65. திருநாவாய்
இவ்விடத்தில் எம்பெருமானைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த ஸ்தலம் நவ யோகிஸ்தலம் என்று
அழைக்கப்பட்டு காலப் போக்கில் நாவாய் ஸ்தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.
மூலவர்- நாவாய் முகுந்தன் நாராயணன் கிழக்கு நோக்கிய திருக்கோலம்
தாயார்- மலர்மங்கை நாச்சியார்
விமானம்- வேதவிமானம்
காட்சி கண்டவர்கள் இலட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள்.
இத்தலம் பாரத் புழை ஆற்றை ஒட்டியுள்ளது. கேரளாவில் இத்தலம் மிகவும் முக்கியத்துவமும், புராதனமும் வாய்ந்ததாகும். காசியில்
நடைபெறுவதைப் போன்று இங்கு சிரார்த்தங்களும் செய்யப்படுகின்றன.
இத்தலத்தின் எதிர்ப்புறம் சிவனுக்கும் பிரம்மனுக்கும் கோவில்கள் இருப்பதால் இது
ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகப் புகழ்பெற்றுள்ளது.
ஒரு முறை மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து பகவானை அர்ச்சித்து வர கஜேந்திரனுக்குப் பூ கிடைக்காமல்
போயிற்று. இதனால் பகவானிடம் கஜேந்திரன் தனது நிலையை விளக்கிமுறையிட பகவான் லட்சுமி தேவியைப் பூப்பறிக்க வேண்டாமென்று
சொல்லிவிட்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப்பறித்துப் பகவானை அர்ச்சிக்கலானான். பூஜையின்போது லட்சுமி தேவி
தனக்கு சமமான சிம்மாசனத்தை அளித்து அதிலமர்ந்து தன்னோடு சேர்ந்து எம்பெருமானை பூஜிக்குமாறு வேண்டிக்கொண்டாள். எம்பெருமான் மனமுவந்துபூஜையை ஏற்றுக் கொண்டு அவ்விருவருக்கும் காட்சி கொடுத்தான். இதனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் மலையாள திவ்யதேசத்தில் லட்சுமி தேவிக்குத் தனி சன்னதியுள்ளது.
————-
66. திருவித்துவக்கோடு (திருமிற்றக் கோடு)
இத்தலம் கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
துவாபர யுகத்தில் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நித்ய வழிபாட்டிற்காக விக்கிரகங்களையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர்.
முதலில் அர்ஜு னன் மஹாவிஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்தான். அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு
சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். அவர்களது வனவாசம் முடியும் வரை
இங்கேயே இருந்ததாகவும் கூறுவர். வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.
இவ்வாறு நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த
முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கிவாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி
வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விஸ்வநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர்.
வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில்
தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக
சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது.
காசி விஸ்வநாதரே இந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்கு இங்கே வந்துவிட்டதாகவும், அதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்தார் என்றும்
கூறுவர். பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.
இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்றும் இதனை வழங்குவர்.
மூலவர்- உய்யவந்த பெருமாள், அபயப்ரதன், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்-வித்துவக்கோட்டு வல்லி, பதமாஸனி நாச்சியார்.
தீர்த்தம்– சக்ர தீர்த்தம்
விமானம்- தத்வ காஞ்சன விமானம்
காட்சி கண்டவர்கள்– அம்பரிஷன் (பஞ்சபாண்டவர்கள்)
திருவித்துவக்கோடு என்னும் இத்தலம், திருமிற்றக்கோடு எனவும், திருவீக்கோடு எனவும் வழங்கப்படுகிறது
கோவிலின் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி,
தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த வண்ணங்களில் மிளிர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். பார்ப்பதற்குப்
பேரழகு பொருந்தியதாகும் இவைகள்.
திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது முக்கண்ணன் மற்ற தேவதாந்தங்கள் போல் ஸ்ரீமந் நாராயணனின் உடலின்
அங்கமே என்று நீரூபிப்பதைப் போல அமைந்துள்ளது.
இது பிற்காலத்தே செய்யப்பட்ட ஏற்பாடென்றும் கூறுவர். இருப்பினும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக திவ்ய
தேசங்களில் 10க்கு மேற்பட்ட தலங்களில் உண்டு. இரு மூர்த்திகளும் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
அம்பரீஷ சக்ரவர்த்தி பரமபதநாதனின் வ்யூக அவதாரத்தை சேவிக்க வேண்டுமென்று எம்பெருமானை இவ்விடத்திலிருந்து பிரார்த்திக்க
எம்பெருமான் நான்கு வடிவங்கொண்டு (வ்யூக வடிவத்தை) அவனுக்கு காட்சி கொடுத்து முக்தியும் கொடுத்தார். இதனால்தான் நாலுமூர்த்தி கோவில் என்னும் பெயர், இத்தலத்திற்கு உண்டானதென்றும் பிற்காலத்தே பஞ்ச பாண்டவர்களின் தொடர்பால் இத்தலத்தின் பிரசித்தி உயர்வடைந்ததென்றும் கூறுவர்.
நடுவில் இருக்கும் மூர்த்தியை தருமனும், மேற்கில் உள்ள மூர்த்தியை அர்ஜு னனும், இடப்புறம் உள்ள மூர்த்தியை பீமனும், வலப்புறம் உள்ள
மூர்த்தியை நகுல சகாதேவர்கள் பூஜை செய்ததாகவும் வரலாறு.- பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவும் கூட.
———-
67. திருகாட்கரை
இத்தலம் ஷோரனூர் – எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 2 மைல்
தொலைவில் உள்ளது.- ஆலவாய், திருச்சூர் ரயில் மார்க்கத்தில் உள்ள இருஞாலக்கொடி புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 9 மைல் தூரம். ஆலவாயிலிருந்து பேருந்தும் உண்டு.
இப்பெருமானை மலையாளத்தில் வாமன மூர்த்தி என்று அழைத்து வழிபடுகின்றனர். இந்த வாமன மூர்த்தி திருக்கோயில் கொண்டுள்ள இடமே
திருக்காக்கரா. திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து
குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதா, பத்ம ஹஸ்தங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு
எழுந்தருளியுள்ளார்.
திருமால் மூவடிமண்வேண்டி ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து மூன்றாவதடியை மாவலியின் தலையில் வைக்க எத்தணித்ததும் வந்திருப்பது
சாட்சாத் மஹாவிஷ்ணுவே என்றறிந்த மாவலி எம்பெருமானைத் துதித்து ஒரு வரம் கேட்டான். அதாவது நான் ஆண்டுக்கு ஒரு முறை உலக மக்களைச்
சந்திக்க விரும்புகிறேன். அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான். அவ்வாறாயின் இன்றைய தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக்கொண்டாடும் நாளில் உனக்கு அந்த நிலை உண்டாகுமென்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை
நினைவு கூர்ந்து மக்கள் விழாவெடுக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரும் திருவிழாவான இதை ஓணத் திருவிழா என்றழைக்கின்றனர்.
ஓணம் பண்டிகை மலையாளத்தில் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மகாபலியும்
திருவிழாவிற்கு வருவதாக ஐதீஹம். கேரள தேசத்தின் மிகப்பெருந்திருவிழா இது ஒன்றுதான்.
மூலவர்- காட்கரையப்பன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அப்பன் என்பதே மூலவரின் திருநாமம்.
தாயார்- பெருஞ்செல்வ நாயகி வாத்ஸல்யவல்லி.
தீர்த்தம்- கபில தீர்த்தம்
விமானம்– புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்– கபில முனி
கிழக்கும், மேற்குமாக இருபுறமும் வாயில்கள் அமைந்த இத்தலத்தின் முன்புறம் யானைப் பந்தல் ஒன்றும், பின்புறம் அமைந்துள்ள 8 அடி நீளமுள்ள
பலிபீடமும் கோவிலுக்கு மேலும் அழகு தருகிறது.
வாமனத்தலம் என்று வழங்கப்படும் இத்தலத்தில் மகாவிஷ்ணு மாவலிக்கு வாமனனாக எவ்விதம் காட்சியளித்தாரோ அதேபோல் காட்சி
அளிக்கிறார். இத்தலத்தின் உள்ளே நுழைந்ததும் வட்டவடிவில் அமைந்துள்ள மிகப் பெரும் கருவறை மண்டபம் காண்பதற்குப் பேரெழில் வாய்ந்தது.
நமஸ்கார மண்டபத்தில் தென்பக்கம் யட்ச பிரதிஷ்டை காணப்படுகிறது.
வடகிழக்கில் கோபால கிருஷ்ணன் சன்னதியுள்ளது. தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள நாகப்பிரதிஷ்டைகளும் கண்ணோடு கருத்தைக் கவர்வனவாகும். வெளிப்பிரகாரத்தின் தென்புறத்தில் மிகப்பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.
காற்றில் இதன் இலைகள் சலசலப்பது அதன் தெய்வீக அமைதிக்கு மேலும் புனிதம் காட்டுவதாக அமைந்துள்ளது.
இத்தலத்தில் ஒரு தனிகன் வாழை மரங்களை நட்டுப் பயிர் செய்ததாகவும், அவைகள் குலை தள்ளாமல் தொடர்ந்து அழிந்து பட்டே
போக அத்தனிகன் பொன் வாழைக்குலைகள் செய்து அப்பனுக்குச் சமர்ப்பிக்க
எம்பெருமானின் திருவருளால் வாழை மரங்கள் வளர்ந்து வாழைகள் குலை தள்ளியதாகவும், எம்பெருமானிடம் நேர்ந்து இந்த வாழைப்பழங்கள்
உருவானமையால் இதற்கு நேத்திரம் வாழைப்பழம் என்ற பெயருண்டாயிற்றென்றும் கூறுவர்.
இந்த தனிகன் சமர்ப்பித்த பொன் வாழைக்குலை ஒரு சமயம் காணாமல் போய்விட்டது. மன்னன் பலரையும் பிடித்து விசாரித்தார். அவ்வாறு விசாரித்து
வருகையில் ஒரு யோகியைத் தீர விசாரிக்காமல் மிகவும் துன்புறுத்தியதாகவும், அந்நிலையில் அந்தப் பொன் வாழைக்குலை கர்ப்பக் கிரஹத்திற்குள்ளேயே இருந்ததாகவும், கண்டறியப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட பிறகு, தன்னை மிகவும் இம்சை படுத்தியதைப் பொறுக்க முடியாத அந்தத் துறவி, சாபம் இட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உயிர்துறக்க, அந்தச் சாபம் நீங்குவதற்காக, பல முனிவர்களின் கருத்துப்படி மூங்கில் கூரை ஒன்றை உருவாக்கி, அதனுள் கோரைப் புற்களையிட்டுத் தீயை உண்டாக்கி பலநாள் எரித்து வெளிச்சத்தை உண்டாக்கி சாபம் தீர்க்கப்பட்டதாக வரலாறுண்டு.
அப்பன், என்றும் பெருஞ்செல்வ நாயகி என்றும் இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் மலையாள மண்ணில் தூய தமிழ்ப்பெயர்கள் இலங்குகின்றன.
————
68 திருமூழிக்களம்
ஹரித மஹரிஷி என்பவர் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்தார். இவரின் தவத்திற்கு உகந்து இங்கு எழுந்தருளிய எம்பெருமான்,
உமது விருப்பம் என்னவென்று கேட்க, எம்பெருமானை யாவரும் இலகுவில் அடையக்கூடிய வழியை உபதேசிக்குமாறு பிரார்த்திக்க அதற்கு, அவரவர்கள்
கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் தன்னையடைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீஸுக்தியை’ திரு மொழியை இவ்விடத்தில் அம்முனிவர்க்கு வழங்கினார்.
எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக் களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே
காலப்போக்கில் பொருள்காண இயலா வண்ணம் திருமூழிக்களமாயிற்று.
இப்பெயரே தொன்னெடுங்காலமாய் பிரசித்தமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது.
மூலவர்–திருமூழிக்களத்தான். அப்பன் ஸ்ரீஸு க்திநாதன் கிழக்குநோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– மதுரவேணி நாச்சியார்.
தீர்த்தம்– சங்க தீர்த்தம், சிற்றாறு
விமானம்- சௌந்தர்ய விமானம்
காட்சி கண்டவர்கள்– ஹாரித மஹரிஷி
பாரதப் புழை ஆற்றங்கரையில் எழில் தரும் சூழ்நிலையில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான இத்தலம் ஒரு காலத்தில் பெரிய
கலாசேஷத்ரமாக விளங்கியிருக்கிறது. ஸ்ரீஸு ஸீக்தி இங்கு அருளப்பட்டதால் எண்ணற்ற நூல்கள் இங்கு ஆராயப்பட்டு கற்றறிந்த பெரியோர்கள்
குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் ஒரு போது சிறப்புற்று இருந்துள்ளது.
இராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்கியிருந்த சமயம், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துப்போக பரதன் வந்து
கொண்டிருந்த காட்சியைக் கண்ட இலக்குவன், பரதன் இராமனுடன் யுத்தத்திற்கு வருகிறான் என்று நினைத்து பரதனைக் கொல்ல எத்தணித்தான்.
இந்த பாவத்தைப் போக்கிக்கொள்வதற்காக இலக்குவன் திருமூழிக்களத்து அப்பனிடம் வந்து அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து இலக்குவனை ஆரத்தழுவி இன் சொல்லால் உபசரித்ததாகவும், இவ்விதம் இன்சொல் விளைந்த ஸ்தலமாதலால் திருமொழிக்களம்
ஆயிற்றென்றும் கூறுவர். இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலமாகும் இது. இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம்
போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான்.
இங்கு லட்சுமணப் பெருமாளையே (ஸ்ரீராமானுஜர்) மூலவராக எண்ணி வழிபடும் வழக்கம் பிற்காலத்தே ஏற்பட்டது. அதாவது இலட்சுமணைப்
பெருமாளின் திருப்பணிக்கும் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.
—————-
69. திருவல்லவாழ்
திருக்கடித்தானத்திலிருந்து 5 மைல் தூரம் திருவல்லா. திருவல்லாவிலிருந்து 5 மைல் தூரம் திருவண் வண்டூர்
திருவண் வண்டூரிலிருந்து 4 மைல் தூரத்தில் திருச்செங்குன்றூர். இந்த திவ்யதேசத்தை இப்பகுதி வாழ் மக்கள் செங்கானூர் என்றும், சேங்கனூர்
என்றும் வழங்குகின்றனர்.
திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே 4 மைல் தூரத்தில் திருப்புலியூர் என்னும் திவ்யதேசம்.
இங்கிருந்து மீண்டும் செங்கனாச்சேரி சென்று, செங்கனாச்சேரியிலிருந்து 10 கீ.மி. கிழக்கு திசையில் சென்றால் திருவாறன்விளை (திரு ஆரம் முளா]
என்னும் திவ்ய தேசம்.
திருவல்லாவாழ் எனப்படும் இந்த திருவல்லா என்ற திவ்ய ஸ்தலத்தைப் பற்றி கருடபுராணம். மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் குறிப்புகள்
காணப்படுகிறது.
சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதிவிரதையானவர் இத்தலத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று பிரம்மச்சாரிகட்கு
உணவு படைத்து அதன்பின் தான் விரதம் விடும் பழக்கத்தைப் பெற்றவளாய் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும்
அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அப்பெண் அரக் கனை வதம் செய்ய எம்பெருமானை
வேண்டிக்கொண்டாள்.
எம்பெருமானே பிரம்மச்சரிய வேடத்தில் வந்து தோலகாசுரனை எதிர்த்தார் தோலகாசுரன் மிகக் கடுமையாக எம்பெருமானுடன் யுத்தம்
செய்யவே எம்பெருமான் சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை துண்டு துண்டாக்கியது. அவனது தலைவீழ்ந்த இடம் தலையார் என்றும் அவனது கை
விழுந்த இடம் முட்டாறு என்றும் கால்கள் விழுந்த இடம் காலாறு எனவும் இன்றும் அழைக்கப்படுகிறது. தன்னில் படிந்திருந்த ரத்தத்தை சுதர்சனர்
சத்தம் செய்த இடம் சக்கரகாலக் கடவு என்றும் வழங்கப்படுகிறது.
இதன்பின்னர் இச்சக்கரம் திருவல்லாணின் பின்புறம் போய் குடிகொண்டது. அந்த அரக்கனைக் கொன்றுவிட்டு தூவாதசியன்று (விரதம் விட) பாரணைக்கு
வந்ததாகவும், திருவாழ் மார்பை பிரம்மச்சாரி மறைப்பதைக் கண்ட அப்பதிவிரதை வந்திருப்பது எம்பெருமான் என்று ஐயுற்று திருவாழ் மார்பை
தரிசிக்க வேண்டுமென்று கேட்க, அவளின் வேண்டுகோளின்படியே திருவாழ் மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம்.
இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயருண்டானதாக வரலாறு. இந்தப் பதிவிரதையானவள் கமுகு மரத்தின் பாளையில் எம்பெருமானுக்கு
அன்னமிட்டு உப்புமாங்காயை அளித்தாளாம். இதை உண்டுவிட்டு இந்த ஆலயமிருக்குமிடம் வந்து எம்பெருமான் கிழக்கு நோக்கி திரும்பி நின்றதாலும்
திருவல்லா அல்லது திருவல்லர் என்றாயிற்றென்பர்.
கண்டாகர்ணன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன், சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டபடி மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்து
எட்டெழுத்துமந்திரத்தை ஜபிக்கலானான். அம்மந்திரத்தை ஜபிக்கும்போது கிருஷ்ணநாமம் தவிர வேறு எந்த சப்தமும் தன் செவியில் விழுகாதிருக்கும்
பொருட்டு தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு மணிகளைத் தனது காதில் தொங்கவிட்டு, எந்நேரமும்
அது ஒலித்துக் கொண்டே இருக்கும்படி தனது காதுகளை அசைத்து அதுனூடே (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து மோட்சம்
பெற்றதாக வரலாறு.
இந்த கண்டாகர்ணன் என்பவன் இந்த தலத்தில்தான் தவமிருந்தான்.
மூலவர்–திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன் கோலப்பிரான், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– செல்வத் திருக்கொழுந்துநாச்சியார் வாத்சல்ய தேவி
தீர்த்தம்- கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
விமானம்– சதுரங்க கோல விமானம்
காட்சி கண்டவர்கள்– கண்டா கர்ணன், சங்கரமங்கலத் தம்மையார்
ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று சொன்னால்தான் யாருக்கும் தெரியும்.
மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்று மட்டுமே இத்தலத்தில் பெருமானை வழிபட
பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் அந்தக் காலத்தில் நம்பூதிரிகள் அரைகுறை ஆடையுடன் பூஜையில் ஈடுபட்டிருந்ததால் பெண்கள்
அனுமதிக்கப்படவில்லை.
இத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானதென்றும் இன்றும்கூட பூமிக்கடியிலிருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு
தண்ணீர் வருவதாகச் சொல்லப்படுகிறது.
இங்கு நம் கருத்தைக் கவர்வது ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல்தான் 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் கொண்ட இக்கல் பூமிக்கடியில் எவ்வளவு
ஆழத்தில் சென்றுள்ளது என்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லாத இப்பகுதியில் இப்படியொரு பெருங்கல்லை கொணர்ந்து வைத்தது பேராச்சர்யம்.
அண்மையில் இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தாலான கருடாழ்வாரை வைத்துள்ளார்கள். இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு
(கொடிக்கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்துள்ள கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து இதோ புறப்படுகிறேன் என்று
சொல்வதைப் போல வெகுநேர்த்தியாய் எம்பெருமானை (கோலப்பிரானை) பார்ப்பது போல் அமைந்துள்ள இந்த தோற்றம் காண்டொறும் காண்டொறும்
வியக்கத்தக்கதாய் இருப்பதுடன் காலை நேரத்து வெய்யில் இதில் பட்டு ஜொலிக்கும் பேரழகு சொல்லுந் தரமன்று.
பொதுவாக தமிழ்நாட்டில் திவ்ய ஸ்தலங்களில் உள்ள கொடிக்கம்பத்திற்கும் கேரளத்து திவ்ய ஸ்தலங்களில் உள்ள
கொடிக்கம்பத்திற்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. தமிழ்நாட்டில் கொடிக் கம்பத்தில் சிற்பங்களையோ
விக்கிரகங்களையோ காண்பதரிது. ஆனால் மலையாளத்து திவ்ய தேசங்களில் இந்த துவஜ ஸ்தம்பத்தில் சுமார் 6 அல்லது 7 அடி உயரத்தில்
துவஜஸ்தம்பத்தைச் சுற்றி அபூர்வமான சிற்பங்களையும், விக்ரகங்களையும், வடித்துள்ளார்கள். இவைகள் அதிதேவதைகளாகவும் சில ஸ்தலங்களில்
நவக்கிரகங்களாகவும் வடிக்கப் பட்டுள்ளன. இங்கு ஒரு சில பக்தர்களின் இல்லங்களில் வைத்து பூஜிக்கப்படும் திருவாராதன விக்ரகங்களையொத்தே
இவைகள் காணப்படுகின்றன.
மலையாளத்து திவ்ய தேசங்களில் துவஜஸ்தம்பத்தில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் யாவற்றிலும் இத்தலத்துச் சிற்பங்கள் மிகவும் வசீகரத்
தோற்றத்துடனும் தெய்வீகப் பொலிவுடனும் திகழ்வது இத்தலத்திற்கே உரித்தான ஒரு தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதும், துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு
விடத்திலில்லாத தனிச் சிறப்பாகும்.
திருவட்டாறு திவ்ய தேசத்தைப் போன்றே இங்கும் மூலஸ்தானத்திற்கு முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் மீதேறி இறைவனை வழிபட யாரையும்
அனுமதிப்பதில்லை. நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு பூஜைகள் செய்யும் போத்தி மட்டும் மண்டபத்தின் மீதேறி இறைவனை தெண்டனிட்டு
வணங்கிவிட்டு தனது பூஜைக் கிரமங்களை ஆரம்பிக்கிறார்.
ஸ்ரீ வல்லபனுக்கு பந்தீராயிரம் என்ற வழிபாடு இங்கு பக்தர்களால் சிறப்பாக செய்யப்படும் ஒன்றாகும். அதாவது 12000 வாழைக்காய்களை
குலைகுலையாய் வாங்கி ஏதாவது ஒரு வேள்வி செய்து அந்த வேள்வியில் பழுக்கவைத்துமேளதாளமுடன் புதுக்கூடைகளில் சுமந்து வந்து
திருவல்லாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவர் பாதிப் பழங்கள் நிவேதனம் ஆகும்.
மீதி 6000 பழங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்படும்.
தூவாதசியன்று எம்பெருமானுக்கு இங்கு உணவு படைக்கப்பட்டதைப் போலவே இன்றும் கமுகு பானையில் பிரசாதமும் உப்பு மாங்காயும்
எம்பெருமானுக்கு நைவேத்யமாக அமுது படைக்கப்படுகிறது. இங்கு கமுக மரங்கள் செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் காட்சியை வானார் வண்கமுகும்
மதுமல்லிகை கமழும் என்றும், பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் என்று நம்மாழ்வார் தம் பாசுரங்களில் கமுகின் செழுமையை
எடுத்தாண்டுள்ளார்.
————
70. திருக்கடித்தானம்
கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள்
விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், இத்திருக்கடித்தானமும் ஒன்று.-அஃதாவது கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் மோட்சமும் கிட்டும் என்பது ஐதீஹம்.
இப்பகுதி வாழ் மக்கள் திருக்கடித்தானம் என்றும், திருக்கொடித்தானம் என்றும் இத்தலத்தை விளிக்கின்றனர்
ருக்மாங்கதன் என்ற சூர்ய வம்சத்து மன்னன் ஆட்சி செய்த இடமென்றும் இவனது நந்த வனத்தில் பூத்திருந்த மிக அழகான புஷ்பங்களை
யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்ந்தனர் என்றும், இவ்வாறு மலர்கள் மறைவதை அறிய முற்பட்ட
மன்னன் தன் தபோவலிமையால் தேவர்களையும் தேவ மகளிர்களையும் மலர்கொய்ய வந்த விடத்து பிடித்துக்கொள்ள, தேவர்கள் விண்ணுலகம்
(தேவருலகம்) செல்ல இயலாத நிலை ஏற்பட இதற்குப் பிராயச்சித்தம் கோரி நிற்க, ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும்
பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்கட்குக் கொடுத்தால்தான் அவர்கள் மீண்டும் தேவருலகம் செல்ல முடியுமென்று அசரீரி ஒலித்தது.
அதுபோலவே ருக்மாங்கத மன்னன் தேவர்களை அழைத்து வந்து இத்தலத்து எம்பெருமான் முன்னே நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின்
பலனை அவர்கட்கு கொடுக்கவே அவர்கள் தேவருலகெய்தினார்.
நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.
மூலவர்– அற்புத நாராயணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கற்பகவல்லி
தீர்த்தம்– பூமி தீர்த்தம்
விமானம்– புண்யகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்– ருக்மாங்கதன், தேவர்கள்
இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோர் மிக்க பேரழகு வாய்ந்தவர்கள். இத்தலத்திற்குள்ளாகவே தனித்தனி
சன்னதிகளாக இரண்டு சன்னதிகளும் அமைந்துள்ளன.
பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே
இந்தத் தலம் சகாதேவன் கட்டிய ஸ்தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண ஷேத்திரங்களில் மூன்று
ஷேத்திரங்கள் உடனடியாக மோட்சமளிக்க வல்ல தென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது.
சகல சாஸ்திரங்களும் கற்றுத்துறை போய மேதாவியான சகாதேவன் ஜோதிடக்கலை வல்லுனன். அவனால் பிரதிஷ்டை (ஸ்தாபிக்கப்பட்ட)
செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரகம் ஒவ்வொரு 60 ஆண்டுகட்கு ஒரு முறையும் புதிய சக்தியைப் பெற்றுக்கொண்டே சென்று கலியுகம் முடியும் தறுவாயில்
ஜோதிமயமாய் மாறி விண்ணுள் கலக்குமாம்.
இத்தலத்து எம்பெருமானின் பெயர் அற்புத நாராயணன் என்பதாகும்.
இதனை நம்மாழ்வார்.-அற்புதன் நாராயணன் அரிவாமனன்
நிற்பது மேவி இருப்பதும் என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே – என்று எடுத்துரைத்தார்.
———-
71. திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத் தாமன் இறந்துவிட்டான் என்று சொல்ல வேண்டிய
தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி (அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில்
உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.
தான் சொன்ன பொய்யே துரோணரின் இறப்புக்குக் காரணமாய் இருந்ததை எண்ணி தர்மன் அதற்குப் பெரிதும் மனம் வருந்தி போர் முடிந்த
பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக தவமிருந்ததையும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தை தர்மன்
புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தர்மனே பிரதிஷ்டை செய்தாரென இங்கு வழங்கப்படுகிறது.
தர்மபுத்திரன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் பெரிதும் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே
குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்று அவர்கட்கு தந்தை யொப்பத் திகழ்ந்த திருமால் இவ்விடத்து அவர்கட்கு காட்சி
கொடுத்ததால் “இமையவரப்பன்” என்ற திருநாமம் இவ்விடத்து எம்பெருமானுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறிய
முடிகிறது.
மூலவர்–இமையவரப்பன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– செங்கமலவல்லி
தீர்த்தம்– சிற்றாறு
விமானம்– ஜெகஜோதி விமானம்
காட்சி கண்டவர்கள்– சிவன்
இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன்.
நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் எடுத்தாண்டுள்ளார்
————
72. திருப்புலியூர் (குட்டநாடு)
ஒரு சமயம் மன்னன் சிபியின் மைந்தன் அரசாண்டு வரும்பொழுது அவனுக்கு கடுமையான நோயும், நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அச்சமயம் அந்நாட்டிற்கு வருகை தந்த சப்தரிஷிகளை வேண்டிய மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் உண்டான பேராபத்தைப் போக்கினால்தான்
முனிவர்கட்குத் தானம் கொடுப்பதாகக் கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்டு சினந்த ரிஷிகள் மன்னர்களிடம் முனிவர்கள் யாதொரு
தானமும் பெறக்கூடாது. அதிலும் உன் போன்ற மன்னர்களிடம் பெறுதல் பெரிய பாவமென்று சப்தரிஷிகள் மறுத்துவிட்டனர்.
இருப்பினும் சிபியின் மைந்தனான வ்ருஷாதர்பி மந்திரிகள் மூலமாக மறைமுகமாக தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைக்க அதையும்
முனிவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் வெகுண்ட மன்னன் ஒரு யாகத்தைச் செய்து அந்த யாகத்தில் தோன்றிய தேவதையை சப்தரிஷிகளைக்
கொல்வதற்காக ஏவினான்.
ரிஷிகள் மஹாவிஷ்ணுவைத் துதித்து நிற்க, அம்மாத்திரத்திலேயே மஹாவிஷ்ணு இந்திரனை அனுப்பி இந்திரன் புலியாக மாறி தேவதையைக்
கடித்துக் குதறினான். இதனால் திருப்புலியூராயிற்று என்பர்.
ரிஷிகள் திருமால் ஒருவன்தான் பரம்பொருள் என்று இவ்விடத்து நிர்ணயம் செய்ததால் திருமால் அவர்கட்கு மாயப் பிரானாகக் காட்சி
கொடுத்து மோட்சமளித்தார்.
மூலவர்– மாயப் பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம்– ப்ரஞ்ஞா ஸரஸ்
விமானம்– புருஷோத்தம விமானம்
காட்சி கண்டவர்கள்– சப்த ரிஷிகள்
பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமனும் திருமாலைக்குறித்து தவம் புரிந்தான். பீமனைப்
போன்றே அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பைக் கொண்டுத் திகழ்கிறது இத்தலம். இப்பகுதியில் வாழும் சற்று விஷயமறிந்த பெரியவர்கள்
இதனை பீமஷேத்ரம் என்றே கூறுகின்றனர்.
இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள உயர்ந்த கொடிமரம் (துவஜஸ்தம்பம்) வட்டவடிவமான (மூலஸ்தானம்) கருவறை அமைப்பும் மிக்க
எழில் வாய்ந்ததாகும்.
——————–
73. திருவாறன் விளை (ஆரம்முளா)
பஞ்சபாண்டவர்களுள் அர்ஜு னனால் புதுப்பிக்கப்பட்ட இத்தலம் இன்றும் அவன் பெயரைப் பறை சாற்றிக் கொண்டு அர்ஜு னன் அம்பலம்
என்று சொல்லத்தக்க அளவில் சிறந்து விளங்குகிறது.
பாரத யுத்தத்தில் கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் பதிந்துவிட்டது. அதனைத் தோள் கொடுத்து எடுத்து நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்த
கர்ணன் அச்சக்கரத்தை தோள்கொடுத்து தூக்கும்போது அர்ஜு னன் அம்பெய்து கர்ணனைக் கொன்றான். இவ்வாறு நிராயுத பாணியான
கர்ணனைக் கொன்றது அர்ஜு னனுக்கு நியாயமாகப் படவில்லை. யுத்த தர்மத்தின்படி அது பெரும் பாவம் என்றும் அதிலும்தன்போன்றோர் செய்யத் தகாத காரியமென்றும் பெரிதும் வருந்தினான்அர்ஜு னன்.
ஏற்கனவே பாண்டவர்கள் கேரள தேசத்தில் மறைந்து வாழும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலத்தைப் புதுப்பித்தனர். அதாவது
ஒவ்வொருவரும் ஒரு திவ்ய தேசத்தை தெரிவு செய்து தமது எண்ணத்தை ஈடேற்ற தவமியற்றினர்.
அர்ஜு னன் இந்த இடத்தில் இருந்த பெருமாளைத் தியானித்து தவமிருந்ததாகவும், இத்தலத்திற்கு அருகாமையில் இருந்த வன்னி மரத்தில்
தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அந்த வன்னிமரம் இத்தலத்தருகே இருந்தது என்பதும் ஐதீஹம்.
போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு முரணாக கொன்றதால் தனது நெஞ்சம் அமைதியுறவும், யுத்தத்தில் உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும்
மீண்டும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்ததாகவும் எம்பெருமான் பார்த்தசாரதியாகவே காட்சியளித்ததாகவும் ஐதீஹம்.
அர்ஜு னன் இரண்டாம் முறையாக வந்த போதே இத்தலத்தை புதுப்பித்ததாகவும் ஐதீஹம்.
மூலவர்
திருக்குறளப்பன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– பத்தமாஸனித்தாயார்
தீர்த்தம்- வேதவியாச தீர்த்தம். பம்பா தீர்த்தம்.
விமானம்– வாமன விமானம்
காட்சி கண்டவர்கள்- பிரம்மன், வேதவியாசர், அர்ஜு னன்.
எம்பெருமானுக்கு திருக்குறளப்பன் என்பது வாமனவதாரத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. பிரம்மன், வாமன
அவதார மூர்த்தியை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு.
இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் வன்னி மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ் தம்பத்தின் முன்பு குவித்து
வைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில்
இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜு னன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது
இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும் துலாபாரம்கொடுக்கும் முறை நடைமுறைப் பழக்கத்திலிருந்து வருகிறது இங்கு
துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது.
இங்கு அர்ஜு னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி சிலைஒன்று உள்ளது. இவரது கரம் மூளியாக இருந்ததாகவும், கோவில் வேலை
பார்க்கும் தந்திரி. தங்கத்தால் கை செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது.
பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ள இக்காட்சி இக்கோவிலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
இந்த தலத்தில்தான் புதுத்தைவமான ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக
சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் பஜனைப் பாடல்களுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிடுங்கிச் சென்று விட்டனர். பிரம்மன் திருமாலைத் துதித்து
நின்றான். திருமால் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார்.
இதற்கு நன்றி கூறும் முகத்தான் இத்தலத்தில் பிரம்மன் திருமாலைக் குறித்து தவமிருந்தான் என கூறுவர்.
————–
74. திருவண்வண்டூர்
திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் இந்தப் பக்கத்தில் அழைக்கப்படுகிறது.
ஒரு சமயம் நாரதனுக்கும் பிரம்மனுக்கும் வந்த வாக்கு வாதத்தில் நாரதனை பிரம்மன் சபித்துவிடவே பிரம்மனைவிட்டுப் பிரிந்த நாரதன்
இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்துக் கடுந்தவமிருந்து சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவத்தை பற்றிய ஞானத்தைத் தமக்கு உபதேசிக்க
வேண்டுமென்று கேட்க, இவன் தவத்தை மெச்சிய திருமாலும் அவ்விதமேயருளினார்.
அதனால் திருமாலே பரதத்துவம் என்றும் சகலமும் அவரிடமே அடக்கமென்றும் அவரைப் பூஜிக்கும் முறை துதிப்பாக்கள் ஆகியன
கொண்டதாக நாலாயிரம் அடிகள் கொண்ட ஒரு நூலை நாரதீய புராணம் என்ற பெயரில் இவ்விடத்திலே இயற்றியதாக வரலாறு.
மூலவர்– பாம்பனையப்பன், கமலநாதன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்– பம்பை தீர்த்தம்
விமானம்– வேதாலய விமானம்
காட்சி கண்டவர்கள்– நாரதர்.
பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால்
நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது.
இவ்வூரில் பூமியைத் தோண்டும்போது புதிய பெருமாள் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு இவ்விடத்தில் கொணர்ந்து புதிய
மண்டபங்களும் சன்னதிகளும் ஸ்தாபிக்கப்பட்டன.
இத்தலம் வட்டவடிவான கருவறையுடன் கூடியிருப்பதும் சங்கு, சக்கர, கதா, பத்ம பானியாகப் பெருமாள் மேற்கு நோக்கி
எழுந்தருளியிருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
இத்தலத்திற்குள் நுழையும் போது (மேற்கு புற நுழைவாசலில்,வாசலின் மேல் காளிங்கனின் மேல் (காளிங்கன் என்னும் கொடிய
விஷங்கொண்ட ஐந்து தலை நாகம்) கண்ணன் நர்த்தனமிடுவதுபோல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு பொருந்தியதாகும். இக்கண்ணன்
காளிங்கனின் தலை மீது ஒரு காலை ஊன்றிக்கொண்டு ஒரு காலை வலப்புறம் வளைத்து தூக்கித் தனது இரண்டு கரங்களையும் (பேலன்ஸ் செய்வது போல) நீட்டி நிற்கின்ற காட்சி காணக் காணக் கண்ணையும் கருத்தையும் விட்டு அகலாத ஒன்றாகும். இக்கண்ணன் தூய நீல நிறத்தில் அமைந்திருப்பது
இன்னுமோர் பேரழகாகும்.
கண்ணனைத் தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டு பக்கங்களிலும் தசாவதாரக் காட்சி மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற பம்பை நதிக்கு வடக்கே இத்தலம் அமைந்துள்ளதை ‘தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’ என்று
நம்மாழ்வார் தன் பாசுரத்திலும் சுட்டுகிறார்.
பஞ்ச பாண்டவர்கள் சம்பந்த முற்ற ஸ்தலங்களில் இந்த தலம் அடிக்கடி விழாக்களும் முக்கியமான நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடமாகும்.
————
75 திருவனந்தபுரம்
திவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை)
காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார்.
தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன் தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர்
தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான்
உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத் தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார்.
அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை
அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன்
காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது.
முனிவரும் மிகுந்த பக்தி ஏக்கத்தோடு பல இடத்திலும் தேடியலைந்து இறுதியில் அனந்தன் காட்டில் கடலோரமுள்ள ஒரு இலுப்பை மரப்பொந்தில்
அக்குழந்தையைக் கண்டுவிட்டார்.
அம்மரம் திடீரென நிலத்தில் வீழ்ந்து அனந்தசயன வடிவமாக இறைவன்காட்சியளித்தார். அவ்வடிவின் தலை திருவல்லத்திலும் (அனந்தபுரம்
துறைமுகத்திலிருந்து 3 மைல்) பாதம் திருப்பாப்புரத்திலும் (அதற்கெதிர்புறம் 5 மைல்) சரீரம் திருவனந்தபுரத்திலும் அமையக்கண்ட அவர் வியந்து, திகைத்து பயந்து தமக்கு மிகச்சிறு வடிவாகக் காட்சியளிக்க வேண்டுமென்று கேட்க அவ்விதமே அம்முனிவர் கையில் வைத்திருந்த யோக தண்டத்தின்
அளவிற்குத் தம்மைச் சுருக்கி காட்சியளித்தார்.
தமக்கு ஏற்பட்ட பாக்கியத்தை எண்ணி முனிவர் வியந்து நிற்க, இம்முனிவரின் பால் பற்றுக்கொண்ட எம்பெருமான் தனக்குத் துளுவம்சத்தைச்
சார்ந்த பிராம்மணர்களே நித்ய பூஜை செய்யவேண்டுமென வேண்டியதாகவும் அவ்விதமே இன்றளவும் நடைபெற்று வருவதாகவும் ஐதீஹம்.
இப்புரத்தைப்பற்றிய மற்றொரு கதை வில்வமங்கலத்திலிருந்த நம்பூதிரி வகுப்பைச் சார்ந்த சன்னியாசி ஒருவர் அனந்த சயன வடிவிலிருந்த
இப்பெருமானைக் கண்டு மோகித்து வழிபட ஆரம்பித்தார். ஒரு நாள்நிவேதிக்க (நைவேத்தியத்திற்கு, வழிபாட்டிற்கு) கைவசம் யாதுமில்லாததால்
அருகிலிருந்த மாமரத்தில் சில மாங்காய்களைப் பறித்து ஒரு சிரட்டையில் (தேங்காய் மூடியில்) வைத்து நைவேத்தியம் செய்தார். இதை நினைவு கூறும்
முகத்தான் இன்றும் தங்கத்தாலான தேங்காய்ச் சிரட்டையில் மாங்காய் ஊறுகாய் வைத்து நைவேத்யம் செய்யும் முறை இங்கு வழக்கத்தில் உள்ளது.
இவ்விரண்டு பாரம்பரியங்களையும் இன்றும் பின்பற்றி இக்கோவிலின் பூஜா உரிமைகள் துளு நாட்டவர்க்கும், நிர்வாகம் நம்பூதிரிகளிடமும் விடப்
பட்டுள்ளது.
மூலவர்– அநந்த பத்மநாபன். புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்
தாயார்– ஸ்ரீ ஹரி லட்சுமி
தீர்த்தம்– மத்ஸ்ய தீர்த்தம், பத்மதீர்த்தம், வராஹ தீர்த்தம்
விமானம்- ஹேமகூட விமானம்
காட்சி கண்டவர்கள்– இந்திரன், திவாகர முனிவர் ஏகாதச ரூத்ர்கள்.
பலராமன் தீர்த்தயாத்திரையின் போது இந்தச் ஸியானந்தூரபுரத்தைத் (திருவனந்தபுரத்தை, தரிசித்தார்) என்று பாகவதம் கூறுகிறது.
எம்பெருமானின் திருமேனி மிகப்பெரிய வடிவமானதால் சிரசு, உடல், திருவடிகள் இவற்றை மூன்று வாசல்கள் வழியே தனித்தனியே தரிசிக்க
வேண்டும். திருவட்டாற்றிலும் இதேபோன்று மூன்று வாசல்கள் வழியேதான் எம்பெருமானைத் தரிசிக்க வேண்டும்.
இச்சன்னதியின் தெற்கில் (தெற்குப் பிரகாரத்தில்) யோக நரசிம்மனும், சன்னதிக்கு முன்புறம் ஆஞ்சநேயரும், பின்புறம் கிருஷ்ணனும்
காட்சியளிக்கிறார்கள். இந்த அனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் எத்தனை வெயில் அடித்தாலும் உருகுவதே
இல்லை.
இத்தலத்திற்கு அஸ்திவாரமிட்டு வேலையைத் துவக்கியவர் சேரமான் பெருமாள் நாயனார் என்று (கி.பி. 1050) கல்வெட்டுக் கூறுகிறது.
கோவிலைச்சுற்றி நான்கு புறமும் உள்ள பிரகாரம், அதில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள 366 தூண்கள், ஒவ்வொரு தூணுக்கும் ஒரு விளக்கேந்திய
பாவை, தூய்மையில் கொலுவிருக்கும் பிரகாரங்கள், காணக் கண்கொள்ளாக் காட்சியாகும்.
கி.பி. 1673 முதல் 1677 வரை பூஜையின்றி இக்கோவில் அடைக்கப்பட்டிருந்தது. 1686 இல் இக்கோவில் தீப்பிடித்து மூலவிக்ரகம் தவிர
பிறவெல்லாம் பழுதுற்றது. கி.பி. 1729ல் ராஜாமார்த்தாண்ட வர்மாவினால் புதுப்பிக்கப்பட்டு மரத்தாலான மூல விக்ரகம் அகற்றப்பட்டு 12000, சாளக்கிராமத்தினாலும், கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியே இப்போது நாம் காண்பதாகும்.
1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மர், தனது உறவினர்களுடனும், தளபதி சேனா பரிவாரங்களுடன் இச்சன்னதிக்கு வந்து
தன் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யம் மற்றும் பிற செல்வங்களையும் அனந்தபுரம் பத்மநாபனுக்கே பட்டயமெழுதிக்கொடுத்து தன் உடைவாளையும் அவரின்
திருப்பாதத்தில் வைத்து எடுத்துக்கொண்டு பரிபூர்ண சரணாகதி அடைந்தார்.
அன்றுமுதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் பத்ம நாப தாசர் என்றே அழைக்கப்பட்டனர். தினமும் காலையில் வந்து பத்மநாபரை வணங்கி
ஆசீர்வாதம் பெற்று ஆட்சி நடத்தினர்.
இன்று அரசபதவியில்லாவிட்டாலும், ராஜ்யம் உருமாறி அம்மன்னர் பரம்பரை இன்று நமது குடியரசின் கீழ் சாதாரண பிரஜைகளாக
வாழ்ந்தபோதும், அன்றுபோல் இன்றும் திருவிதாங்கூர் ராஜா தினமும் காலையில் ஆலயத்திற்கு வந்து பத்மநாபரை வழிபட்டுச் செல்லும் பண்பு
மாறவில்லை. கேவலமான மண்ராஜ்யம் போனாலும், தூய்மையான பக்தி சாம்ராஜ்யத்தை விடாது போற்றிக் காக்கும் அம்மன்னர் பரம்பரையின்
மகத்துவம்தான் என்னே.
இன்றும் அவர்கள் பத்மநாப தாசராகவே வாழ்ந்து வருகிறார்கள். தனி வழியே வந்து (தரிசனத்தின் பொருட்டு) தனிவழியே திரும்பிச் செல்கிறார்கள்.
அப்போது வேறு யாரையும் தரிசனத்திற்கு அனுமதிப்பது இல்லை ராஜா திருச்சன்னதியை நோக்கி குனிந்து நமஸ்கரித்து விரல்களால் தரையைத்
தொட்டுத்தொட்டுத் தன் மார்பில் பக்தி சிரத்தையோடு அந்த விரல்களை வைக்கும் பாணி, ஓ நெஞ்சுருகச் செய்து கண்களில் பக்தி நீரை
வரவழைக்கிறது.
இந்தியா சுகந்திரம் பெற்றபின், திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டாலும் இக்கோவில் மட்டும் அரசால் எடுக்கப்படாது
மகாராஜாவால் மட்டுமே நிர்வகிக்கப் பட்டுவந்துள்ளது.
இக்கோவிலின் உள்ளே மண்டபம் ஒன்று பல இசைத் தூண்களைக் கொண்ட தாயும், ஒவ்வொன்றிலும் தசாவதாரச் சிறப்பை விளக்கும் சித்திர மேம்பாட்டுடன் கூடியதாகவும் விளங்குகிறது. இதைக் குலசேகராழ்வார் கட்டினார் என்றும் கூறுவர். ஆனால்
கல்வெட்டு செய்தி ராமவர்ம மகாராஜாவால் கட்டப்பட்டதென்றும் கூறுகிறது. ஆயினும் இதைக் குலசேகர மண்டபம் என்றழைக்கப்படுவதே
மரபாயிருந்துவருகிறது. இதனைச் சப்த ஸ்வர மண்டபம் என்றும் கூறுவர்.
இதில் உள்ள தூண்களை லேசாகத் தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு இசைக் கருவியின் நாதம் எழுகிறது. ஒரு தூணில் எழுகின்ற
நாதத்தை மற்றொரு தூணில் காது வைத்து ரசிக்கலாம்.
இராமானுஜர் இங்குவர எத்தனித்தபோது எதிரிகள் இவரைக் கொல்ல நினைக்க (அல்லது தமது வழிபாட்டுரிமையை மாற்றிவிடக் கூடுமென
இங்குள்ள பிராம்மணர்கள் அஞ்சி அனந்தனைச் சரணடைய) இறைவனே இராமானுஜரைக் காத்து திருக்குறுங்குடி சேர்ப்பித்ததாகக் கூறுவர். இதனை
குறுங்குடி ஸ்தல வரலாற்றிலும் காணலாம்.
மன்னர்கள் பத்மநாத சுவாமிக்கு மூரஜபம் என்று கூறப்படும் திருவிழாவை பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம். மன்னர்
மார்த்தாண்டவர்மர் 1750 ஆம் ஆண்டில் நான்கு வேதங்களையும் ஆலயத்தில் 8 தடவைகள் முழுமையாகக் கூறக்கேட்டு ஆலயம் முழுதும் லட்சதீபங்கள்
ஏற்றி கொண்டாடினாராம். கோபுரத்தின் இந்த திருவிளக்கு தோற்றம் பத்மதீர்த்தம் என்ற திருக்குளத்தில் மிக அழகாக பிரதிபலிக்கும். இச்சிறப்பான
திருவிழா 1960 வரை தொடர்ந்து கொண்டாடப்பட்டது.
இன்னொரு சிறப்பான திருவிழா ஆராட்டு என்பதாகும். இந்த விழாவில் மகாராஜா, திவான் மற்ற உயரதிகாரிகள் சுவாமியின் குடை மற்றும்
சின்னங்களுடன் ஊர்வலமாக 3 மைல் தொலைவில் உள்ள அரபிக் கடலுக்குள் சென்று திரும்புவர். சுவாமியை ஊர்வலமாய் எடுத்துச் சென்று பின்பு நீராட்டி
பின் எடுத்து வரும். இவர்கட்கு முன் திருமால் தீய சக்திகளை அழிக்க வில் அம்புடன் வேட்டைக்குச் செல்வர். மன்னர்கள் சுவாமியுடன் காட்டுக்குப்போய்
வேட்டையாடி பின்னர் கடலில் நீராடித் திரும்புவர்.
இக்கோவிலை கட்டி முடிக்க 40 ஆண்டுகள் ஆயிற்று 4000 கொத்தர்கள், 6000 ஆட்கள், 100 யானைகள், யானைப் பாகர்கள் வேலையில்
ஈடுபட்டனர். 30 மைல் தொலைவிலிருந்து பெரிய தேக்கு மரம் ஒன்று கொணரப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு துவஜஸ்தம்பமாக நிறுத்தப்
பட்டது. ஆலயத்தின் வெளிப்பிரகாரம் மட்டும் அமைக்க 7 ஆண்டுகள் ஆயிற்றாம்.
இங்கு ஊட்டுப்பறை என்ற பெயரில் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது. இப்போது இது வழக்கிலில்லை.
துவஜஸ்தம்பத்தின் அருகில் உள்ள குலசேகரமண்டபத்தில் அழகிய சிற்பங்கள் பலவுள. யாளி உருவமும் அதன் வாயில் பந்தும் கொண்ட
தோற்றம் தனிச் சிறப்பு கொண்டது ஒவ்வொரு தூணிலும் ஒரு தீபம் ஏந்திய பெண்மணி (பாவைவிளக்காக) இருப்பதும் பேரழகு வாய்ந்தது. இம்முறையானது மலையாளத்தின் பிற சன்னதியில் இருப்பினும் இங்குமட்டுமே பேரழகு பொருந்தியதாய் உள்ளது.
சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது. சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன் அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று ‘தொடுத்த
தூவாய்முடி சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’ – என்கிறார் இளங்கோவடிகள்
ஆடக மாடம் – திருவனந்தபுரம்
சேடம் – மலர்மாலை.
————-
76. திருவட்டாறு
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் தொடுவெட்டி என்ற ஊரில் இறங்கி இங்கிருந்து 6 மைல் தூரம் சென்றும்
இத்தலத்தை அடையலாம். இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணம், கருட புராணம் போன்றவற்றால் அறிய முடிகிறது.
ஆதிதாமஸ்தலம் என்று இத்தலத்திற்குப் பெயர்.
கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது. இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள்
முற்பட்டது என்று மதிலக கிரந்தம் என்ற நூலில் சொல்லப் பட்டுள்ளது.
திருவட்டாறு தேவஸ்தானத்தில் கிடைத்த வட்டெழுத்துக்களாலான ஓலைச்சுவடியில் இத்தலம் திரேதா யுகத்தில் தோற்றுவிக்கப்பட்டது எனக்
கூறப்பட்டுள்ளது.
பிள்ளைப் பெருமாளையங்காரின் விபவனாலங்காரம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய கவிதை ஒன்று உள்ளது.
மாலைமுடிநீத்து மலர்ச்செம்பொன்னடி நோவ
பாலைவனம் நீபுகுந்தாய் …. கேசவனே
பாம்பனை மேல் வாட்டாற்றில் துயில்கொள்பவனே
திருக்குருகைப் பிரான் எழுதிய மாறன லங்காரம் (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) இத்தலம் பற்றி புகழ்ந்துள்ளது.
கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான கவிகுல திலகம் களக்கூத்து குஞ்சன் நம்பியார் இத்தலம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
எட்டெழுத்து மந்திரத்தின் பொருளான ஆதிகேசவனே என்னை ஒருவட்டமாவது உன் திருக்கண்களால் நோக்காயோ
வேனாடு என்பது திருவிதாங்கூர் பகுதி. இப்பகுதியில் இசைச் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் இப்பெருமாள் மீது கீர்த்தனங்கள்
இயற்றியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா,
ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வார் பரவிப் போற்றும்
மாறாப் பேரன் புருவாம் பண்புடை சைதன்யர் வாழ்த்தும்
ஆறார் திருவாட் டாற்றின் ஆதிகேசவப் பெருமாள்
மாறாய் என் உள்ளத்தென்றும் மலரடி வணங்கி னேனே’– என்று கூறுகிறார்.
‘வாழி திருவட்டாறு வாழி திருமாயவன்
வாழியடியார்கள் வளமையுடன் வாழி
திருமாலடி சேர்ந்தார் தெய்வபலம் சேர்ப்பார்
கருமால் அறுப்பர் அணிந்து’– என்கிறார் கிருபானந்த வாரியார்
‘சேத்ரா நாம பரசுராம ஷேத்ரா தீர்த்த நாம சக்ர தீர்த்த– என்று அத்யயன ராமாயணம் கூறுகிறது
வேதவியாசரின் பாத்ம புராணம் வசிஷ்ட மஹரிஷி இங்கு வந்து இப்பெருமானை தரிசித்துவிட்டு நெடுங்காலம் இங்கேயே தங்கியிருந்து 5
மடங்களை உருவாக்கினார் என்று தெரிவிக்கிறது. இம்மடங்கள் இவருக்குப்பின் இவரது சீடர்களால் நிர்வாகிக்கப்பட்டன. அவைகள் 1. முனிகள் மடம் 2.
மார்த்தாண்ட மடம் 3. ராமனா மடம் 4. பஞ்சாண்ட மடம் 5. காஞ்சி மடம்.
கலியுகத்தின் தொடக்கம் வரை மேற்சொன்ன மடங்களின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம் இருந்து வந்தது. (கி.மு. 3102 பெப்ரவரி 13 கலியுகம் தொடங்கிய
நாளாகும்) இவர்களின் காலத்திற்குப் பிறகு திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆனவாரி பிள்ளைமார்கள் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம்
இருந்தது.
பிரம்மன் ஒரு யாகம் செய்ய யாக வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்னும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடையூறு விளைவித்ததோடு
தேவர்களையும் விண்ணுலகையும் அச்சுறுத்தினர். அனைவரும் சென்று திருமாலிடம் முறையிட திருமால் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி
கேசியின் மீது படுத்துக் கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கழைக்க அவ்விருவரும் வேகமாக ஓடிவர
அந்நிலையில் பூமாதேவி திருமால் சயனித்திருந்த இடத்தை பெரிய மேடாக ஆக்க இது திருமகளின் செயல் என்பதை உணர்ந்த இரண்டு நதி
தேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்டவடிவில் வந்தபடியால் இவ்விடம் வட்டாறு என வழங்கப்பட்டு வட்டாறு ஆயிற்று.
இவ்விடம் மேடாக இருப்பதை,-மாலை மாடத் தரவணைமேல் வாட்டாற்றான்’ என்கிறார் நம்மாழ்வார்.
கேசியை அழித்தால் பகவான் ஆதிகேசவர் என்று வழங்கப்படுகிறார். இங்கு கங்கையும் தாமிரபரணியும் மாலை போல் பிரியுமிடத்தில் ஒன்றுக்கு
கோதையென்றும் ஒன்றுக்கு பரளி என்றும் பெயருண்டாயிற்று. நதிகள் பிரியும் இவ்விடத்திற்கு மூவாத்து முகம் என மலையாளத்தில் குறிப்பிடுகின்றனர்.
மூலவர்-ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம் மேற்கு நோக்கிய திருக்கோலம்.-இடது கை தொங்கவிட்ட நிலையிலும் வலது கை யோக முத்திரை காட்டி
தெற்கே சிரசும் வடக்கே திருவடியும் ஸ்ரீசேஷ சயனமாக மேற்கு நோக்கிய திருக்கோலம். நாபித் தாமரையோ பிரம்மாவோ இல்லை 23 அடி நீளமான
திருக்கோலம். இவரின் சிரசருகே ஹாதலேயே மஹரிஷி உள்ளார்.
தாயார்– மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம்– கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்
விமானம்– அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்– பரசுராமன், சந்திரன்.
வளமிக்க வாட்டாறு என்பது நம்மாழ்வார் திருவாக்கு, திருவனந்தபுரம் போலவே இங்கு மூன்று வாசல். 20 படிகள் ஏறிச்சென்று இச்சன்னதியை
அடையவேண்டும். சுற்றுப் பிரகாரத்தில் 224 தூண்கள் உண்டு. கேரளத்துப் பாணியில் ஒவ்வொன்றும் ஒரு பாவை விளக்கேந்திய பெண்.
இங்கு மூலவர் சன்னதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் உள்ளது.
இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்கிறார். இதில் ஒரு தலையைத்தான் காணமுடியும். பெருமாளின் கீரிடமும் பாதிதான் தெரியும். பாதி உள்ளே மறைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நாபியில் கமலம் பிரம்மர் இல்லை. அங்கே பெருமாளின் வலது கை சிவலிங்கத்தை தொட்டுக்கொண்டிருக்கும். இங்கே திருப்பாதங்கட்கு அருகில் சிவலிங்கம் உள்ளது. அங்கே கிழக்கு நோக்கிய சன்னதி. இங்கே மேற்கு நோக்கிய சன்னதி. ஸ்ரீஆதி அனந்தபுரம் என்றும் சேரநாட்டு ஸ்ரீரங்கம் என்றும் இதற்குப் பெயர்.
நம்மாழ்வாரும்,-திரைகுழவு கடல்புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன வரைகுழவு மணிமாட வாட்டாற்றான் மலரடியே’-என்று மங்களா ஸாஸனம்
சந்திரனும், பரசுராமனும் இத்தலத்து எம்பெருமானை வழிபட்டு இங்கு தவமியற்றினர். திரேதா யுகத்தில் பரசுராமன் சந்திரத் தீர்த்தத்தில்
இப்பெருமாளை பூஜித்தார் என்று புராணம் கூறுகிறது.
கி.பி. 510 இல் சைதன்யர் இங்கு வந்திருந்தார். இவருக்கு பிரம்ம ஸம்ஹிதை இங்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் வாசியான
பரமேஸ்வரன் பிள்ளை தம் நூலில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். இது 100 அத்தியாயம் கொண்டது. 5 அத்தியாயங்கள் வங்கமொழியில் வெளிவந்துள்ளது. தற்போது ஹரேராமா, ஹரேகிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளனர்.
சங்க காலத்தே சிறப்பாகப் பேசப்படும் எழினி ஆதன் பிறந்த ஊர் இந்த திருவாட்டாறுதான். புறநானூறு புரந்த எழினி ஆதன் ஊர் என்று
மாங்குடி கிழார் கூறுகிறார்.
துவாபார யுகத்தில் சோமயாசி என்னும் ரிஷி இவ்விடம் தனது மனைவியுடன் தங்கி ஒரு பர்ணகசாலை அமைத்து புத்திர பாக்கியம் வேண்டி
யாகம் செய்தார். யாக குண்டலியில் ஒரு புத்திரன் உண்டாக அப்புத்திரனை சப்தரிஷிகள் வளர்த்து வரலாயினர். சுசிவ்ருதன் என்னும் தேவகுமாரன்
ஹாதலேகன் எனப் பெயர் பூண்ட இப்பையனை பார்த்து உன் அப்பா, அம்மா யார் எனக் கேட்க இவன் பக்கத்திலிருந்த கதலியை (வாழைமரம்) காட்டி
இவர்களே என்று சொல்ல தேவகுமாரன் நகைக்க பெருமாளும் பிராட்டியும் வாழைமரத்திலிருந்து வந்து ஹாதலேய முனிவரை அழைத்து அஷ்டாச்சர மந்திரம் சொல்லி தமது சிரசருகில் அமர வைத்தார்.
ஆற்காடு நவாப் (கி.பி.1740) தமது இரண்டு மருமகன்களான சந்தா சாகிப், படாசாகிப் ஆகியோருக்கு அதிக அளவில் பொன் கொடுக்க நினைத்து
தெட்சிண திருவிதாங்கூரில் உள்ள சுசீந்திரம், கோட்டாறு, வாழ்வச்ச கோட்டம் திருவட்டாறு போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில்
கொள்ளையடித்தான். திருவாட்டாற்றில் உள்ள அர்ச்சனா விக்ரகத்தைத் தங்க விக்ரகம் என நினைத்து பாளையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்தான். அன்று முதல் நவாபின் அரண்மனையில் பல துர்நிமித்தங்கள்
தோன்ற ஆரம்பித்தன.
இந்நிலையில் இப்பெருமான் மீது ஆராக்காதல் கொண்ட பக்தன்ஒருவரின் கனவில் வந்து பெருமாள்தான் இருக்கும் இடத்தை தெரிவிக்க
இவர் பரிவாரத்துடன் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார். இவர் வருவதற்குள் திருவட்டாற்றில் இருந்த மக்கள் அதேபோல் விக்ரகத்தை
செய்து சன்னதியில் வைத்து பூஜைகள் ஆரம்பித்துவிட்டனர்.
நவாபிடமிருந்து கொண்டு வரப்பட்ட விக்கிரகத்தை ஒரு இடத்திலவைத்து சுத்தப்படுத்தி நீராட்டி அதை எடுக்க முயற்சிக்கையில் எடுக்க
முடியாமல் போகவே அவ்விடத்திலேயே விட்டுவிட்டனர்.
பிறகு அந்த இடத்திலேயே அதேபோன்று விக்ரகத்தை செய்து திருவட்டாறு கொண்டுவர இங்கே ஒரு விக்ரகம் இருப்பதைக் கண்டு
பேராச்சர்யமுற்று கொண்டு வந்த விக்ரகத்தை மாத்தூர் கொண்டு சென்று வைத்தனர். இந்த விக்ரகத்தைச் செய்தவர் கற்பக மங்கள் தந்திரிகள் என்றும்
கூறப்படுகிறது.
தாங்க வொண்ணாத் துன்பங்கட்கு ஆட்பட்ட நவாப் தனது தவறுகளை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக திருவட்டாறின் சன்னதியில் உட்புறத்தே
ஒரு மண்டபம் கட்டிகொடுத்தான். அதற்கு அல்லா பூஜை மண்டபம் என்று பெயர். 388 தோலான் எடையுள்ள தங்கத் தொப்பியும் தங்கத் தகடும்
இப்பெருமானுக்கு நாவாபு கொடுத்தான்.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் 855-57) உமயம்ம ராணி என்பாரின் ஆட்சிக்காலத்தில் முகில்கான் என்னும் பட்டாணி இந்து
ஆலயங்களில் கொள்ளையிட்டான். அவன் மணக்காடு என்னும் ஊரில் தங்கி இருந்து திருவனந்தபுரம் கோவிலைக் கொள்ளையிட முயன்றான். இதையறிந்த திருவனந்தபுரம் முஸ்லீம்களே அவனை எதிர்த்து தாக்கி விரட்டினார்கள்.
காடுகளில் ஒளிந்து தப்பித்து முகில்கான் திருவட்டாறு கோவிலைக் கொள்ளையிட திட்டம் போட்டான். இதையறிந்த ராணி தனது நாட்டின்
மருங்கிருந்த குறுநில மன்னர்களின் உதவியை நாடினாள். இவ்விருவரின் படைகளும் இணைந்து வருவதற்குள் முகில்கான் சாஹெப் திருவட்டாறு
அருகில் உள்ள ஒரு குன்றுக்கு வந்து சேர்ந்து படைகளை எதிர்க்க பலமான வ்யூகம் அமைத்திருந்தான். வ்யூகத்தின் தன்மை அறிந்த சிற்றரசுகள் தம்மிடம்
இருக்கும் படைகளைக் கொண்டு இவனை எதிர்ப்பது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்தனர்.
அவர்கள் மிகுந்த பயப்பக்தியோடு திருவட்டாறு எம்பெருமானிடம் சரண்புகுந்து அற்புதமான கீர்த்தனங்கள் இயற்றி பிரார்த்தித்தனர். இந்த
கீர்த்தனங்கள் ஆதி கேஸ்வ ஸ்தவம் என்று அழைக்கப்பட்டன. இதற்குப் பட சங்கீர்த்தனம் என்னும் பெயருமுண்டு.
இவர்களின் பக்தியை மெச்சிய எம்பெருமான் கதண்டு வண்டு வடிவமெடுத்து எண்ணற்ற கதண்டுகளாக பிரிந்தார். இந்தக் கதண்டுகள்
முகில்கானின் படைகளைக் கொத்திச் சின்னாபின்னப்படுத்தின.
இந்த வண்டுகளின் வடிவத்தை மலையாள மொழியில் கடந்தல் என்று குறிப்பர். முகில்கான் கொடுரமான ரண காயங்களுடன் மரணமடைந்தான்.
அவனது வ்யூகம் சிதறியது. எண்ணற்ற படைவீரர்கள் மாண்டனர். முகில்கான் படையில் இருந்த குதிரைகளை ‘உரளி பஞ்சஸ் திதன்’ என்ற குறுநில மன்னன் கவர்ந்து சென்றான்.
முகில்கானை அடக்கம் செய்த கல்லறை இன்று முகில்கான் குன்று என்று அழைக்கப்படுகிறது. இது மலையாளத்தில் முகில்கான் கரா
எனவழங்கப்பட்டு தற்போது காங்கரா என வழங்குகிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் முகத்தான் முகில்கான் படைகள் வீழ்ச்சி அடைந்த நாளில் எம்பெருமானுக்கு விசேச பூஜையும் வீரகேரள
பாயாசம் வழங்கப்படும் நிவேதனமும் தினத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதை ஏற்படுத்திய குறுநிலமன்னன் ஆண்ட ஊர்
இரண்யசிம்ஹ நல்லூர் என்பதாகும். இவ்வூர்தான் தற்போது இரண்யல் என்றழைக்கப்படுகிறது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களும் உற்சவங்களும் மிகச் சிறப்பானவைகளாகும். அவைகள் மீன உற்சவம். துலா உற்சவம் என
அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு திருவிழாக்களும் 10 நாட்கள் நடைபெறும்.
இதில் 9வது திருநாள் யானை குதிரையில் பெருமாள் புறப்பாடாகி தாரை தப்பட்டைகள் முழங்க கோலாகலமாய் நடைபெறும். இதற்கு பள்ளிவேட்டை
என்றும் பெயருண்டு.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், தினத்தில் சொர்க்கவாசல் திறப்பதும், முலைப்பாரி உற்சவமும் இங்கு மிகச் சிறப்பானதாகும்.
இத்தலத்தில் எண்ணற்ற கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள வட்டெழுத்துக்களாலான கல்வெட்டில் கீழ்க்கண்டவர்களின்
ஆட்சிக்காலம் குறிக்கப்பட்டுள்ளது.
1. குலசேகரப்பெருமாள் – கி.பி. 644-659
2. வீரமார்த்தாண்டவர்மா – 510-519
3. வீரகேரளவர்மா – 519-550
4. செம்பலாதித்த வர்மா – 612-645
5. உன்னி கேரள வர்மா – 734-753
மேற்சொன்னவர்களுக்கு இத்தலத்தில் சிற்பங்கள் உண்டு
இங்குள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளது. இதில் 9 கைவிளக்குகள் உள்ளன.
இங்குள்ள 2 1/2 அடி உயரமுள்ள முரளி வேணுகான கிருஷ்ண சிற்பமும், இவர் எழுந்தருளியுள்ள மண்டபமும் மிக நேர்த்தியான தாகும்.
இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தின் 3வது தூணிலும் பிற தூண்களிலும் பலவிதமான சிற்பங்கள் உண்டு. ஒரு கையில் திரிசூலம் ஏந்திய ஒரு பெண்,
மற்றொரு தேவதை தன்கையில் திரிசூலம், கேடயம் வாள் ஏந்திய தோற்றத்துடன் கூடிய சிற்பம்,
நாய் சங்கு ஊதும் சிற்பம், பெண் ஒருத்தி குடைபிடித்து நடனம் ஆடும்
சிற்பம், வைரவரின் சிற்பம், இத்துடன் தமிழ் எழுத்துக்களாலான கல்வெட்டும்
சேர்ந்து வெளிப்பிரகாரம் ஒரு கலைக்களஞ்சியம் போல் தென்படுகிறது.
குலசேகர ரவி வர்மாவால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று இங்குள்ளது. மூலஸ்தானத்தில் 5 தங்க கலசங்கள், (பொன் முலாம்
பூசியதுண்டு) கருவறைக்கு மேல் உள்ள அஷ்டாங்க விமானம் செம்பாலானது. தாரு மரத்தாலான சிற்பங்களும் இம்மன்னன் செய்வித்தான்.
கலி 4705இல் இத்தலம் புதுப்பிக்கப்பட்டதாக இங்குள்ள தமிழ்க் கல்வெட்டால் அறியமுடிகிறது. இங்கு ஒரே கல்லினாலான ஒற்றைக்கல்
மண்டபம் உள்ளது. இது 25 அடி நீளம் 171 அடி அகலம் 3 அடி உயரம் இம்மண்டபம் கொல்லம் ஆண்டு 778 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் கலி 4556 ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வெட்டும் வடக்குப் பக்கத்தில் உள்ள சமஸ்கிருத கிரந்த
எழுத்துக்களாலான கல்வெட்டும் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
13ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்குண்டு. ஆங்கிலக் கல்வெட்டுக்களும் உண்டு. கி.பி. 1937இல் மகாத்மா காந்தி இங்கு வந்ததை
ஆங்கிலக் கல்வெட்டு கூறுகிறது.
மார்த்தாண்ட வர்மா (கி.பி. 1749) குளச்சல் யுத்தத்திற்குச் செல்லும் போது 908 பொற்காசு, பட்டு, உடைவாள், போன்றவற்றை இப்பெருமாள்
திருவடியில் வைத்து வேண்டி போரில் வெற்றி பெற்றார் என்ற செய்தியைக் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.
————-
77. திருவண்பரிசாரம்
ஒரு காலத்தில் சப்தரிஷிகள் எழுவரும் திருமாலைக் காணும் முகத்தான் சுசீந்திரத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு இடத்தில் (தற்போது ஆஸ்ரமம்
என்று அழைக்கப்படும் கிராமம்) தவஞ்செய்ய அவர்கட்கு இறைவன் சிவரூபமாய் காட்சியளிக்க, தாங்கள் இறைவனை மஹாவிஷ்ணு ரூபத்திலேயே
தரிசிக்க விரும்பியதால், சுசீந்தரத்திற்கு 4 மைல் தொலைவில் உள்ள சோமதீர்த்தம் என்ற இடத்தில் மீண்டும் தவம் செய்ய, தவத்தின் கடுமையை
மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் மஹாவிஷ்ணு வாக அவர்கட்கு காட்சி கொடுக்க எந்நாளும் இதேபோன்ற திருக்கோலத்தில் இங்கே எழுந்தருளி பக்தர்களின்
பாவம் போக்கி மோட்சம் நல்கிட வேண்டுமென்று கேட்க திருமாலும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
இதனால்தான் இங்கு அமர்ந்துள்ள பெருமாளைச் சுற்றி 7 ரிஷிகள் சூழ்ந்துள்ள திருக்கோலத்தை இன்றும் காணமுடிகிறது.
இத்தலத்தைப் பற்றி பிறிதொரு கதையும் உண்டு. பகவான் நரசிம்ம அவதாரங்கொண்டு இரண்யனை வதம் செய்து விட்டு மிகவும் கோபம்
அடங்காதவராய் இருந்த போது லட்சுமி பயந்துபோய் இவ்விடம் வந்து அவர் சாந்த மூர்த்தியாக வேண்டுமென தவம்செய்ததாகவும், பின்பு பிரகலாதனின் பிரார்த்தனைக்கு இணங்கி சாந்தமடைந்த எம்பிரான் தேவியைத் தேடி இவ்விடம் வர லட்சுமி மிகவும் ஆனந்தம் அடைந்து பகவானின் திருமார்பில் நித்யாவாசம் செய்ய எத்தனித்து உள்புகுந்து கொண்டாராம்.
திருவாகிய இலக்குமியை தன் சரீரத்திலே இவ்விடத்தில் பெருமாள் ஏற்றுக்கொண்டதால் இப்பிரானுக்கு திரு+வாழ்+மார்பன் திருவாழ்மார்பன்
என்பது திருநாமம்.
இப்பகுதியில் திருவெண்பரிசாரம் என்றால் வெகு சிலருக்கே தெரியும். திருப்பதிசாரம் என்பதே இவ்வூருக்குச் சகலரும் அறிந்த பெயராக உள்ளது.
திருவாகிய இலக்குமி தனது பதியாகிய மஹாவிஷ்ணுவை இவ்விடத்தில் சார்ந்ததால் திருப்பதி சாரம் என்பதே இத்தலத்திற்குப் பொருத்தமான பெயர்
என்று இவ்வூர்வாழ் பெரியோர் பகர்கின்றனர்.
இதனாற்றான் இங்கு தாயாருக்கு தனிச் சன்னதியோ தனி விக்ரகமோ கிடையாது. ஏகாந்தத்தில் இருவரும் ஒருமிக்கவே சேவை சாதிக்கின்றனர்.
மூலவர்–திருவாழ்மார்பன்
தாயார்- கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்– லட்சுமி தீர்த்தம்
விமானம்– இந்திர கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்– காரி, உடைய நங்கை, லட்சுமி, கருடன், சப்த ரிஷிகள்
இங்குள்ள மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனயப் பட்டுள்ளதால்) இவருக்கு
திருமஞ்சனம் கிடையாது.
நம்மாழ்வாரின் அன்னை ஸ்ரீஉடையநங்கை அவதரித்த தலம்.
திருப்பதிசாரத்தில் பிறந்த உடையநங்கை ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த காரி என்பாருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு உடைய நங்கை
புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் 41 நாட்கள் விரதமிருந்து பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தி கலி 43வது நாள் நம்மாழ்வாரைப் பெற்றெடுத்தார்.
வைகாசி விசாகத்தன்று அவதரித்த நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிப்பிரான் சன்னதியில் விட அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமர
பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் ஆழ்வாராய் அமர்ந்தார்.
திருக்குறுங்குடி எம்பெருமானை வேண்டிய பின்பு உடைய நங்கை இத்தலத்திற்கு வந்து 41 நாள் தவமிருந்தார்.
இங்கு மூலவருக்கு வலப்புறத்தில் இராம, இலக்குவ, சீத்தா பிராட்டியாருண்டு. இதற்கு ஒரு காரணக் கதை உண்டு. வீடணன்
அயோத்தியில் ஸ்ரீஇராம பிரானின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது அவரால் கொணரப்பட்ட பெருமான் அரங்கனாக
பள்ளிகொண்ட பின்பு விபீஷ்ணன் இவ்வழியாக இலங்கை செல்லும் போது இப்பெருமானை வழிபட்டு வேண்டுதல் ஒன்று உண்டு என்று விளம்பினார்.
உடனே வீடணனுக்கு காட்சி கொடுத்த திருவாழ்மார்பன் யாது வேண்டுமென அன்போடு வினவ, என்னால் இராமாவதார திருக்கோலத்தை மறக்க
முடியவில்லையே என்று கண்ணீர் மல்க நின்று மீண்டும் ஒருமுறை காட்சியைக் காண ஆசைப்படுகிறேன். என்று சொல்ல அவ்விதமே காட்சி தந்தருளினார்
என்பர்.
குலசேகர ராஜன் (குலசேகர ஆழ்வார் வம்ச அரசர்) கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து வாகனம். மதில் போன்ற திருப்பணிகள் பலவும்
செய்து, கொடிக்கம்பத்தையும் (துவஜஸ்தம்பத்தையும்) நிர்மாணித்து பிரம்மோத்ஸ்வமும் செய்துவைத்தார்.
ஆஞ்ச நேயரின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்தியர் இங்கு இராமாயணம் அருளியதாகவும் கூறுவர்.
இப்பெருமான் பிரஸன்ன மூர்த்தியாகி 4 கரங்களுடன் சங்கு சக்கரங்களுடன் காட்சியருளுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய விக்ரகம் இங்கு ஒன்றுள்ளது.
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply