ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-7–

‘அஹஞ்ச அநுகமிஷ்யாமி லஷ்மணேந கதாம் கதிம்’- உத்தர காண்டம்-
இளைய பெருமாள் சென்ற வழியை நானும் பின் பற்றுகிறேன்’ என்ற பெருமாளைப் போலே
இந்தப் பிராட்டியும் ‘என் நெஞ்சு, தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப் பேரெயில் புக்கால் போலே
நானும் அங்கு புகுமத்தனை,’ என்கிறாள்.
கீழ் பாசுரங்களில் கூறியவாறே முடிந்த பின்பு, ‘இனி, நான் செய்யப் பார்த்தது இது என்கிறாள்,’ என்னுதல்.

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-

பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் –
மதிளுக்கு அகழாம்படி அம் மதிளைச் சூழ்ந்த கடலை யுடைத்தாய்,
கேட்க அஞ்சும் படியான ஊரை மூலை அடியே நடக்கச் செய்த உபகாரகன்.
பேர் எயில் – பெரிய மதிள்.

வந்து வீற்றிருந்த-
அப்போது முகம் மாற வைத்த இழவு தீர அணைக்கலாம்படி கிட்ட வந்திருக்கிற.
வதாம் உதித பூர்ண’ சுந்த்ரகாந்தம் விமல ஸஸாங்க நிபாநநா ததாஸீத்’ – , யுத்,. 117 :
விமல சசாங்க நிபாநநா’ என்கிறபடியே, எப்போது பெருமாள் முகம் வைக்க ஒண்ணாதபடி கொடியராய் இருந்தார்,
அவ் வளவிலும் இவள் மறுவற்ற சந்திர மண்டலம் போலே முகத்தில் குளிர்ச்சி மாறாதே இருந்தாள்.
‘தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 118:17.
கண் நோய் கொண்டவனுக்கு விளக்குப் போன்று எனக்குப் பிரதி கூலமாய் இருக்கிறாய்; நிச்சயம்’
என்பது பெருமாள் திருவார்த்தை
நேத்ர -கண்களின் தோஷத்தால் வந்தது போக்கி, விளக்கின் தோஷத்தால் வந்தது அன்று,’
என்று இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்வார்.
பிரதிகூல நிரசனம் -பகைவர்களைக் கொன்று அதனாலே விடாய்த்து வந்திருப்பார்,
பர்த்தாரம் பரிஷஸ்வஜே’ ஆரண்ய, 30 : 40.
கணவனைத் தழுவிக் கொண்டாள்’ என்கிறபடியே,
குளிர்ந்த உபசாரங்களைச் செய்வதற்குப் போக வேணும்.

பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் –
அவன் இருந்த திருப் பேரெயிலே புக்குத் தேடி என் நெஞ்சமானது ஓரிடத்திலும் மீண்டு வரக் காண்கின்றிலேன்.
மீள ஒண்ணாத இலங்கையிலே புக்க திருவடியும் மீண்ட வந்தான்;
அணித்தான இவ்வூரிலே புக்க என் நெஞ்சமானது மீண்டு வரக் காண்கின்றிலேன்!
நெஞ்சும் கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்லா வேண்டா அன்றோ?
நெஞ்சினது வரவு பார்த்துக் கண் மறைந்து காணும் இவள் நிற்கிறது.
அன்றிக்கே, கண்டு ஜீவியாமல் நான் இங்ஙனே முடிந்து போமித்தனை யன்றோ?’ என்னுதல்.
அபிமதன் -நாதன் வரும் தனையும் அவனுக்காக அவன் செயல்களைப் பாடிக் கொண்டு தரித்திருக்க வேண்டாவோ?’ என்னில்,

ஆரை இனி இங்கு உடையும் தோழீ! –
நெஞ்சும் இல்லாத அன்று இனி யார் உளர்?

தோழீ –
நெஞ்சில் அண்ணியன் நானோ?’ என்றாயாகில், நீ நீ ஆனாயே.
இப்போது நான் இங்கு இல்லையோ? உன் நெஞ்சினை அழைத்துக்கொள்ளுவதற்கு என்?’ என்ன,

என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை –
நெஞ்சினை மீட்கைக்கு நீ வேணுமே-
நெஞ்சினை அவனுக்கு ஆக்கின நீ வேணுமே எனக்கு ஆக்கும் போதும்;
உன் நிலை இது; உனக்குக் கால்கள் நடை தாரா:
அல்லாதார்க்குக் ‘கூட்ட வேணும்’ என்னும் விரைவு இல்லை: யார் நெஞ்சினை அழைப்பார்?

ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது-
யாரைக் கொண்டு தான் சாதிப்பது?
இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?
நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே? இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?
ஆனால், செய்யப் பார்த்தது என்?’ என்னில்,

என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே –
மீளாதே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன்.
அத்யைவாஹம் கமிஷ்யாமி லஷ்மணேந கதாம் கதிம்’- உத்தர காண்டம்-
நான் இப்பொழுதே லஷ்மணன் சென்ற வழியிலேயே செல்லப் போகிறேன்’ என்கிறபடியே,
நெஞ்சு சென்ற வழியே செல்லப் பார்த்தேன்’ என்கிறாள்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading