‘தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும்,
“புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும்
எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்? ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிராநின்றது;
அன்றியும்
“தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவது தென்று தெரியவில்லை;
நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்;
எங்கள் மீது குற்றமென்?” என்று சில ஸம்ஸாரிகள் கூற,
அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித் தருகிறார்.
புலை யற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலை யறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலை யறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான்.
பதவுரை
கலை–சாஸ்திரங்களை
அற கற்ற மாந்தர் –நன்றாக ஓதின மனிதர்
புலை அறம் ஆகி நின்ற–நீச தர்மமாயிராநின்ற
புத்தொடு சமணம்–பௌத்தமதம் க்ஷபணமதம் முதலிய
எல்லாம் –எல்லா மதங்களையம்
காண்பரோ–நெஞ்சாலே தான் ஆராய் வார்களோ?
கேட்பரோ–காது கொடுத்துத் தான் கேட்பார்களோ?
(அதுநிற்க)
தலை அறுப்புண்டும்–என் தலையானது அறுக்கப் பட்டாலும்
சாகேன் –நான் சாக மாட்டேன்;
சத்தியம் –இது சத்தியம் ;
ஐயா–ஸ்வாமிகளே!
காண்மின்–(ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்;
சிலையினால்–வில்லாலே
இலங்கை செற்ற–இலங்கையை நாசஞ்செய்த
தேவனே –எம்பெருமானே
தேவன் ஆவான் –ஸர்வேஸ்வரனெனப்படுவான் .
விளக்க உரை
புத்தொடு – புத்தமென்ற வடசொல் புத்து எனத் திரிந்தது.
சமணம் -க்ஷபணகருடைய மதம்.
கலையறக்கற்ற மாந்தராவார் -கூரத்தாழ்வான் போல்வார் .
“ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸங்களில் நிலைநின்றவர்களாய் வேததாத்பர்யம் கைப்பட்டவர்கள்;
அவர்களாகிறார்- கூரத்தாழ்வான் போல்வாரிறே”! என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
“காண்பரோ கேட்பரோதான்” என்றவிடத்தில் ஓர் ஐதிஹ்யம் அருளிச்செய்வர்;-
கூரத்தாழ்வான் “இஸ்டஸித்தி” என்கிற ஒரு புறமதச்சுவடி வாசித்துக்கொண்டிருந்த சிலரோடே கூடிச்
சிறிது போதுபோக்கி எம்பெருமானார் ஸந்நிதிக்கு விளம்பித்துவர,
“ஏன் இத்தனை விளம்பம்?” என்று உடையவர் கேட்டருள,
ஆழ்வானும் காரணத்தை உள்ளபடியே உரைக்க,
உடையவர் “ ஹா ஹா!‘கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதான்’ என்ற அருளிச்செயல் என்னாயிற்று?” என்று
புநஸ் ஸ்நாநம் செய்வித்தருளி ஸ்ரீபாததூளியும் இடுவித்தருளினாராம்.
தலையறுப்புண்டும் –
ஸத்யமான வார்த்தையை நான் சொல்லிக்கொண்டே கழுத்தில் கத்தியை எரிந்தேனாகில் தலை அறுபடமாட்டாது ஸத்யம் ;
ஒருகால் தலை அறுப்புண்டாலும் உயிர் போகாதென்பது புநஸ்ஸத்யம் .
சாவேன்,
சாகேன் என்பன பாடபேதங்கள்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply