ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கோளூர்

மூலவர் -வைத்த மா நிதி -நிஷேபவித்தன்-புஜங்க சயனம் –கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குமுத வல்லி –கோளூர் வல்லி
விமானம் -ஸ்ரீ கர விமானம் –லஷ்மி சம்பத் விமானம் –
தீர்த்தம் -குபேர தீர்த்தம் -தாமிர பரணி ஆறு
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

மதுரகவி ஆழ்வார் திருவவதார ஸ்தலம் -குபேரன் பார்வதி தேவியைத் தவறான பார்வையில் பார்க்க பார்வதி தேவி
அவனிடம் இருக்கும் நவ நிதிகளும் காணாமல் போகட்டும் என்றும் -உருவத்தில் விகாரம் ஏற்படட்டும் என்றும் சபித்தாள்
-குபேரன் தபஸ் செய்து தொலைத்த நவ நிதியையும் பெற்றான் -இதனாலே நிஷேபவித்தன் -என்ற பெயர் –
தர்ம சமஸ்தானம் பண்ண பிரார்த்திக்க இங்கே ஆவிர்பவித்தான் என்றவாறு
ஸூ ரஷித்தமாக வைத்த மா நிதி -நித்தியமாக வைத்த மா நிதி -பக்தி குறையாமல் -அருளுவார்
மாசு சுக்ல பக்ஷ துவாதசி ஆவிர்பாவம் -உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் –
திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தை 81 – வார்த்தைகள் -ரகஸ்யம் -எம்பெருமானார் அமுது செய்தார் இவள் க்ருஹத்தில்

மூலவர் ஸ்ரீ வைத்த மா நிதி பெருமாள், ஸ்ரீ நிஷேய வித்தன்
ஆவணி புனர்பூசம்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ நச்சி யப்ப பவித்திரர்
தாயார் ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளுர் வல்லி
தீர்த்தம் ஸ்ரீ குபேர தீர்த்தம்,ஸ்ரீ தாமிரபரணி ஆறு
விமானம் ஸ்ரீ கர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ கோளுர் வல்லீ ஸமேத ஸ்ரீ வைத்த மா நிதி ஸ்வாமிநே நமஹ

————————–

ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம் –

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இள மான் புகுமுர் திருக் கோளூரே–6-7-1-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே–6-7-4-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?–6-7-5-

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே–6-7-9-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே–6-7-10-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியா ரல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. –8-3-5-

பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது.

ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப் பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா புரியிலிருந்து
அரசாண்டகுபேரன் சிறந்த சிவ பக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது சிவன் தனது பத்தினியான
உமையவளோடு அன்போடு பேசிக்கொண்டிருக்க உமைய வளின் அழகில் மயங்கி ஒற்றைக் கண்ணால் பார்த்தான் குபேரன்.

இதைப் பார்த்துவிட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும்
விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை விட்டகலக் கடவதென்றார்.

உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள் தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக் காத்து
அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித் திருமாலைத் துதிக்க, அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும் காட்சி கொடுத்து எம்பெருமான் அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப்பள்ளி கொண்டான்.

நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன் மீது சயனங் கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம்
இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள் எல்லாம் இங்கு தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித் தீர்த்தம்” என்றே பெயர் உண்டானது.

முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம் தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம் இந்த
நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம் அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத தேவர்கள், தர்மம்
தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பெரும் யுத்தம்
நடந்து, இறுதியில் எம்பெருமானின் அருள்பெற்ற தர்மம் வென்றது.

இஃதிவ்வாறிருக்க, தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்புக் கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக்
கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான்.

குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப் போலவேஉனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின் விகாரமும்
மறையாது. ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும் பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த நவநிதிகள் தாமிரபரணி நதி
தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில் திருமாலைத் தஞ்சம்அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அங்கு
சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள்.

திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்த மாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி மாதம் சுக்லபட்ச
துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன் தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு இப்போதே தரமுடியாது.
கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று கொஞ்சம் செல்வத்தைத் தரஅதைப் பெற்ற குபேரன் “இத்தகு நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே
யென்று” எண்ணித் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

மூலவர்–நிஷேபவித்தன், வைத்தமா நிதிப் பெருமான் புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்–   குமுதவல்லி, கோளுர் வள்ளி

தீர்த்தம்-  குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் தாமிரபரணியாறு.
விமானம்-  ஸ்ரீ கர விமானம்
காட்சி கண்டவர்கள்—  குபேரன், நவநிதிகள் மதுரகவியாழ்வார்.

பிரம்மாண்ட புராணத்திலேயே இதற்கொரு கதை பேசப்படுகிறது.
வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த
தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ
முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கி, முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான
ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது, பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன்
உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு யென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும்
கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய்.

பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத் தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள,
திருக்கோளுர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று கூறினார்.

தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து
கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான்

குபேரனும், தர்ம குப்தனும் இழந்த செல்வத்தைப் பெற்றதால் இழந்த பொருளை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த திருத்தலமாக இது கருதப்படுகிறது.

இத்தலத்துப் பெருமாள் (வைத்த மாநிதிப் பெருமாள்) தலைக்கு மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள் செல்வத்தைப்
பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி நிதி எங்கிருக்கிறது என்று
பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திரு
ஆதனூரில் மட்டுமே.

இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுநேசர்” என்ற முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்த மாநிதிப்
பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார்.

ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு
“அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர்.

4. திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை
வணங்கி நீ யெங்கு நின்று புறப்பட்டாய் என்று கேட்க, திருக்கோளுரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள் சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர்
ஒருவா கூறை யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள மான்புகுமூர் திருக்கோளுரே என்று” எல்லோரும் புகும் ஊர் உனக்குப்
புறப்படும் ஊராயிற்றா என்றார்.
அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய், கனி, கிழங்குகளைப் புசித்துவந்த மதுரகவியாழ்வார் ஜோதி தெரிந்து மீண்டும்
இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற் கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல
யானேதும் அருஞ்செயல் செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார்.

பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும்
இறப்பு அற்று வாழ இருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோள் ஊர் அரவில் தாமோதரன் பள்ளி
கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –58–

பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும் இறப்பு அற்று வாழ இருப்பீர்
புறப்பற்றுத் தள்ளுங்கோள்-அகப் பற்றுக்கும் உப லஷணம் -அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் –
ஊர் அரவில் தாமோதரன் பள்ளி கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –வைத்த மா நிதிப் பெருமாள் -பள்ளி கொண்டு அருளும் திவ்ய தேசம்
நவ நிதிகள் ஒழிந்து உள்ள இடம் குபேரனுக்கு கோள் சொல்லி அருளிய ஸ்தலம் -பி ஸூக ஷேத்ரம் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading