இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், நிரவதிக -தனக்கு மேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் அவன் திருவடிக் கீழே புகப் பெறுவர் என்கிறார்.
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-
கார் வண்ணன் –
காள மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவையுடையவன்.
கண்ண பிரான் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ் வடிவை என்னை அநுபவிப்பித்தவன்.
கமலத் தடம் கண்ணன் தன்னை –
உத்ப்புல்ல புண்டரீக -மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருக் கண்களை யுடையவன்.
அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி.
கீழே “நிறமுடை நால் தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம் செய்த வடிவைக் கூறியபடி.
ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சின போது, ஸ்ரமஹரமான வடிவைக் காட்டித்
தன்னை முழுக்கக் கொடுத்துத் திருக் கண்களாலே குளிர நோக்கி நின்ற நிலையைத் தெரிவித்தவாறு.
ஏர் வளம் ஒண் கழனிக் குருகூர்-
சம்ருத்தமான -நிறைந்த ஏர்களை யுடையதாய் அழகியதான வயலோடே கூடின திருநகரி.
வளம்’ என்று மிகுதிக்கும் அழகுக்கும் பேர். இங்கு மிகுதியைச் சொல்லுகிறது.
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் –
சீரியதான பிரகாரத்தை யுடைய அழகிய தமிழ் என்னுதல்;
கவிக்கு உறுப்பான சீரையும் வண்ணத்தை யுமுடைய அழகிய தமிழ் என்னுதல்.
சீர்’ என்பது, செய்யுளில் ஏக தேசம். வண்ணம்-ஓசை.
ஆர் வண்ணத்தால்-
பூர்ணமாக -நிறைவாக என்னுதல்.
ஆர்தல்-பருகுதலாய், தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே, பருகுவாரைப் போலே என்னுதல். என்றது,
அபி நிவிஷ்டராய் -மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.
பொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் –
விஸ்ரம்ப- நம்பிக்கை மாத்திரமே யாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.
———
நிகமத்தில் இத் திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,
எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான
மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே-
கலௌ கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய கிருதே யுகே
யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே யஸ்ய ந அச்யுத:”
எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலி யுகம் கிருத யுகமாக இருக்கிறது;
எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருத யுகம் கலி யுகம் ஆகிறது”–என்கிறபடியே,
கலி தோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும்.
நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது.
மலியும் சுடர் ஒளி மூர்த்தி-
சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது.
மலிதல்-நிறைதலாய், மிக்க தேஜஸ்ஸாலே -ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி.
இதனால், அருள் செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி.
மாயம் பிரான் கண்ணன் தன்னை-
ஆச்சரியமான குணங்களையும் சேஷ்டிதங்களையும் -செயல்களையுமுடைய கண்ணனை
ஆயிற்றுக் கவி பாடிற்று.
கலி வயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-
கலி என்று, மிடுக்குக்கும் ஆரவாரத்துக்கும் பெயர்.
இவற்றால், பூ சாரத்தைச் சொல்லுதல்;
நடுவது, அறுப்பது, உழுவதாகச் செல்லும் ஆரவாரத்தைச் சொல்லுதல்.
இப்படிப்பட்ட வயல்களை யுடைத்தாயிருந்துள்ள திருநகரியில் ஆழ்வார் அருளிச் செய்த.
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்-
பிரசித்தமான புகழை யுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும்,
தேவதாந்த்ரங்கள் -வேறு தேவர்கள் பக்கல் பரத்வ சங்கை பண்ணுதல்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல்,
அபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல்,
ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷித்தல் வேறு பிரயோஜனங்களை விரும்புதல்
ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.
(இத் திருவாய்மொழியிலுள்ள “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”,
“தொழுது தொழுது நின்று ஆர்த்தும்”, “ஊழிபெயர்த்திடும் கொன்றே”,
“சிந்தையைச் செந்நிறுத்தியே” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து
‘வேறு தேவர்கள் பக்கல்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.)
(கறுத்த மனம் வேண்டா” என்றதனால், பிரணவத்தின் அர்த்தமான அநந்யார்ஹ சேஷத்வத்தையும்,
அவர்களை, “சென்று தொழுது உய்ம்மின்” என்றதனால், நமஸ் ஸப்தார்த்தமான ததீய சேஷத்வத்தையும்,
“சிந்தையைச் செந்நிறுத்தி” என்றதனால், நாராயண பத சித்தமான ஐச்வர்ய கைவல்ய
வியாவிருத்தமான புருஷார்த்தத்தையும் சொல்லுகையாலே,
‘மாசு அறுக்கும்’ என்ற இடத்தில், மூன்று பதங்களின் பொருள்களும் சொல்லப் படுகின்றன)
——–
நிகமத்தில் இந்தத் திருவாய் மொழி அப்யஸிக்க -கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே
அவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –
எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-
இரைக்கும் கருங்கடல் வண்ணன் –
அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில்
“சாபம் ஆநய ஸௌமித்ரே சராந் ச ஆசீவிஷோபமாந் சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து பிலவங்கமா:” –யுத். 21 : 22.
சாபமாநாய ‘வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்ற போது
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தால் போலே யாயிற்று,
இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச் செய்தார்.
வண்ணன்-
ஸ்வபாவத்தை யுடையவன் என்றபடி.
இரைக்கும் கருங்கடல் வண்ணன் –
ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவையுடையவன்.
மடல் ஊர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவைச் சொன்னபடி.
வண்ணன் – வடிவை யுடையவன்.
கண்ணபிரான் தன்னை –
அவ்வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை.
வடிவழகு இது. ஸ்வாபாம் இது. இங்ஙனம் இருக்க, நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ?
விரைக் கொள் பொழில் குருகூர் –
இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’ என்று ஊரானது
உண்டான பரிமளத்தால் நிறைவு பெற்றபடி. -சஞ்சாத பரிமளமான படி –
நிரைக் கொள் அந்தாதி –
இவர் முன்னடி தோற்றாதே மடல் ஊரச் செய்தேயும்,
பிரபந்தமானது, எழுத்தும் அசையும் சொல்லும் பொருளும் அடியும் தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும் சேர விழுந்தபடி.
இவர் முன்னடி தோற்றாதபடி கலங்கிச் சொல்லச் செய்தேயும் பகவானுடைய பிரசாதம் -திருவருள் காரணமாகப் பிறந்த பிரபந்தம் ஆகையாலே,
லக்ஷணங்கள் ஒரு சேர விழத் தட்டு இல்லையே அன்றோ.
சோக ஸ்லோஹத்வம் ஆகத -“ஸ்லோகத்திற்குரிய எல்லா லக்ஷணங்களும் அமைந்த ஸ்ரீராமாயணமானது
சோகத்திற்குப் பின்பு சொல்லப்பட்ட காரணத்தால் சோக வேகத்தால் சொல்லியதாம்” என்கிறபடியே,
சோக வேகத்தால் சொல்லச் செய்தேயும் பிரஹ்மாவினுடைய திருவருளால் எல்லா லக்ஷணங்களோடே கூடி இருந்தால் போலே.
உரைக்க வல்லார்க்கு –
மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.
தம் ஊர் எல்லாம் வைகுந்தமாகும் –
அவர்களுக்கு உத்தேசிய பூமி பரம பதமாம்.
அன்றிக்கே,
நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,
இவர்கள் இருந்த இடம் தானே பரம பதமாம் என்னுதல்.
அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.
இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;
இப் பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால்,
இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;
இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;
இங்ஙன் அன்றாகில், புருஷோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.
————-
நிகமத்தில் இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார்.
முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –
அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,
அவன் உறங்குகின்றிலன்; நம்மை ரக்ஷண சிந்தை – காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
ஸ்ரீரங்கதாமநி. ஆர்த்ரயந் (த்வம்) விச்வத்ராண விமர்சன் ஸ்கலி தயா நித்ராஸி ஜாகர்யயா–ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம்-75.
நித்ராஸி ஜாகர்யயா– உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத்
திருக்கண் வளர்ந்தருளுகின்றீர்” என்கிறபடியே,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாமல் நம்முடைய ரக்ஷண சிந்தனை செய்கிறானித்தனை யல்லது,
மறந்து உறங்குகின்றானல்லன் என்பார் ‘உறங்குவான் போல்’ என்கிறார்.
மேல் உஜ்ஜீவிப்பிக்க இருக்கிற சர்வேஸ்வரன், இவ்வளவிலே தன் படிகளை நினைப்பித்தான்.
சிறந்த பொழில் குருகூர் –
சர்வேஸ்வரன் ரக்ஷண சிந்தை செய்து கொண்டு கண் வளர்ந்தருளுகிற படியை அனுசந்தித்து -நினைத்து
இவர் தரித்தவாறே ஊரும் தரித்தது, ஆதலின், ‘சிறந்த பொழில் குருகூர்’ என்கிறது.
பிரிந்த விரஹ தாபத்தால் அபி வ்ருஷா -மரங்களும் ஸ்ரீ ராமபிரானுடைய பிரிவினாலே உண்டான சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி,
மலர் அரும்பு இவைகளோடு கருகி உலர்ந்தன” என்றும்,
ஸ்ரீ ராமபிரானுடைய வரவு அணித்தாயினவாறே அகால பலிநோ வ்ருஷா -வழியில் உள்ள எல்லா மரங்களும்
காலமல்லாத காலத்திலும் பழங்களையுடையனவாகவும் தேன்களைச் சிந்துகின்றனவாகவும் ஆயின” என்றும்
சொல்லலாம்படி அன்றோ இருப்பது.
விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா: ஸ்புஷ்பாங்குர கோரகா:-அயோத். 59 : 4.
அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந் அயோத்யாம் ப்ரதி கச்சத:” யுத். 127 : 19.
அரி இனம் சென்ற சென்ற அடவி களனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனி காய் துன்றி
விரி புனன் செழிந்தேன் மிக்கு விளங்கென விளம்பு கென்றான்
புரியுமா தவனு மஃதே யாகெனப் புகன்றிட்டானால்.-என்பது, கம்பராமாயணம்.
நிறம் கிளர்ந்த அந்தாதி –
பண்களிலே கிளர்ந்த அந்தாதி.
இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-
இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவு படுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள்
புகும் தேசம் பரமபதம் ஆகையாலே ‘வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப் பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில்,
பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்களுடைய- மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்கு,
பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்-
தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய-பிரவணரானவருடைய – பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே
ஈடுபட்டு பிரகிருதி விஸ்லேஷம் – இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள்,
அவர்களுக்கு உத்தேஸ்யமான தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார்.
நீள் இரவாய் நீண்டதால்”,
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான்” என்று
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத சூரியனும்
அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப்பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.
—————
நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே வைஷ்ணவர்கள் என்கிறார்.
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-
அறிவு அரிய பிரானை-
நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம்,-ஸ்வ யத்ன சாத்யம் – தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப்படுவது அன்றிக்கே
ஒழியப் பெற்றோமே முன்னம்.
வஸ்து தான் உண்டானால் நினைத்த போது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.
இவர்கள் பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில், ஆக வேணுமே அன்றோ,
மீட்கலாம்’ என்று இருந்த போதே, ‘தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.
ஆழி அம் கையனையே அலற்றி –
“சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.
அவனைக் கை விடாமல் அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;
இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.
நறிய நன் மலர் நாடி-
பரிமளத்தை யுடைத்தாய் நன்றாயிருக்கிற மலர்களைத் தேடிக்கொண்டு,
அடிசூட்டலாகும் அந்தாமம்”-திருவாய்.-2. 4 : 11. என்னக் கடவதன்றோ.
பாட்டுகள் மாலையாய்-இருக்கும் என்பதற்கு பிரமாணம் –
நன் குருகூர்ச் சடகோபன்-
இந்தக் காதல் உண்டாகைக்கு அடி அவ் வூரில் பிறப்பாயிற்று.
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்-
ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, நம்பியுடைய அழகினை மெய் காட்டுக் கொண்ட இப் பத்தும் திருக்குறுங்குடி விஷயம்.
அன்றிக்கே,
திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான
நம்பியுடைய அழகைத் திரளச் சொன்ன பத்தும் என்னுதல்.
திவ்ய லாஞ்சனங்களைக் கொண்டு சொன்ன பத்து என்னவுமாம் –
அறியக் கற்று வல்லார்-
இதனைக் கற்று அறிய வல்லவர்.
அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய ஸூரிகள் நடுவே இருக்கிற
இருப்பைக் காட்டிலும், திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை
அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உத்கர்ஷம் -உயர்வு; அந்தக் குணாதிக்யம் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.
ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் –
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி
ஆவர்கள் உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.
————-
நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே–5-6-11-
கூந்தல் மலர் மங்கைக்கும் –
சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கும் ஹேது பூதையாய்-காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார்.
அன்றிக்கே,
நித்யைவ ஏஷா ஜகந்மாதா விஷ்ணோ : ஸ்ரீ : அநபாயிநீ
யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17.
விஷ்ணோ ஸ்ரீ -சர்வேஸ்வரனுடைய செல்வமாக இருப்பவள்” என்கிறபடியே,
சர்வேஸ்வரனுடைய செல்வமாயிருக்கிற பெரிய பிராட்டியார் என்னுதல்.
மண் மடந்தைக்கும் –
அந்தச் செல்வத்திற்கு விளை பூமியாயிருக்கிற ஸ்ரீ பூமிப்பிராட்டி.
குல ஆயர் கொழுந்துக்கும் –
அதனுடைய பல உருவமாயிருக்கும் நப்பின்னைப் பிராட்டி.
கேள்வன் தன்னை –
ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி -உலகங்கட்குத் தலைவனாகிய இறைவன் ஸ்ரீ லஷ்மியோடு கூடி எழுந்தருளி யுள்ளான்”
என்கிறபடியே, இவர்களுக்குப் பதியாயுள்ளவனை.
இதனால், ஓர் அவதார மாத்ரமன்றிக்கே, உபய விபூதி நாதனான பூர்ண விஷயத்திலே
அநுகரிக்கிறார் என்று தோற்றி இருக்கிறபடி.
வாய்ந்த –
வாய்க்கையாவது, கிட்டுகை. அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது.
குற்றேவல் செய்து-
ஆழ்வார் அவன் திருவடிகளில் அந்தரங்க அடிமைகள் செய்தபடியாயிற்று இவை தாம். என்றது,
வாசிகமாக அடிமை செய்தபடி யாயிற்று என்றபடி.
அநுகாரம் அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்?
கொள்ளுகிறவன் கருத்தாலே. அவன் உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம்.
நம்முடைய விஸ்லேஷத்தில் -பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’
என்று திருவுள்ளம் போர உகக்கும்,
அது அடிமையாய்த் தலைக் கட்டுமித்தனை.
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர்பத்தும் வல்லார் –
ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இப்பத்தை அப்யஸிக்க – கற்க வல்லவர்கள்.
உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய் –
இந்த உலகத்தில் எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய்.
அன்றிக்கே.
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்”
என்கிறபடியே, உலகத்திலே முகந்தெழுபானையான நிரவதிக எல்லையில்லாத -சம்பத்தை -செல்வத்தை
யுடையராய்க் கொண்டு என்னுதல்.
(ஏந்து” என்றதற்கு, இரண்டு பொருள் அருளிச் செய்கின்றார். ஒன்று, எல்லாராலும் கொண்டாடப்படுதல்.
மற்றொன்று, முகந்து எழுபானை போன்று மேலும் மேலும் பெருகிவருதல் என்பது
முகந்தெழுபானை – தண்ணீரை முகந்துகொண்டு மேலே எழுகின்ற ஏற்றப் பானை
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக் கோட்டம்மா!
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.-பெருமாள் திருமொழி.)
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே –
ஸ்ரீமத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள்.
ஸ்ரீ யபதி- திருமால் அடியாரை ஆராதிக்கையாவது,
இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியகரர் -பிரியமுள்ளவராக ஆனால் போலே,
இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி –
கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது,
இவர் அநுகரித்த இப் பாசுரங்களைச் சொல்லுகை.
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”-திருவாய்மொழி, 9. 4 : 9. என்னக் கடவது இறே-
———–
நிகமத்தில் -இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –
கற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர் என்கிறார்.
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-
தெய்வ நாயகன் –
சர்வேஸ்வரன்.
நாரணன் –
தன்னுடைமை இழக்க விடாத வத்சலன்.
திரிவிக்கிரமன் –
தன்னை இரந்தார்க்குத் தன்னை அழிய மாறியும் காரியத்தைச் செய்து தலைக் கட்டிக் கொடுக்குமவன்.
அடி இணை மிசை –
திருவடிகளிலே.
கொய் கொள் பூம்பொழில் –
நித்ய வசந்தமான சோலை என்றது, எப்போதும் கொய்கைக்குப் பக்குவமாயிருக்கை.
குருகூர்ச் சடகோபன் –
ஸ்ரீ கீதையில் வ்யாவ்ருத்தி -வேறுபாடு.
செய்த ஆயிரம் –
அர்த்தம் வேதார்த்தமே யாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது.
பரத்துவம் போலே வேதம்,
அவதாரம் போலே இதிகாச புராணங்கள்,
அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி. செய்த ஆயிரம் இறே
அன்றிக்கே,
தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளை யானால் போன்று,
வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல்.
(செய்யா மொழியாகிய வேதத்தைக் காட்டிலும் இது உயர்வுக்குக் காரணமாயிருக்கும்)
ஆயிரம் திருவாய் மொழியினுள்ளே ஸ்ரமஹரமான சிரீவர மங்கையை மேவின பத்தையும் –
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே – செய்யா
வதற்குரியர் அந்தணரே யாராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்– திருவள்ளுவ மாலை, 23.
உடன் பாட வல்லார் –
அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது,
இவருடைய உபாய சூந்யதையை அனுசந்தித்து -நினைத்துப் பாட வல்லார் என்றபடி.
வைகலும் வானோர்க்கு ஆராவமுதே –
கால தத்வம் உள்ளதனையும் -காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்
நித்ய ஸூரிகளுக்கு இனிய பொருளாகப் பெறுவர்.
தேவ ஜாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாப் போலே,
நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
பிரபாகந்தர நிரபேஷமான -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய அவர்கள்,
ப்ரபாகாந்தர -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
ப்ரபாகாந்தர நிரபேஷராய் -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள்
நித்ய ஸூரிகளுக்கு போக்யராவார் -அமுதாவர்.
———-
இப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர் என்கிறார்.
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் –
உழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளை யுடைய பூதனை முலை வழியே
அவளுடைய உயிரை உண்டான்.
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் –
விரோதி நிரசன சீலனுடைய -விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தை யுடைய கண்ண பிரானது திருவடிகளையே,
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் -விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும்
உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார். விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார்
அவையே’ என அவதாரணம் -ஏகாரம் கொடுத்து அருளிச் செய்கிறார்
கொண்ட-
பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்.
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் –
திருக் குழல் ஓசையில் காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவு படும் படியாக இருக்கிற
ஒப்பற்ற ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும்,
மரங்கள் நின்று மது தாரைகள் பாய்தல் அன்றோ அங்கு,
மரங்களும் இரங்கும் வகை இங்கு;
இனி, நாம் இரங்குகிற இது தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு; ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது.
கருங்கண் தோகை மயிற் பீலி யணிந்து கட்டி நன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவின் ஆயர் பெருமான் அவனொருவன் குழலூதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.-பெரியாழ்வார் திருமொழி.
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவுமால்”-திருவாய்- 6, 5 : 9.
மழலை தீர வல்லார் –
இளமை தீர வல்லார். என்றது, ‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே,
இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார் என்றபடி.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை.
மான் ஏய் நோக்கியர்க்குக் காமர் –
மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில்,
தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும் போது
மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,
மேல் கொடிதான நரகம்” என்னா நிற்கச் செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே,
இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்.
இங்ஙன் அன்றாகில் வஞ்சனை யுள்ளவர் வார்த்தையாமே அன்றோ.
இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே.
பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக் கட்டி இருப்பதும்.
அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில்,
முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.
திருஷ்டாந்தம் –உவமை புக்க இடத்தே —தார்ஷாட்ந்திகம்-உபமேயமும் வரக்கடவது.
தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.
—————
நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே
பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.
நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-
நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் –
ஸஹஸ்ரபாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாமஸஹஸ்ரவாந்”- பாரதம்.-
ஸ்வயம் பிரகாசகனான சர்வேஸ்வரன் ஆயிரம் திருப்பெயர்களையுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே,
குணங்களுக்கும் சேஷ்டிதங்களுக்கும் -செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே
சர்வேஸ்வரனாகப் பிரசித்தனானவன்.
நம் -பிரசித்தி
பெருமான் -சர்வேஸ்வரன்
(நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளைஎன்பர் அவரவர்தம் ஏற்றத்தால்”-உபதேச ரத்தினமாலை.)
அடி மேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் –
புறம்புள்ள காற்கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளையே தமக்கு ரக்ஷகமாகப் பற்றின ஆழ்வார்.
தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் –
அவனுடைய திரு நாமங்கள் போலே, குணங்களையும் சேஷ்டிதங்களையும் -செயல்களையும்
தெரிவிக்கின்ற -ப்ரதிபாதகமான –
ஆயிரத்திலும் ஆய்ந்து உரைத்த.
ஆயிரம் திருப் பெயர்களைச் சொன்னால் அவன் குணங்கள் தோற்றுமாறு போலே யன்றோ,
இவற்றாலும் அவன் குணங்களும் செயல்களும் தோற்றும்படி.
திருநாமங்களான ஆயிரம் என்னக் குறை இல்லை -என்றவாறு
தென் நகர் –
அழகிய நகரி.
சிறந்தார் பிறந்தே –
ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே,
இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.
பிறந்தே சிறந்தார் என்று அந்வயம்
சர்வேஸ்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று,
இவர்களும் பகவதநுபவம் பண்ணுகையாலே ஸ்லாக்கியராயிருப்பார்கள்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்”- திருவிருத்தம். 79.– என்னக் கடவதன்றோ.
இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு,
பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.
இவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே
முக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –
————-
நிகமத்தில் இப் பத்தும் கற்றார் பரமபதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர் என்கிறார்.
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று-
திரு வனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு உபாயம் என்று.
அநந்த ஸாயித்த்வம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணமாகையாலே, சர்வாதிகனே சரண்யன் என்கிறது.
இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்திலுள்ளாராகாதே.
படுக்கை கிடப்பது அந்தப்புரத்திலன்றோ.
நம் பிரான்
ஆஸ்ரிதர்கள் விஷயத்தில் உபகார சீலனாதலின் ‘நம்பிரான்’ என்கிறது.
சரணே சரண்’
என்ற அவதாரணத்தாலே -ஏகாரத்தாலே, நைரபேஷ்யம் -வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது.
இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது.
அன்றிக்கே,
சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக் கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர்.
மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.
நாடொறும் ஏக சிந்தையனாய் –
புறம்பு உண்டான சிந்தனை போய், இவ்விஷயத்திலே ஏக ஆகாரமான -ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய்,
அர்த்த ஆர்ஜனம் பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ்விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.
குருகூர்ச் சடகோபன் மாறன்-
அவை யெல்லாவற்றிற்கும் அடியான பிறப்பு இருக்கிறபடி.
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் –
தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி ஆயிரத்திலும் இப் பத்தினைக் கற்க வல்லவர்கள்.
மாக வைகுந்தத்து –
மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீவைகுண்டத்திலே.
வைகலும் மகிழ்வு எய்துவர்-
காலம் என்னும் தத்துவம் -ஒரு பொருள் உள்ளவரையிலும் நித்ய அநுபவம் பண்ணப் பெறுவர்.
அநுசந்தானத்துக்குத் விச்சேதம் -தடை வாராதபடி பண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும்படியான
சம்சாரத்தைவிட்டு, பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத
பரமபதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.
மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை.
கம்’ என்றது ஆகாசம்.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply