ஆழ்வார் – கடவுளின் நற் குணக் கடலில் முழுகி அமுங்கி யிருப்பவர்
கலித்துறை – கலித்துறை யென்லும் ஒரு வகைப் பாடலினாற் செய்யப் பட்ட,
அந்தாதி என்று – ௮ந்தத்தை ஆதியாக வுடைய நூல் என்று
வழங்குகிற – சொல்லுகின்ற,
சடம் – சடம் என்னும் வாயுவை,
கோபர் – கோபித்த இறைவரது என்பதாம்.
சடகோபரந்தாதி – சடகோபரைப் பற்றிய அந்தாதி யெனவும் சடகோபரது ௮ந்தாதி எனவும் விரிக்கலாம். இவற்றுள், முன்னது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்கத் தொகையும் பின்னது ஆறாம் வேற்றுமைத் தொகையுமாகச் கொள்ளலாம்.
தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.-சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது-அடுத்த மூன்று செய்யுள்களும் அப்படியே –
தேவில் – தெய்வங்களில்-சிறந்த
திருமாற்கு -திரு மகள் கணவனாகிய மாயோனுக்கு,
தக்க – தகுந்த,
தெய்வக் கவிஞன்- தெய்வத் தன்மை யுள்ள கவிபாட வல்லவர்,
பாவில் சிறந்த – பாடல்களில் சிறந்த
திருவாய்மொழி – திருவாய் மொழிப் பிரபந்தத்தை,
பகர்-பாடியருளிய,
பண்டிதனே – நல்ல பாண்டித்தியமுடைய நம்மாழ்வாரேயாம்;, (௮ப்படிப் போல), நாவில் சிறந்த – அப்படிப் பாடுதற்குரிய நாக்கினால் சிறந்த
௮ம் மாறற்கு – அந்த நம்மாழ்வாருக்கு, தக்க – தகுந்த
நல் நா வலவன் – நல்ல கவிஞரானவர், பூவில் – உலகத்தில், -சிறந்த-
ஆழ்வான் – பக்தி வெள்ளத்தில் மூழ்குபவராகிய,
கம்ப நாட்டு புலமையன்-கம்ப நாடரென்னும் வித்துவானேயாம்;
எல்லாத் தேவரிலும் சிறந்த மாயோனுடைய கீர்த்திகளைப் பாடுதலில் வல்லவர் நம்மாழ்வாரேயாம்-௮ப்படிப் போல நம்மாழ்வாரைப் பாடுதலில் சிறந்தவர் கம்ப நாட்டாழ்வாரேயாமென்பதாம்-மற்றைத் தேவர்களைப் போலாகாமல் உயிர்களிடத்தில் அந்தர் யாமித்துவமுடைமையால் தேவிச் சிறந்த திருமாலென்றார். சிவ பிரானிடத்தில் உபதேசம் பெற்று அகத்தியர் எழதிய இலக்கணத்துத்குப் பொருந்திய பாடல்களைப் பாடப் பெற்றதனால் தெய்வக்கவி யென்றார். ஏனைய நூல்கள் போலாகாது இருமைப் பயனுந் தருதலால் பாவில் சிறந்த திருவாய் மொழி யென்றார். பண்டிதன் -ஞான பண்டிதருமாம், மாறன் – ஆழ்வார்-பிறந்த பொமுது அழுதல், விம்முதல், பால் குடித்தல் முதலிய ஒரு தொழிலுஞ் செய்யாமல் உலகியல்பிற்கு மாறாக இருந்ததினால் மாறன் என்று பெயர் பெற்றார். பூவிற் சிறந்த கம்ப நாட்டு ஆழ்வானெனக் கூட்டலும் அமையும். கம்பநாடு – முதலில் இது வெண்ணெயூர் நாடாக விருந்து பின்பு கம்பர் காலத்தில் அவர் பெயரால் மாற்றப் பட்டமையால் கம்பநாடென்றார். பல வேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகள் எல்லாம் ஒரு சேரக் கொண்ட பேரறிவுடைமையால் புலமையனென்றார்–கவிஞன்-ஞ் -பெயரிடை நிலை. திருவாய்மொழி -சிறந்த வாயில் சொல்லாகிய நூல் என்று பொருள் பட்டு ௮டையடுத்த கருவி யாகு பெயராயிற்று-ஏகாராமிரண்டும் தேற்றம்.
———
ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ௮ந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருகூரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.
ஆரணத்தின் – வேதத்தின்,
சிரம் மீது – முடிவிடத்திலே,
உறை : பொருந்தி யிருக்கின்ற,
சோதியை – சோதி வடிவனான மாயோனை,
௮ம் – அழகிய,
தமிழால் – தமிழ்ப் பாடல்களால்,
பாரணம் செய்தவனை -பாடி மகிழ்ந்தவராகிய,
குருகூரனை – திருக் குருகூரிலவதரித்த
சடகோபரை,
பல் பல ௮ – பலபலவகையாக ,
நாரணன் ஆம் என–இவர் நாராயணனது அமிசமாவாரென்று,
ஏத்தி- துதித்து,
தொழ–வணங்கும் படியாக,
கவி- பாடல்களை,
கொடை – கொடுத்தற்குரிய பொருளாக
நல்கு – கொடுக்கின்ற,
காரணனை – தலைவராகிய,
கம்பனை – கம்பரென்னும் புலவரை (யாம்,) உள் – எமது மனத்தில்,
களிப்பு உற – மகிழ்ச்சி மிகும் படியாக, நினைவாம் – கருதுவோம்;
வேதாந்தத்தின் மேல் விளங்குஞ் சோதியாகிய மாயோனைத் துதித்த நம்மாழ்வாரைத் துதித்த கம்பரை யாம் உள்ளங் களிக்கும்படி தியானிப்போம் என்பதாம், உபநிஷத்துக்களிலும் உத்தர மீமாம்சை யாகிய ப்ரஹ்ம ஸூத்திரத்திலும்-மாயோனைத் தலைவனாகக் கூறுதலால் ஆரணத்தின் சிரமீதுறை என்றார். எல்லாரிலும் மேம்பட்ட சரீர காந்தி யுடைமையால் சோதி யென்றார், செய்யுளிடத்தன்றி உலக நடையில் மாந்தர்க்குப் பயன்படாமலும் தமக்கென்று ஓர் இடமில்லாமலும் இலக்கணங்கள் அமையப் பெறாமலுமுள்ள ௮ன்னிய மொழிகளைப் போலாகாமல் ௮வை யெல்லாமுடைமையால் அந் தமிழ் என்றார். திருமாலால் அளிக்கப்படுவன யாவும் தாமே கொடுக்கத் தக்கவராதல் பற்றிப் பல முகத்தாலும் இவர் நாராயணனே யாவார் என்பதைக் கம்பர் குறிப்பித்தமை இங்கு எடுத்துக் காட்டினது காண்க, ஆரணம் – வேதத்திக்குச் சினை யாகுபெயர்.
சோதி – உவமை யாகுபெயர். யாம் -தோன்றா எழுவாய், நினைவாம்-பயனிலை-
———-
நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே–
வேதம் – வேதங்களின் கருத்துக்களை, (எடுத்து ),
தமிழ் -தமிழ்ப் பாடல்களாக , செய்த—-,
நின் மலனே – குற்றமற்றவரே !,
நம் பெருமாள் – எங்கட்கிறைவனாகிய மாயோன்,
விஞ்சிய – மிகுந்த,
ஆதரத்தால் – அன்பினால் (கம்பரை நோக்கி ),
நம் சடகோபனை – நமது சடகோப முனிவரை,
பாடினையோ – நீ பாடித் துதித்தனையோ ??
என்று கேட்ப- என்று கேட்டவடன், கம்பன்—-.-,
விரைந்து – விரைவாக,
உரைத்த – பாடிய,
செம்சொல் -௮ழகிய தமிழ் சொற்களாலமைந்த,
௮ந்தாதி- அந்தாதி யென்னும் நூலிலமைந்து கிடக்க ,
நூறு கலித்துறையும் – நூறு கலித் துறைப் பாடல்களும்,
தெரியும் வண்ணம் – நான் அறிந்து கொள்ளும் படியாக,
அடியேற்கு – உம்முடைய திருவடிகளில் பற்றுள்ள எனக்கு,
நெஞ்சு-மனத்தினை,
அருள்-கொடுத்தருளுவீர்;
வேதத்தைத் தமிழிற் செய்தருளிய நம்மாழ்வாரே ! பெருமாள் சடகோபரைப் பாடினையோ வென்று கேட்டலும் கம்பர் பாடிய அந்தாதியைத் தெரிந்து கொள்ளும் வண்ணம் அடியேனுக்கு மனத்தைக் கொடுத்தருளுவீர் என்பதாம். வேதம் நான்கு;-இருக்கு , எஜூர், சாமம், அதர்வணம். இந் நான்கின் கருத்தினை அடக்கித் தமிழில் நம்மாழ்வார் செய்த
பிரபந்தங்கள் முற்கூறப்பட்டன., நம் சடகோபனென்றது மாயோன் தான் ஆழ்வார் மீது வைத்துள்ள அன்பின் மிகுதியால் தன்னொடு சேர்த்துக் கூறிய ஆர்வமொழி; இது பற்றியே யாவரும் நம்மாழ்வாரெனக் கொண்டாடுவதுமென்றறிக-அரங்க நாதனுச்கு எல்லா வடியாரிடத்தும் அன்பொத்திருக்கச் சடகோபரை நம் சடகோபனை யென்று
விசேடித்ததும் தம்மைக் கம்பர் பாடி யிருக்கவும் அவற்றால் திருப்தி யுறாமல் சடகோபனைப் பாடினையோ வென்றதும் பற்றி விஞ்சிய ஆதரத்தாலென்றார். பெருமாள் – உயர் திணை யிருபாற் பொதுப் பெயர், கம்பன்-சாதிப் பெயர், உரைத்த அந்தாதி யெனக் கூட்டுக –
———–
நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.
ஒதரிய- சொல்லு தற்கரிய, (அளவினையுடைய),
வேதம்-வேதங்களை,
தமிழ் செய்த-தமிழ்ப் பாடல்களாகப் பாடி யருளிய,
மெய்ப் பொருளே – தத்துவ ஞான மூர்த்தியே !
நாதன் – தலைவனாக,
அரங்கன் – – திருவரங்கத்தெம்பெருமான், (கம்பரை நோக்கி )
நயந்து – விரும்பி,
உரை யென்ன – ‘ சடகோபனைப் பாடு’என்று சொல்ல,
நல் கம்பன்.-சிறந்த கம்பரென்னும் புலவர், உன் தன் – உம்முடைய,
பாதம் – திருவடிகளை,
பரவிய – துதித்துப் பாடிய,
பைந்தமிழ் – பசுந் தமிழ்ப் பாடல்கள்-நூறும்
பரிவுடன் – (யான்) அன்போடு
ஒதும்படி – படித்து உய்யும் வண்ணம், எனக்கு—-உள்ளம் தனை – மனத்தினை,
அருள் – திருத்தி யருள வேண்டும்,
என் – எனது ,
விண்ணப்பம் – வேண்டு கோளானது ,
இது – ஈதொன்றேயாம்; –
வேதத்தினைச் தமிழிற் செய்த நம்மாழ்வாரே ! ௮ரங்க நாதன் கட்டளையால் கம்பர் உம்மைத் துதித்த இவ் வந்தாதியைப் படிக்கும்படி எனக்குக் கருணை செய்வீராக வென்பதாம், அனந்தாவை வேதா : என்ற படி வேதங்கள் அளவில்லாத பகுதியன ஆதலால் ஓதரிய என்றார்-கேட்போருக்கு இன்பத்தையே தருதலால் பாடலென்று கூறாமல்
இன்பமென்ற. பொருள் படும் தமிழென்றார்-எல்லா வூழிகளிலும் அழியாதிருத்தலால் நாதனென்றார். அப்படி யிருப்பதை அறியா , மனிதரும் ௮றிந்து தர்ஸித்து நன்மை யடைய வேண்டி.-ஸ்ரீரங்கத்தில் கோயில் கொண்டெழுந்தருளினமையால் அரங்கனென்றார். எத்தனையோ புலவர் தோன்றியிருந்தும் இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் புண்ணியத்தை இவ்வொருவரே செய்து வந்தமையால் நற்கம்பனென்றார்-இளமையர் மழலை செவிக்கு இன்பம் செய்வது போல இதுவும் இன்பந் தருதலின் பைந் தமிழ் என்றார்.; பசுமை – இளமை – பாராட்ட நானினியாளல்வவே பசுமென்குழவி” என்றார் பிறரும், கம்பன் – அந்தச் சாதியர்க்குரிய பட்டப் பெயர் – இயற் பெயர் புலப்பட வில்லை ; பெரியோர்களின் இயற் பெயர்களைக் கூற அஞ்சி மரியாதை தோன்ற அப் பட்டப் பெயரால் அழைக்கப்படுவது தொன்று தொட்டு வந்த வழக்கம்- ‘ஐயரவர்கள் பிள்ளையவர்கள், செட்டியாரவர்கள்’ என்கின்ற இம் மொழிகள் தமிழில் சிறந்த ஒவ்வொருவரைக் குறித்தல் போல அக் காலத்திலிவரைக் கம்பரெனக் கூறுதலுண்டென்றிந்து கொள்க. உரை –ஏவலொருமை-வினைமுற்று -ஆய் விகுதி புணர்ந்து கெட்டது உன்தன், தன்- சாரியை-ஓதும்படி – படி ஈற்று வினை யெச்சம்.-ஓத அகரம் தொக்கது,
———-
மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.–தற் சிறப்புப் பாசுரம்
——–
வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே.– 1-
தொல்லை – பழமையும்,
மூலம் – எல்லாவற்றிற்கும் காரணமும்,
பரம் – மேன்மையுமாகிய,
சுடர் – சோதி வடிவனாகிய மாயோன்,
வேதத்தின் முன் செல்க – வேதங்களின் ௮ளவைக் கண்டது போவனென்றாலும் போவானாக ;
மெய் உணர்ந்தோர் – உண்மை நிலையை அறிந்தவராகிய,
விரிஞ்சன் முதலோர் – பிரமா முதலான தேவருடைய,
கோது -குற்றம்
அற்ற – நீங்கிய,
ஞானம் – ஞானத்தின்,
கொழுந்தின் முன்-முடியைக் கடந்து போவனென்றாலும்,
செல்க – போவானாக ;
தென்-அழகிய,
குருகூர் – குருகூரென்னும் பதியிலவதரித்த,
குணம் கடந்த -முக் குணங்களையுங் கடந்த,
போதம் கடல் – ஞான சாகரமாகிய,
எங்கள் புனிதன்- எங்களுக்கு மேலாய் விளங்குகிற நம்மாழ்வாரது,
கவி- பாடல்களின்,
ஓர் பாதத்தின் முன் – ஒரு அடிக்கு முன்னே,
செல்லுமே-போகும் தகுதி யுடையவனோ ? [எனவே போகானென்பதாம்];
திருமால், வேதத்தினெல்லையையும் அறிவுடையவர் ஞான நிலையையையும் கடந்தவனென்றாலும் சடகோபரது பாடலெல்லையைக் கடக்கும் வலியிலனென்பதாம். எனவே திருமாலின் செயலினெல்லையைக் கடந்து ௮ப்பாலும் பரவி நின்றது இவர் பாடலென்க. த்ரை குண்ய விஷயா வேதா : என்றபடி மூன்று குணமுடையோர்க்கும் வேண்டுவன உணர்த்தும் வேதத்தில் பரமாத்துமாவைக் கூறாத பாகமுமிருப்பதால் வேதத்தின் முன் செல்க வென்றும் குணாதிதரான நம்மாழ்வார் பாடலில் அங்ஙனம் ஒரு பாதமுமில்லாமையால் பாதத்தின் முன் செல்லுமே யென்றுங் கூறினா.தவம் முதவியவற்றால் பெற்ற அறிவினை யுடைய பிரம்மா முதலானோர் ஞானத்துக்கும் முதலடியிலேயே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் ஞானத்துக்கும் மிகுந்த ஏற்றத் தாழ்வுண்டாதலால் விரிஞ்சன் முதலோர் கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்கவென்றும் பாதத்தின் முன் செல்லுமே யென்றுங் கூறினார், இது மெய் யுணர்ந்தோர் என்றதனாலே தவத்தாற் பெற்ற அறிவுடையாரென்பது விளங்கும், வேதம் – மங்கலச் சொல்லாதலின் முதவிலெடுத்துக் கொண்டார், இது விருத்தப் பொருத்தமாயினும் பெரியோராட்சியிற்’குற்றமில்லையென்க -. மெய் யுணர்ந்தோர்– வியாஸ, அம்பரீஷ, சுக, செளனகாதியரெனினுமாகும்.-முதலோரென்றதனால் இந்திராதியரையுங் கொள்க – கோதற்ற ஞானம் – ௮மல ஞானம். குணங்கள் தந்த எனப் பிரித்துத் திருவாய் மொழியைக் கற்றவர்களுக்கு நற்குணங்களைத் தந்தருளுகின்ற என்றலுமாம்.-தென் குருகூர் – தென்றிசைக் கண்ணுள்ளதாகிய குருகூரென்றலுமாகும், எல்லோரிலுஞ் சிறந்தவராதலால் புனிதனென்றார். முன் – இடைச் சொல் ; இடத்தின்மேலது – செல்க -வியங்கோள் வினை முற்று, உணர்ந்தோர் – பெயரெச்சமுற்று, செல்லுமே, ஏ-எதிர்மறை, சுடர் – உவமை யாகுபெயர்-
————-
சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-
பண்டு- முற்காலத்தில்,
சுடர் இரண்டே-சூரியனும் சந்திரனுமாகிய இரண்டு சுடர்களென்றே நிலை யிடப்பட்டன;(இப்பொழுதோவெனில்),
எம் பிறப்பை – எமது பிறவியை,
அடர் – போக்கிய,
இரண்டு ஆம் – இரண்டாகிய,
மலர் தாள், உடையான் -தாமரை மலரை யொத்த திருவடிகளை யுடையவரும், குருகைக்கு – குருகூருக்கு,
அரசன் – தலைவரும்,
படர் – பரவிய,
இரும் – பெரிய,
கீர்த்தி பிரான் – புகழை யுடையவருமாகிய நம்மாழ்வார் (செய்தருளிய),
திருவாய்மொழி – திருவாய் மொழி யென்னும் பிரபந்தத்தினது ,
பாவொடும் – பாடல்களுடனே(சேர்ந்து )
துகள் தீர்ந்து – குற்றமின்றி,
உலகத்து – உயிர்களிடத்தில்,
இரண்டு இடர்ஆய் – இரண்டு வகைத் துன்பமாகி ,
வரும் – வந்து பற்றிக் கொள்கின்ற,
பேர் இருள் – பெரிய மயக்கம் பற்றி வருகிற இரு வினையாகிய இருளை,
சீப்பன – போக்குவனவாகி ,
மூன்று ஆயின – மூன்று சுடர்களென்று மேம் பட்டு விளங்கலாயின ;
முன்னாளில் சூரியன் சந்திரனென்னும் இரண்டு சுடர்களே உலகத்தை விளக்கி வந்தன ; அவை புற விருளைக் கெடுப்பனவன்றி வேறு செய்யலாவன வின்மையால், உயிர்களின் மனத்திலுள்ள இருளைப் போக்க வேண்டிப் பிரானது திருவாய்மொழிப்பாவொடு சேர்ந்து மனத்தெழுகின்ற இருளையும் கெடுத்து முச் சுடராயின வென்பதாம்-உலகத்தின்
பேரிருளைக் கெடுத்தற்குத் திருவாய்மொழி வேண்டுமானாலும் நம்மாழ்வார் திருவடிகளில் அன்பு பூண்ட தமக்கு ௮வர் திருவடிகளே அமையுமென்பது தோன்ற எம் பிறப்பை அடரிரண்டா மலர்த் தாளுடையானென்றார் –பூவோடு நாரும் மணம் பெறுதல் போலத் திருவாய்மொழிப் பாவொடு சுடர் சேர்ந்து மூன்றாயின வென்றார்-இனிச் சுடரிரண்டென்பதற்கு இராம கிருஷ்ணர்களென்று பொருள் கொண்டால் அவ் விராமபிரான் சுக்ரீவனை நோக்கி சரணாகதி தருமத்தை யளித்தமையாலும் கண்ணபிரான் அருச்சுனனை நோக்கிக் கீதை யருளிச் செய்தமையாலும் இங்கு-வீடுமின் முற்றவும்!” என்று எல்லா வுயிர்களையும் நோக்கி யருளிச் செய்தமையாலும் இத் திருவாய்மொழியே ௮வரினும் சிறப்புடைமையாவது அறிக,
வினைகளுள் நல்வினை மீண்டும் பிறவியைத் தருதலால் இரண்டினையும்
சேர்த்து இடரென்றூர் ; இருள் என்பதும் இக் கருத்துப் பற்றியேயாம் :
‘* இருள் சேரிரு வினையும்”’ என்றார் பிரரும். ஒருவன் செய்யும் நன்மையால் அவனைச் சார்ந்த பலரும் மேம் படுவாராதலால் தாம் ஒருவர் துதித்தலினால் தம்மைச் சாரர்த பலர் பிறப்புக்களும் நீங்குதல் பற்றி எம் என்று தன்மைப் பன்மையாற் கூறினார். இரண்டே, ஏ- தேற்றம், மலர்த் தாள் – உவமைத் தொகை, குருகை- மரூ௨,-இரும் கீர்த்தி – பண்புத் தொகை,
————
பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3–
குருகூர். -திருக்குருகூர்ப் பதியிலே,
பூ – (ஆழ்வாரது திருவாய்) மலரில்,
ஒடுக்கும் -அடக்கப் பெற்றிருந்ததான, அமுதம் – அமிர்தம் போன்ற,
திரு ஆயிரம் – சிறந்த ஆயிரம் பாடல்களும், போந்தன.-வெளி வந்தவைகள் தாம்,
பா-செய்யுட்களின்- இலகணங்களை யெல்லாம்,
ஒடுக்கும் – தம்முளடக்கிக் கொண்டு விளங்குவன –
நுண் -நுட்பமாக அறியத் தக்க,
இசை -இராகப் பகுதிகளெல்லாவற்றையும்,
ஒடுக்கும்—தம்முள் அடக்கிக் கொண்டு விளங்குவன
பலவும் – வேறாகிய பலவற்றையும், பறையும் – மாறுபடக் கூறுகின்ற,
நா – புறச் சமயிகளின் நாவினை,
ஓடுக்கும் – அடக்கி விடும் ;
நல் ௮றிவு -நல்ல அறிவினை,
ஒடுக்கும் – தன்னுள்ளடக்கி யிருக்கும் ; மற்றும் – அன்றியும்,
நாட்டப்பட்ட – (உலகத்தை) நிலை நிறுத்தப் பட்டுள்ள,
தே- -தேவனாகிய திருமால்,
ஒடுக்கும் –தன்னுளடக்கிக் கொண்டிருக்கிற,
பரம் – வேறாகிய (மதங்களின்),
வாதம் – விவகாரத்தினாலாகிய,
செரு- போரை,
ஒடுக்கும் – அடக்கி விடும்
பாடல்களினுறுப்பக்கள் பலவற்றையும் நிறையப் பெற்றிருப்பதனால் பாவொடுக்கு மென்றார்-சிவபிரான் திருக்கையிலேந்திய வெண்டலையால் பாடப் பெற்ற தேவ கானமாகிய பதினெட்டுப் பண்களின் வழியில் விரிந்த நூற்று மூன்று பகுதிகளையும் பெற்றிருப்பதனால் நுண்ணிசை யொடுக்குமென்றார். நம்மாழ்வார் கொண்ட கொள்கைச்கு மாறாகப் பிதற்று்கின்றவர் நாவினை அடங்கச் செய்தலால் பலவும் பறையும் நா வொடுக்குமென்றார்; காலையில் நறுமல ரொன்றக் கட்டிய, மாலையினியல்
புரை சமய வாதியர், சூலையின் திருக்கலாற் சொல்லுவோர்க்கெலாம்,
வேலையும் திரையும் போல் வேறு பாடிலான் ” என்றபடி எல்லா மதத்தையும் தன்னுளடக்கிக் கொண்டவனாதலால் தேவொடுக்கும் பரவாதமென்றார். இறந்தாரைப் பிழைப்பிக்கும் அமுதம் போலசத் தீவினையிலழிவார் தாம் நினைத்த மாத்திரையில் அவரை அதினின்று நீக்குதலால் இறந்தாரைப் பிழைப்பிக்கும் ௮முதத்தை அத் திருவாய் மொழிக்கு உவமை கூறினார்.-இறைவனருளாற் பாடியதன்றி ஆழ்வார் தாமாகப் பாடினரில்லை யென்பது தோன்றப் போந்தன வென்றார்; முந்தை ஆயிரம்” என்ற் பாசுரப்படி, திருவாய் மொழி நித்தியமென்பதும் நித்தியமான வேதத்தைப் பிரமதேவர் வெளியிட்டது போலத் திருவாய் மொழியையும் ஆழ்வார் வெளியிட்டனர் என்பதும் இதனால் விளங்கும், ஒடுக்கும் நுண்ணிசை, பறையும் நா , ஒடுக்கும் நல்லறிவு, ஒடுக்கும் மற்று, ஒடுக்கும் மமுதம் –
இவற்றிலுள்ள நகர மகரங்கள் விரித்தல் விகாரம், பூ – உவமை யாகு பெயர்-
——–
தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-
தொல்லை- பழமையாகிய,
எர்- அழகிய,
வகுளம் – மகிழம் பூக்கள் தொடுத்த ,
வனம் – குளிர்ந்த,
மாலை : மாலையை யுடைய
எம்பெருமான் – எமது தலைவராக,
குருகூர் மன்னன் – குருகூரிலவதரித்த நம்மாழ்வாரது ,
வாய் மொழி – திருவாயிலிருந்து வந்த பாடல்கள்
சிலர்க்கு, – சிற் சிலருக்கு,
தனம் ஆம்-செல்வப் பொருளாகும்;
சிலர்க்கு— தவம் ஆம் – தவமே யாகும்; சிலர்க்கு–தருமம் நிறை -புண்ணியமிகுந்த, கனம் ஆம் – பெரும் சிறப்புமாகும் ;
சிலர்க்கு- ந அதன்-காரணம் ஆம்-அப் பெருஞ் சிறப்புக்குக் காரணமுமாகும் ;
சிலர்க்கு –;.,ஆரணத்தின் இனமாம் -வேதத்தின் பகுதியாகும்;
அதற்கு-அந்த வேதத்தின் பகுதிகள் அனைத்துக்கும்,
எல்லையும் – முடிவாய உப நிஷத்துக்களும்,
ஆம் – ஆகும்;
குருகூர் நம்மாழ்வார் திருவாய் மொழி யானது செல்வம் முதலியவற்றை வேண்டியவர்க்கு வேண்டிய படியே பயன்படத் தக்க தென்பதாம்.-திருவாய் மொழி தமிழ்ப் பிரபந்தமாதலால் அந்தத் தமிழுக்குரிய தெய்வம் தான் ௮ந் நூலைப் பாராயணஞ் செய்வார்க்கு வேண்டியதை வேண்டியபடியே கொடுக்குமென்பார் -தனத்தை வேண்டு வார்க்குத் தனமும் தவத்தை விரும்பினவர்க்குத் தவமும் பெருமையை விரும்பினவர்க்குப் பெருமையும் அதன் காரண்முமாமென்றார்- அத் தெய்வமும் வேறன்று வேதத்தினுள் விளங்குவதென்பதை விளக்குவார் ஆரணமாமென்றும் வேதமும் வேதாந்தமாகாது இது வேதாந்தமுமாகுமென்பார் -அதன் எல்லை யென்றும் ஆரணம் பழமை யுடையதே யென்பார்க்கு இதுவும் பழமையே யெனக் கூறுவாராகித் தொல்லை வாய் மொழி யெனறும் கூறினார்-அன்றியும் உலகத்தில் தனம் இம்மையின்பத்திற்கே உரியது ; தவம் -மறுமையின்பத்திற்க்கே யுரியது இம்மைக்குப் பயன்படாது ; இத் திருவாய்மொழி அப்படி யன்றி இருமைப் பயனும் தருதலால் தனமென்றும் தவமென்றுங் கூறினார் என்றலுமாம்-
—————-
மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே–5-
குளிர் – குளிர்ந்த,
நீர்- நீரை யுடைய,
பொருநை -தாமிரபருணி நதியானது ,
பல சுழியாய்- பற் பலவாசச் சுழித்து, ஒழுகும் – ஓடுகின்ற,
குருகூர்- குருகூர் என்னும் பதியில்,
எந்தை- எமது தந்தை போல்வாராகிய -சடகோபர்
தோன்றலின் – அவதரித்தலால்,
பலவாயின – பற் பலவாகிய,
மொழி- பாஷைகளுக் கெல்லாம் ,
செப்பம் – ஓழுங்கு,
பிறந்தது – உண்டாயிற்று ;
முத்தி- மோஷ வீட்டினை,
எய்தம்- ௮டைகின்ற,
வழி: மார்க்கங்கள்,
பல ஆய -பலவாயினவை யெல்லாம்,
விட்டு – ஒழிந்து, ‘
ஒன்று ஆயது – ஒருவழி யாயிற்று ;
வழுவா – நீங்காத,
நரகம் குழி- நரகக் குழிகள்,
பல ஆயின – பல வாயின வெல்லாம்,
பாழ் பட்டது – பாழாயிற்று-
குருகூரில் நம்மாழ்வார் ௮வதரித்தலால் பாஷைகளில் ஓழுங்கென்பது தோன்றிற்று -முத்தி மார்க்கம் ஒழுங்காயிற்று, நரகு பாழாயிற்று என்பதாம். செந்தமிழ் மொழியில் மாறுபட்டுக் கிடந்த துறைகள் பலவும், சடகோபர் திருவாய் மொழியை ஒழுங்கு படுத்தப் பாடி யருளினது நோக்கி அவ் வழியே திருத்தப் பெற்றதனால் செப்பம் பிறந்ததென்றார்-வழுவா நரகம்.-.தீவினை செய்தாரைத் தப்பாமல் விழுங்கும் நரகம் , அத் திருவாய்மொழியைப் பாராயணஞ்செய்வோரும் அப்படிச் செய்வோர் அருகலிருப்போரும் கேட்போரும் முத்தியையே – அடைதலால் நரகக் குழி பாழ்பட்ட தென்றார்.-மொழி யென்பதற்குப் பதமென்ற பொருள் கொண்டு கட படாதி சப்தங்கள். அவ்வப் பொருள்களையே யுணர்த்தின வாதலால் மொழி பலவாயின தென்றும் திருவாய் மொழியிலுள்ள எல்லாப் பதங்களும் அவ்வப் பொருள்களின் நினைவில் நில்லாது எம்பெருமான் வரையிற் சென்றுணர்த்தினமையால் செப்பம் பிறந்தது என்றும் கூறினுமமையும்-இவ் வாழ்வாரவதரித்ததன் பின் பலலா யிருந்தன சுழிகளே யன்றிப் பிறவில்லை யென்பார் பொருநைச் சுழி பலவாயொழுகுமென்றார். செப்பம்-பண்புப் பெயர், ஆய-வினைப் பெயர்-
————–
தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-
பல காலும் : பல தரமும்,
தம்மில் -தமக்குள்,
மூன்று ஆயினவும் – மூன்று பகுதியாகி அமைந்தவற்றையும்,
நினைந்த—
ஆரணத்தின் – வேதத்தினைப் போல, மும்மை – மூன்று கூறுபாடாகிய,
தமிழை -தமிழினில் ஆகிய பாடல்களை, ஈன்றான் – அருளிச் செய்தவரும்,
குருகை -குருகூரிலவதரித்த,
பிரான் – பெரியவரும்,
எம்பிரான் – எம் தலைவருமாகிய நம்மாழ்வாருடைய,
இசை கவி இவை -பண்ணோடு பாட வல்ல இப் பாடல்கள்,
தோன்றா- பலராலும் ௮றியப் படாத உபநிடதம் பொருள்-உபநிஷதத்தின் கருத்துக்களை,
தோன்றல் உற்றார் தமக்கும் – அறியப் பெற்ற பெரியோர்களுக்கும்,
சான்று ஆம் – சாட்சியாகி விளங்கும்,
என்ற போது – என்று சொல்லிய காலத்தில்,
மற்று – வேறாகிய (சிறப்பு),
என் -யாது வேண்டும்-
ஜீவ ஈஸ்வர ஜகத்தென்று மூன்று கூறுபடுத்திக் காட்டி யிருப்பதைத் தம்முள் ஆராய்ந்து அதற்குத் தகும் படியாகக் குருகூர் நம்மாழ்வாரால் பாடி யருளிய இப் பாடல்கள் உப நிஷதத்தின் கருத்தை அறிகிற பெரியோர்களுக்கு இடையில் சந்தேகம் நேருமிடத்து இது சாட்சியாயிருக்து-அந்தச் சந்தேகங்களை ஒழிக்குமானால் இதன் சிறப்பினை வேறு என்ன சொல்லுவதென்பதாம். ௮ரிய தத்வ ஞானத்தைப் பெறத் தக்க புண்ணிய முடையார்க்கன்றிப் பிறர்க்கு வெளிப் படாமையால் தோன்றா வுபநிடசப் பொருளென்றார். தோன்றலுற்றார்-இங்கு மதுர கவியாரும், நாத முனிகளுமாம்; எப்படி யெனில்? ஆழ்வாரைக் கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் அருளிச் செய்து வெளிட்டு அருளியவர் மதுரகவி. பிற் பட்டு நாத முனிகள் உண்டாகி இக் கண்ணி நுண் சிறுத் தாம்பு என்ற ப்ரபந்தத்தைப் பலதரம்-12000-தடவை ஒதினமையால் முன்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்து பிரபந்தங்களும் ஆழ்வாரது அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம் அருளிச் செய்ய நாத முனிகளின் மனத்தில் தோன்ற- இவர் தம் மனத்தில். ‘தோன்றிய படியே அவற்றைத் ஏடுபடுத்தி ஆழ்வார் பெயர்களுடன் வெளியிட்டு அருளினார் -முத் தமிழ்-இயற் றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ; இயற்றமிழ் – இலக்கண அமைதியை
யுடைய தமிழ், -இசைத் தமிழ்- இராக: அமைதியை யுடைய தமிழ், நாடகத் தமிழ் வெளிப்படை, எம்பிரான்றன், தன்-சாரியை,
———–
கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-
கவி- பாடலாகிய,
பா- பரவிய,
௮முதம் – உணவினை,
இசையின் – இராகமாகிய,
கறியொடு- கறி முதலான விஞ்சனத்துடனே,
சண்ணன் – கண்ணபிரான்,
உண்ண – உட்கொண்டருளும்படி,
குவிப்பான் – சமைத்துச் குவிப்பவரும், குருகை – குருகூரில் அவதரித்த,
பிரான் – பெரியோரும்,
சடகோபன் – சடமென்னும் வாயுவை முனிந்து போக்கினவரும்,
குமிகொண்கன் -குமரி நாட்டுக்குத் தலைவரும்,
புவி -பூமியிலுள்ள,
பாவலர்தம் – வித்துவான்களுக்கு,
பிரான் – தலைவருமாகிய நம்மாழ்வார் பாடிய, திருவாய்மொழி– ,
பூ சுரர் தம்-நிலத் தேவர்களாகிய பிராமணர் களுடைய,
செவிப்பால் – காதுகளின் வழிகளிலே, நுழைந்து புக்கு-நுழைந்து புகுந்து, உள்ளத்து உள்ளே – மனத்தினிடத்திலே, நின்று – நிலை பெற்று நின்று,
தித்திக்கும்- இனிய சுவையை உண்டாக்கும்-
ஆழ்வார், பாடலாகிய சோற்றினையும் இசையாகிய கறி முதலியவற்றையும் கண்ண பிரான் உண்ணும்படி சமைத்துக் குவித்த திருவாய் மொழி யென்னுமுணர்வு ௮ந்தணர் செவியின் வழியே நுழைந்து தித்திக்கும் என்பதாம். இப் பாடல் முழுவதம் உருவகப் படுத்தினமையால் முற்றுருவகம். சிவ சச்தியாகிய குமரி யென்னும் தேவியைப் பரசுராமன் ஸ்தாபித்திப் பூஜித்தமை பற்றி இந்த இடத்திற்குக் கன்னியா குமரி யென்றும் இது சூழ்ந்த நாட்டிற்குக் குமரி நாடென்றும் பெயராயிற்று-ஆழ்வார் பாடல்களையே புலவர்கள் மேற் கோளாகக் கொள்கின்றமையால் பாவலர் தம் பிரானென்றார். புளியங்காடி யுண்பவருக்கு ௮முதம் கிடைத்தால் போல வேதாந்த நூலில் கிடந்து மனத்தை வருத்தும் பூசுரரிதனை நோக்கி மகிழ்ந்து ஏற்றலின் ௮வருள்ளத்துள்ளே தித்திக்குமென்றார். அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமுமென்று இடையர்கள் கண்ணன் உண்ணக் குவித்தாரேனும் ௮ச்சோறு கண்ணனுக்கே யுரியதாயிற்று, இஃது. அது போலன்றிப் பூசுரரும் சுவைத்து மகிழ்வதாயிற்று-
மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –
—————
தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-
குருகை – குருகூரிலவதரித்த,
பிரான் – சடகோபர்,
சொன்ன——, ஆயிரம்- திருவாய் மொழி ஆயிரம் பாடல்களும்,
தித்திக்கும்’- இனிமை செய்கின்ற
மூலம் -(சாவாமைக்குக் ) காரணமாயிருக்கின்ற,
‘தெளி அமுதே – தெளிந்த ௮மிர்தமே யாம்; (அன்றியும்), தெய்வம் உண்டு என்பார் – தெய்வங்கள் இருக்கின்றன என்று சொல்லுவர்களுடைய,
பத்திக்கு மூலம் – பக்திக்கும் இதுவே காரணமாகும்
பனுவற்க்கும் – வரவாற்று முறையில் பாடுகின்ற நூல்களுக்கும், மூலம்—-;
பவம்-பிறவியை,
அறுப்பார் – போக்கத் துணிந்தவர்கள், முத்திக்கும் – முக்தி யடைவதற்கும்–மூலம் முளரி கை – தாமரை மலர் போன்ற கைகளும்
வாள் நகை -ஒளி பொருந்திய பற்களுமுள்ள,
மொய் குழலார் -நெருங்கிய கூந்தலை யுடைய மாதர்களிடத்தாசையை, அத்திக்கும்-போக்குகைக்கும், மூலம் —;
அமிர்தின் மேற்பட்ட சிறந்த பொருளில்லை யாதலின் அமுதத்தை உவமித்தார். அன்றி ௮மிர்தமோ இதற்கு ஒப்பாவது என்று ஏகாரத்தை எதிர்மறை யாக்கி யுமுரைக்கலாம். ௮ங்ஙனம் ஆக்கவே தேவாமிர்தமானதை பத்திக்கும் பனுவலுக்கும் மூலமாகாது. உடம்பைக் காத்து நிற்றலால் முத்திக்கும் மூலமாகாது. ௮ரம்பையரைச் சேரச் செய்தலால் மொய்
குழலார் அத்திக்கு மூலமாகாது – அன்றியும் பவம்றுப்பார்ச்கு அழியா முத்தியைக் கொடுக்கின்ற இத் திருவாய் மொழி போல அமிர்தம் அழியா வின்பத்தைத் தர மாட்டாது அமிருதமுண்டவரும் சிற் சில நாளில் இறப்பதுண்டு -எல்லை மூவைந்து நாள்கள் உள வென விமைக்கும் கண்ணு, நல்லெழின் மாலை வாடு நஞ்சுடை யமிர்துண்டாரில், பல் பகற்
றுய்த்த வின்பம் பழுதெனக் கவல்ப கண்டாய் ” என்பதனாலுமறிக-திருவாய் மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுட்களை ஆயிரமென்றது பெரும் பான்மை பற்றியே யாம், அன்றியும் நூறு பதிகத்திலுமுள்ள நூறு கடைக் காப்புச் செய்யுட்களைக் கழிக்க – ஆயிரத்திரண்டேயாமென்௧.
————
ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9-
தண் – குளிர்ச்சியான,
அம் – நீர் வளமுடைய,
குருகூர் சேய் – குருகூர்ப் பதியிலே குழந்தை வடிவாக அவதரித்தவரும்,
மா -சிறந்த,
இரு மரபும் – (தாய் வழி தந்தை வழியாகிய) இரண்டு வழியும்,
செவ்வியான் – சிறந்த மரபினருமாகிய சடகோபர், செய்த—,
செய்யுட்கள்-பாடல்களானவை ,
ஆயிரம் மா மறைச்கும் – சிறந்த ஆயிரமென்ற பகுதியுள்ள சாம சாகைகளுக்கெல்லாம்,
அலங்காரம் – அழகு செய்வனவாகும் ;
௮ரும் தமிழ்க்கு – அரிய தமிழ்ச்கு,
பாயிரம் – வரலாற்று முறையாகும் ;
நாற் கவிக்கு- நான்கு வகைப் பட்ட கவிகளுக்கு,
படி சந்தம் – ஒப்புக் காண்பதற்குரியனவாம்
பனுவற்கு எல்லாம்-எல்லா வகைப்பட்ட நூல்களுக்கும் –
தாய் -தன்னுட் கொண்டு தரும் தாய் போல்வனவுமாம்;
இரு நால் திசைக்கும் – எட்டுத் திக்குக்கும்,
தனி – ஒப்பற்று விளங்குகிற,
தீபம் – விளக்குமாகும்;
குருகூராழ்வாரருளிய பாடல்கள் சாம வேதத்துக்கு அழகு செய்வனவாம்.-தமிழுக்கு ௮ணிந்து கொண்டு அதற்குரிய பாயிரமாகும் ; கவிகளுக்குப் படிச் சந்தமாம்; பனுவலுக்குத் தாயாகும் ;எட்டுத் திக்குக்குக் தீபமாகுமென்பதாம். ஒரு பெண்ணுச்கு அவளைக் காமுகர் விரும்புமாறு அணிகளால் ௮ணியப் படுவன போல பொருள் மறைந்து கிடந்த வேதங்களின் பொருள்களை மேற்கொண்டு யாவரும் விரும்பும்படி அழகு செய்தலால் மறைக்கு ௮லங்காரமென்றார். சிவ பெருமான் முருகக் கடவுள் நிதியின் கிழவன் இந்திரன் முதலாகிய தேவர்களும், வான்மீகியார் கெளதமர் மார்க்கண்டேயனார் ௮கத்தியனார் முதலாகிய முனிவர்களும் ஆராய்ந்த ௮ருமை தோன்ற அரும் தமிழென்றார் – நாற்கவி- ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தாரம் என்பன-ஒருவன் பாடுக வென்றவுடன் பாடுதல் ஆசு கவியாகும்; இனிய சுவைகள் ஒன்பதும் தோன்றப் பாடுதல் மதுர கவியாகும்.
மாலை மாற்று -சக்கரம் சுழி குளம், ஏக பாத மெழுகூற்று இருக்கை நாதை கரப்பே கரந்துறை பாட்டே, தூசுங் கொளவே வாவன் ஞாற்று நாக பந்தம்’” முதலாகிய மிறைக் கவிகளைப் பாடுதல் சித்திர கவியாகும்.-ஒரு பொருளை மேற் கொண்டு பலவகை வர்ணனைகளையும் அமைத்து விரிவாகப் பாடுதல் விஸ்த்தார கவியாகும். பாயிரம் — தமிழிலின்ன பொருள்கள் உளவென்று திருவாய் மொழியில் காட்டிதாம், தமிழில் இவ் வண்ணம் பாட வேண்டுமென்ற கட்டளைக்கு உதாரணமாகப் பெரியோர் கொள்ள வைத்தலால் படிச் சந்தமென்றார். பனுவல், பலவகைய ; ௮வை ;–அறநூல், பொருள் நூல், காமநூல், வீட்டுநூல் என்பன. இந் நான்கும் திருவாய் மொழியில் பரக்கக் காணலாமாதலால் தாயென்றார், உபய
குலோத்தமரென்றதன் கருத்தாக இரு மா மராபுஞ் செவ்வியானென்றார்
குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்
ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து –ஒவ்வையார்
சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று
அவ் வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம் மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து –இடைக்காதர்
————–
செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10-
அருவி – அருவி நீர்கள்,
செய் – வயல்களில்,
ஓடு – ஓடிப் பாய்கின்ற,
குருகை பிரான் – குருகூரில் வந்த பெரியோரான பராங்குசனை
திருமாலை – சிறந்த மாயோனை,
நங்கள் – நம்முடைய,
கை – கையிலுள்ள,
ஓர் கனி என – ஒரு பழமென்னும்படியாக , காட்டித் தந்தான் -குறித்துக் காட்டிக் கொடுத்தருளினார் (அதனை அறிந்தும்), அவன் -௮ந்தப் பராங்குசருடைய,
கழற்கே – திருவடிகளிலே,
கமலம் – தாமரை மலர்களை,
பெய்யோம் – பூஜித்து அறியோம்
அவன் புகழ் – அவரது கீர்த்தியை
ஏத்தி – துதித்து,
பிதற்றி – பல காலும் சொலலி,
பித்தாய் – பிறர் நம்மை நோக்கிப் பைத்தியரென்று சொல்லும்படியாக, திரியோம்-திரிந்து அலைந்திலோம்; (அவன்) உபகாரத்தின் – அவர் நமக்குச் செய்த நன்றியின்,
ஆற்றலை – பெருமையை,
என்று அறிதும் – எப்போது அறியப் போகிறோம்?
ஐயோ -ஐய ஓ ! என்னே!
திருக் குருகூர் நம்மாழ்வார் திருமாலைக் காட்டிக் கொடுத்தருளினார்; அப்படிப்பட்ட மகோபகாரிக்கு ஒருவிதத் தொண்டும் செய்தறியோம்; அவருபகாரத்தின் பெருமையை எப்பொழுது தானறியப் போகிறோமென்பதாம் “கைத்தலத் தாமலகமெனக் கண்டு கொள்’”? என்றபடியே நமக்குக் காட்டிக் கொடுத்தும் ‘“வாணார் நுதலார் வலைப்பட் டடியேன் பலவின் கனி யீந்தது போல வதன் முன் -என்றும் இன்கனி சுவருமந்தி கடுவனோடிரிய வோட்டி, நன் கனி சிலது உண்ண ’ என்கின்றபடியே அறிவின்மையால்’ எம்பெருமான். நமக்குச் செய்யும் பேரருளை யிகழ்ந்து பிறரனுபவிக்கப் பார்த்துக் ‘கைப்பழ மிழந்த மந்தி போல
ஏக்கற்று இருக்கிறோமென்று வெறுத்து ஐயோ வென்று இரங்கிக் கூறினார்.
அருவி நீர் வயலில் சென்று பாய்தல் போல்’ ஆழ்கார் கருணை அவரைத் துதிப்பவருள்ளத்தில் சென்று பரவுமென்பது தொகை மொழியின் கருத்து –
மற்றும் அருவி நீர் வயல்களை விளையச் செய்வது போல் ஆழ்வார் மாயோனைக் காட்டிப் பக்தியை விளையச் செய்தாரெனினும் பொருந்தும்-குருகை – மரூவு . கழற்கு – உருபு மயக்கம்.-பெய்யோம், திரியோம்-தன்மைப் பன்மை எதிர்மறை வினை முற்று, அறிதும் – தன்மைப் பன்மை எதிர்கால வினை முற்று,
———
ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-
ஆற்றில் – பொருநை யாற்றில்,
பொதிந்த – தங்கி யுள்ள,
மணலின் தொகை -மணவினளவை யொத்த,
மா – சிறந்த,
அரும் மறைகள் வேற்றில் – பலவகைப் பட்ட அரிய வேதங்களில்,
பொதிந்த – மறைந்து கிடக் கின்ற,
பொருள்கள் எல்லாம் -எல்லாப் பொருள்களும்,
விழும் – (யாவரும்) விரும்பத் தக்க ,
மா கமலம் – சிறந்த தாமரைகள்,
சேற்றில்… பொதி அவிழ்க்கும் – கட்டவிழ்த்து மலரப் பெற்ற,
குருகூரர்-குருகூர்ப் பதியிலுள்ள பராங்குசர் செய்தருளிய,
செம் சொல் பதிகம் நூற்றில் – செந் தமிழ்ச் சொற்களாற் செய்த நூறு பதிகங்களிலும், பொதிந்த – நிறைந்துள்ள,
பொருள்-பொருள்களில்,
ஒரு கூறும்-(நூற்றில்) ஒரு பகுதி யளவும், நுலல்கில – சொல்லினவில்லை;
பலவாகிய வேதங்களெல்லாம் ஆழ்வார் திருவாய் மொழியிற் கூறியவற்றில் நூறிலொருபங்களவும் கூடக் கூறின வில்லை யென்பதாம்-அனந்தாவை வேதா: என்றதனால் ஆற்றின் மணலின் தொகை மறைகளென்றார்-மிகுதியை விளக்க வேண்டி இப்படியே–நன்னீர்ப் பக்றுளி மணலினும் மலவே’? ”மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்கரிட்ட மணலினும் பலவே’” என்பன முதலாகப் பிற சான்றோர்களும் கூறுதல் காண்க. வேறு ஆவன:–இருக்கு, தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், ௭சு , சாமம், அதர்வணம் என்பன,-திருமாலும் யீசனும் பின் சென்றும் தூது செலத் துணிந்தும் வளர்த்த தமிழால் புனர்தமையால் செஞ்சொலென்றார். பத்துப் பாடலென்கின்ற நியமனத்தைக் கொண்டமையால் பதிகம் என்றார் -நூற்றில் என்பதனை ஒரு கூறு என் பதனோடும் கூட்டிப் பொருள் கொள்ளுதல் சிறப்பு- மாக் கமலம் சேற்றில் பொதியவிழ்க்குமெனவே சேற்றில் தாமரை மலர்தல் போல தகுதியில்லாத உயிர்கள் உலக மயக்கத்தில் பட்டு வருந்துவதை யறிந்த ஆழ்வார் மிகுந்த கருணையோடு அவர்களுக்கு அருளிச் செய்வாரென்பதாம்
——–
இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-
பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி- பாங்கற் கூட்டம்,
துறை–அஃது, இவ்விடத்து இவ்வியல் தென்றல்
பல – பற்பலவாகிய,
வேதமும் – வேதத்தின் ௧ருத்தை யெல்லாம்,
செம் தமிழ் சொற்களால் – செவ்விய தமிழ்ச் சொற்களிளாலே,
மொழிந்தான் – பாடி யருளிய பராங்குசர் அவதரித்த,
குருகூர்-குருகூர்ப் பதியிலே, (நண்பனே!), பதுமத்து – ஒரு தாமரை மலரிலே,
இதழ்-சில இதழ்கள்,
இலவே – நிறத்தில் முள்ளிலவ மலரேயாம்; உள் – அவ்விதழ்களுக்குள்ளே,
முல்லை – முல்லை யரும்புகளும்,
உளவே- சில உள்ளனவாம்;
௨ள் – அவைகளிலிருந்து ,
இயம்பும் – சொல்லப்படுகின்ற,
மொழியும் – வார்த்தைகளும்,
சிலவே – சிலவுண்டாம்;
அவை – அவ் வார்த்தைகள் தாம்,
செழும் தேன் – செழுமையான தேனை, ஓக்கும் – நிகர்க்கும்;
(இன்னும் அத் தாமரை மலரிலே), இரண்டு சலம் வேல்களும் – கோபம் செய்வனவாகிய இரண்டு வேலாயுதங்களும்,
உளவே-உள்ளனவேயாம்;
௮து – ௮ம் மலரையுடைய வடிவம் தான், என் – எனது,
தனி – ஒப்பற்ற,
உயிரே – உயிரே யாகும்;
காண் – நீ சென்று அதனைப் பார்;
நண்பனே! யான் கருதிய தலைவியினிடம் ஆழ்வார் குருகூர்; அவளியல்பு இலவ மலர் போன்ற இதழும் முல்லை யரும்பொத்த பற்களும் தேனொத்த சொற்களும் தாமரை மலர்போன்ற முகமும் வேல் போன்ற கண்களுமாம்; ௮ந்தப் பெண் என்னுயிரே யாவளென்பதாம். அவள் எவ்விடத்தில் இருக்கிறாள் என்றதற்கு இடம் குருகூரென்றான்–இயல் எவ்வண்ணமென்பதற்கு இதழ் -இலவென்றான். மொழி பெறாது வருந்திய தலைவன் அவள் வறிது நகைத்தலை இயற்கைப் புணர்ச்சியிற் கண்டனனாதலின் இதழுள் முல்லை யுளவென்றான். அவள் வழிபாடு மறுத்த பொழுது சில சொற் கூறி யதனைக் கேட்டவனாதலின் சிலவே சொல் என்றான். பிற்பாடு அச் சொல்லைப் பெறாமையால் சில வென்றான் எனினுமாம். அருமையைச் செய்தலால் தேனொக்குமென்றான். தன்
மனத்தை ௮வள் வசப்படுத்தலால் முகத்தைத் தாமரை மலர் என்றான் –
அவள் விழிகள் தன் மேற் பாய்ந்து துன்பஞ்செய்தலால் சல வேல்களென்றான். ௮வள் இன்றியமையாமையின் என் உயிரென்றான். கைகோள்-களவு, கூற்று – தலைவன் கூற்று, கேட்போர் – பாங்கன்-இடம்-முன்னிலை–காலம் – இறந்த காலம், மெய்ப்பாடு – உவகை , பயன் -பாங்கற்குணர்த்தல். இலவு, முல்லை – மலர்களுக்கு முதலாகு பெயர்கள், இயம்பும் மொழியும் – விரித்தல் விகாரம், உள-முதல் விளக்காக இரண்டிடத்தும் கூட்டப்பட்டது.
ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும் கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும் அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும் தீம் சொற்களையும் கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –
———-
உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13
உருக்கும் நெய்யொடு – உருக்குவதற்குரிய வெண்ணெயுடனே,
தயிர்- தயிரையும்,
திருடி திருடி-ஆயர்பாடியில் எல்லா வீடு களிலும் சென்று திருடி,
உண்டான் – விழுங்கிய கண்ண பிரானது, அடி -திருவடியைசத் தொழுபவராகிய, சடகோபன் – சடகோபனென்னும் பெயருடையவரும்,
சந்தோடு – சந்தன மரங்களுடனே,
அயிர் – நுண் மணலையும் கொணர்ந்து, உருக்கும் – கரை யோரங்களில் ஒதுக்கித் தள்ளுகின்ற,
பொருநல் – பொருநை யென்னும் தாமிரபர்ணி நதியை யுடைய,
குருகூர் – குருகூர்ப் பதியிலவதரித்தருளிய,
எந்தை – எந்தந்தை போல்வராகிய பராங்குசரது ,
அம் தமிழ் – அழகிய தமிழ்ப் பாடல்கள்,. (படிக்கும் பொழுது ), உயிர் உருக்கும் – நம் உயிரை உருகச் செய்யும் ;
புக்கு -உள்ளே புகுந்து ,
உணர்வு – அறிவை, உருக்கும்:
உடலத்தில் உள்ள – நம் சரீத்திலமைந்துள்ள,
செயிர் – குற்றமே,
உரூ கொண்ட -வடிவமாகக் கொண்டிருக்கிற,
நம் தீங்கு உருக்கும் – நம்முடைய தீ வினைகளெல்லாம் போக்கும்;
குருகூர் ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியானது உயிரையும் உணர்வையும் செயிரைக் கொண்ட தீங்கையும் போக்குமென்பதாம்.படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் உயிரையும் உணர்வையும் தன் வசப் படுத்திக் கொள்ளுதலால் உயிரும் உணர்வும் உருக்கும் என்றார்-தீங்கு -காமக் குரோத லோபாதிகள்; இவை வேண்டிய அளவு துன்புறுத்தி இம்மைக்குப் பழியும் மறுமைக்கு நரகும் தருதலால் செயிருருக் கொண்ட தீங்கு என்றார். கண்ண பிரான் ஆயர் பாடியில் வீதிகள் தோறும் புகுந்து தயிரையும் வெண்ணெயையும் திருடி யுண்டமை வெளிப் படை- மற்றைய மொழிகள் போலாகாமல் தனக்கு அரசு வீற்றிருத்தற்கு நாடுடைமையும் இலக்கண வரம்புடைமையும் நோக்கி ௮ந்தமிழ் என்றார். பொருநை யெனினும் பொருநலெனினும் பொருந்தும், உடலத்து, ௮த்து – சாரியை-
———
அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14
ஆர் – சுவை நிரம்பிய,
தமிழ் கவியின் – தமிழ்ப் பாடல்கள்போல,
பந்தம்- க்ரமமாக,
விழா – உத்சவங்கள்,
ஒழுகும் – நடந்தேறி வருகின்ற,
குருகூர் – குருகூர்ப் பதிபில்,
வந்த – அவதரித்த,
பண்ணவன் – சிறந்தவரான சடகோபர்,
௮ந்தம் இலா – முடிவில்லாத,
மறை ஆயிரத்து – ஸாம வேத சாசை ஆயிரத்திலும்,
ஆழ்ந்த – மறைந்து இருக்கிற
அரும் பொருளை – அருமையாகிய விஷயத்தை,
செம்தமிழாக – செவ்விய தமிழ்ப் பாடலாக , திருத்திலனேல்-திருத்தமமையப் பாடி யருளா விட்டால்,
நிலம்தேவர்களும் – பூசுரராகிய பிராமணர்களும்,
தம் தம் – அவரவர்கள் கொண்டாடப் படுகிற,
விழாவும் – உற்சவங்கழும்,
அழகும் -அவர்களுள் அமைதியும்,
என்னாம் – எத் தன்மையவாய் முடியும்?
குருகூராழ்வார் வேதத்தைத் திருவாய் மொழியாக வெளிப் படுத்தா விட்டால் பிராமணர்களும், அவர்கள் வேள்வி முதலிய விழாக்களும் ௮ழகும் என்ன பயன்படுமென்பதாம். ‘“பரத்துவாஜோ அத்திரி? என்ற வாக்யத்தின் படி பரத்துவாச முனிக்கு இந்திரன் வேதமாகிய நான்கு மலைகளைச் காட்டி ௮வற்றில் ஒவ்வொரு பிடி யெடுத்துக் கொடுத்தவையே வேதமாக வழங்கப் படுவன என்றிருத்தலால் ௮ந்தமிலா மறை என்றார்.
ஆழ்ந்த அரும் பொருளாவது -நாராயணனுக்கே பரத்வம் கூறுதல்.இம் மொழியின் சுவை யேற்றம் நோக்கிச் செந் தமிழ் என்றார். ஆகாயத்தில் தேவர்களைப் போலப் பூமியில் பெரும் சிறப்புஉடைமையால் அந்தணர் நிலத் தேவர் என்ற பெயர் பெற்றார் ; பூசுரர் என்பதன் பொருளும் இதுவே. சுவை நிரம்பிய தமிழ்க் கவிகள் படிக்கப் படிக்க இன்பம் தருதலால் பார்க்கும் தோறும் மகிழ்ச்சி தருகின்ற விழாவினுக்கு உவமித்தார். (இதனால் ஆசிரியர்க்குள்ள இம் மொழியிடத்தன்பு விளங்குவதாயிர்று.) வைஷ்ணவ மதத்தை நிலை நிறுத்தியவராதலால் பண்ணவனென்றார் – பண்ணவன் – குரு. நிலத் தேவர்ர்களென்னுமுயர் திணையோடு விழாவும் அழகுமென்னும் அஃறிணையைக் கூட்டி மிகுதி பற்றி அஃறிணை முடிபாற் கூறினர்- ,
மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-
அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –
———–
பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15-
இயலோடு – இயல் தமிழோடு,
இசையின் – இசைத் தமிழுமாகிய,
வண்ணம் – அழகிய,
படைக்கு – சேனைக்கு,
தனி – ஒப்பற்ற,
தலை வேந்தன் – தலைமை வாய்ந்த அரசரும்,
மலர் உகுத்த – பூக்களிலிருந்து உதிர்க்கப்பட்ட,
சுண்ணம் – மகரந்தங்கள்,
படர் – பரவிய,
படப்பை – நீர் நாட்டூராகிய,
குருகூர் வந்த – குருகூரில் அவதரித்த, சொல் கடல் : தமிழ் சொற் கடல் போல்பவருமாகிய பராங்குசர்,
மறை-வேதங்கள்,
பண்ணப் படுவனவும் – இனிப் புதியனவாகச் செய்யப் படுபவைகளும்,
உளவோ என்று -இருக்கின்றனவோ வென்று,
பல்லோர் – பல வகைப் பட்டவர்களும் , வண்ணம் பட – தங்கள் மனத்தில் நினைக்கும்படியாக,
சொல் – சொற்கள்,
திகழ – விளங்குமாறு,
செய்தான் – பாடி யருளினார் –
குருகூரிலவதரித்த சொற் கடலாகிய நம்மாழ்வார் வேதங்களில் இனிச்
செய்யப் படுவனவும் முளவோ வென்று கூறும்படி திருவாய் மொழியைப் பாடி யருளினாரென்பதாம். வேதத்திற் கூறப் படும் பொருள் நிலைமையினும் மேலான பொருளை வெளிப் படுத்தலால் பண்ணப்படுவனவும் உளவோ மறை யென்றார் -இதனை “மிக்க விறை நிலையும் மெய்யா முயிர் நிலையும் , தக்க நெறியு்ம் தடையாகித் தொக்கியலு மூழ் வினையும் வாழ் வினையுமோதுங் குருகையர் கோன், யாழினிசை வேதத்தியல்’” என்பதானாலும் அறிக- கடல் – உவமை யாகு பெயர்,
எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன-சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்-
—————-
கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16-
களித்தார் – கட்குடியராகிய அசுரர்களுடைய,
குடலை கலக்கும் – குடல்களெல்லாம் கலங்கச் செய்கின்ற,
குளிர் சங்கினான் -குளிர்ச்சி பொருந்திய சங்கத்தை யுடைய மாயோனானவன், கடலைச் கலக்கி – சமுத்திரத்தைக் கடைந்து,
அமுது – அதிலுண்டாகிய அமிருதத்தை , ௮மரர்க்கு – தேவர்களுக்கு,
அளித்தான் – கொடுத்தருளினான் ; (அப்படிப் போல) நடலை- வஞ்சனையாகிய,
பிறப்பு அறுத்து – பிறவியைப் போக்கி ,
என்னையும்—, ஆட் கொண்ட -அடிமையாகச் கொண்டருளிய,
நாயகன் – நம்மாழ்வாரானவர்,
குறையா – குறைவில்லாத,
மறையின் – வேதங்களின்,
திடலைக் கலக்கி – பெரிய திடலாகிய முட்டுக்களை யிடித்தெறிந்து
திருவாய் மொழியெனும் – திருவாய்மொழி யென்று சொல்லப்படுகிற,
தேனை—-தந்தான்-தந்தருளினார் –
மாயோன் சமுத்திரத்தைக் கடைந்து தேவர்களுக்கு அமிருதம் கொடுத்தருளினான் ; அப்படிப் போல நம்மாழ்வார் வேதங்களின் முட்டுப்பாடுகளைப் பெயர்த்தெடுத்துத் திருவாய்மொழி பாடி. அடியார்களுக்குக் கொடுத்தருளினார் என்பதாம். தவத்தால் நீங்குவது போலத் தோற்றி மீண்டும் பற்றிக் கொள்ளுதலால் நடலைப் பிறப்பென்றார்- தமிழில் ஓப்பாரும் மிக்காரு மில்லாச் சிறப்புடைமையால் நாயகனென்றார்… அடியார்க்கு மகிழ்ச்சி செய்தலால் குளிர் சங்கு என்றார். பரத்துவாசனுக்கு இந்திரன் நான்கு வேத மலைகளைக் காட்டி. அவற்றில் “ஒவ்வொரு பிடி யெடுத்துக் கொடுத்து உலகத்தில் பராவச் செய்த பெருமையால் குறையா மறை என்றார்- கடலை வேதமாகவும் அமுதத்தைத் தேனாகவும் அமரர் அடியராகவும்-சங்கினான் நாயகனாகவும் உவமித்தமை காண்க,-இது எடுத்துகாட்டு உவமை யணி. என்னையும், உம்- இழிவு சிறப்பு.
———
நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17–
பிறர் கடை தோறும் – அயலார் வாயில்கள் தோறும்,
நாய் போல் நுழைந்து – நாயைப் போல உள்ளே புகுந்து ,
அவர் எச்சில் -அவர்களுடைய எச்சிலை,
நச்சி- விரும்பி,
பேய் போல் – பிசாசைப் போல,
திரியும் – அலைகின்ற,
பிறவியினேனை – பிறப்புடையவனாகிய
என்னை,
பிறவி எனும் – பிறப்பென்கிற,
நோய் – பிணிகள்,
போம் மருந்து என்னும் – போகத் தக்க மருந்தென்று சொல்லப் படுகிற,
நுன் -உமது
திருவாய் மொழி- திருவாய் மொழிப் பிரபந்தத்தை,
நோக்குவித்து -யான் பார்க்கும் படி கருணை செய்து,
தாய் போல் – பெற்ற தாயைப் போல,
உதவி செய்தாய்க்கு – உபசாரம் செய்த உமக்கு,
அடியேன் – தொண்டனாகிய நான்,
பண்டு – முன்னாளில்,
என் சாதித்தது -என்ன உபகாரம் செய்ததுண்டு?
நாய் போல நுழைந்து பேய் போலத் திரியுமென்பால் வன்பு கூர்ந்து நுமது திருவாய் மொழியைப் பார்த்துப் பிறப்பறுக்கும்படி உதவி செய்த உமக்கு யான் முன் செய்த நன்றி தான் யாதோ ?என்றதாம், தம் தாழ்ச்சியைக் குறித்துக் கடைப்பட்ட நாயை உவமித்தார்.-ஒயாமல் பிரந்து உழலுதலால் மாறாமல் அலைகின்ற பேயை உவமிழத்தார், எச்சில் – எஞ்சியது ; மிச்சமானதென்பதாம் -எஞ்சு பகுதி இல் – பெயர் விகுதி, நோய் போம் மருந்து என்பதில் போம் என்ற காரியப் பொருளாகிய பெயரெச்சம் மருந்து என்னும் காரணப் பெயரைக் கொண்டது. நுன் – பெயர்த் திரி சொல்,
வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –
———–
சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–
எம் கோன் – எங்கள் தலைவராகிய நம்மாழ்வாரது,
தமிழ் சொல் என – தமிழ்ப் பிரபந்தம் போல,
உங்கள் வேதம் – உங்களுடைய வேதங்களெல்லாம்,
பர தத்துவத்தை – மேலான கடவுளின் நிலைமை இன்ன தென்பதை ,
சாதிக்குமே – உறுதிப் படித்துமோ ?
சமயம் திருக்கை – அன்னிய மதங்களின் மாறு பாடுகளை,
சேதிக்குமே – அழிக்குமோ ?
ஒன்று சிந்திக்குமே – ஒரு பொருளை ஆராய்ந் தறியுமோ (அப்படி அறிந்தாலும்),
அதனை – அறிந்த அவ் விஷயத்தை,
தெரிய போதிக்குமே – பிறர்க்குத் தெரியும் படி உணர்த்துமோ?
எங்கும் ஓங்கி – எவ்விடத்திலும் சிறப்படைந்து
பொது நிற்கும் – பொதுவாய் நிற்கின்ற
மெய்யை – சத்தியத்தையும்,
பொய்யை – அதற்கு மாறான அசத்தியத்தையும்,
சோதிக்குமே – ஆராய்ந்தறியுமோ ?
நம்மாழ்வார் பிரபந்தம் போல உங்கள் வேதம் பரம் பொருள் நிலையை நிறுத்திக் காட்டுமோ ? புற மதங்களின் மாறுபாட்டை அழிக்குமோ ? ஒன்றை ஆராய்ந்தறியுமோ ? தெரிந்தாலும் பிறர்க்குச் சொல்ல முடியுமோ ? மெய்யையும் பொய்யையும் பகுத்தறியுமோ ? இவை யொன்றும் செய்ய இயலாது என்பதாம். எல்லார்க்கும் மேலானாரென்பது பற்றிக் கோன் என்றார், உங்கள் என்றது புற மதத்தவரை என்க -,-வேதம் ஆங்காங்கு எல்லாக் கடவுளருக்கும் படிப் படியாகப் பரத்துவஞ் சொல்லுதலால் திருவாய் மொழி போல ஓரே கடவுளைக் குறிக்காமை பற்றிச் சாதிக்குமோ வென்று எதிர் மறையாகக் கூறினாரெனினுமாம்.-இப் பாடல்களிலுள்ள ஏகாரங்களெல்லாம் வினாவாகச் கூறி யிருப்பினும் எதிர் மறைப் பொருள் படுதல் காண்க-
————–
சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-
குருகூர் – திருக் குருகூரிலுள்ள,
எம்பிரான் – நம்மாழ்வார்,
சொன்ன – ௮ருளிச் செய்த,
மாலையை – பாடலாகிய மாலையை,
சொல் என்கேனோ – இயல்பாகிய தமிழ்ச் சொல்லென்பேனோ ?
முழு வேதம் – எல்லா வேதத்திலுமுள்ள, சுருக்கு என்கெனோ – சுருக்கமான
சாரமென்பேனோ?
எவர்க்கும் – யாவருக்கும்,
நெல் என்கெனோ -௨ணவுப் பொருளாகிய நெல்லென்கெனோ?
உண்ணும் – பருகுகின்ற,
நீர் என்கெனோ – நீரென்பேனோ ?
மறை – வேதங்களை,
நேர் நிறுக்கும் -நேரே தராசில் நிறுத்தப் பார்ப்பதற்குரிய
கல் என்கெனோ- படிக்கல்லென்று சொல்லுவேனோ ?
ஞானம் முதிர் – ஞானமாகிய சுவை முற்றிய,
கனி என்கெனோ – பழமென்பனோ?
புகலவல் என்கெனோ -பல விதமாகச் சொல்லுவதற்கு எனக்கு வலிமை யுண்டென்பேனோ,
குருகூர் நம்மாழ்வார் பாடல்களைக் தமிழ்ச் சொல்லென்பேனோ ?வேத சாரமென்பேனோ?உணவுப் பொருளென்பேனோ? நீரென்பேனோ? படிக்கல்லென்பேனோ ? பழமென்பேனோ? பலவிதமாகச் சொல்ல வல்லமை யுண்டென்பேனோ ? என்ன சொல்லுவேனென்பதாம். ஒன்றோடொன்று அந்தாதியான தொடர்புடைமையால் மாலை யென்றார்-இது தமிழ்ச் சொல்லென்பார்க்கு இதுவே வேதச் சுவையைத் திரட்டிச் சுருக்க வைத்திருத்தலால் சொல்லென்பெனோ சுருக்கென்பெனோ என்று ஐயத்தாற் கூறினார். திருவாய் மொழியின் பொருளாலுலகு நன்மை பெறுவதை நோக்கி உள்ளரிசியாலுலகு பிழைத்தற்குரிய நெல்லை உவமித்தார் -ஏனைய வெளிப்படை-பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –
———-
மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-
பொருள்-அகப் பொருள்.
திணை– பாலை,
கிளவி-கற்பொடு புணர்ந்த கௌவை.
துறை–கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல்
மாலை – பூ மாலை யணிந்த,
குழலியும் – கூந்தலை யுடைய உன் மகளும்,
வில்லியும் – கையில் வில்லை யுடைய அவள் தலைவனும்
மாறனை – நம்மாழ்வாரை,
வாழ்த்தலர் – துதியாதவர்கள்,
போம் – செல்லத் தகுந்த,
பாலை கடம் – பாலை நிலத்து வழியை, பகலே கடந்து ஏகி -இன்றைப் பகலிலேயே தாண்டிச் சென்று,
மருதத்துப் பணை- மருத நிலத்து வயல்களில்,
கரும்பின்ஆலை – விளைந்துள்ள கரும்புகளை ஆட்டுகிற ஆலைகளில்,
நரேல் என்னும் ஓசையை – நரேலென்று ஒலிக்கிற ஒலியைக் கேட்டு,
அம் பொன் சாலை – அழகிய பொலிவு பெற்ற வீடுகளில் வளர்க்கிற,
கிளி – கிளிகள்,
௮ஞ்சி – பயந்து ,
உறங்கா – தூங்காத,
திரு நாட்டு இடம் – சிறந்த எமது நாட்டினிடத்தை,
சார்வர்கள் – அடைவார்கள்;
உன் புதல்வியும் ௮வள் கணவனும் நம்மாழ்வாரைத் துதியாதவர் போகின்ற கொடும் பாலை வழியைசத் தாண்டி இனித் தமது நாட்டை யடைவார் களென்பதாம்-செவிலியைத் தேற்றுபவராதலின் அவள் வருத்த மின்றிச் சென்றாளென்பது தோன்ற மாலைக் குழலி யென்றார்; எனவே இடை வெயிலில் தலைவியும் தலைவனும் உகந்து அலா் சூட்டி உள் மகிழ்ந்து இருக்து -புறப்பட்ட பிறகு இவர்கள் கண்டாரென்றறிக-எதிர்த்து வந்த சிங்கத்தைக் கொன்று அவளுக்கு ௮ச்ச முண்டாகாதபடி வில்லின் நாணேற்றிக் கையிலேந்திச் செல்கின்றமையால் வில்லி யென்றார்,கிளவித் தலைவன் பெயர் கூறாமையால் அகப் பொருளாயிற்று,-போக்கெல்லாம் பாலை” ஆதலால் திணை – பாலை. தலைவி கற்பு நிலை தவறாமல் ஒருவனைக் கைக் கொண்டபடியே சென்றதால் எழுந்த பழிச் சொல்லாதலால் கற்பொடு புணர்ந்த கெளயை யாயிற்று, தேடிச் சென்ற செவிலியை எதிர் வந்தோர் கூறித் தேற்றுதல் துறைக் கருத்து,-கைகோள் – களவு, கூற்று . கண்டோர் கூற்று, கேட்போர் – செவிலி, இடம் – முன்னிலை, காலம் -நிகழ் காலம். மெய்ப்பாடு – பெருமிதம், பயன் – செவிலியை மீள வுரைத்தல், ஆதலால் நீ மீள்வாயாக என்ற சொல் எஞ்சி நின்றது –
திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும் திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார் அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –
———-
சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21–
பொருள்–அது,
திணை -குறிஞ்சி ,
கிளவி–வரைவு கடாதல்.
துறை–நெறி யருமை கூறி வரவு விலக்கல்,
குருகைப் பிரான் – குருகூர் நம்மாழ்வாரது , திரு ஆணை -சிறந்த ஆஜ்ஜை -(கட்டளை) கொண்டுள்ள,
மலையவனே – பொதியில் மலை யிலிருக்கிற தலைவனே !
சாரல்-மலைச்சார்பாகிய,
குறிஞ்சி தழுவம் -குறிஞ்சி நிலம் தழுவப் பட்ட,
பொழில் – சோலையிலே,
தளிர் மெல் அடி -தளிர் போன்ற மெல்லிய அடிகளையும்,
தண் – குளிர்ந்த,
குறிஞ்சி மூரல் நகை-குறிஞ்சி அரும்பு போன்ற பற்களையுமுடைய தலைவியினது
முகம் நோக்கற்கு-முகத்தைப் பார்ப்பதற்கு, நீ—-, முடுகும்-விரைசந்து வருகிற,
சூரல் – பிரப்பங்காடுகள் நெருங்கிய,
குறிஞ்சி நெறி – மலை வழியை,
நினை தோறும் – நினைக்கும் பொழுதெல்லாம்,
துணுக்கெனும் ஆல் – அவள் துணுக்கென்று நடுங்குவளாதலால்,
வாரல் – நீ வாராது நீங்குவாய்.
நம்மாழ்வார் ஆஜ்ஜையைச் சிரத்தால் வகிக்கும் பொதியிவின் தலைவனே ! சோலையில் தலைவியானவள் அவள் முகத்தைப் பார்த்து மகிழ்தலுக்கு நீ விரைந்து வருகிற மலை வழியை நினைக்கும் தோறும் துணுக்கென்று நடுங்குவளாதலால் நீ வாராதொழிவாய் -என்பதாம். எனவே தலைவன் ஆற்றாதானாயினான் ; பின்பு ஒரு வழியாக ஆற்றுவானாம் எப்படியோ வெனில், ‘ பிரான் திரு வாணையை உடையவனே ” என்றமையால் அவ் வாணையை உடையார்க்கு ஊறுபாடுகள் வாரா வென்று தோழி அறிந்திருந்தும்
என்னை வர வேண்டாமென்று கூறியது வேறு ஓன்றினை நினைத்தன்றோ? ௮து தானும் நான் அவளை மணஞ்செய்து கொள்ள வேண்டியே என்று மன வுறுதி கொண்டு மறு நாள் மணஞ் செய்யப் புகுவானாம், இங்கனம் கூறுதல் தலைவனை நன்கு மதியாமையான வழுவாயினும் இருவரும் மணஞ்செய்து கொள்ள வேண்டிச் கூறும் அன்பின் மிகுதியால் வழுவமைதி யாயிற்று, இப்படி யன்றித் தலைவனை வர வேண்டாமென்று பிரான் மேல் ஆணை யிட்டு மறித்தாளென்று உரைப்பின் ஆணை யிட்டு மறித்ததனால் தலைவன் வாராதே யொழியவும் அதனால் தலைவி யிறந்து படவுஞ் செய்தவளாம். அங்ஙனஞ் செய்யவே “ நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி ” என்னுஞ் சூத்திரத்துக்கு விரோதமாம் ; ஆதலால் இவ் விஷயங்களை கல்வி யறிவுடையோர் ஆராய்ந்து அறிவாராக.’
தளிர் மெல்லடித் தண் மூரற் குறிஞ்சி நகை -௮ன்மொழித் தொகை பன் மொழித் தொடர், குறிஞ்சி மூரல்-மூரல்-அரும்புக்கு உமையாகு பெயர், ** முல்லை, யாழ் கடற்றானை வேந்தே ! அணியெயி றீன்ற தன்றே’-என்ற சிந்தாமாணிச் செய்யுளுரையை நோக்குக-துணுக்கெனல் – ௮ச்சக் குறிப்பு, கைகோள்-களவு, கூற்று – தோழி கூற்று, கேட்போன் -தலைவன், இடம் – முன்னிலை, காலம்- எதிர்காலம்,-மெய்ப்பாடு- அச்சத்தைச் சார்ந்த பெருமிதம், பயன்- வரைவு கடாதல்,
———–
மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22-
மலை- பொதியில் மலையிலுள்ள,
ஆரமும் – சந்தன மரமும்,
கடல் ஆரமும் – கடலிலுள்ள முத்துக்களும், பல் மா மணி குயின்ற -பலவாகிய சிறந்த ரத்னங்களால் இழைத்த
விலை ஆரமும் – விலை பெற்ற மாலைகளும்,
விரவும் – பொருந்தி யிருக்கிற,
திரு நாடனை – சிறந்த பாண்டி நாட்டிலுள்ளவராகிய,
வேலை – சமுத்திரத்தை,
கட்ட சிலை – அம்பு விட்டெரித்த கோதண்டமென்னும் வில்லை யுடைய,
ஆர் – அரிய,
௮முதின்-அருமருந்தன்ன இராம பிரானுடைய,
அடி – திருவடிகளில் பற்றுள்ள,
சடகோபனை – நம்மாழ்வாரை,
சென்று இறைஞ்சும் – போய் வணக்குகின்ற,
தலையார் – தலையை யுடையவர்,
௭வர் !-யாவரோ, அவரே.
எம்மை – எங்களை,
ஆளும் – ஆண்டு கொள்ளுகின்ற, தபோதனர்-தவமாகிய செல்வத்தை யுடையவராவர் ;
மூவகை ஆரங்களும் பொருந்திய பாண்டி நாட்டிலுள்ளவரும் இராம பிரானடித் தொண்டருமாகிய நம்மாழ்வாரை வணங்குபவர் யாவரோ அவரே எங்களுக்குத் தலைவராவாரென்பதாம், விலை யாரம் இந்திரன் கொடுத்த மாலையுமுடைய பாண்டி நாடென்றாகலுமொன்று ; அதற்கு “ கோவா மலையாரங் கோத்த சடலாரம். தேவர் கோன் பொன்னாரம் தென்னர் கோன் மார்பினவே:? என்ற சிலப்பதிகாரத்தையும் நோக்குக” இராமாமிருதமென்னும் பெயருடைமையால் அமுதென்றார்; அன்றி மனத்திற் கொண்டாரை நிலை பெற வாழ்வித்தலாற் கூறினார் என்றலுமாம்
வேலை சுட்டது :–இராமாவதாரத்தில் இராம பிரான் . தென் கடலருகு வந்து இலங்கைக்குச் செல்ல வழி வேண்டி வருணனை அழைத்தலும் ௮வன் வாராமையால் சினங்கொண்டு ௮க்னியாஸ்திரத்தைப் பிரயோகித்துக் கடலை வற்றச் சுட்டு வருணன் வந்து அடைக்கலம் புகக் காத்தருளினார் என்பதாம். அமுது -உவமை யாகு பெயர். குயின்ற-குயில் – பகுதி, ௮வரே , ஏ- பிரிநிலை ,
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்-ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப் பாசுரம் –
———–
போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-
போந்து – எங்கள் விமானத்தில் வந்து,
ஏறுக என்று-ஏறிக் கொள்ளுக வென்று,
இமையோர் – தேவர்கள்,
புகலினும் -சொன்னாலும்,
பூ – அழகிய,
தொழுவின் – கொட்டிலினிடத்துள்ள,
வேந்து -தலைமை பெற்ற,
ஏறு – ஏழு காளை மாடுகளை,
அடர்த்தவன் – அடக்கிய கண்ண பிரானது ,
வீடே பெறினும் – பரம பதத்தை யடையப் பெற்றாலும்
எழில் குருகூர் – அழகிய குருகூர்ப் பதியில்,
நாம் தேறிய – நாங்கள் தெளிவடையச் செய்த,
அறிவன் – பேரறிவாளராகிய நம்மாழ்வாரருளிச் செய்த, திருவாய்மொழி —,
நாளும் – தினமும்,
நல்கும்- கொடுக்கின்ற,
தீம் தேறல் – இனிய தேன் போன்ற சுவையை,
உண்டு உழலும் – பருகி உலாவுகின்ற , சித்தியே-ஓப்பற்ற பயனே,
வந்து…-சித்திக்கும்-நான் பெறும்படி எனக்குக் கை கூடா நிற்கும்;
என்னைத் தேவர் வந்து அழைத்தாலும் நான் பரம பதம் அடைந்தாலும் குருகூர் நம்மாழ்வாரருளிச் செய்த திருவாய் மொழியின் இனிய சுவையை உண்டு மகிழும் சித்தியே எனக்குக் கை கூடி யிருக்கும் என்பதாம்-இது ௮ப்பிரபந்தத்தின் சுவை மிகுதியைத் துதித்தவாறு, ஆராயுங்காலத்திலே தெளிவடைந்த மகிழ்ச்சியால் நாம் என்று தன்மைப் பன்மையாற் கூறினார்…படிக்கும் தோறுஞ் சுவை தருதலால் நாளும் நல்குமென்றார்-ஏனைய பயன் போலாகாமல் மேம் பட்டமையால் சித்தி யென்றார், ஏறு -விலங்கின் ஆண் பாற் பெயர் ; இங்குக் காளைக்காயிந்று, வீடே,-ஏ-தேற்றம், தேறல் – கள்ளின் தெளிவுமாம் ;௮தற்கேற்ப உண்டு உழலுமென்றதனால் இத ஏக தேச வுருவக வணி. கண்ணன் ஏறடர்த்தது: — நம்பினைப் பிராட்டியாரை மணஞ்செய்விக்க வேண்டி ௮வள் தந்தை யானவன் அசுர விவாகமாக நியமித்துத் தன் தொழுவிலுள்ள கொழுத்த ஏழு காளைகளைப் பிடித்துக் கட்டுபவனுச்கு என் மகளைக் கொடுப்பேனென்றதை யறிந்த கண்ண பிரான் அங்ஙனமே அவற்றை யடக்கி ௮வளை மணம் புரிந்து கொண்டானென்பதாம்.
———-
சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24-
சடகோபன் – நம்மாழ்வார் பாடி யருளிய,
மொழித் தொகை – பாடல்களின் தொகுதியானது ,
சித்தர்க்கும்- எண் வகைச் சித்தி யுடையவர்க்கும்,
வேதச் சிரம் – வேதத்தின் தலையாகிய வேதாந்தத்தை,
தெரிந்தோர்கட்கும் – அறிர்தவர்களுக்கும், செய் தவர்க்கும் – தவத்தைச் செய்பவர்க்கும்,
சுத்தர்க்கும்-பரி சுத்தமுடையவர்க்கும், மற்றைத் துறை- வேறு மார்க்கங்களிலிருந்து ,
துறந்தோர்கட்கும் – எல்லாப் பற்றும் விட்ட துறவிகளுக்கும்,
தொண்டு செய்யும் – கடவளுக்கு அடிமை செய்கின்ற,
பத்தர்க்கும் – அடியார்களுக்கும்,
ஞானப் பகவர்க்குமே அன்றி- ஞானமிகுத்த பெரியோர்களுக்குமே யல்லாமல்,
பண்டு – முன்னாளில் சென்ற,
முத்தர்க்கும்- முத்தி பெற்றவர்களுக்கும், இன் ௮முதம்- இனிய ௮மிருதமேயாம்;
நம்மாழ்வார் பாடல்கள் சித்தர் முதலாகிய எல்லார்க்கும் இனிய அமிருதமாகவே யிருக்குமென்பதாம், சித்தி எட்டாவன: —அணிமா,மகிமா, தெரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் -என்பன. சுத்தர்- மனத்திற் பரி சுத்தமுடையவர். பகவர் – வீரம் கீர்த்தி வைராக்கியம் இவற்றில் மிக்கவர், முத்தி யடைந்தவர்-பரம பதத்தில் தேவராயிருந்து இதனைக் கேட்டு மகிழ்வாராதலில் அவர்க்கும் இன்னமுதமென்றார்.-வேதாந்தமான உபநிஷத்துக்களை ஆராய்பவர் அதனிலும் இதன் கருத்துத் தெளிவாய் விளங்குதலால் அவர்க்கும் அமுதென்றார். இதிலுள்ள உம்மைகள் எண்ணுப் பொருளன. பகவர்க்குமே, ஏ – பிரிநிலை,
———-
தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-
தொகை உள ஆய -சேர்க்கப் பட்டுள்ளனவாகிய,
பனுவற்கு எல்லாம் -சாஸ்திரங்களிலெல்லாம்,
துறை தோறும் – ஒவ்வொரு பகுதிகள் தோறும்,
தொட்டால் – உற்று நோக்கினால்,
பகை உளவாம் -ஒன்றற்கொன்று விரோதமுள்ளனவாம் ;
மற்றும் – மீட்டும்,
பற்றுளவாம்-தொடர்சி யுள்ளனவாகும் :
பழ நால் மறையின் – பழமையகிய நான்கு
வேதங்களின்,
வகை உளவாகிய- பகுதி யுள்ளனவாகிய,
வாது உளவாம் -விரோதங்களுமுள்ளனவாகும்; (அப்படியன்றி,) குருகூர் -திருக்குருகூரிலவதரித்த,
எம்பிரான் தன் – எங்களிறைவனாராகிய நம்மாழ்வாருடைய,
விழு தமிழ்க்கு-சிறந்த தமிழ்ப் பாடல்களில்,
வந்த வந்த இடத்து – பார்த்த பார்த்த இடங்களிலெல்லாம்,
ஏ- சிறந்த,
மிகை உளவாம் -மேம் பாடுகள் உள்ளனவாகின்றன ;
எல்லாச் சமய நூல்களிலும் உற்று நோக்குமிடத்து ஒவ்வொன்றிலும் முன்னுக்குப் பின் விரோதமாகக் கூறுவன வுள்ளன ; ௮ப்படி யன்றிக் குருகூர் நம்மாழ்வார் பாடல்களில் பார்க்குமிடம் தோறும் சிறந்த மேம்பாடான பொருள்கள் அமைந்துள்ளன வென்பதாம்-நான்மறையின் வாது – வேதவிரோதம்; அஃதாவது, வேதத்திற் கூறும் பொருளுக்கு விரோதமாகக் கூறுவது-வந்த இடம் -வந்திடம் ;பெயரெச்ச விகுதி தொக்கது.
‘* ஏ பெற்றாகும் ‘? என்றதனால் ஏ என்னும் ஓரெழுத்தொரு மொழி உரிச் சொல்லாயமைந்த விடத்துப் பெருமையை யுணர்த்தும்,
———
விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-
௮ரு வினைகாள் -நீங்குவதற் கரிய வினைகளே!
இள நாகு சங்கம்- மிக்க இளைய சங்கங்களில்,
கொழு – உழுகின்ற கொழுவானது ,
பாய் -பாயப் பெற்ற,
மருதம் சுலாம்- மருத நிலங்கள் சூழ்ந்துள்ள, குருகூர் ,
எம் குலம் – எம் போல்வாராகிய தொண்டர் கூட்டங்களுக்கு,
கொழுந்து – கொழுந்து போல்வாராகிய,
ஒருவன் – ஒப்பற்ற நம்மாழ்வார்,
உம்மை – உங்களை,
அப் புறத்தே – எங்கள் இடத்தில் நெருங்க ஓட்டாமல் அப்பால்,
இழுப்பான் -இழுத்தெறிய வேண்டி, வந்து
இன்று – இப் பொழுது,
நின்றான் – எம் உள்ளத்தில் எழுந்தருளி யிருக்கிறார்; (ஆதலால்,)
மெய் உற வந்து – மெய்யாகவே எங்களைக் கிட்டி வந்து,
அழுப்பாது – அப்பாமல்,
ஓழிமின் – நீங்கி விடுங்கள் ;
இனி – இனி மேல்,
எம்மை-எங்களை,
பிறவித் துயர் – பிறவியாகிய துன்பத்தில், விழுப்பார் யார் – தள்ளுபவர் யாவர் இருக்கிறார்கள் –
வினைகளே ! குருகூரிலவதரித்த ஒப்பற்ற நம்மாழ்வார் உங்களை நீக்க வேண்டி எம்முள்ளத் தெழுந்தருளி யிருக்கிறார்-ஆதலால் கிட்ட நெருங்காதீர் ; ; இனி எம்மைப் பிறவிபில் தள்ளுபவர் யாவர் இருக்கிறார்கள்? என்பதாம்-ஆழ்வார் மனத்திலிருப்பதைக் காட்டி அச்சுறுத்தி வினைகளை யொழித்து விட்டால் இனிப் பிறவியில் புகாதிருத்தல் நிச்சயமென்று கொண்டு விழுப்பார் யாரென்றார். ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகின்ற கொழுவானது வயிற்றில் குதித்துத் தள்ளுதல் போல, அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்றழிக்குமென்பது தொகை மொழியின் கருத்து, இளநாகு- மீமிசைச் சொல். கொழுந்து உவமை யாகு பெயர் -ஆயர் குலக் கொழுந்து ?’ என்றார் பிறரும். கொழு- கலப்பைப் படை வாள் நுணியில் தைக்கும் இரும்பு.
பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –
———
கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27-
பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை –பெருந்துணை
துறை–மாலை பெறாமல் வருந்தித் தலைமகளேங்கியது அறிந்த பாங்கி புலம்பல் –
கொழுந்தோடு – கொழுந்துகளும், இலையும், முகையும்- அரும்புகளும், எல்லாம் – மற்றுள்ள மலர் காய்களும், கொய்யும் கொய் மகிழ் கீழ் – மிகக் கொய்யும் படியாகிய மகிழ மரத்தின் கீழ்ச் சென்று,
விழுந்து ஓடுவது -அங்கே காற்றால் விழுவது ஓடுவதாகிய
ஓர் சருகும் பெறாள் -ஒரு சருகேனும் பெற்றாளில்லை;
விறல்- வலிமை யுடைய,
மாறன் என்றால் – நம்மாழ்வாரென்று அயலர் கூறினால்,
அழும் – அழுகின்றனள்;
தோள் தளரும்- சோள் தளர்ச்சி யடைவாள்;
மனம் உருகும்-மனம் கரைவாள் ;
குருகூர் அறையில் -குருகூரென்று சொன்னால்,
எழுந்து ஆடவும்- தான் எழுந்து ஒடிச் சென்று அவ்வூரை யடையவும்,
இ-இந்த,
இளங்கொடிக்கு – இளமையான கொடி போன்ற பெண்ணுக்கு,
கருத்து உண்டு- நினைவு உண்டாயிருக்கிறது ;
கெட்டேன் – நான் யாது செய்கேன்-கெட்டேன் !
நம்மாழ்வாரைச் சேர விரும்பிய இப் பெண் ௮வர் வருவதற்கு அடையாளமாக முன்னாடியே அவர்மகிழ மாலையை வர விடுக்காமையால் ௮ம் மலரையாவது அணைத்துக் கொண்டு காமத்தைக் கழிக்கலாமென்று அம் மரத்தடியிற் சென்றாலோ எல்லாம் கொய்யக் கூடிய அதன் சருகும் பெற்றாளில்லை-௮வர் பெயரைச் சொன்னால் அழுகின்றாள் ;தளர்கின்றாள் ;உருகுகின்றாள் ; குருகூரென்றால் அவட்கு ௮ங்கு ஓடவுங் கருத்துண்டு-ஆ ஆ ! கெட்டேன் ! என்றாள் என்பதாம். காமத் தீக்கு ஆற்றாளென்பது தோன்ற இளங்கொடி யென்றார். இவள் இன்னும் காமத்தால் மிக வருந்திப் புலம்புவள் போலுமென்பார் எல்லாம் கொய்யக் கூடிய மகிழின் சருகும் பெற்றாளில்லை யென்றார். ஆற்றாமை மிகுதியினால் ௮ழுமென்றார், அணைத்து மகிழ்வது தோளாதலால் ௮து பெறாமை ஹேதுவாகத் தோள் தளருமென்றார், மனத்தை அவர் பால் விடுத்தமையால் உருகுமென்றார். யாமிங்கு இருத்தலால் எழுந்தோடவில்லை கருத்து மட்டுமுண்டு என்றார். தோழியாற் செய்யும் உபசாரமனைத்துஞ் செய்தும் பயன் படாமையால் கெட்டேனென்றாள். தோழி செய்யுமுபசாரமாவது மலரணையலும் சந்திரகாந்தச் சிலையிலும் படுச்கச் செய்தல் -கொங்கைகளில் தளிர்களையும் சந்தனத்தையும் பிறவற்றையும் அப்புதல்; பன்னீர் தூவுதல் முதலியவாம், இது கிளவித் தலைவனது இயற் பெயரைக் கூறினமையால் ௮கப் பொருளாகாமல் அகப் புறப் பொருளாயிற்று-கை யற்றுப் புலம்புதலால் கந்தருவத்தின் வழுவிய பெருந் திணை யாயிற்று. தலைவன் வருவதற்கு அடையாளமாக முன்னாடி மாலையை வர விடுக்க வில்லையே யென்று வருந்திய தலைவியின் வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பது துறையின் கருத்து.
தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே –என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –
கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும் அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும் ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய் அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும் அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும் அன்பர்கள் பாராட்டி இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல் இதற்கு ஸ்வாப தேசம் –
———-
கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28-
ஆரணத்தின் படி-வேதத்தைப் போல, -நான்கு பகுதியாக,
எடுத்துக் கொண்ட – தமிழில் எடுத்துக் கொண்டு கூறிய,
மாறன் என்றால் – நம்மாழ்வார் என்று யார் சொன்னாலும்,
பதுமக் கரங்கள் – தாமரைப் பூப் போன்ற கைகளை,
முடி யெடுத்துக் கொண்ட – தலையில் அஞ்சலி செய்து கொண்ட,
அந்தணர் – எல்லா வுயிர்களிடத்தும் ௮ன்பு பொருந்திய மேலோர்களுடைய,
தாள் – பாதங்கள்,
என் முடி என – எனது தலையிற் சூடப் படுவன வென்று,
கொடி. எடுத்துக் கொண்டு நின்றேன் -விருதுக் கொடி பிடித்துக் கொண்டு நிற்கின்றேன் ; (அதலால்),
இனி -இனி மேல்,
கொடுங்கூற்றினுக்கு – கொடிய யமனுக்கு,
ஓர் அடி எடுத்துக் சொண்டு – ஒரு காலை எடுத்துக் கொண்டு,
என்பால் வரலாகும் கொல்-என்னிடத்தில் வருதல் கூடுமோ? |கூடாதென்பதாம்]
நம்மாழ்வாரென்று யார் கூறினும் ௮ன்பினால் அஞ்சலி செய்கின்ற கருணை யாளர்களுடைய திருவடிகளே என் முடியிற் சூடுவன வென்று விருதாக நான் கொண்டிருக்கின்றமையால் கூற்றுவன் அஞ்சாமல் என்னிடத்து அடி யெடுத்து வைக்கக் கூடுமோ ? கூடாதென்பதாம்-நான்கு பிரபந்தங்களைச் செய்தமையின் ஆரணத்தின் படி யென்றார். கரங்கள் முடி யெடுத்துக் கொண்ட வென்றது அன்பு மேலீட்டினால் என்க, ௮ந்தணர் -௮ழகிய தண்மை யுடையார் என்றதே பொருத்தமுடையது. ௮ந்தணர். வைஷ்ணவப் பிராமணரென்றால் குறைபாடு என்னை யெனின் அதில் தோன்றிய சிலர் பொருளாசை மேலீட்டினால் பிறர் நூல் உரை முதலியவரற்றை இகழ்ந்து கூறி நரகமே குடியாகக் கொள்ளுத லால் முற்கூறிய அழகிய தண்மை யுடையார் என்பதே உரை யென்க ,
———-
என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–
இராவணன் தன் – இராவணனுடைய,
பொன் முடியால் -பொன்னாகிய கிரீடமணிந்த தலைகளைக் கொண்டு,
கடல் தூர்த்த – சமுத்திரத்தைகத் தூரச் செய்த,
வில்லான் – கோதண்டமென்னும் வில்லை
யுடையவனுடைய,
அவன் – அந்த இராம பிரானுடைய,
இணை தாள் கீழ் -இரண்டு திழுவடிகளிலும்,
பொருநை துறைவன் – தாமிரபருணை யாற்றம் கரையி லவதரித்த நம்மாழ்வார்,
தன் முடியால் – தம் தலையால் வணங்கி ,
எ பொருளும் – எல்லாப் பொருள்களையும்,
தழீஇ – ஒரு சேரச் கொண்டு,
சொல் முடியால் – சிறந்த சொற்களாலமைந்த,
அமுதம் -அமிர்தம் போன்ற,
ஆயிரம் கவி- ஆயிரம் பாடல்களை,
சூட்டினன் -பாடிச் சேர்ப்பித்தனர்; (அவ் வாழ்வாரைத் துதிக்கின்ற), எனக்கு—-.
என் முடியாது – என்ன காரிய முடிய மாட்டாது?
யாதே அரியது – எது தான் அரியதாகும்? [எல்லாம் முடியும்-௮ரிதொன்றுமில்லை யென்பதாம்]
இராவணனைக் கொன்ற இராம பிரான் திருவடிகளில் நம்மாழ்வார் ஆயிரம் பாடல் பாடிச் சூட்டினார்;-அவரடியனாகிய எனக்கு முடியாத காரியம் தான் யாது? ௮ரியது தான் யாது? [ஒன்று மில்லை] என்பதாம், இராவணன் -இலங்கைக் கிறையவன் ; ஸ்ரீ கைலாஸ மலையைப் பெயர்த்து அதன் கீழ் ௮கப் பட்டுக் கொண்டு ஒயாமற் கதறினமையால் இப் பெயர் பெற்றனன் ; இராவணம் -அழுகை, ௮வன் தன் தலைகள் வெட்டுண்டால் மீள முளைக்கும் படி பிரமனிடத்தில் வரம் பெற்றான்-பின்பு இராம பிரான் போரில் ௮வன் தலைகளை வெட்டிக் கடலிற் குவித்தனன் ; வெட்ட வெட்ட முளைத்தமையால் மார்பிலோரம்பெய்து ௮வனைக் கொன்றனன். எப் பொருளும் – முதல் கடவுளாகிய மாயோன் நிலையும், அக் கடவுளை யடையும் நெறியும், அடைதற்குரிய உயிர்களினிலையும், அடைதலாற் பெறும் பேறும் பிறவுமாம், எனக்கு – இடை நிலைத் தீவகம். தழீஇ – சொல்லிசை யளபெடை, ௮முதக் கவி -உவமைத் தொகை,-
——–
சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–
சூட்டில் – செற் போரில்,
குருகு – நாரை முதலிய பறவை,
உறங்கும் – தூங்குகின்ற,
குருகூர் – திருக் குருகூரையும், தொழுதேன்-வணங்கினேன் ;
வழுதி நாட்டில் – பாண்டி நாட்டில்,
பிறந்தவர்க்கு-பிறந்தவராகிய இறைவனிடத்தில் ௮ன்புடையவருக்கு,
ஆளும் செய்தேன் – அடிமையுமாயினேன் ;
(ஆதலால்), மறை – வேதமான,
மெய் எனில், உண்மையா யிருக்குமானால், என்னை- -,
நல்வினை ஆம் நாட்டில் -நல்ல தவஞ் செய்தலால் மேன்மை யுற்ற நாட்டில், புகுதவிட்டு – ,
உய்யக் கொள் – பிழைக்கும்படி ௮ருள் செய்கின்ற ,
மாறன் – நம்மாழ்வாருடைய,
கழல் – பாதங்களை,
பற்றி போய் – புணையாகக் கொண்டு சென்று,
வீட்டில் புகுதற்கும்- மோட்சத்தை அடைதற்கும்,
குறை உண்டே – தடை யுண்டோ ? (இல்லை யென்றதாம்;)
யான் அழ்வார் அவதரித்த குருகூரை வணங்கினேன் ; பாண்டி நாட்டிலுள்ள கடவள் பாலன்புடையவர்களுக்கும் அடிமையாயினேன் ; வேதம் உண்மையா யிருக்குமானால் நல் தவத்தில் என்னை விட்டு ஆழ்வார் பாதங்களே புணை யாகக் கொண்டு மோட்சத்திற்குச் செல்லத் தடை யுண்டோ? என்பதாம். தாம் கவலை யற்று மோட்சதிற்குச் சென்று வசிக்கலா
மென்பதை உள்ளடக்கிப் போரில் நாரை கவலை யின்றி யுறங்கும் என்று உவமையால் விளக்கினார், இங்கனமே நாடுகளைச் சிறப்பித்தல் பண்டை வழக்கு; * பொய்கை சாரை போரிற் சேக்கும் ” என்றார் ஐங்குறு நூற்றிலும். குருகு உறங்கும் குருகூர் எனச் சொல் நயம் தோன்றக் கூறியது காண்க ,-வழுதி – கொடை யுடையானுக்கும் பெயராதலால் வீடு வேண்டின் மறாமல் கொடுப்பாரென்று கொண்டு அப் பெயராற் கூ.றினார். ஆளும், புகுதற்கும் – உம்மைகள் இறந்தது தழுவிய எச்சப் பொருளன, உண்டே-ஏ. எதிர்மறை,
—————
மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-
உறு வினையை – மிக்க தீவினைகளை,
கொய்யும் – வெட்டி யழிக்கின்ற,
மெய் – சத்தியமாகிய,
வாள் வலவன் – வாள் யுத்தத்தில் வல்லவரும்,
குருகைக்கு – குருகூர்க்கு,
அரசன் – இறைவரும்,
புலமை செய்யும் – தம்மை யடைந்தவர்களுக்கு உபதேசித்தருளுகின்ற,
ஐயன் தனக்கே – தலைவருமாகிய நம்மாழ்வாருக்கே ,
தனி-ஒப்பற்ற,
தாள்-திருவடிகளுக்கு,
அன்பு செய்த பின் – தான் பக்தி செய்யத் தொடங்கிய பிற்பாடு,
மெய்யும் – சத்துவப் பொருளெல்லாம்,
மெய் ஆயது – உண்மையாக விளங்கிற்று;
பொய்யும் – பொய்ப் பொருளும்,
பொய் ஆயது – பொய்ப் பொருளென்று தோன்ற விளங்கிற்று;
வேறு படுத்து – இங்கனம் வேறாகப் பகுத்துக் காட்டி,
உய்யும் – பிழைப்பதற்குரிய,
மெய் ஆய – உண்மையாகிய,
உபாயம் -தந்திரமும்,
வந்து உற்றது – வந்து பொருந்திற்று,
நான் நம்மாழ்வாருக்குத் தொண்டு செய்யத் தொடங்கிய பின்பு தான் தத்துவ ஞானம் உண்மையாக வெளிப்பட்டது ;அஞ்ஞானமும் நீங்கிற்று ; இங்கனம் பகுத்தறிந்து பிழைத்தற்குரிய தந்திரமும் வந்து பொருந்தித்றென்பதாம்-உண்மை நிலை தெரியாமல் அஞ்ஞானம் மூடப் பெற்றிருந்து பிறகு தெளிவடைந்ததனால் மெய்யும் மெய்யாயது என்றார். ௮து மெய்யாதலும் ௮தற்கு மறுதலையாகிய பொய்யும் பொய்யாகிய தென்பது தானே இயையினும் மகிழ்ச்சி மிகுதியால் அதனையும் உடன் கூறினர், பொய்ப் பொருள் – தார புத்திர தனாதி ஏஷணாத் திரயங்கள்-பிழைத்தல் -பரம பதத்தை நாடும் வழி
கொய்தற்கேற்ப வினையைப் பகை யென்னாமையால் இது ஏக தேச வுருவக வணி. எல்லாரிலும் மேலானவனாதலால் ஐயனென்றார்.
———-
செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–
திருமாலை – திரு மகள் கணவனாகிய மாயோனை,
செய்யன்(என) – சிவந்த நிறமுடையவனென்றும்,
கரியன் என – கரிய நிறமுடையவனென்றும்,
தெரிந்து உணர – ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கு,
வையம் – உலகத் துயிர்கள்,
கரி ௮ல்ல – பொருந்திய சாட்சியாக மாட்
டாவாம்;
மறை- வேதங்களும்,
மாட்டா – அறிய வல்லன அல்ல ;
(ஆதலால்), மதுரம்- இனிமை யாகிய, குருகூர் – திருக் குருகூரில் ௮வதரித்தருளிய,
ஐயன் – நம்மாழ்வாருடைய,
கவி அல்லலேல் – பாடல்கள் அல்லா விட்டால்,
பிறவிக் கடல் – பிறப்பாகிய சமுத்திரத்தில்,
ஆழ்வது அல்லால் -அமுங்குவது ௮ல்லாமல்,
இ உயிர்களுக்கு – இந்த உயிர்களுக்கு, உய்யும் வகை – ஈடேறும்வழி,
ஒன்றும் – ஒன்றினையும்,
யான் -நான்,
கண்டிலேன் -பார்த்தேனில்லை ;
மாயோன் சிவந்த வடிவனோ கறுத்த வடிவனோ வென்று அறிவதற்கு உலகத்தாராலுமில்லை ; வேதங்களாலுமில்லை; ஆதலால் உயிர்கள் நம்மாழ்வார் பாடலில்லாவிட்டால் பிறவிக் கடலில் அழுந்துவதே யல்லாமல் அவ் வுயிர்கள் ஈடேறும் வழியை யான் பார்த்தேனில்லை என்பதாம். செய்யன்,கரியன்– சிவப்போ கறுப்போ என்னும் உலக வழக்கை நோக்கிச் கூறியவாம். வையம்–இடவாகுபெயர், தமிழ்க் குருகூர் என்பார் – அதன் மறு பெயராகிய மதரமென்னும் மொழியாற் கூறினார். எல்லாருக்கும் மேலாவான் என்பது பற்றி ஐயன் என்றார். ஒரு நாளும் முடிவு பெறாமையும் கடத்த வருமையும் நோக்கிப் பிறவியைக் கடலென்றார்,
———–
உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–
உயிர்த் தாரையில் – உயிர் செல்லுன்ற வழியிலே,
புக்கு”-சென்று,
உறு – பொருந்துகின்ற,
ஒரு- ஒப்பில்லாத,
குறும்பு ஆம் மூன்றனையும் – காமம் வெகுளி மயக்கமாகிய முக் குற்றங்களையும்,
செயிர்த்தார் – கடிந்து விலக்கியவராகிய, குருகை வந்தார்-குரூகூரிலவதரித்த நம்மாழ்வாரது,
திருவாய் மொழி -திருவாய் மொழி யென்னும் பிரபந்தத்தினை,
செப்பல் உற்றால் – சொல்லத் தொடங்கினால்,
எங்கள் அந்தணர்க்கு-தத்துவ நூல் ஆராய்ச்சி யுடைய எங்கள் பெரியோர்களுக்கு,
மயிர்த் தாரைகள் பொடிக்கும் – சரீரத்திலுள்ள் மயிரொழுங்குகளெல்லாம் சிலிர்க்கும் ;
கண்கள்-கண்களில்,
நீர் மல்கும் – ஆனந்தக் கண்ணீர் பெருகும் ;
மா மறையுள்-சிறந்த வேதத்தின் பொருள்களுள்,
அயிர்த்தார்-சந்தேகித்த வர்களுக்கு அயிர்த்த பொருள் – சந்தேகித்த அர்த்தங்களெல்லாம்,
வெளியாம் – நன்றாக விளங்கும் ;
முக் குற்றமும் போக்கிய குருகூர் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியைச் சொல்லத் தொடங்கினால் அதனைக் கேட்கும் சத்துவ ஆராய்ச்சி யுடையவர்களுக்கு எல்லாம் மயிர் புளகிக்கும் ; கண்ணீர் வடி.யும்; ௮ன்றி வேதப் பொருளில் சந்தேக முற்றவர்களுக்கு அந்தச் சந்தேகமும் நிவர்த்தியாகும் என்பதாம். என்றும் நீங்கா இயல்பினவாதலால் உயிர்த் தாரையிற் பொருந்திய முக்குறும்பென்றார். அவை தம்மை யடையாதபடி இருந்தமையால் செயிர்த்தார் என்றார், மயிர் புளகித்தலும் கண்ணீர் விடுதலும் பக்தியினால் தோன்றிய புற மெய்ப்பாடு,-வேதாந்தத்தில் பொருந்தி யிருத்தலால் தத்வ ஆராய்ச்சி யுடையாரை அந்தணர் என்றார்,-உபநிடதப்பொருளை அறிந்து மகிழ்பவர் ௮ந்தணராதலால் ௮வ்வுபநிடதங்களிலும் இது சிறந்ததாகக் கண்டு மயிர் புளகிக்கும், கண்ணீர் மல்கும் என்றுரைப்பினும் அமையும்,
———-
அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–
சுடர் தோய் – சூரியனும் சக்திரனுமாகிய இரண்டு சுடர்களும் தவழப் பெற்ற, சந்தனம் சோலை – சந்தன மரச் சோலைகள் சூழ்ந்த,
குருகை – திருக் குருகூரில்,
பிரான் – நம்மாழ்வார்,
வந்து சந்தித்தது –
வந்து ௮வதரித்ததானது ,
அந்தணர்க்கோ – பிராமணர்களுக்காகவோ,
நல் அரும் தவர்க்கோ – நல்ல அரிய தவத்தைச் செய்கின்றவர்களுக்காகவோ, : அன்றி – அல்லாமல்,
யோகியராய் வந்தவர்க்கோ – யோகம்
செய்பவராகி அவதரித் தவர்களுக்காகவோ,
மறவாதியர்க்கோ – மாறு பட்ட சமயங்களிலிருந்து வாதஞ் செய்கிறவர்களுக்காகவோ,
மகாம் குழை சேர் – காதிலணிந்த மகர குண்டலம் தாழப் பெற்ற,
சந்தரம் தோளனுக்கோ – ௮ழகிய தோள்களை யுடைய இறைவனுக்காகவோ, அவன் தொண்டர்கட்கோ-அவனுடையஅடியார் கட்காகவோ; (அறியோம்);
குருகூரில் நம்மாழ்வார் அவதரித்து அருளியது அந்தணர் முதலானவர்களுக்காகவோ என்பதாம் -வேதக் கடலில் புகுந்து நெறி தெரியாது மயங்காமல் அந்நெறியைத் தெரிவித்தலின் அந்தணர்க்கோ என்றார் -முதல் கடவுளை அறியாது பிற தெய்வங்களை விரும்பித் தவத்தில் உழல்வாரைத் தெளிவித்தலால் அரும் தவர்க்கோ என்றார் -யோகத்தால் அரிதின் அறியும் உண்மைப் பொருளைத் திருவாய் மொழியைக் கொண்டு எளிதில் உணரச் செய்ததினால் யோகியராய் வந்தவர்க்கோ என்றார் -புற மதஸ்தரை அடக்குதால் மற வாதியர்கோ என்றார் -மகரக்குழை -முதலை வடிவாகச் செய்த காதணி -சந்தனச் சோலை மிகவும் குளிர்ச்சி யுடைமையால் ஆழ்வார் பாடலும் அத்தன்மையது என்பதைக் குறிப்பால் உணர்த்திமை காண்க-ஓகாரங்கள் ஐயப் பொருளன-
இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்-எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –
————-
சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–
சந்தியும் – பதப் புணர்ச்சி யிலக்கணமும்,
சந்தி – அப்படிப் புணர்கின்ற,
பதமும்- சொல்லிலக்கணமும்,
அவை தம்மிலே -அந்தச் சொற்களால்,.
தழைக்கும் – அடுக்கப்பட்டுப் பெருகுகின்ற,
பந்தியும் -வரிசையான செய்யுளிலக்கணமும்,
பல் அலங்காரம் பொருளும்- பல வகைப் பட்ட அணி யிலக்கணப் பகுதிகளும், பயிலுகிற்பீர் – ‘கற்றறிகின்ற புலவர்களே ! (இவற்றால்’ முத்தி மார்க்கத்தை யறிய மாட்டீர்);
தென்குருகூர்- அழகிய திருச்குருகூரை,
சிந்தியும் – நினையுங்கள் ;
தேவரை – ௮தில் அவதரித்த நம்மாழ்வாரை
தொழுது – கை குவித்து, .
ஆள் செய்யும் -அவருக்கு அடிமை செய்யுங்கள்
வந்தியும் – நமஸ்கரியுங்கள் –
வந்திப்பவரை-அப்படி வணங்குபவரை யாவது,
வணங்கும் -நீங்கள் வணங்குங்கள்)
வகை – முக்தி மார்க்கத்தை
அறிவீர் -அறிந்து கொள்வீர்கள்
பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே -அவ்விலக்கணங்களால் முக்தி மார்க்கம் அறிய மாட்டீர் -குருகூரை மனத்தினால் நினையுங்கோள் -நம்மாழ்வாரை அஞ்சலி செய்து அவருக்கு அடிமை செய்யுங்கோள் -வணங்குங்கோள் -வணங்குவோரை வணங்குங்கோள்-நீங்கள் முக்தி மார்க்கத்தை அறிவீர்கள் என்பதாம் -அலங்காரப் பொருளும் என்றதுக்கு உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணமும் உண்டு என்றும் உரைப்பினும் அமையும் -பூ சுரராலும் வணங்கப் பெறுவதால் தேவர் என்றால் -அவர் அவதரித்த ஊராதலால் அழகிய குருகூர் என்றார் -நெடும்தூரத்தில் இருப்பவர் வருவதற்கு இசையாமலும் இருக்கக்கூடும் என்பதால் அங்கிருந்தே நினையுங்கோள் என்றார் -அவ்வூர் ஏனைய முக்தி நகரங்கள் போல் அல்லாமல் இருப்பதால் சிந்திக்கவே முக்தி தரும் என்பது துணிவு -ஆட் செய்யக் கிட்டாவிடினும் அடியாரைத் தரிசித்த இடத்தே அவற்றைத் வணங்குங்கோள் என்றார் -மற்ற நான்கைக் கூறிவிட்டதனால் உப லக்ஷணத்தால் பொருளையும் கூட்டி பஞ்ச லக்ஷணம் என்றுமாம் -வந்தியும் முதலிய உம்மைத் தொகை புதியன புகுதலால் ஏவலுக்கு வந்தமை அறிக-
———-
தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–
பொருள்–அகப் புறப் பொருள்.
திணை-கந்தருவத்தின் வழவிய பெருந் திணை,
கிளவி–அறத்தொடு நிற்றல்,
துறை -பாங்கி செவிலியர்க்கு அறத்தோடு நிற்றல்
நீங்கள்-தேவரை – தெய்வத்தை,
ஏறிய- ஆவேசமாகப் பெற்ற
மூது அறிவாட்டியை – முதிர்ந்த அறிவை யுடையளான கட்டுவிக்கியை
சீர் அழித்தீர் – நிலை குலையச் செய்தீர்கள்
பூ வரை – மலர்கள் மட்டும்,
ஏறிய – சூட்டப் பெற்ற,
கோதை -கூந்தலை யுடைய தலைவியது ,
உள்ளம் – மனத்தில்,
புகுந்தார் – புகுந்து வருத்துகின்றவர்,
எவர் என்று – எவர் தாமென்று,
ஏ- பெருமை மிக்க ,
வரை ஏறி-நம் குறிச்சியில் வந்து,
மொழிகின்ற போது – சொல்லுகின்ற காலத்தில்,
இறைவர் – தலைவராகிய,
மூவரையோ – திரி மூர்த்திகளையோ ?
குரு கூரரையோ – அன்றிக் குருகூர் நம்மாழ்வாரையோ?
கூறிற்று -சொல்லியது
முந்து உற- முன்னதாக,
சொல்லும் – சொல்லுங்கள் ;
நீங்கள் கட்டு விச்சியாகிய மூதறிவாட்டியின் பெருமையைக் கெடுத்து விட்டீர்கள்; நம் தலைவியின் மனத்திற் புகுந்தார் யாரெண்று வினாவுகின்ற பொழுது மூவர் புகுந்தாரென்றோ அல்லது குருகூர் ஆழ்வார் புகுந்தா ரென்றோ ௮வள் கூறியது. அதனைச் சொல்லுவீ ரென்பதாமாம், கட்டு- ஒருவிதக் குறி : ; முறத்தில் நெல் மூதலியவற்றை வைத்து
அக் கடவுளைப் பரவி அந்த நெல்லில் ஒரு பிடியள வெடுத்துத் தனியே வைத்து இந் நெல் ஒற்றைப் பட்டால் தெய்வத் தானாயிற்றென்றும் இரட்டைப் பட்டால் பிற நோய் முதலிய வென்றும் கூறுவதோர் குறி யென்று சில நூல்களால் தெரிகின்றது.-இக் குறி, கட்டு வைத்தல், கழங்கு பார்த்தல், கன்னமெடுத்தல் எனப் பலவகைப் படும். கட்டு வைத்து
உரைப்பவள் கட்டுவிச்சி -, அறிவுடைய மூதிர்ந்தவளாதலால் மூதறிவாட்டி யென்றாள். இவளுக்கு நோய் வந்த மூலமறிந்து கூறாமல் மாறாகக் கொண்டு குறி பார்க்கத் தொடங்கியதனால் அவளைச் சீர் அழித்தீர் என்றாள்-தெய்வத்தால் தீண்டப் பெற்றிலளென்பது தோன்றப் பூவரை யேறிய கோதை யென்றாள். தெய்வம் தீண்டப் பெற்றால் பூவைச் ரூடு மறிவு பெறாளென்று இங்கனம் கூறினளாம். தலைவன் பிரிந்ததனால் வருந்திய மனத்தினளாய் ௮ணி முதலிய அணிபப் பெறாமல் பூ மட்டுஞ்சூடிய கோதை யெனினுமாம். திரிமூர்த்திகளிலும் மேலாக ஆழ்வாரை இவள் மனங்கொண்டிருப்பதனால் மூவரில் யாரேனும் இவள் உள்ளம் புகுந்தாருண்டோ என்று நகை யாடிக் கூறினாள். நம்மாழ்வாரையே இவள் கருதி இருக்கிறாள் என்பதைக் கொள்ஞங்களென்பாள் அவரை ஈற்றில் கூறி முடித்தாள். தலைவனது இயர்பெயர் கூறுதல் அகப் பொருள் கந்தருவ வழக்க மில்லாமையால் பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே ? என்ற சிறப்புடைய பெருந் திணை யன்றிக் கந்தருவத்தின் வழுவிய பெருந் திணை யாயிற்று- அறத்தொடு நிற்றல் – தலைவி தரும வழி தவறவில்லை யென்றதை நிலை நிறுத்துதல், தலைவியின் அபிப்பிராயத்தை யறிந்த தோழி தாய்மார்க் கறிவித்தல் துறையின் கருத்து. முதுமை யென்னும் பண்புப் பெயர் ஈறு போய் ஆதி நீண்டது. ஆட்டி – பெண் பாற் பெயர், “அன்ன பிறவு மவற்றொடு சிவணி, மன்னிய வினைய நிமித்த மென்ப” (தொல் -பொரு – 287) என்ற சூத்திர வுரையில் கைக் கிளைக்கும் பெருந் திணைக்கும் மெய்ப்பாடு வரை யறை யின்றி வேண்டியவாறு வரப் பெறுமென்றதனால் இதற்கு ஒன்றனை நிலையிட்டு உரைக்க வில்லை. பயனுமப்படியே கொள்க.
தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்
————
துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–
துறவாதவர்க்கும் -இல்லறத்தி லிருப்பவர்க்கும்,
துறந்தவர்க்கும் – துறவறத்தி லிருப்பவர்க்கும்,
சொல்லவே – சொல்லும் பொழுதிலேயே, சுரக்கும் – கருணை யாகிய பாலைச் சுரக்கின்ற,
அறம் – தரும வடிவமாகிய,
ஓ ஆயிரம் ஆ அவை – ஒரு ஆயிரம் பசுக்கள்,
இங்கு நிற்க – இவ் விடத்திருக்கையில்,
அந்தோ – ஐயோ !
சிலர் போய் – சிலர் சென்று,
மறம் வாதியர் – மாறுபட்ட வாதங்களைச சொல்லுகின்ற புறச் சமயிசள்,
சொன்ன – சொல்லிய,
ஆசு – குற்றத்தை,
அகம் ஆம் -தன்னிடத்தில் கொண்ட நூல்களாகிய
மலடு ஆவைப்பற்றி – மலட்டுப் பசுக்களைப் பிடித்துக் சொண்டு,
கறவா – கறந்து,
கிடப்பர் – உழலுவார் ;
அங்கு – அந்தப் பசுவினிடத்தில் ,
தங்கள் கை வலிப்பே – அவர்கள் கை
வருந்துவதானது ,
என் பெறவோ -வேறு யாது பயனைப் பெறுவதற்காகவோ?
யாவர்க்கும் சொல்லின அளவிலே பயனைத் தருகின்ற காமதேனுவை யொத்த திருவாய்மொழி ஆயிரம் பாடல்களுமிருக்க அவற்றை விட்டுப் புறச் சமயிகள் சொன்ன மலட்டுப் பசக்கள் போன்ற ‘நூல்களில் சென்று பயன் கருதி வருந்துவார் அதனால் தங்கள் கை வருந்துவது வேறு யாது பயனைக் கருதியோ !? ஒன்றுமில்லை யென்பதாம். துறவாதவர்க்கு இருமைப் பயனையும், துறந்தவர்க்கு மறுமைப் பயனையும் தன்னை நினைத்தவுடனே கொடுத்தலாலும் மற்றும் வேண்டியவர்க்கு வேண்டிய படியே காம தேனுவைப் போலக் கொடுத்தலாலும் திருவாய்மொழியைக் காமதேனுவாக உருவகப் படுத்திக் கூறினார். புறச் சமையத்தார் நூல்கள் மலட்டுப் பசுவைப் போலப் பயன் கொடாதொழிவதன்றித் தம்மைப் படித்தவர்க்கு நரகத்கையும் கொடுப்பதால் குற்றம் பொருந்திய மலட்டுப் பசு வென்றார்-மற வாதியரென்ற பன்மைப் பெயராற் கூறினமையால் ஆசுகளை அகத்திற் கொண்ட பல நூல்களே யென்பது வெள்ளிடை மலை போல
விளங்கிக் கிடக்க இதனை நன்கு ஓராமல் எல்லாச் சமயத்தாராலும் புகழும்
-மாணிக்க வாசகர் திருவாசக மென்று ஒன்றனைச் சட்டிக் கூறி எரி வாய் நரகிற்கு
ஆளாகின்றாரும் சிலர் உளர். ஆ அவை, ௮வை- பகுதிப் பொருள் விகுதி. ௮ந்தோ – இரக்கக் குறிப்பிடைச் சொல் ; : தனித் தமிழ் மொழி- அந்தீற்றோவும்”என்றதனா லறிக , ஆசகம்- அன்மொழித் தொகை ,-இப் பாடல் உருவகவணி..
குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –
————
கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–
பொருள் –புறப் பொருள்.
திணை – பெருந் திணை
கிளவி : இரு பாலில் பெண்பாமல் கூற்று,
துறை–தலைவி மடலூரத் தோழி சாற்றுதல் .
குருகூர் என்னும் ஆறு ௮றியா – குருகூரென்றும் சொல்லு வதற்கும் தெரியாத,
பைதலை-எந் தலை மகளை,
கோகு – தன் தோள்களை ,
தட்டிட்டு-தட்டிக் கொண்டு,
ஏட்டில்- பனை மடலாலகிய குதிரையில்,
ஏற்றிய-ஏறும்படி செய்த,
பண்பனை-இயல்புடைய தலைவனை, (குறித்து ),
கை – கைகளை,
தலை பெய்து – தலைக்கு மேல் தூக்கி , அரும் பூசல் இட்டு-பேரிரைச்சலிட்டு,
கவியால் – செய்யுட்களால்,
உலகை – உலகத்திலுள்ள் உயிர்களை,
உய்தலைச் செய்ததும் – ஈடேறும்படி. செய்ததும் ,
பொய் என்றுமோ – பொய்யென்று சொல்லுவோமோ ?
சென்று-அந்தக் குருகூர் புகுந்து,
அவ் வூர் அறிய – அவ்வூரார் அறியும் படி,–
வைது அலைத்து– துன்பப் படுத்தி,
ஏசுதுமோ – இகழ்வோமோ ?[யாது செய்வோம்?.]
குருகூர் என்றும் சொல்லவும் கற்றறியா எமது தலை மகளை இப்படி மடலூரும்படி செய்த நம்மாழ்வாரைச் சென்று பெரும் பூசலிட்டு நுமது பாடலாலுகத்தை வாழ்வித்தது பொய்யென்போமா ? அவ்வூரார் அறியும்படி வைது அலையச் செய்து ஏசுமோமா?யாது செய்வோமென்பதாம்-தலைவி பால் அண்பு மிகுதியால் பெண் பாலை ஆண் பாலாகப் பைதல் என்றாள் – ஆண் மகனில் சிறுவனுக்கும் துன்பத்திற்கும் பெயர்,
‘பைத்தலை யாவெனக் கனன்று பைதலை, யித்தனை போது கொண்டிருப்ப தோவெனா ” இங்கு ஹனுமானைப் பைதலென்றதும் , “பைதல வாகிப் பசக்குவ மன்னோ… கண்! இங்குத் துன்பத்துக்கும் ஆயிபனமையுமறிக -ஆண்பாற் குழந்தைகளைப் பிள்ளை யென்பதால் -கிளிப்பிள்ளை யென்னும் வழக்குப் பற்றிக் கிளிப் பைதல் என்றார் -ஆழ்வாரும், கோகு தட்டுதல் – தோள் தட்டுதல்; கோகு கட்டிட்டு என்று பாடமோதி கோகு உகட்டிட்டு என்று பதம் பிரித்தார் பூர்வாச்சார்யர்- எனின் அதுவும் ஏட்டுப் பிரதியில் தட்டென்பது கட்டென்று ப்றழ இருந்திருக்கக் கண்டு அங்கனமே வைத்து உரை யெழுதி யிருக்கலாமன் றி உகட்டென்று வேறு ஓரு நூலிலும் காணப் படாப் பதம் இவர்களுக்குத் தோன்றிப் பொருள் பட்டமை யிறும்பூதென்க.-பனை மடற் குதிரை- பனங்கருக்குக்களை வெட்டி. ஒரு குதிரை போலக் கட்டி அதன் மேல் ஏறி நின்று இளையாரைக் கொண்டு. அப்பெண்ணிருக்கும் தெருவழியே மூன்று நாள் வரையில் இழுக்கச் செய்து அந் நாட்களுக்குள் ௮ப் பெண்ணைக் கொடா விட்டால் நாலா நாள் மலை மேலேறி விழுந்திருப்பது – ஆண்பால் மடற் கூற்று, பெண் பால் மடலேறுவதற்கு விதியில்லாமையால் பொருந்தாதாயினும் பிற் காலத்தார் இங்கனம் எழுதுதலால் இது புறத் திணையில் அடக்கலாயிற்று,
கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே-கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து – அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே – ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்
———–
பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–
மகிழ் மாறன் – மகிழ மாலை யணிந்த நம்மாழ்வார் பாடி யருளிய,
செய்யுள் – பாடல்களை,
௭ண்ணும்-தியானிக்கின்ற,
தகைமைக்கு-தகுதிக்கு ,
உரிய – ஏற்ற,
மெய் – உண்மையான,
யோகியர் – யோக சாதனை யுள்ளவர்களுடைய,
ஞானம் என்னும் கண்ணும்- அறிவாகிய மனக் கண்ணும்,
மனமும் – உள்ளமும்,
செவியும்- காதுகளும்,
தவஞ்செய்த-தவஞ்செய்தன :
காலத்திலே, பண்ணும்–குறிஞ்சிப் பண் முதலிய இராகங்களும் –
தமிழும் -தமிழ் மொழியும், தவம் செய்தன
பழ நால் மறையும் -பழைமையான நான்கு வேதங்களும்
மண்ணும் -பூ வுலகும்
விசும்பும் – விண்ணுலகும், தவம் செய்தன-
நம்மாழ்வார் பாடி யருளிய பாடல்களைத் தியானித்தற்குரிய யோகியர்களுடைய ஞானக் கண்ணும் மனமும் செவியும் தவஞ்செய்தன -காலத்திலே பண்களும் தமிழ் மொழியும் மறையும் மண்ணும் விண்ணும் தவம் செய்தன வென் தாம்.-எனவே யோகியர் இவர் பாடல்களையே கருதுவார்கள் எனவும் இப் பாடல்களுக்கு பண்கள் இன்றியமையாதான எனவும்,-தமிழுக்கு இந்நூல் ஒரு ஏற்றமுடையது எனவும், நான்கு மறையுமென்றதனால் நான்கு வேதங்களின் சாரமே யிவர் நூல்கள் எனவும் , மண்ணும் விசும்புமென்றதனால் இருமைப் பயனும் இந்நூல் அளிக்கும் எனவும் கூறினாராயிற்று, பண் – முற் கூறப் பட்டது, மண், விசும்பு-இட வாகு பெயர்கள்,
————-
காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–
கடை நாள் – உலகமொடுங்கும் ஊழிக் காலத்தில்,
ஆலத்திலே – ஆலிலையிலே,
துயின்றோர் – பள்ளி கொண்டருளிய வாசு தேவர்,
கொண்ட. – தாம் எடுத்துக் கொண்ட, ஐயிரண்டாய் அமைந்த -பத்தாக எண்ணப்பட்ட,
கோலத்திலே – வழிவங்களிலே,
முளைத்து – தோன்றி,
கொமுந்து ஓடி – மேலோங்கி வளர்ந்து குணம் கடந்த – மிக்குணங்களுக்கும் அப்பாற் பட்டு நின்ற,
மூலத்திலே செல்ல – காரணப் பொருளிடத்திலே செல்லும்படி ,,
மூட்டிய ஞானத்து – மெய்ஞானத்தை எமக்குத் தந்தருளிய,
எம் மூர்த்தியை – நம்மாழ்வாரை,
குருகூர்- அவர் அவதரித்த திருக் குருகூரில்,
காலத்திலே புக்கு – உரிய காலத்திலே புகுந்து,
கைக்கொள்மின் – தரிசித்து நற் பயனைக் கைப் பற்றுங்கள் ;
ஆலிலையில் பள்ளி கொண்ட மாயோனது தசாவதாரங்களில் யீடுபட்டுக் காரணப் பொருளாகிய அவ் வாஸூ தேவனிடத்துச் செல்லும் படியான மெய்ஞ் ஞானத்தை நமக்குத் தந்தருளிய நம்மாழ்வாரை உரிய காலத்திலே சென்று வணங்கிப் பிழையுங்கள் என்பதாம், எல்லாம் அழிந்து முடிவிலும் நிலை பெற்று விளங்குவதால் கடை நாள் ஆலத்திலே துயின்றோர் என்றார் -பத்து அவதாரங்களும் கர்மவசம் அல்லாமல் தன்னிச்சையால் எடுத்தமையால் கொண்ட என்றார் -தனக்கு என ஓருபொருளைவிரும்பிலராதலால் கொண்மினோ என்றார். உலகெலாமொடுங்கும் கற்ப காலத்தில் அவற்றை அழியாதபடி மாயோனானவன் தனது திருவயிற்றில் அடக்கி ஆதி சேடன் வடிவான ஆலிலையில் யோக நித்திரை செய்தருளுவன் என்பராதலால் கடைநாள் ஆலத்திலே துயின்றோர் என்றார். ஆலத்தில், அத்து – சாரியை,
————-
மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–
முழு ஏழ் உலகை – ஏழுலகம் முழுவதினையும்,
முழுகுகின்ற – படிகின்ற,
தீர்த்தத்தினை – பரிசுத்தரன கடவுள்நிலையையும்,
செய்ய – செவ்விய,
வேதத்தினை – வேதங்களையும்,
திருமால் பெருமை – சிறந்த மாயோன் பெருமையை,
பார்த்தற்கு – அருச்சுனனுக்கு,
அருளிய – சொல்லி யருளிய,
பாரதத்தை – கீதை யடங்கிய மகா பாரதத்தையும்,
பணித்தானும் – வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்,
நின்ற- நிலை பெற்ற,
வார்த்தை – திருவாய் மொழியை யுடைய, குருகைப் பிரானும் – குருகூர் நம்மாழ்வாரும், ஆகிய அவ் விருவருமே,
௮ம் மறைப்பொருள்-, அந்தப் மறைவா யுள்ள உண்மைப் பொருளை,
கண்டார் – அறிந்தவராவார்கள்,
உயிர் நிலை, உலக நிலை, கடவுள் நிலை, என்னும் மூவகை நிலைமைகளையும் நான்கு வேதங்களையும் ஐந்தாம் வேதமாகிய மகா பாரதத்தையும் வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும் நிலை பெற்ற திருவாய்மொழியைப் பாடி யருளிய நம்மாழ்வாரும் ஆகிய இவ் விருவருமே அந்த மறைவாயுள்ள உண்மைப் பொருளை யறிந்தவராவார்கள் என்பதாம். மூவகை நிலையை வேதாந்த ஸூத்திரத்தால் வெளியிட்டமை வெளிப்படை-வேதாந்த ஸூத்திரங்கள் அடங்கிய உதர மீமாம்சையும் வேதமும் பாரதமும் கூறும் பொருள் எல்லாமே இந்தத் திருவாய்மொழி கூறுமெனவும் அந்த வியாஸ முனி போல இந்த ஆழ்வார் மகோபசாரியா யுலகத்துக்கு நன்மை செய்தவரெனவுங் கொள்ளக் கிடந்தமை காண்க,
———
பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–
பொருள் –அகப் பொருள்.
திணை – பாலை.
கிளவி.-பொருள் வயிற் பிறிவு.
துறை–நெஞ்சோடு மறுத்தல்
(நெஞ்சமே!) குருகூர் புனிதன் -திருக் குருகூரிலவதரித்த பரிசுத்தரான நம்மாழ்வாருடைய,
அருளை – கருணையை,
சுமந்தவள் -அடைந்தவளாகிய தலைவியின்,
கண்ணின் கடை திறந்து – கடைக் கண்ணைத் திறந்து கொண்டு,
ஆறு பட்டு – ஒரு ஆறாகி ,
வெளி பரந்து – வெளியிற் பரவி,
குருளை சுமந்து – காட்டில் விலங்கின் குட்டிகளை அடித்துக் கொண்டு,
ஒட்டரும் – ஓடி வருகின்ற,
கொள்ளை வெள்ளம் – மிகுதியான கண்ணீர் வெள்ளமானது ,
உருளை – சக்கரங்களை யுடைய,
மணி சுடர் – இரத்தினங்கள் பிரகாசிக்சின்ற,
தேரை – என்னுடைய தேரை ,
வந்து உதைக்கின்றதே -வந்து தடுக்கின்றதே;
அந்தோ. ஐயோ!
பொருளை… சுவை என்று -சிறப்புடையதென்று கொண்டு,
எங்கே போவது – எப்படி நான் போகலாகும்?
நெஞ்சமே நம்மாழ்வார் அருள் பெற்ற நம் தலைவியின் கடைக் கண்ணில் நின்று வடிகின்ற கண்ணீர் வெள்ளமானது நாம் போகும் வழியில் குறுக்கே வந்து தடுக்கின்றதே! ஐயோ ! நாம் எப்படிப் பொருள் சம்பாதிக்கப் போவது என்பதாம்.-குருகூர்ப் புனிதன் அருளைச் சுமந்தவள் கண்ணீர் வெள்ளமானதால் அதற்குத் தப்பி எப்படிப் போவதென்று நெஞ்சத்தோடு கூறிச் செல வழுங்கினான்- பிரிவாதலால் பாலை யாயிற்று, தாயத்தால் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார்? என்பது விதியாதலால் தானே பொருள் சம்பாதித்து அதனால் அறம் செய்ய வேண்டி வேற்று நாடுகளை வென்று அவ் வரசரால் இடுகிற கப்பங்களைப் பெற்று வருதற்குப் போனமையால் பொருள் வயிர் பிரிவென்று பெயராயிற்று, மெய்ப்பாடு–அசைவு பற்றிய பெருமிதம், பயன் நெஞ்சொடு கூறி யாற்றுதல், ஓட்டரும் – ஓட்டம் தருமென்பதன் விகாரம்.
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் – ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது
ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –
————
வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–
பொருள் -அகப் பொருள்
திணை குறிஞ்சி.
கிளவி-இருவரும் உளம் அழிய அவன் வரவு உணர்தல்
துறை -ஆடிடம் புகுதல்
மாறன் – நம்மாழ்வார் அவதரித்த,
குருகை -திருக்குருகூரில்,
வஞ்சி – இம்மாதின், கொங்கைகள்-.—-.,
வந்து – தோன்றி,
அடி கொண்டன – மார்பில் அடி பரந்து பெருத்தன ;
செம்தடித்து அன்ன – செவ்விய மின்னல் போன்ற,
மருங்கிற்கு- இடைக்கு,
நிற்கும் – நிலை நிற்கக் கூடிய,
சிக்கனவு உண்டோ – அக் கொங்கைகளைத் தாங்கும்
வவிமை யுண்டோ ? (இல்லை) ;
என்றால் – கொங்கைப் பெருமனும் இடையின் துவட்சியும் இப்படி யென்றால்,
கொந்து – பூங்கொத்துக்கள்,
அடிக் கொண்ட – சூடப் பெற்ற,
குழலும் – தலை மயிரும்,
கலையும்- இடையிற் கட்டிய சேலையும்,
குலைந்து – நிலை குலைந்து,
அலைய -சோர,
பந்து அடிக்கும் தொறும் – இவள் பந்தடிக்கும் போதெல்லாம்,
நெஞ்சம் – என் மனமானது,
பறை அடிக்கின்றது – துடிக்கின்றது
ஆழ்வார். குருகூரில் இம் மாதின் கொங்கைகள் பருக்கின்றன ;இடைக்கு அவற்றைத் தாங்கும் வலிமை யுண்டோ -(இல்லை 😉 இந் நிலைமையில் இவள் குழல் குலைந்து கலைய அலையப் பந்தடிக்கும் போதெல்லாம் என்மனந் துடிக்கின்றதே யென்பதாம்.–இதில் கூறிய படியே : அடிக் கொண் டகுலவுக் கொங்கை’* என்றார் இராமாயணத்திலும். மார்பிடமெலாம் கவர்ந்து வட்டமிட்டு அடி யிட்டு நாளுக்கு நாள் மேல் வளர்தலால் அடிக் கொண்டன வென்றான், வஞ்சி – ஒரு கொடி ; கொடி போன்ற இடை யுடையாளாதலால் அப் பாரத்தை இடை தாங்காதென்னுங் குறிப்பால் வஞ்சி யென்றான். பின்னும் ஆடுதல் நோக்கி ஆற்றாமையால் உண்டோ சிக்கன வென்று வெளிப்படக் கூறினான். பந்தாடுமிடத்திற் புகுந்த தலை மகன் தலைவி பந்தடிப்பதை நோக்கிக் கூறினதாகத் துறை கூறினமையில் இது கிளவியில் அடங்க வில்லை யெனினும் ஒன்றனுள் அடக்க வேண்டி யிருத்தலால் இருவருமுளவழி யவன் வர வுணர்தலின் பாற் படுத்தலாம், மெய்ப்பாடு- உவகை, பயன்-தலைமகளைச் சார்தல்.
இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்
இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்
கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–
கனவு ஆயினவும்- சொற்பன அவஸ்த்தையின் பகுதிகளையும்,
துரியமும் ஆயயையும் – துரியாவஸ்தை முதலியவைகளையும்,
கடந்து -தாண்டி,
மனம் வாசகங்களை -மநோ வாக்குகளையும்,
வீசிய- கடந்த,
மாறனை – மாறனென்னும் பெயருடையவரும்,
மா மறையை- சிறந்த வேதங்களை, வினவாது உணர்ந்த- பிறர் பால் ஒதாமல் உணர்ந்த,
விரகனை -௮றிவுடையோரும்,
வெவ்வினையை – கொடிய தீச் செயல்களெல்லாம்,
தொலைத்த – போக்கிய,
சினம்- கோபத்தை யுடைய,
வாரணத்தை -யானை போன்றவரும், குருகைக்கு அரசனை – திருக் குருகூர்க்குத்
தலைவருமாகிய நம்மாழ்வாரை,
சேர்ந்தனம் – யாம் சரணமாக அடைந்தோம்;
கனவு துரியம் முதலிய ஐந்து ௮வஸ்தைகளையும் தாண்டி எம் மனோ வாக்குக்கு எட்டாத மாறனென்பவரும் ௮ரசனுமாகய நம்மாழ்வாரை நாம் சரணமாக வடைந்தோம் என்பதாம்-ஆயினவும் என்பதனால் கனவின் முன்னுள்ள ஜாக்கிரத அவஸ்தையும் பின்னுள்ள சுழுத்திய அவஸ்தையும் கொள்ளப் படும், ஆயவையும் என்பதனால் துரியாதீத அவஸ்தையும் கொள்க. அதன் உட் பகுதி பலவாதலால் ஆயவை என்று பன்மையாற் கூறினார் ; எனவே ௮வத்தை ஐந்து என்றவாறாம்! அவையாவன:– ஜாக்கிரதம் , சொற்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன-இவற்றின் பொருள் முறையே விழித்திருத்தல், கனா நிலை , அயர்ந்து தூங்குதல் -உயிர் ஒடுங்கி சமாதி யிருத்தல் கடவுளொடு கலத்தல், என்பனவாம். மனத்தால் எண்ணுதற்கும் வாயினால் சொல்லுதவற்கும் எட்டாத நிலைமை யாராதலால் மன வாசகங்களை வீசிய மாறனென்றார்,-“மயர்வற மதி நலம்’ அருளப் பெற்றவராதலால் வினவாது உணர்ந்த விரகனென்றார். சடமென்னும் வாயுவைக் கோபித்தவராதலால் வினை தொலைத்த சின வாராணமென்றார். இது ஒரு பொருள் மேல் பல பெயர் வந்து சோரந்தனமென்ற ஒரு வினையைக் கொண்டது-. யாம்-தோன்றா எழுவாய்,
———-
சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–
அவ் வரியினுக்கு – அந்த மாயோனுக்கு,
வேதம்- வேதங்களால்,
செப்பும்- சொல்லப்படுகிற,
பேர் ஆயிரம் – திருப் பெயர்கள் ஆயிரங்களாம்;
திண் – வலிய,
பெரும் புயம் – பெரிய தோள்களும், ஆயிரம்-ஆயிரங்களாம்;
துளவம் பெய்- திருத் துழாய வைத்துத் தொடுத்த,
தார்- மாலை,
ஆர் – பொருந்திய,
முடி – திரு முடிகள்,
ஆயிரம் – ஆயிரங்களாம்; (அப்படி யெல்லாம் ஆயிரமாயமைந்தன போல,) குருகூர் – திருக் குருகூரிலவதரித்த ,
சடகோபன் – நம்மாழ்வார்,
சொன்ன – சொல்லியருளிய,
ஆரா – தெவிட்டாத,
அமுதம் கவி- அமிர்தம் போன்ற பாடல்கள், ஆயிரம் – ஆயிரங்களாம் : (ஆதலால்;) பெருஞ் செல்வர்க்கு – பெரிய அனுபோகப் பொருளுடையார்க்கு,
சேராதன உளவோ – அடையப் பெறாதேவைகளும் உண்டோ? -எல்லாம் அடையும் -என்றவாறு –
மாயோனுக்குத் திருப் பெயர்கள் ஆயிரம் ; தோள்களுமாயிரம் ;முடிகளும் ஆயிரம் ; அப்படிப் போல நம்மாழ்வார் பாடல்களுமாயிரம் ;ஆதலால் பெருஞ் செல்வரை யடையப் பெறாதவை யுமுண்டோ ?? எல்லாம் அடையுமென்பதாம், உலக குருவாகிய ஸ்ரீ சங்கராசாரியருரை
செய்தருளிய ஏற்ற முடைமையால் ஸகஸ்ரநாமமென்னு நூலைக் கூற வந்தவர் அதன் தயிழ் மொழியாகிய பேராயிரமென்றார், புயமாயிரம், முடியாயிரம்- இவற்றிலுள்ள ஆயிரங்கள் மிகுதிப் பொருளன-திண் பெரும் புயம்- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர். இதன் முதலடி. வேற்றுப் பொருள் வைப்பணி –
———–
அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–
பொருள் – அகப்! புறப் பொருள். ்
திணை-நெய்தல்.
கிளவி -தூதில் பிரிவு.
துறை—காமக் கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழிலி பாங்கி தளர்தல் .
முரி – வளைந்த,
வளை- சங்கு பெற்ற, –முத்தும்,
சினையும் – அன்னப் பறவை ஈன்ற முட்டையும்,
மயங்க – வேறுபாடு தோன்றாமல் கலந்திருக்க (அவற்றை யீன்ற),
வரி வளையும் – கோடுகளுடைய சங்கும்,
அன்னமும்: அன்னப் பறயையும்,
முறை செறுத்து – முறையே கோபிக்க,
தம்மிலே – தங்களுக்குள்ளே,
வழக்கு ஆட – விவகாரம் பேச, (அப்பொழுது), வலம்புரி வளை – வலம் புரிச் சங்கானது ,
ஊடு – அவ்விரண்டின் நடுவிலே சென்று,
அறுக்கும்- அந்த வழக்கைத் தீர்த்து விடுகிற,
குருகூர் – திருக் குருகூரிலவதரித்த,
எம் பூர்வலன் -எம் இறைவன்,
அரி- வண்டுகள்,
வளை- வளைந்து மொய்க்கப் பெற்ற,
பொன் -பொன் போன்ற,
மகிழ் – தமது மகிழம்பூ மாலையை,
அந்தி வந்து – மாலைக் காலத்தில் வந்து, ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த தணிர் ஆபரண்களை யுடைய தலைவிக்கு,
ஈயும் கொல் – கொடுத்தருளுவானோ ?
குருகூரிலிருக்கும் எம் தலைவன் ௮ந்திச் காலத்தில் வந்து எம் தலைவிக்குத் தன் மகிழ மாலை அளிப்பானோ என்பதாம்.-முத்தும் சினையும் வேற்றுமை தெரியாமல் ஒரு தன்மையா யிருக்கக் கண்டு மாறுபாடாய் ஒன்றனை ஒன்று எனது எனது என்று முத்தைப் பெற்ற சங்கும் சினையைப் பெற்ற அன்னமும் வாது கூறலும் இடையிலே வலம்புரி சென்று
விலக்கி விடும் நாடெனவே இரண்டு அரசர் தம்முள் மாறுபட்டுப் போர் தொடங்க எத்தனித்த பொழுது இடையில் இத் தலைவன் இருவரையும் சமாதானப் படுத்த வேண்டித் தூதிற்குக் சென்றானென்பதை உள்ளுறை யுவமையாற் கூறியது காண்க, ”ஓதலுர் தூதும் உயர்ந்தோர் மேன *என்றமையால் அரசர்க்குத் தூது போகலுரித் தென்க.–தூதில் பிரிவு கற்பிற் குரியதனால் தலைவி மாலை வேண்டாளென்பது தெளிவாகும்; ஆகவே இங்குக் காமக் கிழத்தியே மாலை வேண்டற் குரியவளாவாள்,கிளவித் தலைவன் மாலையைச் சுட்டிக் கூறினமையாலிது அகப் புறமாயிற்று,-இரங்குதலால் திணை – நெய்தலாயிற்று, காமக் கிழத்தியாவாள் – சேரிப் பரத்தையின் மசளாகித் தலைவனைத் தானும் மணந்துகொண்டு வேறு ஓருவரையும் விரும்பா நிலையி லிருப்பவளென்க
கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே-அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்-அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்-ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி-அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –
———–
புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–
பொருள் -அகப் பொருள்
திணை – நெய்தல்.
கிளவி -ஒரு வழித் தணத்தல்
துறை –சென்றொன் நீடலில் , காம மிக்க கழிபடர் கிளவி ,
எம்- எம்முடைய,
உறு- மிக்க ,
துரை பிறவி- விரைந்து பற்றுகிற பிறவிகளை,
துடைத்து – போக்கி ,
ஆட் கொண்ட – என்னை அடிமையாகக் கொண்ட,
தொண்டர் பிரான் – அன்பர்களின் தலைவரான நம்மாழ்வார்க் குரிய,
துறை நீர் பொருநை -துறைகள் பொருந்திய நீரையுடைய தாமிரபருணி யாற்றின்,
கரை துடைக்கும் – கரையை மோதுகின்ற,
கடலே- சமுத்திரமே!
புரைதுடைத்து – எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப்போக்கி ,
பெரும் பொய்யும் துடைத்து – தாம் சொல்லும் வார்த்தைகளில் பொய்யில்லாத படி போக்கி,
பிறர் புகலும்- அயலார் கூறுகின்ற,
உரை துடைத்து – பழிச் சொல்லுகளுக்கும் இடங்கொடாமல் போக்கி ,
௮ங்கு- புன்னை மரச் சோலையாகிய அவ் விடத்தில்,
உள்ள -யாம் கட்டியுள்ள,
ஊசல் – அறுந்து போனகொடி ஊஞ்சலை,
துடைத்த -மீட்டும் கட்டி. அதிலுள்ள வருத்தத்தைப் போக்கின,
அன்பர் – எம் தலைவருடைய.
கால் சுவடு – சேர்க்கால் சென்ற வழியை, துடையேல் – அழித்து விடாதே கொள்;
கடலே! எம் தலைவர் வந்து சென்ற தேர்க் காலின் சுவட்டைத் துடைக்காதே என்பதாம்–கைக்கிளையில் தலைவனை நோக்கியவுடன் தனக்குண்டாகிய காமத் துன்பத்தைத் தரிக்கினமையால் புரை துடைத்தென்றாள்-கடல் தெய்வச்தைக் காட்டி உன்னைப் பிரியேன் என்று சத்தியஞ் செய்ததினால் தான் வேறு கருதாதபடி மெய்யென்பாள் பொய்யுந் துடைத்தென்றாள்-பிரிந்தால் தலைவிக்கு வேறு பாடுண்டாகுமே- அதனைப் பிறர் கண்டால் பழிப்புக்கு இடமாகுமே யென்று பிரியாதிருந்தமை தோன்றப் பிறர் புகலமுரை துடைத்தென்றாள். ஊசல் -அடும்பு முதலிய கொடிகளை ஒன்றாகத் திரித்து மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டு அதிலே ஊஞ்சலாடுதல் இக் காலத்திலுமுளது – இரங்கலால் நெய்தற்றிணை யாயிற்று,-தலைவியைப் புணர்ந்த பின் தலைவன் யாதேனும் ஒரு காரியத்தின் மேற் பிரிகின்றது ஒரு வழித் தணத்தலாம்-அங்கனம் பிரிந்த தலைவன் குறித்த நாளில் வாராமல் தாமதித்ததனால் தலைவி கடலை நோக்கிப் புலம்புவது துறையின் கருத்து – இது போல நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண்டேர்,ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம் ‘என்றார் பிறரும்-கை கோள் – களவு,-கூற்று- தலைவி கூற்று, காலம் -எதிர் காலம், மெய்ப்பாடு- அழுகை. பயன் – -கடலொடு புலம்பி யாற்றுதல்.
ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி-
———-
சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–
பொருள் — அகப் பொருள்
திணை – நெய்தல்
கிளவி -ஒரு சார் பகற் பகுதி
துறை–பாங்கிபுலம்பல்
நங்காய்- பெண்ணே !
படர் – துன்பத்தைச் செய்கின்ற
௮ந்தி – மாலை வேளையாகிய இப்பொழுது,
வானம் – ஆகாயமெங்கும்,
இருள்கின்றதே – இருள் மூடுகின்றதே ; இரண்டு கவடு இற – தலையில்
கவையாயுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும் ஒடியும் படியாக,
கட்டிய -கட்டி யிருக்ற,
பாசத்தளை – அன்பாகிப சங்கிலிகளை, கண்பரிந்து-அறுத்தெறிந்து,
தொடர் – தன்னைத் தொடர்ந்த,
ஆசை களிற்றை-ஆசையாகிய யானையை, சுவடு இறக்க – ௮டிச் சுவடு தெரியாமல் ஓடிப் போம்படி,
தொடர்ந்து – பின் தொடர்ந்து வெருட்டி, சங்கம் – தமிழ்ச் சங்கமாகிய
குவடு இற – மலையானது சிதறும்படி,
குத்திய – குத்திப் பெயர்த்த,
மாறப் பெயர் -மாறனென்னும் பெயருடைய,
கொலை யானை -கொலை செய்ய வல்ல யானையானது, (இன்று),
இவள் திறத்து- இவள் நிமித்தமாக, ஒன்றும்- வருமோ?
நங்கையே ! அந்தி வானமிருண்டு விட்டதே ; சுற்றத்தாரிடத் தெழுகின்ற ௮ன்பாகிய சங்கிலியை அறுத்தெறிந்து தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை அடி தெரியாமலோடிப் போம்படி வெருட்டி சங்கமாகிய மலையைக் குத்திப் பெயர்த்த மாறனாகிய கொலை யானை இவள் நிமித்தமாக இன்று வருமோ? என்பதாம். பேருணவைக் கொள்கின்ற யானை போல பெரும் பொருளைப் பற்ற விரும்புவதனால் ஆசையை யானையாக உருவகப் படுத்கினார், இரண்டு கவடு இற -உட் பகை புறப் பகை யாகிய இரண்டு வஞ்சனையும் அழிபட எனவுமாம், சுற்றத்தை நீங்காமல் பிணித் தலால் அன்பைத் தளை யென்றார். சினந்து மலையை முட்டிப் பெயர்த்தல் யானைக்கியல் பாதலால் ஆழ்வார் பாடல் – சிறு சங்கத்தவரை வென்றமை தோன்ற அதனை மலையாகக் கூறினார். அன்னியமான பொய்ச் சமயங்களை அழித்தலினால் ஆழ்வாரைக் கொலை யானையாகக் கூறினார் -எனவே இத் துறை முழுதும் உருவகமாகச் கூறினமையால் முற்றுருவகமாயிற்று,-இரங்கலால் திணை நெய்தலாயிற்று,இருவரையும் மணஞ்செய்விக்க எண்ணிய தோழி அவ் விருவரையும் குறியிடத்துச் சேர்ப்பியாமல் தந்திரஞ் செய்தலால் தலைவன் புலந்து அப்பால் போதலும் மற்றையோர் கூற்று நிகழ்தலின் ஒரு சார் பகற் குறியாயிற்று.
ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்-சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்
————-
இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–
இரவி அது தான் – குரியனானது.
பொருள் ஆய் பரந்த -காணும் பொருளாகி,
பொது நிற்றலின் – பொதுவாய் நிற்றலினால்,
இருள் ஆய் பரந்த – இருள் மிகுத்துப் பரவிய,
உலகங்களை – உலகங்களை யெல்லாம்,
விளக்கும் – அவ விருளைப் போக்கி விளங்கச் செய்யும் ;
அது போல் – ௮தனைப் போல,
மருளாய் – மனமயங்கும்படி,
பரந்த – பரவிய,
மயக்கம்- மாயையினது ,
துயக்கு அற்ற – துன்பம் நீங்கப் பெற்ற
கோன் மாறன் – எங்கள் தலைவரும் மாறனென்னும் பெயருடைய வருமாகிய நம்மாழ்வாருடைய,
அருளால் – கருணையினால்,
சமயம் எல்லாம்- எல்லாச் சமயமும்,
பரன் உண்டு என்று – தங்களுக்கு நாராயணனே முதற் கடவுளாக உளனென்று,
அறிவு உற்றது – அறிந்து கொண்டது.
சூரியன் தான் பொதுவாய் நின்று உலகத்தின் இருளைப் போக்கிப் பொருள்களை அறிவிக்கும்; அதே போல நம்மாழ்வார் கருணை யானது எல்லாச் சமயத்தவர் களிடத்திலுமுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ப் பொருளைத் தெரிவித்தலால் எல்லாரும் நாராயணனே முதல் கடவுளாக உளன் என்றும் அறிந்து கொள்ளலாயிற் றென்பதாம். எல்விதத்தாலும் நீங்குதில௫மை நோக்கி மருளாய்ப் பரந்த மயக்கென்றார். பிறந்த பொழுதே பற்றின்றி நின்றமையால் துயக்கற்ற மாறனென்றார். விளக்கும்-மிகவும்- விரித்தல் விகாரம். அது – பகுதிப் பொருள் விகுதி, தான்-சாரியை, மற்று -அசை நிலை. எல்லாம்- தொகுதி யொருமை யாதலின் ஒருமை முடிபு கொண்டது,–வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
———-
அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–
மற்றை- வேத சம்பந்த மில்லாத,
ஆகம வாதியரை – ஆகம நூல்களைக் கொண்டு வாதம் புரிவோரை,
செறிவேன் என – யான் அடைவேனென்று, ஒன்று – இவ்விஷயத்தினை
சிந்தை செய்யாது – கருதாமல்,
செய்தாரை இல்லா-ஒருவராலும் செய்யப்படாத,
நெறி .-நல்ல வழி கூறுகின்ற,
வேதம் – வேதத்தில்,
நின்ற- பொருந்தியுள்ள,
நிலை – தத்துவ நிலைகளை,
உணர்ந்தோன் – ௮றிந்தவரான நம்மாழ்வார் அவதரித்த,
குரு கூர் நிலத்தை – திருக்குருகூரென்னும் திவ்விய தேசத்தை,
பிறிவேன் எனவும் – நான் பிரிந்து போவேனென்றும்,
எண்ணாது-நினையாமல்,
என்னை— ௮ வீடு பெறுத்தினை -மோக்ஷத்தைப் பெறச் செய்தனை யாதலால்,
௮றிவே- எனது அறிவே !
உனை – உன்னை,
தொழுதேன் – வணங்குகின்றேன் ;
ஆகம வாதியரை நான் சேர்வேனென்று நினையாமலும் ஆழ்வார் குருகூரைப் பிரிவேனென்று எண்ணாமலும் எனக்கு மோஷம் அடையச் செய்தனை யாதலால் ௮றிவே ! உனைத் தொழுதே னென்பதாம், மற்றை யாகம மென்றதனால் அங்கம் , பூர்வம், பகுசுருதி’ என்கின்ற சைனாகம் முதலியவற்றை என்க . வேதம் அனாதி யாதவால் செய்தாரையில்லா மறை யென்றார், நின்ற நிலை- நாராயணனுக்கே பரத்வம் கூறிய நிலை. பிறிவேன், பிறி- பகுதி,
நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல் இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்
———
பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–
குறும்பு ஆக்கிய -பெரியோரால் இவை குற்றமென்று நீக்கப் பட்ட,
முப்பகை தவிர்த்து – காமம் வெகுளி மயக்கம்’ என்னும் மூன்று உட் பகைகளைப் போக்கி,
ஆண்ட – அடிமை கொண்ட
குருகை மன் -திருக் குருகூர்த் தலைவராகிய நம்மாழ்வார்,
பிறர் பால் – அன்னியரிடத்தில்,
வெறும் பா கிளத்தி- பயனற்ற பாடல்கள் பாடி,
மெலிகின்ற என்னை – தளர்கின்றேனும்,
வினை – வினையானது.
கொடு போய் – கொண்டு சென்று,
எறும்பு ஆக்கிய -எறும்பளவாகச் சிறுமைப் படுத்திய,
தமியேனை – தனிமையேனுமாகிய என்னை,
அமரர்க்கும் – தேவர்களுக்கும்,
ஏற விட்டான் -மேலாகச் செய்தருளிவிட்டார் ; (ஆதாலால்), பெறும் பாக்கியம் உள்ள போதும் -ஒருவர் பெறக்கூடிய செல்லமுள்ள காலத்தில்,
பிழைப்பும் – அதற்கு ஒரு கெடுதியும், உண்டே-உண்டாமோ? [இல்லை.].
குருகூர் நம்மாழ்வார் மெலிகின்றேனும் தமியேனுமாகிய என்னை அமரரிலு மேலாகச் செய்து விட்டாராதலால் ஒருவர் பெறக் கூடிய செல்வமுள்ள காலத்தில் அதற்கொரு கெடுதியமுண்டாமோ?இல்லை யென்பதாம். பிறரைப் பாடி இம்மைப் பயன் சிறிது பெற்றாலும் மறுமைக்குப் பயன் படாமையால் வெறும் பா என்றார். எறும்பு – சிறுமைப் பொருள் உணர்த்தற்குக் கூறினார். தீ வினையில் தனக்கு ஒத்தவரில்லை யென்பார்.
தமியேனென்றார். அமரர் – அமிருத முண்டு சரவாமலிருக்கப் பெற்றதனால் அமரெனப் பட்டார். காமம் -வேறொரு பொருளின் மேல் செல்லும் பற்றுள்ளம், வெகுளி-கோபம், மயக்கம்- ஒன்றனை வேறொன்றாகக் க௫துதல்.-ஆளுகைக் குரியோர் அரசர் என்பது தோன்ற ஆண்ட மன்னென்றார். போது -பொழுது என்பதன் மரூ௨. உண்டே, ஏ- எதிர்மறைப் பொருள் பட நின்றது -கொடு -கொண்டென்பதன் தொகுத்தல் விகாரம்-அமரர்க்கும் – ஜந்தனுருபு மயக்கம்; எல்லைப் பொருளது, மன் -எழுவாய்,”விட்டான் – பயனிலை, இதன் முதலடி. வேற்றுப் பொருள் வைப்பணி,
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
——–
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–
எம்மை- எங்களை,
உள்ளும் சுற்றும் – உள்ளேயும் சுற்றிக் கொண்டிருக்கிற,
கூர் – மிக்க.
இருவினையும் – நல்வினை தீவினையாகிய விரண்டும்,
௮றுத்து- போக்கி ,
இற பார்க்கும்- அவைகளழியும் படியாகப்.
பார்கின்ற,
இயற்கை- இயற்கையானது
குருகூர் நகர்- -திருக் குருகூரென்னும் பதியில்,
எம் பிரான் – எழுந்தருளி யிருக்கிற தலைவரான ‘ நம்மாழ்வார்க்கு,
அடியாரொடு- தொண்டருடன்,
கூடி – சேர்ந்து
இன்புற்று -மகிழ்ந்து
ஒரு கூரையில் — ஒரே விட்டினுள், உறைவார்க்கும் – வசிக்கின் எங்களுக்கும்,
உண்டு- உண்டாகும்) (அப்படீப்பட்ட இயற்கையானது ),
அவ் வூர் அருகூர்- இந்த அடியாரிருக்கிற ஊருக்கு அருகிலுள்ள ஊரிலிருப்பார்கும்,
அருகுஇல் – அவர் விட்டின் சமீபத்திலுள்ள,
அயல் அயலார்க்கும் – – அயல் விட்டுக்கயல் வீட்டிலுள்ளவர்க்கும்,
அரியத்ன்று -அரியதொரு காரியமில்லை ;
எம்மைச் சூழ்ந்துள்ள இரு வினைப் பற்றை யொழிக்கு மியல்பானது நம்மாழ்வாரின் அடியவரோடு வாழ்கின்ற வெமக்குண்டு ;அவ் வியல்பானது அவ் வூருக்கு அயலூர் அவ் வீட்டுக்கு அயல் வீடு இவற்றிலிருப்பவர்களுக்கும் அரியதொரு காரியமில்லை என்பதாம். உண்டே, ஏ-தேற்றம். உள்ளும், உம்- இறந்த தழுவிய வெச்சம், இறப்பு ஆர்க்கும் என்று பிரித்து
இரத்தலைச் செய்யும் என்றும் பொருள் கொள்ளலாம், அவ் வூர் – அடியாரிருக்கும் ஊரென்பதே பொருந்திய வுரை,
அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்-
——————–
அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–
பொருள்–அகப் புறப் பொருள்.
திணை–பெருந்திணை ,
துறை–மாலையால் வந்த வருத்த முரைத்தல்.
அன்றாத- பகைமை கொள்ளாத, அன்றிலையும் – அன்றிப் பறவைகளையும்,
அன்றுவித்து – பகைமை யாக்கி,
என்னை–அன்னையுடன் – தாயோடு, பின்றாத வண்ணம் எல்லாம் -மாறுபடாத வகை யெல்லாம்,
பின்றுவித்து – மாறுபடச் செய்து, பிறைக்கொழுந்தை -இளமையாகிய சந்திரனை,
ஒன்றாத வண்ணம் – என் மனத்தோடு பொருந்தாதபடி,
உபாயம் இயற்றியது – தந்திரஞ்செய்தது , (யாதோம வெனில்?)
ஊழ் வினையை-பழ வினைத் தொடர்சியை,
வென்றான்- நீக்கினவராகிய,
குருகைப் பிரான் -திருக் குருகூர் நம்மாழ்வாருடைய,
மகிழே௮ன்றி-மகிழ மலர் மாலையே அல்லாமல்,
வேறில்லை – வேறு ஓன்று மிப்படிச் செய்ய
வில்லை ;
தலைவனைப் பிரிந்த தலைவிக்கு அன்றில் கத்தற வோசை செவியிற் பட்டால் விரகத்தை யதிகப்படுத்து மென்பது பற்றி அன்றிலை விரோதப் படுத்தி என்றார். தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது உள்ளம் தலைவனிடத்தே செல்லுமாதலால் அப்பொழுது அருகிலிருந்த தாய் கேட்பதற்குத் தக்க விடை கொடாமை பற்றி அன்னையுடன் விரோதப் படுத்தி என்றார். பிரிந்தார்க்கு நிலவு வருத்தத்தைச் செய்யுமாதலால் அதனையும் விரோதித்து என்றார். ௮ன்றுதல் – விரோதித்தல்; ௮ன்றுவித்து , வி -பிற வினை விகுதி, வென்றான் – வினைப் பெயர், மகிழே, ஏ-தேற்றம்,-அன்றி. எதிர்மறை வினை யெசசம். வேறு இல்லை – குறிப்பு முற்றுக்கள்.
ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –
———
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–
செந் தமிழ்ப் புலவர்க்கு எறே – செவ்விய தமிழ் பயின்ற வித்துவான்களுள் சிங்கம் போன்றவரே –
யெதிகளுக்கு-முற்றத் துறந்த முனிவர்களுக்கெல்லாம்,
இன் – இனிமையாகிய,
அமுதே – அமிர்தம் போன்றவரே ! எறிநீர்-௮லை வீசுகின்ற நீர்ப் பெருக்கை யுடைய,
பொருநை யாறே-தாமிர பருணி நதியானது ,
தொடர் – தொடர்ந்து வரப் பெற்ற,
குருகூர் -திருக் குருகூரிலுள்ள,
மறையோர் – அந்தணர்கள்,
பெற்ற- ௮டையப் பெற்ற,
ஆணிப் பொன்னே -மாற்றறியும் பொன் போன்றவரே !
‘இவன்-இந்தக் கம்பன்,
நமக்கு வேறே -நமக்கு ௮ன்னியனானவனே,
அன்புடை- அன்பு பொருந்திய,
மெய்யடியானென்று -உண்மையான அடியவனென்று
உள்ளம் தேறேன் -நான் மனத்தில் தெளிய மாட்டேன்.’
எனல் – என்று தள்ளாதொழிக;
௮து தேறத் தகும்- ௮து நம்ப வேண்டிய காரியமாகும்
ஏறே! ௮முதே ! குருகூர்ப் பொன்னே ! இவன் வேறானவனென்றும் இவனைத் தெளிய மாட்டேனென்றும் சொல்லா தருள்செய்க, அது நம்ப வேண்டிய காரியமாகுமென்பதாம். எல்லாரிலும் சிறந்தமை பற்றி ஏறென்றார்; அழியா வாழ்க்கை கொடுத்தல் பற்றி அமுதென்றார் ; பிறர் கவியின் ஏற்றத் தாழ்வுகளை அறிதற்க்குத் தக்க பாடல்கள் செய்தமையால் வேறு பொன்னை யறியு மாற்றுப் பொன் என்றார். இம் மூன்றும் உவமை யாகு பெயர், எனல் – எதிர் மறை அல்லீற்று வியங்கோல் – தகும் – இது தொழிற் பெயராய்த் தேற்றப் பொருள் பட்டு நிற்கும் சொல்-
——
பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–
பெரும் – பெரிய,
தண் – நீர் வளமிக்க ,
குருகூர் – திருக் குருகூரி லவதரித் தருளிய,
தென் – சென் திசைக் கண்ண தாகிய,
ஐ- அழகிய,
உரைக்கும் – தமிழ் மொழிக்கும்,
இயற்கும் – ௮தன் பகுதியாகிய இலக்கணத்திற்கும்,
இசைக்கும் – இசைத் தமிழ்க்கும்,
சிகா மணியே -சிரோ ரத்தினம் போன்றவரே!
பொன்னை –உரைப்பது -உரைத்து மாற்றுப் பார்ப்பது,
௮ – அந்த, பொன்னொடு அன்றே – பொன்
னுடனே யல்லவோ ? (பார்ப்பது ),
புலமைக்கு – கல்வி யறிவிற்கு,
உயர்-உயர்ரந்த,
நாற் காவியும்-ஆசு மதுர சித்திர வித்தாரக கவிஞர்களையும்,
பின்னை-கடைசித்தரத்தில்,
உரைக்கப் பெறுவது அல்லால் – சொல்லத் தக்கதே யல்லாமல்,
உன்னை உரைத்து – முதலில் உம்மைக் கூறி,
உரைத்தற்கு-உமக்கு ஒப்பாக உரைப்பதற்கு,
ஒருவர் – வேறொருவர்,
உளரோ -இருக்கிறார்களோ ?
குருகூர்ச் சிகா மணியே 1! பொன்னை மாற்றுப் பார்ப்பதென்றால் பொன்னோ டன்றோ வுரைத்துப் பார்ப்பது; அதுபோல உம்முடைய பெருமையை அறிவதென்றால் உம்மோடொத்த ஒருவரைக் காட்டி யன்றோ அறிய வேண்டும் அப்படி யார் இருக்கிறார்கள் ? ஒருவருமில்லையே யென்பதாம். நாற்கவி -திரு மங்கை யாழ்வாருமாம், புலமை- பல வேறு வகைப்பட்ட நாலுணர்ச்சி களெல்லாம் ஒருங்கே கொண்ட பேரறி வுடமை, ஏனைய மொழிகளைப் போலாகாமல் சிறந்த பொருளிலக்கணத்தைத் தன்னிடதில் கொண்டிருத்தலால் ஐயுரை யென்றார், ஆழ்வார் பிரபந்தத்தில் இலக்கண அமைதி மிக்கிருத்தலாலும் அப் பிரபந்தம் பண்ணோடு’ பாட அமைந்திருத்தலாலும் அவ் விடயங்களைச் கொண்டு இயற்கும் இசைக்கும் சிகாமணி யென்றார்,-இதன் முதலடி. எடுத்துக் காட்டு வமையணி,
தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்-குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி-
———
மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–
மறம் – பல்வரிக் கூத்தில் ஒன்று ; ௮து தான் மறவரின் மகளை விரும்பி விட்ட ௮ரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவரியல்பு தோன்றக் கூறுவன, வரிக் கூத்து – நாடகத் தமிழ் நூல்களிற் காண்க,-பல் வரிக் கூத்திற் சில வுறுப்புச்கள் கலம்பக முதலியவற்றிற் காணலாம்.
சுருதிப் பொருளை – வேத ப்பொருள்களை,
தமிழால் – தமிழ்ப் பாடல்களால்,
பணித்தான் – பாடி யருளினவரும்,
எம் – எம்முடைய,
வினையை – தீய வினைகளை, :
துணித்தான் – போக்கின வருமாகிய,
குருகைப் பிரான் – குருகூர் நம்மாழ்வாரின்,
பணி அன்றெனில் – கட்டளை யில்லை யென்றால், (எம் பெண்ணை விரும்பிய), மணித்தார் – இரத்தின மாலைகளணிந்த, ௮ரசன் தன்-௮ந்த அரசனது,
ஒலையை- திருமுகத்தை,
தூதுவன் – அதனைக் கொணர்ந்த தூதுவனது ,
வாய் வழியே திணித்து -வாயில் வைத்து நன்றாக அடைத்து ,
ஆசு – ‘பெண்ணைக் சொடு’ என்ற
குற்றமெல்லாம்,
அழிய – நீங்கும்படி,
தலையை – அத் தூதுவன் தலையை,
சிதைமின் – வெட்டி யெறியுங்கள் ;
எம் பாவையை – எமது பாவை போல்வாளாகிய பெண்ணை,
கொள்ளும் கொள்ளும்- நன்றாகச் கொள்வானே போலும்
வாயைத் திறந்திருந்தால் – பேரிரைச்சலிடு வானாதலின் முதலில் வாயை அடையுங்களென்றதாம். ஆழ்வாருக்கு அடிமை யென்றறிந் திருந்தும் பெண் கேட்க வந்தது குற்றமாதலின் ஆசென்றதாம்; ** மாதரைக் கொன்றுளார் களுளரென வரினும் வந்த, தூதரைசக் கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோய்” என்றபடி தூதரைக் கொல்லலாகாதே யெனின் அது அறப் போர்க்கே யன்றி மறப் போர்க்கில்லாமையால் வதைக்க அமையுமென்க . கொள்ளும் கொள்ளும் – வெகுளி பற்றி வந்த அடுக்கு, பாலை -உவமை யாகு பெயர் : இது கொல்லி மலையில் தேவரும் முனிவருஞ்சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்திய ௮சுரரை மயக்க வேண்டித் தேவ தச்சனால் யந்திரத்தோடு செய்து வைத்திருந்ததொரு பெண் வடிவம் ; இது அவ் வசுரரைக் கண்டால் சிரித்து மயக்கிக் கொல்லுவது –
————
பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–
திருவாய்மொழி பழத்தை -திருவாய்மொழி யென்னுஞ் சுவை யுள்ள கனி போன்றதும், பசுங்கற்பகத்தின் – பசுமையாகிய கற்பக மரத்தினது,
பூவை – மலர் போன்றதும்,
பொருகடல் – மோதுன்ற கடலில் நின்றும்,
போதா – வாராத,
அமுதை – அமுதம் போன்றதும்,
பாவை-பாடலாகியுமுள்ள,
பொருள் – நால் வகைப்பொருளையும்,
சுரக்கும் – ஊற்று மாறாதே பெய்வதாகிய,
கோவை பணித்த – காம தேனுவை யொத்த,
எம் கோவை – எங்களிறைவராகிய நம்மாழ்வாரை,
அல்லா -விரும்பாத,
என்னை–குற்றம் சுண்டு -முன்னமே பாடாத குற்றத்தை யறிந்து,
மற்றை நா வலர் –இனி வேறுள்ள புலவர்கள்,
என் -எனது,
நாவை– நாக்கினை, –
பறிப்பினும் – பிடங்கினாலும்,
நல்லர் அன்றோ – நல்லவரல்லரோ ? [நல்லவரே.]
திருவாய் மொழி பாடி யருளிய நம்மாழ்வாரை விரும்பாத என்னை ௮வரை முன்னமே படாதிருந்த குற்றத்திற்காக மற்றை நாவலர் எனது நாக்கைப் பிடுங்கி விட்டாலும் அது நல்லதே யாகுமென்பதாம், எங்கும் பரவி நிற்பதென்னும் பொருளும் தோன்றப் பா வென்றார், சுவை யறிவார்க்குச் சுவை மிக்கிருத்தலினால் பழமென்றார். கேட்கக் குளிர்ந்திருத்தலின் கற்பக மலரைக் கூறினார். கடலில் தோன்றிய அமுதம் எடுக்கக் குறைந்தும் உண்டதானால் எச்சிற் பட்டுமிருத்தலால் போதாரவமுதென்றார். நால் வகைப் பொருள் அறம், பொருள், இன்பம், வீடு-நாவினால் வருணித்துச் சொல்லுஞ் சொல்லில் வல்லவராதலின் நாவலர் எனப்பட்டார், நல்லதன்றோ எனற பாடங்கொள்ளுதல் நேர். அன்றோ , ஓ – எதிர் மறை; இரண்டெதிர் மறை ஒரு உடன் பாட்டை யுணர்த்தியது,-இது ஒரு பொருள் மேல் பல பெயர் ஓடுக்கி வந்து முடிக்குஞ்சொல் ஓன்றனைக் கொண்டது.-
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது – நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –
——-
நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–
நாவல் ௮ம் தீவில் – அழகிய ஜம்புத்தீவில்,
கவிகள் எல்லாம் – பிறர் பாடிய பாடல்களெல்லாம்,
சில நாள் கழிய – சில நாட்கள் சென்ற பின், பூ- மலர்,
வலம் – மணம் முதலிய வன்மைகள்,
தீவது போல்வ அல்லால் – கெட்டழித்தல் போல்வன வாகிக் கெடுமே யல்லாமல்,
குருகூர் – திருக் குருகூரில் அவதரித்த,
புலவன் – புலவரும்,
தீங்கு -உயிர்களின் குற்றங்களை,
கேவலம் – முழுவதும்,
அறுப்பான் – ஒழிப்பவருமாகிய நம்மாழ்வாருடைய,
கவி போல் – திருவாய்மொழிப் பாடல்களைப் போல,
எங்கும் போய் – எவ்விடத்தும் பரவி, கெழுமா – விளங்காதன வாகும்;
கூவல் – கிணற்றிலுள்ள,
அம்தீம்புனலும் – அழகிய இனிய நீரானதும்,
வெள்ளம் – பெரு வெள்ளத்தை ,
கோள் இழைத்துக் கொள்ளுமே – தாழ்மைப் படுத்தி மேற் கொள்ளுமோ ? [கொள்ளாது.]
உலகத்தில் பிறர் பாடல்கள் சிலகாலத்தில் கெட்டழிந்து போகுமே யல்லாமல் நம்மாழ்வார் பாடல்கள் போல எங்கும் போய்ப் பரவாவாம் ;கிணற்று நீர் பெரு வெள்ளத்தைகத் தாழ்மைப் படுத்த இயையுமோ -இயைதாதென்பதாம், பூ.-மலர்ந்த வுடன் மணம் வீசிப் பின் பூ இல்லாமற் போவது போலப் பிறர் கவிகள் பாடும் பொழுது வெகு சிறப்புப் போலத் தோன்றி பின்பு பயன்படாதெனக் கொள்க,. நாவலம், அம் -சாரியையுமாம், தீவது -தொழிற் பெயர், அறுப்பான் -வினைப் பெயர்,கெழுமா. – எதிர் மறைப் பலவின் பால் முற்று, கொள்ளுமே, ஏ – எதிர் மறைப் பொருளில் வந்தது , இதன் கடை யடி எடுத்துக் காட்டு உவமை யணி
கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி
————
இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–
இழைத்தார் – செய்தவர்,
ஒருவரும் இல்லா-வேறு யாரு மில்லாத,
மறைகளை -வேதத்தின் பொருள்களை,
இன் தமிழால் – இனிய தமிழ் மொழியினாலே,
குழைத்தார் – செய்தருளியவரும்,
குமரித் துறைவர் – கன்னியா குமரி யென்னும் தீர்த்தத்தை யுடையவருமாகிய,
குருகையில் – குருகூரில்,
கூட்டம் கொண்டார் – அடியார் கூட்டத்தோடு எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்,
வானின் – பரம பதத்தினது .
வரம்பிடை நின்று – எல்லையினுள்ளிருந்து, மழைத்து – மேகத்தினது தன்மை,
ஆர- நிரம்பிய,
தடம்-பெரிய, கைகளால்—-,
என்னை அழைத்தார்-என்னை வா வென்றழைத்தார் ; (அங்கனம் அழைத்தன்றி),
அறிவும் தந்தார் – அங்கே செல்வதற்கு வேண்டிய அறிலையும் கொடுத்தார் ; (ஆதலால் யான்),
அங்கும் போய் – அவ்விடத்துஞ் சென்று,
அவர்க்கு – அந்த ஆழ்வாருக்கு,
ஆட் செய்வன்-அடிமைத் தொழில் செய்வேன் ;
வேதப் பொருளைத் தமிழில் விரித்துரைத்த குமரித் துறைவராகிய குருகூர் நம்மாழ்வார் பரமபதத்தில் இருந்து தடக் கைகளால் என்னை வா வென்று அழைத்தாராதலால் நான் அங்கும் போய் அவர்க்கு அடிமை செய்வேனென்பதாம்.-இழைத்தாரொருவரு மில்லா மறை யெனவே வேதம் கடவளாலமைக்கப் பெற்ற தென்பதாம். அளவிலாத இலக்கண
இன்பமுடைமையின் இன் தமிழென்றார். கைமாறு கருதா அருள் செய்யுங் கைகளாதலால் மேகத்தின் தன்மை வென்றார், அங்கும், உம்.இங்குத் துதித்த தன்றியும் என இறந்தது தழுவிய வெச்சப் பொருளது,
——–
ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–
தண் – குளிர்ந்த,
குருகூர் – திருக் குருகூரில் எழுந் தருளி யிருக்கிற,
செய்ய – சிவந்த
நாள் பூ-௮ன்று பூத்த மகிழ மலர்களாலாகிய,
தொடை – மாலைகளை யுடைய,
மாறன் என்பேன் – நம்மாழ்வாரென்று கூறினேன் ;
ஆள் – அவர்க்கு ௮டிமையாக,
செய்யல் ஆவது எல்லாம் – என்னாற் செய்யக் கடவதெல்லாம் செய்து.
அடி அடைந்தேன் – அவர் திருவடிகளை யடைந்தேன் ;
அது அன்றி- அதுவல்லாமல்,
செய்ய தாமரை தாள் – செந்தாமரை போன்ற அவர் திருவடிகளை,
என்தலை ஏற்றனன் – என் தலையில் சூடிக் கொண்டேன் ;
இனி – இனிமேல்,
நாள் குறித்து – என் வாழ் நாளை உத்தேசித்து,
என் தன் ஆர் உயிர் – எனது அரிய உயிரை,
கூற்றினுக்கு – யமனால்,
கோள் செய்யலாவது – குற்றப் படுத்தற்காவது ,
உண்டே – உண்டாகுமோ? [உண்டாகாது];
யான் குருகூரில் நம்மாழ்வாரைத் தியானித்து அடிமைத் தொழில் செய்து ௮வரடியை யடைந்து ௮ப் பாதங்களைச் சிரத்திலணிந்து கொண்டேன் ; இனி யமன் என்னுயிரைக் கோளிழைக்க இயலுமோ வென்பதாம். தாளாகிய தாமரை யென்று நேரினும் பொருள் கொள்ளலாம். அவரே தெய்வமென உறுதியாகக் கொண்டிருத்தலால் ஆட் செய்யலாலவது
எல்லாஞ் செய்தேன் என்றார். அன்றி-எதிர் மறைக் குறிப்பு வினையெச்சம், உண்டே,-ஏ- எதிர்மறைப் பொருள் தோன்றி நின்றது,
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-
———-
கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–
பொருள் –அகப் புறப் பொருள்.
திணை–பெருந்திணை
துறை–மாலை பெறாமல் வருந்துவ துரைத்தல்
கூறப்படா- ஒருவராலுஞ் சொல்லப்படாத,
மறையின் பொருள் – வேதத்தின் பொருள்களை,
கூறி- தமிழ்ப் பாடல்களால் வெளிப் படுத்தி, குவலையத்தோர் – உலகத்தவராலே,
மாறப் படா – நீக்கப்படாத,
வினை . தீவினைகளை,
மாற்றிய – போக்கி யருளிய,
மாறன் – நம்மாழ்வருடைய,
மகிழ் அலங்கல் – மகிழ மலர் மாலையானது ,
நாறப் படா நின்றபோத- மணம் வீசுகின்ற காலத்தில்,
அன்றில் நஞ்சம்௮து -௮ன்றிலினுடைய விடத்தை யொத்த ஓசையானது,
அமுதாகும்- அமுதாக விருக்கும்;
மன்றல் நாறும் – மணம் வீசுகின்ற,
தண் தென்றலை – குளிர்ந்த தென்றல் காற்றினையும்,
தேரப் படாது -நம்புவதற்கு இடமில்லை; கெட்டேன் – இனி யான் வாழ மாட்டேன் ;
கூறப் படா மறை- மக்களால் கூறப் படாத வேதமென்க-இந்த வேளையில் ௮ன்றிலோசை நஞ்சு போலிருத்தலால் ஓசையை நஞ்சென்றார்-தீண்டப் பெற்ற வுடன் தலைக்கேறும் விடம் போல அன்றிலோசை கேட்டவுடன் விரகம் தலைக்கேறுதலால் நஞ்சமென்றலுமாகும்.
கெட்டேன் -இனி யான் உண்ணா லும் உண்ணேன் வாழலும் வாழேன் ” என்பதை யடக்கு ‘பசி யட நிற்றல்” என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது – வேறு மெய்ப்பாடு கூறினும் அமையுமேல் கொள்க-
லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –
——-
தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–
தென் தலை தோன்றும் – இவ் வுலகத்தின் தெற்குத் திசையிலே உண்டாகிய,
உபநிடதத்தை – உபநிடதப் பொருளாயும்,
என் தீ வினையை – என் தீவினைகளை,
நின்று-நிலை கொண்டு,
அலைத்து-போக்கி ,
ஓன்றும்- பொருந்திய,
நியாய நெறியை-நியாய மார்க்க முடையதாயும்,
நிறை – எல்லா வளங்களும் நிறைந் துள்ள, குருகூர் – திருக் குருகூரில் எழுந்தருளிய,
மன் தலை- நம்மாழ்கார் வாக்கில்,
தோன்றும் – உண்டாகுகின்ற,
மதுரம் கவியை- சொற் சுவை பொருட் சுவை யுடைய திருவாய்மொழிப் பாடல்களை,
மனத்துள் – தங்கள் மனத்திலே,
வைப்பார்- வைத்துக் கொண்டிருப்பவர்களே,
என் தலை- என்னுடைய சிரத்தின் மேலே,
தோன்றும் – விளங்கிய திருவடிகளை யுடைய,
எம்பிரான்கள் – எமது தலைவ ராவார்கள்;( அவர்களே),என் நாவுக்கு-என்னுடைய நாவினால் துதிப்பதற்கு, உரியவர் – தக்கவராவார் )
திருக் குருகூர் நம்மாழ்கார் பாடி யருளிய, திருவாய் மொழிப் பாடல்களை மனத்துள் வைப்பவரே என்னால் வணங்குவதற்கும் துதிப்பதற்கும் உரியவராவார் என்பதாம், தத்துவப் பொருளை உள்ளடக்கிக் கொண்டமையின் உபநிடச மென்றார். தருக்க நியாயத்தால் பரத்துவ நிர்ணயஞ் செய்தலால் நியாய நெறி யென்றார்.-வேதம் போலாகாது எல்லாச் சாதியாரும் படித்த்துச் சுவை காணும் தன்மையினால் மதுரகவி என்றார் -ஒன்று – ஒன்று, வென நீட்டல் விகாரம் பெற்றது. பிரான் – என்னும் னகர ஈறே யுடைமையின் (கள்’ என்ற விகுதி பெற்றது.
அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்
————
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–
பிறர் – அயலாருடைய,
புல் கவி- புன்மையாகிய பாடல்கள்,
உரிக்கின்ற – இதழ் இதழ்களாகப் பகுக்கப் படுகின்ற ,
கோடலின் -வெண் காந்தள் மலரினின்றும்,
உந்து – வீசுகின்ற,
கந்தம் என – மணத்தைப் போல,
ஒன்றும் இன்றி- சொல் பொருள் அணி முதலிய யாதொன்றுமில்லாமல்,
விரிக்குந் தொறும் – பதங்களைப் பிரித்தப் பார்க்கும் போதெல்லாம்,
வெறும் பாழாய் விடும்- வீணே பயனற்றதாய்ப் போய் விடும்;
மெய் – கடவளின் உண்மை நிலையை, தெரிக்கின்ற – யாவர்க்கும் தெரியச் சொல்லுகின்ற,
கோ – இறைவராகிய,
சடகோபன் தன் – நம்மாழ்வாருடைய,
தெய்வக்கவி- தெய்வத் தன்மையுள்ள பாடல்கள்,
புவியில் – பூமியில்,
தோண்ட – பறிக்கப் பறிக்க,
சுரத்தலின் -தண்ணீரூறுதலால்,
நுண் மணல் – மிகச் சிறியனவாகிய மணல்களை,
சுரிக்கின்ற – சுற்றிலுமுடையதாய் இருக்கின்ற
ஊற்று-மணலூற்றினை,
ஓக்கும்- ஒத்திருக்கும்;
பிறர்கள் பாடும் பாடல்களெல்லாம் மணமில்லாத கார்த்திகைப் பூவை ஒத்திருக்கும்; நம்மாழ்வார் பாடல்கள் ஆராயும் தோறுஞ் சுவை ஊருதலால் தோண்டுந் தோறுஞ் சுரக்கின்ற மணலூற்றினை யொத்திருக்கு மென்பதாம். காந்தள் – கார்த்திகை. இது கார்த்திகை மாதத்தில் மலர்தலால் இப் பெயர் பெற்றதென்பர் ; கார்த்திகை மலர் பார்வைக்கு அழகாயிருத்தல் போலப் பிறர் கவி படிப்பதற்கு ஓசை முதவியவை குறையாதிருப்பினும் ௮க் கார்த்திகை மலர் நறுமண மில்லாதது போல அப் பிறர் கவியும் சொற் சுவை பொருட் சுவை நிரம்பாமையால் பயன ற்றதாய் விடுமென்றார், கந்தம் மென, மகரம் – விரித்தல் விகாரம் பெற்றது. தொறும் இங்குத் தொழிற் பயில்வுப் பொருளைத் தந்தது. பாழாய் விடும், விடு-துணிவுப் பொருள் விகுதி, சுரத்தலின் – மூன்றாம் வேற்றுமை ஏதுப் பொருள்,
தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊரும் அறிவு-
——–
சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–
திரக்கும் -முத்துக்கள் தெறித்து விழப் பெற்ற
கழை -கரும்புகளின்
நெடும் தாளில் – நீண்ட தூறுகளிலே, தொடுத்த – கட்டின,
செம் தேன் – சிவந்த சேனடைகளானவை, (பக்கத்திலுள்ள குளங்களிலிருக்கின்ற,) கயல் குதிப்ப- கெண்டை மீன்கள் துள்ளி மோதி விழுதலாலே,
உடைந்து – உடை.பட்டு,
பரக்கும் – தேன் பரவுகின்ற
பழன வயல் – மிக்க வயல்கள் சூழ்ந்த,
குருகூர் – நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்,
வளம் – மகிமைகளை,
பாடுமின் -பாடுங்கள் ;(அப்படிப் பாடினீர்களாயின்),
திருவும் சுரக்கும் -செல்வமும் பெருகும் ;
வறுமையும் தீரும் – தரித்திரமும் நீங்கும் ;
இரு வினை – நல் வினை தீ வினை யாகிய இரண்டும்,
தொடக்கு விட்டு – தொடர்ச்சி நீங்கி ,
கரக்கும்- மறைந்து போகும்;
மேன்மையும் காணும் – மேலாகிய பரம பத தரிசனமுமாகும்,
ஐனங்களே ! நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின் மகிமையைப் பாடுங்கள் ; செல்வமுண்டாகும் -வறுமை நீங்கும்; இருவினைப் பற்றொழியும்; மேன்மை யுண்டாகு மென்பதாம். திரக்குதல் – தெறித்து விழுதல். கயல் குதித்தலால் தேன் உடைந்து வயல்களிற் பாவுதல் போலக் குருகூர் மகிமையைக் கூறுதலால் நம்மாழ்வாரின் கருணை உங்களுக்கு நிரம்ப உண்டாகிப் பரவும் என்பது தொகை மொழியின் கருத்தெனக் கொள்க. திரு முதலிய வற்றுள்ள உம்மைகள் எண்ணுப் பொருளன,. குதிப்ப- காரணப் பொருளில் வந்த செயவெனெச்ச வாய்பாடு, பழன வயல் – இருபெயரொட்டு,
———-
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–
பாடும் – எப் பக்கங்களிலும்,
கறங்கும் சிறை – சுழலுகின்ற சிறகுகளை யுடைய,
வண்டு – வண்டுகள்,
பாட -சப்த்தித்து நெருங்குதலால்,
பை தாள் – பசுமையான தண்டுகளை யுடைய,
குவளை தோடும் -நெய்தல் மலரின் இதழ்களும் (அவ் வண்டுகள் வந்து மோதலுக்கு ஆற்றாமல் )
கறங்கும் – சுழலுகின்ற
குருகை – திருக் குருகூரிலுள்ள,
பிரான் – மிக்க உபகாரமுடையவராய்,
இ -இந்த –
சுழல் பிறவியோடும் – சுழன்று வருகிற பிறப்பினுடன்,
கறங்கு அன்ன- காற்றாடி யொத்த,
வாழ்க்கையை -சரீர வாழ்லை,
நீக்கி – போக்கி விட்டு,
உணர்வு உதவி- நல்லறிவு தந்து ,
வீடும் – பரம பதத்தையும்,
திறந்து தந்தானை – கதவு திறந்து தந்தருளினவரை,
எ நான்றும் – எந்த நாளும் ,
விடகிலம்- யாம் கை விட மாட்டோம்);
குருகூரிலவதரித்த மக்களின் நிலை யற்ற வாழ்வைப் போக்கி மோட்ச பதத்தினைத் திறந்து தந்தருளிய நம்மாழ்வாரை நாம் எந் நாளும் விட மாட்டோம் என்பதாம். வண்டு பாடி நெருங்கக் கண்ட குவளை மலர் சுழலாறு ஏற்றுக் கொள்ளுதல் போல நம்மாழ்வார் பாடல்களை ௮ன்போடு யாவர் பாடுகிறார்களோ ௮வர்களைப் பரம பதமானது தட்டாமல் ஏற்றுக் கொள்ளுமென்பது தொகை மொழியின் கருத் தென்க-சிலர் இதனையே உள்ளுறை யுவமை என்பர், குருகை- மருஉ மொழி, பிற வி, வாழ்க்கை – தொழிற்பெயர்கள்,-தந்தான் – வினைப் பெயர், விடகிலம், ௮, கு – சாரியைகள், இல் – எதிர் மறை இடை நிலை-
———–
விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–
பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை -பெருந்திணை
துறை– வேலமர் கண்ணி மாலை யம் பொழுது கண்டு ஏங்கிய தறிந்த பாங்கி புலம்பல்.
வெம் – கொடிய,
விடம் -நஞ்சு போன்ற ,
அந்தகாரம் பாலில்- இருட்டை யுடைய இராக் காலமாகிய பகுதியிலே, மெல்லியலுக்கு- மென்மையான சாயலை யுடைய எம் தலைவிக்கு,
இடர் வந்ததென்று- காமத் துன்பஞ் செய்கின்ற சந்திரன் உதித்து வந்ததென்று,
இரங்கி -கருணை கூர்ந்து,
பராங்குசர்-நம்மாழ்வார்,
புணர்ந்திலர்-வந்து புணர்ந் தாரில்லை ; [இந்த வேளையில்], இன்று- இ அந்தி- இந்த மாலைக் காலமானது ,
வந்து பட – வந்து நீங்குதலும்,
௮ந்த காரம் பெரும் புகை – -பெரிய புகை போன்ற இருட்டானது
ஒடி – எங்குஞ் சென்று,
பரக்கின்றது -பரவுகின்றது ; (இப்படி வந்த இருட்டானது ), இன் உயிரை-எம் தலைவியின் இனிய உயிரை ,
அட வந்த -கொல்லுவதற்கு வந்த
காலன் கொலோ -யமன் தானோ ? அறியேன் -யானறிந்திலேன் ;
கொடிய இருள் பரவிய இரவில் என் தலைவிக்கித் துன்பமுண்டாயிற்றே யென்று இரங்கிப் பராங்குசர் வந்து புணர்ந்தாரில்லை; இம் மாலைப் பொழுதில் இருள் பரவா நின்றது தான் உயிரைக் கொண்டு போகிற யமனோ? அறியேனென்பதாம். விடம் -இருளுக்கு நிறத்தாலுவமை. இடர் -சந்திரனுக்கு ஆகு பெயர், ஆல் – அசை, காலன் கொல் – ‘இடைச் சொற்றொடர் ) கொல் – அசை நிலை யிடைச்சொல்.-ஓ – ஐயப் பொருளில் வந்த இடைச் சொல், மாலைப் பொழுதின் பின் இருளைப் பார்த்தலும் தலைவி விரகங்கொண்டு சோகமுறக் கண்ட தோழி இருளை மேலிட்டு விடமாகா க் கூறினள், வெம்மையை இடர் என்பதனோடு கூட்டுக ., இன்னும் தலைவர் வந்திலாமையில் இருள் பரவுவதைக் காலனோ வென்றாள், பாரங்குசர் – அயல் மதங்களாகிய யானைகளை அடக்குகின்ற அங்குசம் போவ்பவர், இங்கும் துன்பஞ் செய்யுங் காமனை யடக்குபவர் என்று எண்ணிப் பராங்குசர் என்றாள். காமன் கொடுமைக்கு ஆற்றாளென்பது தோன்ற மெல்லியல் என்றாள் -தலைவியின் துன்பத்தைக் கண்டு பொறாளாய் வெளிப் படையாகப் புணர்ந்திலர் என்று கூறினாள். கிளவித் தலைவன் பெயர் கூறினமையால் அகப் புறமாயிற்று, காமத்தை யாருமறியக் கூறிப் புலம்பினமையால் நான்கு மணம் பெற்ற பெருந் திணை யாகாமல் கந்தருவத்தின் வழுவிய பெருந்திணை யாயிற்று , பராங்குசர் – தீர்க்க சந்தி, மெல்லியல் – பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த ௮ன்மொழி,
——–
பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–
பொருள் –அகப் பொருள்
திணை -பாலைத் திணை
கிளவி – உடன் போக்கு : உட் பகுதி -தேற்றல்.
துறை–(தலைவிக்குத் தலைவன்) தன்பதி யணுமை சாற்றல்,
சுரவாத – அறிவுடையோர்க் கன்றிப் பிறருக்குப் பொருள்’ வெளிப் படாதனவகிய, சுருதி பசுக்கள் அவற்றை – வேதங்களாகிய அந்தப் பசுக்களை,
சுரப்பித்து – எல்லாருக்கும் பொருள் தோன்றச் செய்து ,
அவை -அந்த நாற் பகுதியாகிய பிரபந்தங்களும்,
சொரியும் -கொடுக்கின்ற,
பொருள் பால் – பொருளாகிய பாலை,
கரவாது – மறைக்காமல்,
உதவிய – கொடுத் தருளிய,
மாறன் – நம்மாழ்வாருடைய,
கவி அனையாய் – பாடல்களை யொத்த பெண்ணே !
இனி – இனி மேல்,
இப் புறம் – இந்தப் பாலை நிலத்தின் எல்லை யானது,
ஓர் சரம் வாதம்- ஓர் அம்பு வீழ்ச்சி யளவு தான் ;
அப்புறம்-இதற்கு அப்பால்,
௮ தடம்பணை -அந்தக் குருகூரின் எல்லை யுளகப்பட்ட அகன்ற வயல்களேயாம்;
காண் – நீபார்;
ஆதலால், பரவாது – உன் மனத்தை அலைய விடாமல்,
கேட்டு- யான் சொல்லுகின்ற இதனைக் கேட்டு,
இனி – இப்பொழுது முதல்,
பைய – மெல்ல,
நட – நடப்பாயாக;
தலைவியை இருளிடை அழைத்து உடன் கொண்டு போகின்ற தலைமகன் தன் ஊர் அருகில் இருப்பதனைக் காட்டித் தெரிவித்தனனென்க -, இணை – பாலை, கைகோள் – களவு, கூற்று – தலைவன்கூற்று, கேட்போர் – தலைவி இடம் – முன்னிலை, காலம் – ௭திர் காலம் , எச்சம் -நீ என்பது எஞ்சி நின்றது,-மெய்ப்பாடு – உவகை. பயன் – தலைவியைத் தேற்றல். வேதத்தைப் பசுவாகவும் அதன் பொருளைப் பாலாகவும் அதனைச் சுரப்பிக்கச் செய்தனரென உருவகஞ் செய்தமையின் இதுஉருவக வணி. பெண்களிற் சிறந்தமையின் – எல்லாக் கவிகளுள்ளும் சிறந்த மாறன் கவியோடு உவமித்தான். இன்னம் எவ்வளவு தூரமுளதோ வென்று கவலை கொண்டதனை அறிந்தனனாதலின் பரவாது கேட்டு என்றான். நெறி முழுதும் இவ் வண்ணமேயாமெனக் கொண்டு விரைந்து செல்லாதவாறு அப்பால் தடம் பணை யுள்ளதனால் பைய நட வென்றான், இடையிலெதிர்த்த சிங்கம் முதலியவற்றை ௮வன் அம்பாலெய்ததனைத் தலைவி யறிந்துள்ளாளாதலின் ௮வள் அறிந்த அம்பின் வீழ்ச்சியைக் குறித்துக் காட்டிச் சார வாதமென்றான், ஆங்கே தடம் பணை ௮ருகில் இருக்கிறதாகக் கொண்டு காண் என்றான். அப்பால் ஊர் போய்ச் சேரும் வரையில் அந்தப் மருத நிலமே யென்பது தோன்றத் தடம் பணை யென்றான்.தடம்பணை -உரிச் சொற்றொடர்,
புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –
———–
தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–
பொருள் –அகப் புறப்பொருள்,
திணை–பெருந் திணை ,
துறை – பாகொத்த சொல்லி பைந்தொடை பெறாமல் மேகத்தைத் தூது போக விடுதல்
பனி – விடாமல் மழை பெய்வதை ,
தோய்ந்திடும் – மேற் கொண்டுள்ள,
மேகங்களே – ஆகாயத்திற் செல்கின்ற மேகங்களே!
தண் பொருநை – சூளிர்ந்த தாமிரபர்ணி நதி சூழப் பெற்ற,
தடம்பணை -அகன்ற வயல்களை யுடைய,
குருகூரர் – திருக் குருகூர் நம்மாழ்வார்,
(தமது ), தகை – பெருமை யுடைய,
வகுளம் வடம்- மதிழமலர் மாலையை,
பணை – பருத்த,
கொங்கையில் – என் கொங்கைகளில், வைக்கின்றிலர் –
ஓற்ற வைத்தருளுகின்றாரில்லை ;
(அதனையன்றி), மற்றை மாலை யெல்
லாம் – பிற மாலைகளெல்லாவற்றையும்,
உடம்பு அணைக்குந் தொறும் –
என் உடம்பில் சேர்த்து ஒற்றிக் கொள்ளும் பொழுதெல்லாம்,
வெந்து – என்னுடம்பிலுள்ள சாமாக்கினியால் வெந்து போய்,
உகும் – உதிர்ந்து விடும் ;
(௮ந்தக் காமத்தீயும்.) ஐந்து வெம் பாம்பு -கொடிய ஐந்து பாம்புகள், (ஒரு சேரச் கூடி ஒரே உடம்பில் ஓரிடத்திலேயே கடித்து ),
உமிழ்ந்த – கடிவாயில் கக்கின,
விடம் – விடங்களானவை,
பணைக் கொண்டனவே -அதிகரித்தாற் போல்வனவேயாம்;
மேகங்களே ! குருகூராழ்வார் தம் வகுள மாலையை என் கொங்கைகளில் வைத்தருளு கின்றாரில்லை ; அதனை யன்றித் தோழியர் கொண்டு வந்து சூட்டு கின்ற பிற மாலைகள் காமாக்கினியால் கருகி உதிர்வன ; ஒரு பாம்பு கடித்தாலே பிழைப்பரிது ; அந்தக் காமாக்கினி ஐந்து பாம்பு கடித்த நஞ்சு பரக்கின்றால் போல்வன; இவ் விஷயத்தை ஆழ்வாருக்கு அறிவிப்பீராக வென்றாளென்பதாம்.-அகன்ற நீர் பாய் வயல்களும் குளிர்ந்த
பொருநை யுமுடையவாதலால் அவர் மாலையும் குளிர்ச்சியைச் செய்யு மென்றாள், உயிர்க்கு நன்மை செய்தலால் தகை வகுளமென்றாள்,-பனி – குளிர்ச்சியுமாம். நீங்கள் மிருந்த குளிர்ச்சியான கருணை யுடையீ ராதலால் பெண்ணென்றால் பேயும் இரங்கும் இயல்பன்றோ அதனால் என்பாற் கருணை யுடையீராகிச் சென்று அவர்க்கு அறிவிப்பீர் என்பதனை யடக்கிப் பனி தோய்ந்திடு மேகங்களே யென்ருள். நீங்கள் இங்கே
பொழிவதனால் பயனில்லை அவருடைய மலையிலேறி மழை பொழியத் தொடங்கினால் அவர் நம்மைக் கண்டவடன் விரக மேலீட்டினால் தாமே என்னிடம் வந்தணைவார் எனக் கொண்டு மேகத்தை நோக்கிக் கூறினா ளென்றலுமாம். ஐந்து பாம்பு – காமனம்பைக் குறித்ததுமாம்,
பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –
———
மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–
பொருள் —அகப்பொருள் ,
திணை – முல்லை,
கிளவி- வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்,
துறை–தலைவன், மேகம் தன்னொடும் சோகம் கொண்டவன் சொல்லல்,
மேகத்தை – மேகமே! உங்களை,
ஆற்றில் கண்டேன் என்று-வழியிலே கண்டு மார்க்கத்தைச் சொன்னேனென்று,
எண்ணாது – நினைக்காமல், (நீங்கள்),
குருகூர் மெய்யன் -குருகூரிலுள்ள சத்துவ ருபியாகிய
நம்மாழ்வார் செய்தருளிய, பாகத்தை – செம்பாகமாகிய திருவாய்மொழியை,
ஆர்றும் – ஒத்திருக்கின்ற,
சொல்லாளை – சொல்லை யுடைய என் தலைவியை,
கண் நீரின் துளி பரந்த – கண்ணினின்று உண்டாகிய நீர்த் துளி மிக்குள்ள,
மோகத்தை – என்பாலெழுந்தா காம விரகத்தை,
ஆற்றிக் கொண்டே – ஆற்றுவித்துக் கொண்டே,
கண்ட மாற்றம் – என்னை நீங்கள் வருகிற வழியிற் பார்த்ததான வார்த்தையை,
மொழிந்து -சொல்லி
சிந்தை -அவள் மனத்திலுண்டாகிய, சோகத்தை – சோர்வை,
ஆற்றிக் கொண்டே- சாந்தப் படுத்திக் கொண்டு
பிற்பாடு, தூளிதூவ – மழை பெய்ய, தொடங்குக-ஆரம்பிப்பீர்களாக ;
மேலோரை முன்னிலை மொழியாற் கூறுதலினும் படர்க்கை மொழியாற் கூறுதல் சிறப்புடைமை நோக்கி மேகமே!உங்களை என்று குறித்துக் கூறாமல் படர்க்கைப் பெயரை யமைத்துக் கூறி நீங்களி ருக்குமிடம் வந்து வழி மொழிந்து வேண்டுதலியல்பு – அங்ஙனமின்றி வழியிலே உங்களைப் பார்த்து விட்டமையால் இதனை நும் வீட்டில் வந்து கேட்டுக் கொண்டமையாகக் கருதுக வென்பது தோன்ற ஆற்றிர் கண்டேன் என்று எண்ணாது என்று உபசாரம் கூறினான்-ஏனைய மாதர்கள் போல்வாளல்லள் என்பது தோன்றத் திருவாய் மொழியோடு உவமித்ரான், உங்களுக்கு ௮வள் மறு மொழி கூறத் தொடங்கினால் அவள் சொல்வே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமென்பதனால் சொல்லாளென்றான். அவளைக் கண்டவுடன் என்னை நீங்கள் பார்த்ததாகக் கூறினால் உடனே அதிக மகிழ்ச்சி கொண்டு ஆவென்றலும் ஏத முண்டாகுமோ வென்றஞ்சி முதலில் மோகத்தை யாற்றிச் சிறிது சிறியதாக என்னை வழியில் கண்டது உண்டென்று சொல்லுக வென்றான், சொல்லிய வுடன் சென்று விட்டால் சோகமடைவளாதலால் மீட்டும் ௮வள் மனத்திலுள்ள சோர்வை நீக்கிக் கொண்டென்றான், பெரு மழை பெய்யத் தொடங்கினால் குளிரில் வருந்துவளாதலின் சிறிது துளிகளைத் தூவுக வென்றான். யான் விரைவில் வந்து விடுவேனென்பது தோன்றத் தொடங்குக வென்றான், திணை-முல்லை, கை கோள்-
களவு, கூற்று – தலைவன் கூற்று. கேட்போர் மேகத்தோடு கூறுவானாய்க் கூறியது , இடம் -முன்னிலை. காலம் – எதிர் காலம். எச்சம்- யான் விரைவில் வருவேனென்பது எஞ்சி நின்றது -. மெய்ப்பாடு -அலலம். பயன்-மேகத்தோடு கூறிச் சிறிதாற்றுதல், பொருள் கோள்-யாற்றுகீர். மேகத்தை –இடவழுவமைதி,. எண்ணாது, – எதிர் மறை வினை யெச்சம், பாகம் -சுவையை யுடைய திருவாய்மொழிக்குப் பண்பாகுபெயர். கண்ணீரின் துளி-பிரிவாற்றாமை யென்னும் மெய்ப்பாடு தோன்ற நின்றது,
மேகங்களை பாகவதர்களாக சொல்லத் தட்டில்லையே-ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி
———
தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–
இது மதங்கி கூத்து-ஒருகூத்தாடிச்சி ஆடத் தொடங்கும் பொழுது ஒருவன் சபையோரை நோக்கிக் கூறியது -. இதுவும் முற்கூறிய பல்வரிக் கூத்திலொன்று,
சபையீர் -சபையிலுள்ளவர்களே!
சொல்லுகின்றேன் -இப்பொழுது உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுகின்றேன் அதனைக் கேளுங்கள்,
மதங்க – பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி,
நடம் தொடங்குகின்றாள்-கூத்தாட எத்தனிக்கின்றாள் ;
குருகூர்த் தொழா – திருக் குருகூரிலே எழுந்தருளிய நம்மாழ்வாரைத் தொழுது, மடங்குன்றாள் – திரையினுள்ளேயே திரும்பிப் போகின்றாள் ;
மண்டலம் சுற்றி – (அத்திரை யிடத்துள் இருந்தாபடியே), மண்டலமாகச் சூழவந்து
ஆடுகின்றாள்-கூத்தாடுகின்றாள்
மதங்கி விடங்கு கண்டு -இந்த மதங்கியி னழகைக் கண்டால்,
பிழைப்பார் ஆர் – இங்கே பிழைப்பவர் யாரிருக்கிறார்கள் ?
இந்தப் படங்கு விண்டால் – இந்தத் திரையை நீக்கி விட்டாலோ,
பின்னை – பிற்பாடு,
உம் பதி களுக்கு – உங்களூர்களுக்கு,
போக ஒண்ணாது – போக முடியாது ; (ஆதலால் ) விரைந்து ஏகும்- சீக்கிரமாக ௮ப்பால் போய் விடுங்கள் :
சபையிலிருப்பவர்களே ! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுகேன் கேளுங்கள், பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி குருகூராழ்வாரை வணங்கிக் கூத்தாடத் தொடங்குகிறாள், இவளழகு கண்டால் எல்லாரும் மோகித்து வீழ்ந்து இறப்பார் -ஆதலால் இப்பொழுதே விரைந்து உம்மூர்க்குப் போங்களென்பதாம். பின்னை – இடைச் சொற் றிரிபு, எண்ணாது – ஒன்றாதென்பதன் மரூஉ.
பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு-
———–
பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–
பொதியம் – பொதிய மலையானது ,
தரும் – கொடுக்கின்ற
அமுதம் – நீர்ப் பெருக்கை யுடைய,
நதி – தாமிரபருணியாற்றருகிலுள்ள,
அம் -அழகிய,
குருகூர் – திருக் குருகூரிலவதரித்த, –
எந்தை -எங்கள் இறைவரான ஆழ்வார், பூசுரர்க்கு – பிராமணர்களுக்கு,
தமிழ் பதியம் என்ன – தமிழில் பதிகங்களென்னும் படியாகவும்,
நான்மறை என்ன – நான்கு வேதங்களென்பனவாகவும்,
இ பார் – இந்த உலகத்தை
புரக்கும் – தன் குளிர்ச்சியால் காக்கின்ற,
மதி- சந்திரனை யொத்த,
அந்தமில் – முடிவில்லாத,
ஒளி – பிரசாசத்தை யுடைய,
மாலைகள் என்ன – மாலைகளென்னும் படியாகவும்,
மறை – வேதத்தை யொத்த,
தமிழின் -தமிழ் மொழியில்,
௮தியம் தரும் – மிகுதியான பெருமையைத் தருகின்ற,
ஆயிரம்’ கவி- ஆயிரம் பாடல்களை,
செய்து – பாடி,
அளித்தான்– கொடுத்தருளினார் ;
குருகூராழ்வார் பிராமணர்களுக்குத் தமிழெனவும், நான் மறை யென்னவும் மாலை ளென்னவும் ஆயிரம் பாடல்கள் பாடிச் கொடுத்தருளினாரென்பதாம்.-பொதிய மலையில் அகத்தியரிடத்தில் பிறந்த தமிழிலக்கணம் உலகத்தை வாழ்விப்பது போல தாமிரபருணி நதி பொதிய மலையில் சோன்றித் தென்னாட்டை வாழ்விக்கும் சிறப்புத் தோன்ற பொதியந் தரு நதி என்றார்.-பூசுரர் – பூயியிலுண்டாகிய தேவரெனவே அந்தணர்க்காயிற்று, நம்மாழ்வார் பிரபந்தம் நான்கும் நான்கு வேதங்கள் போல் கூறப்படுதலால் நான்மறை என்றார். பதிகம் – பத்துப் பாடல்களை யுடைமையின் பதிகமெனப் பட்டது, நினைக்கவும், கூறவும் குளிர்ச்சியைத் தருதலின் மதியை யுவமித்தார். ஒன்றோடொன்று தொடர்புடைமையின் மாலைகளென்றார். பதிகம், அதிசம் என்பன எதுகை நோக்கி, பதியம், .அதியம் என்றாயின. வேதப் பொருளைக் கண்டு மகிழ்பவர் அந்தணராதலால் அவரே யிதன் பெருமையை யறிய வல்லவரென்று பூசுரர்க்கு அளித்தார் என்க,
பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்-
—————-
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–
பரவும் – எல்லாராலும் துதிக்கப் படுகின்ற , குருகூர் -திருக் குருகூரில்,
வந்த – அவதரித்த,
கற்பகம் – கற்பகத் தருவை யொத்த நம்மாழ்வார்,
பொய்ச் சமயப் புலவர்க்கு – பொய்யாகக் கூறப்படுகிற(லோகாயிதம் பெளத்தமென்னும்) புறச் சமயங்களிலுள்ள வித்வான்களுக்கும்,
பூட்சி கண்டீர் -மேற்கொள்ளத் தகுவாரென்று தெரிந்து கொள்ளுங்கள்;
மற்றை – அவர்களை யல்லாத,
மாயத்து -வஞ்சனையை யுடைய,
அருகர்க்கு – சயினர்களுக்கு,
போக்கு – அவர்கள் மாறு பாட்டைப் போக்குவதாகிய,
வல்வாய் – உறுதியான வாயை யுடைய, வாட்சி கண்டீர் – வாள் போல்வதென்று தெரிந்த கொள்ளுங்கள் :
மன் – நிலை பெற்ற,
உயிர்கட்கு – ஜீவ ராசிகளுக்கெல்லாம்,
ஆட்சி கண்டீர் – நிலையான பொருளாவாரென்று தெரிந்து கொள்ளுங்கள் ;
தொண்டர்க்கு – திருமாலின் அடி.யவர்களுக்கு,
ஆனந்த வாரி கண்டீர் – பேரின்பக் கடல் போல்வாரென்று தெரிந்து கொள்ளுங்கள்
அறிவை – நம்முடைய அறிவுக்கு,
காட்சி கண்டீர் – காண்பதற்குரிய பொருளாவார் என்று தெரிந்து கொள்ளுங்கள்,
குருகூரில் அவதரிதத கற்பகம் போன்ற நம்மாழ்வாரானவர் பொய்யான சமயத்தருமேற் கொள்ளத் தகுவார் ;அருகர்க்கு வாள் போன்றவராவார் ; மன்னுயிர்களை ஆளும் தன்மையராவர் : தொண்டர்க்கு ஆனந்தக் கடலாவார் ; அறிவுக்குரிய காட்சிப் பொருளாவாரென்பதாம்.-பிரத்தியஷப் பிரமாணம் ஒன்றே யுடைய லோகாயிதரும் காட்சி,அனுமானமாகிய இரண்டு பிரமாணங்களுடைய பெளத்தரும் ஆழ்வார் திருவாய் மொழியின் கருத்தை மறுத்தற்கு இயலாதவராதலின் அவராற்
பூணப்படுவாரென்றார். வஞ்சனை யுடைய ஜைனர் முற்கூறிய இரண்டினோடு ஆகமம், அருத்தாபத்தி ஆகிய இரண்டனையுங்கூட்டி நான்கு பிரமாணங்களைக் கொண்டு எதிர்த்தும் ஆழ்லார் நூல் அதன் மேற் பட்டுள்ள பிரமாணங்களைக் கொண்டுள்ளதாதலின் இதனை வெல்ல முடியாமையால் அந்த அருகருக்கு வாள் போல்வர் என்றார். தேவர்களுக்கு வேண்டுவன அளிக்கும் தருவைப் போல உலகத்தின் மன்னுயிர்களுக்கு வேண்டியவற்றைத் தரலிற் கற்பகமென்றும் அங்கனம் தருதலின் ஒன்றாகிய பேரின்பக் கடலைத் தொண்டர்க்கே கொடுப்பரென்றும் இங்கனம் இருந்தும் மனத்தால் நினைத்த மாத்திரத்தில் தர்சனம் கொடுத்தலில் காட்சி என்றும் கூறினார் -கற்பகம் -உவமை யாகு பெயர்-
————-
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–
எம்மை – எங்களை,
விற்றும்- விலைக்கு விற்கவும்,
விலை கொள்ளவும் – அந்த விலைப் பொருளைத் தாம் பெற்றுக் கொள்ளவும், உரியான் உரியவரகிய,
மாறன் – நம்மாழ்வார் பாடி யருளிய,
கவி வெள்ளத்தை – பாடலாகிய பிரவாகத்தை,
யாம் – நாம்,
நிதம் – தினந்தோறும் ,
கற்றும் – மூலத்தைக் கற்கக் கடவோம்; (௮ப்படிக் கற்ற பிற்பாடு),
செவிஉற கேட்டும் – அதன் பொருளைக் காதில் நன்றாகக் கேட்கக் கடவோம் ; பருகி – குடித்து, களித்தும் – மகிழ்வோம் ; முற்றும் – அந்தப் பிரபந்த முழுவதும், உள்ளே -எம் மனத்தினுள்ளே, ௨க – விழும்படி.,-பெய்தும் – ஊற்றிக் கொள்வோம் ; மூழ்கி – அந்த வெள்ளத்தில் அழுங்க,-குடைதும் – ஸ்நாநஞ் செய்வோம் ; முகந்து கொடு – அள்ளி முகந்து எடுத்துக் கொண்டு,
நில உற – நிலை பெற்ற இடங்களிலே,
நிற்றும் – நிற்போம்;
நீந்துதம் – நிலை கொள்ளாத இடங்களில் நீந்திச் செல்வோம்;
ஆழ்வார் பாடலாகிய வெள்ளத்தைப் பற்றி வாயினாற் பேசுவோம் ;பிறர் பாற் கேட்போம் ; உண்டு மகிழ்வோம் ; எடுத்து உள்ளே ஊற்றிக் கொள்வோம் ; அதில் ஸ்நாநஞ் செய்வோம் ; நிலை கொண்ட இடத்தில் நிற்போம்; நிலை கொள்ளாத விடத்தில் நீந்துவோம் என்பதாம், பருகும் போதெல்லாம் தெவிட்டாது தித்தித்தலால் களித்துமென்றார். முழுதுங் கொள்ளுதற்கு எம் அறிவாகிய கொள்கலம் பற்றாதாயினும் வலிந்துஊற்றிக் கொள்வோமென்றார். ஓயாமற் பருக வேண்டியதனால் முகந்துகொடு நிற்றுமென்றார், யாம் அவர்க்கு அடிமையாய் விட்டபடியால் அவர் என்னை விற்கவும் பொருளைப் பெறவுமுரியரென்றார். விற்றல்-அடியார்க்கு அடியனாகச் செய்தல்.விலை கொள்ளுதல் – அவ்வடியாரையும் தம்மடியாராக்குதல், மாறன் – ஆழ்வார் திருப் பெயர்களுளொன்று.-கற்றும் முதலியவை – தன்மைப் பன்மை எதிர் கால வினை முற்று, திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கேற்ப முமுவதும் உருவகஞ் செய்தமையால் இது முற்று உருவக அணி’.
———–
வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–
பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத் தலைப்பாடு,
துறை–கண்ணயந்துரைத்தல்.
கவிக்கு – செந்தமிழ்ப் பாடல்கள் பாடுவதற்கு,
அரசன் -தலைவராகிய (நம்மாழ்வார் அவ தரித்த )
தெள் – தெளிந்த,
அம் – நீர்,
பரந்த – பரவிய,
வயல் – கயல்கள் சூழ்ந்த,
குருகூர் – திருக் குருகூரிலிருக்கிற ,
கொம்பின் – அந்தப் பெண்ணினது ,
செம் முகத்து – சிவந்த முகத்தினிடத்தில்,
எம் உள்ளம் – எமது மனமானது ,
பரந் தனவயோ -இரண்டாகப் பரவி இருக்கின்றனவோ
கமலத்து – தாமரை மலரில்,
வெள்ளம் – பிரவாகமான கடல்கள் தாம்,
பரந்தனவோ – பரவி யிருக்கின்றனவோ ? அன்றி- அல்லாமல்,
வெள்மதி மேல் – வெண்மையாகிய சந்திரன் மேலே யுள்ள,
முயல் நீக்கி- களங்கமாகிய முயலை நீக்கி, கள்ளம் – களவாகிய தொழிலொன்று தான், பரந்தனவோ – இரண்டு வடிவாகி விளங்கு கின்றனவோ ?
கண்களோ – கண்கள் தாமோ ?
ஒன்றும் ஒர்கிலோம்- ஒன்றாகத் துணிந்து சொல்ல யாம் ௮றிந்தோமில்லை.
ஆழ்வார் குருகூரில் எம் தலைவியின் முகத்திலுள்ளன கமலத்தில் வெள்ளம் பரந்தனவோ ? சந்தின் மேற் களவுத் தொழில் தான் பரந்னவோ? அல்லது என் மனந்தான் ௮ங்கனம் பரந்தனவோ ? கண்கள் தாமோ? ஒன்றும் அறிந்தோமில்லை யென்பதாம்,-தலைவியைக் கண்ட பொழுது அவளுறுப்புக்கள் சில மலர்கள் போலத் தலைவனுக்குத் தோன்றியதற்கு ஏற்ப இங்குக் கொம்பு என்றான் – கொம்பு-மலர் நிறைந்த கொம்பு, காம மயக்கத்சாலிருண்ட தன் மனத்தை அவளுடைய இருண்டு விழியாகக் கூறியது பண்பு பற்றி யென்க , இவன் நெஞ்சம் அவள் விழியால் தாக்கப்பட்டு அவ்விழி களிலே அடங்கிக் கிடந்ததனால் தன் மனமே அல்வடிவினது என்றான்.,அங்கனம் கொண்ட மயலுச்கு எல்லை காணாமல் ஆழ்ந்ததனால் கரையிலாக் கடலே பரந்தனவோ என்றான்; இப்படியே கடலினும் பெரிய கண்கள் என்றார் இராமாயணத்திலும், கொம்பு -உவமை யாகு பெயர். வெள்ளம், கள்ளம், உள்ளம் – பால் பகா அக்றினைப் பெயர்களாதலால் பன்மை முடிபு கொண்டன.இத்துறை முற்றும் ஐயவுவமை. குறிஞ்சிக்குரிய கருப்பொருளொன்று மில்லாமையால் உரிப் பொருளைக் கொண்டு குறிஞ்சி யென்று கூ.றலாயிற்று,-இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்சசி துணிந்த தலை மகன் மற்றை நாள் முன் கொடுத்த தெய்வம் இன்னுங் கொடுக்குமென்று அவ்விடஞ் செல்லுதல். கை கோள் – களவு, கூற்று -தலைவன் கூற்று, மெய்ப்பாடு – பெருமிதம் ; உவகையுமாம். பயன் -கண் சிறப்புரைத்தல் ஹேதுவாகத் தலைவியைச் சார்தல்.
ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது-தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது-நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்-இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் – இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால் வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார்
————–
ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–
ஓரும் – ஆராய்ந்து அறிகின்ற
தகைமைக்கு – உயர்ந்த தன்மைக்கு,
உரியாரும் – தகுந்தவர்களும்;
ஓங்கிய -உயர்ந்த,
ஞானியரும் -ஞானமுடையவர்களும்,
சாரும் – அடையப் பெற்ற,
தனி. ஒப்பற்ற,
தலைவன் – தலைவராகிய,
சடகோபன் – சடகோபனென்னும் பெயருடைய நம்மாழ்வாரவதரித்த,
தட பதிக்கு – விசாலமான திருக் குருகூருக்கு,
வாரும்- வரக் கடவீர்கள் ;
உமக்கு -உங்களுக்கு
ஒர்உறுதி – ஒரு உறுதிப் பாட்டை,
சொன்னேன் – இப்பொழுது சொல்லுகிறேன்; (அப்படி. வருவீரேல்,)
நும்- உங்களுடைய,
மயக்கம் எல்லாம் -விபரீதமுழுவதும்,
தீரும்: -நீங்கி விடும் ;
திருக்கு அறும் – மாறுபாடுகள் நீங்கி விடும்
தீங்கு -தீவினைகள் எல்லாம்,
அறும் – நீங்கும்;
சிந்தை -உங்கள் மனமும்
செவ்வே நிற்கும் -கோணாமல் ஒரு தன்மையாக நிலை நிற்கும்
நீங்கள் ஆழ்வார் குருகூருக்கு வாருங்கள் ; உங்களுக்கு ஓர் உறுதி சொல்லுகின்றேன் ; உங்கள் மயக்கம் நீங்கும் ; திருக்கு நீங்கும்; மனம் ஒழுங்குபடும் ; தீங்கறுமென் பதாம். ஒர்தல் – கடவுளியல்பை யறிதல், ஓங்கிய ஞானம் – கடவுளை அறியும் அறிவு – மயக்கம் – ஒன்றை மற்றொன்றாகக் கருதும் விபரிதம்: என்றது எங்கும் வியாபித்து இருப்பவன் நாராயணனென்பதை மறந்து மற்றத் தெய்வங்க௭ வியாபித்திருப்பதாகக் கருதுதல், திருக்கு – மாறுபாடு, அதாவது கடவுளும் அவர் போல்வாரும் நியமித்த வழிக்கு விரோதமாக நிற்றல், இவைகள் ஓழியவே மனம் ஓரு, தன்மையாகவே நின்று கடவுளைத் துதித்துப் பரம பதத்தை அடைதல் கூடிமென்பதாம்,-இவை யனைத்தும் திருக் குருகூரை யடைந்த மாத்திரையே பெறலாகுமென்றதனால் இது அப் பதியின் சிறப்புக் கூறப்பட்டது, வாரும் என்பதற்கு நீங்கள் என்பதை தோன்றா எமுவாயாக்கிக் கொள்க,சொன்னேன்-தெளிவினால் வந்த கால வழு வமைதி,
———
அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–
பொருள் —அகப் பொருள் .
திணை -மருதம்
கிளவி –பராத்தையிற் பிரிவு.
துறை–காமக் கிழத்தி மைந்தனை யெடுத்தல்.
அறு வகையாய் -ஆறு வகைப்பட்ட சமயமும்
சமய நூல்களும் ஐ வகைத்தாம்-ஐந்து வகைப் பட்டதாகிய,
புலனும் உறுவகையால்-தன் மாத்திரைகளும் கூடி யுள்ளவகையினால்,
சொன்ன – சொல்லிய,
ஓட்டம்எல்லாம் – நீண்ட பொருள் விரிவு முழுவதும்,
ஒழிவித்து – போக்கி,
ஒருங்ககே – ஒரு சேர,
பெறு வகை ஆறு என – அடையும்படியான வழுி இது வென்று,
செய்த – பிரபந்த ரூபமாகச் செய்து காட்டி யருளிய,
பிரான் -தலைவரும்,
குருகூர் பிறந்த – குருகூரிலே அவதரித்தருளிய,
சிறு வகையார் – சிறிய மனித வடிவினருமாகிய,
அவரை – அந்த நம்மாழ்வாரை,
தொழுதோம் – யாம் வணங்கினோம்(ஆதலால்) எம்மை
தீண்டுக- தொடுவாயாக;
சமய நூல்களில் கூறிய மாறுபாடுகளை யெல்லாம் போக்கி நல்வழி இதுவே யெனப் பிரபந்த ரூபமாகக் காட்டி யருளிய திருக் குருகூர் நம்மாழ்வாரை யாம் தொழுதோமாதலால் மைந்தனே ! எம்மைத் தொடுவாயாக வென்பதாம், பஞ்ச, தன் மாத்திரை: சுவை, ஒளி, ஊறு! ஒசை, நாற்றம் எனபன, இவற்றாற் சொல்லிய ஓட்டம் – அவ்வச் சமய நால்களில் கூறிய தத்துவ சாத்திரங்களாம் ; எனவே அவற்றை யொழித்து நான்கு வேதங்களின் பொருள்களாகிய கிருவாய்மொழி முதலிய நான்கு பிரபந்தங்களையும் நிலையிட்டருளியபடி என்பதாம், ஆய சமயம் – இடைச் சொற்றொடர். ஒழிவித்து, வி- பிற வினை விகுதி. குரு கூர்ப்பிறந்த – எழாம் வேற்றுமைத் தொகை.
தலைவன் பரத்தையிற் பிரிவில் தலைவியின் மைந்தன் தெருவில் விளையாடும் பொழுது அங்கு வந்த காமக் கிழத்தி தான் தூய்மை யுடையவளென்று கூறி ௮ப் புதல்வனைத் தன் பாலழைத்தது இத் துறையின் கருத்து. தலைவன் பரத்தையிற் பிரிதலும் தலைவிக்கு ஊடல் தோன்றுதலின் உரிப் பொருளால் மருதமாயிற்று , மெய்ப்பாடு பெருமிதம். பயன்-காமக் கிழத்தி மகிழ்தல். கை கோள் – கற்பு, கூற்று – காமக் கிழத்தி கூற்று,
சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும் ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே
சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்
சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –
————
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–
அணி நீர் -அழகிய பொருநை யாற்று நீர் பரந்த,
தமிழ் -தமிழ் வளம் பொருந்திய,
திரு – அழகிய,
பாண்டி நாட்டு- தன் பாண்டி நாட்டிலே, உருக் காட்டிய – வடிவமெடுத்தருளின, பாவகற்கு – பரி சுத்தரான நம்மாழ்வாருக்கு,
அன்பனாய் – தொண்டு செய்பவனாய் ,
ஆண்டில் -அவ்விடத்தில்,
வீனையேன் -தீ வினை யுடையவனாகிய நான்,
இவ் வெறும் பிறவி – இப் பயனற்ற பிறப்பில்,
பிறந்த அக் காலத்திலே – பிறந்த அப்பொழுதே தானே.
தீண்டி- பரிசித்து .
திருவடியைப் பற்றிக் கொண்டு -ஆழ்வார் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, சிந்தித்ததை – மனத்தில் நினைத்ததனை, வேண்டிக் கொளப் பெற்றிலேன் – பிரார்த்தித்து அடையப் பெற்றேன் இல்லை ;
நான் பிறந்த பொழுதே நம்மாழ்வாருக் கன்புடையோனாய் அவர் திருவடியைப் பற்றிக் கொண்டு நினைத்ததைப் பிரார்த்தித்துப் பெற்றுக் கொண்டேனில்லை என்பதாம். மற்றை நாட்டைக் காட்டிலும் சிறப்புடைமை தோன்றம் தமிழ்த் திருநாடு என்றார்.-பாவகன் – அக்னி. அவனைப் போலப் பரிசுத்த முடைமையால் ஆழ்வாரை அவ்வாறு கூறினார். இம்மைப் பயனைத் தேடி உழலுதலால் வெறும் பிறவி என்றார். சிந்தித்தது – வீட்டின்பம், பாவகன்- உவமை யாகு பெயர், வெறம் பிறவி-பண்புத் தொகை நிலைத் தொடர், சிந்தித்தது – வினைப்பெயர்,
மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே-தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்
பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்-வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே – சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்-இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –
————–
பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–
பாவகத்தால் – அம்சத்தினால்,
தன் – மாயோனானவன் தன்னுடைய,
திருஅவதாரம் – சிறந்த அவதாரங்கள், பதினொன்று என்று -பதினொன்றாகுமென்று,
இ பூவகச்தார் – இந்த வுலகத்திலுள்ளவர்கள்,
அறியாத வண்ணம் -அறிந்து கொள்ளாதபடி
தனையே புகழ்ந்து – தன்னைத் தானே கொண்டாடி,
நா ௮கத்தால்-தந் நாவினிடமாக,
ஆயிரம் கவி பாடி -ஆயிரம் பாடல்கள் பாடி,
நடித்து- வேறாயுள்ளவரைப் போலக் காட்டி, அளித்த -கொடுத்தருளிய,
கோ அகத்தாற்கு அன்றி-பரம பத நிலைமையை யுடையவராகிய நம்மாழ் வாருக்கே யல்லாமல்.
புறத்தார்-அன்னியர்களுக்கு,
செய் – செய்கின்ற
குற்றேவல்கள் -சிறிய ஊழியங்கள்
என் –என்ன பயன் தரும்
நம்மாழ்வார் மாயோன் அம்சமாகப் பிறந்து அந்த மாயோனைத் துதித்தலால் தன்னையே புகழ்ந்து கொண்டவராய் ஆயிரம் பாடல்கள் பாடி யருளினார்-௮ப்படிப் பட்டவர்ச்குத் தொண்டு செய்யாமல் பிறருக்குச் செய்யும் ஊழியத்தாலடைவன யாவை யென்பதாம்,-ஆழ்வார் திருமாலின் அம்சமென்று கூறப்படுதலால் அந்த மாயோனவதாரம் பத்தன்றிப் பதினொன்றென்றார். அக் காரணத்தால் இவர் மாயோனைப் புகழ்ந்ததும் தம்மைப் புகழ்ந்ததாயிற்று, நடித்தல்- மாயோன் வேறு தாம் வேறு என்று உலகத்தாருக்குத் தோன்ற நடித்தல்-. பூ ௮கம் -பூமியாகிய இடம்; இருபெயரொட்டு, தன்னையே, ஏ -பிரி நிலை, கோவகத்தான் – மேலாகிய இடத்தை யுடையவன், புறத்தார்ச் செய்- வேற்றுமைத் தொகை –
வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்-
தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து-யானாய்த் தன்னைத் தான் பாடி–நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்–திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே–அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்–சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்–வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்–கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –
———
குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே 79–
குருகைப் பிரான் – திருக் குருகூரிலுள்ள இறைவராகிய,
எம் பிரான் தன் – எங்கள் நம்மாழ்வாருடைய,
இயல் இசைக்கு – இலக்கணமும் பண்ணும் அமைந்த திவ்யப் பிரபந்தங்களாலே. (யான்) குற்றேவலும் செய்து – சிறிய வேலைகளும் செய்து ,
மெய் கண்டு – அப்பிரபந்தங்களின் தத்துவார்த்தத்தைத் தெரிந்து கொண்டு,
கை கொண்டு கும்பிட்டு – எனது கைகளாலஞ்சலி செய்து.
அன்பு பெற்றேன் – அவருடைய கருணையை யடையப் பெற்றேன் ;
என் போல்- என்னைப் போல,
எவர் – யாவர் தாம்,
பேறு பெற்றார் – பயனடைந்து இருக்கிறார்கள் ? (ஒருவருமில்லை என்றதாம்),
பின்னையே பிறந்து – பிற்பட்டு உண்டாகி,
வெற்று ஏவலில் நின்ற – பயனற்ற பணி விடைகளில் நிலை நிற்கின்ற ,
பொய் அன்பர் தாங்களும் – பொய்யாகிய வழிகளில் சென்று அன்பு செய்கின்றவர்களும்,
மெய் – தத்துவ ஞானத்தை ,
உணர்ந்தார் – அறிந்து கொண்டார்கள் ; எறறு – இது எத்தன்மைத்தான வியப்புடையது
யான் ஆழ்வார் பிரபந்தத்தை ஆரியருக்கு ஏவல் முதலியவற்றைச் செய்து படித்து ௨ண்மைப் பொருளறிந்து அவர் அருள் பெற்றேன் – என்னைப் போல் பெற்றவர் யார்? ஆழ்வார்க்குப் பிற் பட்ட பலர்களும் இந்தப் பிரபந்தத்தினால் தத்துவ ஞானம் பெற்றார்கள், ஈதென்ன வியப்பு ?என்பதாம். இயல், இசை – சினை யாகு பெயர்.-ஏவலும், உம். இறந்தது தழுவிய எச்சம். எற்றே , எல் – தே எனப் பிரித்து ஒளி பொருந்திய தெய்வமாகிய பிரானென்று கூட்டினும் அமையும். கைகொண்டு, கொடை-மூன்றாம் வேற்றுமைச் சொல்லருபு, எற்று – குறிப்பு முற்று,
———
இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–
பொருள் –அகப் புறப் பொருள்,
திணை -கைக்கிளை
துறை–காட்சி; ஆண் பாற் கூறறு,
இயலை – இலக்கணங்களை,
தொடுத்து – திருவாய்மொழியி்ல் புகுத்தி,
இன் இசையை- இனிய இராகங்களை.
புணர்த்து-கூட்டி,
எம்மை–, இ. இந்தா ,
பிறவி மயலை. – பிறப்பினால் உண்டாகிய மயக்கத்தை ,
துடைத்த – போக்கின,
பிரான் – நம்மாழ்வாரவதரித்தருளிய,
குருகூர் – திருக் குருகூரில்,
மதியைக் கொணர்ந்து- சந்திரனைப் பிடித்து வந்து ,
முயலை – அதிலுள்ள களங்கத்தை, துடைத்து – போக்கி , (அதனிடத்தில்),
தனுவைப் பதித்து – இரண்டு விற்களை அமைத்து ,
முத்தங் குயிற்றி – முத்துக்களைப் பதித்து,
கயலை – இண்டு கயல் மீன்களை,
கிடத்தி- வைத்து,
சாளரத்தூடு – சன்னல்களுள்ளே வந்து,
கதவு இட்டதே கொல் – கதவு தாழ் போடப் பட்டதோ ?
இலக்கண அமைதியும் இசை அமைதியுமுள்ள பிர்பந்தஞ் செய்தருளின ஆழ்வாரது குருகூரில் சந்திரனிடத்தில் களங்கம் போக்கி விட்டும் முத்தும் மீனும் அமைத்து பலகணியினூடு வைத்துக் கதவிடப் பட்டதோ வென்றான் என்பதாம்.-எல்லா இலக்கணங்களுக்கும் இலக்கியமாகக் கொள்ளுதலால் இயலைத் தொடுத்தென்றார் – இசையோடு கூறப்படுவதனால் இசையைப் புணர்த்தென்றார். படித்தலால் பிறப்பின்
மயக்கம் நீங்குதல் பற்றி மயலைத் துடைத்தென்றார். களங்கம் துடைத்த
மதி – முகத்துக்கு உவமை. தனு-புருவத்துக்கும், முத்துக்கள். – பற்களுக்கும்; கயல்கள் – கண்களுக்கும் உவமை யாதலால் இவை யனைத்தும் உவமை யாகு பெயர்கள். கொணர்ந்து , கொணா – பகுதி, கொல்லென்னும் ஐய இடைச் சொல் பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது -கைக் கிளை – ஒரு மருங்கு பற்றிய அன்பு; அதாவது ஒரு தலைக் காமம்;ஒப்பாரு மிக்காரு மில்லாத் தலைவன் வேட்டை மேலீட்டினால் சென்று ஒரு தலைவியை நோக்கி மயங்கிய சிறப்புடைக் கைக்கிளை யன்றி அடியோர்
பாங்கினும்?? என்ற விதிப்படி யமைந்த அடியவன் தலை மகனாய்த் தெருவில் செல்பவன் சாளரத்துள் ஓருத்தியைக் கண்டு இருவரும் மயங்கியவழித் தலைவன் கூறியது, மெய்ப்பாடு -மருட்கை, பயன் – வியப்பினாலுள்ள மகிழ்தல்-
————
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–
கேணியிலும் – கிணறுகளிலும்,
பட்டத்திலும் – பட்டக் கால்களிலும்,
பைந்தடத்திலும் – பசிய குளங்களிலும்,
ஓடை – நீரோடைகள் சூழ்ந்த,
பழனத்திலும் – பள்ளமாகிய வயல்களிலும்,
குட்டத்திலும் – ஆழமான குட்டைகளிலும்,
கயல்பாய் – கயல் மீன் பாய்ந்து குதிக்கின்ற,
குருகூரர் – குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய,
குணங்களுக்கு – நல்லொழுக்கம் அமைந்த குணங்களைக் கண்டு,
இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்-இரும்புகளுருக்குகின்ற உருக்குக் கிட்டானைக் காட்டிலும் வலிய நெஞ்சுடையவரும்,
இட்டத்திலும் _ கருத்துக்களைச் சொல்லுமிடத்திலும்,
தம்தம் உள்ளத்திலும் – தங்கள் தங்கள் மனத்திலும்,
எண்ணிலும் – நினைப்பினும்,
உருகுவர் – கரைவார்கள் ;
குருகூராழ்வாருடைய நல்லொழுக்கமமைந்த குணங்களைக் கண்டு கடின செஞ்சுடையவரும் மனமுருகு வாரென்பதாம், பட்டம் – தண்ணீர்ப் பெருக்கும் காலத்தில் மட்டும் ஏறிப் பாய்கிற மேட்டு நிலம். நீர் வளத்தால் மேடும் பள்ளமான வயல்களிலும் கிணறு குள முதலியவற்றிலும் ஏற்றத் தாழ்வின்றி மீன்கள் பாய்தல் போல ஆழ்வாரின் குண விசேஷத்தால் அறிந்தோர் அறியாதோர் கொடிய நெஞ்சர் முதலிய யாவரும் உருகுவாரென்று தொகை மொழியாற் கொள்க , இரும்பு – வன்றொடராயிற்
று. ஓடையாகிய பழனம் என்றாக்கி இரு பெயரொட்டென்றலுமாம்’-இதற்கு நீண்ட வயலென்று பொருள் கொள்க -குட்டம் – பண்பாகு பெயர்.
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்-இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்-இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை-கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –-ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –
————————–
குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–
பெரும்- பெரிய,
தண் – குளிர்ந்த,
வகுளம் மணம் – மகிழ மலரின் மணமானது ,
வேண்டும் – விரும்பி யுறைகின்ற,
தண் தெரியல் – குளிர்ந்த மாலை யுடைய,
பெருமான் – நம்மாழ்வாரருளிச் செய்த,
செய்யுள் – பாடல்களாகிய,
மா மணியின் – சிறந்த இரத்தினங்களுடைய,
கணம் -,கூட்டத்தை ,
வேண்டும் என்று – கற்க வேண்டுமென்று,
அறிவாரை – அன்போடு படித்து அறிந்தவரை ,
கண்டால் – தரிசித்தால்,
குணம்வேண்டுமே – அவர்களுக்கு நற் குணங்கள் வேண்டுமோ? (வேண்டாம்)
நல் குலம் வேண்டுமே – நல்ல குலமாயிருக்க வேண்டுமோ ? (வேண்டாம்)
௮ குலத்து ஒழுக்காம் – அந்தக் குலத்துக்குரிய நடையாகிய, –
பிணம்-பயனற்ற பிணம் போல்வதும். வேண்டுமே – வேண்டுமோ ? (வேண்
டாம்)
செல்வம் பேய் – பொருளாகிய பிசாசும், வேண்டுமே – வேண்டுமோ ? வேண்டாம்
ஆதலால், சென்று -உடனே அருகிற் சென்று,
கை தொழும் – கை கூப்பி வணங்குங்கள்
நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழிப் பிரபந்தத்தை அன்போடு படிப்பவரைக் கண்டால் ௮வருடைய குணம் குலம் நடை பொருள் யாவும் பார்க்க வேண்டியதில்லை உடனே சென்று வணங்குங்கள் -என்பதாம். குணம் – அன்பு. பொருள், அடக்கம் முதலியன. குலம் – ௮ந்தணர் முதலிய உயர்குலம், நடை – அவர்கள் தர்கள் மதத்துக் ஏற்பக் கட்டியதானால் பிணமென்றிகழ்ந்தார். பேய் – தான் பிடித்தவரைத் தன் வசமாக்குதல் போலப் பொருளும் விருமபினாரை வசமாக்குதலால் பேயென்றார். மணிக்கு மேற் சிறந்த பொருள் தோற்றத்தி லில்லை யாதலால் மணியை உவமித்தார் -வேண்டுமே என்பவன வற்றிலுள்ள ஏகாரங்கள் எதிர் மறைப் பொருளன.-செல்வப் பேய் – இருபெயரொட்டு, பெருந் தண் வகுளம்- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்:
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு-
———-
தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–83-
தொழும்பு ஆக்கிய – என்னை அடிமையாகக் கொண்ட,
வினை – தீ வினை மிக்க,
தொல்லை – பண்டைக் காலம் தொட்டுள்ள,
பிறவி-பிறப்பாகிய, (கடலிலுள்ள), சுழியிடை நின்று – தண்ணீரின் சுழலிருந்து
எழும் – வெளியில் வரும்படியாகிய, பாக்கியம் – செல்வம்,
உடைத்து ஆக்கவும் – எனக்கு உடையதாக்கவும்,
தென் – அழகிய,
இயலோடு இசைந்து – இலக்கணத்துடனே பொருந்தி,
கெழும் – விளங்கிய,
பா – பிரபந்தப் பாடல்களில்,
கெழுமிய – பொருந்திய,
கீர்த்தியை -கடவுளின் குண விசேடங்களை,
நாளும் கிளத்தி- தினந்தோறும் சொல்லிச் சொல்லி,
என் நா – எனது நாக்கில்,
தழும்பு ஆக்கவும் – தழும்பு ஏறச் செய்யவும், வல்ல கோ – வலியரான இறைவர்,
தயா பரன் – கருணை யுடையவரான, சடகோபன் – நம்மாழ்வாரேயாம் ;
பிறவிப் பெருங் கடற் சுழியில் அமுங்கிப் போகாமல் எழுந்து மீண்டு வருந் திறமை யுடையதாக்கவும் திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள கடவுளின் மகிமையைத் தினந்தோறும் கூறி எனது நாக்கில் தழும்பேறச் செய்யவும் தகுதி யுள்ளவர் நம்மாழ்வாரே யென்பதாம். தீ வினை தான் செல்லும் வழியே என்னை இழுத்தலால் தோழும்பாக்கிய வினை யென்றார். மாறாமல் தொடர்ந்து வருதலால் தொல்லைப் பிறவி யென்றார்.
இது பற்றியே தொல்லை நம் பிறவி யெண்ணிற்றொடு கடல் மணலுமாற்றா” என்றார் திருத் தக்க தேவரும், அதில் நின்று மீண்ட வரருமையாதலால் சுழி யென்றார். ஏனை மொழி களுக்குச் சிறப்புடை யிலக்கணம் அமையாமை நோக்கி அரிய பெரிய தெய்வத் தமிழுக்கு உரிய இலக்கணத்துக்குத் தென்னியல் என்றார் -தொல்லை – பண்புப் பெயர், உடைத்து –
குறிப்பு முற்றெச்சம். வல்ல – குறிப்புப் பெயர் எச்சம், கோ ௭ன்னும் எழுவாய் ஆம் என்னும் ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது –
தயா பரன் -பரம தயாளு-முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே-செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று-அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி
——–
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே.–84-
பொருள் -அகப் புறப் பொருள் .
திணை -பெருந்திணை
கிளவி -௮றத்தொடு நிற்றல்,
துறை– செவிலி நற்றாயத் தறத்தோடு நிற்றல்-நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்
நங்காய் – அன்னையே !
பரந்து – பரவி,
அலைக்கும் – அலை மோதுகின்ற, பொருநை – தாமிரபர்ணி நதி சூழ்ந்த, குருகூர் என்னில் – திருக் குருகூர் என்று யாரேனும் கூறினால்,
உன் மகள் – உன் புதல்வி,
கண் பனி மல்கும் – கண்களில் நீர் பெருக்குவாள் ;
கரம் – கைகளை,
தலை கொள்ளும் – தலையிற் குவித்துக் கொள்ளுவாள் :
கருத்து உள்ளும் – மனத்தில் தியானிக்கின்றாள்
(கருத்து ) உருகும் – மனம் உருகுகின்றாள்
கவியால் – பாடல்களால்,
உலகை – இந்தத் தமிழ் நாட்டினை,
புரந்து – பாதுகாத்து,
அலைக்கும் வினை – உயிர்களை வருத்துகின்ற தீ வினைகளை,
தீர்த்தான் – நீக்கிய நம்மாழ்வார்.
புனை – ௮ணிந்து கொள்ளுகின்ற,
மகிழ் பூவும் ௮ன்றி- மகிழ மலரைச் சூடிக் கொள்ள விரும்புவதும் அல்லாமல்,
மரம் தலைக் கொள்ளவும் – ௮ந்த மகிழ மரத்தை அணைத்து மேற் கொள்ளவும்,
போதும் – செல்லுகின்றனள் -இப்படி
யன்றி உன் மகள் கருத்து இது என்று வருவித்து முடிப்பினுமையும்.
நங்காய் உன் மகள் குருகூர் என்றவுடன் கண்ணீர் வடிக்கிறாள் -கை கூப்புவாள் ; கருத்தில் நினைக்கிறாள் மனம் கரைகிறாள் ; அவ்வாழ்வார் சூடுகிற பூவை சூடிக் கொள்வதுமன்றி அந்த மகிழ மரத்தை அணைத்துக் கொள்ளவும் செல்கிறாள் என்பதாம். நங்கை – எல்லாக்
குணங்களும் நிறைந்தவள். இதன் ஆண்பால் – நம்பி. கிளவித் தலைவன் பெயர் கூறலின் அகப்புறமாயிறறு, புறமெனவே அதன் பகுதியாகிய பெருந் திணையாம். தலைவனைப் பிரிந்த தலைவியின் சரீர வேறு பாட்டை யறிந்து இது தெய்வத்தினால் ஆயி்ற்று என்று அத் தெய்வத்துக்குச் சிறப்புச் செய்யப் புகுந்த பொழுது அதனை அறிந்த தலைவி அஞ்சித் தோழியிடத்துத் தன் காம நிலையைக் கூறத் தோழியாலறிந்த செவிலி யானவள் பெற்ற தாய்க்கு நிகழ்ந்தமை வெளியிடுதல் கிளவியின் துறையாகும்-கண் பனி மல்குமெனவே அன்பும் தலைக் கொள்ளுமெனவே ஆர்வமும் உள்ளுமெனவே கூடற்குறிப்பும் உருகுமெனவே இன்பத்தின் மகிழ்ச்சியும் மரம் தலைக் கொள்ளப் போதுமெனவே பிறரைக் கூற ஏதம் பயத்தலையும் குறிப்பிட்டமை யறிக-
தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி-ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –
———–
கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–
பொருள்–அகப் பொருள்
திணை – உரிப் பொருளால் பாலை.
கிளவி -உடன்போக்கு ,
துறை – பாங்கி தலைவனை உடன் படுத்தல் .
(ஐயனே !) கருத்தில் – உமது மனத்திலே,
கருணை வைத்து – அன்பு பாராட்டி,
இவளொடு – இத் தலைவியைக் கைக் கொண்டு,
ஏகும் – செல்லக் கடவீர் ;
இதுவும் – இப்படி நீர் கைக் கொள்ளுதலும்,
கலை மறையோர் – கல்வியில் சிறந்த அந்தணர்கள்,
திருத்திற்று – ஒழுங்கு பட அமைத்ததாகிய,
ஒரு மணம் – எண் வகை மணத்து ளொன்றாகிய காந்தருவமேயாம் ;
தினம் மயல் தீரும் – இதனால் காள்தோறும் உங்களுக்குண்டாகிய காம மயக்கமும் நீங்கும்;
நீரில் – தண்ணீரருகில்,
நிறை – முளைத்து நிறைந்துள்ள,
முருத்தின் – வெண்மையான அடிக் குருத்துக்களை யுடைய,
செருந்து – நெட்டிக் கோரைகளுச்கு,
அயலே -பக்கத்திலுள்ள,
கரும்பின் – கரும்புகளைடைய,
குருத்தில் – குருத்துக்களில்,
முயல் – முயற்கூடாகிய சந்திரன் போல, பிரசம் வைக்கும் -தேனடைகள் வைக்கின்ற,
குருகூர் – அவ்வாழ்வார் அவரித்த திருக் குருகூரை
சென்று – போய்,
கூடுமின் – அடையுங்கள் ;
ஐயனே ! இவளைக் கைக் கொண்டு செல்வீராக; இப்படிச் செல்வதும் கந்தர்வ மணத்தின் பாற்படும் ; உங்களுக் குண்டாகிய காம மயக்கமும் தீரும்; ஆதலால் நீங்கள் திருக் குருகரைப் போயடையுங்கள் என்பதாம், நீரில் முளைத்த மெட்டிக் கோரையோடு தோன்றி விளங்கிய கரும்பில் தேனடை வைப்பது போல இந்தக் குடும்பத்தில் இருக்கிற தன்
னிற் சிறந்து விளங்கிய தலைவி யிடத்து அன்பு வைப்பீர் என்று உள்ளுறை யுவமம் கொள்க , இதனுள் நீர் தலைவியின் குடியாகவும் தோழி நெட்டிச்கோரை யாகவும் தலைவி கரும்பாகவும் தலைவனது அன்பு தேனடையாகவும் உவமித்தமை காண்க. இவை முழுவதும் முதாலொடு முதல் வந்த மெய் யுவமம்,-எண் வகை மணமான :– பிரமம், பிராசாபத்தியம்,ஆரிடம். தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன, தேனனடையைச் சந்திரனாக வுவமித்தல் பண்டை வழக்கு, : அவனுந் தான், ஏனலிதணச் தடிற் புகை யுண்டி யங்கும் , வானூர் மதியம் வரை சேரினவ்வரைத், தேனினிறாலென வேணி யிழைத்திருச்கும் கானக நாடன் மகன் ‘என்பதினாலுமறிக , தலைவன் தலைவி சுரத்தில் செல்லுதலால் திணை -பாலை யாயிற்று , தலைவனுடன் தலைவி செல்லுதலால் உடன்போக்காயிற்று, இத் துறை- * போக்கும் வரைவும் மனைவிக்கட்
டோன்றும் ” (தொல் – பொரு – 225) என்ற வழுவமைதிக்கு மாறாகத் தோழி கூற்றாற் கூறியது : ஒன்றித் தோன்றும் தோழி மேன ”(தொல் – பொரு – 19..) என்பதனாற் கொள்க,
கரும்பினிடைத்தேறல் -கலியன்-சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய மயலும் தீருமே –
————-
கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–
கூட்டங்கள் தோறும்- தாம்தாம் கூடுமிடங்களிலெல்லாம்,
குருகை பிரான் – திருக் குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய
குணம் -சிறந்த குணங்களை,
கூறும் – சொல்லிப் புகழ்கின்ற,
அன்பர் ஈட்டங்கள் தோறும் – அடியார்களின் கூட்டங்களிலெல்லாம்,
இருக்கப் பெற்றோம் – கூடி யிருக்கலாயினேம்;
இருந்து – அப்படிக் கூடியிருந்த,
எம்முடைய… நாட்டங்கள் தோறும் -இரண்டு கண்களிலும்,
புனல் வந்து- கண்ணீர் பெருகி,
நாலப் பெற்றோம்- வடியப் பெற்றோம் ;
(ஆதலால்) இனி மேல், வீட்டு- பரமபதத்தில்,
எங்கள் தோழர்க்கு என்றே (உள்ளவர்கள்) தங்கள் நண்பர்களுக்கு வேண்டுமென்று அமைத்தலால்,
பெரும் போகம்- பேரின்ப நலமானது, விளைகின்றது -(யாம் போகு முன்) உண்டா யிருக்கிறது –
கூடும் போதெல்லாம் குருகூர் நம்மாழ்வார் குணங்களைப் புகழுகிற அடியார் கூட்டத்திற் சேர்ந்து இருக்கப் பெற்றோம் – இருந்து அன்பினால் கண்ணீர் பெருகப் பெற்றோம் ; இனி மேல் பரம பதத்திற்கு யாம் வருகிறோ மென் றறிந்து அங்குள்ளார் அமைத்தலால் அங்கே எமக்குப் பெரும் போகம் விளைந்து கொண்டிருக்கிறது என்பதாம். குணம்-பிறரை வாழ்விக்கக் கருதிய குணம். கண்ணீர் வடிதல் – அன்பு மிகுதி பற்றி, ஆழ்வாரைத் துதித்தலால் பிறவிப் பிணி நீங்குதலும் பரம பதத்திலுள்ளார் தங்கள் நண்பரென்று அமைத்தலும் பேரின்பம் பெறுதலும் இதனால் கூறப் பட்டது.அளவையில் இன்பம் தருதலால் பெரும் போகமென்றார். தோறும்- தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச் சொல்,
————-
விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–
பொருள். அகப் பொருள் .
திணை -குறிஞ்சி
கிளவி –வரைவுழடூக்கம்.
துறை–தினையோடு வெறுத்து வரைவு கடாதல்
கிளை- தோன்றுதலை யுடைய,
பிறவி தளை – பிறப்பாகிய பந்தத்தை,
ஆசு அழிய – விரைவில் கெடும்படியாக,
தடுத்து- போக்கி,
தென் – தெற்கே செல்லுகிற,
பாலை வழி – பாலை நில வழியை,
தடுத்து -நீக்கி விட்டு,
களை – தீ வினைகளை,
ஆசு அற – அடியோடொழிய,
தடுத்து ஆண்டான் -நீக்கி என்னை ஆண்டருளிய நம்மாழ்வாரது ,
குருகையில் -குருகூரில்,
கார் புனமே -பெரிய தினைக் கொல்லையே !
என் வினை.- என்னுடைய தீ வினையே, தினையின் -தினைப் பயிர்களாக,
இளையா – முளைத்து,
கிளர -நன்றாக,
விளைகின்றது – முற்றிப் போகின்றது ; விளயாதொழிய…இப்படி முற்றாமல் கதிர் பறிந்த படியே யிருக்க,
மருந்தும் உண்டே – ஏதேனும் மருந்தும் இருக்கிறதோ ? |(சொல்லுவாயாக,]
ஆண்டானது குருகூரிலுள்ள தினைக் கொல்லையே! எனது தீவினை தான் உங்களிடத்தில் தினைப் பயிராக முளைத்துக் கதிர் முற்றிப் போகிறது ; அப்படி முற்றாதிருக்க மருந்துமுண்டோ? உண்டாயிற் சொல்லிக் காணா யென்பதாம். திவ்வியப் பிரபந்தத்தைப் படித்தால் யமனுக்குத் தப்பலாமென்பார் தென் பாலை வழி தடுத்தென்றார்-பாலை வழி- நீருநிழலுமற்ற கொடிய வழி,-தினை முற்றினமையால் தலைவியின் தமர் அத் தினையைக் கொய்து கொண்டு தங்களையும் வீட்டிற்கு அழைதுப் போவார் ; முற்றா திருப்பின் தாங்கள் அங்கே புனத்தைக் காத்திருச்கலாமென்பது பற்றி விளையாதொழிய மருந்துமுண்டோ வென்றாள், இங்ஙனம் பிரியச் செய்வது தீ வினையே யாதலால் ௮துவே தினை வடிவமாகியும் வந்து வருத்திற்று என்றாள். கை கோள் – களவு, கேட்போர் – தலை மகன் சிறைப்புறத்தானாக தினைப் புனத்தை நோக்கிச் சொல்லுவாளாய்ச் சொல்லியது, இடம் -முன்னிலை, காலம்- இறந்த காலம். மெய்ப்பாடு – அழுகை. பயன் – பகற் குறி விலக்கல். ஒழிய, ஓழி-துணிவுப் பொருள் விகுதி. உண்டே, ஏ – வினா,-களையா – உடன்பாட்டு வினை யெச்சம், ஆல் – அசை, இளையாம். ஆம் -சாரியை, கருப் பொருளாகிய தினையைக் கூறுதலால் திணை குறிஞ்சி யாயிற்று, களவில் புணர்ந்து ஓழுகினால் புறத்தார்க்குக் தெரியுமே யென்றும்-அப்படித் தெரிந்ததனால் தலைவனுக்கு ஊாறு நிகழமே யென்றும் அஞ்சிப் பல வழியாலும் களவுப் புணர்ச்சி புணராதபடி விலக்கிக் கலியாணஞ் செய்யும்படி. முயற்சிப்பதால் கிளவி வரைவு முடுக்கமாயிற்று, வரைவு – கலியாணம். இங்கனம் நாளும் தனியிடத்தில் தலைவியைச் சேருதற்குச் தகுதியான இத் தினைக் கொல்லையிலுள்ள தினையும் கொய்யப் பட்டால் தலைவியை வீட்டுக்கழைத்துப் போய் விடுவார்களே -இனிக் களவில் வராதபடி மண முடித்தால் நலமாகுமே யென்று குறிப்பிற் கூறுதலால் துறை – தினையொடு வெறுத்து வரைவு கடாதலாயிற்று,
நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –
———-
புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–
பொருளும், திணையம் அவை. கினவி–பகற்குறியிடையீடு,
துறை–நெடுந்தகை, வறுங்கள நாடி மறுகல்.
வழுவா- நீங்காத ,
நரகத்து இனம்- நரகத்தின் தொகுதியை,
பாழ்படுத்த- அன்பர்களுக்கில்லாமலழித்த,
பிரான் – தலைவரும்,
இன்னா – துன்பத்தைச் செய்கின்ற
கலியின் சினம் – கலியின் கோபத்தை ,
பாழ்படுத்த – பாழாகச் செய்ய,
நின்றான் – அவதரித்த வருமாகிய,
சடகோபன் -நம்மாழ்வாரது,
குன்று – மலையில்,
சூழ்கின்ற . சூழ்ந்து விளைந்த,
செந் தினையே – செவ்விய தினையே! புனம் பாழ் படுத்து – கதிர் கொய்தலால் கொல்லையைப் பாழாக்கி ,
புகழ் பாழ்படுத்தது அல்லால் -உனக்குண்டாக்கிய கீர்த்தியையும் பாழாக்கினதல்லாமல்,
புகுந்து – என்னிடத்துச் சார்ந்து ,
என் மனம் – எனது மனத்தையும், பாழ்படத்தனை -பாழாக்கினை ;
வாழ்தி- நீ வாழ்வாயாக; ௮ன்று, ஏ அசைகள்.-வாழ்தி ௮ன்றே -இவ்வளவு கொடுமை செய்த நீ வாழ்வாயல்லவோ ?-எனிலும் ௮மையும்-
நம்மாழ்வார் மலையிற் சூழ்ந்த விளைந்துள்ள தினையே ! புனத்தைப்
பாழாக்கிப் புகழைக் கெடுத்துக் கொண்டதன்றி என் மனத்தையும் பாழாக்கினை -இப்படிப்பட்ட நீ வாழ்வாயாக என்பதாம்-முற்றுதலால் குறவர் கொய்து கொண்டு போனது நிமித்தமாகப் புனம் பாழ்படுத்து என்றான், ௮ப் புனத்துக்கு அணியாக விளங்கிய தலைவியை இல் வயிற் செறித்ததற்கு ஏதுப்பட்டதனால் பனம் பாழ்படுத்து என்றானெனிலனுமாம். தானும் தலைவியும் கூடுதற்கு இடம் தந்ததனால் பெற்ற பயன் இழந்தமையாற் புகழ் பாழ்படுத்த என்றான். மெய்ப்பாடு -அழுகை , பயன் – ஆற்றாமை நீங்குதல். பகலில் தலைவியைத் தனியிற் சேர்தற்குத் தகுதியாயிருந்த இடம் பாழாய்ப் போய்த் தலைவியைச் சேர வழி யில்லாமையால் கிளவி-பகற் குறியிடை யீடாயிற்று,-தலைவியை வீட்டுக் கழைத்துப் போன பின் தலைவன் அவளிருந்த தினைக் கொல்லைக்குப் போய் அங்குத் தலைவியைக் காணாமையால் ௮வ் விடத்தைக் கண்டு வருந்துதல் துறையின் கருத்து,
தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை-
————
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–
பொருள் –அகப் புறப் பொருள்.
திணை -பெருந் திணை
துறை–மை யுறு கண்ணி கை யற வெய்தக் கண்ட தோழி யுட் கொண்டு புலம்புதல்
தினை ஓன்றிய – தினயினளவு பொருந்திய,
குற்றம்- பிழையும்,
அற்று – இல்லாமல்,
உணர்ந்தோர் – ஞான நிலை யுணர்ந்தருளிய ஆழ்வாரது,
மகிழின் திறத்தின் – மகிழ மலர் மாலை நிமித்தமாக ,
மனை ஓன்றிய-வீட்டில் வருந்தி யிருக்கிற,
கொடியாள் – கொடி போன்ற இடையை யுடைய எங்கள் தலைவி,
துயின்றாலும் -தான் புலம்புவதின்று சிறிது நித்திரை செய்தாலும், (தூங்க வொட்டாமல்),
தன்—-. வாய் அடங்கா – வாய் ஓயாமல்,
வினை ஒன்றிய – கத்துதல் பொருந்திய,
அன்றிலுக்கு – அன்றில் பறவைக்கு,
இடம் காட்ட – இருக்குமிடம் கொடுக்க,
விரி தலைய – விரிந்த தலையை யுடைய,
பனை அன்றியும் – பனை மரமல்லாமலும்,
தமியேற்கு -தனியான எனக்கு,
பழம் பகை – பழமையாகிய பகை மை,
உளதோ -வேறு என்று ஓன்றுண்டோ?
நம்மாழ்வார் மகிழ மாலை வேண்டி நங்கள் தலைவி வருந்திச் சிறிது பொழுது தூங்கினாலும் தூங்க வொட்டாமல் கத்துகிற அன்றித் பறவைக்கு இருக்கும் இடங் கொடுக்க விரிந்த தலையை யுடைய பனை மரமல்லாமலும் எனக்கு வேறு பழம் பகை யொன்று உண்டோ-இல்லை யென்பதாம். எந்தத் தேவரைக் குறிப்பினுங் காம முதலியன இல்லாதாரிலராதலின் அவரினும் சிறந்தவரென்பது தோன்றத் தினை யொன்றிய குற்ற மற்றென்றார்.-அன்றிற் பறவை பனை மரத்திலேயே யிருப்பது பற்றி அதல்லாமல் வேறு ஓரு பகை தனக்கில்லை யென்றாள். ௮ன்றில் ஆண் பெண் பிரியாததொரு பறவை; அது ஒன்றனை ஒன்று புணர்ச்சி நிமித்தமாகவே யழைக்கும் ) அங்கனம் அழைக்கும் போது பிரிந்தவர்க்குக் காம மயக்கம் அதிகரிக்குமென்பது பற்றி இங்கனம் கூறுதல் வழக்கம், இது கிளவித் தலைவன் பெயர் கூறுதலால். அகப் புறமும் கந்தருவத்தின் வழுவிய பெருந் திணையுமாயிற்று-தலைவி வருந்துதலை நோக்கிய தோழி தனக்குப் பகை யாயிற்றென்றது (தாயத்தினடையா ”’ (தொல் -பொ 221). என்ற விதி பற்றி யென்க , வாயடங்கா வினை -கத்துதல் -காட்ட என்னும் எச்சம் விரி என்னும் வினைப் பகுதி கொண்டது-ஓ எதிர் மறை-
————
பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–
பொருள் –அகப் பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக் கலங்கல்.
துறை–கண்படை பெறாது கங்குல் நோதல்
பகையாய் வருகின்ற- தமக்கு உட்பகையாகி வருகிற,
மூன்றையும் – காமம் வெகுளி மயக்க மென்னும் முக் குற்றங்களையும்,
வேரினொடும் – வேரோடும்,
பறித்து – பிடுங்கி எறிந்து
வகையாய் – அதன் பகுதியாய்,
வருவன – வருகின்ற,
யாவையும் – ஆகாமிய சஞ்சித பிராரப்த கருமங்களெல்லாவற்றையும்,
மாற்றி- போக்கி
இ- இந்த,
வையம் உய்ய – உலகத்தினுயிர்கள் பிழைக்கும் படியாக,
தொகை – நூறு நூறாகத் தொகுக்கப்பட்ட,
ஆயிரங் கவி – ஆயிரம் பாடல்களை,
சொன்னோன் – சொன்னவரரகிய நம்மாழ்வாரது ,
பெயர் சொல்ல – திருப் பெயரைத்
தியானிக்க வேண்டி,
சூழ் பனியின் புகை – புகை போலப் பனி
பரந்து குழ்ந்திருக்க,
ஆம் இரு ள் – குளிர்சியோடு கூடிய இருட்டானது,
பின்னை – பிற்பாடு,
எந் நாள் – எப்பொழுது,
கழிய புகுகின்றது -நீங்கப் போகின்றது ?
நம்மாழ்வாரைத் தியானிக்க வேண்டிப் புகை போலப் பனி சூழ்ந்த இருட்டானது எப்பொழுது நீங்கப் போகின்றதென்பதாம்.-காமம் -பிற பொருளிச் செல்லுகிற பற்றுள்ளம். வெகுளி – சினம். மயக்கம் -நல்லது தீயதென்றறியா மயக்கம். இவை நீ ங்கவே மனம் தூய்மையாகு மென்பர்,-இவற்றின் வகையாவது இவை காரணமாக வருகின்றவைகளை யென்க , ஆகாமியம் – இனி வரப் போகும் வினை,சஞ்சிதம் -இது வரை சேர்த்து வைத்திருக்கும் வினை. பிராரரப்தம் – அவற்றுள் பயன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வினைகள்-தலைவியை -இயற்கைப் புணர்ச்சிப் பின் பிரிந்த தலை மகன் இரவு மீட்டிப்பத் துயிலப் பெறாமல் அந்த இரவினைக் கடிந்து கூறுதல் இத் துறையாகும் இருளைக் கூறினமையால், திணை – குறிஞ்சி, கைகோள் – களவு.-கூற்று-தலைவன் கூற்று, கேட்போர் – இல்லை. இடம் – தன்மை. காலம் -நிகழ் காலம். மெய்ப்பாடு – இளிவரல். பயன் -தன் ஆற்றாமை நீங்குதல். மூன்று- தொகைக் குறிப்பு. வையம்- இடவாகுபெயர். பின்னை – இடைச்சொல் திரிபு
இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –
————-
பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–
பொருள்–௮கப் பொருள்,
திணை –உரிப் பொருளால் நெய்தல்.
கிளவி -வரைவு கடாதல்
துறை -தலைவன் சிறைப் புறத்தானாகத் தோழி செப்புதல்
இருள் புகுகின்றது – இருட்டானது வந்து கம்பிக் கொள்கின்றது
வண்ணம் – இவளுடைய நல்ல நிறமும்,
போகின்றது -மாறுபடுகின்றது
பூவை இந்தத் தலைவியின்து
கண் – கண்ணிலிருந்து,
நீர் உகுகின்றது – நீரானது வடிகின்றது
என்று- என்பதாகக் கருதி,
உயிர் – என்னுடைய உயிரானது,
ஓய்கின்றது – சோர்வை யடைகின்றது ;
உலகு ஏழும் – ஏழுலகங்களும்,
உய்ய – பிழைக்கும்படி,
தொகுகின்ற – பத்துப் பத்துப் பாடல்களாகச் சேர்க்கப் படுகின்ற,
ஆயிரம் -ஆயிரம் பாடல்களும்,
சொன்னோன் – அருளிச் செய்தவாரகிய நம்மாழ்வாரவதரித்த,
குருகை- திருக் குருகூருக்குரிய,
சொல்லால் – கீர்த்தியால்,
விளங்கத் தகுகின்றனர் – விளங்கத் தக்க வராகிய,
மேல் மேலும் – மேலும் மேலும் ௮திகமாக, காதல் தரும் அவர் – ஆசையைத் தருகின்ற தலைவர்,
அல்லர் – தகுதி யுடையார் அல்லர் ;
இருள் வருகின்றது ; தலைவியின் மாமை நிறம் மாறுகின்றது ;இவள் கண்ணீர் வடிகின்றது ; இவற்றைப் பார்த்து என்னுயிர் சோர்வடைகின்றது ; இவளுக்கு இங்கனம் காதலைக் கொடுக்கின்றவர் நம்மாழ்வாரது திருக் குருகூருக்குரிய கீர்த்தியினால் விளங்கத் தக்கவரல்லர் என்பதாம். முந்திய நாள் வரையிலும் இரவில் துன்புற்றவளாதலின் இன்றைத் தினமும் இரவு வந்தால் என் செய்வளோ வென்று அஞ்சிப் புகுகின்றது இருள் என்றாள். மாமை – மாந் தளிரின் தன்மை, சிறிது சிறிதாக உயிரின் வலிமை ஒடுங்குதலால் ஒய்கின்ற தென்று நிகழ் காலத்தாற் கூறினள். மெய்ப்பாடு -அழுகை, பயன் – வரைவு கடாதல். இரங்குதலால் திணை – நெய்தலாயிற்று, தலைவன் ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள் போலத் தலைவியின் துன்பத்தைச் சொல்லுதலின் தலைவன் கேட்டு வரைவானாதலின் கிளவி- வரைவு கடாதல் யாயிற்று, துறை யும் அதுவே யாகும்-
இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்-
———–
தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–
இருமையும் தீர்ந்த பிரான் – யான் எனது என்னும் செருக்கு நீங்கிய தலைவராகிய,
சடகோபன் தன் – நம்மாழ்வாரது,
இன்௮ருள் – இனிய கருணை யானது,
தருமமும் – அறமும்,
காமமும் – இன்பமும்,
தாவில் அரும் பொருளும் – கெடாத அரிய செல்வமும்,
தணவாக் கருமம் ஆகிய – நீங்காத செய்கை யுடையதாகிய,
காரணமும் – காரணமாகிய வீடும்
கண்டு – செய்து,
அவக் காரணத்தின் – பயனற்ற காரணங்களின்,
பெருமையும் – பெருமைகளும்,
மாயப் பிணக்கும் – வஞ்சனைவுடைய மாறு பாடுகளும்,
தவிர்ந்து – நீங்கும் படியாக,
உறு பேதம் செய்யும் – மிக்க வேறு பாட்டைச் செய்யும்; உம் – பிரித்துக் கூட்டப்பட்டது.,
நம்மாழ்வாருடைய கருணையானது தரும அர்த்த காம மோட்ச மென்னும் நான்கும் தந்து பயனற்ற காரணங்களின் பெருமையும் பிணக்கும் நீங்கும்படியான நல்ல வேறு பாடுகளைச் செய்யுமென்பதாம். செய்யுளாதலால் காமம் பொருள் என முன் பின் மாற்றி வைத்தார். தருமமும்,காமமும் பொருளால் செய்யப்படுதலின் அரும் பொருளென்றார்.
அறத்தால் சேர்ப்பதே பொருளாமாதலால் வருத்தமில்லாத என்றார். பயனற்ற தொழிலின் மூலங்களின் பெருமையும் பிணக்கும் நீங்க எனவே நல்ல நெறியில் சேர்க்கு மென்பது தானே பெறப்பட்டது. தவிர்ந்து என்பதனைத் தவிர எனத் திரித்திக் கொள்க. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” என்பதற்கு ஆழ்வாரே சாட்சி யெனக் கொண்டு இருமையும் தீர்ந்த பிரானென்றார் –
இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே-
———-
அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–
பொருள்–அகப் புறப் பொருள்.
திணை -பெருந்திணை
துறை–இரவுறு துயர மிகுளை கூறல்.
இயலோடு – இலக்கணத்துடன்,
இசையின் பொருளில் -இராகப் பொருளிலும்,
சிறந்த —-அலங்கார வல்லியில் – அலங்காரங்கள் அமையப் பெற்ற கொடி போலவும்,
போக்கு இல் – நீங்காத,
உள்ளம் – மனத்தால்,
தெருளில் – ஆராயுமிடத்து,
கரும்பு ஓக்கும் – கரும்பை ஓத்த,
ஆயிரம் பர – ஆயிரம் பாடல்களாலாகிய (திருவாய்மொழியை),
பண்டு – முன்னாளில்,
செய்தவர் – செய்தருளிய நம்மாழ்வார்,
௮௫ளில் – கருணையால்,
சில மகிழ் – சிலவாகிய மகிழ மலர் மாலையை,
ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய நமது தலைவிக்கு,
ஈவர் கொல் – கொடுத்தருளுவாரோ ?
அந்தி வந்த இருளில் – மாலையில் வந்த இருளைக் காட்டிலும்,
பிறிது துயரும் உண்டோ -துன்பம் செய்ய வல்லது வேறு ஓன்றுண்டோ
முன்னம் திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வார் தமது மகிழ மலர் மாலையை நம் தலைவிக்காக் கொடுப்பரோ ? நேற்று இராத்திரி பட்ட துன்பத்திற் கெல்லை யில்லை யாதலால் அவ் விருளைக் காட்டிலும் துன்பம் செய்வது வேறு ஓன்றுண்டோ ? என்பதாம். தொடர்ச்சி பெறப் பாடினமையால் அலங்காரம் அமைந்த கொடி யென்றார். மனத்தால்
ஆராயும் தோறும் சுவை மிகுதலால் கரும்பொக்குமென்றார். ஆயிழை – வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, துயரைச் செய்கின்ற இருளைத் துயர் என்றது குறிப்பு மொழி.
———–
அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–
(உலகத்தின் உயிர்கள் தம் பிறப்புக்களை), படர் – ஓடுகின்ற,
நீரின் இட்ட – தண்ணீரிலெழுதப்பட்ட,
நவம்-புதிய,
ரேகை – எழுத்தை,
உட் கொள்ள – மனத்திற் கொள்ள,
செய்தாது ௮ல்லால் – செய்ததே யல்லாமல்,
பவம் – பிறப்பாகிய,
ரேகையில் – வழியில்,
தம் பணி-தங்கள் தொழிலை,
கொள்ளுமோ- கொள்வனவோ ? (கொள்ள மாட்டா ஆதலால்),
நம்பி- மாயோன் அம்சமாகிய,
மாறனைப் போல் – நம்மாழ்வாரைப் போல,
மோஷ மாலை- மோட்ச மாலையாகிய,
திருவாயிரம் – ஆயிரம் பாடலாலாகிய திருவாய் மொழியை,
இசைப்பவர் – பாட வல்லவர்,
எவரே -யாவரிருக்கிறார்கள் ?(ஒருவருமில்லை அதனால்,)
அயற்கும் – பிரம தேவருக்கும்,
அரற்கும் – சிவ பிரானுக்கும்,
அல்லா அமரர்க்கும் – மற்றுமுள்ள தேவர்க்கும்,
எல்லாம் – முழுவதும்,
அவரே – ௮ந்த மாயோனே சிறந்தவர் ஆவார்;
உலகத்திலுயிர்கள் இத் திருவாய் மொழியைப் படித்துத் தம் பிறவியைநீர் மேலெழுத்தாக செய்து விடடனவன்றிப் பிறப்பிடத்தில் நாடினவில்லை -ஆதலால் மாயோன் வடிவமாகிய நம்மாழ்வாரைப் போல மோட்ச மாலை பாடினவர் யாவருளர்? அதனால் அந்த மாயோனே யாவர்க்கும் தலைவரென்பதாம். நம்பி -எல்லாக் குணங்களும் நிறைந்தவன். மோட்ச மாலை – திருவாய் மொழிக்கு ஒரு பெயர்.
————
தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–
மெய்யன் – உண்மை ஞான மறிந்தவரும்,
குருகைப் பிரான் -திருக் குருகூரிலவதரித்தவரும்,
எம்மை – எங்களை,
இன்னம்-மறுபடியும்,
ஒரு பவம் செய்கை – ஒரு பிறப்பில் தோன்றுவதை,
மாற்றிய – போக்கிய
பண்டிதன் – பாண்டித்திய முடையவருமாகிய நம்மாழ்வாரது,
வள் – வளம் பொருந்திய,
தமிழ்ப் பாவும் உண்டு – தமிழ்ப் பாடல்களு முள்ளன
௮வம் செய்கை மாற்ற- பயனற்ற செய்கையை மாற்று வதற்கு
செவி உண்டு – காதுகள் உள்ளன ;
நா உண்டு – படிப்பதற்கு நாக்கு உண்டு ;
அறிவும் உண்டு – அவற்றின் பயனை அறிவதற்கு அறிவுமுண்டு ; (இங்கனம் இருக்கையில்),
தம்மை ஒறுத்து – தங்களை வருத்திக்
கொண்டு,
தவம் செய்வதும் – தவங்களைச் செய்வதும்,
தழல் – அக்னி முகமாக,
வேள்வி முடிப்பதும் -யாகங்களைச் செய்வதும்,
எவன் செய்யும் – என்ன பிரயோஜனத்தைத் தரும்
நம்மாழ்வாருடைய பிரபந்தங்களும் அவற்றை ஆசிரியர் முகமாகக்கேட்க நமக்குச் செவிகளும், படிப்பதற்கு நாவும், பயனறிவதற்குப் புத்தியும் உள்ளனவாயிருக்க அந்தப் பிரபந்தங்களை ஆராய்ந்தடையும் பயனைக் காட்டிலும் தம்மை வருத்தித் தவங்களும் யாகங்களும் செய்வதனால் என்ன பயன் என்பதாம்,-உண்மையாகப் பயன்படும் நூலைச் செய்ததனால் மெய்யனென்றார். அவரைத் தியானித்ததனால் தாமடைந்த பயனை
உலகத்தாருக்குக் காட்ட வேண்டி பவம் செய்கை மாற்றியவென்றார்.பிறிதொரு மொழிக்கு இவ்வளவு வளப்ப மில்லாமையால் வண்டமிழென்றார். எவன் – குறிப்பு வினா வினை. மெய்யன் – குறிப்பு முற்றுப் பெயரெச்சம், உண்டு, என்பன – குறிப்பு முற்று,
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன் தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்-
———
உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–
பொருள்–அகப் பொருள்,
திணை -நெய்தல் ,
கிளவி–இடந்தலைப்பாடு ,
துறை–புகழ்தல் .
உண்டாட்டு – மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள் மூன்றனையும்,
இயலும் -செய்தருளிய,
திருமால் – திருமகள் கொழுநனாகிய மாயோனுடைய,
உருவை – அவதாரங்களை,
உயர்த்து – உயர்வு செய்து,
உலகை – உலகத்தை,
தொண்டு ஆட்டிய – அடிமையாகச் செய்து கொள்ள,
வந்து தோன்றிய – அவதரித்த,
தோன்றல் – நம்மாழ்வாரது,
குருகூர் துறை-குருகூரெல்லை யிலுள்ள கடல் துறை யிடத்து
நண்டு ஆட்டிய நங்கை – நண்டுகளைப் பிடித்து விளையாடுகிற தலைவி யினுடைய,
நாட்டங்களால் – குறிப்புக்களால்,
இந்த நாட்டை யெல்லாம் – இந்தஉலக முழுவதையும்,
திண்டாட்டிய – வருந்தச் செய்த,
கண்கள் போல் -கண்களைப் போல,
கயல்- கயல் மீன்கள்,
தீங்கு செய்யுமோ – தீமைகள் செய்யுமோ ? [செய்யாவாம்.]
திருமாலின் ௮வதார வடிவங்களை யுயர்த்திக் கூறி உலகத்தை அடிமையாகக் கொள்ள அவதரித்த நம்மாழ்வாரது குருகூர்க் கடல்துறைவாய் தலைவியின் குறிப்புக்களால் இவ்வுலகை வருத்திய கண்களைப் போலக் கயல் மீன்கள் தீங்கு செய்யுமோ? செய்யாவென்பதாம்.-திருக் கூத்துக்கள் மூன்றாவன :– அல்லியம், மல், குடம்; அல்லியம் – குவலையாபீடத்தின் தந்தத்தை முறித்த பொழுது ஆடியது ;இயம் அல்லாதது-வாத்தியமில்லாமல் யாடியது அல்வியமாம். மல்லாடல் – ஆங்கு மல்லரைக் கொன்று ஆடியது -குடம் – வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால் அவனது சோணித புரத்தின் தெருவில் கையில் குடமேந்தி ஆடியது, இவற்றின் விரிவைச் சுத்தானந்தப் பிரகாச முதலிய வற்றிற் காண்க ;இவை புறக் கூத்தின் பகுதி களாம். கைகோள் – களவு. கூற்று-தலைவன் கூற்று, கிளவி- முற் கூறப்பட்டது. கருப் பொருளால் திணை நெய்தலாயிற்று, இடந் தலைப் பாட்டில் புணர்ந்த தலை மகன் புணர்ச்சிக்குப் பின்னும் தனக்கு அவளிடத்திலுண்டாகிய அன்பின் மிகுதியால் புகழ்ந்தானென்பது துறையின் கருத்து, மெய்ப்பாடு – உவகை. பயன்-புகழ்தல்,
ஞான விசேஷங்களையே திருக் கண்கள் என்பர்
———–
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–
பொருள் -அகப் புறப் பொருள் ,
திணை- பெருந்திணை ,
துறை–மாலை பெறாது வருந்திய தலைவி
காதல் கைம் மிக்குக் கையற வுரைத்தல்
இந்த, நுண் பிறவி – அற்பப் பிறப்பாகிய,
மாயைக் கிழியை – மாயா ரூபமான படத்தை,
இழித்து—எம்மை – எங்களை
வாங்கிட – தம்முடைய பாதங்களில் சேர்த்துக் கொள்ள,
வல்லவர்- வல்லவராகிய நம்மாழ்வார்,
தீயை- நெருப்பை,
கிழித்து – துண்டாகக் கிழித்தெடுத்து,
ஒரு திங்கள் கொழுந்தென – ஒரு இளஞ் சந்திரனாக,
செய்ததல்லால் – செய்ததமன்றி,
அன்றில் பனை… அன்றில் பட்சிகள்
இருக்கின்ற பனை மரத்தை ,
பேயை கிழித்தென – பேயை இரண்டாகக் கிழித்தாற்போல்,
பிளவார் – இரு பிளவாகச் செய்தாரில்லை ; உளவாம் நோயை – அவர் நிமித்தமாக வுண்டாகிய காம நோயை,
இழிக்கும்-போக்கும் படியாகிய,
வகுளம் – மகிழ மாலையை,
நல்கார் – கொடுத்தாரில்லை
இந்தப் பிறவியைப் போக்கி நம்மை யடிமை கொள்ளத் தக்க நம்மாழ்வார் நெருப்பைத் திங்களாகச் செய்து விடுத்ததுமன்றி அன் றிலிருக்கும் பனையைப் பிளக்காமலும், அவர் நிமித்தமாக வுண்டாகிய காம நோயைப் போக்கத் தக்க மகிழ மாலையுங் கொடுத்தாரில்லை என்பதாம்-காமநோய் கொண்டார்க்கு நிலவு வெயில் போலச் சுடுதலால் திங்களைத் தீ யென்றார். ஒன்றனை யொன்று புணர்ச்சிக்கு அழைக்கும் ஓசை காமமுடையார்க்குத்
துன்பத்தைச் செய்தலால் அவ் வன்றிவிருக்கும் பனை மரங்களை பிளந்திலர் என்றாள். பேய்க்குப் பனையை யுவமித்தல்–கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையுமுடையன போல்வன ” என்ற கலிங்கத்துப் பரணிச் செய்யுளாலறிக, மெய்ப்பாடு – அழுகை. பயன் – ஆற்றாமை நீங்குதல்
——–
வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–
பொருளும், திணையும், துறையும் அவை.
அம்புலி – சந்திரனைப் போன்ற,
முகம் வாயில் – முகத்தின் வாயிலுள்ள,
கரும்பின் – கரும்பு போன்ற திவ்வியப் பிரபந்தங்களால்,
மறு பிறப்பை – உயிர்களுக்குண்டாகிய பிறப்புக்களை,
சொல் – சொல்ல வல்ல,
அம் புலி- அழகிய புலி போன்ற நம்மாழ்வார்,
ஓர் வகுளம் கொடார் – ஒப்பற்ற மகிழ மாலையைத் தந்தாரில்லை ;
இங்கு-இவ் விடத்தில்,
தாய் என்ற – தாயென்று சொல்லப் படுகிற, ஓர் இல்லம் புலி – ஒரு வீட்டுப் புலியானது ,
கொடும் கோகு தட்டி – வளைந்த தோள்களைத் தட்டிக் கொண்டு,
சல்லம் புவி இட்டு – முள்ளம் பன்றி போலொத்து ,
எதிரிடப் பாய்வது உண்டு – நேரே வந்து என் மேற்றாவி விழுவது முண்டு ; (இது போதாமல்),
மீள – மறுபடியும்,
அம்புலி எழுகின்றது -சந்திரனாகத் தோன்றுகின்ற -உம்- அசை நிலை
தம்முடைய வாயிலுள்ள திவ்ய ப்ரபந்தத்தால் ஐநங்களின் மறு பிறப்பைப் போக்குபவராகிய நம்மாழ்வார் தாம் இங்கு வருவதற்கு அடையாளமாக மாலை கொடுத்தாரில்லை ; தாய் வீட்டிலுள்ள புவி போலப் பாய்ந்து என்னை வருத்துகின்றாள் ; இது போதாமல் சந்த்ரனும் உதயமாய் விட்டது – இனி மேல் நான் உயிர் பிழைப்பது எவ்விதமென்றாள் என்பதாம்.-கரும்பு- உவமை யாகு பெயர்,-இரணடாமடியில் புலி-உவமை யாகு பெயர், மூன்றாமடியில் புல்லி என்பது தொக்கு, தாயின் கொடுஞ்சொல் முட் போல தைத்தலால் ௮வளை முட் பன்றியின் தன்மையைக் கொண்டென்றாள். புலி போலக் கறுவு கொண்டு பாய்தலால் புலியை உவமித்தார், இது உவமைக்கு உவமையின் பாற் பட்டு வழுவாகாதவாறு எப்படி யென்றால் தாயாகிய புலியானது முட் பன்றியின் தன்மை யடைந்து என்றதனாலே உவமைக்கு உவமை யாகாமை வெளிப்படை. மெய்ப்பாடும் பயனும் அவை. இதில் புலி யென்று ஒரு சொல்லே யடுக்கி வந்தமையால் சொற் பொருள் பின் வரு நிலை யணி- தாயைப் புலி யென்றதற்கேற்பப் பாய்கின்ற தென்றதனால் உருவகவணி,-விரகங்கொண்டு, கலங்க விழுதலால் தாய் புலி போலப் பாய்கின்றாள் எனவும், ௮வள் வார்த்தை முள்ளம் பன்றியின் முட்போலத் தைக்கின்ற தெனவும், சந்திரனது நிலவைக் கண்டு விரகம் ௮திகரித்தலால் ௮துவும் தோன்றிற்று எனவும் வருந்திக் கூறினாளாயிற்று-
சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –
———
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–
புகழ் மெய்ப் புலவோர் – புகழுடைய உண்மையான கல்விமான்கள்,
தொழுது இயல் – வணங்கி நடக்கப் பெற்ற,
நாயகன் -தலைவரும்,
ஒதும் – சொல்லப் பெற்ற,
கனல் தறை – யாச நெறிகள் மிக்க
நீர்ப் பொருநை – நீரை யடைய தாமிர பரணி சூழ்ந்த,
வழுதி நல் நாடன் – நல்ல பாண்டி நாட்டிலவதரித்த நம்மாழ்வாருடைய,
திருவாய் மொழி எம். மனத்தன – எம் மனத்திலே யுள்ளன; (ஆதலால்).
எழுதிய நாளும் – பிரமன் எமக்கு எழுதி வைத்தால் ஆயுளும்,
வினையும்-பழ வினைத் தொடர்ச்சியும், தொகுத்து – சேர வைத்து,
எம்மை – எங்களை,
இப் பிறவி- இந்தப் பிறப்பாகிய,
புழுதியில் நாற்று இட்டு – புழுதிக் காவில் மாற்று விதைத்துப் பயிராக்கி ,
வைப்பரிது – வைக்க முடியாததாகும்.
புலவோரால் வணங்கப் படுபவராகிய நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி எம் மனத்திடத்தன வாதலால் பிரம தேவர் எமக்கு ஒரு ஆயுளைக் கற்பித்து அதற்கேற்பப் பழ வினைகளும் சேர்த்துப் புழுதியில் நாற்றுப் பாவினது போல் இந்தப் பிறவியைச் செய்ய முடியாது என்பதாம். இம்மையி லனுபவிப்ப தெல்லாம். பழ வினைத் தொடர்ச்சி யாதலால் -வினை -பழ வினை யென்க -நாற்று இட்டு நெற் பயன் கொள்ளுதல் போல இப் பிறப்பால் இன்னும் வினையைச் சேர்க்கச் செய்ய முடியாதென்று கொள்க-வழுதி-கொடை வள்ளலுக்கும் பெயராதலால் பரோபகாரி யாகிய ஆழ்வாரை வழுதி நன்னாடனென்றார். வைப்ப – அகரம் தொக்கது -ஆல் அசை-துறையை இடைநிலைத் தீபகமாக்கி பின்னும்
கூட்டி நீர்த் துறை யென்றும் கொள்ளலாம்.
ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே-
———
மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–
மனையும் – மனைவியும், பெருஞ்செல்வமும் – மிக்க பொருளும்,
மக்களும் – புத்திராதிகளும்,
மற்றை வாழ்வும் – மற்றுமுள்ள வாழ்வுகளும்,
தம்மை நினையும் பதம் என – வேண்டாதபடி தம்மையே தியானித் திருத்தலே நல்லதென,
நின்றபிரான் – நிலையிட்ட தலைவராகிய,
குருகூர் நிமலன் – திருக் குருகூரில் அவதரித் தருளிய குற்றமற்ற நம்மாழ்வார்,
புனையும் – பாடி யருளிய,
தமிழ்க் கவியால் – தமிழ்ப் பாடல்களால், இருள் நீங்கு – அஞ்ஞான இருள் நீங்கிப் போய்,
பொருள் விளங்கி – மெய்ப் பொருளான ஞானம் தோன்றப் பெற்று,
வினையும் – இரு வினைகளும்,
திரிவு உற்றன – அழிவடைந்தன ;
வேதங்கள் குற்றம் நீங்கின – பொருள் விளங்காக் குற்றங்களெல்லாம் நீங்கலாயின.
தார புத்திர தனாதி எஷணாத் திரயங்களும் மற்றுமுள்ள வாழ்வுகளும்: தம்மைத் தியானிக்கும் பதமாக நின்ற நம்மாழ்வார் தமிழ்ப் பாடல்களால், அஞ்ஞானம் நீங்கி நன் ஞானம் பெற்று வினைகளும் அழிந்தன-வேதங்களும் குற்றமற்று விளங்கின வென்பதாம். தம்மை நினைத்தவர்கள் எஷணாதிகளாலும் பிற வாழ்வினாலும் அடையும் மகிழ்ச்சியிலும் மிகுத்துத் தம்மைத் தியானித்தலே மேற் கொள்ளுதலால் தம்மை நினையும் பதமென நின்ற வென்றார். மற்றை வாழ்வு – சுற்றத்தார் சேர்க்கை , எண் வகைப் போகம் தசாங்க முதலியனவுமாம்,
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்
————
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –
முன் – முன்னாளில்,
மாறனை – நம்மாழ்வாரை,
மதுர கவிப் பெருமாள் – மதுர கவி யாழ்வார்,
சென்று – அடைந்த ,
தென் தமிழ் தொடையால் – அழகிய தமிழ்ப் பாடலால்,
பதிகம் ஒன்றே உரைத்து .
கண்ணி நுண் சிறுத்தாம்பென்ற ஒரு பதிகம் பாடி,
அவன் – அந்த மாயோனுடைய
பொன் ௮டி -சிறந்த திருவடிகளை,
உற்று நின்றான் என்றே-அடைந்து நிலை பெற்று வாழ்கின்றனர் என்பதாக எண்ணி
மன்று புகழும்-உலகம் எல்லாம் புகழ் கின்ற
திரு வழுந்தூர் வள்ளல் – திரு வழுந்தூரில் உலகுய்ய வந்த கம்ப நாடர்,
பதிகம் – ஒரு பதிகம் போல,
பதிகம் ௮து ஆக – பத்துப் பதிகமாக,
இசைத்தனன் – பாடி யருளினார் ;
முன்னாளில் நம்மாழ்வாரை மதுர கவிப் பெருமாள் அடைந்து ஒரு பதிகம் பாடிப் பரமபத முற்றாரென்று இந் நாளில் கம்ப நாடர் ௮வ்வொரு பதிகம் போலப் பத்துப் பதிகம் பாடி யருளினார் என்பசாம். மன்று-சபையுமாம் -கம்பன் பிறந்த ஊர் காவேரி தங்குமூர், கும்ப முனி சாபங் குலைந்த வூர் ~ செம்பத்மத் தாதகத்து நான்முகனும் தந்தையும் காணா நான் மறையை யோதுவித்து வாழுமழுந்தூர்.” என்றதனால் கம்பர் திரு வழுந்தூரில் பிறந்தமை யறிக. தென் தமிழ் நாடு என்னாளும் உய்ய இராமாயணம் பாடிக் கொடுத்த பெருங் கொடையாளி யாதலால் வள்ளலென்றார், மதுர கவியார் – நம்மாழ்வாரைத் துதித்து முத்தி பெற்றவர். பதிகம் – பத்துப் பாடல்கள் சேர்ந்துள்ள தென்ற ஒரு தொகைக் குறிப்புச் சொல்.
மன்றே, சென்றே ஏ- ௮சை நிலைகள். ஒன்ற, ஏ- எண், என்றே-ஏ தேற்றம். பதிகமது, ௮து – பகுதிப் பொருள் விகுதி,
இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
சோழ நாட்டில் மூவலூர் ஆதித்தன் புதல்வரும் திருவழுந்தூரிற் பிறந்து உவச்சனெடுத்து வளர்க்க வளர்ந்தவருமாகிய இக் கம்பர் கதிரா மங்கலத்தின் கீழ்ப் பாதியாகிய வெண்ணெயூர் சடையப் பிள்ளை யிடத்து நட்புடையவராகி அவரால் ஆதரிக்கப் பெற்று இதின் வடபாலுள்ள தரணி என்னும் ஊரைத் தமக்கு முற்றூட்டாக (முழுவனுபவமாக) ப்பெற்று அங்கு வசித்து வரு நாளில் இவரது கவி பாடும் திறமை யறிந்த அரசர் முதலாயினோர் வட மொழி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் படி கேட்க அப்படியே மொழி பெயர்த்துப் பால காண்ட முதல் யுத்தகாண்டம் வரையிலுள்ள ஆறு காண்டங்களையும் தமிழில் செய்யுள் நடை யாகப் பாடி் அரங்கேத்தத் தொடங்குகையில் பலரும் ஸ்ரீ ரங்கத்தில் ௮ரங்க நாதன் சன்னிதியில் அரங்கேற்றுதல் தகுதியாகுமென அப்படியே திருவரங்கம் சென்று அங்குள்ள கல்வி யறிவுடைய பலருக்குத் தெரிவித்து அரங்கேற்ற எத்தனித்திருக்கும் பொழுதில் ஒரு நாள் இவரது கனவில் அரங்கராதன் தோன்றி -நம் சடகோபனைப் பாடினயோ ?” என்று கூறி மறைந்தருளினார். உடனே அஞ்சி நம்மாழ்வார் மீது இந்தஅந்தாதியைப் பாடி அங்கு கூடிய அவைக் களத்தில் இதனை முதலில் அரங்கேற்றிப் பின்பு இராமாயணத்தை அரங்கேற்றினார் என்பதாம் –
இவர் காளிதேவியாருச்கு அடிமை செய்பவராதலின் இராமாயணம் பாடும் பொழுது காளிதேவியாரைப் பந்தம் பிடிக்கச் சொல்லியவெண்பா :–
ஒற்றியூர் காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன் மெய்ச் சரிதை- பற்றியே
நந்தா தெழுது தற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி,
இக் கம்பரது இயற்பெயரின்னதென்று விளங்க வில்லை ; உவச்சரில் மேளம் கொட்டுகிற பகுதியாருக்குக் கம்பர் என்ற பட்டப் பெயருள்ளதென்று கல் வெட்டுக்களால் தெரிகிறதனால் இவரும் அப் பகுதியாரென்று ஊூ்கிக்கப் படுகிறார், இவரிருந்த நாட்டுக்கு வெண்ணெயூர் நாடென்ற பெயருளதா யிருந்தது – இவரின் பெருமையை யறிந்த அரசாங்கத்தார்’அந்நாட்டினை இவர் பெயரால் மாற்றி விட்டதனால் கம்ப நாடென்று பெயராயிற்று, இங்கனமே முதலில் நித்த வினோத வளநாடென்ற ஒன்றனைப் பின்பு அருண் மொழித் தேவர் வள நாடென்று பெயரிட்டமையும் ௮றிக,
இன்னும் இவர் சரித்திரம் ஆராய்சியில் இருப்பதால் பின்பு வெளியிடப் படும்
இவர் காலம் -இற்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது
இவற்றுடன் இருந்த புலவர்கள் ஓட்டக் கூத்தர், நேமிநாதர், பேராசிரியர் ஒவ்வையார் புகழேந்தி முதலானோர்
இவர் செய்த நூல்கள்
கம்ப இராமாயணம்
சடகோபர் அந்தாதி
ஏர் எழுபது
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்