96. திருஅயோத்தி
புராணங்கள் யாவற்றிலும், எண்ணற்ற இலக்கியங்களிலும், கணக்கிலடங்கா நூல்களிலும் இந்த அயோத்தி விரித்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்காந்த புராணத்தில் மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் அயோத்தி வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம்
பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. “செங்கண்மால் பிறந்து தனிச் சிறப்புடன் ஆண்டு அளப்பருங்காலம் திருவின் வீற்றிருந்தான்” என்கிறான் கம்பன்.
திருவயோத்தியென்றும் அயோத்தி நகர் என்றும் மாந்தி மகிழ்வர்கள் ஆழ்வார்கள்.
பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வாயம்புவான் என்பவனுக்கு ஸ்ரீநாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும்
பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார்
என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதுவே பல நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி
மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன்
வைகுந்தத்தை முதலிலேயே இங்கு இறக்கிவைத்துவிட்டாரோ என்னவோ. இத்தகைய அயோத்தியின் இன்றைய நிலைமை எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றாகும். இன்றைய அயோத்தியே பாரத மண்ணில் பக்தி மணத்தைக் கமழச் செய்து கொண்டிருக்கிறதென்றால் திரேதாயுகத்தின் அயோத்தி எப்படி
இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையிலேயே வைகுந்தமாகவே இருந்திருக்கும்.
மூலவர்– ஸ்ரீராமன், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன், வடதிசை நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்- சீதா பிராட்டி
தீர்த்தம்– சரயூ நதி, பரமபத புஷ்கரணி
விமானம்– புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்– பரதாழ்வான், தேவர்கள், முனிவர்கள், திரேதாயுகத்து அயோத்தி நகர்வாசிகள்.
முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் ஒன்றான இந்த அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமநாமம் இந்தியா முழுவதும், ஏன் உலகம்
முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், சங்கீதங்களிலும், மனிதர்களின் பெயர்களிலும், புராண இதிகாச இலக்கியங்கள் மூலமாகவும்,
கோவில்களிலும் இந்த நாமம் ஒலிக்காத நாளும், ஒலிக்காத நேரமும் இல்லை என்று சொல்லலாம். ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி
விரித்துரைக்கும் தன்மையதன்று. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டெரிக்கவல்லது. திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள் ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள் இம்மண்ணுள்ளவரை அழியா மகத்துவம் பெற்றவைகளாகும். ராம நாமம் ஜென்ம ரட்சக மந்திரம் என்றார் போல் ராம நாமத்தை உலகிற்குப் பயந்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்புமாகும்.
இட்சுவாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை
தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இட்சுவாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி
கொண்டது. பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவன் பூவுலகிற்கு வந்து
முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான்.
திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிடவும் முடியுமோ.
சூரிய வம்சத்து மன்னர்களால் ஆளப்பட்டு 7 புண்ணிய மோட்ச புரிகளில் முதன்மை பெற்றதும், சரித்திர கோசல ராஜ்யத்தின் தலைநகரமாக
விளங்கியதும் மனு என்னும் மன்னரால் கட்டப்பட்டதுமான இந்த அயோத்தியை, மாந்தாதா, அரிச்சந்திரன், பாகீ ரதன், தீலிபன், ரகு, போன்ற
புகழ்பெற்ற சூரிய வம்சத்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
இந்த அயோத்தியை (அதாவது அன்றைய அயோத்தியா ராஜ்யத்தை) ராமன் தனது புதல்வர்களான லவ குசனுக்கும், பரதனின் குமாரர்களான தசு-
புஷ்கலனுக்கும், லட்சுமணனின் புதல்வர்களான அங்கத, சந்திர கேசனருக்கும், சத்துருக்கன் புதல்வர்களான சூரஸேன, சூடாஹி ஆகியோருக்கும் 8
பாகங்களாகப் பகிர்ந்து கொடுத்தார்.
இங்கு ராம, லட்சுமண, சீதை, அனுமார் ஆகியவர்கட்கும் எண்ணற்ற சின்னஞ்சிறு கோவில்கள் உண்டு. எங்கு நோக்கினும் ராமபிரான் சந்நிதிகளே.
பைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி வரும் வழியில் எண்ணற்ற ஆஞ்சநேயர் கோவில்கள் ஆங்காங்கே வழி நெடுக இருப்பது நம்மை
ஆஞ்சநேயரே ராமபிரானிடம் அழைத்துச் செல்வதுபோல் உள்ளது.
இங்கு அமைந்துள்ள கனகமந்திர் என்னும் மண்டபத்தில் (மந்திர் என்றால் இந்தியில் கோவில் என்று பொருள்) கனகமந்திர் என்னும் இவ்விடம்
ஒரு மண்டபம் போல் காட்சியளிப்பதால் மண்டபம் என்றே எடுத்தாண்டுள்ளோம். இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் கனக மந்திர் என்னும் பெயருண்டாயிற்று. இங்கு
துறவிகள் இருவர் நடத்திக் கொண்டிருக்கும் ராம பஜனை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் பேரழகு பொருந்தியதாகும்.
இராம சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்த
துளசி மாடம், இராமபிரானுக்கும் அவரது தம்பிகட்கும் திருமணம் நடந்த இடம், ராமன் பட்டாபிசேகம் செய்த இடம் (இந்த இடம் இன்று ஒரு
நந்தவனம் போல் உள்ளது) சீதையின் தகப்பனார் ஜனகர் தங்கியிருந்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப்பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர்
ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைக் காணும் போது இராமாயண காலத்தோடு கலந்து ஒன்றிவிட்ட உணர்வு
ஏற்படுகிறது.
பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும்வரை காத்திருந்த நந்திகிராமம் (நந்திகிராமம் அயோத்தியிலிருந்து 20 மைல்)
லகட்மண்டி என்றழைக்கப்படும் இடமான தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம், அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கனகபவனம்
என்றழைக்கப்படும் கைகேயியின் அரண்மனை ஆகிய ஒவ்வொன்றையும் காணும்போது ராமாயண காலத்தில் வாழ்ந்தது போன்று உணர்வுகள் தலைதூக்கும்.
அயோத்தியென்றதும் சரயு நதிதான் சடக்கென்று நினைவுக்கு வரும். இந்நதி இமயத்திற்குள் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது.
அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காளி என்னும் நதி கலந்துறவாடுகிறது. இப்போது இதனை கோக்ரா என்று அழைக்கின்றனர். இந்த சரயு நதியில்
உள்ள ராம்காட் என்னுமிடத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.
மேலும் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய தீர்த்தங்களாகும்.
ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுற்றதை எமதர்மன் ஒரு தபசியின் ரூபத்தில் வந்து இராமனுக்கு நினைவு படுத்த ராமன் இந்தச் சரயு
நதிக்குச் சென்று தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
ராமன் தனது சரீரத்தைக் களைந்து பூத உடலைத் துறந்து இந்தச் சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கையில் இங்கு
வருவோரனைவரும் இதில் நீராடுவர்.
அநுமான்கடி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. ஐம்பது
படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடினதாக கம்பீரத்தோற்றத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. இந்த ஆலயத்தின்
சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் ராமாயணம் படித்துக்கொண்டிருக்கும் பக்தர்களைக் காணும்போது இந்து
மதத்தின் தார்மீக வளர்ச்சியை எவரும் அசைத்துவிட முடியாது என்று சொல்லாமற் சொல்வது போல் உள்ளது.
சரயு நதிக்கருகில் அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தென்னிந்திய கோவில்களின் பாணியில் கட்டப்பட்டுள்ள
இத்தலத்தில் தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ள இத்தலம் புராதன
காலந்தொட்டு இதே இடத்தில் எச்சிதைவு இல்லாது அமைந்துள்ளது.
இராமகாதையின் தாக்கம் இந்தியாவின் எண்ணற்ற இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது. தமிழிலக்கியம் பலவற்றில் இராமாயணம் இழைந்தோடுகிறது.
சிலப்பதிகாரத்தில் இராமாயணத்தின் தாக்கம் அதிகம் என்றும், சிலம்பு பயந்த இளங்கோவடிகள் பல மதக் கருத்துக்களையும் தம் நூலில்
கூறிப்போந்துள்ளாரெனினும் வைணவ கருத்துக்களையும், இராம காதையின் நிகழ்ச்சிகளையும் அதிகமாக எடுத்தாண்டுள்ளார் என்பதை சிலம்பைக் கற்றவர்கள் யாரும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வோம்.
கோவலன் புகார் நகரைவிட்டுப் பிரிந்து செய்திக்கு உவமானம் கூறவந்த இளங்கோவடிகள் ராமன் அயோத்தியை விட்டுப் பிரிந்ததை நினைவு கூர்கிறார்.
ராமன் அயோத்தியை விட்டுப் பிரியும்போது மக்கள் எவ்வாறு அலமந்தனரோ அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.
பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும் -என்கிறார்
ராமகாதையில் இளங்கோவடிக்கு இருந்த ஈடுபாடு தன் காவியத்தில் ராம நிகழ்ச்சியைப் புகுத்த வேண்டுமென்ற தாக்கம்
இவ்வுவமானமாக மிளிர்ந்தது.
அதேபோல் கோவலன் புகாரை விடுத்து மதுரை நோக்கி வரும் வழியில் “அறியா தேயத்து ஆரிடை உய்ந்து சிறுமையுற்றேன்” என்று
கோவலன் வருந்தியபோது அவனுக்கு ஆறுதல்மொழி பகர்ந்த கவுந்தி அடிகள்.
தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வ பயந்தோன் என்பது
நீயறிந்திலையோ நெடுமொழியன்றோ – என்கிறார்.
தந்தையின் கட்டளைப்படி வனமேகிய ராமன் சீதையைப் பரிந்து கடுந்துயறுற்றதை நீ அறியவில்லையா உலகோ ரனைவரும் அறிந்த நெடு மொழியல்லவா? அது என்று கூறி கோவலனைத் தேற்றுகிறார்.
————-
97. திருநைமிசாரண்யம்
ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர்.
அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு
வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தான்.
இந்த பாரத தேசத்தில் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது
என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.
நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் ஆனதால் நேமிச ஆரண்யமாகி
நைமிசாரண்யம் ஆயிற்று.
இதே கதை சில நூல்களில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
தீர்க்க ரோமர் என்ற மகரிஷியின் தலைமையில் பிரம்மனிடம் சென்ற முனிவர்கள் சத்திர வேள்வியைத் துவக்கத் தகுதியான இடத்தைக்காட்டுமாறு
வேண்ட, பிரம்மன் அவர்களை ஒரு விமானத்தில் ஏற்றி இவ்வுலகை (பூவுலகை) வலம் வருமாறும், அவ்வாறு வரும்போது விமானத்தின் நேமி, (சக்கரம்)
தானாக எவ்விடத்தில் கழன்று விழுகிறதோ அதுவே வேள்வியைத்துவக்க சிறந்த இடமென்று கூறியனுப்ப விமானத்தின் சக்கரம் இவ்விடத்தில்
விழுந்ததாகவும் அதனால் இவ்விடம் நேமிச ஆரண்யம் ஆயிற்றென்றும் கூறுவர்.
எவ்வாறாயினும் நேமிசம் விழுந்த ஆரண்யம் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இந்த இடம்தான் என்பதில் ஐயமில்லை.
வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர். அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து
தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம்
எம்பெருமான் அருள்புரிந்து அவர்களை சாயுஜ்ய பதவிக்குரியனாக்கினார் என்பது வரலாறு.
இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய ஸ்வரூபியாக
(காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.
மூலவர்- தேவராஜன் (ஸ்ரீஹரி) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– ஸ்ரீஹரிலெட்சுமி
தீர்த்தம்- சக்கர தீர்த்தம் – கோமுகி நதி
விமானம்- ஸ்ரீஹரி விமானம்
ஸ்தல விருட்சம்- தபோவனம்
காட்சி கண்டவர்கள்- இந்திரன், சுதர்மன், சூதபுரானிகர், ரோமசர் முதலான முனிவர்கள்
இங்குள்ள சக்ர தீர்த்தம் சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ர
நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு. வினோதமான முறையில் இங்கு விநாயகருக்கும் சன்னதி
உண்டு. இதுவும் வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதது.
இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும்,
சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்றவற்றை உருவாக்கினார்கள். இதனால் வேறெந்த ஸ்தலத்திற்கும்
இல்லாத பெருமை (வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்தது) இத்தலத்திற்குண்டாகிறது.
இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட
அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.
————–
98. திருப்பிரிதி
திருமங்கையாழ்வாரால் தொடக்க மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். இமயமலைக்கு வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற
அழகுள்ள இடத்தில் எங்கோ அமைந்துள்ளது. அல்லது அமைந்திருந்தது என்றும் சொல்லலாம். ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று அறுதியிட்டுச்
சொல்ல முடியாததால் இதனைச் சேவிக்க இயலாது.
மூலவர்- பரமபுருஷன், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்- பரிமளவல்லி நாச்சியார்
விமானம்- கோவர்த்தன விமானம்
தீர்த்தம்- இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்
ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிரிதி என்னும் கருத்து ஒன்றும் நிலவுகிறது. இந்த
இடத்தில் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர்.
இவ்விரண்டும் அல்ல. அது எங்கோ இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.
இதில் தற்போது திருப்பிரிதி என்றழைக்கப்படும் ஜோஷிமட் திருப்பிரிதியாகாது. திருப்பிரிதி இமயத்திற்குள் உள்ளது என்று அறுதியிட்டுக்
கூறுகிறார். ஸ்ரீவைஷ்ணவ சுதர்சன ஆசிரியர் ஸ்ரீமான் திரு. கிருஷ்ணசுவாமி ஐயங்கார். இவர் கூறும் கருத்துக்களே ஏற்றுக்கொள்வதற்கு உடன்பாடாய்
இருப்பதாலும் அதுவே உண்மையாகுமாதலாலும் அவர் தமது கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்களை இங்கே சுருங்கச் சொல்கிறோம்.
திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி
வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார்.
இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்திருந்தால் ஆழ்வார்
முதலில் ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் முதலில்
திருப்பிரிதியை தமது திருமொழியில் 1-2ல் மங்களாசாசனம் செய்து விட்டு அதன் பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்கிறார். (எனவே ஜோஷி மடமே
திருப்பிரிதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்)
திருமங்கையாழ்வாரும், மற்றும் பிற ஆழ்வார்களும் தாம் மங்களாசாசனம் செய்யும் திவ்ய தேசத்தின் மருங்கமைந்த இயற்கை
காட்சிகளை தம் பாடல்களில் மறவாது குறிப்பிடுவர். உதாரணமாக திருவரங்கத்தைப் பாடும் பாக்கள் பலவற்றில் ஆழ்வார் காவிரியைக்
குறித்துள்ளார்.
கங்கை கரையில் உள்ள வதரியச்சிரமத்தை பாடும் போது முதல் ஒன்பது பாசுரங்களிலும் ஈற்றடியில் கங்கையின் கரைமேல் வதரியாச் சிரமத்துள்ளானே
என்று முத்திரை பொறிக்கிறார். இதே போல் கண்டமென்னும் கடிநகர்ப் பதிகப் பாசுரம் ஒவ்வொன்றிலும் அந்த நகர் கங்கை கரையில் உள்ளதென்பதை
உணர்த்தியுள்ளார்.
கங்கைக் கரையின் மேலுள்ள ஜோஷி மடமே திருப்பிரிதியாகில் திருப்பிரிதிப் பதிகப் பாசுரம் ஒன்றிலாவது கங்கையைப் பற்றிச் சொல்லி
இருக்கவேண்டும். கங்கை பெருகி ஓடும் நதி. திருப்பிரிதி பாசுரத்தில் தடஞ்சுனைகளையும், அருவிகளையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்கிறார். இவைகள் கங்கைகரையில் இல்லை. ரிஷிகேசத்திலிருந்து வதரி வரை செல்லும் பாதையை ஒட்டியே கங்கை பாய்கின்றது. திருப்பிரிதிக்கு
கங்கையின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் சொல்லாமல் இருப்பதிலிருந்தே திருப்பிரிதியானது கங்கையின் உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் தாண்டி வதரிக்கு மிகவும் வடக்கே இருந்திருக்க வேண்டும் என்று காட்டும் முக்கியமான அகச் சான்றாகும்.
திருமங்கையாழ்வார் திருப்பிரிதிக்கு இட்டருளிய பாசுரங்களில் எல்லாம் இமயத்துள் என்று இந்த திவ்ய தேசத்தைக் குறிக்கிறார். இமயத்துள்
என்னும் பதத்தாலே இமயத்தின் நடுவில் இருப்பதே திருப்பிரிதி என உணர்த்துவதன் மூலம் இமயத்தின் தென்பகுதியில் உள்ள வதரி முதலிய திவ்ய தேசங்களைக் காட்டிலும் திருப்பிரிதியை வேறுபடுத்திக் காட்டுகிறார். இவ்வாறே பிரிதியில் உள்ளவனென்றும் இமயத்துள் இருப்பவனென்றும் ஆழ்வார் திருவுள்ளம் பற்றியதாலே ஏற்றினை இமயத்துள் எம்மீசனை என்ற பதத்திற்கு பெரியவாச்சான் பிள்ளை பொருள் கூறுமிடத்து ஹிமவானில் திருப்பிரிதியில் வந்து ஸந்நிஹிதனானவன் என்று அருளினார். (பெரியவாச்சான் பிள்ளை கங்கையையோ வதரியையோ குறிப்பிடவில்லை. இமயத்தை ஹிமவான் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது)
திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் திருப்பிரிதியின் இயற்கை காட்சிகளை விளித்துப் போகும்போது அங்கு வாழும்
காட்டு மிருகங்களை தமது பாக்களில் கூறிப்போகிறார்.பெரிய யானைகளை இம்சித்துக் கொண்டு சிங்கங்கள் சஞ்சரிக்கும்
பிரதேசம் என்கிறார்-போர் செய்தலையே தொழிலாக கொண்ட வேங்கைப் புலிகள் திரியுமிடமென்கிறார்.-யானைகளை விழுங்கக்கூடிய மலைப் பாம்புகள் ஊர்ந்து செல்லக்கூடிய இடமென்கிறார்.
திருப்பிரிதியை இவ்வண்ணம் பாடியிருக்கும் திருமங்கையாழ்வார், வதரியைப் பற்றிப் பாடும்பொழுது ஒரு பாசுரத்திலாவது துஷ்ட மிருகங்கள்
இருப்பதைப்பற்றிப் பாடவில்லை பாரோர் புகழும் வதரியென்று திருமங்கையாழ்வார் காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஜனங்கள்
வருடந்தோறும் வதரி சென்று வந்திருக்கிறார்களாகையாலே துஷ்ட மிருகங்கள் சஞ்சரித்திருக்க முடியாது. ஆகவே சிங்கம், புலி, மலையரவு ஆகிய துஷ்ட
ஜந்துக்கள் வாழுமிடமாய் பாடப்படும் திருப்பிரிதி வதரிக்கு 20 மைல் தெற்கே உள்ள ஜோஷி மடமாக இருக்கவே முடியாது.
ஜோஷி மடம் பிரிதியாய் இருக்க முடியா தென்பதற்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசமொன்றில் அமைந்தது திருப்பிரிதி என்பதற்கும் இது
முக்கியமான அகச்சான்றாகும்.-இந்த அகச்சான்றுகள் போக, சில புறச்சான்றுகளையும் இனி காண்போம்.
பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்களிலும் உகந்தருளிய நிலங்களுக்கெல்லாம் எல்லையாயிருப்பது திருப்பிரிதி என்று அருளியிருப்பது மற்ற திவ்யதேசங்கள் அனைத்திலும் வடக்கே இருப்பது என்று ஐயந்திரிபறக் காட்டுகிறது.
பெருமாள்-பரமபுருஷன், கிழக்கே திருமுகம், புஜங்க சயனம், பார்வதிக்குப் பிரதயட்சம்.
தாயார்– பரிமளவல்லி நாச்சியார்
விமானம்– கோவர்த்தன விமானம்
தீர்த்தம்– இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்.
விபூதூர் வித்வான் கி.வேங்கிடசாமி ரெட்டியாரிடமிருந்து கிடைத்த 108 திருப்பதியந்தாதியென்னும் கட்டளைக் கலித்துறையிலமைந்த
நூலில்,“நாரங்களுக் கிறைவன் பார்வதிக்கு நயந்தருள்வோன்
வாசஞ்செய் மானச வாவி அனந்தன் வர்த்தனத்தில்
பாரமர் பரிமளவல்லிக் கின்பாகத் தென்பால் துயிலும்
ஆரம் செறி இமயப்பால் திருப்பிரித்திக் கரசே–என்று அமைந்துள்ள இப்பாட்டிலும் இவ்விவரங்களே காணப்படுகின்றன.
108 திருப்பதியந்தாதி பாடலில் மான ஸரஸ் என்னும் தீர்த்தம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பண்டைப் புராணங்களும் இதிகாசங்களும்
மானஸரோ வரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில்
வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250 அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000
அடி உயரத்தில் கடல் போல் விளங்குகிறது. பிரம்மன் தனது மனத்தாலே (ஸங்கல்பத்தாலே) முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த
ஏரியைச் சிருஷ்டித்தால் மானஸரஸ் என பெயர் உண்டானதாகக் கூறுவர்.
உலகிலேயே மிகப் பெரியதும் அழகியதுமாகையால் ஸரோவரம் என்னும் புகழைப் பெற்றுள்ளது.
மிக முக்கியமான இயற்கை காட்சியொன்று ஒரு திவ்ய தேசத்தில் இருக்குமானால் திருமங்கை அதை தமது பாடலில் குறிக்காமல் விடார். அவ்வாறெனின் இந்த ஏரியைக் குறித்திருக்கிறாராவெனின் முதல் பாசுரத்திலேயே தடஞ்சுனை பிரிதி என்று பிரிதிக்குத் தடஞ்சுனை என்றே பேரிட்டு மானஸரோ வரத்தையே உணர்த்துகிறார் என்பது நமது பதில். ஸரோவரம் என்பதை தடஞ்சுனை என்று தமிழாக்கியுள்ளார். தடஞ்சுனை பிரிதி பெரிய ஏரிகளை உடைய பிரிதி என்றும் பொதுவாய் பொருள் கொள்ளலாம்.
மேலும் இங்குள்ள பெருமாளின் பெயர், பிராட்டியின் பெயர், சயன திருக்கோலம், போன்றவற்றையும், திருமங்கை தமது பாசுரங்களில் குறிக்கிறார்.
பணங்கொள் ஆயிரம் உடைய நல் அரவனைப் பள்ளி கொள் பரமா என்று
இறங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்த நல்லிமயத்துள்–என்று பெருமாளின் திருநாமத்தோடு அவரின் சயனத்
திருக்கோலத்தையும் குறிக்கிறார். இப்பாசுரத்திற்கு முன் உள்ள பாசுரத்தில் கரைசெய் மாகடல் கிடந்தவன் என்று திருப்பாற்கடல் நாதனை அனுபவித்து
விட்டு அங்கே கிட்டமுடியாதாரும் அனுபவிக்கலாம்படி இங்கே தன் திருக்கோலத்தைக் காட்டுகிறான் என்னும் ஸங்கதி தோன்ற அப்படித்
திருப்பாற்கடலில் சாய்ந்தருளினவன் இங்கே வந்து எழுந்தருளியிருக்கும் படியை அனுஸந்திக்கிறார் என்று பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுரத்திற்கு
அவதாரிகை இட்டிருப்பதிலிருந்து திருப்பிரிதியின் பனங்கொள்ளாயிரமுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமனாகவே எம்பெருமான் சேவை ஸாதிக்கிறார் என்று விளங்குகிறது. எனவே புஜங்க சயனமில்லாத ஜோஷி மடக்கோவில் திருப்பிரிதியாய் இருக்க இடமில்லை என்பது தெளிவு. பார்வதியோடு சிவன் வாழும் கயிலை மலைக்கு அருகில் உள்ள திருப்பிரிதியில் எம்பெருமானைப் பார்வதிக்குப் பிரதயட்சமாக ப்ரபாவ நூலில் பேசியிருப்பதிலும் பொருத்தமுள்ளது.
இவ்வண்ணமாக நூற்றெட்டுத் திருப்பதி ப்ரபாவ நூல்களில் திருப்பிரிதிபற்றிக் கூறியுள்ள விபரங்கள் ஆழ்வார் பாசுரங்களோடும்
பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தோடும் ஒத்திருக்கையாலே பாரதத்தின் வட எல்லையில் இமயத்தினுள்ளே மானஸரோவர தீர்த்தத்தில் உள்ளதொரு அடர்ந்த காடே திருப்பிரிதியென்று பெயர் பெற்றிருந்ததென்றும், அதில் எம்பெருமான் பரமபுருஷன் என்னும் திருநாமத்தோடு பரிமளவல்லி
நாச்சியாரோடு ஆதிசேட சயனத்திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.
திருப்பிரிதி என்னும் திருநாமம் எவ்வாறு வந்துள்ளதெனில், பதரி கண்டம் முதலான வடநாட்டுத் திருப்பதித் திருநாமங்களைப் போல இதை
வடமொழி பெயராகக் கொண்டு பிரீதி எனவழைத்து காலப்போக்கில் பிரிதியாக மருவியுள்ளதாகக் கருதலாம். எம்பெருமான் பிரீதியுடன் (உகப்புடன்)
எழுந்தருளியிருக்கும் இடம் என்றபடி,
அல்லது இத்திருநாமம் தமிழர்கள் இட்ட திருப்பெயரே எனக் கொண்டால் பாரத தேசத்தை, தேசாந்திரத்திலிருந்து பிரிக்குமிடமாகையாலே
பிரிதி என்று பெயரிட்டதாகக் கொள்ளலாம். உகந்தருளின நிலங்களுக்கு எல்லை என்று பெரியவாச்சான் பிள்ளை பிரிதியைக் குறிப்பிட்டிருப்பது இப்படி
பொருள் கொள்ள இடமளிக்கிறது. மானஸரோவரம் பாரதத்தின் வட எல்லையென்று இதிஹாச புராணங்களில் காட்டப்பட்டிருப்பதும் இப்படி
பொருள் கொள்வதற்குப் பொருந்தியிருக்கிறது.
இந்த மானஸரோவரக் கரையில் திருப்பிரிதி எங்கோ இருக்க வேண்டும் என்பதுதான் தெளிவு.
————
99. திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ராயாகை)
இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்தில் இருந்து நேராக பத்திரிநாத் சென்றுவிட்டும் திரும்பும் வழியிலும் சேவித்துவிட்டு வரலாம். பத்ரியிலிருந்து சுமார் 60 மைல் தூரமாகும்.
இவ்விடத்திற்கு தேவப்ராயகை என்றும் பெயர். ப்ர-சிறந்த யாகம், வேள்வி, மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால்
இவ்விடத்திற்கு ப்ராயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ராயாகை
என்றாயிற்று என்றும் சொல்வர். தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில் பரவியிருப்பதால் தேவப்ராயாகை ஆயிற்றென்றும் சொல்வர்.
ப்ரயாகைக்கு கிழக்கே உள்ளே பிரதிஷ்டானம் என்ற இடத்தில் உள்ள தீர்த்தக் கிணறு. வடக்கேயுள்ள வாசுகி என்ற இடம், மேற்கே காம்ப்ளாஸ்
என்னும் சர்ப்பங்கள் உள்ள இடம். தெற்கு திசையில் உள்ள பஹூ மூலம் என்னும் பகுதி ஆகியன ப்ரயாகையின் எல்லைகளாகும்.
இந்த தேவப்ரயாகையின் சிறப்பை பற்றி பாத்ம, மத்ஸய, கூர்ம அக்னி புராணங்கள் பகர்கின்றன.
கங்கையும், யமுனையும் கூடும் இடமே ப்ரயாகை. மிக ரஹஸ்யமான தீர்த்தமிது. விதிப்படி இங்கே வசித்துக் கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில்
எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்ற ஞானத்தை நமக்கு தரும் என்றுகூர்ம புராணம் கூறுகிறது.
கங்கையும், யமுனையும், சேருமிங்கு விதிக்கப்பட்டுள்ள முறைகளின்படி தூய்மையான மனத்துடன் யாகம் செய்பவர்கள் நற்கதி (மோட்சம்)
அடைகின்றனர். என்றும், இங்கே உயிர்விடுபவர்கள் மோட்சம் பெறுகின்றனர் என்றும் ரிக்வேதம் பகர்கிறது.
தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதனிலையில்தான் பெருமாள்
குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மாத்ஸய புராணம் கூறுகிறது.
இத்தலத்தைச் சேவிப்பதும், ப்ரயாகையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகும்.
மூலவர்- நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் வேணி மாதவன், விமலா
என்ற பெயரை வடநாட்டு நூல்கள் சூட்டி மகிழ்கின்றன.
தாயார்– புண்டரீக வல்லி
தீர்த்தம்– மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை
விமானம்- மங்கள விமானம்
காட்சி கண்டவர்கள்– பரத்வாஜ முனி, பிரம்மா
பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்றாலும் அவர்கள் சகோதரர்கள் அல்லவா, சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில்
நீராடினால் போதும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடுமென மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு.
பிரம்மா, இவ்விடத்தில் செய்தயாகத்திற்குப் பின்பே தனது படைக்கும் தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம்.
பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
ப்ரயாகை யாத்திரை செய்வதாக நிச்சயித்தவுடன் நம் உடம்பில் இருக்கும் பாவங்கள் எல்லாம் நடுங்குகின்றன.
இவ்விடத்தில் செய்யும் அன்னதானம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கொரு கதை உண்டு. சுவேத கேது என்னும் மன்னன் எண்ணற்ற
தர்மங்கள் செய்தும் அன்னதானம் மட்டும் செய்யாதிருந்தான். அதன் மகத்துவத்தை முனிவர்கள் உணர்த்தியும் அவன் பின்பற்றவில்லை.
அம்மன்னன் இறந்து மேலுலகு சென்ற பின் அவனை பசி வாட்டியது.
இப்பசியை அடக்க தாங்கள் தான் வழிகாட்ட வேண்டுமென்று பிரம்மாவிடம் விண்ணப்பித்தான். அதற்குப் பிரம்மா, நீ அன்னதானம் செய்யாததால்
உன்னை இங்கு கொடும்பசி வாட்டுகிறது. பூவுலகில் தானம் செய்யாதபொருள் இங்கு கிடைக்காது. எனவே நீ மண்ணுலகு சென்று பாதுகாப்பாக உனது
சரீரத்தை மிதக்க வைப்பதற்காக நீ வெட்டிய குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் உனது சரீரத்தை கத்தியால் அறுத்து அதைப் புசி என்றார்.
வேறு வழியின்றி சுவேத கேது அவ்வாறே செய்தான். ஆயினும் அவன் பசி அடங்கவில்லை. அப்போது முனிவரொருவர் ப்ரயாகையில் நீராடு என்று
சொல்ல அவ்விதமே நீராடியும் பயனில்லை.அப்போது அங்குவந்த அகஸ்தியர் ப்ரயாகையில் அன்னதானம்
செய்தால் உன்சாபம் அகலுமென்றார். தேவ சரீரத்தில் நான் அவ்விதம் செய்ய இயலாதே என்று மன்னன் தெரிவிக்க அவ்வாறாயின் கையில் உள்ள
யாதாயினும் ஒரு பொருளைக் கொண்டு அதை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்விக்கலாமென கூறினார். தனது தேவ சரீரத்தில் அவ்வாறு
கழற்றிக் கொடுக்க அணிகலன்கள் யாதுமில்லையே என்று கூற, நீ செய்த பிற புண்ணியங்களின் பலன்களை திரட்டி கொடு என்று கூற, தான் செய்த
தர்மத்தின் பலனையெல்லாம் திரட்டி ஒரு கணையாழி ரூபத்தில் தர அகஸ்தியர் அதனை அங்கிருந்த சீடர்களிடம் கொடுத்து இப்பொருளை விற்று
அன்னதானம் செய்யுமாறு கூற அவ்வாறே அன்னதானம் செய்ய சுவேத கேதுவின் கொடும்பசி அகன்று மோட்சம் பெற்றாரென்பர்.
மகாபுண்ணிய தீர்த்தமான இந்த ப்ராயாகையில் பல தீர்த்தங்களும் பல நதிகளும் சங்கமிக்கின்றன. கங்கையும், யமுனையும் கலப்பதோடு
அளகநந்தாவும் பாகீரதியும் இங்கு சங்கமிக்கின்றன. ப்ரயாகையில் நீராடும் போது மிகவும் கவனத்துடன் நீராட வேண்டும். வெள்ளப் பெருக்கும் நீரின்
விரைவும் இங்கு திடீரென உண்டாகும்.
இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவமியற்றினார்.
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள்.
கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும். அ.உ.ம. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓங்கார வடிவமானது
ப்ரயாக சேத்திரம். அ எழுத்தாகவும், பிரத்யுமனனாகவும் இருக்கிறாள் சரஸ்வதி. யமுனா உ என்ற எழுத்தாகவும், அநிருத்தனாகவும்இருக்கிறாள் ம என்ற எழுத்தாகவும், சங்கர்ஷனனாகவும் இருக்கிறாள் கங்கை.
இங்குள்ள ஆலமரம் அழிவற்றது. அதில் வேணிமாதவன் என்ற பெயரில் விஷ்ணு, ஆடலங்கேசர் என்ற பெயரில் சிவன், மற்றும் பிரம்மனும் இதில்
வாசம் செய்கின்றனர்.
பாண்டவர்கள் போருக்குப்பின் தமது சத்துருக்களைக் கொன்ற பாவங்களைப் போக்க யாது வழி என்று மார்க்கண்டேயரிடம் கேட்க, அவர்
ப்ரயாகை ஒன்றே சகல பாவங்களையும் போக்கவல்லது என்று பாண்டவர்களை இங்கு அனுப்பி வைத்ததாக மாத்ஸய புராணம் கூறுகிறது.
————-
100. திருவதரியாச்சரமம் (பத்ரிநாத்)
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிக்குன்றுகட்கு மத்தியில் பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள்
நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.
எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடமாகவும், மோட்சத்தைத் தரத்தக்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இத்தலம்
பற்றி தனி நூலொன்றே யாக்கும் அளவிற்கு வடநாட்டுப் புராணங்களும், வடநாட்டு நூல்களும் குறிப்புக்களை வாரிவாரியிறைக்கின்றன.
இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். ஓம் நமோ நாராயணாய
என்ற மந்திரத்தை நாராயணன் என்ற திருநாமத்துடனே வந்து உலகத்திற்கு உகந்தருளின இடம் இந்த தலமாகும். திருமந்திரம் பகவான் மூலமாகவே
வெளியான இடம்.
எம்பெருமானைச் சரண்புகுந்து மோட்சம்புகும் பக்தர்கட்கு மிக எளிய வழியான திருமந்திர உபதேசத்தை போதித்துத் தன்னை காட்டிக் கொடுத்த
தலம்.
மகாலெட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்திரகாச்ரமம்
ஆயிற்றென்பர். உபதேசம் செய்வதற்கு ஆஸ்ரமம் அவசியமன்றோ.-எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக
தேர்ந்தெடுத்ததால் பத்திரகாஸ்ரமம் ஆயிற்றென்பர். இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. இதற்கு எதிர்புறம் அமைந்துள்ள நீலகண்ட
பர்வதம் காண்பதற்குப் பேரெழில் பொலிந்ததாகும்.
மூலவர்- பத்ரி நாராயணன், சங்கு சக்கரத்துடன் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்– அரவிந்த வல்லி
தீர்த்தம்- தப்த குண்டம்
ஸ்தல விருட்சம்- பத்ரி, இலந்தை மரம்
விமானம்- தப்த காஞ்ச விமானம்
காட்சி கண்டவர்கள்- மானிடரூப சிஷ்யனான நர நாராயணன்.
108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் பகவான் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய ஸ்தலமாகும். மற்றெல்லா ஸ்தலங்களிலும் அவனருள்
காட்டி அவனது பலத்தைக் காட்டி நின்றாலும் இங்கு மட்டும்தான் ஆச்சார்ய திருக்கோலத்தில் திகழ்கின்றான். பக்தர்களுக்காகவும் இவ்வுலகிற்காகவும்,
பிராட்டிக்காகவும், பிற ஸ்தலங்களில் தன்னை வெளிக்காட்டிய எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசம் செய்ய தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்திய
ஸ்தலம் இது ஒன்றுதான். எனவேதான் இங்கு தனது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு ஒரு தபஸ்வியின் வடிவில் இலந்தை மரத்தடியில்
பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார்.
பத்ரிநாத்தானது, அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில்
அமைந்துள்ளது. இந்த பத்ரி நாதனைக் குறித்து நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் ஜபம் செய்து மஹா விஷ்ணுவின் அருள்பெற்றார் என்னும் ஓர் வரலாறும் உண்டு.
பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான்
கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.
பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தில்
நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார். கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன்
ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க
வீற்றிருக்கின்றனர்.
இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக (ஸாளக்கிராமச் சிலையாக) எழுந்தருளியுள்ளார்.
இங்கு பெருமாளுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும் (திருமஞ்சனம்) திருவாராதனம், சாத்துமரை மக்களுக்கு எதிரிலேயே
நடைபெறுகின்றன. திரைபோடுவது இல்லை. இங்கு நடைபெறும் பூஜாமுறைகளை பக்தர்கள் நேருக்கு நேர் நின்று காணலாம்.
இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். இந்த பூஜைக்குரிய மந்திரங்களை வடநாட்டு பிராம்மணரே
ஓதுவர். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் கலைவர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள தேசத்து நம்பூதிரிகளே தலைமை
அர்ச்சகராக இருந்து செயல்படுவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். மிகவும் நல்லொழுக்கம் வாய்க்கப் பெற்றவர்களும், சாஸ்திரங்களிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களே இந்த நிகழ்ச்சிக்கு குழுவினராக நியமிக்கப்படுவர். இந்த பூஜை நடைபெறும் சமயம் பெருமாளின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை
நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.
இங்கு கோவிலின் வடபுறம் கங்கை கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில்
பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுகிறது. இவ்விடத்தில் சிரார்த்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோட்சம்
கிடைப்பதாக ஐதீஹம்.
இங்கு இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன.
இங்கு அமைந்துள்ள வசுதரா என்ற பனிமலையில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் பனித்திவலைகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை
என்றும், இவைகள் மேனியில் படுதலால் புனிதம் உண்டாகிறதென்றும் நம்பிக்கை. இங்கு யாத்திரை செல்வோர் இந்த திவலைகளில் குளித்து வருவர்.
எல்லையற்ற பெருமைகொண்ட இத்தலத்திற்கு விசாலபுரி என்ற பெயரும் உண்டு. பாண்டவர்களின் அவதாரஸ்தலம் இதுதான் என்று ஒரு
கருத்தும் உண்டு.
இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்துவிடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து
இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று மீண்டும்
திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் இரவில் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும்போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள்
மறுநாள் காலையில் பார்த்தால் எந்த அளவுக்கு லேசாக வாடியிருக்குமோ அந்த அளவிற்குத்தான் மலர்களின் வாட்டம் இருக்குமாம். அதனால் தான்
மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர் என்னும் ஐதீஹம் உண்டானது.
மே மற்றும் ஜூன் மாதங்களே இந்த யாத்திரைக்கு மிகவும் உகந்ததாகும்.
————–
101. திருச்சாளக்கிராமம் (ஸாளக்கிராவா)
இத்தலம், நேபாளம் காட்மண்டு பகுதியில் அமைந்துள்ள கண்டகி நதி பிராந்தியத்தில் உள்ளது.
அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும். நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து 170 மைல் தூரத்தில் கண்டகி நதிக்
கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண சேத்திரம் உள்ளது. இந்த முக்தி நாராயண சேத்திரமே சாளக்கிராமம் என்று
சொல்வாருமுண்டு.
பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல்
ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம்
என்றழைக்கப்படுகிறது.
இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல
அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூர்த்தியும் சாளக்கிராம
வடிவத்தினர்தான்.
மூலவர்– ஸ்ரீமூர்த்தி வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- ஸ்ரீதேவி
தீர்த்தம்- சக்ர தீர்த்தம், கண்டகி நதி
விமானம்- கனக விமானம்
காட்சி கண்டவர்கள்– பிரம்மா, சிவன், கண்டகி.
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு
போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை
அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை
வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு
அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இப்பேர்ப்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும். இவைகளில் ஸ்ரீமந் நாராயணனின் ஜீவரூபம் கலந்திருப்பதாக ஐதீஹம்.
இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம்.
சாளக்கிராமங்கள் உருண்டையான வடிவத்திலும் தட்டையான வடிவத்திலும் முக்கோணத்தில் பாதிக் கூறான அரை முக்கோண வடிவிலும்
சங்கு, நத்தைக் கூடு வடிவிலும் சுருள் சுருளான ரேகைகளுடன் கூடினதாகவும், துவாரங்களுடன் கூடினதாகவும், இன்னும் வடிவு சொல்லவியலாத சில
வடிவங்களிலும் தோன்றுகின்றன. இங்குள்ளவர்கள் இதனைச் சாளக்கிராவா என்று அழைக்கின்றனர்.
சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள்
கருதப்படுகின்றன.
1. வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ சேத்திரம்
2. கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு சேத்திரம்
3. பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண சேத்திரம்
4. பசும்பொன் (அ) மஞ்சள் சற்று மஞ்சள் கலந்து சிகப்பு நிற
சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம சேத்திரம்
5. மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன சேத்திரம்
6. கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்
இந்த வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும் மாறுபடுகின்றனவாம்.
நீலநிறம் – செல்வத்தையும், சுகத்தையும்
பச்சை – பலம், தைரியம்
வெண்மை – ஞானம், பக்தி, மோட்சம்
கருப்பு – புகழ், பெருமை
புகை நிறம் – துக்கம், தரித்திரம்
சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூஜிக்கப்பட்ட சாளக் கிராமங் களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. இதைப்பால் அல்லது அரிசி மீது
வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து
போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை. சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள்
இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும்.
சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று. பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால்
பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித
நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள். இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின்
தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில்
வாங்குதல் சிறப்பு.
சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கடலில் ஒரு சாளக்கிராமம் கிடைக்க அதனை ஸ்ரீராமர் பாதம்
அமைந்திருக்கும் கந்தமான பர்வதம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் (இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல்) வைக்கப்பட்டுள்ளது.
தேங்காயளவு பருமனான இந்தச் சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமுகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது.
நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான்
சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான்அமைந்துள்ளது.
இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய ஸாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி
நதிக் கரையில் அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர் கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது.
ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார்.
வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து
கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராம
ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.
சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.
ஏறத்தாழ 7 கோடியிலிருந்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இடை ஊழிக்காலத்தில் (MESOZOIC) வாழ்ந்து பின்னர் அற்றுப்போய்விட்ட ஒரு
வித மெல்லுடலிகள்தான் அம்மோனைட்டுகள் அல்லது அம்மோனாய்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ 8000 வகை அம்மோனைட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அம்மோனைட்டுகளின் ஓடுகள்
அளவிலும், வடிவிலும் வேறுபட்டவை. 1.3 செ.மீ முதல் 2 செ.மீ அளவு விட்டமுடையவை. ஒருதளச் சுருளமைப்பு உடையவை. அம்மோனைட்டுகளின்
ஓடுகள் தவிர மென்பகுதிகள் கற்படிவங்களாக மாற்றமடையாததால் அவற்றின் தன்மையை அறிய இயலவில்லை.
இந்தியா நேபாளம் உள்பட பல நாடுகளிலும் அம்மோனைட்டுகளின் கற்படிவங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அரியலூர்ப்
பகுதியில் கிரெட்டேசியஸ் காலத்து (கிரெட்டேசியஸ் காலம் என்பது சுமார் 7 கோடி ஆண்டுகட்கு முற்பட்டதாகும்) அம்மோனைட் கற்படிவங்கள்
சுண்ணாம்பு கற்பாறைகளிடையே நிறையக் கிடைக்கின்றன. இவை வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கருங்கல்லாலான அம்மோனைட் கற்படிவங்கள் பார்க்க மிக அழகாக இருக்கும். இவையே நம் நாட்டில் சாளக்கிராமம் என்று புகழ்பெற்றுள்ளன.
பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாளக்கிராமமோ என்ற முதுமொழி ஒரு பழைய தமிழ் நூலில் (சேது புராணம்) மேற்கோளாக
எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலிருந்து நத்தை போன்ற, ஆனால் வேறொரு உயிரின் படிவமே சாளக்கிராமம் என்று நம் முன்னோர்கள்
அறிந்திருக்கின்றனர்.இயற்கையில் மிகத் தொன்மையான அற்புதமான இந்தச் சிருஷ்டியில் நம் முன்னோர்கள் இறைத் தத்துவத்தைக் கண்டது நமது மரபாகும்.
————-
102. திருவடமதுரை (மதுரா)-(பிருந்தாவனமும், கோவர்த்தனமும் அடங்கியது.)
கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆநிரை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் களித்திருந்த பிருந்தாவனம்,
ஆநிரைகளையும் கோபால கோபியரையும் காக்க குன்றைக் குடையாக எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும்
சேர்த்தே மங்களாசாசனமாகக் கொள்வர். இந்த மூன்று இடங்களும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள் பிருந்தாவனத்திற்கு
கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீமத் பாகவதத்தில் முழுக்க முழுக்க மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்துப் பயின்று வந்துள்ளன. ஸ்ரீகிருஷ்ணன்
பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் 7வது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற
குழந்தைகளை எல்லாம் கொன்றது, கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல்
சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது, அங்கு
லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து, அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம்
செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ணவரலாற்று நிகழ்ச்சிகள்
இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.
மூலவர்– கோவர்த்தன நேசன், பாலகிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- சத்திய பாமா நாச்சியார்
தீர்த்தம்- இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி
விமானம்– கோவர்த்தன விமானம்
காட்சி கண்டவர்கள்– மதுரா நகர்வாசிகள், கோபாலர்கள், கோபியர்கள், இந்திராதி தேவர்கள், வசுதேவர், தேவகி, யசோதை, கம்சன்,
ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரங்களில் மது என்னும் ஒரு நகரம் தலைசிறந்து விளங்கியது. அந்நகரை அரசாண்டு வந்த
லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்தது மட்டுமன்றி யாகங்களை அழித்து ரிஷிகட்குத் துன்பம்
விளைவித்துக் கொடும்பாதகம் புரிந்து வந்தான். இந்நிகழ்ச்சி இவ்வூரில் இராமாவதார காலத்தில் நிகழ்ந்ததாகும். ரிஷிகள் இராமபிரானிடம் சென்று
லவணாசுரனை சம்ஹாரம் செய்து விசுவாமித்திரருக்கு உதவியது போல தமக்கும் உதவி தம்மை ரட்சிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தனர். ராமன்
தன் தம்பி சத்ருக்கனை அனுப்பி லவணாசுரனை அழித்தான்.
அரக்கனையழித்த பிறகு பிறைவட்ட வடிவில் யமுனை நதிக்கரையில் இந்த மது நகரத்தை விரிவாக்கி புதுமைப்படுத்தி மதுரா என்று பெயரிட்டு
சத்ருக்கனன் நெடுங்காலம் ஆண்டு வந்தார். இவரது வம்சத்தாருக்குப் பிறகு இந்நகரம் வசுதேவரின் பரம்பரையினருக்கு வந்துற்றதாக ஐதீஹம். இந்த
மதுராநகர்தான் இன்று கிருஷ்ண ஜென்ம பூமியாக தனது தொல்லியல் புகழை மெல்லிய வேணுகானத்தில் இழைத்துக் கொண்டுள்ளது.
ஆயர்பாடியில் இந்திர பூஜை நடப்பது வழக்கம். இந்திரனுக்கு ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழை வேண்டி ஆடல் பாடல்
புரிவர். ஸ்ரீகிருஷ்ணன், ஆயர்பாடியில் வளர்ந்து வரும் சமயம் ஒரு நாள் இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கவே இவைகளெல்லாம்
என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக இந்திரனுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து கொண்டுள்ளோம் என்று சொன்னவுடன் அட
அப்படியா இந்த உணவு வகைகள் எனக்கு பிரியமானவைகள் தான் இவைகளை எனக்கே படையுங்கள் என்று கூறி கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை இடச்சொல்லி தானே கோவர்த்தன மலையாக இருந்து முழுதும் உண்டு தீர்த்தான் உலகுண்டவாயன்.
இதனால் சீற்றம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி ஆநிரைகளையும், ஆயர்களையும் அப்பாலும் இப்பாலும் அலைக்கழிக்க
எல்லோரும் ஒன்றாகக் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கோவர்த்தன மலையருகே ஓடி வந்தனர். இவர்கள் வருவதைக் கண்டவுடன் கண்ணன் அந்த
மலையை பெயர்த்தெடுத்து தலைக்குமேல் குடைபோல் பிடித்துக் கொள்ள அதற்குள் வந்து ஆயர்களும், ஆநிரைகளும் அடைக்கலமாயினர். பயங்கர மழை கொட்டியும் எவ்வளவோ இந்திர ஜாலங்கள் செய்தும் பயனின்றி போகவே இறுதியில் இந்திரன் வந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கோரினான்.
இந்திரன் ஆணையிட்டவுடன் மேகங்கள் வாயைத் திறந்து கொண்டு சென்று கடல்நீரை அப்படியே கபளீகரம் செய்து பானையிலிருந்து கொட்டிக்
கவிழ்த்ததைப் போல கொட்டியதாம்.இவ்வாறு கொட்டு கொட்டு என்று கொட்டிய மழையைக் கண்ணன் தடுத்தானாம்.
தனது ஐந்து விரல்களையும் தாமரை மொட்டுப் போல் கவித்து வைத்து மலையைத் தூக்கி அந்தக் கைவிரல்கள் தாங்குவதற்கு தமது நெடுந்தோள்களை
காம்பு போல் வளைந்து கொடுத்து ஆனாயசமாக தூக்கினானாம்
மதுரா செல்பவர்கள் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தன கிரி இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கோகுலம் இவைகளை வரிசைப்
படுத்தி ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் நாள் தங்கி கண்ணன் லீலைகளை மானசீகமாக உணர்ந்து திவ்யமான பக்தி உணர்வில் திளைத்து ஸ்ரீகிருஷ்ண
நினைவுடன் திரும்பி வரலாம். கோகுலாஷ்டமி சமயத்தில் இங்கே சென்றால் ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண
நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.
பிருந்தாவனத்தில் தென்னக முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. ரங்கமந்திர் என்றழைக்கப்படும் இந்த
விசாலமான கோவிலில் நுழைந்தவுடன் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிடும். காரணம், இங்கு எம்பெருமானின் கைங்கர்யத்தில்
ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு வைணவர்களேயாவர். இங்கு ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள்,
திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர்கட்கும் சன்னதிகள் உண்டு.
இவர்களை வரிசைக் கிரமமாக சேவித்து வரும்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் பெருமாளை தரிசிப்பது போன்ற எண்ணம் வந்து விடும்.
தமிழகத்திலிருந்தும் மற்றும் தென் மாநிலங் களிலிருந்தும் வரக்கூடிய பக்தர்களுக்கும், அடியார்கட்கும் இக்கோவில் கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள
தமிழக வைணவர்கள் பேருதவி புரிந்துவருகின்றனர்.
————
103. கோகுலம் (ஆய்ப்பாடி)
இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8
மைல் தூரத்தில் உள்ளது.
கண்ணனின் பாலபருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம்
எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த
கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. சுருக்கமாக இதன்
வரலாற்றை ஒரே வரியில் சொன்னால் கண்ணனின் பால பருவ வளர்ச்சிதான் கோகுலம்.
மூலவர்- நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- ருக்மணி தேவியார், சத்திய பாமா
விமானம்- ஹேம கூட விமானம்
காட்சி கண்டவர்கள்– கோகுல வாசிகள்
இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது. ஒரு காலத்தில் (துவாபரயுகத்தில்) இங்கு கண்ணன் பாலகுமாரனாக ஓடியாடி
விளையாடி லீலை செய்த காட்சிகளை நினைவு கூறும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும்
இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை,
பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்.
ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும் மதுராவில் இப்போதுள்ள தொன்மைமிக்க கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.
அயோத்தியைப் போலவும், துவாரகை போன்றும் பரபரப்பாகக் காணப்படாவிடினும் அமைதி தவழும் ஆரண்யம் போல் திகழ்கிறது கோகுலம்.
எம்பெருமான் “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன்
இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது.
இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக கோகுல வாசத்திற்கே சாலவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு.
ரஸோ வை ரஸ, என்று வேதமும் உன்னைச் சிறந்த ரஸம் என்கிறது. நீ இருக்கும் இடம் ரஸம் நிறைந்ததாகவே இருக்கிறது. கிருஷ்ண ரஸாயணம் பிப
என்றார் குலசேகரர். அவர் சொன்னபடி கிருஷ்ணரஸாயணத்தை (கிருஷ்ண சரித்திரங்களை) உண்டு சுவைப்பதிலேயே உயிரினங்களும்
காலங்கடத்துகின்றன. என்னே அருமையான ரஸபாவனையில் மூழ்கியுள்ளனர் பெரியோர்கள்.
————–
104. திருத்துவாரகை
தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இந்தக்கோவிலை இங்குள்ள
மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். கடந்த 5000
ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.
கண்ணபிரானின் சரித்திரத்தோடும், பாரதப் போரினோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்த துவாரகாபுரி அமைந்துள்ள மாநிலம் தான்
இன்றைய இந்தியா சுதந்திரம் பெறக் காரணமான மகானையும் ஈன்று அன்று போல் இன்றும் தன் ஒல்காப் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
மூலவர்- துவாரகா நாத்ஜி. கல்யாண நாராயணன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- கல்யாண நாச்சியார் (ஸ்ரீலட்சுமிதேவி) ருக்மணி, அஷ்டமஹிஷிகள்.
தீர்த்தம்- கோமதி நதி
விமானம்- ஹேம கூட விமானம்
காட்சிகண்டவர்கள்- கண்ணன் வாழ்ந்த போதிருந்த துவாரகா வாசிகள் மற்றும் திரௌபதி
இங்கு செங்கோல் செலுத்தி மன்னாதி மன்னனாக வாழ்ந்த கண்ணபிரானை துவாரகா நாத்ஜி என்றே இங்குள்ள மக்கள் அழைப்பர்.
எவ்வளவு அரசியல்மாற்றங்கள் வந்தாலும் இங்குள்ள மக்கள் கண்ணனே தங்கள் மன்னன் என்று எண்ணி வாழ்கின்றனர். தங்களை துவாரகா நாத்ஜியின்
பிரஜைகளாக இன்றும் எண்ணி இறுமாப்பெய்துகின்றனர்.
இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது அஷ்ட மகிஷிகட்கும் அண்ணன்
பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.
இங்கே கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து
மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை
உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 71/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும்
படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு
அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு கனி வர்க்கங்கள் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான்.
இதனால் பயந்து போய் உணவு செரிமானம் ஆயிற்றோ என்னவோ என்று கருதி செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம்
கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு (திருவாராதனத்திற்கு) போக் என்று பெயர்.
பக்த மீரா அன்ன ஆகாரமின்றி கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனை ஆரத்தழுவி அவனோடு இரண்டறக்
கலந்தது இந்த தலத்தில் தான். இவளின் கானம் தூணுக்குத் தூண் எதிரொலித்து கண்ணனை புளகாங்கிதம் அடையச் செய்ததும் இங்குதான்.
மீராவுக்கு மேவார் நகரில் விஷம் தர ஏற்பாடு செய்யப்பட்டதும் இச்சன்னதியின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. மேவாரிலிருந்து பித்துப்
பிடித்தவள் போல் ஓடி வந்த மீரா, எங்கே துவாரகை எங்கே என் நாதன்என்று கூவிக் கொண்டே இச்சன்னதியின் வாசலை அடைந்தவுடன்
கோவிற்கதவுகள் தானாகத் திறந்து கொண்டன.
அரண்மனை எவ்வாறு கலகலப்பாக இருக்குமோ அதேபோல் இங்கு யாத்ரீகர்கள் (பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்) கூட்டம் கூட்டமாக
வருவதால் எந்நேரமும் கலகலப்பு களைகட்டியிருக்கின்றது. இங்கு பெண்கள்கூட்டங்களையும் அவர்களின் உடைகளையும் பார்க்கும்போது ஆயர்ப்பாடி
கோபிகைகளின் நினைவே நமக்கு வருகிறது. கண்ணன் இருக்கிறான்
கோபியர்கள் இருக்கிறார்கள். ஆநிரைகள் மட்டும் எங்கே சென்றுவிடும். இங்கே ஊருக்குள் திரியும் ஆநிரைகளை மக்கள் கண்ணனின்
ஆநிரைகளாகவே அவைகளைத் தொடுவதில் மகிழ்ச்சி கொள்வதும், அவைகட்கும் பூச்சூட்டி மகிழ்வதும் அவைகள் பொலிவு தோன்ற இறுமாந்து நின்று செம்மாந்து திரிவதும் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமன்றி காண கிடைக்காத ஒரு தெய்வீகம் கலந்த காட்சியாகும்.
ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி
சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். பட்ட மகிஷி அல்லவா ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜகளை
ஜொலிக்க வீற்றிருக்கிறாள்.
ஒருநாள் ராதை துவாரகை வந்தாள். ருக்மணி வரவேற்று பாலும், தேனும் கொடுத்தாள். இருவரும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
அன்றிரவு கண்ணன் படுக்கையறைக்கு வந்ததும் ருக்மணி கண்ணனுக்குப் பாத பூஜை செய்தாள். கண்ணனின் பாதங்களில் சிறு கொப்புளங்கள்
உண்டாயிருந்தன. இதைக் கண்டு திடுக்கிட்ட ருக்மணி பெருமானே, இந்தக் கொப்புளங்கள் எப்படி வந்தன என்று கேட்டாள். ருக்மணி நீ இன்று
ராதைக்குப் பால் கொடுத்தாயல்லவா அது சூடாக இருந்தது. அதை அவள் பருகியபோது எப்போதும் அவள் தனது இதய கமலங்களில் வைத்திருக்கும்
எனது பாதங்களில் சூடுபட்டு இந்தக் கொப்புளங்கள் வந்துவிட்டதென்றான். ஆனால் பால் சூடாக இருந்தது என்று ராதை கூறவில்லையே என்றாள்
ருக்மணி. நீ பிரியமாக கொடுத்ததால் சூடு உள்ளது என்று உன்னிடம் சொல்லாமலேயே குடித்துவிட்டாள். ஆகா, உம் பாதங்கள் கோமளமானவை
அதைவிடக் கோமளமானதன்றோ ராதையின் இதயம் என்றாள் ருக்மணி. என்னே அன்பு கலந்து நிகழ்ச்சியைக் கூட்டி விட்டான் இந்த துவாரகையில்.
முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்கட்கு
இங்கிருந்துகொண்டு மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப்படுகிறது. இதனாலும் துவாரகை என்று பெயர் வந்தது என்பர்.
இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இது ஒரு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை
பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். நாம் முன்னே சொன்ன துவாரகா சன்னதியிலிருந்து ஒகா துறைமுகம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து
விசைப்படகு மூலம் இத்தலத்தை அடையலாம். இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர்.
இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும்
நடைபெறும் அலங்காரங்களை நாம் எதிரில் நின்று கொண்டே கண்குளிரக் காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி ஸேவை தருகிறாள்.
இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி நாராயணன் என மொத்தம் ஐந்து சன்னதிகளும், சங்க தீர்த்தம் என்னும் மிகப்
பிரசித்தமான தீர்த்தமும் உண்டு.
துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 3 மைல் தூரத்தில் உள்ள ருக்மணி தேவியின் சன்னதியில் தான்
ஸ்ரீகிருஷ்ணபகவான் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீஹம்.
இங்கிருந்து திரும்பும்போது (அதாவது பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு) விராவல் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கினால் பிரசித்தி
பெற்ற சோமநாதர் ஆலயம் செல்லலாம். இதற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலகா என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் போவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் கிருஷ்ணரின் அரசரடி சயன திருக்கோலத்தைக் காணலாம். கிருஷ்ணன் சயனத் திருக்கோலத்தில் இருப்பது அநேகமாக 108 திவ்ய தேசங்களில் இந்த ஒரு இடத்தில் என்று மட்டுமே கூறலாம். துவாரகா புரியை மட்டுமே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பினும் நிகழ்ச்சிகளால் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து
கிடக்கும் இங்குள்ள ஸ்தலங்கள் யாவற்றையும் மங்களாசாசனம் செய்வதாக கொள்ளலாம்.
ஜராசந்தன் என்னும் அரக்கன் மக்களுக்கு பல துன்பங்கள்விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு
உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டுமென கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை யழைக்க அவனால்
வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி. இதனால் மிக்க சந்தோஷமடைந்த சமுத்திர ராஜன் இந்நகரைக் காத்து வந்ததாகவும் ஐதீஹம். இந்த துவாரகாபுரி
கடல் கோள்களால் விழுங்கப்பட்டு விட்டது.
இங்கு செல்பவர்கள் தனி பிரயாணத்திட்டம் வகுத்து சுமார் 6 நாட்கள் வரை தங்கி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கையோடு
தொடர்புடைய இடங்கள், பேட்துவாரகை, விராவல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்தலங்கள் மற்றும் இங்குள்ள ப்ராபஸ தீர்த்தம், ஜீனகட்
எனப்படும் ரயில்நிலையத்திலிருந்து 100மைல் தொலைவிலுள்ள கிரிதார் என்னும் ரைவதமலை மற்றும் இங்கு வாழும் பெரியவர்களாலும்,
பக்தர்களாலும் சொல்லப்படும் முக்கியமான புனித ஸ்தலங்களைத் தரிசித்து, தீர்த்தாடனம் செய்து வருவது மிக்க விசேஷம்.
கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ண சாம்ராஜ்யமான இந்த துவாரகாபதி சென்று வந்தவர்கட்கு இங்கு
கண்ட காட்சிகள் வாழ்நாள் முடிய மறக்கவொன்னாதவைகளாகும்.
———————–
105. திருச்சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)
இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோவிலும், மலையின் மேல் ஒரு கோவிலுமாக இரண்டு கோவில்கள் உண்டு. மலையடிவாரத்திலிருந்து
பிலம் என்றால் குகை அஹோ என்னும் சொல் சிம்மத்தை குறிப்பது. ஆதலின் வடமொழியில் அஹோபிலமாயிற்று. சிங்கவேள் என்று தூயதமிழால் சுட்டப்பட்டு குன்றத்தையும் சேர்த்து சிங்கவேள் குன்றமாயிற்று. மலைமேல் உள்ள கோவில் சுமார் 10 கி.மீ. தூரமாகும்.
கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாக அவ்வவதாரத்தை தரிசிக்க இந்த மலைகளடங்கிய
காட்டுப்பகுதியில் வந்து கடுந்தவமியற்றி வர, கருடனின் தவத்தை மெச்சிய எம்பெருமான் இந்த அஹோபிலம் மலையில் மீளவும் நரசிம்ம அவதாரம்
செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல்
கர்ஜித்தது. பிரகலாதனின் வேண்டுகோளுக் கிசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற நரசிம்ம அவதாரத்தின் 9 தத்துவங்களை அர்ச்சா ரூபமாக
9 திருக்கோலங்களில் இங்கு காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும்
பெயருண்டு. சேஷாத்திரியாக உயர்ந்திருப்பது வேங்கடமென்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.
மலையடிவாரக் கோவில்- இதனைக் கீழ் அஹோபிலம் என்றும் சொல்வர்.
மூலவர்- பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன், கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- அமிர்தவல்லி, செஞ்சுலெட்சுமி
உற்சவர்-நரசிம்ம ரூபத்தின் அர்ச்சா மூர்த்திகளான 9 மூர்த்திகள். 8 உற்சவ மூர்த்திகள் இந்தக் கோவிலில் உள்ளனர். மாலோல நரசிம்மருக்கான
உற்சவமூர்த்தி மட்டும்தனியாக உள்ளார். இங்குள்ள உற்சவர் சக்கரவர்த்தி திருமகனாக சேவை சாதிக்கிறார். இவர் சுயம்பு.
மாலோல உற்சவர் அஹோபில மடத்தில் அழகிய ஜீயர் சுவாமிகளின் நித்திய திருவாராதன விக்ரகமாக உள்ளார்.
தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்.
விமானம்- குகை விமானம்
காட்சி கண்டவர்கள்- கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய சிங்கர்.
மலையின் மேல் உள்ள கோவில்
மூலவர்- அஹோபில நரசிம்மர்
தாயார்- லட்சுமி
தீர்த்தம்- பாவநாசினி
விமானம்- குகை விமானம்
காட்சி கண்டவர்கள்= பிரகலாதன். கருடன், இங்குதான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும் கூறுவர்.
இங்கு மொத்தம் 9 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. எனவே இதனை நவநரசிம்ம சேத்திரங்கள் என்றும் வழங்குவர். மலையடிவாரத்திலும், மலையின்
மேலுமாக மொத்தம் 9 நரசிம்மர்கள்.
1. அஹோபில நரசிம்மன்
2. வராக நரசிம்மன்
3. பாவந நரசிம்மன்
4. காரஞ்ச நரசிம்மன்
5. சக்ரவட நரசிம்மன்
6. பார்க்கவ நரசிம்மன்
7. ஜ்வாலா நரசிம்மன்
8. மாலோலா நரசிம்மன்
9. யோகாநந்த நரசிம்மன்
இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக ஐதீஹம். (அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்கப் பெருமாள் வைகுண்டத்தை
விட்டதும் பிராட்டியும் இவ்விடம் புக்கு வேடுவர் குலமகளாய் அவதாரம் செய்தனரென்பர்) லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில்
வளர்ந்துவர பெருமாள் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டம் விடுத்து இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு
செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும்வரை இங்கேயே தங்கிவிட்டதாக ஐதீகம். பெருமாள் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டார் என்றும்
சொல்வர். பெருமாளுக்கு இவ்விடத்து வேடவர் சம்பந்தமிருந்ததை “களைந்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்று திருமங்கை படம்
பிடித்திருக்கிறார்.
இங்கு மலையின்மேல் பாவநாசினி என்னும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் கரைவழியே மேலே சென்றால் வராஹ நரசிம்மன் சன்னதியைச்
சேவிக்கலாம். இங்கிருந்து மேலும் 1 1/2 மைல் தூரம் சென்றால் மாலோல நரசிம்ம சேத்திரம் உள்ளது. இங்கிருந்து மேலும் 2 மைல் தொலைவு சென்றால்
ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்த தூண். நரசிம்மன் தூணிலிருந்து வெளிப்பட்ட இடம் உள்ளது. இங்கு தகுந்த துணையுடன் செல்ல வேண்டும். அல்லது
பிரம்மோத்ஸவம் நடைபெறும் சமயமான மாசி மாதம் சென்றால் கூட்டமாகச் செல்லும் பக்தர் குழாத்துடன் செல்லலாம். பொதுவாகவே இங்கு மலைமேல்
உள்ள எல்லா நரசிம்மர்களையும் சேவிப்பது கடுமையான செயலாகும். கரடுமுரடான பாதைகள் மட்டுமின்றி செங்குத்தாக மலைமேல் ஏறவேண்டிய
இடங்கள் மட்டுமின்றி காட்டுமிருகங்கள் நடமாடக்கூடிய பகுதிகளும் உண்டு.
மலையடிவாரக் கோவிலுக்கு முன்பு சுமார் 85 அடி உயரமுள்ள ஒரே கல்லாலான தூண் ஒன்று உள்ளது. இதற்கு ஜெயஸ்தம்பம், வெற்றித்தூண்
என்பது பெயர். இது பூமிக்கடியில் சுமார் 30 அடிவரை தோண்டி நிலை நிறுத்தப்பட்டுள்ள தென்ற விபரத்தை அறியும்போது பேராச்சர்யமாக உள்ளது.
மிகுந்த பக்திசிரத்தையோடு இந்த தூணின் முன்புறம் எடுத்துக்கொள்ளும் பிரதிக்ஞைகள் (வேண்டுகோள்கள்) வெற்றிபெற்று விடுவதாக ஐதீஹம்.
சீதா தேவியைத் தேடிவரும் போது இராமபிரானும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து நரசிம்மனை ஐந்து ஸ்லோகங்களால் அர்ச்சித்து
வெற்றிப்பாதையில் சென்றதாக வரலாறு. இப்பெருமானைத் துதித்தவுடன் சீதை கிடைத்துவிட்டதாகவே ராமபிரான் எண்ணிச் சென்றார்.
அஹோபிலமடம் வைணவசமய வளர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இடம்வகிக்கிறது. வானமாமலைபோல் திருவரங்கம் போல் திருமலைபோல் வைணவ
சம்பிரதாய வளர்ச்சியில் அஹோபிலமடம் முதன்மையும் முக்கியத் துவமும் வகிக்கிறது. அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் எண்ணற்ற
கோவில்களும், நூலகங்களும், கல்விக் கூடங்களும் மத சம்பந்தமான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அஹோபில மடங்களுக்கு தலைமைப் பீடம்
இதுதான். இங்கு தற்போது பெரிய மடங்களும் விசாலமான மண்டபங்களும், உயர்ந்த கட்டிடங்களும் நிறைந்து அஹோபிலம் களைகட்டி நிற்கிறது.
வடகலை சம்பிரதாயப்படி இயங்கிவரும் இந்த அஹோபில மடத்தின் ஒவ்வொரு ஜீயர் சுவாமிகளும் ஒரு குறிப்பிடத்தக்கப் பெரும் பணியைச்
செய்திருக்கின்றனர். இந்த மடத்தின் அழகிய சிங்க ஜீயர் சுவாமிகள்தான் ஸ்ரீரங்கம் தெற்கு ராய கோபுரத்தின் நின்றுபோன பணியைத் துவக்கி அதனை ஆசியாவிலேயே பெரிய கோபுரமாக்கி அரங்கனுக்குச் சமர்ப்பித்து அழியாப் புகழ்படைத்து
பெருஞ்சாதனை புரிந்துவிட்டார்.
அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு இளைஞர் வந்தார். அப்போது பெருமாளே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து
அவருக்கு காட்சி கொடுத்து மந்திர உபதேசம் செய்து அவரைத் துறவறத்தில் சேர்த்து இங்குள்ள ராமானுஜர் சன்னதியிலிருந்து துறவாடையினையும் திரி
தண்டத்தையும் கொடுத்து ஸ்ரீசடகோபஜீயர் என்ற திருநாமத்தையிட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். அப்போது இந்த
ஜீயருக்கு வயது 17. பெருமாளால் ஜீயர் சுவாமிகட்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை
வைத்துக்கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவதென்று ஜீயர் பெருமானிடம் வேண்ட பெருமாள் இங்குள்ள உற்சவமூர்த்தியான மாலோல நரசிம்மனை
ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார் அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத்தான் தாம் செல்லும் இடங்களுக்கு
எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டி முடித்த அழகிய சிங்கர் ஜீயர் திருவரங்கம் வந்தபோது
இந்த பெருமாளும் திருவரங்கம் வந்துவிட்டார்.
அஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட பராங்குச யதீந்த்ர மகாதேசிகன் என்னும் ஜீயர் இங்குள்ள மலைமேல் உள்ள
நரசிம்மன் சன்னதியில் (அகோபில நரசிம்மர்) ஒரு குகையினுள் சென்று இன்னும் தியானத்திலிருப்பதாக ஐதீகம். தற்போது இந்தக் குகை சிமிண்டினால்
மூடப்பட்டுள்ளது. அங்கு ஜீயர் சுவாமிகள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது இங்குள்ள பெரியவர்களின் சொல்.
ஆதிசங்கரர் இந்த மலைக்கு விஜயம் செய்தபோது சில காபாலிகள் அவரைக் கொலை செய்ய முயன்றபோது ஸ்ரீநரசிம்மப் பெருமாளே அவரைக்
காப்பாற்றினார் என்பதோர் வரலாறும் உண்டு.
—————
106. திருவேங்கடம் (திருப்பதி)
வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிர்ம்மாண்ட புராணம், வராக புராணம்
ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல குறிப்புகள்
கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு எழுதப்பட்டுள்ளது.
எழுத்து வடிவம் பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும் இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு முன்னால் இப்பெருமானைக்
குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது.
இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம்.
இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால் ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது.
கிரேதாயுகத்தில்-கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி
திரேதாயுகத்தில்-வ்ருஷபாத்ரி
துவாபர யுகத்தில்- அஞ்சனாத்ரி
கலியுகத்தில்-வேங்கடாத்ரி (வேங்கடாசலம்)
இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில்
எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து
முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்
7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம் வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் பெயர்களுடன்
ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7 மலைகட்கு மத்தியில் ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி தந்தருளினார்.
வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதிவராகரைச்
சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டுமென்பது நியதி.
பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின் ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக் கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.
இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.
பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார். தான்
வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று நினைத்த பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச நின்றார். அப்போதும்
பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி அலட்சியப்பார்வை பார்த்து வரவேற்காது இருந்தார். இதனால் கோபத்தின் எல்லையை அடைந்த பிருகு ஏ
பிரம்மனே நீ வந்தோரை வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய் எனவே உனக்கு பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில் உனக்கு பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.
கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில் இருக்கும்
வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு இவன்
கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி என்போன்ற ரிஷிகள்
எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உன்போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில்
பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.
அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை கூட இங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை என்று
எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த நடையினராய் திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவுமில்லை.
எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார் (கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)
திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில் உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.
தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ வினில் உரைக்க திரும்பலுற்றார்.
என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர் ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு
விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர். திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு
தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம் புகுந்து தம் மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில் ஒரு
புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.
இஃதிவ்வாறிருக்க திரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த பேரொளியாய் வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத் தக்க
பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு அவனையே மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று தந்தையை வினவ அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு சொல்ல வேதவதி விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.
திரேதாயுகத்தில் இராமவதாரத்தின்போது இராவணன் பஞ்சவடியிலிருந்து சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது வேதவதியுடன் சென்ற அக்னி
தேவன் ராவணனை நிறுத்தி ஏ, இராவணா நீ கொண்டு செல்லும் சீதை போலிச் சீதை உண்மையான சீதையை இதோ என்னிடம் ஒளித்து
வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி பின்னால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன். இந்த உண்மைச்
சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை நம்பிய ராவணன் வேதவதியைக் கொண்டு செல்ல, உண்மைச் சீதை அக்னியிடம் சேர்ந்தாள்.
இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையை ஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின் தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில்
நான் ஏகபத்தினி விரதன். எனவே கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து பூவுலக வாசம் செய்யும் போது நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.
அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர காமேஷ்டி
யாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும் பெயரில் அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.
இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை. தன் குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.
இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருமலயில்
புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி நெடுநாள் அன்ன ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும் சிவனும் தாங்களே முறையே
பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் சோழ மன்னனிடம் விற்க, அவனதை
மந்தையில் சேர்க்க தினந்தோறும் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப்பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியுள்ள புற்றுக்கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு பால் கொடுக்காமல் இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக்
கண்டுபிடிக்குமாறு பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே சென்று பால் சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த
கோடாலியால் பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க பசுமேய்ப்பவன்
மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.
தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின் ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன் பசுவினைப் பின்
தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே விழுந்துகிடப்பதையும், ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக்கொல்லவந்தவனைத் தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும், ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக அலையக்கடவது
என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன் மன்னிப்புக்கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும் அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம் வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார்.
திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே
வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு இவளே
திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம் தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார்.
ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும் மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து
திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம் நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம் பற்றாக்குறையாக இருக்க
குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாகவரலாறு.
வேதவதியான பத்மாவதியினை ஏற்று யசோதையான வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம் உள்ளவர் போலவே
தோற்றமளிக்க எம்பெருமானின் உளக்கிடைக்கையை அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய் மகாலெட்சுமியை அழைத்து வாரும்
என்று அனுப்பிவைக்க திருமகள் லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு
எழுந்தருள லட்சுமி தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில்
கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது.
பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி ஓடுகிறது. அதன்
அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம் இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் அம்மலரை பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால்
திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான் வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர உத்தரவிட
வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது.
அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள் பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க தாயே
தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில் யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும் தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின் குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம் வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகைகொண்டு ஏற்றுக்கொண்டார்.
பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி, குழந்தாய்
பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம் பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு
திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும் எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு லட்சமி பத்மாவதி
சமேதராக திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு.
ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3 பிரிவுகள் கொண்டது.
முதல் பிரிவு-திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள் சயன திருக்கோலம்.
மூலவர்-கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.
தாயார்- புண்டரீக வல்லி. இங்கு ஆண்டாள் உடையவருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.
இந்தக் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி மிகவும் சக்திவாய்ந்ததாகும். முக்கியத்துவம் நிறைந்ததாகும். தில்லை
திருச்சித்ரகூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து இருந்த பின்னால் தில்லைக்கு சென்றுவிட அவர் நினைவாக இத்தலம்
தோற்றுவிக்கப்பட்டது.
2ம் பிரிவு திருமலை- இது மலைமேல் உள்ள கோவில்
மூலவர்-திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கிடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் வேங்கடத்தான் என்று பல திருநாமங்கள். கிழக்குநோக்கி
நின்ற திருக்கோலம்.
உற்சவர்- கல்யாண வெங்கடேஸ்வரர்.
தீர்த்தங்கள்- மொத்தம் 14 தீர்த்தங்கள்.
1. சுவாமி புஷ்கரிணி 2. பாபவிநாசம்
3. ஆகாசகங்கை 4. கோனேரி
5. வைகுண்ட தீர்த்தம் 6. சக்ரதீர்த்தம்
7. ஜபாலி தீர்த்தம் 8. வகுள தீர்த்தம்
9. பாண்டவ தீர்த்தம் 10. இராமகிருஷ்ண தீர்த்தம்
11. தும்புரு தீர்த்தம் 12. சேஷ தீர்த்தம்
13. சுகஸந்தன தீர்த்தம் 14. மொர தீர்த்தம்.
இதில் மிகவும் முக்கியமான தீர்த்தங்கள் பற்றிய சிறப்பியல்புகள் தனியே தரப்பட்டுள்ளது.
விமானம்- ஆனந்த நிலைய விமானம்
காட்சி கண்டவர்கள்- எண்ணற்ற ரிஷிகள், பிரம்மா, சிவன், ஆறுமுகன், தொண்டைமன்னன்.
3ம் பிரிவு- திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர்.
மூலவர்- தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும்-திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தீர்த்தம்- பத்ம ஸரோவரம்.
சிறப்புகள் 1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த என்பதற்கு 7 என்பது
பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக் குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும் இந்த மலை குறிக்கப்படுகிறது.
அந்த 7 மலைகள் எவையெனில்
1. வேங்கடாத்ரி-வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள்
எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே
பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று.
2. சேஷாத்ரி-ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை
உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று.
3. வேதாத்ரி- வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால்
வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது.
4. கருடாத்ரிதிருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின்
அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.
5. விருஷபாத்தரிவிருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில் திருமால் மோட்சம்
அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே
விருஷபாத்ரி என மொழியப்படுவதாக ஐதீஹம்.
6. அஞ்சனாத்ரி அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள்.
மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ மூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு
அஞ்சனாத்ரி ஆயிற்று.
7. ஆனந்தாத்ரி ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக்
காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக்கொண்டு இப்பெருமாள்
முன்னிலையில் வீழ்த்த, பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின் திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.
திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும். சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.
தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்–பாரதம் பாடிய பெருந்தேவனார்
குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக் கொண்டுள்ள
மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த
தொண்டை மன்னனும் வேங்கடவன் பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து
வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் யாவும்
சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங் கரிப்பதையும் கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த நம்பியின் பக்தி மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுதுசென்றான் தொண்டை மன்னன்.
இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின் மேன்மையை வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான பக்தியுடனும், ஆடம்பரமான
பக்தி வேஷத்தையும், சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக் கூடிய பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த உள்ளம் கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்துகொண்டே இருக்கிறான் வேங்கடவன்.
அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை
முதன் முதலில் அமைத்தவர்.
மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து
கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு ராமாயண பாடம் கற்றுத் தந்தவர் ஆவார். மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை
எழுந்தருளியுள்ளார்.
இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் பூண,
வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில் பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர் என்னும்
அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார். திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்தான் திருமலைப் பயணம்
பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச்
சேலை, ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை
பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன் நடைபெறுகிறது.
தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான் கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பத்ம ஸரோவரத்ர்த்தம் மிகவும்
பிரசித்தி வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு.
இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக இங்குகொண்டு
வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும்
நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது.
நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவை ததும்ப அமைந்ததில்லை.
திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான் கட்டியதாகும். இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இத்தலத்தின் உட்புறச் சுவர்களில் மூல
ஸ்தானத்தைச் சுற்றிவரும் நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும் தூண்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி
எழுத்துக்களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து முறை உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.
தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள் சூழநின்று பொருதபோது
போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட வேங்கடவன் தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க
போர்வென்ற தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்று
வேண்ட அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்ததாகவும் கூறுவர்.
இதேபோல் தொண்டைமானின் வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க நிகழ்வுகளை வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும் கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட வில்லை.
இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல் வேங்கடவன்
இருப்பதால் தான் மிதித்து நடந்துவர விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும்,
இவருக்காகவே இவரது தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து தினமும் இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர். பிற்காலத்தே வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு தெரிவித்ததின் அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார் என்றும் கூறுவர்.
இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல் முன்பு நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார் என்னும் கூற்று பல
இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இளம்வயதில் இராமானுஜர் இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய் இருந்தார். இராமானுஜர்
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் பயில வந்த காலை திருக்கோட்டியூரில் நம்பிகளின் திருமாளிகைக்கு வரும்பொழுது
திருக்கோட்டியூர் தலத்தின் மதிலருகே வந்தவுடன் மண்டி யிட்டு ஊர்ந்து சென்றே நம்பிகளின் வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு ஓர்ந்து
நோக்கத் தக்கதாகும்.
இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து
மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர்.
இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக்
காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை
தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்
திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து எனக்கு மோட்சம் கொடு
என்று கேட்க அது என்னால் முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால் பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது
என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க. ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர் எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு புக்காள்.
அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல) சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும். இது.
தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம்
திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம், இதையெல்லாம் விட இதுஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம் இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என
புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து கூடுகின்றன.
சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.
1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம்
மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு
உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.
2. தும்புரு தீர்த்தம்
பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு
தீர்த்தம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.
3. இராமகிருஷ்ண தீர்த்தம்
தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இகபரசுகம் இரண்டும் சித்திக்கும்.
4. ஆகாச கங்கை
தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில்
வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம்.
கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும்
இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமியன்று நீராடுவது மிக விசேடம்.
5. பாண்டு தீர்த்தம்
வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அதுபோழ்து இதில் நீராடுவோர் சகல
பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.
6. பாபவிநாசன தீர்த்தம்
இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம்
வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய
தினத்தில் இதில் நீராடுவோர் பெறற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.
ஸ்வாமி புஷ்கரிணி
தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும் சரஸ்வதி தேவி தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில்தான்
ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது.
மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.
வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்– என்கிறார் இளங்கோவடிகள்.
————
107. திருப்பாற்கடல்
இதற்கு வெள்ளையந் தீவு என்ற பெயருமுண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி
அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற திருநாமத்தோடு யோக நித்திரையில் தம்மைச் சங்கர்ஷணன், ப்ரத்யுமனன், அநிருத்தன்
என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும் திருமகளும் திருவடி வருட பள்ளி கொண்ட நிலையாகும் திருப்பாற்கடல்
வடிவம்.
கிழக்குப் பக்கம் சிரிப்புடன் கூடின – வாசுதேவனாகவும்
தெற்கு நோக்கி சிங்கமுகமாக – சங்கர்ஷணனும்
வடக்கு – பிர்த்யுமனனாகவும்
மேற்கு – அநிருத்தனாகவும் திகழ்கிறார்.
பக்தர்களின் அபயக் குரல், குறிப்பாக தேவர்களின் அபயக் குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில்தான் அதனால் இவ்வுலகுக்கு
கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர் பாட்டுக்கேட்டும் உலகான பரமபதத்திற்கு தேவர்களும் செல்ல முடியாது. அது சித்திப்பது நித்ய சூரிகள்
எனப்படும் முக்தர்கட்கு மட்டும்தான். எனவேதான் தேவர்கள் தங்கட்கு பிரச்சினை வரும்போதெல்லாம் அல்லது பிரச்சினைகளை உண்டாக்கிக்
கொண்டு அல்லற்படும்போதெல்லாம் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானை பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது
வழக்கமாம்.
ப்ரளய காலம் வரைதான் திருப்பற்கடல் வாசம். ப்ரளய காலம் முடிந்ததும் மீண்டும் பரமபதம். எனவே ப்ரளய காலத்தில் திவ்யதேசங்கள்
மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன. திவய்தேசங்களுக்குத் தொடக்க திவ்யதேசமாகவும் இதனைக் கொள்ளலாம்.
சங்கர்ஷணன் அநிருத்தன், ப்ரத்யுமனன் என்னும் 3 உருவங்களும் ப்ரளயகாலத்தில் வ்யூக வாசுதேவனோடு ஐக்கியமாகி விடுகின்றன.
மூலவர்–பாற்கடல் வண்ணன் (சஷீராப்திநாதன்) ஆதிசேடன் மேல் தெற்கு நோக்கிய சயனம்
தாயார் — கடல்மகள் நாச்சியார், ஸ்ரீபூமாதேவி
தீர்த்தம் -அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்
விமானம்– அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்– பிரம்மனும் சிவனும்
இங்கு பெருமாள் வெண்மை நிறத்தில் இருக்கிறார். இங்கு எல்லாமே
வெண்மை, எங்கு நோக்கிலும் வெண்மை, அதனால்தான் வெள்ளை வெள்ளத்தின் மேலொரு நாகத்தை மெத்தையாக விரித்து அதன்மேல் கள்ள
நித்திரை கொள்கின்ற கள்வன் என்கிறார் ஆழ்வார். இப்பெருமானின் வண்ணம் வெண்மை என்பதை திருமங்கை யாழ்வார் முன்னை வண்ணம்
பாலின் வண்ணம் என்கிறார். அதாவது விபவ அவதாரங்கட்கு முன் (உலகைப்படைத்து இங்கு அவதாரங்களை நிகழ்த்துவதற்கு முன்) பாற்கடலில்
எழுந்தருளியதை பாலின் வண்ணம் என்கிறார். பிறகுதான் விபவ அவதாரத்தில் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் என்றார்.
இங்குதான் பிரம்மதேவன் படைக்கப்பட்டான். இது வொன்றே இதன் தனிச்சிறப்பம்சமாகும்.
திருப்பாற்கடலுக்கு சஷ்ராப்தி நாதனாக (பாற்கடல் வண்ணனாக) வந்துற்றது முதல் வாசுவேதன் அநிருத்தன். ப்ரத்யுமணன், சங்கர் ஷ்ணன்
என்றும் 4 வியூகங்களாகப் பிரிந்த நிலைகளும் சேர்ந்து பஞ்ச வ்யூகங்கள் ஆகும். இந்த வ்யூக மூர்த்திகட்கும் சில திவ்யதேசங்கட்கும் தொடர்புண்டு.
1. சஷ்ஷிராப்தி நாதன் என்னும் பாற்கடல் வண்ணன்-திருக்கோட்டியூர் உரக மெல்லனையாளனாக ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளியது.
2. வாசுதேவன்- திருநறையூரில் திருமகளை மணந்த திருக்கல்யாணக் கோலம்
3. அநிருத்தன்- திருஅன்பில் அழகிய வல்லிநாச்சியாருடன் அருளல்
4. ப்ரத்யுமனன்- திருவெள்ளறை இங்கு ஸ்ரீதேவி மனித உருவில் நின்று கைங்கர்யம்
5. ஸங்கர்ஷ்ணன்– உறையூர் கமலவல்லி என்ற பெயரில் சோழன் மகளாக வளர்ந்த திருமகளை மணத்தல் அதாவது பாற்கடலில் முதல்நிலையில் தேவிமாரோடு எழுந்தருள்கிறான். இதர வ்யூகங்கட்கு பிராட்டிகள் திவ்யதேசங்களில் 4 நிலைகளில் நின்ற பெருமாளைச் சேர்ந்து எழுந்தருள்கின்றனர் என்பதும் ஐதீஹம்.
————
108. திருப்பரமபதம் (திருநாடு, வைகுண்டம், பரம்)
விஷ்ணுவின் அடியவர்கட்கு முக்தியில் நாட்டம்கொண்ட முக்தர்கட்கு திவ்யதேசங்களில் ஊறித்திளைத்துப் போன பக்தர்கட்கு திருநாடு மிகவும்
சமீபம். அவனது சாயுஜ்யம் அவர்கட்கு மிகவும் சாமீப்யம். ஆம் இதிலெல்லாம் திளைத்தவர்களை அவனே வந்து தன் திருநாடுக்கு இட்டுச் செல்கிறான்
என்பது ஐதீஹம்.
வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே
வைணவர்களின் கடைசி இலக்காகும்.
பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று
எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான்.
மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.
திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல்
திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான
வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம்
பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
“திருவனந்தாழ்வானின் மேல் – தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை
உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய்,
கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும்
முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.
(ப்ரப்பந்நாம்ருத தர்ப்பணம் (23-26)
மூலவர்– பரமபதநாதன், வைகுண்டபதி, தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- பெரியபிராட்டியார்
தீர்த்தம்- விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி
காட்சி கண்டவர்கள்- ஆதிசேடன், கருடன், நித்யசூரிகளும், முக்தர்களும்.
இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம்
என்பது பொருள்
இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும்
இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர் சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு
வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே இருந்துகொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்ததுபோல்
வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.
வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுந்தம் என்றும் பெயருண்டு.
எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக, உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply