நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின்- தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் — தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

43. திருக்கச்சி அத்திகிரி (காஞ்சிபுரம்)—

ஒரு சமயம் தேவியர்களின் துணையின்றி மும்மூர்த்திகள் தனித்து யாகம் செய்து வெற்றி காண முடியாதென்று விவாதம் ஏற்பட பிரம்மன் நான் செய்து
காட்டுகின்றேனென்று உலக நன்மைக்காக ஒரு யாகத்தை ஆரம்பிக்க, சரஸ்வதி அந்த யாகத்தை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.

பிரம்மனின் யாகத்தைக் கெடுக்க சரஸ்வதி எத்தனையோ முயற்சிகள் செய்தாள். அக்னி ரூபத்தில் அசுரர்கள் சரஸ்வதி அனுப்பினாள். பிரம்மனுக்காக
அந்த அக்னியை கையில் தீபம் போல் ஏந்தி தீபப் பிரகாசமாக எம்பெருமான் நின்றார். இதனால் சினங்கொண்ட சரஸ்வதி கொடூரமான யானைகளைப்
படைத்தனுப்பி யாகத்தை அழிக்க எத்தனித்தாள். எம்பெருமான் நரசிம்ம ரூபனாகி யானைகளை வென்று விரட்டியடித்தார்.

பின்னர் சரஸ்வதி அரக்கர் கூட்டங்களைப் படைத்து அனுப்பினாள். அவ்வரக்கர்களைத் துவம்சித்து எம்பெருமான் ரத்தப் பிரவாளராக நின்றார்.
இந்நிலையில் யாகத்தைக் கலைக்க 8 கைகளைக் கொண்ட காளியைப் படைத்தனுப்பினாள். திருமால் 8 கைகள் கொண்ட அட்டபுயக்கரத்தானாகத்
தோன்றி காளியின் கொட்டத்தை அடக்கினார். இவ்வாறு தனது முயற்சிகள் எல்லாம் வீணாவதைக் கண்ட சரஸ்வதி தானே ஒரு வேகமுள்ள நதியாக
வேகவதி என்ற பெயரில் பிரளயம் போல் வர எம்பெருமான் அந்த நதிக்கு எதிரே அணையாகப் படுத்துத் தடுத்தார்.

அணையாக வந்துபடுத்து சரஸ்வதியின் வெள்ளப் பெருக்கைத் தடுத்த பிறகு பிரம்மன் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்ய திருமால் அக்னி ஜு
வாலையாக காட்சிக் கொடுத்து பிரம்மனின் யாகத்தைத் தொடர அருள்புரிந்தார்.
(அக்னி ஜ்வாலையாக இவ்விடத்து எம்பெருமான் எழுந்தருளியமையை இங்குள்ள உற்சவரின் திருமுகத்தில் அக்னியின் வடுக்கள் போன்று ஜ்வாலை
வீசக்கூடிய புள்ளிகளை இன்றும் காணலாம்.)
இவ்வாறு தனது இடைஞ்சல்கள் எல்லாம் தவிடுபொடியாவதைக் கண்ட சரஸ்வதி நாணமுற்று ஓய்ந்தாள்.

இதன்பின் பிரம்மா யாகத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் யாகத்தில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தை வழக்கப்படித் தமக்குத் தரவேண்டுமென்று
தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட சுவர்க்கம் முதலான பலனைக் கோரி செய்யும் யாகங்களில் தான் உங்களுக்குப் பங்குண்டு. இது உலக நன்மைக்காகச்
செய்யும் யாகம். இது லோக சிருஷ்டியாகும். எனவே இதில் யக்ஞ அங்கமாக  உங்கள் பெயர்கள் கூறினாலும், உங்களிடத்திலும் அதேபோல் உலகத்தின் சகல ஜீவன்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் நாராயணனுக்கே அவிர்ப்பாகம் செல்லும். அவரே இதனை ஏற்றுக்கொள்வார் என்று சொல்லி யாகத்தைத்
தொடர்ந்தார். யாகம் முடியும் தருவாயில் பேரொளி பொருந்திய விமானம் ஒன்று அதில் தோன்றியது. கோடிப்பிறவியில் செய்த புண்ணியத்தால் தரிசிக்கத்
தகுந்த அந்த விமானம் புண்யகோடி விமானமாகும். அதில் சங்கு சக்ர கதா பாணியாக எம்பெருமான் தோன்றி அவிர்ப்பாகத்தையேற்றுக் கொள்ள யாகம்
முடிவுற்றது.

யாகத்தில் பங்கு கொண்ட தேவர்களுட்பட்ட அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுத்ததால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம்
உண்டாயிற்று. ஸ்ரீமந்நாராயணன் புண்ணிய கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்னாள் ஒரு சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும்.

இதேபோல் எம்பெருமான் இங்கு நித்யவாசம் செய்து வேண்டியவர்க்கு வேண்டிய வரமெல்லாம் கொடுக்க வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க
எம்பெருமானும் அதற்கிசைந்தார். உடன் தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது.
அதனால் இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் வெள்ளைநிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

க. என்றால் பிரம்மன் என்றும் அஞ்சிரம் என்றால் பூஜிக்கப்படல் என்பதாலும் கஞ்சிரம் என்றாகி கஞ்சிதபுரியாகி காலப்போக்கில் மருவி
காஞ்சிபுரமாயிற்றென்பர்.

இத்தலத்தை
கிரேதா யுகத்தில் பிரம்மனும்
திரேதாயுகத்தில் கஜேந்திரனும்
துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும்
கலியுகத்தில் அனந்தனும் பூஜித்து உய்ந்தனர்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு புத்திரர்கள் இருந்தனர். இவர்கள் கொங்கண தேசத்தில் கௌதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவ்விருவரும் விஷ்ணு பூசைக்கு பழம், புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஒரு நாள் தீர்த்தத்தை மூடாமல் வைக்க அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. அதைக் காணாது அப்படியே கொணர்ந்து குருவிடம் கொடுக்க அதிலிருந்து பல்லி தாவியோடியது. இதைக் கண்டு சினந்த முனிவர் இவ்விருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார். தமது தவறுணர்ந்த சீடர்கள் மன்னிப்பு வேண்டி பிராயச் சித்தம் கோரினார்.

இந்திரன் (கஜேந்திரனாக) யானையாகி வரதனைத் தரிசிக்க இச் சன்னதியில் நுழைவான். அப்போது உங்கள் சாபமகலும் என்று தெரிவிக்க
இருவரும் இத்தலத்தின் பிரகாரத்தில் பல்லிகளாக வந்தமர்ந்தனர். பின்பு இந்திரன் இத் தலத்தில் நுழைந்ததும்
இவர்களின் சாபமகன்று தங்கள் பூர்வ ஜென்ம உடம்பைப் பெற்று வரதனைச் சேவித்து முக்தியடைந்தனர்.

இந்நிகழ்வைக் குறிக்குமாற்றான் தற்போது இத்தலத்தின் பிரகாரத்தில் 24வது படிக்கெதிரில் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான இரண்டு பல்லிகள்
செய்து அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டு வரதராஜப் பெருமாளைச் சேவித்தால் நோயினின்று விடுபடுகின்றனர் என்று ஐதீஹம்.
(அயோத்தி மன்னன் சகரன் என்பவனின் மகனும் மனைவியுமே சாபத்தினால் பல்லிகளாக மாறி இவ்விதம் ஆனர் என்றும் ஒரு கதையுண்டு)

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மாடி போன்ற மலைகளாலானது இத்தலம். வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது.
இங்கு அழகிய சிங்கர் (நரசிம்ம அவதார திருக்கோலத்தில்) அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஹரித்ரா தேவியே இங்கு பிராட்டியாக
எழுந்தருளியுள்ளார். குஹ விமானம் பிருஹஸ்பதிக்கு காட்சி.
2வது மாடியான மேல்மாடி வரதராஜப் பெருமாள் சன்னதியான அத்திகிரியாகும். தற்போதுள்ள இவ்வமைப்பு பிற்காலத்தில் ஒரு பக்தரால்
கட்டப்பட்டதாகும். இவர் முதலில் சிவபக்தனாக இருந்து புத்திரப்பேறு வேண்டி சிவபக்தி செய்ய புத்திரப்பேறு கிட்டாது போகவே விஷ்ணு பூஜை செய்ய
புத்திரப்பேறு உண்டாக எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமை பூண்டு இத்தலத்தின் தற்போதைய அமைப்பை அமைத்தார் என்றும் கூறுவர்.

மூலவர்-ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்று பல திருநாமங்கள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-பெருந்தேவித் தாயார் மஹாதேவி தனிக்கோவில்
தீர்த்தம்–வேகவதி நதி, அனந்த ஸரஸ், சேஷ தீர்த்தம், வராஹ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,
விமானம்–புண்யகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்–பிரம்மா, பிருகு, நாரதர் ஆகியோர். கஜேந்திரன் (இந்திரன்) சரஸ்வதி மற்றும் பலர்.

விஷ்ணு காஞ்சியென்றும், அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும், ஸ்தய விரத சேஷத்ரமென்றும் பெயர்கொண்ட இத்தலம் வைணவ சம்பிரதாயத்தில்  தமிழகத்தில் ஒரு தலைமை இடமாகத் திகழ்கிறது.

இங்குள்ள குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்திமரத்தாலான சிலையை 40 வருடங்கட்கு ஒரு முறை வெளியே எடுத்து
பூஜை செய்து 10 தினங்கட்குப் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.

சித்ரா பௌர்ணமியன்று இப்போதும் ஒவ்வொர் ஆண்டும் இரவு 12 மணிக்கு மேல் பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக
ஐதீஹம். இந்த தினத்தில் எம்பெருமானுக்குப் பிரசாதம் செய்து வைத்துவிட்டு பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள். ஒரு நாழிகை (24 நிமிஷம்) கழித்து
எடுத்துப் பார்த்தால் அதில் தூய நறுமணம் கமழும் இக்காட்சி ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் வைபவமாகும்.

சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்கட்கு சூரியன் மறையும்போது சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள் மூலவரின் திருமுகத்தில்
விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களும் கண்டு களிக்கக் கூடிய இவ்வரிய காட்சி மற்றெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததாகும்.

ஆடி மாதத்தில் வளர்பிறையில் தசமியன்றும் தேய்பிறையில் ஏகாதசியன்றும் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேடனுக்கு இங்கு
சிறப்பான வழிபாடு நடக்கிறது. இந்த இரண்டு தினங்களிலும் ஆதிசேடனே இங்கு வந்து வழிபடுவதாக ஐதீஹம்.

ஒரு சமயம் தேவசபையில் குழுமியிருந்த முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கிடையே இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற சர்ச்சை
ஏற்பட்டு இரு சாரராக அணி பிரிந்து தத்தம் வாதமே உயர்ந்ததென வாதிட்டு இறுதியில் தமது குலகுருவான பிரகஸ்பதியான வியாழ பகவானை அணுகினர்.

பிரகஸ்பதியான வியாழன், ‘தாழிருஞ்சடைகள் தாங்கி தாங்கருந் தவமேற்கொண்டு, பூழி வெங்கானம்புக்கு, புண்ணிய துறைகளாடும்’ ஞான
வாழ்க்கையான துறவறமே சிறந்ததென்று தீர்ப்பளித்தார். இல்லறமே சிறந்ததென்ற அணிக்குத் தலைமை தாங்கிய இந்திரன் பிரகஸ்பதியின்
தீர்ப்பைக் கேட்டு சினந்து, பசி, ஏழ்மை, இல்லறம் என்பதையென்னவென்று உணராத பிரகஸ்பதி ஒரு ஏழை அந்தணனாகப் பிறக்கக் கடவது என்று சபிக்க
பல குழந்தைகட்குத் தந்தையாய் ஒரு ஏழை அந்தணனாகப் பிறந்து வாழலானார் பிரகஸ்பதி.

ஒரு நாள் குழந்தைகளோடு உணவு உட்கொள்ளும் வேளையில் ஒரு நாய் ஒன்று உள்ளே புக, அதை அடித்து விரட்டுமாறு தெரிவிக்க மனிதனைப்
போலவே பேசிய நாய் நான் போன பிறவியில் என்னைச் சரணடைந்தவளைக் காக்க தவறியதால் நாயாக அலைகின்றேன். இன்று உன்னைச் சரணடைய
நீயும் காக்க தவறினாய். நீயும் நாயாவாய் என்று சபிக்க, இது என்ன தர்ம சங்கடம், உள்ள கஷ்டம் போதாதென்று நாய் ஜென்மம் வேறா என்றெண்ணி
நொந்த பிரகஸ்பதி இதற்குப் பரிகாரம் காண பரத்வாஜரை அணுகினார்.

அதற்கவர் ஸ்தய வரத ஷேத்ரம் சென்று வரதனைச் சேவித்தால் தோஷமகலும் என்றார். இந்நிலையில் தேவசபையில் குலகுருவாகவும்,
அரசப்புரோகிதராகவும் விளங்கிய பிரகஸ்பதியில்லாமல் சபைகளையிழந்து இருந்தது. இது கண்ட தேவர்கள் இந்திரனிடம் முறையிட இந்திரன்
பிரம்மனிடம் சென்றார்.
பிரம்மன், நான் சித்ரா பௌர்ணமியன்று வரதனை தரிசிக்கச் செல்லும்போது நீயும் வந்து வரதனை வேண்டிக்கொள் என்று தெரிவிக்க
மூவரும் ஒன்று சேர கிழப்பிராமணராக வந்த பிரகஸ்பதி தனது நிலையை விவரித்து வரதன் முன் கண்ணீர் மல்க நிற்க, எம்பெருமான் பிரகஸ்பதிக்கு
சுயரூபம் கொடுத்து அமருலகு புகச் செய்தார்.
108 வைணவத்திருத்தலங்களில் கோயில் என்று திருவரங்கத்தையும், திருமலை என்று திருவேங்கடத்தையும், பெருமாள் கோயில் என்று
இத்தலத்தையும் குறிப்பர். இக்கோவிலின் முதல் பிரகாரத்திற்கு சேனையர் கோன் திருமுற்றமென்றும், மூன்றாவது பிரகாரத்திற்கு ஆளவந்தார்
பிரகாரமென்றும், நான்காவது பிரகாரத்திற்கு ஆழ்வார் திருவீதியெனவும், 5வது பிரகாரத்திற்கு மாடவீதி எனவும் பெயர். இந்த பிரகாரத்திற்குள்தான்
ஸ்ரீஆளவந்தார் இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம் முதல்வனிவன் என்றருளினார்.

நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் அயர்வறு அமரர்கள் அதிபதி என்றது இப்பெருமாளைத்தான் என்று பெரியோர்கள் பொருள்
கூறுவர். இதற்கொப்பவே வேறெங்குமில்லாதவாறு இத்தலத்தில் உள்ள நம்மாழ்வார் துயரறு சுடர் அடிதொழுதொழு என் மனனே என்று
கூறுவதுபோல் ஞான முத்திரையின்றி தம் நெஞ்சில் கை வைத்து எழுந்தருளியுள்ளார்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாகக் கருடசேவை மிகப் பிரஸித்தி பெற்றதாகும்.
இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இப்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அதாவது பெருமாளுக்கு வியர்க்கும் என்று (வேர்க்கும்)
எப்போதும் பெரிய விசிறி கொண்டு விசிறிக் கொண்டேயிருப்பாராம். இந்த திருக்கச்சி நம்பியைக் காஞ்சி பூர்ணர் என்றும் மொழிவர்.

1. அஹம் மேவபரம்தத்வம்–2. தர்சனம் பேத ஏவ ச–3. உபாயேஷ் பரப்த்திய ஸ்யாத்–4. அந்திமஸ்மருதி வர்ஜனம்-
5. தேக வஸானே முக்தி ஸ்யாத் -6. பூர்ணசச்யார்ய ஸமாச்ரய–என்பன ப்ரஸித்த ஆறு வார்த்தைகள்

வழி தவறித் திகைத்து அலைந்த இராமானுஜருக்கு இத்திவ்ய தேசத்து பெருமாளும் பிராட்டியுமே, ஒரு வேடுவ வேட்டுவச்சி வேடம் பூண்டு, ஒரே
இரவில் இராமானுஜரைக் காஞ்சிக்கருகில் இருந்த சாலைக்கிணறு ஓரமாகக் கொணர்ந்து விடுத்து தாக சாந்திக்குத் தண்ணீர் கேட்க இராமானுஜர் தீர்த்தம்
கொண்டு வந்து கொடுக்க வந்தபோது அவ்விருவரும் மறைய சற்றே திரும்பி பார்த்த ராமானுஜர் சற்றுத் தூரத்தில் புண்யகோடி விமானத்தையும், காஞ்சி
மாநகர் நோக்கிச் செல்லும் மக்களையும் கண்டு பெரிதும் வியந்து தம் பொருட்டு எம்பெருமான் வேடுவ வடிவங்கொண்டு வந்ததை யெண்ணி
கண்ணீர் உகுத்தவராய் வைய மாளிகை அடைந்தார்.

நடந்த வ்ருத்தாந்தங்களைத் தம் தாயாரிடம் கூறி, அவரது அறிவுரையின்படி திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்று அன்றுமுதல்
சாலைக் கிணற்றிலிருந்து வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொணர்ந்து கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டார்.

இன்றளவும் இக்கிணற்றின் தீர்த்தமே கச்சி வரதனுக்கு திருமஞ்சன தீர்த்தமாக எடுத்து வரப்படுகிறது. பெருமாள் இராமானுஜரை மீட்டுக்
கொணர்ந்த நாள் இன்றும் உற்சவதினமாகக் கொண்டாடப்படுகிறது.

பூ மண்டபம், போக மண்டபம், தியாக மண்டபம் என்று மூன்று திவ்ய தேசங்கள் வர்ணிக்கப்படுகின்றன. பூ மண்டபம் என்பது திருவேங்கடம்
‘சிந்து பூ மகிழ் திருவேங்கடம்’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. போக மண்டபம் என்பது திருவரங்கம். எம்பெருமான் திருவரங்கத்தில் பக்தர்கட்கு
போக்யமாய் இருப்பதாலும், சயன திருக்கோலத்தில் ஒரு வகையான போக மண்டபம் ஆயிற்று ஸ்ரீரங்கம். தியாக மண்டபம் எனப்படுவது இத்தலமாகும்.
தனக்கே திருமஞ்சன தீர்த்தம் கொணரும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்த இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு ஆளவந்தார்க்கு அடுத்தபடியாக வைணவத்
தலைமையேற்க தியாகம் செய்து அனுப்பி வைத்ததால் இத்தலத்திற்கு தியாக மண்டபம் என்றும் பெயருண்டாயிற்று.

ஸ்ரீஇராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களையிழந்த கூரத்தாழ்வான் அவர் நியமனப்படியே வரதராஜ ஸ்தவம் அருளிச் செய்து
இழந்த தம் கண்களைப் பெற்றது இத்தலத்தில் தான்.
இப்பெருமானைத் திருக்கச்சி நம்பிகள் தேவராஜஷ்டகம் என்னும் ஸ்தோத்திரத்தாலும், வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத் என்னும்
ஸ்தோத்திரத்தாலும், மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் தேவராஜ ஸ்துதி செய்துள்ளன

முஸ்லீம்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோது இங்குள்ள உற்சவரை கி.பி. 1688இல் திருச்சி உடையார் பாளையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
1710இல் ஆத்தான் ஜீயர் தம் சீடர் ராஜா தோடர்மாலின் உதவியுடன் இப்பெருமாளை மீண்டும் காஞ்சிக்கே கொணர்ந்தார். இதனால் இக்கோவிலின்
நிர்வாகம் ஆத்தான் ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை விவரிக்கும் கல்வெட்டு ஒன்று தாயார் சன்னதியின் முகப்பிலேயே உள்ளது. இங்கு ராஜா தோடர்மாலுக்கும் சிலை உண்டு. இப்பெருமானை மீட்டுக் கொணர்ந்த தினமான பங்குனி உத்திரட்டாதி தினம் உடையார்பாளைய உத்ஸவம் என்ற
பெயராலேயே இன்றும் நடைபெறுகிறது.

எம்பெருமான் இங்கு புண்யகோடி விமானத்துடன் எழுந்தருளியதால் இங்கு செய்யப்படும் ஒரு புண்ணியமானது கோடியாக விருத்தியடைகிறது
என்பது ஐதீஹம்.

தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்’–பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர்,

பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
திருளாசை சிந்தித்திராதே – அருளாளன்
கச்சித் திருப்பதியாம் அத்தியூர்க் கண்ணன்தாள்
இச்சித் திருப்பதி யாமென்று— பிள்ளைப் பெருமாளையங்கார்.

—————–

44. அட்டபுயக்கரம்

பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த எம்பெருமான் பலவாறாக உதவி, பாதுகாத்துக் கொண்டிருக்க மேலும் அதனை நிலைகுலைக்க எண்ணிய
நாமகள் பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களையும் அனுப்பினாள். காளியின் கொட்டத்தை அடக்கி உடன்வந்த
அரக்கர் கூட்டத்தை முறியடிக்க எம்பெருமான் 8 கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து காளியை அடக்கினார். அதனால் அட்டபுயக்கரத்தோன்
ஆனார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8 கைகளுடன் நிற்கிறார். அட்டபுயகரத்தோனாக ஆகும் முன்பே (இவ்விடத்தில்
ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு)

மூலவர்-ஆதிகேசவப் பெருமாள். கஜேந்திரவரதன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
(ஆழ்வார் மங்களாசாசனத்திற்குப் பிறகு அஷ்ட புயக்கரத்தான் என்பதே பிரபல்யம்)
தாயார்–அலர்மேல் மங்கை, பத்மாஸனி
தீர்த்தம்- கஜேந்திர புஷ்கரணி
விமானம்– ககநாக்ருதி, சக்ராக்ருதி விமானமென்றும், வ்யோமாகர விமானமென்றும் பெயர்களுண்டு.
காட்சி கண்டவர்கள்- கஜேந்திரன், திருமங்கையாழ்வார்.

எட்டுக்கரங்களுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பது 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான். வலப்புறம் உள்ள 4 கரங்களில் சக்கரம்,
வாள், மலர், அம்பு, ஆகியவற்றையும் இடப்புறம் உள்ள நான்கு கரங்களில் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் போன்றவற்றைப் பெற்றுத் திகழ்கிறார்.

சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியின் கொட்டத்தை இவ்விடத்தே அடக்கினார். இதற்கு ஆதாரம் தரத்தக்க வகையில்
இச்சன்னதியின் அருகே கருங்காளியம்மன் கோவிலொன்றுள்ளது.

தொண்டை மண்டலத்து திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது.

மகாசந்தன் என்னும் முனிவர் மஹாவிஷ்ணுவைக் குறித்துதவமிருந்தார். இவர் இந்திரனுக்கு எதிரி. தனது இந்திர பதவியைப்
பெறுவதற்காகத்தான் இம்முனிவர் தவமிருக்கிறார் போலும் என்று நினைத்த இந்திரன் தேவலோக மாதர்களை (அப்ஸரஸ்களை) அனுப்ப முனிவர்
அவர்களை வெறுத்தொதுக்கினார். எனவே இந்திரன் எப்படியும் இம்முனிவரின் தவத்தைக் கலைக்க வேண்டுமென்றெண்ணி யானை வடிவங்கொண்டு
தன்னோடு பல யானைக் கூட்டங்களை அழைத்துக் கொண்டு இம்முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு வந்து காமப்புணர்ச்சி கொண்டு நிற்க இதைக் கண்ட
முனிவர் சித்தம் கலங்கி தவவலிமையிழந்து தாமும் ஒரு யானையாக மாறினார். தம் நிலை மறந்து பெண்யானைகளுடன் இன்புற்று திரிந்தார். இவ்வாறே
நாட்கள் பல நகர்ந்து மாதங்கள் உருண்டோடி வருடங்களுக்குள் நுழைந்தன. யானைக்கூட்டங்களுடனே காடு மலையெங்கும் சுற்றித் திரிந்தார். இவ்விதம்
அலையும்போது ஒரு நாள் சாளக்கிராமத்தில் யானைக் கூட்டங்கள் நீராடின. அப்போது யானை வடிவிலிருந்த முனிவனுக்கு தீர்த்த மகிமையால் தனது
முன்பிறவி ஞானம் வரலாயிற்று. தம் நிலையுணர்ந்த அந்தக் களிறு மிகவும் வாடி களிறினக் கூட்டங்களைத் துறந்து தனித்தேயோடி வனாந்திரங்களில்
விழுந்து புரண்டு தனது கஜ உடலுடனே பல திவ்ய தேசங்கட்கும் சென்று இறைவனை வணங்கி வரும்போது ஒருநாள் கோதாவரியில் நீராட அங்கிருந்த
மிருகண்டு முனிவரிடம் யானை தனது பாஷையில் தன் நிலைமையினைச் சொல்லி விமோச்சனம் வேண்ட அவர் சகல பாவத்தையும் தீர்க்கும்
காஞ்சிபுரத்திற்கு செல் எனச் சொல்ல காஞ்சிபுரம் வந்த இந்தக் களிறு (முனிவர்) வரதராஜப்பெருமாளுக்கு தினந்தோறும் மலர்பறித்துச் சமர்ப்பித்து
கைங்கர்யம் செய்து வந்தது. இவ்வித மிருக்கையில் ஒருநாள் மலர் பறிக்க வரும் வழியில் அட்ட புயக்கரத்தோனைக் கண்டு மயங்கி அன்று
முதற்கொண்டு அவனுக்கே தனது மலர்க் கைங்கர்யத்தைச் செய்துகொண்டே வந்தது. இவ்விதம் 14000 மலர்கள் பறித்துச் சமர்ப்பித்ததாகக் கூறுவர்.
இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு சமயம் மழை இல்லாமல் போக மலர் பறிக்க நெடுந்தொலைவு சென்ற யானை ஒரு குளத்தில் இறங்கி அங்கிருந்த மலர்களை பறிக்க, அதிலிருந்த முதலை யானையின்
காலை கவ்வியது (ஆதிமூலமே என்று அன்று ஒரு கஜேந்திரன் அழைத்தது போலவே இந்த யானையும் திருமாலைக் கூவி அழைக்க அட்டபுயக்கரத்தோன்
வந்து சக்கராயுதத்தால், முதலையின் தலையைக் கொய்ய, யானைக்கு சாபம் நீங்கியது.
யானையாகிய மகாசந்தன் தனக்கு மோட்சம் வேண்டுமென பெருமாளைக் கேட்க அவரும் இம்முனிவருக்கு மோட்சம் நல்கினார்.

காளியுடன் வரப்பெற்ற நக்கரன் என்னும் அரக்கனைக் கொல்வதற்காகவே எம்பெருமான் 8 கரங்களுடன் வடிவெடுத்ததாகவும் கூறுவர்.

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண்முடி மாலை வயிரமேகன் தன்வலிதன் புகழ் சூழ்ந்த கச்சி அட்ட புயகரத்து ஆதி தன்னை’-வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக் கட்டினான் என்றும் அறியமுடிகிறது.

இங்கு வந்த சரபம் ஒன்று அட்டபுயக்கரத்தானைக் கண்டு அஞ்சி சரண் அடைய அச்சரபத்தை நோக்கிய எம்பெருமான் இச்சன்னதியில் வாயு
மூலையில் உள்ளயாக சாலையைக் காக்குமாறு சொல்ல சரபேசன் என்ற பெயரில் இன்றும் காவல் காப்பதாக ஐதீஹம்.
இக்கோவிலில் அமைந்துள்ள வராகப் பெருமாள் சன்னதி சக்கரவர்த்தி திருமகள் சன்னதி, புஷ்பவல்லித் தாயார் சன்னதி, ஆண்டாள்
சன்னதி ஆகியன காண்பதற்கும் பேரழகு பொருந்தியனவாகும்.

என்றுள் துயருழக்கு மேன்புகாள் நீங்களிளங்
கன்று போல் துள்ளிக் களித்திரீர், அன்று நட
மிட்ட புயங்கத்திரு சரணமே சரணென்று
அட்ட புயங்கத்திற் காளாய்-– என்று கண்ணனாய் காண்கிறார்.-பிள்ளைப் பெருமாளையங்கார்

வண் புகழ் நாரணன் திண் கழல் சேர்மின்’-அதேபோபயம் கதோபவதி’

——————

45. திருத்தண்கா (தூப்புல், காஞ்சி)

பிரம்மன் தொடர்ந்து யாகம் நடத்தினான். (மும்மூர்த்திகள் தமது துணைவியரின்றி தொடர்ந்து செயல்பட முடியும் என்பதைக் காட்ட பிரம்மன்
தனது தேவியின் துணையின்றி இவ்விடத்தில் யாகத்தை துவக்கினான்)
பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன
செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச்
செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள்.
திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரம்மன், வழக்கம்போல் உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார்.
உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை
தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சத்தின் மடியில் வைத்தார்

ஜோதிமயமான வெளிச்சத்தில் தனது யாகத்தை தொடர்ந்தான் பிரம்மன்.யாக சாலையை மேலும் விரிவு படுத்த எண்ணிய பிரம்மன் விஸ்வகர்மாவை
நினைக்க தேவர்கள் புடைசூழ வந்த விஸ்வகர்மா யாக சாலையை மிக நுட்பம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தான். விஸ்வகர்மாவுடன்தேவர்கள் வந்ததைக் கண்ட அசுரர்கள் தாமும் கூட்டம் கூட்டமாய் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால் பிரம்மனோ தேவர்களை
மட்டும் எதிர்கொண்டழைத்து அசுரர்களை கண்டும் காணாமல் இருந்ததால் அவர்கள் மிகவும் சினங்கொண்டனர். யாக சாலையை விட்டு வெளியேறிய
அவர்கள் பிராமண வடிவம் கொண்டு நேராக சரஸ்வதிதேவியின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.

பத்னி இல்லாமல் யாகம் செய்ய பிரம்மன் தனது மமதையால் தங்களைப் பழித்துச் செயல்படுவது போலல்லவா இது இருக்கிறது என்று பலவிதமாகக்
கூறி வாணியின் கோபத்தைக் கிளற மிகவும் சினந்த சரஸ்வதி நானும்பலவிதமான முயற்சிகள் செய்துவிட்டேன். என்ன செய்யலாமென நீங்கள்
கூறுங்கள் என்று கேட்க, அதற்கவர்கள் கொடிய அரக்கன் ஒருவனை அக்னி பிழம்பாய் படைத்து அனுப்பினால் அவன்யாக குண்டலியின் வேள்வித் தீயைத்
தன்னுள் கிரஹித்துக் கொண்டு வந்துவிடுவான் என்று சொல்ல தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி.
மாய நலன் என்பது அவனது பெயர்.
கொடிய அக்கினி ரூபத்தில் யாகத்தை அழிக்க வந்த அந்த அக்கினி ரூப அசுரனை அவ்விடத்தில் பிரவேசித்த பெருமாள் தனது கையில் தீபம் போல்
ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார்.
இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் தீபப் பிரகாசர் ஆனார். தூய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ஆனார்.

மூலவர்–தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர், என்னும் திருநாமமும் உண்டு. மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– மரகதவல்லி
தீர்த்தம்– சரஸ்வதி தீர்த்தம்
விமானம்– ஸ்ரீகர விமானம்
காட்சி கண்டவர்கள்– சரஸ்வதி

தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால்
திருத்தண்கா என்றாயிற்று. பாண்டிநாட்டுத் திருப்பதியில் திருத்தங்கல் என்பது ஒன்றுண்டு. அது வேறு இது வேறு.

மாயநலன் என்னும் அசுரனைப் படைத்தனுப்பி அவன் எவ்விதம் யாகத் தீயைக் கிரஹித்துப் போகிறான் என்பதைக் காண சரஸ்வதி பின்
தொடர மாயநலனை தீபம் போல் பெருமாள் ஏந்த, அந்த திருக்கோலத்தில் பெருமாள் சரஸ்வதி தேவிக்கு இங்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.
பின்னால் பிரம்மனின் யாகத்தை தடுக்க முடியாமல் போய் தனது தவறுணர்ந்து பிரம்மனோடு ஐக்கியமாகிய பின்பு இவ்விடத்தில் சரஸ்வதி
தேவியே தீர்த்தமாக அமைந்து எம்பெருமான் தன் கரத்தில் அக்னியை ஏந்திய கடூரம் நீங்க குளிர்ந்த தீர்த்தமாக மாறி இவ்விடத்தில் நிலை பெற்றாள்
என்றும் கூறுவர்.

இச்சன்னதியில் தேசிகன் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி தேசிகனின்
திருமேனியை அவரது குமாரர் நயினவராதாச்சாரியார் தான் பிரதிஷ்டைசெய்தார். ஸ்ரீஸ்வாமி தேசிகர் தனது வாழ்நாளெல்லாம் வைத்து வழிபட்ட
திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர் தற்போது இச்சன்னதியில்தான் உள்ளார். தேசிகன் சன்னதி தெற்கு நோக்கி
அமைந்ததாகும்.

ஆட்பட்டேன் ஐம் பொறியால் ஆசைப்பட்டே னறிவும்
கோட்பட்டு நாளும் குறை பட்டேன் – சேட்பட்ட
வண்காவை வண்துவரை வைத்து விளக்கொளிக்குத்
தண்காவைச் சேர்ந்தான் தனக்கு. –பிள்ளைப் பெருமாளய்யங்கார்

————-

46. திருவேளுக்கை

வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். நரசிம்ம மூர்த்தி இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி
காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது.

எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த காலை ஹஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து
வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரங்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்தது அசுரக்
கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது
என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.
காமாஷிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.

மூலவர்-அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்றும் திருப்பெயர்கள் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்-வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார்.
தீர்த்தம்- கனக ஸரஸ், ஹேம சரஸ்
விமானம்- கனக விமானம்
காட்சி கண்டவர்கள்- பிருகு முனிவர்

மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்

புராண வரலாற்றின்படி பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.
தற்போது நரசிம்மனாகயோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
இம்மாற்றத்திற்கான காரணம் அறியுமாறில்லை.

எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ்
பெற்றிருந்ததெனச் சொல்லலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலம் என்றாலே அது ஊரகம், பாடகம், வெஃகா தான் என்று
சொல்லாமல் சொல்வதைப் போலவும், எல்லோராலும் மூன்று திருக்கோலங்கட்கு இந்த மூன்று ஸ்தலங்கள்தான் என்று அறியப்பட்டதாயும்,
காஞ்சி மண்ணிற்கே தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்றுத் தந்த ஸ்தலங்களாக விளங்குகின்றது என உணர முடிகிறது.
108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திற்கு வேங்கடமலையானையும், அமர்ந்த திருக்கோலத்திற்கு பத்ரிநாதனையும்,
கிடந்த திருக்கோலத்திற்கு திருவரங்கத்து அரங்கனையும் தனித்துவம் படுத்தலாமென்றிருந்தாலும் ஆழ்வார்கள், நின்ற, கிடந்த, இருந்த
திருக்கோலங்கட்கு காஞ்சியில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களையே குறித்து மங்களாசாசனம் செய்துள்ளனர் -அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலமெனில் அவைகள் ஊரகம், பாடகம், வெஃகாதான் பிறவன்று என்றும் உரைக்கலாம்

————-

47. திருநீரகம்

மூலவர்-இல்லை. திருநாமம் நீரகத்தான்
உற்சவர்- ஜெகதீஸ்வரப்பெருமாள். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- நிலமங்கை வல்லி
தீர்த்தம்– அக்ரூர தீர்த்தம்
விமானம்- ஜெகதீஸ்வர விமானம்
காட்சி கண்டவர்கள்– அக்ரூரர்

திருஊரகத் தலத்தின் 2வது பிரகாரத்தில் உள்ள அழகு பொருந்திய 16 கால் மண்டபத்தில் நீரகத்தான் சன்னதி அமைந்துள்ளது.

ஆலத்திலை சேர்ந்து ஆழியுலகை உட்புகுந்த
காலத்தில் எவ்வகை நீ காட்டினாய் – ஞாலத்துள்
நீரகத்தாய் நின்னடியேன் நெஞ்சகத்தாய் நீண்மறையின்
வேரகத்தாய் வேதியர்க்கு மீண்டு.–பிள்ளைப் பெருமாளையங்கார்,

பிரபஞ்ச பிரளயத்தின் போது ஆலமரத்திலை மேல் ஒரு பாலகனாய் கண் வளர்ந்த திருக்கோலத்தை
இத்தலத்தில் பிள்ளைப் பெருமாளையங்காருக்கு எம்பெருமான் காட்டியருளினார்

மறைகட்கு வேர்போன்று திகழும் எம்பெருமானை மார்க்கண்டேயருக்கு ஆலத்திலை திருக்கோலத்தைக் காட்டிக் கொடுத்தவனை, நீரகத்தானை என்
நெஞ்சகத்தின்பால் பெற்றேனே என்கிறார்.
வேதங்களுக்கு வேராகத் திகழ்ந்து, என் நெஞ்சகத்தே வாழும் நீரகத்தானே நீ, மார்க்கண்டேயனுக்கு எவ்விதம் பிரளயகால ஆலத்திலை
திருக்கோலத்தைக் காட்டிக் கொடுக்கிறாயோ, என்று பேராச்சர்யப்படுகிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

இப்பாடலும் எம்பெருமானின் நீரகத்தன்மைக்கு சான்று பகர்கிறது.

————

48. திருப்பாடகம்

பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில் இருந்த  திருக்கோலம் திருப்பாடகத்தில், கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில்.

பாடு – மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம்

பாரத யுத்தம் முடிந்த பிறகு வெகுகாலத்திற்குப் பின் ஜெனமேஜெய மகராசன் வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக்கேட்டு
வரும்போது ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் இருந்து தூது சென்றவிடத்து எடுத்த பிரம்மாண்ட திருக்கோலத்தை மாபாராதம் கை செய்த மாவுருவத்தை
தானும் சேவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்குபாயம் கேட்க சத்தியவிரத ஷேத்ரமான காஞ்சிக்கு சென்று அஸ்வமேதயாகம் செய்து
யாகத்தின் முடிவில் நீ விரும்பிய திருக்கோலத்தைக் காணலாமென்று முனிவர்கள் கூற மன்னன் அவ்விதமே செய்தான்.

யாகத்தின் திரண்ட பயனாக பிரம்மாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னருக்கும் ஹாரித முனிவர்க்கும் காட்சி கொடுத்தார்
என்பது வரலாறு.

மூலவர்–பாண்டவ தூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். மிகப் பிரம்மாண்டமான திருமேனி.
தாயார்- ருக்மணி சத்தியபாமா
விமானம்- பத்ர விமானம், வேத கோடி விமானம்
தீர்த்தம்- மத்ஸய தீர்த்தம்
காட்சி கண்டவர்கள்- ஜெனமேஜெய மகராசன், ஹாரித முனி

அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை
ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட
வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.
கர்ப்பக் கிரஹத்தின் அமைப்பை உற்று நோக்கினால் நிலவறையின் மொத்தப்பகுதியை அப்படியே பெயர்த்து தலைக்கு மேல் குவித்து வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் தோன்றுகிறது. மிக சிறிய அளவில் இச்சன்னதி அமைந்திருந்தாலும்,
கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது
மட்டுமன்றி பேராச்சர்யம் தருவதுமாகும்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஜீவித்திருந்தது இந்த திவ்ய தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.

தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரம்மனிந்திரனா செய்கை – உவந்து
திருப்பாடக மருவுங் செங்கண் மால் தன் மார்
பிருப்பாடக உரையாலே–பிள்ளைப் பெருமாளையங்கார்

பக்தர்களின் கைங்கர்யத்திற்காகவே சென்ற பாண்டவ தூதன் என்ற தனது கைங்கர்ய திருநாமத்தையே கொண்டு இத்தலத்தில் இருப்பது ஒரு தனிப்பெருஞ் சிறப்பாகும்.

—————

49. திரு நிலாத்திங்கள் துண்டம்

ஒரு சமயம் பார்வதிக்கும், பரமசிவனுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டு பார்வதி இவ்விடத்தில் ஒரு மாமரத்தின் கீழ் தவம் செய்ய அத்தவத்தை
சோதிக்க எண்ணி சிவன் மாமரத்தை நெற்றிக் கண்ணால் தீ ஜ்வாலைகளால் எரிக்க பார்வதி திருமாலைப் பிரார்த்தித்தாள். சங்கு சக்ரதாரியாகத் தோன்றிய திருமால் அம்ருத கிரணங்களால் மாமரத்தை தழைப்பிக்கச் செய்ய பார்வதியின் தாபம் தீர்ந்து தவத்தைத் தொடர்ந்தாள். பார்வதியின் தாபம் தீர்க்கப்பட்டதால் (துண்டிக்கப்பட்டதால்) இப்பெருமானுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயருண்டாயிற்று. நிலவின் குளிர்ந்த கிரணங்களால் பார்வதியின் யாகத்திற்குண்டான தடை துண்டிக்கப்பட்டதால் இப்பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.

பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம்.

மூலவர்-நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் என்பது வடவாணர் மொழிவர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார் என்னும் திருநாமம்.
தீர்த்தம்- சந்திர புஷ்கரணி
விமானம்– புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்)
காட்சி கண்டவர்கள்- சிவன், பார்வதி

மாமரத்தை தழைக்கச் செய்த பிறகு பார்வதி மீண்டும் யாகத்தை துவக்க இதனால் மேலும் சினந்த சிவன் தனது தலையில் உள்ள கங்கையை
ஏவினார் தமக்கையாயிற்றே என்றெண்ணி தன்யாகத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டாமென்று வேகமாக வந்த கங்கையை வேண்டினாள். கங்கை அதைப் பொருட்படுத்தவில்லை. பார்வதி தனது பக்தி மேலீட்டால் மணலினால் லிங்கம் செய்து தவமிருந்தாள். கங்கையால் அந்த லிங்கத்தைக் கரைக்க முடியவில்லை. இதைக் கண்ட பார்வதி மிக்க சந்தோஷத்துடன் அந்த லிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டாள். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள்
துண்டத்தான் அருள்பாலித்தார்.இவ்விதம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒருசேர அருளிய ஸ்தலம் உண்டென்றால்
அது இது ஒன்றுதான்.

மீண்டும் தெளியார்கள் மேதினயினோர் நின்னடிப்பூ
பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் – தீண்டிக்
கலாத்திங்கள் துண்டத்தான் மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கள் துண்டத்தானே”–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

நிலாத்திங்கள் துண்டத்தானாக எழுந்தருளியுள்ள எம்பெருமானே,
அர்ஜு னன் நின்னை பூசித்து நின் திருவடிகளில் சமர்ப்பித்த மலர்களை திருவடி பாக்கியத்தின் மேன்மை கருதி. பதினொன்று கூத்துக்களில் ஒன்றான
பாண்டரங்கம் என்னும் கூத்தாடும் சிவன் தன் தலையில் ஏற்றுக் கொண்டான்.

—————–

50. திரு ஊரகம்

இந்த ஊரகம் என்னும் திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன

ஊரகத்தை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் கச்சி ஊரகத்தாய் என்று விளிப்பதைப் போல மற்ற தலங்களையும் கச்சி
நீரகத்தாய், கச்சி காரகத்தாய் என்று காஞ்சியின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் அருளவில்லை.

பாதாள லோகத்திலேயே எம்பெருமானைக் குறித்து தவமிருக்க அந்த தவத்திற்கு மெச்சி இந்த ஸத்யவ்ரத ஷேத்ரமான காஞ்சியில் மகாபலிச் சக்ரவர்த்திக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டிக் கொடுத்த ஸ்தலமே ஊரகம் ஆயிற்றென்பர்.
பாதாள லோகத்தில் சாதாரண மனிதனைப் போல இருந்த மகாபலி நெடிதுயர்ந்து உலகளந்த திருக்கோலத்தை மீண்டும் முழுமையாக என்னால்
தரிசிக்க இயலவில்லையே என்று பதைபதைத்து எம்பெருமானைத் துதித்து நிற்க எளிய விதத்தில் அவனுக்கு காட்சி தரும்பொருட்டு இந்த இடத்திற்கு
அருகிலேயே ஆதி சேடனாக காட்சியளித்தார். இந்த இடம் பேரகம் எனப்படும்.
ஆதிசேடனாக காட்சியளித்த அந்த இடமே தற்போது பேரகம் என்ற பெயரில் இத்தலத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. இங்கு
எம்பெருமான் சரப ரூபமாகக் காட்சியளிக்கிறார். பார்ப்பதற்குப் பேரெழில் பொருந்தியவர் இந்தப் பெருமாளுக்கு ஊரகத்தான் என்று பெயர். உரகம் என்பது பாம்பைக் குறிக்கும். எனவேதான் ஆதிசேடன் ரூபத்தில் உள்ள பெருமான் உரகத்தான் என்று அழைக்கப்பட்டு ஊரகத்தான் ஆயிற்றார்
போலும்.

மூலவர்-உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- அமுதவல்லி நாச்சியார்
உற்சவர்– பேரகத்தான்
தீர்த்தம்– நாக தீர்த்தம்
விமானம்– ஸார ஸ்ரீகர விமானம்
காட்சி கண்டவர்கள்– மகாபலிச் சக்ரவர்த்தி, ஆதிசேடன்.

ஊரகம் (பேரகம்) இரண்டும் சேர்ந்து ஒரு திவ்ய தேசம்தான் “மதில் கச்சி யூரகமே பேரகமே” என்பது
சிறிய திருமடலில் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்.

இங்கு எழுந்தருளியுள்ள உலகளந்த பெருமாள் மிகப் பிரம்மாண்டமானவர். நெடிதுயர்ந்த இவர் திருமேனி பார்ப்பதற்குப்
பேராச்சர்யம் உடைத்து 108 திவ்ய தேசங்களில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இத்தகைய பிரம்மாண்டமான உலகளந்த பெருமாள் இல்லையென்று
சொல்லலாம். பேரகத்தான் என்பது இவர் திருநாமம். இப்பெருமாள் தனது இரண்டு கரங்களை நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித்தூக்கிய
திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக்காட்டி எழுந்தருளியுள்ளார். இடது திருக்கரத்தின் இரண்டு
விரல்களை உயர்த்தியதால் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில் ஒருவிரலை உயர்த்தி ஓரடியை எங்கே வைப்பது என்று
மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர்.

இதேபோல் பேரகத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேட எம்பெருமானும் மிகப் பிரசித்தி வாய்ந்தவர். இவர் போன்ற நாகமூர்த்தியை வேறெங்கும்
காண்டலரிது. இவரிடம் தூய மனதுடன் கேட்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகிறது. இப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது
(பாயாசம்) படைத்துப் புத்திரப்பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேரடைகின்றனர். இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வெம்
பெருமானுக்குத்தான் (ஊரகத்தான்) ஊரகத்தான் என்பது திருநாமம்.

நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
வாசத்தாள் என்தலைமேல் வைத்திலையேல் – நாகத்தால்
பாரகத்துள்ளன்றி நான் பாழ்நரகில் வீழ்ந்தென் சொல்
ஊரகத்துள் நின்றாயுரை–பிள்ளைப் பெருமாளையங்கார்

மாவலி தாரை வார்த்துக்கொடுத்தபோது ஈரடியால் உலகளந்து மூன்றாவதடியை அவன் தலைமீது வைத்து நின்திருவடியை அவனுக்குப்
பொலியச் செய்தல் போன்று என் சென்னியின் மேலும் வைப்பாயாயென்று கேட்கிறார்.
“திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் வைத்தாய்” என்று ஆழ்வாருரைத்தபடி தமக்குமாகட்டும் என்கிறார்.

———–

51. திருவெஃகா

பிரம்மா செய்த பரிவேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்க அதற்குக் குறுக்கே எம்பெருமான் அணையாகப் படுத்துக்கொண்டான்.
எம்பெருமான் படுத்திருந்த திருக்கோலத்தைக் கண்ட சரஸ்வதி முன்னேறிச் செல்ல வொண்ணாமல் பின் வாங்கினாள். இதனால் வேகாஷேது என்று
பெயர் பெற்றாள். தமிழில் வேகவனை என்றானது. இச்சொல் நாளடைவில் வேகணை என்று திரிந்து பிறகு வேகினி என்றாகி வெஃகின என்றாகி
வெஃகணையானது. காலப்போக்கில் வெஃகா என்றாயிற்று.

தாம் யாகம் செய்யும் பகுதியை நோக்கி ஒரு பெரும் நதி வருவதையறிந்த பிரம்மன் வழக்கம் போல் தன்னையும் தம் யாகத்தையும்
காக்க திருமாலைத் துதித்தான். திருமால் அவ்வெள்ளத்திற்கு எதிரே அணையாகப் படுத்தார். திருமாலின் அறிதுயில் கோலத்தைக் கண்ணுற்ற
சரஸ்வதி தனது வேகத்தை சுருக்கி தன்னை மறைத்துக் கொண்டாள். சரஸ்வதி-மறையலுற்றதும் திருமால் தனது தேவியுடன் பிரம்மாவுக்கு காட்சி
கொடுக்க பிரம்மன் யாகத்தைத் தொடர்ந்தார்.

மூலவர்-யாதோத்தகாரி. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்- கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம்– பொய்கை புஷ்கரிணி
விமானம்- வேதஸார விமானம்
காட்சி கண்டவர்கள்- பிரம்மதேவன், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், கணி கண்ணன், சரஸ்வதி தேவி.

பொய்கையாழ்வார் அவதாரம் செய்த தலமாகும் இது. இங்குள்ள பொய்கையொன்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்தமையால்
பொய்கையாழ்வாரானார்.
எல்லா ஸ்தலங்களிலும் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும், ஆனால் இங்கு மட்டும் பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார்.

கணி கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந் நாகப் பாய் விரித்துக்கொள்

எம்பெருமான் மீண்டும் காஞ்சிக்கு வேகமாக திரும்பி சயனித்துக்கொண்டான். அவசர நிமித்தத்தில் வலமிருந்து இடமாகச்
சயனித்துவிட்டார் என்று காரணங் கூறுவர்.
ஒரு முறை இடம் பெயர்ந்து மீண்டும் அதே இடத்திற்கு எழுந்தருளியதால் வலமிருந்து இடமாக மாறிச் சயனித்தார் என்றும் கூறுவர்.
வேகவதியாக சரஸ்வதி மாறி விரைந்தோடி வரும்போது அந்த நதியைத் தடுக்க தாமும் வேகமாக வந்த பெருமாள் சடக்கென சயனிக்க
எத்தனித்த நிலையில் தம்நிலை மாறிச் சயனித்தர் என்றும் கூறுவர்.
திருமழிசையாழ்வாருடனும், கணிகண்ணனுடனும் பெருமாள் ஒரு இரவு தம் யாக்கையை கிடத்தி இருந்த இடம் ஓரிரவு யாக்கை என்ற
பெயராலேயே பன்னெடுங் காலமாக அழைக்கப்பட்டு வந்தது.
தம்மிஷ்ட்டத்திற்குத் தமிழை திரிப்பவர்கள் தலைதூக்கிய காலத்தில் ஓரிரவுயாக்கை என்னும் இந்த அழகிய காரணப் பெயர் ‘ஓரியாக்கை’
ஓர் இரவு இருக்கை –ஓரிக்கை–என்றாக்கப்பட்டது. காஞ்சிக்கு சமீபத்தில் இந்த ஊர் இன்றும் ஓரியாக்கை என்றே வழங்கப்பட்டு வருகிறது.

திருமழிசையாழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட இந்நிகழ்ச்சி இங்கு ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தினன்று உற்சவமாக
நடைபெறுகிறது. அப்போது எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி யாற்றங்கரை வரை சென்று மீள்வர்.

நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமான திருவிருத்தத்தில் கோயில், திருமலை, திருவெஃகா, ஆகிய 3 திவ்ய தேசங்களை மட்டும் பாடியிருப்பதால்
பெருமாள் கோயில் என்பது இத்தலத்தையே குறிக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துக் கொண்டுள்ளனர்.

கச்சிக் கிடந்தவனூர்க் கடல்மல்லைத் தலசயனம் நச்சித் தொழுவாரை நச்சென்றன் நணி நெஞ்சமே –இங்கு
கச்சிக் கிடந்தவன் என்ற இச்சொல்லுக்கு வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரிய வாச்சான் பிள்ளை-ஆஸ்ரிதர்க்காகத் திருவெஃகாவிலே படுக்கை மாறி கைம் மாறிக் கிடந்தவனை’-என்கிறார்

உரைகலந்த நூலெல்லா மோதி யுணர்ந்தாலும்
பிரைகலந்த பால்போல் பிறிதாம் – தரையில்
திருவெஃகா மாயனுக்கே சீருறவார், தங்கள்
உருவெஃகா வுள்ளத்தினோர்க்கு.

————–

52. திருக்காரகம்

கார்ஹமஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்று உய்ந்தமையால் அவர் பெயரின்
பொருட்டே திவ்ய தேசம் விளங்கி நின்று கார்ஹகம் ஆகி காரகம் ஆயிற்றென்பர்

உலகமேத்தும் காரகத்தாய் என்ற திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்

மூலவர்-கருணாகரப் பெருமாள். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- பத்மாமணி, நாச்சியார், ராமா மணி நாச்சியார்
தீர்த்தம்– அக்ராய தீர்த்தம்
விமானம்– வாமன விமானம், ரம்ய விமானம்
காட்சி கண்டவர்கள்– கார்ஹ மஹரிஷி

உலகளந்த பெருமாள் சன்னதியில் மூன்றாவது பிரகாரத்தில் ரம்ய விமானத்தில் கீழ், வடக்கு நோக்கி ஆதி சேடன் மீது அமர்ந்த
திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஓராதார் கல்வியுடையேம் குலமுடையேம்
ஆராதனம் உடையேம் யாமென்று – சீராயன்
பூங்காரகங் கானப் போதுவார் தாள் தலைமேல்
தாங்கா ரகங்காரத் தால்–பிள்ளைப் பெருமாளையங்கார்

———–

53. திருக்கார் வானம்

கார்வானத்துள்ளாய் கள்வா என்று இத்தலத்து எம்பெருமானின் பெயரையும் சேர்த்தே ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
திருவூரகத்திற்குள்ளே இருக்கும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் மற்ற இருவருக்குமில்லா தனிச் சிறப்பாகும் இது. நீரகத்தாய் என்றும், காரகத்தாய்
என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது மட்டும் எம்பெருமானின்
பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.
திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால் அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இந்தக்
கார்வானத்து எம்பெருமானுக்குத்தான் கள்வர் என்றும் திருநாமமாகும்.

கார்வானத்துள்ளாய் கள்வா என்பது ஒரு தனிச் சொல்லாகும். அஃதாவது இடப்பெயரும், பெருமாளின் பெயரும் சேர்ந்த தனிச்சொல்லாகும்.
திருக்குடந்தை ஆராவமுதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன், கச்சி வரதராஜன், திருவனந்தபுர பத்மநாபன்,
திருவேங்கடத்து ஸ்ரீனிவாசன், என்பது போன்று ஊர்ச் சொல்லுடன் பெயர்ச் சொல்லும் சேர்ந்த காரண குறிச்சொல்லேயன்றி தனித்தனி சொற்களாகக்
கொள்ளவியலாது.

மூலவர்- கள்வர், வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கமலவல்லி, தாமரையாள்
தீர்த்தம்– கௌரீ தீர்த்தம், தராதர தீர்த்தம்
விமானம்– புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்– பார்வதி

தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா
லாலே யெவ்வாறு பசியாற்றினள் முன் – மாலேபூங்
கார்வானத் துள்ளாய் கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய் நீ பண்டு.–நூற்றெட்டுத் திருப்பதி

———

54. திருக்கள்வனூர்

இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற இருந்த கிடந்த என்னும் 3 திருக்கோலங்களை காட்டியருளுகிறார்

மூலவர்-ஆதிவராஹப் பெருமாள், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்- அஞ்சிலை வல்லி நாச்சியார்
தீர்த்தம்– நித்ய புஷ்கரணி.
விமானம்- வாமன விமானம்
காட்சி கண்டவர்கள்– பார்வதி, லட்சுமி தேவி.

பல அழகு தமிழ்ப் பெயர்கள் பூண்டுள்ள நாச்சியார்களைப் போல இந்த பிராட்டிக்கும் அஞ்சிலைவல்லி நாச்சியார் என்றும் அழகுத் திருநாமம்.

காஞ்சியில் பற்பல திவ்ய தேசங்களில் மிகமிகப் பெரிய கோவில்களில் எழுந்தருளியிருந்து அங்குவரும் பக்தர்கட்கு அருள் பாலித்து திருப்தி
அடையாமல் காமாட்சியம்மன் கோவிலின் ஒரு மூலையின் நின்றுகொண்டு இங்கு வரும் பக்தர்களையும் தன் அருளுக்கு இலக்காக்க வேண்டுமென்று
இப்படிக் கள்ளத் தனமாக உறைவதால் கள்வன் எனப்பட்டான் போலும்

பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று
கொண்டேனைக் கள்வனென்று கூறாதே – மண்டலத்தோர்
புள்வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக்
கள்வா வென் றோதுவதென் கண்டு.–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

———

55. திருப்பவள வண்ணம் (காஞ்சி)

இந்தப் பவளவண்ணர் கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள காலாண்டார் தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார்
2 பர்லாங் தொலைவு.

காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு சிறப்பாய் பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தேவி தொடர்ந்து
எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த
அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்து ரத்தம் தோய நின்றார் பெருமாள். இவ்வாறு ரத்தம் தோய ப்ரவாளேசராக, ப்ரவாளேச வண்ணராக நின்றதால்
ப்ரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்.

மூலவர்-பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்- பவள வல்லி தனிக்கோவில் நாச்சியார்
தீர்த்தம்– சக்ர தீர்த்தம்
விமானம்-ப்ரவாள விமானம்
காட்சி கண்டவர்கள்– அச்வினி தேவதைகள், பார்வதி, பிரம்மன்.

இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று
எதிர்த்திசையில் அமைந்துள்ளது. காலாண்டார் கோவிலில் பவள வண்ணரும் அதற்கெதிரில் அமைந்துள்ள பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர்
கோவிலும் அமைந்துள்ளது.

இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார். இவர்
பிரும்மரிஷிக்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.

அச்வினி தேவதைகட்கும், பார்வதி தேவிக்கும் பெருமாள் காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.

கண்டறிந்தும் கேட்டறிந்தும் தொட்டறிந்தும் காதலால்
உண்டறிந்தும் மோந்தறிந்தும் முய்யேனே –
பண்டைத் தவள வண்ணா, கார்வண்ணா, சாமவண்ணா,
கச்சிப் பவள வண்ணா நின் பொற்பாதம்.–பிள்ளைப் பெருமாளயங்கார்

————

56. திருப் பரமேச்சுர விண்ணகரம்

புராண காலத்தில் இத்தலம் ஸர்ப்பச் சேஷத்ரம் என அழைக்கப்பட்டதாகவும், இங்கு
எழுந்தருளியிருந்த பிரான் பரமபத நாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

விதர்ப்ப நாட்டு மன்னன் புத்ர சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள கைலாச நாதனை வணங்க விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும்
பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும், அவ்விருவரும் மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு மூலையில் அஸ்வமேத
யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்டநாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்து அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு
அருளுவதாக ஐதீஹம்.

ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம்
பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.
பரமேஸ்வரவர்மன் பிறப்புக்கும் இத்தலத்திற்கும் உண்டான தொடர்பு கீழ்வருமாறு பேசப்படுகிறது.

ஒரு சமயம் பரத்வாஜ முனிவர் பெரும் தவமியற்றிக் கொண்டிருக்கும்
போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின்பால் மோகம்
கொண்டு அவளை ஆலிங்கனம் செய்ய அவ்வளவிலேயே ஒரு ஆண் மகவு
உண்டாக இக்குழவியை என்ன செய்வதென்று பிரம்மன் சிந்தனையில் மூழ்க
அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும் இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து
நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று
சொல்லி, மஹாவிஷ்ணுவும் லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு
உயிர் கொடுக்கலாயினர்.

இஃதிவ்வாறிருந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென
இப்பெருமாளைத் துதித்துவிட்டு திரும்பும்போது வேடன் உருக்கொண்டிருந்த எம்பெருமானால் இம்மகவு அவர்களின் கையில் தரப்பட்டது. பிரம்மனாலும்
விஷ்ணுவாலும் வளர்க்கும் பொறுப்பு உண்டானதால் பரமேஸ்வரன் என்று பெயரிட்டதாகவும் ஒரு கதை உண்டு.
இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். யானைப்பாலை உண்டு
வளர்ந்த அவன் மிக்க பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் விளங்கினான்.

பல்லவர்கள் யார் என்பதை ஆராயப் புகுந்த வரலாற்று அறிஞர்கள் பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணுமிடத்து பரத்வாஜ கோத்ரம்
என்றவொரு பிறப்புரிமையைக் காட்டுவதும் இங்கு உற்று நோக்கத் தக்கதாகும்.
பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும், அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும்,
சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர்.
இதனை நினைவுகூறும். முகத்தான்தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்)
பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் ரங்கநாதனாகச் சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும்
எம்பெருமானை எழுந்தருளச் செய்தார்.

மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச்
சிதலமடைய பிறகு அவ்விடத்தில் சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. (இந்நிகழ்ச்சி நடைபெற்றதும்
பல்லவர்கள் காலத்திலேதான்) இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும்.

ஸ்ரீ வைகுண்டமென்னும் பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு புஷ்கரணியாக அமைந்துள்ளதாக ஐதீஹம்.

மூலவர்-பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- வைகுந்த வல்லி
தீர்த்தம்– ஐரம்மத தீர்த்தம்
விமானம்– முகுந்த விமானம்
காட்சி கண்டவர்கள்– பல்லவ மன்னன்.

மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளமை மிகவும் வியத்தற்குரியதாகும்.
பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள்
யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும்.
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட சகல காரியங்களுக்கும், தான் போர் மேற் செல்வதற்கும், இப்பெருமாளையே
குருவாகக் கொண்டு வெற்றிமேல் வெற்றி கண்டான்

இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம அவதாரம் நரஹாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம் செய்த
இராமவதாரம், போன்ற காட்சிகள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டுக் கல்லும்கதை பேசும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டுள்ளது.

இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள்
அதனைத் தோண்டிக்காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான்
என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக்
கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். சுரங்கப் பாதையைத் தோண்ட வந்த
வெள்ளையன் இங்கு அவ்வாறு சுரங்கப் பாதை யாதும் இல்லையெனக் கூறிச் சென்று விட்டதாகக் கூறுவர்.
இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக ஐதீஹம்.

பதத்தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத்தன்
பதத்தடியார்க்கே யாட்படுத்தான் – இதந்த
பரமேச்சுர விண்ணகரான் பலவான்
வரமேச்சுர லணைந்த மால்–பிள்ளைப்பெருமாளய்யங்கார்

——————–

57. திருப்புட்குழி

சென்னையிலிருந்து வேலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பாலுசெட்டி சத்திரத்திலிருந்து நடந்தே செல்லலாம். சென்னையிலிருந்தும்
காஞ்சிபுரத்தில் இருந்தும் தற்போது ஏராளமான பேருந்துகள் உண்டு.

சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனையெதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்து பின்
ஜானகியைத் தேடி அவ்வழிழிழழிததததனதமனழிழிதமதமட்தமனதமழியில் வந்தஇராமனிடம் விவரங்களைத் தெரிவித்துவிட்டு உயிர் நீத்தார். ராமன் அவருக்கு மோட்சமளித்து தனது கரங்களால் அந்திமச் சடங்குகளை இங்கு (இத்தலத்தில்)
செய்வித்தார். எனவே இத்தலத்திற்கு திரு + புள் + குழி என்ற பெயருண்டாயிற்று (வட மொழியில் க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் எனப்படுகிறது)
இதே வரலாறுதான் புள்ளம் பூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது

மூலவர்-விஜயராகவப் பெருமாள். நான்கு புஜங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்– மரகதவல்லி (தனிக்கோவில்)
தீர்த்தம்- ஜடாயு தீர்த்தம்
விமானம்- விஜயகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்- ஜடாயு

ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்
புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸ்காரம் செய்யும் பாவணையில்
அமர்ந்துள்ளார். இந்த தாபத்தைத் தாங்க முடியாமல் இடம், வலமாகமாறி எழுந்தருளியுள்ளார்.

வலப்பக்கத்தே இருக்க வேண்டிய ஸ்ரீதேவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.
இங்கு பெருமாள் வெளியே புறப்பட்டு திருவீதி கண்டருளும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் உண்டு.
இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில் ஸமர புங்கவன் என்பது பெயர். இதைத்தான் போரேறு என்று தமிழ்படுத்தினார்
ஆழ்வார்.

இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் மடியில் (பெண்கள்) வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன்
அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும். இங்கு இது அனுபவரீதியாகக் காணப்படும் உண்மையாகும். இதனாற்றான்
இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்று பெயர் பிரசித்தம்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும்
உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. (இராமானுஜரோடு எம்பாரும் இங்குதான் கற்றார்.]

நம்பிள்ளையாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும்.

இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும்
உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர்துறந்தானாம்.
இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் உத்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.

மால்வேழ்கு மரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழப் படையும் விட்டுப் போய்ப் – பாலன்
நெருப்புட்குழி குளிர நின்றதும் கேட்டதோர்
திருப்புட்குழி யமலன் சீர்” – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

——————

58. திருநின்றவூர்

திருமங்கையாழ்வார். திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டே வரும் போது இத்தலத்தின் வழியாகச் சென்றும் இதனைப் பாடாது சென்றார்.
இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை எழுப்பி உடனே சென்று ஒரு பாசுரம் பெற்றுவருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார்
திருவிடந்தை வந்து விட்டு, திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்) வந்து விட்டார்.

அப்போது எம்பெருமான் பாசுரங் கேட்டுவந்து நிற்பதைக் கண்ட திருமங்கையாழ்வார்.

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே-என்று மங்களா ஸாஸனம்

கண்ணமங்கைப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை
ஓரக் கண்ணால் கண்ட திருமங்கையாழ்வார் நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை என்று பெருமாளையும் அவர் காற்றினும் கடுகி வந்த வேகத்தைக்
குறிக்கு மாற்றான் “காற்றினைப் புனலை” என்று அவரது வேகத்தையும் குறித்து கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று அவரையும் சேர்த்து
மங்களாசாசனம் செய்தார்.

திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று

ஆதிசேடனைத் தாங்கியுள்ள ஸமுத்திர ராஜனுடன் கோபம் செய்து கொண்டு இவ்விடத்து வந்து நின்றதாகவும், பிறகு
ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகுண்டம் எழுந்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும்
திருமகள் மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் வந்து எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும்
தேவியை மீண்டும் இங்கே எழுந்தருள மனங்கனிய அருள வேண்டும் என வேண்டினான். பக்தர்க்கு
இரங்கும் பண்பினான பரந்தாமன் மீண்டும் ஸமுத்திர ராஜனைப் பிராட்டியிடம் அனுப்பி நீ முன்னால் செல், நான் பின்னால் வருகிறேன் என்று
சொல்லியனுப்ப அவ்வண்ணமே ஸமுத்திரராஜன் வந்து தன்னை மீண்டும் மன்னிக்குமாறு என்னை பெற்றதாயே என்றும் பலவாறு வேண்டியும் திருமகள்
சமாதானம் அடையவில்லை. அவ்வேளையில் எம்பெருமானும் அங்கு எழுந்தருளி சமாதானஞ் சொல்ல திருமகள் மீண்டும் வைகுந்தம் எழுந்தருள
சம்மதித்தார்.
இதுவரை ஜலத்திலேயே ஸமுத்திர ராஜனுக்கு காட்சி கொடுத்த எம்பெருமானும் பிராட்டியும் இப்போது முதன்முதலாக நிலத்திலும் காட்சி
கொடுத்ததால், ஸமுத்திர ராஜனைக் நோக்கி உனக்கு என்னவேண்டும் என்று கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து
அதேபோல் இங்கேயே நின்றிலங்கவேண்டும்மென்று வேண்ட அவ்வண்ணமே அருள் பாலித்தனர்.

பக்தனுக்காக அவன்பால் வாத்சல்யம் (பேரன்பு) ஏற்பட்டு தன்னைவிட்டுப் பிரிந்த தேவியை அழைத்துவர பக்தனுக்காகத் தான் புறப்பட்டு வந்ததால்
பெருமாளுக்கு இங்கு பக்தவத்ஸலன் என்பது திருநாமம். இவ்வாறு பக்தர்களின் உயிருக்குயிராய் விளங்குவதால் பத்தராவிப்பெருமாள் என்ற திருநாமமுண்டு-ஸமுத்திரராஜன் பிராட்டியை வேண்டும்பொழுது என்னைப் பெற்ற தாயல்லவா என்று சொல்லி தன்பிழை பொறுத்து வைகுண்டம் ‘மீளக் கேட்டுக் கொண்டதால் என்னைப் பெற்ற தாயார் என்பதே பிராட்டியின் திருநாமம் நன்னு கன்ன தல்லி’ என்பர் தெலுங்கில்.

மூலவர்-பக்தவத்சல பெருமாள். பத்தராவிப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்றிருந்த திருக்கோலம்.
தாயார்- என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி
தீர்த்தம்– வருண புஷ்கரணி
விமானம்- உத்பல விமானம்
காட்சி கண்டவர்கள்- ஸமுத்திர ராஜன், வருணன்.

திருமலை பெரிய திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகளின் நிர்வாகத்திற்குட்பட்டது இந்த ஸ்தலம்.

பூந்தமல்லியில் (பூவிருந்த வல்லியில்) நாசரத்பேட்டையில் அனந்த நாராயண தீட்சிதர் பூமிநாச்சியார் என்னும் தம்பதியார் வாழ்ந்து வந்தனர்.
(இந்த பூமிநாச்சியார் இராமானுஜரின் பெரிய சகோதரி) இவர்கட்கு புத்திரப்பேறு இல்லை. புத்திரப்பேறு வேண்டி திருமலையாத்திரையை
மேற்கொண்டனர்.
யாத்திரையின்போது இத்தலத்திற்கு அருகில் உள்ள வருண புஷ்கரணியின் சமீபம் உள்ள ஏரிகாத்த ராமரின் ஆலயத்தில் தங்கினர்.
மானசீகமாக இப்பெருமானை வேண்டினர். (மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரிகாத்த ராமன் உள்ளன்)
அப்போது அவர்களின் கனவில் தோன்றிய ராமன் நீங்கள் புத்திரப்பேறு குறித்து திருமலை செல்லவேண்டாம். எம் அம்சமாக உங்கட்கு ஒரு புத்திரன்
பிறப்பான் என்றார். அவர்களும் அவ்வண்ணமே ஊருக்குத் திரும்ப அவர்கட்கு வைணவ சீலனாக ஒரு திருமகன் அவதரித்தான். அவர்தான்
முதலியாண்டான்.-இவருக்கு பூந்தமல்லியில் சன்னதி உண்டு.
இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே லட்சுமணன் அவதாரம் செய்தான். (ஆம் ராமானுஜராக வந்தது ஆதிசேடனன்றோ) தற்போது ராமபிரானின்
அம்சமாக முதலியாண்டார் அவதரித்தார்.
இவ்வாறு லட்சுமணன் முதலாவதாகவும் ராமன் இரண்டாவதாகவும் அவதாரம் செய்தது பகவத் அவதாரங்களிலேயே இதற்குமுன் ஒருமுறைதான்
நிகழ்ந்தது. அதுதான் ஸ்ரீகிருஷ்ணர் – பலராமர் அவதாரமாகும்.
இவர் (முதலியாண்டார்) பிற்காலத்தே இராமானுஜரின் பிரதம சீடராகத் திகழ்ந்தார். இராமானுஜருக்கு சாத்துமறை நடந்த மறுநாளில் இவருக்கு
சாத்துமறை நடக்கும். இவரது உபதேசங்களுள் மிகவும் முக்கியமானது மூன்று திவ்யங்கள் எனப்படும். அவை.
அ) எம்பெருமானின் தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போல்-ஆ) ஆழ்வார்களின் அருளிச் செயல் அம்ருத பானம் போல
இ) பிராட்டிக்கு ராவண பவனம் போல ஸ்ரீவைணவர்கட்கு ஸம்சாரம்.

சீரறிந்து தோழிமீர் சென்று கொணர்ந்தெனக்குப்
போரமுலை முகட்டிற் பூட்டுமினோ நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர்–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

—————–

59. திருவள்ளூர் (திரு எவ்வுள்)

கிரேதாயுகத்தில் புரு புண்ணியர் எனப் பெயர் கொண்ட அந்தணர் ஒருவர் தமது மனைவியுடன் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டிசாலியக்ஞம்
என்னும் பெயர் கொண்ட யாகம் தொடங்கி சாலி எனப்படும் நெல்மணிகளால் அந்த யாகத்தைச் செய்தார்.
யாகத்தின் முடிவில் யாக குண்டலியில் தோன்றின மகாவிஷ்ணு மஹாபுருஷரே உமது யாகத்தை மெச்சினோம் நீர் வேண்டின வரம்
கேளுமென்ன, புத்திர பாக்கியம் கருதியே யாம் இந்த யாகம் துவங்கியதாகவும், தமக்குப் புத்திரப் பேறு வேண்டுமென்றும் கேட்க அப்படியே உமக்குப்
புத்திரப் பேறு அளித்தோம், நீர் சாலியக்ஐம் செய்து புத்திரப்பேறு பெற்றபடியால் உமக்குப் பிறக்கும் புத்திரன் சாலிஹோத்ரன் என்ற பெயருடன்
பிரசித்தி பெற்றுத் திகழ்வான் என்று கூறியருளினார்.-அவ்வாறே பிறந்து வளர்ந்த சாலி ஹோத்ரரும் தக்க பருவமும்,
ஞானமும் எய்திய பிறகு தீர்த்த யாத்திரை தொடங்கினார். அவ்விதம் வருங்காலையில் எண்ணற்ற ரிஷிகள் தவமியற்றும்
வீட்சாரண்யம் எனப்படும் இவ்விடத்தையடைந்து இங்குள்ள ஹ்ருதத்த பாப நாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடிச் செல்வதைக் கண்டு
இந்த ஆரண்யத்தில் ஒரு குடில் அமைத்து நெடுங்காலம் பெரும் பக்திபூண்டு எம் பெருமானிடம் பக்தி செலுத்திப் போது போக்கி வந்தார்.

இவ்வாறு தினந்தோறும் இவர் மிகுந்த ஈடுபாட்டுடன் பூஜை செய்து வருகையில் எப்போதும் போல் ஓர்நாள் அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு
அமுது படைத்து யாராயினும் அதிதி வருவார்களா என்று காத்திருந்தார். இந்த விரதத்தைப் பன்னெடுங்காலம் விடாது பின்பற்றி வந்தார் சாலி
ஹோத்ரர்.-இந்நிலையில் அதிதியை எதிர்பார்த்திருந்த அந்நாளில் இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் தானே ஒரு முதியவர் ரூபத்தில் வந்து கேட்க தாம் வைத்திருந்த மாவில் பாதியைக் கொடுத்தார் சாலிஹோத்திரர். அதை உண்ட பின்பும் தமது பசியடங்கவில்லையென்று முதியவர் கேட்க தனக்கு
வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் உண்ட மயக்கால் மிக்க களைப்பாயுள்ளது, படுக்கச் சற்று இடம்
வேண்டும் எங்கு படுக்கலாமென்று கேட்க சாலி ஹோத்ரர் தமது பர்ணக சாலையைக் காட்டி இவ்வுள் தேவரிருடையதே இங்கு சயனிக்கலாம். என்று
சொல்ல, தனது கிழச் சொரூபத்தை மாற்றிய எம்பெருமான் தெற்கே திருமுகம் வத்துச் சயனித்தார். ஒன்றுமே புரியாத சாலிஹோத்தரர் தாம் செய்த
பாக்கியத்தை எண்ணி எம்பெருமானைப் பணிந்து நிற்க தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை
ஆசீர்வதித்து என்ன வரம் வேண்டுமென்று கேட்க, இதே திருக்கோலத்தில் எம் பெருமான் இவ்விடத்திலேயிருந்து அருள்பாலிக்க வேண்டுமென சாலி
ஹோத்ர முனிவர் வேண்ட எம் பெருமான் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியும் அதற்கிசைந்து அவ்வண்ணமே சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி
காட்சியளித்தார். உடனே விஜயகோடி விமானத்துடன் இத்தலம் உருப்பெற்றது.

எம்பெருமான் தாமே வந்து முனிவரிடம் கிங்கிருஹம் ‘படுக்க எவ்வுள்’ எங்குற்றதெனக் கேட்டதால் வடமொழியில் கிங்கிருஹரபுரமென்றும் தமிழில்
எவ்வுள்ளூர் என்று மாயிற்று. எம்பெருமானுக்கும் கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான் என்னும் திருநாமமாயிற்று.

மூலவர்–வீரராகவப் பெருமாள், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
தாயார்- கனக வல்லி (வஸு மதி தேவி)
உற்சவர்- மூலவருக்குரைத்ததே
விமானம்– விஜயகோடி விமானம்
தீர்த்தம்- ஹ்ருத்தபாப நாசினி
காட்சி கண்டவர்கள்– சாலிஹோத்ர முனிவர் (மது, கைடபன்)

இச்ஷேத்திரத்திற்கு வீச்சாரண்யச் ஷேத்ரம் என்றும் இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால்
புண்யாவார்த்த ஷேத்ரமென்றும் எவ்வுள்ளுர் என்றும் இத்தலத்திற்குப் பல திருநாமங்களமைகின்றன.
சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலெட்சுமி வஸு மதி என்ற பெயரில்
தர்மசேன புரம் என்னும் நாட்டையாண்ட திலிப மகாராஜாவுக்குப் புத்திரியாக அவதரித்து வாழ, இவ்வெம்பெருமான் வீரநாராயணன் என்ற திருப்பெயருடன்
வேட்டைக்குச் செல்ல, தேவியைக் கண்டு மணமுடித்ததாக வரலாறு. கனகவல்லித் தாயார் என்றும் திருநாமம் உண்டு. அதற்கு முன் கிங்கிருஹேசன்
(எவ்வுள் கிடந்தான்) என்பதே பிரதானம். இங்கு கனகவல்லித் தாயாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனேபோற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதிநல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர்வாழ் வீரராகவனே போற்றி–வடலூர் இராமலிங்க அடிகளார் -திருப்பஞ்சகத்தில் ஒரு பாசுரம்

இப்பெருமானுக்கு வைத்திய வீரராகவன் என்னும் சிறப்புத் திருநாமமுண்டு.

இவ்விடம் வந்து சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு. இன்றும் தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
திரிசித்தபடி ருத்ரன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.

மது கைடபன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகஸ்யத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலை
வேண்ட பயங்கர ரூபங்கொண்ட இவ்விருவரையும் திருமால் துவம்சம்ப்படுத்தினார். அவர்கள் தமது பராக்கிரமத்தால் சூர்ய சந்திரர்களின்
ஒளியையும் மறைத்து உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ அதன்முன் நிற்க முடியாமல் இருவரும்
ஓடியொழிந்தார்கள். (இக்கதை பாண்டிநாட்டு திருப்பதிகளுள் ஒன்றான வானமாமலை என்னும் திருச்சீரிவரமங்கை ஸ்தலத்திற்கும் சொல்லப்பட்டுள்ளது)

அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் உற்ருத்த பாப நாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். தாம்
கிடப்பதற்கு உள் ஆதி இருந்த இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினந்தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.

பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில்தேவ பாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் மார்க்கண்டேய முனிவரையணுகி சகல
பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும் மோட்சத்தையும் தரக் கூடிய பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்தலம் யாதென வினவ அவர் தேவபாகரை
இத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறி இங்கு ஆற்றுப்படுத்தியதாகவும் புராணங்கூறும்.

கௌசிகன் என்னும் அந்தணன் ஒருவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராட யாத்திரை புறப்பட்டு நெடுங்காலம் அவ்விதமே திரிந்து
தண்டகாரண்யத்தின் மத்திய பிரதேசத்தை அடைந்தான். அங்கு உணவின்றி வாடி பசியால் மிக்க களைப்புற்றுச் சோர்ந்துபோனபோது அவ்வழியே சென்ற
சண்டாளன் ஒருவனைக் கண்டு அவனிடம் தனக்கு உணவளிக்குமாறு வேண்டினான். இப்பிராமணனின் முகத்திலிருந்த ஒளியைக் கண்ட அவன் தன்
தோள் மீது ஏற்றிச் சென்று கௌசிகனுக்கு உணவளித்தான். அயர்ந்து தூங்கிய கௌசிகனுக்குப் பணவிடைகள் செய்யுமாறு தன் புத்திரியை அனுப்பினான்.அவளது பணிவிடைகளில் தன்நிலை மறந்த கௌசிகன் பலகாலம் அவளுடனே தங்கியிருந்து இன்புற்றிருந்தான்.
பிறகு ஒரு நாள் தன் நிலையுணர்ந்த கௌசிகன் மீண்டும் தீர்த்த யாத்திரை தொடங்கி தனது கிழப்பருவ நிலையில் இங்குள்ள ஹ்ருத்த பாப
நாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தெய்வாதீனமாய்த் தைஅமாவாசையாயிற்று. இவனை யமலோகத்திற்கு இட்டுச் சென்ற யமதூதர்கள்
இவன் பாபச் செயல்களின் பொருட்டே இவனை இங்கு கொணர்ந்தோம் எனக் கூறினார். இதைக் கேட்டு நகைத்த எமன் இவன் தை அமாவாசையன்று
ஹ்ருத்த பாப நாசினியிலில் நீராடியதால் இவனுக்கு பாபங்களே இல்லை.இவனை மோட்சவாயிலில் கொண்டு சென்றுவிட்டுவாருங்கள் என்று
உத்திரவிட்டான்.

நீர்மை கெட வைதாரும் நின்னோடெதிர்த்தாரும்
சீர்மை பெற நின்னடிக்கீழ் சேர்கையினால் நேர்மையிலா
யெவுள்ளத் தனேன் செய்கையை பொறுத்தருளி
யைவ்வுள்ளத்தனே நீ யிரங்கு—  நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

————

60. திருவல்லிக்கேணி

பிருந்தம் என்றால் துளசி.-ஆரண்யம் என்றால் காடு. எனவே பிருந்தாரண்யம் துளசி வனம் என்று-பொருள் கொள்ளப்படும்.

சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப்பெருமாளை வழிபட்டு அர்ஜு னனுக்கு தேரோட்டிய கண்ணனாக பெருமாளைக் காண
விழைவதாக எண்ணி தவத்திலிருக்க அப்போதே ஸ்ரீனிவாசன் அசரீராய் நீ விரும்பிய தோற்றத்துடன் கைரவணி தீர்த்தங்கொண்ட பிருந்தாரண்யத்தில்
எழுந்தருளினேன் அங்கு சென்று தரிசிப்பாயாக என்று கூற, சுமதியும் அவ்வாறு செய்தான் என்பது வரலாறு.

ஆனால் இந்த பிருந்தாரண்யத்துக்கு எப்போது பெருமாள் அவ்விதம் வந்தாரென்னில் வேத வியாசருக்கு ஆத்திரேய முனிவர் என்னும் ஒரு சீடரிருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி பிருந்தாரண்யத்திற்குத் தவம் செய்ய வந்தபோது அவரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகமொன்றையுங் கொண்டு வந்தார். அவ்விக்கிரகம் ஒரு கையில் சங்கேந்தியதாயும் மறு கையில் தான் முத்திரையுடையதாயும் (தன் திருவடியில் சரணம் அடைய அருள்புரிதல்) இலங்கியிருந்தது.

பிருந்தாரண்யம் வந்த ஆத்திரேய முனிவர் அங்கு சுமதி என்ற முனிவரைக் கண்டு (சுமதி மன்னர்வேறு) மகிழ்ந்து தம் வருகையைக் கூற
இருவரும் அப்பெருமானை அங்கேயே பிரதிட்டை செய்து வழிபடலாயினர்.
வலப்புறம் ருக்குமணியையும் இடப்புறம் சாத்தியாகியையும் நிறுவி வழிபட்டு அவ்விருவரும் மோட்ச உலகுபெற்றனர்.

இக்கோலத்தையே கண்டு வழிபடுமாறு ஏழுமலையான் கட்டளையிட சுமதி மன்னனும் அவ்விதமே வழி பாடியியற்றினான். வேங்கடவனால்
காட்டப்பட்டதால் வேங்கட கிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்- வேங்கட கிருஷ்ணன் ருக்குமணி பிராட்டியுடன் பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யுமனன் இவர்களோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்– பார்த்தசாரதி
தாயார்– வேதவல்லி
விமானம்– ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம்.
தீர்த்தம்– கைரவிணி (அல்லிக்கேணி) இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்னி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீஹம்.
கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை அவ்வளவு புனிதமானது இந்த தீர்த்தம். பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள்– சுமதி ராஜன், பிருகு மகரிஷி, மதுமான் மகரிஷி, சப்தரோமர் அத்திரி மகரிஷி, ஜாஜலி மகரிஷி

அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக இத்தலத்தது எழுந்தருளினார்.

மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமனாக இத்தலத்து எழுந்தருளினார். சீதை, இலக்குவன்,
பரத சத்ருக்கணரும் பின் தொடர்ந்தனர்.

சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்குகந்து கஜேந்திரவரதர் கோலத்தில் இங்கு காட்சி தந்தார்.

சுமதி என்னும் மன்னனின் விருப்பதிற்கிசைந்து வேங்கட கிருஷ்ணனாய் அவதாரம் செய்தார்.

திருமாலுடன் ஊடல் கொண்ட திருமகள் வைகுண்டத்தை விட்டுப் பிரிந்து இவ்விடத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த பிருகு மகரிஷியின்
குடிசைக்கருகில் குழந்தையாய் உருவாகி நிற்க, வேதங்களில் கூறப்பட்ட தேவமகள் இவளேயென உணர்ந்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவர
தக்க பருவம் வந்ததும், ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளை ஏற்றுக்கொண்டார். திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே மந்நாதர் (என்
கணவர்) என்றுரைத்ததால் மந்நாதர் என்ற பெயரும் உண்டு.- எனவே திருமணக் கோலத்திலான ரங்கநாதராக (மந்நாதர்) இத்தலத்து எழுந்தருளினார்

இவ்விதம் ஐந்து மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியிருப்பது. இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

திரிந்துழலும் சிந்தைதனிச் செல்வே நிறுத்திப்
பரிந்து புகன்மின் புகன்றால் – மருந்தாங்
கருவல்லிக் கேணியாம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக் கேணியான் சீர்–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

—————-

61. திருநீர்மலை

இந்த தலம் அமைந்துள்ள பகுதியை காண்டவனம் என்றும், இத்தலம் அமைந்துள்ள மலையினை தோயத்தரி என்றும் புராணம் செப்புகிறது.

இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. இங்குவந்த வால்மீகி மலைமீதேறி சயனத் திருக்கோல
அரங்கன் அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே இறங்கலானார்.
ஏனோ தெரியவில்லை. இம்மூவரைச் சேவித்தும் வால்மீகிக்கு பூரண திருப்தியுண்டாகவில்லை. உள்மனதை ஏதோ வருடியது போல இருந்தது. கீழே
இறங்கியதும் கீழ்த்திசை நோக்கி கரங்களை குவித்த வால்மீகி என் பிரிய ராமன் இங்கு இல்லை. ரமனியமான ராமபிரானே எங்கே உன் பேரழகுத்
திருவுருவம் என்று ராமனைப் பிரிந்த நெஞ்சு வேகுவதுபோல நீர்மல்கப் பிரார்த்தித்து நின்றார்.

அந்தர்யாமியான பரஸ்வரூப நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு இரங்கினார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்கள் மூலமாகவே வால்மீகிக்கு
காட்சியளித்தார். அதாவது இங்குள்ள ரெங்கநாதனே ராமனாகவும், லட்சுமிதேவியே ஜானகியாகவும், ஆதிசேடன் இலக்குமணனாகவும் சங்குச்சக்கரங்கள்
சத்ருக்கனர், பரதராகவும், விஸ்வக்சேனர் சுக்ரீவனாகவும் கருடன் ஆஞ்சநேயராகவும், ரம்மியமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து
வால்மீகியின் கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம்
ராமனின் பேரழகில் அதாவது நீர்வண்ணனாக ராமன் காட்சி அளித்த தோற்றப் பொலிவை கண்டு மயங்கி நின்ற வால்மீகி இதே திருக்கோலத்தை
எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்று வேண்டி நிற்க அவ்வண்ணமே ஆயிற்றென்பது வரலாறு. தாமரை மலர் பீடத்தில் அஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பை சாளக்கிராம மாலை அலங்கரிக்க நீர்வண்ண ரூபத்தில் இங்குகாட்சி தருகிறார்.

இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய வந்தபோது தொடர்மழை பெய்து அடைமழையாக மாறி மலையைச் சுற்றிலும்
அரண்போல் நீர் சூழ்ந்துகொண்டது. திருமங்கையால் பெருமாளைத் தரிசிக்கமுடியவில்லை. ஒன்றிரண்டு நான்கைந்து ஆறேழுவென நாட்கள் கடந்து

வாரங்களாகி மாதங்களுக்குள் ஐக்கியமாகிவிட்டது. என்ன நேர்ந்தாலும் சரி எத்தனை மாதங்களாயினும் சரி இப்பெருமானைச் சேவிக்காது
செல்வதில்லையென முடிவு செய்துவிட்டார்.-அர்ச்சாவதாரத்தில் அவருக்குள்ள ஈடுபாட்டிற்கு எல்லை காட்ட முடியுமா.

கடல் நீர் கண்டு களிக்க முடியுமேயன்றி உண்டு உய்ய முடியாது. ஆற்று நிரோவெனில் வற்றும், பெருகும். அதன் மருங்கேயே காலம் முழுவதும்
வாழ்தலுமரிது. குளங்குட்டைகளில் உள்ள நீரெனில் பருவகாலம் முடிந்ததும் வற்றி போகும். அடுத்த பருவத்திற்கு அவை காத்து நிற்கும். ஊற்று நீரெனில்
எங்கு ஊற்றுள்ளது என்று தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் நன்னீர் ஊற்றாக அமையுமென சொல்ல முடியாதே. கிணற்று நீரென்றால்
வேண்டும். போதெல்லாம் முகந்து கொள்ளலாமே. கிணற்றில் நீர் வற்றினும் ஆழப்படுத்திக் கொள்ளலாமே. அதுபோன்றதல்லவா எம்பெருமானின்
நிலைகள். அதாவது கடல்நீர் போன்றதே பரம். ஆற்றுநீர் போன்றதே வ்யூகம். குளத்து நீர் போன்றதே விபவம் ஊற்று நீர் போன்றது அந்தர்யாமித்வம்.
கிணற்று நீர் போன்றதல்லவா அர்ச்சாவதாரம்.
வேண்டிய பொழுதெல்லாம் சேவித்து ஆத்மதாகம் தீர்க்கப் பெறலாமே. எம்பெருமான் கோபமாக இருந்தால் கூட பக்தி யென்னும் கயிற்றால் கட்டி
இழுத்து விடலாமே.
(அர்ச்சாவதாரமான அதிபோக்யமான வஸ்து நமக்கு எளிதில் கிடைத்திருக்க, அதைவிட்டு கிட்டுதற்கரிய பரஸ்வ ரூபத்தை ஏன் அனுபவிக்கத்
துடிக்க வேண்டும்)
“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” அப்பேர்ப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியை நீர் சூழ்ந்து விட்டால் மட்டும் சேவிக்காது சென்று
விடலாமா என்று எண்ணி அங்கேயே தங்கி இருந்தார். தங்கியிருந்தார் 6 மாத காலம். பிறகு நீர்வற்றிப் போன பின்பு பெருமாளைக் கண்குளிரக் கண்டு
பாக்களை மங்களாசாசனமாய் பொழிந்தார்.
திருமங்கையாழ்வார் வந்தபோது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் திருநீர்மலை என்றாயிற்று. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள் என்றும்,
காண்டபவன நாதன் என்னும் பெயர்களே வழக்கிலிருந்ததாக அறிய முடிகிறது.

சர்வேஸ்வரனின் மாயையே காண்டவ வனமாக ஏற்பட்டதால் உலகத்தில் மாயையில் சிக்கியிருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இத்தலத்தில் பெருமாளை
சேவித்துக் கடைத்தேறுகின்றன.
தோயம் என்ற சொல்லுக்கு பால் என்பது பொருள். ஒரு காலத்தில் இம்மலை நீர்மலையாக விளங்கப்போகிறது என்பதாலோ என்னவோ
முதலிலேயே தோயாத்ரி என்றும் பெயர் ஏற்பட்டுவிட்டது.

1. மலைஅடிவாரக் கோவில்
மூலவர்- நீர் வண்ணன், நீலமுகில் வண்ணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– அணிமாமலர் மங்கை தனிக்கோவில் நாச்சியார்

2. மலைமேல் உள்ள கோவில்கள்
மூலவர்– சாந்த நரசிம்மன் அமர்ந்த திருக்கோலம் பிராட்டியை இதயத்தில் ஏற்றுள்ளார்.
ரங்கநாதன் சயன திருக்கோலம்
திரிவிக்ரமன் (நடந்த மற்றும்) நின்ற திருக்கோலம்
தீர்த்தம்– மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி ஸவர்ண புஷ்கரணி.
விமானம்– தோயகிரி விமானம்
காட்சி கண்டவர்கள்– தொண்டைமான், வால்மீகி.

இங்கு இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் ஏகும் முன்

திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த மந்திரகிரி என்னும் ஊர் இங்கிருந்து சமீப
தொலைவில் உள்ளது.உள்ள சீத்தா ராமனாக திருமணக் கோலத்தில் காட்சி

இரங்கு முயிரனைத்து மின்னருளால் காப்பான்
அரங்க னொருவனுமேயாதல் – கரங்களால்
போர்மலை வான் வந்த புகழ்வாணன் காட்டினான்
நீந்மலை வா ழெந்தையெதிர் நின்று–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

——

62. திருவிடவெந்தை (திருவடந்தை)

இத்தலத்தைப்பற்றி வராஹ புராணத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர் கௌசிக ரிஷிக்கு கூறியதாக உள்ளது.

முன்னொரு யுகத்தில் (கிரேதா) மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக செங்கோலோச்சி வந்தான்.
அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான்.
அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.
அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து தேவர்கள்
தலைவன் திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து மோட்சம் நல்கி
சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.

இஃதிவ்வாறிருக்க சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே சுவர்க்கம்
செல்ல எண்ணி தவஞ்செய்யுங்காலை, நாரதர் வந்து, நீ மணமாகாதவள் மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது என்று சொல்லி, அங்கு
தவஞ்செய்துகொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம் இப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நாரதர் வேண்டினார்.
அம்முனிவர்களுள் காலவரிஷி என்பார் அப்பெண்ணைத் திருமணஞ்செய்துகொண்டு ஓராண்டில் 360 கன்னிகைகளை (பெரிய
பிராட்டியார் அம்சமாக) பெற்றார். இவ்விதம் 360 கன்னிகைகள் தமக்குப் பிறந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் இது இறைவன் செயலே
என்று எண்ணி அத்தனைபேரையும் கிருஷ்ணார்ப்பணம் என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட தமக்குள் தீர்மானித்திருந்தார்.
பருவமடைந்த இவர்களை திருமணஞ்செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சரஸ்வதியில் தீர்த்தாடனம் செய்ய வடதேச
யாத்திரை சென்ற சிலர் இவ்விபரந் தெரிந்து காலவரிஷியை அணுகி தமது நாடாகிய வாமகவிபுரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள
வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி யென்றும், தெய்வத்தால்தான் இக்காரியம் நடக்க வேண்டுமென்று சொல்ல அவரும் இசைந்து இங்குவந்த
வராஹமூர்த்தியைக் கருதி கடுந்தவஞ் செய்து வரலாயினார்.
இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரை அணுகி தான் திவ்யதேச யாத்திரையாக வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து தனது பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை
முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் திருமணம்
செய்து கொண்டார்.
கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது
இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன
படியால் திரு+இட+எந்தை திருவிட வெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை ஆயிற்று.

மூலவர்–லட்சுமி வராஹப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார்– கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம்– வராஹதீர்த்தம், கல்யாண தீர்த்தம்
விமானம்– கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்– பலி, காலவ ரிஷி

இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான்.
இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக
மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
இக்கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையின் ஓர்பால் அமைந்துள்ளது. இப்பெருமானைக்கூட திருமங்கையாழ்வார்
மங்களாசாசனம் செய்துள்ளார்.
360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு.
தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும்
பெயராயிற்று. வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு.அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு நான்கு பெயர்கள் உண்டு.
360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.
இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதே திருநாமம்
நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவ்விருவர் திருமேனியில் (முகத்தில்) தாடையில் பொட்டு இயற்கையாகவே
அமைந்திருப்பது கண்கூடு. இந்தப் பொட்டு திருமகள் திருமண வைபவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும்.

இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும் அவன் பத்தினியான
இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ
மூர்த்தியாய் நின்றிலங்குகிறார்.

கி.பி. 1052 ஆம் ஆண்டில் விஜய ராஜேந்திர தேவ சோழனின் 35வது ஆட்சியாண்டில் இக்கிராமம் இப்பெருமாளுக்கே தேவதானமாய்த் தரப்பட்ட
செய்தியை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து கலியாண திருவிடவெந்தை தேவர்க்கு நித்திய சிறப்புக்கும்… நாம் பிறந்த பூர நாளால் திங்கள் தோறும்
திருவிழா உள்ளிட்டு வேண்டும் நிபந்தனைகளுக்கும்.. யாண்டு முப்பத்தைந்தாவது முதல் தேவதான இறையிலியாக … கொடுக்க
வென்று திருவாய் மொழிந்தருளினாரென்று திருவோலை கூறுகிறது.

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம்
என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி. (தனிக் கோவில்
நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர்
திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக
அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம் நாயகி போன்றும் எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை
ஈண்டு நோக்கத்தக்கது)

நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்துக்
கொன்று திரியும் கொடுவினையார் – இன்று
வெருவிட வெந்தைக்கே விழுமிய தொண்டானேன்
திருவிட வெந்தகைக்கே செறிந்து.-பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

————–

63. திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்)

இந்த தேசம் பல்லவ மன்னர்களின் வரலாற்றோடு மண்டிக் கிடக்கிறது. பாகவத புராணத்தில் புண்டரீக மஹரிஷியின் வரலாற்றைச்
சொல்லி வரும்போது இத்தல வரலாறு இணைந்து வருகிறது.
இந்த முனிவர் தாமரஸ புஷ்பங்களைக் கொண்டு சஷீராப்தி நாதனை (திருப்பாற் கடலில் எம்பெருமான் பள்ளி கொண்ட கோலத்தை) வழிபட
எண்ணி ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை
அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர ஜெலத்தைக் கைகளால் இறைத்து விடலாமென இறைக்க ஆரம்பித்தார்.

இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் இவர்படும் துயரைப் போக்க காட்சி கொடுக்க எண்ணியவராய் ஒரு முதியவர் வேடங்கொண்டு இவரிடம்
வந்து அருந்துவதற்கு ஆகாரம் கேட்க, அந்த நிலையிலும் அவருக்கு ஆகாரம் கொடுக்க எண்ணிய ரிஷி தாம் கொண்டுவந்த மலர்க்கூடையை
அவரிடம் கொடுத்து இதை வைத்துக்கொண்டிரும். யாம் சென்று ஆகாரம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிச் செல்ல, அவர் ஆகாரம் கொண்டு
வருவதற்குள் எம்பெருமான் மாமல்லைக்கடலில் ரிஷியால் கொணரப்பட்ட பூக்களையெல்லாம் சூடிக்கொண்டு ஆதிசேடன் மேல் சயனித்திருக்கும்
திருக்கோலத்தில் சேவை சாதிக்க இதைக் கண்டு பேரானந்தமுற்ற ரிஷி எம்பெருமானின் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தமக்கு வேண்டுமென்று
கேட்க பெருமானும் அவ்வாறே அருளினார்.

இவ்விதம் அந்த ஸ்தலத்திலேயே சயன திருக்கோலத்தில் காட்சி யருளியமையால் தலசயனப்பெருமாள் என்னும் திருநாமம் உண்டாயிற்றென்பர்.
தற்போதுள்ள கோவிலும் வெறுந்தரையிலே (ஆதிசேடன் மீது) எம்பெருமான் சயனித்திருக்க புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார்.

மூலவர்–ஸ்தல சயனப் பெருமாள். புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
உற்சவர்– உலகுய்ய நின்றான்
தாயார்– நிலமங்கைத் தாயார், தனிக்கோயில் நாச்சியார்
தீர்த்தம்– புண்டரீக புஷ்கரணி கருட நதி
காட்சி கண்டவர்கள்– புண்டரீக மஹரிஷி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இது மிகச் சிறந்த கடற்கரை நகரமாகவும், பெரிய துறைமுகமாகவும், பன்னாட்டு வணிகர்களும்
வந்து குழுமி பண்டமாற்று செய்துகொள்ளும் மிகப்பெரிய வாணிகத்தலமாகவும் விளங்கியது. கி.பி. முதல் நூற்றாண்டில் பெரிப்பளசு தமது நூலில்
இவ்வூரினையும் பாண்டிச்சேரியையும் பற்றி குறிக்கிறார். இங்கு கிரேக்கர்கள். ரோமானியர்கள். கோணகர்களின் வாணிகக் கப்பல்கள் நிதிக் குவியலோடு
வந்து நம் நாட்டு பொருட்களையும், யானைகளையும் ஏற்றிச் சென்றனர்.
எண்ணற்றக் கப்பல்கள் வந்தும், போய்க் கொண்டும் கடலில் ஓவியக் காட்சிகளைத் தீட்டிக் கொண்டிருந்தன

சங்க காலத் தொகை நூலான பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மீது உருத்திரங் கண்ணனார் என்பார் பாடிய பாடலில் இந்த
மாமல்லபுரம் குறிக்கப்படுகிறது. அந்தக் காலத்திலேயே (நீர்ப்பாயல் (சலசயனம்) சலசயனம் என்று குறிக்கப்பட்டுவிட்டது)

வண்டல் ஆயமொடு உள்துறை தலைஇப்
புனல் ஆடும் மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்தென
புள்ஆர் பெண்ணை புலம்பு மடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி – என்ற பாடலில்
நீர்ப்பெயற்ற- நீர்ப்பாயற்று – நீர்ப்பாயலை உடையது (நீர்ப்பாயல்-சலசயனம் என்னும் கோயிலேயாகுமென) ஆராய்ச்சியாளர் குறித்துச் சென்றுள்ளனர்.
சங்க காலத்திலேயே சலசயனம் என்னும் சொல் அக்கால தமிழ்ச்சொல்லான நீர்ப்பாயல் என்றே குறிக்கப்படுவதிலிருந்து இதன் தொன்மை விளங்கும்.
சங்க காலத்தில் மட்டுமல்ல ஆழ்வாரும் இதே நீர்ப்பாயல் என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

தூயனாயு மன்றியும் சு ரும்புலாவு தண்டுழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்து மீதெல்லாம்
நீயுநின் குறிப்பினிற் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேயவேலை வண்ணனே –

இங்குள்ள ஆதிவராகர் கோவில், மும்மூர்த்தி மண்டபம், பாண்டவர் ரதங்கள், அர்ஜூனன் தவம், கண்ணபிரானின் கவின்மிகு லீலா விநோதக்
காட்சிகள், தசாவதாரக் காட்சிகள், இராமானுஜர் மண்டபம், திரௌபதி தேர், திருமாலின் சயன திருக்கோலங்கள் நின்ற, அமர்ந்த திருக்கோலங்கள் என்று
எங்கு காணினும் விஷ்ணுவின் காட்சிகளும், இலட்சினைகளும், வைணவம்எத்துனை யாழமாக வேரூன்றி தழைத்துப் பரவி விரவியிருந்ததை எண்ணிப்
பார்க்கும்போது நெஞ்சு விம்முகிறது.
பல்லவ மன்னர்கள் வைணவர்கள், வைணவம் பரப்பும் வீரர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர். இங்கு சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது
பக்தியின் அடையாளமாக ஆதிவராகர் குகைக் கோவில் அமைத்தான். இக்கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீசிம்மவிஷ்ணு போத்தாதி ராஜன் என்று பல்லவ
கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சிம்ம விஷ்ணுவுக்கு எதிரே அவனது மகன் மகேந்திர வர்மனுக்கும் இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள வராக மண்டபம் மும்மூர்த்தி மண்டபம் போன்றன சிம்ம விஷ்ணுவால் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னர்கள் தங்களுக்கு தூய
வைணவ பெயர்களையே வைத்துக்கொண்டனர் என்பதற்கு இதுவே சான்று.

ஆதிவராக மண்டபம் என்றும் ஒரு மண்டபம் இங்குள்ளது. இது இங்குள்ள மகிசாசுர மர்த்தினிக் குகையிலிருந்து தெற்கே உள்ளது. குகை
மேற்கு நோக்கிய அமைப்பு. இதன் நடுவில் உள்ள கருவறையில் வராக மூர்த்தி உள்ளார்.

கல்வெட்டுக்களில் இக்கோவில் (ஆதிவராக மண்டபம்) பரமேச்சுர மகா வராஹ விஷ்ணுக் கிரஹம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. திருமாலின் 10
அவதாரங்களைக் குறிக்கும் கல்வெட்டும் இங்குள்ளது.

ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகவும் அவைகள் கடல் கோளால் அழிக்கப்பட்டுவிட்டன வென்றும் அப்போது இந்நகரத்திற்கு 7
கோயில் நகரம் என்னும் பெயர் விளங்கியதாகவும் அறிய முடிகிறது. இதன்பின் பல்லவ மன்னன் ராஜ சிம்மன் காலத்தில் கடற்கரையில் 3 கோவில்கள்
எழுப்பப்பட்டன. இக்கோயில்களின் அமைப்பைக் கண்டு சோழமன்னன் ராஜராஜ சோழன் வியந்து போற்றியுள்ளான். இதிலும் 2 கோவில்கள் கடல்
வெள்ளத்தில் அழிந்து விட்டன. அக்கோயில் குறித்து இரண்டு பலி பீடங்களும்ஒரு கொடி மரமும் இன்றும் இருக்கின்றன. அழியாத ஒரு கோவில் இன்றும்
கடல்வயப்பட்டே உள்ளது. சுற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டு கடல் அலைகள் கோவிலின் மதிற்சுவர்களில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான்
சலசயனப் பெருமாளாகக் கொள்ளும் ஒரு கருத்தும் உண்டு. இந்தக் கோவிலில் தற்போது திருவாராதன வழிபாடுகள் இல்லை. இப்பெருமானைச் சேவிக்கும் போது இக்கோவில் அமைந்துள்ள சூழ்நிலையும் அலைமுழங்கும் திருப்பாற்கடல் நாதனையே சேவிக்கும் உணர்வைத் தரும்.

கடலுக்குள் அமிழ்ந்த கோவிலில் இருந்த பெருமாளைக் கொணர்ந்து கடற்கரைக்குச் சற்றுத் தொலைவில் ஊருக்குள் அமைத்துள்ளனர். இங்கு பள்ளி
கொண்ட நிலையில் உள்ள பெருமாளுக்கே ஸ்தல சயனத் துறைவார் என்பது திருநாமம். இக்கோவில் தான் மங்களாசாசனம் செய்யப்படட திவ்யதேசமாகும். இதுதான் தல சயனமாகும்.
சிலர் இரண்டு கோவில்களும் (அதாவது சலசயனம், தல சயனம்) மங்களாசாசனம் என்று கூறுவர்.

இருப்பினும் தற்போது பெயர் பெற்றிருப்பது ஊருக்குள் அமைந்திருக்கும் தலசயனப் பெருமாள் கோவில் மட்டுமே.

இங்கு ஸ்தல சயனப்பெருமாள் கோவில் அமைவதற்கு முன்பே சுமார் ஒரு யுகத்திற்கு முன்பிருந்தே ஆதிவராஹப் பெருமாள் கோவில் என்று ஒரு
கோவில் இருந்தது. இப்போதும் அந்தத் தலம் இங்குள்ள கலங்கரைவிளக்கத்திற்குச் செல்லும் பாதையின் ஓர் பால் அமைந்துள்ளது.
ஏனத்துருவில் என்று திருமங்கையாழ்வார் இந்தப் பெருமாளையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.-பிராட்டியின் பெயரான நிலமங்கை நாச்சியார் என்பதையும் திருமங்கையாழ்வார் இப்பாடலில் குறித்துள்ளார்.

கடற்கரைக் கோவிலின் மூலவர் தலசயனத் துறைவார். உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான் என்பதாகும். இங்கு உற்சவர் தம் கையில் ஒரு
சிறு தாமரை மொக்குடன் திகழ்கிறார் இதை அவரே மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாகவும் ஐதீஹம். பார்ப்பதற்கு மிக்க ரம்மியமானவர் இவர். கையில்
தாமரை மொட்டுடன் இருக்கும் உற்சவர் 108இல் இவர் ஒருவர்தான்.
பல்லவ மன்னர்கள் கலைத்தாய்க்குச் சிற்பக் கலையை காணிக்கையாக அர்ப்பணித்த இவ்விடத்திற்கு அர்த்த சேது என்றும் ஒரு பெயரும் உண்டு.
இப்போதுள்ள கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லையென்றும், அக்கோவில் கடலுக்குள் மூழ்கிவிட்டதென்றும்,
கடலுள் கிடந்த இக்கருமாணிக்கம் (பெருமாள்) தன் பக்தரின் கனவில் தான் இருப்பதை யுணர்த்த அந்த திவ்ய விக்ரஹத்தை எடுத்துவந்து இப்போதுள்ள
இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும் மரபுவழிக் கதைகள் உள்ளன.

இப்பெருமாள் (ஏனப்பிரான்) வலது திருக்கரத்தை தமது திருமார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்து ஞானத்தமிழ் புரிந்த நான் என்பதை
விளக்குகிறார்.

செறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி
முறிந்து விழப் பாகனையு மோதி – யெறிந்து
தருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே
திருக்கடன் மல்லைக்குள் திரி.–பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

—————

64. சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை

இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத் துணுக்குத் தகவல்கள் தருகின்றன.

சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டுமென்ற ஆவலால்
இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர். அவர்கள் ஏன் இம்மலையைத்தேர்ந்தெடுத்தனர் என்றால் முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர்
இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம். எனவே கடிகை நேரத்தில்
தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால் இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில் தாமும் உடன்வருவதாக
ஆஞ்சநேயர் கூற, கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம்
வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில்
நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான்
நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக
மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.

இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு
இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்

மூலவர்–யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்–அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
உற்சவர்–பக்தவத்ஸ்ல பெருமாள் (தக்கான்)
தீர்த்தம்–அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்
விமானம்–ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்) ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்.
காட்சி கண்டவர்கள்-  ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு
சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.

சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை – நாழிகை அசலம் – மலை எனவே கடிகாசலமானது

தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை
இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து
காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி
தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர வாயிலில்
தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில்
தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர்.

சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே
குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது.

ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும்,
தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில்
ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில்
பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று
புராணங்கூறும்.
தொட்டையாசார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும்
இங்குதான் வாழ்ந்தார்.

இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான் சிறிய மலையில்
எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள்.
அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர். தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர்.

அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல்
சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)
‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம்

சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே – நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான்–நூற்றெட்டு திருப்பதியந்தாதி

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply