அவதாரிகை –
இப்படிப் பட்ட பந்தம் உண்டே யாகிலும்
அவன் விரோதி நிரசன சீலனாகிலும்
குற்றவாளரான நமக்கு அவன் பாடு செல்ல ஒண்ணுமோ -என்ன
அவன் குற்றம் பொறுக்கைக்காகவே வந்து நின்றான் –
நமக்கு ஒரு க்ருத்யமும் இல்லை –
இனி நீ ஆபி முக்யத்தைப் பண்ணி அவனை அனுபவித்து இருக்கப் பார்
என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
——————————–
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு –41-
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
என்றும்–எப்போதும்
புறன் உரையே ஆயினும்–(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தை யாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே–சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு–அநுஸந்தித்துக் கொண்டிரு;
(அப்படியிருந்தால்)
இன்று முதலாக–இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும்–மலை போல் (பெருப் பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்–(அவற்றை யெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்
—————————————-
வியாக்யானம் –
குன்றனைய குற்றம் செய்யினும் –
மேரு மந்தர மாத்ரே அபி -என்கிறபடியே
ஒரு மலை யத்தனை பாபம் பண்ணுவது –
பெருமைக்கும்
போக்க ஒண்ணாமைக்கும் மலையை ஒப்பாகச் சொல்லுகிறது
அநுபவ விநாச்யமாய் யல்லது தீராமை
அவன் பொறுத்தோம் என்னப் போம் இத்தனை –
குணம் கொள்ளும் –
அவன் ஸூஹ்ருதமடியாக ஏதேனும் ஒரு நன்மை கலசி
வந்தது உண்டாகில்
அத்தை அந்த மலை யோடு ஒக்க நினைத்து இருக்கும் -என்னுதல்
அன்றிக்கே
குற்றங்கள் எல்லாத்தையும் மறந்து
இருந்த குணம் ஒன்றையும் ஸ்வீகரிக்கும் -என்னுதல்
அதாவது
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்
அவனுள்ள வன்றே இவ்வாத்மாவும் உள்ளது ஓன்று –
இத்தனை நாளும் இத்தைப் பெறாது ஒழிவான் -என் -என்னில்
இன்று முதலாக வென்னெஞ்சே –
சர்வேஸ்வரனுக்கு இப்படி இருப்பதொரு ஸ்வபாவம் உண்டு என்னும்
இவ் வாராய்ச்சி யுனக்குப் பிறந்த இன்று தொடங்கி-
என்னை யுன் வழி யாக்குகை தவிர்ந்து நீ என் வழியே நிற்கப் பெறுவதே –
சஹ்ருதயமாக அவனுடைய குணங்களைப் பேசப் போமோ என்னில் –
என்றும் புறனுரையே யாயினும் –
அஹ்ருதயமான சொல்லாலே யாகிலும்
பிரயோஜனம் இன்றிக்கே அனர்த்தமாக ஸ்துதித்தாகிலுமாம் –
வ்ருதைவபவ தோயாதா பூயஸீ ஜன்ம சந்ததி
தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சித்ய சரணம் வ்ரஜ –
பொன்னாழிக் கையான் –
கண்டாயே
இவ் விஷயம் இருந்தபடியால் மறக்கலாய் இருந்ததோ
நீ ஏதேனும் ஒரு படி இழிந்தாலும் சஹ்ருதயமாகப் பண்ணுவித்துக் கொள்ள வற்றாய் காண்
அவ் விஷயம் இருப்பது –
திறனுரையே சிந்தித் திரு –
அவனிடை யாட்டம் ஆனவற்றையே அநு சந்தித்து நிர்ப்பயமாய்க் கொண்டு இரு
அங்கன் அன்றிக்கே
புறனுரையே யாயினும் என்று நான் சொன்ன வித்தை
புறம்பே சென்று இருந்தாயே யாகிலும்
உனக்கு அழகிதாகச் செய்யப் பார் -என்கிறார் ஆகவுமாம்
அவனுடைய திறமான புறனுரை யுண்டு
அவன் மாஸூச என்று சொன்ன சொல்லு
அத்தை அநு சந்தித்து
ஸ்தி தோஸ்மி -என்கிறபடியே
ஸூகமே இருக்கப் பாராய் -என்கிறார்
திறனுரை
மித்ர பாவேன
மாதவன் என்றதே கொண்டு –தீது அவம் கெடுக்கும் அமுதம் -திருவாய்மொழி -2-7-3-
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply