் -அகநானூற்றில் -251-சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.
—————
93. திருக்கோட்டியூர்
பிர்ம்மாண்ட புராணத்தில் 6 அத்தியாயங்களிலும், பிரம்ம கைவர்தத்தில் இரண்டு அத்தியாயங்களிலும் இத்தலம் பற்றிச் சிறப்பித்துப் பேசப்படுகிறது.
பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது
என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி, உலகெங்கும் நமோ ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து வந்தான். இரண்யனின்
இம்சை பொறுக்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன் வரங்கொடுத்த பிரம்மாதான் இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல
பிரம்மரோ ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால்தான் இரண்யாட்சகனுக்கு சரியான முடிவு கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள
பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர்.
இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது.
இரண்ய நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப் பேசலாம்
என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி நாதனாகக் காண வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார். எந்நேரமும் நாராயண
மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஒரு ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம் கூடிப் பேசுவதற்கு அதுவே
உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற தேவர்களும் மும்மூர்த்திகளும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளி, அம்முனிவரின் தவப்பயனாக
சீராப்திநாதனாக எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய சம்ஹாரத்தைப் பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும்
கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான் மட்டும் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன்.
மூம்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர்
ஆயிற்று. (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும்.
திருக்கோட்டியூர் அமைந்துள்ள இடத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் பின்வருமாறு கூறுகிறது.
“காவேரி நதிக்குத் தெற்குப் பக்கத்தில் விருஷபாசலத்திற்கு (அழகர் கோவிலுக்கு) கீழ்ப்புறத்தில் புண்ணியமாய் சக்தியையுடைய மணிமுத்தா
நதிக்கரையில் பரமாத்ம ஞானம் பிறந்த பாகவதர்கள் தங்குமிடமாய் நான்கு யோஜனை விஸ்தீரணமாய் (யோஜனை 10 மைல்) கதம்ப மஹரிஷியின்
ஆஸ்ரமம் அமைந்துள்ளது. (பிர்ம்மாண்ட புராணம், திருக்கோட்டியூர் க்ஷேத்ர மகிமை சுலோகம் 42, 43)
பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில் இருந்த சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி வசந்தமாலையின்
வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக் கூற, அவ்விதமே பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல, எங்கேயடா உன்
நாராயணன் என்று இரண்யன் கேட்க, தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான் என, பிரஹலாதன் சொல்ல, இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச்
சீறி வெகுண்டு தூண் புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய” தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று
நரசிம்மவதாரம் முடிவுற்றது.
இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன் இரண்யனைப் பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள விக்ரகங்களைத்
தனக்குத் தரவேண்டுமென்று பிரம்மனை வேண்ட, பிரம்மன், தேவசிற்பியான விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல, மூன்றடுக்குகள் கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை நிர்மாணித்து முடித்தனர்.
மூன்று தளங்களுடன் கூடிய இந்த விமானம் மூன்று பதங்களுடன் கூடின மூலமந்திரம் போன்ற தாயும் (ஓம் என ஒருபதம், நமோ என ஒருபதம்,
நாராயண என ஒரு பதம்) விளங்குகிறது.
இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரனான இந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட பேரழகு வாய்ந்த
ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீ சௌமிய நாராயணனை, கதம்ப மஹரிஷிக்கு கொடுக்க மிக்க சந்தோஷத்துடன் பெற்று அர்ச்சித்து வரலானார்.
கதம்பரிஷியை வாழ்த்தி வணங்கிவிட்டு அனைவரும் தேவருலகெய்தினர்.
மூலவர்-உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன்) புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் (பன்னக மருதுசாயி
என்றும் பெயர்)
உற்சவர்- சௌம்ய நாராயணன் நின்ற திருக்கோலம்.
தாயார்- திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்-தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)
விமானம்– அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்- பிரம்மா, தேவர்கள், கதம்ப முனி.
கதம்ப முனி 64 சதுர்யுகங்கள் இப்பூவுலகில் இருந்ததாக பிர்ம்மாண்ட புராணங்கூறுகிறது. எனவே இந்த திவ்யதேசத்தின் தொன்மை எழுத்தில்
அடங்கும் தன்மையதன்று.
மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும் திருக்கூடல்
என்னும் மதுரையிலும் ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது.
முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல்
நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி.
பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் 3வது
தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும், ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும்
திருப்பெயர்கள் உண்டாயிற்று.
அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும், தென்பகுதியை விஸ்வகர்மாவாகவும் அமைத்தனர். விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட பாகத்தில்
இரண்யனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில் இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நரசிம்ம மூர்த்திகள் காண்போரை பிரம்மிக்கச் செய்யும் தோற்றமுள்ளவை.
அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு
வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம்.
நகக்கிரகங்களில் சந்திரனின் மகன் புதன். இந்த புதனின் மைந்தன் புருரவன் என்பவன் மிகச்சிறந்த தர்மவானாக இருந்து செங்கோல் செலுத்தி
நாட்டையாண்டுவந்த காலத்தில் கங்கா ஸ்நானம் செய்யும் பொருட்டுதனது விமானத்திலேறி வரும்போது, இத்திவ்ய தேசத்தின் மேல் பறக்க முடியாதபடி
(அஷ்டாங்க விமானத்தின் சக்தியால்) தரையிறங்க நேர்ந்ததும் அதன்பின் இங்குள்ள பெருமானின் சக்தியறிந்து வழிபட்டு, இத்திருக்கோவிலைச் சுற்றி
அந்தணர்களும், பெரியோர்களும், வாழ்வதற்குரிய அழகிய நகரத்தை நிர்மாணித்துச் சென்றான். (இக்கதை பிரம்ம கைவர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.)
மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால் அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது இன்னொரு
சிறப்பாகும் (இச்சிலை இந்திரன் கொடுத்ததாக ஐதீகம்) வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.
வைணவ மத வளர்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு ஏற்றமுண்டோ அதற்குச் சமமான ஏற்றம் இந்த திருக்கோட்டியூருக்கு உண்டு. “திருமந்திரம்
விளைந்த திவ்ய தேசம்” என்ற திருப்பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்குவந்து திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஞானம் பெறமுயல, 17 முறையும் பல காரணங்களைக் கூறி
திருப்பியனுப்பி இறுதியாக 18வது முறை வந்தபோது இராமானுஜருக்குத் “திருமந்திர உபதேசம்” செய்வித்து இதனை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது.
அவ்வாறு குருவின் கட்டளையை மீறித் தெரிவித்தால் உமக்கு நரகம்தான் கிடைக்குமென்றார்.
சரி, என்று ஒப்புக்கொண்ட இராமானுஜர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி “எல்லீரும் வாருங்கள்,
திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உரக்கக் கூவி திருமந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்பதை எல்லோருக்கும் தெரிவித்தார்.
இதனைச் செவியுற்ற திருக்கோட்டியூர் நம்பி விரைந்து வந்து இராமானுஜரை நோக்கி “இராமானுஜரே திருமந்திரத்தைப் பிறருக்கு
உரைத்தால் உமக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதை மறந்து விட்டீரா” என்றார்.
அதற்கு இராமானுஜர் “தெரியும் சுவாமீ, இம்மந்திரத்தைப் பிறருக்குச் சொன்னால் எனக்கு நரகம் கிட்டுமென்றீர் பரவாயில்லை, அடியேன் ஒருவன்
நரகம் புகுந்தாலும் பரவாயில்லை. இம்மந்திரம் தெரிந்து உச்சரிக்கும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மோட்சம் கிட்டுமே என்றார்.
இதனைக் கேட்டு, ஒரு கணம் சிந்தித்த நம்பிகள் இராமானுஜரை பகவானின் அவதாரம் என்றே கருதி “நீர் தான் எம்பெருமானாரோ” என்று
கூறி கட்டித் தழுவிக் கொண்டார்.
அது முதல் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்னும் திருநாமம் உண்டாயிற்று. இராமானுஜருக்கு, உடையவர், ஸ்ரீபாஷ்யகாரர், திருப்பாவை
ஜீயர் என்னும் திருநாமங்களும் உண்டு.
எனவே வைஷ்ணவ சம்பிரதாய ஏற்றத்திற்கும் ஒரு மறுமலர்ச்சிக்கும் பாசறையாக திருக்கோட்டியூர் திகழ்ந்ததென்பதில் ஐயமில்லை.
அஷ்டாங்க விமானத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கொண்டுதான் இராமானுஜர் திருமந்திர ரகசிய அர்த்தத்தை வெளியிட்டார். இந்த 3வது
மாடியில் கோபுரத்தின் உச்சியில் ஊரைப் பார்த்தவண்ணம் இராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது.
திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரஸ்தலமான இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டியூர் நம்பியின் வம்சா வழியினர்
இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.
மற்றவிடத்து இல்லாதவாறு, இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்ற மூன்று திருநாமங்களுண்டு.
இங்குள்ள திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின் திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன்,அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.
திருக்கோட்டியூருக்கு தெற்கில் சுமார் 18 கீ.மி. தொலைவில் அமைந்துள்ள ஒக்கூர் என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலத்துப் பெண்பாற்
புலவர் “ஒக்கூர் மாசாத்தியார்” என்பார் இக்கோவிலைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் காணப்படுகிறது.
முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை) கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு காரணமாய்
இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.
பத்ரிகாச்ரமத்தைப் போல இத்தலம் பெருமைவாய்ந்ததெனவும், அதனால் இதனை தென்பத்ரியென்றும் கூறுவர் “நைமிசாரண்யத்தில்
செய்ததவப்பயனும், கங்கை கரையில் நேர்ந்த மரண பலமும் (ஆயுள் விருத்தி) குருச்சேத்திரத்தில் செய்த தனப்பிரயோஜனமும்” ஆகிய இம்மூன்றும்
திருக்கோட்டியூரைச் சேவிப்பதால் கிடைக்குமென்று ப்ரம்மாண்ட புராணத்தில் 47வது ஸ்லோகம் கூறுகிறது. கோஷ்டியூர் போகாதவன் குரங்காய்ப் போவான்
என்பதும் வைணவப் பழமொழி.
மகாமகக் கிணறு (சிம்மக்கிணறு) இங்கு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நீராடுவது மிகவும் விசேஷம்.
திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர் கோன் அபிமான
துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார்.
இவ்வூரின் செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை புரோகிதர் ஆவர்.
பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை
ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த
சிற்றரசன் முனைந்தபோது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள்
திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார்.பராசரபட்டர் ஆண்டாள்மீது அருளியுள்ள ‘நீளாதுங்க’ என்று தொடங்கும் வடமொழிச்சுலோகம் இவ்வூரில் இயற்றப்பெற்றதாகவும் அறிகின்றோம்.
செல்வ நம்பிகள் பெரியாழ்வாரைத் திருக்கோட்டியூருக்கு அழைத்து வந்தபொழுது ஸ்ரீஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன்
மிகவும் நேர்த்தியான ஆடல்பாடலால் உற்சவம் நடந்ததைக் கண்டு இதுதான் ஆயர்பாடி என்றும், வண்ண மாடங்கள் சூழ்…. திருக்கோட்டியூர் என்று
மங்களாசாசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தாலாட்டு, நீராட்டல், பூச்சூடல் போன்றனவும் இவருக்கே பாடினதாயும் கொள்வர்.
உரக மெல்லணையான் என்று பெரியாழ்வார் மூலவரையும் திருமாமகட் கினியான் என்று உற்சவரையும் மங்களாசாசனம் செய்கிறார்.
திருமங்கையாழ்வார், திருப்பிரிதி என்ற திவ்ய தேசத்தில் தொடங்கிய பதிகம் மூலமான அர்ச்சாவதார மங்களாசாசனத்தை, திருக்கோட்டியூரில் நிறைவு
செய்கிறார்,
செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு யாத்துள்ளார்.
சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர்.
————–
94. திருப்புல்லாணி
இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.
திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது இத்தலம், ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால் பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை
எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.
சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையடைந்து
(சேதுக்கரை) கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டும்மென்று அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் பிரயோபவேசமாக
(தர்ப்பைப் புல்லான நாணலில்) கிடந்த தலமாதலால் இத்தலம் வடமொழியில் தர்ப்பசயனம் எனவும், (இராமன் தர்ப்பசயன ராமன் எனவும்) தமிழில்
புல்லணை எனவும் பெயராயிற்று.
இராமபிரானே இத்தலத்து பெருமாளைப் பூஜித்தான். திருவரங்கனைப் போன்று இவரும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்தில்
உள்ள ஆதிஜெகநாதப் பெருமாளை இராமன் பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவண வதஞ்செய்ததாகவும் வரலாறு.
பூரியில் ஜெகந்நாத சேத்திரத்தில் அரூபியாக திகழும் இப்பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு கரங்களுடன் ஸ்வரூபராய்த் திகழ்கிறார்.
புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மஹரிஷிகளும் இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான்
வைகுண்டத்திலிருந்து இத்தலத்திற்கு வந்து அஸ்வத்தமாக (அரசமரமாக) பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே உபாஸகர்கள்
அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர்.
இத்தலத்தை வடமொழியில் புல்லாரண்யம் என்றும் தமிழில் புல்லணை என்றும் கூறுவர். வடமொழிச் சொல்லுக்கு மலர்ந்து மலர்கள் அடர்ந்த காடு
என்றும் முனிவர் தவஞ்செய்த காடு என்றும் இருபொருள் கொள்ளலாம்.
புல்லணை என்பதற்கு திருப்புல் – அதாவது தருப்பை அப்புல்லை அணைந்து ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை என்றும், தருப்பை
புற்கள் (நாணற்புதர்கள்) அடர்ந்தோங்கி வளருங்காடு என்றும் பொருள்படும்.
இராமன் இலங்கையினின்றும் திரும்புகையில் மீண்டும் இவ்விடத்திற்கு வந்தபோது பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி இங்கு பட்டாபிஷேகம் செய்து
கொண்டதால் பட்டாபிராமன் எனவும் திருநாமம் உண்டாயிற்று.
மூலவர்- ஆதிஜெகந்நாதன் (தெய்வச்சிலையார்) நின்ற திருக்கோலம். சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்– கல்யாணவல்லி, பத்மாஸனி என்ற இரண்டு தேவிமார்கள்.
உற்சவர்– கல்யாண ஜெகந்நாதன்
தீர்த்தம்-மொத்தம் 10 தீர்த்தங்கள். சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம் போன்றன
முக்கியமானவைகள்.
ஸ்தலவிருட்சம்- அஸ்வத்த விருட்சம் (அரசமரம்)
விமானம்– கல்யாண விமானம் (மொத்தம் 7 விமானங்கள்)
காட்சி கண்டவர்கள்– அச்வத்த நாராயணன், புல்லர், சமுத்திரராஜன்.
கடற்கடவுள் தன் பத்தினியோடு இராமனைச் சரணமடைய அவனுக்கு மோட்சமளித்த ஸ்தலம்.
புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர்எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம் பெற்றதால் இது ஒரு
சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச்
சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர் என்பவர் இவ்வூரினர்.
இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் தொன்மைப் புகழுக்கோர் சான்று.
இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்) மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில்
நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு
இல்லாதவர்கள் ஸேதுவில் நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை,
செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது புராண வரலாறு. இம்மரத்தை பக்திச் சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படு நன்மைகளைப் பற்றிக் கீழ்க் காணும் கவிதை விளக்குகிறது.
பெருவயிறு கண்டமாலை, உதரவலி அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி வளர் அரசு கண்ட பேரை அணுகாவே”
தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம் இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற
வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு
அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம்.
கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை
பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்”
தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும்.என்று சொல்லப்படுகிறது.
இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில்
வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார்.
இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத் தொடர்பு கொண்டது இத்தலம்.
இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர
காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக
அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது.
புல்லை, அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றி செய்திகள் தருகின்றன.
வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் ராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல் ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”-அகநானூற்றின் 70வது பாடல்
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.
இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு அவர்தம்
பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பை பெற்றதாகும்.
ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப் பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். “திரு அணை
காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக் கம்பர்.
மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”
எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. ஆம். விண்வெளியில்
உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம் புராணங்கூறுவது
யாதும் பொய்யே அல்லவென்றும், முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் நிரூபணம் செய்துள்ளது.
விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.
மூலவரின் திருநாமத்தை,
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற் கென் சிந்தை நோய் செப்புமினே – என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில் குறிப்பிடுகிறார்.
—————
95. திருமெய்யம்
பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப் பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த ஸம்பாஷணையாக
10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு பேசப்படுகிறது.
சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர் தவமிருந்து
நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை ஆண்டபுருரவச் சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார்.
ஆதிசேடன் தவம்-தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம் வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான். அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த வரத்தைப் பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம் தலைகளுடனும் பல மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5 தலைகளுடனும், ஒரு பாக நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும், ஒரு பனை மரத்தின் அளவிற்கு நீண்ட சரீரத்தையும் எடுத்துக் கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக் கொண்டு வந்து இவ்விடம் வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம்
பள்ளமானபடியால் அது ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்டஇடம் சத்திய சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய
புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ் செய்யலானான் ஆதிசேடன் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம் கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்) தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம்
கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன
நிவேதனம் செய்து ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை
மாற்றியது மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு இங்கும்சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க, அவ்வண்ணமே ஆகட்டும்
என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர்.
சந்திரன் தவம்-அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள் மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென
கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட ருத்ரன் அம்சமாக
துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும், பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம் அடைந்ததும் அத்திரி முனிவர்
மூவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்து தவஞ்செய்ய அனுப்பினார்.
துர்வாசர் கைலாய மலையினையும், தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும் அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து
தவம் செய்வதே எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின் அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து
திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில் சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார்.
இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர மண்டலத்திலும் தாங்கள் எழுந்தருளி நித்திய வாசம் செய்யவேண்டுமென சந்திரன்
வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண் தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யலானார்.
ஸத்திய மகரிஷியின் வரலாறு இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும்
நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம் இருந்தது. அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர் மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான் என்ன
வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு வரம் எதுவும் வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம் தாங்கள் எழுந்தருள
வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று ஒப்புக்கொண்டார். பின்னர் அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில் (இமயச்சாரலில்) பின்னொரு யுகத்தில்
யாம் இன்னொரு திருவிளையாடல் புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள் தவம் செய்ததற்கு பிறிதொரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம்
விருப்பப்படி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார் மஹாவிஷ்ணு.
இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை தாங்களே
திருவாய்மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே மஹாவிஷ்ணு சந்திரனும், அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த இந்தச் சேத்திரத்தில் (சத்திய
ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற அருளினார்.
தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும் மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு
ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும் பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத் தாய்,
தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப் பிரிவதும் மிகவும் கஷ்டமாயுள்ளது. என்றார். உடனே மஹாவிஷ்ணு அவரின் நன்றியறிதலை
மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும் அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு
வந்து சேர்ந்தன. புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும் பாறையே தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும்
ஆலமரமே தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம்,
கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும்
திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும்
துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும்
கலியுகத்தில் பநஸ என்ற பெயரில் அரச மரமாகவும் திகழ்கிறது.
ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள் வைகாசி சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம லக்கினத்தில் எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது வேண்டுமென்று கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு
திருமால் ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம் புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து
சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார்.
நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச் சக்கரவர்த்தி, இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்துவந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும் பேராற்றலும் பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு அடிக்கடி பிராட்டியால்
வேண்டப்பட்ட எம்பெருமான் தன் பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி தானும் வராக ரூபங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார்.
வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு பக்கமாகவும் உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து வயல்களை நாசம்
செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க முடியாமல் போக மதுரைக்கு மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம் முறையிட்டனர் (பிர்ம்மாண்ட
புராணம் ஸ்லோகம் 217)
மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர, இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று வராகக்
கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து கொண்டிருக்கையில் தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச் சக்கரவர்த்தியின் முன்பு வந்து
அவன் கைகளில் வைத்திருந்த வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு ஓட இவன் துரத்த இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம்
ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு முன்னால் ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன் வந்துவிட்டான், புருரவன்
வந்துவிட்டான் என்று இரண்டு முறை சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது.
சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும் புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க
அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு மோட்சம் கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3 ஆண்டுகள் இங்கு
தங்கியிருந்து இந்த ஆலயத்தை நல்லவிதத்தில் கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று
அருளி மறைந்தார்.
மூலவர்-ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம், அனந்த சயனத்தில் பள்ளிகொண்ட பெருமாள்.
உற்சவர்- மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு.
தாயார்- உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம்.
தீர்த்தம்- கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்
ஸ்தலவிருட்சம்- அரச மரம் (அஸ்வத்தம்)
விமானம்- ஸத்திய கிரி விமானம்
காட்சி கண்டவர்கள்- ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.
கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும்
சக்தியையும் இவ்விடத்திலிருந்துதான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர்.
சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு
உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால்
முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான்.
இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது.-இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது.
அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால்
அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும்.
மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும்.
ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும் தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான
இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும்.
தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல் கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன்
இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும்.
இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்க நாதனைவிட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல
தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.
ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க
வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றைவிட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள
ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜு வாலைகள் செல்வது போன்று செதுக்கப் பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –