ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –ஒன்பதாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

நிகமத்தில் –

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ
ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-
அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்பது என் எண்ணம் –
என்று அவன் அருளிச் செய்தாப் போலே
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார் -கற்பவர்கள் எனக்கு ப்ரியகரர் -பிரியத்தை செய்கின்றவர்-என்கிறார்

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து –
அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள்- அடையப் படும் பொருளும்
அடைதற்கு உரிய வழியும் -இல்லை -என்று அத்யவசித்து -துணிந்து –

இவர்க்கு இப்படி இந்த வ்யவசயத்தை -துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –
அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ –என்கிறார் மேல் –

தாது சேர் தோள் கண்ணனை –
அவனுடைய ஸுந்தர்யம் -பெரு வனப்பு ஆயிற்று -இவரை இப்படி துணியப் பண்ணிற்று –

தீதிலாத-
தீது இல்லாமையாவது
கதாந்தர ப்ரஸ்தாவம் -பகவானுடைய சம்பந்தம் இல்லாத சரிதங்கள் இதில் கூறப் படாமல் இருத்தல் –

ஒண் தமிழ்கள் –
ஒண்மையாவது-உள் உண்டான அர்த்த விசேஷங்கள் எல்லாம் வெளிட்டு கொடுக்க வற்றாய் இருக்கை –
அன்றிக்கே –
நிர் தோஷமாய்- குற்றம் இல்லாதவையாய் -பஹு -பல குணங்களை உடைத்தாய் -இருத்தல் என்றுமாம் –
அகில ஹேய பிரத்யநீக கல்யாண குணங்கள் நிறைந்தவன் போலே –

குருகூர்ச் சடகோபன் சொன்ன இவை ஆயிரத்துள் இப்பத்தும் ஓத வல்ல பிராக்கள்–

இவ் உலக வாழ்க்கையின் தண்மையையும்-
சர்வேஸ்வரன் உடைய பிராப்ய பிராபகங்களின் உடைய தன்மையையும் – அன்றோ
இத் திருவாய் மொழியில் சொல்லப் பட்டன –
இப் பத்தினை கற்க வல்ல உபகாரகர் – இதனைக் கற்கவே அப்யஸிக்கவே –
தீய வழியைத் தவிர்ந்து – நல் வழி போகத் தொடங்குவார்கள் –
இதற்கு மேற்பட இவர்கள் இவருக்கு செய்யும் உபகாரம் இல்லை அன்றோ –

நம்மை ஆளுடையார்கள் பண்டே –
ஒரு பிறவியிலே இதனைக் கற்கைக்கு -அப்யஸிக்கைக்கு ஈடான -தகுதியான அதிகாரத்தை
உடையராய் இருப்பார்கள் ஆகில்
அவர்கள் பண்டே நமக்கு நாத பூதர் -தலைவர் –
அத்யேஷ்யதே -எவன் படிப்பானோ -அவன் என்கிறபடியே
இதனைக் கற்பதற்கு அப்யசிக்கைக்கு ஈடான தகுதியான தன்மை உள்ளவர் பிறவி தொடக்கி நமக்கு நாதர்

படிக்கிறவன் – நிகழ் காலத்தில் சொல்லாமல்–படிப்பவன் -எதிர் காலத்தில் சொன்னது போலே –
படிக்க தகுதி யானவர்கள் -என்கிற பொருளில்
இங்கும் ஓத வல்ல பிராக்கள் -ஓதுவதற்கு தகுதி உள்ளவர்கள் -என்று அருளிச் செய்கிறார்-

———–

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை –
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று
முறை கெடவுமாம்
முறையிலே ஆகவுமாம்
காணும் இத்தனையே வேண்டுவது –

குரை கடல் கடைந்தவன் தன்னை —
இந்த அபேக்ஷை விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்
கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது

மேவி நன்கு அமர்ந்த –
இந்த ஸ்வபாவ தன்மையின் அனுசந்தானத்தாலே நினைவாலே பொருந்தி
கால் தரையிலே பாவினார் ஆயிற்று –

வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் –
விஸ்மய நீயமான பரந்த புனல் நிறைந்த திருப் பொருநலை உடைய
திரு வழுதி நாட்டுக்கு தலைவரான ஆழ்வார்

நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் –
மனத்தின் சஹகாரம் -துணையும் இன்றிக்கே ஆயிற்றுச் சொல்லிற்று
அங்கனம் சொன்ன ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் – வல்லவர்கள்

ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே –
யுலகம் மூன்று அளந்தான் அடி இணை -யுள்ளத்து -ஓவுதல் இன்றி-ஒர்வாரே
ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார்

இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்
என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே
இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று

இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம்
மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்

துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத
யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்
உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்
அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன் -என்கிறபடியே –

———-

நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார் பரம பதத்தே செல்லுதல் ஆச்சர்யம் அன்று –ப்ராப்தமே தக்கதே –என்கிறார் –

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-

சீலம் எல்லை இலான் அடிமேல் –
அமர்யாத எல்லை இல்லாத சீல குணத்தை உடையவனுடைய திருவடிகளிலே –
இதனால்
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது -சீலாதிக்யமாயிற்று –சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று
அதனை நிகமிக்கிறார் -முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-
அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரியை உடைய ஆழ்வார்

அன்றிக்கே
கோலம் நீள் என்ற சொற்கள் இருப்பதினாலே
அணி -என்பதனை
அடி மேல் அணி மாலை -என்று
மாலைக்கு அடையாகக் கோடலுமாம் –

ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –
இப் பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது
யுக்தி மாத்திரம் -இப் பாசுரங்களை ஒரு கால் சொல்லுதல்
பாட தாரணம் -இவற்றைப் பாடம் செய்தல்
அர்த்த அனுசந்தானம் -இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –
என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –

வைகுந்தம் ஏறுதல் பான்மையே –
பரம பதத்தில் செல்லுதல் பிராப்தம் -இயல்பாகவே இருக்கும் –
யாங்கனம் -எனின்

மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப் பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு
பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும் என்பதாம் –

தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பிராப்தம் – தாய பாகமாக அடைய வேண்டியதாகவே
இருக்கும் அன்றோ –

—————

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி தன் போக்யத்தையால் -இனிமையினால் நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் –
ஹ்ருதயம் ஈர்க்கப் பண்ணும் -என்கிறார்

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

ஆறா மத யானை அடர்த்தவன் தன்னைச் –
ஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய குவலயா பீடத்தை அழித்தவனை –
அதனை அழித்தாப் போலே-என் விரோதியைப் போக்கினவனை –

சேறு ஆர் வயல் –
குவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக-ஒட்டாதே கிடந்தது –

தென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –
கிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே-நூறு நூறாக சொன்னபடி
பாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே
பாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் – தரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –

இப்பத்தும் — வானவர் தம் இன்னுயிர்க்கே -ஏறே தரும் –
இத் திருவாய்மொழி நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-
அன்றிக்கே
நித்ய ஸூரிகளுக்கு ஏறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-

—————

நிகமத்தில்
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்
என்கிறார்

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த –
எங்கும் தழைத்த -இன்பம் தலைப் பெய்து-
உலகம் எல்லாம் வெள்ளம் இட்ட நிரதிசய -எல்லை இல்லாத ப்ரீதியை உடையராய்க் கொண்டு –

பல் ஊழிக்குத்தன் புகழ் ஏத்தத் –
காலம் உள்ளதனையும் குணங்களை ஏத்தும்படி –

தனக்கு அருள் செய்த-
உலக மக்களில் அந்ய தமர் -வேறு பட்டவரான தமக்கு
மயர்வற மதிநலம் அருளிச் செய்தபடி –

மாயனைத் –
இவ் உலக மக்கள் நடுவே என்னை ஒருவனையும் விசேஷ கடாஷம் செய்த
ஆச்சர்யத்தை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த
தன் புகழ் ஏத்த பல ஊழிக்கு தன்னை அருள் செய்த மாறனை என்று கொண்டு கூட்டி
அனுபவிப்பார்க்கு நிரதிசய -எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைப்பதாய்
எங்கும் ஒக்க பரம்பின தன் கல்யாண குணங்களை
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நான் அனுபவிக்கும்படி செய்த மாயன் –என்றுமாம் –

இவர் குண ஞானத்தால் -குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –
நித்ய ஸூரிகள் அனுபவத்தையும்
தமக்கு அவர்களோடு ஒத்த ப்ராப்தியையும் அனுசந்தித்து -சம்பந்தத்தையும்
நினைத்து நோவு பட்டார் என்றும்
ஒக்க இழந்து இருக்கிற இவ் உலக மக்கள் படியைப் பார்த்தவாறே
இன் நோவு தான் பேறாய்த் தோற்றிற்று –

தென் குருகூர் சடகோபன் சொல் -ஆயிரத்துள் இவை –
சடகோபன் சொல் என்று பரோக்ஷ நிர்த்தேசத்தாலே -படர்க்கையில் கூறுகையாலே
தனக்கு அருள் செய்த -என்று படர்க்கையில் கூறலாம் அன்றோ
பகவானாகிய வால்மீகி ருஷி -என்னுமாறு போலே –

ஒன்பதோடு ஒன்றுக்கும்-
கீழ் ஒன்பது பாசுரங்களில் உண்டான வியஸனம் -துக்கம் ஸூகம் என்னும்படி-வியஸனம்-
துக்கம் மிக்க பத்தாம் பாசுரத்தை உடைய இவை —
ஸ்மாரக -நினைப்பு ஊட்டுகிற பொருள்களாலே
பிழைப்பில் நசை யோடு நோவு பட்ட ஒன்பது பாசுரங்களோடு
பிழைப்பில் நசை அற்ற ஒரு பாசுரத்துக்கும் –

மூ வுலகும் உருகுமே –
ஆரேனும் ஆகிலும் தரியார்
என்னுடைய ஆர்த்த நாதத்தாலே –துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது என்றவர்க்கு
பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு ஸைதில்யமே -நலிந்து வருந்துவதே பலித்து விட்டது

எங்கும் தழைத்த இன்பம் தலைப் பெய்து–பல் ஊழிக்கு தன் புகழ் ஏத்த
தென் குருகூர் சடகோபன்–தனக்கு அருள் செய்த மாயனை–சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும்–மூ வுலகும் உருகும் –

—————-

நிகமத்தில்
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து
அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் –
கம்சன் தான் நினைத்த நினைவினை அவன் தன்னோடு போம்படி செய்தான்
தன் பக்கல் இல்லாதது–வந்தேறி ஆதலால் கடியன் ஆய் -என்கிறார்
கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ –
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –

பிரான் தன்னை –
முன்பு உபகாரகன் ஆனவன் கண்டீர் நம்மை அழித்தான் –

உகந்தாரை அழித்தல் அன்றோ பாதகம் -தீமை யாவது
விரோதிகளை அழிக்குமது உபகாரகம் அன்றோ –

கொடி மதிள் தென் குருகூர்ச் –
கம்சனை வென்ற விஜயத்துக்கு -வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று
ஸ்வாமியின் விஜயத்துக்கு -வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே அன்றோ கொடி கட்டுவது –

சடகோபன் சொல் வடிவு அமை ஆயிரத்து –
சமுதாய சோபையை -முழுவதும் அழகினை உடைத்தாய் இருக்கை-என்றது
கட்டடங்க அழகியதாய் இருக்கையைத் தெரிவித்த படி
விஜயம் -வெற்றி உண்டாகையாலே -பிரசஸ்தி -வெற்றி மாலைகளும் செல்லா நிற்கும் அன்றோ –

இப் பத்தினால் சன்மம் முடிவு எய்தி-
பிறவிகளின் தொடர்ச்சிக்கு முடிவினைப் பெற்று –வசனத்தை லபித்து –

நாசம் கண்டீர்கள் எம் கானலே –
பிறவிகட்கு அடியான சம்சாரமும் நசிக்கும்
கானல் –ம்ருக த்ருஷ்ணிகை –பேய்த் தேர்
இங்கும் இங்கே பிறக்க இருக்காமல் பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்
அனுசந்தானம் சாத்மிக்கும் -பொறுக்கக் கூடிய தேசத்திலே புகுவார்கள் –

————-

நிகமத்தில் –
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு -கற்பார்க்கு பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –
பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் – என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும்-
ஒரு நாளும் விட நினையாமல்-அவ் ஊரில் நித்ய வாசம் செய்யுமவனை –

ஒண் சுடரை –
பின்னானார் வணங்கும் சோதி -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
அவ் ஊரில் நிலையால் வந்த புகர் இருக்கிறபடி –

அன்றிக்கே
அவ் ஊரில் போக்யதையால் -இனிமையால் வந்த புகர் என்னுதல் –
பிற் பாடர்க்கு முகம் கொடுக்கும் நீர்மையால் வந்த புகர் -என்றபடி –

ஒழிவில்லா –
அவன் அவ் ஊரை நீங்கில் தரிக்க மாட்டாதவாறு போன்று
அவனை ஒழியில் தரிக்க மாட்டாதவள் -என்கை

நச சீதா த்வயா ஹீநா நசாஹம் அபி ராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மச்த்யாவிவோத்த்ருதௌ-அயோத்யா -33-31-
எனப் படுமவள் அன்றோ இவளும் –

அணி மழலைக் கிளி மொழியாள் –
அழகிய முக்தமான -இளமையான கிளியின் பேச்சுப் போல் இருக்கிற பேச்சினை உடையவள் –

அலற்றிய சொல் –
தன் ஆற்றாமையாலே-அக்ரமமாக -முறை பிறழச் சொல்லிய சொல் –

வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன்-
பிராட்டி படியில் ஒன்றும் குறைவு அற்று இருக்கிற ஆழ்வார் –

வாய்ந்து உரைத்த –
கிட்டி உரைத்த -என்றது-பாவ பந்தத்தால் சொன்ன -என்றபடி –

அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் –
கேட்டவர்கள் நெஞ்சினை ஒரு நாளும் விடாமல் தங்கி இருக்கிற இப் பத்து -என்றது
இப் பாசுரத்தை கேட்டார்க்கு-சம -அக் காலத்தில் போலே
எல்லாக் காலங்களிலும் இன்பம் பிறக்கும்படி ஆயிற்று இருப்பது -என்றபடி –

நோய் அறுக்குமே –
பகவானைப் பிரிதல்-விஸ்லேஷம் – ஆகிற நோயை அறுக்கும் -என்றது
கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா-கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து கிளேஸிக்க வேண்டா –
விஸ்லேஷம் -பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

———–

நிகமத்தில் –
இத் திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்
இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும்
அனுப்பிக்கப் பெறுவர் என்கிறார்

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
நாநா வர்ணங்களான -பல வகைப் பட்ட நிறங்களை உடைய
ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களை உடைத்தாய்
நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமையை உடைய
திரு நாவாயிலே நின்று அருளினவனை

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் –
திண்ணியதான மதிளை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார்
அருளிச் செய்த
திரு நாவாய்க்கு ரக்ஷை -காவல் திரு நகரியின் மதிள் போலே காணும்
ஆழ்வார் பரியவே அப் பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்

அன்றிக்கே –
சர்வேஸ்வரனுக்கு தனம் -செல்வம் ஆழ்வார் ஆகையாலே
செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –

பண்ணார் தமிழ் –
பண் மிகுந்த தமிழ்

ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மண் ஆண்டு –
இஹ -இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –

மணம் கமழ்வர் மல்லிகையே
மல்லிகை மணம் கமழ்வர் –
மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்
இவருடைய மநோ ரதம் -எண்ணம் அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –

———–

நிகமத்தில்
அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி
அவனைப் பெறுங்கோள் என்கிறார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் -மாலைப் பூசல்
அவனைப் பிரிந்து-விஸிலேஷித்து – தங்களுடைய பிராணங்களை -உயிர்களைக் கொண்டு
தரிக்க மாட்டாதே ஷமைகள் இன்றிக்கே –
அவனுடைய வரவுக்கு உறுப்பாக ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை உடைய ஆயர் பெண்கள் –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து -நாச்சியார் திருமொழி -என்கிறபடியே
திரு ஆய்ப்பாடியிலே ஐந்து லஷம் குடியில் பெண்கள் அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து இருக்க
வரும் காலத்தில் அவன் வரவு காணாமையாலே கிருஷ்ணனைப் பிரிந்த விரஹத்தாலே
ஒரு ஸந்த்யையில் -மாலைப் பொழுதில் கூப்பிட்ட கூப்பீடு ஆயிற்று –

அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன் –
அவனுடைய பிரிவால் நோவுபட்டு அவர்கள் எல்லாரும் பட்ட கிலேசத்தை -துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை

அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த –
சர்வரையும் -பிரளய காலத்தில் பாதுகாத்து அழிந்தவற்றை அடைய உண்டாக்கின
சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஆயிற்று சொல்லிற்று –

தொண்டீர் அணி குருகூர் சடகோபன் மாறன் அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல் சொன்ன இப்பத்தும் கொண்டு
அம்மாலை நண்ணித் தொழுது அவனியுள் அலற்றி உய்ம்மின் -என்று அந்வயம் –
இப்போது இது சொல்லிற்று
விரஹப் பிரளயத்தின் நின்றும் தம்மை எடுக்க வேண்டும் -என்கைக்காக

ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின்
தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே –
அப்படிப் பட்ட வ்யாமோஹத்தை -காதலை விளைக்க வல்லவனைக் கிட்டி
அவனைத் தொழுது-அவன் பக்கல் சாபலம் -ஆசை உடையார்
பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு உய்ந்து போகப் பாருங்கோள் –

இப் பாசுரத்தை அப்யசிப்பாருக்கு -கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று
ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –

———–

நிகமத்தில்-பிரதிபந்தகங்கள் ச வாசனமாக – உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில்
இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –
என்கிறார்

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
வினைகள் உங்கள் பார்ஸ்வத்திலே -பக்கத்தில் வந்து கிட்டாதபடி-ச வாசனமாக –
வாசனையோடு போகவேண்டி இருந்தீர்கோள் ஆகில்

மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் –
நித்யமான- அழியாத மாடங்களை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே
திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை

பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
அநாப்தர் -நம்பத் தகாதவர்கள் சொல்லிலும் விட ஒண்ணாத போக்யதை – இனிமையை உடைத்தான இப் பத்து-
புஷ்பம்-பரிமளத் தோடே – மலர் மணத்தோடு மலருமா போலே
இசையோடு கூடிப் பாடின தமிழ் –

பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே –
ப்ரீதி பூர்வகமாக முன்னாகப் பாடி இருந்த இடத்தில் இராதே ஆடி
ப்ரீதியினால் பிரேரிதராய் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு அவன் திருவடிகளில் விளுங்கோள்
இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading