Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வாட்டாறு

March 24, 2024

மூலவர் -ஆதி கேசவப் பெருமாள் -புஜங்க சயனம் -மேற்கே திரு முக மண்டலம் –
தாயார் -மரகத வல்லி நாச்சியார்
விமானம் -அஷ்டாங்க -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -கடல் வாய் தீர்த்தம் -வாட்டாறு –

திரு வனந்த புரம் போலே இவருடைய திருவடி திரு நாபி திரு முக மண்டலம் -மூன்று வாசல்களில் சேவிக்க வேண்டும் –
கேசி அசுரனை வாதம் செய்து துறையில் தள்ளி பெருமாள் அவன் மேல் படுத்துக்க கொள்ள கணவனைக் காப்பதற்கு கேசியின் மனைவி
நதி வடிவத்தில் ஓடி வந்து பகவானை தள்ள முற்பட்டாள்-பெருமானைக் காக்க பூமா தேவி அவர் சயனித்து இருந்த பூமியை உயர்த்த
ஆறு வட்ட வடிவமாக ஓடி திரு வாட்டாற்று ஆனது –
இது ஒரு மலை மடக் கோயில் -16008 சாளக்ராம மூர்த்திகள் சேர்த்து உருவாக்கப் பட்ட மூலவர் திரு மேனி –
பரலி கோதா இரண்டு ஆறு வட்டமாக ஓட
10-6 – அருள் தருவான் அமைகுன்றான் –வாட்டாற்றான் அடி வணங்கி
பிரணத பாரதந்தர்யம் -அதுவும் நம் விதி வகையே –
22 அடி நீளம் -நாபியில் நான் முகன் இல்லை -இங்கே -ஆதி கேசவ பெருமாள் -செண்பக வானம்
16008 சாளக்கிராமம் -கொண்டே திருமேனி
சாஹோதா மகரிஹிக்கு பிரத்யக்ஷம்
திரு விதாங்கூர் ராஜா தொடர்பு –
ஓண வில் சமர்ப்பிப்பார்கள் –

மூலவர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர் ஸ்ரீ ஆதி கேசவன்
தாயார் ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கடல்வாய் தீர்த்தம்,ஸ்ரீ வாட்டாறு, ஸ்ரீ ராம தீர்த்தம்
விமானம் ஸ்ரீ அஷ்டாஷர விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ நாகர்கோயில்
நாமாவளி ஸ்ரீ மரகத வல்லீ ஸமேத ஸ்ரீ ஆதி கேசவாய நமஹ

—————–

ஸ்ரீ நம்மாழ்வார்-11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே–10-6-5-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ் நின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் தொடுவெட்டி என்ற ஊரில் இறங்கி இங்கிருந்து 6 மைல் தூரம் சென்றும்
இத்தலத்தை அடையலாம்.  இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணம், கருட புராணம் போன்றவற்றால் அறிய முடிகிறது.

ஆதிதாமஸ்தலம் என்று இத்தலத்திற்குப் பெயர்.

கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது. இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள்
முற்பட்டது என்று மதிலக கிரந்தம் என்ற நூலில் சொல்லப் பட்டுள்ளது.
திருவட்டாறு தேவஸ்தானத்தில் கிடைத்த வட்டெழுத்துக்களாலான ஓலைச்சுவடியில் இத்தலம் திரேதா யுகத்தில் தோற்றுவிக்கப்பட்டது எனக்
கூறப்பட்டுள்ளது.
பிள்ளைப் பெருமாளையங்காரின் விபவனாலங்காரம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய கவிதை ஒன்று உள்ளது.

மாலைமுடிநீத்து மலர்ச்செம்பொன்னடி நோவ
பாலைவனம் நீபுகுந்தாய் …. கேசவனே
பாம்பனை மேல் வாட்டாற்றில் துயில்கொள்பவனே

திருக்குருகைப் பிரான் எழுதிய மாறன லங்காரம் (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) இத்தலம் பற்றி புகழ்ந்துள்ளது.

கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான கவிகுல திலகம் களக்கூத்து குஞ்சன் நம்பியார் இத்தலம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
எட்டெழுத்து மந்திரத்தின் பொருளான ஆதிகேசவனே என்னை ஒருவட்டமாவது உன் திருக்கண்களால் நோக்காயோ

வேனாடு என்பது திருவிதாங்கூர் பகுதி. இப்பகுதியில் இசைச் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் இப்பெருமாள் மீது கீர்த்தனங்கள்
இயற்றியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா,

ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வார் பரவிப் போற்றும்
மாறாப் பேரன் புருவாம் பண்புடை சைதன்யர் வாழ்த்தும்
ஆறார் திருவாட் டாற்றின் ஆதிகேசவப் பெருமாள்
மாறாய் என் உள்ளத்தென்றும் மலரடி வணங்கி னேனே’– என்று கூறுகிறார்.

‘வாழி திருவட்டாறு வாழி திருமாயவன்
வாழியடியார்கள் வளமையுடன் வாழி
திருமாலடி சேர்ந்தார் தெய்வபலம் சேர்ப்பார்
கருமால் அறுப்பர் அணிந்து’– என்கிறார் கிருபானந்த வாரியார்

‘சேத்ரா நாம பரசுராம ஷேத்ரா தீர்த்த நாம சக்ர தீர்த்த– என்று அத்யயன ராமாயணம் கூறுகிறது

வேதவியாசரின் பாத்ம புராணம் வசிஷ்ட மஹரிஷி இங்கு வந்து இப்பெருமானை தரிசித்துவிட்டு நெடுங்காலம் இங்கேயே தங்கியிருந்து 5
மடங்களை உருவாக்கினார் என்று தெரிவிக்கிறது. இம்மடங்கள் இவருக்குப்பின் இவரது சீடர்களால் நிர்வாகிக்கப்பட்டன. அவைகள் 1. முனிகள் மடம் 2.
மார்த்தாண்ட மடம் 3. ராமனா மடம் 4. பஞ்சாண்ட மடம் 5. காஞ்சி மடம்.
கலியுகத்தின் தொடக்கம் வரை மேற்சொன்ன மடங்களின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம் இருந்து வந்தது. (கி.மு. 3102 பெப்ரவரி 13 கலியுகம் தொடங்கிய
நாளாகும்) இவர்களின் காலத்திற்குப் பிறகு திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆனவாரி பிள்ளைமார்கள் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம்
இருந்தது.

பிரம்மன் ஒரு யாகம் செய்ய யாக வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்னும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடையூறு விளைவித்ததோடு
தேவர்களையும் விண்ணுலகையும் அச்சுறுத்தினர். அனைவரும் சென்று திருமாலிடம் முறையிட திருமால் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி
கேசியின் மீது படுத்துக் கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கழைக்க அவ்விருவரும் வேகமாக ஓடிவர
அந்நிலையில் பூமாதேவி திருமால் சயனித்திருந்த இடத்தை பெரிய மேடாக ஆக்க இது திருமகளின் செயல் என்பதை உணர்ந்த இரண்டு நதி
தேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்டவடிவில் வந்தபடியால் இவ்விடம் வட்டாறு என வழங்கப்பட்டு வட்டாறு ஆயிற்று.
இவ்விடம் மேடாக இருப்பதை,-மாலை மாடத் தரவணைமேல் வாட்டாற்றான்’  என்கிறார் நம்மாழ்வார்.

கேசியை அழித்தால் பகவான் ஆதிகேசவர் என்று வழங்கப்படுகிறார். இங்கு கங்கையும் தாமிரபரணியும் மாலை போல் பிரியுமிடத்தில் ஒன்றுக்கு
கோதையென்றும் ஒன்றுக்கு பரளி என்றும் பெயருண்டாயிற்று. நதிகள் பிரியும் இவ்விடத்திற்கு மூவாத்து முகம் என மலையாளத்தில் குறிப்பிடுகின்றனர்.

மூலவர்-ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம் மேற்கு நோக்கிய திருக்கோலம்.-இடது கை தொங்கவிட்ட நிலையிலும் வலது கை யோக முத்திரை காட்டி
தெற்கே சிரசும் வடக்கே திருவடியும் ஸ்ரீசேஷ சயனமாக மேற்கு நோக்கிய திருக்கோலம். நாபித் தாமரையோ பிரம்மாவோ இல்லை 23 அடி நீளமான
திருக்கோலம். இவரின் சிரசருகே ஹாதலேயே மஹரிஷி உள்ளார்.
தாயார்– மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம்– கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்
விமானம்–  அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்–   பரசுராமன், சந்திரன்.

வளமிக்க வாட்டாறு என்பது நம்மாழ்வார் திருவாக்கு, திருவனந்தபுரம் போலவே இங்கு மூன்று வாசல். 20 படிகள் ஏறிச்சென்று இச்சன்னதியை
அடையவேண்டும். சுற்றுப் பிரகாரத்தில் 224 தூண்கள் உண்டு. கேரளத்துப் பாணியில் ஒவ்வொன்றும் ஒரு பாவை விளக்கேந்திய பெண்.

இங்கு மூலவர் சன்னதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் உள்ளது.
இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்கிறார். இதில் ஒரு தலையைத்தான் காணமுடியும். பெருமாளின் கீரிடமும் பாதிதான் தெரியும். பாதி உள்ளே மறைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நாபியில் கமலம் பிரம்மர் இல்லை. அங்கே பெருமாளின் வலது கை சிவலிங்கத்தை தொட்டுக்கொண்டிருக்கும். இங்கே திருப்பாதங்கட்கு அருகில் சிவலிங்கம் உள்ளது. அங்கே கிழக்கு நோக்கிய சன்னதி. இங்கே மேற்கு நோக்கிய சன்னதி. ஸ்ரீஆதி அனந்தபுரம் என்றும் சேரநாட்டு ஸ்ரீரங்கம் என்றும் இதற்குப் பெயர்.

நம்மாழ்வாரும்,-திரைகுழவு கடல்புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன  வரைகுழவு மணிமாட வாட்டாற்றான் மலரடியே’-என்று மங்களா ஸாஸனம்

சந்திரனும், பரசுராமனும் இத்தலத்து எம்பெருமானை வழிபட்டு இங்கு தவமியற்றினர். திரேதா யுகத்தில் பரசுராமன் சந்திரத் தீர்த்தத்தில்
இப்பெருமாளை பூஜித்தார் என்று புராணம் கூறுகிறது.

கி.பி. 510 இல் சைதன்யர் இங்கு வந்திருந்தார். இவருக்கு பிரம்ம ஸம்ஹிதை இங்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் வாசியான
பரமேஸ்வரன் பிள்ளை தம் நூலில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். இது 100 அத்தியாயம் கொண்டது. 5 அத்தியாயங்கள் வங்கமொழியில் வெளிவந்துள்ளது. தற்போது ஹரேராமா, ஹரேகிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளனர்.

சங்க காலத்தே சிறப்பாகப் பேசப்படும் எழினி ஆதன் பிறந்த ஊர் இந்த திருவாட்டாறுதான். புறநானூறு புரந்த எழினி ஆதன் ஊர் என்று
மாங்குடி கிழார் கூறுகிறார்.

துவாபார யுகத்தில் சோமயாசி என்னும் ரிஷி இவ்விடம் தனது மனைவியுடன் தங்கி ஒரு பர்ணகசாலை அமைத்து புத்திர பாக்கியம் வேண்டி
யாகம் செய்தார். யாக குண்டலியில் ஒரு புத்திரன் உண்டாக அப்புத்திரனை சப்தரிஷிகள் வளர்த்து வரலாயினர். சுசிவ்ருதன் என்னும் தேவகுமாரன்
ஹாதலேகன் எனப் பெயர் பூண்ட இப்பையனை பார்த்து உன் அப்பா, அம்மா யார் எனக் கேட்க இவன் பக்கத்திலிருந்த கதலியை (வாழைமரம்) காட்டி
இவர்களே என்று சொல்ல தேவகுமாரன் நகைக்க பெருமாளும் பிராட்டியும் வாழைமரத்திலிருந்து வந்து ஹாதலேய முனிவரை அழைத்து அஷ்டாச்சர மந்திரம் சொல்லி தமது சிரசருகில் அமர வைத்தார்.

ஆற்காடு நவாப் (கி.பி.1740) தமது இரண்டு மருமகன்களான சந்தா சாகிப், படாசாகிப் ஆகியோருக்கு அதிக அளவில் பொன் கொடுக்க நினைத்து
தெட்சிண திருவிதாங்கூரில் உள்ள சுசீந்திரம், கோட்டாறு, வாழ்வச்ச கோட்டம் திருவட்டாறு போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில்
கொள்ளையடித்தான். திருவாட்டாற்றில் உள்ள அர்ச்சனா விக்ரகத்தைத் தங்க விக்ரகம் என நினைத்து பாளையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்தான். அன்று முதல் நவாபின் அரண்மனையில் பல துர்நிமித்தங்கள்
தோன்ற ஆரம்பித்தன.

இந்நிலையில் இப்பெருமான் மீது ஆராக்காதல் கொண்ட பக்தன்ஒருவரின் கனவில் வந்து பெருமாள்தான் இருக்கும் இடத்தை தெரிவிக்க
இவர் பரிவாரத்துடன் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார். இவர் வருவதற்குள் திருவட்டாற்றில் இருந்த மக்கள் அதேபோல் விக்ரகத்தை
செய்து சன்னதியில் வைத்து பூஜைகள் ஆரம்பித்துவிட்டனர்.
நவாபிடமிருந்து கொண்டு வரப்பட்ட விக்கிரகத்தை ஒரு இடத்திலவைத்து சுத்தப்படுத்தி நீராட்டி அதை எடுக்க முயற்சிக்கையில் எடுக்க
முடியாமல் போகவே அவ்விடத்திலேயே விட்டுவிட்டனர்.

பிறகு அந்த இடத்திலேயே அதேபோன்று விக்ரகத்தை செய்து திருவட்டாறு கொண்டுவர இங்கே ஒரு விக்ரகம் இருப்பதைக் கண்டு
பேராச்சர்யமுற்று கொண்டு வந்த விக்ரகத்தை மாத்தூர் கொண்டு சென்று வைத்தனர். இந்த விக்ரகத்தைச் செய்தவர் கற்பக மங்கள் தந்திரிகள் என்றும்
கூறப்படுகிறது.
தாங்க வொண்ணாத் துன்பங்கட்கு ஆட்பட்ட நவாப் தனது தவறுகளை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக திருவட்டாறின் சன்னதியில் உட்புறத்தே
ஒரு மண்டபம் கட்டிகொடுத்தான். அதற்கு அல்லா பூஜை மண்டபம் என்று  பெயர். 388 தோலான் எடையுள்ள தங்கத் தொப்பியும் தங்கத் தகடும்
இப்பெருமானுக்கு நாவாபு கொடுத்தான்.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் 855-57) உமயம்ம ராணி என்பாரின் ஆட்சிக்காலத்தில் முகில்கான் என்னும் பட்டாணி இந்து
ஆலயங்களில் கொள்ளையிட்டான். அவன் மணக்காடு என்னும் ஊரில் தங்கி இருந்து திருவனந்தபுரம் கோவிலைக் கொள்ளையிட முயன்றான். இதையறிந்த திருவனந்தபுரம் முஸ்லீம்களே அவனை எதிர்த்து தாக்கி விரட்டினார்கள்.
காடுகளில் ஒளிந்து தப்பித்து முகில்கான் திருவட்டாறு கோவிலைக் கொள்ளையிட திட்டம் போட்டான். இதையறிந்த ராணி தனது நாட்டின்
மருங்கிருந்த குறுநில மன்னர்களின் உதவியை நாடினாள். இவ்விருவரின் படைகளும் இணைந்து வருவதற்குள் முகில்கான் சாஹெப் திருவட்டாறு
அருகில் உள்ள ஒரு குன்றுக்கு வந்து சேர்ந்து படைகளை எதிர்க்க பலமான வ்யூகம் அமைத்திருந்தான். வ்யூகத்தின் தன்மை அறிந்த சிற்றரசுகள் தம்மிடம்
இருக்கும் படைகளைக் கொண்டு இவனை எதிர்ப்பது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்தனர்.

அவர்கள் மிகுந்த பயப்பக்தியோடு திருவட்டாறு எம்பெருமானிடம் சரண்புகுந்து அற்புதமான கீர்த்தனங்கள் இயற்றி பிரார்த்தித்தனர். இந்த
கீர்த்தனங்கள் ஆதி கேஸ்வ ஸ்தவம் என்று அழைக்கப்பட்டன. இதற்குப் பட சங்கீர்த்தனம் என்னும் பெயருமுண்டு.

இவர்களின் பக்தியை மெச்சிய எம்பெருமான் கதண்டு வண்டு வடிவமெடுத்து எண்ணற்ற கதண்டுகளாக பிரிந்தார். இந்தக் கதண்டுகள்
முகில்கானின் படைகளைக் கொத்திச் சின்னாபின்னப்படுத்தின.

இந்த வண்டுகளின் வடிவத்தை மலையாள மொழியில் கடந்தல் என்று குறிப்பர். முகில்கான் கொடுரமான ரண காயங்களுடன் மரணமடைந்தான்.
அவனது வ்யூகம் சிதறியது. எண்ணற்ற படைவீரர்கள் மாண்டனர். முகில்கான் படையில் இருந்த குதிரைகளை ‘உரளி பஞ்சஸ் திதன்’ என்ற குறுநில மன்னன் கவர்ந்து சென்றான்.
முகில்கானை அடக்கம் செய்த கல்லறை இன்று முகில்கான் குன்று என்று அழைக்கப்படுகிறது. இது மலையாளத்தில் முகில்கான் கரா
எனவழங்கப்பட்டு தற்போது காங்கரா என வழங்குகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் முகத்தான் முகில்கான் படைகள் வீழ்ச்சி அடைந்த நாளில் எம்பெருமானுக்கு விசேச பூஜையும் வீரகேரள
பாயாசம் வழங்கப்படும் நிவேதனமும் தினத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதை ஏற்படுத்திய குறுநிலமன்னன் ஆண்ட ஊர்
இரண்யசிம்ஹ நல்லூர் என்பதாகும். இவ்வூர்தான் தற்போது இரண்யல் என்றழைக்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களும் உற்சவங்களும் மிகச் சிறப்பானவைகளாகும். அவைகள் மீன உற்சவம். துலா உற்சவம் என
அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு திருவிழாக்களும் 10 நாட்கள் நடைபெறும்.
இதில் 9வது திருநாள் யானை குதிரையில் பெருமாள் புறப்பாடாகி தாரை தப்பட்டைகள் முழங்க கோலாகலமாய் நடைபெறும். இதற்கு பள்ளிவேட்டை
என்றும் பெயருண்டு.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், தினத்தில் சொர்க்கவாசல் திறப்பதும், முலைப்பாரி உற்சவமும் இங்கு மிகச் சிறப்பானதாகும்.

இத்தலத்தில் எண்ணற்ற கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள வட்டெழுத்துக்களாலான கல்வெட்டில் கீழ்க்கண்டவர்களின்
ஆட்சிக்காலம் குறிக்கப்பட்டுள்ளது.

1. குலசேகரப்பெருமாள்    – கி.பி. 644-659
2. வீரமார்த்தாண்டவர்மா  – 510-519
3. வீரகேரளவர்மா        – 519-550
4. செம்பலாதித்த வர்மா   – 612-645
5. உன்னி கேரள வர்மா   – 734-753

மேற்சொன்னவர்களுக்கு இத்தலத்தில் சிற்பங்கள் உண்டு

இங்குள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளது. இதில் 9 கைவிளக்குகள் உள்ளன.

இங்குள்ள 2 1/2 அடி உயரமுள்ள முரளி வேணுகான கிருஷ்ண சிற்பமும், இவர் எழுந்தருளியுள்ள மண்டபமும் மிக நேர்த்தியான தாகும்.

இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தின் 3வது தூணிலும் பிற தூண்களிலும் பலவிதமான சிற்பங்கள் உண்டு. ஒரு கையில் திரிசூலம் ஏந்திய ஒரு பெண்,
மற்றொரு தேவதை தன்கையில் திரிசூலம், கேடயம் வாள் ஏந்திய தோற்றத்துடன் கூடிய சிற்பம்,
நாய் சங்கு ஊதும் சிற்பம், பெண் ஒருத்தி குடைபிடித்து நடனம் ஆடும்
சிற்பம், வைரவரின் சிற்பம், இத்துடன் தமிழ் எழுத்துக்களாலான கல்வெட்டும்
சேர்ந்து வெளிப்பிரகாரம் ஒரு கலைக்களஞ்சியம் போல் தென்படுகிறது.

குலசேகர ரவி வர்மாவால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று இங்குள்ளது. மூலஸ்தானத்தில் 5 தங்க கலசங்கள், (பொன் முலாம்
பூசியதுண்டு) கருவறைக்கு மேல் உள்ள அஷ்டாங்க விமானம் செம்பாலானது. தாரு மரத்தாலான சிற்பங்களும் இம்மன்னன் செய்வித்தான்.

கலி 4705இல் இத்தலம் புதுப்பிக்கப்பட்டதாக இங்குள்ள தமிழ்க் கல்வெட்டால் அறியமுடிகிறது. இங்கு ஒரே கல்லினாலான ஒற்றைக்கல்
மண்டபம் உள்ளது. இது 25 அடி நீளம் 171 அடி அகலம் 3 அடி உயரம் இம்மண்டபம் கொல்லம் ஆண்டு 778 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் கலி 4556 ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வெட்டும் வடக்குப் பக்கத்தில் உள்ள சமஸ்கிருத கிரந்த
எழுத்துக்களாலான கல்வெட்டும் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
13ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்குண்டு. ஆங்கிலக் கல்வெட்டுக்களும் உண்டு. கி.பி. 1937இல் மகாத்மா காந்தி இங்கு வந்ததை
ஆங்கிலக் கல்வெட்டு கூறுகிறது.

மார்த்தாண்ட வர்மா (கி.பி. 1749) குளச்சல் யுத்தத்திற்குச் செல்லும் போது 908 பொற்காசு, பட்டு, உடைவாள், போன்றவற்றை இப்பெருமாள்
திருவடியில் வைத்து வேண்டி போரில் வெற்றி பெற்றார் என்ற செய்தியைக் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

மாலை முடி நீத்து மலர்ப்பொன் அடி நோவப்
பாலை வனம் புகுந்தாய் பண்டு என்று -சாலவும் நான்
கேட்டால் துயிலேன் காண் கேசவனே பாம்பணை மேல்
வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் –68-

(இ – ள்.) கேசவனே – கேசவனென்னுந் திருநாமத்தையுடையவனே! –
‘மாலை முடி நீத்து – (அரசர்க்குஉரிய அடையாளப்பூ) மாலையையும் கிரீடத்தையும் (கைகேயியின்சொற்படியே பித்ருவாக்யபரிபாலநஞ் செய்யுமாறு) பூணாமல் துறந்து,
மலர்பொன் அடி நோவ – தாமரைமலர்போன்ற அழகிய (உனது) திருவடிகள் வருந்தும்படி,
பாலை வனம் – (தண்டகாரணியம் முதலிய) கொடுங்காட்டில்,
பண்டு – முற்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்), நீ -,
புகுந்தாய் – நடந்து சென்றாய்,’
என்று கேட்டால் – என்று (இதிஹாஸம் வல்லோர் சொல்லக்) கேட்டால்,
நான் -, சாலவும் துயிலேன் காண் – அடியோடு கண்டுயில்கொள்ளேன்; (அவ்வாறு இருக்க, நீயோ),
வாட்டாறு – திருவாட்டாறென்னுந் திவ்வியதலத்தில்,
பாம்பு அணைமேல் – ஆதிசேஷ சயனத்தின்மீது,
கண்துயில் கொள்வாய் – (கவலையின்றிக்) கண்ணுறங்குகின்றாய்; (எ – று.) – காண் – அசை.

நெடுநாள்முன்பு நடந்த ராமாவதாரத்தில் நீ காலினால்வருந்திக் கானகத்திற்சென்ற செய்தியை இப்போது
பிறர்சொல்லக்கேட்டாலும், கல்நெஞ்சனாகிய எனதுமனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து கரைந்து உருக எனக்குத் தூக்கம் பிடிப்பதில்லை;
பதினான்கு வருடம் காலினாற் பாலைவனங்களிலெல்லாம் அலைந்து திரிந்து வருந்திய நீயோ சிறிதுங் கவலையின்றித்
திருவாட்டாற்றில் நெடுநாளாகக் கண்ணுறங்குகின்றாயே? இது என்ன வியப்பு? என்று எம்பெருமான் திறத்து ஈடுபட்டு
ஐயங்கார் கூறுகின்றன ரென்க. துயரமனுபவித்தவன் யாதொருகவலையுமின்றி நிச்சிந்தையாகத் துயிலத் துயரமனுபவியாதவன்
கவலையினாற் கண்ணுறங்குவதில்லை யென்று, காரணமில்லாத விடத்துக் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினமையால்,
இச்செய்யுள் – விபாவனையணியின் பாற்படும். கேசவன் என்பது – அத்தலத்து எம்பெருமான் திருநாமமென்பர். இத்தலம் – நதியாற் பெயர்பெற்றது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருவனந்த புரம்

March 24, 2024

மூலவர் -அநந்த பத்ம நாபன் -புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ஸ்ரீ ஹரி லஷ்மி
விமானம் -ஹேம கூட விமானம்
தீர்த்தம் -மத்ஸ்ய வராஹ பத்ம தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -10-2-

ஸ்யானந்தூர புரம் -என்று மற்றொரு பெயரிலும் வழங்கப் படுகிறது -திவாகர யோகி ஆராதனம் செய்யும் மூர்த்தியை
பகவான் சிறுவன் வடிவத்தில் எடுத்துக் கொண்டு ஓட யோகி துரத்தி வந்தார் -காட்டுக்குள் தேடிப் போன போது
ஒரு மரம் விழுந்து பழ காத தூரம் பெறுத்த சயனத் திருக் கோலத்தில் சேவை சாதித்தார் -பின்னர் யோகியின் பிரார்த்தனைப் படி
அவர் கையில் பிடித்து இருந்த தண்டத்தின் அளவு சுருக்கிக் கொண்டு இன்று இருக்கும் வடிவத்தில் சயனித்தார் –
இவருடைய திருவடி திரு நாபி திரு முக மண்டலம் மூன்று வாசல்களில் தான் சேவிக்க வேண்டும் –
1688- ஆண்டில் கோயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட ராஜா மார்த்தாண்ட வர்மன் சாளக்ராமத்தாலேயே ஆன புதிய திரு மேனியை
நிர்மாணம் செய்து 1726 -ஆண்டு ஸம்ப்ரோக்ஷணம் செய்தார் –
அரச வம்சத்தினர் இன்று அளவும் பத்ம நாபா தாசர்கள் -என்றே அழைக்கப் படுகின்றனர் –
சாம்யம் -குணம் காட்டி -சாமியார் -5 மைல் நீளம் இலுப்ப மரம் –
18 அடியாக சுருக்கி -அந்தமாக சுருக்கிக் கொண்ட அனந்தன் -உப்பு மாங்காய் -அரிசி கஞ்சி பிரசாதம்
பில்வ மங்கள ரிஷி திவாகர ரிஷி –
யானையில் 1200 சாளக்கிராமம் / 1200 சாளக்கிராமம் இன்னும் வைத்து -நேபாள் மூலம் யானை கொண்டு வந்ததாம் –
பங்குனி ஐப்பசி –ஆறாட்டு உத்சவம் தீர்த்த வாரி
பள்ளி வேட்டை -அம்பு போடுவது போலே -ராஜா மனு போடுவாராம் பெருமாள் சார்பில் –வேதங்கள் ஓதி
முர ஜபம் -பத்ர தீப லக்ஷ தீப உத்சவம்
வெண்ணெய் சாத்தி சேவை சாதிக்கும்- ஆஞ்சநேயர்
நரசிங்ஹர் -உக்ரம் குறைக்க நித்யம் ஸ்ரீ ராமாயணம் பாராயணம்

மூலவர் ஸ்ரீ அனந்த பத்ம நாபன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ அனந்த பத்ம நாபன்
தாயார் ஸ்ரீ ஹரி லக்ஷ்மி
தீர்த்தம் ஸ்ரீ மத்ஸ்ய,ஸ்ரீ பத்மா,ஸ்ரீ வரஹா தீர்த்தம்
விமானம் ஸ்ரீ ஹேம கூட விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ திரு வனந்த புரம்
நாமாவளி ஸ்ரீ ஹரி லக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அனந்த பத்ம நாபாய நமஹ

———————–

ஸ்ரீ நம்மாழ்வார்-11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

ஊரும் புள் கொடியும் அக்தே உலகுஎல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3-

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

திவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை)
காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார்.
தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன் தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர்
தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான்
உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத் தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார்.

அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை
அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன்
காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது.

முனிவரும் மிகுந்த பக்தி ஏக்கத்தோடு பல இடத்திலும் தேடியலைந்து இறுதியில் அனந்தன் காட்டில் கடலோரமுள்ள ஒரு இலுப்பை மரப்பொந்தில்
அக்குழந்தையைக் கண்டுவிட்டார்.

அம்மரம் திடீரென நிலத்தில் வீழ்ந்து அனந்தசயன வடிவமாக இறைவன்காட்சியளித்தார். அவ்வடிவின் தலை திருவல்லத்திலும் (அனந்தபுரம்
துறைமுகத்திலிருந்து 3 மைல்) பாதம் திருப்பாப்புரத்திலும் (அதற்கெதிர்புறம் 5 மைல்) சரீரம் திருவனந்தபுரத்திலும் அமையக்கண்ட அவர் வியந்து, திகைத்து பயந்து தமக்கு மிகச்சிறு வடிவாகக் காட்சியளிக்க வேண்டுமென்று கேட்க அவ்விதமே அம்முனிவர் கையில் வைத்திருந்த யோக தண்டத்தின்
அளவிற்குத் தம்மைச் சுருக்கி காட்சியளித்தார்.

தமக்கு ஏற்பட்ட பாக்கியத்தை எண்ணி முனிவர் வியந்து நிற்க, இம்முனிவரின் பால் பற்றுக்கொண்ட எம்பெருமான் தனக்குத் துளுவம்சத்தைச்
சார்ந்த பிராம்மணர்களே நித்ய பூஜை செய்யவேண்டுமென வேண்டியதாகவும் அவ்விதமே இன்றளவும் நடைபெற்று வருவதாகவும் ஐதீஹம்.

இப்புரத்தைப்பற்றிய மற்றொரு கதை வில்வமங்கலத்திலிருந்த நம்பூதிரி வகுப்பைச் சார்ந்த சன்னியாசி ஒருவர் அனந்த சயன வடிவிலிருந்த
இப்பெருமானைக் கண்டு மோகித்து வழிபட ஆரம்பித்தார். ஒரு நாள்நிவேதிக்க (நைவேத்தியத்திற்கு, வழிபாட்டிற்கு) கைவசம் யாதுமில்லாததால்
அருகிலிருந்த மாமரத்தில் சில மாங்காய்களைப் பறித்து ஒரு சிரட்டையில் (தேங்காய் மூடியில்) வைத்து நைவேத்தியம் செய்தார். இதை நினைவு கூறும்
முகத்தான் இன்றும் தங்கத்தாலான தேங்காய்ச் சிரட்டையில் மாங்காய் ஊறுகாய் வைத்து நைவேத்யம் செய்யும் முறை இங்கு வழக்கத்தில் உள்ளது.

இவ்விரண்டு பாரம்பரியங்களையும் இன்றும் பின்பற்றி இக்கோவிலின் பூஜா உரிமைகள் துளு நாட்டவர்க்கும், நிர்வாகம் நம்பூதிரிகளிடமும் விடப்
பட்டுள்ளது.

மூலவர்– அநந்த பத்மநாபன். புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்
தாயார்–   ஸ்ரீ ஹரி லட்சுமி
தீர்த்தம்–   மத்ஸ்ய தீர்த்தம், பத்மதீர்த்தம், வராஹ தீர்த்தம்

விமானம்- ஹேமகூட விமானம்
காட்சி கண்டவர்கள்–   இந்திரன், திவாகர முனிவர் ஏகாதச ரூத்ர்கள்.

பலராமன் தீர்த்தயாத்திரையின் போது இந்தச் ஸியானந்தூரபுரத்தைத் (திருவனந்தபுரத்தை, தரிசித்தார்) என்று பாகவதம் கூறுகிறது.
எம்பெருமானின் திருமேனி மிகப்பெரிய வடிவமானதால் சிரசு, உடல், திருவடிகள் இவற்றை மூன்று வாசல்கள் வழியே தனித்தனியே தரிசிக்க
வேண்டும். திருவட்டாற்றிலும் இதேபோன்று மூன்று வாசல்கள் வழியேதான் எம்பெருமானைத் தரிசிக்க வேண்டும்.

இச்சன்னதியின் தெற்கில் (தெற்குப் பிரகாரத்தில்) யோக நரசிம்மனும், சன்னதிக்கு முன்புறம் ஆஞ்சநேயரும், பின்புறம் கிருஷ்ணனும்
காட்சியளிக்கிறார்கள். இந்த அனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் எத்தனை வெயில் அடித்தாலும் உருகுவதே
இல்லை.
இத்தலத்திற்கு அஸ்திவாரமிட்டு வேலையைத் துவக்கியவர் சேரமான் பெருமாள் நாயனார் என்று (கி.பி. 1050) கல்வெட்டுக் கூறுகிறது.
கோவிலைச்சுற்றி நான்கு புறமும் உள்ள பிரகாரம், அதில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள 366 தூண்கள், ஒவ்வொரு தூணுக்கும் ஒரு விளக்கேந்திய
பாவை, தூய்மையில் கொலுவிருக்கும் பிரகாரங்கள், காணக் கண்கொள்ளாக் காட்சியாகும்.

கி.பி. 1673 முதல் 1677 வரை பூஜையின்றி இக்கோவில் அடைக்கப்பட்டிருந்தது. 1686 இல் இக்கோவில் தீப்பிடித்து மூலவிக்ரகம் தவிர
பிறவெல்லாம் பழுதுற்றது. கி.பி. 1729ல் ராஜாமார்த்தாண்ட வர்மாவினால் புதுப்பிக்கப்பட்டு மரத்தாலான மூல விக்ரகம் அகற்றப்பட்டு 12000, சாளக்கிராமத்தினாலும், கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியே இப்போது நாம் காண்பதாகும்.

1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மர், தனது உறவினர்களுடனும், தளபதி சேனா பரிவாரங்களுடன் இச்சன்னதிக்கு வந்து
தன் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யம் மற்றும் பிற செல்வங்களையும் அனந்தபுரம் பத்மநாபனுக்கே பட்டயமெழுதிக்கொடுத்து தன் உடைவாளையும் அவரின்
திருப்பாதத்தில் வைத்து எடுத்துக்கொண்டு பரிபூர்ண சரணாகதி அடைந்தார்.
அன்றுமுதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் பத்ம நாப தாசர் என்றே அழைக்கப்பட்டனர். தினமும் காலையில் வந்து பத்மநாபரை வணங்கி
ஆசீர்வாதம் பெற்று ஆட்சி நடத்தினர்.

இன்று அரசபதவியில்லாவிட்டாலும், ராஜ்யம் உருமாறி அம்மன்னர் பரம்பரை இன்று நமது குடியரசின் கீழ் சாதாரண பிரஜைகளாக
வாழ்ந்தபோதும், அன்றுபோல் இன்றும் திருவிதாங்கூர் ராஜா தினமும் காலையில் ஆலயத்திற்கு வந்து பத்மநாபரை வழிபட்டுச் செல்லும் பண்பு
மாறவில்லை. கேவலமான மண்ராஜ்யம் போனாலும், தூய்மையான பக்தி சாம்ராஜ்யத்தை விடாது போற்றிக் காக்கும் அம்மன்னர் பரம்பரையின்
மகத்துவம்தான் என்னே.

இன்றும் அவர்கள் பத்மநாப தாசராகவே வாழ்ந்து வருகிறார்கள். தனி வழியே வந்து (தரிசனத்தின் பொருட்டு) தனிவழியே திரும்பிச் செல்கிறார்கள்.
அப்போது வேறு யாரையும் தரிசனத்திற்கு அனுமதிப்பது இல்லை ராஜா திருச்சன்னதியை நோக்கி குனிந்து நமஸ்கரித்து விரல்களால் தரையைத்
தொட்டுத்தொட்டுத் தன் மார்பில் பக்தி சிரத்தையோடு அந்த விரல்களை வைக்கும் பாணி, ஓ நெஞ்சுருகச் செய்து கண்களில் பக்தி நீரை
வரவழைக்கிறது.

இந்தியா சுகந்திரம் பெற்றபின், திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டாலும் இக்கோவில் மட்டும் அரசால் எடுக்கப்படாது
மகாராஜாவால் மட்டுமே நிர்வகிக்கப் பட்டுவந்துள்ளது.

இக்கோவிலின் உள்ளே மண்டபம் ஒன்று பல இசைத் தூண்களைக் கொண்ட தாயும், ஒவ்வொன்றிலும் தசாவதாரச் சிறப்பை விளக்கும் சித்திர மேம்பாட்டுடன் கூடியதாகவும் விளங்குகிறது. இதைக் குலசேகராழ்வார் கட்டினார் என்றும் கூறுவர். ஆனால்
கல்வெட்டு செய்தி ராமவர்ம மகாராஜாவால் கட்டப்பட்டதென்றும் கூறுகிறது. ஆயினும் இதைக் குலசேகர மண்டபம் என்றழைக்கப்படுவதே
மரபாயிருந்துவருகிறது. இதனைச் சப்த ஸ்வர மண்டபம் என்றும் கூறுவர்.
இதில் உள்ள தூண்களை லேசாகத் தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு இசைக் கருவியின் நாதம் எழுகிறது. ஒரு தூணில் எழுகின்ற
நாதத்தை மற்றொரு தூணில் காது வைத்து ரசிக்கலாம்.

இராமானுஜர் இங்குவர எத்தனித்தபோது எதிரிகள் இவரைக் கொல்ல நினைக்க (அல்லது தமது வழிபாட்டுரிமையை மாற்றிவிடக் கூடுமென
இங்குள்ள பிராம்மணர்கள் அஞ்சி அனந்தனைச் சரணடைய) இறைவனே இராமானுஜரைக் காத்து திருக்குறுங்குடி சேர்ப்பித்ததாகக் கூறுவர். இதனை
குறுங்குடி ஸ்தல வரலாற்றிலும் காணலாம்.

மன்னர்கள் பத்மநாத சுவாமிக்கு மூரஜபம் என்று கூறப்படும் திருவிழாவை பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம். மன்னர்
மார்த்தாண்டவர்மர் 1750 ஆம் ஆண்டில் நான்கு வேதங்களையும் ஆலயத்தில் 8 தடவைகள் முழுமையாகக் கூறக்கேட்டு ஆலயம் முழுதும் லட்சதீபங்கள்
ஏற்றி கொண்டாடினாராம். கோபுரத்தின் இந்த திருவிளக்கு தோற்றம் பத்மதீர்த்தம் என்ற திருக்குளத்தில் மிக அழகாக பிரதிபலிக்கும். இச்சிறப்பான
திருவிழா 1960 வரை தொடர்ந்து கொண்டாடப்பட்டது.

இன்னொரு சிறப்பான திருவிழா ஆராட்டு என்பதாகும். இந்த விழாவில் மகாராஜா, திவான் மற்ற உயரதிகாரிகள் சுவாமியின் குடை மற்றும்
சின்னங்களுடன் ஊர்வலமாக 3 மைல் தொலைவில் உள்ள அரபிக் கடலுக்குள் சென்று திரும்புவர். சுவாமியை ஊர்வலமாய் எடுத்துச் சென்று பின்பு நீராட்டி
பின் எடுத்து வரும். இவர்கட்கு முன் திருமால் தீய சக்திகளை அழிக்க வில் அம்புடன் வேட்டைக்குச் செல்வர். மன்னர்கள் சுவாமியுடன் காட்டுக்குப்போய்
வேட்டையாடி பின்னர் கடலில் நீராடித் திரும்புவர்.

இக்கோவிலை கட்டி முடிக்க 40 ஆண்டுகள் ஆயிற்று 4000 கொத்தர்கள், 6000 ஆட்கள், 100 யானைகள், யானைப் பாகர்கள் வேலையில்
ஈடுபட்டனர். 30 மைல் தொலைவிலிருந்து பெரிய தேக்கு மரம் ஒன்று கொணரப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு துவஜஸ்தம்பமாக நிறுத்தப்
பட்டது. ஆலயத்தின் வெளிப்பிரகாரம் மட்டும் அமைக்க 7 ஆண்டுகள் ஆயிற்றாம்.

இங்கு ஊட்டுப்பறை என்ற பெயரில் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது. இப்போது இது வழக்கிலில்லை.

துவஜஸ்தம்பத்தின் அருகில் உள்ள குலசேகரமண்டபத்தில் அழகிய சிற்பங்கள் பலவுள. யாளி உருவமும் அதன் வாயில் பந்தும் கொண்ட
தோற்றம் தனிச் சிறப்பு கொண்டது ஒவ்வொரு தூணிலும் ஒரு தீபம் ஏந்திய பெண்மணி (பாவைவிளக்காக) இருப்பதும் பேரழகு வாய்ந்தது. இம்முறையானது மலையாளத்தின் பிற சன்னதியில் இருப்பினும் இங்குமட்டுமே பேரழகு பொருந்தியதாய் உள்ளது.

சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது. சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன் அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று ‘தொடுத்த
தூவாய்முடி சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,

ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’ – என்கிறார் இளங்கோவடிகள்

ஆடக மாடம் – திருவனந்தபுரம்
சேடம் – மலர்மாலை.

கோள் ஆர் பொறி ஐந்தும் குன்றி உடலம் பழுத்து
மாளா முன் நெஞ்சே வணங்குதியால் கேளார்
சினந்த புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும்
அனந்த புரம் சேர்ந்தான் அடி –59–

நெஞ்சே
கோள் ஆர் பொறி ஐந்தும் -விஷயங்களில் உன்னை இழுத்துச் செல்லும் தன்மை பொருந்திய ஐம் பொறிகளும்
குன்றி-தமக்கு உரிய வலிமை குன்றி
உடலம் பழுத்து -முதுமையினால் தளர்ச்சி அடைந்து
மாளா முன் -இறப்பதற்கு முன்
கேளார் -.பகைவர்கள் ஆகிய அசுரர்கள்
சினந்த -கோபித்து பொருதற்கு இடமாய் இருந்த
புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும்
அனந்த புரம் சேர்ந்தான் அடி –
வணங்குதியால் –
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனார் அன்றோ –

பிரமன் திரு நாபீ கமலத்தில் இருந்து கொண்டே எப்பொழுதும் ஸ்துதித்து கொண்டு இருக்கும் ஸ்தலம் அன்றோ
தடமுடை வயல் அனந்த புர நகர் புகுதுமின்னே -நம்மாழ்வார்
நெஞ்சே வணங்குதி -மனம் மொழி வாக் -முறையே -நினைத்து பேசி வணங்கும் –
ஒன்றின் செயலை வேறு ஒன்றில் ஏற்றி அருளிச் செய்கிறார்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வண் வண்டூர் –

March 24, 2024

மூலவர் -பாம்பணை அப்பன் / கமல நாதன் / நின்ற திருக் கோலம் / மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -வேதாலயா விமானம்
தீர்த்தம் -பாப விநாச தீர்த்தம் -பாம்பை ஆறு

பிரமானால் சபிக்கப்பட்ட நாரதர் இவ்விடத்திற்கு வந்து த்வம் புரிந்து பெருமாளின் அருளால் இங்கு இருந்து
பல்லாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட -நாரதீய புராணம் மற்றும் பல நூல்களை இயற்றினார்
-நகுலனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்ட வூர்
திருப் பாண்டவனூர் -என்பதே மருவி -திரு வண் வண்டூர் –ஆகியது
மார்க்கண்டேயர் பெருமாளின் மூக்கு வழியே உள் புகுந்து அனைத்து உலகங்களைக் கண்டதும் இங்கு தான் நடந்தது

பம்பை ஆற்றின் வடகரையில்
ரக்ஷண ஸ்தர்யம் ரஷித்தே தீருவார் –6-1-வைகல் பூங்கழிவாய்
திருவன் உண்டு -மருவி -இந்த பெயர் –
பாம்பணை அப்பன் -பம்பா அணைந்த அப்பன் -நின்ற திருக் கோலம்
சனகாதிகள் -ப்ரஹ்மம் –நாரதர் மேலே சதுர்முகன் சாபம் –

மூலவர் ஸ்ரீ பாம்பணை யப்பன், ஸ்ரீ கமல நாதன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர் ஸ்ரீ கமல நாதன்
தாயார் ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ பம்பா தீர்த்தம்
விமானம் ஸ்ரீ வேதாலய விமானம்
மண்டலம் ஸ்ரீ மலை நாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ செங்கணூர்
நாமாவளி ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ பாம்பணையப்பன் ஸ்வாமிநே நமஹ

————–

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

வைகல் பூங்கழி வாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந் நெல் உயர் திரு வண் வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–6-1-1-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே–6-1-2-

திறங்களாகி எங்கும் செய்களூடுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூ ருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே–6-1-3-

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே–6-1-4-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட வன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திரு வண் வண்டூர்
புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே–6-1-5-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண் டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே–6-1-6-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே–6-1-7-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே–6-1-8-

அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல் வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே–6-1-9-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-

திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் இந்தப் பக்கத்தில் அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம் நாரதனுக்கும் பிரம்மனுக்கும் வந்த வாக்கு வாதத்தில் நாரதனை பிரம்மன் சபித்துவிடவே பிரம்மனைவிட்டுப் பிரிந்த நாரதன்
இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்துக் கடுந்தவமிருந்து சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவத்தை பற்றிய ஞானத்தைத் தமக்கு உபதேசிக்க
வேண்டுமென்று கேட்க, இவன் தவத்தை மெச்சிய திருமாலும் அவ்விதமேயருளினார்.
அதனால் திருமாலே பரதத்துவம் என்றும் சகலமும் அவரிடமே அடக்கமென்றும் அவரைப் பூஜிக்கும் முறை துதிப்பாக்கள் ஆகியன
கொண்டதாக நாலாயிரம் அடிகள் கொண்ட ஒரு நூலை நாரதீய புராணம் என்ற பெயரில் இவ்விடத்திலே இயற்றியதாக வரலாறு.

மூலவர்– பாம்பனையப்பன், கமலநாதன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்–  கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்–  பம்பை தீர்த்தம்
விமானம்–   வேதாலய விமானம்
காட்சி கண்டவர்கள்–   நாரதர்.

பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால்
நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது.
இவ்வூரில் பூமியைத் தோண்டும்போது புதிய பெருமாள் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு இவ்விடத்தில் கொணர்ந்து புதிய
மண்டபங்களும் சன்னதிகளும் ஸ்தாபிக்கப்பட்டன.
இத்தலம் வட்டவடிவான கருவறையுடன் கூடியிருப்பதும் சங்கு, சக்கர, கதா, பத்ம பானியாகப் பெருமாள் மேற்கு நோக்கி
எழுந்தருளியிருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
இத்தலத்திற்குள் நுழையும் போது (மேற்கு புற நுழைவாசலில்,வாசலின் மேல் காளிங்கனின் மேல் (காளிங்கன் என்னும் கொடிய
விஷங்கொண்ட ஐந்து தலை நாகம்) கண்ணன் நர்த்தனமிடுவதுபோல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு பொருந்தியதாகும். இக்கண்ணன்
காளிங்கனின் தலை மீது ஒரு காலை ஊன்றிக்கொண்டு ஒரு காலை வலப்புறம் வளைத்து தூக்கித் தனது இரண்டு கரங்களையும் (பேலன்ஸ் செய்வது போல) நீட்டி நிற்கின்ற காட்சி காணக் காணக் கண்ணையும் கருத்தையும் விட்டு அகலாத ஒன்றாகும். இக்கண்ணன் தூய நீல நிறத்தில் அமைந்திருப்பது
இன்னுமோர் பேரழகாகும்.
கண்ணனைத் தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டு பக்கங்களிலும் தசாவதாரக் காட்சி மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற பம்பை நதிக்கு வடக்கே இத்தலம் அமைந்துள்ளதை ‘தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’ என்று
நம்மாழ்வார் தன் பாசுரத்திலும் சுட்டுகிறார்.
பஞ்ச பாண்டவர்கள் சம்பந்த முற்ற ஸ்தலங்களில் இந்த தலம் அடிக்கடி விழாக்களும் முக்கியமான நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடமாகும்.

தேவும் உலகும் உயிரும் திரிந்து நிற்கும்
யாவும் படைத்த இறை கண்டீர் பூவில்
திரு வண் வண்டூர் உறையும் தேவாதி தேவன்
மரு வண் வண்டு ஊர் துளவ மால் –67–

(இ – ள்.) பூவில் – இப்பூமியிலுள்ள,
திருவண்வண்டூர் – திருவண்வண்டூரென்னுந் திவ்வியதலத்தில்,
உறையும் – நித்தியவாசஞ்செய்கின்ற,
தேவாதி தேவன் – தேவர்கட்கெல்லாந் தேவனான, –
மரு – வாசனையுடையதும்,
வள் – வளப்பமுடையதும்,
வண்டு ஊர – வண்டுகள் மொய்க்கப் பெற்றதுமாகிய,
துளவம் – திருத்துழாய்மாலையை யணிந்த,
மால் – திருமால், –
தேவும் – (பிரமன் முதலிய) தேவர்களையும்,
உலகும் – உலகங்களையும்,
உயிரும் – (அவ்வுலகங்களிலுள்ள) பிராணிகளையும்,
திரிந்து நிற்கும் யாவும் – (கீழ்க்கூறிய பொருள்களைவிட) வேறாகநிற்கின்ற அசேதநப்பொருள்க ளெல்லாவற்றையும்
படைத்த – ஆதியிற்சிருட்டித்த,
இறை – கடவுளாவன்; (எ – று.) – கண் டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம்.

திருமாலே சேதநம் அசேதநம் என்னும் எல்லாப்பொருள்கட்கும் ஆதிகாரணனென்பதாம்.
“ஒன்றுந் தேவுமுலகு முயிரும் மற்றும்யாது மில்லா,
வன்று நான்முகன்றன்னொடு தேவருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள், நின்றவாதிப்பிரான்” என்றார் நம்மாழ்வாரும்.
நித்தியமான உயிர்களைப் படைத்தலாவது – அவற்றிற்குக் கரணகளேபரங்களைக் கொடுத்தல்.
இனி, தேவும் உலகும் உயிருமாகிய, திரிந்து நிற்கும் – ஜங்கமமாகியும் ஸ்தாவரமாகியு முள்ள, யாவும் எனப் பொருள்கூறுவாரு முளர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருவாறன் விளை–ஸ்ரீ ஆரம் முளா

March 24, 2024

மூலவர் -திருக் குறள் அப்பன் -பார்த்த சாரதி / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பத்மாசனி நாச்சியார்
விமானம் -வாமன விமானம்
தீர்த்தம் -வேத வியாச சரஸ் -பம்பா தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

மது கைடபர்களை அழித்து திரு மால் பிரமனுக்கு ஸ்ருஷ்டி ரஹஸ்யத்தை அளித்ததும் –
அர்ஜுனனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்ட திருத் தலமுமாகும்-
நிலக்கண் என்ற இடத்தில் இருந்து நாராயணப் பெருமாள் இந்த ஷேத்ரதிற்கு வர வேண்டும் என்ற ஆசையில்
ஒரு பிரம்மசாரி வடிவை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து ஒரு படகில் இங்கு வந்தார்
பம்பை ஆற்றின் கரையில் உள்ள ஸ்தலம் –
ஆனந்த விருத்தி -காட்டிய குணம் -பலர் அடியார் முன்பு –பாம்பணையான் -7-10- இன்பம் பயக்க —
பாம்பை ஆறு அருகில் -படகு போட்டி – இடை -கடை -ஆறு கழிகளால் வேயப்பட்ட படகு -இன்றும் படகு போட்டி பிரசித்தம் –
மாங்காட்டு நாம்பூதிரி -திரு ஓணம் வந்து அதிதி –பெருமாளை சேவித்து விருந்தோம்பல் செய்ததால் தொடங்கிற்று

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ ஆரமுளா
மூலவர் ஸ்ரீ திருக் குறளப்பன், ஸ்ரீ சேஷாசனர்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திருக் குறளப்பன்
தாயார் ஸ்ரீ பத்மாஸனி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ வேத வியாச சரஸ்
விமானம் ஸ்ரீ வாமன விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ செங்கணூர்
நாமாவளி ஸ்ரீ பத்மாசன நாச்சியார் ஸமேத ஸ்ரீ திருக் குறளப்பன் ஸ்வாமிநே நமஹ

——————

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கை தொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மது சூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வியைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

வாய்க்குங் கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ் செந்நெலும் வயல் சூழ் திரு வாறன் விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுல கீசன் வட மதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

மலரடிப் போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பல ரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந் துறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
உலக மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே–7-10-5-

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன் விளை என்னும் நீணகர மதுவே–7-10-6-

நீணகர மதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன் விளை
நீணகரத் துறை கின்ற பிரான் நெடு மால் கண்ணன் விண்ணவர் கோன்
வாண புரம் புக்கு முக் கட் பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே–7-10-7-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன் விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீ வினை உள்ளத்தின் சார் வல்லவே–7-10-8-

தீவினை உள்ளத்தின் சார் வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நா வினுள்ளும் உள்ளத் துள்ளும் அமைந்த தொழிலி னுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கால்?’ என்னு மென் சிந்தனையே–7-10-9-

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே–7-10-10-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

திருவாறன் விளை (ஆரம்முளா)

பஞ்சபாண்டவர்களுள் அர்ஜு னனால் புதுப்பிக்கப்பட்ட இத்தலம் இன்றும் அவன் பெயரைப் பறை சாற்றிக் கொண்டு அர்ஜு னன் அம்பலம்
என்று சொல்லத்தக்க அளவில் சிறந்து விளங்குகிறது.

பாரத யுத்தத்தில் கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் பதிந்துவிட்டது. அதனைத் தோள் கொடுத்து எடுத்து நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்த
கர்ணன் அச்சக்கரத்தை தோள்கொடுத்து தூக்கும்போது அர்ஜு னன் அம்பெய்து கர்ணனைக் கொன்றான். இவ்வாறு நிராயுத பாணியான
கர்ணனைக் கொன்றது அர்ஜு னனுக்கு நியாயமாகப் படவில்லை. யுத்த தர்மத்தின்படி அது பெரும் பாவம் என்றும் அதிலும்தன்போன்றோர் செய்யத் தகாத காரியமென்றும் பெரிதும் வருந்தினான்அர்ஜு னன்.

ஏற்கனவே பாண்டவர்கள் கேரள தேசத்தில் மறைந்து வாழும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலத்தைப் புதுப்பித்தனர். அதாவது
ஒவ்வொருவரும் ஒரு திவ்ய தேசத்தை தெரிவு செய்து தமது எண்ணத்தை ஈடேற்ற தவமியற்றினர்.

அர்ஜு னன் இந்த இடத்தில் இருந்த பெருமாளைத் தியானித்து தவமிருந்ததாகவும், இத்தலத்திற்கு அருகாமையில் இருந்த வன்னி மரத்தில்
தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அந்த வன்னிமரம் இத்தலத்தருகே இருந்தது என்பதும் ஐதீஹம்.

போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு முரணாக கொன்றதால் தனது நெஞ்சம் அமைதியுறவும், யுத்தத்தில் உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும்
மீண்டும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்ததாகவும் எம்பெருமான் பார்த்தசாரதியாகவே காட்சியளித்ததாகவும் ஐதீஹம்.

அர்ஜு னன் இரண்டாம் முறையாக வந்த போதே இத்தலத்தை புதுப்பித்ததாகவும் ஐதீஹம்.

மூலவர்
திருக்குறளப்பன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– பத்தமாஸனித்தாயார்
தீர்த்தம்- வேதவியாச தீர்த்தம். பம்பா தீர்த்தம்.
விமானம்– வாமன விமானம்
காட்சி கண்டவர்கள்-  பிரம்மன், வேதவியாசர், அர்ஜு னன்.

எம்பெருமானுக்கு திருக்குறளப்பன் என்பது வாமனவதாரத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. பிரம்மன், வாமன
அவதார மூர்த்தியை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு.

இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் வன்னி மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ் தம்பத்தின் முன்பு குவித்து
வைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில்
இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜு னன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது
இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும் துலாபாரம்கொடுக்கும் முறை நடைமுறைப் பழக்கத்திலிருந்து வருகிறது இங்கு
துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது.

இங்கு அர்ஜு னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி சிலைஒன்று உள்ளது. இவரது கரம் மூளியாக இருந்ததாகவும், கோவில் வேலை
பார்க்கும் தந்திரி. தங்கத்தால் கை செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது.
பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ள இக்காட்சி இக்கோவிலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

இந்த தலத்தில்தான் புதுத்தைவமான ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக
சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் பஜனைப் பாடல்களுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிடுங்கிச் சென்று விட்டனர். பிரம்மன் திருமாலைத் துதித்து
நின்றான். திருமால் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார்.
இதற்கு நன்றி கூறும் முகத்தான் இத்தலத்தில் பிரம்மன் திருமாலைக் குறித்து தவமிருந்தான் என கூறுவர்

சென்று புனல் மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்று புலன் அடக்கி விட்டாலும் இன் தமிழால்
மாறன் விளைத்த மறை ஒதார்க்கு இல்லையே
ஆறன் விளைத் திருமால் அன்பு –71–

(இ – ள்.) சென்று – தீர்த்தயாத்திரையாகச் சென்று,
புனல் மூழ்கி – புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்து,
செய் தவங்கள் செய்தாலும் செய்தற்கு உரிய (சிறந்த) தவங்களைச் செய்தாலும்,
புலன் ஐந்து வென்று அடக்கி விட்டாலும் – தமது ஐம்பொறிகளையும் (தமக்குஉரிய ஐம்புலன்களிற் செல்லவொட்டாது) சயித்துஅடக்கினாலும்,
மாறன் – நம்மாழ்வார்,
இன் தமிழால் விளைத்த மறை – செவிக்கினிய தமிழ்ப்பாடலாகச் செய்தருளிய வேதத்தை,
ஓதார்க்கு – ஓதியுணராதவர்க்கு,
ஆறன்விளை திருமால் அன்பு – திருவாறன் விளையென்னுந் திருப்பதியி லெழுந்தருளிய எம்பெருமானது திருவருள்,
இல்லை – உண்டாகாது; (எ – று.)

நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திருவாய்மொழியை ஓதியுணர்ந்தவரிடத்துத் திருமால் எளிதில் எவ்வாறு திருவருள் புரிவானோ,
அவ்வாறாகப் புண்ணியதீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்தல் உக்கிரமான தவங்களைச்செய்தல் ஐம்பொறிகளையடக்குதல்
முதலிய அரும்பெருந்தொழில்களைச் செய்பவரிடத்தும் திருவருள்செய்யா னென்பதாம்.
வேதத்தின் முற்பகுதியாகிய கர்மகாண்டத்தை முக்கியமாகக்கொண்டு அதன்படி தவம்முதலியன செய்தால்
அவை அழியுமியல்பினவான சுவர்க்கம் முதலிய காமியபயன்களைத் தருவனவாய் முத்திக்கே நேரே காரணமாகாமையால்
அவ்வாறாகிய அரிய தொழிலை மேற்கொள்பவரிடத்தில் திருமாலின் திருவருள் எளிதி லுண்டாகாது;
திருக்குருகூரில் அவதரித்து லோகோபகாரமாகப் பரப்பிரமசுவரூபத்தை உள்ளபடி உணர்ந்து யாவரும் அறியும்படி
“ஆரார்வானவர்கள் செவிக்கினியசெஞ்சொல்லே” என்றவாறு இனியசெஞ்சொற்களாக வெளியிட்டு
உயிர்களை இனிஒருபிறப்புமின்றி முத்திபெறுமாறு செய்த பொய்யில்புலவராகிய நம்மாழ்வாருடைய அருளிச்செயலைக்
கேட்டும் ஓதியும் உணர்ந்து நிற்பவரிடத்துத் திருமாலின் திருவருள் எளிதில் சித்திக்கு மென்க.
‘அராஜகமான தேசத்திலே பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக்கட்டிவிட்டால் அது எடுத்துத் தன்கழுத்திலே
வைத்துக்கொள்ளப்பெற்றவன் அரசனாய்விடுமாறுபோல இவ்வுலகத்தில் வைதிகமரியாதை அழிந்துபோன
சமயத்திலே அதனை நிலைநிறுத்துதற்பொருட்டு எம்பெருமான் தனது நிரங்குசஸ்வாதந்த்ரியத்தால் பத்தாத்மாக்களிலொருவர்
பக்கல் விசேஷகடாக்ஷஞ்செய்ய, அதனால் அவர் மற்றையோரையும் சீர்திருத்தும்படி சிறப்புற்றனர்’ என்று ஆன்றோர் கூறுமாறு
எம்பெருமான் உலகத்தைத் திருத்துவதற்காகவே விசேஷகடாக்ஷஞ்செய்து நம்மாழ்வாரைத் திருவவதரிப்பித்தானாதலால்,
அவரது அருளிச்செயலை யோதினவரிடத்துத் திருமாலருள் சித்திக்கு மென்னலாம்.
“தவஞ்செய்வதும் தழல்வேள்விமுடிப்பதும் தம்மையொறுத்,
தெவன்செய்யு மெய்யன் குருகைப்பிரா னெம்மை யின்னமொரு,
பவஞ்செய்கைமாற்றிய பண்டிதன் வண்டமிழ்ப்பாவு முண்டே,
யவஞ்செய்கைமாற்றச் செவியுண்டு நாவுண் டறிவுமுண்டே” என்ற சடகோபரந்தாதி இங்குக் காணத்தக்கது.
இனி, பலவிஷயங்களையும்பற்றிக் கண்டபடி கூறுகின்ற வடமொழிவேதம்போலவன்றி, எம்பெருமானது
ஸ்வரூபரூபகுண விபூதிகளையே கூறிக்கொண்டுசெல்லுந் திருவாய்மொழியை யோதினோர்க்கே
திருமாலினிடத்துப் பக்தியுண்டாகு மென்று இச்செய்யுட்குப் பொருள் கூறினுமாம். ‘ஓதாதார்க்கு’ என்றும் பாடம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் புலியூர் –ஸ்ரீ குட்ட நாட்டு திருப் புலியூர்

March 24, 2024

மூலவர் -மாய பிரான் / நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் – பொற் கொடி நாச்சியார் –
விமானம் -புருஷோத்தம விமானம் –
தீர்த்தம் -ப்ரஜ்ஜா சரஸ் –பூஞ்சுனை தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

வ்ருஷா தர்பி அரசவைக்கு சப்த ரிஷிகள் வந்தனர் -நாட்டில் பஞ்சம் தலை விரித்த படியால் ரிஷிகள் தானம் வாங்க மறுத்தனர்
-அரசனும் அவர்களுக்குத் தெரியாமல் வாழை பழத்தில் தங்கம் வைத்துக் கொடுத்தார் -அதனை அறிந்த ரிஷிகள் அவற்றை
ஏற்றுக் கொள்ள மறுக்க கோபம் கொண்ட அரசன் க்ருத்யை என்ற பெண் பிசாசை ஏவினான்
-இந்திரன் புலி வடத்தில் அவளைக் கொன்றான் -புலி வடத்தில் வந்த படியால் திருப் புலியூர் என்ற பெயர்
– பகவான் சப்த ரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் மாயப் பிரானாகக் காட்சி கொடுத்தார் –
இத்திருத் தலம் பீம சேனனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது –
நாயக லக்ஷணம் காட்டிய குணம் -மாயப்பிரான் –/ தோழி -திரு மணம் ஆனது போலே உள்ளதே –
இவள் நேர் பட்டது -அம் தண் துழாய் கமழ்கிறாள்
12 பகுதிகள் குட நாடு இத்யாதி –

மூலவர் ஸ்ரீ மாயப் பிரான்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மாயப் பிரான்
தாயார் ஸ்ரீ பொற் கொடி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ பிரஞ்ஞா ஸரஸ்
விமானம் ஸ்ரீ புருஷோத்தம விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் செங்கணூர்
நாமாவளி ஸ்ரீ பொற் கொடி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மாயப் பிரான் ஸ்வாமிநே நமஹ

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கண மங்கை –சிறிய திருமடல் – 71-

——————–

ஸ்ரீ நம்மாழ்வார்–11-பாசுரங்கள் மங்களாசாசனம்

கரு மாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அரு மாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல் கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3-

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூ வுலகு உண்டு உமிழ் தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்த தன்றிப் பேச்சு இலள் இன்று இப் புனை இழையே–8-9-4-

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–8-9-7-

மட வரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வட மொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
பட வர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8-

பரவாள் இவள் நின்று இராப் பகல் பனி நீர் நிறக் கண்ண பிரான்
விரவா ரிசை மறை வேதிய ரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந் தொறும் தாமரைக்கயம் தீவிகை நின் றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

ஒரு சமயம் மன்னன் சிபியின் மைந்தன் அரசாண்டு வரும்பொழுது அவனுக்கு கடுமையான நோயும், நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அச்சமயம் அந்நாட்டிற்கு வருகை தந்த சப்தரிஷிகளை வேண்டிய மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் உண்டான பேராபத்தைப் போக்கினால்தான்
முனிவர்கட்குத் தானம் கொடுப்பதாகக் கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்டு சினந்த ரிஷிகள் மன்னர்களிடம் முனிவர்கள் யாதொரு
தானமும் பெறக்கூடாது. அதிலும் உன் போன்ற மன்னர்களிடம் பெறுதல் பெரிய பாவமென்று சப்தரிஷிகள் மறுத்துவிட்டனர்.

இருப்பினும் சிபியின் மைந்தனான வ்ருஷாதர்பி மந்திரிகள் மூலமாக மறைமுகமாக தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைக்க அதையும்
முனிவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் வெகுண்ட மன்னன் ஒரு யாகத்தைச் செய்து அந்த யாகத்தில் தோன்றிய தேவதையை சப்தரிஷிகளைக்
கொல்வதற்காக ஏவினான்.
ரிஷிகள் மஹாவிஷ்ணுவைத் துதித்து நிற்க, அம்மாத்திரத்திலேயே மஹாவிஷ்ணு இந்திரனை அனுப்பி இந்திரன் புலியாக மாறி தேவதையைக்
கடித்துக் குதறினான். இதனால் திருப்புலியூராயிற்று என்பர்.
ரிஷிகள் திருமால் ஒருவன்தான் பரம்பொருள் என்று இவ்விடத்து நிர்ணயம் செய்ததால் திருமால் அவர்கட்கு மாயப் பிரானாகக் காட்சி
கொடுத்து மோட்சமளித்தார்.

மூலவர்–  மாயப் பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்–   பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம்–  ப்ரஞ்ஞா ஸரஸ்
விமானம்–   புருஷோத்தம விமானம்
காட்சி கண்டவர்கள்–   சப்த ரிஷிகள்

பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமனும் திருமாலைக்குறித்து தவம் புரிந்தான். பீமனைப்
போன்றே அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பைக் கொண்டுத் திகழ்கிறது இத்தலம். இப்பகுதியில் வாழும் சற்று விஷயமறிந்த பெரியவர்கள்
இதனை பீமஷேத்ரம் என்றே கூறுகின்றனர்.
இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள உயர்ந்த கொடிமரம் (துவஜஸ்தம்பம்) வட்டவடிவமான (மூலஸ்தானம்) கருவறை அமைப்பும் மிக்க
எழில் வாய்ந்ததாகும்.

முதல் வண்ணம் ஆமே முலை வண்ணம் முன்னை
விதி வண்ணம் நீங்கி விடுமே சதுரத்
திருப் புலியூர் நின்றான் திருத் தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின் –63-

(இ – ள்.) சதுரம் – அழகிய,
திருப்புலியூர் – திருப்புலியூரென்னுந் திவ்வியதலத்தில்,
நின்றான் – நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்றமாயப்பிரானது,
திரு தண் துழாயின் – குளிர்ந்த திருத்துழாய்மாலையினது,
மரு – நறுமணத்தை,
பு(ல்)லி – பொருந்தி,
ஊர் – தவழ்ந்துசெல்லுந்தன் மையுடைய,
தென்றல் – தென்றற்காற்றானது,
வரின் – வந்துவீசுமாயின், – (அப்பொழுது, எனக்கு),
முலை வண்ணம் – தனத்தின் நிறம், (காமவிகாரத்தால் ஏற்பட்ட பசலைநிறம் மாறி),
முதல் வண்ணம் ஆம் – முன்னைய நிறமே வந்து சேரும்;
முன்னே விதிவண்ணம் – முற்பிறப்பிற்செய்த தீவினையின் பயனாக நேர்ந்த பிரிவுத்துயர் முழுவதும்,
நீங்கிவிடும் – அடியோடு போய்விடும்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அப்பிரிவுத்துயரை யாற்றியடக்கும் வல்லமை யிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்து,
‘இனித் தலைமகனது திருத்துழாயின்நறுமணத்தைக் கொண்டுவந்து இளங்காற்று என்மீது வீசினால்தான்
யான் உயிர்பிழைத்து முன்னையநிலையைப் பெறுதல் கூடும்’ என்று தனது வேறுபாட்டைப் போக்குதற்கு
உரிய உபாயத்தைக் கூறி, அறத்தொடுநின்றது, இது. இதனை, தோழி செவிலியர்க்கு அறத்தொடுநிற்றலாகக் கொள்வாருமுளர்.

எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாத நிலையில் காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம் நீட்டித்ததாகத் தோன்ற,
வருந்துகின்ற ஐயங்கார் தமது அன்பர்களைநோக்கி எம்பெருமானது திருவருளைப் பெற்ற வளவிலே
யான் உய்வுபெறுவே னென்று கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
எம்பெருமான் திருவருள்புரிந்தால், நிலைகலங்குதலில்லாது பக்தி உறுதிப்படுமென்பது, முதலடியின் உள்ளுறை.
“போயபிழையும் புகுதருவானின் றனவும், தீயினிற்றூசாகும்” என்றபடி எம்பெருமானது திருவருளைப் பெற்றார்க்கு
முன்னையவினைகள்யாவும் அகலு மாதலால், “முன்விதிவண்ணம் நீங்கிவிடும்’ என்றன ரென்க.
விவரம் உய்த்துணர்க. “முன்னை, விதி வண்ணம்’ என்றும் பாடம் வழங்கும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருச் சிற்றாறு திருச் செங்குன்றூர்

March 24, 2024

மூலவர் -இம்யவரப்பன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம்
தாயார் -செங்கமல வல்லி
விமானம் -ஜகத் ஜ்யோதி விமானம்
தீர்த்தம் -சங்கு தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

தர்ம புத்திரர் -தம் குருவான துரோணரை கொன்றதால் குருபாதக தோஷம் -வர -பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் இங்கு வந்து
சந்நிதியை ஜீர்ணோத்தாரணம் செய்து திருச் சிற்றாற்றில் தீர்த்தம் ஆடிப் பாவத்தைப் போக்கிக் கொண்டனர் –
தர்ம புத்திரர் இந்தப் பெருமாளை ப்ரதிஷ்டை செய்தார்
பெருமாள் இங்கு சங்கு சக்கரம் கை மாற்றி வலது திருக் கையிலே சங்கும் இடது திருக் கையிலே சக்கரமும் தரித்து இருப்பார் –
பாம்பை நதி கிளை நதி சிற்றாறு –
ஸுர்யம் காட்டிய குணம் –வார் கெடா அருவி –பரிய வேண்டாம்-8-4-

மூலவர் ஸ்ரீ இமய வரப்பன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர் ஸ்ரீ இமய வரப்பன்
தாயார் ஸ்ரீ செங்கமல வல்லி
தீர்த்தம் ஸ்ரீ சங்க தீர்த்தம்
விமானம் ஸ்ரீ ஜகஜ் ஜோதி விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ திருவல்லா
நாமாவளி ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ இமயவரப்பன் ஸ்வாமிநே நமஹ

—————-

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடி றுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

எங்கள் செல் சார்வு யாமுடை யமுதம் இமைய வரப்பன் என் னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்தது அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த வெம் பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம் பெருமான்
தென் திசைக் கணி கொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால்
நின்ற வெம் பெருமான் அடி யல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

பிறிதில்லை எனக்குப் பெரிய மூ வுலகும் நிறையப் பேரு ருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனு றைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே—8-4-5-

எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறி வரியானைத் தடங்கடல் பள்ளி யம்மானை
மனக் கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ் வாயும் செவ் வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச் செழு நிலைத் தேவர் நான் மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன் கையர் வெங் கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம் பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழி வில்லை யவனே புகழ் வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார் கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-

அமர்ந்த நாதனை யவர வராகி அவ ரவர் கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரை யானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத் தாமன் இறந்துவிட்டான் என்று சொல்ல வேண்டிய
தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி (அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில்
உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.
தான் சொன்ன பொய்யே துரோணரின் இறப்புக்குக் காரணமாய் இருந்ததை எண்ணி தர்மன் அதற்குப் பெரிதும் மனம் வருந்தி போர் முடிந்த
பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக தவமிருந்ததையும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தை தர்மன்
புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தர்மனே பிரதிஷ்டை செய்தாரென இங்கு வழங்கப்படுகிறது.

தர்மபுத்திரன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் பெரிதும் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே
குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்று அவர்கட்கு தந்தை யொப்பத் திகழ்ந்த திருமால் இவ்விடத்து அவர்கட்கு காட்சி
கொடுத்ததால் “இமையவரப்பன்” என்ற திருநாமம் இவ்விடத்து எம்பெருமானுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறிய
முடிகிறது.

மூலவர்–இமையவரப்பன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– செங்கமலவல்லி
தீர்த்தம்–  சிற்றாறு
விமானம்–  ஜெகஜோதி விமானம்
காட்சி கண்டவர்கள்–   சிவன்

இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன்.
நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் எடுத்தாண்டுள்ளார்

வர வேண்டும் கண்டாய் மதி கலங்கி விக்குள்
பொரவே உயிர் மாயும் போழ்து பரமேட்டி
செங்குன்றூர் மாலே சிறைப் பறவை மேல் கனகப்
பைங்குன்று ஊர் கார் போல் பறந்து –64-

(இ – ள்.) பரமேட்டி – பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
திரு செங்குன்றூர் மாலே – திருச்செங்குன்றூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! –
மதி கலங்கி – (எனது) அறிவு ஒடுங்கி,
விக்குள் பொர – விக்கலானது உபத்திரவிக்க,
உயிர் மாயும் போழ்து – (எனது) உயிர் நீங்கும் அந்திம காலத்தில்,
சிறைபறவை மேல் – இறகுகளையுடைய கருடாழ்வான்மீது,
பைங் கனகம் குன்று ஊர் கார்போல் – பசும்பொன் மயமான மலையின் மீது ஏறிவருகின்ற காளமேகம்போல,
பறந்து வரவேண்டும் – விரைந்துஎழுந்தருளிச் சேவைசாதிக்கவேண்டும்; (எ – று.) –
கண்டாய் – முன்னிலையசை;
நீ அந்திமகாலத்தி லெழுந்தருளிவந்து சேவைசாதித்தால்தான் எனக்கு நற்கதியுண்டு என்ற தேற்றப்பொருளை யுட்கொண்டதாம்.

இப்பிறப்பின் முடிவிலே, மறுபிறப்பில்லாதபடி என்னைக்காக்குமாறு நீ பெரிய திருவடியின்மே லெழுந்தருளிவந்து
காட்சிதரவேண்டு மென்பதாம்.
“சாமிடத் தென்னைக் குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கரமேந்தினானே,”
“உடலம்புயங்கத்துரிபோல்விடுமென்றுவணப்புள்ளி, னடலம்புயமிசைநீவர வேண்டும்” என்றபடி,
ஐம்பொறிகளுங் கலங்கி மரணநோய் நேர்கின்ற அப்போதையில் எம்பெருமானை நினைத்து வேண்டுதல் அரியதாகு மாதலால்
ஐம்பொறிகளும் தமதுநிலையில்நிற்க மனம் செம்மைப்பட்டிருக்கின்ற இப்போதே சொல்லிவைத்தன ரென்க.
பரமேட்டி = பரமேஷ்டீ; சிறந்ததானமாகிய பரமபதத்தில் நிலையாக வீற்றிருப்பவ னென்பது, அவயவப்பொருள்.
பெரிய திருவடிக்குப் பொற்குன்றும், அத்திருவடியின்மீது எழுந்தருளுந் திருமாலுக்குக் காளமேகமும் உவமையாம்;
“கருமுகில் தாமரைக்காடு பூத்து நீ, டிருசுட ரிருபுறத்தேந்தி யேடவிழ்,
திருவொடும் பொலியவோர்செம்பொற்குன்றின்மேல்,
வருவபோற் கலுழன்மேல்வந்து தோன்றினான்” என்ற கம்பராமாயணம் இங்குக் காணத்தக்கது.
பெரிய திருவடியினது தொழிலாகிய ‘பறந்து’ என்பதனை அதனையூருந் திருமாலின் மேலேற்றிப்
பறந்துவரவேண்டு மென்று கூறினார்போலும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கடித் தானம்

March 24, 2024

மூலவர் -அற்புத நாராயணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கற்பக வல்லி
விமானம் -புண்ய கோடி விமானம்
தீர்த்தம் -பூமி தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

கடி -பரிமளம் / பரிமளம் மிக்க சோலைகள் நிறைந்த வூர் –
கடி -நாழிகை -24 நிமிடம் – இந்த க்ஷேத்ரம் இருந்தால் நம் பாவங்கள் கழிக்கப் படுகின்றன
நாரதர் ருக்மாங்கதன் என்ற ஸூ ர்ய வம்சத்து அரசனுடைய ஆஸ்தானத்திற்கு வந்த பொழுது அவரை ராஜா
இந்த ஷேத்ரத்தின் பரிமளம் மிக்க புஷபமாலையோடு கௌரவித்தான் –
அதனுடன் நாரதர் இந்த்ர லோகத்திற்கு செல்ல இந்திரன் அந்த மலர்களைக் கொண்டு வர தேவர்களை அனுப்பினான் –
அவர்கள் ரகசியமாகக் கொண்டு வரும் பொழுது ருக்மாங்கதன் பார்த்து விட்டான் -அவர் பார்த்த படியால் அவர்களால்
மீண்டும் சொர்க்கத்திற்கு செல்ல முடியவில்லை –
ராஜா ஒரு மூதாட்டி இருக்கும் ஏகாதசி விரதத்தின் மகிமையால் அவர்களை மீண்டும் சுவர்க்கத்திற்கு அனுப்பினார்
சகாதேவன் இங்கு பெருமாளை ப்ரதிஷ்டை செய்தார் – பாண்டு மஹா ராஜா மரித்த இடம் –
கதி ஸ்தானம் -வித்யா ஸ்தானம் என்றுமாம் –
8-6 – எல்லியும் காலையும் -க்ருதஞ்ஞாதா கந்தம் –தபஸ் பண்ணி திரு உள்ளம் பெற்று –
தீபக் களா -பாண்டுவை எரியூட்டும் உத்சவம் நடக்கும்

மூலவர் ஸ்ரீ அற்புத நாராயணன், ஸ்ரீ அம்ருத நாராயணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ அத்புத நாராயணன்
தாயார் ஸ்ரீ கற்பகவல்லி
தீர்த்தம் பூமி தீர்த்தம்
விமானம் ஸ்ரீ புண்யக்கோடி விமானம்
மண்டலம் மலை நாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ செங்கணாச்சேரி
நாமாவளி ஸ்ரீ கற்பகவல்லீ ஸமேத ஸ்ரீ அற்புதநாராயணாய நமஹ

—————-

ஸ்ரீ நம்மாழ்வார்-11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக் கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக் கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக் கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திரு வமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறை கின்ற மாயப் பிரானே–8-6-3-

மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத் தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே–8-6-4-

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வ மெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

கொண்மின் இடர் கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7-

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆன விடத்தும் என் நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தன தாய்ப் பதியே–8-6-8-

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத் தமரர் திருக் கடித் தானத்துள்
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே-8-6-9-

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவி யிருப்பது என் னெஞ்சகம்
நற் புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே–8-6-10-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-

கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள்
விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், இத்திருக்கடித்தானமும் ஒன்று.-அஃதாவது கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் மோட்சமும் கிட்டும் என்பது ஐதீஹம்.
இப்பகுதி வாழ் மக்கள் திருக்கடித்தானம் என்றும், திருக்கொடித்தானம் என்றும் இத்தலத்தை விளிக்கின்றனர்

ருக்மாங்கதன் என்ற சூர்ய வம்சத்து மன்னன் ஆட்சி செய்த இடமென்றும் இவனது நந்த வனத்தில் பூத்திருந்த மிக அழகான புஷ்பங்களை
யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்ந்தனர் என்றும், இவ்வாறு மலர்கள் மறைவதை அறிய முற்பட்ட
மன்னன் தன் தபோவலிமையால் தேவர்களையும் தேவ மகளிர்களையும் மலர்கொய்ய வந்த விடத்து பிடித்துக்கொள்ள, தேவர்கள் விண்ணுலகம்
(தேவருலகம்) செல்ல இயலாத நிலை ஏற்பட இதற்குப் பிராயச்சித்தம் கோரி நிற்க, ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும்
பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்கட்குக் கொடுத்தால்தான் அவர்கள் மீண்டும் தேவருலகம் செல்ல முடியுமென்று அசரீரி ஒலித்தது.

அதுபோலவே ருக்மாங்கத மன்னன் தேவர்களை அழைத்து வந்து இத்தலத்து எம்பெருமான் முன்னே நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின்
பலனை அவர்கட்கு கொடுக்கவே அவர்கள் தேவருலகெய்தினார்.

நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.

மூலவர்–  அற்புத நாராயணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கற்பகவல்லி
தீர்த்தம்– பூமி தீர்த்தம்
விமானம்–  புண்யகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்– ருக்மாங்கதன், தேவர்கள்

இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோர் மிக்க பேரழகு வாய்ந்தவர்கள். இத்தலத்திற்குள்ளாகவே தனித்தனி
சன்னதிகளாக இரண்டு சன்னதிகளும் அமைந்துள்ளன.

பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே
இந்தத் தலம் சகாதேவன் கட்டிய ஸ்தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண ஷேத்திரங்களில் மூன்று
ஷேத்திரங்கள் உடனடியாக மோட்சமளிக்க வல்ல தென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது.

சகல சாஸ்திரங்களும் கற்றுத்துறை போய மேதாவியான சகாதேவன் ஜோதிடக்கலை வல்லுனன். அவனால் பிரதிஷ்டை (ஸ்தாபிக்கப்பட்ட)
செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரகம் ஒவ்வொரு 60 ஆண்டுகட்கு ஒரு முறையும் புதிய சக்தியைப் பெற்றுக்கொண்டே சென்று கலியுகம் முடியும் தறுவாயில்
ஜோதிமயமாய் மாறி விண்ணுள் கலக்குமாம்.

இத்தலத்து எம்பெருமானின் பெயர் அற்புத நாராயணன் என்பதாகும்.
இதனை நம்மாழ்வார்.-அற்புதன் நாராயணன் அரிவாமனன்
நிற்பது மேவி இருப்பதும் என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே – என்று எடுத்துரைத்தார்.

காண விரும்பும் என் கண் கையும் தொழ விரும்பும்
பூண விரும்பும் என் தன் புன் தலை தான் வாணன்
திருக்கு அடித்தான் நத்தான் திகிரியான் தண்டான்
திருக் கடித் தானத்தானைச் சென்று –70-

(இ – ள்.) வாணன் – பாணாசுரனது,
திருக்கு – மாறுபாட்டை,
அடித்தான் – ஒழித்தவனும்,
நத்தான் – சங்கத்தையுடையவனும்,
திகிரியான் – திருவாழியாழ்வானை யுடையவனும்,
தண்டான் – கதாயுதத்தையுடையவனுமாகிய,
திருக்கடித்தானத்தானை – திருக்கடித்தானமென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய திருமாலை,
சென்று – போய்க்கிட்டி, –
என் கண் – எனது கண்கள்,
காண – தரிசிப்பதற்கு,
விரும்பும் – ஆசைகொள்ளும்;
கையும் – (எனது) கைகளும்,
தொழ – கூப்பிவணங்குதற்கு, விரும்பும் -;
என்தன் – எனது,
புல் தலைதான் – இழிவான தலையும்,
பூண – (அப்பிரானது திருவடித்தாமரைகளைச்) சூடிக்கொள்வதற்கு, விரும்பும் -; (எ – று.)

பாணாசுரனது விருத்தாந்தத்தை அநுசந்தித்த ஐயங்கார், அதனால் எம்பெருமானே பரதத்துவப்பொருளாவ னென்ற
உண்மையை யுணர்ந்து தமது கண் முதலிய பொறிகள் வகுத்தவிஷயமான அவ்வெம்பெருமானிடத்தே சென்று
தத்தமக்கு உரிய திருத்தொண்டுபுரிய விரும்புவதை இதனால் தெரிவிக்கின்றன ரென்க.
“காண்காணென விரும்புங் கண்கள் கதிரிலகு, பூண்டாரகலத்தான் பொன்மேனி” என்றார் ஆன்றோரும்.
புன்றலை யென்றது – நைச்யாநுஸந்தாநம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்மாழ்வார்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வல்ல வாழ்

March 24, 2024

மூலவர் — கோலப் பிரான் -ஸ்ரீ வல்லபன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -செல்வா திருக் கொழுந்து நாச்சியார் -வாத்சல்ய தேவி
விமானம் -சதுரங்க கோலா விமானம்
தீர்த்தம் -கண்ட கர்ணன் தீர்த்தம் -பம்பா நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

மங்கலத்தம்மாள்-என்ற பெண்மணி ஏகாதசி விரதம் இருந்து துவாதசி அன்று பிரம்மசாரிக்குப் பாரணம் செய்வித்து பின்பு தான் விரதத்தை முடிப்பாள்-
தோலாகாசுரன் என்ற அரக்கன் இதற்கு இடையூறு விளைவிக்க -அவள் பகவானைப் பிரார்த்தித்தாள்-
பிரம்மச்சாரியாக வந்த பகவான் அசுரனை முடித்து துவாதசி பாரணத்திற்கு வரும் பொழுது அவருடைய மான் தோல் விலக
அப்பெண்மணி திரு மார்பு லஷ்மியை ஸேவித்தாள்-
ஆகவே இன்றும் திரு வாழ் மார்பனாகவே சேவை சாதிக்கிறார் -கண்டா கர்ணனுக்கு மோக்ஷம் அளித்த இடம்
திரு வல்லா என்றும் அழைக்கப் படுகிறது -திரு வல்லப -மருவி –
செங்கணாஞ்சேரி அருகில் ஆறு திவ்ய தேசங்கள் –
கிருபை குணம் காட்டி அருளி –மெலிவிலும் சேமம் -5-9 — சரணாகதி இங்கு பெண் நிலையில் –
உப்பு மாங்காய் திதியோதனம் -பிரசாதம் –
சுதர்சன-தனி சந்நிதி
50 -அடி உயரம் கருட கொடி -கீழும் அத்தே அளவாம் -பறக்கும் திருக் கோலம்
விஸ்வ கர்மா -ஸ்தாபித்த கோயில்
12000 வாழை பழம் சமர்ப்பித்து ஆண்டுக்கு ஒரு நாள் உத்சவம்

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ திரு வல்லா
மூலவர் ஸ்ரீ திரு வாழ் மார்பன், ஸ்ரீ கோலப் பிரான், ஸ்ரீ வல்லபன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ வல்லபன்
தாயார் ஸ்ரீ செல்வ திருக் கொழுந்து நாச்சியார், ஸ்ரீ வாத்ஸல்ய தேவீ
தீர்த்தம் ஸ்ரீ கண்டா கர்ண தீர்த்தம், ஸ்ரீ பம்பை நதி
விமானம் ஸ்ரீ சதுரங்க கோல விமானம்
மண்டலம் மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ திருவல்லா
நாமாவளி ஸ்ரீ திருக் கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப் பிரான் ஸ்வாமிநே நமஹ

——————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-7-1-

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-7-2-

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கை மேலங்கை வாய் வைத்து அவள் நாளையுண்ட
மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-5-

உருவினார் பிறவி சேரூன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய்செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும்
மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-6-

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற
மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7-

மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே—9-7-8-

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-

மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10-

மன்னு மரங்கத்து எம் மா மணியை – வல்லவாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை –பெரிய திருமடல் – 118

——————-

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங்கமழும் திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே–5-9-2-

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு யர்ந்தோமப் புகை கமழும் தண் திரு வல்ல வாழ்
நீடு றைகின்ற பிரான் கழல் காண்டுங்கொல் நிச்சலுமே–5-9-3-

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திருவல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே–5-9-4-

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே–3-9-5-

காண்பதெஞ் ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே–5-9-6-

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்ல வாழ்
நாதன் இஞ் ஞால முண்ட நம் பிரான் தன்னை நாடொறுமே-5-9-7-

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலையுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்
சுழலின் மலி சக்கரப் பெரு மானது தொல் லருளே–5-9-9-

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்? தோழி மீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்ல வாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே–5-9-10-

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11–

திருக்கடித்தானத்திலிருந்து 5 மைல் தூரம் திருவல்லா. திருவல்லாவிலிருந்து 5 மைல் தூரம் திருவண் வண்டூர்

திருவண் வண்டூரிலிருந்து 4 மைல் தூரத்தில் திருச்செங்குன்றூர். இந்த திவ்யதேசத்தை இப்பகுதி வாழ் மக்கள் செங்கானூர் என்றும், சேங்கனூர்
என்றும் வழங்குகின்றனர்.
திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே 4 மைல் தூரத்தில் திருப்புலியூர் என்னும் திவ்யதேசம்.
இங்கிருந்து மீண்டும் செங்கனாச்சேரி சென்று, செங்கனாச்சேரியிலிருந்து 10 கீ.மி. கிழக்கு திசையில் சென்றால் திருவாறன்விளை (திரு ஆரம் முளா]
என்னும் திவ்ய தேசம்.

திருவல்லாவாழ் எனப்படும் இந்த திருவல்லா என்ற திவ்ய ஸ்தலத்தைப் பற்றி கருடபுராணம். மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் குறிப்புகள்
காணப்படுகிறது.

சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதிவிரதையானவர் இத்தலத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று பிரம்மச்சாரிகட்கு
உணவு படைத்து அதன்பின் தான் விரதம் விடும் பழக்கத்தைப் பெற்றவளாய் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும்
அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அப்பெண் அரக் கனை வதம் செய்ய எம்பெருமானை
வேண்டிக்கொண்டாள்.
எம்பெருமானே பிரம்மச்சரிய வேடத்தில் வந்து தோலகாசுரனை எதிர்த்தார் தோலகாசுரன் மிகக் கடுமையாக எம்பெருமானுடன் யுத்தம்
செய்யவே எம்பெருமான் சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை துண்டு துண்டாக்கியது. அவனது தலைவீழ்ந்த இடம் தலையார் என்றும் அவனது கை
விழுந்த இடம் முட்டாறு என்றும் கால்கள் விழுந்த இடம் காலாறு எனவும் இன்றும் அழைக்கப்படுகிறது. தன்னில் படிந்திருந்த ரத்தத்தை சுதர்சனர்
சத்தம் செய்த இடம் சக்கரகாலக் கடவு என்றும் வழங்கப்படுகிறது.
இதன்பின்னர் இச்சக்கரம் திருவல்லாணின் பின்புறம் போய் குடிகொண்டது. அந்த அரக்கனைக் கொன்றுவிட்டு தூவாதசியன்று (விரதம் விட) பாரணைக்கு
வந்ததாகவும், திருவாழ் மார்பை பிரம்மச்சாரி மறைப்பதைக் கண்ட அப்பதிவிரதை வந்திருப்பது எம்பெருமான் என்று ஐயுற்று திருவாழ் மார்பை
தரிசிக்க வேண்டுமென்று கேட்க, அவளின் வேண்டுகோளின்படியே திருவாழ் மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம்.

இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயருண்டானதாக வரலாறு. இந்தப் பதிவிரதையானவள் கமுகு மரத்தின் பாளையில் எம்பெருமானுக்கு
அன்னமிட்டு உப்புமாங்காயை அளித்தாளாம். இதை உண்டுவிட்டு இந்த ஆலயமிருக்குமிடம் வந்து எம்பெருமான் கிழக்கு நோக்கி திரும்பி நின்றதாலும்
திருவல்லா அல்லது திருவல்லர் என்றாயிற்றென்பர்.

கண்டாகர்ணன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன், சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டபடி மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்து
எட்டெழுத்துமந்திரத்தை ஜபிக்கலானான். அம்மந்திரத்தை ஜபிக்கும்போது  கிருஷ்ணநாமம் தவிர வேறு எந்த சப்தமும் தன் செவியில் விழுகாதிருக்கும்
பொருட்டு தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு மணிகளைத் தனது காதில் தொங்கவிட்டு, எந்நேரமும்
அது ஒலித்துக் கொண்டே இருக்கும்படி தனது காதுகளை அசைத்து அதுனூடே (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து மோட்சம்
பெற்றதாக வரலாறு.
இந்த கண்டாகர்ணன் என்பவன் இந்த தலத்தில்தான் தவமிருந்தான்.

மூலவர்–திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன் கோலப்பிரான், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– செல்வத் திருக்கொழுந்துநாச்சியார் வாத்சல்ய தேவி
தீர்த்தம்- கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
விமானம்– சதுரங்க கோல விமானம்
காட்சி கண்டவர்கள்– கண்டா கர்ணன், சங்கரமங்கலத் தம்மையார்

ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று சொன்னால்தான் யாருக்கும் தெரியும்.

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்று மட்டுமே இத்தலத்தில் பெருமானை வழிபட
பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் அந்தக் காலத்தில் நம்பூதிரிகள் அரைகுறை ஆடையுடன் பூஜையில் ஈடுபட்டிருந்ததால் பெண்கள்
அனுமதிக்கப்படவில்லை.
இத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானதென்றும் இன்றும்கூட பூமிக்கடியிலிருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு
தண்ணீர் வருவதாகச் சொல்லப்படுகிறது.

இங்கு நம் கருத்தைக் கவர்வது ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல்தான் 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் கொண்ட இக்கல் பூமிக்கடியில் எவ்வளவு
ஆழத்தில் சென்றுள்ளது என்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லாத இப்பகுதியில் இப்படியொரு பெருங்கல்லை கொணர்ந்து வைத்தது பேராச்சர்யம்.

அண்மையில் இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தாலான கருடாழ்வாரை வைத்துள்ளார்கள். இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு
(கொடிக்கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்துள்ள கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து இதோ புறப்படுகிறேன் என்று
சொல்வதைப் போல வெகுநேர்த்தியாய் எம்பெருமானை (கோலப்பிரானை) பார்ப்பது போல் அமைந்துள்ள இந்த தோற்றம் காண்டொறும் காண்டொறும்
வியக்கத்தக்கதாய் இருப்பதுடன் காலை நேரத்து வெய்யில் இதில் பட்டு ஜொலிக்கும் பேரழகு சொல்லுந் தரமன்று.

பொதுவாக தமிழ்நாட்டில் திவ்ய ஸ்தலங்களில் உள்ள கொடிக்கம்பத்திற்கும் கேரளத்து திவ்ய ஸ்தலங்களில் உள்ள
கொடிக்கம்பத்திற்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. தமிழ்நாட்டில் கொடிக் கம்பத்தில் சிற்பங்களையோ
விக்கிரகங்களையோ காண்பதரிது. ஆனால் மலையாளத்து திவ்ய தேசங்களில் இந்த துவஜ ஸ்தம்பத்தில் சுமார் 6 அல்லது 7 அடி உயரத்தில்
துவஜஸ்தம்பத்தைச் சுற்றி அபூர்வமான சிற்பங்களையும், விக்ரகங்களையும், வடித்துள்ளார்கள். இவைகள் அதிதேவதைகளாகவும் சில ஸ்தலங்களில்
நவக்கிரகங்களாகவும் வடிக்கப் பட்டுள்ளன. இங்கு ஒரு சில பக்தர்களின் இல்லங்களில் வைத்து பூஜிக்கப்படும் திருவாராதன விக்ரகங்களையொத்தே
இவைகள் காணப்படுகின்றன.

மலையாளத்து திவ்ய தேசங்களில் துவஜஸ்தம்பத்தில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் யாவற்றிலும் இத்தலத்துச் சிற்பங்கள் மிகவும் வசீகரத்
தோற்றத்துடனும் தெய்வீகப் பொலிவுடனும் திகழ்வது இத்தலத்திற்கே உரித்தான ஒரு தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தில் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதும், துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு
விடத்திலில்லாத தனிச் சிறப்பாகும்.
திருவட்டாறு திவ்ய தேசத்தைப் போன்றே இங்கும் மூலஸ்தானத்திற்கு முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் மீதேறி இறைவனை வழிபட யாரையும்
அனுமதிப்பதில்லை. நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு பூஜைகள் செய்யும் போத்தி மட்டும் மண்டபத்தின் மீதேறி இறைவனை தெண்டனிட்டு
வணங்கிவிட்டு தனது பூஜைக் கிரமங்களை ஆரம்பிக்கிறார்.

ஸ்ரீ வல்லபனுக்கு பந்தீராயிரம் என்ற வழிபாடு இங்கு பக்தர்களால் சிறப்பாக செய்யப்படும் ஒன்றாகும். அதாவது 12000 வாழைக்காய்களை
குலைகுலையாய் வாங்கி ஏதாவது ஒரு வேள்வி செய்து அந்த வேள்வியில் பழுக்கவைத்துமேளதாளமுடன் புதுக்கூடைகளில் சுமந்து வந்து
திருவல்லாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவர் பாதிப் பழங்கள் நிவேதனம் ஆகும்.
மீதி 6000 பழங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்படும்.
தூவாதசியன்று எம்பெருமானுக்கு இங்கு உணவு படைக்கப்பட்டதைப் போலவே இன்றும் கமுகு பானையில் பிரசாதமும் உப்பு மாங்காயும்
எம்பெருமானுக்கு நைவேத்யமாக அமுது படைக்கப்படுகிறது. இங்கு கமுக மரங்கள் செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் காட்சியை வானார் வண்கமுகும்
மதுமல்லிகை கமழும் என்றும், பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் என்று நம்மாழ்வார் தம் பாசுரங்களில் கமுகின் செழுமையை
எடுத்தாண்டுள்ளார்.

உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளனாய் உகவாது
இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலனாய் திகழ்ந்திட்டு
அருவல்ல வாழ் உருவம் அல்ல என நின்றான்
திருவல்ல வாழ் உறையும் தே–66-

(இ – ள்.) திருவல்லவாழ் உறையும் தே – திருவல்லவாழென்னுந் திவ்விய தலத்திலெழுந்தருளியுள்ள திருமால், –
உகந்தார்க்கு – (தன்னை) விரும்பின மெய்யடியார்கட்கு,
எ ஞான்றும் – எக்காலத்தும்,
உளன் ஆய் – உள்ளவனாகியும், –
உகவாது – தன்னைவிரும்பாமல்,
இகந்தார்க்கு – இல்லையென்று சொல்லும் நாஸ்திகர்க்கு,
எ ஞான்றும் – எக்காலத்தும்,
இலன் ஆய் – இல்லாத வனாகியும்,
திகழ்ந்திட்டு – விளங்கி, –
‘அரு அல்ல – அருவப்பொருளுமாகான்,
வாழ் உருவம் அல்ல – கண்களுக்குப்புலப்பட்டுத்தோன்றுகின்ற உருவப்பொருளு மாகான்’,
என – என்று கூறுமாறு, நின்றான் – இருக்கின்றான்; (எ – று.)

திருமால் – கடவுள் உண்டென்றுசொல்லும் ஆஸ்திகர்க்கு அவர்வேண்டியபடியே உளனென்று சொல்லுமாறு உருவப்பொருளாகியும்,
எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாததொரு பொருள் வழக்கில் வருதற்கே வழியில்லையாதலால்,
கடவுள் இல்லையென்றுசொல்லும் நாஸ்திகர்க்கும் கடவுளென்று எடுத்து அவனுடைய இன்மையைச் சாதிக்க
வேண்டிநிற்றலின் அப்போது அருவப்பொருளாகியும் தோன்றுவன்;
ஆதலால், உண்டென்பார்க்கு உருவப் பொருள்களிலெல்லாம் அந்தராத்மாவாகியும்,
இல்லையென்பார்க்கும் அவ்வருவப்பொருளாகியும் திருமால் எப்போதும் உளனேயாவ னென்பதாம்;
“உளனெனி லுள னவனுருவ மிவ்வுருவுகள்,
உளனலனெனி லலனவனருன மிவ்வருவுகள்,
உளனென விலனென விகைகுணமுடைமையில்,
உளனிருதகைமையொ டொழிவிலன் பரந்தே” என்ற அருளிச்செயலும்,
“சூந்யவாதியான உன்னைக் கேட்போம்; ஈஸ்வரனுடைய இல்லாமையைச் சாதிக்கிற நீ ஈஸ்வரனுளனென்றோ
இலனென்றோ ப்ரதிஜ்ஞைபண்ணுவது? இவையிரண்டு ப்ரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை ஸம்பவியாது;
எத்தாலே யென்னில்? – லோகத்தில் பாவ அபாவ (உண்டு இல்லை என்கிற) சப்தங்களும், பாவஅபாவப்ரதீதிகளும் (அறிவுகளும்)
வித்யமாந (இருக்கிற) வஸ்துவினுடைய அவஸ்தாவிஸேஷகோசரமாகக் காண்கையாலே,
ஆதலால், ஈஸ்வரன் உளனென்னில், அஸ்தித்வ தர்மவிஸிஷ்டனாய் இருக்குமென்று சொல்லிற்றாய்வரும்;
ஈஸ்வரன் உளனலனென்னில், நாஸ்தித்வதர்மவிஸிஷ்டனாயிருக்குமென்று சொல்லிற்றாய்வரும்.
இப்படி ஈஸ்வர வ்யதிரிக்தபதார்த்தங்களை உளவென்னில், அவையும் அஸ்தித்வதர்மவிஸிஷ்டங்களாய்க்கொண்டு
உளவென்று சொல்லிற்றாய்வரும்; தத்வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லையென்னிலும்,
அவை நாஸ்தித்வதர்மவிஸிஷ்டங்களென்று சொல்லிற்றாய்வரும். அந்த அஸ்திநாஸ்திரூபபதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாயிருக்கும்;
கீழ்ச்சொன்ன ப்ரமாணங்களாலே இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்களாகிற குணங்களையுடையனென்று சொல்லுகையாலே,
அஸ்தியென்னிலும் உளன், நாஸ்தியென்னிலும் உளன்; உளனாமிடத்து ஸர்வாந்தராத்மாவாய்க்கொண்டு உளனென்கிறார்” என்ற
வ்யாக்யாநமும் இங்கு உணரத்தக்கன. “சமயிகளாய்ந்தவண்ணம், உளவிலையா யருவா யருவாய வொருமுதலே” என்பர் அழகரந்தாதியிலும்.

புதியன புகுதலாக, இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொதுவாய் வரும் எதிர்மறைக்குறிப்புமுற்றான
“அல்ல’ என்னுஞ் சொல் இங்கு ஆண்பாலுக்கு வந்தது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு மூழிக் களம் –

March 24, 2024

மூலவர் -திரு மூழிக் களத்தான்–ஸ்ரீ ஸூக்தி நாதன் -நின்ற திருக் கோலம் கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -மதுர வேணி நாச்சியார்
விமானம் -ஸுந்தர்ய விமானம்
தீர்த்தம் -பெரும் குளம் -சங்க தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஹாரீத மஹரிஷியின் பெரும் தவத்தால் பகவான் பிரத்யக்ஷமாகி -அவரை வர்ணாஸ்ரம தர்மம்
யோக சாஸ்திரம் மற்றும் திரு மந்த்ரம் ஆகிய நூல்களை இயற்றச் செய்தார்
இவைகள் பகவான் உடைய ஸ்ரீ ஸூக்திகள் -திரு மொழி -வெளியாகிற படியால் -ஸ்ரீ ஸூக்தி நாதன் –திரு மொழிக் களம் -ஆயிற்று
-அதுவே மருவி -திரு மூழிக் களம் –ஆனது
லஷ்மணன் பரதன் இடம் பட்ட அபசாரத்தைப் போக்கிக் கொள்ள இங்கே த்வம் புரிந்து பெருமாளை மீண்டும் பிரதிஷ்டை பண்ணினான் என்பர் –
மஹாத்மாக்களை விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் குளத்திலே கூடு பூரிக்கும் -தூது விடும் பதிகம் –
நிறைய தூண்கள் வேலைப்பாடுகளுடன் –நீண்ட பிரகாரம் -ஸ்ரீ பலி -ஸ்ரீ வேலி -லக்ஷ தீபம் -பிரசித்தம் –

மூலவர் ஸ்ரீ திரு மூழிக் களத்தான், ஸ்ரீ அப்பன், ஸ்ரீ ஸூக்தி நாதன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திரு மூழிக் களத்தான், ஸ்ரீ லக்ஷ்மணன்
தாயார் ஸ்ரீ மதுர வேணி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ சங்க தீர்த்தம், ஸ்ரீ சிற்றாறு
விமானம் ஸ்ரீ சௌந்தர்ய விமானம்
மண்டலம் மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ காலடி
நாமாவளி ஸ்ரீ மதுர வேணீ ஸமேத ஸ்ரீ திரு மூழிக்களத்தான் ஸ்வாமிநே நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம்

பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே!
முனியே! திரு மூழிக் களத்து விளக்கே!
இனியாய் தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே! உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.–பெரிய திருமொழி -7-1-6-

பொன்னானாய்! பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய்! இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய்! என்னானாய்! என்னலல்லால் என்னறிவன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய்! வடவானாய்! குடபாலானாய்! குண பால மத யா னாய்! இமையோர்க்கு என்றும்
முன்னானாய்! * பின்னானார் வணங்கும் சோதி! திரு மூழகளத்தானாய்! முதலானாயே! —திருநெடுந்தாண்டகம் – 10

என்னை மனங்கவர்ந்த ஈசனை – வானவர்த்தம் முன்னவனை மூழிக் களத்து விளக்கினை –பெரிய திருமடல் – 129

————

ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்-

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –-9-7-2-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குறுகினங்காள் எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டதனால் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

ஹரித மஹரிஷி என்பவர் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்தார். இவரின் தவத்திற்கு உகந்து இங்கு எழுந்தருளிய எம்பெருமான்,
உமது விருப்பம் என்னவென்று கேட்க, எம்பெருமானை யாவரும் இலகுவில் அடையக்கூடிய வழியை உபதேசிக்குமாறு பிரார்த்திக்க அதற்கு, அவரவர்கள்
கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் தன்னையடைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீஸுக்தியை’ திரு மொழியை இவ்விடத்தில் அம்முனிவர்க்கு வழங்கினார்.

எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக் களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே
காலப்போக்கில் பொருள்காண இயலா வண்ணம் திருமூழிக்களமாயிற்று.
இப்பெயரே தொன்னெடுங்காலமாய் பிரசித்தமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது.

மூலவர்–திருமூழிக்களத்தான். அப்பன் ஸ்ரீஸு க்திநாதன் கிழக்குநோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்–  மதுரவேணி நாச்சியார்.
தீர்த்தம்–  சங்க தீர்த்தம், சிற்றாறு
விமானம்-   சௌந்தர்ய விமானம்
காட்சி கண்டவர்கள்– ஹாரித மஹரிஷி

பாரதப் புழை ஆற்றங்கரையில் எழில் தரும் சூழ்நிலையில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான இத்தலம் ஒரு காலத்தில் பெரிய
கலாசேஷத்ரமாக விளங்கியிருக்கிறது. ஸ்ரீஸு ஸீக்தி இங்கு அருளப்பட்டதால் எண்ணற்ற நூல்கள் இங்கு ஆராயப்பட்டு கற்றறிந்த பெரியோர்கள்
குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் ஒரு போது சிறப்புற்று இருந்துள்ளது.

இராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்கியிருந்த சமயம், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துப்போக பரதன் வந்து
கொண்டிருந்த காட்சியைக் கண்ட இலக்குவன், பரதன் இராமனுடன் யுத்தத்திற்கு வருகிறான் என்று நினைத்து பரதனைக் கொல்ல எத்தணித்தான்.
இந்த பாவத்தைப் போக்கிக்கொள்வதற்காக இலக்குவன் திருமூழிக்களத்து அப்பனிடம் வந்து அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து இலக்குவனை ஆரத்தழுவி இன் சொல்லால் உபசரித்ததாகவும், இவ்விதம் இன்சொல் விளைந்த ஸ்தலமாதலால் திருமொழிக்களம்
ஆயிற்றென்றும் கூறுவர். இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலமாகும் இது. இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம்
போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான்.

இங்கு லட்சுமணப் பெருமாளையே (ஸ்ரீராமானுஜர்) மூலவராக எண்ணி வழிபடும் வழக்கம் பிற்காலத்தே ஏற்பட்டது. அதாவது இலட்சுமணைப்
பெருமாளின் திருப்பணிக்கும் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.

காண்கின்ற ஐம் பூதங்கட்கும் இரு சுடர்க்கும்
சேண் கலந்த இந்திரற்கும் தேவர்க்கும் -மாண் கரிய
பாழிக் களத்தாற்கும் பங்கயத்து நான்முகற்கும்
மூழிக் களத்தான் முதல் –62-

(இ – ள்.) காண்கின்ற – கண்ணுக்குப் புலப்படுகின்ற,
ஐம்பூதங்கட்கும் – (பிருதிவி முதலிய) பஞ்சபூதங்களுக்கும்,
இருசுடர்க்கும் – சூரியசந்திரரென்னும் ஒளியுள்ள பொருளாகிய இருவர்க்கும்,
சேண் கலந்த – வானுலகத்தில் வாழ்கின்ற,
இந்திரற்கும் – தேவேந்திரனுக்கும்,
தேவர்க்கும் – (அவனுக்குக் கீழ்ப்பட்ட மற்றைத்) தேவர்கட்கும், –
மாண் – மாட்சிமையுடைய,
கரிய (விடமுண்டதனாற்) கறுத்த,
பாழி – வலிமைகொண்ட,
களத்தாற்கும் – கழுத்தையுடைய உருத்திரமூர்த்திக்கும்,
பங்கயத்து நான்முகற்கும் – தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவனுக்கும், –
மூழிக்களத்தான் – திருமூழிக்களமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமாலே,
முதல் – மூலகாரணமாவன்; (எ – று.)

மண்முதல் பிரமன் ஈறாகவுள்ள எல்லாப்பொருள்களையும் படைத்த முதற்கடவுள் திருமாலேயென்பதாம்.
“காண்கின்ற’ என்ற அடைமொழியை, மற்றைப்பொருள்கட்குங் கூட்டுக.
தேவர்க்கும் – இந்திரனினும்மேம்பட்ட பிருகஸ்பதி முதலிய கடவுளர்க்கும் எனினுமாம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் காட்கரை –

March 24, 2024

மூலவர் -காட்கரை யப்பன் / நின்ற திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரும் செல்வ நாயகி -வாத்சல்ய வல்லி
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -கபில தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

இங்கு எழுந்து அருளி இருக்கும் வாமன மூர்த்தியின் அருளால் பலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் ஆவணி திருவோணம் அன்று
தன் மக்களைப் பார்க்கப் பாதாளத்தில் இருந்து வருகிறார் –
இந்த நாளே ஓணம் பண்டிகை –
ஒரு வியாபாரி தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவது கண்டு அப்பெருமானுக்குத் தங்க வாழைக் குலை சமர்ப்பித்தார்
பின்பு பெருமாள் நேத்ர கடாக்ஷத்தால் வாழை மரங்கள் செழித்து -நேத்ர பழம்—நேந்த்ர பழம் —
திருவஞ்சிக் குளம் -திருக் குலசேகர புரம் -அருகில் -கொடுங்களூர் அருகில் –
எர்ணாகுளம் -அருகில் / கபிலர் தபஸ் -புரிந்து -பிரத்யக்ஷம் -வாமனன் சேவை –
கர்ப்ப க்ருஹத்தில் இன்றும் வாழை குலை சேவிக்கலாம் –
ஸுசீல்யம் -9 -6 – உருகுமால் நெஞ்சம் -என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் -போகத்தில் தட்டு மாறும் சீலம்
ப்ரஹ்ம ரஜஸ் பிரகாரத்தில் -சாந்தம் படுத்த யஜ்ஜி -காவல் தெய்வம்

மூலவர் ஸ்ரீ காட்கரை யப்பன், ஸ்ரீ அப்பன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் தெற்கு
உற்சவர் ஸ்ரீ காட்கரை யப்பன்
தாயார் ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி, ஸ்ரீ வாத்சல்ய வல்லி
தீர்த்தம் ஸ்ரீ கபில தீர்த்தம்
விமானம் ஸ்ரீ புஷ்கல விமானம்
மண்டலம் மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் அங்கமாலி
நாமாவளி ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகீ (வாத்சல்ய வல்லி) ஸமேத ஸ்ரீ காட்கரை யப்பன் ஸ்வாமிநே நமஹ

——————–

ஸ்ரீ ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் —

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே–9-6-6-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

இத்தலம் ஷோரனூர் – எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 2 மைல்
தொலைவில் உள்ளது.- ஆலவாய், திருச்சூர் ரயில் மார்க்கத்தில் உள்ள இருஞாலக்கொடி புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 9 மைல் தூரம். ஆலவாயிலிருந்து பேருந்தும் உண்டு.

இப்பெருமானை மலையாளத்தில் வாமன மூர்த்தி என்று அழைத்து வழிபடுகின்றனர். இந்த வாமன மூர்த்தி திருக்கோயில் கொண்டுள்ள இடமே
திருக்காக்கரா. திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து
குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதா, பத்ம ஹஸ்தங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு
எழுந்தருளியுள்ளார்.
திருமால் மூவடிமண்வேண்டி ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து மூன்றாவதடியை மாவலியின் தலையில் வைக்க எத்தணித்ததும் வந்திருப்பது
சாட்சாத் மஹாவிஷ்ணுவே என்றறிந்த மாவலி எம்பெருமானைத் துதித்து ஒரு வரம் கேட்டான். அதாவது நான் ஆண்டுக்கு ஒரு முறை உலக மக்களைச்
சந்திக்க விரும்புகிறேன். அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான். அவ்வாறாயின் இன்றைய தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக்கொண்டாடும் நாளில் உனக்கு அந்த நிலை உண்டாகுமென்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை
நினைவு கூர்ந்து மக்கள் விழாவெடுக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரும் திருவிழாவான இதை ஓணத் திருவிழா என்றழைக்கின்றனர்.

ஓணம் பண்டிகை மலையாளத்தில் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மகாபலியும்
திருவிழாவிற்கு வருவதாக ஐதீஹம். கேரள தேசத்தின் மிகப்பெருந்திருவிழா இது ஒன்றுதான்.

மூலவர்- காட்கரையப்பன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அப்பன் என்பதே மூலவரின் திருநாமம்.
தாயார்- பெருஞ்செல்வ நாயகி வாத்ஸல்யவல்லி.
தீர்த்தம்- கபில தீர்த்தம்
விமானம்–  புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்– கபில முனி

கிழக்கும், மேற்குமாக இருபுறமும் வாயில்கள் அமைந்த இத்தலத்தின் முன்புறம் யானைப் பந்தல் ஒன்றும், பின்புறம் அமைந்துள்ள 8 அடி நீளமுள்ள
பலிபீடமும் கோவிலுக்கு மேலும் அழகு தருகிறது.
வாமனத்தலம் என்று வழங்கப்படும் இத்தலத்தில் மகாவிஷ்ணு மாவலிக்கு வாமனனாக எவ்விதம் காட்சியளித்தாரோ அதேபோல் காட்சி
அளிக்கிறார். இத்தலத்தின் உள்ளே நுழைந்ததும் வட்டவடிவில் அமைந்துள்ள மிகப் பெரும் கருவறை மண்டபம் காண்பதற்குப் பேரெழில் வாய்ந்தது.
நமஸ்கார மண்டபத்தில் தென்பக்கம் யட்ச பிரதிஷ்டை காணப்படுகிறது.
வடகிழக்கில் கோபால கிருஷ்ணன் சன்னதியுள்ளது. தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள நாகப்பிரதிஷ்டைகளும் கண்ணோடு கருத்தைக் கவர்வனவாகும். வெளிப்பிரகாரத்தின் தென்புறத்தில் மிகப்பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.
காற்றில் இதன் இலைகள் சலசலப்பது அதன் தெய்வீக அமைதிக்கு மேலும் புனிதம் காட்டுவதாக அமைந்துள்ளது.

இத்தலத்தில் ஒரு தனிகன் வாழை மரங்களை நட்டுப் பயிர் செய்ததாகவும், அவைகள் குலை தள்ளாமல் தொடர்ந்து அழிந்து பட்டே
போக அத்தனிகன் பொன் வாழைக்குலைகள் செய்து அப்பனுக்குச் சமர்ப்பிக்க
எம்பெருமானின் திருவருளால் வாழை மரங்கள் வளர்ந்து வாழைகள் குலை தள்ளியதாகவும், எம்பெருமானிடம் நேர்ந்து இந்த வாழைப்பழங்கள்
உருவானமையால் இதற்கு நேத்திரம் வாழைப்பழம் என்ற பெயருண்டாயிற்றென்றும் கூறுவர்.

இந்த தனிகன் சமர்ப்பித்த பொன் வாழைக்குலை ஒரு சமயம் காணாமல் போய்விட்டது. மன்னன் பலரையும் பிடித்து விசாரித்தார். அவ்வாறு விசாரித்து
வருகையில் ஒரு யோகியைத் தீர விசாரிக்காமல் மிகவும் துன்புறுத்தியதாகவும், அந்நிலையில் அந்தப் பொன் வாழைக்குலை கர்ப்பக் கிரஹத்திற்குள்ளேயே இருந்ததாகவும், கண்டறியப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட பிறகு, தன்னை மிகவும் இம்சை படுத்தியதைப் பொறுக்க முடியாத அந்தத் துறவி, சாபம் இட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உயிர்துறக்க, அந்தச் சாபம் நீங்குவதற்காக, பல முனிவர்களின் கருத்துப்படி மூங்கில் கூரை ஒன்றை உருவாக்கி, அதனுள் கோரைப் புற்களையிட்டுத் தீயை உண்டாக்கி பலநாள் எரித்து வெளிச்சத்தை உண்டாக்கி சாபம் தீர்க்கப்பட்டதாக வரலாறுண்டு.

அப்பன், என்றும் பெருஞ்செல்வ நாயகி என்றும் இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் மலையாள மண்ணில் தூய தமிழ்ப்பெயர்கள் இலங்குகின்றன.

மாற்கமும் தாம் தாம் வழிபாடும் தெய்வமும்
ஏற்க உரைப்பார் சொல் எண்ணாதே தோற் குரம்பை
நாள் கரையா முன்னமே நல் நெஞ்சே நாரணன் ஆம்
காட்கரையார்க்கு ஆள் ஆகாய் காண் –61-

நல் நெஞ்சே
தாம் தாம்
வழிபாடும் மாற்கமும்
தெய்வமும்
ஏற்க -ஆகிய இவற்றுக்கு பொருந்துமாறு -உரைப்பார் சொல்
எண்ணாதே -மதியாமல்
வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாக்கி
யவை யவை தோறும் அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தோற் குரம்பை நாள் கரையா முன்னமே நாரணன் ஆம்
காட்கரையார்க்கு ஆள் ஆகாய் காண் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்