நிகமத்தில் -இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் போக்யமாமா –
இனிய பொருளாயிருக்குமாறு – போலே, சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் –
விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய்-
மின்னை வென்று, ஸ்யாமமான- நீல நிறம் பொருந்திய திருமேனிக்குப் பரபாகமான சேர்த்தியை யுடைய –
திரு யஜ்ஜோபவீதத்தை- பூணு நூலைத் தரித்த ஸ்ரீவாமனனாய்.
இப்போது இது சொல்லுகிறது,
மஹா பலி ஸ்ரவஸ்த்தையும் -எல்லாச் செல்வத்தையும் கொடுக்கும் படி –
வினீத- பணி வுள்ள வேஷத்தோடே போய்ப் புக்க படியைத் தெரிவிப்பதற்கு.
பகற்கண்டேன்” என்கிற தோற்றரவுக்குக் கிழக்கு வெளுக்கிறபடி.
தூது விடுகைக்குக் கூடச் சக்தன் அல்லாமை தோற்ற இரப்பாளனாய்,
இத் தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதல் எல்லாம் வடிவிலே தோற்ற நின்றபடி.
அகல் ஞாலம் கொண்டவன் கள்வன் அடி மேல்-
பூமிப் பரப்பு அடங்கலும் அவனுக்கு ஒன்றும் தொங்காதபடி அபஹரித்த மஹா வஞ்சகன் திருவடிகளிலே.
மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி.
அதாவது
மஹாபலி யினுடைய துர்மானத்தை -செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக் கொண்டாற்போலே,
பிரணய ரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி.
எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினால் போலே அன்று,
பிரணயிநி – காதலியுடைய மானம்.
அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே.
நிர்விஷயமாக -விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனை யன்றோ.
அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றே யன்றோ இது.
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு –
ஈழம் பிரம்பு கொண்டது’ என்னுமாறு போலே பண்ணே மிக்கிருத்தலின் ‘பண் கொள் ஆயிரம்’ என்கிறது.
இன் கொள் பாடல் வல்லார் –
இனிதான பாடல் வல்லார். இதற்குப் பலம் சொல்ல வேண்டா காணும்;
இதனையே இனிதாகச் சொல்ல அமையும்.
மின்னிடை மடவார்க்கு மதனர் –
காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு,
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க-அதிகரிக்க – வல்லவர்கள்.
இங்ஙன் அன்றாகில்,
பல நீ காட்டிப் படுப்பாயோ”-திருவாய். 6. 9 : 9.-,
புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ” -திருவாய். 6. 9 : 8.-என்று சொல்லுகிற இவர்,
பெண்களுக்கு இனியராவர் என்கிறாரன்றே.
ஆதலால், காமினிகளுக்குக் காமுகரைப் போலே அபிமத விஷயத்திற்கு இனியராவர் என்கிறார்.
திருவடியைச் சொல்லப் புக்குத் தாமரையைச் சொல்லா நின்ற தன்றோ.
தாவி வையம்கொண்ட தடம் தாமரைகட்கே” (6. 9 : 9.)
ஸர்வதா சத்ருசம் -எல்லாவகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக் கடவது.
அது போல’ என்றும், ‘அது தான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.
———–
நிகமத்தில் இத் திருவாய் மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்குப் பகவானுடைய
அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-
ஆய்ச்சியாகிய அன்னையால்-
ஷத்ரிய ஸ்த்ரீ -அரசர் குலத்தில் ஒரு தாயும் -இடைச்சி -ஆயர் குலத்தில் ஒரு தாயும் ஆகையாலே.
பொது வறுத்து -இடைச்சியாகிய -ஆய்ச்சியாகிய தாயாலே என்கிறார்.
தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.
தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடி” – பெரிய திருமொழி, 8. 3 : 5 -என்கிறபடியே –
இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது.
தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;
முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.
அன்று வெண்ணெய் வார்த்தையுள் –
ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்;
அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.
மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்;
இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அது போலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும் படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம்
உன் மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும் படி யன்றோ இருப்பது.
சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை –
தாயார் பொடியப் பொடி யுண்டு அழுகிற நிலையில்
பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே நிற்கிற நிலை, வல்லார் ஆடினால் போலே இருந்தபடி.
அன்றிக்கே,
அழுகையாகிற கூத்தை யுடைய மஹோபகாரகனை என்றுமாம்.
இது ஒன்றற்கு நிதர்சனமாக –எடுத்துக் காட்டாகச் சொல்லுகிறது,
போகு நம்பி” என்றும்,
கழகம் ஏறேல் நம்பீ” என்றும்
இவர்கள் சொன்ன போது ஒன்றிலும் விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப் போக மாட்டாதே
நின்ற நிலைக்குத் தியோதகம்.
அப்பன் தன்னை –
அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கின படி.
குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை –
பிரணய ரோஷத்தாலே
போகு நம்பி” என்றும்,
கழகம் ஏறேல் நம்பீ” என்றும்,
நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும்
சொன்னவை யெல்லாம் அந்தப் பிரணய ரோஷம் போன வாறே ஏத்தாய்விட்டது.
ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து –
ஆஸ்ரயித்தரோடு -தன்னை அடைந்தவர்களோடு உண்டான பாவ பந்தத்தை வெளியிட்ட ஒப்பற்ற பத்து.
இசையொடும் –
வாக்கு- சொல் மாத்திரத்தாலே.
நவில உரைப்பார்க்கு –
ஆதரத்தோடு சொல்லுவார்க்கு.
நல் குரவு இல்லை –
வறுமை இல்லை; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது,
தூது விட்டு, அவன் வரக் கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் பட வேண்டா என்றபடி.
சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; பகவானுடைய அநுபவத்தின் வறுமை -தாரித்ரயம் -இல்லை என்கிறது.
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய்.6. 7 : 1.- என்று
இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு முதலானவைகளும் இருப்பன.
உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-
என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக -ஐஸ்வர்யமாக -நினையார்களே.
சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே
அவன் தானே வந்து மேல் விழ நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.
அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில்
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற
பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.
————-
நிகமத்தில் -இத் திருவாய் மொழி வல்லார் நித்ய ஸூரிகளுக்கு நாள் தோறும்
கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11-
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை –
உங்கள் தலைகளிலே நான் காலை வைக்கக் கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து,
நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே
இவர்கள் கண் முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளை யுடையவனை
காண்மின்கள் –
இது ஓர் விஸ்மயம் -ஆச்சரியம் என்ன வேண்டிற்றுக் காணும் தலைகளிலே அடி படப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று.
குருகூர்ச் சடகோபன் சொன்ன –
இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை.
ஆயிரத்து ஆணை திரு விண்ணகர் இப் பத்தும் வல்லார் –
ஈஸ்வரனுடைய ஜகத் அனுசானத்தை -உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய் மொழி வல்லார்.
விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் –
விண்ணோர் உண்டு -நித்ய ஸூரிகள் -நித்ய ஸூரிகளுக்குக் காலம் என்னும் தத்வம் – ஒரு பொருள்
உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.
இதில் கோணை இல்லை –
ஒரு மிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரான -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு,
நித்ய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியை நினைத்து உவகையராம் நிலை யுள்ளது
முக்தர்க்கு ஆகையாலே, இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று
கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்ரீ தரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.- திருக்குறள்-
———–
நிகமத்தில் -கிருஷ்ணனுடைய சேஷ்டிதங்களை -செயல்களைப் பேசின இப் பத்தும் கற்றார்,
தம்மைப் போன்றே கிருஷ்ண பக்தராவர் என்கிறார்.
நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-
முழு ஏழ் உலகுக்கும் நாயகன் ஆய் –
சேதந அசேதநங்கள் எல்லாவற்றையும் நியமிக்கின்றவனாய். -நியாந்தாவாய் –
முழு ஏழ் உலகும் தன் வாயகம் புக வைத்து உமிழ்ந்து –
பிரளயாபத்தில் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து, உள்ளிருந்து நெருக்குப் படாமல்
வெளி நாடு காணப் புறப்பட விட்டு.
அவையாய் –
சர்வ அவஸ்தையிலும் -எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்கிற சொல்லிலே அடங்கும்படி
அவற்றைப் பிரகாரதயா சரீரமாக வுடையனாய்
அவை அல்லனுமாய் –
இப்படி இருக்கச் செய்தே அவற்றினுடைய தோஷங்கள் தீண்டப் படாதவனா யிருக்கின்ற. –
தத்கத தோஷர ஸம்ஸ்ப்ருஷ்டனான
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி ஹந்தாவான -கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
கீழில் திருவாய் மொழியிற் -நல்குரவும்”-சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும்,
இத் திருவாய் மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும்
அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறது” என்று சொல்லுவர்.
அன்றிக்கே,
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”–மஹாபாரதம் சபாபர். 38 : 23.
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,
தூய ஆயிரத்து இப் பத்தால் துவள் இன்றிப் பத்தர் ஆவர் –
இப் பத்தினையும் அப்யசித்தவர்கள் -கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர்.
இப் பத்தினை யுடைத்தாகையாலே தூய்மையை யுடைத்தான ஆயிரம் என்னுதல்;
அன்றிக்கே,
ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே
தூய்மையை யுடைத்தான இப்பத்து என்னுதல்.
துவள் இன்றியே பத்தர் ஆவர் –
துவள் – குற்றம். குற்றம் இல்லாமையாவது,
அவதாராந்தரங்களில் -வேறு அவதாரங்களில் போகாமல்
கிருஷ்ணனுடைய விருத்தாந்தத்திலே -செயல்களிலே -கால் தாழ்வர்.
———-
நிகமத்தில் இத் திருவாய் மொழியின் கருத்தை வியக்தமாக்கா நின்று -விளக்கிக் கூறுவதாய்க் -கொண்டு,
இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான அனுரூபமான -கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் –
மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் ஒரு படிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் ஈடுபட்டனவாய் இருக்கிறபடி.
இரங்கி” என்றும்,
மணி வண்ணவோ” என்றும்,
தன் கரங்கள் கூப்பித் தொழும்” என்றும் என்னும்
இம் மூன்றாலும் இவர்க்கு உண்டான ப்ராவண்ய அதிசயம் -ஈடுபாட்டின் மிகுதி யன்றோ
இத் திருவாய் மொழியில் சொல்லிற்று.
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதி யாயிருந்து வைத்துத் தொலை வில்லி மங்கலத்திலே
ஸூலபனா யிருந்தவனே சர்வ வித பந்துவாக -எல்லா விதமான உறவும் என்று
அறுதி யிட்டபடியே பற்றுவதும் செய்தவர்.
வண் குருகூரவர் சடகோபன் –
அவனே இவர்க்கு எல்லா வித உறவும் ஆனால் போன்று அவ் வூரிலுள்ளார் ஆழ்வாரையே
எல்லா உறவு முறையாகப் பற்றி யாயிற்று இருப்பது.
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்” என்றும்,
மாதாபிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா”
தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே”
என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள்.
முந்தை ஆயிரத்துள் –
பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே.
சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாய் அவதரித்தால் போல,
வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி என்னுதல்.
இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன செந் தமிழ் பத்தும் வல்லார் திருமாலுக்கு அடிமை செய்வார் –
இதனைக் கற்க வல்லவர்கள் திருமகள் கேள்வனுக்கு அடிமை செய்யப் பெறுவர்.
செந்தமிழ் –
செவ்விய தமிழ்; பசுந்தமிழ்; அர்த்தத்தைத் தெளிவாகக் காட்டுவது.
திருமாலுக்கு அடிமை செய்வார்-
பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே,
விசிஷ்ட வேஷத்தில் சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் –
————
நிகமத்தில் இத் திருவாய் மொழியினை வல்லவர்கள் நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற
இன்பத்தினை -போகத்தை புஜிக்க பெறுவர் -அநுபவிப்பார்கள் என்கிறார்.
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-
கட்டு எழில் சோலை –
பரிமளத்தை யுடைத்தான நல்ல சோலை.
கடி என்ற சொல், ‘கட்டு’ என்று வந்தது; வலித்தல் விகாரம். கடி – வாசனை.
நல் வேங்கடம் –
சேஷ சேஷிகள் இருவர்க்கும் உத்தேஸ்யமான திருமலை.
வாணன் –
நிர்வாஹகன். திருவேங்கட முடையானை யாயிற்றுக் கவி பாடிற்று.
திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாக –திருவாய்.- 3. 9 : 1.
என்னாவில் இன் கவி யான் ஒரு வர்க்கும் கொடுக்கிலேன்” என்று இருக்கும் அவர் அன்றோ.
கட்டு எழில் தென் குருகூர்-
அரணை யுடைய திருநகரி.
கட்டு-அரண். -அரணையுடைய திரு நகரி –
கட்டு எழில் ஆயிரம் –
அழகிய தொடைகளை யுடைத்தா யிருக்கை.
கட்டு-தொடை.
கட்டு எழில் வானவர் –
கட்டடங்க நல்லவரான நித்ய ஸூரிகள்.
அன்றிக்கே,
‘கட்டு’ என்பது, போகத்திற்கு விசேஷணமாகவுமாம். என்றது,
சம்சாரத்தில் போகங்கள் கர்மம் காரணமாக வருகையாலே அல்பமாய் நிலை யற்றவையாய் இருக்கும் அன்றோ.
இது, ஸ்வரூபத்துக்குத் தக்கது -அனுரூபம் -ஆகையாலே சம்ருத்தமாய் -நிறைந்ததாய் நித்யமாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
நான்கு அடிகளிலுமுள்ள ‘கட்டு’ என்ற சொல்லிற்கு,
சாகல்ய -முழுதும் என்றுமாம்.
நீர்மைக்கு எல்லையான திருமலை ஆஸ்ரயணீய -பற்றுதற்குரிய ஸ்தலம்;
மேன்மைக்கு எல்லையான பரம பதம் -அனுபவ அநுபவத்திற்குரிய ஸ்தானம் .
ஒன்றி ஆக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.
———–
நிகமத்தில் இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு திரு நாடு என்கிறார்.
வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-
வைத்த மா நிதி யாம் –
இவள் தனி வழி போகைக்கும், தாயாரை விடுகைக்கும் காரணம் இருக்கிற படி.
தனம் -செல்வம் சஞ்சிதமாக -சேர்த்து வைத்ததாக இருக்க,
எடுத்து அழித்துக் கெடுத்து ஜீவியாமல் ஆறி இருப்பார் இலரே.
வைத்த மா நிதி –
எய்ப்பினில் வைப்பினைக் காசினை மணியை”-பெரிய திருமொழி. 7. 10 : 4.- என்கிறபடியே,
தளர்ந்தார் தாவளமாய்,
எய்ப்பினில் வைப்பாய்,
‘உண்டு’ என்ன, உயிர் நிற்கும் படியாய்,
உடையவன் காலிலே எல்லாரும் விழும் படியாய்,
உடையவனுக்கு அற விட்டு ஜீவிக்கலாய்,
அற விட்டு ஜீவித்தான்’ என்று ஏசாத படியாய்,
அவன் தனக்கு பெரு மதிப்பைக் கொடுப்பதுமாய்,
உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாத படியாய்,
எல்லாம் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
இந்த விதமான குணங்களை யுடைத்தா யிருக்கையைப் பற்ற ‘நிதி’ என்கிறது.
மா நிதி என்றது,
மஹார்க்கமான -அழியாத நிதி என்றபடியாய்,
அத்தால்,
தன்னைக் கொண்டே எல்லாம் கொள்ளா நின்றால் தனக்கு ஒரு குறை அற்று இருக்கை.
அல்லாத நிதி மாண்டு நிற்குமே.
மதுசூதனையே அவற்றி –
இந்த நிதியைக் காத்து ஊட்டுவதும் தானே என்கிறது.
உத்தேசியமானது தானே விரோதியையும் போக்கி அநுபவிப்பிக்க வற்றாயிருக்கை.
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
“பங்கதித்த: உ ஜடில: பரத: த்வாம் ப்ரதீக்ஷதே
பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ்ச குஸலம் க்ருஹே”யுத். 127 : 5.
வீட்டில் எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்” என்னுமாறு போலே,
ஸ்ரீ பரதாழ்வன் பெருமாள் பக்கலிலே நெஞ்சினை வைக்க வைக்க, அதனைக் கண்டு,
அவர் வரவு அணித்து’ என்று திருவயோத்தியை தளிரும் முறியுமானால் போலே,
விரஹத்தை நினைக்க ஆற்றலில்லாத படி அவன் பக்கலிலே ஏகாக்ர சித்த ராகையாலே பிறந்த தோற்றத்தாலே,
திருநகரியும் தளிரும் முறிவுமானபடி.
இத் தலையிலே இத்தனை விரைவு உண்டானால் அத் தலையால் வருகிற பலத்துக்குக் கண்ணழிவு உண்டோ?
அபிவ்ருக்ஷா:” அயோத். 59 : 5.
“அகால பலிநோ வ்ருக்ஷா:” யுத். 127, 19.
மரங்களும் உலர்ந்தன” என்கை தவிர்ந்து
காலமல்லாத காலத்தும் மரங்கள் பலத்தைக் கொடுத்தன” என்னும்படி யாயிற்று.
பத்து நூற்றுள் இப் பத்து –
கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்து.
அவன் சேர் திருக் கோளூர்க்கே சித்தம் வைத்து –
அவன் பொருந்தி வாழ்கின்ற திருக் கோளூர்க்கே நெஞ்சை வைத்து.
உரைப்பார் –
சொல்லுவார்.
திகழ் பொன்னுலகு ஆள்வாரே –
ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்யாநுபவம் பண்ணலாம் நிலத்திலே புகப் பெறுவர்.
தனி வழி போகாதே, அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-
———
நிகமத்தில் இத் திருவாய்மொழியில் ஆழ்வாருடைய ஆர்த்தியை -துன்பத்தை –
அனுசந்திப்பார் -நினைத்தவர்கள் தாமும் உருகுவர் என்கிறார்.
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே–6-8-11-
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு –
சுரம் ஏறுவாரைப்போலே, பக்தி பரவசரா யிருப்பார்க்கு அடைவு படப்
பாசுர மிட்டுச் சொல்லப் போகா தன்றோ;
இவ் வளவிலும் அவன் நினைவு மாறாமையாலே, சொற்கள் நேர் பட்ட படி;
நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டு.
மது சூத பிரான் அடி மேல் –
விரோதி நிரசனமே -விரோதிகளை அழித்தலையே நிரூபகமாக வுடையவன் திருவடிகளிலே.
நாற்றம் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
ரஹஸ்ய ஸ்தலத்தில் – தனி இடத்திலே ஆள் விடுகையினாலே வரவு தப்பாது’ என்று இவர் தரித்தவாறே,
சோலைகளும் நித்ய வசந்தமான படி.
பரிமள உத்தரமான -வாசனையை மிகுதியாகக் கொண்ட பூவை யுடைத்தான பொழில்கள் சூழ்ந்த திரு நகரி.
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் –
மன பூர்வ வாக் உத்தர -மனம் முன்னே வார்த்தை பின்னே” என்கிற அடைவால் சொன்னவை யல்ல. என்றது,
இவர் கலங்கிச் சொல்லச் செய்தேயும், பகவானுடைய அவதாரம் போலே தோன்றின என்றபடி.
தோற்றம் –
ஆவிர்பாவம் -தோன்றுதல்.
மந்திரங்களை ருஷிகள் காணுமாறு போலே. சொல் பணி செய் ஆயிரம்” திருவாய். 1. 10 : 11.
என்று ஆழ்வாருடைய திரு வாக்கிலே புக்கு
அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்ய வேணும்’ என்று அச் சொற்கள் தாம்
என்னைக் கொள், என்னைக் கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி.
வைதிகர் அல்லாதாருடைய வாக்கில் புக்க தோஷம் தீர்ந்தது இப்போதே யன்றோ சொற்களுக்கு.
போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” திருப்பாவை, 5.-என்கிறபடியே,
ஆழ்வார் திரு வாக்கிலே பிறக்கையாலே முன்புள்ள தோஷமும் பின்புள்ள தோஷமும் தீர்ந்தது காணும் சொற்களுக்கு.
ஊற்றின் கண் நுண் மணல் போல் நீராய் உருகா நிற்பர் –
இவை அப்யஸிக்க -கற்கப் படாதன என்கிறார்.
அதாவது,
என் துயர ஒலியைக் காட்டி நாட்டினை அடைய அழித்தேன் என்கிறார்.
இவர் கிலேசம் அவன் முகம் காட்டத் தீரும்;
இப் பாசுரம் நித்ய மாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;
ஊற்றிடத்து உண்டான நுண்ணிய மணல் போலே சிதில –
உருகுகின்ற அந்தக் கரணராய்- மனத்தை யுடையராய் நீராய் உருகா நிற்பர்.
இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில்,
பகவானுடைய குணங் களிலே ஈடுபட்டவர்கள்-குண வித்தகர் – பாசுரம் கேட்டு அழிகையும்
பேற்றிலே சேர்ந்த தாகையாலே இது தானே பலம் என்கிறது.
————
நிகமத்தில் இப் பத்தும் கற்றவர்கள் சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான கிங்கரர் -தொண்டராவர் என்கிறார்.
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு-
சரவண மனன நிதித்யாசனங்கள் -கேள்வி விமரிசம் பாவனை இவைகளால் -பரிச்சேதிக்க –
அளவிட முடியாத ஸ்ரீ யபதிக்கு -திருமகள் கேள்வனுக்கு.
“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய
ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய:
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிஷதம்.
இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்” என்கிறபடியே
கேவலம் கேள்வி முதலானவைகட்கு அவிஷயமாக -அப்பாற்பட்டவனா யிருப்பான்;
அல்லாத போது இவை தாம் அநுபவமாய் அந்வயிக்கும் – சேரும் அன்றோ.
திருமாலுக்கு
இதற்கு அடி, திருமகள் கேள்வனாயிருத்தலாதலின் ‘திருமாலுக்கு’ என்கிறார்.
அதுவன்றோ சர்வாதிக வஸ்துக்கு அடையாளம்.
திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
திருமகள் கேள்வனான சர்வேஸ்வரனுக்கே அநந்யார்ஹ சேஷபூதரான – ஆழ்வார்,
சம்சாரத்தின் ஸ்வபாவ அனுசந்தானத்தின் – தன்மையை நினைத்த கொடுமையாலும்,
பகவத் விஷயத்திலே அவகாஹித்த -மூழ்கின கனத்தாலும், பெருவிடாயன் மடுவிலே விழுமாறு போலே,
சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று.
இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.
தேக ஆத்ம அபிமானியாம் போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;
தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;
தன்னைப் பகவானுக்கு சேஷ பூதனாக -அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று
ஐஸ்வர்யாதிகளை -செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;
சேஷத்வமே புருஷார்த்தம் -‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை
ததீய சேஷத்வ பர்யந்தமாக-அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.
பயிலும் சுடர் ஒளி” என்ற திருவாய் மொழிக்குப் பின்பு ததீய சேஷத்வ பர்யந்தம் -அடியார்கட்கு
அடிமையாக இருத்தல் அளவாக ஆயிற்று,
இவருடைய அஹம் என்ற சொல்லுக்குப் பொருள் இருப்பது.
இவ்வளவு வருகை அன்றோ அநந்யார்ஹ சேஷத்வமாவது.
மற்றுமோர் தெய்வம் உளதென் றிருப்பாரோடு
உற்றிலேன்; உற்றதும் உன்னடியார்க் கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ண புரத்துறை யம்மானே!-
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் –
பகவானுடைய வை லக்ஷண்யத்தையும்
சம்சாரத்தினுடைய தோஷத்தையும்
விசதமாக -தெளிவாகச் சொன்ன இப் பத்தும்.
உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-
சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விட மாட்டாதவர் களாதலின்
உரிய தொண்டர்’ என்கிறார்.
குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” -ஸ்ரீ வசன பூஷணம்,
————-
நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், பரம பதத்திலே சென்று தாஸ்யத்தில்
அபி ஷிக்தராய் -அடிமையிலே முடி சூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று-
உங்கள் உத்தேஸ்யம் கண்டீர் கோளே,
இத் திருவடி களைப் பற்றி வாழ்ந்து கிருதக்கிருத்யராய்ப் போங்கோள் என்று,
அருள் கொடுக்கும் படிக் கேழ் இல்லாப் பெருமானை –
ஆஸ்ரிதர் அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.
மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.
பழனம் குருகூர்ச் சடகோபன் –
நல்ல நீர் நிலங்களை யுடைய திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற சம்சார விரோதத்தை முடிக்கையிலே
திரு வுள்ளத்தாலே உத்சாஹம் கொண்டு அருளிச் செய்த ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு
இப் பத்தும் திருமலைக்குச் சொல்லிற்றின.
கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- பால. 53. 9.
ஸ்வாமி! லக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காம தேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்;
இந்தக் காம தேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;
தர்ம சாஸ்த்ரப்படி ரத்தினத்தைக் கொள்ளுகிறவன் அரசன்” என்கிறபடியே.
பிடித்தார் பிடித்தார் –
பிடித்தவர்களைப் பிடித்தவர்கள்; பற்றினாரைப் பற்றினார்.
வீற்றிருந்து –
“ஸஸ்வராட்பவதி” சாந். 7 : 25.-
அந்த முக்தன் ஸ்வதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்” என்கிறபடியே,
இருவர்க்கும் ஒக்கு மன்றோ வீற்றிக்கை.
ஸ்வ வ்யதிரிக்தங்களையும் -தன்னினின்றும் வேறு பட்ட எல்லாப் பொருள்களையும் சேஷமாக வுடையனாகையாலே
வந்த ஆனந்தத்தை யுடையனா யிருப்பான் அவன்;
ஏஷ ஹ்யேவா நந்தயாதி – இவனே யன்றோ ஆனந்திப்பிக்கப் படுகிறான்” என்கிறபடியே,
அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தத்தை யடைகின்றவனாக இருப்பான் இவன்.
பெரிய வானுள் நிலாவுவரே –
மஹாகம்” என்றும், “பரமா காசம்” என்றும் சொல்லப் படுகிற பரம பதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று,
மேல் வரும் அநுபவம் ஒழியப் ப்ராப்திக்கு -பேற்றுக்கு-பிரபத்தி – சரணம் புக வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த ப்ரபத்தியே -சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப் பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.
நற் கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே,
இவரை நினைத்து இப் பத்துங் கற்றார் பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீ விபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்கு மத்தனையே வேண்டுவது.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply