கீழில் திருவாய்மொழியில், ‘இட்ட கால் இட்ட கை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க,
இவளுக்கு முன்னே தோழி மாரும் தரைப்பட,
திருத் தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர
இப் பெண் பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது.
அதற்கு அடி: ‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய-அசரண்ய சரண்யத்வம் –
பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான, இவளுக்குப் பற்றாசான குணங்களையும்
அழகு முதலான விக்ரஹ குணங்களையும் இவள் தான் வாய் வெருவியும் திருத் தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள்.
போன உயிரை மீட்க வற்றா யன்றோ குணங்களின் ஸ்வபாவம் -இருப்பது?
‘இத: பரம் மிருத ஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதாம் ஆஹ’-ஸஹஸ்ரநாம பாஷ்யம்
அவித்த ஜம்புலத் தவ ராதியாயுள
புவித் தலை யுயிரெலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்றுரைக்கவே களித்த தாலது
செவிப் புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’- அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.
கீழில் திருவாய் மொழியில் பிறந்த மோகமும் தெளிந்து விஸ்லேஷ வியசனமும் அனுசந்திக்க வல்லளாய், பின்பு,
அவனைக் கிட்டி யல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து,
அது பெறாமையாலே அவசன்னையாக -துக்க முடையவளாக, இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத்
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதனுடைய-அபேஷாதிகளில் –
புன் சிரிப்பு, கடைக் கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தை யுடையவளாய்,
அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட,
பழையபடியே தோழி மாரும் தாய் மாரும் அவளைச் சூழப் போந்து,
உனக்கு இத் துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன,
நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாகமாட்டாது. நான் அவன் பக்கலிலே சென்ற மனத்தை யுடையவள் ஆனேன்;
ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடு போய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’ என்று
தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.
அங்ஙன் அன்றிக்கே,
முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ’- சுந். 33.17.
நான் அங்கும் ராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
பெரிய பெருமாளோடே சிர -நெடுங்காலம் உன்மஸ்தகரசமான சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாய் -பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடாவிடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.
இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?
ஆகையாலே, பிரியா விடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ் வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும்
ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலே பிரிவைப் பற்றிப் பேசினான்;
பேச, இவளும் விஸ்லேஷத்தில் -பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே,
சம்ச்லேஷத்தில் ‘கலவியிலே ஒரு வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்;
இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இவளும் திரு அணுக்கன் திரு வாசல் அளவும் ஒருப் படுத்தி மீண்டாள்:
எல்லா அளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ?
பின் இவள் நோவு படப் புக. இதனைக் கண்ட தோழி மாரும் தாய் மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க,
ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும் கூட இருந்து
அனுபவித்தால் போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்;
அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன,
அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப் படோம்’ என்ன,
ஆகில், நானே யாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.
ஸமா த்வாதச தத்ர அஹம்-இப்போது ஒருவேளை தரிசனமும் கூட அரிதாம்படி இருக்கிற நான்,
முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன்காண்!
ராகவஸ்ய நிவேசநே-எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடும் காலம் அனுபவித்தேன்.
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
ஸர்வாந் காமாந்’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன். அப்படியும் அன்றே இங்கு:
பஸவோ ந்ருப கல்யாண குணா:’ , அயோத். 2:26.
அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
நமக்கு சப்தாதி -ஐம் புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது:
இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.
திருத்தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேஷம்:
தலைமகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேஷம்:
அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின்,
அவற்றுள், விலகுகின்ற திருத் தாயார் முகத்தால் சொல்லுகிறது,
ஸ்வரூபமான பிராவண்யம் உபாயத்தில் சேர்ந்தால் செய்வது என்?’என்னுமதற்குச் சொல்லுகிறது;
பெண் பிள்ளை கருத்தால் சொல்லுகிறது. ‘உபாயம் அவனே யாகில் பிராவண்யம் ஸ்வரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது.
ஆக, இவ் விரண்டு அர்த்தத்தையும் இரண்டு முகத்தாலே ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது.
மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத் திருவாய் மொழிக்கு ஏற்றம்.
——————————-
இந்தப் பிராட்டி, வாசா மகோசரமாம் படி தனக்கு வர்த்திக்கிற வியசனத்தாலே,
தென் திருப் பேரெயில் போக வேணும் என்று தனக்குப் பிறந்த தசையை –
வினவுகிற திருத் தாய்மார்க்குச் சொல்லுகிறாள்.
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே–7-3-1-
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி –
தவள ஒண் சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
கூரார் ஆழி வெண் சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்’ -7. 2:1.-என்றும்
கையும் திருவாழியுமான அழகு கை விடாதே இவரை அனுவர்த்திக்கிற – தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ?
அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியை யுமுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல வேண்டாத படியான அழகை யுடைத்தான திருவாழியையும் ஏந்தி,
தாமரைக் கண்ணன்-
தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.
திரு மேனிக்குத் திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் நோக்கு -பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி.
பிரதிகூலர்களுக்கு -பகைவார்களுக்குத் திவ்ய ஆயுதங்களோடு ஒக்கத் திருக் கண்களும் விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,
அனுகூலர்க்குத் திருக் கண்களைப் போன்று திவ்ய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?
திருக் கண்களோடே திவ்ய ஆயுதங்களையும் திவ்ய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
திவ்ய ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்த படிக்கு;
ஜிதந்தே -உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணு மன்றோ?
திருக் கண்களோடு திவ்ய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
இவ் விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் ஜீயர்.
திருக் கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று,
திரு முகத்துக்கு திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்-செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என் ஆழி வண்ணன் பால் இன்று’
என்று வடிவழகைப் போன்று திவ்ய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவா யன்றோ இருப்பன?
ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரண கோடியிலே இருப்பார்கள். கை செய்தல் – அலங்கரித்தல்.
என் நெஞ்சினூடே-
தங்கள் நெஞ்சல் இல்லாமையாலே இது கூடாது என்று இருப்பார்கள் அன்றோ? ஆதலின், ‘என் நெஞ்சினூடே’ என்கிறாள்.
என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்-
இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி ‘நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தா யிருக்கை.
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,
இவர் நெஞ்சினுள்ளே ச்ருங்கலகமாக -தடை இல்லாமல் அழகு செண்டு ஏறுகிறபடி.
நெஞ்சினூடே-
அக வாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.
நிர்குண: பரமாத்மாஸென தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’- பாரதம், ஆரண்
குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்மாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’ என்னுமாறு போலே.
நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக் காண்’ என்று இருக்கிறாள் இவள்.
ஒரு வாசத் தடத்தில்
ஹம்ச -அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும், காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற
திவ்ய அவயவங்களும், அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய-கபளீகரிக்க.- ஒரு மேரு தாங்கினால் போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி.
இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?
மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதாகச்
சாயல் சாமத் திருமேனித் தண்பா சடையா தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவாளே! ஒருநாள் காண வாராயே.’திருவாய். 8. 5;1.
கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத் தேந்தி ஏடலர்த்
திரு வொடும் பொலி யவொர் செம் பொற் குன்றின் மேல்
வருவ போற் கழலுன் மேல் வந்து தோன்றினான்.- கம்பராமா. திருவவதாரப் படலம் . 13.
நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு
ஈஸ்வரனுக்குச் ஸ்வரூப வியாப்தியேயோ, விக்ரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க,
பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது,ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;
ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தல் பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’
குஹாயம்’ தைத். ஆரண். மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும்,
கஹ்வரேஷ்டம் புராணம்’, கடோபநிஷத்.‘மனத்தில் இருப்பவரும் புராண புருஷரும்’ என்றும்,
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி
வந்து புகுந்து’ பெரியாழ்வார் திருமொழி, 5. 2:10.-என்றும்,
‘ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’ ஸ்ரீராமா.-
‘எவர்களுடைய மனத்தில் கரு நெய்தல் போன்ற நிறத்தையுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும்,
என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.
ஸூ பாஸ்ரய பிரகரணங்களிலும் -தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும்
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’- முண்டகோபிநிஷதம்.. 3. 2:3.
‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு இந்தப் பரமாத்துமா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே
அவ் வடிவே ஆயிற்றுத் தியானிக்கத் தக்கதாகச் சொல்லுகிறது;
பின்பு
ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:’-யுத். 1:13.
இந்த ஆலிங்கமானது எல்லாப் பொருளுக்கும் சமானமாகக் கடவது,’ என்று கொடுப்பது அவ் வடிவே யாயிற்று
புறம்புள்ளார் சொன்னபடி சொல்லுகிறார்கள்;
நம் ஆழ்வார்கள் போன வழி இதற்கு மேற்பட இல்லை: இதற்கும் உள்ளே ஒன்று உண்டு’ என்று சொல்லுகிறவர்கள்,
ஸ்வரூபத்தின் ஸத்பாவம் -உண்மை சொல்லுகிறார்களித்தனை; விக்ரஹம் இல்லை என்று அன்று.
புள்ளைக் கடாநின்ற-
அக வாயில் நின்று சுழிக்கு மத்தனையோ?’ என்று அவன் விரைந்து வடிம்பு இட்டுத் தாக்க
ஓம் காண்! நீ அறிந்தாயோ?’ என்று ப்ரேரித்து -தூண்டி மீளா நிற்கும்;
தீ மத -அறிவுள்ளவனுடைய’ என்கிறபடியே, பக்ஷ பாதத்தோடே சேர்க்கையிலே அன்றோ அவனுக்கும் பணி?
கடாகின்ற –
பூதமாய் -நடந்து போனதாய் விஸ்மரிக்கிறிகோள் -மறக்கிறீர்கள் அன்று;
பவிஷ்யமாய் -இனி வருவதனை உபதேசிக்கிறது அன்று;
இப்பொழுது நடப்பதற்கு உபதேசம் வேணுமோ?
காணீர் –
காண்கின்றிலீர். வர்த்தமானமும் -இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ?
உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான அர்த்தம் -பொருளை உபதேசிக்க வேண்டுவதே.
காணீர்-
உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது?
என்னைப் போலே உட் கண்ணாலே காணீர் கோள்!
நாங்கள் கண்டிலோம்; கண்ட நீ சொல்லிக் காணாய்!’ என்றார்கள்; என்ன, சொல்லுகிறாள் மேல்:
என் சொல்லிச் சொல்லுகேன் –
எனக்குச் சொல்லலாவது இல்லை! என்ன பாசுரமிட்டு எதனைச் சொல்லுவது?
உங்கள் கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை.
இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லை காணும்!
என் சொல்லிச் சொல்லுகேன் –
நான் பல ஹானியால்- வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்லமாட்டேன்.
விஷயம் இயத்தா ராஹித்யத்தாலே -இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே சொல்லி முடிக்கப் போகாது;
எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பிரதிபத்தி பண்ணுகைக்கு பரிகரம் இல்லாமையாலே சொல்லத் தான் வேண்டா.
அன்னைமீர்காள்-
ஞாதாம்சம் -அறிந்த விஷயம் கொண்டு போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக் கொள்ளல் செய்யலாம்
அன்றோ எனக்கு ஒத்தவர்கள் ஆனிர் கோளாகில்?
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் –
எனக்கு ஓடுகிற வியசனத்துக்குப் பாசுரம் இல்லை;
அவஸ்த்தா ஞானம் -நிலையை அறியும் ஞானம் இன்றிக்கே பழமை கொண்டாடு கின்றீர்கோள் இத்தனை யன்றோ?
நிஷேதிக்கைக்கு -விலக்குவதற்கு -அனுவர்த்தனீயை- என்னைப் பின் பற்றி வருகின்றவர்களா மத்தனையோ வேண்டுவது?
எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியும் இல்லை யாகில், நீதான் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
ஹிதம் சொல்லி மீட்க நினைப்பர் இல்லாத ஊரிலே போய்ப் புகுமித்தனை அன்றோ?’ என்கிறாள்
நோபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்’ சாந்தோக்யம். 8. 12:3.
முத்தன் ஜனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே
பிரிந்தவர்கள் நினைக்க ஒட்டாத தேசம் அன்றோ?
வெள்ளம் சுகமவன்-
இன்ப வெள்ளத்தை யுடைடயவன். என்றது,
விஸ்லேஷ -‘பிரிந்திருக்கும் நிலையிலும் -சம்ச்லேஷ ஜெனிதமான கலந்திருக்கும் காலத்தில் உண்டாகிற
நிரதிசய ஸூகம் -பேரின்பம் மாறாதவன்’ என்றபடி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
பிரிவிலும் அரையாறு படாதபடி காணும் கலவியில் அவன் தேக்கின பேரின்பம் இருந்தபடி’ என்பதனைச் சொல்லியபடி.
வெள்ளை’ என்பது பாடமான போது, மறுவற்ற இன்பம் என்று பொருள் கொள்க.
அவன் வீற்றிருந்த –
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த் தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது,
இத் தலையைத் துடிக்க விட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான ஸூகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, இத் தலையைத் தோற்பித்த தன் வெற்றி எல்லாம் அவ் விருப்பிலே தோற்றும் படி இருக்கிறபடி என்னுதல்.
அவன் மெய்ம் மறந்து அப்படி இருந்தால் நாமும் மெய்ம் மறந்திருக்கவோ?
பரிபூர்ணனாய் -நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ?
அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ?
பிரிந்தால் முறை பார்த்திருக்கலாம்; விஷயத்துடனே கலந்தோமாகில் அன்றோ நாம் ஆறி இருக்கலாவது?
முறையை அழித்தாகிலும் மடலை எடுத்துக் கொண்டு போமித்தனை அன்றோ?
நமக்கே நலம் ஆதலின்’ என்னக் கடவதன்றோ?-பெரிய திருமொழி. 9. 3 : 9.
வேத ஒலியும் –
அவன் நெஞ்சு ஒழிந்து பழம் புணர்ப்புக் கேளா நின்றான் காணும். என்றது,
பண்டு தான் வென்ற வெற்றி மாலைகள் கேட்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, ஜிதந்தே புண்டரீகாக்ஷ -‘புண்டரீகாக்ஷனே! உனக்கு வெற்றி’ என்கிற வெற்றி மாலைகளைத் தெரிவித்தபடி.
விழா ஒலியும் –
இவளைத் தோற்ப்பித்ததற்கு நெய்யாடல் போற்றுகிறபடி.
அறா-
தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தா நிற்குமத்தனை.
சமந்தக மணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தால் போலே,
அவர்க்கும் அடுத்து அடுத்துத் திரு விழாவாகச் சொல்லுகிறதித்தனை;
பெண் மணி அன்றோ இவள்? இவள் இருக்கிற இடம் அன்றோ மங்கள ஒலிகள் மாறிக் கிடக்கிறது?
பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா-
பருவம் நிரம்பி இருக்கச் செய்தே -நிஷேதிப்பார் -விலகுகிறவர்கள் இருக்கிற ஊரை விட்டு,
பருவம் நிரம்புவதற்கு முன்னே பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற
ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள்.
அவ் வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகர நெடுங்குழைக் காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவா நிற்பர்கள்.
‘பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: சக்ருரேவ மித: கதா:-. அயோத். 6:16.
விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர் ராம ஸ்தோத்திர
விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராம்பூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’- உத்தரராமாயணம்.
‘ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம்பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க ராமன் ஒருவன் ஆனபடி.
நித்ய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை;
ராம்பாக்யமே அனுபவித்து விட்டது.’
நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-, சங்க்ஷேப ராமாயணம், 1:92.
நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.
நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:- கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது
ராமசரத்துக்கு அஞ்சி. பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான். வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?
திருப் பேரெயில் சேர்வன் நானே-
வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ?
தாமரைக்கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ?
ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று விழுமத்தனையேயாம்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்