பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போதும் உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி
தொண்டு பூண் டமுத முண்ணாத் தொழும்பர் சோறுகக்குமாறே.
பதவுரை
பெண்டிரால்–மனைவியரால்
சுகங்கள்–ஸகல ஸூகங்களையும்
உய்ப்பான்–அநுபவிப்பதாகக் கருதி
பெரியது ஓர் இடும்பை–மிகப்பெரிதான துயரங்களை
பூண்டு–மேற்கொண்டு
இரா–இராப்பொழுதிலே
உண்டு–புஜித்து
கிடக்கும் போதும் –படுக்கையிலே சாயும் போதும்
உடலுக்கே கரைத்து–சரீரத்திற்காகவே கவலைப்பட்டு
நைந்து–நெஞ்சு உளையப் பெற்று,
தண் துழாம் மாலை மார்பன் தமர்கள் ஆய்–குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமனது அடியாராய்
பாடி–(அவன் குணங்களை வாயாரப்) பாடி
ஆடி–(பரவசமாய்க்)கூத்தாடி
தொண்டு பூண்டு –(இவ்வகைகளாலே)சேஷவ்ருத்தியை மேற்கொண்டு
அமுதம் உண்ணா தொழும்பர்–(பகவத் குணானுபவமாகிற) அமுதத்தை புஜிக்கப்பெற்றாத நீர்
சோறு உகக்கும் ஆறே–சோற்றை விரும்பும் வகை என்னோ!
விளக்க உரை
பெண்களோடு அணைந்து சுகத்தை அநுபவிக்க விரும்பதல்
தீயோடு அணைந்து விடாய்தீர நினைப்பதையம்,
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி சுகம் பெற நினைப்பதைய மொக்குமென்பார்-
பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபண்டு என்கிறார்.
ஐயோ துக்கத்திற்கு ஸாதமானவற்றையே சுகத்திற்கு ஸாதனமாக நினைப்பதே
இப்படியுமொரு மயக்கமுண்டோ பிழைக்கவேணுமென்று நினைப்பாரும் விஷத்தை யுண்ப?
பெரியதோ ரிடும்பை பூண்டு-
ஸூக ஸாதநமாக நினைத்துத் தாம் கொண்ட பெண்டிரை உகப்பிப்பதற்காக
ம்ருத்யதாநம் வாங்கவேணும்,
பரஹிம்ஸை பண்ணவேணும்,
பொற்களவு செய்யவேணும்,
ராஜ தண்டனைகளை அனுபவிக்க வேணும்,
ஐயோ! இப்படிகளாலே பெருப்பெருத்த துக்கங்களை ஏறிட்டுக்கொள்ளுகிறார்களே!
முதலிலே பெண்டிரைக் கொள்வதற்கு ஸாதகமாகச் செய்யம் செயல்களும்
துக்க ருபம் கொண்ட பெண்டிரைப் பாதுகாப்பதற்காகச் செய்யும் செயல்களும் துக்கரூபம்;
இவ்வளவேயமன்றி அப்பெண்டிரால் இவள் அடைவதும் பர்ணதுக்கமே,
“ஈசிபோமின் ஈங்கிரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளங்கூசியிட்டீர்”என்று கதவடைத்துக் காற்குடைக் கொள்ளுவர்களே.
“பெரியதோரிடும்பை எய்தி “ என்னாமல்
பூண்டு என்ற சொல் நயத்தால்
கழுத்திலே மாட்டிக்கொண்ட வாயோடு போலே பிறகு தன்னாலும் கழற்றிக்கொள்ள முடியாமை விளங்கும்.
உண்டிரா-
தாம் கொண்ட பெண்டிரை உகப்பிப்பதற்காகப் பகலெல்லாம் சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடிசைந்து
போதுபோக்கவேண்டியிருப்பதால் ஒருபிடி சோறு உண்பதற்கும் அவகாசம் அரிதாய்விடும்;
பின்னை இரவிலே யாய்த்து உண்பதற்குச் சிறிது அவகாசம் பெறுவது,
பகலெல்லாம் அலைந்து ஒருபிடி சோறு உண்டவாறே உடம்பு பரவசமாய் விழுந்து விடுமாதலால் “கிடக்கும்போதும்” என்கிறார்.
அப்போதாகிலும் ஆத்மாவைப்பற்றிச் சிறிது கரையக்கூ.டுமோ என்று பார்த்தால் இல்லை
(உடலுக்கே கரைந்து நைந்து)
பொழுது விடிந்தவாறே எங்கே சூதாடப்போகலாம், எங்கே களவாடப் போகலாம் என்றாற்போலே
மீண்டும் தேஹ யாத்ரையைப் பற்றின சிந்தையேயாய்த்து நிகழ்வது.
கரைந்து நைந்து-
பகவத் விஷயத்திலே ஆழ்ந்தவர்கள் “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்” என்றபடி
படும்பாடுகளை யெல்லாம்
அந்தோ! இவன் விஷயாந்தரங்களிற்படுவதே! என்று வயிறெரிகிறார்.
எவ்வளவோ பாவங்கள் செய்து பணங்களைத் திரட்டிக் கொணர்ந்து கொடுத்து ஆராதித்தாலும்
முகஞ்சிதறப் புடைக்கிற மாதர்களின் முன்றானையையே பின்பற்றி ஓடுகின்றனரே யன்றி
ஸுலபமாய் ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைச் சிந்தித்து மகிழ்வாரில்லையே என்கிறார்.
(தண்டுழாய் மாலை இத்யாதி.)
‘எனக்கு ஆடு பலிகொடுக்கவேண்டா;
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும நொந்துவாடத் தவஞ்செய்யவேண்டா;
நீயும் நானும் ஒன்று, என்று இத்தனை உறவு பண்ணிக்கொண்டு வந்தால் போதும்,
அவர்களை நான் விடமாட்டேன்’ என்ற கருத்துத்தோன்றத்
திருத்துழாய மாலையணிந்து நிற்கிற பிரானைப் பற்றுவாரில்லையே!
தமர்களாய்-
‘எம்பெருமானுடைய கோஷ்டியிற் சேர்ந்தவர்கள் நாங்கள்’ என்றிவ்வளவேயன்றோ அவர்கள் காட்டவேண்டியது.
இவ்வளவு ஸ்வரூபஜ்ஞாநம் வாய்ந்தவாறே பின்னை அவர்கள் வெறுமனிருக்க முடியுமோ?
பாடியாடும்படியாகும்.
பிறகு “உனக்கே நாமாட் செய்வோம்” என்று அத்தாணிச்சேவகத்திற்கு அணுகலாகும்;
அதிலே ஸகல ரஸங்களும் காணலாகும். இவ்வளவும் பெற்று மகிழவேண்டியவர்கள்
“இப்படிப்பட்ட ரஸமொன்று உண்டு” என்றும் நினையாமல் விஷயாந்தரங்களை விரும்பிப் பாழாய்ப் போவதே!
தொண்டுபூண்டு அமுதமுண்ணா-
“ஹஸ்த்யத்ரிநாத! தவ தாஸ்யமஹாரஸஜ்ஞ;” என்று அறிவுடையார் எம்பெருமானுடைய அடிமையையே
ஆராவமுதமாக அறுதியிட்டிருக்க, எச்சில் வாயிலே அமுதமுண்டென்று மயங்கி ஓடுவாரும் சிலரே.
தொழும்பர்-
‘இவனுக்குமேல் நீசனில்லை, என்னும்படி முதல் வகுப்பில் தேறினவர் ; பரமநீசர்.
‘தொழும்பர்’ என்று அடியவர்க்கும் பெயர்.
“சோறு உகக்குமாறே.)
மண்ணிற்காட்டில் சோற்றுக்கு வாசி யறிந்து ஜீவிக்கிறபடி எங்ஙனே!
நித்யமான ஆத்ம வஸ்த்துவுக்கு பகவத் சேஷத்வமே தாரகமென்று அறியாதவன்
அநித்யமான தேஹத்திற்குச் சோறு தராகமென்று அறிந்து ஜீவிக்கிறானோ?
பித்ராதிகள் ஜீவிக்கக் காண்கிற வாஸனை கொண்டு ஜீவிக்கிறானித்தனையிறே
வாசியறியுமவனாகில் ஆத்மாவுக்கு நன்மை யெண்ணானோ?
ஒன்றிலே விசேஷிஜ்ஞாநமுண்டாகில் மற்றையதிலும் அறிவு உண்டாகாதோ?” என்ற வியாக்கியான
ஸ்ரீ ஸூக்திகளின் போக்யதையைச் சிறிது அநுபிக்க.
“கரைந்து நைந்து அமுதமுண்ணா” என இயையும்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply