நிகமத்தில் இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற
ஷூத்ர – சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, பகவானுடைய கைங்கரியத்தையே -ஏக போக –
புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-
உய்யப் புகுமாறு அஃதே என்று –
திருநாரணன் தாள்’ என்று நான் சொன்ன அதுவே உஜ்ஜீவிப்பதற்கு -உய்வதற்கு உரிய-
உபாயமும் உபேயமும் – வழியும் பலமும் என்று.
கண்ணன் கழல்கள் மேல் – ‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி,
கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?
அது தன்னையே அருளிச் செய்கிறார்.
இப்படி ‘அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர்அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச் செய்தார்;
‘வண்புகழ் நாரணன் திண் கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார். இது என்ன அடிப் பாடுதான்!
‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
கொய்பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல் –
நித்ய வசந்தமான -எப்பொழுதும் பூவும் தளிருமாய் இருக்கின்ற திருச்சோலை சூழ்ந்த திருநகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார், சர்வேஸ்வரன் திருவடிகளில் அந்தரங்கக் கைங்கரியம்-விருத்தி – செய்தவை இவை தாம்.
செய்கோலத்து ஆயிரம் –
கவிக்குச் சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம். செய் – செய்த கவி என்னுதல்;
குற்றேவல் செய்’ என்று மேலே கூட்டி, ‘வாசிகமான அடிமை’ என்னுதல்.
சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலர் –
அவன் குணங்களைத் தொடுத்துப் பாடின இவற்றில் ஒன்றும் குறையாமல் கற்றவர்கள் பகவானுக்கு-
வ்யதிரிக்த – வேறுபட்ட பலன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களாகிற-அனர்த்தங்கள் – கேடுகள் நீங்கி
உய்யும் தன்மையர் ஆவர். அஃகல் – சுருங்கல்.
உஜ்ஜீவனமே – ‘உய்தலே தன்மையாக-ஸ்வபாவமாக – உடையர் ஆவர்,’ என்பார், ‘உய்யற்பாலர்’ என்கிறார்.
‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.
———–
இத் திருவாய்மொழியைக் கற்க-அப்யசிக்க வல்லவர் நித்ய ஸூரிகளோடு சத்ருசர் -ஒத்தவர் ஆவர்,’ என்கிறார்
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே–4-2-11-
மெலியும் நோய் தீர்க்கும் –
‘மெலியும்’ என்று தாயார் கை வாங்கினாள்;
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழைநெஞ்சே!’–பெரிய திருமொழி. 8. 9 : 7.–என்கிற பாசுரப்படியே
பின்னையும் உடையவன் கைவிடானே?
உடையவன் – ஸ்வாமி.-ஆதலின், ‘மெலியும் நோய் தீர்க்கும்’ என்கிறது.
நம் கண்ணன் –
இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப் பற்ற,
‘நம் கண்ணன்’ என்கிறது.
தாஸாம் ஆவிராபூத் ஸுரி ‘
கண்ண பிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்,’ என்பது ஸ்ரீ பாகவதம்.
கண்ணன் கழல்கள் மேல் –
இப்படிச் சரீரம் மெலிவதற்கு-சிதிலையாகைக்கு – அடியான விரக வியசனத்தைப் போக்கும்-
ஆஸ்ரித -அடியார்கட்கு ஸூலபனான ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக.
மலி புகழ் –
‘தேச காலங்களால்-விப்ரக்ருஷ்டமான – கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று
விடாய்க்கும்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது.
வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
இப்படிப்பட்ட புகழையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் –
இப்படி இவரை விடாய்ப்பித்தவன் அவ் விடாய் போன இடம் தெரியாதபடி
நீக்க வல்லன் என்கிற கல்யாண குணங்களை-வியக்தமாக – விளக்கமாகச் சொல்லுகிற
இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.
மலிபுகழ் வானவர்க்கு நற்கோவை ஆவர்
வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர். ‘மலி புகழ் வானவர்’ என்றதனால், இவ்வாழ்வாரோடு ஒப்பர்கள் ஆயிற்று அவர்களும்.
பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்கு இடம் இல்லாத சம்சாரத்திலிருந்து இவர் விடாய்க்க வல்லவர் ஆனால் போலே ஆயிற்று,
பகவானோடு நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே விடாய்க்க வல்லராம்படியும்.
———-
நிகமத்தில் சர்வேஸ்வரனுடைய உபய விபூதியும் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள் இட்ட வழக்கு,’ என்கிறார் .
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி –
இவர் சர்வேஸ்வரனுடைய பிரணயித்வத்தை – காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது,
பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;
இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.
கண்ணன் ஒண் கழல் மேல் –
தான் பரம பிரணயி காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.
செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச் சடகோபன் –
சிவந்த தாமரையை யுடைய பழனங்களை யுடைத்தாய்த் தெற்குத் திக்கிற்குச் சிறந்ததாயுள்ள
திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த.
அவனுடைய பிரணயித்வ- காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே
அகால பலிநோ வ்ருஷ ‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும் பழங்களையுடையன ஆகக் கடவன,’ என்கிறபடியே
ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் –
நதே வாகந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி ‘இந்தக் காவியத்தில் உம்முடைய வாக்கு ஒன்றேனும் பொய்யாக மாட்டாது,’
என்கிறபடியே, ‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க.
‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ?
அன்றிக்கே,
‘அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரன் ஒரு நித்ய சம்சாரியோடே இப்படி விரும்பி வந்து
கலந்து இவருடைய சத்தாதிகளே – உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய போக உபகரணமாக –
இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற-பிரணயித்வ – காதல் குணத்தில் பொய் இன்றிக்கே
இருக்கிற பத்து’ என்னுதல்.
வையம் மன்னி வீற்றிருந்து –
பூமியிலே எம்பெருமானாரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து.
மண்ணூடே விண்ணும் ஆள்வர் –
இங்கே இருக்கச் செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள். என்றது,
அங்கே போனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர்’ என்கை அன்றிக்கே,
இங்கே இருக்கச் செய்தே தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்’ என்றபடி.
‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் ‘நம்மைப் போலே வாய் புகு சோறாகப் பறி கொடாதே,
பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத் தோறும் அருளிச் செய்வர்.
பால்யத்திலே -இளமையிலே பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ அவர்?
(இத்தால் நஞ்சீயருடைய ஆசார்ய பிரதிபத்தி விளங்கும்.
தன்னா ரியனுக்குத் தானடிமை செய்வதுதான்
இந்நாடு தன்னில் இருக்கும்நாள் – அந்நேர்
அறிந்துமதில் ஆசையின்றி ஆசா ரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்மனமே! பேசு.’- உபதேசரத்தினமாலை, 64. )
———–
நிகமத்தில் -இத்திருவாய்மொழி கற்றாரைப் பெரிய பிராட்டியார்-தமக்கே பரமாகக் கொண்டு
ஸமஸ்த துக்கங்களையும் போக்குவார்,’ என்கிறார்.
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –
நிரந்தரமாக வர்ஷிக்கையாலே -எப்பொழுதும் மழை பெய்கையாலே -ஸ்ரமஹரமாய்– சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க்-
தர்ச நீயமான – காட்சிக்கு இனியதான திருமலையையுடைய சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று;
‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே,
நித்ய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே
நித்ய சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே,
சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்,
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மாமலை’-திருவிருத்தம், 50-
ஆகையாலே,
-அறற்றலையாய்-தர்ச நீயமாய் – காட்சிக்கு இனியதாய் இருத்தலின்,
‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது.
(‘அறற்றலை’ என்பது, சிலேடை :
‘தண்ணீரைத் தலையிலே யுடையது’ என்பதும், ‘தர்மத்தைத் தலையிலே யுடையது’ என்பதும் பொருள்.)
வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் –
அழகியதாய் தர்ச நீயமாய் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி.
திருநகரிக்கு ஸஹ்யம் திருமலை யாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே
திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால் ‑
சொன்ன அர்த்தத்தில் -பொருளில்- அதி சங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது.
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் – ‘
இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது.
திருமலை மாரி மாறாதாகையாலே, திருநகரி வாரி மாறாது;
ஆறாக் கயமாகையாலே பிராட்டியுடைய -ஆசன பத்மம் -ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.
வேரி -பரிமளம் –
இது கற்றார்க்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில்,
தனக்கு முன்பே தான் காட்டிக் கொடுத்த சம்சாரியை விரும்பும் சீல குணத்தை யாயிற்று இதில் சொல்லிற்று;
இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று;
தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று;
‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் பிரசாத அதிசயத்தாலே -கருணையின் மிகுதியாலே,
சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,
‘நானே இதற்குப் பலம் கொடுக்க வேண்டும்,’ என்று தனக்கே -பரமாக -பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.
வினை தீர்க்கும்
இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான சகல பிரதிபந்தகங்களையும் –
எல்லாத் தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது.
தீர்க்கும் –
போக்குவாள். ‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.
————-
நிகமத்தில் -இத் திருவாய் மொழியை -ச ஹ்ருதயமாக -மனப் பூர்வமாக அப்யஸிக்க வல்லவர்கள்-
தாம் பிரிந்து பட்ட துன்பம் படாமல் பலத்திலே அந்வயிப்பர் என்கிறார்.
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே–4-6-11-
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த –
இதற்கு, ‘மோஹித்தவள் அல்பம் ஆஸ்வசித்தவாறே சிறிது தெளிந்தவாறே,
மோர்க் குழம்பு குடித்தாள், தரித்தாள், கண் விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’
அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய் மொழியாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை.
அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ? அது வேண்டாதே,
தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை-பிரபாவம் – புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று,
உட்புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.
வழுவாத தொல் புகழ் –
வழுவாத தொல் புகழாவது, -அஞ்ஞான திசையிலும் -மயங்கிக் கிடக்கிற நிலையிலும்
தேவதாந்த்ர ஸ்பர்சமும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும் -ததீய ஸ்பர்சமும் -அத் தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தமும் –
சத்தயா அவ்வப் பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஹேதுவாய்,
அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப் பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்
பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ்.
ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது.
‘சர்வேஸ்வரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு,
தேவதாந்த்ர ஸ்பர்சமும் -வேறு தெய்வங்களின் சம்பந்தமும்-அபாகவதர் ஸ்பர்சமும் – பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமேயானால்,
வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
பூர்வார்த்தத்தை -முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய் இருக்கும்;
உத்தரார்த்தை -பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப் போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;
கர்மம் கைங்கரியத்திலே புகும்’ என்பது, ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ ஸூக்தி.
கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர்
குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியானே! அடியேன் நான் முயற்சி யின்றி
நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே.’– திவ்விய கவி-
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’-திருவிருத்தம், 97- என்றே அன்றோ இருப்பது?
ஸ்வரூபம் இது’ என்று அறிந்தால் ஸ்வரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும்
அதற்கு விரோதியானவற்றைக் காற்கடைக் கொள்ளுமதுவும் இல்லையாகில்,ஞானம் பிறந்தது இல்லையா மித்தனையே அன்றோ?
இஃது இல்லையாகில், ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை.
திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’-நான்முகன் திருவந். 68.- என்றும்,
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’-நான்முகன் திருவந். 53.- என்றும்,
எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’-பெரிய திருமொழி, 11. 6 : 7- என்றும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’-பெரிய திருமொழி, 7. 4 : 4.- என்றும் அன்றோ இவர்கள்படி?
அநாதி -பல காலங்களாக இவன் சூழ்த்துக் கொண்ட பாவங்கள் போகையும்,
நித்ய கைங்கரியம் பெறுகையு மாகிற இப் பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் –
இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யமான -அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும்.
வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது,
விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும் ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக,
தோழியானவள்,இது ஒரு விஷயத்தில் பாவ பந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று
அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.
தொழுது அடிப் பாட வல்லார் –
பெண் பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’
என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.
துக்க சீலம் இலர்களே –
மோஹித்த விடத்து தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும்,
பாகவத ஸ்பர்சம் -சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது.
அஃது இல்லாமையே ஸ்வபாவமாகவே தன்மையாக உடையர் ஆவர்.
சீலம் – ஸ்வபாவம் -தன்மை.
—————
நிகமத்தில் -இத்திருவாய்மொழி கற்றார் எம்பெருமானோடே நித்ய சம்ஸ்லேஷம் –
எப்பொழுதும் சேர்ந்திருக்கலாம்படியான திரு நாட்டிலே செல்லப் பெறுவர்,’ என்கிறார்.
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-
தழுவி நின்ற காதல் தன்னால் –
நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான
அதி மாத்ரமான -அளவு கடந்த காதலாலே.
தாமரைக் கண்ணன் தன்னை –
இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்ரபூதரைச் சொல்லுகிறார்.
குழுவு மாடம் தென் குருகூர் –
ஆழ்வார்க்குத் துக்கம்-ஆர்த்தி – மிக மிகச் சர்வேஸ்வரன் வரவு தப்பாது’ என்று
திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.
இதனை சரவஞ்ச குசலம் க்ருஹே -ஸ்ரீராமா. யுத். 127 : 5.
(ஸ்ரீ பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக் கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலேயன்றோ ‘எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்று
பரத்வாஜ முனிவர் ஸ்ரீ ராம பிரானைப் பார்த்துக் கூறி யருளினார்?’ என்றபடி.-)
வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்பது போலே
மாறன் –
சம்சாரத்தை மாற்றினவர்.
சடகோபன் –
பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் -விமுகருக்கு சத்ரு -பகைவர்.
சொல் வழு இலாத –
பகவானைப் பிரிந்த பிரிவாலே -விஸ்லேஷத்திலே -கூப்பிடுகிற இந் நன்மையில் ஒன்றும் தப்பாதபடி
சொன்ன. ஆயிரத்துள் இப் பத்தும்
ஸூபோதமுமாய் சர்வாதிகாரமுமாம் படி –
தழுவப்பாடி ஆட வல்லார் –
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி -மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ?
அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக் கற்க -அப்யஸிக்க வல்லவர்கள்-
பாரவசயத்தாலே விக்ருதராய் ஆட வல்லவர்கள் –
வைகுந்தம் ஏறுவரே –
காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற சம்சாரத்தை -இவ் வுலகத்தைக் கழித்து,
எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரம பதத்திலே புகப் பெறுவர்.
குழுவு மாடம் –
நெருங்கின மாடம்.
தென் குருகூர் –
ஆதலால், ஆழகிய திருநகரி.
————
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் -காழ்ப்பு ஏறின சம்சார துரிதம்
அற்றுப் பரம பதத்திலே புகப் பெறுவார்கள்,’ என்கிறார்.
உயிரினால் குறைஇல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே–4-8-11-
உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு –
அஸங்யேரான ஆத்மாக்கள் -பூர்ணமாய் -நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும்.
தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை –
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிற போது,
செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே அந்ய பரதைக்கு- வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவன வற்றை -சம்விதானம் -யெல்லாம் தன் சங்கல்பத்தாலே -நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே,
‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக போஜனாதிகள் -உணவு முதலானவைகளை
உட் கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே,-
ஸர்வஸ்ய ஜகத பாலவ் வத்சா பாலவ் பபூவது – எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான
அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே,
சர்வேஸ்வரனாயிருந்து வைத்து, அடியார்கள் ஸ்பர்சம் – சம்பந்தம் உள்ள பொருள்களால்
அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.
தடம் குருகூர்ச் சடகோபன் –
பிருந்தம் பிருந்தம் அயோத்யாயாம் –அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே,
பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோத்சவத்தைக் காண வேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தால் போலே,
இவர் ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக்
காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான
பரப்பை யுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.
செயிர் இல் சொல் இசை மாலை –
செயிர் – குற்றம். இல் – இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது,
ஆத்மாத்மீயங்கள்- ‘ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற
வார்த்தையில் புரையற்று -குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.
வயிரம் சேர் பிறப்பு அறுத்து –
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.
வைகுந்தம் நண்ணுவரே –
ஓர் உடம்பாய், ‘இது தானும் வேண்டா’ என்று கழிக்கும் படியான இவ் வுடம்பை விட்டு,
ச ஏகதா பவதி த்ரிதா பவதி -அந்த முத்தன் பல சரீரங்களை மேற் கொள்ளுகிறான்,’ என்கிறபடியே,
அவனுடைய சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்
அஃது அடியான தன் சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்-
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி – பல சரீரங்களை மேற் கொண்டு அடிமை செய்யலாம் படியான தேசத்திலே
போய்ப் புகப் பெறுவர். என்றது, ‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி.
(பல படிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல விதங்களாலும்’ )
அவன் விரும்பின படி இது என்று அறியாதே அன்றோ இவர் தாம் ‘வேண்டா’ என்கிறது-
(‘மங்க வொட்டு உன் மா மாயை’ என்ற திருப் பாசுரம் அநுசந்திக்கத் தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின திருமேனி’ என்பதும்)
———-
நிகமத்தில் -இத் திருவாய்மொழி அப்யசித்தாரை இது தானே அவன் திருவடிகளிலே சேர்க்கும்,’ என்கிறார்.
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-
புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.
நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.
கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.
பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.
திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் மநோ ரதத்தை எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று
அடியே பிடித்து வருகின்ற எண்ணம் மநோ ரதம் இதுவே அன்றோ?
செழுங்குருகூர்ச் சடகோபன் –
திரு வயோத்தியையில் மண்பாடு தானே ஸ்ரீராம பத்தியைப் பிறப்பிக்குமாறு போலே,
அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ப்ராவண்யத்துக்கு – ஈடுபாட்டிற்குக் காரணம்.
திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமின் –
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;
நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.
அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,
அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.
சாயுஜ்யம் பிரதிபன்னாயா -சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும்
என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும், ‘
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி – பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ,
அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே,
இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில்,
இவர் அருளிச் செய்த இத் திருவாய் மொழியைச் சொல்லவே-அனுசந்திக்கவே –
தன்னடையே சப்தாதிகளில் -ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து
அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய்மொழி தானே,’ என்க.
————–
இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பரமபதம் ஸூலபம் -எளிது,’ என்கிறார்.
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் –
அடிமை செய்து சர்வேஸ்வரனைக் கிட்டினவர்.
முறையிலே சர்வேஸ்வரனைப் பற்றினவர் ஆயிற்று இவர். என்றது,
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் –வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு
அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உபகரணங்களை -உறுப்புகளைக் கொண்டு-
அப்ராப்த – உலக விஷயங்களிலே போகாமல்,‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே,
வகுத்த விஷயத்துக்கே சேஷமாக்கி -உரியதாக்கிக்கொண்டு கிட்டினமையைத் தெரிவித்தபடி.
ஆட் கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தால் போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
ஆட்செய்கையாவது, அடிமை செய்கை.
மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், காயிக- சரீரத்தால் செய்தல் என
அவ்வடிமை தான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினை எம் பால் கடியும் நீதியாய்! நிற்சார்ந்து நின்று.’ பெரிய திருவந். 34’
என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமே யானால்.
(நெஞ்சு அழிந்தால் வாசிகமானதுதான் செய்யக்கூடுமோ?’ எனின், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட காரணங்களை யுடையவராகையாலே ‘மனம் முன்னே, வாக்குப் பின்னே’ என்னும் நியமம் இல்லை இவர்க்கு)
வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று;
அப்படியாமன்று இப் பாசுரம்; ‘முனியே நான்முகனே’ என்ற திருவாய் மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில்,
சர்வ ஸங்க்ரஹமான -எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலே யாகிலும் ஆக வேண்டும்;
இல்லையாகில்,
இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.
ஆனால்,தேவதாந்த்ர பரத்வ நிரசன பூர்வகமாக –மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று
மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை அருளிச் செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
ஆனால், பரத்வ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலே யாதல்,
அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச் செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின்,
வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்;
அவற்றிலும் ஆகப் பெற்றதில்லை.
ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
திருக் குருகூரதனுள் பரன் திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று,
பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப் பெரியவன் என்று இவர் அருளிச் செய்யக் கேட்டு,
கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேஸ்வரன் திரு அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத்
தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.
வண் குருகூர் நகரான் –
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு;
இப்போது, பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு,
இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
(திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை–மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி- தம்முடைய பெருமை அருளி / கலியன் -சீர்காழி)
மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக -பகவத் பிராப்தி பிரதிபந்தகமான -உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார் –
தம்முடைய அபிநிவேச அதிசயத்தாலே -ஆசையின் மிகுதியாலே அருளிச் செய்த பாடல் ஆயிரத்திலும்
இப் பத்தையும் வல்லார்.
சிலர் தாந்தராய் -ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது –
இரண்டும் இவர்கள் கையது.
மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது.
இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.
இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே,
‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘
மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே,
‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்கு மேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரம பதமும்
இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்