ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -37 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஒரு நாள் தன்னை இரப்பாளனாக்கிக் கொடு வந்து போன வளவேயோ –
என்றும் தன்னை இரப்பாளனாக்கி
நித்ய சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திரு மலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

நாம் அவதாரத்துக்குப் பிற்பட்டோம்
தீர்த்தம் பிரசாதித்துப் போய்த்து இறே என்ன வேண்டாதபடி
திருமலையிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார்  –

———————————————-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் -37—

பதவுரை

வகை அறு–அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட் புகுந்து
இன்ன வகை இன்ன வகை என்று அறுதி யிடுவதற் குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள்–ஸூக்ஷ்மார்த்த ஸ்ரவண முடையவர்களான
வேதியர்கள்–வைதிகர்கள்
நாளும்–நித்தியமும்
புகை விளக்கும்–தூப தீபங்களையும்
பூ புனலும்–புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி–தரித்துக் கொண்டு
திசை திசையின்–பல திக்குக்களில் நின்றும்
சென்று–வந்து சேர்ந்து
இறைஞ்சும்–வணங்குமிடமான
வேங்கடம்–திருவேங்கடமலையானது,
வெண்சங்கம் ஊதிய வாய் மால்–வெளுத்த சங்கைத் திருப் பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கப் பெற்ற
ஊர்–திவ்ய தேசமாம்.

———————————————

வியாக்யானம் –

வகை யறு நுண் கேள்வி வாய்வார்கள் –
பஹூ சாகா ஹி அனந்தாஸ் ச-கீதை -2-41-என்று கொண்டு
பிரயோஜனங்களை அனந்தங்களாகச் சொல்லா நிற்கச் செய்தே
பின்னையும் ஆயுஸ் புத்திரன் ஷேத்ரம் என்றாப் போலே இருக்கிற
அவாந்தர பலங்களையும்
அநேகமாகச் சொல்லா நின்றது இறே

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்–கீதை -2-41

குரு நந்தந-குருகுலத் தோன்றலே!
இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமை யுடையது,
அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின்
புத்தய:-புத்திகள்,
பஹுஸாகா-பல கிளைப்பட்டது,
அநந்தா: ச-முடிவற்றது,

குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
பல மாணாக்கர்கள் ஒரு கணக்கைப் போடும்போது தப்பான விடைகள் கணக்கற்றவை வரக்கூடும்.
ஆனால் சரியான விடை ஒன்றே ஒன்று தான் உள்ளது.
அங்ஙனம் காமிய கருமங்கள் செய்கின்றவர்களுக்குக் கணக்கற்ற புத்திகள் உருவெடுக்கின்றன.
எத்தனையோ விதங்களாக எண்ணியும் செயல் புரிந்தும் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஆனால் செயல்களெல்லாம் ஈசுவரனுக்குரியவைகள் என்றறிந்து அவனுக்கே தொண்டு புரிகின்றவனுக்கு புத்தி ஒன்றேயாம்.

முழுகுவாரைக் கண்டவாறே முழுகி
ஜபிப்பாரைக் கண்டவாறே ஜபியாதே
வ்யவசாயாத்மிகா புத்தி ரேகா -என்கிறபடியே
ஒன்றிலே நோக்காய் இருக்கை
முமுஷுக்களுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கும் இறே –

வகை யறு
பலதலைப் பட்டு இருக்கை தவிர்ந்து உள்ள
நுண்ணிய கேள்வி யுண்டு
ஸூஷ்மார்த்த விஷயமான ஸ்ரவணம்
அது நேர் பட்டு உள்ளவர்கள் –

வாய்வார்கள் –
வாய்த்தவர்கள்
நுண்ணிய கேள்வி வாய்வார்களான வேதியர்கள்  –

நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி –
இனி ஸ்ரவண விஷயமாக ஒரு கர்த்தவ்யம் இல்லை இறே
அனந்தரம்
வ்ருத்தியிலே அந்வயிக்கும் இத்தனை இறே

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று அத்யவசித்த பின்பு
தொட்டதும் தீண்டினதும் கைங்கர்யமாம் இத்தனை இறே

அது தான் போக ரூபமாய் இருக்கையாலே
எப்போதும் சமாராதன உப கரணங்களைத் தரித்துக் கொண்டு –

திசை திசையின் வேதியர்கள் –
பெரிய திரு நாளுக்கு சர்வதோத்திகமாக வந்து புகுருமா போலே
திக்குகள் தோறும் வந்து
வேதத்திலே ஒரு சந்தை கற்றவர்கள் அடைய அங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து

வேதியர்கள் –
வேத தாத்பர்யமான ப்ரணவார்த்தம் கை புகுந்தவர்கள் –

சென்று இறைஞ்சும்
கல்விக்கு பிரயோஜனம் ஆகிறது அந்த தேசத்தே
போய்க் கிட்டுகை போலே காணும் –

வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –
பாரத சமரத்திலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்து ஊதின
வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற தேசம்

அர்ஜுனன் தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் எட்டுப் படாது ஒழிந்தவாறே
நின்ற நிலையிலே முழுக் காயாக அவியும்படிக்கு ஈடாக
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தூதின
கிருஷ்ணன் வர்த்திக்கிற ஊர்  –
ஆஸ்ரித பஷபாதி -என்றபடி –

வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –திசை திசையின் வேதியர்கள் –
சென்று இறைஞ்சும் வேங்கடமே-
ஆஸ்ரித சம்ரஷணம் பண்ணுகைக்கு ஏகாந்த மான தேசம் என்றாய்த்து
திரு மலையை உகக்கிறது –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading