ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -19 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் ஒரு நாள் வந்து கிட்டுன விடத்திலும் நான் அவனைப் பெற்றிலேன்
அவன் தானே வந்து சாய என்றும் அனுபவிக்கப் பெற்ற  நீ
என்ன பாக்யத்தைப் பண்ணினாயோ -என்கிறார் –
பூமியைப் போலே ஒருகால் அன்றியிலே
நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவதே கடல் என்று கொண்டாடுகிறார் –

———

மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந்தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–திரு வாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்
கண் படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப் பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

———————-

மாலும்-
மாலுதல் -மயங்குதல்
அதாகிறது
அவனை அணையப் பெற்ற ஹர்ஷத்தாலே
மதுபான மத்தரைப் போலே செருக்கி
முக்தர் பட்டது எல்லாம் படா நின்றது ஆயிற்று –

கருங்கடலே –
இல்லையாகில் உடம்பு வெளுத்து இராதோ
கடல் எல்லாத்திலும் கண் வளர்ந்து அருளும் என்று சொல்லக் கடவது
அத்தாலே வந்த கருமை யாதல்
அன்றிக்கே
ஒரு கடலிலே உள்ள ஸ்வ பாவம் எல்லாத்திலும் இட்டுச் சொல்லக் கடவது -அத்தாலே வந்ததாதல்

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவன் உடைய நிழலீட்டல் யாதல்
கடலும் எம்பெருமானும் ஸ்ரீ பரத ஆழ்வானும் பெருமாளும் போலே நிறம்  –

என் நோற்றாய் –
நீ என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய்
ஆசையை விட்டு நோன்பிலே கை வைக்கப் பார்க்கிறார்-

வையகமுண்டாலி னிலைத் துயின்ற-
ஜகத்தை அடங்கலும் தன் திரு வயிற்றிலே எடுத்து வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரன் –

வாழியான்-
ரஷணத்துக்கு ஏகாந்தமான பரிகரத்தோடே சாய்ந்து அருளின படி
ஆசிலே கை வைத்து  ஏகார்ணவத்திலும்
திருப் பாற் கடலிலும்
கண் வளர்ந்து அருளின படி யாதல் –

கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் –
யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ -என்று சொல்லுகிற கண்கள் -என்னுதல்

மால்
ஈஸ்வரன் -என்னுதல்
வ்யாமுக்தன் -என்னுதல் –

அவனுடைய கண் படையுள் –
அவன் கண் வளர்ந்து அருளுகிற  இடத்தில்

என்றும் –
எல்லாக் காலத்திலும் பிராட்டிமார் ஊடின போதும் உனக்குப் பிரிவில்லை –

திருமேனி நீ தீண்டப் பெற்று –
எனக்கு ஒரு நாள் பெற வரிதான விது
உனக்கு நித்ய சித்தமாய் செல்லா நின்றது

ப்ரஹ்ம ப்ராப்தி பலமாய்
கைங்கர்யம் ஆநு ஷங்கிகம் ஆமா போலே 
திரு மேனி தீண்டுகை பிராப்யம்
கைங்கர்யம் அவகாதத்தில் ஸ்வேதம் போலே
உபாயத்திலும் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் விவசாயம் ஆநு ஷங்கிகம் –

திருமேனி நீ தீண்டப் பெற்று – மாலும் கருங்கடலே –
நீ அவனைப் பெற்று மாலாய் நின்றாய்
நான் அவனைப் பெறாதே மாலாய் நின்றேன் –

கருங்கடலே
அவன் தானே தன்னைக் கிட்டினார்க்கு சாரூப்யம் கொடுக்குமா போலே காணும் –

என் நோற்றாய்
இது ஒரு தபஸ்ஸால் வந்தது என்று  தோற்றி இரா நின்றது
ஆகிலும் இஃது
ஒரு விசேஷத்தாலே வந்தது என்று தோற்றி இரா நின்றது –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading