ஸ்ரீ பாஷ்யம் —ஸமுதாயா அதிகரணம் (2-2-3)-ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

சூத். 2-2-17 :: ஸமுதாய உபய ஹேதுகே அபி ததப்ராப்தி ::

புத்தாவதாராம் பகவதவதாரம் ஆன்படியாலே அவனும் ஸர்வஜ்ஞன்தான். அவனுக்கு கிஞ்சித்தும் மோகம் கிடையாது.
இல்லை மற்றவர்களை மோகிப்பனோ என்னில் அவனும் தான் ஸர்வலோக ஸுக்ருது, தயாவான் ஆனபடியாலே
விப்ரலிப்சை கிஞ்சித்தும் கிடையாதே. ஆகையாலே பாஞ்சராத்ர சாஸ்த்திரத்தைப் போலே புத்தாகமத்தையும்
பிரமாணமாக கொள்ளவேண்டும் என்று பூர்வ பக்ஷம் வருமேல் , அப்படி அன்று. புத்தாகமாம் நமக்கு பிரமாணம் ஆகாது.

வேதாபஹாரிணம் தைத்யம் மீன ரூபே நிராகரோது
ததர்த்தாபகாரோ தைத்யாம் வியாஸ ரூபி நிராகரோது

என்று புத்தாவதாரம் எடுத்து பிரவர்த்தனம் பண்ணின பிரக்ரியைகளை எல்லாம் வியாஸாவதாரம் எடுத்து நிராகரித்தார் என்பது பார்க்கத்தக்கது.
பகவானே சொன்னானாகிலும், வேத விரோதமானால் அதை நிரசிக்க வேண்டியது தான். பௌத்தர்களுடைய ஆசார பிரக்ரியைகளை
ஜைமினி பூர்வ காண்டத்தைக் கொண்டு நிரசிக்க, அவருடைய ஆசாரியரான வியாசர் அவர்களுடய தத்வங்களை நிராசனம் பண்ணுகிறார் இங்கு.

பகவான் தான் இட்ட கட்டளைகளை யார் பாலனம் பண்ணுகிறார்களோ அவர்களுக்கு எதிரானவர்களை
தண்கடல் வட்டத் துள்ளே திண்கழல் அசுரர்களை தடிந்துண்ணும் –என்றபடி அவர்களுடைய மோகன சாஸ்த்திர
நிரசனம் பண்ண பகவான் எடுத்த ஆவேசாவதாரம்தான் வியாஸாவதாரம்.

இப்படிப் பட்டதான புத்தாவதாரத்தில் என்னவெல்லாம் சொன்னாரோ, அதை பின்பற்றி இந்த கலியுகத்தில்
மாத்யமிகன்
வைபாஷிகன்
சௌத்ராந்த்ரன்
யோகோசாரன்
என்று நால்வகை பௌத்த சாகைகள் ஏற்பட அவர்களில் , முதல் முன்னம்
யோகாசாரனும், சௌத்திராந்திகனும் நிராசனம் பணப் படுகிறார்கள் இந்த அதிகரணத்தில்.

இவர்கள் நால்வருமே க்ஷணிக வாதிகள். இவர்கள் சித்தாந்தத்தில் காலம், ஆகாசம், திக்கு, விதிக்கு எதுவும் கிடையாது.
இவர்கள் மதத்தில் ஜ்ஞானம் ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப் படுகிறது. ஜ்ஞாத்ரு ஞேயங்கள் ஒப்புக்கொள்ளப் படவில்லை.
அந்த ஜ்ஞானமும் எப்படி இருக்கிறது என்றால் அது க்ஷணிகம் என்கிறான்.
அவ்வோ க்ஷணம் என்பதும் தோன்றும் போதே மறைவது. க்ஷணிக கடபடாதிகள் இருப்பால், க்ஷணம் என்கிற காலம்
ஆனுமானித்து அறியலாவது. அதை கடக்ஷண : என்கிறார்கள்.
இமை கொட்டும்போது, இமையோடு இமை சேரும் கால பரிமாண அளவே ஆகும் அது.
வைசேஷிகனோ ஒரு பொருள் உண்டாகும்போது உற்பத்தி, ஸ்திதி, விநாசம் என்று 3 கால அளவைகளையாவது ஒத்துக் கொள்கிறான்,
ஆனால் பௌத்தன் உற்பத்தி ஸ்திதியிலேயே விநாசம் என்பததாக அத்யந்த அல்பமாக அதை கணக்கிட்டு,
இல்லாமைக்கு ஈடாக சொல்லிவிடுகிறான்.

வைசேஷிகன் என்ன சொன்னான்? பாஷாணம்போல இருக்கிற பிரக்ருதி மேலே தர்மபூத ஜ்ஞானம் வந்தேறி என்கிறான்.
அத்வைதி ஸ்வரூபத்தில் தான் ஜ்ஞானம் உண்டு. அதற்கு சுடர், பிரகாசம், தர்மபூத ஜ்ஞானம் இவை எதுவும் கிடையாது என்றான்.
நம்முடைய சித்தாந்தத்தில் தீபம் போல ஸ்வரூப கத ஜ்ஞானம் உண்டு. தீப பிரபை போலே அத்தல் பரம்பி வருகிற
தர்ம பூத ஜ்ஞானம் என்ற இரண்டும் ஆத்மாவுக்கு உண்டு என்பதாகும்.

பௌத்தர்களின் மாதயமிகன் ஆத்மா சூன்யம் என்றான். மற்ற மூன்று பேரும் க்ஷணிக விஜ்ஞானம் ஆத்மா என்றனர்.
அதனுடைய உற்பத்தி விநாசம் எத்தனை வேகம் என்றால், அது நம்முடைய இந்த்ரியங்களால் கிரகிக்க முடியாத அளவுக்கு
க்ஷணிக பிரவிருத்தி என்றனர். அது உள்ளே இருந்தால் ஆலய விஜ்ஞானம். வெளியே வந்தது என்றால் பிரவிருத்தி விஜ்ஞானம் என்றனர்.
ஜ்ஞாத்ரு ஞேயங்கள் எல்லாம் பிரமம் என்றும் சொல்லி வைத்தார்கள்.

ஜகத் அபல பதி என்று முதல் முதலில் அத்வைத மதத்தைச் சொன்னவன் யோகாசாரன்.
இத்தால் அவர்களுக்கு அத்வைத விநாயகன் என்ற பெயரும் உண்டு. சங்கரருடைய ஆசாரியரான கௌடபாதர் அதை வாங்கி,
வைதிக மதத்தோடு பொருத்தி பிரஹ்ம ஏக வாதத்தை பிரவர்த்திப்பித்தார். இத்தால் இவர்களை ,
இந்த ஏக பிரஹ்ம காரண வாந்தியை பிரச்சன்ன பௌத்தன் என்று சொல்வதும் உண்டு.

சத்ருக்களை ஜெயிக்க அபிசார மார்க்கத்தை வேதமே சொல்வது போல, இந்த பௌத்தர்களை ஜெயிக்க அவர்களுடைய
ஏக விஜ்ஞான வாதத்தைக் கொண்டே பிரஹ்ம சத்ய வாதத்தை சித்திக்க வேண்டி வந்தது.
எப்படி கர்ம காண்டத்தை ஜைமினி பண்ணி ஜ்ஞான காண்டத்தை வியாஸர் பண்ணும்படி விட்டாரோ ,
அதே போல பௌத்தர்களுடைய ஜகன் மித்யா வாதத்தை ஒப்புக்கொண்டு சங்கரர் நிர்விசேஷ பிரஹ்ம ஸத்ய வாதத்தை செய்து போகவே ,
பகவத் ராமானுஜர் கிஞ்சித்து அதை திருத்தி, ஸவிசேஷ பிரஹ்மாத்வைதத்தை நிலை நாட்டலாயிற்று.
இல்லையாகில், பிரஹ்ம சத்யம் என்பதிலிருந்தே தொடங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா?

ஜகன் மித்யாவாதிகளான அத்வைதிகள் , போக்தா, போக்கியம், பிரேரிதா என்கிற த்ரிபுடியில்
போக்தா போக்கியம் இரண்டும் பிரகிருதி தர்மமாகையாலே அவை வியாவஹாரிகா சத்யம் என்று தள்ளி விட்டு,
பிரேரித்தாவாகிற பிரஹ்மம் ஒன்றே பாரமார்த்திகம் என்றனர். ,

வைபாஷிகனும், சௌத்திராந்தனும் ஞேயமான ஜகத்தை க்ஷணிகம் என்றாலும் அதை ஒத்துக் கொண்டவர்கள்.
அதிலும் வைபாஷிகன் அவை பிரத்யக்ஷ சித்தம் என்றான். சௌத்திராந்திகன் அனுமான சித்தம் என்றான்.
இது தான் இருவருக்குமான வித்யாசம். ஒப்புமை மூவருமே க்ஷணிக வாதிகள்.

ஜகத் காரண- காரிய வாதத்தில்
தார்கிகனுடையது — ஆரம்ப வாதம்.
வைபாஷிக, சௌத்திராந்திகன் – – ஸங்காத வாதம்
சாங்கியன் , விசிஷ்டாத்வைதி — பரிணாம வாதம்.
மாத்தியமிக்கான் — சூன்ய விவர்த்த வாதம்
(முத்துச் சிப்பியைப் பார்த்து வெள்ளி என்று பிரமித்து போல சூன்யத்தைப் பார்த்து இந்த அஹம் என்பதும்,
ஜகத்தும் வருகின்றன என்ற வாதம். )
யோகாசாரன் – விஜ்ஞான விவர்த்த வாதம்.
சங்கரர் — நிர்விசேஷ பிரஹ்ம விவர்த்த வாதம்
பர்த்ருஹரி – ஸப்த விவர்த்த வாதம் (ஸப்த விஸ்போட – Big Bang Theory)

ஸங்காத வாதிகளான வைபாஷிக, சௌதிராந்திகன் சொல்வது
நிலம், நீர், தீஎரி , கால் என்கிற நான்கும் கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம் என்கிற தன்மைகளை அடைவே
நிலம் 4ம் , நீர் கந்தம் தவிர்ந்த 3ம், எரிதீ கடை 2ம், கால் ஸ்பர்ச தன்மை மட்டும் உடைய பரமாணுக்களின் சங்காதம் ஆகும்.
பல பூமி பரமாணுக்கள் சேர்ந்து பூமியும், பல ஜல பரமாணுக்கள் சேர்ந்து ஜலமும், பல தேஜஸ் பரமாணுக்கள் சேர்ந்து தேஜஸும்,
அவ்விதமே பல வாயு பரமாணுக்கள் சேர்ந்து வாயுவும் உண்டாக, இந்த 4பூதங்களும் சேர்ந்து
தேஹம், இந்த்ரியங்களாகிற பௌதிக பொருள்கள் உண்டாகின்றன.
இந்த 4 தத்துவங்களின் அபாவமே ஆகாசம் என்றும் சொல்கிறான்.

அதில் அஹம் என்கிற ஆத்ம விஷயம்,
தேஹத்தின் உள்ளிருக்கிற பொருள்களின் ஜ்ஞானத்தின் ஸந்தானமே/சமூகமே ஆகும் .
இதை அனுமானத்தால் அறியலாம் என்கின்றனர்.
ஸௌத்ராந்திகன் பாஹ்ய பதார்த்தங்களான ஞேயங்களும் அனுமானிகமே என்கிறான் அவன்.
யோகாசாரன் பாஹ்ய பதார்த்தங்களை சொப்ன துல்யம் என்று சொல்லி மித்யா என்கிறான்.

உபயஹேதுகே ஸமுதாயே அபி — ஸ்பர்ச,ரூப, ரஸ, கந்த தன்மாத்திரங்களின் சமுதாயமான
காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய 4 பூதங்களும், அவைகளை காரணமாகக் கொண்ட தேக, இந்திரிய சமுதாயத்திலும்
ததப்ராபதி – ஸங்காதமாகும் தன்மை ஒவ்வாது, ஸர்வ க்ஷணிக வாதத்தாலே..

———–

சூத். 2-2-18 :: இதரேதர பிரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந, ஸங்காதபாவா நிமித்ததவாத் ::

இதரேதர பிரத்யயத்வாத் -இந்த சுழச்சியில் ஒன்றுக்கொன்று காரணமாக இருப்பதால்
உபபந்நம் – சமுதாயமாகும் தன்மை பொருத்தும்.
இதிசேத் ந – என்று இப்படி சொல்வது பொருந்தாது
ஸங்காத அபாவா நிமித்வத்வாத் – அவித்யை முதலானவை பூத சமுதாயத்துக்கு காரணம் ஆகமாட்டாது –

பாஹ்யார்த்த அஸ்தித்வ வாதிகளான வைபாஷிக, ஸௌத்ராந்திகன் இருவரில் ஒருத்தன் ஜகத்து பிரத்யக்ஷ பரம் என்றான்.
மற்றோருத்தன் அனுமானிக பரம் என்றான். ஸ்பர்ச, ரஸ ரூப கந்தம் இவைகளின் பரமாணுக்களின் ஸங்காதம் 4 பூதங்களாய்,
அப்படியே இந்த 4 பூதங்களின் ஸங்காத்தம் பௌதிகமான தேஹேந்திரிய மாகும் என்றும்,
இந்த ஸங்காத்தமும் க்ஷணிகம் ஆனபடியால், இவைகளின் தோற்றம் மித்யையாய் ஸத்யமன்று.
அண்டத்தில் உள்ளபடியே பிண்டத்தில் என்ற வகையில், தேகத்தின் உள்ள பொருள்களின் ஜ்ஞான ஸந்தான பரம்பரையே ஆத்மா
ஆன படியாலே கார்யா காரணம் அனைத்தும் க்ஷணிகம் என்கிறான்.

நாம் சொல்லுகிற அவித்யா, கர்ம, வாசனா, ருசி , பிரகிருதி ஸம்பந்தமாகிற 5 – பஞ்ச ஆராதி (spokes ) கர்ம பிரவாக
சக்கரத்தால் வந்த ஷாட்பாவ விகாரம் சுக துக்க ஹேது போல
இவர்களும் க்ஷணிக பொருள்களை ஸ்திரமானவைகளாக நினைப்பிடும் விபரீத ஜ்ஞானத்தால் பந்தமும்,
அதனால் ராக துவேஷமும் உண்டாகி ஜனனமரண சக்ரம் சுழல்கிறது என்கின்றனர்.

இதெல்லாம் நடக்க நாம் ஆத்மா என்பது ஸ்திரமாக உண்டு. புண்ய பாபங்கள் என்பன உண்டு.
பகவான் தான் இதை எல்லாம் நடத்துகிறான் என்று ஒத்துக் கொள்கிறோம்.
ஆனால் இவர்கள் இவை எதுவும் ஸ்திரம் என்பதை ஒத்துக்க கொள்ளாமல் அவித்யா-பிரகிருதி சம்பந்த சக்ரத்தைத் பற்றி விவரிக்கிறார்கள்.
அவர்கள் சொல்லுகிற அவித்யா என்பது
அவித்யா, விஜ்ஞானம் ஸம்ஸ்கார: நாமரூபம் ஷடாயதனம் ஸ்பர்ஸ: வேதநா திருஷ்ணா உபாதானம் பவா ஜாதி
ஜரா மரண சோக : பரிவேதனம் துக்கம் துர்மனஸ்தா என்கிற ஆரங்களைக் கொண்டதாய்
ஒன்றுக்கு கொன்று காரணமாக இருந்து லோக யாத்திரை நடக்கிறது என்கின்றனர்.
இதற்கு ஸுத்திகையில் ராஜத புத்தி பண்ணுகையாகிற அதஸ்மிந் தத் புத்தி – காரணமாகிறது என்கின்றனர்.
இவன் சொல்லுகிற ஆவித்யை பிரமத்துக்குக் காரணமாகலாம் ஒழிய, ஸங்காதத்துக்கு காரணமா முடியாது என்பது கேள்வி.

ஸர்வம் யதார்த்தம் பிரமா என்று அவன் சொல்லுகிறான்.
ஸர்வம் யதார்த்தம் ஜ்ஞானம் என்று நாம் சொல்லுகிறோம்.
சித்தம் என்பது க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவைக் குறிக்கும்.
சைத்யம் ஸ்ரத்தை வீர்யம் ஸ்ம்ருதி ப்ரீத்தி இத்தோடு பூத தாதுக்கள் சேர்வதால் தேஹேந்த்ரிய பிராணன் சம்பவிக்கின்றன என்கிறான்.

ஜ்ஞாநாதி -இச்சேதி- யததே-கரோதி- அநுபவதி- ஸுக்யதி என்று இவை அனைத்தும் எத்தனை சுருக்கமாக நடந்தாலும்
அவை நடப்பதற்கு அத்யல்ப காலமாவது வேண்டாவோ ?
அதற்குள்ளாகவே தோன்றும் பூத பௌதிகங்கள் நசிந்து விடுகின்றன என்கிற க்ஷணிக விஜ்ஞானத்தால்
சமுதாய உத்பன்னத்துக்கு அவகாசமே கிட்டாது என்பதால் இவர்கள் சொல்வது பொருந்தாது.

ஸ்திரத்தில் அஸ்திரத்தவ புத்தி பண்ணுகிற ஜீவன் அவனும் அஸ்திரம் என்றான போது,
அஸ்திரமான ஜ்ஞானத்தால், அஸ்திரமான ஜீவன் ஸ்திரத்தவ புத்தி பண்ணுகிறான் என்பது எங்கனம் பொருந்தும் ?
காரணமான அந்த பிரமாத்மக ஜீவனும் அஸ்திரமேயாய் ஸங்காதம் யாரைக் கொண்டு உண்டாகும் ?
உத்தர க்ஷணம் உண்டாக்குவதற்கு முன்பாக, பூர்வ க்ஷணம் நஷ்டமானால், பதார்த்தங்களின் உற்பத்தி எப்படி சாத்தியம் ?
இங்கு க்ஷணம் என்பது பதார்த்தங்களைக் குறிக்குமல்லது காலத்தைக் குறிக்காது.
காரணம் பௌத்தன் காலம். ஆகாசம். திக்கு இவைகளை ஒத்துக் கொள்வதில்லை என்பதை முன்பே பார்த்தோம்.
ஸதி குட்யேது சித்ர கர்ம : ? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத?
கந்தர்வ லோக சலா – என்று கூடிக் கலைகிற மேகக் கூட்டம் – ஜலதர படலம் – போல உள்ள இவர்களுடைய
க்ஷணிக வாதத்தால் இதரேயிதர பிரத்யய உத்பந்நம் அஸம்பவம்.

————–

சூத். 2-2-19 :: உத்தரோத்பாதே ச பூர்வ நிரோதாத் ::

உத்ரோத்பாதே – பின் க்ஷணம் உண்டாகும் வேளையில்,
பூர்வநிரோதாத் ச — முன் க்ஷணம் அழிந்து விடுவதால் , இவர்கள் வாதம் பொருந்தாது.

உங்களைப் போல் ஸத் காரிய வாதம் என்றால் நீங்கள் சொல்வது ஏற்புடைத்து. ஆனால் அஸத்தே காரியமாகிறது
காரணம் அஸது என்பது எங்களுடைய வாதம்.
இல்லாததனின்றும் (5ஆம் வேற்றுமை உறுபு) இருப்பு உண்டாகி நசிகிறது என்பதாக சொன்னான்.
நையாயிகன் இல்லாததால் (6ஆம் வேற்றுமை) – காரியம் அஸதாகையால் – புதிதாக உண்டாகிறது என்பதாக அவர்கள் வாதம்.

இதற்கு மறுப்பு என்ன வென்றால் – இல்லாத தின்றும் பொருள்கள் உண்டாவதானால், எப்போதுமே சிருஷ்டி நடக்கலாமே ?
காரணம் என்ற நிமித்தம் இருக்க வேண்டாவே ? என்றால் அதற்கு அவர்கள் சமாதானம் இப்படி உள்ளது.
அதாவது ஒரு பொருள் உண்டாகி நசியும் போது அந்த பொருளின் அபாவம் ஏற்படுகிறதே,
அந்த அபாவத்தால் அப்பொருளின் உற்பத்தி அடுத்தடுத்து நடப்பதற்கு காரணமாகிறது என்கிறான்.

அபாவம் ஒன்று இருந்தால் பொருள் உண்டாகும் என்றால், கட அபாவத்தால் கடம் தான் ஏன் உண்டாக வேண்டும்?
கடம். படம். அஸ்வம். சிம்மம் இவை ஏன் உண்டாக்க கூடாது என்பதற்கு அவர்கள் சொல்வதாவது
கட அபாவத்தில் இருந்து கட ஜாதிதான் உண்டாகும் வேறு பொருள் உண்டாகாது என்கிறான்.
அதாவது காரண காரியத்துக்கு விசஜாதியத்தை ஒத்துக் கொள்வதில்லை. ஸஜாதீயத்தைத்தான் ஒத்துக் கொள்வதாகச் சொல்கிறான்.

ஆக, அதை வாதத்திற்காக ஏற்றாலும், , ஒருகடத்தினுடைய அபாவத்தால்
நானா வர்த்தித – வேறு வேறு இடத்தில், தேசத்தில் உள்ள கடங்களின் உத்பன்னம் – சாத்தியமோ என்ன? இல்லை
எந்த இடத்தில் எந்த கடத்தின் அபாவம் உண்டாச்சுதோ அந்த இடத்தில் அந்த கடஜாதி உத்பன்னமே சாத்தியம் என்றான்.
தேச காலங்களை இவர்கள் ஒத்துக் கொள்ளாததால் , கிரகிக்கிற ஆலய விஜ்ஞானமோ, பிரவர்த்தக விஜ்ஞானமோ
எதுவும் ஸ்த்ரமில்லாதபோது இவர்களுடைய இந்த வாதம் தள்ளத் தக்கது.

இவர்கள் சொல்லுகிற அவித்தையைக் காட்டிலும் நாம் சொல்லுகிற அவித்யை வேறுபட்டது.
அநஹத்தில் அஹம் புத்தி பண்ணுகை அஹங்காரம்– சரீரமே ஆத்மா என்று நினைக்கை அஹங்காரம்.
இந்த பாவ பந்தம் பாரமார்த்திகம் . அத்வைதிகள் சொல்வது போல் அபாரமார்த்திகம் – ஸ்வப்ன துல்யம்.
வாக்யார்த்த ஜ்ஞானத்தால் போக்க வல்லது என்பது அல்ல. அது பகவத் கேவல கிருபையால் மட்டும் போக்க வல்லது.
பகவத் கிருபா பிரசாத லப்த ஜ்ஞாநாந் மோக்ஷ : என்பது நம்முடைய சம்பிரதாயம்.

தர்மி கல்பனார்த்தோ வரம் தர்ம கல்பனா – தர்மி ஸப்த வாச்சயமான ஆத்மா என்பது க்ஷிணிகம் தான்.
அது க்ஷணிக விஜ்ஞான சந்தானமே. அதுவே சரீரகதமாக இருக்கும் போது ஆலய விஜ்ஞானம் என்றும்,
அந்த ஆலய விஜ்ஞானம் பாஹ்ய பதார்த்தங்களோடு சையோகம் கொண்டு பாஹ்ய பதார்த்தங்களை விநிவேசனம் பண்ணிக் கொண்டால்
அதுதான் பிரவிருத்தி விஜ்ஞானம் (அ ) சித்த விஜ்ஞானம் – என்கின்றனர்.
இத்தாலே தர்மத்தையே (ஆலய விஜ்ஞானத்தையே), தர்மியாக அதாவது புத்தியையே ஆத்மா என்று சொல்வது தவறு ,
யஸ்யாநுபவ தஸ்யேவ ஸ்மிருதி : என்று ஸ்ம்ருதி, பிரத்யபிக்ஞா வியவகாரங்கள் உண்டாக.
ஸ்திரமான ஆத்மா (அ ) தர்மி இருந்தால் அல்லது மறுபடி நினைத்துப் பார்க்கை, நினைவு இவை எல்லாம் ஏற்படவழி இல்லை.

கடக்ஷணிக வாதத்தில் பலாபலன்கள் மாறிப்போவது குற்றம் என்று நாம் சொல்ல,
குற்றமாகாது என்பதற்கு அந்யதீய பாலார்த்தஸ்ய அந்யஸ்ய பிரவிருத்தி : குழந்தை பிறந்த போது தகப்பனார் செய்கிற ஜாத கர்ம,
நாம கரண ஹோமத்தில் பலன் செய்கிறவனுக்கன்றி, அவன் குழந்தைக்கு என்று வேத கர்ம காண்டத்தில் நீங்களும்
ஒத்துக் கொண்டிருக்கிற போது, எங்களுடைய வாதம் குற்றமாகாது. எங்கள் க்ஷணிக வாதத்தாலே
உற்பத்தி விரோதங்கள் உண்டாகாது என்று மறுதலிக்க;

இதற்கு உத்தரமாக, விசேஷ சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட ஒன்றை சாமான்ய சாஸ்திரத்துக்கு பயன் படுத்தக் கூடாது.
அர்த்தார்த்தி ராஜகுலம் கச்சேத் . போஜனார்த்தி போஜனசாலா கச்சேத் – என்பதாக சாமான்ய சாஸ்திரத்துக்கு
சாமான்ய சாஸ்திரத்தில் இருந்தே உதாகரிக்க வேண்டும் என்று அவன் வாதத்தை தள்ளிப் போட்டனர்.

————

சூத். 2-2-20 :: அஸதி ப்ரதிஜ்ஞோபரோத : யௌகபத்யம் அந்யதா ::

உற்பத்தியும் அஸத்தாலே லீனமும் அசத்தாகவே என்கிற இவர்களுடைய ஸித்தாந்தம் அதார்மிகமானது.
ஜைனனும் நைராத்மா பாவத்தை ஆதரிப்பதில்லை.
குமாரில பட்டர்
அகளங்க தேவன்
சங்கரர்
ஞாயகுஸுமாஞ்சாலி உத்யநாச்சார் என்ன
இவர்கள் எல்லோரும் கூட பௌத்த சித்தாந்தத்தை கண்டனம் பண்ணுகின்றனர்.
ஆகவே தான் இவர்களுக்கு பின்பு வந்த எம்பெருமானாருக்கு ஜகத் ஸத்யத்தை நிலைநாட்டல் எளிதாயிற்று.

அஸதி – காரணம் நசிந்த உத்தர க்ஷணம் காரியம் உண்டாகிறது –
ஒரு உத்தர கடக்ஷணத்திற்கு ஒரு பூர்வ கடக்ஷணம் அபாவம் காரணம் என்றால்
ப்ரதிஜ்ஞோபரோத — அதிபதி (இந்திரியங்கள்) ஸஹகாரி (தீபம்) ஆலம்பந (பாஹ்ய பதார்த்தங்கள்)
ஸமநந்தர ப்ரத்யயா: ( முன் க்ஷணத்தில் ஏற்பட்ட ஜ்ஞானம்) சத்வாரா விஜ்ஞாந :
உத்பத்தௌ ஹேதவ : என்கிற ஜ்ஞானம் உண்டாக காரணமாக இருக்கின்ற பௌத்த மத பிரதிஞையை அதுக்கு விரோதம்.வரும்.
அந்யதா – இந்த அவர்களுடய கொள்கையை விரோதிக்காமல் இருக்கவே காரணம் இருக்கும் போதே காரியம் உண்டாகிறது என்றால்
யௌகபத்யம் -இருந்தது (காரணம்) அழியும் முன்பே காரியம் உத்பன்னமாகிறது –
த்வி சந்திர ஜ்ஞானம் போலே காரியம் காரணம் இரண்டும் தோற்றமளிப்பதான –
காரண கடம், காரிய கடம் இரண்டும் ஒரே சமயத்தில் காணப்பட வேண்டும்.
உண்மையில் அப்படிக் காண்பதில்லை யாகையால் பௌத்த மதம் பொருந்தாது.

ஜ்ஞானம் ஏற்படுவதும் , மனப் – பிராணன் – இந்திரியம் – பாஹ்ய வஸ்து பிரதர்சனமாகிற
சுவை, ஒளி, ஒலி, நாற்றம் இவை அதே பிரகாரம் உள்வாங்கப்பட்டு புத்திக்கு அறிவிக்கப்பட்டு,
பிறகு அது நினைவுப் படிவமாக மனதில் நிறுத்தப்பட, ஆத்மாவுக்கு அவை பிரதர்சனமாகிறன.
இத்தனைப் படிகளில் எத்தனை வேகமாக நடந்தாலும், அதற்கும் ஒரு கால இடைவெளி அவசியம்.
இதனை மறுக்கும் விதமாக செய்கிற க்ஷணிக வாதத்தால், இந்திரிங்களால் விஷயங்கள் அறியப் படுதலும்,
அதனை ஆத்மா உணர்வதான ஜ்ஞான உற்பத்தியும் ஒரே க்ஷணத்தில் நிகழ்வது போலாகிவிடும். இது உண்மைக்குப் புறம்பானது.

—————-

சூத். 2-2-21 :: ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத அப்ராப்தி : அவிச்சேதாத் ::

கீழ் சூத்திரங்களால் உற்பத்தி க்ஷிணிகத்தல் உண்டாகிறது என்பது நிராகரிக்கப் பட்டன்.
இப்போது அவன் சொல்லுகிற விநாசம் (அ ) பிரளய பிரகாரமும் சரியில்லை என்பது பேசப்படுகிறது. .
நம்முடைய சித்தாந்தத்தில்
லீன் = ஸ்லேஷ்ணே என்று காரணத்தில் காரியம் போய் ஸூக்ஷ்மாவஸ்தையில் ஒட்டிக் கொள்வதையே லயம் என்கிறோம்.
திருமழிசை ஆழ்வாரும்
தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல் (திருச்சந்த விருத்தம்-10) இதையே காட்டிக் கொடுக்கிறார்.
நச அதர்ஷணே என்பதாக அவன் சொல்லுகிறான்.

ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத– பார்க்கப்படுகிற ஸ்தூல வஸ்த்துக்களின் விநாசமும்,
கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம வஸ்து விநாசமும் ஜகத்துக்கு ஏற்படாது. காரணம்
அவிச்சேதாத் – உள்ள பொருள் அடியோடு அழியும் என்பது சேராதாகையாலே.

ருதிர் = ஆவரணே என்று பிரளயத்துக்குப் பெயர். இங்கு விநாசத்தைக் குறிக்கும்.
ஸாங்கிய = கியா = பிரகடனே பிரகடனே அனைய இதி = புத்தியில் இருப்பதையே சொல்லப் போகுமாகையால், இங்கு புத்தியைக் குறிக்கும்.
ஸங்கியாம் பிரதி விரோதம் = இந்திரியங்களுக்கு கோசாரமாகக் கூடிய விநாசம். பாஹ்யமான பதார்த்தங்களுக்கு ஏற்படுகிற ஸ்தூல விநாசம்
அப்பிரதி ஸங்கியா விரோதம் என்பது பௌத்தன் சொல்லுகிற புலன்களால் ஊகிக்க முடியாத கடக்ஷண விநாசம்.
பிரளயத்தில் வஸ்துக்கள் நாசமடைந்து கண்ணுக்குப் புலப்படாதபடி மாயமாகி விடுகின்றன.
க்ஷிணிகம் – தீப ஜ்வாலா பேத அநுமானம் = சுடர் ஒரு ஜுவாலைப் போல தோற்றினாலும், உண்மையில் அது பிரதிக்ஷணமும்,
அணு அணுவாக எண்ணை உறிஞ்சி திரி எரிவதன் தொடர்ச்சியாகும். அதுபோல
ஜோதி நிர்வாணம் = என்பது அணைந்த விளக்கின் ஜோதி மாயம் ஆவது போல என்கிறான். இதுவே நிரண்மய விநாசம் என்பது.
இப்படி அசத்தால் உண்டாவது அசத்தையே போய்ச் சேருகிறது என்று ஸ்ருஷ்டி பிரளயங்களைப் பற்றிச் சொல்கிறான்.
நாம் சொல்வது பிரஹ்மதிடத்தினின்று உண்டாகி, பிரம்ஹத்திடத்தில் போய்ச சேருகின்றது என்பதற்கு எதிர்மறையானது இவர்கள் வாதம்.
இதை வைதிகனும், ஸாங்க்யனும் கூட ஒத்துக் கொள்வதில்லை.
பௌத்தர்களும், அத்வைதிகளும் கூட பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக பேசுகிறார்கள் என்பதே உண்மை.

நிரந்வய விநாசம் என்பது கிடையாது. பொருள்கள் நாசமாகும்போது அவை அவஸ்தாந்திர பேதத்தை அடைகின்றனவே ஒழிய,
பதார்த்தம் இல்லாமலே போவதில்லை. பானை உடைந்தால் சில்லு. சில்லு மண்ணில் கரைந்தால் பாம்சு.
பாம்சு பிண்டமாகி மீண்டும் கடாவாஸ்தாயைப் பெறலாம்.
தார்கிகன் இப்படி மாறி உண்டாகிற திரவ்யமே வேறு என்றான்.
சாங்கியன் எள்ளுக்குள் எண்ணை இருப்பது போல் காரியம் காரணத்தில் இருக்கிறது என்றான்.
நாம் சொல்வது திரவியம் ஒன்றாய், காரண அவஸ்தையில் இருந்து காரிய அவஸ்தைக்கு மாறுகிறது என்பதாக.

திரவியம் என்றால் என்ன? எது உபாதான காரணமோ அதுதான் திரவியம்.
உபாதான காரணம் என்றால் என்ன? அவஸ்தாஸ்ரயமாக எது உள்ளதோ அதுதான் திரவியம்.
அவஸ்தா என்றால்? அபிரதக் ஸித்த ஸம்பந்தமாய், காகாசித்தமாய் இருப்பது. விட்டுப் பிரியாததாய்
பரிணமிக்கக் கூடியதாய் இருப்பது என்று பொருள்.

எரிகிற தீபம் அணைந்த பிறகு, தீபம் பிரகாசம் மாயமாவதுபோல் நிரந்வய விநாசத்தால் அஸத்தோடு சங்கமிக்கிறது என்றான்.
இதுவும் சரியில்லை. காரணம் கரி எரியும்போது ஜுவாலையோடு தூமம் வெளியேறுகிறது. அது சற்று கரிப்புகையாக இருக்கும்.
விறகு எரியும்போது புகை அம்சம் நலிந்து ஜுவாலை அதிகம் காணலாம்.
அதுபோல் தீபம் எரியும்போது தூமம் வெளுத்து கண்ணுக்குப் புலளப் படாமல் இருக்கலாம்.
விளக்கு அணையும் போது, அது புகையாக வாயு மண்டலத்தில், கலந்து அது மலினமாகி பரிணாமத்தை அடைவதே அவஸ்தா பேதம்.
எனவே நிரந்வய விநாசம் என்பது கிடையாது. எல்லாம் ஸாந்வய விநாசமாகத்தான் இருக்கிறது என்பது சித்தாந்தம்.

—————-

சூத். 2-2-22 :: உபயதா ச தோஷாத் ::

உபயதா – இல்லாத வஸ்துவிலிருந்து உள்ள பொருள் உண்டாதல், இருக்கிற பொருள் இல்லாது போவதும் ஆன இரண்டும்
தோஷாத் ச – தோஷம் உடைத்தால் , பௌத்த மதம் பொருத்தாது.

பதார்த்தங்கள் ஜாதி, ஆகாரம், வியக்தி மூன்றும் கூடிய வஸ்துவாகும்.
ஆகாரத்தையே குறிக்கும் ஜாதியானது திரவ்யத்தையே ஆஸ்ரயித்து இருப்பதாகும்.
கடத்தவம், படத்துவம், மனுஷ்யத்வம் இவை ஜாதி போல்
அஸ்வத்வம் என்பது 4 கால், குளம்பு, பிடரி மயிர், கற்றை வால் உடைய விலங்கின் ஆகாரத்துக்குள்ளே அடக்கம்.
தார்கிகன் சொல்வதுபோல் கடத்வ படத்வங்கள் அஸ்வத்தம் என்று பிரதக்காக தனித்த பதார்த்தம் இல்லை.
இன்னும் நீல கடம் என்றால், கருமை என்கிற குணம் குடத்தினுடைய அவினா பாகம்.
அதே போல அபாவம் என்பதும் அவஸ்தாந்தரமே ஒழிய தனித்து பதார்த்தம் இல்லை .

ஸது ஏவ சௌம்யா! இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
ஏகம் — துவைதிகள் சொல்லுகிற 5 விதமான பேதம் இங்கு சொல்லப்பட வில்லை.
பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஸ்வகத குணம் கிடையாது. விகத ஜீவாத்மா கிடையாது. விஜாதீயமான அசித்து கிடையாது என்பதால்.
அநேந ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – பஹுஸ்யாம் பிரஜாஏய – ஸதபோ தப்பியத – தப ஆலோசநே என்று சங்கல்ப மாத்ரேண
மயி ஸர்வ இதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ -என்று பகவான் தானும் சொல்லி இருக்கிற படியே
இந்த ஜகத்து அவனால் படைக்கப்பட்டு, தரிக்கப்பட்டு, அந்தராத்மாவாய் ஸத பத்ர கோச ஸூஜி நியாயத்தாலே
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஜ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்
வரை அநுபிரவேசம் செய்து , நியமிப்பதை வைத்துப் பார்க்கும் போது இந்த அத்விதீய ஸப்தமெல்லாம்
சரீராத்மா பாவத்தை இட்டே சொல்லப் பட்டதாக பொருள்படும்..

அவனுக்கு ஒரு ஆத்மா உண்டோ? என்றால் இல்லை,
பதிம் விஸ்வ – விஸ்வபதியாய்
ஸ்வரகும் ஈஸ்வரம் – தனக்கொரு பதி இல்லையாய்
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வியாப்ய ஸ்தித நாராயண : ஸதைக ரூப ரூபாய என்று அவனுடைய ஸ்வரூபத்தில் விகாரம் இல்லையாய்
விசேஷணாம்சமான அசித்தில் ஸ்வரூபதயா விகாரமும்; சித்தில் ஸ்வபாவதயா விகாரமும் ஏற்று
பரிணமிக்கையாகிற இது மாயையால் வந்ததோ – சங்கரர்
உபாதியால் வந்ததோ – பாஸ்கரர்
சக்தியால் வந்ததோ – யாதவபிரகாசர்
அல்லாமல் பகவத் சங்கல்பத்தால் வருவது என்கிற
திரவியா-அதிரவ்ய விபாகம் அனைத்தும் சத்யம் நித்யம் பகவத் ஆஸ்ரய ஆஸ்ரயணீயம்.

உபநிஷத் சித்தமான இதை எல்லாம் இல்லை செய்து வஸ்துக்கள் துச்சத்தில் உண்டாகி, துச்சத்தில் போய் சேருகிறது.
இடையில் க்ஷணிகமாய் இருக்கிறது என்று இவர்கள் சொல்ல அது பொருந்தாது
உள் இருக்கிற ஆலய விஜ்ஞானம் என்ன, வெளியில் இருக்கிற பிரவ்ருத்தி விஜ்ஞானம் என்ன இரண்டுமே ஸ்திரமானது தான்.
இல்லாததிலிருந்து இந்த ஜகத்து உண்டானால் , இதுவும் துச்சமாய் காணப்பட வேண்டும்.
மாத்யமிகனைப் போல் இவர்கள் உலகம் சூன்யம் என்று ஒப்புக் கொள்கிறார்கள் இல்லை.
ஆன பின்பு, ஜகத் இருப்பை ஒப்புக்கொள்ளுகிற வைபாஷிகர்களின் இந்த வாதம், அவர்களுடைய
உற்பத்தி கிரமம், பிரளய கிரமம் இரண்டும் துச்சம் என்பதற்கு சேராது.

—————

சூத். 2-2-23 :: ஆகாஸே ச அவிசேஷாத் ::

ஆகாஸே ச – ஆகாச விஷயத்திலும் வைசேஷிகர் சொல்கிற சூன்ய வாதம் பொருந்தாது.
அவிசேஷாத் – பிரத்யக்ஷமாக பார்க்கப் படுகிற பூமி முதலானவற்றிற்கும், ஆகாசத்துக்கும் வேற்றுமை கிடையாதாகையால்.

வைபாஷிகன் ஆகாசத்தை நிருபாக்யா என்று வாங்மனஸா அகோசரம் என்பதுபோலே சொல்கிறான்.
அது 4 விதமான அபாவத்தோடே இருக்கிறது என்கிறான்.
1. ப்ராகபாவம் – பொருள் உண்டாவதற்கு முன்னும் இருப்பது – கடத்துக்கு மண்கட்டி
2. ப்ரத்வம்ஸாபாவம் – அது அழிந்ததற்கு பின்னும் இருப்பது – கடம் நஷ்டமாக இருக்கும் சில்லு
3. அந்யோந்யாபாவம் – கடத்வோ படத்துவம் ந ; படத்தவே கடத்வம் ந – ஒன்றின் தன்மை இன்னொன்றில் இல்லாது இருப்பது.
4. அத்யந்தாபாவம் – கடம் அடியோடு இல்லை என்கிற துச்சமான நிலை.

நிலம், நீர், தீ, வளியாகிற 4 பூதங்களின் அபாவமே ஆகாசம் என்கிற போதும் அது பிரத்யக்ஷ கோசரமாகவே இருக்க வேண்டும்.
கடாபாவம் பூதலமாக காண்கையாலே, ஆகாஸாபாவம் பாவாந்தர ஸித்தமாய் துச்சம் என்னவாகாது.
இந்த வகையில் பூமிக்கும் ஆகாசத்துக்கும் வாசி இல்லையாதலால், ஆகாசம் சூன்யமாக மாட்டாது.
நீலமாக காண்கிற ககன இடைவெளி தான் ஆகாசம் என்று காட்ட, அருகில் உள்ள ஆகாசம் நீலமாக காண்பதில்லையே
எனவே அது தோற்றம் (ஆபாஸம் ) என்று தள்ளிவிட, கிணற்றின் வீழ்சியிலும், ஊசி புகும் துளையிலும்,
பக்ஷி பறக்கும்போது ஆஸ்ரயமாயும் இருப்பதுவும் ஆகாசம் என்று விளக்கப்பட்டது.

சங்கரர் ஆகாசத்தை ஆவரணா அபாவம் என்றார்.
த்ரிவ்ருத்கரணம், பஞ்சீகரணம் ஆனபோது, ஆகாசத்தில், பிருத்வி முதலான மற்ற பூதங்களின் அம்சமும் கலந்து இருப்பதால்,
அது பிரத்யக்ஷ கம்யம் என்பது சித்தம் என்பதாக பகவத் ராமானுஜர் காட்டினார்.
ஆகாசம் பரமாணு ஸங்காத ரூபமாய் . நிரவயவம் என்பதால் அகோசரம். ஸப்தமும் அநித்யம் என்று நிராகரணம் பண்ணுகிறான்.
அப்படியானால் சப்த தன்மாத்திரத்தை எப்படி நிர்வகிப்பது? என்றால்
சப்தத்துக்கும் பொருளுக்கும் சம்பந்தம் நித்தியமாய், அவை முக்கியார்த்தத்தையே குறிக்கும்.
இதையும் பௌத்தன் ஏற்பதில்லை.

வியாச சித்தாந்தத்தில் விஷ்ணு பாரம்யத்தையே சொல்லி இருக்கிறார்.
சங்கரரும் கூட நாராயண: நாராயண: என்று விஷ்ணு பாரம்யத்தையே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.
ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் வருமிடத்து திரிமூர்த்தி சாம்யம் சொல்வது போல் பிரமை ஏற்படலாம்.

ஸத் பிரஹ்மத்துக்கு பிரகிருதி சம்பந்தமே கிடையாது. அவித்யா சம்பந்தம் வந்த போது, அதனுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் காரணமாக
மூன்று வித காரண சரீரம் ஏற்பட்டு, அவரே பிரஹ்மா, விஷ்ணு, சிவன் என்றாகி ஸ்ருஷ்டி, ஸ்திதி. சம்ஹாரங்களை செய்வதாகவும்,
இவர்களுக்கு ஆத்மா ஒன்றாய், சரீரம் மூன்றாய் த்ரிமூர்த்தி ஐக்கியம், சாம்யம் சொல்லகின்றனர் அத்வைதிகள்.
இது தவறான வாதம்.

மத்யே விரிஞ்சி கிரீஸ : விஷ்ணுரேவ அவதரிதி – என்று நாராயணனே ஸ்வயம் விஷ்ணுவாகவும்,
பிரம்ம, ருத்ராதிகளில் அந்தர்யாமியாகவும் நின்று சிருஷ்டி ஸ்திதி லயங்களை செய்கிறான் —
மச்ச, கூர்மாதி ஆதாரங்களுக்கு முன்னம், இந்த த்ரி மூர்த்திகள் நடுவே விஷ்ணுவாக அவதாரம் பண்ணினது தான்
அவனுடைய முதல் அவதாரம் என்பது நம்முடைய ஸித்தாந்தம். அதுவே வியாஸ சித்தாந்தமும் கூட.
வியாசர் இதை எங்கே சொன்னார் ? என்றால்

ஜன்மாதி அஸ்ய யத : என்று பிரஹ்மா ஸூத்ரத்தில் வியாசர் ஆதி சம்பதத்தால்
ஸ்ருஷ்டி, ஸ்திதி, பிரளயம் இந்த மூன்றையும் செய்ப்பவன் எவனோ அவன் தான் பர பிரஹ்மம் என்று சொன்னதோடு,
உத்தவ கீதை பிரகரணத்தில், பகவான் கிருஷ்ணன் திருவாக்காக

ஆத்மந : பித்ரு புத்தராப்யாம் அநுமேயோ மம பவாப்யயௌ
ந பவாப்யே வஸ்தூணாம் அவிக்ஞோ அத்வய லக்ஷ்ண :

பவா = உற்பத்தி
அவ்யயௌ = விநாசம்
ஜீவாத்மா = ந ஜாயதே ம்ரியதே வா என்று இரண்டும் அறியாதவன். இந்த அத்வைத லக்ஷ்ணத்தை உடைய ஜீவாத்மா.
இந்த உற்பத்தி விநாசத்தை யாரும் சரியாக அறிந்தார் இல்லை. காரணம் இந்த ஜீவாத்மா அத்வைத லக்ஷணமானவன்.
அவனுக்கு உற்பத்தியும் விநாசமும் கிடையாது. பிரகிருதி சம்பந்தத்தால் வந்த ஜனன மரண துவயத்தை அறியாதவன்.
பரமாத்மா அறியானோ என்னில் ?
பஹுனிமே வியதீதாநி ஜன்மநா நான்யஹம் வேத்தி தவஸார்ஜுணா – என்று அவன் அறிவான் –
ஸ்வேச்சா க்ருஹீத அபிமத உரு தேஹம் ஆனபடியாலே–ஆனால் அவன் அறிந்தபடி நாம் அறிவதில்லை.
நித்யர்களோ என்னில் , அவர்களும் இன்னொரு ஜீவாத்மாவை இட்டே அறியலாம் தாங்கள் ஸ்வத :பிறவாதவர்கள் என்பதால்.
நம் பிறப் இறப்பை நாம் அறிவதும் தனக்கொரு குழந்தை பிறப்பதைப் பார்த்தும், தன் தந்தை இறப்பதைப் பார்த்துமே யாகும்.

வைபாஷிகன் இதற்கு எதிர் தட்டாக வஸ்துக்கள் அஸத்தாலே உண்டாகிறது, அஸத்திலே போய் சேருகிறது என்பதை
இங்கு நிராகரணம் பண்ணி, சரீராத்மா பாவத்தை இட்டு சமர்த்தனம் பண்ணவேண்டி இருக்க
நீங்கள் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தம் என்ன, மூலா ஜ்ஞானம் என்ன, அவித்யா நிவிர்த்தி என்ன இதுகளால் அல்ல என்பதே வியாச சித்தாந்தம் .
இதைக் கொண்டே கிரியா, தேவதா, யோகம் சூன்யம் என்பதான 4 வகைப் பட்டவரான பௌத்தர்களையும்
இந்த சமுதாயாதிகாரணத்தில் வியாசர் நிரஸனம் பண்ணுகிறார்.

இத்தால், ஸர்வ சித்தாந்த சங்கிரகத்தில் வியாஸ பாரத தர்ஸனமாக
சங்கரரால் சொல்லப்பட்ட பஞ்சவிம்சதி தத்வ விமர்சனமோ, திரிமூர்த்தி சாம்யா வாதமோ கண்டு மயங்க வேண்டாம் .
வியாஸ சித்தாந்தமும், அவருடைய சரீரக ஸித்தாந்தமும் இரண்டும் ஒன்றே அல்லது வேறு அல்ல.

—————–

ஸூத். 2-2-24 :: ஆநுஸ்ம்ருதேஸ்ச ::

பிரத்யபிஜஜ்ஞை என்பதைக் கொண்டு இரு வேறு காலங்களில் உள்ள பொருள் ஒன்றே என்று சொல்ல வேண்டுமானால்,
அந்த பொருள் ஸ்திரமானதாக இருக்க வேண்டும். பொருள்கள் க்ஷணிகமானால், இருவேறு காலங்களில்
உள்ள பொருள் ஒன்றே என்கிற இந்த பிரத்யபிஜ்ஞா ஒட்டாது.

அநுஸ்ம்ருதே : முன் அனுபவிக்கப் பட்ட பொருள் அனைத்தும் மீண்டும் அனுபவத்துக்கு வருவதால் ,
வஸ்துக்களுக்கு க்ஷணிகத்வம் செல்லுபடியாகாது என்றதற்கு
அநுஸ்மரணமாகிற பிரத்யபிக்ஞா – ஜ்வாலாபேத வியாமோகம் போலே பிராந்தியால் வந்தது என்கிறான்.

எதை வைத்து இப்படிச் சொல்கிறான் என்றால் இரண்டு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. அர்த்த க்ரியா காரித்வம்
2. ஸத்வம்
யது ஸது க்ஷணிகம் – எதெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாம் க்ஷணிகம், யதா ஜலதர படலம்–என்பது அவன் வாதம்.
அதற்கு ஸித்தாந்தி பிரத்யபிக்ஞா ஸோ அயம் தேவதத்த –என்ற வார்த்தை பாடில் 3 சொற்கள் உள்ளன.
இவை அனைத்தும் பிரதமா விபத்தியில் சாமான்யாதிகாரணத்தில் ( முன்நிலை படர்க்கையில் .} அமைந்துள்ளாதால்
அவை ஒரு வியக்தியையே உணர்த்தும்.
பூத காலத்தில் இருந்தவரும் இப்போது காட்சியளிக்கிற இவரும் ஆனா தேவதத்தன் என்று தானே இந்த வார்த்தைப் பாட்டுக்கு பொருள்.
எனவே சித்ரத்வம் உண்டு. யது ஸது க்ஷணிகம் என்கிற உங்கள் வாதம் பொருந்தாது- எனறாக

எதெல்லாம் ஸம்ஸ்கார பலமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமம் – என்றான்.
வெள்ளியை – ராஜதம் – முன்பே பார்த்திருந்த படியால் அதனுடைய நினைவு – சம்ஸ்காரம் புத்தியில் இருக்க,
முத்து சிப்பியைப் – சுத்திகை – பார்க்கும்போது வெள்ளி என்கிற பிரமிக்கிறான்.
ஆகவே இதெல்லாம் சம்ஸ்காராதீனமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமாத்மகம் என்று சொல்லி விட்டான்.
எனவே இந்த தேவதத்தன் விஷயமான பிரத்யபிக்ஞையும் சுத்திகா ரஜத பிரமம்போலே அன்று
பார்த்த தேவதத்தன் வேறு, இவர் வேறு என்று சொல்லி விட்டான்.

அதற்கு சித்தாந்தி துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானமானால் அப்படி, எல்லா பிரத்யபிக்ஞா ஜ்ஞானமும் பிரமம் ஆகாது.
எதுபோல் என்றால்
சந்தன கொட்டடியில் மணம் வீசுவதை அறிந்த ஒருவன், மலையில் சந்தன மரத்தைப் பார்த்ததும் இதற்கு மணம் உண்டு
என்று நினைவு படுத்துவது போல –
நிர்துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானம் சத்யம் என்று சொல்ல ;
இப்போது அவன் சத்வத்தை விடுத்து, அர்த்த கிரியா வாதத்துக்கு வந்தான்.

பாய்சல் நிலத்தில் உள்ள நெல் விளைகிறது. தானிய கிடங்கில் – க்ருஸூலத்தில் – வைத்த நெல் விளைகிறதோ?
சாமர்தியா அசாமார்தியம் இரண்டுக்கும் வேறுபட காண்கையால் – விருத்த தருமம் ஒரு ஆச்ரயத்தில் இருக்க வழியில்லை ஆதலால் –
இந்த நெல் இரண்டும் வேறு வேறு தான் – என்றான்.
ஆல் விதைக்க மா முளைக்குமா? அசமர்த்தமான கடம் என்றும் அசமர்த்தமே. சமர்த்தமான பீஜம் என்றும் சமர்த்தமே.
அதற்கு வேண்டியது ஸஹகாரி சையோகமே.
தரணி-ஜல சையோக ஸாகார அபாவத்தாலே நெல் க்ருசூலத்திலே முளைப்பத் தில்லை , அன்றி அசாமர்த்தியதால் அன்று –

அநுஸ்மரணம் –பூர்வாநுபூதி வஸ்து விஷய ஜ்ஞானம் பிரத்யபிஜ்ஞானம் இத்யர்த்த :
ஆகவே எதுவும் க்ஷணிகமில்லை. எல்லாம் ஸ்திரம் தான். என்று விளக்கப்பட்டது.

யஸ்யாநுபவ தஸ்யைஹி ஸ்ம்ருதி : ஸ்ம்ருதி வியதீத விஷய: மதி ஆகாமி நிர்மிதா. புத்தி தாற்காலிகா புரோக்தா
பிராஜ்ஞா த்ரைகாரிகா மதா – என்று காவ்யப் பிரகாசத்தில் உம்மதப்பட்டன சொன்னபடி
பிரத்யபிஜ்ஞா உண்டாக ஆத்மா ஸ்திரமானதாக இருக்க வேண்டும்.
ஜ்வாலாபேத வியாமோகமும் ஸ்திரமான ஆத்மா விடத்திலேயாய் , இவர்கள் சொல்லுகிற க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவுக்கு சொல்லப் போகாது
மேலும் வியாமோகம் ஜ்வாலைக்கு வேண்டுமானால் பொருந்தலாம், கடம் போன்ற பொருள்கள் நசிந்தபோது வியாமோகம் ஏற்பட வழியில்லை ,
வஸ்து மொத்தமாக மாயமாவ தில்லையால்–என்று விஷ்யாதர முகமாகவும் இவர்கள் வாதத்தை தள்ளிவிட

இதுவரை பிரத்யக்ஷத்தைக் காட்டி பேசியவன், இப்போது அனுமானத்தை இட்டுப் பேசு, அந்த அனுமானத்தை அவனுக்கே திருபாலாவது. .
யது ஸது தது ஸ்தாஷ்னு . யது துச்ச : ததேவ அநர்த்த கிரியாகாரி யதத்யத் ஸது தது அர்த்த கிரியா காரிரேவ .
எனவே அர்த்த கிரியா வாதம் அக்ஷணிகத்துத்வதையே காட்டும்.
தவிர, ஸ்தைர்யம் இருந்தால் தான் அனுமானத்தையே பண்ண முடியும். 5 வாக்கியங்களைச் சொல்லி அனுமானத்தை
ஸ்தாபிக்குமளவாக ஆத்மா இருக்க வேண்டுமே? க்ஷணிக விஜ்ஞானத்தால் அது ஆகாது.

இதுவரை வைபாஷிகன், சௌத்திராந்திகன் ஆகிய இரண்டு பேருக்கும் பொதுவான விஷய சூத்ர விமர்சனம் பார்த்தோம்.
வைபாஷிகன் ஜகத்தை பிரயக்க்ஷ சித்தம் என்றான்.
சௌதாந்த்ரிகன் அதை ஆனுமானிகம் என்கிறான்.
இதனை அடுத்த சூத்திரத்தில் நிராசனம் பண்ணுகிறார் சூத்ரகாரர்.

https://srivasanesa24d.blogspot.com/–33/34-july 4th

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் -ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading