Archive for the ‘முதல் திருவந்தாதி’ Category

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -41-50 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

எம்பெருமானுடைய வாத்ஸல்ய குணத்திலீடுபட்டுப் பேசுகிறார்–

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  –41-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
என்றும்–எப்போதும்
புறன் உரையே ஆயினும்–(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தை யாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே–சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு–அநுஸந்தித்துக் கொண்டிரு;
(அப்படியிருந்தால்)
இன்று முதலாக–இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும்–மலை போல் (பெருப் பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்–(அவற்றை யெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்

நெஞ்சே!, ஆந்தரிகமான அன்பின் மிகுதியினாலே சொற்களைத் தொடுத்து எம்பெருமானைத் துதிப்பார் பலருண்டு;
அப்படிப்பட்ட அன்பு நமக்கு இல்லாமையினால் கழுத்துக்கு மேற்படவே சில சொற்களை நாம் கபடமாகச் சொல்ல வல்லோம்;
அப்படி மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் அது பகவானைப்பற்றின வார்த்தையாக இருந்துவிடுமாயின் பயன்படும்.
எம்பெருமான் ‘மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந’ [ ப்ரீதியை பாவனைசெய்து வருபவனையும் கைவிடமாட்டேன் ]
என்று சொன்னவனாகையாலே நாம் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையையும் அவன் கனத்ததாகத் திருவுள்ளம் பற்றித்
தன்னுடைய வாத்ஸல்ய குணத்தை நம்மேல் ஏறிப்பாய விடுவன்;
நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்”
என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்;
அவன் நமது ஆபிமுக்யத்தை மாத்திரமே எதிர்பார்ப்பவனாதலால் நாம் மேலுக்குச் சொல்லும் வார்த்தையும்
அவனுக்குக் கார்யோபயோகியாக ஆய்விடுங்காண் – என்றாராயிற்று.

————

நாம் மலை போன்ற குற்றங்களைச் செய்தாலும் எம்பெருமான் அவற்றைக் குணமாகத் திருவுள்ளம் பற்றுவன் என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி குற்றத்தையும் குணமாகத் திருவுள்ளம் பற்றவேண்டிய காரணம் ஏதென்ன,
பிராட்டிமார் மூவரும் கூடவே குடியிருக்கை தான் காரணமென்கிறாரிதில்.

திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

பதவுரை

பால் ஓதம் சிந்த–திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்து ஸுகப்படுத்த,
படம் நாக அணை கிடந்த–படமெடுத்த பாம்பினணையிற் பள்ளிகொண்ட
மால் ஓதம் வண்ணர்–பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம்–பெரிய பிராட்டியார் மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது
திருமகட்கே தீர்ந்த ஆறு என் கொல்–பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத் தீர்ந்திருக்கிற விதம் என்னோ?

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களும் கூடியிருக்கும் படியை முதலடியிலருளிச் செய்கிறார்.

பாலோதம் சிந்தப் படநாகணைக்கிடந்த மாலோதவண்ணரது திருமகள் மேல் (வைத்து) மனமானது
திருமகட்கே தீர்ந்தவாறு ஏன்கொல்? என்கிறார்.
இப்பாட்டுக்கு இரண்டு படியான நிர்வாஹங்களுண்டு;
தீர்ந்தவாறென்கொல் என்பதை நாச்சிமார் மூவரிடத்திலும் கூட்டி,
திருமகட்கே தீர்ந்தவாறென்கொல், மண் மகட்கே தீர்ந்தவாறென்கொல், ஆய் மகட்கே தீர்ந்தவாறென்கொல்
என்று திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பராம்.

இங்ஙனன்றிக்கே பட்டருடைய நிர்வாஹம் – திருமகட்கே தீர்ந்தவாறென்கொல்? = திருமகளோடு கலந்து பரிமாறும்போது
மண்மகள் முதலிய மற்ற பிராட்டிமார்கள் போகத்திற்கு உபகரணமாயிருப்பர்கள்;
திருமகளோடு ஸம்ச்லேஷிப்பதைத் தங்கற் முலையோடும் தோளோடும் ஸம்ச்லேஷிப்பது போலவே நினைத்திருப்பர்கள்.
ஆகையாலே மற்ற தேவிமார்களை உபகரண கோடியிலேயாக்கித் திருமகள் பக்கலிலேயே பிரதான போகம் கொள்வது என்கொல்? – என்று.

தீர்ந்தவாறு – தீருகையாவது – ஒரு வஸ்துவை விட்டு மற்றொரு வஸ்துவில் சிறிதும் நெஞ்சு செல்லாமல்
அந்த ஒரு வஸ்துவிலேயே ஆழங்காற்பட்டிருக்கை.
“ தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங் காண்க.

————-

கீழ்ப் பாசுரத்திலருளிச் செய்தபடி பிராட்டிமார்கள் இடைவிடாது கூடி யிருக்கையாலே ஒருவரும்
தங்கள் குற்றங்களை நினைத்துப் பின்வாங்க வேண்டுவதில்லை; ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கிஞ்சித்காரங்களிலே அந்வயிக்கலாம் ;
அப்படி அந்வயிக்கவே தீமைகளெல்லாம் தொலைந்து நன்மைகள் கைகூடுமென்கிறார்.

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

ஸர்வரக்ஷகன் என்பது விளங்கத் தனிமாலை யிட்டிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளில் திருவாராதன
உபகரணங்களான புஷ்பம் தீர்த்தம் முதலியவற்றை யேந்திக்கொண்டு வந்து பணிமாறி வழிபடுமவர்களுக்கு –
மநஸ்ஸைப் பற்றிக் கிடக்கிய அஜ்ஞாநம் விஷய ராகம் முதலான தோஷங்களடங்கலும் தன்னடையே விட்டுக் கழலும்;
இவற்றுக்கு மூல காரணமான துஷ்கருமங்களும் கிட்டவராதபடி தொலைந்து போம்;
ஸ்வரூபாநுரூபமான செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தனக்குத்தானே வந்து கைபுகுரும் என்றாராயிற்று.

மனம் , தனம் – வடசொல் விகாரம். பாகவதர்களுக்கு பகவத் பக்தியே பெருஞ்செல்வமாதலால் ‘ தனமாய்’ என்றார்.

———–

கீழ்ப்பாசுரத்தி லருளிச்செய்தபடி ஆச்ரிதர்கள் அடிமை செயுமளவில், எந்த ரூபத்தையும் எந்த நாமத்தையும்
இதரர்கள் உகந்திருப்பார்களோ அந்த ரூப நாமங்களையே யுடையனாகத் தன்னை அமைத்துக்கொண்டு
அர்ச்சாவதார ரூபியாய் இங்கே அடிமைகொள்வனென்கிறார்.
தமர்கள் கல்லையோ மண்ணையோ லோகங்களையோ எதை உருவமாக்கினாலும் அதையே தனக்கு அஸாதாரண விக்ரஹமாகப்
பரிக்ரஹித்து அதிலே ஸந்நிதாநம்பண்ணி யெழுந்தருளியிருப்பன்.
‘அந்த விக்ரஹத்தில் தமர்கள் எந்த திருநாமத்தையிட்டு வழங்குவர்களோ அந்தத் திருநாமத்தையே
நாராயணாதி நாமங்கள் போல விரும்பிக் கொண்டிருப்பன்.
மற்றும் குணம் சேஷ்டிதம் முதலியவற்றில் எந்த குணசேஷ்டிதங்களை அநுஸந்தித்து அநவரதபாவநை பண்ணுவர்களோ,
அவற்றையே கொண்டிருப்பன். – என்று அர்ச்சாவதார ஸெளலப்யத்தை யருளிச் செய்தாராயிற்று.

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் -44–

பதவுரை

ஆழியான்–திருவாழி யாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாகவுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ்வுருவம்–ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட உருவம் எதுவோ,
அவ்வுருவம் தானே ஆம்–அவ்வுருவமாகத்தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்த்து எப்பேர்–ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம்–அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன்;
தமர்–ஆச்ரிதர்கள்
உகந்து–உகப்புடனே
எவ் வண்ணம் சிந்தித்து–குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர்–ஓயாமல் பாவநை பண்ணிக் கொண்டிருப்பார்களோ
அவ் வண்ணம் ஆம்–அவ் வண்ணமே யாவன்

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் சில ஐதிஹ்யங்கள் அருளிச் செய்யப் பட்டிருக்கின்றன்: –
“எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்தருளாநிற்க, சில பிள்ளைகள் காலாலே கீறி
‘உம்முடைய எம்பெருமான் திருமேனி’ என்று காட்ட, பாத்ரத்தை வைத்துத் தண்டனிட்டருளினார்.”
[எம்பெருமானார் பிக்ஷைக்காகத் திருவீதியில் எழுந்தருளா நிற்கையில் தெருப் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் திருவாழி திருச்சங்கு முதலியவற்றோடே ஒரு உருவத்தைத் தரையிலே கீறி
‘உடையவரே! உம்முடைய பெருமாள் பார்த்தீரா? ‘ என்றழைத்துக்காட்ட,
உடையவரும் “ தமருகந்த தெவ்வுருவமவ்வுருவந்தானே’ என்ற இப்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி
அந்தக்கீறலை மெய்யே பகவதி விக்ரஹமாகப் பிரதி பத்திபண்ணி தண்டனிட்டருளினார்.]

“கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திருவீதியிலேயிருந்து பெருமாளும் நாய்ச்சிமாரும்
பெரிய திருமண்டபமும் கற்பித்துப் பெருந்திருப்பாவாடையும் அமுது செய்வித்து .’ எம்பெருமானார் ! ப்ரஸாதப்படும்’ என்று
மணலைக் கையாலே முகந்தெடுக்க தத்காலத்திலே மாதுகரத்துக் கெழுந்தருளுதிறவுடையவர்,
அவ்விடத்திலே அது கேட்டருளித் தெண்டளிட்டு அவர்களெடுத்த ப்ரஸாதத்தை பாத்ரத்திலே ஏற்றார் என்று ஜீயரருளிச் செய்தார்’
[= நம்பெருமாள் ஸந்நிதியில் நடக்கிற ரீதிகளை அப்படியே அபிநயித்துத் தெருப்புழுதியில் ஓரு நாள் விளையாடிக் கொண்டிருந்த
சிறுபிள்ளைகள் ஒரு கொட்டங்குச்சியில் மண்ணைவாரி யெடுத்துக்கொண்டு, ஸந்நிதியில் அருளிப்பாடுகள் சொல்லுகிற க்ரமத்திலே
சொல்லிக் கொண்டு வரும்போது “ஜீயோ! “ என்று அருளிப்பாடு சொல்லிக் கூவ, அந்த ஸமயத்தில் யாத்ருச்சிகமாக
பிக்ஷைக்கெழுந்தருளிக் கொண்டிருந்த உடையவர் இவ்விளையாட்டொலியைக் கேட்டு மெய்யே ப்ரதிபத்தி பண்ணீ
‘ நாயிந்தே!’ என்று சொல்லிக் கொண்டே போய் ஸேவித்து அந்த மண்ணைச் சிக்கத்தில் ஏற்றுக்கொண்டார்..]

“எங்களாழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற்பழம் வேண்ட, ‘நீயார்?” என்று அவர்கேட்க,
ஜீயர்மகனான ஆயர்தேவு என்ன, ஜீயரக்கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக்குடியிருக்க வொட்டுகிறிலன் என்றார்.”
[ – நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளுக்கு ஆயர்தேவு என்று திருநாமம்.
அப்பெருமாள் , திருக் குருகைப் பிரான் பிள்ளானுடைய சிஷ்யரான எங்களாழ்வானுக்கு ஸ்வப்நத்திலே ஸேவை ஸாதித்து,
தான் இன்னானென்று தெரிவித்து நாவற்பழம் யாசிக்க, மறுநாள் எங்களாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
‘உங்கள் பெருமாள் நாவற்பழத்துக்காக என்பிராணனை வாங்குகிறாரே’ என்று விநோதமாக ஸாதித்தாராம்.
கண்ணபிரானான விபவத்தில் உகந்திருந்த நாவற்பழத்தை அர்ச்சையிலும் உகந்தபடி சொல்லிற்றென்க.]

————

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆச்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக்காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

இப்பாட்டின் பின்னடிகளில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத் கதை மூன்றாந்திருவந்தாதியில்-
“ ஆய்ந்தவருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில், வாய்ந்த குழவியாய் வாளரக்கன்- ஏய்ந்த,
முடிப்போது மூன்றேழென்றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண். “என்ற எழுபத்தேழாம் பாட்டிலும்,

நான்முகன் திருவந்தாதியில் – “ கொண்டுகுடங்கால் மேல்வைத்த குழவியாய், தண்டவரக்கன் தலைதாளாற்
பண்டெண்ணிப் – போங்குமரன்….. “என்ற நாற்பத்துநாலாம் பாட்டிலும்
பேயாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.

முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக் கொண்டு நான்முகனிடஞ் சென்று வரம் வேண்டிக்
கொள்ளுமளவிலெம்பெருமான் ஒரு சிறு குழந்தை வடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து
‘இவன் பத்துத் தலைகளை யுடைய இராவணன்; ஸ்வ ஸ்ரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான்; இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்’ என்று
தெரிவிப்பவன் போன்று தன் திருவாயால் அவ்விராவணனுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் –
என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது. இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை;

பெரியாழ்வார் திருமொழியில் –“சீமாலிக னவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய்,
சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் “ என்றும் —
‘ எல்லியம் போதினி திருத்தலிருத்ததோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மோரடையாலம்” என்றும்
அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்று நம் பூருவாசாரியர்கள் நிர்வஹித்திருப்பது போலவே
இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று பெரியோர் கூறுவர்.
இனி, இதற்கு இதிஹாச புராணங்களில் ஆகர முண்டேல் கண்டு கொள்க: விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தாலெண்ணினானான எம்பெருமானுடைய
குணங்களைத் தேவர்களால் அறிய முடியாது;
எம்பெருமானுடைய திருவருளாலே தெளியக் காணவல்ல நாமே அறிய வல்லோம் – என்பது ஒரு பொருள்;
தேவர்களே அறிய மாட்டாத போது நாமோ அறியக் கடவோம் என்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்வதாக மற்றொரு பொருள்.

பாதமத்தால் – பாதத்தால் என்றபடி.

———–

பிரமனுக்கு அருள் செய்தமையைக் கீழ்ப்பாட்டிற் சொன்னார்,
சிவனுக்கு அருள் செய்தமையைச் சொல்லுகிறாரிதில்.

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் —46-

பதவுரை

பண் புரிந்த நான்மறை யோன்–ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களை நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி–தலையில்
[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக் கொண்ட கபாலத்தில்]
பலி ஏற்ற–பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன்–வெளுத்த யஜ்ஞோ பவீத்த்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய
வினை–ப்ரஹ்மஹத்தி பாபமானது
தீர–நீங்கும்படியாக
[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]
புண் புரிந்த ஆகத்தான்–தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணிவார்–ஆச்ரயிக்குமவர்கள்
அமரர்தம் போகத்தால்–நித்ய ஸூரிகளின் போகமாகிய பரமபதாநுபவத்தோடு
பூமி–இந்த லீலா விபூதியை
ஆள்வார்–ஆட்சி புரிவர்கள்.

சிவனுடைய வினையைத் தீற்பதற்காகத் தனது திருமார்பை நகத்தால் கீறி புண்படுத்திக் கொண்டது பற்றி
புண்புரிந்த ஆகத்தான் என்றார். இப்படி பரோபகார சீலனான பெருமானுடைய திருவடிகளைப் பணியுமவர்களே
உபய விபூதியையும் ஆலவள்ள பாக்யசாலிகள் – என்றாராயிற்று.
“வையம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வார் மண்ணூடே” என்று திருவாய் மொழிப் பாசுரம் இங்கு நினைக்கத் தகும்.

போகம் – பூமி- வட சொற்கள்

——————-

கீழ்ப்பாட்டில் “ புண் புரிந்த வாகத்தான் தாள்பணிவார் கண்டீர் அமரர்தம் போகத்தால் பூமியாள்வார்” என்றார்;
எம்பெருமானது தாள்களைப் பணிதல் யார்க்குக் கை கூடும்? என்று கேள்வி யுண்டாக,
இந்திரியங்களை அடக்கி ஆள்பவர்களே எம்பெருமான் திருவடியைப் பணிதற்குப் பாங்குடையர் என்கிறாரிதில்

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–

பதவுரை

மதம் களிறு ஐந்தைனையும்–மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி–ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப் பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ–கண்ட விடங்களிலும் திரிய வொட்டாமல் செவ்வையாக நிலை நிறுத்தி
கூரிய–மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால்–உண்மையான பக்தி ரூபா பந்ந ஜ்ஞானத்தாலே
உணர்வார்–(அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள்–முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான்–கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

இந்திரியங்களை அடக்கி யாளுதல் மிகவும் அரிது என்பது தோன்ற, அவ்விந்திரியங்களை மதம் பிடித்த
யானையாக உபசரித்துக் கூறுகின்றார்.
யானைகள் நீர்நிலையில் புகுந்தால் முதலை முதலிய ஜல ஜந்துக்களால் துன்பம் நேரிடுவது ஸம்பாவிதமாதலால்
அங்குப் போகாதபடி சுருக்க வேணும் யானையை;
அப்படியே, பிரகிருதத்தில் நீர்நிலையாவது – விஷயாங்தரங்கள்; இந்திரியங்களாகிற மதயானைகள்
சப்தாதி விஷயங்களினருகிற் சென்றால் துன்பம் நேரிடுவது திண்ணமாதலால் அவற்றில் நின்றும் சுருக்க வேணும் இவற்றை;
இதுவே “ வாரிசுருக்கி” என்பதன் கருத்து.

வாரி என்னும் வடசொல்லுக்கு ‘நீர்’ என்று பொருள்; நீரானது எப்படி விடாயைப் பிறப்பிக்குமோ
அப்படி விஷயங்களும் விடாயைப்பிறப்பிக்கின்றன என்பதுபற்றி விஷயங்களை ‘வாரி’ என்ற சொல்லாற் குறித்தன ரென்க.
“வாரி சுருக்கி” என்றதே போதுமாயிருக்க, மறுபடியும் “ சேரிதிரியாமல் செந்நிறீஇ” என்றது-
பலாத்கரித்தாகிலும் இந்திரிய மதயானைகளை விஷய வீதிகளில் நின்றும் மடக்கியடக்கி ஆளவேண்டுவது
அவசியம் என்பதற்காக வென்க. நிறீஇ- சொல்லிசையளபெடை.

ஆக விப்படி இந்திரியங்களை வென்று பாரமார்த்திகமான பக்தி ரூபாபந்நஜ்ஞாநத்தாலே அவனை உள்ளபடி
உணரக் கூடியவர்கள் யாரோ, அவர்கள் அவனுடைய திருவடிகளை ஸேவிக்கப்பெறுவர்கள் – என்றாராயிற்று.
“ கைந்நாகங்காத்தான் கழல்” என்ற சொல்லாற்றலால் ஸ்ரீகஜேந்திரவாழ்வான் போல்வார்
இப்படிப்பட்ட அதிகாரிகள் என்பது ஸூசிக்கப்பட்டதாம்.

—————-

உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று
திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–

பதவுரை

ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]
ஒரு கழல்–ஒரு திருவடியை
எடுத்து–மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை–ஒரு திருக் கையாலே
சுற்றி–[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றி யெறிந்து
ஓர் கை மேல்–மற்றொரு திருக்கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்–இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற
[அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்]
அழலையுமிழ்கிற யுத்த சாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல–திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு–பொருந்துவாயாக;
மகிழ்–இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்.

———–

தேவயோநிகளென்றும் மநுஷ்யயோநிகளென்றும் திர்யக்யோநிகளென்றும் பலவகைப்பட்ட யோநிகளில்
பிறப்பதும் இறப்பதுமாகிற ஸம்ஸாரத்தைத் தொலைத்துக் கொள்ள விருப்பமுடையவர்களுக்கே
எம்பெருமானைக் காணுதல் கைகூடுமென்கிறார்.

மகிழல கொன்றே போல் மாறும் பல்யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–

பதவுரை

மகிழ் அலகு ஒன்றே போல்–(கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே
காணி ஸ்தாநத்திலும் கோடி ஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பது போல
மாறும் பல் யாக்கை–மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ–தன்னடையே விட்டு நீங்கும் படியாக
முயலகிற்பார்க்கு அல்லால்–முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும்–மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி எம் ஆதி காண்பு–விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல்
தோன்றுகிற தேஜஸ்ஸையுடைய அழகிய பெரிய திருவபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது–கூடாத காரியம்.

பலகறை, மகிழம் விதை முதலியவற்றைக் கொண்டு கணிதம் பார்க்கிற முறைகள் சிலவுண்டு;
அந்த கணிதத்தில் காணிஸ்தாநமென்றும் கோடிஸ்தாநமென்றும் பாகுபாடுகளுமுண்டு;
காணிஸ்தானமென்பது மிகத்தாழ்ந்த ஸ்தாநம்; கோடிஸ்தானமென்பது மிகவுயர்ந்தஸ்தாநம்.
கணிதம் பார்க்கிற வகையில் ஒரு மகிழம் விதையே சற்றுபோது கணி ஸ்தாநத்திலும்
சற்றுபோது கோடிஸ்தாநத்திலுமாக மாறிமாறி வந்துகொண்டிருக்கும்; (இது கணிதஸாமர்த்தியத்தைப் பொறுத்ததுமாம்.)

அது போல பகவத் ஸங்கல்பத்தாலே கர்மாநுகுணமாக (உத்க்ருஷ்டமாகவும் அபக்ருஷ்டமாகவும்) பலவகைப்பட்டு
மாறிமாறி வாரக்கூடிய (பிரமன் முதற்கொண்டு எறும்பு ஈறாகவுள்ள) சரீரங்கள் தொலைந்து
நித்யாந்ந்தமநுபவிக்க வேணுமென்று ஆசை கிளரிந்து அதற்குரிய முயற்சியைச் செய்யுமவர்களுக்குத் தவிர
மற்று யார்க்கும் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பது அரிதாகும்.

நான்காமடியை “ ஆதிகான்பு ஆர்க்கும் அரிது” எனப்பிரித்து உரைக்கப்பட்டது
காண்பு – காணுதல். இனி “ காண்பார்க்கும் “ என்று ஒரு சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம்
காணவேணு மென்னும் விருப்பமுடையவர்களுக்கும் எம் ஆதி அரிது ( அருமைப்படுவன்)என்க.

இப்பாட்டில் முதலடிக்குச் சார்பாக ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்திலுள்ள
“படுநைவராடிகேவ க்ல்ப்தா ஸ்தலயோ: கரகணிகாஸுவர்ண கோட்யோ:.” என்ற ச்லோகம்
ஒருபுடை ஒப்புமையாக ஸ்மரிக்கத்தக்கது.

————–

விஷயாந்தரங்களில் பற்றற்று அன்புடன் அவனை ஆச்ரயிகுமவர்களூக்கு
அவனைக் காண்பதில் அருமையேயில்லை யென்கிறார்.

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது -50-

பதவுரை

அரிய–அடக்க முடியாத
புலன் ஐந்து–பஞ்சேந்திரயங்களையும்
அடக்கி–கட்டுப் படுத்தி,
ஆய்–ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர்–புஷ்பங்களை
கொண்டு–கையில் ஏந்திக் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால்–அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில்–கிட்டப் பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்–‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தை யுடையனாய்
தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலி யிடத்தில்
வண் கை–உதாரமான தனது திருக் கையாலே
நீர் ஏற்றானை–உதக தாநம் வாங்கின பெருமானை
காண்பது–ஸேவிப்பது
எளிது–ஸுலபமாகும்.

செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஜ்ஞாநேந்திரயங்களைத்தையும் விஷயாந்தரங்களில் போக வொண்ணாதபடி அடக்கி,
பகவதாராதனைக்கு உரிய நன் மலர்களைச் சேகரித்துக் கொண்டு மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால்,
மாவலியின் மதமொழித்த பெருமானைக் கண்டநுபவிப்பது மிகவும் எளிதாகும்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -31-40 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

அடியவர்கள் திறத்தில் எம்பெருமானுக்குண்டான பாரதந்திரியத்தையும் வாத்ஸல்யத்தையும் அநுஸந்தித்தால்
அப்பெருமானைத் தவிர்த்து வேறொரு விஷயத்தை ஒரு நொடிப் பொழுதாகிலும் நினைக்க வழியுண்டோ? என்ன வேண்டி,
அப்பெருமான் பரம பக்தனாகிய ப்ரஹ்லாதனிடத்துள்ள வாத்ஸல்யத்தாலே செய்தருளின செயலை யெடுத்துப் பேசுகிறார்.

புரியொருகை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரியுருவும் ஆளுறுவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –31-

பதவுரை

ஒரு கை புரி பற்றி–ஒரு திருக் கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி
(மற்றொரு திருக் கையிலே)
ஓர் பொன் ஆழி ஏந்தி–ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி
ஆள் உருவம் அரி உருவம்–நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான்—அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தை யுடையனான இரணியனுடைய
மார்பு–மார்பை
இடந்த–நகத்தால் குத்திப் பிளந்து போட்ட
மால்–திருமாலினுடைய
அடியை அல்லால்–திருவடிகளைத் தவிர
மற்று–வேறொரு விஷயத்தை
இமை–க்ஷண காலமேனும்
எண்ணத்தான் ஆமோ–நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]

புரியொருகைபற்றி = ‘வலம்புரி ‘ என்னும் பதத்தில் ‘வலம்’ என்பதை நீக்கி, புரியென்பதை மாத்திரம்
இங்குப் பிரயோகித்திருப்பது நாமைகதேசத்தை கொண்டு நாமத்தை க்ரஹிக்கும் முறையாலென்க:
ஸத்யபாமையைப் பாமையென்பதுபோல.
எம்பெருமானுடைய அவதாரங்களெல்லாவற்றிலும் திவ்யாயுதங்களின் சேர்த்திக்குக் குறையில்லாமையாலே
“புரியொருகைபற்றியோர் பொன்னாழியேந்தி” எனப்பட்டது.
இத்திவ்யாயுதங்கள் சில அவதாரங்களில் மறைந்திருப்பதும் சில அவதாரங்களில் வெளித்தோன்றியேயிருப்பதும் காரணார்த்தமாகவாம் .

அசுரர்களுடைய உடல் நெருப்புநிறமா யிருக்குமாதலால் எரியுருவ வண்ணத்தான் என்ற சொல்லால் இரணியனைக் கூறினர்.
பாசுரத்தினிறுதியுலுள்ள இமை என்பதை வினைமுற்றாகக்கொண்டு உரைக்கவுமாம்; இதை ஆராய்ந்துபார் என்கை:
நெஞ்சே!’ என்று வருவித்துக்கொள்க.

——–

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்-32–

பதவுரை

இமையாத கண்ணால்–[ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்] உட்கண்ணாலே
இருள் அகல–[அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக
நோக்கி–(தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு
அமையா–த்ருப்தி பெற்று அடங்கியிராத
பொறி புலன்கள் ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்ச விஷயங்களையும்
நமையாமல்–அடக்காமலே
ஆகத்து அணைப்பார்–(மாதர்களின்) தேஹத்தை அணைத்துக் கொண்டு கண்டபடி திரிபவர்கள்
ஆயிரம் வாய் நாகத்து அணையான்–ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
நகர்–நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை
அணைவரே–கிட்டப்பெறுவர்களோ?.

இப்பாட்டுக்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்க இடமுண்டு.
மூன்றாமடியில், அணைவரே என்ற விடத்து ஏகாரத்தைத் தேற்றப் பொருளதாகக் கொண்டால்,
அணைவர்-கிட்டப்பெறுவர்கள் என்று பொருளாய்விடும்.
அன்றி ஏகாரத்தை எதிர்மறைப் பொருளதாகக் கொண்டால், அணைவரே?- சேருவர்களோ? சேரமாட்டார்கள் என்றதாகும்.
ஒன்றோடொன்று முரண்படுகின்ற இரண்டு பொருள்களும் பொருந்துமோ எனின்; கேண்மின்:

இந்திரியங்களைப் பட்டிமேயவொட்டாமல் அடக்கி ஆளாதே ஸ்த்ரீகளின் உடம்போடே அணைத்து மனம் போனபடியே
திரியுமவர்கள் பரமபதத்தைக் கிட்டமாட்டார்கள்; இவ்வுலகத்துக்கும் நரகத்துக்குமே போக்குவரத்தாயிருப்பர்கள் என்பது ஒரு கருத்து.
இந்திரியங்களை அடக்கி ஆளாவிட்டாலும் எம்பெருமான் தானாகவே கடாக்ஷிக்கும்போது அவனை விலக்காதவர்களுக்கு
உஜ்ஜீவிக்க வழியுண்டு என்கை மற்றொரு கருத்து.

இதில், “ஆகத்து அணைப்பார்” என்பதற்கு – எம்பெருமானாலே அந்தரங்கத்தில் விஷயீகரிக்கப் பெறுமவர்கள் என்று பொருள் கொள்ளுதல் நன்று.
இவ்விரண்டு கருத்துகளில் முந்தின கருத்து சேதநஸ்வ ரூபத்துக்குப் பொருந்தினது;
பிந்தின கருத்து பகவந்நிர்ஹேதுக க்ருபாவைபவோக்திக்குப் பொருந்தினது:
இதுவே ஆழ்வார்க்கும் ஆசாரியர்கட்கும் அபிமதமாயிருக்கும்.

இமையாதகண் என்றது-ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலநோக்கி என்றார்.
பொறிபுலன்களைந்தும்—பொறியைந்தும் புலனைந்தும் என்ற படி: சப்தாதிவிஷயக்களைக் கவர்கின்ற செவி வாய் கண் மூக்கு உடலென்னும்
பஞ்சேந்திரியங்களும், இவ்விந்திரியங்களுக்கு இலக்காகின்ற சப்தம் ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் என்னும் பஞ்ச விஷயங்களும்.

இந்திரியங்களுக்கு ‘அமையா’ என்றிட்ட விசேஷனம் – பெற்றவற்றைக் கொண்டு த்ருப்தி பெற்று அடங்கி யிராமையைக் காட்டும்.

———-

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் –33–

பதவுரை

பூ மேல்–திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு–பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து–இருப்பிடத்தை ஏற்படுத்தி யருளியும்
பகர–(யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக
மறை–வேதத்தை
பயந்த–உபகரித்தும் வைத்த
பண்பன்–குணசாலியான எம் பெருமானுடைய
பெயரினை–திருநாமங்களை
பிந்தியால்–மனத்தினால்
சிந்தியாது–எண்ணாமல்
ஓதி உரு எண்ணும்–ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என்–உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)

உலகில் சிலர் இரவும் பகலும் வேதங்களை உருச் சொல்லிக் கொண்டும் ஜபங்கள் செய்து கொண்டும்
ஸந்தியாவந்தனம் முதலிய கருமங்களை அநுஷ்டித்துக் கொண்டும் போதுபோக்குகிறார்களே, இது நல்ல போது போக்குத்தானே.
இப்படிப்பட்டவர்களுக்குப் புருஷார்த்த ஸித்தியில் ஸந்தேஹமில்லையே என்று சிலர் கேட்டனர் போலும்;
அவர்கட்கு உத்தரமுரைக்கின்றார்-

எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாதே செய்கிற ஜபம் தவம் முவலியவை யாவும் பயனற்றனவாமென்கிறார்.
அந்தரங்கத்தில் பகவத்பக்தி முக்கியமாக இருக்கவேண்டும்;
அஃது இன்றியே கையை மூடிக்கொண்டும் வாயை மொணமொணத்துக் கொண்டும் செய்யுமவை பிறரை ப்ரமிக்கச் செய்வதற்கு
உபயோகப்படு மத்தனையேயொழிய புருஷார்த்தஸித்திக்குப் பயன்படாதென்றாராயிற்று.

பண்பன்பெயரினைப் புந்தியால் சிந்தியாது= பகவந்நாமங்களின் பொருளாகிய திவ்யகுண சேஷ்டிதங்களைச் சிந்திப்பதைவிட்டு என்றபடி.

ஸந்த்யா என்ற வடசொல் அந்திஎன விகாரப்பட்டது; ஸந்த்யாவந்தனத்தைச் சொன்னபடி.
மனப்பூர்வமாக வல்லாமல் செய்யும் ஆபாஸ ரூபமான கருமங்களால் எம்பெருமானை அகன்று விடுகை பலிக்குமே யொழிய
அணுகுகை பலிக்கமாட்டாது என்றாராயிற்று.

அந்தரங்கர்க்கு அருகிலே மாளிகை அமைக்குமாபோலே, திருமால் தனது நாபிக் கமலத்திலே நான்முகனுக்கு
இருப்பை அருளினன் என்கிறார் முதலடியில்.
மத்ஸ்யாவதாரம் ஹம்ஸாவதாரம் முதலியவற்றால் வேதோபதேசம் செய்தருளினமையை இரண்டாமடியிலருளிச்செய்தாரென்க

நகரம்- வடசொல். புந்தி – புத்தி

——————–

எம்பெருமானிடத்தில் அந்தரங்கமான அன்பு பூண்டவர்களுள் தலையானவள் யசோதைப் பிராட்டி யொருத்தி தான்
என்று வெளியிடக்கருதிய ஆழ்வார் அதனை ஒரு சமத்காரச் சொல்லாலே வெளியிடுகிறார்.
கண்ணபிரான் இளங்குழவியாய் நந்தகோபர் திருமாளிகையில் சயனித்திருக்கும்போது வஞ்சகக் கஞ்சனாலே ஏவப்பட்டுக்
கொல்ல வந்த பூதனையென்னும் பேய்த்தாய் மிக்க பரிவுள்ளவள் போலத் தெய்வக் குழவியை யெடுத்துத் தனது
விஷந்தடவின முலையைக்கொடுக்க பேதைக்குழவிபிடித்துச் சுவைத்துண்டவாறே அப்பேய்ச்சி உயிர்மாண்டுபிணமாய் விழுந்தாள்;
உடனே யசோதப் பிராட்டி ஓடிவந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முலைகொடுத்தாள்-
என்பதாக இதிஹாஸம் சொல்லப்படுகின்றதே! இது மெய்யாயிருக்கமுடியுமா? என்கிறார்–

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே –34–

பதவுரை

முன்–முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு–ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில்–ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய–துணையற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில்வண்ணா–காளமேகத் திருவுருவனான பெருமானே!
நின் உருகி–உன்விஷயத்தில் உருக்கம் கொண்டவள் போல மேலுக்குக் காட்டி
முலை தந்தாள்–முலை கொடுத்தவளான
பேய் தாய்–பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள்–அவ்விடத்தில் றின்றும் பேர மாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண்–பெரிய அந்த யுத்த பூமியில்
ஆய் தாய்–இடைத் தாயாகிய யசோதை யானவள்
முலை தந்த ஆறு–முலை கொடுத்த விதத்தை
ஒருவர்–ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸ பராஸராதி ரிஷிகள்
மெய் என்பர்–மெய்யென்று சொல்லா நிற்பர்கள்;
என்–இது என்ன ஆச்சரியம்?

ஒருத்தி வந்து முலை கொடுத்துப் பட்டபாடு கண்ணெதிரே காணா நிற்கச் செய்தே இன்னொருத்தி கிட்டவரத்தான் முடியுமா?
அஞ்சாமல் கிட்டவந்து எடுத்து முலை கொடுத்தாளென்பது ஸம்பாவிதமாகுமோ? என்கிறார்.
நாட்டில் இவ்வாறு வேறு எவர்களிடத்திலேனும் நாம் கண்டிருந்தால் இதை மெய்யெனக் கொள்ளலாம்;
இப்படி எங்குங்காணாமையாலே இதனை எங்ஙனே மெய்யெனக் கொள்ளலாம்? என்றாலும்,
பூதனை கொடுத்த விஷத்திற்கு மாற்றான அம்ருதமாகத் தனது ஸ்தந்யத்தைக் கொடுக்க வேணுமென்னும் அன்பு மிகுதியினால்
யசோதை செய்த இக்காரியம் அவளுடைய பக்திபோன்ற பக்தியையுடைய மெய்யன்பர்க்கு நம்பத் தகுந்ததாயிருக்குமே யொழிய
மற்றையோர்க்கு இதில் விச்வாஸம் பிறப்பது அரிதே என்றதாய்த்து.

பேரமர்க்கண் – கண்ணபிரானைக் கொல்லக் கருதி அதற்காக முயன்று பேய்ச்சி இறந்த இடமாதல் பற்றி அதனைப் போர்க்கள மென்றார்,
“பேரமர்க்கண்” என்றதை யசோதைக்கு விசேஷணமாக்கி. அமர் – ஒன்றோடொன்று சண்டைசெய்வன போன்றிருக்கிற,
பேர்—பெரிய, கண்- கண்களை யுடையளான, ஆய்த்தாய்-, என்று உரைத்தலுமொன்று.

———–

கீழ்ப்பாட்டில் யசோதைபிராட்டியினுடைய ஒப்புயர்வற்ற அன்பை அநுஸந்தித்த ஆழ்வார்க்குத்
தாம் போல்வாருடைய அன்பு ஒரு அன்பாகவே தோற்றவில்லை;
கம்சன் முதலானாருடைய பிராதிகூல்யத்தோடு ஸமமாகவே தம்முடைய அன்பை நினைக்கலாயினர்;

அதனால் சிறிது கலக்கமுற்ற ஆழ்வார் “ மிகக் கொடியனான இராவணனிடத்திலிருந்த பிராதி கூல்யமே,
அவன்றானே சிசுபாலனாகப் பிறந்த பிறவியில் உன்னடிச் சேர்வதற்கு அநுகூலமாகப் பலித்ததே!;
அப்படியிருக்க; என் போல்வாரிடத்துள்ள போலியான ஆநுகூல்யம் [அன்பு] அநுகூலமாவதற்குத் தடையுண்டோ?
என்று தமக்குத் தாமே தேறிக் கூறுகின்ற பாசுரம் இது–

ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் -35–

பதவுரை

ஆறிய அன்பு இல்–நிரம்பின பக்தியில்லாதவர்களாய்
அடியார்–சேஷத்வ ஜ்ஞாந மாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால்–தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய–சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ–குற்றமாக
நீ கொள்ளல்–நீ கொள்ளாதே;
(அது ஏனெனில்)
ஈர் ஐந்து முடியான்–பத்துத் தலைகளை யுடையனான ராவணன்.
படைத்த–புத்தி பூர்வகமாகப் பண்ணின
முரண்–தப்புக் காரியமானது
நெடியோய்–பெருமை பொருந்திய உன்னுடைய
அடி–திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே–தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?

“ஆறியவன்பிலடியார்” என்று தம்மையே சொல்லிக் கொள்ளுகிறார் போலும்! தன்மையில் வந்த படர்க்கை!
கூறிய= பலவிபால் வினையாலணையும் பெயர்; கூறியவற்றை யென்று பொருள் .
கொள்ளல் – எதிர்மறை வியங்கோள்வினைமுற்று.
நெடியோய் –முன்னிலையொருமை வினையாலணையும் பெயர்; ஆறாம்வேற்றுமைத்தொகை.
முரண் – கோணலான காரியங்கள்.
தேறி என்னும் வினையெச்சத்தை முன்னடிகளிற் கூட்டியுமுரைக்கலாம், பின்னடிகளிற் கூட்டுயுமுறைக்கலாம்.

———

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

பதவுரை

முன்னம்–முற்காலத்தில்
தரணி தனது ஆக தானே–பூமியெல்லாம் தன்னுடையதென்று அஹங்காரங்கொண்டிருந்த
இரணியனை–ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த–புண்படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர்–கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால்–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையினால்
நீ–நீ
மண் இரந்து கொண்ட வகை–(மாவலியிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே–(ஸம்ஸாரிகளின்) முரட்டுத்தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலாமென்றல்லவோ?.

ஆச்ரித விரோதியான இரணியனைக் கிழித்தெறிந்தது போல மஹாபலியையும் கொன்றொழிக்கலாமா யிருக்கச் செய்தேயும்
அங்ஙனஞ் செய்யாது . அழகிய வடிவெடுத்து யாசகனாய் நிற்கும் வகையாலே உலகங்கொண்டது ஏதுக்காக?
“எம்பெருமான் இவ்வளவு ஸெளலப்யகுணமுடையவன்” என்று எல்லாரும் தெரிந்து கொண்டு இக் குணத்தில் ஈடுபட்டும்
தங்களுடைய அஹங்காரத்தை விட்டொழிந்து ஆட்படக்கூடுமென்கிற திருவுள்ளத்தாலோ? என்கிறார்.

“இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக்கையால்” என்ற சொல்லாற்றலால்,
மாவலியையும் இரணியனைப் போலவே பங்கப்படுத்தவேண்டியது ப்ராப்தமாயிருக்கவும் அங்ஙனஞ் செய்யாதது
மேற்குறித்த கருத்தினாலாம் – என்பது விளங்கும்.

தரணி- வடசொல்.

———–

மூன்று பாசுரங்களாலே திருமலையை அநுபவிக்கிறார்.
எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடமலை யென்கிறார்.

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் –37—

பதவுரை

வகை அறு–அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்ன வகை இன்ன வகை என்று அறுதியிடுவதற்குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள்–ஸூக்ஷ்மார்த்த ச்ரவண முடையவர்களான
வேதியர்கள்–வைதிகர்கள்
நாளும்–நித்தியமும்
புகை விளக்கும்–தூப தீபங்களையும்
பூ புனலும்–புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி–தரித்துக் கொண்டு
திசை திசையின்–பல திக்குக்களில் நின்றும்
சென்று–வந்து சேர்ந்து
இறைஞ்சும்–வணங்குமிடமான
வேங்கடம்–திருவேங்கடமலையானது,
வெண்சங்கம் ஊதிய வாய் மால்–வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கப் பெற்ற
ஊர்–திவ்யதேசமாம்.

அத்திருமலை எப்படிப்பட்ட தென்னில்; தினந்தோறும் பல பல திசைகளினின்றும் வைதிகர்கள் வந்து
தூபதீபம் முதலிய திருவாராதந ஸாமக்ரிகளைக் கொண்டு ஆச்ரயிக்கப் பெற்றது – என்கிறார்.
அந்த வைதிகர்கட்கு விசேஷணமிடுகிறார் வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் என்று
ஸூக்ஷ்மமான சாஸ்த்ரார்த்தங்களையும் அலகலகாக நிச்சயித்தறியக் கூடிய கேள்வி வாய்ந்தவர்கள்- பஹூச்ருதர்கள் என்றபடி.

வெண்சங்க மூதியது பாரதப்போரில்

——————

திருவேங்கடமலையே நித்ய ஸூரி நிர்வாஹகனான எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமென்கிறார்.
திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள் முற்றும் மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாயிருக்கும்.
ஸ்ரீகுலசேகராழ்வார் தம்முடைய பிரபந்தத்திலே * நான்காந்திருமொழியிலே
“வேங்கடத்துக்கோனேரிவாழுங் குருகாய்ப்பிறப்பேனே” என்று தொடங்கித்
திருமலையிற் பலவகை பிறவிபிறக்கக் குதூஹலித்து,
கடைசியாக “ எழில் வேங்கடமென்னு மெம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே” என்று தலைக்கட்டியிருப்பதற்கேற்ப,
இக்குலசேகராழ்வாரைப் போன்ற அத்யவஸாயமுடைய மஹான்களே திருமலையில்
பாம்பாகவும் குறவராகவும் யானையாகவும் புற்றாகவும் பிறந்திருப்பர்களாகையாலே
அப்பொருள்களையும் எம்பெருமானைப் போலவே உத்தேச்யமாகக் கொண்ட இவ்வாழ்வார்
இப்பாசுரத்தாலே தம்முடைய ப்ரதிபத்தியை வெளியிடுகின்றாரென்க.

ஊரும் வரியரவ மொண்  குறவர் மால் யானை
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் -38-

பதவுரை

ஊரும்–திரிகின்ற
வரி அரவம்–(உடம்பில்) கோடுகளை யுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர்–அழகிய குறவர்கள்
மால் யானை பேர–(பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த–(அவ் யானைகளின் மேல்) வீசி யெறிந்த
பெரு மணியை–பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று–மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம்–புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர்–மேற்பட்டவர்களான நித்ய ஸூரிகள்
எம் என்னும் மாலது–‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும் படியாக வுள்ள எம்பெருமானது
இடம்–திவ்ய தேசமாம்.

குறவர்களுக்குப் புனங்காப்பது தொழில்; புனங்களிலே யானை முதலிய ஜந்துக்கள் பட்டிமேயப் புகும்;
அவற்றைத் துரத்திப் புனத்தைக் காவல்செய்து கொள்ளவேண்டிய குறவர் தாங்கள் பரண்களிலே யிருந்தபடியே
தங்கள் கையிலுள்ள பெரிய மாணிக்கக் கட்டியை யானையின் மீது எறிவர்கள் – யானை புனத்தைவிட்டு அப்பால்
போவதற்காக. அப்போது அங்குத் திரியா நின்ற மலைப் பாம்புகளானவை யானையின் மேற்பட்ட ரத்னத்தைக் கண்டு,
யானையை மேகமாகவும் ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து மேகத்தில் மின்னலுண்டானவுடனே இடி உண்டாகுமாகையாலும் ,
பாம்புகள் இடிக்கு அஞ்சி ஒளிக்கு மியல்புடையனவாகையாலும் அப்பாம்புகள் புற்றினுள்ளே புகா நிற்கும்.
இப்படிப்பட்ட தன்மை வாய்ந்த திருமலை எம்பெருமானது திருப்பதியாம் என்றாராயிற்று.

———–

எம்பெருமானுடைய பல செயல்களை அநுஸந்தித்து இனியராகிறார்.

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது –39–

பதவுரை

பேர் ஓதம் வண்ணர்–பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்
முன்–முற்காலத்தில்
இடந்தது–(மஹா வராஹமாகிக்) கோட்டார்குத்தி யெடுத்தது
பூமி–பூமியாம்;
எடுத்தது–குடையாக வெடுத்துப் பிடித்தது
குன்றம்–கோவர்த்தன மலையாம்
அஞ்ச கடந்தது–அஞ்சி முடிந்து போம்படி செய்தது
கஞ்சனை–கம்ஸனையாம்;
கிடந்ததுவும்–திருக் கண் வளர்ந்தருளினது
ஓதம் நீர் மாகடல்–பெரு வெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம்
பெரிது நின்றதும்–பெருமை யெல்லாம் தோற்ற நின்றது
வேங்கடம்–திருமலையிலாம்.

முன்பு மஹாப்ரளயத்தில் அண்ட பித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியை மஹா வராஹமாகி உத்தரித்தான்;
இந்திரன் பசிக் கோபத்தால் ஏழு நாள் விடாமழை பெய்வித்தவன்று திருவாய்ப்பாடியைக் காத்தருள்வதற்காகக்
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தான்;
சாது சனங்களை நலிந்துகொண்டிருந்த கம்சனைக் கொன்றொழித்தான்;
அவதாரங்களுக்கு மூலகந்தமாகத் திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளாநின்றான்;
வானோர்க்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாகத் திருவேங்கடமலையிலே தன் பெருமையெல்லாம் பொலிய நின்றருள்கின்றான் –
என்று இப்பாட்டில் அநுஸந்திப்பதன் கருத்தாவது
இப்படி ஓயாமல் பிறர் காரியமே போது போக்காயிருக்கின்ற எம்பெருமானுடைய நீர்மை வருணிக்க முடியாதது என்றதாம்.

———–

“வேங்கடமே அசுரர் கோன் வீழக்கண்டு உகந்தான் குன்று“ – பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப்
பரம பாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின பெருமானந்த ஆச்ரித பக்ஷபாத மஹா குணத்தை வெளியிட்டுக் கொண்டு
இன்றைக்கும் ஸேவை ஸாதிக்குமிடம் திருமலை யென்கிறார்.
அத்திருவேங்கடம் எப்படிப்பட்டதென்ன அவ்விடத்துச் செய்திகளில் ஒன்றை யெடுத்துரைக்கிறாரிதில்.

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று-40—

பதவுரை

பெரு வில்–பெரிய வில்லையும்
பகழி–அம்புகளை முடையரான
குறவர்–குறவர்களினுடைய
கை–கையிற்பிடித்திருந்த
செம் தீ–சிவந்த நெருப்புக்கு
வெருவி–பயப்பட்டு
புனம் துறந்த–கொல்லையை விட்டு நீங்கின
வேழம்–யானையானது,
இரு விசிம்பில்–பரந்த ஆகாசத்தில் நின்றும்
மீன் வீழ–நக்ஷத்திரம் விழ
கண்டு–அதனைப் பார்த்து (நாம் அப்பால் போக முடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)
அஞ்சும்–பயப்படுமிடமான
வேங்கடம்–திருவேங்கடமானது
மேல்–முன்பொருகால்
அசுரர் கோன் வீழ கண்டு–இரணியாசுரனை முடித்து
உகந்தான்–ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய
குன்று–திருமலையாம்

திருமலையிற் கொல்லைகளில் (இராக் காலங்களில்) யானை பட்டி மேய, அதனைத் துரத்துவதற்காக
அம்பு தொடுத்த வில்லை ஒரு கையிலே கொண்ட குறவர்கள் மற்றொரு கையிலே
தீவட்டியைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு அதட்டிச் செல்ல, அத்தீவட்டியையும் அம்பு கோத்த வில்லையும் கண்ட
அக் களிறு அஞ்சி ஓடிப் போக, அகஸ்மாத்தாக ஆகாசத்தில் நின்றும் நக்ஷத்திரம் அவ்யானை பதறி செல்லும் வழியிடையே வந்து
பெருஞ்சோதியுடனே விழ, அதைக் கண்டு இது நக்ஷத்ரமென்ருணராது ‘குறவர்கள் கைத் தீவட்டியையே கீழெறிந்தார்கள்’ என்று
ப்ரமித்து ‘இவ்வழியை நாம் எப்படி கடந்து செல்ல வல்லோம்? ‘ என்றஞ்சித் திகைத்து நிற்குமிடமாம் அத்திருமலை.

அஸ்தாநே பயசங்கை பண்ணுகிற யானையின் செய்தியைக் கூறின விதனால் – அஸ்தாநே பயசங்கை பண்ணி
எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிற மஹான்களின் இருப்பை நினைப்பூட்டினாராகக் கொள்ளலாமென்ப.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -21-30 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

[நின்றுநிலமங்கை.] தம்முடைய திருவுள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய ஸெளசீல்ய குணத்தை உரைக்கின்றார்.

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-

பதவுரை

சென்று நின்று–(மஹாபலியின் யாக பூமியிற்) போய் நின்று
அம் கை–(தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று–பூமி தானம் வாங்கி
மூ அடியால்–மூன்றடிகளாலே
திசை அளந்த–எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்ட
செம்கண்மாற்கு–செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும்–எப்போதும்
ஆழி–சக்கரமானது
படை–ஆயுதமாயிருக்கும்;
புள்–கருடன்
ஊர்தி–வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
அறி–நான் சொல்வதை ஆராய்ந்து கொள்;
பாம்பு அணையான் பாதம் அடை–சேஷ சயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

முன்னடிகளில் உலகளந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து –
இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே! நீ பின்வாங்கவேண்டா என்றவாறு.
நம்முடைய விரோதிகளைத் தலை துணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்;
நாம் இடர் பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப்
பெரிய திருவடியை வாஹனமாக வுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்.

———-

எம்பெருமானுடைய ஸெளலப்ய குணத்தை யறியாதார் ஆருமில்லை யென்கிறார்.

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –22-

பதவுரை

பொறி கொள் சிறை–பல நிறங்களையுங்கொண்ட சிறகுகளை யுடைய
உவணம்–கருடாழ்வானை
ஊர்ந்தாய்–ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி–மூங்கிலை யொத்த மெல்லிய தோள்களை யுடைய யசோதையினாலே
கடை–கடையப்பட்டு
வெறி கமழும்–பரிமளம் வீசப்பெற்ற
வெண்ணெய்–வெண்ணெயை
உண்டாயை–(களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பே கொண்டு–(கையில் கிடைத்ததொரு) தாம்பை கொண்டு
ஆர்த்த–கட்டியதனாலுண்டான
தழும்ப–காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன்–நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும்–உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.

“ ஆங்கொருநாள் ஆய்ப்பாடி, சீரார்கலையல்குல் சீரடிச்செந்துவாவாய், வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு,
ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய்ச், சீரார் தயிர்கடைந்து வெண்ணெய் திரண்டதனை,
வேரார் நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு நாராருறியேற்றி நன்கமைய வைத்ததனைப்,
போரார்வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் ஒராத வன்போல் உறங்கியறிவுற்றுத்,
தாராந் தடந்தோள்களுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த,
மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போல் கிடந்தானைக்கண்டவளும்
வாராத் தான்வைத்தது காணாள் வயிறடித்திங்கு, ஆரார் புகுதுவார் ஐயரிவரல்லால்,
நீராமிது செய்தீரென்றோர் நெடுங்கயிற்றால் ஊரார்களெல்லாருங் காணவுரலோடே,
தீராவெகுளியளாய்ச்சிக்கன ஆர்த்து அடிப்ப” (சிறிய திருமடல்) என்ற திருமங்கை யாழ்வாரருளிச்செயல்
இங்கே பரம போக்கியமாக அநுஸந்திக்கத்தக்கது.

வெண்ணெயுண்ட குற்றத்திற்காக யசோதைப்பிராட்டி உன்னைக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டிவைத்திருந்தனால்
உன்னுடம்பு தழும்பேறிக்கிடக்குஞ் செய்தியை நானொருவன் மாத்திரமேயோ அறிவேன், உலகமெல்லா மறியாதோ என்கிறார்.

ஸெளலப்யகுணம் பாராட்டத் தகுந்ததாயினும் பரத்வமுள்ளவிடத்தில் அஃது இருந்தால்தான் பாராட்டத்தகும்;
காஷ்டம், லோஷ்டம் முதலிய குழைச்சரக்குகள் ஸுலபமாயிருந்தாலும் அந்த ஸெளலப்யம் மெச்சத்தக்கதன்று,
அங்குப் பரத்வமில்லாமையால் இப்படியே ஸெளலப்யத்தோடு கூடியிராத பரத்வமும் புகழத்தக்கதன்று;
மேருமலையில் பரத்வ முள்ளதெனினும் அங்கே ஸெளலப்யமில்லாமையால் அப்பரத்வத்தைப் பாராட்டுவாரில்லை.
ஆகையால் ஸெளலப்யத்தோடுகூடின பரத்வமும், பரத்வத்தோடுகூடின ஸெளலப்யமுமே போற்றத்தக்கனவாம்;
இவை யிரண்டுங்கூடி எம்பெருமானிடத்திலுள்ளன என்று காட்ட வேண்டி, “பொறிகொள் சிறையுவணமூர்ந்தாய்!” என்கிறார்,
கருடனை வாஹனமாகக் கொண்டிருத்தல் பரத்வலக்ஷணமென்றுணர்க.
வடமொழியில் கருடனுக்கு ‘ஸுபர்ண;’ என்று பெயர்; அதுவே தமிழில் உவணம் எனச் சிதைந்து கிடக்கின்றது.

வெறிகமழும் என்பது வெண்ணெய்க்கு விசேஷணமாகவுமாம், காம்பேய்மெந்தோளி [யசோதை]க்கு விசேஷணமாகவுமாம்.
காம்பு என்ற பலபொருளொருசொல் இங்கு மூங்கிலெனப் பொருள்படும்;
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறுவர்.
உண்டாயை- உண்டான்’ என்பதன் முன்னிலையின் மேல் இரண்டனுருபு ஏறியிருக்கிறதென்க. தழும்பு-வடமொழியில் கிணம் எனப்படும்.

————–

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

பதவுரை

வீங்கு ஓதம் வண்ணர்–பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவை யுடைய எம்பெருமானது
அம் கை–அழகிய திருக் கைகளில்
சார்ங்கம்–சார்ங்க வில்லினுடைய
நாண்–நாணி
தோய்ந்–உராய்ந்த்தனா லுண்டான
தழும்பு–காய்ப்பானது
இருந்த ஆம்-இருக்கின்றது காண்;
தாள்–திருவடிகளிலே
சகடம் சாடி–சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)
தழும்பு இருந்த–காய்ப்பு இருக்கின்றது;
பூங் கோதையாள்–அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி
வெருவ–(என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே
பொன் பெயரோன்–இரணியாசுரனுடைய
மார்பு இடந்த தழும்பு–மார்பைக் கிழித்தெறிந்த தனாலுண்டான காய்ப்பு
விரல்–விரல்களிலே
இருந்த–இருக்கின்றது.

“தாம்பேகொண்டார்த்த தழும்பு- அறியுமுலகெல்லாம்” என்று கீழ்ப்பாட்டிலருளிச் செய்ததைகேட்ட எம்பெருமான்
‘நான் வெண்ணெய் திருடினதாகவும் அதனால் தழும்பு உண்டாயிருப்பதாகவும் அதனை உலகெல்லாம் அறிவதாகவும்
நீர் சொல்லுவது முழுப்பொய்’ என்று சொல்ல; அதுகேட்ட ஆழ்வார்
‘பிரானே! ஒரு தழும்பாயிருந்தால் உன்னால் மறைக்கமுடியும்; உனது கையிலும் காலிலும் விரலிலுமாக
உன்னுடம்பு முழுதும் ஆச்ரிதர்க்காகச்செய்த ஒவ்வொரு காரியத்தினால் தழும்பேறிக்கிடக்கிறதே!’ என்று
ஸ்ரீராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் நரஸிம்ஹாவதாரத்திலுமாக நேர்ந்த தழும்புகளை
யெடுத்துரைக்கின்றாரிப்பாட்டில்.

மூன்றாமடியில், பூங்கோதையாள் என்று பெரிய பிராட்டியாரைச் சொல்லுகிறது.
அவள் எம்பெருமானுடைய திருமார்பிலே இறையுமகல கில்லாது உறையுமவளாகையாலே,
அப்பெருமான் பெரிய சீற்றத்துடனே உக்ரமான நரசிங்க வுருவைக்கொண்ட போது
‘ஜகத்துக்கே பிரளயம் விளைந்திடுமோ!’ என்று அஞ்சி நடுங்கினளென்க.

கடை நிலைத்தீவகமாக நின்ற வீங்கோதவண்ணர் என்றது- கை தாள் விரல் என்ற மூன்றினோடும் அந்வயிக்கத்தக்கது;
கடல் வண்ணனுடைய கை , கடல்வண்ணனுடைய தாள், கடல்வண்ணனுடைய விரல் என்று.

கை , தாள் விரல் என்பவற்றையே எழுவாயாகக்கொண்டு,
கைகளும் கால்களும் விரல்களும் தழும்பைச் சுமந்திருக்கின்றன் என்று பொருள் கொள்ளவுமாம்.

———-

‘தாம்பால் ஆப்பூண்ட தழும்பு எனக்கு உண்டோ?’ என்ற எம்பெருமானை நோக்கி ஆழ்வார்
‘அஃது ஒரு தழும்புதானா? உடம்பெல்லாம் தழும்பு மயமே காண்’ என்றார் கீழ்ப்பாட்டில்
சார்ங்கநாண் தோய்ந்த தழும்பும், சகடம் சாடின தழும்பும், இரணியன் மார்பிடந்த தழும்பும்
வீரச்செயல்களை விளக்குவன வாதலால் அம்மூன்று தழும்புகளையும் எம்பெருமான் இசைந்துகொண்டு,
* தாம்பாலாப் புண்ட தழும்பு மாத்திரம் பரிஹாஸா ஸ்பதமாயிருக்குமே யென்றெண்ணி அதனை இல்லை செய்யத் தொடங்கினான்;

‘ நான் வெண்ணெய் திருடினது மில்லை, ஆய்ச்சி யென்னைப் பிடித்ததுமில்லை;
உரலோடு சேர்த்து என்னைக் கட்டினதுமில்லை; தழும்பு உண்டானது மில்லை’ என்று எல்லாவற்றையும் மறைத்துப் பேசினான்.

அதற்குமேல் ஆழ்வார் என்ன செய்யக்கூடும்? பிரானே! முழுப்பூசினியைச் சோற்றில் மறைக்க நினைப்பாரைப் போலே செய்த
காரியங்களை யெல்லாம் இப்படி மறைத்துப் பொய் சொல்லுவது தகுதியோ?
“ஸத்யம் வத” என்று மெய்யே சொல்லுமாறு பிறர்க்கு விதிக்கிற நீ பொய் சொல்லலாகுமோ?
வெண்ணெயை விரல்களால் அள்ளியெடுத்து நீ வாயிலே யிட்டுக்கொண்ட போது யசோதை கண்டு உன்னைப் பிடித்துக் கொள்ளவில்லையா?
வெறுமனே கயிற்றினால் உன்னைக் கட்டிவைத்தால் அறுத்துக்கொண்டு போய்விடுவாய் என்று
பெரியவொரு உரலோடே இணைத்துப் பிணைத்து வைக்கவில்லையா? அதனால் நீ நெடும்போது ஏங்கி யேங்கி அழவில்லையா?
அந்த நிலைமையை எத்தனையோ பேர்கள் வந்து காணவில்லையா?
இவை யொன்றும் நடந்ததேயில்லை யென்று உன்னால் மறைக்கமுடியுமா? நீயேசொல் நாயனே!’ என்கிறார்.

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை —24–

பதவுரை

ஓங்கு ஓதம் வண்ணா–ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே!
(நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது)
விரலோடு வாய் தோய்ந்த–உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
ஆய்ச்சி–யசோதை யானவள்
கண்டு–பார்த்து
(உன்னைத் தண்டிக்க வேண்டி)
உரலோடு உற பிணித்த நான்று–உரலோடு சேர்த்துக் கட்டி வைத்த போது
குரல் ஓவாது–நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி–ஏங்கிக் கொண்டு
நினைந்து–(அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக் கொண்டு
அயலார் காண–அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே–இருந்தாயல்லவோ?
உரை–உண்மையாகச் சொல்லு.

அவாப்த ஸமஸ்தகாமனாய் ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியுக்தனான நீ ஒரு குறையுள்ளவன் போலவும்,
அந்தக் குறையை நீக்கிக் கொள்ளக் களவு செய்தவன் போலவும், அதற்காகக் கயிற்றினால் கட்டித் தண்டிக்கப்பட்டவன் போலவும்,
அந்தக் கட்டில் நின்று தப்புவதற்கு சக்தியற்றவன்போலவும் கட்டை யவிழ்க்கும் உபாயத்தை உணராதவன் போலவும், இருந்தாயே!
இது என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டவாறு.

ஓங்கோதவண்ணா!” என்ற விளியின் ஆழ் பொருளைப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார் காண்மின்-
“இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலைத் தேக்கி வைத்தாற்போலே காணும்” என்று.

————–

கீழ்ப்பாட்டில், கண்ணபிரான் ஓயாமல் ஏங்கி யழுத சீல குணத்தை அநுஸந்தித்த ஆழ்வார்,
அவன் ஓயாமல் ஏங்கினது போலவே தாமும் ஓயாமல் அவனுடைய சீல குணத்தைப் பேசுவதில்
உத்ஸாஹங் கொண்டிருப்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  –25-

பதவுரை

வரை மேல்–ஒரு மலையின் மேலே
மரகதமே போல–மரகதப் பச்சை படிந்தாற்போல
திரை மேல்–திருப்பாற்கடலிலே
கிடந்தானை–சயனித்திருப்பவனும்
கீண்டானை–இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய்–வராஹ மூர்த்தியாகி
பூமி இடந்தானை–பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.
என் உள்ளம்–எனது மனமானது
உரை மேற்கொண்டு–உரைப்பதில் ஊற்றங்கொண்டு
ஓவாது எப்போதும்–இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி–அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும்–உஜ்ஜீவிக்கும்.

‘என்னுள்ளம் உரைமேற்கொண்டு ஏத்தியெழும்” என்றதனால் –நெஞ்சு தந்தொழிலாகிய சிந்தனையோடு நில்லாமல்
வாக்கின் தொழிலையும் ஏற்றுகொண்டமை கூறப்பட்டது.
திருவாய்மொழியில் “முடியானே மூவுலகுந் தொழுதேத்தும்” என்ற பாசுரத்தை இங்கே நினைப்பது .
“உரைமேற்கொண்டு” என்பதை ‘மேல் உரை கொண்டு” என்று மாற்றி மேலான சொற்களைக் கொண்டு என்று முரைக்கலாம்.

[வரைமேல் மரகதமேபோலத் திரைமேற்கிடந்தானை.] திருப்பாற்கடலிலே எம்பெருமான் பள்ளிகொண்டிருப்பது-
வெண்ணிறமானதொரு மயிலில் மரகதக்கல்லைப் பதித்தாற் போன்றிருப்பதாக அபூதோபமை கூறப்பட்ட்தென்க.

[கீண்டானை.] ‘இரணியன் பார்வை’ என்பது மூலத்திலில்லை யாயிலும் கீண்டா னென்னும்போதே
‘இரணியன் மார்வு’ ஞாபகத்திற்கு வந்துவிடும்.
இரணியனுடலைக் கீண்டது போலவே, குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமஸுரனது வாயைக் கீண்டதும்
பகாஸுரனுடைய வாயைக் கீண்டது முண்டாதலால் அவையும் நினைவுக்குவரின் அவற்றையும் கொள்ளத் தட்டில்லை.
அன்றியே,
“ கேழலாய்க் கீண்டானை இடந்தானை” என்று சேர்த்து வராஹரூபியாய் அண்டபித்தியிலே ஒட்டின பூமியை
அதனின்று ஒட்டு விடுவித்துப் பிறகு கோட்டாற் குத்தியெடுத்தவனை என்று பொருள் கூறுவதும் பொருந்தும்.
“திரைமேற்கிடந்தானைக் கீண்டானை” என்ற சேர்த்தியால்- எம்பெருமான் ‘நம் அடியார்க்கு எப்போது என்ன தீங்கு வருமோ’என்ற
சிந்தனையுடனே சயனித்திருப்ப, துன்புற்ற அடியாரின் கூக்குரல் செவிப்பட்டவுடனே பதறி அத்துன்பத்தைத் தீர்க்க ஏற்றதொரு
திருக்கோலங்கொண்டு இங்குத்தோன்றி ரக்ஷித்தருள்கிறானென்பது விளங்கும்.
இப்படிப்பட்ட எம்பெருமானை எனது நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கின்றது என்றாராயிற்று.

————–

கீழ்ப் பல பாசுரங்களில் விபவாவதார சேஷ்டிதங்களைப் பேசி அநுபவித்த ஆழ்வார்,
என்றைக்கோ கழிந்த அவ் வவதாரங்களின் திருக்குணங்கள் இன்றைக்கும் நன்கு விளங்குமாறு
* பின்னானார் வணங்குஞ் சோதியாக ஸேவை ஸாதித்தருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும் அநுபவிக்க ஆசைகொண்டு,
தென்னனுயர் பொருப்பும் தெய்வவடமலையும் என்னுமிவையே முலையா வடிவமைந்த” என்கிறபடியே
பூமிப்பிராட்டிக்குத் திருமுலைத்தடங்களாகச் சொல்லப்பட்டுள்ள இரண்டு திருமலைகளுள் திருவேங்கடமலையிலே
திருவுள்ளஞ் சென்று அவ்விடத்தைப்பேசி அநுபவிக்கிறாரிப்பாட்டில்.

எம்பெருமானிலுங்காட்டில் எம்பெருமானோடு ஸம்பந்தம்பெற்ற பொருள்களே பரம உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்களாகையாலே
திருவேங்கடமுடையான் வரையில் போகாமல் அவனுடைய ஸம்பந்தம் பெற்றதான திருமலையோடே நின்று அநுபவிக்கிறார்.

திருமலை எப்படிப்பட்டதென்றால் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புமவர்களோடு அநந்ய ப்ரயோஜநரோடு வாசியற
எல்லாருடைய வினைகளையும் போக்கிப் பலனைப் பெறுவிக்குமது; இதனையே மூன்றடிகளில் அருளிச் செய்கிறார்.

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

பதவுரை

எழுவார்–(தாங்கள் விரும்பின ஐச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐச்வர்யார்த்திகளும்
விடை கொள்வார்–(தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப்பாராமல்)
விடைப்பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்–இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை
ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய
இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை–(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீவினையாகிய நெருப்பை
நந்துவிக்கும்–அணைக்கின்ற
வேங்கடமே–திருவேங்கடமலையே
வானோர்–நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை–ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும்–தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை–மலையாகும்.

எழுவார் என்றால் எழுந்துபோகிறவர்களையும் சொல்லும்; மேன் மேலும் ஆசைப் பெருக்கமுடையவர்களையும் சொல்லும்.
இரண்டு படியாலும், ஐச்வர்யார்த்திகளைச் சொல்லுகிறது இங்கு,
‘எங்களுக்கு ஐச்வர்யத்தைத் தரவேணும்’ என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும்
எம்பெருமானைவிட்டு எழுந்துபோகிறவர்கள் என்றாவது,
ஐச்வரியம் வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் என்றாவது கொள்க.

இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது- ஐச்வர்ய ப்ராப்திக்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து
ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை.

விடை கொள்வார் என்றால் விட்டு நீங்குகிறவர்கள் என்கை; ஸந்தர்ப்பம் நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச் சொல்லுகிறது.
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது –
ஆத்மாநுபவத்திற்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து கைவல்யா நுபவத்தை நிறைவேற்றுகை.

ஈன்துழாயானை வழுவரவகை நினைந்து வைகல் தொழுகிறவர்கள் – பரமைகாந்திகளான பகவத்பக்தர்கள்;
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது –
மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கும்படியான தீவினைகளைத் தொலைத்து முத்தியளிக்கை.

ஆக, வேண்டுவோர் வேண்டின படியே அநிஷ்ட நிவ்ருத்தியையும்
இஷ்டப்ராப்தியையும் செய்விக்கவல்லது திருவேங்கடம் என்றதாயிற்று.

[வினைச்சுடரை நந்துவிக்கும்]- பாவங்களை நெருப்பாக ரூபித்துக் கூறினமைக்கு இணங்க “நந்துவிக்கும்” எனப்பட்டது;
நந்துவித்தல்- (நெருப்பை)அணைத்தல்.

[வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை.] –
ஒரு நெருப்பை அணைக்கும்; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார்.
வானோர் மனச் சுடரைத் தூண்டுகையாவது-
பரமபதத்திலே பரத்வ குணத்தை அநுபவித்துக் கொண்டிருக்கிற நித்யஸூரிகளை ,
இங்கு வந்து ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களை அநுபவிக்குமாறு உத்ஸாஹமூட்டுதலாம்.

திருவேங்கடமலையின் தன்மை இப்படிப்பட்டதென்று அநுஸந்தித்தாராயிற்று

———–

கீழ்ப்பாட்டில் திருவேங்கட மலையை அநுபவித்துப்பேசின ஆழ்வார் பிறகு
திருவேங்கட முடையானையும் ஸேவித்து அவனது திருக்கைகளினழகிலே ஆழங்காற்பட்டார்;

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை -27-

பதவுரை

மலையால்–கோவர்த்தன கிரியைக் கொண்டு
குடை கவித்து–குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசி யென்னும் அஸுரனுடைய வாயைப் பிளந்தும்,
சிலையால்–வில்லைக் கொண்டு
மராமரம் ஏழ் செற்று–ஸப்த ஸால விருக்ஷங்களை அழித்தும்,
(இச்செயல்களோடு நிற்காமல்)
கொலை யானை–கொலை செய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு–சண்டை செய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும்–பிடுங்கினவையும்.
பூ குருந்தம்–பூ வோடு கூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும்–வேரோடே பறித்துத் தள்ளினவையும்
(எவையென்றால்)
கார்–(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தை யொத்த
கோடு–சங்கை
பற்றியான்–ஏந்தி யிருக்கின்ற பெருமானுடைய
கை–திருக் கைகளேயாகும்.

திருக் கைகள் மிகவும் ஸுகுமாரமாக இருந்தும் ராமகிருஷ்ணாதியவதாரங்களில் பெரிய வீரச்செயல்களை யெல்லாம்
சிறிதும் வருத்தமின்றிச் செய்தனவே! என்று ஈடுபட்டு,
அத்திருக்கைள் இன்றைக்கும் அந்த வீரப்பாடு தோன்ற விளங்கும்படியை யாவரும் காணலாமென்கிறார்.

ஆக மலையால் குடை கவித்ததும்
மாவாய் பிளந்ததும்
மராமரமேழ் செற்றதும்,
யானைக் கொம்பு பறித்ததும்
பூங்குருந்தம் சாய்த்ததும்
இத் திருக்கைகளே காண்மின் என்று பழைய வீரச் செயல்களை ஸ்மரித்து அநுஸந்தித்தாராயிற்று.

————-

திருவேங்கடமுடையானை நோக்கி உனது திருமேனியிலே அழகும் ஐச்வரியமும் சீலம் முதலிய குணங்களும்
நிழலிட்டுத் தோற்றுகின்றனவே! என்று ஈடுபடுகிறார்.
சங்கும் சக்கரமும் திருக்கைகளிலே உள்ளன என்றதனாலும் மலர்மகள் நின்னாகத்தாள் என்றதனாலும் ஈச்வரத்வம் சொல்லப்பட்டது;
‘கார்வண்ணத்துஐய!’ என்ற விளியினால் அழகு அறிவிக்கப்பட்டது.
பிரமனுக்கும் சிவனுக்கும் முதன்மையுண்டாகுமாறு திருநாபியிலும் திருமேனியின் வலப்பக்கத்திலும்
இடம் கொடுத்திருப்பதைக் கூறுகின்ற பின்னடிகளால் சிலகுணம் தெரிவிக்கப்பட்டது.

கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை ——–28-

பதவுரை

கார் வண்ணத்து ஐய–மேகம் போன்ற வடிவையுடைய பெருமானே
வலம் புரியும்–வலம்புரிச் சங்கமும்
நேமியும்–சக்கரமும்
கைய–என் கையிலுள்ளன;
மலர் மகள்–பெரிய பிராட்டியார்
நின் ஆகத்தாள்–உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான்–சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான்–உனது உந்திக்கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான்–பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை–உனது திருமேனியின் ஏக தேசம்

கைய=கைகளிலே யுள்ளன; ‘கையது’ என்பதன் பன்மை.
வலம்புரி- வலப்பக்கத்தால் சுழிந்திருப்பது. (இதற்கு எதிர்- இடம்புரி.)

சக்கரத்தின் விளிம்பைச் சொல்லுகிற நேமி என்னும் வடசொல் தமிழில் சக்கரத்துக்கும் பேராக வழங்கும்.
ஐய!- அண்மைவிளி .
மலர்மகள் நின்ஆகத்தாள்=” அகலகில்லேனிறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பன்” திருவேங்கடமுடையானிறே.
பிரமன் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் எப்போதும் ஓதிக்கொண்டிருப்பதனாலும்,
வேதங்களே எனக்குச் சிறந்த கண்; வேதங்களே எனக்குச் சிறந்த செல்வம்” என்று சொல்லுவனாதலாலும்
செய்ய மறையானெனப்பட்டான்.

இறையான்– ஈச்வரனாகத் தன்னை அபிமானித்திருக்கிற ருத்ரன் என்கை.
நின்ஆகத்து இறை–‘இறை’ என்பதற்குப் பல பொருளுண்டு;
உனது திருமேனியிலே சிவன் அற்ப பாகமாக அமைந்திருக்கிறானென்றவாரு.
திருவாய்மொழியில் “ ஏறாலுமிறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளுந்தனியுடம்பன்” [4-8-1] என்ற பாட்டின்
இருபத்தினாலாயிரப்படி வியாக்கியானத்தில்-
‘தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ: நிவாஸ: பரிகல்பித:”
என்றெடுத்துக் காட்டப்பட்டுள்ள பிரமாண வசனம் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
[இதன்பொருள் பரமசிவன் தவம் புரிந்ததனால் திருவுள்ளமுவந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தனது வலப்பக்கத்திலே
அவனுக்கு இடம் கற்பித்துத்தந்தருளினனென்பதாம்.]

————

நித்யவிபூதி யென்னப்படுகிற பரமபதத்திற்கும் லீலாவிபூதியென்னப்படுகிற ஸம்ஸாரமண்டலத்திற்கும்
நாதனாய்க்கொண்டு உபயவிபூதி நாதனென்று பேர் பெற்றிருக்குமெம்பெருமான் தன்பெருமையை நினைத்து மேனாணித்திருப்பவனல்லன்;
அடியவர்கள் துன்புறுங்காலத்து நேரில் ஓடிவந்து காத்தருளும்படியான வாத்ஸல்யகுண முடையவன்காண் என்று
தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிற முகத்தால் எம்பெருமானது மேன்மையையும் வெளியிடுகிறார்.

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -29-

பதவுரை

இறையும்–ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான்–பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன
அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய
லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்,
பிறை மருப்பின்–பிறை போன்ற தந்தத்தை யுடையதும்
பைங்கண்–பசுமை தங்கிய கண்களை யுடையதுமான
மால் யானை–பெரிய கஜேந்திரனை
படு துயரம்–(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த–ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான பெருமான் காண்;
தெளி–[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள்.

இறை என்று ஸ்வாமிக்குப் பெயர்; “ வீற்றிருந்தேழுலகும் தனிகோல் செல்ல வீவில்சீர், ஆற்றல் மிக்காளுமம்மான்” என்றபடி:
பரமபதத்தில் ஸர்வஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்ட நாதத்வம் இங்கே விவக்ஷிதம்.
ஆகவே, இறை யென்றது இங்கே நித்யவிபூதிநாதனைச் சொன்னபடி.
நிலனும் என்று தொடங்கிச் செந்தீயுமாவான் என்ற வளவால் லீலாவிபூதி நாயகத்வம் சொல்லப்படுகிறது;
பஞ்சபூதங்களினாலாகிய பதார்த்தங்கள் நிறைந்தவிடமே லீலாவிபூதியாதலால் பஞ்ச பூதங்களையிட்டு அருளிச்செய்தாரென்க.

“இறையும்“ என்ற உம்மைக்குச் சேர (இரண்டாமடியில்) “ஆவான்” என்ற விடத்திலும் உம்மை கூட்டிக்கொள்ளவேணும்; ஆவானும் என்க.
ஆக இவ்வளவால் – உபய விபூதி நாதனாயிருக்கும் பெருமையையுடையவனா யிருந்தாலும் என்றதாயிற்று .

இதற்குப் பிரதிகோடியான நீர்மையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார்.
முதலைவாய்க் கோட்பட்ட கஜேந்திராழ்வான் துயரை அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து காத்தருளினது பிரசித்தம்.

[பிறைமருப்பின் பைங்கண்மால்யானை]
யானைக்கு வெளுத்த தந்தமிருப்பதும் பசுமை தங்கிய கண்களிருப்பதும் அதிசயமான விஷயமன்றே;
இதைச்சொல்லி வருணிப்பதற்குப் பிரயோஜன மென்னெனில்;- ஒரு குழந்தை கிணற்றில் விழுந்துபோக,
அதனையெடுத்துக்கரையிலே போட்டவர்கள் ‘அந்தோ! இதொரு காலழகும் இதொரு கையழகும் இதொரு முகவழகும் என்ன!’ என்று
சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்களன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின்
அதனுடைய தந்தத்தினழகிலும் கண்ணினழகிலும் ஆழ்ந்து கரைந்தமை தோற்ற
அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் யானையை வருணிக்கின்றாரென்க.

பசுமை + கண், பைங்கண். கண்டாய் – முன்னிலையசைச்சொல்.
இப்பாட்டில் நெஞ்சமே!’ என்கிற விளி வருவித்துக் கொள்ள வேண்டும்.

—————-

ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘உம்முடைய நெஞ்சுபோலே எங்களுடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே
ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்க;
அவர்கட்கு உத்தரமாக அருளிச்செய்வது போலும் இப்பாட்டு.

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து ——30-

பதவுரை

உள்ளத்தை–மனத்தை
தெளிது ஆக–[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி
செம் நிறீஇ–செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தை மூட்டி]
ஞானம்–பகவத் விஷய பக்தியாலே
தெளிது ஆக–‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு–நன்றாக
உணர்வார்–அறிபவர்களுடைய
சிந்தை–மனமானது.
எளிது ஆக–வருத்தமில்லாமல்
தாய்நாடு கன்றேபோல்–[பெரிய பசுக்கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக் கொண்டு கிட்டுகிற கன்றைப்போல,
தண் துழாயான் அடிக்கே–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த எம்பெருமானது திருவடிகளையே
புரிந்து–விரும்பி
போய் நாடிக் கொள்ளும்–தானே சென்று தேடிச் சேரும்.

பட்டிமேய வொண்ணாதபடி மனத்தை யடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை அறிந்திருப்பவர்களின் மனமானது
மற்றெவரையும் பற்றாமலும் ஐம்புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே பதறிக்கொண்டு
மிக்க ஆவலுடன் சென்று கிட்டும்;
ஒரு கன்றுக்குட்டியானது பல்லாயிரம் பசுக்களின் திரளினுள்ளே தனது தாயைக் கண்டுபிடித்துக் கொள்வது
எப்படியோ அப்படியே இதுவும் . இதற்கு ஸம்பந்தவுணர்ச்சியே காரணம்.
ஸம்பந்த ஜ்ஞான மில்லாதவர்களுக்கு ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று;
அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸுலபம் என்றாராயிற்று.

மூன்றாமடியில் “ அடிக்கே” என்றும் “அடியே” என்றும் பாடபேதங்கள் …

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

[வாயவனையல்லது.] எம்பெருமான் ஆச்ரிதரை ரக்ஷிப்பதிலும் கொடியவர்களைத் தண்டிப்பதிலும்
தீக்ஷிதனாயிருக்கின்றான் என்கிற திருக்குணங்களிலே யீடுபட்டுத்
தம்முடைய இந்திரியங்கள் அவன் திறத்தே அவகாஹிக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-

பதவுரை

வாய்–எனது வாயானது
அவனை அல்லது–ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது–(மற்றொன்றைப்) புகழாது;
கை தாம்–கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா–உலகங்களைத் தாவி யளந்து கொண்ட
திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழ மாட்டா;
பேய் முலை நஞ்சு–பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக–உணவாக
உண்டான்–அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால்–திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா–கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்க மாட்டா.

உலகம் தாயவன் என்றதனால் ஆச்ரிதரை ரக்ஷிப்பதில் தீக்ஷிதனென்பதும்,
பேய் முலை நஞ்சு ஊணாகவுண்டா னென்றதனால் கொடியவர்களைத் தண்டிப்பதில் தீக்ஷிதனென்பதும்
தெரிவிக்கப்பட்டன வென்க.

மூன்றாமடியில், உருவொடு- உருயையும் என்றபடி.
உருவை யல்லால் கண் காணா பேரை யல்லால் செவி கேளா என்று அடைவே அந்வயிப்பது.
இது- முறைநிரனிறைப் பொருள்கோள்.

————-

[செவி வாய் கண்.] ‘நமக்கு உபாயமு உபேயமும் எம்பெருமானே யாவன்’ என்கிற சாஸ்த்ரார்த்தம்
பலர்க்கும் தெரியுமாயினும் பக்தி முதலானவற்றையும் எம்பெருமானைப் பெறுகைக்கு உபாயமாகச் சிலர் ப்ரமித்திருப்பர்கள்.
அந்தோ! இப்படியும் சில மஹான்களுங்கூட மயங்கியிருக்கிறார்களே! என்று ஆழ்வாரிரங்குகிறாரிப்பாட்டில்.

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)

ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்ன வேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார்.
* மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் தன்னுடைய
நிர்ஹேதுக கிருபையாலேயன்றி வேறொரு உபாயத்தை எதிர்பார்த்தன்றே என்று குறிப்பித்தவாறு.

இப்பாட்டின் முதலடியில் இந்திரியங்கள் ஐந்தையும் இரண்டா மடியில் பஞ்ச பூதங்களையும் சொல்லி யிருப்பதன் கருத்தாவது-
இந்திரியங்களோடு கூடினதாய்ப் பஞ்ச பூதங்களால் இயன்றதான சரீரத்தைச் சொன்னபடி.
சரீரத்தை மோக்ஷஸாதநமாக ஆரும் சொல்லவில்லையே யெனில்;
அவியாத ஞானம் என்பதனால் சொல்லப்பட்ட பக்திரூபாபந்ந ஜ்ஞானமானது கரண களேபர ஸாத்யமாகையாலே
கரண களேபரங்களுக்கும் பரம்பரையா மோக்ஷ ஸாதநத்வம் சொல்லக்கூடு மென்றுணர்க.

அக்நி ஹோத்ரம் முதலிய வேள்விகளும் விவேகம் தயை ஸத்யம் முதலிய நற்குணங்களாகிற நல்லறமும்
ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதனமாகக் கொள்ளப்படுகின்றனவோ வென்னில்;
அவையும் பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணங்களாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகையாலே
அவற்றுக்கும் பரம்பரயா மோக்ஷ ஸாதநத்வமே சொல்லகூடும்.

ஆகவே, இப்பாட்டில் அவியாத ஞான மென்று சொல்லப்பட்ட பக்தி யொன்றே மோக்ஷோபாயமாக வழங்கக் கூடியது.
எம்பெருமானுக்கே நிரபேஷ உபாயத்வம் கொள்ளுகிற ஆழ்வார் திருவுள்ளத்தாலே
அந்த பக்தி யுபாயத்வமும் கழிக்கப்பட்டுகின்றது. என்பரே! என்ற ஏகாரம் இதனை காட்டும் .

இனி என்பரே என்றவிடத்து ஏகாரத்தை அசையாகக்கொண்டு
‘பகவத் ப்ராப்திக்கு பக்தியை உபாய மென்பர்’ என்று சொல்லிவிடுவதாக உரைப்பாரு முண்டு, இயல்வு- உபாயம்.

———-

[இயல்வாக] எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கரியம் செய்வதற்கு தக்க யோக்யதை யுடையவர்கள் நித்ய ஸூரிகளேயன்றோ,
ஸம்ஸாரிகளான நமக்கொல்லாம் அப்பெருமானைப் பணிந்து உய்தற்கு உரிய விரகு உண்டோ? என்று ஒரு சங்கை உதிக்கக்கூடுமே;
அதற்கு உத்தரமாக அவதரித்த பாசுரம் இது.

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் –13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்தவேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

நித்ய ஸூரிகள் தாம் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்ந்திருப்பவர்; இருக்கட்டும்;
ஸம்ஸாரிகளுக்கு பகவத் ஸமாச்ரயண யோக்யதையே கிடையாதென்று கொள்ள இடமில்லை
ஸம்ஸாரிகளும் வேதங்களை யோதி அவற்றின் பொருள்களைத் தெரிந்து கொண்டு படிப்படியாகத் திருந்தி
எம்பெருமானை வந்து கிட்டும்படியாக அப்பெருமான் தானே மூல ஸுக்ருதமாக அமைந்திரா நின்றானென்கிறார் .

இப்படியருளிச்செய்வதன் கருத்து யாதெனில்; எம்பெருமானை யடைவதாகிற காரியம் சேதநருடைய தலையிலே கிடப்பதன்று; .
“எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய, விதி சூழ்ந்ததா லெனக்கே லெம்மான் திரிவிக்கிரமனையே” என்கிறபடியே
நெடுநாளே பிடித்து ஸம்ஸாரியைப் பெறுவதற்கு அப்பெருமான்தானே பலவகையான க்ருஷிகளைப் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்றவாறு.

“ஆதியாய் நின்றாரவர்” என்றதன் கருத்து இதுவே. ஸ்ரீ வேதாந்த தேசிகனும் இதனையே திருவுள்ளம்பற்றி
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே “ நிதாநம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:’ என்றருளிச் செய்தா ரென்றுணர்க.

———-

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

[அவரவர்தாந்தாம்.] கீழ்ப்பாட்டில் “ஆதியாய் நின்றாரவர் என்றதை விவரித்துப் பேசுகிறது இப்பாட்டு.
உலகத்திலுள்ள ஜனங்கள் ஒவ்வொரு தெய்வங்களைப் பரதேவதையாகக் கொண்டு தாம் தாம் கற்ற சொற்களைக் கொண்டு
அத்தெய்வங்களைத் துதித்து விக்ரஹாராதநம் விசேஷ மென்றறிந்து சுவர்களிலே சித்திர ரூபமாக
அத்தெய்வங்களை யெழுதியும் லோஹமய பிம்பங்களாக ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தும் தொழா நின்றார்களாகிலும்,
அம்மன் பிடாரி முதற்கொண்டு சிவன் முடிவாகவுள்ள தெய்வங்களுக்கெல்லாம்
ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே பிரதான தேவதையாம் என்றாராயிற்று.
கீழ்ப்பட்ட தெய்வங்களுக்கெல்லாம் எம்பெருமானை ஆச்ரயித்தே ஸத்தை பெறவேண்டும்படி அவனே முழுமுதற் கடவுள் என்கை.

அவரவர் என்ற சுட்டு – அவர்களின் குணக்குறைவைக் காட்டும். ஸத்வகுண பூர்த்தியில்லாத ஜனங்களெல்லாம் என்றபடி.
தாந்தாமறிந்தவாறாவது- சாஸ்த்ரங்களையும் சிஷ்டா சாரங்களையுங்கொண்டு அறியகில்லாமல்
தங்களுடைய ராஜஸ தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு.

இப்பாட்டில் ஸ்ரீமந் நாராயணனை ‘உலகளந்தமூர்த்தி’ என்ற திருநாமத்தால் குறிப்பிட்டது கருத்தோடு கூடியதாம்;
புருஷோத்தமனான எம்பெருமானை விட்டு க்ஷூத்ர தெய்வங்களைப் பணிகின்ற ஸம்ஸாரிகளோடு அத்தெய்வங்களோடு வாசியின்றியே
எல்லாரும் தன்னுடைய திருவடியின் கீழே துகையுண்ணுமாறு உலகங்களை வியாபித்தவனென்று சொல்லுமாற்றால்
இவனே முழுமுதற் கடவுளென்று மூதலித்தாராய்த்து.
மூர்த்தி- ஸ்வாமி.

———-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

பதவுரை

(உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம்மூவர் உள்ளும்–அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–கடல் சூழ்ந்த இப்பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

[முதலாவார்.] கீழ்ப்பட்டில் “உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” என்றருளிச்செய்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்
‘கீழ்ப்பட்ட தெய்வங்களென்று உம்மால் கூறப்படுகின்ற தெய்வங்களும் தம்மைத் தொழுகின்றவகளுக்குப்
பலன்களை யளிக்கக் காண்கிறோமே; அவர்களது அருளைப் பலரும் பெற்று வாழ்கின்றனரன்றோ என்று கூற,
அவர்களுக்கு விடை யளிக்கிறாரிப்பாட்டில்.

தெய்வம் தெய்வமென்று நாட்டிலே பலர் வழங்கப்படினும், படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும்
கர்த்தாக்களாக ஏற்பட்ட ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரன் என்ற மூவருமே முதன்மைபெற்ற தேவர்களாவார்;
அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே கடல் வண்ணனாகிய ஸ்ரீமந்நாராயணனே தலைமை பெற்றிருப்பவன்.
ஸகல ஜகத் காரண பூதனாய் எல்லாரிடத்திலும் வாத்ஸல்யம் நிறைந்தவனான அந்தத் திருமாலின் திருவருள்
நன்மையைத் தருமேயொழிய வேறு எந்த தெய்வத்தினருளும் சாச்வதமான நன்மையை நல்க மாட்டாது;
அவ்வருளைபெற நினைப்பது வீணேயாகும் என்றாராயிற்று.
க்ஷூத்ர தெய்வங்களின் அருள் க்ஷூத்ர பலன்களுக்கே காரணமாவதனாலும்
பரமபுருஷனுடைய பேரருள் ஒப்புயர்வற்ற அழிவில்லாத பேரின்பத்தைப் பெறுவிக்கக் காரணமாவதனாலும்
‘முதலாய நல்லானருளே நன்று, பல்லாரருளும் பழுது’ என்னத் தட்டில்லை யென்க.

———–

[பழுதேபலபகலும்.] கீழ்ப்பாட்டில் முதலாய நல்லானருளல்லால் …. பல்லாரருளும் பழுது” என்றருளிச் செய்த ஆழ்வார்
அவ்வெம்பெருமானுடைய அருள் தம்மிடத்தில் நெடுங்காலம் பயன்படா திருந்ததை நினைத்து,
‘அந்தோ! நெடுங்காலம் பாழாய்ப் போய்விட்டதே!’ என்று அநுதாபப் படுகிறாரிதில்.

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடைதட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க்கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

இப்பாட்டில், இறந்தகாலத்தைப் பற்றி வருத்தமும் நிகழ்காலத்தைப் பற்றி மகிழ்ச்சியும் எதிகாலத்தைப்பற்றி அச்சமும்
ஆக மூன்றுகாலங்களைப் பற்றின மூன்று விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. (எங்ஙனே யெனின்?)
“கடலோதம் காவலைப்பக்கண்வளரும் செங்கணடலோத வண்ணரடியை அரவணை மேல் கண்டு (இன்று) தொழுதேன்”
என்றமையால் நிகழ்காலத்தில் பகவத்ஸேவை வாய்க்கப்பெற்ற ஆநந்தம் வெளியிடப்பட்டதாயிற்று;

“பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்” என்றமையால், கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம் இவ்விதமாக
ஆநந்தமயமாய்க் கழியவில்லையே யென்கிற வருத்தம் காட்டப்பட்டது”,

“அஞ்சியழுதேன்” என்றமையால் – இனிமேல் வரப்போகிற காலமும் கீழ்க்கழிந்த காலம்போலே
வீணாகக்கழிந்து விடுமோ வென்கிற அச்சம் காட்டப்பட்டது.

“கண்டு தொழுதேன்” என்னப்பெற்ற பின்பு எதிர்கால நிலைமைக்கு அஞ்ச வேண்டுவானேன்? என்னில்;
தாம் இருப்பது இருள் தருமாஞாலத் திலாகையாலே
“விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறுமைம்புலனிவை. மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா?” என்கிறபடியே
இந்த லீலா விபூதியின் ஸ்வபாவத்தை நினைத்து அஞ்சாதிருக்க முடியாதிறே.
பரம பக்தனாயிருந்த ப்ரஹ்லதழ்வானையுமன்றோ ஒருகால் எதிரியாக்கிற்று இம்மண்ணுலகம்
”ஆற்றங்கரை வாழ்மரம்போ லஞ்சுகின்றேன்” என்றாரே திருமங்கையாழ்வாரும்.

கீழ் ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும்
“அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாஸ காலம் முதற்கொண்டே தாம்
பகவத் விஷய ப்ரவணராயிருப்பதாகச் சொல்லிக் கொண்ட இவ்வாழ்வார் இங்கே
பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்னில்;
இப்பிறவிக்கு முன்னே மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களில் நாள்கள் பலவும் பழுதாயினவே யென்று வருந்துகிறபடி.
இப்பிறவியிலும் ஆதியே பிடித்து இங்ஙனே பாசுரம் பேசி அநுபவிக்க ப்ராப்தியிருந்தும்
கீழே பல நாள்கள் பாழாயினவேயென்று வருந்துவதாகக் கொள்ளவுமாம்.

பேயாழ்வார் -சென்றநாள் செல்லாத செங்கண்மாலெ கண்மாலென்ற நாள் எந்நாளும் நாளாகும்” என்கிறார்;
(அதாவது) நிகழ்கால நிலைமை நன்றாயிருக்கப் பெற்ற ஆனந்த மிகுதியினால் இறந்தகால எதிர்கால நிலைமைகளிற்
கவலையற்று எல்லாக் காலமும் எனக்கு நல்ல காலமே யென்றார்; அஃதொரு சொற் சமத்கார விசேஷமென்க.

அடலோத வண்ணர்= ஓதம் என்று கடலுக்கும் அலைக்கும் பெயர்; இவ்விடத்தில் அலை என்னும் பொருள் விவக்ஷிதம்;
அதாவது திருமேனியிலே பரவுகின்றலாவண்ய தரங்கங்களைச் சொன்னபடி.
அநுபவிக்க வருமவர்களை அடர்த்துத் தள்ளுகிற லாவண்ய தரங்கங்களோடு கூடிய திருமேனியையுடையவர் என்ற தாயிற்று.

————-

[அடியும்படிகடப்ப.] கீழ்ப்பாட்டில் “பழுதே பல பகலும் போயின”என்றருளிச் செய்ததையே விவரிக்கிறது இப்பாட்டு.
இப்போது ஒரு மனிதனாகப் பிறந்திருக்கிற நான் திடீரென்று பிறந்துவிடவில்லை;
ஜீவாத்மாவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டியென்பது இல்லை யாகையால் “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்கிறபடியே
அநாதி காலமாகவே பல பல பிறவிகள் பெற்று ஸம்ஸாரியாய் வந்து கொண்டிருக்கிறேன்;
எம்பெருமான் உலகளந்தருளின காலத்திலும் நான் ஏதோ ஒரு ஜந்துவாகப் பிறந்திருந்தவனேயொழிய
அன்று நான் இல்லாமலிருக்கவில்லை; அப்போது நான் விவேகி யாயிருந்து அந்த திவ்ய சரிதையிலே ஈடுபட்டிருந்தேனாகில்
அப்போதே இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் விடுபட்டு முக்தனாய்ப் போயிருப்பேன்;
அன்று நான் அறிவிலியாய்க் கிடந்து வாணாளை வீணாளாகப் போக்கிவிட்டேன்;
ஆகவே பழுதே பலபகலும் போயினவென்று கதறியழவேண்டியதாயிற்று- என்பதே இப்பாட்டின் உட்கருத்தாகும்.

“முடியும் விசும்பளந்தது என்பர்” என்ற சப்தஸ்வாரஸ்யம் நோக்கத்தக்கது. என்பர் என்கையாலே-
உலகளந்தவாற்றை நான் இன்று பிறர்சொல்லக் கேட்க வேண்டியதாயிற்றே யொழிய
நேரிலிருந்து ஸேவிக்கப் பெறவில்லையே யென்கிற அநுதாபம் நன்கு விளங்குமிறே.

கீழ் இரண்டாம்பாட்டில் “ என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது “ என்று புராதன சரிதங்களெல்லாம்
ப்ரத்யக்ஷம் போலப் பேசப் பட்டிருந்தாலும், கிரமமாக அவை நடந்த காலத்திலே
அவற்றைத் தாம் ஸேவிக்கப் பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றோ.

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி யுகிரா
லீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடம்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)

அடியும் படிகடப்ப “கோலமாமென் சென்னிக் கமலமன்ன குரைகழலே”என்றாற்போல அடியவர்களுக்கு சிரோபூஷணமாக
அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு கல்லும் கரடுமான உலகங்களை யளப்பதே! என்கிற வருத்தமும்.

[தோள் திசைமேல் செல்ல] பிராட்டியை அணைக்க வேண்டிய திருத்தோள்களைக்கொண்டு திசைகளின் மேல் வியாபரிப்பதே! என்கிற வருத்தமும்,

[முடியும் விசும்பளந்தது] எங்கள் கண்முன்னே விளங்கி
“முடிச் சோதியாய் உனது முகச்சோதிமலர்ந்ததுவோ?” என்று நாங்கள் பாசுரம் பேசவேண்டும் படியான திருமுடியை
அஹங்காரிகளும் பகவத் விஷயச் சுவடறியாதவர்களுமான தேவதைகளுள்ள விடங்களிலே நிமிர்ப்பதே! என்கிற வருத்தமும் உள்ளுறையும்.

பின்னடிகளின் கருத்தையும் ஆழ்ந்து நோக்கினால், இரணியனைப் பிளந்து ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்த காலத்திலும்,
ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரிய திருவடியின் மீதேறி அரை குலையத் தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் ஸேவித்து வாழா தொழிந்தேனே! என அநுதாபப்படுவதும் தோன்றும்.

————

[ நான்றமுலைத்தலை.] இப்பாசுரமும் கீழ்ப்பாசுரம் போலே இழந்தநாளைச் சொல்லி அநுதாபப்படுவதாம்.

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக் கொள்ள வல்ல
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானேயாவன்.

ஸ்ரீ கிருஷ்ணனாய்த் திருவவதரித்துப் பேய்ச்சியை முலையுண்கிற வியாஜத்தாலே முடித்தும்,
நவநீதம் முதலியவற்றைக் களவாடி அமுது செய்தும் குவலயாபீடமென்கிற கம்ஸனது மதயானையை முடித்தும்
பகாஸுரனை வாய்பிளந்தும் இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளியும் இப்படி பலவகையான
சிறுச் சேவகங்களைச் செய்தருளின காலத்திலும் ஸேவிக்கப் பெறாதே இழந்தேனே! என்கிறார் போலும்.

இழந்ததற்கு அநுதாபப்படுவதாகப் பாசுரத்தில் வாய்ச் சொல் இல்லை யாயினும்
கீழ்ப்பாசுரங்களின் ஸந்தர்ப்பத்தை நோக்குங்கால் இழந்த நாளைக்கு அநுதாபம் தோன்றவே
இப்பாசுர மருளிச்செய்வதாகக் கொள்ளலாம்.
“ இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி இடைக்குலத்திலே வந்து பிறந்தவிடத்திலும்
இழந்தேனிறே என்று சோகிக்கிறார்.” என்றார் முன்னோர்களும்.

இனி, கிருஷ்ணாவதார சரித்திரங்கள் சிலவற்றைச்சொல்லி ஆநந்தமாகப் போது போக்குகிறார் எனினும் குற்றமில்லை.

“மருதிடைபோய் மண்ணளந்த” -உலகளப்பதற்கு முன்னே மருதிடைபோனான் என்று பொருளன்று;
மருதிடைபோனது ஒருகாலத்திலும் மண்ணளந்தது ஒருகாலத்திலுமாகிலும் ஆழ்வாருடைய ஜ்ஞாந வைசத்யத்தாலே
அநுஸந்தாந தோரணியில் முன்னது பின்னதென்கிற வாசி யின்றியே எல்லாம் ஒன்று சேர விளங்குகிறபடி .

————

[மாலுங்கருங்கடலே.] *பழுதே பலபகலும் போயினவென்று அழுத ஆழ்வார்,
‘நம்மைப் போலே எல்லாரும் ஏமாந்தவர்கள் தானோ, அன்றி யாராவது எம்பெருமானை ஒரு நொடிப் பொழுதும்
விடாது அநுபவிக்கப் பெற்றவர்களுண்டோ’ என்று ஆராய்ந்து பார்த்தார்;
“மாகடல்நீருள்ளான்” என்கிறபடியே ஸமுத்ரத்தில் ஸர்வ காலமும் எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருளும் செய்தி நினைவுக்கு வந்தது;
ஹா! ஹா!! ஸமுத்ர ராஜனுடைய பாக்கியமே பாக்கியம்; ஒரு நொடிப்பொழுதும் விடாமல் எம்பெருமானது திருமேனியைத்
தீண்டப் பெற்றிருக்கிறானன்றோ வென்றநுஸந்தித்து அக்கடல் தன்னையே நோக்கி
‘இப்படி உனக்குப்’ பகவதநுபவம் நித்யமாய்ச் செல்லும்படி நீ என்ன நோன்பு நோற்றாய் கொல்?’ என வினவுகின்றார்.

நீ நோற்ற நோன்பைச் சொல்லுவாயாகில் நானும் அந்த நோன்பை நோற்று இப் பேறு பெறுவேன் காண் என்பது உள்ளுறை.

அஃறிணைப் பொருளான கடலை நோக்கிக் கேள்வி கேட்பதாகப் பேசின இப்பாசுரத்தின் கருத்தாவது
எம்பெருமான் இடைவிடாது திருப்பாற்கடலில் சயனித்திக்கொண்டு உறங்குவான்போல்
யோகு செய்யும் பெருமானாயிருக்கின்றா னென்பதைக் காட்டுவதேயாமென்க.

மாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–திரு வாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்
கண்படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

கருங்கடலே!= திருப்பாற்கடல் வெண்ணிறமுள்ளதாயினும் கார்முகில் வண்ணனான எம்பெருமானுடைய நிழலீட்டாலே கருங்கடலாயிற்று.
பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்திலே ஸ்ரீரங்கவிமானத்தைப்பற்றிப் பேசிம்போது
அபி பணிபதியதிபாவாத் சுப்ரம், அந்தச் சயானோ; மரகதஸீகுமாரை; ரங்கபர்த்துர் மயூகை: –
ஸகல ஜலதிபாநச்யாமஜீமூதஜைத்ரம் புளகயதி விமாநம் பாவநம் லோசநே ந:” என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தகும்.
இதன் கருத்தாவது- திருவனந்தாழ்வானே ஸ்ரீரங்கவிமாநமாக எழுந்தருளியிருக்கையாலே
இவ்விமானம் வெண்ணிற முள்ளதாயினும் உள்ளே சயனித்திருக்கின்ற ஸ்ரீரங்கநாதனுடைய மைவண்ணத் திருமேனி
நிறத்தின் நிழலீட்டாலே கடலைப் பருகிக் கிளர்ந்த காளமேகத்தை வென்று விளங்குகின்றது–என்பதாம்.

“கருங்கடலே!” என்ற விளியில் – பகவத் விரஹ வ்யஸநத்தாலே நான் மாத்திரம் உடம்பு வெளுத்திருக்க,
நீ நித்ய ஸந்தோஷச் செருக்குத் தோன்ற மாமை பெற்று விளங்குகிறாயே! என்பதாகக் கருத்துக்தொனிக்கும்.
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்று உப்புக் கடலிலும் எம்பெருமான் உளனாகக் கூறுகையாலே
இங்கு ‘மாலுங் கருங்கடலே!’ என்று உப்புக் கடலையே விளித்ததாகக் கொள்ளுதலும் கூடும்.

———–

[பெற்றார் தளைகழல.] கிருஷ்ணாவதார காலத்திலும் த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய
திருவடித் தாமரைகளை ஏத்தி யிறைஞ்சப் பெற்ற பாக்கியசாலிகள் பலரிருந்தனரன்றோ;
அப் பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என்று நோவு படுகிறார்.

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று—20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக
பேர்ந்து–(திருப்பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

“பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்” என்றிருப்பது கொண்டு
கிருஷ்ணனாய்ப் பிறந்த பின் வாமநனாய்ப் பிறந்தானென்று கருத வேண்டா;
ஒருகாலத்தில் கிருஷ்ணனாய்ப் பிறந்தவனும் மற்றொருகாலத்தில் வாமநனாய்ப் பிறந்தவனுமான ஸர்வேச்வரன் என்றபடி.
அன்றி,
“பெற்றார் தளை கழலப் பேர்ந்து” என்பதும் வாமநாவதாரச் செயலையே கூறுவதெனவும் கொள்வர்;
அப்போது, பெற்றார் என்றது – தன்னை ஆச்ரயிக்கப் பெற்றவர்களென்றபடி;
அவர்களுடைய தளையாவது= கருமபந்தம்;
அது நீங்கும்படியாகப் பரமபதத்தில் நின்றும் வந்து ஓர் குறளுருவானபடியைச் சொல்லிற்றாகக் கொள்க.

செற்றார்படி= செற்றாரென்று சத்ருக்களுக்குப் பெயர்; படி யென்று பூமிக்குப் பெயர்;
ஆச்ரித விரோதிகளான மஹாபலி போல்வார் தங்களுடையதென்று அபிமாநித்திருந்த பூமியை என்றதாயிற்று.

ஈற்றடியில் “ஏத்துவராம் நின்று” “ஏத்துவரால் நின்று” என்பன பாடபேதங்கள்.
தங்கள் காரியத்தையே பார்ப்பவரான தேவர்களும் எம்பெருமானது திருவடிகளை ஏத்தி யிறைஞ்சப்பெற்றார்களே!
என்கிற ஆச்சரியமும் தொனிக்கும்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -1-10- -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 15, 2021

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

பதவுரை

வையம் தகளி ஆ–பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக–அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக–உஷ்ண கிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியன் அடிக்கே–செஞ்சுடர்ச் சக்கரைக் கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை–இப் பாமாலையகிற பூ மாலையை
சூட்டினேன்–சாத்தினேன்;
(ஏதுக்காகவென்னில்;)
இடர் ஆழி நீங்குக என்று–(பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.

[வையம் தகளியா.] தகளியாவது-நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல்.
(தாளி என்று உலக வழக்கு. பூமியானது கடிந வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும்,
கடலானது த்ரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும்,
ஸூர்யன் ப்ரகாசஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச் செய்கிறார்.
இங்கு இங்ஙனே ரூபணம் செய்வதன் கருத்து யாதெனில்; சூந்யமே தத்துவமென்றும்,
உலகம் ஒரு ஈச்வரனையுடையதல்ல என்றும் பலபடியாகப் பகரும் மதாந்தரங்ளை மறுத்து
விசித்திரமான பிரபஞ்சத்தை நிருமிக்கவல்ல ஞான சக்தி முதலிய குணங்களையுடைய திவ்விய மங்கள விக்ரஹத்தோடு கூடிய
ஸர்வேச்வரன் உளனென்றும் அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தமென்றும் இப்பாசுரத்தால் விளக்கப்பட்டதாகும்.

ஸூர்யன் சிறிதும் தவறாமல் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக நீடுழியாய் நடந்து வருவதானது-
விசித்ரசக்தி வாய்ந்த ஸர்வேச்வரனொருவனுளன் என்பதை நமக்கு நன்றாக விளக்குகின்ற தன்றோ.
வார்கடலின் நிலைமையும் வையத்தின் நிலைமையும் இவ்வுண்மையையே வற்புறுத்துகின்றன.
கடலானது தன்னிடத்தில் பல பல ஆற்றுப் பெருக்குகள் வந்து விழுதலால் நிறைந்து வழிதலாவது,
அவை வந்து விழாத காலத்தில் வடிந்து குறை படுதலாவது ஒன்றுமின்றியே
எப்போதும் ஸமநிலைமையாகவே யிருந்துகொண்டு எல்லையை மீறாதிருப்பதும்,
ஐம்பதுகோடி யோஜனை தூரத்தளவும் பரந்து கடினமாயிராநின்ற இப்பூமியானது பெரியவெள்ளத்தில் ஒரு கழற்காய் மிதப்பதுபோல
மஹார்ணவ ஜலத்தில் மிதந்துகொண்டிருப்பதும் இவை தம்மைப் படைத்தவொரு முழு முதற் கடவுளின்
அற்புதமான சக்தி விசேஷத்தைப் புலப்படுத்துகின்றனவன்றோ.

அப்படிப்பட்ட அபாரசக்தியுக்தனான ஒரு ஜகத்காரணபூதன் ஸித்திக்கும்போது அப்பெருமானுக்குக் கைங்கரியம் செய்யவேண்டுதல் முக்கியம்;
கைங்கரியம் மாநஸிக மென்றும் வாசிகமென்றும் காயிகமென்றும் மூன்று வகைப்படும்;
அவற்றுள் வாசிக கைங்கரியமான பாசுரம் பாடுதலை அடியேன் செய்கின்றேன்;
இக்கைங்கரியத்தை இதுவரையில் நான் செய்யக்கூடாதபடி இடையூறாகவிருந்த ஸம்ஸாரத் துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக-என்றாயிற்று.

முன்னடிகளின் கருத்தை ஊன்றி நோக்குமிடத்தில் இவ்வாழ்வார் அநுமாநத்தினால் ஈச்வரனை ஸாதிப்பதாக ஏற்படுகின்றது;
சராசரரூபமான இந்த பிரபஞ்சம் முழுவைதையும் படைத்து நடத்திக்கொண்டு போவதற்குப் பாங்கான வல்லமை வாய்ந்த
ஸர்வேச்வரனொருவனுண்டு என்பதை வையம் கடல் ஸூர்யன் என்ற மூன்று பொருள்களின் நிலைமையைச் சொல்லுகிற
முகத்தினால் ஸமர்த்தித்தபடியால் அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கிற தார்க்கிகர்களின் படியை அடியொற்றினாராகிறார்;
இதுகூடுமோ?
சாரீரகமீமாம்ஸையில் சாஸ்த்ரயோநித்வாதிகரணத்தில் அநுமாநத்தால் ஈச்வரனை ஸாதிக்கலாகாதென்று மறுத்து
வேதப்ரமாணமொன்றினாலேயே ஈச்வரனுடைய உண்மையை உணரவெணுமென்று ஸ்தாபித்திருப்பதற்கு மாறாக
இஃது இருக்கின்றதே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
வேதத்துக்கு விருத்தமாக அநுமாநங்கொண்டு ஸாதிப்பதை அங்கு மறுத்துரைத்த மாத்திரத்தினால்
வேதத்துக்கு விருத்தமல்லாத அநுமாநங் கொள்வதில் பிசகுள்ளதாக நினைக்கலாகாது . இது ஸ்ரீபாஷ்யாதி ஸம்மதமுமாம் விரிப்பிற் பெருகும்.

இடராழி நீங்குகவேயன்று–
இதுவரையில் எம்பெருமானைத் துதியாதிருந்ததனாலுண்டான வருத்தம் நீங்குவதற்காக என்றும்,
துதிக்கவொட்டாமல் பிரதிபந்தகமாயிருந்த பாவங்கள் தொலைவதற்காக என்றும்,
இப்பிரபந்தத்தைக் கற்று ஸம்ஸாரிகளும் துயர்தீர்ந்து வாழ்வதற்காக என்றும்
மூன்றுபடியாக உரைக்கலாம்.

———–

[என்றுகடல்கடைந்து.] ஸர்வேச்வரனை அநுமாநத்தால் ஸாதிப்பது தோன்றக் கீழ்ப்பாட்டு அருளிச் செய்யப்பட்டது;
அவனை அநுமாநங்கொண்டு ஸாதிக்கவேண்டிய வருத்தமில்லை; அவன் செய்தருளியிருக்கும் எல்லையற்ற
அதிமாநுஷங்களான செயல்களே அவனுடைய உண்மையை ஸாதித்துக் கொடுக்கக்கூடியவை என்று வெளியிடக்கருதி,
கடல் கடைந்தது உலகளந்தது முதலிய சில சேஷ்டிதங்களை அருளிச்செய்யும் முகத்தால் அவனுடைய உண்மையை மூதலிக்கின்றார்.

ஆளவந்தார் எம்பெருமானுடைய உண்மையை உணர்வதற்கு உரிய ஸாதநங்களை அருளிச் செய்யுமிடத்து
“த்வாம் சீல ரூப சரிதை:” (ஸ்தோத்ரரத்நம்.) இத்யாதிகள் அருளிச் செய்ததும்
அப்படியே ஆழ்வானும் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில்—”சித்ரைச்ச கைச்சிதுசிதை: பவதச் சரித்ரை:” என்றருளிச் செய்ததும் ஸ்மரிக்கத்தக்கன.

கடல்கடைந்து தேவர்களுக்குச் சாவாமருந்து எடுத்துத்தந்து அவர்களை ரக்ஷித்ததும்,
மாவலி பக்கல் மாணுருவாய்ச்சென்று மூவடி நீரேற்றுப்பெற்று உலகளந்து இந்திரனது துன்பத்தைத் தீர்த்தொழித்ததும்
ஸ்ரீமந் நாராயணனுடைய உண்மையை விளக்கவல்லன காண்மின் என்கிறார்.

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-

பதவுரை

கடல் கடைந்தது–(தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
என்று–எந்த நாள்?
நீர் ஏற்றது–(மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது
எ உலகம்–எந்த உலகம்?
அதனை–அவற்றை
நான் ஒன்றும் உணரேன்–நான் அடியோடு அறிகின்றிலேன்;
அது–அந்தக் கடலானது
அன்று–ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து–மலைகளைக்கொண்டு திருவணை கட்டித் தூர்த்து
உடைத்து–(இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண்படுத்த–எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி–ஸமுத்ரமாம்;
இது–(நீரேற்றுப் பெற்ற) இவ் வுலகமானது
நீ–ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து–ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து–(வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு–(பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த–பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்–பூமியாகும்.

என்றுகடல்கடைந்தது? என்கிற கேள்வியும் எவ்வுலகம் நீரேற்றது? என்கிற கேள்வியும் கேள்வி கேட்பதில் நோக்குடையனவல்ல;
கடல் கடைந்தபோது தோன்றிய திரையும் நுரையும் மாறாமல் இப்போதுதான் கடல் கடைந்ததுபோலத் தோன்றுகின்றதே!;
உலகளக்கும் போது வைத்த அடிச்சுவடு மாறாமல் “வாமனன் மண்ணிது” என்னும்படி இதோ தோன்றுகின்றதே! என்று
ப்ரத்யக்ஷஸமமாக்க் காட்டுபவர் போலச் சொல்லுகிறபடி.

கடல் கடைந்ததும் உலகளந்ததும் என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலமருளப்பெற்ற இவ்வாழ்வாரது
அகக் கண்ணுக்கு அச்சரிதைகளெல்லாம் ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் இங்ஙனே அருளிச்செய்யக் குறையில்லை யென்க.

நெடுநாளைக்கு முன்னே நடந்த செயல்கள் ஆழ்வார்க்கு இன்று பரத்யக்ஷம்போல் தோற்றினாலும்,
‘ஐயோ! கடல்கடைந்த வக்காலத்து நாம் நேரில்கண்டு மங்களாசாஸனம் செய்யப் பெறவில்லையே!
உலகளந்த அக்காலத்திலே காடும் மேடும் தாவின திருவடிகளின் கீழே நம்முடைய தலையை மடுக்கப் பெற்றிலோமே!’
என்கிற வருத்தம் தோன்றி அவ்விழவு விளங்க ஒன்றுமதனை யுணரேன் நான் என்கிறார்;
அச்செயல்கள் நடந்தகாலத்திலே அவற்றை நான் அநுபவியா தொழிந்தேனே! என்றவாறு.

நம்மாழ்வார் *மத்துறுகடை வெண்ணெய்களவினிலுரலிடையாப்புண்ட சரிதையை அநுஸந்தித்ததும்] “எத்திறம்!” என்று
மோஹித்து கிடந்தது போல் இவரும் முதலடியில் அநுஸந்தித்த செயல்களிலே மோஹித்து
“ஒன்றும் அதனை யுணரேன்” என்கிறார் என்று முரைப்பர்.

முதலடியிலே கடல் கடைந்ததும் உலகளந்ததும் அநுஸந்திக்கவே அக்கடலிலும் அவ்வுலகத்திலும் எம்பெருமானுக்குள்ள
ஸம்பந்தங்கள் திருவுள்ளத்திலே ஞாபகத்திற்கு வர அவற்றைப் பின்னடிகளிற் பேசி அநுபவிக்கிறார்.
கடலில் எம்பெருமான் செய்த காரியங்களை மூன்றாமடியிலும் உலகுக்காக அவன் செய்த காரியங்களை நான்காமடியிலும் அருளிச் செய்கிறார்.

இராவண ஸம்ஹாரம் செய்து பிராட்டியை மீட்டிக் கொணர்வதற்காக இலங்கைக் கெழுந்தருளும்போது
“மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலைகடலடைத்தான்” என்றபடி ஸேதுபந்தனம் பண்ணுனதும்,
பிராட்டியைக் கைக்கொண்டு மீண்டெந்தருளும்போது அதனை உடைத்ததும்,
“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தயாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” என்றபடி
* தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிப் பள்ளிகொண்டிருத்தலுமாகிய கடலிலே செய்த காரியங்கள் அநுஸந்திக்கப்பட்டன.

ஆதியில் படைத்ததும், வராஹாவதாரத்தில் ஹிரண்யாக்ஷனைக் கொன்று இடந்ததும்,
ப்ரளயம் வந்த போது திருவயிற்றினுள்ளே வைதிட்டதும், பிறகு வெளிப்படுத்தியதுமாகிய
இவை உலகுக்காகச் செய்த செயல்களாக அநுஸந்திக்கப்பட்டன.

இப்படிப்பட்ட அதிமாநுஷ சேஷ்டிதங்களைச் செய்தருளின ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்றும்,
அவனுடைய உண்மையை இச்செயல்களே ஸாதித்துத் தரவல்லன என்றும் இப்பாசுரத்தால் அறிவிக்கப்பட்டதாயிற்று.

——–

[பாரளவும்.] எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்கள் பலவற்றினுள்ளும் உலகளந்த சரிதையிலே நம் ஆழ்வார்கள் அதிகமாக ஈடுபடுவர்கள்;
விசேஷித்து முதலாழ்வார்கள் மிகவு மதிகமாக ஈடுபடுவர்கள்.
கீழ்ப்பாட்டில் “எவ்வுலகம் நீறேற்றது” என்று அந்தச் செயலைச் சிறிது ப்ரஸ்தாவித்த மாத்திரத்திலே
அதிலே திருவுள்ளம் மிகவும் அவகாஹிக்கப் பெற்று அந்த வரலாற்றைப் பேசி அநுபவிக்கத் தொடங்கி
நிலை கொள்ள மாட்டாமல் நின்று தளும்புகின்றார்.

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

பதவுரை

ஓர் அடி–ஒரு திருவடியை
பார் அளவும் வைத்து–பூமிப் பரப்பு உள்ள வரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்–மற்றொரு திருவடியும்
பார் உடுத்த–இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற
நீர் அளவும்–ஆவரண ஜலம் வரையில்
செல்ல–செல்லும்படி
நிமிர்ந்தது–ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்–தெய்வ மகளான யசோதையின் வடிவு கொண்டு வந்த பூதனையை
அளவு கண்ட பெருமான்–முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்ட நெறி–நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்–அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.

சூருருவிற்பேயளவுகண்டபெருமான் என்பது ஸம்போதநம்(விளி);
தமது வல்லமையால் எம்பெருமானை அளவிட்டுக் காணவேணுமென்று நினைப்பவர்கள் பூதனை பட்டபாடுபடுவர்கள்
என்பது தோன்ற இந்த ஸம்போதநமிடுகின்றார். உன்னை முடிப்பதாக வந்த பூதனையை முடித்த பிரானே!
நீ மாவலிபக்கல் மூவடி மண் நீரேற்றுப் பெற்று ஒரு திருவடியைப் பூமிப் பரப்படங்கலும் மலரவைத்து,
மற்றொரு திருவடியை மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்தளவும் செல்லவைத்து உலகளந்த விதத்தை யானறிகின்றிலே னென்கிறார்.

அளப்பதாவது-அளக்கிறவன் தான் நின்றவிடந்தவிர மற்றோரிடத்தில் மாறிக்காலிடுதல் என்று உலகத்திலே நாம் காண்கிறோம்.

ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருப்பதை அளப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்;
ஆகவே, எம்பெருமான் உலகளந்தான் என்று பலரும் சொல்லுகிறார்களே இது எப்படி பொருந்தும்?
ஒரு திருவடிக்கும் கீழுலகமும் மற்றொரு திருவடிக்கு மேலுலகமும் சரிசமமாக இடமாகப் போந்துவிட்ட படியால்
மாறி மாறி அடியிடுவதற்கு அவகாசமேயில்லையாதலால் அளந்தானென்பது எங்ஙனே சேரும்? என்று ஒரு சமத்காரமாகப் பேசுவார் போல
“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்கிறார்.

இதனையே நம்மாழ்வார் திருவிருத்தத்தில்-
“கழல்தல மொன்றே நிலமுழுதாயிற்று ஒரு கழல் போய், நிழல்தர எல்லாவிசும்பும் நிறைந்தது,…..
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக் கின்றதே?” (58) என்ற பாசுரத்தினால் விரித்துரைத்தாரென்க.
அவ்விடத்து வியாக்கியானத்திலே-
”அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே;
அடிமாறியிடிலிறெ அளந்ததாவது; இவனிங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோமீ!” என்றுள்ள
பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

“நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்பதற்கு மற்றும் சிலவகையாகவும் பொருள் கூறுவர். அளவு காண்கையாவது அளக்கை.

[சூருருவிற்பேயளவுகண்ட] “ சூருமணங்கும் தெய்வப் பெண்பெயர்” என்பது நிகண்டு,
பூதனை யென்னும் பேய்மகள் தெய்வப் பெண்ணுருவாக வந்தாளோ வென்னில்;
கண்ணபிரானுக்குத் தாயாகிய யசோதைபோல வடிவெடுத்து வந்தாளாகையாலும்,
அவ்வசோதை “தெய்வநங்கை” என்று குலசேகரப் பெருமாளால் கூறப்பட்டிருக்கையாலும் சூருருவின் பேய் என்னக் குறையில்லை யென்க.
அன்றி, பதினெண் தேவகணத்தில் பேயும் ஒன்றாகக் கூறப்பட்டிருத்தல் பற்றியும் “சூருருவின் பேய்” என்றாகவுமாம்.

பேயளவு காண்கையாவது அவளுடைய ஆயுளின் அளவைக்கண்டுவிடுதல்; கொல்லுதலைக் கூறியவாறு.
கண்ணபிரானைக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்ட பூதனை யென்னும் பேய்ச்சி தன் முலையிலே விஷத்தைத் தடவிக்கொண்டு
யசோதைபோல வடிவெடுத்துத் திருவாய்ப்பாடிக்கு வந்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ண சிசுவையெடுத்து
நஞ்சுதீற்றிய முலையை உண்ணக்கொடுக்க பேயென்றறிந்த பெருமான்
முலைப்பாலோடு அவளுயிரையும் உறிஞ்சி உண்டிட்டனனென்ற வரலாறு ப்ரஸித்தம்.

————–

[நெறிவாசல்.] எம்பெருமானுடைய இன்னருளால் ஞான விகாஸம் பெற்ற நானே
அவனுடைய ஸ்வரூபம் குணம் சேஷ்டிதம் முதலியவற்றை நன்கு அறியமாட்டாமல்,
கடலிலே நீஞ்சிக் கரையேறமாட்டாதே கிடந்து அலைவாரைப்போலே அலையா நிற்க,
தன் முயற்சியால் சிறிது ஞானம்பெற்ற சிவன் அவற்றை எங்ஙனே அறிய வல்லான்?
எனக்குத் தெரிந்தவற்றில் ஏகதேசமும் அறியமாட்டாத அவன் தன்னை ஸர்வஜ்ஞனாக நினைத்துக் கொண்டு
பகவத் விஷயத்தைத் தான் உபதேசிக்கவல்லவன் போலச் சில சிஷ்யர்களைச் சேர்த்துக் கொண்டு ஆலமரத்தடியிலே
உட்கார்ந்துகொண்டு ஆசார்யபதம் வஹித்து எம்பெருமானுடைய தன்மைகளை உபதேசிப்பதாக இழிந்துவிட்டானே!
இஃது என்ன அறிவுகேடு! என்று ருத்ரனைப் பரிஹஸித்துப்பேசுகிறார்
“அரன் அறிவானாம்” என்ற சொல்லின் காம்பீர்யத்தை நோக்குமின். நானே அறியமாட்டாதிருக்க அவனோ அறியப்போகிறான்;
தான் தெரிந்து கொள்ளவும் ப்ரஸக்தியில்லாதிருக்கப் பிறர்க்குப் போதகாசிரியனாக வீற்றிருந்தானே! என்று கர்ஹிக்கிறபடி.

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—

பதவுரை

அன்று–முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல்–ஆலமரத்தின் நிழலிலே
(இருந்துகொண்டு)
நால்வர்க்கு–அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு
அறம் உரைத்த–தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து–விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக் கொண்டுள்ளவனுமான
அரன்–சிவன்
ஜந்து பொறி வாசல்–செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும் வழியில்
போர் கதவம் சார்த்தி–வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று]
நெறி வாசல் தானே ஆய் நின்றானை–உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை
அறிவான் ஆம்–அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)

”அரன், நெறிவாசல் தானேயாய் நின்றானை அறிவானாம்” என்று அந்வயிக்க.
நெறி என்று வழிக்குப் பேராகையாலே பலனைப் பெறுவிக்கும் வழியாகிய உபாயத்தைச் சொன்னபடி.
வாசல் என்று புகுமிடத்துக்குப் பேராகையாலே இறுதியில் அடையத் தக்க பலனைச்சொல்லுகிறது;
ஆகவே, உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை என்றதாயிற்று அன்றி,
நெறி –ஸ்வரூபத்துக்கு ஏற்ற, வாசல்-உபாயம், தானேயாய் நிற்பவனை என்று முரைக்கலாம்.

சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக் கொண்டு
ஆலமரத்தடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தனனென்று நூல்கள் கூறும்;
திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியிலே-
”ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்-
ஞால மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல், வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” (17.) என்ற பாசுரத்தினால்
இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.

ப்ரஹ்மஜ்ஞாநமில்லாத பாலாகி யென்பவன் ப்ரஹ்ம ஜ்ஞாநமுடையனான அஜாதசத்ரு வென்பவனுக்கு
ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை உபதேசிக்கத் தொடங்கியது போலும் சிவனது உபதேசமும் என்ற இழிவுதோன்ற “அறிவானாம்” என்று பழித்துக் கூறுகின்றார்.

[ “ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி”]
ஒரு வாசலை அடைக்கத் தொடங்கினால் மற்றொரு வாசற்கதவு திறந்துகொள்ளும்படியாயுள்ள பஞ்சேந்திரியங்களாகிற
யந்த்ரம் போன்ற ஐந்து வாசல்களையும் அடைத்தாலன்றி பகவத் தத்துவத்தை உபதேசிக்க வொண்ணாதென்பதும்,
அந்த வாசற்கதவுகளை அடைப்பது மிகவும் அருமை என்பதும் இவ்வாக்கியத்தில் தோன்றும் ஐந்து பொறி வாசற்கதவுகளை
அடைக்கமாட்டாத் ருத்ரன் எங்ஙனே அறிவான்? என்றவாறு.

போர்க்கதவம் என்றது- அடைக்கத் தொடங்குகிறவர்களின் முகத்திலே அறைகிற கதவு என்றபடியாய்;
எப்படிப்பட்டவர்களையும் விஷய ப்ரவணராக்கவல்ல இந்திரியங்களின் வன்மையைக் கூறியவாறு.

எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடையும்போது அதனின்றும் தோன்றிய விஷத்தை ஸ்ரீமந்நாராயணனுடைய கட்டளையாலே
சிவன் தான் வாங்கி உண்ண அதனையறிந்த பார்வதி அஞ்சி அவ்விஷம் கழுத்துக்குகீழே இறங்காதபடி
அவனது கழுத்தை இறுகப் பிடித்துக் கொள்ள விஷம் கழுத்தளவிலே நின்றுவிட்டது;
அதனால் சிவன் கறுத்த கழுத்தை யுடையனாய் காலகண்டனென்று பேர்பெற்றனன் என்ற வரலாறு தோன்ற “ஆலமமர்கண்டத்தான்” என்றார்.
ஆலம்-வஷம்; ஹாலாஹலமென்ற வடசொற் சிதைவு என்பர். சிவன் தனது தமோகுணத்துக்குத் தக்க செயலைச் செய்ய வல்லவனே யன்றி
ஸாத்விகர் செய்யும் செயல் அவனால் செய்யமுடியா தென்பதும் இவ்விசேஷணத்தின் கருத்தாம்.

ஹர: என்ற வடசொல் அரனெனத் திரிந்தது; ஸம்ஹார கர்த்தா என்கை

————–

[அரன்நாரணன்நாமம்] கீழ்ப்பாட்டில் சிவனுடைய ஒருசெய்தியை எடுத்துப் பேசின ஆழ்வார்
“அரன் அறிவானாம்” [சிவனுக்கு என்ன தெரியும்?] என்று இழித்துப் பேசவே அதனைக் கேட்ட சிலர்
“நாட்டங்கலும் ஈச்வரனென்று கொண்டாடப்படுகிற அச்சிவபெருமானை இப்படி நீ ஏசிப் பேசலாமோ?
அவன் காற்கீழே பலரும் தலையை மடுத்து ஏத்தியிரைஞ்சக் காண்கிறோமே, அவன் பரதெய்வமன்றோ?” என்று சொல்ல,
அது கேட்ட ஆழ்வார்-ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை யென்பதும் ருத்ரன் அங்ஙனல்லன் என்பதும்
இருவருடையவும் நாமம் ரூபம், வாஹனம், தொழில் முதலியவற்றால் நன்கு விளங்கக் காணலாமென்று
அவற்றை யெடுத்துரைத்துக் காட்டுகிறாரிதில்–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று —5-

பதவுரை

நாமம்–ஒருவனுடைய பெயர்
அரன்–எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாக வுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
(மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்)
நாரணன்–(ஸர்வ வ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி–ஒருவனுடைய வாஹனம்
ஆன் விடை–மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)
புள்–(வேத மூர்த்தியான) கருடப் பறவையாகும்;
உரை–ஒருவனைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்–மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
(மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)
மறை–(ஸ்வயம் வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்–ஒருவனுடைய வாஸஸ்தானம்
வரை–(கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்;
(மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்)
நீர்–(அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்–ஒருவனுடைய தொழில்
அழிப்பு–(கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)
அளிப்பு–(இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது–ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.
வேல்–(கொலைத் தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)
நேமி–அருளார் திருச்சக்கரம்
உருவம்–வடிவம்
எரி–(கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
(மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்
கார்–(கண்ட போதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;
ஒன்று–சிவனாகிய ஒருவன்
மேனி–(ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்;
[ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]

இருவருடைய பெயரையும் நோக்குமிடத்து சிவன்பெயர் அரனென்றும் விஷ்ணுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரசித்தமாகவுள்ளன;
அரனென்றால் ஹரிப்பவன் எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும்;
நாராயணனென்றால், நாரங்களாகிய நித்ய வஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமவன் என்று பொருள்படும்;
ஆகவே, ஸர்வ ரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ
என்பதை நீங்களே ஆராயலாம் என்றாராயிற்று.

இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே!’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு
த்ருஷ்டாந்தமாகக் கொள்ளப்படுகிற எருதை வாஹனமாகவுடையவன் அரன்;
“ஸுபர்ணேஸி கருத்மாந்” என்ற வேத வாக்கியத்தாலும்
“வேதாத்மா விஹகேச்வர:” என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியாலும்,
“சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந் தரம் தோள்களூரு வடிவம் பெயரெசுர்சாமமுமாம்…..
அரங்கர்தமூர்திச் சுவணனுக்கே” என்ற ஐயங்கார் பாசுரத்தாலும்
வேத ஸ்வரூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன்.

இனி இருவரையும் பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால்,
வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸதாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமுள்ள
சைவாகமம் அரனைப்பற்றிச் சொல்லுவது;
ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம்
ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்கும் பிரமாணம்.

இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால்,
தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம்,
தனது திருவுள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீம்ந்நாராயணனுக்கு உறைவிடம்.
இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது.
அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது,
*அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களை யெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.

இவை யெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்; “ரூபமேவாஸ்ய ஏதந்மஹிமாநம் வ்யாசஷ்டே”
[உருவமே வ்யக்தியின் பெருமையைத் தெரிவிக்கும்] என்ற வேத வாக்கியத்தின்படி
இருவருடையவும் உருவத்தை நோக்குவோமாயின், கண்ணெடுத்துப் பார்க்க முடியாதபடி காலாக்நிபோலேயிருக்கும் அரனுருவம்;
கண்டார் கண்குளிரும்படியான காளமேகம்போலே யிருக்கும் செல்வநாரணன் திருவுருவம்.
“ஒன்று செந்தீ ஒன்று மா கடலுருவம்” என்றார் திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்திலே.

இப்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கிடக்கிற இரண்டு பொருள்களில் “அங்கந்யந்யா தேவதா:” இத்யாதி
உபநிஷத் வாக்கியங்களின்படி அரன் நாராயணனுக்கு அங்கமாயும் நாராயணன் அங்கியாயு மிருப்பர்கள்.
சரீரி தலைமையானதோ? சரீரம் தலைமையானதோ? ஆராய்ந்து சொல்லுங்கள் என்றவாறு

“மேனி ஒன்று” என்று அரனுடைய சரீரத் தன்மை சொன்னது போல நாராயணனுடைய சரீரித் தன்மை மூலத்தில்
சொல்லப்படவில்லையாயினும், ஒன்று சரீர மென்றால் மற்றொன்று சரீரி யென்பது தன்னடையே விளங்குமிறே.
அந்தர்யாமிப்ராஹ்மண மென்னும் வேதப்பகுதியில் ஸ்ரீமந்நாராயணனே ஸர்வசரீரி யென்பது பன்னியுரைக்கப்பட்டுள்ளமை காண்க.

“உருவமெரி கார்மேனியொன்று” என்பதை இரண்டு வாக்கியமாகக் கொள்ளுதலின்றியே ஏகவாக்கியமாகவே கொண்டு,
இருவருடையவும் உருவத்தைப் பார்த்தால், ஒன்று எரிமேனி, மற்றொன்று கார்மேனி என்பதாக உரைத்தலும் ஒக்கும்.

————

[ஒன்றுமறந்தறியேன்.] கீழ் நான்காம் பாட்டில் “அரன் அறிவானாம்” என்று சிவபிரானை மாத்திரம் இழித்துக் கூறி விட்டீரே;
அவனுக்கு பகவத் விஷயமே தெரியாதென்றும், தெரிந்தவனை போலப் பாவித்து சிஷ்யர்களுக்கு உபதேசிக்கவும்
தொடங்கிவிட்டானே யென்று ஏசியும் பேசினிரே; அவனைக் காட்டிலும் நீர் பகவத் விஷயஜ்ஞானத்தில் சிறந்தவரோ?
நீர் தாம் எம்பெருமானை யறிந்து பிறர்க்கு உபதேசிக்க வல்லீரோ? பிரபந்த முகத்தால் உணர்த்தத் தொடங்கிவிட்டீரே,
இஃது எங்ஙனே? என்று ஆழ்வாரை நோக்கி ஒரு கேள்வி பிறக்க
ஆழ்வார் அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறது போலே யிருக்கிறது இப்பாட்டு.

அந்த அரனுக்கும் எனக்கும் எவ்வளவோ வாசியுண்டு; அவன் ஸத்வகுணம் தலையெடுத்தபோது எம்பெருமானது
திருவருளாலன்றி ஸ்வப்ராயத்நத்தாலெ அப்பெருமானது ஸ்வரூபஸ்வபாவங்களைச் சிறிது அறிந்து பரமஸாத்விகன்போல இருப்பன்;
அடுத்த ஷணத்திலேயே ரஜோ குணமும் தமோ குணமும் தலையெடுக்கப் பெற்று
‘என்னைக் காட்டிலும் வேறொரு ஈச்வரன் உண்டோ? நானே ஸர்வேச்வரன்’ என்று செருக்குக் கொள்வன்;
அவனை போலவோ நான்? நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து அப்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப் பெற்று,
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் அவன் தானே காட்டக் கண்டு,
“ஜாயமாநம் ஹி புருஷம்யம் பச்யேத் மதுஸூதந:- ஸாத்விகஸ்ஸது விஜ்ஞேய: ஸவை மோக்ஷார்த்த சிந்தக:”-
[கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாஷித் தருள்வனொ அவனே ஸாத்விகன்; அவனே முமுக்ஷூவாவான்] என்கிறபடியே
சித்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும்
பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்;
பெரும்பாலோர் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அவனை மறவாது வாழ்த்திக் கொண்டிருந்த நான்
இனி ஒரு காலாகிலும் மறக்க வழியுண்டோ? அரனுக்குப்போலே எனக்கும் முக்குணங்களும் மாறி மாறி வருமோ?
ஸத்வகுணகார்யமே நிலை நின்றிருக்கப் பெற்ற வெனக்கு
அவனை உணர்தலும் உணர்ந்தவற்றைப் பிறர்க்கு உபதேசித்தலும் உசிதமே என்றாராயிற்று.

ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

பதவுரை

அன்று–அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே
கரு அரங்கத்துள் கிடந்து–கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு,
திருஅரங்க மேயான்–ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய
திசை–ஸ்வபாவங்களை யெல்லாம்
கண்டேன்–ஸாக்ஷாத் கரித்தவனாய்
கை தொழுதேன்–அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை–வெள்ளம் பரந்த ஸமுத்ர ஜலம் போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப் பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன்-க்ஷண காலமும் மறந்தறிய மாட்டேன்:
ஏழைகாள்–(விஷயாந்தரங்களை விரும்பித் திரிகிற) அறிவு கேடர்களே!
நான்–(அவனை மறக்கக் கூடிய கர்ப்ப ஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.
இன்று–(மறக்க முடியாதபடி ஞான விகாஸம் பெற்ற இக் காலத்திலே)
மறப்பனே–எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]

ஓதநீர் வண்ணனை என்ற சொல்லாற்றலால்- அவனுடைய வடிவழகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு
அவனை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும்.
கர்ப்பவாஸ காலத்தில் வந்து ஸேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப்போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே
திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸந்நிதனாயிரா நின்றா னென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறார்.
மேயான் – மேவியிருப்பவன் திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன்.

இப்பாட்டின் முடிவிலுள்ள திசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’ என்னும் பொருளாயினும்
‘தன்மை’ என்னும் பொருளில் அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூல்களிலே விசேஷமாகவுண்டு.

இதில் மூன்றாம் மடியில் ஒரு சங்கை பிறக்கும்; அதாவது –பொய்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால்
அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே; அப்படி யிருக்க கருவரங்கத்துள் கிடந்து” என்று
இவர்தாம் எங்ஙனே அருளிச் செய்கிறார் என்று;
இதற்கு உத்தரமாவது- “கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், *தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய்
வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை;
எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும்;
இந்தவாழ்வாருடைய வாழித்திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வர்த்தத்தை வற்புறுத்தும்
‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று
சொல்லுவதே இங்கு விலக்ஷிதம் “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம்.

“கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னும்சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம்;
அச்சொல் –நர்தனம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொருளதாயினும்
இங்கே ‘இடம்’ என்னும் பொதுப் பொருளிலே நிற்கிறது …..

————–

[திசையும்.] ஸ்ரீமந்நாரயணனே பரதேவதையாகில்,
பலரும் பரதேவதை யென்று மயங்கும் படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்?
அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான் செயல்களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்?
என்றொரு கேள்வி உண்டாக எம்பெருமான் தானே, தன்னை உகவாதவர்கள் தன்னை வந்து கிட்டாமல்
தேவதாந்தரங்களைப் பணிந்து க்ஷூத்ர பலன்களைப் பெற்று அகன்று போவதற்காகச் செய்து வைத்த
மயக்குக்கள் காண்மின் இவை-என்று மறுமொழி கூறுகின்றார் –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு -7–

பதவுரை

திசையும்–திக்குக்களோடு கூடிய உலகங்களும்
திசைஉறு தெய்வமும்–அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள்–அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம்–ஆகிய இவையெல்லாம்,
அசைவு இல் சீர்–கேடில்லாத [நித்யமான] குணங்களை யுடைய
கண்ணன்–ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த
நெடு மால்–மிகப் பெருமையை யுடையவனாய்
கடல் கடைந்த–(தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்பு நோவக்) கடல் கடைந்தவனாய்
கார் ஓதம் வண்ணன்–மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவை யுடையவனான எம்பெருமான்
படைத்த–(தன்னிடம் வந்து பணிய மாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கி வைத்த
மயக்கு–அறிவை மயக்கும் பொருள்களாம்.

சர்க்கரை, கற்கண்டு, த்ராக்ஷை முதலிய சிறந்த வஸ்துக்களை வாங்கி உண்டு களிக்க இயற்றி யில்லாத ஜனங்களுக்காக
உப்பு, புளி முதலிய சிறு பொருள்களைக் கடை பரப்பி வைத்த மாத்திரத்திலேயே எல்லாப் பொருள்களுக்கும்
கடைகள் ஏற்பட்டிருக்கின்றன வென்று எல்லாம் சிறந்த பொருள்களாய் விடுமோ?
செல்வம் மிகுந்தவர்களுக்காக விலையுயர்ந்த உண்மையான ரத்னங்கள் ஏற்பட்டிருப்பது போல
ஏழைகளுக்காக அற்பவிலையுள்ள க்ருத்ரிமங்களான ரத்னங்களும் ஏற்பட்டிருக்கின்றன்;
இவை தம்மில் வாழ்வின்றிக்கே யொழியுமோ? சிறந்த வஸ்துக்களை அநுபவிக்க யோக்யதை யில்லாதவர்களை
மயக்குவதற்கு ஸாமாந்ய வஸ்துக்கள் எப்படி ஏற்பட்டனவோ,
அப்படியே பரமவிலக்ஷணனான திருமாலை அநுபவித்து வாழமாட்டாத க்ஷூத்ர ஜநங்களை மயக்குவதற்காகத்
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத் திசையுங் கருமங்களுமெல்லாம் ஏற்படுத்தப்பட்டனவென்று கொள்ளவேணுமென்கிறார்.

“திசையும்” என்றது பல பல வுலகங்களைச் சொன்னபடி.
எம்பெருமா னொருவனையே தொழுது இறைஞ்சுதற்கு உரிய உலகமொன்றே யிருக்கலாமாயினும்,
‘இது சிவஸாலோக்யம் பெறும் உலகம்’ ‘இது இந்த்ரஸாலோக்யம் பெறும் உலகம்’ என்றிப்படி
பல பல ஸ்தானங்களைக் கற்பித்தது காரோதவண்ணன் படைத்த மயக்கு என்றபடி.

திசையுரு தெய்வமும்- இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன், இன்ன ஸ்தானத்திற்கு இன்னான் கடவன் என்று
ஒவ்வொரு ஸ்தானத்திலும் நிர்வாஹகமாக ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தினதும் காரோத வண்ணன் படைத்த மயக்கு.

தெய்வத்து இசையும் கருமங்கள்- நான்முகன் படைப்புத்தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
சிவபிரான் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;
இந்திரன் தேவதைகளை மெய்க்காட்டுக்கொள்ளுந் தொழிலை நோக்கக்கடவன்;
யமன் உயிர் நீத்துந் தொழிலை நடத்தக் கடவன் என்றிப்படி அவ்வத் தெய்வங்கட்கு இசைந்தவாறாகத் தொழில்களை
வகுத்திருப்பதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு.
திரிபுர மூன்றெரித்தல், காமதஹநம், வ்ருத்ராஸுரவதம் முதலிய அரிய பெரிய செயல்களை இங்குக் கொள்ளவுமாம்.

கடல் கடைந்து அமுதங் கொண்ட காலத்திலே தேவாஸுரச்ம்வாதம் ப்ரஸங்கிக்க,
எம்பெருமான் மோஹிநி யுருவம் பூண்டு உகவாதாரை மயக்கினது போலவே இவையும் மயக்காக உண்டு பண்ணி
வைக்கப்பட்டவை என்கிற உட்பொருளுந் தோன்றக் “ கடல் கடைந்த காரோதவண்ணன் படைத்த மயக்கு” என்றருளிச் செய்தாரென்க.
கடைந்த கடலிலே அமுதம் விஷம் யானை குதிரை சந்திரன் கல்பவ்ருக்ஷம் அப்ஸரஸ் முதலிய பல விசித்திரப் பொருள்களை
படைத்தருளின பெருமான் இவை யித்தனையும் செய்யவல்லவனே யென்பதும் மூதலிக்கப்பட்டதாம்.

மயக்கு என்றது- மயங்கச் செய்யும் பொருள் என்றபடி;
‘விளக்கு’ என்றால் விளங்கச் செய்யும் பொருள் என்று பொருள் யிடுதல்போல.

———

[மயங்கவலம்புரி.] எம்பெருமான் தன்னை யுகவாதாரை அகற்றுகைக்காகச் சில மயக்குப் பொருள்களை
ஏற்படுத்தினனென்றார் கீழ்ப்பாட்டில் ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு இது தகுதியோ? என்று ஒரு சங்கை தோன்ற,
ஆச்ரிதர்களை எவ்விதத்திலும் பரிந்து பாதுகாப்பதும் தன்னை மதியாத ஆஸுரப்ரக்ருதிகளை விலக்கி விடுதலும்
அப்பெருமானுடைய காரியம்; துஷ்டநிக்ரஹமும் சிஷ்ட பரிபாலநமும் செய்வதே ஸர்வரக்ஷகத்வமாதலால்
அங்ஙனே செய்தருள்கின்ற எம்பெருமானுடைய ஸர்வரக்ஷகத்வ குணத்திற்கு யாதொரு கேடுமில்லை,
மேன்மெலும் விளக்கமேயுள்ளது என்று ஸமாதான முரைப்பவர் போல இப் பாட்டு அருளிச் செய்கிறார்.

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது –8-

பதவுரை

திருமாலே நீ–லஷ்மீநாதனே!, நீ
முயங்கு அமருள்–(எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க் களத்திலே
மயங்க–எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி–ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை
வாய் வைத்து–தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிக் கையால்–போர் செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது–(பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எறி கதிரோனை–ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டே யிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தது என்–மறைத்தது எதுக்காக?

மயங்க வலம்புரி வாய்வைத்தது பகவத்கீதையின் முதலத்தியாயத்திற் சொல்லிற்று எறிகதிரோன் தன்னைத்தேராழியால் மறைத்த வரலாறு:-
பாரதப்போரில் பதின்மூன்றாநாளிலே அர்ஜுநனது மைந்தனான அபிமந்யுவைத் துரியோதநனது உடன் பிறந்தாளின்
கணவனான ஸைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன் மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாள் ஸூர்யாஸ்தமனத்திற்குள்
தான் கொல்லாவிடில் தீயில்குதித்து உயிர் துறப்பதாக அர்ஜுநன் சபதஞ்செய்ய,
அதனையறிந்த பகைவர்கள் பதினாலாநாள் பகல் முழுவதும் ஜயத்ரதனை வெளிப்படுத்தாமல் சேனையின் நடுவே
நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அர்ஜுநனுடைய சபதம் பழுதாய்விடுமே என்று சிந்தித்துக் கண்ணபிரான்
ஸூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தனது திருவாழியினால் மறைத்துவிட,
அப்பொழுது எங்கும் இருள் பரவியதனால் அர்ஜுநன் தன் உறுதியின்படி அக்நிப்ரவேசம் செய்யப்புக,
அதனைக் களிப்போடு காண்பதற்குத் துரியோதனாதிகளுடனே ஸைந்தவன் வந்து எதிர்நிற்க,
அப்போது கண்ணபிரான் திருவாழியை வாங்கிவிடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜுநன் ஜயத்ரதனைத் தலை துணித்தனன் என்பதாம்–
“நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்” என்றார் பெரியாழ்வாரும்.

இவ்வரலாற்றில் ஒரு சங்கை பிறப்பதுண்டு;- திருமாலின் சக்கராயுதத்தின் ஒளியானது ஸூர்யனுடைய ஒளியிற் காட்டிலும்
பலகோடி நூறாயிரம் மடங்கு மேம்பட்டதென்று சொல்லியிருக்க, கோடி ஸூர்யப்ரகாசனான அத்திருவாழியினாலே
இருளை உண்டாக்கினதாக வுரைப்பது எங்ஙனே? என்று. இதற்குப் பலர் பலவகையான ஸமாதானங்கள் கூறுவர்;
ஒரு ஸமயவிசேஷத்தில் திருவாழியின் பிரகாசம் சிறிதுபோது மழுங்கிப் போகக் கடவதென்று முக்கிய ஸமாதானமாகக் கூறுவதுண்டு.

போராழிக் கையால் பொருது” என்ற நான்காமடியில்- பாரதப்போரில் கண்ணபிரான் பீஷ்மரைக் கொல்வதாகத்
திருவாழியைக் கையிலே கொண்டு தேரில் நின்றும் கீழிறங்கித் துரத்திக்கொண்டு சென்ற கதை அநுஸந்திக்கத்தக்கது.
[மஹாபாரதம்-பீஷ்மபர்வம்-ஐம்பத்தொன்பதா மத்தியாயத்தில் விரிவு காண்க]

மயங்கவலம்புரி வாய்வைத்ததும் எறிகதிரோன்தன்னை ஆழியால் மறைத்ததும் போராழிக்கையால் பொருந்தும் ஏதுக்காக?
என்று ஆழ்வார் எம்பெருமானைக் கேள்வி கேட்கிறார் இப்பாட்டால்.
‘போரில் நான் ஆயுதமெடுப்பதில்லை என்று பிரதிஜ்ஞைசெய்து வைத்து அதற்கு மாறாக்க் காரியஞ் செய்தது
எல்லாரோடும் ஒரு நிகராகவுள்ள உனது உறவுக்குத் தகுமோ? ஸத்யஸங்கல்பனான உன் இருப்புக்குத் தகுமோ?
உன் பெருமைக்குத் தகுமோ? இவை யொன்றையும் பாராமல் நீ செய்த செயல்கள் எதற்காக? என்ற இக் கேள்வியானது-
ஆச்சரிதர்களான பாண்டவர்களிடத்திலே நீ கொண்டிருந்த பக்ஷபாதமே யன்றோ இத்தனையும் செய்வித்தது என்று
வெளியிடுகிற முகத்தால் அவனுடைய ஸெளஹார்த்ய குணத்தை வெளியிடுவதில் நோக்குடைத்தென்க.

முயங்கு அமர் என்றது பலபேர்கள் திரண்டு நெருங்கியிருக்கும் போர்களமென்றபடி.
போர்புரிய வந்தவர்களும் போர்காண வந்தவர்களுமாகத் திரண்ட திரளுக்கு எல்லையில்லையிறே

தேராழியால் மறைத்தது’ என்கிறாரே, தேர்ச்சக்கரத்தை யெடுத்தோ ஸூர்யனை மறைத்தது? என்று சிலர் சங்கிப்பர்;
அன்று; தன் திவ்யாயுதமான சக்கரத்தைக் கொண்டே மறைத்தது;
சக்கரம் தேருக்கு உறுப்பாயிருக்குந் தன்மையுடையதாதலால் வடநூலார் ’ரதாங்கம்’ என வழங்குதல் போலத் தேராழியெனப்பட்டதென்க.
’போராழிக் கையால்’ -கையிற்கொண்ட போராழியினால் என்று கொள்ளலாம்.

———–

[பொருகோட்டோர்.] எம்பெருமான் தான்செய்த பிரதிஜ்ஞையைப் பங்கப்படுத்திக் கொண்டாகிலும்
ஆச்ரிதருடைய காரியமே கண்ணாயிருப்பனென்றார் கீழ்ப்பாட்டில்;
அவ்வளவேயல்ல; தன் வடிவத்தை மாறுபடுத்திக் கொண்டும் இழி பிறப்பை ஏற்றுக் கொண்டும் காரியம் செய்பவன்
காண்மின் என்றருளிச் செய்வதாக வராஹாவதாரத்தை ப்ரஸங்கிக்கிறாரிதில்

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் –9-

பதவுரை

விரி தோட்ட–ஒளி விரிகின்ற திருக் குண்டலங்களை அணிந்துள்ளவனே!
சே அடியை நீட்டி–செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க–பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க–மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்–(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த–நீ அளந்து திருவடி கீழ் இட்டுக் கொண்ட
மண்–பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்–நிலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப் பற்களை யுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்
புக்கு–(பிரளய ஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று–அண்ட பித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த அக்காலத்தில்
உன்–உன்னுடைய
ஒரு கோட்டின் மேல்–ஒரு கோரப் பல்லின் ஏக தேசத்திலே
கிடந்தது அன்றே–அடங்கிக் கிடந்த தல்லவோ?

பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்த வரலாறு:- ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன்
தன் வலியையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது
தேவர் முனிவர் முதலியோரது வேண்டிகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு
அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற்குத்திக் கொன்று பாதளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக்
கோட்டினாற்குத்தி அங்கு நின்று மெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பதாம்.
இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப்பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து
மஹாவராஹரூபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.
“பாராருலகம் முதுமுந்நீர் பரந்தகாலம் வளைமருப்பில் ஏராருருவத்தேனமா யெடுத்த வாற்றலம்மான்-” என்ற
திருமங்கையாழ்வாரருளிச் செயலை நோக்குக.

இவ்வரலாற்றினாலும் பின்னடிகளிற் குறித்த திரிவிக்கிரமாவதார சரிதையினாலும்-
எம்பெருமான் ரக்ஷ்ய வர்க்கங்களை இன்னபடி தான் ரக்ஷிப்பனென்கிற ஒருநியதியில்லை யென்பது வெளியிடப்பட்டதாம்.-
“ஆபத்துவந்தால் தலையாலே சுமந்து நோக்குதல், தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவனன்றோ நீ;
ரக்ஷயவர்க்கத்தை நோக்குமளவில் உனக்கொரு நியதியுண்டோ வென்று உகந்தனுபவிக்கிறார்” என்றும்;
” உதாரனாயிருப்பானொருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்து நாற்பதுபேருக்கு இட்டுமிகும்படி
சோறுண்டாக்குமாபோலே ரக்ஷ்யத்தினளவன்றிறே ரக்ஷகன் பாரிப்பு” என்றுமுள்ள வியாக்கியான வாக்கியங்கள் அநுஸந்திக்கத் தக்கன.

மிகப்பெரிய வடிவுகொண்டு உலகளந்தபோது எங்கும்பரந்த திருவடிக்குச் சரிசமமாகப் போந்திருந்த பூமியானது
வராஹாவதாரகாலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு நீலமணி போலே சிறுகிக்கிடந்ததே!
இஃது என்ன ஆச்சரியம் என வியக்கின்றார். இப்பிரபந்தத்தில் மேலே
“ பிரானுன் பெருமை பிறராரறிவார், உராயுலகளந்தநான்று- வராகத், தெயிற்றளவு போதாவாறென்கொலோ;
எந்தை அடிக்கு அளவு போந்தபடி” என்றருளிச் செய்துள்ள எண்பத்து நாலாம் பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

‘விரிதோட்ட’ என்பதை விளியாகக் கொண்டு ஒளி விரிகின்ற தோடுகளை யணிந்தவனே!-
மகர நெடுங்குழைக்காதனே! என்று பொருள்கொள்ளும் பக்ஷத்தில் ‘விரிதோட’ என்றிருக்க வேண்டுவது
விரித்தல் விகாரம் பெற்று ‘விரிதோட்ட’ என்றாயிற்றென்று கொள்ள வேண்டும்;
இஃது அருமையெனின்; வேறுவகையாகவே பொருள் கொள்ளலாம்-
மலர்ந்த இதழ்களை யுடைய தாமரை போலேயிருக்கிற என்று. இப்போது இது சேவடிக்கு விசேஷணம்.

————–

[மண்ணும் மலையும்.] ஏனமாய் நிலங்கீண்ட போது மிகப் பெரிதான பூமி ஒருகோட்டின் மேலே அடங்கிக் கிடந்த
விசித்திரத்தைக் கீழ்ப்பாட்டில் பேசியநுபவித்த ஆழ்வார்க்கு மற்றொரு அற்புதச் செயலும் நினைவுக்கு வந்தது;
பிரளய காலத்தில் சிறிய பாலகனாய் ஏழுலைகையும் அமுது செய்தாயென்று ப்ராமாணிகர்களான வைதிக புருஷர்கள் சொல்லுகின்றனர்;
இது ஸத்யமான விஷயமேயன்றி ஈஷத்தும் அஸத்யமல்ல; சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை அமுது செய்யக் கூடமையாலே
உலகுண்ட அக்காலத்தில் உனது வாயும் உலகங்களின் பெருமைக்குத் தகுதியாகப் பெருத்திருந்ததோ என்று வினவுகின்றார்.

இங்ஙனே கேள்வி கேட்கிற முகத்தால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்றாராழ்வார் என்றுணர்க.
சிறிய வாயினாலே பெரிய வுலகங்களை எல்லாம் எளிதில் விழுங்கவல்ல அபாரசக்தி யுக்தனன்றோ நீ என்றவாறு.

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்—10-

பதவுரை

மண்ணும்–பூமியும்
மலையும்–குல பர்வதங்களும்
மறி கடலும்–அலை யெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்–காற்றும்
விண்ணும்–ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது–(உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்–ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);
எண்ணில்–இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்–அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம்
எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று–இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில்
இஉலகு அளவும் உண்டோ–இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?

[அலகளவுகண்டசீர்] நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்;
அவற்றை அளவு காண்கையாவது-அந்த எண்களின் எல்லைக்குத் தாள் மேற்பட்டுபோதல்; அளவுகடந்து போவதைச்சொன்னபடி.
‘அஸங்க்யேய கல்யாண குணகணெளகமஹார்ணவ!” என்பர் ஸ்ரீ பாஷ்யகாரரும்.

சீராழியாய்க்கு = ஆழியென்று ஸமுத்ரத்துக்குப் பெயர்; ஆழியான் – சமுத்ரமாயிருப்பவன்;
முன்னிலைப் பெயர் நான்காம் வேற்றுமையுருபு பெற்று “ ஆழியாய்க்கு” என்றாயிற்று;
அன்றி,
ஆழியையுடையவன் ஆழியான் என்றாகி,
எல்லை கடந்த திருக்குணங்களையும் சக்கராயுதத்தையும் உடைய உனக்கு என்று பொருளாகவுமாம்; இ
துவே வியாக்கியானத்திற்கும் பொருந்தியதென்க.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

February 16, 2021

முதல் தமிழன் பொய்கையார்
பெரும் தமிழன் பூதத்தார்
தமிழ் தலைவன் பேயார்

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —-இரண்டாம் திருவந்தாதி -24-

(உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -ஸ்வரூப பரம் போல் இதுவும் அவன் கண்டாய் என்று விளக்கிக் காட்டி அருளுகிறார்)
இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ -அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

———————-

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

———

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –முதல் திருவந்தாதி–99-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன்
திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான்
ஏது என்னில்
விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் –

ஆன பின்பு -நெஞ்சே
நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு
திரு உள்ளம் பயப்பட

நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ
விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் –என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
நாம் பிரபன்னரான அன்றைக்கு தஞ்சமாக
அவன் ஒருவன் உளன் கண்டாயே –

நெஞ்சே
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தாத்வயி ஜீவத்யபி பிரபோ –
நீயும் உளையாய் இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க் காண் –

பிரபோ –
நீயும் என்னைப் போல் ஒரு ஸ்த்ரீயாதல்
புருஷோத்தமன் அன்றிக்கே ஒழிதல் செய்தாயோ நான் எளிமைப் பட –
இல்லாதவனானவனை உளன் என்கிறதன்று-
அவனுடைய சத்தை நம்முடைய ரஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும்-
நாம் பிரபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்று
நம்மை அஞ்சி இறே
கழுத்திலே சுருக்கி இட்டுக் கொள்ளுமன்று
அறுத்து விடு கிடாய் என்று அறிவுடையவனுக்குச் சொல்லி வைக்குமா போலே –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நமக்கு உளன் என்னப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
இவ்வர்த்தத்தில் உன்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் –
அவனுடைய வண்மை ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது
பர சம்ருத் ஏக பிரயோஜனனாய் -நம்முடைய ரஷணம் ஸ்வ பிரயோஜனமாய்க் கொண்டு –

என்றும் உளன் கண்டாய்
அசந்நேவ ச பவதி -என்றவனோடு
சந்தமேனம் ததோ விதது -என்றவனோடு
வாசி இல்லை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்
பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன் என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத் தடுக்காதார் நெஞ்சை
வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்
என்றும் உளனானமை காட்டுகிறார் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
திருப்பாற் கடலில் சாய்ந்தவனும்
திருமலையிலே நின்றவனும்
நம்முடைய ஹ்ருதயத்திலே உளனாக புத்தி பண்ணு
அவ்வோ இடங்களிலே இங்குற்றைக்கு வருகைக்காக நின்ற நிலை யாய்த்து
அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம் என்று இரு

அணைப்பார் கருத்தனாவான் -நான்முகன் -திரு -36-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

அணைப்பார் கருத்தானாவான்–அன்புடைய ஆஸ்ரிதர் நெஞ்சில் புகுந்தவன் ஆவதற்காகவே –
அவனுடையவர் அந்தரங்கம் புகுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டே திவ்ய தேசங்களில் சந்நிஹிதன் ஆகிறான்-

உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
இடவகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி -5–4-10-என்னுமா போலே –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –

————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நாட்டில் பெரியவராய் இருக்கிறவர்களும் தங்களுக்கு ஏற ஷேத்ரஞ்ஞராய் இருக்கிற படி அறிந்து இருக்கச் செய்தே-
ஈஸ்வரர்களாகப் பிரமிக்கிற படி கண்டு திரு உள்ளம் பயப்பட –
நாம் கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் என்கிறது –
புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் –நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

உளன் கண்டாய் –
இலனானவனை உளன் என்கிறது அன்று –
அவனுடைய சத்தை நம்முடைய ரக்ஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும் –
நாம் பிரதிபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்றி -நம்மை அஞ்சி
பித்தத்தாலே மோஹித்து கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டேன் ஆகில் அறுத்து விழ விடு கிடாய் என்று
அறிவுடையார்க்குச் சொல்லி வைக்குமா போலே

நன்னெஞ்சே –
எம்பெருமான் நமக்கு உளன் என்று சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
அவனுடைய உண்மை ஸூ ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனனாய் இருக்கை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் ஒரு நாள் உளன் என்று இருக்கில் -பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்கும் –
தான் புகுரப் புக்கால் விலக்காதவர்களுடைய ஹிருதயம் விட்டுப் போக அறியான் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்-உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —-
திருப் பாற் கடலில் கிடக்கிறதும்
திருமலையில் நிற்கிறதும்
தம்முடைய ஹ்ருதயத்தில் புகுருகைக்கு அவகாசம் பார்த்து என்று அறி –

உளன் கண்டாய் –
பிறருக்கு உபதேசிக்கிறவர் –எம்பெருமான் உளன் என்று இருக்கிறார் அல்லர்
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –

நன்னெஞ்சே –
இவ்வர்த்தத்தில் என்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் -தன் பேறாக உபகரிக்கை -என்றும்
அசன்னேவ ச பவதி -ஆனவன்றோடு–சந்தமேனம் ததோ விது–ஆனவன்றோடு வாசி இல்லை –

உள்ளுவார்–
புகுர சம்வத்திப்பார்

உள்ளத்து உளன் –
இடவகைகள் இகழ்ந்திட்டு -வெள்ளம் இத்யாதி -என்றும் உளனானமை காட்டுகிறார் –
அணைப்பார் கருத்தானாவான் —

——————-

திவ்யார்த்த தீபிகை —

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான் காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான் காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன் காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத் தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

———————————————————————————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
அவதாரிகை –

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன்
என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு
நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
பண்டு உளன் அன்றிக்கே
இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அசந்நேவ ஸ பவதி -யாய் இருந்தான் –
நாம் நமக்கு இல்லை என்று அஞ்ச வேண்டாம்
அவன் நமக்கு உண்டு கிடாய் -என்கிறார்

நாம் நம்முடைய விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுகைக்கு உளோம் ஆனாப் போலே யாய்த்து –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி –

அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது -என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
அவனுடைய உண்மையைப் பலமாக்கு –

நன்னெஞ்சே –
அத்வேஷம் உண்டான பின்பு இறே-அவன் உண்டாய்த்து –
அத்வேஷமும் உண்டாய் –
நீயும் உளாயானாய்-
இப்போது இறே சந்தமேனம் ஆய்த்தது –

உத்தமன்-
நம் பேறு தன் பேறாகக் கொண்டு உளன் கிடாய் –
நம்முடைய ரஷணம் பிரயோஜனமாய்க் கிடாய் அவன் இருப்பது –
அல்லாதார்க்கு அழியச் செய்து கொள்ளுகை ஸ்வ பாவம் ஆனால் போலே
அவனுக்கு ஆக்கிக் கொள்ளுகை ஸ்வ பாவம் –

என்றும் உளன் கண்டாய் –
நாம் வேண்டாத காலமும்
நம்மை வேண்டி இருக்குமவன் –
சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
செய்ய வேண்டுவது இவ்வளவே கிடாய் –
ஓர் அனுசந்தானமே கிடாய் வேண்டுவது –
புகுரப் புக்கால் விளக்காதார் ஹிருதயத்திலே உளன் –
அன்றிக்கே
அறிந்த அம்சம் அமையும் -என்னுமாம் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறத்தை யுபபாதிக்கிறது –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
ஆகாசமானது சுருங்கும் படி ஓங்கா நின்றுள்ள
சிகரங்களை யுடைத்தாய் –
உபரிதன லோகங்களும் சில எல்லைகளும் உண்டு என்று இராதே
இவை வேண்டா வென்று கொண்டு –
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படி –
அன்றியே
த்ரிபாத் விபூதி சங்குசிதமாம்படி-என்றுமாம் –

வீங்கருவி வேங்கடத்தான்-
மிக்க ஜலத்தை உடைத்தாய் உள்ள திரு மலையை
இருப்பிடமாக உடையனானவன் –

மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —-
பூமிப் பரப்பு அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும்படி
தான் அளந்து கொண்ட ராஜா –

மண் ஒடுங்க –
திருவடிகளிலே பூமி ஒடுங்க
பரப்பின திருவடிகளே தோற்றி
பூமி தோற்றாதபடி யளந்து கொண்டான் –

மன் –
ஈரரசு தவிர்த்த படி –

மன்-
உடையவன் –
இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்
மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –

தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்
அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ
எனக்கு ஒருவரும் இல்லை
நீயும் இல்லை
உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு –

பிரபோ –
என்னையும் என் பர்த்தாக்களையும் போலே
கழுத்துக் கட்டியாய்
ஒட்டை ஒடத்தோடு ஒழுகல் ஓடமாய் இருந்தாய் ஆகில்
எனக்கு கண்ண நீர் பாயுமோ –

ந தேரூபம் –பக்தா நாம் -ஜிதந்தே
என்ற அவன்
உதவா விடில் அன்றோ வெறுப்பாவது-

——–

திவ்யார்த்த தீபிகை —

நம்முடைய சத்தையை நோக்குவதற்காகவே தான் சத்தை பெற்று இருக்கிறான்
எம்பெருமான் உளன் என்று நாம் இசைந்தாலும் இசையா விட்டாலும்
நம்முடைய ரஷணத்தில் முயன்று உளனாய் இருக்கிறான்
தன்னை சிந்திப்பவர்கள் நெஞ்சிலே படுகாடு கிடக்கின்றான்
இதற்கு உறுப்பாக திரு வேங்கடமலையில் வந்து தங்குமவன்
இக் குணங்களை எல்லாம் திரி விக்கிரம திருவவதாரத்தில் விளங்கக் காட்டினவன் –

———–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

இப்படி சர்வாதிகனானவன் எண் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா —

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திரா அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு
உயரா நின்ற ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக
உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையிலே நின்றவன்
பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்
இந்திரன் இழந்தது பெறுகையாலும் –
மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

———–

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே –
நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும் ஸ்வபாவனான சர்வேஸ்வரன்
நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –

நாம் அவனுடைய உண்மைக்கு இசைந்த அன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு
உளனாய் இருக்குமவன் கிடாய் –

அவன் தானே வந்து புகுரும் இடத்திலே விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய
ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-

ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான –
திருமலையை இருப்பிடமாக உடையனானவன்
பூமிப் பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————–

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி -86-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-

நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

உளன் இத்யாதி
எம்பெருமான் என்றால் அபி நிவேசித்து இருக்கிற நெஞ்சே
அவன் நமக்கு உளன் கிடாய் –
இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்
தன் ஒப்பான் இத்யாதி
ஈஸ்வரன் சமாதிக தரித்ரனாய்க் கொண்டே உளன் –
அகிஞ்சனான படிக்கு வேறு ஒப்பில்லை
எனக்கும் மற்றும் என்னைப் போலே வெறுவியராய் இருப்பாருக்கும் அவன் நிர்வாஹகன்
இமை –
அனுசந்தி -புத்தி பண்ணு என்றபடி –

————-

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –
நல் நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-
என்னைப் போலே உபாய சூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான-ஈஸ்வரன் உளன் –
இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

————

திவ்யார்த்த தீபிகை

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார்

உத்தமன் உளன் கண்டாய் –
ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் –
ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் –
எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–
என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

————

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

ஆஸ்ரித அனுபவ விரோதி நிரசன நிரதிசய போக்யம் -குறுகும் வகை உண்டோ -நாம் கிட்டுவோமோ-
அந்நலம் உடை ஒருவனை நணுகினம் நாமே -பரதன் பரத்வாஜர் ஆஸ்ரமம் -அடையாளம் கண்டு உகந்தால் போலே
அலகாபாத் நதிக்கரையில் திரிவேணி சங்கமம் அருகில் –
நாளேல் அறியேன் என்பார் -14 ஆண்டு பார்த்தனுக்கு – கோபிகளுக்கு பகல் பொழுது குறித்தால் போலே
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை-அனுபவ விரோதிகள் வினை -அநிஷ்ட நிவ்ருத்தி -ஸமஸ்த விரோதிகளை போக்கி
அவித்யாதி விரோதிகள் -ஜென்மம் சரீரம் உட்பட – -நிரதிசய போக்யனான சர்வேஸ்வரன்
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ஒருமைப் பட்ட மநோ ரதம் உடையவர்க்கு -விருப்பமே போதும் –
உள்ளத்தில் விட்டுப் பிரியாமல் உள்ளான் -உடன் இருந்து அறிவான் –
உள்ளத்தே உறையும் மால் -ஸர்வஸ்ய -பரம யோகிகள் மட்டும் இல்லை -யார் உள்ளத்தே விசேஷணம் இல்லையே –
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா -இருப்பதை அறியாமல் – வெள்கிப் போய் -விலவறச் சிரித்திட்டேனே –
நினைக்க சிந்தை வேணுமே -உளன் கண்டாய் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே –
யந்த்ரா ரூடானே மாயையா -பிரகிருதி கார்யமான சரீரத்தில் -உத்தமன் என்று உளன் கண்டாய் -கர்மாதீனமாக அன்றோ இது
அட்டிகை பண்ண காய்ச்சி வெட்டி பண்ண வேணுமே –
சரணாகதி பண்ண வைத்து -திருவடிக்கு கீழ் அமர்த்திக் கொள்ளுகிறான் –
மூன்று திருவந்தாதி -இங்கும் தொண்டர் அடிப் பொடி -இந்த கருத்தை –
உள்ளத்தே இருப்பதை நினைக்கும் உள்ளம் வேண்டும் என்பதை வற்புறுத்தி அருளிச் செய்கிறார்கள் –
கங்கைக்குள் இருக்கும் மீன் -இருக்கும் ஞானம் வேண்டுமே
மனு -கங்கை -ஸ்ரீ பாத தீர்த்தம் -நம்பிக்கை இல்லாதவர் தீர்த்தம் ஆட வேண்டாம் -நம்பிக்கை உள்ளாறும் தீர்த்தம் ஆட வேண்டாம் -குரு ஷேத்ரமும் இப்படியே
தனக்கு அடிமை பட்டது தான் அறியேனே லும் மனத்தடைய வைப்பதாம் மால் —
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-போக்யம்-இஷ்ட பிராப்தி -சிரமஹரமான சோலைகள் உடைய –
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே–குறுக்கும் -பிறந்த வீட்டு பாஷை மறக்காமல் அருளிச் செய்கிறார்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று -மலையாள வாசனை –
அனுபவ அபி நிவேசத்துக்கு தக்க பெறாத -குறுகும் வழி உண்டோ –

திரு நாவாயைக் குறுகைக்கு-எனக்கு உபாயம் உண்டோ-என்கிறார்-

அறுக்கும் வினையாயின –
வினையாயின -அறுக்கும் –
வினை என்ற பேர் பெற்றன அனைத்தையும் போக்கும் -என்றது
ஏழை அழிக்க -ஏழு பேர் பெற்றாலே -குல பர்வதங்கள் போல்வன அஞ்சிற்றே –
ருசி விரோதி -பிரயோஜநாந்தரம் -தேவதாந்தரம் போன்றவை-உபாய விரோதி -உபாயாந்தரங்கள்
பேற்றினைப் பெரும் இடத்தில் வரும் விரோதிகள் -அவித்யா கர்ம வாஸநா ருசிகள் -பாகவத அபசாரம் -ஸ்வயம் போக்யத்வ பேறு போல்வன
இந்த சரீரத்தோடு முடியும் அளவு அன்றிக்கே-அனுபவிக்கப் படுமவற்றின் எஞ்சியவைகளாய் நின்று-
அவ்வருகே போம்படி விளம்பிக்க கடவனாய்-இருப்பவன வற்றைத் தெரிவித்த படி –

நின்ற நின்ற நிலைகள் தோறும் உண்டாய் இருக்குமன்றோ விரோதிகள் –
புதுப் புடவை அழுக்கு கழற்றுமா போலே-கிரமத்தாலே போக்க வேண்டுவது தான்-போக்கும் அன்றே அன்றோ –
பகவானுடைய திரு அருளாலே போம் அன்று ஒரு காலே போம் –

மேரு மந்தா மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்திய மாசாத்ய துர்வியாதி இவ நச்யதி – விஷ்ணு தர்மம் -அத் -78-
பாப கர்மங்களின் கூட்டம் மேரு மலை மந்திர மலை இவைகளைப் போன்று-
உயர்ந்து இருந்தாலும் -வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதிகள் நாசம் அடைவது போன்று
கேசவனை கிட்டி அவைகள் நாசத்தை அடைகின்றன -என்றும் –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான பிர தூயந்தே -சாந்தோக்யம் -5-24-
எல்லா பாபங்களும் நாசத்தை அடைகின்றன என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
சர்வ பாபேப்யோ -பிரபன்னனுக்கு -சர்வ -மோக்ஷ விரோதி பாபங்கள் –
பக்தி நிஷ்டனுக்கு அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் –
எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கின்றேன்-என்றும்-கூறப் படுகின்றன படியே ஆகக் கடவன அன்றோ –

பிராமணனைக் கொன்ற பாபத்துக்கு பிராயச் சித்தம் செய்தால்-
பசுவைக் கொன்ற பாபத்துக்கு தனித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும் அன்றோ –
அங்கனம் வேண்டா அன்றோ பகவானுடைய திருவருள் கொண்டு கார்யம் கொள்ளும் இடத்தில் –

யாருக்குத் தான் இப்படி செய்வது என் என்னில்
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு –
மனத்திலே அவனை நிறுத்த வேண்டும் என்னும் உறுதியிலே-ஒருமைப் பட்ட-எண்ணத்தை உடையார்க்கு –
நான்கு விசேஷணங்கள்-
மநோ ரதம் மட்டுமே -தத் அபி சந்தி விரோதமாத்ராத் -ஒருமைப்பாட்டை -அத்யாவசியம் -இருதயத்தில் நிறுத்த –

வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் –
பாபங்களைப் போக்காமல்-அவற்றை விருத்தி செய்தாலும்-விட ஒண்ணாத படி ஆயிற்று தேசம் இருப்பது –
வாசனையை உடைய தாய்-சிரமத்தை போக்க கூடியதாய்-மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப் பட்ட-திரு நாவாய் –
கஜேந்திரன் பூ பறிக்க -நாச்சியார் முன்பே பறிக்க –
இடது கையால் அபய பிரதானம் -இரண்டு கையால் அனுக்ரஹித்தால் நித்ய விபூதி ஆகுமே -அதனால் வலது திருக்கை
திருவடி காட்ட -கஜேந்த்ரனுக்கு வீட்டுக் கொடுத்த -ஸ்தல புராணம் -பிராட்டி /ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் / நவ யோகிகளுக்கும் பிரத்யக்ஷம் –

குறுக்கும் வகை உண்டு கொலோ –
குறுகச் செய்யும் வகை ஏதோ –
அன்றிக்கே –
குறுகும் விரகு ஏதோ -என்னுதல் –குறுக்கு -எனபது மலையாள நாட்டு வழக்கு –
எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
திரு நாவாய் எத்தனை இடம்போரும் -என்று-எதிரே வருகிறார் சிலரை கேட்டருள-குறுக்கும் -என்றார்களாக-அதனைக் கேட்டு
இத்திசைச் சொல்லாலே அருளிச் செய்வதே ஆழ்வார் -என்று-மிகவும் ஈடுபட்டு அருளினார் –

கொடியேற்கே –
கொடியேனுக்கு –
ஆசை சிறிது உடையாருக்கும் அடையக் கூடிய தேசமாக இருக்க-ஆசையும் கண்ணழிவு அற்று இருக்க-
புகப் பெறாதே நோவு படுகைக்கு அடியான பாபத்தைச் செய்த எனக்கு –

அவனை -ஆகத்து நிறுத்தும் மனத்து ஒன்றிய-சிந்தையினாருக்கு வினையாயின அறுக்கும் –
வெறி தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-கொடியேற்குக் குறுக்கும் வகை உண்டு கொலோ -என்று அந்வயம்-

—————

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

நீ அருளாது இருக்கவுமாம் -அருளுவாயாயாம் -கலக்கம் இல்லாத படி -தேவதாந்தர சம்பந்தம் -பாகவத அபசாரம் -ஞானம் கொடுத்து அருள வேண்டும்
உன்னை என் நெஞ்சில் வைத்து அந்த ஞானம் தந்து அருள வேண்டும் -சாமர்த்தியமான பேச்சு இது வந்தால் எல்லாம் வருமே –
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்-இவன் செய்த படி செய்கிறான் என்று கிருபை பண்ணாமல் -இருக்கவுமாம்
வேறு புகல் அற்ற என்னை -கிருபை பண்ணி
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-சத்தை அடைந்து உன் ஸ்ப்ருஹ ணீயமான திருவடிக் கீழ் வைக்கிலும்-
அருளாது இருந்தால் பலன் சொல்லாமல் -அருள் பெற்றால் -வஸ்து தாம் உபாயாதோஹம் –
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்-மயர்வு மருள் -அஞ்ஞானம் காந்தம் இல்லாத படி –
சர்வ பிரகார பரிபூர்ணன் போக்யன் -உன்னை -நாரண நம்பி -அத்யந்த அபி நிவிஷடனான என் நெஞ்சத்தில் வைத்து அனுபவிக்க -தந்து அருள வேணும் –
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -தெருள் ஞானம் -கட்டளை பட்ட -அழகிய -தர்சநீயமான -பரம ப்ராப்ய பூதன் –

மேல் பாசுரத்திலே அருளாய் -என்றார்
அப்போதே விரும்பியதை பெறாமையாலே-அருளவுமாம்-தவிரவுமாம்
அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை-என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அருளாது ஒழிவாய் –
என் பக்கல் திருவருள் செய்யாமல்-இவன் பட்டது படுகிறான் என்று இருக்கிலும் இரு

அருள் செய்து –
அன்றிக்கே-
எனக்கு வேறு கதி இன்மையைக் கண்டு-கிருபை செய்து –

அடியேனைப் பொருளாக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
அறிவில்லாத பொருளைப் போன்று இருக்கிற என்னை
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே
ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –
பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –

மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-
அடியில் மயர்வற மதி நலம் அருளின படியே-அறிவின்மை சிறிதும் இல்லாதபடி-
உன்னை என் மனத்தினில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும் படி
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்கிற தெளிவினைத் தந்து அருள வேண்டும் –
தென் திரு நாவாய் என் தேவே -தெருளே தரு -என்று முடிக்க –

அன்றிக்கே
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-தென் திரு நாவாய் என் தேவே-
அருளாது ஒழிவாய்-அருள் செய்து-அடியேனைப் பொருள் ஆக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
உன் திரு உள்ளம் ஆனபடி செய் -என்று பிள்ளான் பணிப்பர்-

—————————————————————————–—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முதல் திருவந்தாதி -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 14, 2020

சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும் இதர விஷயங்களிலே ருசி யற்று
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது –
ஹேயத்திலே ஹேயதா புத்தியும் உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும் வேண்டாவோ -பேற்றுக்கும்
கீழில் பாட்டில்-ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று –
இதில் – ருசி தான் வேண்டுவது – என்கிறது –

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும் அப்பெரிய பேற்றை பெரும் போது
தனக்கு ருசி வேண்டாவோ – இத்தலை நினையாத போதும் நினைத்திருந்து நோக்குமவன் –
விரோதியான இவ்வாகாரத்தை யன்றோ துடைத்தது– ஏனத்துருவாய் இடந்த –ஞானப் பிரான்
இவை அழிந்து கிடந்த சம்ஹார காலத்திலும் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கும் ஸ்வ பாவனான வனுடைய
திருவடிகளை நாள் தோறும் பொருந்தி ஆஸ்ரயியாதார்க்கு பரமாகாச சப்த வாஸ்யமான பரமபதம் உண்டாமோ –

———————-

அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக
நினைத்து இருக்கும் ஸ்வ பாவன் என்கிறது -அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து
அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி –
ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம்-இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –
பண்டொரு நாள் பிரளயம் கொள்ளாத படி பூமியை யடங்க
வயிற்றிலே வைத்தும் வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்தும் செய்த வயிற்றிலே
பரப்பை இத்தனை வெண்ணெய் இட்டு நிறைக்கலாம் என்று பார்த்தோ  நீ செய்தது –
பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்றை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ – என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

———————-

கீழ்ப் பாட்டிலே ஆஸ்ரித வாத்சல்யம் சொல்லிற்று -இதில் ஆஸ்ரித வாத்சல்ய கார்யமான
அவர்கள் விரோதிகள் பக்கல் யுண்டான சீற்றம் சொல்லுகிறது –

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று -93-

கன்றுக்கு முலை கொடுக்கை அல்ல இறே வாத்சல்யம்
முன்னணை  கன்றைக் கொம்பிலே சூடுகை இறே –
கொண்ட சீற்றம் உண்டு என்று-முடிந்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே -முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு –
சரணாகதர்க்கு தஞ்சமாவது ஆஸ்ரித அர்த்தமாக சரண்யன் விரோதி வர்க்கத்தின் மேலே சீரும் சீற்றம்
கோபச்ய வசமே இவான்-அவன் தரமல்லாவனுக்குத் தோற்றாப் போலே இவரும் தரமல்லாதத்க்குத் தோற்றார்

——————

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-

தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –
இறையேனும் -பர வ்யூஹாதிகளில் போகாது –எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –

————–

இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு சேதனர் சம்சாரத்துக்குப் பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என்
என்று விஸ்மிதர் ஆகிறார் –

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

இவை இங்கனே குறைவற்று இருக்க சம்சாரத்தைச் சென்று ப்ராபிக்கிற பிரகாரம் இருந்தபடி என்
உஜ்ஜீவிக்கைக்கு நேர் வழி கிடக்க விநாசத்துக்கு ஈடான விலக்கடி தேடி அனர்த்தப் படுவதே

—————-

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்களுக்கு புறம்பாய் நின்று பல பிரதமாக வல்லது ஓன்று இல்லை கிடாய்
விஹிதத்தைச் செய்து நிஷிதத்தைப் பரிஹரித்து போருகிற  நம்மோடு விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில்-சர்வமும் பகவததீனம் அன்றோ-
கார்யத்தில் ஒன்றும் இல்லை பிரதிபத்தி மாத்ரமே இவனுக்கு உள்ளது
அவன் கிருபையாலே இவன் சத்தை அழியாதே கிடக்கிற இத்தனை –

—————

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ என்னில்-உன் திருவடிகளை கிட்டி அன்றோ அவள்
அந்த பிரசாதம் பெற்றது-இத்தால் தர்மம் அவன் இட்ட வழக்காம் என்னும் இடம் சொல்லுகிறது-
பிராயச் சித்தம் பண்ணியதால் சுத்தன் இன்றிக்கே இருக்கிறவனையும் சுத்தன் ஆக்கிற்று
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே-என்கிறது-பிறரை ஸூத்தராக்கும் படி பார்த்து அருளினான் –
உன் திருவடிகளோடு சம்பந்தம் இல்லாதது புண்யம் இல்லை-உன் கிருபையை விலக்க வல்ல பாபம் இல்லை

—————–

அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது-அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-

ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –

——————–

ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு திரு உள்ளம் பயப்பட நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் – என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

நீயும்  உளையாய்   இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க்  காண் –
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்-பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன்  என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத்  தடுக்காதார் நெஞ்சை வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்–அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம்–
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –

————-

ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்
பெறுவதும் அவனையே-பெறுகைக்கு சாதனமும்-அவனே என்று -அத்யவசித்துப்   போவாய் -என்கிறார் –

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட ஒரு திருவடிகளும் –
சகடாசூர நிரசனம்  பண்ணின போக்யமான திருவடியும் ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் -திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் அவனே –
இப்படி அத்யவசிக்க-அனந்தரம் பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

வையம் தகளி  -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம் பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி வாழும் அத்தனை என்கிறார்  –

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 14, 2020

ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன்
திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் –

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

கடலைப் பரிச்சேதித்துக்கடைய வல்லவனுடைய திரு நாமமே அன்றோ
பழையதாய் வருகிற சம்சாரத்தில் நின்றும் எடுத்துக் கொண்டு போய் அவ்வருகே வைக்க வல்லது –
எம்பெருமான் பிரயோஜனாந்தர பரர்க்கு உஜ்ஜீவிக்கைக்கு அம்ருதம் கொடுத்தால் போலே
திரு நாமம் தானே ஸ்வயம் பிரபை என்பவள் கரையிலே முதலிகளை வைத்தால் போலே
பரம பதத்திலே வைத்து தாஸ்யாம்ருத தத்தைக்  கொடுத்து உஜ்ஜீவிப்பிக்கும்
திரு நாமம் தானே அள்ளி எடுத்துக் கொடு போய் பரம பதத்தில் வைக்கும் -பற்றி -அல்லேன் என்றாலும் விடாது –

—————

கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது அவனைக் கண்டு சொல்ல வேணுமே
சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

இப் பாட்டால் சர்வ சமாஸ்ரயணீயத்வமும் சௌலப்யமும் ஆஸ்ரித பாரதந்த்ர்யமும் போக்யதையும்
விரோதி நிரசனமும் குறை வற்று வர்த்திக்கிற தேசம் என்கிறது –
பிராட்டிக்கு நியாம்யன் ஆனால் போலே நியாமியனாய்ப் புக்கு -தன் அனர்த்தம் என்று மீளாது கார்யம் செய்யுமவன் —

—————

அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன
மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ-அது கொண்டு கார்யம் கொள்ளாதே-
மலையை எடுப்பது ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து வெருமனேயோ என்கிறார்

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் -83-

இத்தால் ஆஸ்ரிதர்க்கு விரோதம் வந்த போது சங்கல்பத்தால் அன்றியே தன்னுடம்பு நோவக்
கார்யம் செய்யும் என்றபடி –

—————

ரஷ்யத்தின் அளவேயோ ரஷகனான உன்னுடைய பாரிப்பு-

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

உரோஸிக் கொண்டு எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு-அநாயாசேன அளந்த வன்று –
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது இப்போது திரு எயிற்றுக்கு
ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ

—————-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

சாஷாத் கரிப்பதுக்கு முன்னே ஜ்ஞான லாபத்தைக் கொண்டு ஆறி இருக்கக் கடவதோ
ப்ராப்தி சமயத்திலும் கூட அபர்யாப்தி வேண்டி இருக்க ஜ்ஞான லாபத் தளவிலே திருப்தி பிறந்து இருக்கவோ
இனி அவ்வளவு அமையும் என்னும் படி இருக்குமாகில் அது பிராப்யமாக மாட்டாதே
பிறந்த ஞான லாபத் தளவிலே பர்யவசித்து ஆறி இருக்குமது அஞ்ஞான கார்யமேயாம் அத்தனை இறே
மயர்வற மதி நலம் அருளினன் என்ற அனந்தரத்திலே இறே மடல் எடுத்தது –

—————

இவர் இருந்த இடத்திலே பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் –
இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன–தரியான் இறே அவன்  

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

அவை நோவு படாத படி ஏற்கவே மலையை எடுத்து பரிஹரித்து நோக்கினால் போலே இறே
தன் ஆபத்து இவர்களோடு கூடித் தீர்ந்தத படி –
உள்ளுப் புக மாட்டுகிறிலன்-புறம்பு போக மாட்டுகிறிலன்
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் உடைய கண் வட்டம்  விட்டுப் போக மாட்டாதாப் போலே
இரண்டிடமும் காட்டுத் தீ போலே யாய்த்து தோற்றா நின்றது ஆய்த்து அவனுக்கு-
திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது -தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே –
சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –
ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப் பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –

————-

சர்வேஸ்வரன் இப்படி வந்து சந்நிஹிதன் ஆன பின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடைத்து ஓடிப் போக வமையும் -என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -என்னுமா போலே –

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே -இனி நரகத்துக்கு ஆள் கிடையாது-
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று-
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் -அல்லாத இடம் காடு-

————

வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே
என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப்  பெற்றேனே -என்கிறார் –

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

நான் முன்னம் திருக் கோவலூர் இங்கே யாகையால் உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் ஆகிறேன்
நாட்டை நம்மால் திருத்தலாய் இருந்ததோ-நமக்கு இந்நன்மை உண்டாகப் பெற்றோமே

————

சேஷ பூதனாய் இப் பேறு பெற்றான் ஒருவன் எம்பெருமான் அல்லனே
என்னைப் போலே ஒருவன் பிரசாதத்தால் வந்த ஏற்றம் உண்டோ அவனுக்கு-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-

அவனோடு சத்ருசமான பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன் -ஓர் அடி அன்றோ குறைய நின்றது
அவன் என்று சாஷாத் கரிக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது –

———-

அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு-அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று
அவன் விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்த படி சொல்லுகிறார் –
நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் –

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

வரம் கொடுத்தவர்கள் உடைய சக்தி பகவத் அதீனம் என்று அறிந்திலன் -இவனுக்கு வரம் கொடுத்தவர்களும்
வணங்கும் விஷயம் -கிடீர் –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 14, 2020

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பால் குடிக்க இரக்கிறேன் இறே-நீ முற்பட்டு இருக்க உன்னை இரக்கிறேன் இறே -கைக்கூலி கொடுத்துப் பற்ற வேண்டும் விஷயம்
பிரதிபஷத்தின் மேலே சினந்து வாரா நின்றுள்ள திரு வாழியைக் கையிலே யுடையவன் பக்கல் உண்டான
ஸ்நேஹத்தை விடாதே ஒழிய வேணும்-எனக்கும் உபதேசிக்க வல்ல-அளவுடைய நெஞ்சே

இவ் வேப்பங்குடி நீரைப் பருகைக்கு உன் காலைப் பிடித்து வேண்டிக் கொள்கிறேன் கிடாய் -என்கிறார் –

————–

இவருடைய கரணங்கள் ஆனவை இவருக்கு முன்னே அங்கே  ப்ரவணமாய்-
ஆழ்வீர்-இவ்விஷயத்தை விடாதே கிடீர் -என்று உபதேசிக்கப் புக்கன
குரு சிஷ்ய க்ரமம் மாறி நின்றபடி –

அன்பாழி  யானை   யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

நெஞ்சு சென்ற கடல் ஸ்தானத்திலே அன்பு என்னலாம் படி காணும் சமைந்த படி-

அன்பு என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தெரியாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
நெஞ்சானது திருவாழி யுடையவனானவனைக் கிட்டி அனுபவி என்று உபதேசியா நிற்கும் –

சாபராதராய் இருந்துள்ள நம்மால் அவனைக் கிட்டப் போமோ என்னில்
ஓர் அடி வர நின்றால் குற்றமே அன்றியே குற்றம் கிடக்கும் நாளும் காண வரியான் என்கிறது-

—————

அவை மத்யஸ்தமாம் படி தாம் அவ்விஷயத்திலே ப்ரவணரான படி சொல்லுகிறது –

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

பூந்துழா  யானை -புகழ்ந்து அல்லது நிற்க ஒண்ணாத விஷயம் –

உடலும் உயிரும் ஏற்றான் -இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்யதயா சேஷம்-அவன் சேஷி -என்கிறது-

ஏற்றான் -தரித்தான் -என்றுமாம் –

இவை யாகில் தான் என்ற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும் படி சர்வ பிரகாரியாய் இருப்பான் ஒருத்தன் –

ஆதாரத்தைப் பற்றிலும் பற்று -ஆதேயத்தைப் பற்றிலும் பற்று-ரஷகத்வத்தைப் பற்றிலும் அவனையே பற்ற வேணும் –

————–

அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன் என்கிறார் -உடலும் உயிரும் என்றத்தோடு -இவனோடு வாசி இல்லை -அவனுக்கு
அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும்-இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் –

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

ஏற்றான்-எயில் எரித்தான்-நீற்றான்=கூற்றொரு பால் மங்கையான் வார் சடையான்-கங்கை யானானவன்
புள்ளூர்ந்தான்-மார்விடந்தான்-நிழல் மணி வண்ணத்தான்-பூ மகளான்-நீண் முடியான் நீள் கழலாவனுடைய காப்பு -ரஷை என்றபடி

—————–

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

ஈஸ்வரனுக்குப் புரவர் போலே பதினாலு பேர் உண்டு இ றே –
சூர்யன் -சந்தரன் -காற்று -நெருப்பு -ஆகாயம் -பூமி நீர் மனம் -யமன் -பகல் இரவு -ப்ராதாஸ் சந்த்யை -சாயம் சந்த்யை -தர்மம் –
இச் சேதனர் செய்யும் கர்மங்களை ஆராயக் கடவர்கள்
அவர்கள் உன்னை அனுசந்திக்க-விட்டுக் கடக்க நிற்பார்கள்
அவனுடையாரை நோக்கக் கடவன் அவனே யன்றோ -நாம் என்-என்று கடக்க நிற்பார்கள் –

உன்னை அனுசந்திப்பார்க்கு ஜராதிகளான ஷட்பாவ விகாரங்களும் முதலிலே இல்லை –
தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் போம் வழி என்னும் படி நிரதிசய போக்யமான
அர்ச்சிராதி மார்க்கத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள் -நல்ல வழியே போகப் பெறுவார்கள் என்றுமாம்-

—————————–

பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப் பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-

ததீய சேஷத்வ  பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –

—————-

நாம் நம்முடைய அனர்த்தத்துக்கு உறுப்பாக
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்-செய்கிற செயலாலே பண்ணிக் கொண்டவை
அவன் நம்முடைய ஹிதத்துக்கு உறுப்பாக-நிற்பது இருப்பது கிடப்பதான வியாபாரங்களை அனுசந்திக்கத்
தன்னடையே ஓடிப் போம் என்கிறார் –
உகந்து அருளின தேசங்கள் பூமியிலே உண்டாய் இருக்க -சம்சாரம் உண்டோ -என்கிறது

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-

இவ்வோ இடங்களிலே அச் செயல்களைச் செய்தான் என்று அனுசந்தித்துச் சொல்லுவோர்க்குத்
தாம் தாம் பண்ணிக் கொண்ட துக்கங்கள் அடையத் தாம்தாமை விட்டோடிப் போம் என்கிறார் –

———–

அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்தித்தால்
நமக்கு-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற அடிமையில் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் என்கிறார் –

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78-

சோறு உண்டாய் இருக்க யார் பசியோடு இருக்க வல்லார் -என்னுமா போலே-
இனி நமக்கு இடர் வந்ததாகில் முதலை பட்டது படும் அத்தனை –
இத்தால் ஆஸ்ரிதர் பக்கலிலும் அநாஸ்ரிதர் பக்கலிலும் அவன் இருக்கும் படி சொல்லுகிறது
விரோதியைப் போக்கி திரு அநந்த ஆழ்வானைப் போலே அடிமை கொள்ளும் -என்றபடி   –
பண்டு பூப் பறித்தான் ஒருவன் இடரைப் போக்கித் தனக்காக்கிக் கொண்டான் கண்டாயே
நமக்கும் அப்படியே செய்யும் காண் –

—————-

ஆஸ்ரிதர் ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ என்கிறார் –

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  –79-

நீ செய்த செயலை அனுசந்தித்து நாட்டார்   உன்னைக் கொண்டாடும்படி தான் செய்தாயோ –
குணமே குற்றமாய்க் குற்றமும் குணமாம் கிடீர் சம்சாரம் –
கொடுத்த பின்பும் -தன்னத்தையே கொடுத்ததாக நினைத்து இருந்தான்
கொண்டாரை என்று பாடமான போது-பிரயோஜனத்தைச் சொல்லிற்று ஆகிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் வேண்டா கிடீர்-இந்தச் செயலைக் காண வமையும் கிடீர் -நமக்கு ஸ்ரோத்ராதிகள் உண்டாகைக்கு –

————————

ஒருவன் சரணம் புகுந்தால் அவனுக்கு அசாதாரண பரிகரத்தோடே விரோதம் உண்டே யாகிலும்
ந ஷமாமி -என்கிறத்தைப்  பாராதே
அவனோடு பொருந்த விட்டு அவனை இட்டு வைத்தே நோக்குவிப்பான் ஒருவன் – என்கிறது –

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் –80-

சரணம் என்றொரு உக்தி மாதரம் சொன்னால்-பின்னை மேலுள்ளதனை தன் தலையிலே
ஏறிட்டுக் கொண்டு நோக்குமவனை யன்றோ பற்ற அடுப்பது –
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27-
வத்யதாம்-என்றவரையே -அஸ்மாபிஸ் துல்யோ பவது-என்னப் பண்ணுகை –

——————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 13, 2020

இதில்-அவனே அறிந்து இவற்றை நோக்க  வேண்டுகிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –
ஹிதம் அறியாமையே அல்ல-தம்தாமுடைய உத்பத்தியும் அறியார்கள் -என்கிறது –

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

சங்கல்பத்தினால் உண்டாக்கிய ஸ்ருஷ்ட்டி அடங்கலும் பிராட்டியும் தானும் லீலா ரசம் அநுபவிக்கும் படியாய் இருக்கிறது
அவளுக்குப் பிரியமாகத் தன் திரு உள்ளத்தாலே சங்கல்ப்பித்தவை இவை-

இத்தலை அறிந்தோ ஸ்ருஷ்டித்தது -விலக்காமையே உள்ளது –

——————-

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்-அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  சுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்-படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே

——————

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

நாட்டார் சப்தாதி விஷயங்களை விரும்பிவது நிர் லஜ்ஜராய் கொண்டாய்த்து
அப்படியே நானும் நிர் லஜ்ஜனாய்க் கொண்டு அவற்றைச் செறியேன்
விஷய ப்ராவண்யத்தின் பொல்லாங்கு -ஜ்ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும்படியால் இறே –

—————————————

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

எம்பெருமான் மறக்க பூர்வாகங்கள் நசிக்கும்
அவன் அவிஜ்ஞாதாவாய் இருக்க
உத்தராகம் ஸ்லேஷியாது
இது திருவாய்க் குலத் தாழ்வானுக்கு  ஜீயர் அருளிச் செய்த வார்த்தை-

————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

தான் கொடுத்த அறிவு கொண்டு தன்னை அனுபவிப்பார்க்கு இழிந்த விடம் எங்கும் துறையாம்படி
குண சேஷ்டிதாதி களுக்கு வாசகமான-ஆயிரம் திரு நாமங்களை உடையானாய்
வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை உடையனாய்-ஸ்ரமஹரமான வடிவை உடையனானவனை ஆஸ்ரயித்தால்
வினையால் அடர்ப்படார் -வெந்நரகில்  சேரார்  -தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் –
பால் குடிக்க நோய் தீருமா போலே-அஞ்சலி மாத்ரத்தாலே போம் –

———————-

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

ஓதுவதும் ஒர்ப்பனவும் ஸ்ரவண மனனம் பண்ணுவதும்
ரஷணத்துக்கு  பரிகரமான திரு வாழியை உடைய ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நாமத்தை
கீழ்ச் சொன்ன இவ்வர்த்தத்துக்கு சாதன ரூபமாகச் செய்யுமவை இறே –

பேர் ஆழி கொண்டான் -இவர்களை ரஷிக்கைக்காக உருவின பத்திரமும் தானுமாய் இருக்கை –கை கழலா நேமியான்

————————————

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பகவத் வியதிரிக்த விஷயங்களை பற்றி பிறக்கும் ஞானம் எல்லாம் அஸத் கல்பம் –

தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னக் கடவது இறே

————————

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாக உடையயையுமாய்-சம்சாரத்திலே வந்து அவதரிக்கும் ஸ்வ பாவனுமாய்
இரண்டு இடத்துக்கும் சாதாரணமாகத்-திருமலையில் நின்று அருளுவானுமாய் –
நல்ல ஸ்வரத்தை யுதைத்தான வேதைக சமதி கம்யமாய் உள்ள நீ-கிடந்த பால் உணர்வார் யார்-வேதம் காட்டுகிற அர்த்த சக்தி உன்னாலே

———————

உணர்வார் ஆர் என்று பிறர் விஷயமாகச் சொல்லிற்று–அது கிடக்க உன்னாலே தான் உன்னை அறியப் போமோ
என்கிறார் –

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

உன்னுடைய அகடிதகட நா சாமர்த்தியம் கண்ணால் கண்டு போம் இத்தனை போக்கி-ஓரடி ஆராயப் போமோ
இவ்வாதார ஆதேய பாவம் புறம்பு கண்டிலோம் -என்கிறார்
இத்தால்
அவன் தன்னாலும் அவன் படி சொல்லப் போகாது -என்றபடி
இந்த ஆலுக்கு ஆதார பூமி தான்-நீருக்கு உள்ளே கரையாதே கிடந்தது ஆரைப் பற்றி  –

இது ஆழ்வார் வந்தால் கேட்க இருந்தோமோ என்றானே எம்பெருமான் -இது அத்யந்தம் விஸ்மயம் -என்கிறார்

————————-

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

நாமத்தால் –மந்த்ரத்துக்கு தேச கால நியதியும்=அதிகார நியதியும் வேணும் என்று இருந்தி கோளாகில்
நாமத்தால் ஏத்துவது -ஆரை என்னில் -திருமாலை –வகுத்த விஷயத்தை -அம்மே என்னுமோபாதி சொல்ல அமையும் –
மாதா பிதாக்கள் பேர் சொல்லச் சடங்கு வேணுமோ -இம்மாத்ரத்தைக் குவாலாக்குகைக்கு அவள் கூடி இருந்தாள்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –