Archive for March, 2022

ஸ்ரீ திரு மாலை-11-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

இராமபிரானும் கண்ணபிரானுமாய் அவதரித்த பெருமான்றானே
திருவரங்கம் பெரிய கோயிலில் கண் வளர்ந்தருளுகிறான்;
ஜாயமாநகால கடாக் ஷமில்லாமையா லன்றோ நீங்கள் இழக்கிறது! என்று
க்ஷேபித்துக் கூறுவது இப்பாட்டு.

ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திரு வரங்க மென்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே.

பதவுரை

ஒரு வில்லால்–சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே
ஓங்கு முந்நீர் அடைத்து-கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி
உலகங்கள் உய்ய –லோகமெல்லாம் வாழும்படி
செருவிலே–போர்க் களத்திலே
அரக்கர் கோனை –இராவணனை
செற்ற–முடித்தருளின
நம் சேவகனார்–நமக்குத் தலைவரும் மஹாவீரருமான பெருமாள்
மருவிய –பொருந்தி வாழ்வதற்கு இடமான
பெரிய கோயில்–பெருமை தங்கிய கோயிலாவது
மதிள் திருஅரங்கம்–ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்கக்ஷேத்ரம்
என்னா –என்று சொல்ல மாட்டாத
கருவிலே திரு இலாதீர்–கர்ப்ப நிர்ப் பாக்யர்களே!
காலத்தை–(பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை
கழிக்கின்றீர்–பாழே போக்குகிறீர்களே!

விளக்க உரை

இராமபிரான் ஸமுத்ரராஜனை அடைக்கலம்பற்றி வழிவிட வேணுமென்று வேண்டிக் கொண்ட விடத்தும்
அவன் வந்து முகங்காட்டாதொழிய,
“ஒரு மீன்படுகுட்டம் நம்மை அஸமர்த்தராக நினைத்துவிட்டது; இனி ஒரு கைபார்க்குமத்தனை” என்று துணிந்து
இளையபெருமாளை நோக்கி “வில்லைக்கொண்டுவா” என்று நியமித்தருளின பின்பு
ஸமுத்ரராஜன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து முதுகைக்காட்டித் தன்மீது அணைகட்டிப் போகும்படி அமைந்தனனாதலால்,
ஒரு வில்லாலோங்கு முந்நீரடைத்து என்கிறார்.

ஓங்கு என்றது-
கடலின் இயற்கையான கொந்தளிப்பைக் கூறுகிறபடி யன்று;
இராமபிரான் சீற்றத்தாலே கையும் வில்லுமாய் நின்ற வீரவுறப்பைக் கண்டு கீழ் மண் கொண்டு மேல் மண்ணெறிந்து
காலிலே விழுமாபோலே திருவடிகளளவும் வந்து வெள்ளங் கோத்தபடியைக் கூறுவதாம்.

உலகங்களை யெல்லாம் வாழ்விக்கக்கருதிய பெருமாள் தனித்தனியாக ஒவ்வொருவருடைய இருப்பிடத்திற்குஞ் சென்று
அவர்களை வாழ்விப்பது அரிய காரிமென்றெண்ணி ஸதுபாயம் சிந்தித்து இராவணனொருவனைக் கொன்றுவிட்டால்
உலகங்களையெல்லாம் வாழ்வித்தவாறாம் என்று அறுதியிட்டு ராவணஸம்ஹாரம் செய்தருளினனென்ற கருத்துத்தோன்ற
“உலகங்களுய்யச் செருவிலே அரக்கர்கோனைச் செற்ற” என்கிறார்.

பல்லாயிரம் பசுக்களை மேய்ப்பவனான கண்ணபிரான் ஒவ்வொரு பசுவுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்ற
வேண்டிய அருமையை நோக்கி ப்ருந்தாவனத்தைப் பசும்புற்காடாக ஸங்கல்பித்து
அவ்வரிய காரியத்தை எளிதில் நிறைவேற்றிக்கொண்டாற்போலவும்.
நம்மாழ்வாரொருவரை அவதரிப்பித்து நாட்டையடங்கலும் எளிதில் திருத்தினாற்போலவும்
இராவணனொருவனைக் கொன்று உலகங்களையெல்லாம் எளிதில் வாழ்வித்தானாய்த்து.

நம் சேவகனார் மருவிய பெரியகோவில்-
ராவண வதம்பண்ணி வினையற்ற பின்பும் அப்போதை யநுபவத்தை இழந்த பிற்பாடர்க்கும் உதவுகைக்காக
வன்றோ கோவிலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறது.
“ மாமுனிவேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே! அரங்கத்தம்மா” என்ற
ஒற்றுமை நயமும் நோக்கத்தக்கது.

மதிள் திருவரங்கம்-
ராமாவதாரத்திற்போலே இங்கும் சில ஆபத்து விளையுமோ என்றஞ்சித்
திருமங்கையாழ்வார் போல்வாரான மங்களாசாஸந பரர்கள் காப்பாக இட்ட மதிளையுடைய ஸ்ரீரங்கம்.

கருவிலே திருவிலாதீர்-
ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யத் மதுஸூதந:-ஸாத்விகஸ் ஸது விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்தசிந்தக:” என்றபடி
கர்ப்பவாஸ ஸமயத்தில் எம்பெருமான் ஸத்வகுணத்தைச் செழிப்பிப்பதற்காகச் குளிரநோக்குவதொரு நோக்குண்டு;
அதனைப் பெறாதவர்களன்றோ நீங்கள்;
பெற்றிருந்தீர்களாகில் இத்தகைய விசிகித்ஸைகள் உங்களுக்குப் பிறவாவே.

காலத்தைக் கழிக்கின்றீரே–
“பழுதே பலபகலும் போயின வென்றஞ்சியழுதேன்” என்று ஞானிகள் கதறியிருப்பதைக் கேட்டு வைத்தும்
நீங்கள் காலத்தைப் பாழே போக்குறீர்களே பாவிகாள்! என்று வயிறெரிகிறார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-10-நாட்டினான் தெய்வம் எங்கும் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

நீர் சொல்லுகிற எம்பெருமானொழிய வேறொரு தேவதையும் புகலன்றாகில்,
உலகில் பல பல தேவதைகள் அவ்வவர்களால் கொண்டாடப்படுவதற்கும்,
அக்கொண்டாட்டத்திற்கு ஏற்ப அத்தேவதைகள் பயன் அளித்து வருவதற்கும் என்ன காரணம்?
பயன் கொடுக்கிற சக்தி வாய்ந்த தேவதைகளைப் பற்றுவதால் என்ன பாதகம் விளையும்?
என்று சில மாந்தர் கேட்க;
அவர்களுக்கு விடை அளிக்கிற பாட்டு இது.

நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள் தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க
சேட்டை தன் மடிய கத்துச் செல்வம் பார்த் திருக்கின் றீரே.

பதவுரை

எங்கும்–எல்லாவிடங்களிலும்
தெய்வம் –(அம்மன் பிடாரி முதலான தாமஸ) தேவதைகளை
நாட்டினான்–(ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் ஆஸ்ரயிக்கலாம்படி எம்பெருமான்) நிலை நிறுத்தி யிருக்கிறான்
உய்பவர்க்கு–உஜ்ஜீவிக்க விரும்புமவர்கட்கு
உய்யும் வண்ணம்–உஜ்ஜீவிக்கலாம்படி
நல்லது ஓர் அருள் தன்னாலே–தனது ஒப்பற்றதொரு க்ருபையினால்
திரு அரங்கம்–அரங்கமாநகரை
காட்டினான்–காண்பித்தருளினான்
நம்பிமீர்காள்–‘நமக்கு ஒன்றாலும் குறையில்லை’ என்று நினைந்திருப்பவர்களே!
கேட்டிரே –(நான் சொல்வதைக்) கேட்டீர்களா?
கெருட வாகனன் நிற்கவும் –கருடனை வாஹநமாகவுடைய பெருமான் விளங்கா நிற்கச் செய்தேயும்
(தேவதாந்தரங்களைப் பற்றுகிற நீங்கள்)
சேட்டைதன் மடியகத்து–மூதேவியிடத்தினின்றும்
செல்வம் பார்த்து இருக்கின்றீர் ஐஸ்வர்யம் பெற நினைத்திருக்கிறீர்கள் போலும்

விளக்க உரை

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் அமைந்த சேதநர்கட்கெல்லாம்
அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி காரியஞ்செய்பவன் எம்பெருமானாதலால்
ராஜஸருடையவும் தாமஸருடையவும் ருசிக்கு ஏற்ப அக்குணங்களுள்ள
அம்மன் பிடாரி முதலிய க்ஷுத்ரதேவதைகளை எம்பெருமான்றானே ஒவ்வொரு பேரிட்டு நாட்டினான்.

“யே ஹ்யந்யதேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயான்விதா:-தேபி மாமேவ கௌந்தேய! யஜந்த்யவிதிபூர்வகம்” என்ற கீதையின்படியும்,
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் – ஸர்வ தேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி’ என்ற வசநப்படியும்
அந்த க்ஷூத்ரதேவதைகளைக் குறித்துச்செய்யும் வணக்கவழிபாடுகள் யாவும்
அத்தேவதைகட்கும் ஆத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடத்திற் போய்ச் சேர்ந்துவிடுமே யன்றி அவர்களுக்கே உரியனவாகமாட்டா.

ராஜப்பிரதிநிதிகள் ஒவ்வோரிடங்களிலும் ப்ரஜைகளிடத்தில் பணங்களை (கப்பம்) வசூல் செய்து
அவற்றைப் பிரதாந ராஜனிடத்தில் சேர்ப்பது போல வாய்த்து இத்தேவதைகளின் தொழிலும் .

“இறுக்குமிறை யிறுத்துண்ண எவ்வுலகுக்கும் தன்மூர்த்தி, நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்றானே” என்றும்
“ அவரவர் விதிவழி யடைய நின்றனரே” என்றும் நம்மாழ்வாரு மருளிச்செய்தார்.

நல்லதோரருள்தன்னாலே” என்பதை
“நாட்டினான்” என்ற வினைமுற்றோடே கூட்டி அந்வயிக்கவுமாம்.
சாஸ்த்ர விஸ்வாஸத்துக்கு இசையாதவர்களை வேதமானது அவர்களுடைய ருசிக்கீடாக
அபிசாரம் முதலிய ஹிம்ஸைசளையும் கூறிப் படிப்படியாக நல்வழி சேர்த்துக்கொள்ளுமாறு போல,
எம்பெருமானும் அந்ய சேஷத்வத்துக்கு இசையாத ராஜஸ தாமஸ ப்ரக்ருதிகளை
அவர்களுடைய குணாநுகுணமாகப் பணியும்படி ராஜஸதாமஸ தேவதைகளைப் பரம க்ருபையாலே ஆங்காங்கு நாட்டி,
பிறகு கால கதியிலே ஸத்வம் தலையெடுத்து உஜ்ஜீவிக்கும் விரகு தேடுவார்க்கு உஜ்ஜீவநோபாயமாகத்
தான் திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து சாய்ந்தருளினன் என்கிறார்.

அந்த க்ஷூத்ரதேவதைகள் க்ஷுத்ரமான பலன்களைக் கொடுக்கவல்லனவே யன்றி,
மோக்ஷமாகிய உத்தம புருஷார்த்தத்தைக் கொடுக்க அவற்றுக்கு சக்தி இல்லை;
அது உள்ளது எம்பெருமானொ ருவனுக்கேயாம்;
இந்த தத்துவமறியாமல் முமுக்ஷுக்களாயிருப்பார் ஸ்ரீமந்நாராயணனைத்தவிர்த்து இதர தேவதைகளை ஆஸ்ரயிப்பது
எங்ஙனே சொல்லலாயிருந்ததெனில்;
ஐஸ்வர்யத்தைப் பெறா விரும்பின ஒருவன் அதனைத் தரவல்ல மஹாலக்ஷ்மியை உபாஸனை செய்ய வேண்டியிருக்க,
அவளது திருவடிகளிற் புகாமல், உள்ள செல்வத்தையும் துடைக்கவல்ல மூதேவியைப் பற்றிப் பணியும்
மூடனது செயலோடு ஒப்பிடலாமாயிருந்தது என்கிறார்.

இங்கு உபமேயமான அம்சத்தையும் உபமாநமான அம்சத்தையும் தனித்துச் சொல்லாமல்
ஒரு போக்காகச் சொன்னது முற்றுவமை:
தேவதாந்தரங்கள் பக்கல் பரமபுருஷார்த்தத்தைப் பெற நினைக்கை,
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கை என்று இரண்டு பொருளில்லை;
இதுவே அது, அதுவே இது என்ற கருத்துத் தோன்றும்.

சேட்டை-மூத்தவள் என்னும் பொருளதான ‘ஜ்யேஷ்டா’ என்ற வட சொல்விகாரம்.
மூதேவி யென்பவள் பிராட்டிக்கு முற்பிறந்தவள்.
தாரித்திரியம, துரத்ருஷ்டம், உறக்கம், சோம்பல், மூடத்தனம் முதலியவை உள்ளவனை ‘மூதேவி’ என்று நிந்திப்பது ப்ரஸித்தம்.
ஆகையாலே மூதேவி யென்பவள் ஸகல அஸ்லீலங்களுக்கும் மூலஸ்தாநம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-9-மற்றுமோர் தெய்வம் உண்டே -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய வியாக்யானம் –

March 30, 2022

மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே.

பதவுரை

மதி இலா–தத்துவஞானமில்லாத
மானிடங்காள்–மனிதர்களே
மற்றும்–(நான் சொல்லுகிறவனைத்) தவிரவும்
ஓர் தெய்வம்–(சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம்
உண்டே –உண்டோ?
(இல்லை)
நீங்கள்–நீங்கள்
உற்ற போது அன்றி–(சரணமடைந்த அந்த க்ஷுத்ரதேவர்கட்கு) ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல்
(மற்றைக் காலத்தில்)
ஒருவன் என்று–(நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை
உணரமாட்டீர்–அறியமாட்டீர்கள்
(நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே)
மேல்–(பதப்பொருளுக்கு) மேற்பட்ட
அற்றம்–மறைபொருளை (தாத்பரியத்தை)
ஒன்று அறியீர்–சிறிதும் அறிய மாட்டீர்கள்;
(இனி முடிவுப் பொருளை நீங்கள் உணருமாறு கூறுவேன்;)
அவன் அல்லால்–அந்த எம்பெருமான் தவிர
தெய்வம் இல்லை -(சரணமடையக்கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை;
(ஆகையால்)
கன்று இனம் மேய்த்த எந்தை–கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு), மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
கழல் இணை–இரண்டு திருவடிகளையும்
நீர் பணிமின்–நீங்கள் சரணமாகப் பற்றுங்கள்.

விளக்க உரை

பல தேவரையும் பற்றிக் கூறுகிற வேதத்தின் உட்பொருளை நுட்பமாக ஆராய்ந்து அறியுந் திறமை
யில்லாமையால் நீங்கள் தேவதாந்தரங்களைப் பற்றுகின்றீர்கள்;
‘ஒரு குறையும் வாராமல் உன்னைப் பாதுகாக்கிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணி
பாணாஸுரனது வாசலிலே பரிவாரத்தோடு பாதுகாவாலாயிருந்த சிவன்
அந்த வாணாசுரனை எதிர்த்துவந்த ஸ்ரீ கிருஷ்ணனோடு போர் செய்யமாட்டாமல் தோற்று ஓடினபோது
அந்தச் சிவனுடைய வலியின்மையை அந்த வாணன் கண்டறிந்ததுபோல,
நீங்களும் ஸரணமாகப் பற்றியிருக்கிற தேவதாந்தரங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் தான்
அத்தெய்வங்களின் பலஹீநத்வத்தைக் கண்டறிவீர்கள்;
நீங்கள் இப்படி பரமாத்மாவைத் தவிர்த்து இதர தேவதைகளைப் பற்றுவதற்குக் காரணம் நுமக்குப் பகுத்தறிவு இல்லாமையே.
உண்மையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வையே சரணமாகப் பற்றுங்களென்று உபதேசிக்கின்றனரென்க.

பெறுதற்கரிய மநுஷ்ய ஜன்மத்தைப் பெற்றிருந்தும் ஈடேறுதற்கு உரியதான பரமாத்மாவைப் பற்றிய தத்துவஞானம்
இல்லாமையால் எடுத்த ஜந்மமே வீணாய் விட்டதென்று குறிப்பிக்கும்படி “மதியிலாமானிடங்காள்” என்றார்.

“ஒண்டாமைரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்றபடி
பரமாத்மாவைப் பற்றிய அறிவே அறிவெனப்படுமாதலால் மற்றை உலகறிவு இருந்தும்
பரமாத்மாவைப் பற்றிய அறிவைப்பெறாத இவர்கள் மதியிலா மானிடங்களாயினர்;
இது பற்றியே “மானிடர்காள்!” என உயர்திணைவாய் பாட்டாற் கூறாது
“மானிடங்காள்” என அஃறிணைவாய்பாட்டாற் கூறியதும்.
இது – இழிப்பினால் உயர்திணையில் அஃறிணைவந்த திணைவழுவமைதி.

உற்றபோதன்றி உணரமாட்டீர்-
உற்ற போதே நீங்கள் அவனொருவனே தெய்வமென்று உணர்வீர் என இரண்டு எதிர்மறைகள்
ஒருடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தின;
“அவனல்லால் தெய்வ மில்லை” என்றவிடத்தும் இப்படியே.

அற்றமேலொன்றறியீர்-
வேதத்திற் பலவிடங்களிலும் தேவதாந்தரங்களைப்பற்றி (எம்பெருமானைப் போலவே) சிறப்பித்துக் கூறியிருப்பது
கண்டு அவற்றிற்கு ஆபாதப்ரதீதியில் (மேல் நோக்கில்) தோன்றுகிற பொருளையே கருத்தாக எண்ணி
“நாராயணபரா வேதா:” என்றபடி வேதங்கள் முழுவதும் ஸ்ரீமந்நாராயணையே பரம் பொருளாகக் கருத்துப் பொருளால்
கூறுவன என்பதை உய்த்துணராமலிருக்கின்றீ ரென்றவாறு.

அற்றம்-மறைபொருள்; உட்கருத்து;
அறு-பகுதி.
“அவனல்லால் தெய்வமில்லை” என்று- தேவதாந்தரங்கள் இல்லை என மறுக்கின்றாரல்லர்;
எம்பெருமானுக்கு ஸரீரமாகக் பல தேவதைகள் உள என்பதில் ஆக்ஷேபமில்லை;
சரணமாகப் பற்றத்தக்க தெய்வம் வேறில்லை என்றாய்த்துச் சொல்லுவது.

“கற்றினம்மேய்த்த” என்ற அடைமொழியினால் எம்பெருமானது ஸௌலப்யத்தை வெளியிட்டவாறு.
எந்தை – பரமஸ்வாமி.
கழல்-வீரர் காலில் அணியும் வடம்; தானியாகுபெயராய்ப் பாதத்தை உணர்த்திற்று.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-8-வெறுப்போடு சமணர் முண்டர் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக் கியர்கள் நின் பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.

பதவுரை

அரங்கமாநகருளானே!-;

வெறுப்பொடு–(பகவத்விஷயத்தைகு கேட்கவும் பொறாத) வெறுப்போடு கூடிய
சமணர் –க்ஷபணர்களும்
முண்டர் –சைவர்களும்
விதிஇல் –பாக்கியஹீனரான
சாக்கியர்கள்–பௌத்தர்களும்
நின்பால்–உன் விஷயத்திலே
பொறுப்பு அரியனகள்–பொறுக்க முடியாத சில வார்த்தைகளை
பேசில்–சொல்லுவார்களாகில்
அதுவே நோய் ஆகி–அந்த நிந்தைகளைக் கேட்டதே வியாதியாய்
போவது–முடிந்து போவது
(உத்தமம் அங்ஙனன்றியே)
எனக்கு –(பகவத் விரோதிகளின் ஸத்தையையும் பொறாத) எனக்கு
குறிப்பு அடையும் ஆகில்–இலக்கு வாய்க்குமாகில்
(அதற்கு மேல்)
கூடுமேல்–(எனக்கு சக்தியும்) கூடுமாகில்
ஆங்கே–உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே
தலையை அறுப்பதே–அவன் தலையை அறுத்துத் தள்ளுகையே
கருமம் கண்டாய் –செய்யத் தக்கது காண்

விளக்க உரை

வெறுப்போடு-
ஒரு காரணத்தை முன்னிட்டன்றியே நிஷ்காரணமாக எம்பெருமானுடைய பெருமை என்றால்
சிவீலென்று திரஸ்கரிக்கையாகிற வெறுப்போடுகூடிய புறச்சமயிகள்,
ஸாத்விகர் காது கொடுத்துத் கேட்கப்பெறாத உன் விஷயமான தூஷணங்களைப் பேசும்போது
அப்பேச்சுக்கள் ஒரு ஸாத்விகன் காதில் விழுந்தால்,
அவன்றான் மெய்யே ஸாத்விகனாகில் அந்த க்ஷணத்திலேயெ தன்னடையே உயிர் துறக்க வேணும் என்கிறார்-
முன்னிரண்டடிகளால்.

உயிர்துறப்பதறகு நோய் முதலிய சில வியாஜங்கள் நேரவேண்டுமே என்று சிலர் நினைக்கக் கூடுமென்றெண்ணி
“போவதே நோயதாகி” என்கிறார்.
பகவந் நிந்தையைக் கேட்பதற்கு மேற்பட்ட நோய்கூட உலகத்திலுண்டோ? என்பது கருத்து.

விஷ்ணு த்வேஷிகள் சொல்லுகிற தூஷணங்களை அநுவதிக்க வேண்டுமானால்
அவற்றைத் தாம் முன்னம் நெஞ்சால் நினைத்தாக வேண்டு மாதலால்
அங்ஙன் நினைப்பதையும் கொடிய பாவமாகக் கருதி “பொறுப்பரியனகள்” என்று ஸமுதாயமாகச் சொல்லுகிறார்.

“சமணர்முண்டர்” –
சமணராகிய முண்டர் என்றும் உரைப்ப.

விதியில்-
“தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்த்ரீ நியதிர் விதி:” என்ற அமரகோஸத்தின் படி-
விதியாவது-பாக்யம், – அத்ருஷ்டம்
“அன்பாக்கியேத்தி அடிமைப்பட்டேனுனக்கு, என்பாக்கியத்தாலினி” என்றபடி
எம்பெருமான் பெருமையைப் பேணுவதற்கு எவ்வளவோ அத்ருஷ்டம் வேண்டுமாதலால்
அப்படிப்பட்ட அத்ருஷ்டமற்றவர்கள் சாக்கியர் என்கிறார்.

“போவதே நோயதாகி” என்பதற்கு
வேறு வகையாகவும் பொருள் கூறலாம்.
“குரோர்யத்ர பரிவாதோ நிந்தாவாபி ப்ரவர்த்ததே, கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோந்யத;
“(பெரியோரைப்பற்றி நிந்தை நடக்குமிடத்தில் காதுகளை மூடிக் கொள்வதாவது, சடக்கென அப்பால் செல்வதாவது செய்யவேணும்)
என்ற சாஸ்திரப்படி விலகிச்செல்வது நன்று என்கிறாராகவுமாம்.

தூஷணை கேட்கப்பொறாமல் முடிந்துபோனாலும் விலகிப்போனாலும்
தூஷித்தவனுக்கு என்ன பிராயச்சித்தம் செய்தாயிற்றென்று ஒரு கேழ்வி பிறக்கக்கூடுமாதலால்,
அவ்விஷயத்தில் தம்ஸித்தாந்தத்தை அருளிச்செய்கிறார்-
குறிப்பெனக்கு இத்யாதியால்.

குறிப்பு-லக்ஷ்யம்
அதாவது
தூஷித்த பேர்வழி. அவன் தூஷித்து விட்டு ஓடிப்போய்விடாமல் என் முன்னே நிற்பானாகில் என்றபடி.

கூடுமேல்-
அவன் முன்னே நின்றுகொண்டிருந்தாலும் அவனை அஞ்சாது கொலைசெய்யும்படியான வல்லமை தனக்கு வேணுமே;
தாம் ஒருவனைக் கொல்ல முயன்று அவனால் தாம் கொலையுண்பாருமுண்டே;
அங்ஙனன்றி, நினைத்தபடி செய்து நிறைவேற்றவல்ல வல்லமையும் வாய்க்குமாகில் என்றபடி.

மரணதண்டனையானது ஒரு கொலை செய்தவர்களுக்குக் சிக்ஷையாக அரசாங்கத்தாரால் விதிக்கப்பட்டிருக்கிதே யொழிய,
பகவந் நிந்தை பண்ணினவர்களுக்குக் கொலையை ஸிக்ஷையாக எங்கும் விதித்ததில்லை;
காமகாரத்தாலே விதியை மீறிக் கொலைசெய்யில் தமக்கு அநர்த்தமேயன்றோ பலிக்கக்கூடுமென்று
ஸங்கித்துக் கூடுமேல் என்கிறார்;
அதாவது-
அரசாங்கத்தாரும் நமது ஸித்தாந்தத்திற்கு உடன்படக்கூடுமேல் என்றபடி என்பதாக
இக்காலத்தோர் பொருள் கூறுப.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-7–புலை யறமாகி நின்ற -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

‘தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும்,
“புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும்
எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்? ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிராநின்றது;
அன்றியும்
“தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவது தென்று தெரியவில்லை;
நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்;
எங்கள் மீது குற்றமென்?” என்று சில ஸம்ஸாரிகள் கூற,
அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித் தருகிறார்.

புலை யற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலை யறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலை யறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான்.

பதவுரை

கலை–சாஸ்திரங்களை
அற கற்ற மாந்தர் –நன்றாக ஓதின மனிதர்
புலை அறம் ஆகி நின்ற–நீச தர்மமாயிராநின்ற
புத்தொடு சமணம்–பௌத்தமதம் க்ஷபணமதம் முதலிய
எல்லாம் –எல்லா மதங்களையம்
காண்பரோ–நெஞ்சாலே தான் ஆராய் வார்களோ?
கேட்பரோ–காது கொடுத்துத் தான் கேட்பார்களோ?
(அதுநிற்க)
தலை அறுப்புண்டும்–என் தலையானது அறுக்கப் பட்டாலும்
சாகேன் –நான் சாக மாட்டேன்;
சத்தியம் –இது சத்தியம் ;
ஐயா–ஸ்வாமிகளே!
காண்மின்–(ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்;
சிலையினால்–வில்லாலே
இலங்கை செற்ற–இலங்கையை நாசஞ்செய்த
தேவனே –எம்பெருமானே
தேவன் ஆவான் –ஸர்வேஸ்வரனெனப்படுவான் .

விளக்க உரை

புத்தொடு – புத்தமென்ற வடசொல் புத்து எனத் திரிந்தது.
சமணம் -க்ஷபணகருடைய மதம்.
கலையறக்கற்ற மாந்தராவார் -கூரத்தாழ்வான் போல்வார் .

“ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸங்களில் நிலைநின்றவர்களாய் வேததாத்பர்யம் கைப்பட்டவர்கள்;
அவர்களாகிறார்- கூரத்தாழ்வான் போல்வாரிறே”! என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

“காண்பரோ கேட்பரோதான்” என்றவிடத்தில் ஓர் ஐதிஹ்யம் அருளிச்செய்வர்;-
கூரத்தாழ்வான் “இஸ்டஸித்தி” என்கிற ஒரு புறமதச்சுவடி வாசித்துக்கொண்டிருந்த சிலரோடே கூடிச்
சிறிது போதுபோக்கி எம்பெருமானார் ஸந்நிதிக்கு விளம்பித்துவர,
“ஏன் இத்தனை விளம்பம்?” என்று உடையவர் கேட்டருள,
ஆழ்வானும் காரணத்தை உள்ளபடியே உரைக்க,
உடையவர் “ ஹா ஹா!‘கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதான்’ என்ற அருளிச்செயல் என்னாயிற்று?” என்று
புநஸ் ஸ்நாநம் செய்வித்தருளி ஸ்ரீபாததூளியும் இடுவித்தருளினாராம்.

தலையறுப்புண்டும் –
ஸத்யமான வார்த்தையை நான் சொல்லிக்கொண்டே கழுத்தில் கத்தியை எரிந்தேனாகில் தலை அறுபடமாட்டாது ஸத்யம் ;
ஒருகால் தலை அறுப்புண்டாலும் உயிர் போகாதென்பது புநஸ்ஸத்யம் .

சாவேன்,
சாகேன் என்பன பாடபேதங்கள்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-6-மறஞ்சுவர் மதிள் எடுத்து -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

விஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர்
“விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பலதோஷங்களுள்ளனவாயினும்
அவற்றை நாங்கள் விடவேணுமென்ற நியதியில்லை;
ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோமாயினும் விஷயங்கள் பல உளவாகையால்
ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல,
“அப்படியேயானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக்கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்க வேணுமே
அவ்விஷயங்களைப் போலவே போக்தாவும் அஸ்திரன் கிடீர்” என்கிறார் இப்பாட்டால்.

மறம் சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம் சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம் சுவர் கோலஞ் செய்து புள் கவ்வக் கிடக்கின் றீரே.

பதவுரை

மறம் சுவர்–கொடுமையாகிற சுவரை
மதிள் எடுத்து–மதிளாக எழுப்பியும்
மறுமைக்கு–ஆமுஷ்மிக பலத்திற்கு
வெறுமை பூண்டு –ஏழ்மையை மேற் கொண்டும் இருக்கிற நீங்கள்
புறம் சுவர்–வெளிச் சுவராய்
ஓட்டை–அநித்யமான
மாடம்–சரீரமானது
புரளும் போது–தரையில் விழும் காலத்தை
அறிய மாட்டீர்–அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற–தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற
அரங்கனார்க்கு–அழகிய மணவாளனுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
புறம் சுவர்–வெளிச் சுவரான உடம்பை
கோலம் செய்து–அலங்கரித்து
புள் கவ்வ–பறவைகள் கவ்விக் கொள்ளும் படி
கிடக்கின்றீரே–கிடக்கின்றீர்களே.

விளக்க உரை

இவன் ‘தீவழியிற்சென்று அநியாயமாய்க் கெட்டுப்போகிறானே!
இவனுக்கு உரிய ஹிதங்களைச் சொல்லி இவனை மீட்போம்’ என்று ஸஹஜ காருண்யலிகளான சில மஹாநுபாவர்
இதஞ்செய்வதற்குக் கிட்டவந்தால் அவர்களை அபதார்த்தமாக நினைத்துத் துச்சமாகப் பேசும்படியான
கொடுமையை மறம் என்கிறது.

ஹிதஞ்சொல்லவந்த விபீஷணாழ்வானை “த்வாம் துதிக் குலபாம்ஸநம்” என்றிகழ்ந்த
ராவணனோடொத்த குணசாலிகளாய்த்து மறஞ்சுவர் மதிளெடுப்பார்.

அமாநித்வம் முதலிய ஆத்மகுணங்களைத் தனக்கு அரணாகக் கொள்ளவேண்டியது போய்,
கொடுமையை அரணாகக் கொள்ளவேண்டும் படியாய்த்தே உங்கள் பாவம்! என்கிறார்.

“பூதபவ்ய பவந்நாத; கேசவ: கேசிஸூதந; -ப்ராகாரஸ் ஸர்வ வ்ருஷ்ணீ நாமாபந்நாபயதோ ஹரி; (பாரதம்-ஸபாபர்வம்) என்று
அடியவர்க்கு மதிளாகக் சொல்லப்பட்ட எம்பெருமானை விட்டு
மறஞ்சுவரை நீங்கள் மதிளாகப் பற்றினபடி மிகவுமழகியதே!

இப்படி கொடுமையையே காப்பாகக்கொண்டால் அதனால் பலிப்பது ஆமுஷ்மிகத்திற்கு ஒரு கைம்முதலில்லாமையே யன்றோ;
அதனைச் சொல்லுகிறது – மறுமைக்கே வெறுமைபூண்டு என்று
சரீரத்திற்கு தாரகமாயிருப்பதைத் தேடுகிறாற்போல் ஆத்மாவுக்குத் தாரகமாயிருப்பதையும சிறிது தேடியிருப்பானானால்
ஆமுஷ்மிக பலத்திற்கு அது ஒரு பற்றாசாகும்;
அங்ஙனன்றியொழிந்தமையால் இவனுடைய வியாபாரம் ஆமுஷ்மிகத்திற்கு தாரித்ரியத்தை விளைத்துவிட்டதென்க.

புறஞ்சுவர் என்கிறது-தேகத்தை;
சுவராவது உள்ளே கிடக்கிற வஸ்துவைக் காக்குமது;
ஆத்மாவுக்குரிய நன்மைகளை உண்டாக்கி அதனைக் காபபாற்றுதற்பொருட்டு எம்பெருமானால் தரப்பட்ட (சுவரென்னும்)
சரீரத்தைக் கொண்டு அக்காரியத்தைச் செய்யாமல் புறம்பே வியாபரித்தபடியால புறஞ்சுவர் என்ன வேண்டிற்று.
ஓட்டை மாடம் என்றும் இச்சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்.
ஒரு ஓட்டைவீடானது ‘அப்போது விழுந்தது, இப்போது விழுந்தது’ என்னும்படி அஸ்திரமாயிருக்குமாபோலே
இச்சரீரமும் ‘இப்போதோ அப்போதோ’ என்னும்படி நச்வரமாயிருக்குமாறு காண்க.

புரளும்போது அறியமாட்டீர்-
இத்தகைய சரீரம் எப்போது கீழே விழப்போகிறதென்று கேட்டால் அந்த ஸமயத்தை நீங்கள் அறிந்துசொல்ல வல்லீரல்லீர் ;
இன்று விழுந்தாலும் விழும்; நாளைக்கு விழுந்தாலும் விழும்;
ஆகையாலே இந்த சரீரத்தை போக்தாவாக மாறுபட நினைத்து நீங்கள் பரக்க வியாபாரங்கள் செய்தாலும்,
இது மின்னின்னிலையிலதாதலால் இதை நம்பி ஒன்றுஞ் செய்யக்கூடியதாயில்லையே என்கை.

அன்றியே,
இச்சரீரம் புரளுங்காலத்திலே உங்களுக்கு அறிவு நடையாடாதாகையால்
“ப்ராணப்ரயாணஸமையே கபவாதபித்தை: கண்டாவரோதநவி தௌஸ்மரணம் குதஸ்தே” (முகந்தமாலை) என்றபடி
அப்போது உங்களால் ஒன்றும் நன்மை தேடிக் கொள்ள முடியாது;
“அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்” என்றபடி செய்யுங்கள் என்று உபதேசிக்கிறாரென்றுங் கொள்ளலாம்.

அறஞ்சுவராகி நின்ற –
தர்மமாகிற சுவர் வடிவெடுத்து வந்தாற்போலிரா நின்ற;
“தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்ற வாயோலைப் படியே தர்மத்திற்குச் சுவராய் (ரக்ஷகராய்) நின்ற என்றுமாம்.

புறஞ்சுவர் கோலஞ்செய்து-
“அஸந்நேவ ஸ பதி, அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்” என்ற சுருதிப்படி ஆத்மாவானது பாழ்த்துக்கிடக்க,
அவ்வாத்மாவை “ஸந்தமேநம் ததோ விது:” என்னும்படி ஸத்தாக்குகிற வழியிலே ஒரு முயற்சி செய்யாமல்
இன்னடிகிலுண்பதும் பொன்னுடைமை பூண்பதும் பூந்துகில் சாத்துவதுமாய் நீங்கள் சரீரத்திற்குச் செய்கிற கோலங்கள்
சவாலங்காரத்தோடும் விதவாலங்காரத்தோடும் ஒக்குமென்றவாறு.

“புள் உண்ணக் கிடக்கின்றீரே” என்னாமல்
“கவ்வ” என்றதன் கருத்து –
நன்றியறிவற்றவனுடைய மாமிசத்தைப் பறவைகளும் திண்ணமாட்டா என்பது ஸித்தாந்தமாதலால்,
மஹோபகாரகனான எம்பெருமானிடத்து நன்றியறிவற்ற உங்களுடைய மாமிசத்தைப் பறவைகளும் தின்னமாட்டா;
கவ்வின உடனே ‘இது க்ருதக்நமாம்ஸம்’ என்று எறிந்துவிடுமென்பதாம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-5-பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போதும் உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி
தொண்டு பூண் டமுத முண்ணாத் தொழும்பர் சோறுகக்குமாறே.

பதவுரை

பெண்டிரால்–மனைவியரால்
சுகங்கள்–ஸகல ஸூகங்களையும்
உய்ப்பான்–அநுபவிப்பதாகக் கருதி
பெரியது ஓர் இடும்பை–மிகப்பெரிதான துயரங்களை
பூண்டு–மேற்கொண்டு
இரா–இராப்பொழுதிலே
உண்டு–புஜித்து
கிடக்கும் போதும் –படுக்கையிலே சாயும் போதும்
உடலுக்கே கரைத்து–சரீரத்திற்காகவே கவலைப்பட்டு
நைந்து–நெஞ்சு உளையப் பெற்று,
தண் துழாம் மாலை மார்பன் தமர்கள் ஆய்–குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமனது அடியாராய்
பாடி–(அவன் குணங்களை வாயாரப்) பாடி
ஆடி–(பரவசமாய்க்)கூத்தாடி
தொண்டு பூண்டு –(இவ்வகைகளாலே)சேஷவ்ருத்தியை மேற்கொண்டு
அமுதம் உண்ணா தொழும்பர்–(பகவத் குணானுபவமாகிற) அமுதத்தை புஜிக்கப்பெற்றாத நீர்
சோறு உகக்கும் ஆறே–சோற்றை விரும்பும் வகை என்னோ!

விளக்க உரை

பெண்களோடு அணைந்து சுகத்தை அநுபவிக்க விரும்பதல்
தீயோடு அணைந்து விடாய்தீர நினைப்பதையம்,
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி சுகம் பெற நினைப்பதைய மொக்குமென்பார்-
பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபண்டு என்கிறார்.

ஐயோ துக்கத்திற்கு ஸாதமானவற்றையே சுகத்திற்கு ஸாதனமாக நினைப்பதே
இப்படியுமொரு மயக்கமுண்டோ பிழைக்கவேணுமென்று நினைப்பாரும் விஷத்தை யுண்ப?

பெரியதோ ரிடும்பை பூண்டு-
ஸூக ஸாதநமாக நினைத்துத் தாம் கொண்ட பெண்டிரை உகப்பிப்பதற்காக
ம்ருத்யதாநம் வாங்கவேணும்,
பரஹிம்ஸை பண்ணவேணும்,
பொற்களவு செய்யவேணும்,
ராஜ தண்டனைகளை அனுபவிக்க வேணும்,

ஐயோ! இப்படிகளாலே பெருப்பெருத்த துக்கங்களை ஏறிட்டுக்கொள்ளுகிறார்களே!
முதலிலே பெண்டிரைக் கொள்வதற்கு ஸாதகமாகச் செய்யம் செயல்களும்
துக்க ருபம் கொண்ட பெண்டிரைப் பாதுகாப்பதற்காகச் செய்யும் செயல்களும் துக்கரூபம்;
இவ்வளவேயமன்றி அப்பெண்டிரால் இவள் அடைவதும் பர்ணதுக்கமே,
“ஈசிபோமின் ஈங்கிரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளங்கூசியிட்டீர்”என்று கதவடைத்துக் காற்குடைக் கொள்ளுவர்களே.

“பெரியதோரிடும்பை எய்தி “ என்னாமல்
பூண்டு என்ற சொல் நயத்தால்
கழுத்திலே மாட்டிக்கொண்ட வாயோடு போலே பிறகு தன்னாலும் கழற்றிக்கொள்ள முடியாமை விளங்கும்.

உண்டிரா-
தாம் கொண்ட பெண்டிரை உகப்பிப்பதற்காகப் பகலெல்லாம் சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடிசைந்து
போதுபோக்கவேண்டியிருப்பதால் ஒருபிடி சோறு உண்பதற்கும் அவகாசம் அரிதாய்விடும்;
பின்னை இரவிலே யாய்த்து உண்பதற்குச் சிறிது அவகாசம் பெறுவது,
பகலெல்லாம் அலைந்து ஒருபிடி சோறு உண்டவாறே உடம்பு பரவசமாய் விழுந்து விடுமாதலால் “கிடக்கும்போதும்” என்கிறார்.

அப்போதாகிலும் ஆத்மாவைப்பற்றிச் சிறிது கரையக்கூ.டுமோ என்று பார்த்தால் இல்லை
(உடலுக்கே கரைந்து நைந்து)
பொழுது விடிந்தவாறே எங்கே சூதாடப்போகலாம், எங்கே களவாடப் போகலாம் என்றாற்போலே
மீண்டும் தேஹ யாத்ரையைப் பற்றின சிந்தையேயாய்த்து நிகழ்வது.

கரைந்து நைந்து-
பகவத் விஷயத்திலே ஆழ்ந்தவர்கள் “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்” என்றபடி
படும்பாடுகளை யெல்லாம்
அந்தோ! இவன் விஷயாந்தரங்களிற்படுவதே! என்று வயிறெரிகிறார்.

எவ்வளவோ பாவங்கள் செய்து பணங்களைத் திரட்டிக் கொணர்ந்து கொடுத்து ஆராதித்தாலும்
முகஞ்சிதறப் புடைக்கிற மாதர்களின் முன்றானையையே பின்பற்றி ஓடுகின்றனரே யன்றி
ஸுலபமாய் ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைச் சிந்தித்து மகிழ்வாரில்லையே என்கிறார்.

(தண்டுழாய் மாலை இத்யாதி.)
‘எனக்கு ஆடு பலிகொடுக்கவேண்டா;
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும நொந்துவாடத் தவஞ்செய்யவேண்டா;
நீயும் நானும் ஒன்று, என்று இத்தனை உறவு பண்ணிக்கொண்டு வந்தால் போதும்,
அவர்களை நான் விடமாட்டேன்’ என்ற கருத்துத்தோன்றத்
திருத்துழாய மாலையணிந்து நிற்கிற பிரானைப் பற்றுவாரில்லையே!

தமர்களாய்-
‘எம்பெருமானுடைய கோஷ்டியிற் சேர்ந்தவர்கள் நாங்கள்’ என்றிவ்வளவேயன்றோ அவர்கள் காட்டவேண்டியது.
இவ்வளவு ஸ்வரூபஜ்ஞாநம் வாய்ந்தவாறே பின்னை அவர்கள் வெறுமனிருக்க முடியுமோ?
பாடியாடும்படியாகும்.
பிறகு “உனக்கே நாமாட் செய்வோம்” என்று அத்தாணிச்சேவகத்திற்கு அணுகலாகும்;
அதிலே ஸகல ரஸங்களும் காணலாகும். இவ்வளவும் பெற்று மகிழவேண்டியவர்கள்
“இப்படிப்பட்ட ரஸமொன்று உண்டு” என்றும் நினையாமல் விஷயாந்தரங்களை விரும்பிப் பாழாய்ப் போவதே!

தொண்டுபூண்டு அமுதமுண்ணா-
“ஹஸ்த்யத்ரிநாத! தவ தாஸ்யமஹாரஸஜ்ஞ;” என்று அறிவுடையார் எம்பெருமானுடைய அடிமையையே
ஆராவமுதமாக அறுதியிட்டிருக்க, எச்சில் வாயிலே அமுதமுண்டென்று மயங்கி ஓடுவாரும் சிலரே.

தொழும்பர்-
‘இவனுக்குமேல் நீசனில்லை, என்னும்படி முதல் வகுப்பில் தேறினவர் ; பரமநீசர்.
‘தொழும்பர்’ என்று அடியவர்க்கும் பெயர்.

“சோறு உகக்குமாறே.)
மண்ணிற்காட்டில் சோற்றுக்கு வாசி யறிந்து ஜீவிக்கிறபடி எங்ஙனே!
நித்யமான ஆத்ம வஸ்த்துவுக்கு பகவத் சேஷத்வமே தாரகமென்று அறியாதவன்
அநித்யமான தேஹத்திற்குச் சோறு தராகமென்று அறிந்து ஜீவிக்கிறானோ?
பித்ராதிகள் ஜீவிக்கக் காண்கிற வாஸனை கொண்டு ஜீவிக்கிறானித்தனையிறே
வாசியறியுமவனாகில் ஆத்மாவுக்கு நன்மை யெண்ணானோ?
ஒன்றிலே விசேஷிஜ்ஞாநமுண்டாகில் மற்றையதிலும் அறிவு உண்டாகாதோ?” என்ற வியாக்கியான
ஸ்ரீ ஸூக்திகளின் போக்யதையைச் சிறிது அநுபிக்க.

“கரைந்து நைந்து அமுதமுண்ணா” என இயையும்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-4-மொய்த்த வல் வினையுள் நின்று -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

இப்பாட்டு முதல், பதினான்காம் பாட்டளவும்
பகவத் விஷயத்திலே தம்மைப்போல் ஆழங்காற்படாமல் உடலுக்கே கரைந்து நைந்து திரியும்
ஸம்ஸாரிகளின் இழவைக்கண்டு பொறுக்கமாட்டாமல் தளர்ந்து
ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும்,
ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும்,
மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும்
இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக் கொண்டும் பேசுகிறார்.

பகவதநுபவத்திலே ஊன்றி உகப்பே யாய்ச் செல்லுமிவர் ஸம்ஸாரிப் பாவிகளைப் பற்றிக் கரைந்து வருந்துவானேன்?
என்னில்; இப்பாவிகள் அநியாயமாய் வகுத்த விஷயத்தை இழந்து படுகின்றனரே என்னும் துக்கம் பொறுக்கமாட்டாமையாலும்,
பகவத் விஷயம் பலர்கூடித் திரண்டு அநுபவிக்கவேண்டிய இனிய விஷயமாதலாலும்,
“ஏக; ஸ்வாது ந புஞ்ஜீத” (இன் கனி தனி யருந்தான்) என்றபடி இனிய விஷயத்தைத் தனியராய் அநுபவித்து
ஸாத்மிப்பித்துக்கொள்ள வல்ல தன்மையரல்லராதலாலும்
துணை கூட்டிக்கொள்ளத் தேடுகிறாரென்க.

‘கொடும்பாவிகளான எங்களுக்கு எம்பிரான் திருநாமங்களை உச்சரிப்பதற்கு யோக்யதை உண்டோ?
தேவனேசமான புரொடானத்திலே நாய் வாய் வைக்கக் கடவதோ?’ என்று சில ஸம்ஸாரிகள்
அயோக்யதாநுஸந்தானம்பண்ணி அகலப் பார்க்க,

அவர்களை நோக்கி,
‘ஆதர்காள்! நன்கு சொன்னீர்கள் க்ஷத்ரபந்து என்வனிற்காட்டிலும் வேறொரு கொடிய பாபிஷ்டன்
இவ்வுலகில் உளனென்று நீங்கள் கேட்டதுண்டோ!
அவனுடைய கொடுமையை நீங்கள் புராணத்திலே விரிவாகக் கேட்டிருக்கலாமோ
அப்படிப்பட்ட பாவியுமன்றோ கோவிந்த நாமத்தை உச்சரித்து நற்கதி நண்ணினன்.
அன்றியும், பொய்யான அன்பை அபநயித்துக் காட்டுவார் பக்கலிலும் பிச்சேறி மேல் விழுந்து
பற்றுவானாயிருந்தான் எம்பெருமான்
இவற்றையெல்லாம் நீங்கள் அறிந்து வைத்தும் படுகுழியில் வீழ்ந்துபடுவதே! இஃது என்ன கொடுமை!’ என வியக்கிறார்.

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடியரானார்க் கிரங்கும் நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.

பதவுரை

மொய்த்த–அடர்ந்து கிடக்கிற
வல் வினையுள் நின்று–கொடிய பாபராசியினுள்ளே நின்று
மூன்று எழுத்து உடையபேரால்–கோவிந்த நாமத்தாலே
கத்திரபந்தும் அன்றே–க்ஷத்ர பந்துவமன்றோ
பராங்கதி–சிறந்த பதவியை
கண்டு கொண்டான்–கண்டு அநுபவிக்கப் பெற்றான்;
இத்தனை அடியர் ஆனார்க்கு–இவ்வளவு ஆநுகூல்யம் உடையவர்கட்கும்
இரங்கும்–அருள் புரிகின்ற
நம் அரங்கன் ஆய பித்தனை–நம் அழகிய மணவாளனாகிற ஆஸ்ரித வியாமுக்தனை
பெற்றும் –சேஷியாகப் பெற்று வைத்தும்
பிறவியுள்–ஸம்ஸாரத்திலகப்பட்டு
பிணங்கும் ஆறே -வருந்துகிற விதம் என்னே!
அந்தோ –

விளக்க உரை

மொய்த்த வல்வினை –
பாபராசிகள் கோடிக்கணக்காகச் சேர்த்து ‘நான் முன்னே நான் முன்னே’ என்று மேல் விழுந்து
மொய்த்துக் கொண்டு கிடக்கிறபடி
தேன் கூட்டை ஈ மொய்த்துக் கொள்ளுமாபோலே
“நெய்க்குடத்தைப் பற்றி ஏறு மெறும்புகள்போல் நிருந்து, எங்குங்கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்” என்ற
பெரியாழ்வார் திருமொழியையும் நோக்குக.

மொய்த்த வல்வினையுள் நின்று –
மஹாபாபிஷ்டனாயிருந்து வைத்து என்றபடி.

மூன்றெழுத்துடைய பேரால்-
இன்ன திருநாமமென்னாதே ரஹஸ்யமாய்ச் சொல்லிற்று-
ருசி பிறந்த பின்பு ‘அந்தத் திருநாமம் ஏன்?’ என்று விரும்பிக் கேட்டால் அப்போதைக்கு உபதேசிப்போமென்றாம்.
“மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்” என்று பெரியாழ்வார் மறைத்தாற்போல.

கத்திரபந்து-
பிராமணர்களுள் அதமனை ‘ப்ரஹ்மபந்து’ என்கிறாப்போலே
க்ஷத்ரியர்களுள் அதமனை ‘க்ஷத்ரபந்து’ என்கிறது.
“நம்முதலிகள் கோஷ்டியில் ‘நாலூரான்’ என்றாற்போலே
ரிஷிகள் கோஷ்டியில் ‘க்ஷத்ரபந்து’ என்றால் செவிபுதைக்கும்படியாய்த்திருப்பது” என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
நாலூரானுடைய கொடுமை கூரத்தாழ்வான் சரிதத்தில் காணத்தகும்.

பராங்கதி-
பரகதி என்றவாறு
அதாவது
பரமபதப்ராப்தி.
கோவிந்தநாம ஸங்கீர்த்தநத்தால் பரபராசியில் நின்றும் விடுபட்டவளவேயன்றி,
ஐச்வர்யம் கைவல்யம் முதலிய க்ஷுத்ரபலங்களைப் பெற்றொழியாதவளவேயுமன்றி
நித்ய ஸூரிகளுடைய நித்யாநுபவத்தையன்றோ பெற்றது.

கத்திரபந்துமன்றே-
க்ஷத்ரபந்துவின் உபாக்கியானம் ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் தொண்ணூற்றேழாவது அத்யாயத்தில் பரக்கக் கூறப்பட்டுள்ளது;
அதன் சுருக்கம் வருமாறு;-

மிகக் கொடிய நடத்தைகளையுடையவனாய், பல்வகைப் பாவங்களும் உருவெடுத்து வந்தனவென்னும்படி
மஹாபாபியான க்ஷத்ரபந்து என்பானொருவன் இருந்தான்;
அவன் தனது கொடுமையினால் தாய் தந்தை மக்கள் மித்திரர் அனைவராலும் கைவிடப்பட்டவனாய்
காட்டிலே திரிந்து கொண்டு ஜீவஹிம்ஸையினால் வயிறு வளர்த்து வந்தான்.
இங்ஙனம் நெடுநாள் சென்றவளவில், ஒருநாள் ஒரு மாமுனிவர்
கொடிய வெய்யில் வேளையில் வழி போகா நிற்கையில் வழிதப்பி,
இப்பாவி திரியுங் கானகத்திலே புகுந்து இவனது கண்ணுக்கு இலக்காயினர்.

அவரைக் கண்டதும் அவருடைய பரிதாபத்தைக் கண்ட இவனுக்குத் தன்னையுமறியாமல்
அம்முனிவர் விஷயத்திற் காருண்யமுண்டாகி,
‘மாமுனிவரே! இஃது உம்முடைய வழியன்றே, வழி தப்பிவந்தீர் போலும். உற்றுநோக்கிப் பாரும்’ என்று
முனிவரை நோக்கிக்கூற,
அவரும் உணர்ந்து, பொறுக்கமுடியாத தாஹத்தை யுடையராய் ஒரு தடாகத்தைத் தேடிச் செல்லுகையில்
அருகே ஒரு அழகிய பொய்கையைக் கணடு, தாப மிகுதியால் சடக்கென அக்குளத்திற்போய் விழுந்திட்டார்.
அப்போது அருகிருந்த க்ஷத்ரபந்து தனது கையிலிருந்த வில்லையும் அம்புகளையும் எறிந்துவிட்டு,
அம்முனிவரைப் பிடித்துத் தூக்கித் தேற்றித் தாமரைக் கிழங்குகளை உணவாகக் கொடுத்து விடாயைப்போக்கி மகிழ்வித்தான்.

பிறகு அவர் கரைமீதேறி ஒரு மரத்தடியில் உட்கார, அவரது கால்களின் நோவுதீர நன்றாகப்பிடித்து
உபசாரங்களைச் செய்த க்ஷத்ரபந்துவை நோக்கி அம்முனிவர்,
‘பேருபகாரம் புரிந்த பெரியோனே! யாருடைய சிறந்த குலத்திற் பிறந்தவன் நீ?
உனது வரலாறுகளைக் கேட்க விரும்புகிறேன்’ என்ன!

அது கேட்ட அவனும் ‘முனிவர் கோமானே! நான் ஸூர்யவம்ஸத்தில் விஸ்வரதன் என்பவற்கு மகனாய்த் தோன்றியவன்’
என்று தொடங்கித் தனது கொடுமைகளையெல்லாம் ஒன்றும் ஒளிக்காமல் உள்ளபடி சொல்ல
அவற்றைச் செவியுற்ற முனிவர் இவனை நல்வழியிற் செலுத்தவேணுமென்ற கருத்துகொண்டு
‘அப்பா! இத்தீய குணங்களையெல்லாம் விட்டிட்டு ஜூவ காருண்யத்தையே பரம தர்மமாகக் கடைபிடிக்க உன்னாலாகாதோ?’ என்று கேட்க

அதற்கு அவன் ‘காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்னும் தீக்குணங்கட்குப் பிறப்பிடமான
நான் அவற்றை விட்டுப்பிரிந்து ஒரு க்ஷணகாலமும் இருக்ககில்லேன்; என் மனம் என் வசமன்று;
இது தவிர வேறு நியமநமுண்டாகில் சிரமேற் கொள்ளக் காத்திருக்கிறேன்’ என்ன;

எப்படியாவது இவனை வழிபடுத்த வேணுமென்னும் பேரவாக்கொண்ட முனிவர்
‘இது மாட்டாயாகில், எப்போதும் கோவிந்த! கோவிந்த! என்று சொல்லிக்கொண்டிருக்கவாவது உன்னால் முடியுமோ?
இருமினாலும் தும்மினாலும் கோவிந்த! என்றே சொல்லிக்கொண்டிருப்பாயாகில் உனக்கு மிக்க நன்மையுண்டாம்’
என்று சொல்லிவிட்டுப்போயினர்;

அது முதலாக க்ஷத்ரபந்து கோவிந்த நாமத்தை இடைவிடாது ஸங்கீர்த்தநம் பண்ணிக் கொண்டிருந்தான்.
சிலகாலங் கழித்து அவன் மரணமடைந்து அந்தணர் குலத்தில் பூர்வஜந்ம ஸ்மரணத்துடன் பிறந்தான்.
உடனே அவனுக்கு இக்கொடிய ஸம்ஸாரத்தில் மிக்க நிர்வேதம் உண்டாயிற்று.
இப்படிப்பட்ட உத்தமோத்தமமான ப்ராஹ்மண குலத்தில் எனக்குப் பிறவிட நேர்ந்ததும்
பூர்வஜன்ம ஸ்மரணமுண்டானதும் நான் முன்பு பண்ணின கோவிந்தநாம ஸங்கீர்த்தகத்தின் பயனன்றோ?
ஆகவே எனக்கு மேலான நன்மையை விளைத்த அந்த கோவிந்தனையே நான் ஆராதனஞ்செய்து,
தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயநரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றமிகு முடலைவிட்டு
மாயவன் சேற்றள்ளற் பொய்நிலத்தைக் கண்டது நலமந்தமில்லாதோர் நாடாகிய
பரமபதத்தை அடையக்கடவேன் என்பதாகத் துணிந்து
அங்ஙனமே செய்து பரமபாகவதனாகி விடுபெற்றனன் என்பதாம்.

இத்தனையடியரானார்க்கு –
க்ஷத்ரபந்துவைப்போல ஸ்வல்பம் ஆநுகூல்ய முடையவர்கட்கு என்றும்
ஈஸ்வரன் போ, நீ மேஷன் என்று ஒருவர் சொன்னால்
ஆ! அப்படியா!’ என்று மார்பு தட்டி மறுப்பதற்கு முன் வர மாட்டாத அத்வேஷமுடையார்க்கும் என்றும்
இரண்டுவகையாகப் பொருள் கூறுப.

பித்தன்-
இது செய்யத்தகும், இது செய்யத்தகாது என்ற விவேகமற்றவன் பேயனெனப் படுவான்
எம் பெருமானும் அடியார் திறத்திலுள்ள வ்யாமோஹாதிசயத்தினால் பரிமாறும் முறையில்
அடைவு கெட்டு முறைமாறுபவனாதலால் பித்தனெனப்பட்டது.

பகவத் விஷயத்திலே உங்மஸ்தமாக ஆழுமவர்களைப் பேயர் என்னுமா போலே,
பாகவத விஷயத்திலே உங்மஸ்தகமாகப் பரிமாறுபவனைப் பித்தனென்னக் குறையில்லையே.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-3-வேத நூல் பிராயம் நூறு -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

கீழ்ப்பாட்டில் ‘பரமபதம் எனக்கு வேண்டா’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர் உமக்குப் பரமபதம் வேண்டாவாகில் கோயிலோடே தோள் தீண்டியான ஸம்ஸாரத் திலேயிருந்து
திருநாமத்தை அநுபவியும் “ என்றருளிச்செய்ய;
“அது தன்னையும் நிரூபித்தவாறே திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் அரிதாம்படி துக்கப்பரம்பரையேயா யிருந்தது ;
ஆகையாலே எனக்கு ஸம்ஸாரத்திலிருப்பும் வேண்டா “ என்று ஆழ்வார் கூற
‘திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸம்ஸாரத்திற்கு நீர் சொல்லுகிற குறை என்?’ என்று
எம்பெருமான் கேட்டருள,
ஸம்ஸாரத்தினுடைய தோஷங்களை இப்பாட்டால் உபபாதிக்கிறாரென்க.

“இத்தால், பழகிப் போருகிற ஸம்ஸார யாத்ரையிலும் ஜுகுப்ஸை பிறக்கும்படி
திருநாமம் இனிதென்று அம்முகத்தாலே
திருநாமத்தினுடைய போக்யதா ப்ரகர்ஷத்தைச் சொல்லுகிறது” என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதை பா லகன தாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பதவுரை

அரங்கமாநகருளானே!

மனிசர் தாம்–மநுஷ்யர்கள்
வேதம் நூல்–வேத சாஸ்திரத்திற்படியே
நூறு பிராயம் புகுவரேலும் –நூறு பிராயம் வாழ்ந்திருப்பர்களே யானாலும்
பாதியும் –அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
உறங்கி போகும்–உறக்கத்தாலே கழியும்;
நின்ற இப்பதினையாண்டு –மிகுந்த ஐம்பது வருஷம்
பேதை–சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
பாலகன் –‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும்
அது ஆகும்–நெஞ்சால் நினைக்கவும் தகாத யௌவநாவஸ்தையாயும்
பிணி–வியாதி மயமாயும்
பசி–ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
மூப்பு–கிழத்தனமாயும்
துன்பம் –மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
ஆதலால்–இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
பிறவி–ஜந்மத்தை
வேண்டேன்–விரும்புகிறேனில்லை.

உலகத்தில் மானிடப்பிறவி யென்பது ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே பெறக்கூடியது;
அதனை வருந்திப்பெற்றாலும், கர்ப்பத்திலேயும், பிறந்தவுடனும் நாலுநாள் கழித்தும் சில மாதங்கள் கழித்தும்
சில வருடங்கள் கழித்தும் இறக்கக்கூடியவர்கள் பெரும்பான்மையரேயன்றி,
வேதசாஸ்த்ரத்தில் “தாயுர்வை புரு‘” (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று கூறியுள்ளபடி
தீர்க்காயுஸ்ஸாக வாழக்கூடியவர் மிகச் சிறுபான்மையரே;

விதிவசத்தால் சிலர்நூறு பிராயம் புக்கு வாழப்பெற்றாலும் அவரது வாழ்நாள் கழியும் வகையை ஆராய்ந்தால்
ஒரு நொடிப்பொழுதாவது நற்போதாகக் கழிய வழியில்லை.
ஸூர்யன் அஸ்தமித்து மீண்டும் உதிக்குமளவும் உறங்குவது ஒரு நியமமாக வந்துவிட்டபடியால்
அஹோராத்ரமாகிய ஒரு திநத்துக்கு உள்ள அறுபது நாழிகையில் முப்பது நாழிகை உறக்கத்தில் கழிகிற கணக்கில்
பாதி ஆயுஸ்ஸாகிய ஐம்பது வருஷம் உறக்கத்தால் கழிந்ததாகிறது;

மற்ற பாதி வாழ்நாளில்-தன்னுடைய ஹிதாஹிதம் தாயின் அதீனமாயிருக்கும் சிசுத்வாவஸ்தையாய்ச் சிலகாலமும்,
எத்தனை தீம்புகள் செய்தாலும் சீறவொண்ணாதபடி செல்வப்பிள்ளை பருவமாய்ச் சிலகாலமும்,
பிறகு யௌவநம் வந்து புகுந்து விஷயாந்தரங்களிலே மண்டித்திரியும் பருவமாய்ச் சிலகாலமும்,
இங்ஙனே இந்திரியச் சிறையிலே அகப்பட்டுத் தடுமாறாநிற்க இடிவிழுந்தாற்போலே வந்து புகுகிற கிழத்தனமாய்ச் சிலகாலமும்

“அத்யுத்கடை; புண்யபாபைரிஹைவ பலமச்நுதே”
(வரம்பு கடந்த புண்யபாபங்களின் பலனை இப்பிறவியிலேயே அநுபவிக்கிறான்)என்றபடி –
யௌவநத்திற் செய்த எல்லை கடந்த குறும்புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் வருந்துவதாய்ச் சிலகாலமும்,
பசியினால் ஒன்றும் தோன்றாதபடி இடர்படுவதாய்ச் சிலகாலமும்,
ஒருபக்கத்தில் பிள்ளை செத்தான் என்று கேட்டு அழுவதும்,
மற்றொரு பக்கத்தில் மனைவி செத்தாள் என்று கேட்டு அழுவதுமாய்
இப்படி ஸம்ஸாரத் துன்பங்களில் ஆழ்ந்து செல்லும் நாளாய்ச் சிலகாலமும் கழிவதால்
இத்துன்பங்களை அநுபவிப்பதற்கு இன்னும் சிறிது ஆயுஸ் கடன் வாங்கிக் கொள்ள வேண்டியதாமே யன்றி
உள்ள வாழ்நாளில் ஆத்மாவைப் பற்றிச் சிறிதாகிலுஞ்சிந்திக்கப் பொழுது கிடைப்பரிது;
ஆதலால் இப்பிறவி எனக்கு வேண்டா என்கிறார்.

வேதநூல்-வேதமென்கிற சாஸ்த்ரம்;
அன்றியே,
வேதமும் மற்றுமுள்ள சாஸ்த்ரங்களுமென்றுமாம்.

உறங்கி – உறங்க என்றவாறு, எச்சத்திரிபு.

பதினையாண்டு – பத்தாலே பெருக்கப்பட்ட ஐயாண்டு – ஐம்பது வருஷமென்றபடி.
“நின்றதிற் பதினையாண்டு” என்றும் சிலர் ஓதுவர்.

பேதை பாலகன் என்ற அடைவின்படியே யௌவந பருவத்தையும் வாய்விட்டுச் சொல்லாதொழிந்தது –
அப்பருவத்தின் மிக்க கொடுமையை விளக்குதற்காம்.
துஷ்டன் பெயரை நாக்கொண்டு கூறக் கூசுமவர்‘அந்தப்பயல்’ என்றே சொல்லுமாபோலே.
அப்பருவத்தின் கொடுமையை இவ்வாழ்வார் நன்கு கைகண்டவராதலால்
அதனை நினைத்தவாறே அஞ்சி நடுங்கி அதாகும் என்கிறார்.
‘பேதைத் தனமே நன்று’ என்னும்படியன்றோ இப்பருவத்தின் அறிவு கேடு இருப்பது.

இப்படி “பிறவி வேண்டேன்’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று பரமபதமும் வேண்டா என்கிறீர்;
‘பிறவி வேண்டேன்’ என்று ஸம்ஸாரமும் வேண்டா என்கிறீர்;
நம் கையிருள்ளது இவ்விரண்டு விபூதியேயன்றோ?
இரண்டுக்கும் குறை கூறா நின்றீர்;
‘நின்றால் ஆணை, இருந்தால் ஆணை, கிடந்தால் ஆணை’ என்பாரைப் போலே
நீர்படுத்துகிறபாடு என்!” என்று முட்டிக்கொள்ள

அரங்கமாநகரளானே!’ என்கிறார்;
கீழ்க்கூறிய இரண்டு விபூதிக்கும் மேற்பட்டு மூன்றாவது விபூதி யென்னும்படியான
கோயிலிலே எனக்கு ஓர் இருப்பு அமைக்கலாகாதோ? என்பது உட்கருத்து.

கோயிலில் குடிவாழ்ந்தால்
பேதைப் பருவத்திலே அந்ந ப்ராகத்துக் கென்றாகிலும் ஸந்நிதிக்குள் கொண்டு புகுவார்கள்;
பால்யாவஸ்தையில் விளையாடும்போதும் பெருமாள் புறப்பாடு அருளிப்பாடு முதலியவற்றை அநுகரிக்கும்படியாயிருக்கும்
யௌவநம் வந்தால், தான் விரும்பின விஷயாந்தரங்களைக் காணவேண்டியாகிலும் ஸந்நிதிக்குள்ளே புகலாயிருக்கும்;
மூப்படைந்து உள்ளே புகமாட்டாத நாளைக்கு நம்பெருமாள் இவன் வாசலிலே வந்து நிற்கலாயிருக்கும்;

ஆக இப்படிகளாலே
கனவிலும் காண்பது பெருமாள் வடிவழகேயாயிருக்குமாகையாலே
கோயில் வாஸம் அடிக்கழஞ்சு பெற்றுச்செல்லா நிற்குமென்றருளிச் செய்வர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-2-பச்சை மா மலை போல் மேனி -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

இப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரிய பெருமாள்
“ஆழ்வீர்! நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு;
அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன;
இவ்வுலகத்திலிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு
பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது;
அது எனக்கு வேண்டா என்கிறார்.

பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பதவுரை

அரங்கமா நகருளானே!-;

பச்சை மா மலை போல் மேனி– பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்
பவளம் வாய்–பவளம் போன்ற சிவந்த திருவாயையும்
செம் கமலம் கண்–செந்தாமரை மலர்போன்ற திருக் கண்களையுமுடைய
அச்சுதா–அச்சுதனே!
அமரர் ஏறே–நித்ய ஸுரிகளுக்குத் தலைவனே!
ஆயர் தம் கொழுந்தே–இடையர் குலத்தில் தோன்றிய இளம் குமாரனே
என்னும் –என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற
இச்சுவை–இந்த அநுபவ ருசியை
தவிர–விட்டுவிடும்படி
யான் போய்–யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று
இந்திர லோகம் ஆளும்–(அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற
அச்சுவை–அந்த அநுபவ ருசியை
பெறினும்–அடைவதாயிருந்தாலும்
வேண்டேன்–(அதனை) விரும்பமாட்டேன்.

பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குப் பச்சை மா மலையை உவமை கூறினார்.

ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும்
முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்
‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.

‘அச்யுதன்’ என்னும் திருநாமம்-
தான் என்றும் நழுவாதவன் என்றும்
(தன் அடி பணிந்தோரை) நழுவ விடாதவன் என்றும் பொருள்படும்.

என்னுமிச்சுவை என்றதனால்,
எம்பெருமானது குணங்களை அநுபவிக்க வேண்டியதில்லை;
அவனுடைய திருநாமங்களைக் கூறுதல் மாத்திரமே சுவை தருதற்குப் போதுமென்பது பெறப்படும்.

யான்-
திருநாமஞ் சொல்லுகைக்குப் பாங்கான நாவையுடைய நான் என்றபடி.
வேறொரு தேசத்தேறப்போய் அநுபவிக்குமளவும் விளம்பத்தைப் பொறுக்க மாட்டாத
மிகுந்த அபிநிவேசமுடைய நான் என்றுமாம்.

போய் என்பதனால்
போவதிலுள்ள அருமைப்பாட்டையும்
இப்போது பயன் எளிதிற் கைப்பட்டிருத்தலையும் குறிப்பித்தனர்.

“ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே.”

இந்திரன் முதலிய சொற்களெல்லாம் முக்கிய வ்ருத்தியாகப் பரமாத்மாவையே குறிக்குமென்பதும்
மற்றைத் தேவர்களைக் குறிப்பது இலக்கணையாலென்பதும்
வேதாந்திகளின் கொள்கையாதலால் ‘இந்திரலோக’ மென்பது ஸ்வர்க்க லோகத்தைக் குறியாமல்
எம்பெருமானுக்கே உரிய பரமபதத்தைக் குறித்தது.

“இந்திரலோகமாளுமச்சுவை இனிதன்று” என்னாமல்
“அச்சுவைபெறினும் வேண்டேன்” என்றது-
தாம் பரமபதாநுபத்தைப் பழித்தவராகாமல் திருநாம ஸங்கீர்த்தனத்தில் தமக்குள்ள ஆதராதிசயத்தை விளக்குதற் பொருட்டாம்.
பரமபதாநுப மென்கிற பதார்த்தமே கிடையாதென்றும்
சாஸ்த்ர மரியாதைக்காக அது உண்டென்று ஒருகால் இசைந்தாலும் அது சுவையற்றதாமென்றும்
உபந்யஸிக்கிற ஆழ்வாரொருவர் உளரிறே;
திருமங்கையாழ்வார் திருமடல்களை நோக்குக.

“அரங்கமாநகருளானே! அச்சுவை பெறினும் வேண்டேன்”என்றது
பரமபதத்திலிருக்கிறதைவிட்டு இவ்வழகையும் சீலத்தையும்
இங்குள்ளார்க்கு முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்கவந்து கிடக்கிற இது போதாதோ?
தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கிற நீர்மையை அநுபவிக்கைக்கு அங்குள்ளாரும் இங்கே வரா நிற்க
என்னை அங்கே போகவிடப்பார்ப்பதென்? என்ற கருத்துத்தோன்றும்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.