ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-2–

தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாளாய் அன்றோ கீழ் பாசுரத்தில் நின்றது?
இவள் இவ் வளவிலே மீளுமவள் அன்றிக்கே இருந்தாள்’ என்று
தாய்மாரோடு தோழிமாரோடு அயற்சேரி யுள்ளாரோடு வாசி அற வந்து திரண்டு ஹிதம் சொல்லப் புக்கார்கள்.
உங்களுடைய நல் வார்த்தையைக் கேளாதபடி நிரவதிகமான பரத்வ ஸௌலப்யங்களை யுடையவன் பக்கலிலே
சக்தமாய் போன – சென்று சேர்ந்த என் நெஞ்சினைத் தகைய மாட்டுகின்றிலேன்;
என் நெஞ்சினைக் கடல் கொண்டது காணுங்கோள்!’ என்கிறாள்.

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப் பகல் போய்த்
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே–7-3-2-

நானம் கருங்குழல் தோழிமீர்காள் –
அவர்களுக்கு ஒரு பழி சொல்லுமாறு போலே சொல்லுகிறாள்,
அவர்கள் தலையான நறு நாற்றத்தையுடையவர்கள் வந்து நிற்கையாலே, நானம் – நறு நாற்றம்.
மயிர்பட மாந்தும்படி அன்றோ இவள்படி?
உங்கள் சந்நிதி இல்லையாகில் நான் இங்கே இரேனோ?
மை வண்ண நறுங்குஞ்சியினை நினைப்பு ஊட்டுகிறதாய் இரா நின்றாதே இவர்கள் குழல்.
ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ’–கிஷ். 5:18.-
நம் இருவர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே’ என்று இவளுடைய இன்ப துன்பங்களையே தங்களுக்கும்
இன்ப துன்பங்களாக இருக்கை அன்றோ தோழிமாராவது?
இவள் மயிர் முடி பேணாதே பரிமளம் -நறு நாற்றம் காணில் முடியும் படியாக இருக்க,
இவர்கள் கூந்தலைப் பேணி நறு நாற்றம் கொண்டு காரியம் கொள்ளப் போருமோ?’ என்னில்,

கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்கச் சாத்திக் கழித்தபடியே –
சர்வ ஸ்வதானம் -எல்லாவற்றையும் கொடுப்பது இவர்களுக்கே;
அப்போது அவன் செய்த மிகுந்த திருவருளாலே, அது சருகு ஆனாலும் அவர்கள் மாறாதே வைத்துக் கொண்டு இருப்பார்களே!
அது இவளுக்கு நினைப்பு ஊட்டுவதாய் நலிகிறபடி.
அன்றிக்கே, ‘இவர்கள் தாம் நறு நாற்றம் கொண்டு காரியங்கொள்ளவும் வல்லர்கள்’ என்னுதல். என்றது,
தாங்கள் தளரந்து காட்டில் இவள் மிகவும் தளரும் என்று ஒப்பித்துக் கொண்டு இருப்பர்கள்’ என்றபடி.
தங்கள் தங்களுடைய பொறாமையும் பாரார்களாயிற்று, இவளை-உஜ்ஜீவிப்பிக்க -பிழைப்பிக்கைக்காக.

அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பலகாலம் போகச் செய்தேயும்,
உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே.
இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை?
அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்க வேணுமே. சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர்,
தங்கள் தங்களுடைய கிலேசம் -துக்கத்தைப் பாரார்களே அன்றோ?
பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய ரஷணத்துக்காக இளைய பெருமாள்
தம்மைப் பேணிக் கொண்டு தரித்து இருக்குமாறு போலே.
இளைய பெருமாள் தாம் பரம் போகி அன்றோ?
ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா: சித்ராஸூ வநராஜிஷூ
கிந்நரா நரஸார்த்தூல விசரந்தி ததஸ்தத;’ கிஷ்கிந். 1:60
ஸௌமித்ரே பஸ்யபம்பாயா:- அங்குத்தை இனிமை நெஞ்சிலே படச் செய்தேயும், பெருமாளுக்கு
வேற் ஒன்றிலே நோக்கை விளைக்கைக்காக முகத்தை மாற வைத்துக் கொண்டு நின்றார்;
பிள்ளாய், பாராய் இது இருந்தபடி!’ என்கிறார்.

நானம் கருங்குழல் –
ஒரு புலவன் ‘நானம் என்பது குழலுக்கு விசேஷணம் ஆகையாலே, நாவி போன்ற குழல்’ என்றான்.
அதனால் நினைக்கிறதும் பரிமளத்தையே -நறுநாற்றத்தை.

தோழிமீர்காள் –
பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவார் கோடியிலே புகுவதே!

தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!-
தான் அறிந்து தோழிமார்க்குச் சொல்லாதே இருப்பது ஒரு அவஸ்தையும் -நிலையும்,
தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதே இருப்பது ஒரு அவஸ்தையும் -நிலையும்,
தானும் தோழியும் தாயும் அறிந்து பிறர் அறியாதே இருப்பது ஒரு அவஸ்தையும் – நிலையுமாயிற்று இருப்பது;
அந்நிலை குலைந்து எல்லாரையும் ஒக்க விளிக்கும்படி ஆயிற்று உலகப் பிரசித்தமானபடி.
பிறர்க்குச் சொல்ல வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயிருக்க, பிரதி கூலர்க்கும் கூட தயை -அருள் பண்ண வேண்டும்படி காணும் இவளுடைய ஆர்த்தி -துன்ப நிலை.

ஸாது ராவண ராமேண மாம் ஸமாநய துக்கிதாம்
வநே வாஹிதயா ஸார்த்தம் கரேண்வேவ கஜாதிபம்’-சுந். 21:18.
‘மாம் ஸமாநய துக்கிதாம்-துக்கத்தை அடைந்திருக்க என்னை ஸ்ரீராகவனோடு சேர்ப்பாயாக’ என்கிறபடியே,
‘ததா குரு தயாம் மயி’ . சுந்.
என்னை நீ பெருமாளுடனே கூட்ட வல்லையே’ என்றாளன்றோ இராவணனை?
அப்படியே என் விஷயத்தில் அருள் செய்’ என்றும்,
‘வாசா தர்ம மவாப்நுஹி’ , , சுந். 39:10.‘வாக்கினால் தருமத்தை அடையக் கடவாய்’ என்றும்,
ஒரு திருவடி போல்வார்க்குச் சொல்லக் கடவ வார்த்தையை அன்றோ, பிரித்தவனைப் பார்த்துச் சொல்லிற்று?

தோழிமீர்காள்-இத்யாதி –
எங்ஙனே நான் உகந்தது உகந்தீர்கோள்! என்பாள், ‘தோழிமீர்காள்!’ என்கிறாள்.
‘எங்ஙனே எனக்குப் பிரியமான ஹிதத்தைப் பார்த்தீர்கோள்!’ என்பாள், ‘அன்னையர்காள்!’ என்கிறாள்.
‘எங்ஙனே உதாசீனர்களாய் -நொதுமலாளர்களாய் இருந்தீர்கோள்!’ என்பாள், ‘அயற் சேரியீர்காள்!’ என்கிறாள்.
‘எங்கள் பக்கல் குறை உண்டோ? நீ மரியாதை தப்பினவாறே நாங்களும் முறை தப்பினோமித்தனை அன்றோ?’ என்ன,

நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்-
‘உங்களுக்கும் இங்ஙனே ஏதேனும் இருப்பது ஒரு காரணம் உண்டோ முறை தப்புகைக்கு நான்?
நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ? உங்கள் அளவு அன்று’ என்றபடி.
இத் தனி நெஞ்சம்-
உங்களில் நான் வியாவ்ருத்தை -வேறுபட்டவள் ஆனால் போலே யாயிற்று,
என்னிலும் என் நெஞ்சு வேறுபட்டபடி. என்றது, ‘சொல்லிற்றுக் கேளாத ஸ்வதந்திரமான நெஞ்சம்’ என்றபடி.
தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்’ சுந், 39:30. ‘
அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று இருப்பார் நெஞ்சமும் இதற்கு ஒப்பு அன்று.
காக்க மாட்டேன்-
பாரண ஸாமர்த்யம் வேணுமே காக்க முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மோடு நீ கூடி’ பெரிய திருவந்.1.-என்று இருக்குமித்தனை ஒழிய,
இவளால் தடுத்து வைக்கப் போகாதே.
‘குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா’
ஸ்ரீவிஷ்ணு புரா. 5.18:22.தாய் தந்தையர்கள் என்ன செய்வார்கள்?’
என்கிறபடியே, ஒருவரையும் பாராதே போகா நின்றது; ஒன்று கேட்டு மீளும் அளவு அன்று;
மீட்கலாம் அளவும் காற்கட்டிப் பார்த்து, முடியாமையாலே கை வாங்கினமை தோற்றுகிறது காணும்,
மாட்டேன்’
என்ற உறைப்பாலே. சம்சாரிகள் சப்தாதி விஷயங்களில் -ஐம்புல இன்பங்களினின்றும் மீள மாட்டாதவாறு போலே அன்றோ,
இவர் பகவத் விஷயத்தினின்றும் மீள மாட்டதபடி?
மாட்டேன்’
என்று சொல்லுகிற இது வார்த்தையோ?
எல்லா அளவிலும் தங்கள் தங்கள் மனம் தங்கள் தங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டாவோ?’ என்ன,

என் வசம் அன்று இது-
என் செய்வோம், தாய் வேறு கன்று ஆக்கும் விஷயமானால்?
கைகேயி சொற் கேட்டு ஸ்ரீபரதாழ்வான் அரசினைச் செலுத்தும் அன்று ஆயிற்று,
இவளும் இத் தாயார் வார்த்தை கேட்டு மீளுவது.
இப்போது நான் உங்கள் மகள் அன்றோ? என்னைப் போலும் அன்றே என் நெஞ்சு?’ என்றது,
எனக்குத் தான் என்று இருக்கும் நிலை குலைந்து, தன் வழியே நான் ஒழுகும்படி யாயிற்று என்றபடி.
தங்கள் தங்களுடைய மனம் அபவ்யமானாலும் -அடங்கியிராது போயினும்,
அடங்கி யிருப்பது ஒரு போது பார்த்து ஹ்தம் சொல்ல வேண்டாவோ?’ என்ன,

இராப் பகல் போய் –
ஸ்ருஷ்டமான படைக்கப்பட்ட காலத்திலே இதற்கு ஹிதம் சொல்லலாவது, ஒரு போது காண்கின்றிலேன்;
ஒரு போது பகவத் விஷயத்திலும் கை வைத்து, ஒரு போது சம்சார யாத்திரையிலும் கை வைக்கும் அளவு அன்றே, இவளுடைய ஈடுபாடு.
இங்கே இருப்பது ஒரு போது உண்டாகில் அன்றோ ஒன்று சொல்லி மீட்கலாவது?

தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் திருப்பேரெயில் –
இது மீட்கலாம் விஷயத்திலோ அகப்பட்டது? அவ்வூரில் இனிமையிலே படிந்தாரையும் மீட்கப் போமோ?
தேன் – வண்டு.பூத்த பொழிலையும் குளிர்ந்த நீர் நிலங்களையுமுடைய தென்திருப்பேரெயில்.

வீற்றிருந்த-
பரமபதத்தில் இருப்பு அடங்கலும் தோற்றும்படி இருக்கை.
அவ் விடம் போன்றது அன்றே இவ் விடம்?
ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற இடம் அன்றோ?
அவ் விடத்தைப் போன்று இவ் விடத்தையும் திருத்திக் கொண்டிருக்கிற இடம் அன்றோ?

வானப் பிரான் –
இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது.

தென்திருப்பேரெயில் வீற்றிருந்த வானப்பிரான் –
ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற உபகாரன்.

மணி வண்ணன்-
மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி.

கண்ணன் –
அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக் கொண்டு இருக்கிறவன்.

ஆக,
மேன்மை அளவிடவோ?
வடிவழகு அளவிடவோ?
நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

செங்கனி வாயின் திறத்ததுவே –
கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப் படுவாரைப் போலே, வாய்க் கரையிலே அகப்பட்டது;
ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது?
சிவந்து கனிந்து திருப்பவளத்தின் இடையாட்டத்தது;
இது மீள நினைக்கில் அன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசம் உள்ளது?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading