நீங்களும் ‘கொடு போவோமோ அல்லோமோ? என்று விசாரிக்கும் தசை -நிலை அன்றிக்கே,
எனக்கு அபிநிவேசமானது – காதலானது அற மிக்கது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது;
ஈண்டென என்னைத் தென் திருப்பேரெயில் கொடு புக்கு
மகர நெடுங்குழைக் காதனைக் காட்டுங்கோள்’ என்கிறாள்.
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான்மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே–7-3-6–
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
குடிக்குப் பரிஹாரம் இல்லை யாகிலும் எனக்குப் பரிஹாரம் இது அல்லது இல்லை.
இனி என் மேல் குற்றம் இல்லை. ‘என்? இப்படிக் கடுக வேண்டுவான் என்?’ என்னில்,
காதல் கடலின் மிகப் பெரிதால் –
இந்தக் காதல் அளவு பட்டோ இருக்கிறது?
முதலில் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது.
கடல் புரைய’ திருவாய், 5. 3:4.-என்றாளே.
ஒரு காரியப் பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது?
ஆனாலும், காதலை அளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுக வேண்டாவோ?’ என்ன,
நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான் –
நான் உங்கள் வழியே போகவோ, இவன் வழியே போகவோ?
என்னை அப்படிச் சேர்த்து விட வந்து முன்னே நிற்க, நான் மீளும்படி என்?
அப்படியாலே அவன் துவக்கா நிற்க, உங்கள் வார்த்தையைக் கேட்கவோ?
ஸ்ரமஹரமான -ஸ்ரமத்தைப் போக்கும் படியான வடிவினைக் கொண்டு முன்னே நின்று
காதலை வளர்க்கின்றவனாகா நின்றான். இக் காதலை ஒரு படியே வளர்க்கிறது அன்றோ?
கடல் புரைய விளைவித்ததும் காரமர் மேனி அன்றோ? திருவாய். 5. 3 :
நிற்கும் முன்னே வந்து –
இவன் கிட்ட நின்றிலனாகில் நான் உங்கள் வார்த்தையைக் கேட்டு மீளேனோ?
ஆனால் உனக்குப் பொல்லாதோ?’ என்ன,
என் கைக்கும் எய்தான் –
அழகிது அன்றோ, எனக்கு இப்படித் தரப் பெறில்! வார்த்தை சொல்லுதல், அணைத்தல் செய்யாமையே அன்று;
என் கைக்கும் எட்டுகின்றிலன். ‘இனி நீ செய்யப் பார்த்தது என்?’ என்ன,
உருவெளிப்பாடு அன்றியிலே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் தேசத்திற்குப் போகப் பார்த்தேன்,’ என்கிறாள் மேல்:
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த –
தூரத்தே சென்று காண வேண்டாதபடி பரம பதத்தில் ஐஸ்வரியம் எல்லாம் இங்கே தோற்றும்படி இருந்த.
நான் மறையாளரும் வேள்வி ஓவா –
வேதார்த்த வித்துகளும் சமாராதனத்திலே நிரந்தரமாக -எப்பொழுதும் ஈடுபட்ட வர்களானார்கள்.
என்னோடு சஜாதீயரும் -ஒத்தவர்களும். தங்கள் தங்களுக்கு வகுத்த கைங்கரியம் பெற்று வாழா நிற்பார்கள்.
கோலம் செந்நெல் கவரி வீசும் கூடுபுனல் திருப்பேரெயில் –
மழை சோறு முதலியவைகள் விஷயமாக அங்குள்ளார்க்கு முயற்சி செய்ய வேண்டாமலே இருக்கை.
அவை ஆநுஷங்கிக பலமாய் வருமத்தனை;
நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும்’ பெருமாள் திருமொழி, 5 : 9. -என்றும்,
அங்கங்கே அவை போதரும்’ பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 4.-என்றும் சொல்லக் கடவதன்றோ?
தர்ச நீயமான -காட்சிக்கு இனிய செந்நெல் களானவை அங்குத்தைக்குக் கவரி வீசினால் போலே அசையா நிற்கும்.
ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் இவை மூன்றும் கூடி இருக்கையாலே
தண்ணீர் நிறைந்திருத்தலின் ‘கூடு புனல் திருப்பேரெயில்’ என்கிறது.
திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –
என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும் படியான தேசத்திலே கொடு போய்ப் பொகடப் பாருங்கோள்.
அன்றிக்கே, ‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே,
இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply